மறுபடியும் பிறப்பதாலன்றி
திருமதி.மேரி கிறிஸ்டோபர் - சென்னை 24
"மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறைமாட்சியைக் காண இயலாது" என்றும் "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறைமாட்சிக்கு உட்பட இயலாது" என்று விவிலியம் கூறுகிறது. தொடக்கத்தில் உலகத்தைப் படைக்கும் போதே தண்ணீரின் மேல் ஆவியானவர் அசைவாடினார். அவரின் செயல்பாடுகளை விவிலியத்தில் பழைய ஏற்பாடு முதல் புதிய ஏற்பாடு கடைசிவரை பல இடங்களில் நம்மால் பார்க்கமுடிகிறது. விவிலியத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவாக்கினர் மூலமாக பல வல்ல செயல்களை ஆவியானவர் செய்திருக்கின்றார். "இறையாவி பெற்றுள்ள இவரைப் போல வேறு எவரையும் காணமுடியமோ?" என்ற யோசப்பைக் குறித்து பார்வோன் கூறுகிறார். அதேபோல சிம்சோன் மீதும் ஆண்டவரின் ஆவி இருந்ததை காணலாம். புதிய ஏற்பாட்டிலும் ஆவியின் வருகைக்குப் பின் அப்போஸ்தவர்கள் வாழ்வில் எத்தனையோ அதியங்களும், அற்புதங்களும் நடந்தன.
நம்முடைய வாழ்வில் நாம் தூய ஆவியைப் பெற்றிருக்கின்றோமோ என்று சிந்திப்போம். ஆவியில் பிறப்பதென்பது கலா.5:22ல் பார்க்கிறப்படி தூயஆவியின் கனிகளால் நிறைந்திருக்க வேண்டும். நாம் நமது அன்றாட வாழ்வில் எந்த கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? தூயஆவியால் பிறந்தவர்கள், அவர் காட்டும் வழியிலே வாழ்பவர்களாய் இருக்கிறார்கள். "என்னை நோக்கி ஆண்டவரே!ஆண்டவரே என்ற சொல்பவர்கள் எல்லேவாரும் விண்ணணரசிற்குள் நுழைவதில்லை" என்று மத். 7:21 ல் இயேசு கூறுகிறார். நாம் எவ்வளவு தான் செபம் செய்தாலும் எத்தனை திருப்பலியில் பங்கு பெற்றாலும் நான் இயேசுவைப் போல் வாழவில்லையெனில் நமக்கு எந்த பயனுமில்லை
மத்தேயு 25:40-ல் "இச்சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு நீங்கள் செய்ததையெல்லலாம் எனக்கே செய்தீர்கள்" என்று இயேசு கூறுகிறார். வீட்டிலுள்ள பெற்றோர்களையும் பெரியவர்களையும் நாம் எப்படி மதிக்கின்றோம்? நாம் சிறிய குழந்தையாக இருந்தபோது நம்மை சுமையாக நினைத்திருந்தால் நாம் இன்று வளர்ந்திருப்போமா? ஆனால் நமக்காக எத்தனையோ தியாகம் செய்த பெற்றோர்களை எத்தனைப் பிள்ளைகள் சுமையாகக் கருதி ஒதுக்கிவிடுகின்றோம். இதுதான் நாம் அவர்களுக்கு காட்டும் அன்பா? 1யோவான் 4:20ஆம் வசனத்தில் "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது." என்று எழுதியுள்ளார்.
மேலும் நம் அன்றாட வாழ்வில் நமக்கு வரும் சிலுவையை நாம் சுமந்து கொண்டு இயேசுவின் அடிச்சுவடில் பின்சென்றால் தான் நாம் மறுபடியும் பிறந்தவர்களாவோம். 1பேதுரு 2:21ல் "நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்" என்று வாசிக்கின்றோம்
ஆகவே இயேசுவின் பிறப்பு விழாவை கொண்டாடவிருக்கும் நாம் ஒவ்வொரு நாளும் நம்மையே ஆராய்ந்த பார்க்கவேண்டும். நாமும் நம்மிடமுள்ள தீமைகளை அகற்றி மறுபடியும் பிறந்தவர்களாய் ஆவியானவரின் கனிகளைப் பெற்றவர்களாய், ஆவியானவரின் வல்லமைப் பெற்றவர்களாய், இறைவாக்கினர்களையும், திருத்தூதர்களையும், புனிதர்களையும் போல ஆவியானவர் காட்டும் வழியிலே வாழ்ந்து விண்ணணரசிற்குள் மறுபடியும் புதிதாய் பிறந்திடுவோம்.