பார் போற்றும் மரியின் மகனே
திருமதி.ரெஜினா சின்னப்பன் - சென்னை
பெத்தலகேம் ஊரில் மார்கழிக் குளிரில்
மாட்டுக் குடிலில் கொட்டும் பனியில்
மரியன்னை வயிற்றில் மனிதனாகப் பிறந்த
இறைவனின் மகனே உம்மை போற்றுகிறோம்.
ஏழ்மையில் பிறந்தாய்
எளிமையில் வளர்ந்தாய்!
வையகம் வாழ உன்னையே தந்தாய்
தாழ்ந்தோரை உயர்த்தினாய்!
இன்னல் பட்டோரைத் தேற்றினாய்
ஏழையின் வாழ்வில் இன்பம் சேர்த்தாய்!
வீழ்ந்தோருக்குக் கருணை தந்து
ஆதரித்த இறைமகனே! உம்மை வாழ்த்துகிறோம்.
இடையர்க்கு காட்சி தந்தாய்
ஞானிகள் வணங்கிட வழி சொன்னாய்!
பாவ இருள் போக்க ஒளி தந்தாய்
குவலயம் மகிழ மீட்புத் தந்தாய்!
மன்னவனே! பார் போற்றும் மரியின் மகனே
இவ்வுலகம் வாழ குழந்தையாகப் பிறந்த
கோ மகனே, மாபரனே
மக்களுக்காக மரித்து உயிர்த்த
இறைமகனே உன்னை வணங்குகிறோம்.
பாலனான இயேசுவே - நீர்
எமக்கு விட்டுச் சென்ற
அன்பு, அமைதி என்னும்
ஆசீர்வாதங்கள் என்றும், எப்போதும்
எங்களுடன் நிலைத்திருக்க
இறைமகனே! இறைவனின் தலைமகனே!
உம்மை இறைஞ்சுகின்றோம்.