நம்பிக்கையெனும் ஊன்றுகோல்

திரு.இரான்சம் சென்னை

கொஞ்ச நாட்களாகவே ஊரெங்கும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. பல ஆட்களின் நடமாட்டமும், பேச்சுக்குரலும், வியாபாரிகளின் கூவலும், கால்நடைகளின் கனைப்பும், வண்டிகளின் கடகட ஓசையும் ஒரே சமயத்தில் எழுந்து, அந்த சிற்றூரைக் கலக்கிக்கொண்டிருந்தன.

இந்த இரைச்சலுக்கிடையே, தலையில் புல்கட்டு ஒன்றை சுமந்துகொண்டு, வேடிக்கைப் பார்த்தபடி நடந்தான், ஆமோஸ். பதினான்கு வயது இளைஞனான ஆமோஸ் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். படிப்பும் இல்லை. ஊருக்கு வெளியே சாலை ஓரமாக இருந்த ஒரு பழைய விடுதியில் எடுபிடி வேலை. சந்தையிலிருந்து புல்கட்டை வாங்கிக் கொண்டு வந்த ஆமோஸுக்கு வியப்பு... இரண்டு நாட்களாக ஊரில் ஏன் இவ்வளவு மக்கள் கூட்டம்? ஏதாவது பண்டிகையா அல்லது ரோமாபுரி படைத் தளபதி யாராவது இந்த ஊருக்கு விஜயம் செய்கிறாரா? அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஊர் மதிலின் தலைவாசலைத் தாண்டி வெளியே வந்த ஆமோஸுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை... கொஞ்சம் தண்ணீராவது குடிக்கவேண்டும்... சாலை ஓரமாய் மரத்தின் நிழலில் இருந்த பாறையில் புல்கட்டை இறக்கி வைத்துவிட்டு, பாறையின் மேல் உட்கார்ந்தான். அருகே, முதுகின் இருபக்கமும் தொங்கிய மூட்டைகளோடு ஒரு கழுதை நின்றிருந்தது. சற்று தள்ளி இருந்த பாறையின் மேலே ஒரு ஆணும் பெண்ணும் - கணவன் மனைவியாய் இருக்கவேண்டும் - அமர்ந்திருந்தனர். கணவன் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தன. அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். ஆமோஸ் மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.. "இரண்டு மூன்று நாட்களாக ஊரெங்கும் ஒரே கூட்டமாக இருக்குதே? என்ன விசேஷம், ஐயா?" என்று அந்த மனிதனிடம் கேட்டான். அவர் லேசாக புன்னகைத்து, "தம்பி, குடிக்கணக்கு எடுக்கப்படுவதும், அதற்காக ஒவ்வொருவரும் தனது சொந்த ஊருக்குச் சென்று தங்கள் குடும்பத்தினரின் பெயர்களை பதிவு செய்யவேண்டும் என்று ரோமைச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருப்பதும் உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

ஆமோஸுக்கு அந்த ஆள் கூறியதன் பொருள் விளங்கவில்லை. ஆனால் அந்த மனிதன் இடுப்பில் கட்டியிருந்த தோல் குடுவை, ஆமோஸின் தொண்டையை மிடறு விழுங்க வைத்தது. அவன் தாகமாயிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட அந்த மனிதனும், தன் இடுப்பில் கட்டியிருந்த நீர்க் குடுவையை அவிழ்த்துத் தந்தார். தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு குடுவையைத் திருப்பித்தந்த ஆமோஸ், "நீங்களும் பெயர் பதிவு செய்யத்தான் வந்தீங்களோ?" என்று வினவினான். அந்த மனிதன், குடுவையை இடுப்பில் கட்டிக்கொண்டே, "ஆமாம், ஆமாம், காலையிலேயே பெயரை பதிவு செய்துவிட்டோம்... இன்றிரவுப் பொழுதைக் கழிக்கத் தான் தங்குமிடம் தேடி அலைகிறோம்.. ஊரினுள் எந்த சத்திரத்திலும் இடமில்லை... வெளியிலாவது இடம் கிடைக்குமா என்று பார்க்கணும்.." என்றான். ஆமோஸுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தால் பாவமாயிருந்தது.


அது ஒரு பழைய சத்திரம்தான். சற்று பழுதடைந்திருந்தாலும், சாலையின் ஓரமாக இருந்ததால், ஊரின் உள்ளே செல்வோரும், வெளியே வருவோரும் ஓய்வெடுக்க வசதியாக இருந்தது. விடுதி காப்பாளன் ரூபன் உரத்தக் குரலில் பணியாளிடம் பேசிக்கொண்டிருந்தான்: "கொஞ்சம் புரிஞ்சு வேலை செய்யுங்கடா.. நாலஞ்சு நாளைக்கு நல்லா கூட்டமாத்தான் இருக்கும்.. சிரமப்படாம எல்லாரையும் நல்ல மாதிரி வேலை செய்யச் சொல்லு.. என்னா?.. அந்த ஆமோஸ் பய இன்னும் வரலையாடா?" அதற்கு அந்தப் பணியாள், "புல்லு வாங்கிட்டு இப்பத்தான் வந்தானுங்க... பின்னால மாட்டுத் தொழுவத்தை சுத்தம் பண்ணிக்கிட்டு இருக்கான்.." என்று கூறினான். "அவனை என்னை வந்து பார்க்கச் சொல்லு" என்றுக் கூறிவிட்டு எழுந்த ரூபன், சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோல் இரண்டையும் எடுத்து தன் கைகளுக்கிடையில் வைத்துக்கொண்டு, சத்திரத்துப் படிகளில் மெதுவாக இறங்கிக் கீழே வந்து நின்றான். அவனுடைய ஒரு கால் சூம்பியிருந்தது.

சாலையில் ஜனநடமாட்டம் மிகுதியாகத்தான் இருந்தது. விடுதியின் முன்புறம் கட்டியிருந்த குதிரைகள் கனைத்தன. பிச்சைக்காரன் ஒருவன் ரூபன் முன்வந்து நின்று கையேந்தினான். ரூபனுக்குக் கோபம் வந்தது. "மாடு மாதிரி இருக்கியே, நீயெல்லாம் ஏண்டா பிச்சை எடுக்கிறே? போ.. போ.." என்று பிச்சைக்காரனை விரட்டினான். அந்த நேரத்தில் ரூபனைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்த ஆமோஸ், தன் பையிலிருந்து சில நாணயங்களை எடுத்து அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டு, ரூபனிடம் வந்தான். இதை கவனித்த ரூபன், "வாடா, தர்ம பிரபு, சொன்ன வேலையைச் செய்திட்டியா? புதுசா புல்லுக்கட்டு வாங்கிட்டு வந்தியா? மீதி காசு எங்கடா?" என்று ஆமோஸைக் கேட்டான்.

mary-inn-turned-awayஆமோஸ் அந்த விடுதியில் எடுபிடி தான் என்றாலும், சிறுவயதிலிருந்தே அங்கு வேலை செய்வதால், ரூபனுக்கு அவன் மேல் தனி பிரியம். ஆமோஸ் பதில் சொன்னான்: "மீதி காசு ஏது? சில்லறை தான் மீந்தது.. அந்தச் சில்லறையைத்தான் இப்ப அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்தேன்.." ரூபனுக்கு முகம் சிவந்தது. "நீயெல்லாம் திருந்தவே மாட்டடா.. உன்ன மாதிரி ஆளுங்களாலதான் நல்லா இருக்கிறவன்கூட பிச்சை எடுக்கிறான்.." என்றான் ரூபன். அதைக் கேட்ட ஆமோஸ் சிரித்துக்கொண்டே, "தலைவரே, நம்மக்கிட்ட இருக்கும்போது கொடுப்போமே.. நமக்குத் தேவைன்னா கடவுள் தரமாட்டாரா?" என்றான். ரூபனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதும், 'கடவுள்-சாமி' என்ற பேச்சே பிடிக்காது என்பதும் தெரிந்திருந்தாலும், வேண்டுமென்றே ஆமோஸ் இதைச் சொன்னான். "ஆமாடா.. நீயும் சொல்லிக்கிட்டே இருக்கே.. கடவுள் கொடுப்பாரு, கடவுள் காப்பாத்துவாருன்னு... அதெல்லாம் சும்மாடா.. என்னைப் பார்த்தியா? பிறப்பிலே நொண்டி.. நான் என்ன தப்பு செஞ்சேன்? நீயும் எத்தனையோ தடவை சொல்லிட்ட.. சூம்பின என் காலை கடவுள் சரிபண்ணிடுவாருன்னு... எனக்கு நம்பிக்கை இல்லடா.." என்றான் ரூபன். அதற்கு ஆமோஸ், "தப்பே அங்கதான் இருக்கு, தலைவரே, முதல்ல நம்பிக்கை வேணும்... மனசுல நம்பிக்கை இல்லன்னா, கடவுளே வந்து கண் முன்னால நின்னாலும் நமக்குத் தெரியாது.. ஆனா நான் நிச்சயமா நம்புறேன்.. உங்க காலு சரியாயிடும்.." என்றான்.

அந்த சமயம் ஆமோஸுக்கு பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. "ஐயா, இன்று இரவு மட்டும் தங்குவதற்கு இந்த சத்திரத்தில் இடம் கிடைக்குமா?" ஆமோஸ் திரும்பிப் பார்த்தான். ஊர் மதிலுக்கு வெளியே மரத்தடியில் தனக்குக் குடிக்கத் தண்ணீர் தந்த மனிதன் தான் அவர் என்பதை ஆமோஸ் புரிந்துகொண்டான். விடுதியின் ஓரத்தில் நின்றிருந்த கழுதையின் மீது அந்தப் பெண் இருந்தாள். ரூபனுக்கு எரிச்சல். இருந்தாலும் சாந்தமாக, “இதோ பாரப்பா, எங்க சத்திரத்தில் இடமே இல்லை. திண்ணையில் கூட சிலரை படுக்கச் சொல்லிட்டேன்.. நீ வேற இடம் பார்த்திட்டா நல்லது.." என்றுக் கூறிவிட்டு, படிகளில் ஏறி விடுதியினுள் நுழைந்தான் ரூபன். இடம் கேட்டு வந்த மனிதன் ஒன்றும் பேசத் தோன்றாமல், பெருமூச்சுவிட்டவாறு சிந்தனையுடன் கழுதையின் அருகே சென்றான். ஆமோஸ் பரிதாபப்பட்டான். இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்... என்ன செய்யலாம்? ஆமோஸ் யோசித்தான்.


அன்று இரவு நல்ல குளிர். சத்திரத்து சந்தடிகள் ஒய்ந்துவிட்டதால், இரவின் அமைதி இன்னும் அதிகமாயிருந்தது. திண்ணையிலிருந்த மேசையில் தலை சாய்த்தப்படியே தூங்கிப்போயிருந்த ரூபன், திடீரென விழித்துக்கொண்டான். ஏதோவொரு சலசலப்பு... சில பேச்சுக் குரல்கள்... சத்திரத்தின் முன்னால் சாலையில் சில ஒட்டகங்கள் நிற்பதை தூக்கக் கலக்கத்திலிருந்த ரூபன் கண்டான். தன் மேசை மேலிருந்த விளக்கைத் தேடினான். அது எப்போதோ அணைந்துவிட்டிருந்தது. ஆயினும் விடுதியின் முன்னே பரவியிருந்த வினோதமான வெளிச்சத்தில், சாலையில் ஒட்டகங்களோடு சில மனிதர்களும் நிற்பதைப் பார்த்தான்.. அவர்களின் தலைவர்களைப் போல இருந்த மூன்று பெரியவர்கள் சத்திரத்தின் படிகளில் ஏறி மேலே வந்தார்கள். தங்குமிடம் தேடி வந்த ஆட்களாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிய ரூபன், அவர்களைப் பார்த்து, "ஐயா, இந்த விடுதியில் இப்போது இடமே இல்லையே" என்று சொல்லி முடிப்பதற்குள், அந்த மூவரில் நீண்ட வெண்தாடியுடைய முதியவர் ஒருவர், "ஐயா, எமக்கு தங்குவதற்கு இடம் வேண்டாம். ஆனால் ஒரு விஷயம் நீர் எமக்கு சொல்லவேண்டும்.. யூதர்களின் அரசராகப் பிறந்திருப்பவர் எங்கே?" என்று வினவினார்.

ரூபன் நகைத்தான். "அரசனா? இந்தப் பாழடைந்த சத்திரத்திலா?" என்று கேட்ட ரூபன், அந்த மூவரையும் உற்றுப் பார்த்துவிட்டு, "அது சரி, நீங்களெல்லாம் யார்?” என்றுக் கேட்டான். மீண்டும் அந்த முதியவர் நிதானமாக, " ஐயா, நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகிறோம். வான்கோள்களின் அபூர்வ சேர்க்கையையும், வேத சாத்திரங்களின் பொருளையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்த இரவிலே உலகிற்கே வழிகாட்டுகின்ற தெய்வீகக் குழந்தை ஒன்று இந்த இடத்தில் பிறந்திருக்கவேண்டும் என்பது எங்கள் கணிப்பு. மேலும், எங்களை இந்த இடத்திற்கு வழிநடத்தி வந்த நட்சத்திரம், உமது விடுதியின் மேலே வந்து நிற்பதை நீர் அறியீரோ?" என்றுக் கேட்டார்.

இதைக் கேட்ட ரூபனுக்கு வியர்த்தது. விடுதியின் முன் தெரிந்த வினோத வெளிச்சத்தின் காரணம் புரிந்தது. படிகளில் இறங்கிச் சென்று, மேலே அண்ணாந்து பார்த்தபோது, அவன் கண்கள் கூசின. சுற்றுச் சூழல் இருட்டாயிருந்தாலும், அந்த சத்திரம் மட்டும் ஜெகஜோதியாய் ஒளிர்ந்தது. ரூபனுக்குக் கைகால்கள் நடுங்கின. விடுதியின் பின்னாலிருந்து மூச்சிரைக்க ஓடிவந்த ஆமோஸ், "ஐயா, மாட்டுத் தொழுவத்தில் ஆடு மேய்க்கின்ற இடையர்களும், சிறுவர்களுமாக ஒரே கூட்டம். வயல்வெளியிலே தேவதைகள் சிலர் அவர்களுக்குக் காட்சியளித்து, 'இந்த இடத்திற்கு செல்லுங்கள்; அங்கே ஒரு தெய்வீகக் குழந்தை பிறந்துள்ளது' என்று சொன்னார்களாம்.." என்றான். ரூபனுக்கு இதயத் துடிப்பு அதிகமாயிற்று. "என்ன சொல்கிறாய், ஆமோஸ்? தொழுவத்தில் என்ன நடக்கிறது?" என்று கேட்ட ரூபனை பார்த்து, பயந்தபடியே ஆமோஸ் சொன்னான்: "மன்னிக்கணும், ஐயா! இன்று பகலில் இடமில்லை என்று நீர் விரட்டிவிட்ட மனிதனையும், அவர் மனைவியையும் இன்று இரவு மட்டும் மாட்டுத் தொழுவத்தில் தங்கிக்கொள்ள அனுமதித்தேன்... அந்தப் பெண்ணுக்கு அங்கேயே பேறுகாலமாகி, ஒரு ஆண் குழந்தை பிறந்துவிட்டது... ஆனால், ஐயா! அந்தக் குழந்தையிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கவேண்டும்... நமது மாட்டுத் தொழுவம் தேவலோகம் போல பிரகாசமாயிருக்கிறது... அந்தக் குழந்தையைக் காண்பதற்காகத்தான், தேவதைகள் கூற்றுப்படி இடையர்கள் வந்திருக்காங்க... நீங்களும் வந்து பாருங்க.."

3 kingsஇதையெல்லாம் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்த அந்த மூன்று பெரியார்களும் கீழே வந்து ஆமோஸிடம், "தம்பி, அந்த குழந்தை இருக்கும் இடத்தை எமக்குக் காட்டுக" என்றனர். ஆமோஸ் அவர்களை விடுதியின் பின்புறத்திற்குக் கூட்டிச் சென்றான். ரூபனும் அவர்கள் பின்னாலே சென்றான். தொழுவத்தில் கூடியிருந்த இடையர்கள் விலகி வழிவிட்டனர். அந்த மூன்று பெரியவர்களும், ஆமோஸும், ரூபனும் உள்ளே எட்டிப் பார்த்தனர். மாடுகளுக்கு தீவனம் வைக்கின்ற மரத்தொட்டியிலே புல்லைப் பரப்பி, துணிகளால் சுற்றி தன் குழந்தையை படுக்கவைத்திருந்தாள், அந்தப் பெண். அருகிலே நின்றிருந்த அவளது கணவன், முகத்தில் புன்முறுவலோடு அவர்களை வரவேற்றார். மூன்று பெரியார்களும் பரவசத்தோடு உள்ளே நுழைந்தார்கள். அந்தப் பெண்ணுக்கும், அவளுடையக் கணவனுக்கும் முகமலர்ச்சியோடு வாழ்த்துக் கூறிவிட்டு, அவர்களின் முன்னால் மண்டியிட்டு, மிகுந்த மரியாதையோடு சிறிது நேரம் உரையாடினார்கள். பின்னர் தொழுவத்தின் தரையிலே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

அந்த தெய்வீகச் சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த ரூபனிடம் ஆமோஸ் கேட்டான்: "ஐயா, உங்க ஊன்றுகோல் எங்கே?" ரூபன் திடுக்கிட்டான். ஊன்றுகோல் இல்லாமலே தான் நன்றாக நிற்பதையும், விடுதிக்கு மேலே நின்ற நட்சத்திரத்தை பார்ப்பதற்காக கீழே இறங்கிய போதே தான் ஊன்றுகோலை எடுக்கவில்லை என்பதையும் ரூபன் இப்போதுதான் உணர்ந்தான். ஊனமாயிருந்த கால் இப்போது குணமாகியிருந்தது. காலை நீட்டி மடக்கிப் பார்த்த ரூபனின் கண்களில் நீர் பெருகிற்று. அவனது உடலும் மனமும் புதிய உற்சாகம் பெற்றது போல உணர்ந்தான். ஆமோஸின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரூபனுக்கு பேச்சே எழவில்லை. "ஆமோஸ், நான் நம்புறேண்டா.. நான் மனசார நம்புறேன்..." என்று நா தழுதழுக்க அரற்றியபடி தொழுவத்தினுள் நுழைந்த ரூபன், தீவனத் தொட்டியின் முன்னே தலைதாழ்த்தி விழுந்து வணங்கினான்.

அந்த பெரியார் மூவரையும் வழிநடத்திக் கூட்டி வந்த நட்சத்திரம் தொழுவத்தின் மேலாக உயரத்தில் பேரொளியுடன் ஒளிர்ந்தது. மெலிதான குளிர்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. எங்கோ வெகு தொலைவிலிருந்து பல தேவதைகள் ஒன்றாக சேர்ந்து இனிய குரலில் பாடுகின்ற தெய்வீகப் பாடல் ஒன்று, காற்றோடு கலந்து வந்து அந்தத் தொழுவத்தை நிரப்பியது:

"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!"