வலியே தெரியவில்லை
மதுரை இளங்கவின்
கிறிஸ்மஸ் நடு இரவு திருப்பலி முடிந்தது.
"நான் ஒடுலா கிராமத்திற்குப் பூசைக்குப் போறேன்" என்றார் அருட்பணி ஜோ.
"ஃபாதர் இந்த ராத்திரியிலே எப்படிப் போவீங்க? பாதையும் சரியில்லே, அதைவீட நீங்க போற பகுதி மதவெறியர்கள் உள்ள மோசமான பகுதி, உங்களுக்குப் பாதுகாப்பு இல்லையே ஃபாதர்" என்றார் ஆலய உதவியாளர் பீட்டர்.
"நான் போய்த்தான் ஆகணும் பீட்டர். அந்த ஆதிவாசி ஏழை மக்கள். அவங்களுக்கு கிறிஸ்மஸ் பூசை வைக்க வேண்டாமா? எனக்காக ஆவலோடு காத்துக் கிடப்பாங்க" என்றார் அருட்பணி ஜோ.
"நியாயம்தான் ஃபாதர். பாதையெல்லாம் சகதியும் சேறுமாய் கிடக்கும். மழை வேற தூறிக்கிட்டேயிருக்கு, நீங்க காலையிலே போகலாமே" என்றார் ஆசிரியர் அல்போன்ஸ்.
"இல்லே, இல்லே, நான் கட்டயாமாகப் போயாகணும். எனக்காக அந்த மக்கள் குழந்தை குட்டிகளோடு காத்துக் கிடப்பாங்க. இயேசு பிறப்பை அவங்க கொண்டாட வேண்டாமா?" என்றபடி மழைக்கோட்டை அணிந்துக் கொண்டு தலையில் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டார் அருட்பணி ஜோ.
"ஃபாதர், நானும் துணைக்கு வாரேன். பாதுகாப்பில்லத ஏரியாவிலே தனியாப் போறீங்களே?" என்றபடி வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டார் அல்போன்ஸ்.
"ஆண்டவர் துணையிருக்கார் அல்போன்ஸ். எனக்கெந்தப் பயமும் இல்லே" என்று டூவீலரைக் கிளப்பினார் ஜோ.
ஜோ தமிழ்நாட்டிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அருட்பணியாற்ற வந்தவர். நிறைய படித்துப் பட்டங்கள் பல பெற்றவர். ஏசி அறையிலே உட்கார்ந்து கொண்டு வரவு செலவு பார்க்கவோ, கல்லூரியில் வகுப்பு நடத்தி விட்டு ஒய்வெடுக்கவோ அவர் துளியும் விரும்பவில்லை. வசதியான நகரத்தில் திருப்பணி புரியவும் அவருக்கு எண்ணமில்லை. ஏழைஎளியோருக்கு இயேசுவை அறிவிக்க இங்கே ஆர்வமுடன் வந்து விட்டார்.
துறவியாகி விட்டால் பணியில் ஏன் வேறுபாடு பார்க்க வேண்டும்? எங்கென்றாலும் இறைவனுக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் அவரின் கருத்து.
அவர் விரும்பியபடி ஒடுலா கிராமத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகிறார். அங்கு திருப்பலி முடித்துவிட்டுப் போகிறார்.
ஜோவின் டூவிலர் மலையடிவாரப் பாதைக்குள் நுழைந்தது.
"டேய் இந்தா வந்திட்டாண்டா" என்ற சப்தம் கேட்டவுடன் இரண்டு பக்கத்திலிருந்தும் சரமாரியாகக் கற்கள் வந்தன.
"ஃபாதர், பாத்துப் போங்க, வெறியனுங்க வந்திட்டானுங்க. வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஒட்டுங்க" என்றார் அல்போன்ஸ்.
"பயப்படாதீங்க அல்போன்ஸ். தலையைக் குனிஞ்சுக்கங்க" என்று அருட்பணி பதிலளிக்கையில் ஓர் இரும்புக் கம்பி அல்போன்ஸ் தலையில் வந்து விழுந்தது.
பாவம் அல்போன்ஸ்! தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வரத் தொடங்கியது. அல்போன்ஸ் தலையில் இரத்தம்வந்த இடத்தைக் கையால் அழுத்திக் கொண்டார்.
வெறியர்களில் ஒருவன் எறிந்த கத்தி ஜோவின் கைக்கு வந்து குத்திவிட்டது. ஜோவின் கையில் இரத்தம்.
"ஃபாதர் வேகமாய் ஒட்டுங்க" என்றார் அல்போன்ஸ்.
”எல்லாம் ஆண்டவர் இருக்கார்” என்றார் ஜோ.
ஜோவின் வண்டி அந்தச் சிறிய ஆலத்தின் முன் போய் நிற்கவும் குழந்தைகளும் பெரியவர்களும் கூடிவிட்டார்கள். அவர்கள் இருவரின் காயத்தைப் பார்த்து பரபரப்பானார்கள்.
"பயப்படாதீங்க, வாங்க பூசைக்கு போகலாம்" என்று கையில் சிறிய துணியைக் கட்டிக் கொண்டார் ஜோ.
அல்போன்ஸ் தலையில் துணியால் இறுகக் கட்டிக் கொண்டார். இருந்தாலும் இரத்தம் கசிந்தது. திருப்பலியில் குழந்தைகளும், பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள். கிறிஸ்மஸ் திருவிழா சந்தோசம்...இயேசு பாலன் பிறக்கப் போகிறார்.
"இதோ இயேசு பாலன் பிறந்துவிட்டார்” என்று திருப்பலியில் குழந்தை இயேசு சுரூபத்தைத் தூக்கிக் காட்டியபோது குழந்தைகள் மகிழ்ச்சியால் குதித்தார்கள். அங்கே குழந்தை இயேசு புன்முறுவலோடு இருந்தார். ஜோவின் கையில் இரத்தம் கசிந்தது. ஜோவிற்கு அந்த மகிழ்ச்சியில் வலியே தெரியவில்லை.