இறைவனின் தாய் மரியாள்
திரு. சார்லஸ் சென்னை-24
கத்தோலிக்கத் திருச்சபையில் அன்னை மரியாளின் வணக்கம்-பக்தி என்பது கடந்த 21 நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையில் மரியாவின் வணக்கம் இரண்டறக் கலந்த ஓன்று. தந்தையாகிய கடவுள் தன் மகன் இயேசுகிறிஸ்துவில் உலகிற்கு வெளிப்படுத்திய மீட்பின் நற்செய்தியை, கத்தோலிக்கத் திருச்சபை மரியா வணக்கத்தின் வழியாகப் பறைசாற்றுகின்றது. நான்கு நற்செய்திகளும், திருத்தூதர்களும், தொடக்கத் திருச்சபைக் கிறிஸ்துவர்களும் இயேசுவைப் பற்றிய செய்திகளை வாய்வழியாக வழங்கியபோது, அச்செய்திகளின் முக்கியப் பின்னணியாக விளங்கியவர் அன்னை மரியா.
மரியியல் சிந்தனைகளும், தொடக்கத் திருச்சபையினரிடையே மரியா பெற்றிருந்த பங்கும், இடமும் தான் மரியாளின் வணக்கத்தைக் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிரோட்டத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாக ஆக்கியுள்ளது. திருத்தூதர்களைத் தொடர்ந்து, திருத்தந்தையர்களும் மரியியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். புனிதர்களாகிய ஜஸ்டின், இரேனியுஸ், தெர்த்தூலியன், அலெக்ஸான்டிரியா கிளமெந்து, ஓரிஜன், நீசா நகரக் கிரகோரி, அம்புரோஸ், அகுஸ்தினார், இரேணிமுஸ் போன்றோரின் மரியியல் சிந்தனைகள் வணக்கத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்தன.
மரியாவைப் பற்றிய விசுவாசக் கோட்பபாடுகள்:
மரியாளைப் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
- இறைவனின் தாய் மரியா – கி.பி 431
- என்றும் கன்னி மரியா – கி.பி 553
- அமல உற்பவி மரியா – கி.பி 1854
- விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா – கி.பி 1950
மேற்கண்ட நான்கில் “மரியா இறைவனின் தாய் (Theotokos)” என்னும் விசுவாசக் கோட்பாடே காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் ஆகும்.
இறைவனின் தாய் மரியா - கி.பி 431
- தாய் அன்பை உலக மொழிகளில் எடுத்துரைக்கப் போதிய வார்த்தைகளே இல்லை. அதையே தூய அகுஸ்தினார், “ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை, அவருடைய தாய்மைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார்.
- இரண்டாம் வத்திக்கான் சங்கம், ”ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்கள் புனிதர்களுக்கு. இவ்வடிப்படையில் மரியா கிறிஸ்துவின் தாயும், இறைவனின் தாயுமாக இருப்பதால் அவருக்குச் சிறப்பான வணக்கம் செலுத்தப்படுகின்றது” என்று கூறுகின்றது.
- தந்தையில்லாமல் கடவுளால் பிறக்க முடிந்தபோது, தாயில்லாமல் அவரால் பிறக்க முடியவில்லை. மரியாளினால் கடவுள் மகிமைக்குள்ளானர் என்பதல்ல பொருள்; மகிமை பொருந்திய கடவுளை ஈன்றெடுத்ததால் மரியா இறைவனின் தாயாகும் பேறுபெற்றார் என்பதே கத்தோலிக்க விசுவாசம்.
- அன்னை மரியாளுக்கு ஆயிரம் சிறப்பியல்புகள் இருந்தாலும், இறைவனின் தாய் என்பதே இயேசுகிறிஸ்துவின் தாய்க்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது.
கி.பி 431ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை நடைபெற்ற எபேசு திருச்சங்கம் “மரியா கடவுளின் தாய்” (Mary is Theotokos) என்று உறுதியிட்டுப் பிரகடனம் செய்தது. இந்தத் திருச்சங்கம் நடைபெற்றபோது மன்னராக இருந்தவர் இரண்டாம் தியோடோசிஸ். எபேசு திருச்சங்கம், அலெக்ஸாண்ட்ரியா ஆயர் சீரில் தலைமையில் நடைபெற்றது. அந்தத் திருச்சங்கம் கூட்டப்பட்டதற்கு முக்கியக் காரணம், கொன்ஸ்தாந்திநோபிளின் ஆயராக இருந்த நெஸ்டோரியஸின் தப்பறைக் கொள்கைகளே. “இயேசு ஓர் ஆள் அல்ல, அவர் இரண்டு ஆட்கள். ஒன்று இயேசு மனிதன்; இன்னொன்று இயேசு கடவுள். இயேசு மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத் தான் பிறந்தார். பின்னர் தம் வாழ்க்கைக் காலத்தில் கடவுளாக மாறினார்” என்று ஆயர் நெஸ்டோரியஸ் கூறினார்.
இயேசு மனித இயல்பு, இறை இயல்பு (Human & Divine nature) ஆகிய இரண்டு இயல்புகளையும் கொண்டவர். இதற்கு மாறாகப் போதித்த நெஸ்டோரியஸின் போதனையைச் சரி செய்வதும், “இயேசு பிறக்கும்போது சாதாரண மனிதனாகப் பிறந்தார் என்பதால் மரியாவைக் கடவுளின் தாய் என்று சொல்லக்கூடாது. மாறாக இயேசுவின் தாய் என்று தான் சொல்லவேண்டும்” என்ற போதனைத் தவறானது என்பதை ஐயந்திரிபுற உலகிற்கு அறிவிப்பதும், ஆயர் சிரில் தலமையில் நடந்த எபேசு திருச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது. அந்தத் திருச்சங்கம் நெஸ்டோரியஸின் தப்பறையான போதனைகளைக் கண்டித்ததோடு, அவரையும் அவரது கூட்டத்தையும் திருச்சபையை விட்டு வெளியேற்றியது.
இந்தத் திருச்சங்கத்தில், “இயேசு, இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள்” என்ற விசுவாசக் கோட்பாடு மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ”மரியா கடவுளின் தாய்” (Theotokos) என்று அறுதியிட்டு உறுதி செய்தது. அதாவது மரியா கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் என்றே அழைக்கப்படவேண்டும் என்று எபேசு திருச்சங்கம் ஆணித்தரமாக இவ்விசுவாச சத்தியத்தை உறுதியுடன் பிரகடனம் செய்தது.
மரியாவின் தனிப்பெரும் பேறானக் கடவுளின் தாய் என்பது, இயேசு இறை-மனித இயல்புகளை உள்ளடக்கிய ஒரே கடவுள் என்பதால் உண்மையாகிறது. இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுள் ஆவார். இயேசு கடவுள் என்றால் மரியா கடவுளின் தாயே!
விவிலியத்தில் மரியா இயேசுவின் தாய்
இறைவனின் தாய் மரியா என்னும் கோட்பாட்டிற்கு நிறைய விவிலிய ஆதாரங்கள் உள்ளன.
- அனைத்து நற்செய்தியாளர்களும் மரியா இறைவனின் அன்னை என ஏற்றுக் கொள்கின்றனர்.
- அனைத்து நற்செய்தியாளர்களும் அவர்களின் நோக்கம் இயேசுவை இறைவனாகக் காட்டுவதாகும்.
- அன்னை மரியாவை இறைவனின் அன்னை என்றழைக்கும் விவிலிய மேற்கோள்கள்.
- மத்தேயு 2:18, 2:11, 12:46, 13:55, மாற்கு 3:31, லூக்கா 2:34,48,51, 8:19, யோவான் 2:5, 19:25.
புதிய ஏற்பாட்டில்
- புதிய ஏற்பாட்டில் 25 இடங்களில் “அன்னை’ என்றும், லூக்கா நற்செய்தியில் எலிசபெத்து வாயிலாக “ஆண்டவரின் தாய்” (லூக்கா 1:43) என்றும் கன்னி மரியாஅழைக்கப்படுகின்றார்.
- இயேசுவின் மனுவுருவை, இறைமனிதப் பிறப்பை நிரூபிக்கும் ஆதாரமாக மரியாவின் தாய்மை உள்ளது. மேலும் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்படிருந்த நம்மை மீட்டு, தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலா.4:4) என்று திருத்தூதர் பவுல் கூறுவதன் வாயிலாக நாசரேத்தூர் இயேசுவின் மறை உண்மைகளை விளக்குகின்றார்.
- நான்கு நற்செய்தியாளர்களும் மரியாவின் தெய்வீகத் தாய்மையைப் பற்றிப் பேசுகின்றனர்.
- தெய்வத்தின் பிறப்பை தெய்வீகத் தாயின்றி எப்படி அறிவிக்கமுடியும்? (மத் 13:55 மாற்கு 6:3 யோவான் 6:42)
- லூக்கா நற்செய்தியில் எலிசபெத்தைச் சந்திக்கும் மரியா, பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைப் பேழையின் (வி.ப. 40:34) புதிய உருவகமாகக் காட்டப்படுகின்றார். பழைய ஏற்பாட்டில் தன்னை நோக்கி இறைவனின் உடன்படிக்கைப் பேழைக் கொண்டு வரப்பட்டபோது தாவீது அரசர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததைப் போல, அன்னை மரியாள் எலிசபெத்தைத் தேடிச் சென்று வாழ்த்துக் கூறியபோது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
- நான்கு நற்செய்திகளிலும் இறைவனின் அன்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் “இயேசு கிறிஸ்துவின் மனுவுரு” என்னும் மாபெரும் உண்மையைச் சொல்வதற்காகவே தரப்பட்ட செய்திகள்.
- இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் ‘திருச்சபை’ என்ற ஏடு மரியாவின் தெய்வீகத் தாய்மையை முன்வைத்ததற்கு முக்கியக் காரணம், “இறைவனின் அன்னை” என்ற பழைய மறைபொருளில் ஒரு புதிய உண்மையைத் திருச்சங்கம் கண்டது தான். மரியாவின் தெய்வீகத் தாய்மை உருவகத்தில் திருச்சபையே ஓர் அன்னையாகிறது.
- நற்செய்தியாளர் யோவான் அன்னை மரியாவைச் சீடர்கள் குழுவின் ஓர் அங்கமாகவே காண்கின்றார். அதன் பொருள்: உலகெல்லாம் ஆள்பவரைப் பெற்றெடுத்தார் நம் அன்னை மரியாள். “உலகை வழிநடத்தும் கிறிஸ்துவைத் திருச்சபைத் தொடர்ந்து ஈன்றெடுக்கின்றது” என்கிறார் ஹிப்போலிட்டஸ்.
- புனித அகுஸ்தினார், “கிறிஸ்துவின் சகோதரர்களைப் பெற்றெடுக்கும் திருச்சபை, மரியா போன்று கன்னி அன்னை” என்று வலியுறுத்துகின்றார்.
- மக்களின் மீட்புக்காக அவரின் சேவையில் மலர்ந்தது அவருடைய தாய்மை.
- தூய ஆவியின் பிரசன்னத்தினால் உருவானது அன்னை மரியாவின் தாய்மை. இயேசுவின் இறைஇயல்பும், மனித இயல்பும் பிரிக்க முடியாத அளவுக்கு மரியாவால் ஒன்றானது.
- மரியா இறைவனின் தாய் என்பது “இறையாட்சி ஏற்கனவே உங்களிடையே உள்ளது” (லூக்கா 17:21 மத்தேயு 4:17) என்பதற்குச் சமமாகும். இறைவன் ஒருபெண் வயிற்றில் கருவானார் என்பது அனைத்து மனிதக் குலத்துக்கும் இறை அந்தஸ்து தருகிறது.
- மரியா மீட்பரின் அன்னையாகவும், எவரையும் மிஞ்சும் முறையில் ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும், தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்குகின்றார்.
- ககிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார், மரியா; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து, இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம் மகனோடு அவரும் துன்பப்பட்டார். எனவே மனிதருக்கு அருள் வாழ்வைப் பெற்றுத் தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, விசுவாசம், அன்பு போன்ற நற்குணங்களால் நிறைவாழ்வுச் செயலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தவர். எனவே அருள் வாழ்வில் “மரியா” தாயாக அமைந்துள்ளார்.
- எனவே மரியா உண்மையாகவே இறைவனும்,மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக் கொள்ளப் பெற்று, போற்றப் பெறுகின்றார்.
- இறைவனின் தாயான தூய கன்னி மரியா, இறைத்தந்தையிடமிருந்து பெற்ற கொடைகளாலும், தனது அர்ப்பண வாழ்வின் பணிகளாலும், மீட்பரான தன் மகனுடன் என்றும் ஒத்துழைக்கின்றார்; ஒன்றித்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் - இறைவனின் தாய்
தாமார் – தன் முயற்சியில் பிள்ளையை பெற்றெடுக்கிறார்.
இராகாபு - இவர் ஒரு புறவினத்துப்பெண், இவர் காட்டிக் கொடுத்ததினால் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றார்.
ரூத்து - இவர் ஒரு மோவாபிய பெண், தன் இனத்தைச் சொந்தமாக்குகின்றார்.
பத்செபா – வழிமரபை முடிவு செய்பவராக இருக்கின்றார். யூத மரபில் தான் அரசனாக இருந்தாலும் வாரிசை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணிடம் இருந்தது. (எ.கா) சாராள், யாக்கோபு, பத்செபா.
மரியா – கடவுளின் மீட்புத்திட்டத்தில் இறை இரக்கம் பெறுகின்றார்.
Sanctifying - புனிதப்படுத்தும் அருள், மீட்பதற்காக கொடுத்தது.
DivineGrace – எனவே மேலே சொல்லப்பட்ட நான்கு பேரும் புனிதப்படுத்தும் அருளில் பங்கெடுக்கின்றனர். ஆனால் அன்னை மரியா தெய்வீக அருளில் ஒரு தனிப்பட்ட அழைப்பால் பங்கெடுக்கின்றார். எனவே மரியா அருளால் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற வந்தவர் (வீட்டிலிருந்து பணிச் செய்வது). நிக்கதேம், அரிமத்தியா ஊர் யோசேப்பு ஆகியோர் தத்தம் பணியிலிருந்து இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள்.
மரியா என்ற பெயர்ச் செமிதிய அக்காடியா மொழியில் மரா, மரியா, மரியம், மிரியாம் என்று கூறப்படுகின்றது. “மரா” என்றால் அழகானது, நிறைவானது என்று பொருள். “மாரி” என்றால் கடவுள் என்று எகிப்திய மொழியில் பொருள். எனவே அன்னை மரியாள் கடவுளால் அழைக்கப்பட்டவர். சீடர்கள் ஆவியால் நிரம்பப் பெற்றவர்கள். ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை மரியா “ஆம்” என்று தன்னை இறைத்திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தார். அந்த முழுமையான, நிறைவான, அர்ப்பண வாழ்வை அடிப்படையாகக் கொண்டே மரியாவை “இறைவனின் தாய் - நம் அனைவரின் தாய்” என்று திருச்சபை உலகிற்குப் பறைச்சாற்றுகின்றது.
அன்னையின் சீடத்துவம் நம் தனிமனித வாழ்விலும் இறை மனித உறவிலும் ஒன்றித்திருக்க வேண்டிய ஒன்று.