விண்ணக மகிழ்வு
திருமதி. மி. அமலி எட்வர்ட் - நாகமலை, மதுரை-19
என் தந்தை சொல்வார் நாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவின் உடலை அடிக்கடி உட்கொள்கிறோம். தோராயமாக 10 வயதில் புது நன்மை எடுக்கிறோம். நமது வயதை கணக்கிட்டு நாம் எத்தனை முறை கிறிஸ்துவின் உடலை உட்கொண்டிருக்கிறோம் என நினைத்துப் பார். அப்பத்தில் உள்ள கிறிஸ்துவை நாம் உட்கொண்டோம் என்று விசுவாசித்தால் நாம் அனைவருமே புனிதராகத் தானே மாறியிருக்க வேண்டும். புனிதத்தை உட்கொண்ட நாம் மனிதராய் தானே வலம் வருகிறோம் ஏன்? என்று கேட்டார். என்னை சிந்திக்கத் தூண்டியது.
கிறிஸ்துவ வாழ்வு என்பது ஆலயத்தோடு நின்று விடுகிறதா? அல்லது அந்த கிறிஸ்துவை உட்கொண்ட நாம் ஆலயத்திலிருந்து திரும்பும்போது அங்கேயே உட்கொண்ட இயேசுவை விட்டு விட்டு வருகிறோமா? இயேசுவின் ஒருசில போதனைகளை மட்டுமே நமக்கு சாதகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரு சிலவற்றை இதையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் கடைபிடிப்பது கடினம் என சாக்கு போக்கு சொல்லி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். அதனால் தான் நம்மால் புனிதராக மாற கிறிஸ்துவாக வாழ இயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை. உள்ளத்தில் ஏழ்மையை விரும்பியவர் நம் இயேசு. எளிய வாழ்வையே தேர்ந்தெடுத்தவர். அதனால் தான் ஊருக்கு ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் பிறந்தார். எளிய வாழ்க்கை மூலமே உலகத்தை வென்றவர். ஆனால் அவர் பிறப்பை அவருக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாமல் வெகு விமரிசையாக, அலங்கார பகட்டு குடிலாக வீடுகளிலும் ஆலயங்களிலும் அலங்கரிக்கிறோம். இவையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானதாக நினைத்துக் கொள்கிறோம். சரி. நமது அகக் குடிலில் விழா பகிர்வு எப்படி உள்ளது என சிந்திக்கும் வேளையில் இயேசு பிறந்த குடில் போன்று குடிசை பகுதிகளில் வாழும் ஏழை மனங்களில் விழாவின் பகிர்வு எப்படி உள்ளது? வாருங்கள் நான் பணியாற்றும் கிராம பள்ளிக்கு.
இந்து மாணவர்கள் படிக்கும் பள்ளி. கல்லுடைக்கும் தொழிலாளர், கூலி வேலை செய்பவரின் குழந்தைகளே படிக்கின்றனர். சேவையின் அடிப்படையில் ஒரு தரமான கல்வியை பல்லோட்டி அருட்தந்தையர்கள் அளித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த பள்ளி மாணவர்களை முதன் முதலில் நான் சந்தித்த போது ஓட்டைக் குடிசை வீடுகள், உடுப்பதற்கு நல்ல உடை கிடையாது. சாதாரண எளிய உணவு தான். ஆனாலும் கூட அக்குழந்தைகள் முகத்தில் என்றுமே மகிழ்ச்சி பிரகாசம் தெரியும். நிறைவான மனமுள்ள குழந்தைகள். நல்ல உள்ளம் படைத்தவர்கள் அளிக்கும் உதவியால் தரமான கல்வியை குழந்தைகள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட எளிய மாணவர்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய ஒரு சில தாக்கங்களையே உங்களோடு இந்த கிறிஸ்மஸ் செய்தியாக பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
எளிய மாணவர்கள் தான் என்றாலும் இவர்கள் உள்ளத்திலும் உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடு எழுந்தது. ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு மாதம் முன்பாகவே உனக்குக் கிடைக்கும் வாங்கி சாப்பிட தரும் காசை பொதுவான ஒரு உண்டியல் வைத்து அதில் சேமிக்கக் கூறுவேன். மாணவர்களும் ஆசிரியர்களும் சேமிப்பர். இறுதியில் அதை ஒரு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்களுக்கு உடல் ஊனமுற்றவருக்கு அந்த குழந்தைகளை கூட்டிச் சென்று அவ்வில்ல மனிதர்களோடு கலந்து பேசி அவர்களோடு ஒருவராக அன்றைய நாளில் பங்கேற்க வைப்பேன். இந்த அனுபவம் எளிய குழந்தைகள் மனதில் எத்தகைய சந்தோசத்தை அளிக்கிறது என்பதைத் தான் இங்கே பகிர ஆசைப்படுகிறேன்.
- முதல் அனுபவத்தில் ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் மாணவர்களுக்கு தின்பண்டமும் பென்சில் நோட்டு புத்தகங்கள் வாங்கி அம்மாணவர்களுக்கு எம்மாணவர்கள் கொடுத்தனர். இவ்வனுபவம் மாணவர்கள் மனதில் ஒரு தாக்கத்தைஏற்படுத்தியது. பல மாணவர்கள் கூறினர் “மேடம் வாழ்க்கையில் இன்று தான் நான் மகிழ்ச்சியாக இருந்ததாக உணர்கிறேன். ஏதோ ஒரு நல்லதை சாதித்த மகிழ்ச்சி எனக்கு கிடைத்தது” என்றார்கள். தன்னை விட ஒரு ஏழைக்கு மகிழ்வை தான் அளித்ததாக நினைத்து நிறைவு பெற்ற மகிழ்வுக்கு ஈடு இணையில்லை.
- "முதியோர் இல்லம் சென்ற போது தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்ற அந்த மகனை சுட்டுக் கொல்ல வேண்டும் மேடம். அந்த தாத்தா பாட்டியின் வேதனை என்னை மிகவும் ஏதோ செய்தது" என்றான் ஒரு மாணவன். நாளை நிச்சயமாக தன் பெற்றோரை நேசிக்கும் பொறுப்புள்ள மகனாக இருப்பான் என்பதில் அய்யமில்லை.
- ஒரு மாணவி கூறினாள் ""நான் வளர்ந்து திருமணம் ஆனபிறகு தெருவில் வீசியெறியப்பட்ட இப்படிப்பட்ட ஒரு குழந்தையை நான் தத்தெடுத்து வளர்ப்பேன்" என்றாள். மண்ணுலகின் எளிய குழந்தைகள் விண்ணுலக எண்ணம் கொண்டிருப்பர் என்பது உண்மை.
- ஒரு மாணவன் "பொது உண்டியலில் நான் காசே போடவில்லை" என்று பெருமையாக கூறினான். ஆதரவற்ற குழந்தைகள், தெருவில் வீசப்பட்ட கைகுழந்தைகளை பராமரிக்கும் இல்லம் பார்க்க அழைத்துச் சென்றபோது அவனது கைகளாலேயே வாங்கி வந்த பால் பவுடர், துண்டுகள், பதார்த்தங்களை பொறுப்பாளரிடம் கொடுக்கக் கூறினேன். அடுத்த நாள் என்னிடம் வந்தான். "மேடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் ஒரு குற்றவாளியாக தெரிகிறேன்" என்றான். "ஏன்" என்றேன் தெரியாத மாதிரி. “மேடம் அந்த குழந்தைகளை பார்த்த போது என் கையால் நான் பொருட்களை கொடுத்த போது நான் தகுதியற்றவனாக கல் நெஞ்சம் உள்ளவனாக ஒரு குற்றவாளியாக நான் தெரிந்தேன் மேடம் வெட்கப்படுகிறேன்” என்றான். “பரவாயில்ல தம்பி இந்த உணர்வு உன்னை நாளைய சமுதாயத்தில் நல்லவனாக சமுதாய நண்பனாக வாழ வழி காட்டும். தவறுகள் தான் நம்மை உருவாக்கும். நாளை நீ இரக்கம் உள்ள மனிதனாக, மனித நேயமுடையவனாக வாழ்வாய் என்ற நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சந்தோஷமாக சமாதானமாக போய் வா” என்றேன்.
- ஒரு மாணவி அவர்கள் பெற்றோரிடம் கூறி தீபாவளி கொண்டாட இயலாத தன் வகுப்பில் படிக்கும், அவளை விடவும் ஒரு ஏழை மாணவிக்கு உடை வாங்கி தந்து மகிழ்ந்தாள். பெற்றுக் கொண்டவள் அனைவர் முன்பும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டாள். எளிய மாணவர் என்றாலும் உள்ளத்தால் மிக பெரிய செல்வந்தர்கள் என்றே நான் கருதுகிறேன்.
- சென்ற ஆண்டு தீபாவளி விழாவிற்கு முன்பாக மதிப்பீட்டுக் கல்வி வகுப்பில் “பகிர்வு தான் விழாவின் மகிழ்ச்சி” நீ புத்தாடை உடுத்துவதிலும், உண்பதிலும் உள்ள மகிழ்ச்சியை விட, விழாவே கொண்டாட முடியாத ஒரு நபருக்கு உன்னால் ஆன உதவியை செய்து பார். அவர் கண்களில் தெரியும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்றேன். தீபாவளி முடிந்து மதிப்பீட்டுக் கல்வி வகுப்பில் தீபாவளி விழா பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளலாமே என்றேன். பக்கத்து வீட்டில் யாருக்காவது பட்டாசு கொடுத்தேன் sweet கொடுத்தேன் என்று பகிர்வர் என நினைத்தேன். ஐந்து மாணவர்கள் ஒரு மன நலம் குறைந்த ஒருவரை கூட்டிப் போய் புதிய ஆடையை அவரையே தேர்ந்தெடுக்க வைத்து குளிப்பாட்டி, ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று விரும்பிய உணவு கொடுத்து, அவரை மீண்டும் அவர் வாழும் அந்த இல்லத்திற்கு கொண்டு வந்து விட்டனர். இந்த அனுபவத்தை கூறி இந்த தீபாவளி எங்களால் மறக்கவே முடியாத மகிழ்ச்சியை தந்தது என்றார்கள் நன்றி கூறினார்கள். இந்த ஆண்டு மனநலம் குன்றிய ஐந்து பேருக்காவது நாங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர். ஐந்து மாணவர்கள் செய்த செயல் இன்று 25 பேரை இணைத்துள்ளது. மேலும் வேறொரு பள்ளிக்கு போட்டிக்காக சென்ற போது அங்குள்ள மாணவர்களிடம் இதை பகிர்ந்துள்ளனர். அவர்களும் நாங்களும் இணைகிறோம் என்று கூறினராம். இந்த நற்செயல் இந்த மாணவர்களால் நிச்சயம் மிக பிரம்மாண்ட அலைகளை உருவாக்கும்.
- இந்த ஆண்டும் தீபாவளி உண்டியல் வைக்கப்பட்டது. அதில் கிடைத்த ஓர் அனுபவம். சென்ற கல்வி ஆண்டில் ஒரு மாணவனின் அம்மா வந்தார்கள். "மேடம் என் வீட்டுக்காரர் என்னை விட்டு விட்டு போய்விட்டார். மூன்று குழந்தைகளும் இங்கு தான் படிக்கின்றார்கள். பள்ளிக்கு கட்ட வேண்டிய பாக்கி தொகை கட்ட இயலாமல் கஷ்டப்படுகிறேன்" என்றார்கள். "அதைப்பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம்" என சமாதானப்படுத்தி அனுப்பி விட்டேன். இந்த ஆண்டு அந்த உண்டியலில் மாணவர்கள் சிலர் காசுப் போட்டுக் கொண்டிருந்தனர். தினமும் போடுவீர்களா என நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு மாணவன் கொண்டு வரும் 5 ரூபாயை சில்லறையாக மாற்றி நண்பர்களிடம் கொடுத்து அனைவரும் பகிர்ந்து போடுவதாக கூறினர். அப்போது சென்ற ஆண்டு பள்ளித் தொகை கட்ட கஷ்டப்பட்ட அந்த அம்மாவின் மகன் கூறினான் “மேடம் நான் உண்டியலில் 100 ரூபாய் போட்டேன்” எனக் கூறினான்;. அதிர்ந்து போனேன். “தம்பி 100ரூபாய் எப்படிக் கிடைத்தது?” என்றேன்;. “எங்க மாமா ஊரிலிருந்து வந்தார்கள். எனக்கு 100ரூபாய் கொடுத்தார்கள். அதை அப்படியே இந்த உண்டியலில் போட்டுவிட்டேன்” என்றான். அம்மாணவனின் முன்னால் நான் வெட்கி தலைகுனிந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.
- “ இந்த ஏழை கைம்பெண் மற்ற எல்லாரையும் விட அதிகம் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களிடம் மிகுதியான பணத்திலிருந்து கடவுளுக்கு காணிக்கை போட்டனர். இவளோ தனது வறுமையிலும் தன் பிழைப்பிற்கானது முழுவதையும் போட்டு விட்டாள் என்று கூறிய இயேசுவின் வார்த்தைகள் என் நெஞ்சுக்குள் ஓடியது. “ஏழைகளே நீங்கள் பேறு பெற்றவர்கள். ஏனெனில் கடவுளின் அரசு உங்களதே.” ஆம் விண்ண்கத்தின் மகிழ்வை இக்குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இவ்வாண்டு கிறிஸ்து பிறப்பு விழா விண்ணக மகிழ்வை தரும் விழாவாக கொண்டாட முயல்வோம்.