முயற்சிப்போமா?

முனைவர் இரா.ஏஞ்சல்தாமஸ் -மதுரை
Indian Madonna

“பிறப்பில்லாதவன் பிறப்பெடுத்தான்: பிறப்பெடுத்துப் பிறர் பிறப்பறுத்தான்” என்று குறிப்பிடும் வாலியின் வரிகளுக்கேற்ப, மனிதமாசு களைய மண்ணில் அவதரித்தார் இயேசுபிரான். கன்னிமரியின் வயிற்றில் கருவாய் உதித்த பாலகனாம் இயேசுபிரானின் பிறந்தநாள் விழாவை ஓரிரு நாட்களில் எதிர்கொள்ள இருக்கிறோம்.

ஒப்பற்ற அருளாளனாம் இறைமகனின் பிறப்பினால் இவ்வுலகே மாட்சி பெற்றது. சரித்திரம் படைத்த அவரால்த்தான் சரித்திரம் பிறந்தது. வரலாற்றுச் சுவடுகள் கி.மு: கி.பி என வகுக்கும் கால அடையாளங்களே இதற்குச் சாட்சி. இயேசுவின் பிறப்பை, “இதோ கன்னி கருத்தாங்கி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்”. (மத்தேயு 1:22) எனத் திருவிவிலியம் குறிப்பிடுகிறது.

ஆதித்தாயாம் ஏவாளின் கீழ்ப்படியாமையால் ‘பிள்ளைப்பேறு’ சாபமாய் அமைந்தது. அதே சாபமானது ஆண்டவரால் படைக்கப்பட்ட ஈரினத்தில் ஓரினமாம் பெருமைமிகு பெண்ணினமாம் - அன்னை மரியாளால் ஆசிர்வாதமாய் மாறியது. பெண்களுள் பேறுபெற்றவளாய்க் கருதப்பட்ட அன்னை மரியாளிடம் காணப்பட்ட தாழ்ச்சியே அவளை மாதரசியாய் மாற்றியது. கர்வம் எனும் வார்த்தையைக் கூட அறியாதவளாய் இருந்தாள் அன்னை மரியாள். அன்னையிடம் பிறந்த அன்புப் பாலகனாம் இயேசுவின் பிறப்பைக் குறித்துக் கிறித்தவ இலக்கியங்களில் தலைப்பேறான தேம்பாவணி இலக்கியம்,

“பழி எலாம் நீக்கி, நீங்காப் பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி
அழிவு எலாம் பயந்த பேய் வென்று அமலனும் மகனும் ஒன்றாய்
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய்ப் பிறப்ப நாதன்” எனக் குறிப்பிடுகிறது.

பெண்களுள் பேறு பெற்றதாய்த் திகழ்ந்தது அன்னை மரியாளின் பிறப்பு. பழைய சாத்திரங்களை உடைத்துச் சரித்திரம் படைத்தது அவர் தம் மகனின் பிறப்பு.

நம் பிறப்பு எதை மையமாகக் கொண்டுள்ளது? சற்று சிந்திப்போம்.

கிறித்தவனாக, கிறித்தவளாக நாம் எதை அடையாளமாகக் கொண்டுள்ளோம்? எப்போதும் பிறரையே முன்மாதிரியாகக் கொண்டு வாழும் நாம் பிறருக்கு முன் மாதிரியாய் வாழ முற்படுவோம். அதற்கு நாம் செய்ய வேண்டியது பெரிதாக ஒன்றுமில்லை. “ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.”(மத்தேயு7:12) எனும் வசனத்தை வாழ்வாக்குவோம்.

யாரும் நம்மை வெறுப்பதை, நம்மைக் கண்டு பொறாமை கொள்வதை, நம்மைப் பற்றி அவதூறு பேசுவதை, நம் வளர்ச்சி கண்டு தீய எண்ணம் கொள்வதை நாம் விரும்ப மாட்டோம். எனவே நம்மால் புனிதர்களைப் போல் வாழ முடியாவிடினும் பரவாயில்லை. மனிதராய் வாழ முனைவோம். இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் பிறப்பு விழாச் செய்தியாக இதனைக் கொள்வோமே!