வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்.
அருட்திரு. மரிய அந்தோனி ராஜ் - பாளையங்கோட்டை
ஒருமுறை ஒரு பத்திரிக்கையாளர் ஒரு பேட்டி எடுத்தார் வரலாற்று நடந்த முக்கியமான நிகழ்வு எது என்று. ஒவ்வொருவரும் ஒரு நிகழ்வைச் சொன்னார்கள். நெருப்பைக் கண்டுபிடித்தது. அனுவைப் பிளந்தது. நிலாவில் மனிதன் கால் பதித்தது என்று. அப்போது ஒரு 14 வயது சிறுமி, “வரலாற்றில் நடந்த முக்கியமாக நிகழ்வு மட்டுமல்ல, வரலாற்றையே மாற்றியமைத்த நிகழ்வு இயேசு பிறப்புதான்” என்றான். இயேசுவின் பிறப்பில்தான் எத்தனை அற்புதங்கள்.
நாம் இயேசு கிறித்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழா கடவுள் வானகத்தில் மட்டும் உறைகின்ற கடவுளல்ல. வையகத்தில் வாழ்பவர் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது..
1. வரலாற்றில் பங்கேற்கும் கடவுள்
புறவினத்து மக்களைப் பொறுத்தளவில் கடவுள் என்பவர் வானங்களில் மட்டுமே உறைபவர் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் யூதர்கள் அப்படியல்ல. கடவுள் தங்களோடு இருக்கிறார். வரலாற்றில் பங்கெடுக்கிறார் என்று நினைத்தார்கள். அதிலும் குறிப்பாக அடிமைத்தன வீட்டிலிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு அழைத்து வந்தது. அவர்களுக்கு சொந்த நாட்டினைக் கொடுத்தது போன்ற நிகழ்வுகளில் அவர்கள் கடவுளின் பிரசன்னத்தை அதிக அதிகமாக உணர்ந்தார்கள் கடவுள் தங்களோடு வருகிறார். வாழ்கிறார் என்று. இயேசுகிறித்துவின் பிறப்பு இதனை இன்னும் உறுதிசெய்தது. இயேசுவின் பிறப்பால் கி.மு, கி.பி என்றானது. இயேசு கிறித்து விண்ணகத்தில் மட்டும் வாழ்கின்ற கடவுள் அல்ல இனி. மண்ணகத்திலும் வாழ்பவர். இன்னும் சிறப்பாகச் சொல்லவேண்டும் என்றால் அவர் வரலாற்றில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் அதனைப் புனிதப்படுத்தினார். உரோமையர் 5:12,16 ல் வாசிக்கிறோம் “ஒரு மனிதர் வழியாய் பாவம் வந்தது, ஒரு மனிதர் வழியாய் அருள்நிலையைப் பெற்றோம்". ஆம் இயேசுவின் வழியாய் புனிதமடைந்தோம்.
ஒரு வகுப்பில் வரலாற்று ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டார். “ஓவியத்திற்கும், காவியத்திற்கும் என்ன வித்தியாசம் என்று? அதற்கு ஒரு மாணவன் சொன்னான், “கரும்பலையில் யாருக்கும் புரியாமல் எழுதுகிறீர்களே அது ஓவியம், அப்படிப் புரியாதவற்றையெல்லாம் எழுதிப் படித்து தேர்வில் நாங்கள் வெற்றி பெறுகிறோமே அது காவியம் என்றானாம்.
2. மனிதத்தில் பங்கெடுக்கும் கடவுள்
இயேசுகிறித்துவின் பிறப்பு வரலாற்றில் நிகழந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல. மாறாக அவர் மனித உருவில் தோன்றுகிறார். அதனால்தான் பிலிப்பியர்2:6-11 ல் படிக்கிறோம். “கடவுள் தன்மையில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றார். யோவான் 1:14 ல் படிக்கிறோம். வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்” என்று. இயேசுகிறித்து இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது தன்னை மானிடமகன் என்றே அழைக்கிறார்.
இயேசு இவ்வுலகில் வாழ்நதபோது முழுமனிதானாய் வாழ்ந்தார். ஆடுகளாகிய நாம் வாழ்வு பெறும்பொருட்டு. அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த மண்ணுலகில் வாழ்ந்தார்.
3. துன்பத்தில் பங்கேற்கும் கடவுள்
இயேசு கிறித்து மனிதராய் பிறந்தார் என்று சொல்லும்போதே அவர் துன்பத்தில் பங்கெடுக்கிறார் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அவர் நமக்காக காயப்பட்டார். நொறுக்கப்பட்டார். அவமானப்பட்டார்.
இந்த உலகத்தில் எல்லாரும் வாழ்வதற்காகப் பிறக்கிறார்கள் என்று சொன்னால் அவரோ இறப்பதற்காக பிறந்தவர். தன்னுடைய மண்ணுலக வாழ்விலே நமக்காக அவர் பல்வேறு துன்பங்களை, இன்னல்களை அனுபவித்தார். அவர் எதற்காகத் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றால் நம்முடைய துன்பங்களை எல்லாம் போக்குவதற்காகத்தான். தான் தன்னுடைய பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எவ்வளவோ இன்னல்களை சந்திக்கிறாள் அல்லவா? அதுபோலத் தான் இயேசு நமக்காகத் துன்பப்பட்டார். இன்னும் துன்பம் என்பது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியது அல்ல மாறாக அது மகிழ்ச்சிக்கான வழி என்பதையும் நமக்கு சொல்லித் தருகிறார். கவிஞர் வைரமுத்து சொல்வார், “துன்பங்களும் நாம் வாழ்வின் முன்னேற்றமே” என்று. ஆம் இயேசு தன்னுடைய சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு மீட்பைக் கொண்டுவந்ததன் வழியாக சிலுவை மீட்பின் சின்னம் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
4. நமது வாழ்விலும் பங்கேற்பு
இந்த கிறித்து பிறப்பு பெருவிழா நமக்கும் ஒரு அழைப்புத் தருகிறது. அது என்ன அழைப்பு இயேசு கிறித்துவைப் போன்று நாமும் பிறருடைய வாழ்வின் வளர்ச்சிக்காக பங்கேற்க வேண்டும் என்பதே. அருட்தந்தை ஏ.டி.தாமஸ் பீகார் மாநிலத்தில் ஹசாரிபாத் என்ற இடத்தில் வாழந்த பழங்குடி மக்களுக்காக வாழ்ந்தவர். அவர்களுக்கு கல்வியறிவு புகட்டி, அவர்களுடைய நிலங்களை ஆதிக்க வர்க்கத்தினரிடமிருந்து மீட்டுத் தந்தவர். அதனால் தன்னுடைய உயிரை 1997 அக் 24;ல் இழந்தவர். இந்த அருட்தந்தையைப் போன்று, இயேசுவைப் போன்று நாமும் பிறர் வாழ்வு முன்னேற பங்கெடுக்க வேண்டும். அப்போது இறைவனின் பணியில் நாமும் பங்கேற்க முடியும், இறையருளைப் பெறமுடியும்.