என்றும் நிலைப்பது...

அருட்பணி எம்.ஏ.ஜோ. சே.ச.

அருட்பணி எம்.எ.ஜோ சே.ச அவர்கள் "நியு லீடர்" என்ற ஆங்கில கத்தோலிக்க இதழின் முன்னாள் ஆசிரியர், சிறந்த பாடலாசிரியர். அவர்கள் எழுதிய பாடல்களும், அவை உருவான வரலாறும் சில இங்கே இடம் பெற்றுள்ளன. இவற்றை வெளியிட அனுமதி அளித்த தந்தைக்கு நன்றிகள் பல..


பாடல் 1-எதுவும் இல்லா ஏழைபோல்

நியு லீடரில் இருந்த காலத்தில் தூய மரியன்னை இல்லத்தின் அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பணியாற்றிய ஜெரோம் தாஸ் ச.ச. மிகநல்ல நண்பர். மிக நல்ல மனிதர். ஆழமான அருப்பண உணர்வு கொண்ட அரிதான அருட்பணியாளர். அவரது இசை ஞானத்தை நான் அருகிருந்த பார்த்தவன் என்பதால், இத்தொகுப்பில் அவரது இசையும் வேண்டும் என எண்ணி கேட்டு வாங்கிய இராகம் இது. கிறிஸமஸ் காலத்தில் குழந்தை இயேசு திருத்தலங்களில் பாடக் கூடிய இனிய காணிக்கைப் பாடல்.

முதல் சரணத்திலுள்ள நயமான கற்பனையைக் கவனித்தீர்களா? கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானிகள்(அரசர்கள்) குழந்தை இயேசுவுக்குக் காணிக்கையாக பொன்னும் தூபமும் போளமும் தந்ததாக விவிலியம் சொல்கிறது. அவற்றை வைத்துக்கொண்டு மரியாவும் சூசையும் என்ன செய்திருப்பார்கள்? தங்கள் பிள்ளையின் மனமறிந்து ஏழை இடையருக்குக் கொடுத்திருப்பார் என்கிறது முதல் சரணம்.

 இசை: ஜெரோம் தாஸ் ச.ச
 பாடியவர்: பத்மலதா

 பல்லவி:
 எதுவும் இல்லா ஏழைபோல்      
 துயிலும் தேவத் திருமகனே
 எதை நான் தருவேன் காணிக்கையாய்?
 எதை நீ விரும்பி ஏற்றிடுவாய்:
              -குழந்தை இயேசுவே
 சரணம்:
தங்கம், தூபம், தைலம் எல்லாம்
தந்தால் கூட அதை வாங்கி
ஏழை இடையர்க்குத் தந்திடுவாய்
எனக்கே செய்தீர் என்றிடுவாய்.
              -குழந்தை இயேசுவே

அன்னை மரியா தந்த தென்ன? 
அன்புடன் வளனார் தந்த தென்ன?	
ஆணவம், அகந்தை பலிஎரிப்பேன்
அன்பை நிறைவாய்ப் பரிசளிப்பேன்.		  
              -குழந்தை இயேசுவே

பாடல் 2 இரக்கம் பொங்கிடும் ஊற்றே.

சென்னை அண்ணா நாரில் உள்ள அழகான இறையிரக்கத் திருத்தலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? புனித சின்னப்பர் சபைக்குருக்கள் உருவாக்கியுள்ள அருமையான ஆலயம். ஒரு சமயம் அங்கு திருப்பலி ஆற்றச் சென்ற போது, இந்தச் செய்தி கேட்டு மனம் துவண்டது. நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல்நலம் பற்றிய செய்தி. திருப்பலியில் பங்கேற்ற மக்கள் அனைவரையும் இக்கருத்திற்காக உருக்கமாய் செபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ”தேர் ஷால் பி ஷவார் ஆஃப் ப்ளஸ்சிங்ஸ்” என்ற ஆங்கிலப்பாடலை அனைவரும் பாடி ஆசி மழைக்காக வேண்டினோம். இறையிரக்கத் திருத்தலம் அல்லவா? திருப்பலி முடிந்துத் திரும்பும் போதே அவரது உடல் நலம் பற்றிய மகிழ்ச்சியான நல்ல செய்தி வந்தது.

அந்த அருமையான ஆங்கிலப் பாடலுக்கு இணையான தமிழ்ப் பாடல் ஒன்று வேண்டும் என எண்ணி, திண்டுக்கல்லில் உள்ள எங்கள் மரியன்னைப் பள்ளியின் பரந்த மைதானத்தில் நடந்து கொண்டே யோசித்தேன். மனதில் இரண்டாம் சரணம் உருவானபோது திடீரென வானம் கறுத்தது. மேகங்கள் திரண்டன. சில நொடிகளில் தூறல் ஆரம்பித்து, மூன்றாம் சரணம் உருவானபோது பிறப்பதற்குள், இடி மின்னலுடன் பெருமழை கொட்டத் தொடங்கியது. நிஜ மழை பொழியச் செய்து அருள்மழை பொழிவேன் என்றாரா இறைவன்? இசையைமைத்திருப்பது நண்பர் ஜான் பிரிட்டோ. பேராயர் சின்னப்பாவின் மருமகன் இசைஞானமும், நல்லவற்றை மனம் திறந்து பாராட்டும் தாராள மனமும் கொண்ட நம்பிக்கையாளர். இப்பாடலைப் பாடி வேண்டுவோம். இறையிரக்கம் மழையாய் இறங்கட்டும்.!


இசை: ஜெரோம் தாஸ் ச.ச
பாடியவர்: பத்மலதா

இரக்கம் பொங்கிடும் ஊற்றே  
இயேசுவே, ஆண்டவரே
கலக்கம் நிறைந்த எம் உள்ளத்தில்
கருணை மழை வேண்டும்

குழு 
ஆசித்துளிகள் போதுமோ - உம்
அருள் மழை வேண்டும்
ஆசித்துளிகள் போதுமோ - உம்
அருள் மழை வேண்டும்

2. பகைமைத்தீயும் அணைந்திடும்
மனங்கள் குளிர்ந்திடும்
உம் அன்பு மழையில் நனைந்திட்டால்
உள்ளங்கள் துளர்த்திடும்  தேவா

3. உமது இரக்கம் அறிந்திடா
உள்ளம் ஒர் பாலை நிலம்
உமக்காய்ப் பிறரை நேசித்தால்
உண்மையில் சோலை வனம்  தேவா


பாடல் 3 மார்கழி மலரே தாலேலோ.

"ஐயோ தூங்குகிறாரே" என்று பதைபதைத்து சீடர்கள் எழுப்பியவரை நாம் இந்தப்பாடலில் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறோம். இந்த இனிய குழந்தைப் பருவத்தில் இப்போது தூங்கினால் தான் உண்டு. அவர் வளர்ந்து ஆளாகி பணியைத் தொடங்கிய பிறகு, தலைசாய்க்க இடமும் இருக்காது. நேரமும் இருக்காது. எனவே இப்போது துங்கட்டும் என்பதனால் தான் தாலட்டுப் பாடல்களுக்கு உள்ள அழகையும், சுவையையும் உணர்ந்திருக்கிறீர்களா? கண்ணே, மணியே, கண்ணுறங்கு, என்று பாடுவது போல, ”மார்கழி மலரே, மரியின் மகவே” என்று இத் தெய்வக் குழந்தையின் பெருமைகளைச் சொல்லிப் பாடுகிறோம். இதற்கு இசை அமைத்தது கிளரேஷியன் சபைக்குவாகப் பணியாற்றும் என் தம்பி மரியதாஸ். என் தந்தையின் அண்ணன் மகன். அற்புதாகப் பாடுவார். பேசுவார். செபிப்பார். அவரது பாடல்கள் ஒலிப்பேழைகளாய் வந்த வண்ணம் உள்ளன. ”இயேசுவே, என்னுடன் பேசுவாயா?” என்ற அழகான பாடல் அவருடையது தான். “உமது மழலைச் சிரிப்பிலே ...எங்கள் வாழ்வின் பொருளே புரியுதே.”


இசை அருட்பணி மைக்களின் மரியதாஸ். சி.எம்.எஃப்
பாடியவர் ரேஷ்மி

மார்கழி மலரே தாலேலோ - அன்பு 
மரியின் மனவே தாலேலோ
காத்திடும் அன்பே தாலேலோ -இன்ப 
கானக நிரவே தாலேலோ(2)

உமது மழலைச் சிரிப்பிலே - எங்கள்
மனதினட கவலை மறையுதே
உமது முகத்தின் ஒளியிலே - எங்கள்
வாழ்வின் பொருளே புரியுதே

         கோரஸ் ஆரீரோ கண்ணே ஆராரோ -அன்பே
		         ஆரீரோ கண்ணே ஆராரோ 

என்னை துரத்தும் பாவமே -உந்தன்
குடிலைக் கண்டால் மிரளுதே
பகையும் நெருப்பும் அகலுதே - அன்புப்
பகலவன் ஒளி பரவுதே (மார்கழி)	
(ஆரீரோ)