கிறிஸ்து பிறப்பு - அன்பின் காலம்
ஜாக்கிலின் - சென்னை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் மனுவுரு எடுத்த அந்த மாபெரும் நன்நாள், மகிழ்ச்சியின் நாளாக இன்றளவும் சிறப்பிக்கப் படுவது பெருமைக்குரிய ஒன்று. அன்று இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது முதலில் (இடையர்களுக்கு) ஏழைகளுக்கான நற்செய்தியாக அமைந்தது.
கிறிஸ்து பிறப்பு : இது அன்பின் காலம், பகிர்வின் காலம். காரணம் அன்பு என்பது தனக்கு மேலே உள்ள ஒருவனுக்கும் தனக்கு கீழே உள்ள ஒருவனுக்கும் பரிமாறப்பட்ட வேண்டிய ஒன்று. அன்புக்கும் அடைக்கும் தாழ்உண்டோ? கரிசனை அன்பு இருவரிடம் மட்டுமே கிடைக்கும். ஒன்று கடவுளிடம், மற்றொன்று தாயிடம். எனவே கிறிஸ்து பிறர் அன்பில் நிலைத்திருக்க, முதலில் அவர் தன்னை மையப்படுத்தி, நீங்கள் என் அன்பில் நிலைத்திருங்கள் என்று அழைக்கின்றார்.
மனுக்குலம் முழுவதும் பாவத்திலும், சுயநலத்திலும், தற்பெருமையிலும், மன்னிப்பற்ற தன்மையிலும், ஏன் மனிதனை மனிதனே இன்று அழிவிற்கு உட்படுத்தும் இந்த அவலநிலையை மாறுவதற்காக இவ்வுலகில் தொடக்கத்தில் வாக்காக இருந்த கடவுள் மனுவுருவெடுத்தார். கிறிஸ்துவைப் பற்றிய ஆழ்ந்த போதனைகளை அள்ளித்தரும் கிறிஸ்தவம் அவரின் பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இன்றளவும் செய்ய முடியாத தடுமாற்ற நிலைதான். கிறிஸ்துவின் மதிப்பீடுகள் செயல்படுத்தப் படுகின்றதா? நம் கொண்டாட்டங்களின் மையம் கிறிஸ்து தான் என்பதை உணர்கிறோமா?
கிறிஸ்மஸ் என்பது மனமாற்றத்தின் காலம், உறவின் காலம், மறுமலர்ச்சியின் காலம், அன்பின் காலம். இவை முக்காலங்களின் வெளிப்பாடுகளாகவும் அமைகின்றது. இயேசு இவ்வுலகில் நம்மைத் தேடி வந்தார். ஆனால் இயேசுவைக் காண ஞானிகள் தேடிவந்தனர். இயேசுவைக் காண ஏரோதும் தேடினான். ஆனால் கிறிஸ்துவைக் காண்பதற்கு ஏரோதுக்கு வாய்ப்பிருந்தும் அவனால் காணமுடியவில்லை. இந்த தேடுதலில் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். இயேசுவின் தேடல் நம்மை மீட்க.. ஞானிகளின் தேடல் அரசனை வணங்க... ஏரோதுவின் தேடல் குழந்தை இயேசுவைக் கொல்ல.... சாதாரண ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு வாய்ப்புக் கிட்டியது முதலில் இயேசுவை காணும் பாக்கியம்!
நாமும் தேடுவோம் இயேசுவை முதலில், பின்பு அடுத்தவர்களில்... வரக்கூடிய கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் ஆடம்பரங்களைக் களைந்து, ஆன்மாக்கள் தயாரிப்பிலும், அர்த்தமுள்ள விழாவாக அமைய அடுத்தவர்களின் துயரில் அவர்களுக்கு உதவிபுரிந்தும் இயேசுவைத் தேடுவோம். கிறிஸ்து இல்லாமல் ஒருபோதும் கிறிஸ்துமஸ் கிடையாது. நாம் அனைவரும் மறு கிறிஸ்துவாக மாற இயேசுவை தேடிய ஞானிகள் போல அவரில் மகிழ்வோம். கிறிஸ்துவில் வளர்வோம்.
அனைவருக்கும் கிறிஸ்து பெருவிழா வாழ்த்துக்கள்!