மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 34-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2 சாமுவேல் 5: 1-3|கொலோசையர் 1: 12-20|லூக்கா 23: 35-43

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


கிறிஸ்து அரசர் பெருவிழா.

பைத்தியக்காரர்கள் இருவர் சந்தித்தனர். ஒருவன் மற்றவனை நோக்கி, "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றான். மற்றவனோ, "நான் உலகத்தை விற்றால்தானே நீ அதை வாங்க முடியும். இப்போதைக்கு அதை விற்கும் எண்ணம் என்னிடமில்லை” என்றான்! ஆம். இந்தப் பைத்தியக்காரர்களைப் போலத்தான் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆதிக்க வெறி பிடித்து அலைகின்றனர். மக்களை முன் நிறுத்தி, ஆனால் மக்களின் முன்னேற்றம் மறந்து, தங்களின் முன்னேற்றம் காணத் துடிக்கும் தன்னலவாதிகள் பெருகிவிட்ட சமுதாயத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிரேக்க நாட்டையே ஆண்ட, உலக நாடுகளையெல்லாம் தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயற்சித்த அலெக்சாண்டர் இறந்த சமயம், ஒரு தத்துவ மேதை சொன்னார். "நேற்று வரை அலெக்சாண்டர் மண்ணை ஆண்டார். ஆனால் இன்று மண்ணோ அலெக்சாண்டரை ஆண்டு கொண்டிருக்கிறது" என்று!

மன்னர்கள் ஆட்சி, முடியாட்சி என்றெல்லாம் முடிந்து, இன்று மக்கள் ஆட்சி, குடியாட்சி மலரும் காலகட்டத்தில் நம் ஆண்டவர் இயேசுவை ஒப்பற்ற அரசராக முன் வைத்து விழாக் கொண்டாடுகிறோம்.

இயேசு ஒருவர் மட்டும்தான் உண்மையான அரசர். அவர் மூலமாக அனைத்தும். உண்டாயின (யோவா:1:3). அவர் யாக்கோப்பின் குலத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது (லூக். 1:33). இயேசுவே, நீர் ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூரும் (லூக். 23:42) என்றெல்லாம் விவிலிய வெளிப்பாடு நமக்குத் தருகிறது. ஆம், இயேசு கிறிஸ்துவின் அரசு உண்மையான அரசு, நீதியின் அரசு, அமைதியின் அரசு, புனிதத்தின் அரசு, அன்பின் அரசு. ஆயுத பலத்தால் ஆட்சி செய்பவர் அல்ல. மாறாக அன்பின் பலத்தால் ஆட்சி செய்கிறார். மாமன்னன் நெப்போலியன் ஒரு தடவை கூறினார்: "நானும், அலெக்சாண்டரும் ஆயுதப் பலத்தால் அடக்கி ஆள முயன்றோம். ஆனால் எங்கள் அரசு நிலைக்கவில்லை. இயேசு கிறிஸ்துவோ அன்பினால் ஆட்சி செய்கிறார். அவரது ஆட்சி என்றும் நிலைத்து நிற்கும், முடிவிராது" என்றார்.

இயேசு தனக்காக அல்ல, மற்றவரை வாழ வைக்கவே வந்தார். எனவே எசாயா சுறுகிறார்: "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார். நம் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிலை வாழ்வு தரும் பொருட்டு தண்டிக்கப்பட்டார்" (எசா. 53:5). நாம் மிகுதியாக வாழ்வு பெறும் பொருட்டு வந்தார் இயேசு (யோவா. 10:10).

மானிட மகன் தொண்டு ஏற்பதற்காக அல்ல. தொண்டு புரியவே வந்தார் (மத். 20:28) என்றும், ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர், மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் (யோவா. 13:14) என்றும் நமக்கு வழிகாட்டியுள்ளார். இத்தகைய இயேசுவின் அரசின் மக்களாக வாழ, நாம் அவரது பணியைத் தொடர அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சிந்தனை:-
ஆங்கில பாடத்தில் பரீட்சை எழுதி வீடு திரும்பிய தன் 12 வயது மகனைப் பார்த்து தந்தை கேட்டார், “மகனே எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன? நீ எத்தனைக்குப் பதில் எழுதினாய்?" என்று. மகனோ, "அப்பா, ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் நான்கு கேள்விகளுக்கும், கடைசி இரண்டு கேள்விகளுக்கும் பதில் எழுதவில்லை” என்றான். இது எப்படி!? நமது வாழ்வின் இறுதித் தேர்வில் நம் ஒப்பற்ற அரசர் நம்மிடம் கேட்கப் போவதும் ஆறு கேள்விகள்தான். பசியாக இருந்தேன், தாகமாக இருந்தேன், ஆடையின்றி இருந்தேன், அந்நியனாக இருந்தேன், நோயுற்று இருந்தேன். சிறையில் இருந்தேன் (மத். 25:35-45) எனக்கு உதவிக் கரம் நீட்டி உதவி செய்தாயா? என்று கேட்பார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறும் அளவுக்கு நம் வாழ்வின் செயல்பாடுகள் அமைந்தால் நாம் அவரது இறையரசின் மக்களாக இருப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நமக்கு வாழ்வளிக்கும் அரசர் இயேசு

இவன் யூதரின் அரசன் என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று இன்றைய நற்செய்தி கூறுகின்றது. ஆகவே இயேசு ஓர் அரசர். ஆனால் அவர் எப்படிப்பட்ட அரசர் என்பதைப்பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உலக வழக்கில் அரசன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செலுத்தவேண்டும்; நல்லவர்களுக்குப் பாராட்டுதலையும், குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையையும் தரவேண்டும்.

இயேசு இந்த உலக அரசர்களிடமிருந்து சற்றே வேறுபட்ட அரசராக வாழ்ந்தவர்.

நல்லவர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்தார் (மத் 8:10, 16:16-19). ஆனால் மனம் திரும்பிய பாவிகளை, குற்றவாளிகளை, குறையுள்ளவர்களை அவர் தண்டித்ததில்லை. பாவிகளைக் கண்டித்திருக்கின்றார் (யோவா 8:11). ஆனால் அவர்களைக் கண்டனத்துக்குள்ளாக்கி பேரின்ப வீட்டின் புறம்பே தள்ளியதில்லை (நற்செய்தி).

சிலுவைச் சாவுக்குக் கையளிக்கப்படும் அளவுக்கு அந்தத் திருடன் பெரிய குற்றங்களைப் புரிந்திருந்தான்.

ஆனால் அவனோ, நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகின்றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே (லூக் 23:41) என்று கூறியதாக நற்செய்தி கூறுகின்றது.

அவன் அவனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதும் அவனுக்கு உடனே பாவமன்னிப்பு கிடைக்கின்றது. வான்வீடு கிடைக்கின்றது. பேரின்பம் கிடைக்கின்றது.

இன்று இயேசு நமக்குக் கூறும் நற்செய்தி என்ன? என் மகனே! என் மகளே! உன்னைத் தண்டித்து அழிக்க அல்ல உன்னை மன்னித்துக் காக்கவே நான் இந்த உலகிற்கு வந்தேன்! கடந்த காலத்தை மறந்துவிடு! நிகழ்காலத்தைக் கையில் எடு! உன் பாவங்களுக்கு மனம் வருந்தி. நீ என்னோடு வாழ ஆசைப்பட்டால் உனக்கு உடனே மன்னிப்பையும் மீட்பையும் நான் தருவேன் என்கின்றார்.

இயேசு அரசர் எதிர்மறையான எண்ணங்களை ஒருபோதும் உலகில் விதைத்தது இல்லை.

பகை, சீற்றம், பிளவு, அழுக்காறு, தண்டனை போன்ற எந்த எதிர்மறையான எண்ணங்களாலும் [கலா 5:20-21) இயேசு மக்களை அச்சுறுத்தியது கிடையாது.

இதோ, கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட ஓர் அரசனின் கதை.

ஓர் அரசனும் அவனுடைய போர் வீரர்களும் போரில் ஈடுபட்டிருந்தார்கள். ஏராளமான போர் வீரர்கள் இறந்துவிட்டார்கள். போர் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

மீதியிருந்த போர் வீரர்களின் மனத்தை அச்சம் கவ்விக்கொண்டது. இனி வெற்றி அடைய முடியாது என்ற எண்ணம் அவர்கள் மனத்தில் தலை தூக்கியது.

எதிரியிடம் சரணடைந்துவிடுவோம் என்று அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் மனத்திலே நேர்மறையான எண்ணத்தை விதைக்க அரசன் விரும்பினான்.

வாருங்கள் எல்லாரும் கோயிலுக்குப் போவோம். என்ன செய்யவேண்டும் என்பதை கடவுள் நமக்குச் சொல்லட்டும். நான் காசு ஒன்றை வைத்திருக்கின்றேன். அதை சுண்டிவிடுகின்றேன். தலை விழுந்தால் போர்புரிவோம். பூ விழுந்தால் சரணாகதி அடைவோம் என்றான் அரசன்.

எல்லாப் போர் வீரர்களும், சரி என்றார்கள். எல்லாரும் கோயிலுக்குச் சென்றார்கள். அரசன்ச் காசை சுண்டிவிட்டான். தலை விழுந்தது.

கடவுள் போர் புரியும்படி சொல்கின்றார்! கடவுள் நம் பக்கம் இருக்கும்போது வெற்றி நமக்கே என்றான் அரசன்.

படை வீரர்கள் வீரத்தோடும் நம்பிக்கையோடும் போர் புரிந்தார்கள். போரில் பெரும் வெற்றி பெற்றார்கள். படை வீரர்களுக்கு அரசன் விருந்து வைத்தான். அந்த விருந்தின்போது அரசன் அவன் கோயிலிலே சுண்டிவிட்ட நாணயத்தைக் காட்டினான். அந்தக் காசின் இரண்டு பக்கங்களிலும் தலையிருந்தது.

அரசன் அந்தப் போர் வீரர்களின் மனத்தில் நேர்மறையான எண்ணத்தை விதைத்ததால் அப்போர் வீரர்கள் வெற்றி பெற்றார்கள்.

எண்ணமே வாழ்வு! வாழ்வே எண்ணம்! நாம் தோற்றுப்போவோம் என்று நினைத்தால் நாம் தோற்றுப்போவோம்; நாம் வெற்றிபெறுவோம் என்று நினைத்தால் நாம் வெற்றிபெறுவோம்.

இதனால்தான் இயேசு அவர் வாழ்க்கை முழுவதும் அன்பு, மன்னிப்பு, சமாதானம், மகிழ்ச்சி (கலா 5:22-23) போன்ற நேர்மறையான எண்ணங்களை மனிதர்கள் மனத்தில் தெளித்தார்.

இயேசு நமது நல்லாயன் (முதல் வாசகம்). அவர் ஒருபோதும் ஆடுகளாகிய நம் மனத்தில் வேண்டாத எண்ணங்களை, ஆசைகளைத் தூவமாட்டார்.

கடவுள் அதிகார உலகிலிருந்து, தண்டிக்கும் உலகிலிருந்து, மன்னிப்பு உலகிற்கு நம்மை இயேசுவின் வழியாக அழைத்து வந்திருக்கின்றார் (இரண்டாம் வாசகம்).

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஓர் இரக்க உலகம், ஒரு கனிவு உலகம், ஒரு கருணை உலகம். இங்கே பாவத்தை ஏற்றுக்கொள்ளும் எந்தப் பாவிக்கும், விண்ணுலகத்திற்குள் நுழைய விரும்பும் யாருக்கும், இயேசுவோடு வாழ ஆசைப்படும் எந்தத் மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் வாழ்வு உண்டு, வழி உண்டு, உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு. வெற்றி உண்டு, முடிவில்லா வாழ்வு உண்டு. இது போன்ற நேர்மறையான எண்ணங்களால் நமது இல்லங்களையும் உள்ளங்களையும் மனங்களையும் நிரப்பிக்கொள்வோம். மேலும் அறிவோம் :

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை (குறள் : 594).

பொருள்: தளராது ஊக்கத்தோடு உழைப்பவனிடம் உயரிய செல்வம் சேரும் வழியைக் கேட்டுக்கொண்டு தானே சென்று அடையும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனநிலை பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மற்றவரிடம், “நான் உலகையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்று கூறியபோது, மற்றவர் கூறினார்: "நான் உலகை விற்றால்தானே, உன்னால் வாங்க முடியும்: உலகை விற்கிற எண்ணம் இப்போது எனக்கில்லை."

இன்றைய உலகில் வல்லரசுகள், வளரும் நாடுகள். அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை உலகையே வாங்க ஆதிக்க வெறிப் பிடித்து அலைகின்றன. இந்த ஆதிக்க வெறித் தனி மனிதனையும் ஆட்டிப் படைக்கிறது.

உலக நாடுகளையெல்லாம் வென்ற மாமன்னன் அலெக்சாண்டரை அடக்கம் செய்தபோது ஒரு தத்துவ மேதை கூறினார்: "நேற்றுவரை அலெக்சாண்டர் மண்ணை ஆண்டார்; ஆனால் இன்று மண் அலெக்சாண்டரை ஆளுகின்றது." மனிதனுக்கு மண்மேல் ஆசை: மண்ணுக்கு மனிதன் மேல் ஆசை: இறுதியில் மண்தானே வெல்லுது. இந்தக் கசப்பான உண்மையை ஏனோ மனிதர்கள் மறந்து விடுகின்றனர்.

வரலாற்றில் வல்லரசுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து கொண்டு வரும் காலக்கட்டத்தில், இன்று நாம் கிறிஸ்து அரசருடைய பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். கிறிஸ்து உண்மையில் அரசர். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருநிலைப்படுத்தப்படுகிறார் (2 சாமு 5:1-3). எருசலேமில் தாவீது ஆட்சி செய்தார். அங்கே நீதி வழங்க தாவீதின் அரியணைகள் உள்ளன என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 122:3), தாவீது 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது ஆட்சி இஸ்ரயேலின் பொற்காலம், ஆனால் தாவீதுக்குப்பின் அவரது அரசு பிளவுபட்டது; பிறகு அது சீரழிந்தது. இஸ்ரயேல் மக்கள் பல்வேறு அரசுகளுக்கு அடிமைகளாகினர். கிறிஸ்துவின் பிறப்பின் போது அவர்கள் உரோமைப் பேரரசுக்கு அடிமைகளாய் இருந்தனர். மெசியா வருவார்: அவர் தாவீதின் அரசை மீண்டும் கட்டி எழுப்புவார் என்ற எண்ணம் இஸ்ரயேல் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது. எனவேதான், குருத்து ஞாயிறு அன்று யூதர்கள் கிறிஸ்துவை அரசராக எருசலேம் திருநகருக்கு அழைத்துச் சென்றபோது. "ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுவாராக! வரவிருக்கும் நம் தந்தையின் அரசு போற்றப்பெறுக" (மாற் 11:10) என்று ஆர்ப்பரித்தனர்.

கிறிஸ்துவின் பிறப்பை மரியாவுக்கு அறிவித்த வானதூதர், கிறிஸ்து தாவீதின் அரியணையில் அமர்ந்து, யாக்கோபின் குலத்தின் மீது அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1:32-33) என்று திட்டவட்டமாகக் கூறினார். கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் மேல் ஆளுநர் பிலாத்து எழுதிய குற்ற அறிக்கை: "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" (யோவா 19:19). கிறிஸ்து அரசர்: ஆனால் அவர் யூதர்களின் அரசர் மட்டுமல்ல: அனைத்துலக மக்களின் அரசர். இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது போல, கடவுள் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்துத் தன் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்; விண்ணிலுள்ளவை மண்ணி லுள்ளவை அனைத்தும் கிறிஸ்து வழியாகக் கடவுளுடன் ஒப்புரவு ஆனது ( கொலோ 1:12,20) தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறிக் கிடந்த அனைத்து மக்களுக்காகவும் கிறிஸ்து இறந்தார் (யோவா 11:52).

கிறிஸ்து அரசர்; இருப்பினும் அவர் மண்ணக அரசர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அரசர்: அவரது அரசும் முற்றிலும் வேறுபட்டது. கிறிஸ்து அமைதியின் அரசர் (எசா 9:6); அவர் நீதியுடனும் நேர்மையுடனும் அரசாள்வார். அவரது ஆட்சியில் சிங்கமும் செம்மறியாடும் ஒன்றாகப் படுத்துறங்கும் (எசா 11:3-6). அவரது ஆட்சியில் போர் இருக்காது. போர்ப்பயிற்சி அளிக்கப்படாது; போர்க் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும் (எசா 2:4). சுருக்கமாக, இன்றைய விழாவின் திருப்பலித் தொடக்கவுரை பட்டியலிட்டுக் காட்டுவதுபோல, கிறிஸ்துவின் அரசு "உண்மையின் அரசு; வாழ்வு தரும் அரசு: புனிதமும் அருளும் கொண்ட அரசு; நீதியும் அன்பும் அமைதியும் விளங்கும் அரசுமாகும்.

கிறிஸ்துவின் அரசை மனிதர் இரண்டு விதமாகக் கருதுகின்றனர். ஒன்று அது இம்மையைச் சார்ந்தது, மற்றொன்று அது மறுமையைச் சார்ந்தது. இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டக் குற்றவாளிகளில் ஒருவன் கிறிஸ்துவின் அரசை இவ்வுலக அரசாகக் கருதி, "நீ மெசியாவானால். உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக் 23:39) என்று கிறிஸ்துவைக் கேட்டான். ஆனால் மற்ற குற்றவாளியோ கிறிஸ்துவின் அரசு மறுமையைச் சார்ந்தது என்பதை உணர்ந்தவராய்க் கிறிஸ்துவிடம். "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்" (லூக் 23:40) என்று விண்ணப்பித்தான்.

கிறிஸ்துவே பிலாத்துவிடம், "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" (யோவா 18:36) என்று தெளிவுபடுத்தினார். அதாவது அவரது அரசு இவ்வுலக அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் அப்பாற்பட்டது. கிறிஸ்துவின் அரசு இவ்வுலக வாழ்வுக்கு அன்னியமானது என்று பொருள் கொள்ளக்கூடாது. கிறிஸ்துவின் அரசு இவ்வுலக அமைப்பு முழுவதையும் புளிப்பு மாவுபோல் ஊடுருவி அதை மாற்றி அமைக்கிறது. ஆனால் இவ்வுலகில் சாவும் நோவும், துன்பமும் துயரமும் இருக்கும். மறுமையில்தான் “கண்ணீரோ, சாவோ, அழுகையோ, துன்பமோ துயரோ இராது" (திவெ 21:4).

சாகும் தறுவாயிலிருந்த ஒருவரிடம் மருத்துவர். "உங்களது கடைசி ஆசை என்ன?” என்று கேட்டதற்கு அவர், "நான் மற்றொரு மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்றார். ஒரு வழி நமக்குக் கை கொடுக்காத போது மாற்று வழியைத் தேட வேண்டும். எல்லாம் தலைவிதி என்றிருக்கக் கூடாது.

ஒரு மனைவி தன் கணவரிடம் . "டி.வி.பழசாப் போச்சு, அதை மாற்றுங்க" என்று கேட்டபோது கணவர் அவரிடம், "நீயும்தான் பழசாப்போன, உன்னை மாற்றவா?" என்று கேட்டார், டி.வி.யை மாற்ற முடியும், மாற்றவும் வேண்டும். ஆனால், மனைவியை மாற்ற முடியாது; மாற்றவும் கூடாது. மாற்றக்கூடியதை மாற்றுவோம், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுவோம்.

“உமது அரசு வருக!": கிறிஸ்துவின் அரசு இம்மையில் வரவேண்டும் என்று மன்றாடுவோம்; அதே நேரத்தில் நிறைவு கால அரசைப் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இல்லத்திலும் இதயத்திலும் கிறிஸ்து அரசர்

"மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம் “எங்களை அரசாளும்” என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம் 'எனது எண்ணையால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக் கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் அத்தி மரத்திடம் 'வாரும் எங்களை அரசாளும்’ என்றன. அத்தி மரம் அவற்றிடம் 'எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் 'வாரும், எங்களை அரசாளும்' என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம் 'தெய்வங்களையும் மனிதர்களையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள் மேல் அசைந்தாட வருவேனா?' என்றது.

மரங்கள் எல்லாம் முட்புதரிடம் வாரும் எங்களை அரசாளும்’ என்றன. முட்புதர் மரங்களிடம் 'உண்மையில் உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள் என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல் முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்’ என்றது” (நீ.த. 9:8-15).

நல்ல மரங்கள் பல இருந்தும் மனமில்லாதிருந்ததால் முட்புதர் அரசனாக நிழல் கொடுக்கும் விந்தையான திருவிவிலியக் காட்சி! தலைவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. நல்லவர்கள் தலைவர்களாக விரும்புவதில்லை என்பது தானே இன்றைய எதார்த்தம்!

கிறிஸ்தவர்கள் நமக்கு யார் தலைவன்? கிறிஸ்தவன் என்பவன் யார்? இயேசுவை ஆண்டவராக, மீட்பராக, அரசராக ஏற்றுக் கொண்டவனே! திருவழிபாட்டு ஆண்டு முழுதும் நடைபெறும் வழிபாடு எல்லாம் உலகம் இயேசுவை அரசராக ஏற்றுக் கொள்ள நம்மைத் தகுதிப்படுத்தும் முயற்சியே! அதனால்தான் திருவழிபாட்டு ஆண்டின் சிகர விழாவாக, நிறைவு விழாவாக இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்திக்கு வருவோம். லூக். 23:35-43 இங்கே இயேசு அரசர் என்பது மூன்று வெவ்வேறு நபர்களால் மூன்று வித உணர்வுகளுடன் வெளிப்படுகிறது.

1. "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” INRI (லூக். 23:18, அயா19:19). இது பிலாத்து சிலுவையின் மீது எழுதி வைத்த குற்ற அறிக்கை. "அது எபிரேயம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது” என்று யோவான் (19:20) பதிவு செய்கிறார். இதில் ஒரு பகுதி அதாவது அரசன் என்பது சரி. இயேசு உண்மையில் அரசர்தான். அரச குலத்தில் தோன்றியவர். மன்னன் தாவீதின் வழிவந்தவர். யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்பவர் (லூக்.1:32)

ஆனால் அவர் யூதர்களின் அரசர் மட்டுமா? நாசரேத்து இயேசு உலகனைத்திற்கும் அரசர் அன்றோ! "கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்" (மத். 8:11). யார் வேண்டுமானாலும் இயேசு அரசின உறுப்பினர் ஆகலாம். தேவை நம்பிக்கை மட்டுமே!

2. "நீ யூதர்களின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" (லூக். 23:37). இது படைவீரர்களின் நையாண்டி. இயேசுவின் இறையாட்சி வித்தியாசமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மரபுப் புரிதல் மட்டுமே இருந்தது. சாகும்போதும் சவாலைச் சந்தித்தவர் இயேசு. "நீ யூதர்களின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்”. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா இயேசு சிலுவையில் அரியணை ஏறினார். நம்மைக் காக்கவன்றோ!

3. "இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும்” (லூக். 23:42). இறையாட்சியின் முக்கிய அம்சம் இரக்கமும் மன்னிப்பும். அதை நிறைவாக அள்ளிப் பருகினான் நல்ல கள்ளன். அதற்கு அவன் பெற்ற வெகுமதி: "இன்றே நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்" (லூக். 23:43)

எப்படி நல்ல கள்ளன் இயேசு அரசர் என்பதைத் தெரிந்து கொண்டான்? ஒருவேளை பிலாத்துவின் குற்ற அறிக்கையைப் படித்தா? அல்லது “தந்தையே இவர்களை மன்னியும்” என்று தன்னைச் சாவுக்கு உட்படுத்தியவர்களுக்காக மன்றாடிய தெய்வத்தன்மையின் தூண்டுதலா? ஒன்று மட்டும் உண்மை. இயேசு அரசர் என்பதை உணர்ந்தான். அவர் இறந்தாலும் உயிரோடு வருவார் என்று நம்பினான். மனந்திரும்பினால் தனக்கும் அவரது அரசில் இடமுண்டு என்பதை உணர்ந்திருந்தான்.

இவனைப் போல மனந்திரும்பிய ஒவ்வொருவரையும் கடவுள் “இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்" (கொலோ. 1:13). "நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்" (தி.வெ. 3:21). இது இயேசுவின் வாக்குறுதி.

இறையாட்சி பற்றி இரு முரண்பட்ட கருத்துக்கள் அன்றும் உண்டு. இன்றும் உண்டு. அதனைக் கல்வாரிக் கள்வர்கள் எப்படி வெளிப்படுத்துகின்றனர்! அது இவ்வுலகைச் சார்ந்தது என்பது இடதுபக்கத்துக் கள்ளனின் பழிப்புரை “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக். 23:39). அது மறு உலக நோக்குடையது என்பது வலது பக்கத்துக் கள்ளனின் பதிலுரை "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்' (லூக். 23:42).

“எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றதல்ல” என்பதன் பொருள் என்ன? இயேசுவின் ஆட்சி இவ்வுலகில் இருந்தாலும். இவ்வுலக விழுமியங்களை, அளவுகோல்களை, எதிர்பார்ப்புக்களை அது ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக எதிர்க்கிறது. உலக அளவீட்டின்படி கிறிஸ்து அரசர் இல்லை. அன்பே அவரது ஆயுதம். பணிவிடையே அவரது கேடயம். தியாகமே அவரது கொள்கை. மக்களின் மனங்கள்தாம் அவரது கோட்டை. அரியணை!

கிறிஸ்து அரசரின் உடனிருப்பை இருவிதங்களில் உணரலாம்.
1. இயேசுவை நம் இல்லங்களில் வரவேற்கலாம் அரியணை ஏற்றலாம் - இதயங்களில் வரவேற்காமல், அரியணை ஏற்றாமல். லூக். 7:36-50. அதற்கு எடுத்துக்காட்டு, பரிசேயரான சீமோன் இயேசுவை அழைத்திருந்தான். விருந்தாளிக்குரிய வழக்கமான மரியாதை எதுவும் செய்யவில்லை. மாறாக குற்றம் கண்டுபிடிப்பதே அவனது நோக்கம். தன் இல்லத்தில் இடம் கொடுத்தானே தவிர தனது இதயத்தில் அல்ல. ஆனால் அங்கு வந்த பெண்ணோ தன் இல்லத்தில் அல்ல, இதயத்தில் இயேசுவை வரவேற்றாள். விளைவு? இயேசுவின் பாராட்டும் பாவ மன்னிப்பும் பெற்றாள்.

நாமும்கூட நம்மிலோ நம் நடத்தையிலோ எவ்விதத் தாக்கமும் ஏற்படாத வகையில் கிறிஸ்து அரசரின் திருஉருவத்தை நமது இல்லத்தில் வைத்துப் பெருமைப்படலாம். அதனால் என்ன பயன்?

2. இயேசுவை இல்லங்களில் மட்டுமல்ல நம் இதயங்களிலும் வரவேற்கலாம். யோ. 11:20-27 அதற்கு எடுத்துக்காட்டு. இயேசுவின் பெத்தானியா நண்பர்கள் - மரியா, மார்த்தா, இலாசர் இயேசுவை மீட்பராக அரசராக ஏற்றுக் கொண்டவர்கள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் எங்கள் சகோதரர் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்” இந்த வார்த்தைகள் அவர்களது நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டவில்லையா? அந்த நம்பிக்கைக்குப் பரிசு: இறந்த லாசர் உயிர்பெற்று வெளியே வந்தார்.

நம் இதயங்களும் இயேசு அரசருக்குச் சொந்தமாகட்டும்! கிறிஸ்து நம் உள்ளங்களில் குடிகொள்ளும்போது, உள்ளம் என்ற கோட்டையிலிருந்து பறக்கும் கொடியே கிறிஸ்தவ மகிழ்ச்சி. எவனிடத்தில் கிறிஸ்து குடி கொண்டுள்ளாரோ, அவனிடத்தில் இறையரசு வித்திடப்பட்டுள்ளது.

இறைமகன் இயேசு தன்னையே தாழ்த்தி நம்மோடு ஒன்றானதைப் போல நாமும் நம் சகோதர சகோதரிகளோடு அன்பில், ஒற்றுமையில், உண்மையில் ஒன்றாகும்போதுதான் நாம் கிறிஸ்துவை அரசராக ஏற்றுள்ளோம் என்பதற்குச் சான்று பகர முடியும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ராஜாதி ராஜ கிறிஸ்து? அல்லது உண்மை அரசர் கிறிஸ்து!

இந்த ஞாயிறு நாம் கொண்டாடுவது கிறிஸ்து அரசர் திருநாள். இந்தத் திருநாளைப் பற்றி நினைக்கும் போது எனக்குள்ளே ஒரு சங்கடம். அதை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்துவைப் பல கோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன், தியானித்திருக்கிறேன். ஆயனான கிறிஸ்து, மீட்பரான கிறிஸ்து, வழியாக, ஒளியாக, வாழ்வாக, உணவாக, திராட்சைக் கொடியாக வரும் கிறிஸ்து... என்று இந்த ஒப்புமைகளைத் தியானிக்கும் போது மன நிறைவு கிடைத்திருக்கிறது.

ஆனால் அரசரான கிறிஸ்து அல்லது கிறிஸ்து அரசர் என்ற எண்ணம் மனதில் பல சங்கடங்களை விதைக்கிறது. கிறிஸ்து, அரசர், இரண்டும் நீரும் நெருப்பும் போல ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பது போன்ற ஒரு சங்கடம். ஏன் இந்த சங்கடம் என்று சிந்தித்ததுண்டு. அப்படி சிந்திக்கும் போது ஒரு உண்மை தெரிந்தது. சங்கடம் கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்த சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ பராக்கிரம, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர,... இப்போது சொன்ன பல வார்த்தைகளுக்குச் சரியாகக் கூட அர்த்தங்கள் தெரியாது, ஆனால் இந்த முழக்கங்களுக்குப் பின் மனத்திரையில் தோன்றும் உருவம்? பட்டும், தங்கமும், வைரமும் மின்ன உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்து வரும் ஓர் உண்டு கொழுத்த உருவம்... சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், ஆடம்பரமாக வாழப் பிறந்தவர், அதிகாரம் செய்ய, அடுத்தவர்களைக் கால் மணையாக்கி, ஆட்சி பீடம் ஏறி அமர்பவர், தன்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் முகம் குப்புற விழுந்து வணங்கி எந்நேரமும் தன் துதிபாட வேண்டும் என விரும்புபவர், வற்புறுத்துபவர்... அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வரும் இந்த கற்பனைக்கும், ஏசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. அப்புறம் எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படையே இதுதான்.

ஆனால், இயேசுவும் ஒரு அரசர், ஒரு அரசை நிறுவியவர். அந்த அரசுக்குச் சொந்தக்காரர்... அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்து விட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை. இன்னும் ஆழமான ஒரு உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். அப்படிச் சேர்ந்து வரும் மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். இந்த அரசில் யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், எல்லாருக்குமே, இந்த அரசில் அரியணை, எல்லாருக்குமே மகுடம், எல்லாருக்குமே சாமரம், ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு மகுடம் சூட்டுவதிலேயே குறியாய் இருப்பதால், அடுத்தவருக்கு சாமரம் வீசுவதிலேயே குறியாய் இருப்பதால், அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள்... ஒருவேளை, இயேசுவை இங்கு தேடினால், அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, அதன் விளைவாக தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நம் கவிஞன் ஒருவனின் கனவு நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட கனவு நனவாகும் ஒரு நாள் இந்தத் திருநாள்.

‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக் கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு... எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இரண்டும் நீரும் நெருப்பும் போல் ஒன்றோடொன்று கொஞ்சமும் பொருந்தாதவை. இந்த இரு வேறு உலகங்களையும், அரசுகளையும், அரசர்களையும் இன்றைய நற்செய்தி நமக்குத் தருகின்றது.

நற்செய்திக்குச் செவிமடுப்போம்:
யோவான் நற்செய்தி 18: 33-37
அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார். பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர்” என்றார்.

இருவேறு உலகங்களின் பிரதிநிதிகள் - பிலாத்தும், ஏசுவும். முதலில் பிலாத்து பற்றிய சிந்தனைகள்... இந்த பிலாத்து யார் என்று புரிந்து கொண்டால், இயேசு யார் என்று, அதுவும் இயேசு எந்த வகையில் அரசர் என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இருள் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே, ஒளி என்றால் என்ன என்று புரிந்துகொள்ளமுடியும். அதுபோல் தான் இதுவும்.

இந்த போஞ்சு பிலாத்து யார்?
செசாரின் கைபொம்மை இந்த பிலாத்து. இவனது முக்கிய வேலையே, யூதர்களிடம் வரி வசூலித்து ரோமைக்கு அனுப்புவது.. தன் ஆளுகைக்கு உட்பட்ட யூதப் பகுதியில் எந்த விதக் கலகமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, கலகம் என்று எழுந்தால், எள்ளளவும் தயக்கமில்லாமல், கொடூரமாக அதை அடக்குவது. பிலாத்து இந்தப் பதவிக்கு வர பல பாடுகள்பட வேண்டியிருந்தது. அவனது கணக்குப்படி, இது ஒரு படிதான். அவன் ஏறவேண்டிய படிகள் பதவிகள் இன்னும் பல உள்ளன. இறுதியாக, சீசரின் வலது கையாக மாறவேண்டும், முடிந்தால் சீசராகவே மாற வேண்டும். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவன் பிலாத்து. பதவி ஒன்றே இரவும், பகலும் அவன் சிந்தனையை, மனதை ஆக்ரமித்ததால், வேறு எத்தனையோ விஷயங்களுக்கு அவன் வாழ்வில் இடமில்லாமல் போய்விட்டது. இப்போது அந்த மற்ற விஷயங்களை நினைத்து பார்க்க, அவனுடைய மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு சவால் வந்திருக்கிறது. அதுவும் பரிதாபமாக, குற்றவாளியென்று அவன் முன்னால் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தச்சனின் மகன் மூலம் வந்திருக்கும் சவால் அது. அந்த நேரத்தில் பிஆத்தின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

“நான் ஏன் பதவி காலத்தில் பலருக்கு மரணதண்டனை கொடுத்திருக்கிறேன். சீசருக்குப் பிடிக்கும் என்று தெரிந்தால், ஏன் பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால், தவறான தீர்ப்புகளை, அநியாயம் என்று மனதார உணர்ந்தும், தந்திருக்கிறேன். ஏன் வாழ்வின் இலட்சியங்கள் எல்லாம், பதவிகள் பெற வேண்டும், கிடைத்தப் பதவிகளைத் தக்க வைத்து கொள்ள வேண்டும், இன்னும் உயர் பதவிகளை அடைவதற்கு மேலதிகாரிகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இப்படியே வாழ்ந்து பழகி விட்ட நான் இன்று குழம்பிப் போயிருக்கிறேன். நாசரேத்தூரில் பிறந்ததாகச் சொல்லப்படும் இயேசு என்ற இந்த இளைஞனைப் பார்த்ததிலிருந்து, அவனிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலிருந்து ஏன் மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கியுள்ளது. ச்சே, நான் வாழ்வதும் ஒரு வாழ்க்கை தானா என என் மனசாட்சி என்னைச் சித்ரவதை செய்துகொண்டிருக்கிறது. என் மனசாட்சி மட்டுமல்லாமல், என் மனைவியும் என்னைக் குழப்புகிறாள். இவனுக்கு மரணதண்டனை வழங்கினால், அவளும் என்னை விட்டு விலகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த இளைஞனை அநியாயமாகக் கொல்லச் சொல்கிறார்கள் மதத்தலைவர்கள். மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களது ஆவேசமான ஓலைங்களை எல்லாம் மீறி, என் மனசாட்சியின் குரலுக்கு, என் மனைவியின் சொல்லுக்கு நான் கீழ்ப்படிய நினைத்தேன். ஆனால், என் பதவிக்கு ஆபத்து வரும் போல் தெரிகிறது. ‘இவனை நீர் விடுவித்தால், நீர் செசாரின் நண்பரல்ல... தன்னை அரசனாக்கிக் கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்.’ என்று இவர்கள் சொன்னது என்னை நிலைகுலையச் செய்துள்ளது. எனக்கு முன் நிற்கும் இந்தப் பரிதாபமான இளைஞன் ஒரு அரசனா? அதுவும் செசாருக்கு எதிராக, போட்டியாக எழக்கூடிய அரசனா? நம்ப முடியவில்லை. ஒருபுறம் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ஏன் இந்த விபரீத விளையாட்டு? எனக்கு என் பதவிதான் முக்கியம், அதுதான் என் வாழ்க்கை. என் மனசாட்சி, என் மனைவி முக்கியமல்ல. இயேசு என்னும் இந்த இளைஞனை, சாவுக்கு, அதுவும் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிடப்போகிறேன்.”

இப்படி பதவிக்காக, ஒரு பேரரசனுக்காகத் தன் மனசாட்சியையும், சொந்த வாழ்வையும் பணயம் வைக்கும் மனிதனுக்கு முன் நிற்கும் இயேசு அப்போது என்ன நினைத்திருப்பார்? இதோ, மற்றொரு கற்பனை: “பாவம் இந்த பிலாத்து, இவர்மட்டும் என் அரசை ஏற்பதற்கு தன் உள்ளத்தைத் திறந்தால், இந்த ரோமையப் பதவிகளையெல்லாம் விட மேலான பதவி, புகழ் எல்லாம் நிரந்தரமாக இவருக்கு நானும் என் தந்தையும் தருவோமே. இவர் இதய வாயிலருகே நின்று கதவைத் தட்டுகிறேன். தட்டிக்கொண்டே இருப்பேன். இவர் கட்டாயம் ஒருநாள் என் குரலைக் கேட்பார், இதயத்தைத் திறப்பார். அன்று நானும் என் தந்தையும் இவர் உள்ளத்தில் அரியணை கொள்வோம், இவரையும் அரியணையில் ஏற்றுவோம்.”

இரு வேறு துருவங்களிலிருந்து வந்த உள்ளக் குரல்களை, குமுறல்களைக் கேட்டோம். இந்த இருவரில் யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? எந்த நேரத்திலும் அரியணை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிலாத்தா? அல்லது, பொய் குற்றம் சாட்டப்பட்டாலும் தன் வாழ்வு தந்தையின் கையில் இருப்பதை ஆழமாய் உணர்ந்திருந்ததால், எந்த பதட்டமும் இல்லாமல், உடல் களைத்தாலும், உள்ளம் களைக்காமல் நிமிர்ந்து நின்ற இயேசுவா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்?

முடிக்குமுன் இரு எண்ணங்கள்:
கிறிஸ்து அரசர் திருநாளுக்கான பின்னணி இதுதான்: முதலாம் உலகப் போர் முடிந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி இவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது அரசர்களின், தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், தங்கள் அதிகாரம் இன்னும் பல மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென இவர்கள் நாடுகளிடையே வளர்த்த பகைமையைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் திருச்சபைத் தலைவர்களும், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசராக 1925ஆம் ஆண்டு அறிவித்தனர். கிறிஸ்துவும் ஒரு அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் மக்கள் கண்டு பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, நற்செய்தியில் கிறிஸ்து அரசரைப் பற்றிய ஒரு நல்ல தகவல்: இயேசுவை அரசர் என்று குறிப்பிடும் வார்த்தைகள் அவரது பாடுகளின் வாரத்தில் பெரும்பாலும் கூறப்பட்டுள்ளன. எருசலேமில் "ஓசான்னா" புகழோடு அவர் நுழைந்த போது உன் அரசர் உன்னிடம் வருகிறார் என்று ஆரம்பித்து, அவர் அறையுண்ட சிலுவையில் அறைபட்டப்பட்ட அறிக்கையில் "இயேசு கிறிஸ்து யூதர்களின் அரசன்" என்பது வரை... இயேசு அரசனாகப் பேசப்படுவதற்கு பாடுகள் முக்கிய காரணமானது. இந்த வகை அரசத் தன்மையைத்தான் இயேசு விரும்பியிருப்பார். இப்படிப்பட்ட கிறிஸ்து அரசரை நம் உள்ளங்களில் அரியணை ஏற்றவும், அதன் வழியாய் நாமும் இறைவன் அரசில் அரியணை ஏறவும், அரசரான கிறிஸ்து நமக்கு மணிமகுடம் சூட்டவும் வேண்டுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

மன்னிக்கும் அரசர்
நீ மன்னிக்கப்பட்டாய்:
சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவன் சிறுவன் மைக்கேல். அதனால் அவன் தனக்குக் கிடைத்த வேலையைச் செய்து, கிடைத்த உணவை உண்டு, கிடைத்த இடத்தில் தங்கி வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் அவன் சாப்பிட எதுவும் கிடைத்ததால், வழியோரமாக மயங்கிக் கீழே விழுந்தான். தற்செயலாக அவ்வழியாக வந்த அந்நாட்டு அரசர் அவன்மீது பரிவுகொண்டு அவனை அரண்மனைக்குத் தூக்கிக்கொண்டு சென்று, உணவளித்தார். தவிர, அவனைப் பற்றிய முழு விவரத்தை அவர் அறிந்ததும் அவனிடம், “நீ இங்கேயே தங்கிக்கொள்ளலாம். இங்கிருக்கும் எல்லாமும் உனக்குத்தான் சொந்தம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, நீ என்னுடைய கட்டளையின்படி வாழவேண்டும்” என்றார். இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அவன் அரண்மனையிலேயே தங்குவதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

ஆண்டுகள் வேகமாக உருண்டோடின. சிறுவனாக இருந்த மைக்கேல், இப்போது இளைஞனாகி இருந்தான். அதனால் அந்த வயதிற்குரிய துடுக்குத்தனத்துடன் இருந்தான். மட்டுமல்லாமல், அரசரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வது அவனுக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, அவன் அரசாங்கக் கருவூலத்திலிருந்து பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு, வேறோர் இடத்திற்குப் போக முடிவு செய்தான்.

ஒருநாள் இரவு எல்லாரும் தூங்கிய பின்பு, அவன் கருவூலத்திற்குச் சென்று, பணத்தையும் நகைகளையும் எடுத்துக்கொண்டிருந்தான். திடீரெனச் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது, அங்கே அரசர் நின்றுகொண்டிருந்தார். அவன் பேயறைந்தவன் போல் நின்றபோது, அரசர் அவனிடம், “இங்குள்ள எல்லாமும் உன்னுடையதுதான் என்று சொன்னபிறகும் நீ ஏன் பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டிருக்கின்றாய்? என்றார். அவன் எதுவும் பேச முடியாமல், அவரது காலில் விழுந்தபோது, “நான் உன்னை மன்னிக்கின்றேன்” என்று அவனை மனதார மன்னித்து, அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மைக்கேலை அரசர் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டார். இன்று நாம் கொண்டாடுகின்ற, அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றார். அவர் நம்மையெல்லாம் எப்படி மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

இகழ்ந்தவருக்கும் இறையாட்சியில் இடமளித்தவர்:
இன்று திருஅவையானது, ‘நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துக்கும் அரசர்’’ என்ற பெருவிழாவினைக் கொண்டாடுகின்றது; ஆனால், அவர் கள்வர்கள் நடுவில் ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பற்றி இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இது எவ்வளவு பெரிய நகைமுரண்! அரசர் என்றால் அரியணையில் அல்லவா அமர்ந்திருக்கவேண்டும்! இயேசுவோ சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்டவரை அரசர் என அழைப்பது பொருத்தமாக இருக்குமா? என்றொரு கேள்வி எழலாம். ஆனால், அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பதை வைத்தே, அவர் இவ்வுலக அரசரைப் போன்றவர் அல்லர் என்று சொல்லலாம்.

அடித்தவரைத் திருப்பி அடிப்பவர்களாகவும், சமயம் கிடைக்கின்றபோது பழி வாங்குபவர்களாகவும் இவ்வுலக அரசர்கள் மற்றும் தலைவர்கள் இருக்கும்போது, இயேசு தன்னை இகழ்ந்தவருக்கும் இறையாட்சியில் இடமளிப்பவராக இருக்கின்றார். மத்தேயு நற்செய்தியில், இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள் (மத் 27: 44) என்று வாசிக்கின்றோம். எனில், இயேசு தன்னை இகழ்ந்து, பிறகு மனமாறிய கள்வருக்கு இறையாட்சியில் இடமளிக்கின்றவர் என்று சொல்லலாம். இதனாலேயே அவர் இவ்வுலக அரசரைப் போன்றவர் அல்ல என்று நாம் சொல்லலாம்.

ஒரு குற்றமும் செய்யாதவர்:
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களில் ஒருவன் மற்றவரைப் பார்த்து, “நாம் தண்டிக்கப்படுவது முறையே, நம் செயல்களுக்கேற்ற தண்டனையைப் நாம் பெறுகின்றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என்கிறார். இவ்வார்த்தைகள் மிகவும் கவனிக்கத் தக்கவை.

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போன்று, இயேசு பாவம் செய்யாதவர் (எபி 4:15). அவரைப் போன்று இன்றுள்ள அரசர்களிலும் சரி, இதற்கு முன்பு இருந்த அரசர்களிலும் சரி, பாவம் செய்யாத அரசர்கள் யாராவது இருக்கின்றார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே! இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலைச் சேர்ந்த அனைத்துக் குலங்களிலும் இருந்த மூப்பர்கள், எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்து அவரை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்கின்றார்கள்.

தாவீது இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன ஒன்று, அவர் இஸ்ரயேலர்; அன்னியர் அல்லர் (இச 17: 5). இரண்டு, அவர் மிகச் சிறந்த வீரர் மற்றும் தளபதி. மூன்று, அவர் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (2 அர 11:17). இத்தகு காரணங்களால் அவர் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகின்றார். இப்படிப்பட்டவரே உரியாவின் மனைவியான பத்சேபாவோடு பாவம் செய்துவிடுகின்றார். பின்னாளில் அவர் மனம் மாறி (திபா 51), அனைத்துலகிற்கும் அரசராம் ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்றாலும், அவர் பாவியே! ஆனால், ஆண்டவர் இயேசு பாவம் செய்யாதவர். அதனால் அவர் இவ்வுலக அரசர்களைவிடவும் மேலானவர்.

கடவுளோடு நம்மை ஒப்புரவாக்குபவர்:
கடவுளின் திருமுன் இருந்த மனிதர்கள் (தொநூ 3:8), அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையை மீறிப் பாவம் செய்து, அவரை விட்டு விலகிப் போனார்கள். இவ்வாறு கடவுளிடமிருந்து விலகியவர்களை, இயேசு தம்முடைய விலைமதிக்கப் பெறாத இரத்தத்தைக் கல்வாரி மலையில் சிந்தி, கடவுளோடு ஒப்புரவாக்கினார்; மீண்டுமாக அவர் அவர்களைக் கடவுளின் திருமுன்னால் கொண்டு வந்தார். இதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பவுல், “சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால், அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்” என்கிறார்.

இதன்மூலம் இயேசுதான் கடவுளோடு மனிதர்களை ஒப்புரவாக்கியவர்; ஏன், மனிதர்களோடு மனிதர்களை ஒப்புரவாக்கி, அமைதியைக் கொண்டு வந்தவர் (எபே 2: 13-14) என்று சொல்லலாம். இவ்வாறு இயேசு தன்னை இகழ்ந்தவருக்கும் இறையாட்சியில் இடமளிப்பவராய், பாவம் செய்யதவராய், கடவுளோடு மனிதர்களை ஒப்புரவாக்குபவராய் இருப்பதால் அவர் ஒப்பற்ற அரசராய் இருப்பது மட்டுமல்லாமல், அனைத்திற்கும் அரசராய் இருக்கின்றார். அப்படிப்பட்டவரின் ஆட்சியுரிமையில் நாம் பங்குபெற, அவருக்கு உகந்தவற்றை நாடித் தேடுவோம்.

சிந்தனைக்கு:
‘ஓர் அரசரின் வலிமை அவரது இரக்கத்தில் உள்ளது’ என்று கூறுவார் சரபி என்ற அறிஞர். எனவே, நம்மீது மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டிருக்கும் அனைத்திற்கும் அரசராம் இயேசு கிறிஸ்துவின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நினைவிற்கொள்ளும் அரசர்!

ஒரு சாதாரண கதையோடு தொடங்குவோம்.
சிறுவன் ஒருவனுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஐஸ்க்ரீம் பார்லர் செல்கின்றான். ஒரு நாற்காலியைப் பார்த்து அமர்ந்த அவனிடம் வருகின்ற கடை ஊழியர், 'என்ன ஃப்ளேவர் வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'வெனில்லா' என்கிறான் சிறுவன். 'இரண்டு வகைகள் உள்ளன. ஒன்றின் விலை ரூ 45. மற்றொன்றின் விலை ரூ 55' என்கிறார் ஊழியர். 'இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?' கேட்கின்றான் சிறுவன். 'இரண்டாம் வகை ஐஸ்க்ரீமில் நிறைய முந்திரி மற்றும் பாதாம் பருப்புக்கள் சேர்க்கப்படும். அத்துடன் ஒரு சிறிய கார் பொம்மையும் இலவசமாகக் கிடைக்கும்' என்கிறார் ஊழியர். தன் பைக்குள் கையை விடுகின்ற சிறுவன் தன் பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, 'ரூ 45க்கு உள்ள ஐஸ்க்ரீம் கொடுங்கள்' என்று ஆர்டர் செய்கிறான். 'இவனிடம் காசு இவ்வளவுதான் இருக்கிறதுபோல!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊழியர் ஐஸ்க்ரீம் கொண்டுவருகின்றார். சாப்பிட்டுவிட்டு, 'நன்றி!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றான் சிறுவன். காலிக் கோப்பையை எடுக்க வந்த ஊழியர், ரூ 55ஐ சிறுவன் விட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கிறான். தனக்கு விருப்பமான ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நேரத்தில், தன் ஆசையை விலக்கிவிட்டு, ஊழியரை நினைவுகூர்ந்து அவருக்காக டிப் வைத்த சிறுவனை நினைத்து ஆச்சர்யப்பட்டார் ஊழியர்.

நினைவுகூரும் அனைவரும் அரசர்களே!
அல்லது
நினைவுகூருபவரே அரசர்!
தன்னுடைய விருப்பம் அல்லது நலனை முதன்மைப்படுத்தாமல் தேவையில் இருக்கும் பணியாளரை நினைவுகூர்ந்த அந்த இளவல் தன்னை அறியாமலேயே அந்தப் பணியாளரின் அரசர் ஆகின்றார்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக் கிழமையை இயேசு கிறிஸ்து அனைத்துலகுக்கும் அரசர் என்று கொண்டாடுகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 சாமு 5:1-3) வடக்கு இஸ்ரயேலுக்கு தெற்கு யூதாவுக்கும் ஏழு ஆண்டுகள் நடந்த கொடுமையான போர் முடிந்து, வடக்கு இஸ்ரயேலின் தலைவர்கள் தன்னுடைய ஊரான எபிரோனில் குடியிருந்த தாவீதிடம் செல்கின்றனர். தங்களை ஆள்வதற்கு தாவீதே சிறந்த அரசர் என்று முடிவெடுக்கின்றனர். தாவீதிடம் இருந்த பண்புநலன்களும் குணநலன்களும் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் அவர் என்று மற்றவர்களுக்குக் காட்டின. தாவீது பிலிஸ்தியர்களைக் கொன்றார் (காண். 1 சாமு 18:14-16). இப்படி நிறைய சாதனைகள் புரிந்தார். மேலும், ஆபிரகாம் முதன்முதலில் உரிமையாக்கிக் கொண்ட எபிரோன் பகுதியில் தாவீது இருந்ததாலும் வடக்கு இஸ்ரயேல் தலைவர்கள் அவரை நாடி வந்து தங்களை அரசாளுமாறு வேண்டுகிறார்கள்.

அவர்களோடு தாவீது உடன்படிக்கை செய்துகொள்கின்றார். உடன்படிக்கை என்பது ஒருவர் மற்றவருக்கு இடையே இருக்கும் உறவுநிலையின் வெளிப்புற அடையாளம். அந்த அடையாளத்தைக் காணும்போதெல்லாம் ஒருவர் மற்றவர் மேலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் நினைவுகூர்வர். எடுத்துக்காட்டாக, வெள்ளப்பெருக்கிற்குப் பின் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையின் அடையாளமாக கடவுள் தன்னுடைய வில்லை (வானவில்லை) பூமிக்கு மேல் நிலைநிறுத்துகிறார். அந்த வில்லைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நோவாவுடன் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து பூமியை வெள்ளப்பெருக்கிலிருந்து காக்கின்றார்: 'என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். அதன் வில் தோன்றும்போது என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன் ... உடன்படிக்கையின் அடையாளம் இதுவே' (காண். தொநூ 9:13-17).

ஆக, தாவீது தன்னுடைய அரசாட்சியை உடன்படிக்கை என்ற நிகழ்வின் வழியாகத் தொடங்குகிறார். இந்த உடன்படிக்கையால் இவர் தன்னுடைய மக்களை என்றென்றும் நினைவுகூர்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:12-20) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், பவுல் மூன்று விடயங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்: (அ) கொலோசையர்களைக் கடவுள் இமைக்களுக்கான ஒளிமயமாக உரிமைப்பேற்றில் பங்குபெற அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார், (ஆ) இதன் வழியாக அவர்கள் இருளிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டனர், மற்றும் (இ) அம்மகனால் அவர்கள் பாவமன்னிப்பு என்னும் மீட்பைப் பெறுகின்றனர். இரண்டாம் பகுதி, ஒரு கிறிஸ்தியல் பாடலாக அமைந்துள்ளது. கிறிஸ்துவைக் கடவுளின் சாயல் என்று வர்ணிக்கும் பாடல் ஆட்சியாளர், அதிகாரம் கொண்ட அனைவரும் அவரால்தான் படைக்கப்பட்டனர் என்றும், அவரே திருச்சபையின் தலையும் தொடக்கமும் என்று விளக்குகிறது.

கிறிஸ்து வழியாகக் கடவுள் அனைத்தையும் ஒப்புரவாக்கினார் என நிறைவு செய்கிறார் பவுல். 'ஒப்புரவு செய்தல்' என்னும் நிகழ்வில் அடுத்தவர் நினைவுகூரப்படுகின்றார். மேலும், 'ஆட்சியாளர்கள், அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்' என்று சொல்வதன் வழியாக, கிறிஸ்துவை ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் என்று சொல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 23:35-43) இயேசுவின் பாடுகள் வரலாற்றுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார். அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கீழே இருப்பவர்கள் பார்க்கிறார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறவர்களும் பார்க்கிறார்கள். இவ்விருவரின் எதிர்வினைகளைப் பதிவு செய்கிறார் லூக்கா. சிலுவைக்குக் கீழே நிற்கின்ற 'ஆட்சியாளர்கள்,' 'நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்' என்று எள்ளி நகையாடுகின்றனர். இவர்கள் கொஞ்ச நேரத்திற்கு முன் பிலாத்துவின் அரண்மனையில், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொன்னார்கள். மேலும், இவர்களின் வார்த்தைகளைக் கிண்டல் செய்யும் விதமாக பிலாத்துவும், 'இவன் யூதரின் அரசன்' என எழுதுகிறான். இந்தப் பலகையைப் பார்த்தவர்கள் இயேசுவைத் தங்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு இடறலாகப்பட்டது. தொடர்ந்து, சிலுவையில் அறையப்பட்டவர்களில் ஒருவர், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று!' என்று பழித்துரைக்கிறார். ஆனால், மற்றவர் அவரைக் கடிந்துகொள்கிறார். மேலும், 'இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்று சொல்லும் அவரிடம், 'இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என வாக்களிக்கிறார் இயேசு. தன்னுடைய பணிக்காலத்தில் மக்கள் தன்னை அரசானக்க நினைத்தபோது தப்பி ஓடிய இயேசு, 'நீ யூதர்களின் அரசனோ?' என்று பிலாத்து கேட்டபோது அமைதி காத்த இயேசு, 'நீர் என்னை நினைவிற்கொள்ளும்' என்று ஒரு கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார். மேலும், லூக்கா நற்செய்தியில் இயேசுவை அவருடைய பெயரைச் சொல்லி அழைத்த ஒரே நபர் இக்கள்வன் மட்டுமே.

'நினைவிற்கொள்ளுதல்' அல்லது 'நினைவுகூர்தல்' என்பது முதல் ஏற்பாட்டில் கடவுளின் உடன்படிக்கையைக் குறிக்கும் சொல்லாடல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் துன்பம் அனுபவிப்பதை நினைவுகூர்ந்த கடவுள் கீழே இறங்கி வருகிறார் (காண். விப 2:24). இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டபோது அவர்கள்மேல் கோபம் கொண்டு எழுந்த கடவுள், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அமைதியாகின்றார் (காண். விப 32:13).

ஆக, இன்றைய முதல் வாசகத்தில் தாவீது தான் கடவுளின் திருமுன் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அவர்களை ஆட்சி செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் ஒப்புரவுப் பணி நினைவுகூரும் பணியாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில், நல்ல கள்வனை நினைவுகூறும் அரசராக இருக்கிறார் இயேசு.

நம்முடைய குடும்பம் மற்றும் பங்குத் தளங்களில் உள்ள தலைமைத்துவத்திலும் இதே பிரச்சினைதான் காணப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி தன்னுடைய குடும்பத்தை நினைவுகூறும்போது நல்ல தலைவராக தலைவியாக இருக்க முடியும்.

நினைவுகூருதலுக்கு எதிர்ப்பதம் மறத்தல்.
நாம் எப்போதெல்லாம் மறக்கிறோம்? தேவையில்லாதது என நினைப்பவற்றை மறக்கிறோம், கண்டுகொள்ளாத்தன்மையால் மறக்கிறோம், அல்லது நம்மை மட்டுமே அதிகமாக நினைவுகூரும்போது மற்றவர்களை மறக்கிறோம்.

'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல. நான் அவரை அரசராக ஏற்றுக்கொள்கிறேனா? என்பதுதான் கேள்வி.

இன்றைய நாளில் நான் அந்தக் கள்வன் போல, 'என்னை நினைவுகூரும்' என்று இயேசுவிடம் சொல்லும்போது நான் அவரை என் அரசராக ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை எப்படி என்னால் சொல்ல முடியும்?
நான் என் நொறுங்குநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கள்வன் தன்னுடைய வலுவற்ற நிலையில் இயேசு மட்டுமே துணைவர முடியும் என்று நம்பினான். அவனுடைய வலுவற்ற நிலையில் அவன் இயேசுவின் வல்லமையை நாடி நின்றான்.

இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லமையாகக் காட்டிக்கொள்ளவும், வல்லமை உடையவர்களோடு தங்களையே அடையாளப்படுத்திக்கொள்ளவுமே விழைகின்றனர். ஆனால், வலுவற்ற கள்வன் வலுவற்ற இயேசுவில் வல்லமையைக் கண்டான்.

அந்தச் சிறுவன்போல.
வலுவற்ற அந்தச் சிறுவன் தன் வலுவற்ற நிலையில் தேவையிலிருக்கும் அப்பணியாளரைப் பார்த்தான்.

இன்று இயேசுவை நாம் அரசராகக் கொண்டாடுகிறோம். நம்முடைய வலுவின்மையை எண்ணிப் பார்ப்போம். வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் அவர் நம் வலுவின்மையை அறிந்தவர்.

தன்னுடைய வலுவின்மையை அறிந்த ஒருவர்தான் திருப்பாடல் ஆசிரியர்போல, ''ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்' (122:1) என்று பாட முடியும். ஆண்டவருடைய இல்லத்தில் நுழையும் நம்மை அவர் ஆள்வார்.

அவரின் ஆளுகைக்கு நாம் உட்படும்போது அவர் நம்மை நினைவுகூர்வார். ஏனெனில், நாம் அங்கே நம்முடைய நொறுங்குநிலையை நினைவுகூர்கிறோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்துவின் ஆட்சியில் வாழத் தயாரா!  

இன்று நாம் திருஅவையோடு இணைந்து கிறிஸ்து அரசரின் விழாவைக் கொண்டாடுகிறோம்.
 திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது) என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார். அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்' என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.

1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்) என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.

அதனடிப்படையில்
கிறிஸ்து இயேசு அனைத்துலகின் அரசர் என்ற நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் நாம் இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். அரசன் என்றால் அதிகாரம், பெருமை, செல்வச் செழிப்பில் வாழ்வு, பணிவிடை புரிய பலர் என்ற வரைபடத்தை மாற்றி அமைத்து பணிவு, தாழ்ச்சி, எளிமை, பணிபுரிதல் போன்றவைதான் அனைவரின் மனங்களையும் ஆட்சி செய்யும் என்ற சிந்தனையைத் தந்தவர்தான் இயேசு. 

இன்றைய நற்செய்தியில் யூதர்களும் இயேசுவை சிலுவையில் அறைந்த காவலர்களும் அவரை "அரசன் என்று சொன்னாயே; உன்னையே உன்னால் காப்பாற்ற இயலவில்லையே " என எள்ளி நகையாடினர். அவர்கள் நகையாடிக் கூறியது ஒரு விதத்தில் உண்மையாகத் தோன்றலாம். அரசனுக்கான அறியணையும் மணிமுடியும் அங்கு இல்லை. அறியணைக்குப் பதிலாக சிலுவையும் மணிமுடிக்கு பதிலாக முள்முடியும் தான் இருந்தன. சாமரம் வீசும் பணியாளர்களுக்கு பதில் சவுக்கையால் அடித்தவர்கள்தான் அங்கு இருந்தனர். புகழ்பாடலுக்கு பதில் வசைமொழிகளும் இனிய மது ரசத்திற்கு பதில் கசப்புக் காடியும் தான் இருந்தன. பின் எவ்வாறு அவர் அரசராக முடியும்? 

ஆனால் அந்த நிலையிலும் கூட
 இயேசுவிடம் கள்வன் "நீர் ஆட்சியுரிமை பெறும் போது என்னை நினைவு கூறும் " என மன்றாடிக் கேட்டுக்கொண்டான் என நாம் வாசிக்கிறோம்.சுற்றி இருந்த அத்தனை பேரும் இயேசுவை ஏளனம் செய்த போது அந்தக் கள்வனால் மட்டும் இயேசுவை எவ்வாறு அரசனாக அறிய முடிந்தது?  ஏனென்றால் அவன் இயேசுவை கனிவை, அன்பை, இரக்கத்தை, பணிவை, மன்னிக்கும் மனதை கண்டுகொண்டான். இயேசுவின் இத்தகைய அருங்குணங்கள் கள்வனின் மனதை ஆட்கொண்டன. இயேசுவும் அக்கள்வனின் மனதை அறிந்து "இன்று நீ என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் " என உறுதியளித்தார். 

இன்றைய விழா நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அக்கள்வனைப் போல இயேசுவின் அருங்குணங்களால் நம் இதயங்கள் ஆட்கொள்ளப்பட அனுமதிக்க வேண்டும் என்பதே. இயேசு நம் இதயங்களை ஆட்கொண்டாலே போதும் தன் வாழ்நாளின் இறுதி நேரத்தில் கூட மனமாறி இயேசுவின் ஆட்சி உரிமையில் மட்டுமல்ல அவருடைய மனதிலும் இடம்பிடித்த அக்கள்வனைப்போல நாமும் இயேசுவின் ஆட்சி உரிமையிலும் அவருடைய மனதிலும் நீங்கா இடம் பெற முடியும். இயேசுவின் அருங்குணங்களால் ஆட்கொள்ளப்பட்ட நாமும் அக்குணங்களை நம்மோடு வாழும் பிறருக்கு பிரதிபலித்து அவர்களையும் இயேசுவின் ஆட்சியுரிமைக்குரிய மக்களாக மாற்ற முயல்வது இறையாட்சியின் மக்களாகிய நமக்கு கொடுக்கப்பட்ட கடமை. இம்மனநிலை நம்மிடம் இருந்தால் மட்டுமே கிறிஸ்து அரசரின் விழாவைக் கொண்டாடுவது நமக்கு பொருத்தமானதாக இருக்கும். நாமும் அவரின் அரசின் மக்களாக வாழ முடியும். தயாரா?

இறைவேண்டல்
  எங்கள் அரசரே இயேசுவே! உமது ஆட்சியுரிமையில் எம்மை நினைவுகூரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser