மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 33-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
மலாக்கி 4: 1-2 |2தெசலோனிக்கர் 3: 7-12 |லூக்கா 21: 5-19

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


வில்லியம் மில்லர் என்ற பிரிவினை சபைப் போதகர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 1843ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி முதல் 1844ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதிக்குள் உலகம் அழியும் என்றார். ஆயிரக் கணக்கானோர் இந்தப் போதனையைக் கேட்டு நிலபுலன்களை விற்று, வீட்டையும் விற்று செலவு செய்து அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை.

இதேபோல் எத்தனையோபேர் உலகம் முடியும் என்றும், சீக்கிரம் இயேசு வருவார் என்றும் போதித்தனர். போதித்தும் வருகிறார்கள். ஏன் புனித பவுல் அடிகளார் காலத்திலே, தெசலோனிய மக்கள் தொடங்கிவிட்டார்கள். இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் எருசலேம் ஆலயம் அழிவு உலகத்தின் முடிவுக்கு அடையாளம். எனவேதான் இயேசு எருசலேம் அழிவை முன்னறிவித்தபோது உலகமும் முடிவுக்கு வரும் என்று யூதர்கள் நம்பினார்கள்.

உலகம் முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அந்த நாளையும், வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர (மாற்கு 13:32) மகனுக்கோ, விண்ணகத் தூதர்களுக்கோ கூடத் தெரியாது. "இதோ சூளையைப்போல் எரியும் அந்த நாள் வரும்" என்கிறார் இறைவாக்கினர் மலாக் (முதல் வாசகம்). போர்க்குழப்பங்களையும், குழப்பங்கள் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள். ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது. பல இடங்களில் பஞ்சமும், கொள்ளை நோயும் ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும் (லூக். 21:9-12) என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம்).

இயேசுவின் வருகைக்காக நாம் செய்ய வேண்டியவை:-
1. நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் நாம் மனப்பக்குவத்துடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம் திரும்பிக் கொள்ளலாம், அடுத்த வாரத்தில் புதிய வாழ்வு வாழலாம், பின்னால் ஆண்டவரைத் தேடிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதுதான் மடமை, முட்டாள்தனம். மூடி (Moodi) என்ற உலகப் புகழ் பெற்ற போதகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பார். இதன் இரகசியம் என்ன? என்று கேட்டபோது, "நான் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மறையுரையை முடிக்கும் முன்பே ஆண்டவர் வந்தாலும் வந்து விடுவார் என்ற மனநிலையோடு வாழ்கிறேன்" என்றாராம். விழிப்பாக இருங்கள், அந்த நேரம் எப்போது வரும் என்று தெரியாது (மாற்.13:33).

2. கழன உழைப்புத் தேவை
புனித பவுல் அடிகளாரின் போதனையைக் கேட்ட தெசலோனிக்கிய மக்களில் சிலர் உழைப்பதை விட்டு விட்டு. இயேசுதான் விரைவில் வரப்போகிறாரே பின் ஏன் உழைக்க வேண்டும்? கடின உழைப்பு உழைக்கத் தேவையில்லை என்று திருச்சபையின் பொதுச் சொத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட மக்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில்தான் இந்த இரண்டாம் திருமுகத்தை எழுதுகிறார் புனித பவுல். உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது. ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து. தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என்றார் (இரண்டாம் வாசகம்).

3. சான்று பகரக்கூடிய வாழ்வு
உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். என் பெயரின் பொருட்டு அரசரிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் (லூக். 21:12-13). இவை எனக்குச் சான்று பகர உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்கிறார் இயேசு. ஆண்டவருக்குச் சான்று பகரும் வாழ்வு வாழ்ந்தோம் என்றால் நாம் வாழ்வின் நாளை எதிர்நோக்கி இருப்போம். இல்லையென்றால் அந்த நாள் அழிவு நாளாகத்தான் இருக்கும். எனவே ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நீங்கள் மாசுமறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள் (2பேதுரு:3:10-14) என்று கூறுகிறார் திருத்தூதர் பேதுரு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இயேசுவே, எங்களுக்கு ஞானத்தைத் தாரும்

இன்றைய நற்செய்தியிலே இயேசு நமக்கு ஞானத்தைத் தருவதாகக் கூறுகின்றார். இயேசு வாக்கு மாறாதவர். ஆகவே நம் நல்வாழ்விற்குத் தேவையான ஞானத்தை இயேசுவிடம் கேட்போம்.

இதோ ஞானம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக் காட்ட ஒரு நிகழ்வு !

பெரிய ஞானி ஒருவர் ஒரு காட்டுக்குள்ளே வாழ்ந்து வந்தார். அவரிடம் ஞானம் பெறச் செல்கின்றவர்கள் ஐந்து ஆண்டுகள் அவர் சொல்லும் பாடத்தைக் கவனிக்க வேண்டும். இது ஒரு நிபந்தனை. அவரிடம் அந்த சமயத்தில் ஐம்பது சீடர்கள் இருந்தார்கள். அன்று ஐந்து வருடங்களின் கடைசி நாள். மறு நாள் சீடர்கள் வீட்டுக்குச் செல்லும் நாள்.

ஞானம் பெற்றுவிட்டீர்களா? என்று குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார். எல்லாரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கற்க வேண்டிய அனைத்தையும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டோம் என்றார்கள். குரு, உங்களைச் சோதித்துப் பார்க்கலாமா? என்றார். சீடர்கள், நிச்சயமாக என்றார்கள்.

குரு அவர்களைப் பார்த்து, இரண்டுபேர் ஒரு சாலையின் வழியாக சென்றுகொண்டிருந்தார்கள்! திடீரென மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இருவரில் ஒருவர் மட்டும் நனைந்தார். இன்னொருவர் நனையவில்லை. அது எப்படி? என்றார்.

சீடர்களிடமிருந்து பலவிதமான பதில்கள் வந்தன! சிலர். ஒருவரிடம் குடை இருந்திருக்கும் என்றனர். யாரிடமும் குடையில்லை என்றார் குரு.சிலர், ஒருவரிடம் மழை கோட் இருந்திருக்கும் என்றனர். குருவோ, யாரிடமும் மழை கோட் இல்லை என்று சொல்லிவிட்டார். சிலர், அவருக்கு உதவி செய்ய மரங்களோ, வீடுகளோ, தங்கும் விடுதிகளோ இருந்திருக்கும் என்றனர். குருவோ, பாதையிலே மரங்களோ, வீடுகளோ, சத்திரங்களோ இல்லை என்று சொன்னார்.

எல்லாச் சீடர்களும் எந்தப் பதிலையும் கூறமுடியாமல் விழித்தனர். அப்போது குரு, அவர்களுக்கு உதவி செய்ய எதுவுமே இல்லை, யாருமே இல்லை என்று நான் சொன்னேன். பிறகு எப்படி ஒருவர் மட்டும் நனையாமல் இருந்திருக்க முடியும்? இரண்டுபேருமே மழையில் நனைந்தார்கள். இதுதான் உண்மை. ஒருவர் மட்டும் நனைந்தார் என்று நான் சொன்னது பொய். நீங்கள் என்னைப் பார்த்து . குருவே, நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லியிருக்க வேண்டும் என்றார்.

சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புகின்றீர்கள்! சொல்வதில் உண்மையிருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து தெளியும் ஆற்றல் உங்களிடம் இல்லை! எது பொய், எது உண்மை என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலுக்கும், அறிவுக்கும் பெயர்தான் ஞானம்.

நீங்கள் இன்னும் ஞானம் பெறவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகள் என்னோடு தங்குங்கள் என்று கூறிவிட்டார்.

கிறிஸ்துவுக்குச் சான்று பகர நமக்கு ஞானம் தேவை. முக்கியமாக நம்மை வெறுக்கின்றவர்கள், நம் மீது பழி சுமத்துகின்றவர்கள் நடுவில் நாம் நிறுத்தப்படும் போது அவர்களுக்குச் சரியான பதிலைத் தர நமக்கு ஞானம் தேவை (நற்செய்தி).

ஞானம் என்பது நாம் படிப்பதினால், பார்ப்பதினால், தொடுவதினால். நுகர்வதினால், கேட்பதினால் மட்டும் நமக்குக் கிடைக்கும் உலக அறிவு அல்ல. மாறாக ஞானம் என்பது கடவுளால், ஆண்டவரின் ஆவியாரால் நமக்குக் கொடுக்கப்படும் கொடை. ஞானம் நமக்குச் சொல் வளத்தை அருளும் (1கொரி 12:8); ஞானம் கடவுளுக்கு அஞ்சி நடக்கும் அறிவை நமக்குத் தரும் (முதல் வாசகம்) : ஞானம் புனித பவுலடிகளாரைப் போல, திருத்தூதர்களைப் போல எப்படி வாழவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கும் (இரண்டாம் வாசகம்).

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : இறைவா, சாலமோனைப் போன்று, இன்று உம்மிடம் ஞானத்தைப் கேட்கின்றோம். எது பொய்? எது உண்மை? எது சரி? எது நீதி ? எது அநீதி? எது பாவம்? எது புண்ணியம்? எது நல்லது? எது உகந்தது? எது நிறைவானது? என்பதைப் புரிந்துகொள்ளும், தெரிந்துகொள்ளும், உணர்ந்துகொள்ளும் மனத்தைத் தாரும். எங்களை ஞானத்தால் நிரப்பி உம் திருமுன் நாங்கள் என்றும் ஞானிகளாக வாழ அருள் புரிந்தருளும். ஆமென். மேலும் அறிவோம் :

உலகம் தழீஇய(து) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (குறள் 425).

பொருள்:
உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது, இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாததே சிறந்த அறிவாகும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆடி மாதத்தில் ஏன் பலத்தக் காற்று வீசுகிறது? ஆடி மாதத்தில் புதுத் தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். பெண் தமது அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறார். இவ்வாறு பிரிந்திருக்கும் தம்பதியர் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அதுதான் பலத்தக் காற்றாக வீசுகிறதாம்! புதுமையான மற்றும் புதிரான விளக்கம்!

மணமகன் கிறிஸ்து விண்ணகம் சென்றபின், அவரைப் பிரிந்த மணமகளாகிய திருச்சபை அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய மறு வருகைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஏக்கப் பெருமூச்சுவிட்டுக் கூறியது: "மாரனாத்தா", அதாவது, 'ஆண்டவரே வருக' (1 கொரி 16:22). விவிலியத்தின் இறுதி ஏக்க மன்றாட்டு: "ஆண்டவராகிய இயேசுவே, வாரும்" (திவெ 22:20). ஒவ்வொரு திருப்பலியிலும் திருச்சபை ஏக்கத்துடன் கூறுவது: "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்."

திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில், திருச்சபை உலக முடிவையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் நமக்கு நினைவூட்டுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் உலகுக்குத் தீர்ப்பு வழங்கும்நாளை "அந்தநாள்" என்று குறிப்பிடுகின்றார் இறைவாக்கினர் மலாக்கி. அந்தநாள் நெருப்பின் நாளாகவும் கடவுளுடைய வெஞ்சினத்தின் நாளாகவும் அமையும். அந்த நாளில் ஆணவக்காரர் சுட்டெரிக்கப்படுவர். அந்த நாளில், பதிலுரைப்பாடல் கூறுவதுபோல, கடவுள் உலகுக்கு நீதி வழங்கி, மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார் (திபா 98:9), புதிய ஏற்பாடும் தீர்ப்பின் நாளை 'அந்நாள்கள்' என்றும் (மாற் 13:24). "ஆண்டவருடைய நாள்" என்றும் (1 தெச 5:2) அழைக்கிறது.

ஆனால், அந்நாள் எப்போது வரும் என்றும், எப்படி வருமென்றும் எவர்க்குமே தெரியாது. நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் (மத் 24:44), ஆண்டவருடைய நாள் திருடனைப் போலவும் (1 பேது 3:10), கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போலவும் (1 தெச 5:3) வரும், அந்த நாளைப் பற்றி அறிய முயற்சி எடுப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல" (திப 1:7) என்று கிறிஸ்துவே நமக்குத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்றைய நற்செய்தியிலே (லூக் 21:5-19), கிறிஸ்து எருசலேம் ஆலயத்தின் அழிவையும் உலக முடிவையும் இணைத்துக் கூறுகிறார். அவர் கூறியபடி கி.பி. 70-ஆம் ஆண்டிலே எருசலேம் ஆலயம் தரை மட்டமாக்கப்பட்டது; எருசலேம் நகரும் எரியூட்டப்பட்டது. எனவே உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் உடனடியாக நிகழப்போகிறது என்று பலர் எதிர்பார்த்தனர். புனித பவுலும் கூட அத்தகைய எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தம் எண்ணத்தை மாற்றிக் கெண்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரப்போகிறது என்ற எண்ணத்தில் தாங்களும் உழைக்காமல், மற்றவர்களையும் உழைக்க விடாமல் தடுத்த ஒரு சிலருக்குப் பவுல், "உழைத்து வாழ வேண்டும்; உழைக்காதவன் உண்ணக்கூடாது" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுரை வழங்குகின்றார் ( 2 தெச 3:10).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இயற்கையில் பல்வேறு விபரீதங்கள் நிகழும் என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். அவை. முறையே. போலி இறைவாக்கினர்களின் பொய்ப்பிரச்சாரம். போர்கள், நிலநடுக்கம், பஞ்சம், கொள்ளைநோய் முதலியன. இவையாவும் உலகில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் பல்வேறு நாடுகளில் மக்களைப் பீதியில் சிக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, ஆழிப்பேரலைகள் என்று அழைக்கப்படும் சுனாமி போன்றவை இதற்குச் சான்றாகும். எனினும் "உடனே முடிவு வராது" (லூக் 21:9).

இத்தகைய சூழ்நிலையில் நமது மனநிலையும் செயல்பாடும் எப்படியிருக்க வேண்டுமென்பதையும் கிறிஸ்து நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். "நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக் 21:19). எனவே நமக்குத் தேவைப்படுவது பொறுமையும் மனஉறுதியுமாகும். புனித யாக்கோபு கூறுகிறார்: "சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது. தம்மீது அன்பு கொண்டுள்ளோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்" (யாக் 1:12).

"இக்காலக் குருக்களிடம் பொறுமை என்னும் அருட்சாதனம் இல்லை" என்று ஒருவர் என்னிடம் கூறினார். பொறுமை என்ற பண்பை அவர் ஓர் அருளடையாளத்துக்கு ஒப்பிட்டுக் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் இன்று அதிகமாகத் தேவைப்படுகிறது பொறுமை. ஒருவர் நிறைவு உடையவராக இருக்க வேண்டுமென்றால், அவர் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும் (குறள் 154).

வானகத் தந்தை நிறைவுள்ளவர் (மத் 5:48); ஏனெனில் அவர் 'நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்' (திபா 103:8). நிலக்கரி, வைரம் ஆகிய இரண்டுமே பூமிக்கு அடியிலுள்ள கரிவகை. பூமியின் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெளிவருவது தான் நிலக்கரி. ஆனால் பல நூறு ஆண்டுகளாகப் பூமியின் அழுத்தத்தைப் பொறுத்துக் கொண்ட நிலக்கரிதான் வைரமாக மாறுகிறது. சோதனைகளை மனஉறுதியுடன் தாங்கினால், நமது விசுவாச வாழ்வு வைரமாகும். சோதனைகள் வருவது நம்மைச் சிரமப்படுத்த அல்ல. மாறாகப் பட்டைதீட்ட என்பதை அறிவோம்.

தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்ட இயேசுவின்மீது நம் கண்களைப் பதிய வைப்போம் (எபி 12:2). கடவுளுடைய வார்த்தையைச் சீரிய செம்மனத்தில் ஏற்று மன உறுதியுடன் பலன் தருவோம் (லூக் 8:15).

கடவுளுக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.அவர் காலம் தாழ்த்துவதில்லை. பொறுமையாக இருக்கிறார். எவரும் அழியாமல், எல்லாரும் மனம் மாற விரும்புகிறார் ( 2 பேது 3: 8-9).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

காக்கும் கவசம் மனஉறுதியே!

'இறுதிக்காலப் போதனை' என்று அழைக்கப்படும் இன்றைய நற்செய்தி வாசகம் குழப்பமான ஒரு பகுதி. மக்களைக் குழப்புவதற்கென்றே சில பிரிவினை சபையினர் பயன்படுத்தும் ஒரு பகுதி - இதோ இங்கே போர், அதோ அங்கே புயல். நாளை காலை 9.59 மணிக்கு இயேசு வருகிறார் என்ற வகையில்.

ஆனால் இந்த வாசகத்தில் ஒரு நிகழ்ச்சி அல்ல, நான்கு நிகழ்ச்சிகள் அதுவும் நடந்தது. நடப்பது, நடக்க இருப்பது என்று காலத்தால் வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் அவற்றுடன் தொடர்புடைய கருத்துக்களையும் காணலாம்.

1. யூதர்களுடைய கண்ணோட்டத்தில் ஆண்டவருடைய நாள் (லூக். 21:11,25-27). அது தீச்சூளையைப் போல் எரியும் நாள் (மலா. 4:1). திருடனைப் போல் வரும் நாள் (2 பேது. 3:10). கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோலத் திடீரென வரும் நாள் (1 தெச.5:3). நினையாத நேரத்தில் வரும் நாள் (மத். 24:44). ஆண்டவரின் நாள் தீயோருக்கு அழிவின் நாள் இருளின் நாள் (ஆமோஸ். 5:18-20) ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு அது மீட்பின் நாள், ஒளியின் நாள் (சாஞா 19:9).

2.எருசலேம் பேரழிவு (லூக். 21:6, 20, 24) "ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும். இது கி.பி. 70இல் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சி.

3. இயேசுவின் இரண்டாம் வருகை (லூக். 21:27,28). தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் ஏக்கப் பெருமூச்சு "மாரனாத்தா!” (1கொரி 16:22). ஆண்டவரே வருக என்பது அதன் பொருள். விவிலியத்தின் இறுதி மன்றாட்டு “ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (தி.வெ.22:20). திருப்பலியில் திருச்சபையின் எதிர்பார்ப்பு "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்.'' நமது நம்பிக்கை அறிக்கையின் கோட்பாடு “வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்”. ஆனால் இந்த வருகை காலக் கணிப்புக்குள் அடங்காது. "அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத்தில் உள்ள தூதருக்கோ, மகனுக்கோ கூடத் தெரியாது" (மார்க். 13:32). "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” (தி.ப. 1:7). குறித்த காலம் நெருங்கிவிட்டது என்று சொல்பவர்கள் பின்னே போகாதீர்கள் (லூக். 21:8). போலிப் போதகர்களின் ஆவிக்குரிய கூட்டங்கள் பற்றிய எச்சரிக்கை இது!

4.கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சமயக் கலவரங்கள் (லூக். 21:12-13). இன்றைய நம் வாழ்வுக்கும் இது பொருந்தும். இயேசுவின் சாட்சிகளாக நமக்கு இது நல்லதொரு வாய்ப்பாகும்.

இவை அனைத்திலும் அச்சுறுத்தலை மட்டுமல்ல ஆறுதலான வாக்குறுதியையும் பார்க்கிறோம்.

-நான் உங்களோடு இருப்பேன்.
-நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் (லூக். 21:15).
-உங்கள் தலைமுடி ஒன்றைக் கூட ஒருவனும் ஒன்றும் செய்ய முடியாது (லூக்.21:18).

இயேசுவின் வார்த்தைகளை எச்சரிக்கையாய்க் கொண்டு, அதனால் வாழ்வுக்கான உறுதிப்பாட்டை உருவாக்கிக் கொள்வோம். நம்மைக் காக்கும் கவசம் மன உறுதியே. எனவே "நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக்.21:19). இந்த உள்மன உறுதிப்பாடு இல்லாததால்தான் நம்பிக்கையில் தளர்ச்சி. ஆழமற்ற கிறிஸ்தவ வாழ்க்கை.

உலக வரலாற்றில் உள்ளத்தைத் தொடும் மனந்திரும்புதல்கள் உண்டு. திருத்தூதர் பவுல் போல. மாமன்னன் அசோகன். கலிங்கப்போரில் பிணக்காட்டைப் பார்த்து ஏற்பட்ட மனமாற்றம்.

அசோகன் புத்த சமயத்தைத் தழுவியதும், புத்த பிக்குகளை மரியாதையுடன் நடத்தியதும் அவருடைய தம்பிக்குப் பிடிக்கவில்லை. புத்த பிக்குகள் புலன் இன்பங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறார்கள். புலன் இன்பங்களை ஒதுக்குவது சாத்தியமாகாது என்பது அவரது நினைப்பு.

தன் தம்பிக்குச் சரியான பாடம் கற்பிக்க நினைத்தார் மன்னர். அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்ததாகக் கூறித் தம்பியைச்சிறையில் அடைத்தார். ஏழு நாள் சிறைவாசம் எட்டாம் நாள் தூக்குமேடை. ஏழுநாள்களிலும் தம்பி அனுபவிக்க உலக இன்பங்கள் (பெண்கள் உட்பட)அனைத்துக்கும் ஏற்பாடு செய்தார். எட்டாம் நாள் சிறைக்கு வந்து, “நன்கு அனுபவித்தாயா?" என்று கேட்டார். “இல்லை அண்ணா, எட்டாம் நாள் இறப்புப் பற்றிய நினைவு அனுபவிக்க விடவில்லை”.

"புத்த பிக்குகளும் அப்படித்தான். வாழ்க்கை நிலையற்றது. உடல் அழியக்கூடியது என்ற உண்மைகளை அவர்கள் உணர்ந்துவிடுவதால் புலனடக்கத்துடன் இருப்பது அவர்களுக்குச் சாத்தியமாகிறது".

நாளை என்னவானால் என்ன, இன்று அனுபவிப்போம் என்பவன் மொத்த வாழ்வு பற்றி, இலட்சிய உணர்வுள்ள மனிதனாக இருக்க முடியாது.

உலக முடிவு என்பது உலக அழிவு அல்ல.பசுமையான வயல்களில் பெண்கள் களையெடுக்கும் காட்சியைப் பார்க்கிறோம். 'ஐயோ, நிலத்தைக் கொத்துகிறார்களே, பயிரை மிதிக்கிறார்களே, மண்ணைப் புரட்டுகிறார்களே, வேரை அசைக்கிறார்களே' என்று எவராவது அங்கலாய்ப்பார்களா?

இன்றைய வழிபாடு ஊட்டும் உணர்வு இதுதான். களையெடுன்ப்புக்குப் பின் வயல் காண்பது புதுப் பொலிவு. கடைசித் தீர்ப்புக்குப் பின் உலகம் காண்பது புது மாட்சி. புது உலகம், புதுமை உலகம், புனித உலகம்.

அதனால் அந்த நாள் நல்லவர்கள் மகிழும் நாள். நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நாள். நின்று கொல்லும் தெய்வம் தன் நீதியை நிலைநிறுத்தும் நாள். அழிவதெல்லாம் தீமையே! அந்தப் புதிய உலகத்தில் எல்லாரும் நல்லவர். எல்லாரும் புனிதர்.

எத்தகைய உலகம் நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? உலக முடிவில் புதிய வானமும் புதிய வையமும், படைக்கப்படும் என்பதுதானே விவிலியம் புதிய யுகமும், புதிய இனமும் விளம்பும் உண்மை.

அந்த நிலையில் அந்த நாள் - ஆண்டவரின் நாள் தீயோருக்கு அழிவின் நாள், இருளின் நாள். அந்த நாள் "சிங்கத்திடமிருந்து தப்பியோடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கை வைத்துச் சாய்ந்தபோது பாம்பு கடித்தாற்போலும் இருக்கும்” (ஆமேஸ் 5:18-20). உலகில் குற்றம் செய்தவன் நீதியின்படி தண்டிக்கப்படாவிட்டால், குற்றங்கள் பெருகிவிடும். அடித்து வளர்க்காத குழந்தையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் ஒன்றுக்கும் உதவாது. இறைவன் தண்டிப்பதுகூட மனிதனின் நன்மைக்காகவே!

ஆண்டவரின் நாள் அவருக்கு அஞ்சி நடப்போருக்கு மீட்பின் நாளாக அமையும். எனவே அவர்கள், "நல்ல மேய்ச்சலைக் கண்ட குதிரைகளைப்போல் துள்ளிக் குதித்துக் கொண்டும், ஆட்டுக் குட்டிகளைப் போலத் துள்ளிக் கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவரைப் புகழ்ந்து போற்றும் நாளாக" (சா.ஞா. 19:9) இருக்கும்.இவ்வாறு ஆண்டவரின் நாள் பற்றி எடுத்துரைக்கிறது முதல் வாசகம்.

புனித ஹென்றி (978-1024) பவேரியா நாட்டின் சிற்றரசராக இருந்தார். அவருக்கு ஆசிரியராக இருந்த புனித வேல் டிகாங்கு இறந்த சில நாட்களில் அவர்முன் தோன்றி “சுவரில் உள்ளதைப் படி" என்றார். அதில் “ஆறுக்குப்பின்” என்று எழுதியிருந்தது. "ஆறு நாள்களுக்குப் பிறகு நானும் இறப்பேன்" என்று எண்ணிக் கொண்டு புனித ஹென்றி இறப்பதற்குத் தயாரானார். ஆறு நாள்களுக்குப் பிறகும் தான் வாழ்வதைக் கண்டு "ஆறு மாதங்களில் இறப்பேனோ" என்று இறைவனைச் சந்திக்கத் தயார்நிலையில் இருந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆறு ஆண்டுகளில் இறப்பேனோ என்று எண்ணி இறப்பதற்குத் தன்னைத் தயாரித்தவராகவே இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இறக்கவில்லை. மாறாக உரோமைப் பேரரசராக முடி சூட்டப்பட்டார்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உலக முடிவை கைதட்டி இரசிக்க...

தத்துவ இயல் மேதைகளில் ஒருவரான சோரென் கீர்க்ககார்ட் (Søren Kierkegaard) அவர்கள், நாடக அரங்கத்தை மையமாக வைத்து, ஓர் உவமை கூறியுள்ளார்.

ஓர் அரங்கத்தில், அலைமோதும் கூட்டத்தின் நடுவே நாடகம் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், ஒன்றையொன்று விஞ்சும் அளவு விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து, ஆரவாரமாய், கைதட்டி இரசிக்கின்றனர்.

அவ்வேளையில், திடீரென, திரைக்குப் பின்புறமிருந்து மேடைக்கு ஓடிவரும் கோமாளி, "மக்களே, அவசரமான ஓர் அறிவிப்பு... மேடையின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளது. எனவே, தயவுசெய்து, விரைவாக இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கத்துகிறார்.

அவர் அப்படி கத்துவதை, நாடகத்தின் நகைச்சுவைப் பகுதி என்று மக்கள் கருதி, ஆரவாரமாய் கைதட்டி இரசிக்கின்றனர். கோமாளியோ, கரங்களைக் கூப்பி, கண்களில் கண்ணீர் வழிய, மேடையில் முழந்தாள் படியிட்டு, "தயவுசெய்து வெளியேறுங்கள்" என்று கெஞ்சுகிறார். ஆனால், அவர் அற்புதமாக நடிக்கிறார் என்று கூட்டம் பாராட்டுகிறது. திடீரென, அந்த அரங்கம் முழுவதும் தீயால் சூழ்ந்து, அனைவரும் தீக்கிரையாகின்றனர்.

"உலக முடிவும் இதுபோல்தான் இருக்கும். அந்த உண்மையை ஒரு வேடிக்கை என்று எண்ணுவோரின் கரவொலியோடு, இவ்வுலகம் முடியும்" என்று கீர்க்ககார்ட் அவர்கள், தன் உவமையை நிறைவு செய்துள்ளார்.

வாழ்வில் பல வேளைகளில், பல வடிவங்களில் வந்தடையும் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அனைத்தையும் விளையாட்டாக இரசித்துக் கொண்டிருப்பவர்களில், நாமும் ஒருவரெனில், இன்றைய ஞாயிறு வழிபாடு, மீண்டும் ஒருமுறை, நம்மை விழித்தெழச் செய்கிறது.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு துவங்கும் திருவருகைக் காலம், புதிய திருவழிபாட்டு ஆண்டைத் ஆரம்பித்துவைக்கிறது. நாம் சிறப்பித்த இந்த வழிபாட்டு ஆண்டு முழுவதும், இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்த அற்புதப் பகுதிகள் வழியாக, இறைவன் நம்மை இரக்கச் சிந்தனைகளில் நிறைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் பகுதிகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி, சில வேளைகளில், அச்சத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கும். நல்லவை நடக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே! இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தியை நாம் சிந்திக்க முயல்வோம். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தில், 15 இறைச்சொற்றொடர்கள் உள்ளன. அவற்றில் 13 இறைச்சொற்றொடர்கள் அழிவைக் கூறுகின்றன. இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்...

லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இஸ்ரயேல் மக்களின் மதநம்பிக்கைக்கு உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, அந்தப் பேராலயம், கல்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும் என்று இயேசு கூறுகிறார். அவ்விதம் கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு துணிவு வேண்டும். பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச முடிந்ததென்று, இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம்.

ஆனால், அதேநேரம், தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை, அவர் நடந்து கொள்ளும் முறை இவற்றை வைத்து, அவர் வாழ்வு அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று கணிக்கமுடியும், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம். எருசலேம் கோவில், எவ்விதம் நிர்வகிக்கப்பட்டது என்பதை இயேசு ஆழமாய் உணர்ந்து, வெளிப்படுத்திய எண்ணங்களே, இன்றைய நற்செய்தியில் இடம்பெற்றுள்ளன.

இயேசுவைப் பொருத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே, எருசலேம் ஆலயம் நடத்தப்பட்ட முறையைப் பார்த்து கவலைப்பட்டிருப்பார். அவரது கவலை, ஆதங்கம் இவற்றை ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் தன் பழைய வியாபார நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு தூரம் வருமானம் சேர்க்கும் அக்கோவில், நிச்சயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். அக்கோவில் சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதை, சொல்லாமல் சொல்லும் வண்ணம், இயேசு, இந்த எச்சரிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.

செல்வம் சேர்க்கும் நிறுவனங்களாக மாறும் கோவில்கள், கற்களால் எழுப்பப்படும் கோட்டைகளாக மாறிவிடுகின்றன. கோவிலில் உள்ள கடவுளைக் காப்பதைவிட, செல்வத்தைக் காப்பதற்காக வலுவானக் கற்சுவர்களை அமைத்துக்கொள்கின்றன. கற்களை நம்பி உயர்ந்து நிற்கும் கோவில்களுக்குப் பதில், மக்களை நம்பி எழுப்பப்படும் உண்மை ஆலயங்களை, அனைத்து மதங்களும் கட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

முதல் இரு இறைச்சொற்றொடர்களில், எருசலேம் கோவிலின் அழிவுபற்றி பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும் அழிவுகளைப்பற்றி கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், ஏதோ நாம் வாழும் இக்காலத்தைப்பற்றி இயேசு பேசுவது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள்:

 • கடவுளின் பெயரால், உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால், மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
 • போர் முழக்கங்கள், குழப்பங்கள், ஒன்றை ஒன்று எதிர்த்து எழும் நாடுகள்;
 • பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
 • அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்…

இவை அனைத்தும், நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில், கலங்காமல் இருங்கள் என்று இயேசு கூறுவது, நமக்கு விடுக்கப்படும் பெரும் சவால்!

இயற்கையிலும், சமுதாயத்திலும் நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார், இயேசு. அங்கும், அவர் சொல்பவை, அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.

 • நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
 • உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
 • உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
 • உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
 • என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்…

இயேசு கூறும் இத்தகையத் துன்பங்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக இன்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும்போது, இது என்ன நற்செய்தியா என்றுகூட கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவில் கொள்வோம். நற்செய்தி என்றால், இனிப்பான செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை நமக்குச் சுட்டிக்காட்டும் மருத்துவரை எதிரி என்றா நாம் கூறுகிறோம்? கசப்பான மருந்துகளைத் தரும் அவரை, நன்மை செய்பவர் என்று நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும், இவ்வுலகைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!

தொண்டர்களைத் தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும்போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து தொண்டர்களைத் திசைத்திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளையேக் காட்டுவர், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி, மாறுபட்ட வழி...

இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியில் இறுதி இரு இறைச்சொற்றொடர்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார், இயேசு. விசாரணைகளின்போது, “என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.” (லூக்கா 21: 14-15) என்று கூறுகிறார் இயேசு. நற்செய்தியின் இறுதியிலும், இயேசு, அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.” இயேசு கூறும் ‘உங்கள் வாழ்வு’ இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.

நாம் எல்லாருமே ஒருநாள் இவ்வுலகிலிருந்து விடைபெற வேண்டும். ஆனால், அது எப்போது என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு, மறுவுலக வாழ்வு நெருங்கிவருகிறது என்ற உண்மை, அவர்களுக்கு வரும் நோயால் உணர்த்தப்படுகிறது. அவ்வேளையில், அவர்களில் ஒரு சிலர் மிகுந்த தெளிவுடன் இவ்வுலக வாழவைக் குறித்து உன்னதமான உண்மைகளைக் கூறியுள்ளனர். மறுவுலக வாழ்வுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியர், இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலைக் கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்:
“உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்தவேண்டாம். நீங்கள் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். உண்மையான உறவுகள், ஏக்கம் தராது. நிறைவைத் தரும்."

பணம், புகழ் என்ற சக்திகள், தாங்கள் அழிவதோடு, இவ்வுலகையும் அழித்து வருகின்றன. இந்த சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதென்ற நம்பிக்கையோடு, உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இயேசுவுக்குச் சான்று பகர வாய்ப்பு!

சிறையில் சான்று பகர்ந்தவர்:
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததற்காக மறைப்பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்ட சிறையில் நாத்திகர், ஆத்திகர், கம்யூனிஸ்ட் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவதற்காக இருந்தார்கள்.

இன்னும் சில நாள்களில் தாங்கள் தூக்கிலிடப்படப் போகிறோம் என்பதை நினைத்து, அவர்கள், சுவர்களில் அதிகாரிகளைப் பற்றி அசிங்க அசிங்கமாக எழுதி வைத்தார்கள். அதைப் பார்த்துவிட்டு மறைப்பணியாளர், “ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத் 10: 28) என்று எழுதிவிட்டு, அதற்குக் கீழ், யோவான் 3:16 இல் இடம்பெறும் இறைவார்த்தையை முழுவதுமாக எழுதி வைத்தார்.

எல்லாரும் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் அருகில் வந்த இளைஞன் ஒருவன், “இன்று மாலை நான் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட இருக்கின்றேன். கிறிஸ்துவைப் பற்றி அறியாத நான், சாவை எப்படி அணுகுவது என்று அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், கடவுள் பேரன்புமிக்கவர் என நீங்கள் எனக்குக் காட்டியிருக்கின்றீர்கள். இனிமேல் நான் சாவைத் துணிவோடு எதிர்கொள்வேன். நிச்சயம் உங்களை விண்ணகத்தில் சந்திப்பேன்” என்று கண்களில் நீர் மல்க சொன்னான்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்பணியாளர் நற்செய்திக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அங்கே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவரைப் பற்றி அறியாத ஒருவரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்து சேர்த்தார். பொதுக் காலத்தின் முப்பத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம், “இயேசுவுக்குச் சான்று பகர்வோம்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஒவ்வொரு சூழ்நிலையும் சான்று பகர வாய்ப்பு!
எருசலேமில் முதல் கோயிலைக் கட்டியவர் தாவீதின் மகனான சாலமோன். தாவீதுதான் ஆண்டவருக்கென முதன்முதலில் கோயிலைக் கட்ட நினைத்தாலும், அவர் போரில் மிகுதியான குருதியைச் சிந்தியதால், அவரால் கோயில் கட்ட முடியவில்லை (1 குறி 8:22). சாலமோனால் கட்டப்பட்ட எருசலேம் திருக்கோயில் பாபிலோனியப் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. அதன்பிறகு பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்கள் செருபாபேலின் தலைமையில் மீண்டுமாக அங்கே கோயிலைக் கட்டி, கி.மு. 515 ஆம் ஆண்டு, அதைப் புனிதப்படுத்தினர்.

இதன்பிறகு இதுமேயனாகிய ஏரோது மன்னன், யூதர்களை மகிழ்ச்சிப்பட்ட எருசலேம் திருக்கோயிலின் வேலையைத் தொடங்கினான். இது கோயிலைப் புதுப்பிக்கும் பணியே என்று திருவிவிலிய அறிஞர் சொல்வர். இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்டுகள் மொத்தம் 46. இக்கோயிலுக்கு வசதி படைத்தவர்கள் பொன், வெள்ளி என்று பலவற்றையும் நேர்ச்சையாகக் கொடுத்தார்கள். அவை கோயில் சுவரில் பதித்து வைக்கப்பட்டன. பெரிய உலக அதிசயம் போல் இருந்த இந்தக் கோயிலைப் பார்த்துவிட்டுத்தான் இன்றைய நற்செய்தியில் சிலர், வியந்து பேசுகின்றார்கள். அப்போதுதான் இயேசு அதன் அழிவைப் பற்றிப் பேசுகின்றார்.

இயேசு இவ்வாறு சொன்னதும், “இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறிகள் என்ன?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். போலி இறைவாக்கினர்கள் வருவார்கள், உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டே போகும் இயேசு, “என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் உங்களை இழுத்துச் செல்வர்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்” என்கிறார்.

எருசலேம் திருக்கோயிலுடைய அழிவின் பின்னணியில் இயேசுவில் பதில் இருந்தாலும், அது இறுதி நாள்களில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பதற்கான விளக்கமாக இருக்கின்றது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் சாதாரணமானவையாக இருக்கலாம். கிறிஸ்தவர்களைப் பொறுத்தளவில், அவை இயேசுவுக்குச் சான்று பகர்வதற்கான வாய்ப்பு. அதனால் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், இயேசுவுக்குச் சான்று பகர்வதை நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது.

எப்படிச் சான்று பகர்வது?
அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்லப்படுவது சான்று பகர்வதற்கான வாய்ப்பு என்று நற்செய்தியில் இயேசு சொல்கின்றார் எனில், இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுல், நாம் எப்படி இயேசுவுக்குச் சான்று பகர்வது என்பது பற்றிப் பேசுகின்றார்.

தெசலோனிக்கர்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் இருக்கின்றது என்று உழைக்காமல், சோம்பித் திரிந்தார்கள். அதைவிடவும் அவர்கள் மற்றவர்களுடைய வேலைகளில் தலையிட்டார்கள். இதை அறிந்த பவுல், அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று விளக்கம் கூறுகின்ற ஒரு பகுதிதான் இன்றைய இரண்டாம் வாசகம்.

“வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே” (மத் 10:10) என்ற இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில், மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்த பவுல், அவர்களிடமிருந்து உணவையும் வேண்டியதையும் பெற உரிமை உடையவர் என்றாலும், அவர் நற்செய்தி அறிவித்த நேரம் போக கூடாரம் செய்யும் வேலையைச் செய்து வந்தார் (திப 18:3). இவ்வாறு அவர் மக்களுக்கு முன்மாதிரி காட்டினார். அதனால்தான் பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தின் தொடக்கத்தில், என்னைப் போன்று ஒழுகுங்கள் என்கிறார். பவுல் இவ்வாறு சொல்லக் காரணம், அவர் மறு கிறிஸ்துவாக வாழ்ந்ததால்தான் (கலா 2:20; 1 கொரி 4:16,17). அதனால் நாம் எப்படிச் சான்று பகரவேண்டும் என்றால், இயேசுவைப் போன்று வாழ்ந்து, சான்று பகரவேண்டும்.

சான்று பகர்வோருக்கு கிடைக்கும் கைம்மாறு!
எல்லாச் சூழ்நிலையிலும் சான்று பகரவேண்டும், இயேசுவைப் போன்று வாழ்ந்து, சான்று பகரவேண்டும் என்பன பற்றிச் சிந்தித்த நாம், சான்று பகர்வோருக்குக் கிடைக்கும் கைம்மாறு என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.

ஆண்டவரின் நாளைப் பற்றிப் பேசும் இறைவாக்கினர் மலாக்கி, அந்நாளில் ஆணவக்காரர், கொடுமை செய்வோர் சுட்டெரிக்கப்படுவர் என்று சொல்லிவிட்டு, ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்மீது நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும் என்கிறார். ஆண்டவருக்குச் சான்று பகர்வோரை ஆண்டவரின் திருப்பெயருக்கு அஞ்சி வாழ்வோர் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அத்தகையோர் மேல் நீதியின் கதிரவனாகிய இயேசுவின் ஆசி என்றும் தங்கி இருக்கும்.

கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே இன்றும் பல இடங்களிலும் துன்புறுத்தல்களும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், அவையெல்லாம் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வதற்கான வாய்ப்பே. இதை உணர்ந்தவர்களாய் நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனைக்கு:
‘கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் அவரைப் பற்றி அறியாதவர்களுக்குச் சான்று பகரவேண்டும் என்றே கடவுள் விரும்புகின்றார்’ என்பார் பில்லி கிரகாம் என்ற மறைப்பணியாளர். எனவே, நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வாலும் வார்த்தையாலும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

வாழ்வின் மறுபக்கம்

சில ஆண்டுகளுக்கு முன் கவிதை ஒன்றை வாசித்தேன். கவிதையின் தலைப்பு 'மற்றும்.' அதை ஒரு டைரியில் குறிப்பும் எடுத்தேன். அந்த வரிகள் இவை:

'நாம் அனேகமாய்ப் பார்ப்பதில்லை - பார்த்ததில்லை
ஒரு சருகு இலையின் பின்புறத்தை
ஒரு மரப்பாச்சியின் பின்புறத்தை
ஒரு மலையின் பின்புறத்தை
ஒரு சூரியனின் பின்புறத்தை
மற்றும் நம்முடையதை'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பள்ளத்தாக்கின் அந்தப் பக்கத்திலிருந்து எருசலேம் ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும் அவர்களோடு சேர்ந்து கோவிலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்: 'என்னே கோவிலின் அழகு! என்னே கவின்மிகு கற்கள்! என்னே அழகு!' இயேசுவின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழ, அவர் உடனே திரும்பிப் பார்த்து, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்' என்கிறார்.

இது எப்படி இருக்கு தெரியுமா?
நம்ம வீட்டுல உள்ள ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு. அந்தக் குழந்தையைப் பார்க்க குடும்பத்தாரோடு நாம் செல்கிறோம். குழந்தையின் சிரிப்பு, நிறம், அழகு, மென்மை, முக அமைப்பு ஆகியவற்றை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் நேரம், நம்மோடு கூட்டத்தில் வந்திருந்த ஒருவர், 'இந்தக் குழந்தை ஒருநாள் இறந்துபோகும்!' என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அந்த மனிதரை எதிர்மறையாளர் என்றும், கோணல்புத்திக்காரர் என்றும் சாடுவதோடு, அவருடைய இருப்பை நாம் உடனே தவிர்க்க முயற்சிப்போம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் தவறில்லையே. பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்கத்தானே வேண்டும்!

'இந்தக் கோவில் இடிபடும்!' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'இந்தக் குழந்தை இறந்து போகும்' என்று அந்த நபர் சொன்ன போது ஏற்பட்ட அதிர்வையே இயேசுவின் சமகாலத்தவர்நடுவே ஏற்படுத்தியிருக்கும்.

நம்மிடம் ஒரு நாணயம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த நாணயத்தைக் கஷ்டப்பட்டு இரண்டாக உடைத்துவிடுகிறோம். அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றோம். நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் அருகருகே வைத்து பண்டமாற்றம் செய்ய முயல்கின்றோம். கடைக்காரர் நாணயத்தைச் செல்லாக்காசு என்கிறார். நாணயம் இரண்டு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டாலும் செல்கின்ற நாணயம் தங்க நாணயத்தைத் தவிர வேறு நாணயங்கள் இல்லை.

நாணயங்களின் மறுபக்கம் ஒருபக்கத்தோடு ஒட்டியிருந்தால்தான் நாணயத்திற்கு மதிப்பு.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டுணர அழைக்கின்றது.

இவர்கள் பேசுவதைக் கேட்க நமக்கு நெருடலாக இருக்கும். ஏனெனில், வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதும் நெருடலாகவே இருக்கும். ஆகையால்தான் பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கின்றோம். அல்லது தள்ளி வைக்கின்றோம்.

திருவழிபாட்டு ஆண்டின் ஏறக்குறைய இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். இன்றைய வாசகங்கள் வாழ்வின் முடிவைப் பற்றிப் பேசுகின்றன. வாழ்விற்கு முடிவு கிடையாது. மறுபக்கம்தான் உண்டு.

வாழ்வின் மறுபக்கத்தை எப்படிக் காண்பது?
இன்றைய முதல் வாசகம் (காண். மலா 4:1-2) மலாக்கி இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர்கள் நூலை நிறைவு செய்பவர் மலாக்கி. பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின், புதிய ஆலயம் கட்டப்பட்டதன் பின்புலத்தில், புதிய ஆலயத்தில் நிலவிய சமய சடங்குகளைக் கண்டிக்கின்ற மலாக்கி, வரப்போகும் மெசியா பற்றி முன்னுரைக்கின்றார். அந்த நாளை 'ஆண்டவரின் நாள்' என அழைக்கின்றார். அந்த நாளில் ஆண்டவர் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளித்து அமைதியையும் ஒருங்கியக்கத்தையும் மீண்டும் சரி செய்வார்.

இன்றைய முதல் வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், கடவுள் ஆணவக்காரரை அழிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கிறார் மலாக்கி. நெருப்பு என்ற உருவகத்தைக் கையாளும் இறைவாக்கினர், ஆணவக்காரர் அனைவரும் அந்த நெருப்புக்குள் தூக்கி எறியப்படுவர் என்று எச்சரிக்கின்றார். அவர்கள் வேர்களோடும் கிளைகளோடும் எரிக்கப்படுபவர். அதாவது, அவர்களில் ஒன்றும் மிஞ்சாது. உலகத்தின் முகத்திலிருந்து தீமை முற்றிலும் துடைத்து எடுக்கப்படும். இரண்டாவது பகுதியில், கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள் பெறும் பரிவைப் பற்றிச் சொல்கிறார் இறைவாக்கினர். 'நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் - அதாவது கதிர்களில் - நலம் தரும் மருந்து இருக்கும்.' இவரின் இறைவாக்குப் பகுதி மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரே நெருப்புதான். அது ஒரு பக்கம் ஆணவக்காரருக்கு அழிவாக இருக்கிறது. மறு பக்கம் நீதிமான்களுக்கு நலம் தரும் மருந்தாகவும், நீதியின் ஆதவனாகவும் இருக்கிறது.

வாழ்வில் எல்லாம் ஒன்றுதான். ஒரு பக்கம் அழிவு என்றால், மறு பக்கம் நலம். ஒரு பக்கம் தீமை என்றால், மறு பக்கம் நன்மை. இரண்டும் அப்படியே இருக்கும். இரண்டையும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 தெச 3:7-12) தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதி அறிவுரைப்பகுதியாக இருக்கிறது. பவுல் தெசலோனிக்காவில் நற்செய்தி அறிவிக்கின்றார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிப் போதிக்கின்றார். அவர் சென்ற சில மாதங்களில் அங்கே வருகின்ற வேறு சிலர் பவுல் அறிவித்த நற்செய்திக்குப் பிறழ்வான நற்செய்தி ஒன்றை அறிவித்து நம்பிக்கையாளர்களின் மனத்தைக் குழப்புகின்றனர். இவர்கள் இறுதிநாள் விரைவில் வருகிறது என்று அறிவித்ததோடு, 'இனி யாரும் வேலை செய்யத் தேவையில்லை. இருப்பதை அமர்ந்துகொண்டு உண்போம். அல்லது இருப்பவர்களிடம் வாங்கி உண்போம்' என்று சொல்லி எல்லாரையும் ஊக்குவிக்கின்றனர். ஆக, எங்கும் சோம்பல் பெருகுகிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றி அல்லது பயமுறுத்தி உண்கின்றனர். 'எல்லாமே அழிந்துவிடும். இனி எதற்கு வேலை செய்ய வேண்டும்?' என்று ஓய்ந்திருக்கின்றனர்.

இதை அறிகின்ற பவுல் இவர்களின் இச்செயலைக் கண்டித்துக் கடிதம் எழுதுகின்றார். முதலில், தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வை அவர்களுக்கு எடுத்தியம்புகின்றார்: 'உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல. மாறாக, எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டினோம்.' ஆக, பவுல், தனக்கு உணவை இலவசமாகப் பெற உரிமை இருந்தும் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்கிறார். இரண்டாவதாக, 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று தான் ஏற்கனவே கொடுத்திருந்த கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். இதன் வழியாக மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், மற்றவர்கள் ஏமாற்றப்படுவதையும் தடுக்கின்றார் பவுல். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்ற வேளையில் ஒழுக்கமான, நேர்மையான வாழ்வை வாழவும் வேண்டும் என்றும், கடின உழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் பவுல்.

ஆக, தங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை - அதாவது, உலக அழிவை - மட்டுமே கண்டு, வாழ்வின் மறுபக்கத்தை - உழைப்பை, அன்றாட வாழ்வின் இன்பத்தை - மறந்து போன தெசலோனிக்க நகர மக்களை வாழ்வின் மறுபக்கத்தையும் காண அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 21:5-19) எருசலேம் அழிவைப் பற்றி லூக்கா இரண்டாவது முறை பேசும் பகுதியாக இருக்கிறது (காண். 19:43-44). எருசலேம் ஆலயத்தின் இறுதி அழிவு கி.பி. 70இல் நடந்தது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவு இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால்தான் என்று முந்தைய பகுதியில் மக்களை எச்சரிக்கிறார் லூக்கா. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில், வரப்போகும் தீங்கை முன்னுரைக்கின்ற இயேசு, அதை எதிர்கொள்ளத் தன் சீடர்களைத் தயாரிக்கின்றார். போலி மெசியாக்கள் தோன்றுவார்கள் என்றும், போர்களும், எதிர்ப்புக்களும், கொந்தளிப்புக்களும், கொள்ளை நோய்களும், பஞ்சமும், துன்புறுத்தல்களும், வருத்தங்களும், மறைசாட்சியப் போராட்டங்களும் வரும் என்றும் எச்சரிக்கின்றார் இயேசு.

இப்படி எச்சரிக்கின்ற இயேசு, 'நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்' என்றும், 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது' என்றும் நேர்முகமாக நம்பிக்கை தருகின்றார்.

இதுதான் இயேசு காட்டுகின்ற வாழ்வின் மறுபக்கம். வாழ்வின் ஒருபக்கம் துன்பம் என்றால், போராட்டம் என்றால், மறுபக்கம் இன்பம் அல்லது அமைதி உறுதியாக இருக்கும்.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டறிய மூன்று தடைகள் உள்ளன:

1. ஒற்றைமயமாக்கல்
வாழ்க்கை என்ற நாணயத்தை நாம் பல நேரங்களில் வலிந்து பிரிக்க முயல்கின்றோம். பிரித்து ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மற்ற பகுதியைத் தூக்கி எறிய நினைக்கிறோம். நன்மை, ஒளி, நாள் என சிலவற்றை உயர்த்தி, தீமை, இருள், இரவு ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால், இரண்டு பகுதிகளும் இணைந்தே வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும். இதையே சபை உரையாளர், 'வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: 'அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகின்றார்'' (சஉ 7:14). ஆக, வாழ்வின் இருபக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும். ஒரு பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியை விட வேண்டாம். ஏனெனில், சூரியனின் ஒரு பக்கம் ஆணவக்காரரைச் சுட்டெரிக்கிறது என்றால், அதன் மறுபக்கக் கதிர்களில் நேர்மையாளர்களுக்கான நலம் தரும் மருந்து இருக்கும்.

2. அவசரம் அல்லது சோம்பல்
ஒற்றைமயமாக்கலில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை வெறுத்து ஒதுக்குகின்றோம் என்றால், அவசரத்தில் மறுபக்கத்தை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவும் தவறு. எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பதற்காக பிறந்த குழந்தைகளைக் கொல்வது போன்றது அவசரம். எல்லாக் கட்டிடங்களும் ஒருநாள் இடிந்துபோகும் என்பதற்காக எல்லாக் கட்டிடங்களையும் இடிக்க நினைப்பது அவசரம். தெசலோனிக்கத் திருஅவையில் இதே பிரச்சினைதான் இருந்தது. 'கடவுள் வரப் போகிறார், உலகம் முடியப் போகிறது' என்ற அவசரத்தில், ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டுவிட்டு, ஓய்ந்திருந்தனர். அவசரத்துடன் சோம்பலும் வந்துவிடுகிறது. பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை யூகித்துக்கொண்டே விரக்தியும் அடைகிறோம். 'இது இப்படி ஆகுமோ? அது அப்படி ஆகுமோ?' என்னும் வீணான குழப்பங்களும் அவசரத்தின் குழந்தைகளே.

3. பயம்
இதைப் பற்றி இயேசு நற்செய்தி வாசகத்தில் அறிவுறுத்துகின்றார். மனித அல்லது இயற்கைப் பேரழிவுகள் பயத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய உடைமைகள் அல்லது உயிரும் பறிக்கப்படலாம். ஆனால், இந்தப் பயத்தைப் போக்க இயேசு நம்பிக்கையும் எதிர்நோக்கும் தருகின்றார்: 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது!' - ஒருநாள் தைராய்டு மாத்திரை எல்ட்ராக்சினை நிறுத்தினால், ஒருநாள் வேறு தண்ணீரில் குளித்தால், ஒரு நாள் ஷாம்பு மாற்றிப் போட்டால் தலைமுடி கொட்டுகிறது. ஆனால், இயேசு சொல்வது இந்த முடி கொட்டுவதை அல்ல. பயத்தால் ஒரு முடி கூட கொட்டாது. அல்லது பயம் நம் வாழ்வில் ஒரு முடியையும் உதிர்க்க முடியாது.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் பார்ப்பதற்குத் தடையாக இருக்கின்ற ஒற்றைமயமாக்கல், அவசரம்-சோம்பல், பயம் ஆகியவற்றை விடுத்தல் அவசியம்! இவற்றை விடுத்தலே ஞானத்தின் முதற்படி! இந்த ஞானத்தை அடைந்தனர் இயேசுவும் பட்டினத்தாரும்.

இவற்றை விடுக்கும் எவரும், வாழ்வின் இருபக்கங்களையும் கொண்டாட்ட முடியும். அந்தக் கொண்டாட்டத்தில் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்' (திபா 98:5) என்று பாட முடியும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மன உறுதியோடு வாழ்வைக் காத்துக்கொள்வோம் !

ஒரு பள்ளியில் கல்வி அலுவலரால் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியரின் வழிநடத்துதலின் பேரில் மற்றெல்லா ஆசிரியர்களும் அலுவலர்களும் தங்களுடைய எல்லா வேலைகளையும் செய்து எல்லா ஏடுகளையும் மிகத் தெளிவாக வைத்திருந்தனர். ஆயினும் எல்லாருக்கும் ஒருவித கலக்கம், தயக்கம்,படபடப்பு, பயம் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அவர்களுள் ஒரு ஆசிரியர் மட்டும் மிக இயல்பாக மிகத் தெளிவாக இருந்தார். அப்போது அவரோடு ஒரு மற்றொரு ஆசிரியர் உரையாடும் போது " என்னதான் எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும் ஆய்வு என்றாலே பயம் தான் " என்றார். அதற்கு அவர் "நாம் ஏன் பயப்பட வேண்டும். சரியாகச் செய்துவிட்டோம் என்ற தைரியத்தோடும் உறுதியோடும் நாம் இருப்பதை பிறர் உணர்ந்தாலே போதும் நம்மை கேள்வி கேட்க அவர்களே பயப்படுவார்கள் " என்று கூறினாராம்.

ஆம். இன்று நம்மில் பலரை ஆட்டிப்படைப்பது இந்த மன உறுதியற்ற நிலை. பயம் ,பதற்றம், படபடப்பு, கலக்கம், தயக்கம் என்பவை இதன் அறிகுறிகள்.ஆனால் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு மனஉறுதியோடு வாழ்வைக் காத்துக்கொள்ள நம்மை அழைக்கின்றார். மன உறுதி நம் வாழ்வில் எல்லா நிலைநிலைகளிலும் தேவையான ஒன்று. உலக வாழ்வில் மன உறுதி இருந்தால்தான் உலகத்தின் மாய வலைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆன்மீக வாழ்வில் மன உறுதி இருந்தால் தான் அலகையின் சோதனைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆனால் ஆன்மீக வாழ்வின் மன உறுதியே உலக வாழ்வில் நாம் மனஉறுதியோடு நிலைத்து நிற்க உதவும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த மனஉறுதி நாம் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே.
மேலும் இயேசு எப்பொழுதெல்லாம் நாம் திகிலுறாமல் மனஉறுதியுடன் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். போர்கள் எழும் போதும், இயற்கை சீற்றங்களின் போதும், போலி இறைவாக்கினர்களின் தப்பித போதனைகளைக் கேட்கும் போதும், நம்மை பிறர் இயேசுவின் பொருட்டு துன்புறுத்தப்படும் போதும் நாம் திகிலடையக் கூடாது என்று இயேசு கூறுகிறார். இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம் நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.

குறிப்பாக சில இடங்களில் கிறிஸ்தவ சமயத்தினர் பலர் இயேசுவின் பெயரால் துன்புறுத்தப்படுவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். கேள்வியுறுகிறோம். ஏன் நாளை நமக்குக் கூட இதே நிலை ஏற்படலாம். அத்தகைய தருணங்களில் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் நாம் இயேசுவுக்கு சான்று பகர்ந்தால் நமக்கு நிலைவாழ்வு நிச்சயம்.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் மேல் நீதியின் கதிரவன் எழுவான் என்கிறது முதல் வாசகம்.மானிட மகனுக்கு சான்று பகரும் போது தலைமுடி கூட கீழே விழாது என்கிறது நற்செய்தி வாசகம். இந்த இறைவார்த்தைகளை எல்லாம் நம் உள்ளத்தில் இருத்துவோம். மன உறுதியை வளர்த்துக்கோள்வோம். நிலைவாழ்வை காத்துக்கொள்வோம்.

இறைவேண்டல்
அன்பு தந்தையே இறைவா ! நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் மன உறுதியோடு வாழ்ந்து வாழ்வைக் காத்துக்கொள்ள வரமருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser