ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்குச் செல்வன் என்ற ஒரு மகன். செல்வன் வளர்பிறை போல் வளர்ந்தான். ஆனால் எந்த வேலையும் செய்வதில்லை. பணக்காரனுக்கு இறுதி காலம் நெருங்கியது. மகனை அழைத்து, மகனே! நமக்குச் செல்வம் மிகுதியாக இருப்பது உண்மைதான். ஆனால் உழைத்து சம்பாதிப்பதுதான் நம்மோடு தங்கும். எனவே சோம்பித் திரியாதே. உழைக்கக் கற்றுக் கொள். இந்த மூன்று நாட்களுக்குள் பத்து ரூபாய்க்கு இணையான சம்பாத்தியத்தைக் கொண்டு வரவில்லை என்றால் என் சொத்து முழுவதையும் தர்ம மடத்திற்கு எழுதிவிடுவேன் என்றார். மகனோ! தந்தையின் வார்த்தைக்குச் செவி கொடுக்கவில்லை.
ஆனால் தாயோ! தன் மகனை அழைத்து அப்பாவை பற்றி உனக்குத் தெரியாதா, சொன்னபடி செய்துவிடுவார். எனவே நீ சம்பாதித்து வருவது நல்லது என்றாள். தாய் சொல்லையும் கேட்கவில்லை. 50 தங்க நாணயத்தைக் கொடுத்து மலையடிவாரம் சென்று தூங்கிவிட்டு, சாயும் வேளையிலே நாணயத்தைக் கொண்டு வந்து கொடு மகனே என்று கெஞ்ச, இறுதியாக அப்படியே செய்தான் . தகப்பன் இருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு நெருப்புக்குள் எரிந்தான். நீ சம்பாதிக்கவில்லை. ஏனெனில் நீ உடுத்திய ஆடை அப்படியே உள்ளது. உன் தலை சீவிய நிலையிலும் மாற்றமில்லை. நீ திருடி வந்து விட்டாய் என்றார். மறுநாள் தாய், மகனை ஓடி வரச்சொன்னாள். மறுபடியும் நெருப்புக்குள் காசை எரிந்தான் தந்தை. நீ நாள் முழுவதும் உழைத்திருந்தால் உன்னால் இப்படி ஓடி வரமுடியாது. நீ தள்ளாடித்தான் வந்திருக்க முடியும் என்றான். தாய் தன் முயற்சியைக் கைவிடவில்லை. மகனை எப்படியாவது உழைத்து ஐந்து ரூபாய் கொண்டு வரும்படிச் செய்தாள். தகப்பனிடம் கொடுத்தான். நெருப்புக்குள் மறுபடியும் எரிந்தார். ஓடி உடனே காசை எடுத்தான் மகன். அப்போது தகப்பன் முதல் நாளும், இரண்டாவது நாளும் பேசாமல் நின்றாய். இன்றோ ஓடிப் போய்க் காசை எடுத்தாய். ஏனெனில் இது நீ உழைத்துச் சம்பாதித்தது. அன்றிலிருந்து மகன் உழைக்கத் தொடங்கினான். அவனுக்குத் தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தார்.
இந்தக் கதைபோல, இறைவன் உழைப்பவர்களுக்குப் பரிசளிக்கிறார். உழைப்பவனுக்கு மென்மேலும் கொடுக்கப்படும். உழைக்காதவனிடம் உள்ளதும் எடுக்கப்படும். உழைப்ப வர்களுக்கே ஊதியம் தருகிறார் இறைவன்.
சிலரைப் பார்த்துச் சற்று சிரித்தால் என்ன? என்று கேட்டால், வாய் வலிக்குமே என்று சொல்லும் அளவிற்குச் சோம்பேறித்தனம் இன்று தலைவிரித்தாடுகிறது.
நான் காயாக மாட்டேன். ஆனால் மரமே எனக்குக் கனி வேண்டும். இது விதையின் கதை.
நான் எரிய மாட்டேன். ஆனால் உலகமே எனக்கு ஒளி வேண்டும்.இது விளக்கின் கதை.
நான் உழைக்க மாட்டேன். ஆனால் இறைவா! எனக்கு உன்னருள் வேண்டும். ஒரு பக்தனின் கதை.
இப்படி முரண்பாடான தத்துவங்கள் இந்த இந்திய மண்ணிலே உள்ளன.
ஓர் அலுவலகத்தில் அதிகாரியைப் பார்த்து அவருடைய நண்பர், உங்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? எனக் கேட்டார். பதில் பாதிபேர். மீதிப் பேர்?
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி. மிஞ்சுவது பசி, பஞ்சம், கொலை கொள்ளை மதச் சண்டை, இனச்சண்டை ஜாதிச் சண்டை, லஞ்சம், பகை, பொறாமை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் பெற்றெடுப்பது சோம்பேறித் தனமே ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். நீதிமன்றங்கள் விலை போகின்றன. காவல்துறை தபால் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் நிலை என்ன? மூன்று வகையான கிறிஸ்தவர்களைப் பார்க்கலாம்.
அநீதியான சமுதாயத்தைப் பார்க்கும் கிறிஸ்தவம். பார்த்தும் ஒன்றும் செய்யாத ஊமையான கூட்டம்.
அநீதியான நிலையைப் பார்க்க விரும்பாத தான் தன் குடும்பம் என்ற குறுகிய உலகத்தில் ஒழிந்து கொள்ளும் கூட்டம்.
அநீதியான சமுதாயத்தைக் கண்டு வெகுண்டெழுந்து, ஊமையாய் இராது அதைச் சரிசெய்யப் புறப்படும் சமுதாயம். எதிலே நாம் உள்ளோம்.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடைகளைத் தந்துள்ளார். ஒரு சிலருக்கு எழுத்து மூலம் கருத்துகளை வழங்க. ஒரு சிலருக்குத் தலைமை ஏற்றுப் போராட்டம் நடத்த, ஒரு சிலருக்கு மேடை ஏறி முழங்க, ஒரு சிலருக்கு உதவி செய்ய, ஒரு சிலருக்குப் பிறரின் துன்ப துயரங்களைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டு ஆறுதல் கூற…
முயற்சி செய்வோம்
இன்றைய நற்செய்தியிலுள்ள ஓர் அழகான உவமையின் வழியாக நமக்குக் கடவுள் தந்துள்ள வரங்களையும், கனிகளையும் மூலதனமாக வைத்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிசெய்ய வேண்டும் என்ற உண்மையை இயேசு கற்பிக்கின்றார். வாழ்க்கையில் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். இந்த உண்மையை எடுத்துச் சொல்ல இதோ ஒரு கதை பரம ஏழை ஒருவர் ஒரு சாலை வழியே சென்றுகொண்டிருந்தார். ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்த ஒருவர் செத்த எலி ஒன்றை சாலையோரமாக எறிய வெளியே கொண்டுவந்தார். பரம ஏழை அதைப் பார்த்துவிட்டார். அதை எறிந்துவிடாதீர்கள். அதை என்னிடம் கொடுங்கள் என்றார் ஏழை. வீட்டுக்காரர் செத்த எலியை வாங்கி இவர் என்ன செய்யப்போகின்றார்? என்று தன்னையே கேட்டுக்கொண்டு எலியை ஏழையிடம் கொடுத்தார். அந்த ஏழை, எலி வேண்டுமோ எலி என்று சாலையிலே கூவிச்சென்றார். ஒரு வீட்டிலிருந்தவர்க்கு பூனைக்குப் போட எலி தேவைப்பட்டது! ஏழை, எலியை அந்த வீட்டுக்காரரிடம் விற்றார். விற்ற காசுக்கு அந்த ஏழை ஒரு தூண்டிலை வாங்கினார். அந்தத் தூண்டிலை வைத்து ஆற்றிலே மீன் பிடித்தார். பிடித்த மீனை விற்றார். விற்ற பணத்தில் கோழிமுட்டைகளை வாங்கி விற்றார். கிடைத்த பணத்திலே கோழிகள் வாங்கினார். கோழிகளை விற்ற பணத்தில் ஒரு சிறிய கோழிப்பண்ணை வைத்தார். நிறைய பணம் சேர்ந்தது; பெரும் பணக்காரரானார். தன்னிடமிருந்த பணத்தை வைத்து ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். அதில் ஏழைப் பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுத்தார்.
முயற்சி திருவினையாக்கும், உழைப்பால் உயரலாம் என்ற உண்மையை எல்லா மாணவ மாணவிகளுக்கும் கற்றுத்தரும்படி எல்லா ஆசிரிய, ஆசிரியைகளையும் கேட்டுக்கொண்டார். அந்தப் பள்ளிக்கூடம் ஒரு பல்கலைக்கழகமாக மாறியது நாடே அந்த ஏழையை, இல்லை, இல்லை அந்தப் பணக்காரரைக் கொண்டாடியது.
இந்தக் கதையின் கருவைத்தான், அதாவது முயற்சி திருவினையாக்கும் என்ற உண்மையைத்தான் இன்று இயேசு நமக்கு எடுத்துரைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகம் தன் வேலை அனைத்தையும் தானே செய்துகொள்ளும் மனையாளை நமக்குச்சுட்டிக்காட்டி, அவள் உழைப்பைப் பாராட்டுகின்றது.
முயற்சியின் ஆணிவேராக அமைவது உழைப்பு உழைக்கப் பயந்தவர்கள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. கடவுள் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஓர் உழைப்பாளியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆறுநாள்கள் உழைத்துவிட்டு, ஒருநாள் ஓய்வெடுத்தார். ஆகவே உழைக்காதவர்கள், முன்னேற முயற்சி செய்யாதவர்கள் கடவுளின் நண்பர்களாக இருக்க முடியாது!
அறிவுத்தெளிவு விழித்தெழுவோம்!
பெறுவோம் (இரண்டாம் வாசகம்),
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்: உழைப்பே உயர்வுதரும் என்ற உண்மைகளை உள்வாங்கி சிகரமென உயர்வோம்!
மேலும் அறிவோம்:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள்:616)
பொருள் முயற்சி மிகுந்தால் பல்வேறு செல்வங்களும் வந்து குவியும்; முயற்சி இல்லாது போனால் இல்லாமையுள் ஆழ்ந்து அழிய நேரும்.!
அமெரிக்க நாட்டவர் ஒருவர் கடவுளிடம் அறிவியல் மூளையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவ்வாறே ஜப்பான் நாட்டவர் ஒருவர் கடவுளிடம் தொழில்நுட்ப மூளையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஆனால் இந்திய நாட்டவர் கடவுளிடம் சென்றபோது கடவுள் அவரிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டற்கு அவர், "சும்மா வந்தேன்" என்றார். கடவுளும் அவரிடம், "அப்படியானால் சும்மாவே போ" என்றாராம்
இந்திய நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வல்லரசாக உருவாக வேண்டும் என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவு இருப்பினும் நம்மில் பலர் சும்மா இருந்துகொண்டு. உழைக்காமல் ஊதியம் பெற விரும்புகிறோம். தமிழக அரசு பல இலவசத் திட்டங்களை வகுத்து மேலும் மேலும் மக்களைச் சோம்பேறிகளாக மாற்றிக்கொண்டு வருகிறது என்று ஒருசிலர் ஆதங்கப்படுகின்றனர். தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அண்மையில் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு வேலை செய்யாமல் பிறர் வேலைகளில் தலையிட்டுக் கொண்டிருந்தனர். இப்பின்னணியில் திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார்: கிறிஸ்துவின் வருகை பேறுகால வேதனை போன்று திடீரென்று வரும் கிறிஸ்துவின் சீடர்கள் என்றும் விழிப்போடும் அறிவுத் தெளிவுடனும் இருக்க வேண்டும் (1 தொ 5:1- 6) அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்:"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" (2 தெச 3:10). எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு உண்ண உரிமை இல்லை. "சேற்றில் கால் வைக்காதவன் சோற்றில் கை வைக்கக் கூடாது" என்பது பழமொழி "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்பது திரைப்பாடல் வரி, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீனில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்பது பாரதியார் மொழி "செய்யும் தொழிலே தெய்வம்" என்பது பட்டுக்கோட்டையார் மொழி, இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து தாலந்து உவமையைக் கூறுகின்றார். ஒரு தாலந்து 10000 ரூபாய் மதிப்புள்ள பொன் நாணயம் தலைவரிடமிருந்து ஐந்து தாலந்து பெற்றவர் மேலும் ஐந்து தாலந்து ஈட்ட, இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டுகிறார். இருவரும் தங்களது தலைவரது பாரட்டுதலைப் பெற்றதுடன் பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் அதைக்கொண்டு இலாபம் ஈட்டாமல் அதை அப்படியே தலைவரிடம் திருப்பிக் கொடுத்தார். தலைவர் அவரைத் தண்டித்து, அவருடைய தாலந்தைப் பிடுங்கி, பத்து தாலந்து ஈட்டியவரிடம் கொடுக்கிறார்.
கடவுள் நமக்கு பல்வேறு தாலந்துகளை, அதாவது திறமைகளைக் கொடுத்துள்ளார். அவற்றை நமது நலனுக்காகவும் பொதுநலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தாத திறமைகள் காலப்போக்கில் அழிந்துவிடும். மணற்கேணியைத் தோண்டத் தோண்டத் தண்ணி ஊறும் அவ்வாறே கற்க கற்க நமது அறிவு வளரும்,
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு (குறள் 396)
சித்திரத்தை வரைய வரைய ஓவியக்கலை வளரும் பேச்சுப் போட்டியில் அடிக்கடி கலந்து கொண்டால் பேச்சுக்கலை வளரும், "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது முதுமொழி. ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு புல் மேய்வது போலப்படம் வரையச் சொன்னார். அவ்வாறே மாணவர்கள் படம் வரைந்து காட்டினர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் வெறும் பேப்பரை ஆசிரியரிடம் கொடுத்தான் ஆசிரியர் கோபத்துடன் அவனிடம், "மாடு எங்கே?" என்று கேட்டதற்கு "மாடு மேயப் போயிடுச்சு சார்" என்றான். "புல் எங்கே?" என்று கேட்டதற்கு, "மாடு மேய்ந்து விட்டது" என்றான். வடிகட்டிய முட்டாள் கடைந்தெடுத்த சோம்பேறி! திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நம்மிடம் கடவுள் கணக்கு கேட்கின்றார். நாம் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள திறமைகளை வளர்த்துள்ளோமா? நாம் நமது திறமைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பேதுரு நமக்கு அறிவுரை வழங்கியுள்ளார். "நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள் கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள் கொடைகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள். இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார் " (1 பேது 4:10-11). பெண்கள் தங்களைக் குறைவாக மதிப்பீடு செய்து தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். "நான் மயிலாகப் பிறந்திருந்தால் ஆடியிருப்பேன்; குயிலாகப் பிறந்திருந்தால் கூவியிருப்பேன். ஆனால் நான் பெண்ணாகப் பிறந்துவிட்டேன்; என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்கிறார் ஓர் இளம் பெண். ஆனால் இன்றைய முதல் வாசகம் வீரமிக்க ஒரு பெண்ணின் மனைவியின் பெருமையைப் பறைசாற்றுகின்றது. அப்பெண் எப்பொழுதும் அயர்வின்றி வேலை செய்கிறார். அவரால் அவரது கணவர் பெருமை அடைகின்றார் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உணவளிக்கிறார். அழகு நிலையற்றது. ஆண்டவரில் அச்சம் கொண்டுள்ள பெண்னே புகழத்தக்கவர். புகழ்மிகு மனைவியைப் பெறாத கணவர் தம் பகைவர்முன் ஏறுபோல் பீடுநடை போடமுடியாது என்கிறார் வள்ளுவர்.
புகழ்புரிந்த இல் இலோர்க்கு இல்லை
இகழ்வார்முன் ஏறுபோல்பீடுநடை (குறள் 59)
பெண்ணாகப் பிறப்பது சாபமல்ல, மாறாக பெரும் பேறு. பெண்ணாகப் பிறப்பதற்குத் தவம் செய்ய வேண்டும். ஏனெனில் பெண்களின் தாமரைக் கைகளால் தரணியில் அறங்கள் வளரும் பெண்கள் படித்துப் பட்டங்கள் பெறலாம்; சட்டங்கள் இயற்றலாம்; அறிவைப் பொருத்தமட்டில் பெண்கள் ஆண்களுக்கு எவ்விதத்திலும் இளைத்தவர்கள் அல்ல என்று பாடியுள்ளார் பாரதி
முடிவாக, கடவுள் நமக்குக் கொடுத்துள்ள திறமைகளைப் புதைக்காமல், அவற்றைப் பன்மடங்குப் பலுகச் செய்வோம். மனித உழைப்பின் பயனாள அப்பமும் இரசமும்தான் திருப்பலியில் கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக மாறுகின்றன. நமது வேலைகளைச் செவ்வனே செய்தால் கடவுள் இறுதி நாளில் நம்மைப் பார்த்து, "நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே விண்ணக மகிழ்ச்சியில் நுழைவாயாக" என்று கூறுவார்.
உழைத்திடு உயர்ந்திடு
“நான் ஏறிக் கொண்டே இருக்கின்றேன் எங்கே இருக்கிறது புகழின் சிகரம் இறைவா? நான் தோண்டிக் கொண்டே இருக்கின்றேன் எங்கே இருக்கிறது அறிவுப் புதையல் இறைவா? நான் நீந்திக் கொண்டே இருக்கின்றேன் எங்கே இருக்கிறது அமைதித் தீவு இறைவா? என் உழைப்பால், திறமையால், புகழின் சிகரத்தை, அறிவுப் புதையலை, அமைதித் தீவை அடைய வழிநடத்தும் இறைவா!" “அறிவியல் அறிஞர் டாக்டர் அப்துல்கலாம்.
புதிய பூமியைக் கண்டு பிடிக்கவேண்டும் என்ற இலட்சிய வெறியோடும், நண்பர்களின் துணையோடும் புறப்படுகிறார் கொலம்பஸ். பலநாள்கள் பயணம். எந்தத் தீவும் அவர் கண்ணில் படவில்லை. நண்பர்கள் தளர்ந்து திரும்பிவிட நினைக்கின்றனர். உணவுப் பொருள் கையிருப்பும் மிகவும் குறைந்துவிட்டது. இப்படியே போனால் புதிய பூமியைக் கண்டுபிடிக்க முடியுமோ என்னவோ, உறுதியாகத் தாயகம் திரும்ப முடியாது. சாக வேண்டியதுதான்.
“நம்மிடம் எவ்வளவு உணவு இருக்கிறது?” என்ற கேட்டார் கொலம்பஸ்”. “20 பேருக்கு 24 நாள்களுக்கு மட்டுமே போதும். இதை வைத்துத் திரும்பினால் நம் நாடு வந்து சேர முடியும்” என்றனர் நண்பர்கள்.
ஒரு கணம் சிந்தித்தார் கொலம்பஸ். “எனது ஒருநாள் உணவை நான் சேமித்தால் இன்னும் ஒரு நாள் பயணத்தைத் தொடரலாம் அல்லவா!” சொற்கள் நண்பர்களைத் தொட்டன. பயணம் தொடர்கிறது. அந்த ஒருநாள் பயணத்தின் முடிவில் அவர்களின் கண்கள் அமெரிக்காவைக் கண்டன; காலடிகள் அமெரிக்க மண்ணில் பதிந்தன.
இன்னும் கொஞ்சம் முயற்சி, இன்னும் கொஞ்சம் உழைப்பு, இன்னும் கொஞ்சம் ஈடுபாடு, இன்னும் கொஞ்சம் தியாகம்... இந்தத் தாரக மந்திரத்தைத் தனதாக்கிக் கொள்ளும் எந்த மனிதனும் மகத்தான சாதனையைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான்.
திறமைகள் இறைவன் மனிதனுக்கு அளித்த அரும்கொடைகள் அவற்றைக் கொாண்டு நாம் என்ன செய்கிறோம் என்பது மனிதன் இறைவனுக்குச் செலுத்தும் நன்றிப் பலிகள்!
What I am is God's gift to me and what I become is my gift to God.
திருத்தூதர் பவுல் குறிப்பிடுவது “போல “நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கு ஏற்ப வெவ்வேறு வரங்களைப் பெற்றுள்ளோம்” (உரோ. 12:6). வரங்களைத் தந்த கடவுளின் விருப்பத்திற்கேற்ப நம் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் ஆசை வேண்டும். ஆசைகள் நிறைவேற அருப்பணிப்பு வேண்டும். அதற்குக் “ கடின உழைப்பை விலையாகக் கொடுக்க வேண்டும்.
சிற்ப உலகின் மாமேதை மைக்கேல் ஆஞ்சலோ என்பதற்கு வத்திக்கானில் உள்ள சிற்பங்கள், ஒவியங்கள் இன்றும் கட்டியம் கூறுகின்றன. அவருக்கு ஆசிரியராக இருந்தவர் பெர்டோல்டோ தெ ஜொவான்னி. பதினான்கு வயதில் மைக்கேல் ஆஞ்சலோ மாணவனாகச் சேர்ந்தார். அப்போதே அவரிடம் வியத்தகு திறமைகள் வெளிப்பட்டன. பொதுவாகவே அரிய திறமை பெற்றவர்கள் எதிலும் கருத்தூன்றிச் செயல்பட மாட்டார்கள் என்பதை உணர்ந்த பெர்ட்டோல்டோ, மைக்கேல் ஆஞ்சலோவைப் பல நேரங்களில் எச்சரித்திருக்கிறார். ஒருநாள் திடீரென அவரே தன் சிற்பக் கலைக்கூடத்திற்குள் நுழைந்தார். மைக்கேல் ஆஞ்சலோ தன் தரத்துக்கும் கீழே ஒரு பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்ட பெர்ட்டோல்டோ சுத்தியலால் பொம்மையை ஓங்கி அடித்து உடைத்து உரக்கக் கத்தினார் “மைக்கேல் ஆஞ்சலோ, Talent is cheap, Dedication ia costly திறமை மலிவானது. அர்ப்பணிப்பு விலைமிக்கது"..
கடின உழைப்போடு கூடிய கையளிப்பு மட்டுமே கடவுளுக்கு மகிமை சேர்க்கும். மனிதனுக்குப் பெருமை சேர்க்கும் சமுதாயத்திற்கு வளமை சேர்க்கும். வெற்றி இனிப்பானது. அதன் இரகசியம் உப்புக் கரிக்கும் வியர்வையாகும்.
இன்றைய நற்செய்தியில் ஒரு தாலந்தைப் பெற்றவன் தான் பெற்றுக் கொண்ட பணத்துக்கு அடக்கச் சடங்கு நடத்துகிறான். அவன் புதைத்தது பணத்தை. மட்டுமா? தலைவன் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அல்லவா!
நற்செய்தியில் நமக்கு ஆறுதல் தருவது எதுவென்றால் உவமையின் தலைவன், ஐந்து தாலந்தைப் பத்தாக்கியயனை, இரண்டை நான்காக்கியவனைப் பார்த்து, “நன்று. திறமைமிக்க நல்ல ஊழியனே” என்றோ, “வெற்றி கண்ட வீரனே” என்றோ அல்ல, “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே”' என்றுதான் பாராட்டுகிறார்.
விசுவாசத்திற்குச் சான்று பகரும்போது வெற்றி. என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள பிரமாணிக்கமே - அதாவது நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதே கணக்கில் கொள்ளப்படுகிறது.
மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை. அந்த மூச்சிருக்கும்வரை மூயற்சி செய்து கொண்படிருப்பவனே மனிதன். முயற்சி செய்பவன் என்றால் சாதிப்பவன் என்று பொருள் ஆகாது.
முயற்சி இல்லாத சோம்பலே மனிதனுடைய எதிரி. தலைவர் அவனை “சோம்பேறியே””' என்கிறார் (மத். 25:26). ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டுமல்ல சோம்பேறி.
- இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் எதையும் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே! (ஒரு தாலந்தைப் பெற்றவனின் மனநிலை அச்சம்).
- இப்போது செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறப்பாகச் செய்வதற்கு உரிய திறனும் வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல்இருக்கின்றானே அவனும் சோம்பேறிதான்.
-செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருக்கும் அளவுக்கு வேறு எதையோ செய்து கொண்டிருப்பவனும் சோம்பேறியே!
சோம்பல் தலையாய பாவங்களில் ஒன்று. அது மட்டுமல்ல. பணத்தின் இயல்பு கூடத் தன்னிலே பெருகக் கூடியது. பலுகக் கூடியது. அதனால்தான் ஒளித்து வைத்திருக்கும் - கணக்கில் காட்டாத கருப்புப்பணம் கண்டனத்துக்குரியது. உன்னிடம் உள்ள பணம் தன்னிலே பலுகவில்லை, பெருகவில்லையென்றால் ஒன்றில் நீ மூட்டாளாக ஒருக்க வேண்டும். ஆன்றேல் ஒழுக்கம் வகட்டவனாக ஒருக்க வேண்டும். ஒரு தாலந்தைப் புதைத்து வைத்தவன் அதனால்தான் இயேசுவின் கண்டனத்துக்கு ஆளாகிறான். இருந்த ஒன்றையும் இழந்து ஒட்டாண்டியாக நிற்கிறான்.
உழைக்காதவனுக்கு ஊதியம் இல்லை என்பது மட்டுமல்ல தண்டனையும் கிடைக்கும். பயன்படாத இரும்பு பளபளப்பற்று மட்டுமா போகிறது? துருப்பிடித்தல்லவா அழிகிறது!
நம்மைப் படைத்த இறைவன் பல்வேறு வகைகளில் நமக்கு ஆசீர் அளித்துள்ளார். திறமைகளைக் கொடுத்துள்ளார். இந்த ஆசீரையும் திறமைகளையும் வைத்து நாம் “மிகுந்த கனி தர வேண்டும்” (யோ. 15:16). பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் வளங்களை, திறமைகளை வைத்து உழைத்து உயராமல் சோம்பலாய் வாழ்ந்துவிடுகிறோம். பயன்படுத்தப்படாத நிலம் தரிசாகிவிடும். பயன்படுத்தப்படாத இரும்பு துருப்பிடித்துவிடும்.
துருப்பிடித்துத் தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது! விழிகள் உறங்கினால் விடியல் இல்லை. செயல்கள் உறங்கினால் வெற்றி இல்லை. கற்பனை உறங்கினால் காவியம் இல்லை.
கடைநிலை ஊழியர் நிர்வாகியாதல்
அந்த நகரில் இருந்த பெரிய திரையரங்கு அது. அங்கே தூய்மைப் பணியாளர், துப்புரவுப் பணியாளர் - ஒருவர் இருந்தார். அவர் சரியான தோத்திற்கு வருவார்; தன்னுடைய பணிகளை மிக நேர்த்தியாகச் செய்வார். அத்தோடு நின்றுவிடாமல் திரையரங்கின் வாசலில் நின்றுகொண்டு காவலராகவும் பணிசெய்வார்.
அதே திரையரங்கில் நிர்வாகியாக இருந்த ஒருவர் அடிக்கடி வெளியே செல்வதும், நினைத்த நோரத்திற்குத் திரும்பி வருவதுமாக இருந்தார். ஒருநாள் தற்செயலாக அங்கே திரையரங்கத்தின் உரிமையாளர் வந்தார். அவர் வந்த நேரத்தில் நிர்வாகி அங்கு இல்லாததைக் கண்டு, திரையரங்கைக் காவல் காத்துக் கொண்டிருந்வரிடம் நிர்வாகியைப் பற்றிக் கேட்டார். அவர் திரையரங்கின் உரிமையாளரிடம் நிர்வாகியைக் பற்றிச் சொன்னார், அதைக் கேட்டு, திரையரங்கின் உரிமையாளர் மிகவும் சீற்றமடைந்தார்.
பின்னர் திரையரங்கின் உரிமையாளர் காவலரிடம், “நான் உன்னை இந்தத் திரையரங்கின் நிர்வாகியாக உயர்த்தினால், அந்தப் பணியைத் திறம்படச் செய்வாயா ?” என்று கேட்டதற்கு அவர், "கட்டாயம் செய்வேன்” என்று சொன்னதும், தூய்மைப் பணியாளராகவும் காவலராகவும் இருந்த அவர், திரையரங்கின் நிர்வாகியாக உயர்த்தப்பட்டார்.
நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகள் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனை நாம் உண்மையுடனும் நேர்மையுடனும் கண்ணியத்துடனும் விழிப்புடனும் அறிவுத் தெளிவுடனும் செய்கின்றபோது மிகவே உயர்த்தப்படுவோம். அதற்குச் சான்றாக இருப்பது தான் மேலே உள்ள நிகழ்வு. பொதுக் காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்” என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படி நம்முடைய நம்பிக்கை வாழ்வில். விழிப்போடும் அறிவுத் தெளிவோடும். இருக்கவேண்டும் என்பது பற்றி சிந்திப்போம்.
அ.நம்பிக்கைக்குரியவராய் இருத்தல்
ஏறக்குறைய பொதுக் காலத்தின் நிறைவுப்பகுதியை நாம் அடைந் திருக்கின்றோம். அடுத்த ஞாயிறு நாம் அனைத்திற்கும் அரசராம் நம் ஆண்டவர். இயேசு என்ற... பெருவிழாவைக் கொண்டாட இருக்கின்றோம். அதற்கு அடுத்த ஞாயிறு திருவருகைக் காலத்தை நாம் தொடங்க இருக்கின்றோம். அதனால் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையிலிருந்து ஆண்டவரின் நாளுக்காக நம்மையே நாம். எப்படித் தயார் செய்வது என்ற சிந்தனையைப் பெறுகின்றோம்.
'இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுள் ஏதாவது ஒரு தாலந்தைத் தந்திருக்கின்றார். அதாவது திறமையை அது அளவில் வேறுபடலாமேயானாலும், "கடவுள் யாருக்கும் தாலந்து கொடுக் காமல் இல்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற தாலந்து உவமையில் வருகின்ற மனிதர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கேற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு. இரண்டு தாலந்தும், வேறோருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கின்றார். இது கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாலந்தைக் கொடுக்கின்றார்; அவர் தாலந்தைக் கொடுக்காமல் யாரையும் படைக்கவில்லை என்ற உண்மையைத் தெளிவாக்குகின்றது.
கடவுள் நமக்குத் தாலந்துகளை அல்லது பொறுப்புகளைக் கொடுத்திருக்கும்போது, அவற்றிற்கு நாம். நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்பது அவசியம். ஏனெனில், நம்மை அழைத்துப் பொறுப்பில் அமர்த்திய வரும், தாலந்துகளைத் தந்தவருமான ஆண்டவர் நம்பிக்கைக்குரியர் (7 தெச 5:23). நம்பிக்கைக்குரிய ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்பதுதான் முறை.
ஆ. விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருத்தல்
தெசலோனிக்கத் திருஅவையாரிடம் இறந்தோரைப் பற்றி, அதிலும் குறிப்பாக கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக இறந்தவர்கள் அவர் வரும் போது நிலைவாழ்வில் பங்குபெறுவார்களா? என்ற கவலை நிறையவே இருந்தது. அதன் நிமித்தம் அவர்கள் மிகவும் துயருற்றார்கள். இதைப் பற்றி நாம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் சிந்தித்தோம். தெசலோனிக்கத் திருஅவையார் கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய ஐயத்தில் இருந்தபோதுதான் பவுல் அவர்களிடம் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவரின் நாள் வரும் என்கிறார். அதே வேளையில், “நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள். ஆகவே, மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்” என்ற நம்பிக்கைச் செய்தியைத் தருகின்றார். நம்மை அழைத்துப் பொறுப்பில் அமர்த்திய நம்பிக்கைக்குரிய கடவுளுக்கு நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும் என்று சிந்திப்போம். இப்படி நாம் கடவுளுக்கு நம்பிக்கைக் குரியவர்களாய் இருந்து, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கும். நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும் என்றால், நாம் ஒளியைச் சார்ந்தவர்களாய் கிறிஸ்துவின் வழியில் நடக்கவேண்டும். அதற்கு விழிப்பும் அறிவுத் தெளிவும் இன்றியமையாத
வையாக இருக்கின்றன.
இ. மக்கள் மன்றம் பாராட்டும்
“இவரை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை; நம்பாமல் கெட்டவர்கள் ஏராளமானபேர் உண்டு" என்று தமிழ் நாட்டை ஆண்டு வந்த ஒரு முதல்வரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. இவ்வார்த்தைகள் குறிப்பட்ட அந்த முதல் வருக்குப் பொருந்தகின்றனவோ, இல்லையோ கடவுளுக்கு முற்றிலுமாகப் பொருந்தும். ஏனெனில், கடவுளை நம்பிக் கெட்டவர் யாருமே இல்லை. நம்பிக்கைக்குரிய கடவுளை தம்பி, அவருடைய வழியில், ஒளியில் விழிப்போடும் அறிவுத் தெளிவோடும். நடப்போர் எத்தகைய ஆசிகளைப் பெறுவர் என்பதை இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நமக்குத் தெளிவாக எடுத்தியம்புகின்றன.. நீதிமொழிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல். வாசகம், திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைப் பற்றிப் பேசுகின்றது. இத்தகைய மனையாளைப் பெற்ற, கணவன் நலமும் வளமும் பெறுவான் என்று கூறுகின்ற இன்றைய முதல் வாசகம், இறுதியில், “அவளது. உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக” என்றும் கூறும் இவ்வார்த்தைகள் மனத்திடமுள்ள மனையாளுக்கு மட்டுமல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கைவைத்து வாழும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் தலைவர் தங்களிடம் கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பெருக்கிக் கொண்டு வரும் பணியாளர்களை நம்பிக்கைக்கு உரிய நல்ல பணியாளரே' என்று பாராட்டி, அவர்களை உயர்ந்த பொறுப்பில் அமர்த்துகின்றார். நம்பிக்கைக்குரியவராய் இல்லாமலும், ஒளியில் நடக்காமலும் இருந்த பணியாளரைத்தான் அவர் இருளில் தள்ளுகின்றார்.
ஆகையால், நாம் நம்மை அழைத்த ஆண்டவருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாய் இருந்து, விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் நடந்து கொள்கின்றபோது கடவுள் நம்மை மிகவும். உயர்த்துவார். அத்தகையவர்களாய் நாம் வாழ்வதற்கு அவரது ஆசியை வேண்டுவோம்.
சிந்தனைக்கு
கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏனோதானோ என்று எடுத்துக் கொள்ளக்கூடாது; ஏனெனில், அதுவே ஒருவருடைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாய் அமைகின்றது” என்று கூறுவார் ஜெரால்டு. ஐம்போல்ஸ்கி என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நம்பிக்கைக் குரியவர்களாய் இருந்து, அதனை உண்மையுடனும் நேர்மையுடனும் அறிவுத் தெளிவுடனும் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
ஏழையருக்கான 7-வது உலக நாள்
விண்ணரசுக்காகச் செயலாற்றுதல்
2017ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும், ‘ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிற்றை’ ‘அகில உலக ஏழையர் நாள் அல்லது ஞாயிறு’ எனக் கொண்டாட வேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார். நம் வீட்டின் வாசலில் விழுந்து கிடக்கும் ஏழை இலாசர்களைச் சற்றே அடையாளம் காணவும், நீதி நிலைநாட்டப்படாமல் ஏழ்மை அழிவதில்லை என நாம் கற்றுக்கொள்ளவும், ஏழ்மை சூழ்ந்த இவ்வுலகில் புதிய மறைத்தூதுப் பணி திட்டங்களை வரையறுக்க நம்மைத் தூண்டவும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது என்று இந்த நாள் பற்றிக் கூறுகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கே, ‘பொருளாதார ஏழ்மை’ என்பதே மையப்படுத்தப்பட்டாலும், நற்செய்தியின் அடிநாதமாக ‘ஏழ்மை’ அல்லது ‘எளிய உள்ளம்’ இருக்கிறது என்பது நமக்குப் புலனாகிறது.
முதலில், ‘பொருளாதார ஏழ்மை‘ என்பது ஒரு சார்பியல் வார்த்தை. அதாவது, ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தி நாம் ஒருவரை ஏழை என்றும், மற்றவரைப் பணக்காரர் என்றும் வரையறுக்கிறோம். என் பக்கத்து வீட்டுக்காரரோடு என்னை ஒப்பிட்டால் நான் அவரைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆனால், தூரத்தில் இருக்கிற உறவினரரோடு என்னை ஒப்பிட்டால் அவர் என்னைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆக, இதுதான் ‘ஏழ்மை’ என்பதை நாம் வரையறுத்துவிட முடியாது.
இரண்டாவதாக, ஒருவர் தன் ஏழ்மையை தன்னுடைய நிறைவு எனக் கருதலாம். எடுத்துக்காட்டாக, அருள்பணி மற்றும் துறவற நிலையில் நாம் ‘ஏழ்மை’ என்ற வாக்குறுதியை எடுக்கின்றோம். இங்கே, ‘ஏழ்மை’ என்பது ‘ஒன்றும் இல்லாத நிலையை’ அல்ல, மாறாக, ‘எல்லாம் பெற்ற நிறைவை’ அல்லது ‘பற்றற்ற நிலையைக்’ குறிக்கிறது.
மூன்றாவதாக, ஒருவர் தன்னிடம் உள்ளதை வைத்து நிறைவு பெறலாம். எடுத்துக்காட்டாக, குடிசை வீட்டில் வாழும் ஒருவர், தன்னிடம் உள்ளதே போதும் என்ற நிலையில் நிறைவுகொண்டு தன் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்யலாம். செல்வம் என்பது அவரைப் பொருத்தவரையில் சுமையாகத் தெரியலாம்.
ஏழ்மை பற்றிய புரிதலை வரையறுத்தல் அவ்வளவு எளிதன்று.
ஆனால், இந்த நாள் ‘ஏழையர் அல்லது ஏழ்மை‘ பற்றிச் சொல்வது என்ன?
ஒன்று, அனைவரும் செல்வத்துக்கென அல்லது பொருளாதாரத் தன்னிறைவுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். ஒரு ஊரில் உள்ள மாமரத்தில் 50 கனிகள் பழுக்கின்றன என்றால், அது அந்த ஊரில் உள்ள 50 பேருக்கும் உரியது. ஆனால், என்னிடம் ஏணி இருக்கிறது என்பதற்காக நான் 50 கனிகளையும் பறித்துக்கொண்டு, 49 கனிகளை எனக்கென வைத்துக்கொண்டு, ஒற்றைக் கனியை மற்ற 49 பேரும் பகிர்ந்துகொள்ளுமாறு சொல்வது நீதி அன்று. அப்படி நான் சொல்லும்போது, அவர்களுக்கு உரிமையான கனியை அவர்களிடமிருந்து பறிப்பதோடு அல்லது அவர்களுக்கு மறுப்பதோடு, இயற்கையின் நீதி மற்றும் சமநிலை குறையவும் நான் காரணமாகிவிடுகிறேன். ஆக, ஏழை இலாசர்கள் உருவாகக் காரணம் வீட்டின் உள்ளே அமர்ந்து விருந்துண்பவர்களே. ஏனெனில், இயற்கைத் தாய் தன் பிள்ளைகள் யாரும் ஏழ்மையில் வாடுவதை விரும்புவதில்லை. எந்த அணிலாவது ஏழ்மையில் இறப்பதுண்டா? எந்தக் கிளியாவது ஏழ்மையால் உயிரை மாய்த்துக்கொள்வதுண்டா?
இரண்டு, ஏழ்மை என்பது ஒருவரின் பாவத்தாலும் சாபத்தாலும் வருவது என்ற புரிதலை நாம் மாற்ற வேண்டும். ‘ஆண்டவரை நம்புகிறவனோ செழிப்பான்’ என்ற இறைவார்த்தை ஆபத்தானது. ஏனெனில், செழிப்பாய் இருப்பவர்கள், தங்களை நினைத்துப் பெருமிதம் கொள்ளவும், தங்கள் செல்வம் கடவுள் தங்களுக்கு அளித்த ஆசீர் என்றும், ஏழையர்கள் கடவுளின் சாபத்துக்கு ஆளானவர்கள் என்றும் தவறான புரிதல் கொள்ளச் செய்கிறது. தன்னை நம்புகிறவர்களைக் கடவுள் செழிப்பாகவும், தன்னை நம்பாதவர்களைக் கடவுள் ஏழையராகவும் ஆக்குகிறார் என்று நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு தாய் தன்னைப் பாராட்டும் தன் மகளுக்கு வளமையும், தன்னை வெறுக்கும் தன் மகளுக்கு வறுமையையும் தருவாளா? இருவரும் எப்படி இருந்தாலும் இருவருமே தாய்க்குப் பிள்ளைகள்தாமே.
மூன்று, ஏழையர் ஏழையராக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய சோம்பல் என்ற எண்ணத்தை நாம் களைய வேண்டும். ஒருவரின் கடின உழைப்பு அவரை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், உழைக்கிறவர்கள் எல்லாம் உயர்வடைவதில்லை. உயர்வடைபவர்கள் எல்லாம் உழைப்பதில்லை. சில நேரங்களில் மனிதர்களின் இயலாமை, சூழல், வாய்ப்பின்மை, திறன் பற்றாக்குறை போன்றவை நம் உழைப்புக்கேற்ற பலனை நாம் அனுபவிக்க இயலாமல் செய்துவிடலாம். இன்னொரு பக்கம், குடிமை அரசு தன் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து ஏழ்மையை விரட்டுவதை விடுத்து, ஏழையரை அழிக்கும் நோக்குடன் வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது தவிர்க்கப்பட வேண்டும். கடினமான உலகில் போட்டி போடுவது ஏழையருக்கு இயலாதது ஆகிவிடுகிறது.
இன்று நாம் சாலைகளில் வேகமாகச் செல்லும்போது கொஞ்சம் நின்று பார்த்தால், எவ்வளவோ வகையான ஏழ்மையை நாம் அடையாளம் காண முடியும்: பசி என்னும் ஏழ்மை, வேலையின்மை என்னும் ஏழ்மை, தாழ்வு மனப்பான்மை என்னும் ஏழ்மை, வீடின்மை என்னும் ஏழ்மை, உறவுகளின்மை என்னும் ஏழ்மை, நம்பிக்கையின்மை என்னும் ஏழ்மை எனப் பல இனியவர்களை நாம் கடந்துசெல்கின்றோம். அல்லது நாமே இம்மாதிரியான ஏழ்மை நிலைகளில் இருக்கிறோம். ஒரு நிமிடம் நான் நின்று, ‘இவன் ஏன் இப்படி இருக்கிறான்? இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று நம்மை இந்த நாள் கேட்கத் தூண்டினால், இந்த நாளைக் கொண்டாடுவது பொருளுள்ளதாகும்.
‘ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே!’ (காண். தோபித்து 4:7) நூலின் வாக்கியத்தை மையமாக வைத்து இந்த ஆண்டுக்கான செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழ்மையை நாம் கொண்டாட வேண்டாம், ஆனால், ஏழையரைக் கொண்டாடுவோம். ஏனெனில், ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைவுக்கான, வளர்ச்சிக்கான, செயலாற்றுதலுக்கான தீப்பொறி இருக்கிறது என்று சொல்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 25:14-20), விண்ணரசு பற்றிய இன்னொரு எடுத்துக்காட்டைத் தருகிறது. கடந்த வாரம், பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு வழியாக, விண்ணரசுக்கான விழித்திருத்தல் பற்றிச் சிந்தித்தோம். இந்த வாரம், தாலந்து உவமை வழியாக, விண்ணரசுக்கான அல்லது விண்ணரசுக்காகச் செயலாற்றுதல் பற்றிச் சிந்திப்போம். ‘தாலந்து உவமை’ என்பது விண்ணரசு பற்றிய உவமையே தவிர, அது நம் ‘டேலன்ட்கள்’ (‘திறன்கள்’ அல்லது ‘செயல்திறன்கள்’) பற்றிய உவமை அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஒரு தாலந்து’ என்றால் ‘6000 தெனாரியம்’. ஒரு தெனாரியம் என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. ஒருநாள் கூலி ஒருவருக்கு நூறு ரூபாய் என்றால், ஒரு தாலந்து என்பது 6,00,000 ரூபாய். ஒரு பெரிய தொகைதான். இது பெரும்பாலும் வெள்ளி அல்லது ஏதாவது ஒரு உலோகத்தால் நிறுத்துக் கொடுக்கப்படும். இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் நெடும்பயணம் மேற்கொள்ளும் வீட்டுத் தலைவர் பொதுவாக, தன் சொத்துகள் அல்லது உடைமைகள் அனைத்தையும் பணமாக்கி, அவற்றைப் பணியாளர்களிடம் கொடுத்துச் செல்வது வழக்கம். ஏனெனில், நெடும்பயணத்தில் பலர் இறந்துபோவதும், அல்லது மறைந்துபோவதும், அல்லது காணாமல்போவதும் உண்டு. ஒருவேளை தலைவர் வீடு திரும்பினால் தன் சொத்துகள் அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வார். அவற்றைப் பேணி வளர்த்த தன் பணியாளர்களுக்கு சில அன்பளிப்புகள் வழங்குவார். ஒவ்வொரு பணியாளரின் தகுதிக்கேற்ப தலைவர் பிரித்துக்கொடுப்பது வழக்கம்.
இந்தப் பின்புலத்தில்தான், ஒருவருக்கு ஐந்து, இன்னொருவருக்கு இரண்டு, இன்னொருவருக்கு ஒன்று என்று தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. ‘அவரவர் திறமைக்கு ஏற்ப’ பிரித்துக்கொடுக்கிறார் தலைவர். ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்கள் வாணிகம் செய்து அவற்றை இரட்டிப்பாக்குகின்றனர். மூன்றாமவர் தான் பெற்ற தாலந்தை நிலத்தில் புதைத்து வைக்கிறார். பாலஸ்தீனத்தில் சொத்துகளை நிலத்தில் புதைத்து வைப்பதும் வழக்கம். திருட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் வீட்டருகிலோ அல்லது தங்கள் வயலிலோ அவற்றைப் புதைத்து வைப்பர். புதைத்து வைப்பதோடு அவற்றின் மேல் அவர்கள் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்றாமவர் தன் தலைவரின் வயலிலேயே புதைத்து வைத்திருக்கலாம். புதைத்து வைத்து அதைப் பேணிக் காத்ததோடு தன் பணிகளைச் செய்வதில் மும்முரமாய் இருந்தார். முதல் இரண்டு நபர்களும் தலைவரிடமிருந்து பரிசு பெற, மூன்றாம் நபரோ தண்டனை பெறுகின்றார்.
1. விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?
முதலில், விண்ணரசின் தலைவர் பற்றி உவமை சொல்வது பின்வருமாறு:
(அ) தலைவர் தான் விரும்பியதை, விரும்பியவர்க்குக் கொடுக்கிறார்.
ஆக, கடவுள் இதை ஏன் செய்கிறார், இதை ஏன் இவருக்குச் செய்கிறார் என்று நாம் அவரிடம் எதுவும் கேட்க முடியாது. நம் கையில் இருக்கும் தாலந்து அவரது விருப்பத்தால் நம் கைக்கு வருகிறது. விண்ணரசில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர் அவரே.
(ஆ) தலைவர் தான் விரும்பிய நேரத்தில் திரும்புகிறார்.
வீட்டுத் தலைவர் இந்த நேரத்தில் வர வேண்டும் என்று சொல்ல பணியாளர்களுக்கு உரிமை இல்லை. பணியாளர்கள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் பணியாளர்கள், அவர் தலைவர்.
(இ) நிகழ்வுகளையும் செயல்களையும் மதிப்பிடும் வரையறைகளை வகுப்பவர் தலைவரே
‘நீ ஏன் வட்டிக்குக் கொடுக்கவில்லை?’ என்று கேட்பவரும், ‘உள்ளவருக்கும் இன்னும் அதிகம், இல்லாதவருக்கு ஒன்றும் இல்லை’ என்று விதியை மாற்றி எழுதுபவரும் தலைவரே.
ஆக, விண்ணரசின் தலைவராக இருக்கின்ற கடவுள் தான் விரும்பியதைச் செய்கிறார், விரும்பிய நேரத்தில் வருவார், விரும்பியவாறு நம்மை மதிப்பிடுவார்.
இரண்டாவதாக, விண்ணரசின் பணியாளர் பற்றி உவமை சொல்வது பின்வருமாறு:
(அ) தானே செயலாற்ற வேண்டும்
பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் செயல்களைத் தாங்களே நிர்ணயிக்க வேண்டும். வாணிகம் செய்வதும், வட்டிக்கு விடுவதும், நிலத்தில் புதைப்பதும் பணியாளர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது. பணியாளர்களின் விருப்புரிமை மற்றும் கட்டின்மையை (சுதந்திரம்) இது குறிக்கிறது.
(ஆ) தலைவர் விருப்பம் அறிந்து செயலாற்ற வேண்டும்
மூன்று பணியாளர்களும் தலைவரின் விருப்பம் மற்றும் அவருடைய குணநலன்களை அறிந்துள்ளனர். ஆனால், முதல் இரண்டு பேரும் அந்த அறிவின்படி செயலாற்றுகின்றனர். மூன்றாம் நபரோ அறிவதோடு நிறுத்திக் கொள்கிறார். செயலாற்ற மறுக்கிறார். அல்லது தன் தலைவர் பற்றிய தவறான அறிவைக் கொண்டிருக்கிறார்.
(இ) தலைவர் வரும்வரை செயலாற்ற வேண்டும்
இன்று அல்லது நாளையோடு நான் என் வேலையை நிறுத்திக்கொள்வேன் என்பது சாத்தியமல்ல. தலைவர் வரும் வரை பணியாளர்கள் செயலாற்ற வேண்டும்.
ஆக, விண்ணரசில் பணியாளர்கள் என்ற நிலையில் இருக்கின்ற நாம், தலைவரின் விருப்பம் அறிந்து தொடர்ந்து செயலாற்றினால்தான் அவரிடமிருந்து பரிசில் பெற முடியும்.
மூன்றாவதாக, விண்ணரசுக்காக எப்படிச் செயலாற்றுவது?
(அ) சிறியவற்றில்தான் பெரியவை அடங்கியுள்ளன என அறிவது
‘சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவர்.’ ‘எண்ணி அறியக் கூடிய ஒன்றில் – பணம், நேரம் – நம்பிக்கைக்குரியவர், எண்ணி அறிய இயலாதவற்றிலும் – உறவு, நட்பு, பிரமாணிக்கம், நற்பண்பு – நம்பிக்கைக்குரியவர். ஆக, சின்னஞ்சிறிய வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பது, சின்னஞ்சிறியவற்றில் நன்முறையில் செயலாற்றக் கற்க வேண்டும். ‘சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்’ (சீஞா 19:1). இன்றைய முதல் வாசகம் (காண். நீமொ 31), சிறியவற்றில் – உழைப்பதில், நூல் நூற்பதில், வியாபாரம் செய்வதில், எளியவருக்கு உதவுவதில், ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் – நம்பிக்கைக்கு உரியவராய் இருக்கும் நன்மனையாளை நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது.
(ஆ) தவறான முற்சார்பு எண்ணங்களைக் களைவது
தன் தலைவரின் கடின உள்ளம் பற்றிய முற்சார்பு எண்ணம் கொண்டிருந்ததால் மூன்றாவது பணியாளர் செயலாற்ற மறுக்கிறார். கடவுள், உலகம், மனிதர்கள், உறவுகள் பற்றிய முற்சார்பு எண்ணங்களை நாம் களைய வேண்டும். தலைவர் கடின உள்ளம் கொண்டவர்தான். ஆனால், நான் செயலாற்றுவேன் என நினைப்பது நன்று.
(இ) வாழ்வின் உறுதியற்ற நிலையைக் கொண்டாடுவது
திருடன் வருவது போல, கருவுற்ற பெண்ணுக்கு வலி வருவது போல ஆண்டவரின் வருகை இருக்கும் எனச் சொல்கிறார் பவுல் (காண். இரண்டாம் வாசகம்). வாழ்வின் உறுதியற்ற நிலையை நினைத்து நாம் அச்சம் கொள்ளக் கூடாது. ‘இறப்பைக் கண்டு அவர் அஞ்சவும் இல்லை. வாழ்வதற்கு அவர் தயங்கவும் இல்லை’ என்று புனித தூரின் நகர் மார்ட்டின் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. இறப்பும் வாழ்வும் உறுதியற்ற இரு துருவங்கள். ஆனால், இரு துருவங்களையும் இணைத்துக் கொண்டாடுதல் இனிமை.
இறுதியாக,
இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 128), ‘உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!’ என நம்மை வாழ்த்துகிறது. இவ்வார்த்தைகளைச் சொல்லி நாம் ஒருவர் மற்றவரை வாழ்த்தினால், ஏழ்மை மறையும். ஏனெனில், ‘சீயோனிலிருந்து நமக்கு ஆசி வழங்குபவர் ஆண்டவரே!’ (காண். திபா 128:5).
தட்டிக் கேட்க ஆள் உண்டு!தப்பிக்க வழி உண்டு!
தாலந்துகளை பன்மடங்காய் உயர்த்தும் உழைப்புண்டு
நீ யார் நான் யார் அவன் யார் இங்கு நாலும் தெரிந்தவன் யார் யார்?.. இது ஒரு கவிஞனின் வரிகள். வாருங்கள்
நற்செய்தி இன்று மூன்று விதமான மனிதர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றது. இதன்படி நமது அடையாளம் என்ன என்பதை யோசிப்போம். 1)வீட்டுத்தலைவன். 2)பெற்றுக்கொண்ட தாலந்துகளை இரட்டிப்பாக்கிய ஊழியர்கள். 3) பெற்றுக் கொண்ட தாலந்தை அதன் மதிப்பை உணர்ந்தவனாக, தலைவனுக்கு பயந்தவனாக, தலைவனுக்காக அதைப் பத்திரப்படுத்தி பாதுகாத்த ஊழியன்.
1)வீட்டுத் தலைவன் செய்தது என்ன?..
தன்னிடம் உள்ளதை எல்லாம் தன் ஊழியர்களுக்கு அவர் அவர் தகுதிகளுக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்து, நெடும் பயணம் - விடை பெற்றுச் சென்றான். யாருக்கு கொடுத்தான்?.... அவனோடு பயணித்து, வாழ்ந்து - அவன் செய்த அனைத்திற்கும் சாட்சிகளாக உடன் நின்ற; அவனுடைய நட்பிற்கும், கண்டிப்பிற்கும் கட்டுப்பட்ட ஊழியர்களிடம் - தன் உடமைகளை கொடுத்துச் செல்கிறான். (கவனிக்க இறைமகன் இயேசு இப்படித்தான் செய்தார்)
2)பெற்றுக் கொண்டதை இரு மடங்கு ஆக்கிய ஊழியர்கள்.
எபேசியர்4:1ல்- பவுல் அடிகளார் கூறுவார் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழுங்கள் என்று. கிறிஸ்துவின் மதிப்பீடுகளை இரட்டிப்பு ஆக்குவதை தவிர நமது அழைப்பு வேறு எதுவாக இருக்கும்?. அன்று பெற்றுக் கொண்ட தாலந்துகள் இரண்டு மடங்கானதே தலைவனுக்கு மகிழ்ச்சியையும் ஊழியர்களுக்கு தலைவனின் பாராட்டுகளையும் நம்பிக்கையையும் தந்தது. அது மட்டுமல்ல, அந்தத் ஒற்றைத் தாலந்தையும் அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள் என்ற சன்மானமும் கிடைக்கச் செய்தது. மத்தேயு நற்செய்தி 25:28
3).பெற்றுக்கொண்ட தாலந்தை பயன்படுத்தாத ஊழியன்
உலக வாழ்வில் இன்று நாம் காண்பது போல தலைவனை மட்டும் மையப்படுத்தி அவனுக்காகவும் அவன் உடைமைகளுக்காகவும் வாழ்ந்தால் தலைவனின் கோபத்திற்கும் அவன் தரும் தண்டனைக்கும் அன்று ஆளாக நேர்ந்து.. ஒரு தாலந்து பெற்ற ஊழியன் தலைவனுக்கு பயந்தவனாக பெற்றுக் கொண்டதை பாதுகாத்து வைத்தான்.(மத்தேயு25:26-28) அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் இருளில் தள்ளப்பட்டான்...
இன்று அனேகர் “தான் தன்” கடவுள் என்று சுயநலமாக தங்களை மிகைப்படுத்தி தனிமைப் படுத்துவதை நாம் காண்கின்றோம்.
அன்று ஒருதாலத்தை தனிமைப் படுத்தியதை தலைவன் ஏற்றுக்கொள்ளவில்லை இன்று ஆவியின் கொடைகள் பல என்று கொடுக்கப்பட்டும் நம்மை நாம் தனிமை படுத்துவதை இறை மகனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
தலைவனாக வாழ அனைவருக்கும் ஆசை உண்டு. இன்றைய சமுதாயத்தில் தனிமனிதன் ஒவ்வொருவர் உள்ளும் அவர்கள் இன்று எத்தகைய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அவர்களின் எதிர்நோக்கு அந்தப் பயணத்தில் தலைவனாக வேண்டும் என்பதே.
இன்றைய முதல் வாசகத்தில்:- நீதிமொழிகளில் வழியாக, ஒரு தலைவியின் பண்புகள், செயல்பாடுகள் கூறப்படுகின்றன. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகாலையில் அனைவருக்கும் முன் எழுந்து இரவில் அனைவரும் உறங்கிய பின் கடைசியாக உறங்க செல்பவளை வீட்டு தலைவி என்கிறோம். நீதிமொழிகளில்- எடுத்துக்காட்டப்பட்ட தலைவியின் வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரம் முழுவதும் தன் வேலை அனைத்தையும் அதற்குத் தேவையான பொருட்களையும் தேடித் தேடி விருப்புடன் தானே செய்பவள்.
(நீதிமொழிகள் 31:13) நூல் இழைகளைத் தன் விரல்களால் திரித்து மானம் காக்கும் ஆடையை உண்டாக்கி அணிவித்து மகிழ்பவள். (நீதிமொழிகள் 31:19)
எளியவனுக்கு உதவி செய்யவும் வறியவனுக்கு வயிறார உணவளிக்கவும் தன் கையை நீட்டுபவள். (நீதிமொழிகள் 31:20)
தன்னுடைய எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; என்பதை உணர்ந்தவளாக தன்னையே இழந்தவளாக ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணாக வாழ்கின்றதால் அவள் புகழத்தக்கவள் என வாழ்கின்றவள். (நீதிமொழிகள் 31:30)
இப்படிப்பட்டவளை மக்கள் மன்றம் பாராட்டுகிறது என்கிறது நீதிமொழிகள். 31:31. இந்த நீதிமொழிகளின் தலைவியின் குணங்கள் நமக்குள் இருக்கும்போது மக்கள் மன்றம் நம்மையும் பாராட்டும். பாராட்டுகளை யார் வேண்டாம் என்கிறார்கள் முயற்சிப்போமே.
ஆக, தலைவனாக தன்னை இழந்து, தகுந்ததை பிறரரோடு பகிர்ந்து, அறிவும் பாசமும் கொண்டு பயணித்தால் நாமும் மக்கள் மன்றம் பாராட்டும் தலைவர்கள்தான். நெடும் பயணம் சென்ற தலைவன் நெடும் காலம் கழித்து (நமது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை காத்திருந்து;) “ நீ யார் ?..” என்ற கேள்வியோடு நினையாத நேரத்தில் ஊழியர்கள் (நம்) முன் நிற்பார் - எனவே நாம் அனைவரும்,
நாங்கள் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள், இதோ நீர் தந்த தாலந்து எங்களுக்குள்ளும் எங்கள் அயலானோடும் இணைந்து இரட்டிப்பாக்கி ஐந்து- பத்தாக உயர்ந்ததை உம் முன் கொண்டு வந்துள்ளோம் என்று சொல்லும் விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் வாழும் மக்கள் எனச் சான்று பகர்வோம். (1 தெசலோனிக்கர் 5:5-6)
தலைவனின். நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே,. உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்"(மத்தேயு நற்செய்தி 25:23) என்ற அழைப்பிற்கு தகுதி உள்ளவர்களாக மாறுவோம்.
அச்சம் பயம் சோம்பேறித்தனம் ஆகிய வேண்டாத உணர்வுகளை- உறவுகளை விலக்குவோம். உற்சாகம் உழைப்பு உறுதி என்ற தாலந்துகளை கையெடுப்போம். நெடுங்காலம் கடந்து நமது வாழ்வின் முடிவில் வருபவனை இரு மடங்கு ஆக்கிய தாழ்ந்துகளுடன் இரு கரம்கூப்பி வரவேற்றிடுவோம்.
சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. என்கிறார் பவுல்
ஒளியோடு இணைந்து செயல்படுவோம் ஒளியின் மக்களாக. இறைமகனின் எதிர்பார்ப்புகளோடு- இணைந்து செயல்பட்டு இன்று அகிலத்துக்கு அதிகமாக தேவைப்படும் அவரது மதிப்பீடுகளை- தாலந்துகளை பன் மடங்கு உயர்த்தி மண் பயனுற மனிதத்தோடு செயல்படுவோம்.. (மத்தேயு நற்செய்தி 25:20-23)
இறைவன் நம்மோடு
உள்ளவர்களா..... இல்லாதவர்களா.... நாம் யார்?
ஒரு அலுவலகத்தில் மேலாளர் பொறுப்புக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இறுதித் தேர்வுக்கு இருவர் தகுதி பெற்றனர். இருவரும் தனித்தனியே அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்குமே ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்வி இதுதான்."ஒரு வேளை கம்பெனி நஷ்டத்திற்குள்ளாகி மூடப்பட வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வீர்கள்? " . முதலாமவர் கூறிய பதில் என்னவென்றால் இப்போது இருக்கும் போட்டி நிறைந்த உலகில் நட்டத்தை சமாளிப்பது சற்று கடுமையான காரியம்தான்.ஆயினும் நட்டத்திற்கான காரணம் என்னவென்று அறிந்து அதைத் திருத்தி கையில் இருக்கும் பணம், மூளையில் இருக்கும் அறிவு, நெஞ்சில் இருக்கும் தன்னம்பிக்கையைக் கொண்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்குவேன் " என எதார்த்தமாக பதிலளித்தார். இரண்டாமவரோ " முடிந்த அளவு முயல்வேன்" என்று கூறினார். முடியாவிட்டால் .....
என்று மீண்டும் கேட்டபோது அவரால் பதில் கூற முடியவில்லை.முதலாமவருக்கு வேலை கொடுக்கப்பட்டது. இருவருக்குமே முயற்சி செய்யும் மனம் இருந்தாலும் முதலாமவர் தன்னிடமுள்ளதைப்பற்றிய தெளிவான அறிவு கொண்டு அதை முதலீடு செய்யத் தயாராக இருந்தால் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது.
அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமை கொடுக்கப்பட்டுள்ளது. உவமையின் இறுதியில் உள்ளவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று இயேசு கூறுகிறார். இல்லாதவருக்குத் தானே கொடுக்க வேண்டும் என்று நாம் எண்ணலாம். ஆனால் இயேசு சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்.
கடவுள் நமக்கு கொடுத்த வாழ்வு ஒரு தாலந்து. அந்த வாழ்வை மெருகூட்ட நமக்கு பல திறமைகளை, வாய்ப்புகளை ,நேரங்களை, நம்முடன் வாழ்வோரின் உதவிகளை ,வழிகாட்டுதல்களை தாலந்துகளாகக் கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பயன்டுத்தினால்தான் வாழ்வு நிறைவடையும். இந்த வாழ்வின் நிறைவிலேதான் இறைவனும் நம்மோடு இணைந்து மகிழ்வார்.பயன்படுத்தா விடில் எல்லாம் வீணாய்ப் போகுமல்லவா!
ஆம். திறமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக இருக்கும். அதற்கேற்ப நாம் எடுக்கும் முயற்சிகள் தான் பலனைத் தரும். நமக்கு உழைக்கும் மனம் இருக்க வேண்டும். வளர்வதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். பாராட்டுகளோடு விமர்சனங்களையும் ஏற்கும் பக்குவம் இருக்க வேண்டும். தோற்றால் மீண்டும் முயலும் நம்பிக்கை இருக்க வேண்டும்.கடினமாக உழைக்கும் குணம் இருக்க வேண்டும். விருப்பு வெறுப்புகளைக் களையவும் மனம் வேண்டும். இவை எல்லாம் இருந்தால் நம் முயற்சிக்கான பலனோடு இறையாசிரும் சேர்த்து கொடுக்கப்படும். இதுவே இருப்பவனுக்கு கொடுக்கப்படும் என் வார்த்தையின் பொருள்.
இத்தகைய பண்புநலன்கள் இல்லாதவர்களுக்கு எத்தகைய திறமை இருந்தாலும் அது வீணே. அது இருந்தும் இல்லாததற்கு சமம். இதுவே இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்ற வார்த்தையின் பொருள். சிந்திப்போம். ஐந்து தாலந்தை பத்தாகவும் இரண்டை நான்காகவும் பெருக்கியவர்களைப்போல வாழப்போகிறோமா? அல்லது ஒற்றை தாலந்தை புதைத்தவனைப்போல வீழப்போகிறோமா?
நமக்கு தேவையானவை எல்லாம் இருக்கின்றன. நாம் உள்ளவர்கள் என்பதை உணர்வோம்.....செயல்படுவோம்....பலன் பெறுவோம்.....இறைவனை மாட்சி படுத்துவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எங்களுக்கு நீர் தந்தவை அனைத்தையும் உணர்ந்து இருக்கின்றவர்களாக வாழ்ந்து அவற்றை பயன்டுத்தி பலன் பெற்று வாழ அருள் புரியும். ஆமென்.
