லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு
ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணிடம், “நீ என் இதயத்தில் இருக்கிறாய்” என்றான். அதற்கு அவள் கூறினாள்: “செருப்பைக் கழட்டட்டுமா?" என்று கேட்டதற்கு அவன் கூறினான்: “என் இதயம் ஒரு கோவில் அல்ல; செருப்பைப் போட்டுக்கொண்டே உள்ளேவா.” ஆலயம் புனிதமானது; அதில் நுழையுமுன் மிதியடிகளைக் கழற்றிவிட வேண்டும். மோசேக்குக் காட்சியளித்த கடவுள் அவரிடம் கூறியது: "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” (விப 3:5). கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தைவிட தூய ஆவியார் குடிகொள்ளும் நமது உடல் தூயது என்னும் மையக்கருத்தை இன்றைய விழா எடுத்துரைக்கின்றது.
கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோமையில் வேதகலாபனை முடிவடைந்து கிறிஸ்தவர்களுக்கு மத சுதந்திரம் கிடைத்தது. அதற்கு உறுதுணையாய் இருந்தவர் மாமன்னர் கொன்ஸ்டான்டின். அவர் உரோமையில் லாத்தரன் மலையில் மாபெரும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். இந்த ஆலயமே எல்லா ஆலயங்களுக்கும் முதன்மையானதாகவும் அன்னையாகவும் திகழ்கிறது. கி.பி.324-இல் நவம்பர் திங்கள் 9-ஆம் நாள் சில்வெஸ்டர் என்ற திருத்தந்தை இந்த ஆலயத்தை நேர்ந்தளித்தார். 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த ஆலயம் திருமுழுக்கு யோவான் நினைவாக "ஜான் லாத்தரன் பேராலயம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் நேர்ந்தளிப்பை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் திங்கள் 9-ஆம் நாள் உலகெங்கும் திருச்சபை விழாவாகக் கொண்டாடுகிறது.
கடவுள் எல்லா இடங்களிலும் இருந்தாலும் அவரின் உடனிருப்பு ஆலயத்தில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கிறிஸ்து விண்ணகம் சென்றபின் திருத்தூதர்கள் "கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்" (லூக் 24:53). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து ஆலயத்தைக் தூய்மைப்படுத்துகிறார். அவர் தமது உடலை ஆலயம் என்று குறிப்பிடுகிறார். மத்தேயு நற்செய்தியில், "என் இல்லம் இறைவேண்டல் வீடு... ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்” (மத் 21:13) என்று கூறுகிறார். எனவே, ஆலயம் 'செப வீடு'; அங்கு நாம் சென்று கடவுளைப் புகழ வேண்டும் என்பது கிறிஸ்துவின் விருப்பம்.
இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: ஆலயத்திலிருந்து கிழக்கு நோக்கி வந்த தண்ணீர் நான்கு திசைகளிலும் பாய்கிறது; உப்பு நீரை நன்னீராக மாற்றுகிறது; உயிர்களை வாழ வைக்கிறது. மரங்கள் கனி கொடுக்கச் செய்கிறது. மரத்தின் கனிகள் உணவாகவும், இலைகள் மருந்தாகவும் பயன்படுகிறது (எசே 47:1-12). ஆலயத்திலிருந்து கடவுளுடைய அருள் நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. "எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்று நிம்மதியின்றிப் பரிதவிக்கும் இன்றைய மனிதர்களுக்கு ஆலயம் நிம்மதிதரும் இடம் என்பதில் ஐயமில்லை.
நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார். "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா" (1 கொரி 3:16). திருத்தூதர் பவுல் கொரிந்தியர்களுக்கு இந்த ஆழமான இறையியல் கருத்தைக் கூறுவதன் பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொரிந்து ஒரு துறைமுக நகரம்; ஒழுக்கச் சிதைவுக்குப் பேர்போன நகரம்; பரத்தைமை கொடிகட்டிப் பறந்த நகரம்; கொரிந்து பெண் என்றால் "விலை மகள்" என்று பொருள். காமம், களிநடனம் புரிந்த அந்நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு உடலின் மேன்மையை எடுத்துக்கூறி, உடல் கடவுளுடைய ஆலயம் என்பதை உணர்த்துகிறார். உடல் காமத்திற்கு அல்ல, மாறாக ஆண்டவருக்கு உரியது என்கிறார் பவுல். உடலில் 'சுகர்' இருந்தாலும் ஆபத்து; உள்ளத்தில் "பிகர்” இருந்தாலும் ஆபத்து. இன்றைய கலாச்சாரச் சீரழிவில் பெண் வெறும் "பிகராக" மட்டுமே கருதப்படுகிறாள். "பிகரு பிகருதான், சூப்பர் பிகருதான்" என்ற திரைப்படப் பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஓர் ஆங்கில ஆசிரியை மிகவும் கவர்ச்சியான உடையில் வகுப்பிற்கு வந்தார். ஏனெனில், "கிராமர் டீச்சர்” தேவை என்று விளம்பரம் செய்வதற்குப் பதிலாகக் "கிளாமர்” டீச்சர் தேவை என்று விளம்பரம் செய்து விட்டனர்.
இத்தகைய சூழலில், திருத்தூதர் பவுல் பெண்களுக்குக் கூறும் அறிவுரை: "பெண்கள் பின்னற்சடை, பொன், முத்து, விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணிசெய்து கொள்ளாமல், நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும்" (1 திமொ 2:9).
ஒரு பெண் அழகி; அவள் எப்போது பேரழகியாக மாறுகிறாள்? கோவலனை படுக்கை அறையில் மயக்கிய கண்ணகி அழகி. ஆனால் தனது கற்பால் மதுரையை எரித்த கண்ணகி பேரழகி. உதயகுமாரனை தனது அழகால் மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தனது தலையை மொட்டையடித்து, காவி உடை அணிந்து, கையிலே அமுதசுரபி ஏந்தி பசித்தீயை அணைத்த மணிமேகலை பேரழகி. பெண்கள் அநீதியை எரிக்கும்போதும் பசித்தீயை அணைக்கும்போதும் பேரழகிகள்!
ஒருவர் தன் நண்பரிடம், "நான் திருமணம் செய்ய எனக்கு அடக்கமான ஒரு பெண் தேவை” என்றார். நண்பர் அவரை கல்லறைக்கு அழைத்துச் சென்றார். ஏன்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "அடக்கமான பெண்கள் எல்லாம் கல்லறையில்தான் இருக்கின்றனர்.” ஆண்கள் பெண்களை வெறும் காமப் பொருளாகப் பார்க்காமல் அவர்களை "வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளர்களாகப்" (1 பேது 3:7) பார்க்க வேண்டும். பெண் வெறும் கள் அல்ல, மாறாக மாபெரும் காவியம். கள் குடிப்பவன் வாயில் நாறுகின்றது; காவியம் படிப்பவன் வாயில் மணக்கின்றது. அடக்கமே ஒருவரை விண்ணகம் சேர்க்கும்; அடங்காமை அவரை நரக இருளில் தள்ளிவிடும்.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)
கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில் (1கொரி 3:17).
ஆலயங்களே நீர்த்தேக்கங்கள்
லாத்தரன் பேராலயம் நவம்பர் 9
“நீர்த் தேக்கங்களே எனக்கு ஆலயங்கள்” என்று சொல்வாராம் மறைந்த பாரத இரத்னா நேரு பெருமகனார். சமூக நலச்சிந்தனை கலந்திருந்தாலும் சற்று நாத்திக வாடை வீசும் சொற்றொடர். நமக்கோ ஆலயங்களெல்லாம் நீர்த்தேக்கங்கள்!
எங்கும் பொழியும் இறைவனின் பேராற்றல் ஆலயத்தில்தானே தேக்கப்பட்டு மனித சமுதாய வயல்வெளியில் மடை திறந்துவிடப்படுகிறது! "அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்... தண்ணீர் கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது ... அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்... ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது...” (எசேக். 47:1-12).
ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Stone walls do not make a prison. கற்சுவர்கள் எல்லாமே சிறைச்சாலை ஆவதில்லை. கல்லோ, கற்சுவரோ உணர்ச்சியற்ற சடப்பொருள்களே. அந்த உணர்ச்சியில்லாத சடப் பொருள்களுக்கு உணர்வூட்டி உயிர்பெறச் செய்வது மனித உணர்வுகள், மனித நேயச் செயல்பாடுகள். கோயிலாவதும், வணிகக் கூடமாவதும் மனித எண்ணத்தாலேயே! அதுபோலக் கல்லும் மண்ணும், கம்பியும் சிமெண்டும் கட்டிடங்களை உருவாக்கலாம். கோவில்களை உருவாக்குவதில்லை. அப்படியென்றால் இறைவனின் உடனிருப்பை உணர்த்துவது எது? “இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடி இருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” (மத். 18:20). உடலைத்தான் மனிதன் பார்க்கிறான். ஆனால் இறைவனோ உள்ளங்களைப் பார்க்கிறார். மனித மனங்களை நோக்கித்தான் கடவுள் பயணிக்கிறார். மக்களின் தோழமை உணர்வுக்கும், சேவை மனத்துக்கும் அமைதி வாழ்வுக்கும் ஆலயங்கள் கட்டியம் கூறட்டும்.
"உள்ளம் பெருங்கோவில். ஊனுடம்பு ஆலயம்” இது எல்லாச் சமயங்களிலும் காணும் உணர்வே! இறைவார்த்தையின் ஒளியில் மட்டுமே இதற்கு அருத்தமும் விளக்கமும் காண முடியும். கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்றாலும் தூணையோ துரும்பையோ இறைவனின் ஆலயம் என்கின்றோமா?
கடவுள் வார்த்தையால் அனைத்தையும் படைத்தார். மனிதனையோ தன் ஆவியால் உருவாக்கினார். உயிர்மூச்சை ஊதிய அக்கணமே மனிதன் தூய ஆவியார் குடிகொள்ளும் கோவிலாகிவிட்டான். “நீங்கள் கடவுளின் கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1கொரி. 3:16) என்று கேட்கும் திருத்தூதர் பவுல் “உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்" (1 கொரி. 6:20) என்கிறார். புனித பவுலின் புரட்சிச் சிந்தனை நமக்கு விடுக்கப்படும் சவால்!
வரலாற்றுச் சிறப்புமிக்க இறைவனின் திருஉறைவிடமான லாத்தரான் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் புனிதர்கள் திருவிழாக்களைக் கூட அனுமதிக்காத வழிபாட்டுக் கால அட்டவணை லாத்தரான் பேராலய அர்ப்பணிப்பு விழாவிற்குச் சிறப்புச் சலுகை கொடுத்திருக்கிறது என்றால் அந்தப் பேராலயத்தின் முக்கியத்துவத்தை உணரலாம். கான்ஸ்டன்டைன் மன்னரால் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாத்தரான் குன்றின்மேல் எழுப்பப்பட்ட ஆலயம் அது. இந்த நாளில் இறைவழிபாட்டுக்காக நேர்ந்தளிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த பேராலயத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்தைப் பார்க்கலாம். "உரோமை நகரிலும் மற்றும் உலகமெங்கும் உள்ள கோவில்களின் தாயும் தலைமையும் லாத்தரான் பேராலயமே” என்பதுதான் அந்த வாக்கியம். உரோமை மறைமாவட்டத்துக்கும் அதன் ஆயரான திருத்தந்தைக்கும் முதன்மைப் பேராலயம் என்ற வகையில் இப்பேராலயயத்தை உலக ஆலயங்களின் தாய் என்றும், கத்தோலிக்கத் திருஅவையின் ஒற்றுமைக்கு அடையாளம் என்றும் கருதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
திருப்பாடல் 84இல் அதன் ஆசிரியர் ஆலயத்தை நினைந்து வியந்து பாடுகிறார். "படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது... உமது இல்லத்தில் தங்கி இருப்போர் நற்பேறு பெற்றோர். அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்".
எருசலேம் பேராலயத்தின் மீது இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள்! பாபிலோனில் சிறைப்பட்டிருந்த மக்களை மகிழ்ச்சிப் பாடல் பாடக் கேட்கிறார்கள். அடிமைத்தனத்திலிருந்து கொண்டு எப்படி இறைவனின் உறைவிடமாகிய சீயோனைப் பாடுவது என்று தயங்கிக் கொண்டே சொல்கிறார்கள் "எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! உன்னை நான் நினையாவிடில், என் மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில் என் நா மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக" (தி.பா. 137:5-6).
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. உண்மைதான். ஆனால் நம்மில் பலர் ஆலயம் தொழுவதோடு நின்று விடுகிறோம். ஆண்டவர் கோவிலில் மட்டும்தான் இருக்கிறார் என்று நினைக்கிறோம். இறைமக்களின் வளர்ச்சியே கோவிலின் பெருமை. இறைமக்களின் பலிவாழ்வின் அடையாளமே கோவில் என்ற எண்ணமே இல்லை. உலகப் பெருமையின் அடையாளங்களாக, சாதி இனப்பிளவின் சின்னங்களாக உள்ள கட்டடங்கள் எப்படிக் கோவிலாக முடியும்? அங்குமிங்கும் வானைச் சுரண்டி நின்று கொண்டிருக்கும் ஆலயங்கள் வருந்திச் சுமை சுமக்கும் மக்களே, என்னிடம் வாருங்கள்' என்று அழைக்கும் அமுத ஒலியை மக்கள் இதயச் செவிகளில் எழுப்பும் ஆற்றலை இழந்துவிட்டன.
வங்கக் கவி தாகூரின் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு மன்னன் கோடிக்கணக்கில் செலவழித்து அழகிய ஆலயத்தைக் கட்டினான். ஆனால் நரோட்டான் என்ற புனித துறவி அந்த ஆலயத்திற்குள் நுழையாமல் இருந்தார். அவரது அறப்போதனைகளைக் கேட்க வந்த மக்களும் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. இதைக் கேள்வியுற்ற அரசன் நரோட்டானைக் கோபித்தார். “ஆலயம் கட்டியதால் வசிக்க வீடின்றி எண்ணற்ற மக்கள் தவிப்பதற்கு நீயே காரணமாகிவிட்டாய்” என்று துறவி பதிலளித்தார். அரசன் சினமுற்றவனாய் துறவி நகரைவிட்டு வெளியேறும்படி கட்டளையிட்டான். “நீர் கடவுளையே இவ்வூரைவிட்டு எப்போதோ விரட்டிவிட்டீரே. அவர் பின்னால் நானும் செல்வது முறையே" என்று கூறிப் புறப்பட்டார் துறவி. ஆலயங்களைவிடப் புனிதமானது மனிதம்.
மக்கள் ஆலயத்துக்கு வருவது ஆண்டவனை வழிபடவா அழகுப்போட்டியில் கலந்து கொள்ளவா என்ற ஐயம் எழ பாரதிதாசன் பாடியதைக் கேளுங்கள். அதுவும் கிறிஸ்தவ ஆலயத்தை முன்னிறுத்தியே பாடுகிறார்.
தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு
விரல், தாள் என்ற எட்டுறுப்பும்
தங்கநகை, வெள்ளிநகை ரத்தினம் இழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே
கோவில் வர வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விஷமென்று கோவிலை
வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்கள்
நிலைகண்ட பாதிரி, பின் எட்டுறுப்பே யன்றி
நீள் இமைகள், உதடு, நாக்கு
நிறைய நகை போடலாம், கோவிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடி உண்டு என
இலைபோட்டு அழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார். இயேசுநாதர் மட்டும்
அங்கு வரவில்லையே இனிய பாரத தேசமே.
லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு (நவம்பர் 9)
திருவிழா பின்னணி
லாத்தரன் பேராலயமானது கான்ஸ்டன்டைன் மன்னனின் மாளிகையாக இருந்தது. தனது தாய் அரசி லெனின் வேண்டுகோளுக்கிணங்க, தனது மாளிகையைத் திருத்தந்தையின் இருப்பிடமாக மன்னர் அர்ப்பணித்தார். அதன் ஒருபகுதியை ஆலயமாகப் பயன்படுத்தச் செய்தார். முதலில் உலக மீட்பர் பேராலயம் என்று அழைக்கப்பட்டது. பிறகு தூய யோவானின் பேராலயம் என்று அழைக்கப்பட்டது. பலமுறை இடிக்கப்பட்டாலும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. உரோமை நகரில் முதன்முதலில் கட்டப்பட்ட ஆலயமாதலால், பேராலயமாகக் கருதப்படுகின்றது. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகியத் திருத்தந்தையின் சிம்மாசனம் இந்தப் பேராலயத்தில் அமைந்துள்ளது.
நம் உள்ளங்கள் இறைவன் வாழும் இல்லங்களாக வேண்டும்
இறைவனின் படைப்பில் எல்லாம் இனிமையே! படைப்பின் இறுதியில் அனைத்தையும் பார்த்து அவரே பரவசமடைகின்றார். எல்லாம் இனிமையாயினும் படைத்தவரின் பார்வையில் மனித இனம் இனிமையிலும் இனிமையே. எனவேதான் இயற்கையில் தனது இணையில்லா பிரசன்னத்தை வைத்த இறைவன், தன் இருப்பிடமாக மனிதனின் மனதை தேர்ந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் இறைவன் அவனோடு உறவாடுகிறார். உண்மை, அன்பு, நீதி போன்ற உயரிய பண்புகளிலிருந்து விலகிச் செல்கின்றபோதெல்லாம் நம்மில் வாழும் நம்மைப் படைத்தவன் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எச்சரிக்கைக் குரல கொடுக்கின்றார். ஆனால் பலநேரங்களில் நாம் கண்களிருந்தும் குருடர்களாக, காதுகளிருந்தும் செவிடர்களாக இறைவனின் வழியிலிருந்து இடறிவிழுகிறோம். பொறாமை, பேராசை, பெருமை, வஞ்சகம் போன்ற பொய்யுணர்வுகளால் நம்மை அலங்கரித்துக் கொள்கின்றோம். நம் ஆழ்மனதை ஆலயமாக்கி அங்கே தன் வாழ்விடத்தை அமைத்த ஆண்டவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி 235.ஆனந்தமடைகிறோம். அன்பு, பொறுமை, அறம், இன்னா செய்யாமை ஆட்சிபுரிய வேண்டிய நம் மனதைத் தீமைகளின் திருத்தலங்களாக்கி திருவிழா காணுகின்றோம். நன்மை நல்லாட்சி நடத்த வேண்டிய மனதைத் தீமைகளால் திருப்தி படுத்துகின்றோம். ஆனால் பல நேரங்களில் நமது பாதைத் தவறிய பயணங்கள், நமது பலவீனத்தாலும், வலுவின்மையாலும் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றோம்.
இச்சூழ்நிலையில் இன்றைய வழிபாடும், வாசகங்களும் நமக்களிக்கும் செய்தி, “ஏன் இறைவன் இல்லமாகிய உங்கள் உள்ளங்களை இப்படி கள்வர் குகையாக்குகின்றீர்கள்?" என்பது- தான். இன்று நாம் சிறப்பிக்கும் 'லாத்தரன் பேராலய அர்ப்பண விழாவானது" நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி, "திருமுழுக்கின் மூலம் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் ஆன்மா எனும் ஆலயத்தை ஏன் அலகையின் ஆட்சிக்கு உட்படுத்துகிறீர்கள்?" என்பதுதான்.
அலகையினால் அலைகழிக்கப்பட்டு சோர்ந்து போன நம்மைப் பார்த்து இயேசு கிறிஸ்து அழைப்பு விடுக்கின்றார்! "என் சிலுவை எனும் சாட்டையால் உங்களைச் சிறுமைபடுத்தும் பாவங்களைச் சிதறடித்தேனே, மீண்டும், மீண்டும் ஏன் சிறகொடிந்தப் பறவைகளாகப் பரிதவிக்கிறீர்கள்: வாருங்கள், வந்து எனது விலாவிலிருந்து வழிந்தோடும் குருதியினால் உங்கள் உள்ளங்களைக் கழுவுங்கள். ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மாவை அழகுபடுத்துங்கள்” என்கிறார். இவ்வாறு பாவங்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும்போது நம்மை மீட்ட இறைவன் நம் மத்தியில் பிரசன்னமாய் இருப்பார்.
“இஸ்ராயேல் மக்கள் பாவ வாழ்வை விட்டு இறைவனில் கட்டளைகளைக் கடைபிடிக்கும்போது அவர்கள் மத்தியில் என்றென்றும் பிரசன்னமாய் இருப்பேன் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவன் உறுதியளிக்கின்றார். பலிகளை அன்று, மாறாக இரக்கம் நிறைந்த உள்ளங்களையே நாடுகின்றேன் என்கிறார் ஆண்டவர். எனக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயமானது பலி செலுத்துவதற்காக மட்டுமல்ல மாறாக உங்களுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதற்காகவே” என்கிறார். ஒரே குடும்பமாக ஒன்று கூடி இறைவன் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி கூற அர்பப்ணிக்கப்பட்ட இடமே ஆலயம் என்று இறைவாக்கினர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஆனால் இஸ்ராயேல் மக்கள் பலிகளின் மூலம் படைத்தவரைப் பரவசபடுத்திவிடலாம் என்று எண்ணினார்கள். அன்பளிப்புகள் மூலம் ஆண்டவரை அடைந்து விடலாம் என்று பலிசெலுத்துவதிலேயே முனைப்புடன் செயல்பட்டார்கள். விளைவு, ஆலயம் இடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டார்கள். 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியவர்கள் நல்வழி வந்தபாடில்லை. மீண்டும் அதே நிலை. இயேசு வாழ்ந்த காலத்திலும் அதே நிலை தொடர்ந்தது. சொல்லப்போனால் இன்னும் மோசமாக இருந்தது. எனவேதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசு கோபம் கொண்டு பலி செலுத்த வைக்கப்பட்டிருந்த ஆடுகளையும், கன்றுகளையும், புறாக்களையும் அகற்றினார் என்று காண்கிறோம். பலி செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு யூதனுடைய கடமை. அப்படியிருக்கும்போது இயேசு ஏன் கோபப்படுகின்றார்? எனக்கு உங்கள் முதற்கனிகளை அர்ப்பணமாக்குங்கள் என்ற இறைவன் அவற்றை வெறுக்கக் காரணமென்ன?
ஒரு முறை எமது விவிலியப் பேராசிரியர் ஒருவர் எங்களுக்குக் கிறிஸ்மஸ், புத்தாண்டுச் செய்தி வழங்கியபோது சொன்ன வாக்கியமொன்று என்னை மிகவும் கவர்ந்தது. "Keep Christ in your celebration" என்பதுதான் அவ்வாக்கியம். அதாவது “உங்கள் விழாக்களில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை நீங்கள் உணர வேண்டும்” என்பதுதான் அதன் பொருள். விழாக்கள் நாம் நமது விசுவாசத்திலிருந்து விழாமல் இருப்பதற்காகதான். அன்று பாஸ்கா விழாவிலே தனது தந்தையின் பிரசன்னத்தை உணராதவர்களைக் கண்டு இயேசு கோபப்பட்டார். இன்றைய நற்செய்தியை ஆழ்ந்து வாசித்தால் மூன்று முக்கியமான காரணங்களுக்காக இயேசு கோபப்படுவதைக் காணலாம்.
1. 'கோயில் பூனை சாமிக்கு அஞ்சாது' என்பது சொல்வழக்கு. ஆனால் அன்றைய யூத மதக் குருக்களின் நிலையும் அதுதான். பலி செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு யூதனின் கடமை. ஆனால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடத்திலே பலி என்ற பெயரில் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். வழிபாடு என்ற பெயரில் வறுமையில் வாடிய மக்களை வதைத்தார்கள். இந்நிலையைக் கண்டுதான் இயேசு கோபப்படுகின்றார்.
2. இறைவன் பலிகளை அன்று, மாறாக இரக்கத்தையே விரும்புகிறார்' என்பதை இயேசு அறிந்திருந்தார். எத்தனையோ ஆண்டுகளாக இறைவாக்கினர்களால் எடுத்துரைக்கப்பட்ட செய்தியும் அதுதான். 'எரிபலிகளின் இரத்தத்திலே எனக்கு நாட்டமில்லை' (எசாயா 1:11-17). 'உங்களை எகிப்தியரின் கொடுமைகளிலிருந்து விடுவித்தது உங்கள் எரிபலிகளுக்காக அன்று' (எரே 7:22). 'பலியிடப்படுகின்ற இறைச்சியில் எனக்கு நாட்டமில்லை' (ஒசே 8:13). இவ்வாறு பலிகளை அல்ல அன்பு நிறைந்த இதயங்களைதான் இறைவன் காணிக்கையாகக் கேட்கிறார் என்று இறைவாக்கினர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
3. இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெருசலேம் தேவாலயமானது பல அறைகளைக் கொண்டது. முதலில் இருந்தது புறவினத்தாருக்கான பகுதி. 2-ஆவது பெண்களுக்கான பகுதி. 3-ஆவது இஸ்ராயேல் மக்களுக்கான பகுதி. 4-ஆவது யூதக் குருக்களுக்கான பகுதி. கடைசியாக 'திருத்தூயகம்' என்று அழைக்கப்பட்ட இறைபிரசன்னத்தின் அறை இருந்தது. புறவினத்தாருக்கான அனுமதி முதல் பகுதியுடன் முடிந்தது. பலியிடுவதற்குத் தேவையான பலிபொருட்கள் அங்குதான் விற்கப்பட்டன. யூத மதக் குருக்களின் உறவினர்கள்தான் குருக்களின் உதவியுடன் தடுப்புகள் அமைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். பேரம் பேசப்படுகின்ற கூச்சலும், குழப்பங்களும், விலங்கினங்களின் கழிவுநாற்றமும் விவரிக்க இயலாதது. இந்நிலையில் புறவினத்தார் எவ்வாறு செபம் செய்ய இயலும், ஆண்டவனை மனதுருகி வேண்ட அளிக்கப்பட்ட சிறுவாய்ப்பும் அவர்களிடம் இருந்துப்பறிக்கப்பட்டதைக் கண்ட இயேசு கோபப்படுகின்றார்.
இப்படிப்பட்ட சூழலில் இயேசு கோபப்பட்டதில் தவறொன்றும் இல்லை. நம் மனம் என்னும் கோவில்கூட இந்த நிலையிருப்பதைக் காணமுடிகிறதல்லவா? ஃபிராய்டு என்ற உளவியல் வல்லுனர் நம் மனதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றார். 1. வெளிமனம், 2. உள்மனம், 3. ஆழ்மனம். வெளிமனம் என்கின்ற முதல் பகுதி எல்லோருமே அறிந்த ஒருபகுதி. உள்மனம் என்ற பகுதியை நாம் மட்டுமே அறிவோம். ஆழ்மனம் என்ற பகுதியை யாருமே அறியார். நமக்கு வேண்டாத நிகழ்வுகளை நாம் சேகரித்து வைப்பது அங்கேதான் என்று கூறுகின்றார். பெரும்பாலும் நம்மை நாம் வெளிமன வழியாக நல்லவர்களாகப் பிரதிபலிக்கின்றோம். ஆனால் நம் உள்மனதுக்குத் தெரியாமல் நாம் செய்யும் பல செயல்களில் இறைவனின் பிரசன்னம் உணரப்படுவதில்லை. அதையும் தாண்டி நாம் ஆழ்மனப்பகுதிக்கு நம்மை ஆட்படுத்துவதில்லை. ஏனெனில் அங்கே நம்மைத் தட்டிக் கேட்கக்கூடிய மனசாட்சி உள்ளது. எனவே நாம் வெளிப்படையாக நல்லவர்களாக முகமூடி அணிந்து வாழக் கற்றுக்கொள்கின்றோம்.
இன்றைய வழிபாட்டின் மூலம், எருசலேம் தேவாலயத்தைச் சந்தை கடைகளாக்கியவர்களைக் கண்டு கோபங்கொண்ட இயேசு நம் உள்ளமெனும் ஆலயத்தைக் கண்டும் கோபம் கொள்ளலாம். எப்போதென்றால், 1. நம் உள்ளத்தில் உள்ள மனசாட்சி என்ற இறைவனது பிரசன்னத்தை அலட்சியம் செய்கின்றபோது. 2. நாம் அருவருக்கத்தக்கத் தீய எண்ணங்ளுக்கு இடம் கொடுக்கின்ற போது, 3. நமது செயல்களைச் சீர்தூக்கி பார்த்து நம் மனசாட்சிக்குப் பயந்து நடக்காதபோது இயேசு நம்மைப் பார்த்துக் கோபப்படுகின்றார்.
ஆனால் அந்தக் கோபத்தின் விளைவாக அவர் நம்மை துன்புறுத்தவில்லை. மாறாகத் தன்னைச் சிலுவையின் துன்பத்திற்கு உட்படுத்துகின்றார். ஆம்! சிலுவை என்னும் சாட்டையால் நம் மனதைத் தூய்மைப் படுத்துகின்றார்.
அப்படித் தூய்மைப்படுத்தப்பட நம் ஆழ்மனதில் தன் ஆலயத்தை அமைத்திட அவர் தன் துன்பங்களின் மூலம் அடித்தளமிட்டுள்ளார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்திலே கேட்டோம். ஆம், சிலுவை மரணத்தால் நாம் அனைவரும் நம்மைச் சிறுமைப்படுத்தும் பாவத்திலிருந்துக் கழுவப்பட்டுள்ளோம். ஆண்டவருடைய ஆலயமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் சிலுவை மரமே அந்த அர்ப்பணத்தின் அடித்தளம். நமது திருமுழுக்கின்மூலம் கிறிஸ்து என்னும் மூலைக்கல் நமது ஆன்மாவை அலங்கரிக்காமல் தீமைகளால் நிறைத்து அதைக் கள்வர் குகையாக்குகிறோம்.
இன்று நற்கருணை வடிவில் நம்மைத் தேடி வருகின்ற இறைவன் நம்மைப் பார்த்துக் கூறுவது என்னவென்றால், "அர்ப்பணிக்கப்பட்ட உனதான்மா அழிவுற வேண்டுமென்றல்ல மாறாக, எனது பிரசன்னத்தில் மகிழ்வுற வேண்டும்" என்பதே எனது விருப்பம். நமது பதில் என்ன? உலக மீட்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு, தூய யோவானுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட லாத்தரன் பேராலயத்தின் அர்ப்பண விழாவைச் சிறப்பிப்பதோடு நின்றுவிடாமல் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குபெற்று மீண்டும் ஆண்டவருக்கு அர்ப்பணமாக்குவோம். அதுவே பலிகளிலெல்லாம் சிறந்த பலியாகும்.
நாமே ஆலயம்!
உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுவார். புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு. தொடக்ககால உரோமைத் திருச்சபையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324-ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள அனைத்துப் பேரலாயங்களின் தாய் ஆலயம் இது.
இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு, ‘ஆலயம்’ என்னும் வார்த்தை பற்றிய இரு புரிதல்களை நமக்குத் தருகின்றது.
முதல் வாசகத்தில் (காண். எசே 47:1-2,8-9,12), ‘ஆலயம்,’ புதிய வாழ்வின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவின் அடிமைத்தனத்தின்போது ஆண்டவரின் மாட்சி எருசலேம் கோவிலை விட்டு அகல்கின்றது. மக்கள் திரும்பி வந்தபோது ஆண்டவர் மீண்டும் நகருக்குள் வருகின்றார். ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளும் இடத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அனைத்துலகையும் புதுப்பிப்பதாகவும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதாகவும் காட்சி காண்கிறார் இறைவாக்கினர் எசேக்கியேல்.
நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:13-22), ‘ஆலயம்’ என்பது ‘இடம் சார்ந்த பிரசன்னம்’ என்ற புரிதலைச் சற்றே மாற்றி, அது ‘ஆள் சார்ந்த பிரசன்னம்’ என்ற புதிய புரிதலைத் தருகின்றார். எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் இயேசு, தன்னுடலை ஆலயத்திற்கு உருவகப்படுத்துகிறார். ஆனால், மற்ற யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.
இன்றைய நாள் நமக்குக் கொடுக்கும் செய்தி என்ன?
அ. ‘கடவுள் நம் நடுவில் வாழ்கிறார்’
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதன் காணக்கூடிய அடையாளம்தான் ஆலயம். ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இங்கே, ‘கோ-இல்’ என்பது, ‘அரசனின் இல்லத்தை’ குறிக்கிறது. அதாவது, அரசன் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஏனெனில், அரசன் இல்லாத மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடப்பார்கள், தான்தோன்றித்தனமாக இருப்பார்கள் (காண். நீத 24). நம் வாழிடத்தின் அரசராக இருப்பவர் இறைவன்.
ஆ. ‘நம் எண்ணங்கள் உயர்கின்றன’
பெரிய ஆலயங்கள், பெரிய கோபுரங்கள், பெரிய தூண்கள் என என அமைந்திருக்கும் ஆலயங்களை நாம் உயர்ந்து பார்க்கும்போது நம் கண்கள் மட்டுமல்ல, நம் எண்ணங்களும் உயர்கின்றன. தாழ்வானவற்றை விடுத்து உயர்வானவற்றைப் பற்றிக்கொள்ள ஆலயங்கள் அழைப்பு விடுக்கின்றன.
இ. ‘ஆலயம் நம் ஒவ்வொருவரின் தொப்புள்கொடி’
இறைவனையும் நம்மையும் இணைக்கும் தொப்புள்கொடியே ஆலயம். இதன் வழியாகவே இறையருள் நமக்குக் கிடைக்கிறது. திருமுழுக்கின்போது நாம் பெறும் உறவுப் பிணைப்பு, நாம் இறந்தபின்னும் இந்த ஆலயத்தின் வழியே தொடர்கிறது.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளில், நம் பங்கு அல்லது மறைமாவட்டத்தின் ஆலயத்தின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம். நம் ஒவ்வொருவரின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம்.
நாமே ஆலயம்! நமக்கோர் ஆலயம்!