மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 32ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 6 :12-16, | 1 தெசலோனிக்கர் 4 :13-18 | மத்தேயு 25: 1-13

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


புதிய வாழ்க்கைக்குப்‌ போகிறோம்‌.

மோட்சம்‌ திறக்கப்படட்டும்‌. திறந்தவுடன்‌ உள்ளே செல்லலாம்‌ என மோட்ச வாசலிலே காத்திருந்தார்‌ ஒருவர்‌. கதவோ திறக்கப்படவில்லை. அவருக்குக்‌ களைப்பு, உறங்கிவிட்டார்‌. ஒரு நிமிடம்தான்‌. அந்த நேரத்தில்‌ விண்ணகத்தின்‌ கதவு திறந்து மூடிக்‌ கொண்டதாம்‌. இதே போன்றுதான்‌ இன்றைய நற்செய்தியிலே கூறப்படும்‌ பத்துக்‌ கன்னியர்களில்‌ ஐந்து அறிவிலிகளுக்கு ஏற்பட்ட கதி. இஸ்ரயேல்‌ நாட்டிலே மணமகன்‌ வரும்போது அழைத்துச்‌ செல்லப்‌ பத்து கன்னிப்‌ பெண்கள்‌ காத்திருந்தார்கள்‌. எரியும்‌ விளக்குகளோடு தயாராக இருந்த ஐந்து பெண்கள்‌ மணமகனை அழைத்துக்கொண்டு திருமண வீட்டிற்குள்‌ நுழைந்தார்கள்‌. ஆனால்‌ ஐந்து பெண்களோ காத்திருந்த களைப்பில்‌ உறங்கிவிட்டார்கள்‌. தூங்காமல்‌ இருந்திருந்தால்‌ எண்ணெய்‌ குறைவதைப்‌ பார்த்திருப்பார்கள்‌. உடனே கடைக்குச்‌ சென்று தேவையான எண்ணெய்யை வாங்கி வைத்திருப்பார்கள்‌. ஆனால்‌ தூங்கியதால்‌ மணமகனை எதிர்கொள்ள முடியாத நிலையில்‌ கதவு பூட்டியாகிவிட்டது. இஸ்ரயேல்‌ நாட்டில்‌ கதவு தாழிட்டுவிட்டால்‌ அதை திறப்பதற்கோ வெகுநேரமாகும்‌. அவசரத்‌ தேவையாக அன்றி வேறு எதற்கும்‌ மூடியக்‌ கதவைத்‌ திறக்கமாட்டார்கள்‌. இத்தகையக்‌ கதவுகளை நம்‌ நாட்டிலும்‌ பழங்கால ஆலயங்களிலும்‌ வீடுகளிலும்‌ காணலாம்‌.

சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து இறைவனிடம்‌ வேண்டுங்கள்‌ (மத்‌. 26:41) என்று இயேசு கூறவில்லையா?

சோதனைக்கு உட்படாதபடி விழித்திருங்கள்‌. ஏனெனில்‌ யாரை விழுங்கலாம்‌ என கர்ச்சிக்கும்‌ சிங்கம்‌ போல்‌ சாத்தான்‌ காத்திருக்கிறான்‌ - சுற்றி வருகிறான்‌ (1 பேதரு 5:8) என்று பேதுரு கூறுகின்றாரே! இருந்தாலும்‌ வாழ்க்கையிலே களைப்புப்‌ பலவிதம்‌!

சிலருக்குச்‌ செபிக்கும்போது களைப்பு ; சிலருக்குப்‌ பிரசங்கம்‌ கேட்கும்போது களைப்பு; சிலருக்கு ஆடினால்‌ களைப்பு ; சிலருக்குப்‌ பாடினால்‌ களைப்பு; சிலருக்கு நடந்தால்‌ களைப்பு ; சிலருக்கு ஓடினால்‌ களைப்பு; சிலருக்குப்‌ படுத்தால்‌ களைப்பு; சிலருக்கு இருந்தால்‌ களைப்பு; சிலருக்குக்‌ கற்றதனால்‌ களைப்பு ; சிலருக்குக்‌ கற்றுக்‌ கொடுத்ததால்‌ களைப்பு; சிலருக்குப்‌ பசியால்‌ களைப்பு; சிலருக்கு உண்டதனால்‌ களைப்பு இப்படி அடுக்கிக்‌ கொண்டே போகலாம்‌ - களைப்பு இல்லாத மனிதன்‌ யாருமே இல்லை.

ஆவி ஊக்கமுடையதுதான்‌. ஆனால்‌ ஊன்‌ உடலோ வலுவற்றது (மத்‌. 26:41). இதைத்தான்‌ தூங்கிக்‌ கொண்டிருந்த சீடர்களை நோக்கித்‌ தூங்காதீர்கள்‌ என்று கெத்சமனி தோட்டத்தில்‌ சொன்னார்‌.

நீங்கள்‌ எல்லோரும்‌ இன்று ஆலயம்‌ வந்திருப்பதால்‌ விவேகமுள்ள, ஞானமுள்ள மகிழ்ச்சியோடு, பொறுமையோடு காத்திருந்தவர்களெனக்‌ காட்டுகிறீர்கள்‌. இன்று எத்தனையோ பேர்‌ ஞாயிறு பூசைக்குப்‌ போனால்‌ என்ன கிடைக்கும்‌? பூசைக்குப்‌ போகிறவர்கள்‌ எல்லாம்‌ மோட்சமா போவார்கள்‌ என்றெல்லாம்‌ கூறிக்‌ கொண்டு இறைவனின்‌ ஞானத்தை உணராது உலக ஞானத்திற்கு அடிமையாக இருக்கலாம்‌. ஆனால்‌ களைப்பை நீக்கும்‌ ஒரு வழியை புல்டன்‌ ஜின்‌ என்ற ஆயர்‌ அழகாகச்‌ சொல்லுகின்றார்‌.

ஒரு பெண்ணுக்குக்‌ காலை ஆறு மணிக்குத்‌ திருமணம்‌. அவள்‌ எப்பொழுதும்‌ காலை 8 மணிக்கு எழுகின்ற பழக்கமுடையவளாக இதுவரை இருந்தாலும்‌, திருமண நாள்‌ அன்று தன்‌ தோழிகளோடு பேசிக்கொண்டே பொழுது புலர்வதற்குள்‌ - குளித்து தன்னையே அலங்கரித்துக்‌ கொள்கிறாள்‌. அவளிடம்‌ வழக்கமாகக்‌ காணப்படும்‌ களைப்பும்‌, தூக்கமும்‌ எங்கே சென்றன? புதிய வாழ்க்கைக்குப்‌ போகிறோம்‌. மணமகனைச்‌ சந்திக்கப்‌ போகின்றோம்‌ என்ற மகிழ்ச்சி, அவளிடமிருந்த களைப்பு தூக்கத்தையே விழுங்கிவிட்டது.

இவ்வாறுதான்‌ நமக்குள்‌ இறைவனோடு என்றும்‌ வாழ, நான்‌ அவருக்காகக்‌ காத்திருக்கின்றேன்‌ என்ற எண்ணம்‌ இருக்குமானால்‌ நம்‌ களைப்பு ஒன்றுமில்லாமல்‌ ஆகிவிடும்‌.

தாய்‌ தன்‌ குழந்தைக்காக விழித்திருக்கிறாள்‌; நட்புக்காக நண்பன்‌ விழித்திருக்கின்றான்‌; தொண்டுக்காக தொண்டன்‌ விழித்திருக்கிறான்‌; நாட்டுக்காக வீரன்‌ விழித்திருக்கிறான்‌; எல்லாம்‌ அன்புக்காக.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விண்ணரசுக்குள் நுழைய நாம் என்ன செய்யவேண்டும்?

விண்ணரசுக்குள் நுழைய நாம் என்ன செய்யவேண்டும்? விண்ணகம் என்றால் என்ன? என்பதற்கு ஓர் அருமையன விளக்கத்தை திருவெளிப்பாட்டிலே திருத்தூதர் புனித யோவான் நமக்குத் தருகின்றார். அங்கே பசியோ தாகமோ இராது. கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கமாட்டா, ஏனெனில் அரியணை நடுவிலிருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார் (திவெ 7 : 16-17). இத்தகைய விண்ணகத்துக்குள் நுழைய நாம் எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும். இந்த உண்மையைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. மோட்சத்திற்குள், விண்ணக்கதிற்குள் நுழைய பல நாள்கள். பல மாதங்கள், பல ஆண்டுகள் ஒருவன் காத்திருந்தான் ஒருநாள் களைப்பு மிகுதியால் ஒரு வினாடி கண்களை மூடினான்! அப்போது விண்ணகம் திறந்து மூடிக்கொண்டது அவனோடு காத்திருந்தவர்கள் எல்லாரும் விண்ணகத்திற்குள் நுழைய அவன் மட்டும் தனித்துவிடப்பட்டான் மணமகனை வரவேற்பதற்காக பத்துப்பேர் தங்கள் விளக்குகளோடு காத்திருந்தனர் ஐந்துபேர் விழித்திருந்தார்கள் ஐந்து பேர் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்! தூங்கியவர்கள் எதிர்பாராத வேளையிலே மணமகன் வந்தான்!

தூங்கியவர்கள் மணமகனை வரவேற்கும் பாக்கியத்தை இழந்தார்கள். இறைவன் உறங்குவதில்லை திருப்பாடல் ஆசிரியர், இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை : உறங்குவதும் இல்லை (திபா 21:4) என்கின்றார்! கடவுள் அவரைப்போலவே நாமும் உறங்காமல் காத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்.

தூக்கம் என்பது முதல்வாசகம் சுட்டிக்காட்டும் ஞானத்திற்கு எதிர்மறையான அறிவுத் தெளிவு பெறாத நிலையைக் குறிக்கும் அறிவுத் தெளிவு உடையவர்கள் (உரோ 2 : 1-2) எது நல்லது? எது உகந்தது? எது நிறைவானது? என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பர் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஞான ஒளியிருப்பதால் இருளென்ற, பாவமென்ற சொல்லுக்கே இடமிருக்காது!

அவர்கள் எப்போதும் விழிப்பாயிருப்பார்கள், அதாவது ஒளிமயமான ஆண்டவரை எதிர்கொள்ள அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர் இறந்து உயிர்த்தெழும்போது அவர்கள் விண்ணகத்திற்குள் நுழைந்து ஆண்டவரோடு என்றும் வாழ்வார்கள்.(இரண்டாம் வாசகம்).

மேலும் அறிவோம் :

கொக்(கு) ஒக்க கூம்பும் பருவத்து மற்(று)அதன்
குத்(து)ஒக்க சீர்த்த இடத்து (குறள் : 49O)

பொருள் : ஒரு செயலை நிறைவேற்ற முடியாதபோது மீனைத் தேடிக் காத்திருக்கும் கொக்கைப் போன்று பொறுத்திருக்க வேண்டும்! நிறைவேற்றுவதற்கு வாய்ப்பான நேரத்தில் அக்கொக்கு மீனைக்குத்திஎடுப்பது போன்று, விரைந்து செயலை நிறைவேற்ற வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பைபிள் போதகள் ஒருவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர் ஒருவரிடம் "இன்னும் மூன்று ஆண்டுகளில் உலகம் முடியப்போகிறது" என்றார். கத்தோலிக்கர் அவரிடம், "உங்கள் வயது முப்பதா?" என்று கேட்டார், பைபிள் போதகர், "என் வயது முப்பது என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று ஆச்சரிவத்துடன் கேட்டார். கத்தோலிக்க அவரிடம் என வீட்டின் எதிரில் ஒரு அரைப் பைத்தியக்காரர் இருக்கிறார் அவருக்கு வயது பதினைந்து எனவே, உங்கள் வயது முப்பதாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் முழுப்பைத்தியம்" என்ற உலகின் முடிவைப்பற்றி ஆகுடம் கூறுவது வடிகட்டிய பைத்தியக்கான் செயல்.

இன்று எத்தனையோ பிரிவினை சபைகள் உலகம் விரைவில் முடியப் போகிறது என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர் இன்றைய நற்செய்திவில் கிறிஸ்து நமக்குக் கூறுகிறார் "விழிப்பாயிருங்கள் ஏனேனில், அவர் வரும் நாளோ வேளையே பங்களுக்குத் தெரியாது" (மத் 25.13)

உலக முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் அறிய முற்படுவது கடவுளுக்கு எதிரான செயலாகும் என்கிறார். கிறிஸ்து விண்ணகம் செல்லுமுன் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறினார்: "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல" (திப 1:7) எனவே, கடவுளுடைய மறைவான திட்டங்களை அறிவது நமது வேலையில்லை. அப்படியானால் நமது வேலை என்ன? எப்போதும் விழிப்பாயிருப்பதுதான் நமது வேலை

மணமகன் எப்போது வருவார் என்று தெரியாத நிலையில் தூங்காமல் நள்ளிரவில் விழிப்புடன் விளக்குகளுடன் காத்திருந்த முன்மதியுள்ள ஐந்து கன்னியர்களைப்போல, நாம் எப்போதும் விழிப்பாக இருத்தல் வேண்டும். விழிப்புணர்வு மட்டுமல்ல, நமக்கு ஞானம், முன்மதி தேவை.

இன்றைய முதல் வாசகம், "ஞானம் ஒளிமிக்கது. மங்காதது . அதள் பொருட்டு விழிப்பாய் இருப்போர் வேலையிலிருந்து விடுபடுவர்" (காஞா 2:12-16) என்று கூறுகிறது ஞானமுள்ளோர் எப்போதும் விழிப்பாயிருப்பா கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் உள்ள கிறிஸ்து (1 கொரி 12:4) நாம் பாம்புகளைப்போல் விவேகமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் (மத 10:16).

பாம்பு அதனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது அது தன் உடலின் எந்தப் பகுதியை இழந்தாளும் தன் தலையை மட்டும் இழக்காமல் பார்த்துக்கொள்ளும். அவ்வாறே கிறிஸ்துவின் சீடர் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். “இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்" (திவெ 2:10) "உலகை வெல்லுவது நமது நம்பிக்கையே" (1 யோவான் 5:4)

அலகை நம்மிடமுள்ள நம்பிக்கையைப் பறித்துக்கொள்ள கர்ச்சிக்கும் சிங்கம்போல் தேடித்திரிகிறது. அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருந்து அசையாத நம்பிக்கையுடன் அதனை எதிர்த்து நிற்கும்படி அறிவுறுத்துகிறா புனித பேதுரு (1பேதுரு 5:8-9) நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக் கொண்டு தீயோனின் தீக்கணைகளை அணைக்க வேண்டுமென்கிறார் புனித பவுல்.

வாழ்க்கை என்பது ஓர் ஒட்டப்பந்தயத்தில் நாம் மன உறுதியுடன் ஓடவேண்டும். நம்பிக்கைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து ஓடவேண்டும் என்கிறது எபிரேய திருமடல் (எபி 2:1-2).

தத்துவமேதை தன் வீட்டின் முன் ஒரு பலகையில் "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று விளம்பரம் செய்திருந்தார். பணக்கார்ர் ஒருவர் தன் வேலையாளிடம் நூறு ரூபாய் கொடுத்து அந்தத் த்த்துவமேதையிடம் ஞானம் வாங்கி வரும்படி அனுப்பினார். த்த்துவமேதை பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு காகிதக் துண்டில் "நீ எதை செய்தாலும் வாழ்க்கைவின் முடிவை நினைத்துககொள்" என்று எழுதிக் கொடுத்தார். அப்பணக்கார்ர் அவ்வாக்கியததைப் பொன் எழுத்துக்களால் எழுதி வீட்டின் நடுப்பகுதியில் வைத்தார் அதைப் பார்த்து அவருடைய வீட்டார் மனம்மாறி நல்வாழ்வு நடத்தினர்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நாமும் நமது வாழ்வின் முடிவை எண்ணிப் பார்க்க வேண்டும் "வீடுவரை உறவு விதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?" என்று திரைப்படப் பாடல் கேட்கிறது கடைசிவரை நம்மேடு வருவது யார்? ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோ ஏனேனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும் (திவெ 14:13-14) ஆம் நமது செயல்கள் நம்முடனே வரும்.

நமது வாழ்வின் முடிவைப்பற்றி, நமது சாவைப்பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்று இவை இரண்டாம் வாசகத்தில் திருதூதர் பவுல் கூறுகிறார். ஏனெனில் நமக்கு எதிர்நோக்கு உண்டு. கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அனைவரும் கிறிஸ்துவை எதிர்கொண்டு என்றும் ஆண்டவரோடு இருப்போம் (1தெச 3:13-18)

நமது வாழ்வு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் முடியும் திருத்தூதர் பவுல் கூறியதுபோல நாமும் கூறும் அளவுக்கு நமது நம்பிக்கையில் வளர்வோம். "என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றிவாகையே" (2 திமொ 47-8).
"ஆண்டவாகிய இயேசுவே வரும்" (திவெ 22:20)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உழுகிற நாளில் ஊர் சுற்றிவிட்டு...

விண்ணகம்‌ திறக்கும்‌, உள்ளே நுழையலாம்‌ என ஒருவன்‌ சுவர்க்கத்தின்‌ வாசலிலே ஆவலோடு காத்திருந்தான்‌. கதவு திறக்கவே இல்லை. அவனுக்குக்‌ களைப்பு. காத்திருந்த களைப்பு. உறங்கிவிட்டான்‌. ஒரு நிமிடம்‌ தான்‌. அந்த நேரம்‌ பார்த்து விண்ணகத்தின்‌ கதவு திறந்து மூடிக்‌ கொண்டதாம்‌!

இதே போன்ற நிலைதான்‌ இன்றைய உவமையில்‌ வரும்‌ அந்த ஐந்து கன்னிப்‌ பெண்களுக்கும்‌ ஏற்பட்டது. எடுத்த எடுப்பிலேயே இயேசு அவர்களை 'அறிவிலிகள்‌” என்று அறிமுகப்படுத்துகிறார்‌. “மணமகனை எதிர்கொள்ள மணமகளின்‌ தோழியர்‌ பத்துப்பேர்‌ தங்கள்‌ விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச்‌ சென்றார்கள்‌. அவர்களுள்‌ ஐந்து பேர்‌ அறிவிலிகள்‌” (மத்‌. 25:2). அதற்குக்‌ காரணம்‌ எண்ணெய்‌ இல்லை என்பதா? அல்ல. எண்ணெய்‌ இல்லையே என்ற உணர்வற்று இருந்ததுதான்‌.

எண்ணெய்‌ இல்லை என்பதுகூட அவ்வளவு பெரிய குற்றமல்ல. எண்ணெய்‌ இல்லையே என்ற எண்ணம்‌ இல்லாமல்‌ இருந்ததுதான்‌ பெரிய குற்றம்‌. இயேசுவின்‌ கண்டனத்துக்குரியது. தன்னிலை உணராத, விழிப்புணர்ச்சி இல்லாத நிலை. அந்த நள்ளிரவில்‌ எத்துணை முயற்சி எடுத்து எண்ணெய்‌ வாங்கி வந்தனர்‌. என்றாலும்‌ கதவைத்‌ திறக்கவில்லையே! உழுகிற நாளில்‌ ஊர்‌ சுற்றிவிட்டு அறுக்கிற நாளில்‌ அரிவாள்‌ எடுத்துச்‌ செல்பவள்‌ அறிவிலிதானே!

“சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம்‌ வேண்டுங்கள்‌” (மத்‌. 26:41) என்று இயேசு கூறியது நமக்குத்‌ தெரியாததன்று. இருந்தாலும்‌ வாழ்க்கையில்‌ களைப்பு. பல்வேறு காரணங்களால்‌ களைப்பு ... ஆக களைப்புக்கும்‌ சோர்வுக்கும்‌ ஆளாகாத மனிதன்‌ யார்‌? களைப்பினால்‌ வருகின்ற உறக்கம்‌. மனம் ஆர்வமுடையது தான்‌. ஆனால்‌ உடல்‌ வலுவற்றதாக (மத்‌. 26:41) இருப்பதால்‌ இயேசு ஆழ்துயரத்தோடு கெத்சமனித்‌ தோட்டத்தில்‌ இறை வேண்டுதலில்‌ ஈடுபட்டபோது பேதுருவும்‌ யோவானும்‌ யாக்கோபும்‌ உறங்கிக்‌ கொண்டிருந்ததை நாம்‌ அறிவோம்‌. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று.

இத்தகைய சூழலில்‌ நாம்‌ செய்ய வேண்டியது ஒன்றுண்டு. வாழ்க்கையில்‌ எது முக்கியம்‌ என்பதை அறிய நாம்‌ முற்பட வேண்டும்‌. இத்தகைய அறிவைக்‌ கொடுப்பது ஞானம்‌. விழிப்புணர்வோடு கூடிய ஞானம்‌. தூய ஆவியின்‌ வரங்களில்‌ முதலிடம்‌ பெறுவது (1 கொரி. 12:8). இதை அடைந்த மனிதன்‌ களைப்பினின்றும்‌ சோர்வு தரும்‌ அனைத்துக்‌ கவலைகளினின்றும்‌ விடுபடக்‌ கற்றுக்‌ கொள்கிறான்‌. அதனால்தான்‌ “ஞானத்தை அடைய விழிப்பாயிருங்கள்‌” (சா.ஞா. 6:12-16) என்று அறிவுறுத்துகிறது முதல்‌ வாசகம்‌.

ஒரு பெண்ணுக்குப்‌ பொழுது விடிந்தால்‌ திருமணம்‌. அவள்‌ எப்பொழுதும்‌ பொழுது விடிந்தே எழுகின்ற பழக்கமுடையவள்‌. இருந்தாலும்‌ திருமண நாளாகிய அன்று பொழுது புலருமுன்பே எழுந்து தன்னையே அழகுபடுத்திக்‌ கொள்வாளன்றோ! அவளிடமிருந்த வெகுநேரம்‌ தூங்கும்‌ பழக்கம்‌ எங்கே போனது? புதிய வாழ்க்கைக்குள்‌ நுழையப்‌ போகிறோம்‌, மணமகனைச்‌ சந்திக்கப்‌ போகிறோம்‌ என்ற ஆர்வம்‌, துடிப்பு அவளது தூக்கத்தையெல்லாம்‌ விழுங்கிவிட்டது.

அவ்வாறே இயேசுவோடு என்றும்‌ வாழ அவருக்காகக்‌ காத்திருக்கிறேன்‌ என்ற எண்ணம்‌ நமக்குள்‌ இருக்குமானால்‌ நம்மால்‌ எப்படி உறங்க முடியும்‌. இயேசு தவறாது வருவார்‌ இதில்‌ எந்த ஐயமும்‌ தேவையில்லை என்கிறார்‌ திருத்தூதர்‌ பவுல்‌ (1 தெச. 4:16,17). நாமும்‌ ஒவ்வொரு திருப்பலியிலும்‌ 'விண்ணுலகில்‌ இருக்கிற எங்கள்‌ தந்தையே' என்ற செபத்தைச்‌ சொன்னதும்‌, “நாங்கள்‌ நம்பியிருக்கும்‌ பேரின்ப வாழ்வையும்‌ எம்‌ மீட்பராகிய இயேசு .கிறிஸ்துவின்‌ வருகையையும்‌ மகிழ்ச்சியுடன்‌ எதிர்பார்த்திருக்கின்றோம்‌'” என்று முழக்கமிடுகிறோம்‌.

அறிவிலிகள்‌ என்று இயேசு குறிப்பிடும்‌ ஐந்து கன்னியர்களால்‌ எப்படி உறங்க முடிகிறது? அந்த அலட்சியத்துக்கு என்ன காரணம்‌? மணமகன்‌ (இயேசு) மீது தாகமற்று இருந்ததுதான்‌. கடவுள்‌ மேல்‌ அன்பு, நம்பிக்கை கொண்டு அவரது கட்டளைகளைக்‌ கடைப்பிடித்தலே உண்மையான ஞானம்‌. அன்பு மேலீட்டால்‌, விருப்புடன்‌ விழிப்புடன்‌ ஞானம்‌ தேடப்பட வேண்டும்‌. அப்படித்‌ தேடுவோரை ஞானமே தேடிவரும்‌. (சா.ஞா. 6:13).

“சான்றோரின்‌ ஒளி சுடர்‌ வீசிப்‌ பெருகும்‌. பொல்லாரின்‌ விளக்கோ அணைக்கப்படும்‌” (நீ.மொ. 13:9).

உலகினர்‌ பார்வையில்‌ முன்மதியோடு செயல்பட்ட ஒருவனின்‌ உவமையையும்‌ இயேசு கூறுகிறார்‌. ஆனால்‌ இயேசு அவனை “அறிவிலியே' என்றுதான்‌ அழைக்கிறார்‌. அறிவற்ற செல்வந்தனின்‌ உவமை (லூக்‌. 12:13-21). பல்லாண்டுகளுக்குத்‌ தேவையான தானியங்களை முன்மதியோடு சேகரித்து வைத்தவனின்‌ கதை. இறை நம்பிக்கை இல்லாது, பிறர்‌ மீது எவ்வித அக்கறையும்‌ கொள்ளாது வாழ்பவர்கள்‌ இயேசுவின்‌ பார்வையில்‌ மூடர்களே! மாறாக நேர்மையற்ற செல்வத்தைக்‌ கொண்டு நண்பர்களைத்‌ தேடிக்‌ கொள்பவர்களே இயேசுவின்‌ பார்வையில்‌ முன்மதியுடையோர்‌. (லூக்‌ 16:9).

எண்ணெய்‌ இருந்தால்‌ மட்டும்‌ போதாது. விளக்கு எரிந்தால்‌ மட்டும்‌ போதாது. எங்கே எரிகிறது எப்படி எரிகிறது, எப்பொமுது எரிகிறது என்பதும்‌ முக்கியம்‌.

அன்று அந்த ஊரிலே கன்னிப்‌ பெண்கள்‌ திருவிழா. வழக்கம்போல்‌ ஆற்றிலே அகல்விளக்குகளை மிதக்கவிட ஆற்றங்கரைக்குச்‌ செல்கிறார்கள்‌. கரையோரத்தில்‌ ஒரு குடிசை. அந்த ஏழை வீட்டில்‌ அன்றுதான்‌ அடுப்பு புகைந்தது. உணவைச்‌ சமைத்து இறக்குமுன்‌ பொழுது சாய்ந்து விடுகிறது. அந்த உணவை விளக்கு வெளிச்சத்தில்‌ உண்டு மகிழ வீட்டில்‌ உள்ளவர்களுக்கு ஆசை. பெண்களின்‌ கைகளில்‌ வெளிச்சத்தைக்‌ கண்டு அந்த ஏழை உங்களில்‌ யாராவது ஒரு பெண்‌ உங்கள்‌ கையில்‌ உள்ள விளக்கைக்‌ கொடுங்கள்‌ என்று கையேந்துகிறான்‌.

“இது திருநாளுக்குரிய விளக்கு” என்று மறுக்கிறாள்‌ ஒருத்தி. “என்‌ விளக்கை உன்னிடம்‌ கொடுத்துவிட்டு வெறுங்கையோடு நின்றால்‌, மற்றவர்கள்‌ என்னைப்‌ பற்றி என்ன நினைப்பார்கள்‌?” என்கிறாள்‌ இன்னொருத்தி. “இது கடவுளுக்குரிய விளக்கு. மனிதனுக்குக்‌ கொடுக்க மாட்டேன்‌” என்று சொல்கிறாள்‌ மற்றொருத்தி.

எல்லா விளக்குகளும்‌ ஆற்றிலே அணிவகுத்துச்‌ செல்கின்றன. அழகுக்‌ காட்சி! இந்தச்‌ சோக வரிகளோடு கதையை முடிக்கிறார்‌ வங்கக்‌ கவி தாகூர்‌: “அதோ ஆயிரம்‌ விளக்குகள்‌ ஆற்றிலே மிதந்து ஒளிர்கின்றன. யாருக்கு என்ன பயன்‌? அந்த ஒரு குடிசை இருளடர்ந்து கிடக்கிறதே!”

இன்று நாட்டில்‌ எரியும்‌ விளக்குகளுக்குக்‌ குறைவில்லை. ஆனால்‌ எரிய வேண்டிய இடங்களில்‌ அவை எரிகின்றனவா?

மோஸ்கோ என்பது ஒரு வகை மூங்கில்‌ மரம்‌. இது சீனாவில்‌ அதிகம்‌ பயிரிடப்படுகிறது. இதன்‌ சிறப்பு அம்சம்‌ என்னவெனில்‌ அது பயிரிடப்பட்டு ஐந்து ஆண்டுகள்‌ முளைவிடாது. ஆனால்‌ ஐந்து ஆண்டுகளுக்குப்‌ பிறகு ஒரு நாளைக்கு இரண்டு அடி வீதம்‌ ஒரு மாதத்திற்குள்‌ அறுபது அடி உயரத்திற்கு வளர்ந்துவிடுமாம்‌.

விரைவான அதன்‌ வளர்ச்சிக்குக்‌ காரணம்‌ ஐந்து ஆண்டுகளாக பூமிக்கடியில்‌ அதன்‌ வேர்‌ வெகு தொலைவு ஊடுருவிப்‌ பரவியிருப்பதுதான்‌. பூமிக்கு அடியில்‌ நடைபெற்ற தயாரிப்புத்தான்‌ பூமிக்கு வெளியே காணப்படும்‌ வளர்ச்சியின்‌ வேகத்துக்குக்‌ காரணம்‌.

எந்த அளவுக்கு வேரூன்றப்படுகிறதோ, அந்த அளவுக்கு மரம்‌ நிலைத்து நிற்கும்‌. எந்த அளவுக்கு எரிசக்தி இருக்கிறதோ, அந்த அளவுக்கு விளக்கு நின்று எரியும்‌. எந்த அளவுக்கு விசுவாச வெளிச்சத்தோடு காத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு மானிட மகனோடு இறையாட்சிக்குள்‌ நுழைய வாய்ப்பு இருக்கும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம் தெரிவுகளைத் தெளிவாக்க அழைப்பு

நவம்பர் 12, இந்த ஞாயிறன்று, தீபங்களின் திருவிழா (தீபாவளி) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மற்றும் உலகின் பல நாடுகளில் வாழும் இந்தியர்களாலும் கொண்டாடப்படுகிறது. தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இறைவன், ஒளிமயமான வாழ்வை வழங்கவேண்டுமென்று வாழ்த்துவோம், வேண்டுவோம். ‘ஒளிமயமான வாழ்வு’ என்று சொன்னதும், இல்லங்களில் ஒளி நிறைவதை மட்டும் எண்ணிப்பார்க்காமல், உள்ளங்களில் அறிவொளி பெறுவதையும் எண்ணிப்பார்க்க, இந்தத் திருநாள் நம்மை அழைக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், இந்த விழா நெருங்கும் வேளையில், தீபாவளியை ஒரு சிலர் எப்படி அர்த்தமுள்ள முறையில், அறிவொளி பெற்ற மனநிலையுடன் கொண்டாடுகின்றனர் என்பதைக் குறித்து சில செய்திகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு, அக்டோபர் 24, 2022 அன்று ‘இந்தியா டைம்ஸ்’ இதழில் வெளிவந்த அத்தகைய ஒரு செய்தி இதோ:

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடிப்பட்டி மற்றும் பெரிய கொள்ளுக்குடிப்பட்டி கிராமங்களில் வாழ்பவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர். இப்பகுதியில், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்து, ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் இலங்கையிலிருந்து குளிர்காலத்தில் புலம்பெயர்ந்துவரும் பறவைகளுக்கு இச்சரணாலயம் இயற்கையான வாழ்விடமாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சரணாலயம் ஆண்டுக்கு 15,000 பறவைகளை ஈர்க்கிறது. புலம்பெயர்ந்த பறவைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடிப்பட்டி, சின்ன கொள்ளுக்குடிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள், அரை நூற்றாண்டு காலமாக, பட்டாசு இல்லா தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி மட்டுமின்றி, திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்களின் போதும் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இதேபோல், ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். பறவைகள் சரணாலயத்தை கொண்ட திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குளம் கிராம மக்கள் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை நீண்ட நாட்களாக தவிர்த்து வருகின்றனர். சேலம், பெரம்பூரில் உள்ள வௌவால் தோப்பு, நாகப்பட்டினம், சீர்காழி கோவில் அருகே உள்ள கிராமம், மற்றும், காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் கிராமத்தில் வாழ்பவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள வௌவால்களை முன்னிட்டு, பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

பறவைகள் மற்றும் வௌவால்களுக்காக வெடிசப்தமில்லாத தீபாவளியைக் கொண்டாடும் இந்தக் கிராம மக்களை நாம் பாராட்டுகிறோம். அதேவேளையில், நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள், மூத்த குடிமக்கள், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் நடைபாதையில் வாழ்பவர்கள் ஆகியோர், பட்டாசுகளின் தொடர் ஒலிகளால் அடையும் வேதனைகளைப்பற்றி நாம் ஏன் பேசுவதில்லை? அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பங்களாக்களிலும் விடப்படும் வானவேடிக்கைகள், அடுத்திருக்கும் சேரிகளிலுள்ள ஓலைக் கூரையில் விழுந்து, எத்தனை குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன? இத்தகையக் கேள்விகள், நம்மைச் சூழ்ந்திருக்கும் மனிதர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையின்மையை குத்திக்காட்டுகின்றன.

மனிதர்கள் மீது அக்கறையின்மை என்ற கொள்ளை நோய் கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் பரவியுள்ளதை நாம் அறிவோம். குறிப்பாக, இந்த ஆண்டு, வெடிக்கும் பட்டாசு சப்தங்களைக் கேட்கும்போது, கடந்த ஒரு மாதமாக, காசாவில் வாழும் அப்பாவி மக்களை, குழந்தைகளை, எரித்து சாம்பலாக்கிவரும் உண்மையான வெடிகுண்டுகளும், 2022 பிப்ரவரி முதல், உக்ரைன் நாட்டில் பல்லாயிரம் மக்களை கொன்றுவரும் வெடிகுண்டுகளும், நம் நினைவுகளை இரணமாக்குகின்றன. இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழு மற்றும் இரஷ்யாவின் தலைவர்கள், தங்களுக்கு இறைவன் வழங்கியுள்ள அறிவைப் பயன்படுத்தி, இந்த முட்டாள்தனமான படுகொலையை நிறுத்தவேண்டும் என்று உருக்கமாகச் செபிப்போம்!

ஒளியை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழாவை, அறிவொளியுடன் கொண்டாடவேண்டும் என்று சிந்திக்கும் இவ்வேளையில், ஒளியை ஏந்த அறிவொளியுடன் செயல்பட்ட ஒரு சில இளம் பெண்களை மையப்படுத்தி இந்த ஞாயிறு நற்செய்தி வழங்கப்பட்டுள்ளதை அருள் மிக்க வாய்ப்பாக நாம் கருதலாம். மேலும், இன்றைய முதல் வாசகம், ஞானத்தின் ஒரு சில பண்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

சாலமோனின் ஞானம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் (சாலமோனின் ஞானம் 6:12-16) ஞானத்தின் பண்புகளைப் பற்றி பேசுகிறது. ஞானத்தைத் தேடுவதும் கண்டடைவதும் கடினமான, சிக்கலான பணி அல்ல. ஞானத்தைத் தேடும் எவரும் அவளை எளிதில் கண்டுபிடிக்க முடியும், ஏனென்றால் அவள் ‘நம்முடைய கதவு அருகில் அமர்ந்திருப்பதை’ நாம் காணலாம் என்று இவ்வாசகம் கூறுகிறது.

ஞானம் இவ்வளவு எளிதாகக் கிடைப்பதால் – அதாவது, நம் கதவு அருகில் காத்திருக்கும் அளவுக்கு எளிதாகக் கிடைப்பதால் - ஞானத்தின் உயர்ந்த மதிப்பை உணராமல் போகும் ஆபத்து உள்ளது. தூய ஆவியார் நம் உள்ளங்களில் பொழிந்துள்ள ஞானம் என்ற கொடையை நாம் உணர்ந்து ஏற்று வாழும் வரத்திற்காக செபிப்போம். அதிலும் சிறப்பாக, சிந்திக்கும் திறனையே இழந்தவர்கள்போல் நடந்துகொள்ளும் நம் உலகத் தலைவர்கள், அறிவொளி பெறுவதற்கு இன்னும் அதிகமாக நாம் செபிப்போம். தூய ஆவியானவர் நுழைய எந்த இடமும் இல்லாத அளவுக்கு அவர்களின் மனங்களும் இதயங்களும் தான் என்ற அகந்தையால் நிரப்பப்பட்டுள்ளன. இன்று அவர்கள் கடவுளுக்கு முன் கணக்கு ஒப்படைக்க செல்லவேண்டியிருந்தால், அவர்கள் தகுந்த தயாரிப்புடன் இருப்பார்களா என்பது சந்தேகமே!

புத்திசாலியாக இருங்கள், தயாராக இருங்கள் என்பது இந்த ஞாயிற்றுக்கிழமை நற்செய்தியில் - மத்தேயு 25:1-13 - கூறப்பட்டுள்ள பத்து தோழியர் உவமையின் மையக் கருத்தாகும். “மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்” (மத்தேயு 25: 1) என்று தன் கதையை ஆரம்பிக்கும் இயேசு, உடனடியாக, அந்த பத்துத் தோழியரில், ஐந்து பேர் அறிவிலிகள், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், என்ற முக்கிய வேறுபாட்டையும் உணர்த்துகிறார். இவ்விரு குழுவினரும் நடந்துகொண்ட விதமே, உவமையின் கருவாக அமைந்துள்ளது. இவ்விரு குழுவினரும் தங்களை எவ்விதம் தயாரித்திருப்பர் என்பதை, சிறிது கற்பனை கலந்து சிந்திப்போம்.

முதலில், அறிவிலிகள் நடந்துகொண்ட விதத்தை அலசுவோம். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், அறிவிலிகள் ஐவரும் தலைகால் புரியாத மகிழ்ச்சி அடைந்திருப்பர். தாங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்ற பட்டியல் ஒன்றை, அவர்கள் தயார் செய்திருப்பர். தாங்கள் அணிந்து செல்லவேண்டிய உடைகள், நகைகள், அவற்றிற்குப் பொருத்தமாக வாங்கவேண்டிய காலணிகள் என்று, தங்கள் வெளித்தோற்றத்தை மெருகூட்டும் ஒரு பட்டியலைத் தயார் செய்திருப்பர். அதேபோல், தாங்கள் எடுத்துச்செல்லும் விளக்கு எப்படிப்பட்டதாய் இருக்கவேண்டும், அந்த விளக்கைச்சுற்றி எத்தனை மலர்கள் வைக்கப்படவேண்டும் என்றெல்லாம் அவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவர்கள் எண்ணத்தில் எழுதப்பட்ட அப்பட்டியலில், ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. அதுதான்... விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய்!

அறிவிலிகள் தயார் செய்த இப்பட்டியலுக்கு முற்றிலும் மாறாக, முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? தேவையானவைகளா? தேவையற்றவைகளா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தால், வாழ்வில் இழப்புக்களை சந்திக்கவேண்டியிருக்காது. வாழ்வில் பல வேளைகளில், தேவையானதை தூக்கி எறிந்துவிட்டு, தேவையில்லாததை சுமந்து செல்கிறோம் என்பதை உணர்த்தும் ஓர் உவமை இதோ:

சாதாரணப் பொருள்களைத் தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற ஒரு முனிவர், காட்டில் வாழ்கிறார் என்ற செய்தி, ஊரெங்கும் பரவியது. இதைக் கேட்ட இருவர், அம்முனிவரைத் தேடி காட்டுக்குச் சென்றனர். அவரைக் கண்டதும், அவர் பாதத்தில் விழுந்து வணங்கினர். தன்னைத் தேடிவந்ததன் காரணத்தை முனிவர் கேட்டபோது, இருவரும் மிகப் பணிவுடன், "குருவே, உங்களைப் போல உலகைத் துறந்து, உள்ளொளி பெறவே உங்களைத் தேடி வந்துள்ளோம்" என்று பொய் சொன்னார்கள். அவர்களை தன் சீடர்களாக ஏற்றுக்கொண்ட முனிவர், அடுத்தநாள், ஒரு மண்கலம் நிறைய தானியங்களையும், ஒரு குச்சியையும் அவர்களிடம் கொடுத்து, சூரிய ஒளியில், தானியங்களைக் காயவைத்து வருமாறு பணித்தார். முனிவர் தந்த பணியை அறவே வெறுத்த இருவரும், பொய்யானப் பணிவோடு, கலத்தையும், குச்சியையும் எடுத்துச் சென்றனர். கலத்தில் இருந்த தானியங்களை, சூரிய ஒளியில் வைத்து, குச்சியால் அதைக் கிளறிய வண்ணம் அமர்ந்திருந்தனர். அப்போது, சிறிது, சிறிதாக, அந்த தானியங்கள் தங்கமாக மாறத் துவங்கின. அந்த ஆனந்த அதிர்ச்சியில் தங்களையே மறந்த இருவரும், தங்கள் கையில் வைத்திருந்த குச்சியைத் தூர எறிந்துவிட்டு, தங்கமாய் மாறியிருந்த தானியங்களை அள்ளி எடுத்துகொண்டு, காட்டை விட்டு ஓடி மறைந்தனர். தொட்ட பொருள்கள் அனைத்தையும் தங்கமாய் மாற்றும் சக்தி, அவர்கள் கையிலிருந்த குச்சியில்தான் இருந்ததென்பதை அவர்கள் உணரவில்லை.

நம்மில் பலர், வாழ்வில் நல்லவை பலவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், எவ்விதம் தவறவிடுகிறோம் என்பதைக் கூறும் உவமை இது. குறிப்பாக, எதிர்பாராத மகிழ்வு நம்மை அடையும்போது, அந்த மகிழ்வின் ஊற்று எது என்பதையும், அந்த மகிழ்வை நிலைக்கச் செய்யும் வழிகள் எவை என்பதையும் மறந்து, கணப்பொழுது மகிழ்வில் கரைந்து போகும் ஆபத்து உண்டு.

பத்து தோழியர் உவமையை இன்னும் சிறிது ஆழமாக அலசுகையில், மற்றோர் அம்சமும் தெளிவாகிறது. மணமகன் வருவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது என்று உவமையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்திலாவது அறிவிலிகளாய் இருந்த அந்த ஐவரின் எண்ணங்கள், அவசியத் தேவையான எண்ணெய் பக்கம் திரும்பியிருந்தால், தவறை அவர்கள் சரி செய்திருக்கலாம். காத்திருந்த நேரத்திலும், அறிவிலிகளின் மனதில், அந்த காலத் தாமதத்தால் தங்கள் ஒப்பனை சிறிது, சிறிதாக கலைந்து வருகிறதே என்ற கவலைகூடியதால், அவசியமான எண்ணெயை அவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அந்தக் கவனக்குறைவால், அவர்கள் பங்கேற்க வந்திருந்த திருமண விழாவையே இழக்க வேண்டியிருந்தது.

பல வேளைகளில் தேவை என்று நாம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருப்பவை தேவையற்றவையாகவும், தேவையற்றதென ஒதுக்குவது தேவையுள்ளதாகவும் மாறும் விந்தையும் நம் வாழ்வில் நடக்கும். முக்கியமாக, மரணம் நமக்கு முன் அமர்ந்திருக்கும்போது, நமது உண்மையான தேவைகள் என்னென்ன என்பதைப்பற்றி நாம் அனைவருமே ஞான உதயம் பெற வாய்ப்பு உருவாகும்.

உலகத்தில் எதுவும் இதனை மூழ்கடிக்க முடியாது என்ற இறுமாப்பான விளம்பரத்துடன் புறப்பட்ட பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ (Titanic) கப்பல், தன் முதல் பயணத்திலேயே பனிப் பாறையில் மோதி மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் பலர், கோடீஸ்வரர்கள். மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி, அவர்கள் பெற்ற ஞான உதயங்களைப்பற்றி கதைகள் பல சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளில் இதுவும் ஒன்று. மூழ்கும் கப்பலில் இருந்து மக்களைக் காப்பாற்ற உயிர்காக்கும் படகுகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர். அவர்களில் ஒரு பெண், படகில் ஏறியபின், எதையோ எடுத்து வருவதற்காக, தனது அறைக்கு மீண்டும் ஓடிச்சென்றார். அவருக்கு மூன்று நிமிடங்களே வழங்கப்படும் என்ற எச்சரிக்கை வழங்கப்பட்டது. அவர் மிக வேகமாக தன் அறையை நோக்கி, இடுப்பளவு நீரில் சென்றார். வழியில் பணமும், நகைகளும் நிரம்பிய பல பைகள் தண்ணீரில் மிதந்ததைக் கண்டார். கப்பலில், அவர் தங்கியிருந்த அறையில், திறந்திருந்த பீரோவில், அவரது வைர நகைகள் மின்னின. ஆனால், இவை எதுவும் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர் கவனம் எல்லாம் பீரோவுக்கு மேல் ஒரு சிறு அட்டைப் பெட்டியில் இருந்த ஒரு சில ஆரஞ்சு பழங்கள் மீது சென்றது. அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர் மீண்டும் அந்த உயிர்காக்கும் படகில் ஏறினார்.

ஓரிரு மணி நேரங்களுக்குமுன், கப்பல், நல்லமுறையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தன் வைரநகைகளைவிட, ஆரஞ்சு பழங்களே அவசியமானவை, என்று அவர் சொல்லியிருந்தால், அவரைப் 'பைத்தியம்' என்று மற்றவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், கப்பல் மூழ்கும் வேளையில், அக்கப்பலுக்குள் மரணம் நுழைந்துவிட்டது என்பதை உணர்ந்த வேளையில், வாழ்வின் அவசியங்கள் என்று அவர்கள் எண்ணி வந்த பட்டியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.

2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகள், மனித சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட மரணக் கிருமி, கோவிட்-19, நம் வாழ்வில் தேவையானவை, தேவையற்றவை எவை என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், உலகின் தலைவர்களும், பெரு நிறுவனங்களும் இந்தக் கொள்ளைநோய்க்குப்பின் மீண்டும் தங்கள் பழைய நிலைக்கே திரும்பியிருப்பது வேதனையைத் தருகிறது. நாம் வாழப்போகும் வாழ்வு, நீதி, சமத்துவம், பரிவு, உடன்பிறந்த உணர்வு ஆகிய முக்கியத் தேவைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இறைவன் நமக்கு உள்ளொளியையும், அந்த உள்ளொளியின்படி நடக்க, தேவையான பரந்த, உறுதியான மனதையும் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

“தற்போது நான் அதிகம் 'பிசி'யாக இருக்கிறேன். பல முக்கியமான அலுவல்கள் உள்ளன. அவசியமானவை, அவசியமற்றவை, என்ற பாகுபாடுகளைச் சிந்திக்க, எனக்கு நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. வாழ்வின் இறுதி காலத்தில், மரணம் நெருங்கும் வேளையில், இந்த வேறுபாடுகளையெல்லாம் சிந்தித்துக் கொள்ளலாம்” என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டால், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் நம்மைக் காப்பாற்றவேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.” (மத்தேயு 25:13)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எதிர்நோக்குடன்‌ இருப்போம்‌...

இருபதாம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த மிகப்பெரிய ஆளுமை; தன்னுடைய வாழ்வால்‌ பலருக்கும்‌ உந்து சக்தியாக இருந்தவர்‌; ஒரு நாட்டின்‌ தந்தை என அழைக்கம்படுகின்றவர்‌... இப்படிப்‌ பல்வேறு சிறப்புகளுக்கு உரித்‌தானவர்‌ காந்தியடிகள்‌. அவர்‌ தன்னுடைய இறப்புக்கு முன்பு சொன்ன வார்த்தை இவை: “என்னுடைய வாழ்வு முழுவதும்‌ இருளே நிறைந்திருக்கின்றது. ஒளி பிறக்க வேண்டும்‌ என்று வேண்டுகின்றேன்‌.”

அமெரிக்காவில்‌ தோன்றிய மிகப்பெரிய மறைப்போதகர்‌; தன்னுடைய போதனையால்‌ பலரையும்‌ ஆண்டவர்‌ இயேசுவின்‌ பக்கம்‌ ஈர்த்தவர்‌ டி.எல்‌.மூடி.. அவர்‌ தாம்‌ இறப்பதற்கு முன்பு சொன்ன வார்த்தைகள்‌ இவை: “இன்று நான்‌ மாட்சியடைப்‌ போகும்‌ நாள்‌. அதனால்‌ மகிழ்ச்சியான நாள்‌. வெற்றி! வெற்றி! வெற்றி!”

காந்தியடிகளும்‌ டி.எல்‌. மூடியும்‌ மிகப்பெரிய ஆளுமைகள்‌. என்றாலும்‌, எதிர்நோக்கு இல்லாமல்‌ வாழ்ந்த காந்தியடிகளின்‌ கடைசிக்‌ காலம்‌ வேதனை நிறைந்ததாக இருந்தது. அதே வேளையில்‌, எதிர்நோக்குடன்‌ இருந்த டி.எல்‌.மூடியின்‌ கடைசிக்‌ காலம்‌: மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது.

ஒருவரிடம்‌ எதிர்நோக்கு இருக்கும்போது, அவர்‌ தன்னுடைய வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியோடு எதிர்கொள்கின்றார்‌ என்பதை மறைப்‌ போதகரான டி.எல்‌. மூடியின்‌ வாழ்க்கையிலிருந்து நாம்‌ அறிந்துகொள்ளலாம்‌. - பொதுக்‌ காலத்தின்‌ முப்பத்துஇரண்டாம்‌ - ஞாயிறான இன்று நாம்‌ வாசிக்கக்‌ கேட்ட இறைவார்த்தை, “எதிர்நோக்குடன்‌: இருப்போம்‌" என்ற சிந்தனையைத்‌ தரு கின்றது. நாம்‌ நமது வாழ்வில்‌ எதிர்‌ நோக்குடன்‌ இருக்கும்போது எத்தகைய சிகளைப்‌ பெறுகின்றோம்‌, அதை இழக்கும்போது எதையெல்லாம்‌ இழக்‌ கின்றோம்‌ என்பன குறித்து நாம்‌ சிந்திப்போம்‌.

அ. எதிர்நோக்கு இருக்கும்‌ இடத்தில்‌ துயரில்லை

பவுல் தன்னுடைய இரண்டாவது திருத்தூதுப்‌ பயணத்தின்‌ போது மாசிதோனியாவில்‌ இருந்த ஒரு துறைமுக நகரான தெசலோனிக்காவில்‌ நற்செய்தி அறிவிக்கச்‌ சென்றார்‌. அங்கு அவர்‌ நற்செய்தியை அறிவித்த போது எதிர்ப்பு வந்ததால்‌, அங்கிருந்து அவர்‌ ஏதென்ஸ்‌ நகருக்குத்‌ திரும்பி வரவேண்டியதாயிற்று. எனினும்‌ தெசலோனிக்க மக்கள்மீது கொண்ட அன்பினால்‌, அவர்‌ அவர்கள்‌ நடுவில்‌ தன்‌ “அன்பு மகனான" திமொத்தேயுவை அனுப்பி வைக்கின்றார்‌. திமொத்‌ தேயுவோ அவர்களைப்‌ பற்றிய நல்ல செய்தியோடு பவுலிடம்‌ வருகின்றார்‌. குறிப்பாக, அவர்கள்‌ பல்வேறு துன்பங்‌ களுக்கு நடுவிலும்‌ நம்பிக்கையோடு இருக்கின்றார்கள்‌ என்ற செய்தியைத்‌ திமொத்தேயு கொண்டு வருகின்றார்‌. அத்தோடு அவர்‌ பவுலிடம்‌, அவர்கள்‌ 'இறந்தோரைப்‌ பற்றிக்‌ கவலை கொண்டி ருக்கின்றார்கள்‌ என்ற செய்தியையும்‌ கொண்டு வருகின்றார்‌. இதற்கெல்லாம்‌ பதிலளிக்கும்‌ வகையில்‌ பவுல்‌ எழுதிய திருமுகம்தான்‌, தெசலோனிக்கருக்கு எழுதிய முதல்‌ திருமுகம்‌. அதிலிருந்து தான்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ எடுக்கப்பட்டுள்ளது.

தெசலோனிக்காவில்‌ இருந்தவர்கள்‌, கிறிஸ்துவின்‌ வருகைக்குமுன்‌ இறந்தவர்கள்‌ அவர்‌ வரும்போது நிலைவாழ்வில்‌ பங்குபெறுவார்களா? என்பதை நினைத்துத்‌ துயருற்றுக்‌ கொண்டிருந்தபோது, பவுல்‌ அவர்‌களிடம்‌, “எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப்‌ போல்‌ நீங்களும்‌ துயருறக்‌ கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார்‌ என நாம்‌ நம்புகிறோம்‌. அப்படியானால்‌, இயேசுவோடு ஒன்றித்த நிலையில்‌ இறந்‌தோரைக்‌ கடவுள்‌ அவருடன்‌ அழைத்து வருவார்‌” என்கிறார்‌ எனில்‌, தெசலோனிக்க மக்களின்‌ துயருக்குக்‌ காரணம்‌, அவர்கள்‌ எதிர்நோக்கில்லாமல்‌ வாழ்ந்ததே. ஆகும்‌. இன்று நாம்‌ எதிர்நோக்குடன்‌ வாழ்ந்தால்‌ துயருறத்‌ தேவையில்லை என்பது உறுதி.

ஆ. எதிர்நோக்குடன்‌ இருப்போர்‌ இடறிவிழார்

புனித பவுல்‌ இயேசு கிறிஸ்துவைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது, அவர்‌ கடவுளின்‌ ஞானமாக இருக்கின்றார்‌ (1 கொரி 1:24) என்பார்‌. அதே வேளையில்‌, இயேசு தம்மைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது, “உலகின்‌ ஒளி நானே” (யோவா 8:12) என்பார்‌. அப்படியென்றால்‌, இயேசு ஞானமாகவும்‌ ஒளியாகவும்‌ இருக்கின்றார்‌ என்று நாம்‌ பொருள்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌. இந்தப்‌ பின்னணியில்‌, இன்றைய முதல்‌ வாசகத்தையும்‌ நற்செய்தி வாசகத்‌தையும்‌ அணுகினால்‌, அவை ஆழ்ந்த பொருள்‌ தரும்‌ சாலமோனின்‌. ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல்‌ வாசகம்‌, “ஞானம்‌ ஒளிமிக்கது; மங்காது. அதன்பால்‌ அன்பு கூர்வோர்‌ அதை எளிதில்‌ கண்டுகொள்வர்‌” என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றது. ஏற்கெனவே, நாம்‌ சிந்தித்தது போல, இயேசு ஞானமாகவும்‌ ஒளியாகவும்‌ 'இருப்பதால்‌, அவர்மேல்‌ அன்பு கொள்‌வோர்‌ அவரை நிச்சயம்‌ கண்டு கொள்வர்‌. இதற்குச்‌ சான்றாக இருக்கின்றது இன்றைய நற்செய்தியில்‌ இயேசு சொல்லும்‌ பத்துத்‌ தோழியர்‌ உவமை. இயேசு சொல்லும்‌ இந்த உவமையில்‌ வரும்‌ ஐந்து அறிவிலிகள்‌: எண்ணெய்‌ இல்லாமல்‌ இருக்கின்‌றார்கள்‌. இதனால்‌ அவர்கள்‌ இடறி விழுகின்றார்கள்‌. முன்மதியுடைய மற்ற ஐந்து பேரோ எண்ணெயுடன்‌ இருக்‌கின்றார்கள்‌. இதனால்‌ அவர்கள்‌ இடறி விழாமல்‌ திருமண மண்டபத்திற்குள்‌. நுழையும்‌ பேற்றினைப்‌ பெறுகின்றார்கள்‌.

இ.எதிர்நோக்குடன்‌ இருப்பவர்‌ ஆண்டவருடன்‌ இருப்பர்‌

பவுல்‌ தெசலோனிக்க மக்களிடம்‌ எதிர்நோக்குடன்‌ வாழ்‌வதன்‌ முக்கியத்துவத்தைப்‌ பற்றிப்‌ பேசிக்‌ கொண்டே வருகையில்‌ இறுதியாக, “இவ்வாறு எப்போதும்‌ நாம்‌ ஆண்டவரோடு இருப்போம்‌" என்பார்‌. அப்படியென்றால்‌, யாரெல்லாம்‌. எதிர்நோக்குடன்‌ இருக்கின்றார்களோ, அவர்கள்‌ ஆண்டவரோடு இருப்பார்கள்‌ என்பது எத்துணை உயர்ந்த பேறு.

இன்றைக்குப்‌ பெரும்பாலான வர்களுக்கு எதிர்நோக்கு என்ற ஒன்று, இருப்பதே இல்லை. இதனால்‌ அவர்கள்‌ இழப்பது ஏராளம்‌. இன்றைய நற்‌செய்தியில்‌ இயேசு சொல்லும்‌ பத்துத்‌ தோழியர்‌ உவமையில்‌ வரும்‌ ஐந்து அறிவிலிகளை இதற்கு நாம்‌ எடுத்துக்‌ காட்டாகக்‌ கொள்ளலாம்‌. இன்றைக்கு இருப்பது போன்று அன்றைக்கு மின்சார வசதி கிடையாது. அதனால்‌ எண்ணெய்‌ விளக்குகள்தான்‌ பெரும்‌பாலும்‌ மக்களால்‌ பயன்படுத்தப்‌பட்டன. மணமகனை எதிர்‌ கொள்ள வேண்டிய மணமகளின்‌ தோழியர்‌ கையில்‌ போதுமான எண்ணெய்‌ வைத்திருப்பது இன்றியமையாதது அல்லவா! ஏனெனில்‌, மணமகன்‌ எப்போது வேண்டுமானாலும்‌ வரக்‌கூடும்‌. அதனால்‌ அவர்கள்‌ தங்களிடத்‌தில்‌ போதுமான எண்ணெய்‌ வைத்திராமல்‌ இருந்தது, அவர்கள்‌ எதிர்‌நோக்கு இல்லாமல்‌ இருந்ததற்கு அடையாளம்‌.

இதற்கு முற்றிலும்‌ மாறாக, முன்மதியுடன்‌ இருந்த ஐந்து தோழியர்‌ போதுமான எண்ணெயுடன்‌ எதிர்‌நோக்குடன்‌ இருந்தார்கள்‌. இதனால்‌ அவர்கள்‌ திடீரென மணமகன்‌ வந்தபோது திருமண மண்டபத்திற்குள்‌ நுழையும்‌ பேற்றினைப்‌ பெறுகின்றார்கள்‌.

ஒளியாம்‌ இயேசுவை நாம்‌ நம்‌ இதயத்தில்‌ தாங்கியிருந்தால்‌, கடவுளின்‌ ஞானமான இயேசு தன்னுடைய ஞானத்தை நமக்கு அபரிமிதமாகத்‌ தருவார்‌. அப்போது நம்மால்‌ எதிர்நோக்குடன்‌ வாழ்ந்து, நம்மிடம்‌ இருக்கின்ற துயரினைக்‌ களைந்து, ஆண்டவரோடு எப்போதும்‌ இருக்கும்‌ உயரிய பேற்றினைப்‌ பெறுவோம்‌.

சிந்தனைக்‌கு:

“எதிர்நோக்கு வழி நாம்‌. கடவுளை அணுகிச்‌ செல்கின்றோம்‌” (எபி 7:195) என்பார்‌ எபிரேயர்‌ திருமுகத்தின்‌ ஆசிரியர்‌. ஆகையால்‌, நாம்‌ எதிர்நோக்குடன்‌ வாழ்ந்து, ஆண்ட‌வரோடு உடனிருக்கும்‌ பேறு பெறுவோம்‌. அதன்வழியாக இறையருளை நிறைவாகப்‌ பெறுவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விண்ணரசுக்காக விழித்திருத்தல்

திருவழிபாட்டு ஆண்டு நிறைவுக்கு வர சில நாள்களே இருக்கிற வேளையில், இன்றும் வருகிற ஞாயிற்றுக் கிழமையும் விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமைகளை வாசிக்கிறோம். மேலும், திருவருகைக்காலம் அருகில் வருகிற வேளையில்,இவ்வாசகங்கள் இயேசுவின் இரண்டாம் வருகை, அதற்குத் தேவையான நம் தயார்நிலை பற்றியும் பேசுகின்றன.

விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக ஒப்பிடலாம்’ என்று தொடங்குகிற இயேசு, பத்துப் பேர் அல்லது பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார். உவமையின் இறுதியில், ‘விழிப்பாய் இருங்கள். அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது’ என அறிவுரை பகர்கின்றார்.

1. விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?

(அ) விண்ணரசு என்பது இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. (ஆ) விண்ணரசு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது வரும் நாளும் வேளையும் எவருக்கும் தெரியாது. (இ) விண்ணரசை எதிர்கொள்ள விழிப்பு மனநிலை அவசியம். (ஈ) சிலர் விண்ணரசுக்குள் நுழைவர், சிலருக்கு அனுமதி மறுக்கப்படும்.

இயேசு தம் சமகாலத்தில் நடந்த திருமண நிகழ்வுகளின் ஒரு வழக்கத்தை எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார். வழக்கமாக யூத சமூகத்தில் திருமண நிகழ்வு மணமகளின் வீட்டில் நடக்கும். திருமண நிகழ்வு முடிந்து, திருமண விருந்து மற்றும் கொண்டாட்டங்களுக்காக மணமகன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் அறை அல்லது புதிய இல்லத்திற்குத் திரும்புவான். அப்படி வருகின்ற மணமகனை, மணமகளின் தோழிகள் அவருக்கு முன் சென்று எதிர்கொண்டு வரவேற்பர். வருகை சில நேரங்களில் தாமதமாகிவிடும் என்பதற்காக கைகளில் விளக்குகளோடு காத்திருப்பர்.

இந்த உவமையில் காணும் பத்துப் பேரில் ஐந்து பேர் அறிவிலிகள் என்றும், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மணமகள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

2. இந்நிகழ்வில் வரும் இரு குழுவினருக்கும் மூன்று விடயங்கள் பொதுவாக இருக்கின்றன: (அ) இரு குழுவினரும் (அறிவிலிகள், முன்மதி உடையவர்கள்) மணமகனை எதிர்கொள்ள வருகின்றனர். (ஆ) இரு குழுவினரும் தூக்க மயக்கத்தால் உறங்குகின்றனர். (இ) மணமகனின் வருகையின் அறிவிப்பு கேட்டு இரு குழுவினரும் எழுந்து தங்கள் விளக்குகளைச் சரி செய்கின்றனர்.

3. இவ்விரு குழுவினருக்கும் மூன்று வித்தியாசங்கள் இருக்கின்றன: (அ) முன்மதி உடையவர்கள் விளக்குகளோடு எண்ணெயும் எடுத்துக்கொள்கின்றனர். அறிவிலிகள் விளக்குகள் மட்டும் எடுத்துச் செல்கின்றனர். (ஆ) முன்மதி உடையவர்கள் விளக்குகளில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிலிகள் அவர்களிடம் எண்ணெய் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். (இ) முன்மதி உடையவர்கள் திருமண மண்டபத்துக்குள் அல்லது இல்லத்துக்குள் நுழைகின்றனர். அறிவிலிகள் நுழைய இயலவில்லை.

4. முன்மதி உடையவர்கள், விவேகம் அல்லது முன்மதியோடு இருந்தாலும், அவர்கள் மூன்று நிலைகளில் நமக்கு நெருடல்களை ஏற்படுத்துகின்றனர்.

(அ) முன்மதி உடையவர்கள் தங்களோடு உடன்வந்த அறிவிலிகளை எச்சரிக்கவில்லை. வீட்டிலிருந்து புறப்படும்போதே, ‘என்னடி, நீங்க விளக்குகள் மட்டும் எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். எண்ணெயும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவர்களை எச்சரித்திருக்கலாம். இறையாட்சிக்கான தயாரிப்பு அவரவர் சொந்த விருப்பு வெறுப்பைப் பொருத்தது. யாரும் யாரையும் அங்கே எச்சரிக்கவும் அறிவுறுத்தவும் முடியாது. எரேமியாவின் புதிய உடன்படிக்கையின் (காண். எரே 31:31-32) முக்கியக் கூறும் இதுவே. சட்டங்கள் அவரவருடைய உள்ளங்களில் எழுதப்பெறும். யாரும் யாருக்கும் கற்பிக்கவோ அறிவுரை பகரவோ இயலாது.

(ஆ) முன்மதி உடையவர்கள் தங்கள் எண்ணெயில் கொஞ்சம் மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கலாம், அல்லது அதைப் பகிர்ந்திருக்கலாம். ஆனால் நிகழ்வின்படி அவர்கள் பகிரவில்லை. மேலும், ‘எங்களுக்கும் பற்றாமல் போகலாம்!’ என்று அவர்கள் கவனமாக இருக்கின்றனர். விண்ணரசில் யாரும் யாருடைய நற்பயன்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது. என் நற்பயனை நான் மற்றவருக்குக் கொடுக்கவோ, மற்றவருடைய நற்பயனை நான் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கனிகள் கொடுக்க வேண்டும்.

(இ) முன்மதி உடையவர்கள் தவறான அல்லது பலனற்ற அறிவுரை வழங்குகின்றனர். ‘நீங்கள் போய் வணிகரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!’ என அறிவிலிகளை அவர்கள் அனுப்பிவிடுகின்றனர். நள்ளிரவில் கடைகள் திறந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், இயேசுவின் சமகாலத்துக் கிராமங்களில், திருமண நிகழ்வு போன்ற நேரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்படும். ஏனெனில், அனைவரும் திருமணக் கொண்டாட்டங்களில் இணைந்திருப்பர். ஒருவேளை, இங்கே வணிகர், தானே கடையைத் திறந்து அவர்களுக்குக் கொடுக்க முன்வந்திருக்கலாம். நாம் தேவையில் இருக்கும்போது நமக்கு மற்றவர்கள் பல நேரங்களில் பலனற்ற அறிவுரைகள் வழங்குவார்கள் என்னும் வாழ்க்கைப் பாடத்தை நாம் இங்கே கற்க வேண்டும். அல்லது, நாம் ஒழுங்காக இல்லை என்றால், பலனற்ற அறிவுரைகள் நமக்கு வழங்கப்படும்.

5. அறிவிலிகளின் மூன்று பிரச்சினைகள் எவை?

(அ) தங்கள் விளக்குகள் அணைவதை மிகத் தாமதமாக உணர்கின்றனர்.

வீட்டின் கூரை பற்றிக்கொள்ளுமுன் தண்ணீரைத் தயார்நிலையில் வைப்பதை விடுத்து, கூரை பற்றி எரியத் தொடங்கியவுடன், தங்களிடம் தண்ணீர் இல்லை என்பதை உணரும் நபர்கள் இவர்கள். தாமதமாக ஒன்றை உணர்ந்தாலும், அந்த உணர்வால் பயன் ஒன்றுமில்லை. ஏனெனில், நாம் செயலாற்றுவதற்குப் போதிய நேரம் நமக்குக் கிடைப்பதில்லை.

(ஆ) மற்றவர்களிடம் இரக்கின்றனர்.

‘எங்களுக்கும் கொஞ்சம் எண்ணெய் தாருங்கள்’ என்று சக தோழியரிடம் இரக்கின்றனர். தயார்நிலையில் இல்லாதவர்கள் மற்றவர்களிடம் இரக்க வேண்டும். பல நேரங்களில், நாம் இரப்பது நமக்கு அந்நேரத்தில் கிடைப்பதில்லை.

(இ) அறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘நள்ளிரவில் கடைகள் திறந்திருக்குமா?’ என்ற கேள்விகூட அவர்களில் எழவில்லை. உடனடியாகப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். தங்கள் சக தோழியர்களை முழுமையாக நம்புகிறார்கள். அல்லது அவர்கள் சொல்லும் அறிவுரையை அறிவுக்கு உட்படுத்தாமல், வெறும் உணர்ச்சியால் உந்தப்பட்டுப் புறப்படுகின்றார்கள். அல்லது இறுதிவரை அவர்கள் பதற்றத்தோடு இருக்கிறார்கள். எண்ணெய் இல்லாத அவர்களிடம் வணிகரிடம் அதை வாங்குவதற்குப் பணம் இருந்ததா?

6. இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்களைக் கண்டறிவோம்.

முதலில், தன்னறிவு (self-knowledge). அதாவது, நான் யார், என்னிடமுள்ள நிறைகுறைகள் எவை, அவை இருப்பதற்கான காரணம் என்ன? என யாவற்றையும் பற்றிய தன்னறிவு முதலில் அவசியம்.

இரண்டாவது, தன்னறிவுடன் கூடிய தயார்நிலை (preparedness). அதாவது, குறைகளைக் கண்டறிந்த நான் அவற்றை என் நிறைகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் மற்றும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி.

மூன்றாவது, தன்னறிவோடும் தயார்நிலையிலும் இருந்தாலும், பிரச்சனைகள் வரும்போது எதிர்கொள்ளும் துணிவு (anticipation). தன்னறிவோடும் தயார்நிலையிலும் இருந்தால் பிரச்சனைகள் வராது என்று பொருள் அல்ல. பிரச்சனைகள் வரும். அவற்றை எதிர்கொள்ள உடனடியாக நான் என் படைக்கலன்களைச் சரி செய்யவும், புதுப்பித்துக்கொள்ளவும், பயன்படுத்தவும் வேண்டும்.

மேற்காணும் மூன்று பண்புநலன்களையும், ‘ஞானம்’ என்ற ஒற்றைச்சொல் கொண்டு அழைக்கிறது முதல் வாசகம் (காண். சாஞா 6:12-16). யார் ஞானத்தைத் தேடிச் செல்கிறார்களோ, ஞானம் அவர்களைத் தேடி வருகிறது. விழித்திருப்போர் ஞானம் பெறுவர். ஞானம் பெறுபவர் விழித்திருப்பர். அவர்கள் தங்கள் கவலைகளிலிருந்து விடுதலை பெறுவர்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-18), இரண்டாம் வருகை பற்றிய ஒரு கேள்விக்கு விடையளிக்கின்றார் பவுல். இயேசுவின் இரண்டாம் வருகை உடனடியாக இருக்கும் என்று பவுலின் சமகாலத்தவர் எதிர்பார்த்திருக்கின்றனர். உயிரோடு இருந்து வருகையை எதிர்கொள்பவர்கள் இயேசுவோடு செல்வர். ஆனால், இறந்தவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்னும் கேள்வி நம்பிக்கையாளர்களிடம் எழுகிறது. அவர்களும் உயிர்ப்பில் பங்கேற்பர். அவர்களை இயேசு தன்னோடு அழைத்து வருவார் எனச் சொல்லும் பவுல், ‘ஆண்டவரை எதிர்கொள்வோம், அவரோடு இருப்போம், ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்வோம்’ என்கிறார். எதிர்நோக்கு என்பது ஞானத்திற்கான முன்தேவையாக இருக்கிறது.

இறுதியாக,

இன்று நாம் விழிப்புநிலையில் இருக்கின்றோமா?

என்னைப் பற்றி, என்னைச் சுற்றி நடப்பவை பற்றிய என் தன்னறிவு என்ன? ஞானத்தை நான் தேடுகிறேனா? என் கவனக்குறைவால், முன்மதி இல்லாத நிலையால் எனக்கு ஏற்பட்ட இழப்புகள் எவை?

இன்னொரு பக்கம், பல நேரங்களில் வாழ்க்கை நமக்கு இரண்டாம் வாய்ப்புகளைத் தரவே செய்கின்றது. நம் விளக்குகள் அணைந்து போயிருந்தாலும் – அகுஸ்தினார் வாழ்வில் நடந்தது போல – கடவுள் நம் விளக்குகளை ஏற்ற வல்லவர். நாம் இருப்பது போல நம்மைத் தழுவிக்கொள்வார்.

நம் இதயத்தின் சொற்கள் எல்லாம், திருப்பாடல் ஆசிரியரின் சொற்களாக இருப்பதாக:

‘என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!
நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்.
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.’ (திபா 63).

இன்று நம் இந்து சமய சகோதர, சகோதரிகள் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். கடவுள்தாமே நம் உள்ளங்களை எதிர்நோக்கால் அன்பால் நிரப்புவாராக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வார்த்தை வழிபாட்டு சிந்தனைகள்

ஆடிப்பட்டம் தேடி விதை. காலத்தே பயிர் செய் - போன்ற பழமொழிகளை நாம் நமது வாழ்க்கையில் பல நேரங்களில் பயன்படுத்துகின்றோம், எதற்காக?.. உரிய காலத்தில் அறுவடை செய்வதற்காக; ஆம் அந்த உரிய காலம் என்ற நிலையை நினைவு கொண்டு செயல்படுபவர்கள் வெற்றியைத் தன தாக்கிக் கொள்கின்றனர்.

ஒரு அழகான பருவமங்கையின் கனவு தன் மணவாளனை சந்திப்பதில் தான் நிறைவு பெறுகின்றது. அத்தகைய சந்திப்பிற்கு முழுத்தகுதி கொண்ட அழகான பத்து கன்னியர்களுக்கும் சமமான வாய்ப்பு தரப்படுகின்றது. ஆனால் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டோர் ஐந்து பேர், தவற விட்டவர் ஐந்து பேர் - காரணம் என்ன?...

பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளில் 100% மதிப்பெண் பெறுபவன் போற்றப்படுகிறான் அதே வேளை 99 விழுக்காடு பெற்றவன் விட்டுவிடப் படுகின்றான் - காரணம். - "எந்த விடைத்தாள்" …. திருத்தும் ஆசிரியரின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றதோ அதற்கே 100 மதிப்பெண்கள் தரப்படுகின்றன. மணவாளன் வரும் நேரத்திற்கு முக்கியத்துவம் தந்து ஒளிதரும் விளக்கோடு எதிர்கொண்டவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். தனி மனிதனின் தகுதிகளைவிட, முன் மதியோடு கூடிய அவனுடைய தயாரிப்பும், தற்பாதுகாப்புள்ள காத்திருப்பும்; சுவையான கனிகளைக் கண்டிப்பாகத் தருகின்றன.

உவமையில் இயேசு: முன்மதி கொண்டவர்கள், அறிவிலிகள் என இருவகை பெண்களைக் குறிப்பிடுகின்றார். அறிவிலியான பெண்கள் மணவாளனை எதிர்கொள்ள எப்படி அழைப்பு பெற முடியும்…?

இவர்கள் அறிவு உள்ளவர்கள் தான் - ஆனால் முன்மதி விவேகம் இல்லாதவர்கள். எனவே அறிவிலிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இவர்கள் விளக்கில் உள்ள எண்ணெயின் பயன்பாட்டு நேரத்தைக் கணக்கிடாதவர்கள், அல்லது மணமகனின் வருகையின் நேரத்தைத் தங்கள் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொண்டவர்கள். அதாவது பிறருக்கும் உலக நடப்பிற்க்கும் முக்கியத்துவம் தராமல் தங்கள் செயல்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்பவர்கள். ஏன்… முன்மதி கொண்ட பெண்கள் அதிகமாக எண்ணையை எடுத்துக் கொள்ளும்போது இந்த அறிவிலிகள் (முமன்மதி இல்லாதவர்கள்) அவர்களை ஏளனமாகக் கூட நினைத்திருக்கலாம்.

எங்கள் ஊரில் மிக உயர்தர கல்வி கற்பிக்கும் பாரம்பரியம் கொண்ட பள்ளிகள் உண்டு அதில் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே, குழந்தை பிறப்பதற்கு முன்பே, உரிய முன் தொகையைச் செலுத்தி இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் உண்டு. அந்தப் பள்ளியின் தரத்தையும் அதனால் குழந்தைக்குக் கிடைக்க கூடிய மேன்மையையும் அறியாதவர்கள் இவர்களைக் கண்டு சிரிப்பதும் உண்டு.

இன்றைய நாட்களில் சேமிப்பு (mutual funds - பரஸ்பர நிதி)பற்றித் தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் வருகின்றது அதில் ஒருவர் கூறுவார்… உங்களுடைய கனவுகளுக்கு ஏற்பச் சேமியுங்கள். கனவு எவ்வளவு பெரியதோ, சேமிக்கும் தொகையும் காலமும் அதற்கு ஏற்பப் பெரிதாகவும், நீண்ட தாகவும் இருக்க வேண்டும். என்று. அழிந்து போகும் உலக வாழ்க்கைக்கு இவ்வளவு முன் எச்சரிக்கை வேண்டும் என்றால், நிலை வாழ்வைத் தக்க வைக்க நமது முன்எச்சரிக்கையும் - இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையும்… எத்தகைய தற்பாதுகாப்புடன் உறுதியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு விவேகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவு கொள்வோம்.

காலத்தே பயிர் செய்தாலும் உரிய காலத்தில் அறுவடை செய்ய நமக்கு ஞானம் தேவை என்பதை முதல் வாசகம் அறிவுறுத்துகின்றது. காட்சிகளாலும், சாட்சிகளாலும் அறிந்து கொண்டவைகளை அறிவு என்கிறோம் . அரிசிச் சோறு உடலுக்குத் தேவையான உணவு என்பது அறிவு, ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது ஞானம். ஒரு சோறு பதம் என்ற பக்குவமும் பாதுகாப்பும் அனைவருக்கும் நல்ல உணவைத் தரும் என்பதில் சந்தேகமும் இல்லை.

பாருங்கள்….. முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது" என்றார்கள். இது இந்தப் பெண்களின் சுயநலம் அல்ல…. ஆண்டவர் கூறுகின்றார் ……ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (லூக்கா நற்செய்தி 9:25) என்று. எண்ணையைத் தந்து உதவுவது தவறல்ல…. ஆனால் மணவாளனை சந்திக்க இயலாத நிலை உண்டானால்…..? எது முக்கியம் என்பதில் கவனம் தேவை.

முன்மதி உள்ளவர்கள் முழு வாழ்வை பெற்றுக் கொள்வர் என்கிறது இன்றைய நற்செய்தி அதேவேளை ஏன்?.. எப்படி?.. எதற்கு.?.. எங்கு?... என்ற கேள்விகளுக்குரிய பதிலைத் தர முன்மதியைத் துண்டி செயல்பட வழிகாட்டுவது ஆவியின் கொடையான ஞானம் என்பதையும் மறுக்க முடியாது. ஆவியின் கொடைகள் ஞானம், புத்தி, விமரிசை, அறிவு, திடம், பக்தி, மற்றும் தெய்வ பயம் என ஏழு. அதில் முதன்மையானது ஞானம். ஞானம் நிறைந்த, செயல்திறன் கொண்ட - முன்மதி உடையோராக விழிப்புணர்வுடன் - கிறிஸ்துவிற்குள், கிறிஸ்துவிற்காக: கிறிஸ்துவோடு இணைந்த எதிர் நோக்கும், தற்பாதுகாப்பும் கொண்ட வாழ்க்கை வாழ நாம் அழைக்கப்படுகின்றோம்.

எந்த எதிர்நோக்கும், முழுமை அடைய அதன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை; முழுமையானதாக இருக்க வேண்டும். இறை அருள் தரும் ஞானம் உயிரோட்டம் உள்ள விழிப்புணர்வால் (கிறிஸ்துவோடு இணைந்த வாழ்வால்) முழுமையான நமது நம்பிக்கை (எதிர் நோக்கின் கனியான விண்ணக வாழ்வு) நமது நிலை வாழ்வாக மாறும்.

எனவே விழிப்பாக இருப்போம். (மத்தேயு நற்செய்தி 25:13). ஏனெனில் அழைப்பும், அழைப்பவரும் வரும் நாளோ வேளையோ நமக்குத் தெரியாது.

இறைவன் நம்மோடு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஞானத்தை நேசிப்பவர்களாவோமா!

ஞானம் என்பது குற்றமில்லா, குறையில்லா அறிவு. முழுமையான அறிவு. ஐம்புலன்கள் வழி நாம் கற்றறிந்த அறிவை விட உயர்ந்து, தேர்ந்து, தெளிந்து, நாம் உணர்ந்து கொண்ட உள்ளறிவு எனலாம். ஞானம் இறைவனை உணரும் அறிவு. இறைவனே ஞானத்தின் உறைவிடம். இத்தகைய ஞானத்தைத் தேடுபவர்களாக, அதன்மீது ஆர்வம் கொண்டவர்களாக வாழவே இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.

பழைய ஏற்பாட்டில் ஞானத்தில் சிறந்தவராக விளங்கியவர் சாலமோன் அரசர். ஆண்டவரிடம் அவர் நாடுகளையோ சொத்துக்களையோ கேட்கவில்லை. மாறாக நாட்டு மக்களை சிறப்பாக வழிநடத்தவும் நீதி வழங்கவும் தேவையான ஞானத்தை அவர் கேட்டு பெற்றார். அவருடைய ஞானத்தை பார்க்க வந்த சேபா நாட்டு அரசி வியந்தார் என்றெல்லாம் நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். ஞானம் தூய ஆவியாரின் கொடை என்பதையும் நாம் அறிவோம். இவ்வாறாக ஞானம் என்பது எளிதில் கிடைக்கப்பெறாத வரம் எனலாம்.

இத்தகைய ஞானத்தை தேடுபவர்கள் இறைவனைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பதையே இன்றைய நற்செய்தி பகுதி நமக்கு விளக்குகிறது. இங்கே ஞானத்தின் மற்றொரு பரிமாணமான முன்மதியை பற்றி நாம் வாசிக்கிறோம். முன்மதியுடைய கன்னியர்கள் மணமகனை எதிர்கொள்ள விளக்குகளோடு மட்டுமல்ல, தேவைப்படுகின்ற எண்ணெயோடும் காத்திருந்தார்கள் என நாம் வாசிக்கிறோம். இங்கே மணமகனாவர் இறைவன். விளக்கு நம் மனம். எண்ணெய் இறைவனைத் தேடத் தூண்டும் ஞானம். அந்த ஞானமே இறைவனின் இல்லத்தில் இடம்பிடிக்க அக்கன்னியர்களுக்கு வழிகோலியது. அந்த ஞானமே அவர்களை தகுந்த விதத்தில் தயாரித்து இறைவனை உரிய காலத்தில் எதிர்கொள்ளச் செய்தது.

நான் சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். ஒரு இளம்பெண் தன் தோழிகளுடன் சுற்றுலா செல்ல தயாரானாள். தனக்கு தேவையான பணம், உடைகள், அவங்காரப்பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டாள். அப்பெண்ணின் தந்தை வழியனுப்ப தயாராக நின்றார். மகள் வெளியே வந்தவுடன் தன் மகளிடம் ஒரு கேனில் பெட்ரோலும், வழியிலே சாப்பிட கொஞ்சம் உணவுப் பொருட்களும், கைப்பேசிக்கு மின்சாரம் ஏற்ற தேவையான கருவியையும் கொடுத்து அதை காரின் டிக்கியில் வைக்குமாறு கூறினார். ஆனால் இந்த பெண்ணோ தன் தந்தையை அவமானப்படுத்தும் விதமாகப் பேசி தன் தோழிகளின் முன் தன்னை குழந்தை போல நடத்த வேண்டாம் எனச்சொல்லி தன் தேவைகளை தானே பார்த்துக்கொள்வதாகச் சொல்லி சென்றுவிட்டார். தோழிகளோடு பேசிக்கொண்டே மகிழ்ந்துகொண்டே சென்ற அவர்கள் தங்களை அறியாமல் வெகுதூரம் செல்ல .....தீடீரென எரிபொருளின்றி கார் நின்றது. கைப்பேசியும் அணைந்தது. யாராவது உதவிக்கு வருவார்கள் என காத்திருந்த அவர்களுக்கு பசியும் ஏற்பட்டு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தார்கள். அப்போதுதான் தன் தந்தையின் பேச்சைக் கேட்டிருக்கலாமே என்று அப்பெண் வருந்தினாள். தன் மகளைக் காணாத தந்தையோ ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்களோ என அஞ்சி அவர்களைத் தேடி வந்து மீட்டார்.

இந்நிகழ்வை நான் கூறக் காரணம் என்னவெனில் சில சமயங்களில் நாமும் ஞானத்தோடும் முன்மதியோடும் நடப்பதில்லை. நம்மை பிறர் வழிநடத்தவும் விடுவதில்லை. நாமாக வாழ்க்கைபயணத்தை ஞானமின்றி மேற்கொண்டு பின் பாதியில் திகைத்து நிற்கிறோம்......அந்த முன்மதியில்லா ஐந்து கன்னியர்களைப்போல.

ஆம்.
இன்றைய காலத்தில் உலக அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் ஞானத்தை வளர்த்துக்கொள்வதில் அசட்டைத் தனம் செலுத்துகிறோம். நாம் மட்டுமல்ல நமது குழந்தைகளையும் அவ்வழியே நடத்துகிறோம். இறைவனைத் தேடுவது, கோயிலுக்கு வருவது, மறைக்கல்வி வகுப்புகளில் பங்கு பெறுவது, மூத்தோர் அறிவுரை கேட்பது எல்லாம் இக்கால சொல்வழக்கின் படி "Out of fashon" ஆகிவிட்டது. கணினியில் சிறந்தவரும் கை.பேசியில் கைதேர்ந்தவரும் தவறான வழியில் கைநிறைய சம்பாதிப்பவரும் வாழ்க்கையை தாறுமாறாக வாழ்ந்து இன்பத்தில் திளைப்பவரும் தான் இக்கால ஞானிகள்.

இக்கருத்துகளை நம் மனதில் கொண்டு நமது உள்ளறவின் நிலை என்ன என்பதை சோதித்தறிய முயல்வோம். ஞானத்தோடு நம்மைத் தயாரித்து இறைவனை அடைய நாம் முயலாவிடில் நமது வாழ்வை இழக்க நேரிடும் என்பதை உணர்வோம். எனவே ஞானத்தை நேசிப்பவர்களாகி இறைவனை எதிர்கொள்ள நம்மை தகுதிப்படுத்த முயல்வோம்.

இறைவேண்டல்

ஞானத்தின் உறைவிடமே இறைவா! எம் உள்ளறிவைக் கூர்மையாக்கி முன்மதியுடையவராய் உம்மை எதிர்கொள்ளத் தேவையான தகுதியான மனநிலையை எமக்கு தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser