மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு மறையுரை
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சீராக்கின் ஞான நூல் 35: 12-14, 16-18 | 2திமொத்தேயு 4: 6-8, 16-18 | லூக்கா 18:9-14

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



மனிதர்‌ இருவரில்‌, ஏற்புடையவர்‌ ஒருவர்‌!

இறைவன்‌ முன்‌ தன்னைத்‌ தாழ்த்துகின்றவர்களே ஏற்புடையவர்‌ என்று, பரிசேயர்களுக்கு எடுத்து இயம்ப விரும்பினார்‌ இயேசு. அதற்காகச்‌ செபிக்க கோவிலுக்குச்‌ சென்ற பரிசேயரைப்‌ பற்றியும்‌, வரிதண்டுவோர்‌ பற்றியும்‌ அழகான உவமைக்‌ கூறுகிறார்‌. ஏறத்தாழ 50 உவமைகள்‌ நற்செய்தி ஏடுகளில்‌ காணப்படுகின்றன. அதில்‌ லூக்கா மட்டும்‌ 15 உவமைகளைத்‌ தருகிறார்‌. இன்றைய உவமையின்‌ மூலமாக, தாங்கள்‌ நேர்மையானவர்‌ என்று கருதி, மற்றவரை இகழ்ந்து ஒதுக்கும்‌ சிலரைப்‌ பார்த்து இந்த உவமையைச்‌ சொன்னார்‌ இயேசு (லூக்‌. 18:9).

இயேசுவின்‌ உவமையில்‌, இருவர்‌. இறைவனிடம்‌ வேண்ட கோவிலுக்குச்‌ சென்றனர்‌. ஒருவன்‌ பரிசேயன்‌. மற்றவர்‌ வரி தண்டுபவர்‌. பிறர்‌ தன்னைப்‌ பார்த்துப்‌ புகழ வேண்டும்‌ என்பதற்காக, எல்லோருடைய பார்வையிலும்‌ படும்படியான இடத்தில்‌ நின்றுகொண்டு செபிக்கிறான்‌ பரிசேயன்‌. கடவுளுடைய நன்மைத்‌ தனத்திற்காக அவரைப்‌ புகழ்வதற்கு மாறாக, தன்னைப்‌ புகழ்ந்து நன்றி கூறுகிறான்‌. கொள்ளையர்‌, வரிதண்டுவோர்‌, நேர்மையற்றோர்‌, விபச்சாரர்‌ ஆகியவரோடு தன்னை ஒப்பிட்டு, தான்‌ அவர்கள்போல்‌ இல்லாதது பற்றி இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான்‌. யூதச்‌ சட்டத்தின்படி இரு முறை நோன்பு இருப்பதாகவும்‌, தன்‌ வருவாயில்‌ பத்தில்‌ ஒரு பங்கைக்‌ கடவுளுக்குக்‌ கொடுத்ததாகவும்‌ அறிக்கையிடுகிறான்‌. இவன்‌ தன்‌ பாவங்களுக்குப்‌ பரிகாரம்‌ தேடவில்லை. இவைகளையெல்லாம்‌ தற்பெருமைக்காகவே கடைப்பிடிக்கிறான்‌.

ஆனால்‌ ஆயக்காரனோ ஆலயத்தின்‌ வெளியே நின்று, தன்‌ பாவத்தை உணர்ந்தவனாய்‌, வானத்தை அண்ணாந்து பார்க்கக்‌ கூடத்‌ துணியாமல்‌, மனத்துயரோடு தான்‌ பாவி என்று கூறி, இறைவனின்‌ இரக்கத்தைக்‌ கேட்டு மன்றாடினான்‌. பரிசேயனைப்போல ஆயக்காரன்‌ தன்னைப்‌ பிறரோடு ஒப்பிட்டுப்‌ பார்க்கவில்லை.

இவ்விருவருடைய செபங்களில்‌, தனது பாவங்களை உணர்ந்து, கடவுளுடைய சிறப்பான மன்னிக்கும்‌ அருள்‌ தனக்குத்‌ தேவை என்று உணர்ந்து மன்றாடிய வரி தண்டுவோரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்‌ என்று இமேசு அறிவிக்கிறார்‌ (மூன்றாம்‌ வாசகம்‌). “ஏனெனில்‌ தன்னைத்தானே உயர்த்துவோர்‌ தாழ்த்தப்‌ பெறுவர்‌; தன்னைத்‌ தானே தாழ்த்துவோர்‌ உயர்த்தப்‌ பெறுவர்‌” (லூக்‌. 18:14) என்று இயேசு தீர்ப்பளிக்கிறார்‌.

சிந்தனைக்காக
ஒரு பக்தன்‌, தான்‌ எந்தப்‌ பணியைத்‌ தொடங்கினாலும்‌, எந்த இடத்திற்கும்‌ செல்லும்‌ முன்னும்‌, “ ஒரு நிமிடம்‌ செய்வது சரிதானா? போவது சரிதானா? என சுய ஆய்வு செய்து, தன்‌ பணியைத்‌ தொடங்குவேன்‌” என்றான்‌. இன்னொரு பக்தன்‌, “ஒவ்வொரு நாளும்‌, நான்‌ மற்றவருக்கு உப்பாக, ஒளியாக, மடியும்‌ கோதுமை மணியாக இருந்தேனா? என்று ஆய்வு செய்துதான்‌ தன்‌ நாளைக்‌ கழிப்பேன்‌' என்றான்‌. ஆம்‌, இன்று நாம்‌ நம்மையே சுய ஆய்வு செய்ய அழைக்கப்படுகிறோம்‌. அப்போது நம்மில்‌ கொடி கட்டிப்‌ பறக்கும்‌ பரிசேயத்தனத்தை, தவறுகளை உணளர்ந்தவர்களாய்‌, வரிதண்டுவோன்‌ மனநிலை அடைவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம்‌ செய்ய வேண்டியவை எவை?

இயேசுவின்‌ காலத்தில்‌, நீதிமான்‌௧ளாக விளங்க பத்துக்கட்டளைகளைக்‌ கடைப்பிழத்தால்‌ போதும்‌ என்று சிலர்‌ எண்ணிக்கொண்டருந்தார்கள்‌. இயேசுவோ இன்றைய உவமையின்‌ வழியாக, எதைச்‌ செய்யக்கூடாதோ அதைச்‌ செய்யாமல்‌ இருந்தால்‌ மட்டும்‌ போதாது, எதைச்‌ செய்ய வேண்டுமோ அதைச்‌ செய்தால்தான்‌ நீதிமானாகத்‌ திகழ முடியும்‌ என்று கூறுகின்றார்‌.

கடவுளுக்கு ஏற்புடையவராகத்‌ திகழ கொள்ளை, நேர்மையற்ற தன்மை, விபசாரம்‌ போன்ற பாவங்களிலிருந்து நாம்‌ விடுபட்டு வாழ்ந்தால்‌ மட்டும்‌ போதாது. கடவுளின்‌ குழந்தைகளாக நாம்‌ வாழ விரும்பினால்‌, தற்‌பெருமையை ஒரு பக்கம்‌ ஒதுக்கி வைத்துவிட்டு [லூக்‌ 18:11) தாழ்ச்சியோடு (சீஞா 35:17) நாம்‌ பாவி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌.

மீட்பின்‌ வரலாற்றில்‌ எங்கெல்லாம்‌ பாவிகள்‌ தங்கள்‌ பாவங்களை ஏற்றுக்‌ கொண்டார்களோ, அங்கெல்லாம்‌ கடவுள்‌ பாவங்களை மன்னித்துள்ளார்‌.

தாவீது விபசாரம்‌, கொலை என்ற மாபெரும்‌ பாவங்களைப்‌ புரிந்தவர்‌. ஆனால்‌, அவர்‌ செய்த பாவங்களை இறைவாக்கினர்‌ நாத்தான்‌ சுட்டிக்காட்டியபோது அவர்‌ நான்‌ ஆண்டவருக்கு எதிராகப்‌ பாவம்‌ செய்துவிட்டேன்‌ (2 சாமு 12:13அ) என்றார்‌. நாத்தான்‌ தாவீதிடம்‌, ஆண்டவரும்‌ உனது பாவத்தை நீக்கிவிட்டார்‌ [2 சாமு 12:13 ஆ) என்றார்‌.

புதிய ஏற்பாட்டில்‌ கல்வாரியில்‌, சிலுவையில்‌ தொங்கிய இரு குற்றவாளிகளில்‌ ஒருவன்‌, நாம்‌ தண்டிக்கப்படுவது முறையே. நம்‌ செயல்களுக்கேற்ற தண்டனையை நாம்‌ பெறுகின்றோம்‌. இவர்‌ ஒரு குற்றமும்‌ செய்யவில்லையே (லூக்‌ 23:41) என்று சொன்னபோது அவனுக்கு பேரின்ப வீடு பரிசாகக்‌ கிடைத்தது [லூக்‌ 23:43].

காணாமற்போன மகன்‌ தந்தையிடம்‌, அப்பா, கடவுளுக்கும்‌ உமக்கும்‌ எதிராக நான்‌ பாவம்‌ செய்தேன்‌; இனிமேல்‌ நான்‌ உம்முடைய மகன்‌ எனப்படத்‌ தகுதியற்றவன்‌ (லூக்‌ 15:21) என்று சொல்லும்வரை அவனுக்கு முதல்‌ தரமான ஆடை கிடைக்கவில்லை; கைக்கு மோதிரம்‌ கிடைக்கவில்லை; காலுக்கு மிதியடி கிடைக்கவில்லை (லூக்‌ 15:22); விருந்து கிடைக்கவில்லை (லூக்‌ 15:23].

பாவிகளுள்‌ முதன்மையான பாவி நான்‌ (1 திமொ 1:15ஆ) என்ற புனித பவுலடிகளாரை இறைவன்‌ எல்லாத்‌ தீங்குகளிலிருந்தும்‌ விடுவித்து, அவருக்கு மீட்பின்‌ காரணரானார்‌ [2 திமொ 4:18]. எங்கே ஏற்றுக்கொள்ளுதல்‌ இருக்கின்றதோ அங்கே பாவமன்னிப்பு இருக்கும்‌. ஏற்றுக்கொள்ளுதல்‌ என்பது கடையில்‌ வாங்கக்கூடிய ஒரு பொருள்‌ அல்ல; மாறாக, அது தாழ்ச்சி என்னும்‌ புண்ணியம்‌ பெற்றெடுக்கும்‌ குழந்தை.

நாம்‌ இருப்பதுபோல நம்மையே நாம்‌ இறைவன்‌ முன்னால்‌ பிரசன்னப்படுத்திக் கொள்வதற்கு பெயர்தான்‌ தாழ்ச்சி. இறைவனின்‌ ஏற்புடைய மக்களாக வாழ, பாவிகளான நாம்‌ செய்ய வேண்டியவை எவை?

  1. உவமையில்‌ வந்த வரிதண்டுபவரைப்போல்‌ இறுமாப்புக்கு இடம்‌ கொடாமல்‌ இறைவன்‌ முன்னால்‌ நம்மையே நாம்‌ தாழ்த்திக் கொள்வது (சீஞா 35:17).
  2. நாம்‌ பாவி என்பதை ஏற்றுக்கொள்ளுதல்‌.
  3. மேற்சொல்லப்பட்ட இரண்டு எண்ணங்களையும்‌ நமது மனத்தில்‌ முள்ளெனத்‌ தைத்துக்‌ கொள்ளுதல்‌.

வயதான பயணி ஒருவர்‌ கடுங்குளிரிலும்‌, மழையிலும்‌ இமய மலைக்குப்‌ புறப்பட்டார்‌. இந்த குளிரிலும்‌, மழையிலும்‌ எப்படிச்‌ செல்லப்போகின்றீர்கள்‌? என்றார்‌ சத்திரத்திற்குச்‌ சொந்தக்காரர்‌.

என்‌ மனம்‌ ஏற்கெனவே அங்கே போய்‌ சேர்ந்துவிட்டது. அதைப்‌ பின்‌ தொடர்வது மிகவும்‌ எளிது என்றார்‌ அந்த முதியவர்‌ மகிழ்ச்சியோடு.
மேலும்‌ அறிவோம்‌ :

இருள்நீங்கி இன்பம்‌ பயக்கும்‌ மருள்நீறங்கி
மாசறு காட்சி யலர்க்கு (குறள்‌ : 352.)

பொருள்‌ : அறியாமை ஆகிய மயக்கம்‌ களைந்து மெய்யறிவு பெற்றவர்க்கு மாசற்ற உண்மை தோன்றும்‌; அறியாமை இருள்‌ விலகுவதால்‌ இன்பப்‌ பேறு வாய்க்கும்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு ஞானியிடம்‌ ஒருவர்‌ சென்று தமக்கு ஞானத்தைக்‌ கற்றுக்‌ கொடுக்கும்படி கேட்டார்‌. ஞானி அவரிடம்‌, “உங்களுக்கு என்ன தெரியும்‌?" என்று கேட்டதற்கு அவர்‌, “ எனக்குக்‌ கராத்தே தெரியும்‌; கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட்‌ விளையாட்டுக்கள்‌ தெரியும்‌" என்று அடுக்கிக்‌ கொண்டே போனார்‌. ஞானி அவரிடம்‌, “உங்களுக்கு என்னால்‌ எதையும்‌ கற்றுக்கொடுக்க முடியாது, ஏனெனில்‌ உங்களுடைய பாத்திரம்‌ ஏற்கெனவே நிரம்பி விட்டது. உங்களுடைய பாத்திரத்தைக்‌ காலி செய்தால்‌ மட்டுமே அதை என்னால்‌ நிரப்ப முடியும்‌” என்றார்‌.

கடவுள்‌ நம்‌ உள்ளத்தை நிரப்ப வேண்டுமென்றால்‌, முதலில்‌ நமது உள்ளத்தை ஆக்கிரமித்துக்‌ கொண்டிருக்கும்‌ அனைத்தையும்‌ குறிப்பாக “நான்‌' என்னும்‌ ஆணவச்‌ செருக்கை, வெளியேற்ற வேண்டும்‌, கடவுள்‌ நம்மிடம்‌ கேட்பது: “உனது உள்ளத்தைக்‌ காலி செய்து கொடு; நான்‌ அதில்‌ குடிபுக வேண்டும்‌.”

இன்றைய நற்செய்தியில்‌ வருகின்ற பரிசேயரின்‌ உள்ளம்‌ “நான்‌” என்னும்‌ செருக்கினால்‌ நிறைந்திருந்தது. அவர்‌ தனது நற்செயல்கள்‌ என்னும்‌ “புராணத்தைப்‌' பாடினார்‌. அவர்‌ தன்னைத்‌ தானே நீதிமானாக ஆக்கிக்‌ கொண்டார்‌. எனவே அவர்‌ கடவுளுக்கு ஏற்புடையவராக வீடு திரும்பவில்லை. குளிக்கப்‌ போனவர்‌ சேற்றைப்‌ பூசிக்கொண்டு வந்த கதைதான்‌ அவருடைய கதை. “உள்ளத்தில்‌ செருக்குடன்‌ சிந்திப்போரைக்‌ கடவுள்‌ சிதறடிக்கிறார்‌” (லூக்‌ 1:52) என்பதை அவர்‌ மறந்துவிட்டார்‌.

மாறாக, வரி தண்டுவோர்‌, பாவி என்று சமுதாயத்தில்‌ கருதப்பட்டவர்‌. தமது பாவத்தை உணர்ந்தவராக, “கடவுளே, பாவியாகிய என்மீது இரக்கமாயிரும்‌” என்று சொல்லித்‌ தமது மார்பில்‌ அறைந்து கொண்டார்‌ (லூக்‌ 18:13). பாவ அறிக்கை செய்தார்‌; பாவ. மன்னிப்புப்‌ பெற்றார்‌: கடவுளுக்கு எற்புடையவராக வீடு திரும்பினார்‌. நாம்‌ பாவம்‌ செய்யவில்லை என்று கூறுவோமானால்‌, நம்மையே நாம்‌ ஏமாற்றிக்‌ கொள்கின்றோம்‌. மாறாக நம்‌ பாவங்களை ஏற்றுக்‌ கொண்டால்‌, கடவுள்‌ நம்மை மன்னித்து நம்மைத்‌ தூய்மைப்படுத்துவார்‌ என்று திருத்தூதர்‌ யோவான்‌ கூறுகின்றார்‌ ( 1 யோவா 1:8-9).

கடவுள்‌ நம்முடைய வேண்டுதலைக்‌ கேட்க வேண்டுமென்றால்‌, நாம்‌ நம்மைத்‌ தாழ்த்த வேண்டும்‌. ஏனெனில்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌ கூறுவது போல, "தங்களைத்‌ தாழ்த்துவோரின்‌ வேண்டுதல்‌ முகில்களை ஊடுருவிச்‌ செல்லும்‌” (சீஞா 35:17). இன்றைய பதிலுரைப்‌ பாடலும்‌ கூறுகிறது: “இந்த ஏழை கூவி அழைக்க, ஆண்டவர்‌ அவனுக்குச்‌ செவிசாய்த்தார்‌" (திபா 34:6). "உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்‌ ஆண்டவர்‌ இருக்கிறார்‌; நைந்த நெஞ்சத்தாரை அவர்‌ காப்பாற்றுகின்றார்‌” (திபா 34:18). திருப்பா 51 கூறுகிறது: "நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தைக்‌ கடவுள்‌ அவமதிப்பதில்லை” (தியா 51:17). கடவுள்‌ நம்மிடம்‌ எதிர்பார்ப்பது தாழ்ச்சி. தாழ்ச்சியுடையோர்‌ எழுச்சியடைவர்‌: தாழ்ச்சியில்லாதவர்‌ வீழ்ச்சி அடைவர்‌.

சைவ சிந்தாந்தக்‌ கோட்பாட்டின்படி மனிதனை வாட்டி வதைக்கின்ற மலங்கள்‌ மூன்று. அவை முறையே ஆணவம்‌, கன்மம்‌, மாயை. ஆணவம்‌ என்பது “தான்‌” என்ற செருக்கு. கன்மம்‌ என்பது தான்‌ செய்கிற ஒவ்வொரு செயலுக்கும்‌ கைமாறு எதிர்பார்ப்பது. மாயை என்பது நிலையில்லாதவந்றை நிலையானவை எனக்‌ கருதுவது. இம்மும்மலங்களில்‌ கன்மம்‌, மாயை அழிந்தாலும்‌, ஆணவம்‌ அவ்வளவு எளிதில்‌ அழியாது. பெருங்காயர்‌ சட்டியிலிருந்து பெருங்காயத்தை வெளியே கொட்டிவிட்டாலும்‌ சட்டிமினுள்‌ பெருங்காயத்தின்‌ வாசனை வீசிக்கொண்டே இருக்கும்‌. அவ்வாறே எல்லாப்‌ பற்றுகளையும்‌ துறந்த நிலையிலும்‌ ஆணவ மலத்தின்‌ வாசனை அகலாது. நாயை விரட்டிவிடலாம்‌, ஆனால்‌ ஆணவத்தை விரட்டி வெற்றிகொள்ள முடியாது என்கிறார்‌ தாயுமானவர்‌.

பிடித்ததையே தாபிக்கும்‌ பேராணவத்சை
அடித்துத்‌ துரக்தவல்லார்‌ ஆர்காண்‌ பராபரமே" (பராபரக்‌ கண்ணி)

*நான்‌' என்னும்‌ அகப்பற்றையும்‌, 'எனது' என்னும்‌ புறப்‌ பற்றையும்‌ அறுக்கின்றவர்களே விண்ணகப்‌ பேரின்பம்‌ அடைய முடியும்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌.

“யான்எனது என்னும்‌ செருக்குஅறுப்பான்‌ வானோர்க்கு
உயர்ந்த உலகம்புகும்‌' (குறள்‌.346)

இரண்டாவதாக, ஆணவத்தின்‌ வெளிப்பாடு மற்றவர்களை இழிவாகக் கருதும்‌ மனநிலை. இயேசு கூறும்‌ உவமையிலே பரிசேயர்‌ தன்னை உயர்த்திப்‌ பேசிவிட்டு, வரிதண்டுவோரை இழிவாக விமர்சனம்‌ செய்கின்றார்‌. ஒரு சிலர்க்கு அடுத்தவர்களைப்‌ பற்றிக்‌ குறைவாகப்‌ பேசுவது இனிமையான பொழுதுபோக்கு, கைவந்த கலை. எப்போதும்‌ பிறரைப்பற்றிப்‌ புறணி பேசிவந்த ஒரு பாட்டியிடம்‌, “நரகத்துக்குப்‌ போனா எப்படி புறணி பேசுவீர்கள்‌?" என்று கேட்டதற்குப்‌ பாட்டி கூறினார்‌: “அங்கே ஒருத்தி கிடைக்காமலா போறா!”

நாம்‌ பிறனரைத்‌ நீர்ப்பிடக்‌ கூடாது, ஏனெனில்‌ தீர்ப்பிடும்‌ அதிகாரம்‌ கடவுள்‌ ஒருவருக்கு மட்டுமே உரியது என்கிறார்‌ திருத்தூதர் யாக்கோபு (யோக்‌ 4:11-12)

என் அம்மா தன் சின்ன மகனிடம் 30ரூபாய் கொடுத்துச் சல்லடை வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டார். கடைக்குப்போன சிறுவன்‌ சல்லடை வாங்காமல்‌ வீடு திரும்பினான்‌. ஏன்‌ அவன்‌ சல்லடை வாங்கவில்லை என்று அம்மா கேட்டதற்கு அவன்‌ கூறியது: “போம்மா! சல்லடை பூரா வெறும்‌ பொத்தலாக இருக்கின்றது.” சர்வமும்‌ பொத்தல்‌ மயமாகவுள்ள சல்லடை ஊசியைப்‌ பார்த்து “உனது காதில்‌ ஒரு பொத்தல்‌ இருக்கின்றது" என்றதாம்‌. நாம்‌ நம்மிடத்தில்‌ பல குற்றங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களுடைய சில குற்றங்களைக்‌ கண்டுபிடிப்பதுதான்‌ பரிசேயத்தனம்‌ எனப்படும்‌.

திருப்பலியில்‌, “எனது பாவமே, எனது பெரும்‌ பாவமே” என்று சொல்லி நமது நெஞ்சில்‌ அடித்துக்‌ கொள்கின்றோம்‌. ஆனால்‌ திருப்பலி முடிந்து வெளியே சென்றதும்‌, “உன்‌ பாவமே, உன்‌ பெரும்‌ பாவமே” என்று அடுத்தவர்‌ நெஞ்சில்‌ அடிக்கிறோம்‌, இது முறையா?

நாம்‌ ஒவ்வொரு நாளும்‌ தலை கூனிந்து, நெஞ்சில்‌ அடித்துக்‌ கொண்டு சொல்ல வேண்டியது: “ஆண்டவரே! பாவியாகிய என்மேல்‌ இரக்கமாயிரும்‌.”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வீழ்ச்சிக்கு முந்தியது வீண்‌ பெருமை

வாய்விட்டுச்‌ சொல்லவதனால்‌ குறைந்துபோகும்‌ சங்கதிகள்‌ இரண்டு. அவை புண்ணியமும்‌ பாவமும்‌. நீ எய்த புண்ணியங்களை நீயே எடுத்துச்‌ சொல்வதனால்‌ புண்ணியம்‌ குறையும்‌. நீ செய்த பாவங்களை நீயே பிறர்முன்‌ அறிக்கையிடுவதால்‌ பாவம்‌ குறையும்‌. குறைய வேண்டியது பாவம்‌. நீறைய வேண்டியது புண்ணியம்‌. ஆதலால்‌ நீ செய்த புண்ணியத்தைக்‌ கூறாதே! பாவத்தைக்‌ கூறு!

விவிலியம்‌ வலியுறுத்தும்‌ செபிக்கத்‌ தேவையான 4 பண்புகள்‌:

  1. நம்பிக்கையோடு செபி. (நூற்றுவர்‌ தலைவர்‌ லூக்‌. 7:1-10).
  2. விடாமுயற்சியோடு செபி. (கனானியப்‌ பெண்‌ மத்‌. 15:21-28).
  3. உறுதிப்பாட்டோடு செபி. (கேட்பது கிடைத்துவிட்டது என்ற உணர்வுடன்‌)
  4. தாழ்ச்சியோடு செபி. (பரிசேயரும்‌ வரிதண்டுபவரும்‌ லூக்‌. 18:9-14).

அரசர்‌ ஒருவர்‌ சிறைக்‌ கைதிகளைப்‌ பார்வையிடச்‌ சென்றார்‌. நீங்கள்‌ ஏன்‌ சிறைக்கு வந்தீர்கள்‌? என்று ஒவ்வொரு கைதியாகக்‌ கேட்டு வந்தார்‌. சில கைதிகள்‌ தாங்கள்‌ நல்லவர்கள்‌, சந்தர்ப்பச்சூழல்‌ கங்களை இங்கே தள்ளிவிட்டது என்று சொன்னார்கள்‌. வேறுசிலர்‌ காவல்துறையினர்‌ பொய்‌ வழக்குப்‌ போட்டுத்‌ தங்களை இழுத்து வந்ததாகக்‌ கூறினார்கள்‌. இன்னும்‌ சிலர்‌ எதிரிகளின்‌ சூழ்ச்சி வலையில்‌ மாட்டிக்‌ கொண்டதன்‌ விளைவு என்றார்கள்‌. ஆனால்‌ ஒரேயொரு கைதி மட்டும்‌ தான்‌ செய்தது பெரிய குற்றம்‌. அதற்கான தண்டனையே இந்தச்‌ சிறைவாழ்வு என்று சொல்லிக்‌ கண்‌ கலங்கினான்‌. உடனே அரசர்‌ சிறை அலுவலரை அழைத்து “இத்தனை நல்லவர்கள்‌ இருக்கும்‌ இடத்தில்‌ இந்தக்‌ குற்றவாளி இருக்கக்கூடாது. இவனைச்‌ சிறையினின்று வெளியேற்றுங்கள்‌” எனச்‌ சொல்லிக்‌ குற்றத்தை ஒப்புக்‌ கொண்டவனை விடுதலை செய்யுமாறு ஆணையிட்டான்‌.

“தெய்வம்‌ வாழும்‌ பீடத்துக்கருகில்‌ நிற்பவரெல்லாம்‌ அந்தப்‌ பீடத்தில்‌ வாறும்‌ தெய்வத்துக்கு அருகில்‌ நிற்பதில்லை ' என்பதுதான்‌ இன்றைய நற்செய்தி. .

' செபம்‌ நீதிமானைப்‌ பாவியாக்க முடியும்‌. பாவியை நீதிமானாக்க முடியும்‌. செபிப்பவனுடைய மனநிலையைப்‌ பொறுத்தது.

“இருவர்‌ இறைவனிடம்‌ வேண்டக்‌ கோவிலுக்குச்‌ சென்றனர்‌. ஒருவர்‌ பரிசேயர்‌. மற்றவர்‌ வரித்தண்டுபவர்‌... பரிசேயரல்ல, வரி தண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்‌ ” (லூக்‌. 18:10-14) என்கிறார்‌ இயேசு. அதற்கான காரணங்கள்‌ பல.

1. பரிசேயரின்‌ செபம் செருக்குமிக்கது. செருக்கும்‌ செபமும்‌ எப்படி இணைந்து செல்லமுடியும்‌? இரபி சிமியோன்‌ பென்சக்காய்‌ என்ற பரிசேயர்‌ சொல்வாராம்‌: “உலகத்தில்‌ இரண்டே இரண்டு நேர்மையாளர்கள்தான்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌ அது நானும்‌ என்‌ மனைவியுமாகத்தான்‌ இருக்க முடியும்‌. ஒரேயொரு நேர்மையாளர்தான்‌ இருக்கிறார்‌ என்றால்‌ என்‌ மனைவிகூட அல்ல. அது நான்‌ மட்டுமே”. “கடவுளே, நான்‌ கொள்ளையர்‌, நேர்மையற்றோர்‌, விபச்சாரர்‌ போன்ற மற்ற மக்களைப்‌ போலவோ இந்த வரிதண்டுபவரைப்‌ போலவோ இல்லாததுபற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்‌ ' - இதுதான்‌ பரிசேயரின்‌ செபம்‌. ““அழிவுக்கு முந்தியது அகந்தை. வீழ்ச்சிக்கு முந்தியது வீண்‌ பெருமை” (நீ. மொ. 16:18) என்ற எச்சரிக்கையை ஒரங்கட்டிய செபம்‌. “எங்கள்‌ மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி மேகத்தால்‌ உம்மை மூடிக்கொண்டீர்‌ ” என்று புலம்பல்‌ 3:44 குறிப்பிடும்‌ மேகம்‌ மனித அகந்தையே! அதனால்தான்‌ “தங்களைத்‌ தாழ்த்துவோரின்‌ வேண்டுதல்கள்‌ முகில்களை ஊடுருவிச்‌ செல்லும்‌ அது ஆண்டவரை அடையும்‌ வரை அவர்கள்‌ ஆறுதல்‌ அடைவதில்லை” என்கிறது சீராக்கின்‌ ஞானம்‌ 35:17.

தாழ்ந்த நிலம்‌ நோக்கித்தான்‌ தண்ணீர்‌ பெருக்கெடுத்து ஓடும்‌. தாழ்ச்சியுள்ள நெஞ்சில்தான்‌ தெய்வ அருள்‌ சுரந்து பாயும்‌.

2. பரிசேயரின்‌ செபம்‌ தன்னையே நோக்கியது. இறைவனை நோக்கியது அல்ல. திருவிவிலியத்தின்‌ புதிய பொது மொழி பெயர்ப்பு பதிவு செய்யத்‌ தவறிய முக்கிய குறிப்பு “தனக்குள்ளே செபித்தான்‌ (18:12) என்பது. மெளனமாகச்‌ செபித்தான்‌ என்பதல்ல அது. வார்த்தைக்கு வார்த்தை வாய்விட்டு உரக்கத்தான்‌ செபித்தான்‌..

பரிசேயர்‌ செபம்‌ செய்த முறை தவறா? அல்ல. நின்று செபித்த உடல்நிலை தவறா? அல்ல. அதுதான்‌ யூத மரபு. சொன்ன வார்த்தைகள்‌ தவறா? அல்ல. இன்னும்‌ சொல்லப்போனால்‌ பழைய ஏற்பாட்டுச்‌ செபங்களை எதிரொலிக்கும்‌ வார்த்தைகள்‌. அவரது செபம்‌ திருப்பாடல்‌ 17:3-5 போன்றது. சொன்னது செய்தது எல்லாம்‌ உண்மையாகக்‌ கூட இருக்கலாம்‌. ஆனால்‌ தன்னை மையப்படுத்திய அவரது மனநிலை தவறு. தான்‌ எவ்வளவு நல்லவன்‌ என்ற தகவலைக்‌ கடவுளுக்குத்‌ தெரிவித்த சொல்திறம்‌ கொண்ட செபம்‌. தெய்வத்துக்கு முன்னே மனிதன்‌ தன்னைப்‌ பற்றிப்‌ பீற்றிக்‌ கொள்வதா அவருக்குத்‌ தெரியாதது போல?

“ஆண்டவர்‌ கூறுவது இதுவே: ஞானி தன்‌ ஞானத்தைக்‌ குறித்து பெருமை பாராட்ட வேண்டாம்‌. வலியவர்‌ தன்‌ வலிமையைக்‌ குறித்துப்‌ பெருமை பாராட்ட வேண்டாம்‌. செல்வர்‌ தம்‌ செல்வத்தைக்‌ குறித்துப்‌ பெருமை பாராட்ட வேண்டாம்‌” (எரேமி 9:23). துறவிக்குக்‌ கூடத்‌ தான்‌ பற்றொழித்தவன்‌” என்ற ஆணவம்‌ வரலாம்‌. உடைமையைத்‌ தியாகம்‌ செய்தால்‌ மட்டும்‌ போதாது. செய்தவன்‌ நான்‌” என்ற எண்ணத்தையும்‌ தியாகம்‌ செய்ய வேண்டும்‌.

3. பரிசேயரின்‌ செபம்‌ பிறரை இழிவுபடுத்தியது. பிறரை இழிவுபடுத்தி இறைவனைப்‌ புகழ முடியுமா? கொள்ளையரைப்‌ போல்‌, வரி தண்டுபவரைப்‌ போல்‌ தான்‌ இல்லை என்கிறார்‌ பரிசேயர்‌. பக்கத்து வீட்டுக்காரனைப்போல்‌ இரு, மேல்மாடியில்‌ இருப்பவனைப்‌ போல வாழு என்றா இயேசு சொல்கிறார்‌? அடுத்த வீட்டுக்காரனா நமது நன்மைத்தனத்துக்கு எடுத்துக்காட்டு? கடவுளே நன்மைத்தனம்‌, புனிதம்‌ அனைத்துக்கும்‌ ஊற்று, மற்றும்‌ எடுத்துக்காட்டு. “உங்கள்‌ விண்ணகத்‌ தந்தை நிறைவுள்ளவராய்‌ இருப்பது போல நீங்களும்‌ நிறைவுள்ளவர்களாய்‌ இருங்கள்” (மத்‌. 5:48) என்பதுதானே இயேசுவின்‌ அழைப்பு! கடவுளின்‌ நன்மைத்‌ தனத்துக்கு முன்னே மனிதனின்‌ நன்மைத்தனம்‌, புனிதம்‌ எல்லாம்‌ ஒன்றுமில்லாமையே! அந்த நிலையில்‌ நன்மைத்தனமே தானாக இருக்கும்‌ கடவுளுக்கு முன்னே வரிதண்டுபவரைப்‌ போல நான்‌ பாவி' என்ற உணர்வு மட்டுமே எழும்‌. “இரக்கமாயிரும்‌ என்ற: செபம்‌ மட்டுமே வரும்‌. இதை உணர நான்‌ தவறுபவன்‌ என்ற பணிவு, தவறை ஏற்றுக்‌ கொள்ளும்‌ துணிவு... இவையே கடவுளைக்‌ காண்பதற்கான படிக்கட்டுகள்‌.

ஒரு நாள்‌ முகமது நபியிடம்‌ ஒரு சீடன்‌ வந்தான்‌. “நபிகளே, என்னுடைய ஆறு சகோதரர்களும்‌ உறங்குகிறார்கள்‌. நான்‌ ஒருவன்‌ மட்டுமே விழித்திருந்து அல்லாவைத்‌ தொழுகிறேன்‌” என்றான்‌. அதற்கு நபிகள்‌ “உன்‌ சகோதரர்களுக்கு எதிராகக்‌ குற்றம்‌ சொல்லி அல்லாவைத்‌ தொழுவதைவிட நீயும்‌ அவர்களைப்‌ போல்‌ உறங்குவது நல்லது” என்று பதிலளித்தார்‌.

“நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன்‌ விளைவிக்கும்‌” என்கிறார்‌ திருத்தூதர்‌ யாக்கோபு (5:16). நான்‌ நேர்மையாளர்‌ இல்லையே என்கிறாயா? கடவுளே நேர்மையாளனாக்குவார்‌. நேர்மையாளன்‌ இல்லை எனினும்‌ தாழ்ச்சியோடு, பாவி என்ற தன்னுணர்வோடு தன்‌ பாவத்தை ஏற்றுக்‌ கொள்பவனின்‌ மன்றாட்டு கேட்கப்படும்‌ என்பதுதானே வரிதண்டுபவர்‌ நமக்கு உணர்த்தும்‌ உண்மை!

மேன்மையடையத்‌ தாழ்ச்சியே வழி (நீ.மொ. 15:33).

ஆணவம்‌ - அடக்கம்‌ பற்றிய பாரதக்‌ கதை. பரந்தாமன்‌ மஞ்சத்தில்‌ அமைதியாக உறங்கிக்‌ கொண்டிருந்தாராம்‌. துரியோதனனும்‌ அர்ச்சுனனும்‌ அவரிடம்‌ உதவி கேட்கப்‌ போனார்களாம்‌. துரியோதனன்‌ பரந்தாமனின்‌ தலைமாட்டருகே அமர, அர்ச்சுனன்‌ காலடியில்‌ அமர்ந்தாராம்‌. காலடியில்‌ அமர்ந்திருந்ததால்‌ விழித்ததும்‌ முதலில்‌ அர்ச்சுனனைப் பார்த்த பரந்தாமன்‌ “உனக்குத்தான்‌ என்‌ உதவி” என்று கூறிவிட்டாராம்‌. ஆணவம்‌ தலைமாட்டில்‌ அமர்ந்தது. தோற்றது. அடக்கம்‌ காலடியில்‌ அமர்ந்தது. வென்றது.

நிமிர்ந்து நிற்கும்‌ தென்னை புயலில்‌ விழுந்தால்‌ எழுந்து நிற்க முடிவதில்லை. பணிந்து வளையும்‌ நாணலோ புயலிலும்‌ நிமிர்ந்துவிடும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 30-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (சீரா. 35:2-4, 6-9)

ஞானம்‌ நம்மை கடவுளிடம்‌ அழைத்துச்‌ செல்லும்‌ என்று சீராக்‌ கூறுகின்றார்‌. நாம்‌ எவ்வாறு கடவுளுக்கு ஊழியம்‌ செய்ய வேண்டும்‌, கடவுளை எவ்வாறு வழிபட வேண்டும்‌ என்று ஞானம்‌. நமக்குக்‌ கற்பிக்கின்றது. தாழ்ச்சியுடன்‌ வேண்டுபவரின்‌ மன்றாட்டைக்‌ கடவுள்‌ கேட்கின்றார்‌. கடவுள்‌ ஆள்‌ பார்த்துச்‌ செயல்படுவர்‌ அல்லர்‌, மாறாக இதயத்தைப்‌ பார்த்துச்‌ செயல்படுபவர்‌. தங்களைக்‌ கடவுள்‌. முன்‌ தாழ்த்துபவர்களைக்‌ கடவுள்‌ உயர்த்துகின்றார்‌,

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (திமோ. 4:6-8, 6-8)

தூய பவுல்‌ தம்‌ வாழ்வின்‌ இறுதிக்கட்டத்தில்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டபோது இந்த வசனங்களை எழுதுகின்றார்‌. சிறையில்‌ தான்‌ அடைக்கப்பட்டதை விடத்‌ தன்னுடைய நெருங்கிய நண்பர்‌களைத்‌ தனியாகத்‌ தவிக்கவிட்டதை நினைத்து வருந்துகின்றார்‌. பவுல்‌ தன்னுடைய வாழ்வை ஒரு தொடர்‌ ஓட்டமாகவும்‌, இறுதியில்‌ விண்ணக வெற்றி என்ற கிரீடத்தைப்‌ பெற போகின்ற நம்பிக்கையோடும்‌, விசுவாசத்தோடும்‌ தன்னுடைய வாழ்வை வாழும்‌ கடவுளின்‌ திருச்சபைக்காகக்‌ கையளிக்கின்றார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 8:9-4)

தங்களை நீதியானவர்கள்‌ என்று தாங்களே கருதி பெருமை கொண்டவர்களுக்குப்‌ பாடமாக இந்த உவமை அமைந்துள்ளது. கடவுள்‌ நீதியின்‌ நீதிபதி, தாழ்ச்சியுடன்‌ மன்றாடுவோரின்‌ வேண்டுதல்‌ களை ஏற்கும்‌ கடவுள்‌. வரிதண்டுபவர்‌ என்று ஒரு காரணத்திற்காக ஒருவரை மக்கள்‌ தவறாகக்கண்கொண்டு பார்க்கின்ற போது, வரிதண்டுபவரோ தன்னைக்‌ கடவுள்‌ முன்பாகத்‌ தாழ்த்தி கடவுளின்‌ இரக்கத்தையும்‌, மன்னிப்பையும்‌ பெற்று இறைவனுக்கு ஏற்புடையவர்‌.

மறையுரை

“எதிர்கட்சி இல்லாத நாடு மூக்கணாம்‌ கயிறு இல்லாத மாடு” என்பது பழமொழி. இதன்‌ பொருள்‌ நாட்டில்‌ சில நல்ல திட்டங்கள்‌ நிறைவேற வேண்டுமானால்‌ எதிர்கட்சி ஒன்று இருக்க வேண்டும்‌. எதிர்க்கட்சியானது தன்னை மிகைப்படுத்தியும்‌, ஆளும்‌ கட்சியைக்‌ குறையாகவும்‌ பேசும்போதுதான்‌ ஆட்சியில்‌ இருப்பவர்கள்‌ சில நன்மையாவது மக்களுக்குச்‌ செய்வார்கள்‌. எதிர்க்கட்சி விமர்சனம்‌ செய்யவில்லையெனில்‌ இன்றைய நற்செய்தியில்‌ பரிசேயன்‌ தம்பட்டம்‌ அடிப்பதுபோல்‌ அவர்களும்‌ தங்களைப்பற்றி பெருமையாகப்‌ பேசி மக்களுக்கு மொட்டைபோட்டுவிடுவார்கள்‌.

இதைவிட ஆபத்தான கலாச்சாரத்திற்கு இப்பொழுது அடிமைகளாகிக்‌ கொண்டிருக்கின்றோம்‌. எடுத்ததந்கெல்லாம்‌ மிகைப்படுத்தும்‌ தன்மை. அதுதான்‌ விளம்பர உலகம்‌. எழுத்தறி- வித்தவன்‌ இறைவன்‌ என்று முன்னோர்கள்‌ கூறினார்கள்‌. ஆனால்‌ இன்று சில குழந்தைகள்‌ படிப்பைப்‌ பெற கல்வி நிறுவனங்கள்‌ தங்களை மிகைப்படுத்துகின்றனர்‌. ஆனால்‌ கல்வியின்‌ தரமோ சொல்லிக்கொள்ளும்‌ அளவிற்கு இருப்பதில்லை. வீட்டு உபயோகப்‌ பொருட்களின்‌ விளம்பரங்களைப்‌ பார்க்கின்ற நடுத்தர மக்களும்‌ அவற்றிற்கு அடிமையாகி பொருட்களை வாங்கி பயன்படுத்தியப்‌ பிறகு அறிந்துக்‌ கொள்கிறோம்‌, விளம்பரத்தில்‌ அவர்கள்‌ கூறியது அனைத்துமே பொய்‌ என்று.

இப்படிப்பட்ட விளம்பரங்களும்‌, விமர்சனங்களும்‌ ஏன்‌ உருவானது என்றால்‌ அங்கேப்‌ பொருட்களைத்‌ தயாரிக்கின்றவர்‌- களுக்கும்‌, பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்ற மக்களுக்கும்‌ நேரடி தொடர்பு எதுவும்‌ கிடையாது.

ஒரு எசமான்‌ இருக்கிறார்‌ என்றால்‌ அவருக்குக்‌ கீழ்‌ பணி செய்பவர்கள்‌ அனைவரும்‌ அவரைப்‌ பார்க்கும்‌ போதெல்லாம்‌. அடக்கமாக நடந்துக்‌ கொள்வார்கள்‌. ஏனென்றால்‌ அங்கே தலை. வனுக்கும்‌ பணியாளனுக்கும்‌ முன்‌ அறிமுகமும்‌ நேரடி தொடர்பும்‌ உள்ளன. அதே எசமான்‌ வெளியூர்‌ சென்றால்‌ அவரைப்‌ பார்ப்‌- பவர்கள்‌ அவரிடம்‌ பணிவுடன்‌, தாழ்ச்சியுடன்‌ நடந்துக்‌ கொள்ள மாட்டார்கள்‌. ஏனெனில்‌ அங்கு முன்‌ அறிமுகம்‌ என்பது கிடையாது.

“கடவுள்‌ மானிடரைத்‌ தம்‌ உருவிலும்‌, சாயலிலும்‌” (தொ.நூ. :26) படைக்கின்றார்‌. மனிதனின்‌ முதலும்‌, முடிவுமாக இருப்பவர்‌ கடவுள்‌. இத்தகைய வல்லமை மிக்க கடவுள்‌ நம்மை முழுமையாக அறிந்தவராக இருக்கின்றார்‌. ஆனால்‌ இன்றைய நற்செய்தியில்‌ வரும்‌ பரிசேயனோ தன்னைக்‌ கடவுளுக்கு அறிமுகப்‌ படுத்துகின்றான்‌. இது அவன்‌ செய்த முதல்‌ தவறு. இரண்டாவது தவறு: தன்னைக்‌ கடவுளிடமிருந்து பிரித்துவிடுகின்றான்‌. கடவுளை முன்‌ பின்‌ அறிமுகமில்லா நபராகக்‌ கருதுகின்றான்‌. மூன்றாவது தவறு: தன்னை நேர்மையாளன்‌ என்பதைக்‌ காட்டிக்கொள்ள அடுத்தவர்களை மட்டம்‌ தட்டுகின்றான்‌. இந்த மூன்று தவறுகளையும்‌ செய்ததன்‌ மூலம்‌ கிறிஸ்துவத்தின்‌ மிக முக்கியமான “தாழ்ச்சி” என்ற புண்ணியத்திலிருந்து தவறி தன்னைக்‌ கடவுள்‌ முன்பாக 'உயர்த்துகின்றான்‌. தாழ்ச்சியே உருவான கடவுளை உதாசீனப்படுத்துகின்றான்‌..

இறைவாக்கினர்களில்‌ திருமுழுக்கு யோவான்‌ மட்டுமே இயேசுவைக்‌ காணும்‌ பாக்கியம்‌ பெற்றார்‌. இயேசுவுக்குத்‌ திருமுழுக்கும்‌ கொடுத்தார்‌. ஆனால்‌ அவர்‌ பெருமைப்‌ பட்டுக்கொள்ள -வில்லை, கடவுள்‌ முன்பாகவும்‌, மக்கள்‌ முன்பாகவும்‌ தன்னை உயர்த்தவில்லை. மாறாக “அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத்‌ தகுதியில்லை” (மாற்கு :7) என்று தன்னை தாழ்த்துகின்றார்‌. இயேசுவைப்‌ பெற்றெடுக்கும்‌ பாக்கியம்‌ பெற்றவள்‌ கன்னி மரியாள்‌. அதுமட்டுமல்ல, இயேசுவின்‌ ஆட்சி எப்படி மேன்மை மிக்கது என்று வானதூதர்‌ விளக்குகின்றார்‌. இத்தகையப்‌ பாக்கியம்‌ பெற்ற கன்னிமரியாள்‌ தன்னைப்‌ பெருமைபடுத்தி மனிதர்களிடமிருந்து பிரித்தோ, உயர்த்தியோ பார்க்கவில்லை. மாறாக “நான்‌ ஆண்டவரின்‌ அடிமை” (லூக்கா :38) என்று கடவுள்‌ முன்னிலையில்‌ தாழ்ச்சியுடன்‌ நடந்துக்‌ கொள்கின்றாள்‌.

அற்புதங்கள்‌, அருஞ்செயல்கள்‌, புதுமைகள்‌, ஞானிகளும்‌ கண்டு வியக்கும்‌ அளவிற்கு நற்செய்தியாற்றும்‌ திறமை உடையவராக இருந்தப்‌ போதும்‌ இயேசு ஒருபோதும்‌ தன்னை தந்தை முன்பாகப்‌ பெருமைப்படுத்தியோ, உயர்த்தியோ கூறியதுக்‌ கிடையாது. மாறாக, “முகங்குப்புற விழுந்து” தந்தையின்‌ விருப்பத்தை மட்டுமே நோக்கமாகக்‌ கொண்டு தன்னைத்‌ தாழ்த்துகின்றார்‌. இவைகள்‌ அனைத்தும்‌ கடவுள்‌ நமக்குக்‌ கொடுக்கும்‌ பாடங்கள்‌, படிப்பினைகள்‌. இவற்றோடு கடவுள்‌ நமக்கு முன்மாதிரியை நிறுத்திவிடவில்லை. இயற்கையின்‌ மூலம்‌ தாழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்‌.

நன்று விளைந்த நெற்கதிர்கள்‌ தலை குனிந்து நிற்கும்‌. ஒன்றுக்கும்‌ உதவாதப்‌ பதர்‌ கதிர்களோ தன்னை உயர்த்தி அசைந்‌- தாடிக்கொண்டிருக்கும்‌. நாம்‌ பயிரிட்டால்‌, நாம்‌ பயிரிடுகின்ற பொருட்களை விடக்‌ களையானது சற்று உயர்ந்தே நிற்கும்‌. ஆனால்‌ அதனுடைய உயர்வு நிரந்தரமானது கிடையாது. காரணம்‌, தோட்டக்காரன்‌ வந்து உயர்ந்து நிற்கும்‌ களைகளைப்‌ பிடுங்கி தீயிட்டு எரிப்பான்‌.

யோவானும்‌, கன்னிமரியாளும்‌, கிறிஸ்து இயேசுவும்‌ தங்களைக்‌ கடவுளின்‌ கனிகளாகக்‌ கருதினார்கள்‌. மேலும்‌ அவர்களுடைய உயர்வும்‌ கடவுளிடம்‌ இருந்தே வருகின்றது என்பதை நன்கு உணர்ந்த அவர்கள்‌ தாழ்ச்சி என்ற புண்ணியத்தை வாழ்ந்துக்‌ காட்டினார்கள்‌. ஆனால்‌ மனிதர்களாகிய நாம்‌ கடவுளை மறந்து விடுகின்றோம்‌, நம்முடையத்‌ திறமையால்‌ அனைத்தையும்‌ சாதித்துவிட்டதாக நினைத்து நாம்‌ பெருமைப்‌ படுகின்றோம்‌. நமக்கு இந்த அருமையான, அந்தஸ்து மிக்க, வளமையான வாழ்வைக்‌ கொடையாகக்‌ கொடுத்தவர்‌ கடவுள்‌ என்பதை நாம்‌ மறந்து விடுகின்றோம்‌. போராட்டம்‌ நிறைந்த உலகில்‌ தம்‌ பிள்ளை நன்றாக வாழவேண்டுமென்று நல்ல திறமையைக்‌ கொடுத்தார்‌ கடவுள்‌. ஆனால்‌ நாமோ நம்முடையத்‌ திரமையைப்‌ பற்றி அவரிடமே பெருமையாகக்‌ கூறுகின்றோம்‌.

இவ்வாறு நாம்‌ செயல்படுகின்றபோது பரிசேயனைப்போன்று நாம்‌ நம்மையேக்‌ கடவுளிடமிருந்து பிரிந்துகொள்கின்றோம்‌. கடவுள்‌ தாழ்ச்சியை விரும்புகின்றார்‌. கிறிஸ்துவிற்குள்‌ ஞானஸ்தானம்‌ பெற்ற நாம்‌ அனைவரும்‌ மனத்தில்‌ நிறுத்த வேண்டியது. “தம்மைத்தாமே உயர்த்துவோர்‌ யாவரும்‌ தாழ்த்தப்பெறுவர்‌: தம்மைத்தாமே தாழ்த்துவோர்‌ உயர்த்தப்பெறுவர்‌” (லூக்கா 4:) நாம்‌ எந்த அளவிற்கு உயர்கின்றோமோ அந்த அளவிற்கு நாம்‌ நம்மை கடவுள்‌ முன்பாகத்‌ தாழ்த்த வேண்டும்‌. வாழ்வில்‌ வளங்களையும்‌, வசதிகளையும்‌, குழந்தைப்‌ பாக்கியத்தையும்‌ அளித்த கடவுளை நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டும்‌. நாம்‌ கடவுளுக்குச்‌ சொந்தமானவர்கள்‌ என்பது நமது தாழ்ச்சியான செபத்தாலும்‌, வாழ்க்கை முறையாலும்‌ நாம்‌ வெளிப்படுத்த வேண்டும்‌. அது மட்டுமல்ல முதல்‌ வாசகம்‌ “தங்களைத்‌ தாழ்த்துவோரின்‌ வேண்டுதல்‌ முகில்களை ஊடுருவிச்‌ செல்லும்‌” என்று கூறுகின்றது. எதையும்‌ வாழ்ந்து பார்த்தால்தான்‌ அனுபவிக்க முடியும்‌. எனவே இன்று முதல்‌ வாழத்‌ தொடங்குவோம்‌, கடவுள்‌, வார்த்தை மாறாதவர்‌, நிச்சயம்‌ நம்மையும்‌ உயர்த்துவார்‌ என்ற நம்பிக்கையில்‌ வாழ்ந்துக்‌ காட்டுவோம்‌. வரித்தண்டுபவரைப்போல கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி வாழ்வோம்‌, வாழ்ந்துக்‌ காட்டுவோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

🕇 இறைமகன்‌ இயேசு தான்‌ கடவுளின்‌ மகன்‌ என்பதை மனதில்‌ நிறுத்தி வாழ்ந்தார்‌. நாமும்‌ கடவுள்‌ முன்‌ நம்மை நாம்‌ முழுமையாக ஏற்றுக்கொள்ளும்‌ போது கடவுள்‌ நம்‌ பொருட்டு மகிழ்ச்சியடைவார்‌.
🕇 நாம்‌ எந்த மனநிலையோடு கடவுளை வழிபட வருகின்றோம்‌! இறைமகன்‌ இயேசு தன்‌ பணியைச்‌ செய்ய உலகில்‌ அவதரித்து, தான்‌ செய்தச்‌ செயல்களைப்‌ பற்றி தந்தையிடம்‌ பெருமைப்‌ பாராட்டவில்லை, மாறாகக்‌ கடவுளைச்‌ சார்ந்து வாழ்ந்தார்‌. அதே போன்று நாமும்‌ நம்‌ செயல்கள்‌ மட்டில்‌ பெருமைப்‌ பாராட்டாமல்‌ கடவுளைச்‌ சார்ந்து வாழ வேண்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்‌ காலம்‌ முப்பதாம்‌ ஞாயிறு

இன்றைய முதல்‌ வாசகமும்‌ நற்செய்தியும்‌ இறைவேண்டல்‌ பற்றி சிந்திக்க அழைக்கன்றன. முதல்‌ வாசகத்தில்‌ இறைவன்‌ தம்மை நோக்கி மன்றாடுபவர்‌ மட்டில்‌ எப்படிச்‌ செயல்படுகின்றார்‌ என்று கூறுவதைக்‌ காண்கிறோம்‌. குறிப்பாக, “தீங்கழைக்கப்பட்டோரின்‌ மன்றாட்டைக்‌ கேட்பார்‌. கைவிடப்பட்டோரின்‌ வேண்டுதலைப்‌ புறக்கணியார்‌.தம்மிடம்‌ முறையிடும்‌ கைம்பெண்களைக்‌ கைவிடார்‌ தங்களைத்‌ தாழ்த்துவோரின்‌ வேண்டுதல்‌ முகல்களை ஊடுருவிச்‌ செல்லும்‌” என்கிறார்‌ சீராக்‌ நூலின்‌ ஆசிரியர்‌. ஆக ஏழையரின்‌ வேண்டுதல்‌ இறைச்‌ சமூகத்தில்‌ கேட்கப்படும்‌. நற்செய்தியில்‌ இறைவேண்டல்‌ செய்பவரின்‌ மனநிலை எப்படி இருக்கக்கூடாது மற்றும்‌ எப்படி. இருக்கவேண்டும்‌ என்பதை இயேசு ஓர்‌ உவமை மூலம்‌ விளக்குகின்றார்‌.

“ இந்த வார நற்செய்திப்‌ பகுதி கடந்த ஞாயிற்றுக்கழமையின்‌ நற்செய்திப்பகுதியின்‌ தொடர்ச்சியாகும்‌. எனவே கடந்த வார நற்செய்திப்‌ பகுதிக்குக்‌ கூறப்பட்ட பின்னணிகள்‌ இன்றைய நற்செய்திப்‌ பகுதிக்கும்‌ பொருந்தும்‌ எனபது சொல்லாமல்‌ விளங்கும்‌. அதோடு, இன்றைய நற்செய்திப்‌ பகுதியை, உவமையை எப்படி அணுக வேண்டும்‌, அதைத்‌ திறக்கும்‌ திறவுகோல்‌ எது என்பதை அல்லது இந்த உவமையின்‌ நோக்கம்‌ எது என்பதை இயேசு துவக்கத்திலேயே கூறிவிடுகின்றார்‌. அதாவது “தாங்கள்‌ நேர்மையானவர்கள்‌ என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை” (வச. 9) நோக்கி அவர்களின்‌ மனமாற்றத்‌ திற்காக, அல்லது செபிக்கவேண்டிய முறையாது என்பதை விளக்குவதற்காக இவ்வுவமை கூறப்பட்டது. இவர்கள்‌, நற்செய்தி களின்‌ பின்னணியில்‌, பரிசேயரையும்‌ மறைநூல்‌ வல்லுநர்‌ களையும்‌ குறித்துக்‌ காட்டப்படுவர்‌ என்பது தெளிவு. இருப்பினும்‌, இது இன்றும்‌ நம்மிடையே வாழும்‌ இரு நிலை மக்களுக்கும்‌ பொருந்தும்‌ எனவும்‌ கொள்ளலாம்‌.

மேலும்‌ இயேசு எருசலேம்‌ நோக்கிப்‌ பயணம்‌ செய்யும்‌ இறைவாக்கினர்‌ எனும்‌ முறையில்‌, இறைவன்‌ தலைகீழாக மாற்றிப்‌ போடுபவர்‌” எனும்‌ இறைவாக்குச்‌ செய்தியையும்‌ இந்த உவமை முடிகன்றபோது, “பரிசேயரல்ல, வரிதண்டபெவரே கடவுளுக்கு. ஏற்புடையவராகி வீடு திரும்பினார்‌” என்றும்‌ (வச. 14), “தம்மைத்‌ தாமே உயர்த்துவோர்‌ தாழ்த்தப்‌ பெறுவர்‌. தம்மைத்‌ தாமே தாழ்த்துவோர்‌ உயர்த்தப்‌ பெறுவர்‌” (வச. 14) எனும்‌ இயேசுவின்‌ வார்த்தைகளில்‌ காண முடிகின்றது. இந்த உவமையில்‌ வரும்‌ இரு கதைமாந்தர்களையும்‌ அலசுவதன்‌ வழியாக இயேசு கூறவரும்‌ இறைவேண்டல்‌ குறித்த செய்தியை இனிப்‌ பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்போம்‌.

1. ஒருவர்‌ பரிசேயர்‌

இவ்வுவமையில்‌ வரும்‌ பரிசேயர்‌ எவ்வாறு இறைவேண்டல்‌ செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாகிறார்‌, எதிர்‌-மாதிரி யாகின்றார்‌. அவரது செபத்தில்‌ செ பல குறைபாடுகள்‌ இருந்தன. அவர்‌ செபத்தைத்‌ தனது தற்புகழ்ச்சியின்‌ இடமாக, வாய்ப்பாகப்‌ பயன்படுத்திக்‌ கொண்டார்‌. தன்னுடைய நற்செயல்களைக்‌ கூறுவதன்‌ மூலம்‌ ஒருவிதத்தில்‌ இறைவனுக்குதான்‌ அவசியம்‌, தேவை என்று கூற முயல்கின்றார்‌. தன்னை “கொள்ளையர்‌, நேர்மையற்றோர்‌, விபசாரர்‌... இந்த வரித்தண்டுபவர்‌ (வச. 11)” ஆகியோருடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்து தன்னை உயர்ந்தவராக எண்ணிக்‌ கொண்டார்‌. அவர்‌ தன்‌ செயல்பாடுகளான நோன்‌ பிருத்தல்‌, பத்திலொரு பங்கைச்‌ செலுத்துதல்‌ ஆகியவற்றை மேலோட்டமாகக்‌ கண்டு தன்னைக் குறித்து பெருமை பாராட்டிக்‌ கொண்டார்‌. தன்னால்‌ என்னவெல்லாம்‌ செய்யமுடிகிறது, செய்யப்பட்டது எனக்‌ கூறுவதன்‌ மூலம்தான்‌ இறைவனுக்கு என்னவெல்லாம்‌ தரமுடியும்‌ என்று நினைத்தாரேயொழிய, தான்‌ எதை இறைவனிடமிருத்‌ து பெற்றுக்‌ கொள்ள முடியும்‌ என எண்ணாமல்‌ போனதால்‌, “இறைவனுக்கு ஏற்புடையவர்‌ ஆவதை” (வச.14) பெற்றுக்கொள்ள முடியாமல்‌ வெறுங்கையராய்‌ அவர் வீடு திரும்பினார்‌. இவற்றைவிட, கடவுளுக்கே உரித்தான தீர்ப்பிடும்‌ பண்பை தனதாக்கிக்‌ கொண்டு தன்னுடைய நற்பண்புகளை இறைவன்‌ முன்பட்டியலிடுகின்றார்‌. கொள்ளையர்‌, நேர்மையற்றவர்‌, விபசாரர்‌, வரிதண்டேபவர்‌ ஆகியோரின்‌ குறைகளை இறைவனுக்குக்‌ குறிப்பிட்டுக்‌ காட்டுகின்றார்‌. அவர்களை தீர்ப்பிடுகின்றார்‌.

2. மற்றவர்‌ வரிதண்டுயவர்‌

வரி தண்டுபவர்‌ பரிசேயருக்கு நேர்மாறாக வேண்டுதல்‌ செய்கின்றார்‌. அவரது மன்றாட்டில்‌ எளிமை, உண்மை, நேர்மை இருந்தது. அவர்தான்‌ இறை சமூகத்தின்‌ முன்வரும்போது தான்‌ பாவி என்பதை உணருகின்றார்‌. தன்‌ உண்மை நிலையை ஏற்றுக்‌ கொண்டு தொலைவிலேயே நின்று விடுகின்றார்‌ (வச. 13), இறைவனை நேராக பார்க்கும்‌ தகுதியும்‌, திராணியும்‌ தன்னிட மில்லையாதலால்‌ “வானத்தை அண்ணாந்து” பார்க்காமல்‌ (வச. 13), மன வருத்தத்தின்‌ அடையாளமாக “தம்‌ மார்பில்‌ அடித்துக்‌ கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்‌” (வச. 13) என்று இறை இரக்கத்திற்காகவும்‌, மன்னிப்பிற்காகவும்‌ மன்றாடுகின்றார்‌. தன்‌ குறையையும்‌, இல்லாமையையும்‌ அவர்‌ உணர்ந்து ஏற்றுக்கொண்டதால்‌, இறைவனால்‌ அவரைத்‌ தமது ஏற்புடைமையால்‌ நிரப்ப முடிந்தது (வச. 14). அவர்‌ தம்மையே தாழ்த்திக்‌ கொண்டதால்‌ இறைவனால்‌ அவரை உயர்த்த முடிந்தது (வச. 14). அவர்‌ தன்னை இறைவனோடு ஒப்பிட்டுப்‌ பார்த்ததால்‌ பரிசேயர்போல்‌ பிறருடன்‌ தன்னை ஒப்பிட்டுப்‌ பார்க்கும்‌ எண்ணம்‌ அவருக்கு எழவில்லை.

எனவே லூக்கின்‌ பார்வையில்‌ செபம்‌ என்பது ஒருவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும்‌ செயல்பாடு, இறைவன்‌ முன்‌ தன்‌ நிலை உணர்தல்‌, இறைவனோடு உள்ள உறவேயன்றி தற்புகழ்ச்சி அல்ல.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - முப்பதாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : சீஞா. 35: 15-17.20-22

மோசேயின் சட்டத்தில் உள்ள கட்டளைகளை நடை முறைக்குக் கொண்டு வருவது பற்றிக் கூறுகிறது சீராக்கின் ஞானம். மனித வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகள், நடைமுறைகள்பற்றிய விளக்கம் இப்புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இன்றைய வாசகம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுபற்றி, சிறப்பாக நீதியுள்ள வாழ்வு, தாழ்ச்சியுள்ள வாழ்வு பற்றிக் கூறுகிறது.

நீதியுள்ளவர் கடவுள்

ஆண்டவர் நீதியுள்ளவர். "அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை" (இச. 10 :7). 'உமது செங்கோல் வளையாத செங்கோல்" (தி.பா. 45: 4-7). அவர் வதியும் நகரம் "நீதியின் நகர் எனப் பெயர் பெறும்; உண்மையின் உறைவிடம் எனவும் அழைக்கப்படும்" (எசா.1 :26). அது “ஆண்டவரே நமது நீதி" என்று பெயர் கொள்ளும் (எரே. 33:16). அவர் ஏற்படுத்திய அரசர்களும் நீதியுள்ளோராயிருத்தல் வேண்டும். "கடவுளே, அரசருக்கு உமது நீதித் தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்... எளியோரின் மக்களுக்கு நீதி வழங்குவாராக! ... கதிரவனும் நிலாவும் உள்ள வரையில் உம் மக்கள் உமக்கு அஞ்சி நடப்பார்களாக" (திபா. 72: 1- 7). அவர் திருமகன் கிறிஸ்து “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்" வந்த நீதிமான் (லூக் 4:18-19). நீதிக் கடவுளின் பிள்ளைகள் நாம்; நீதியே உருவான இயேசுவின் சகோதரர்கள் நாம். நம் வாழ்விலே நீதி இருக்கிறதா? ஏழை எளியோருக்கு, பணியாளருக்கு, சிறியோருக்குச் சொல்லிலும் செயலிலும் நீதி வழங்குகிறோமா? "நீதிக்குக் குரல் கொடுப்போம்" என்பது ஒரு "கோஷமாக" மட்டும் தானே இருக்கிறது? நம்முடைய வாழ்க்கையைத் தொட்டதாக இல்லையே? நாம் பொய்யர்கள் இல்லையா?

இரக்கம் மிக்கவர் கடவுள்

"எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்” (புல. 3: 44) என்று வருத்த மிகுதியிலே புலம்பல் ஆகம ஆசிரியர் புலம்பினாலும், "நம்முடைய வேண்டுதல்கள் மேகங்களை ஊடுருவிப் போகும் தன்மையன" (சீஞா. 35:21) என்பதை நாமறிவோம். "தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?" (லூக் 18:7) என்ற இயேசுவின் சொற்களும் நமக்குப் படிப்பிப்பது இதுதானே. இரக்க மிகுந்தவரன்றோ கடவுள்? நமது ஈனநிலையை, இழிநிலையை உணர்ந்து நாம் கதறிடும் குரலுக்குச் செவிமடுக்காதிருப்பாரா? "ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்" (திபா. 6: 4) என்று கதறியழும் திருப்பாடல் ஆசிரியர், "ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்" (திபா. 6: 9) என்று அதே திருப்பாடலை முடிப்பதன் பொருள் இதுதானே.

எனவே தாழ்ச்சியோடு வேண்டுவோம்; நம்பிக்கையோடு மன்றாடுவோம்; விடாது செபிப்போம்: கேட்டுக்கொண்டே இருப்போம், தட்டிக் கொண்டேயிருப்போம், தேடிக்கொண்டே இருப்போம். “ஆண்டவர் தூரமாய்ப் போகமாட்டார்" (சீஞா. 35 : 22). நீதியின் கடவுள், இரக்கத்தின் இறைவன் "நீதிமான்களை ஆதரித்துத் தீர்ப்பிடுவார்”(35:22). “தன்மை பிறராலறியாத தலைவா, பொல்லா நாயான புன்மையேனை, ஆண்டையா, புறமே போகவிடுவாயோ? என்னை நோக்குவார் யாரே, என் நான் செய்கேன், எம்பெருமானே... எங்குப் புகுவேனே” (திருவா. திருச்சதகம்)

நம்முடைய மன்றாட்டு மேகங்கள்வரையில் எட்டும்.

இரண்டாம் வாசகம் : 2 திமொ 4:6-8, 16-18

திமொத்தேயுக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதிப் பகுதி இன்றைய வாசகமாயமைகிறது. தன்னுடைய வாழ்வின் இறுதிக் காலத்தைப் பற்றிக் கூறும் பவுல் தனது நம்பிக்கை பற்றியும் (4: 6-18) இறைவன் தனக்களித்த பரிசு பற்றியும் (4: 16-18) இப்பகுதியில் எடுத்துரைக்கிறார்.

பவுல் வாழ்க்கை

இறைவனுக்காக, நற்செய்திக்காகத் தன்னையே அர்ப்பணித்த பவுல் இவ் அர்ப்பண வாழ்வை இரண்டு எடுத்துக்காட்டுகள் வழி விளக்குகிறார். இரத்தம் சிந்துவது உயிரைக் கொடுத்தலுக்குச் சமம். நற்செய்திப் பணியிலே பவுல் தன் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. "நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்” (பிலிப் 2 : 17). “இதோ என் வாழ்க்கை, பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது" (2 திமொ 4:6) என்பார்.

அடுத்து, “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்" (1 கொரி 9 : 27). பந்தயத்தில் போட்டி இடுகிறவர்கள் போன்று கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்ந்தார். துன்ப துயரம் எதிர்ப்பட்ட வேளையிலும் குறிக்கோளிலே வைத்த கண் வாங்காது ஓடினார் பவுல்.

நற்செய்திக்குச் சான்று பகர அழைக்கப்பட்டுள்ள நம் அனைவருக்கும் எவ்வளவு அரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறார் பவுல்? நற்செய்தியை, அதன் மதிப்பீடுகளைப் பறைசாற்றுவதற்காக நம்முடைய நேரம், பணம் உழைப்பு இவற்றிலே ஒரு சிறிதாவது நாம் விரும்பி அளிக்கிறோமா?

ஆண்டவர் துணை

வேலை செய்பவன் கூலிக்கு உரிமையுடையவன். இறைவனுக்காக, அவருடைய நற்செய்திக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு உழைத்து ஓய்ந்த பவுலுக்கு இறைவனே பரிசு அளிக்கிறார். "வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது" (4 : 8). இறுதி நாளில் மட்டும் இறைவன் பவுலுக்குக் கைம்மாறு அளிப்பதில்லை; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே அவருக்குத் துணை நின்றார் (4: 17); அவரைத் தமது வழிகளிலே உறுதிப்படுத்தினார் (4: 17); தீயோரின் தாக்குதல்களிலிருந்து அவரைப் பாதுகாத்தார் (4:17).

நற்செய்திக்காக நாம் உழைக்கும்போது நமக்கும் கட்டாயம் இடைஞ்சல்கள் இன்னல்கள் வராமல் இருக்காது, அவ்வேளைகளில் நாம் மனம் கலங்கித் தளர்வது கூடாது, அந்த இன்னல்களிடையே இறைவனின் அன்புக்கரம் நம்மை வழிநடத்துகிறது என்பதை உணர வேண்டும், “இப்படி அவர்கள் நீதிமன்றங்களில் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, 'என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்” (மத் 10: 17- 20) என்ற இயேசுவின் சொற்கள் நமக்குத் துணை புரிவனவாக. அவருடைய அயரா உதவியில் நம்பிக்கை வைத்து இன்னலென்றும் இடைஞ்சலென்றும் பாராது, பசியென்றும் தாகமென்றும் கணிக்காது உழைப்போம். நற்செய்தி மதிப்பீடுகளுக்கு ஏற்ற வாழ்வு வாழ்வோம்.

ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார்.

நற்செய்தி : லூக் 18:9-14

என்றும் தம் புகழ் பாடிய பரிசேயர்கள், தங்களைவிடப் பக்தியிலும், சட்டங்களை அனுசரிப்பதிலும் சிறந்தவர் வேறு எவருமில்லையென்று இறுமாப்புக் கொண்டனர். பரிசேயரல்லாதவர் இறைவனுக்கு ஏற்புடையவர் அல்லர் என்பது அவர்கள் கணிப்பு. இவர்களை இறைவன் எடைபோடும் முறையே இன்றைய நற்செய்தி.

பரிசேயச் செபம் சுயநலம்

பரிசேயர்களைத் திருத்தும் நோக்கத்துடன் ஆண்டவர் பரிசேயர்களைக் கடிந்து கொள்ளுகிறார். தங்கள் போதனையைச் செயல்படுத்தாதவர்கள்; பலர் பார்ப்பதற்காகத் தெருவில் நின்று செபிப்பவர்கள்; குருட்டு வழிகாட்டிகள் (மத் 23). இத்தகைய பரிசேயன் செபிக்க வருகிறான். இறைவன் பாராட்டு முன்னரே, இவன் தன்னையே பாராட்டிக் கொள்ளுகிறான். நோன்பு, வருவாயில் பத்திலொரு பங்கு என்று அடுக்குகிறான் (இச.14 : 22 -27). இவன் நல்லவன் என்பது நமது கணிப்பு. இயேசுவின் மதிப்பீடு முற்றிலும் மாறானது. இவன் நீதிமானாக வீடு திரும்பவில்லை. அவன் தன்னையே செபத்தின்மையமாக்கிக் கொண்டான். சட்டங்களைத் தான் சரிவர அனுசரித்ததற்காகக் கடவுள் தனக்குக் கடமைப்பட்டுள்ளார் என்று எண்ணுமளவுக்கு, நான் என்ற ஆணவம், தற்புகழ்ச்சி, சுயநலம் அவனை ஆட்கொண்டது.

"யான் எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்” (குறள் 346)

என்பதை மறந்தான்.

"செல்வரை வெறுங்கையராக அனுப்பினார்”என்ற (லூக் 1:52) அன்னையின் வாக்கு இவனில் நிறைவேறிற்று எனலாம். இன்றுகூட பலர் கோவிலுக்கு ஒழுங்காகச் செல்வர்; வெள்ளி, சனி தவறாது நோன்பு இருப்பர்; கொள்ளையடித்த பொருளில் ஒரு பகுதியைக் கோவில் உண்டியலில் கூடப் போடுவர். ஆனால் அவர்கள் உள்ளத்தால் இறைவனுடன் ஒன்றித்து இரார். காரணம் அவர்களது சுயநலமே.

ஆயக்காரச் செபம் தாழ்ச்சிச் செபம்

ஆயக்காரன் கோவிலின் ஒரு மூலையில் நிற்பதும் கடவுளை ஏறெடுத்துப் பார்க்கத் துணியாததும், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்' என்று சொல்லி மார்பில் அறைந்து கொள்வதும் (18:13), இறைவன் முன் தன்னையே அவன் வெறுமையாக்கிக் கொண்டதையும், அவரால்தான் தனக்கு மீட்பு உண்டு என்று உலகறியப் பறை சாற்றியதையும் குறிக்கிறது. இறைவன் முன் பெருமை பாராட்டிக்கொள்ளும் அளவிற்குத் தான் செய்தது ஒன்றுமில்லையென்பதை உணர்கிறான். தன் பாவங்களையே மூலதனமாக்கி இறைவனின் பாராட்டைப் பெற்றுவிடுகின்றான்.

"ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர்; நேர்மையுள்ளவர் (1யோ. 1:8-9; காண் தீபா. 31 &50).

ஆயக்காரனின் பரவசச் செபம் "தாழ்ந்தோரை உயர்த்தினார்” என்ற மரியாவின் சொற்களை நினைவுபடுத்துகிறது. இவன் பாவியாகக் கோவிலில் நுழைந்தான். தன் பாவங்களை அறிக்கையிட்டான்; மன்னிப்பு வேண்டினான். இவனே நீதிமானாய்த் திரும்பிச் சென்றான். ஆண்டவர் கூறிய இவ்வுவமையைக் கேட்ட மக்கள் பரிசேயனை நீதிமானாகவும், ஆயக்காரனைப் பாவியாகவுந்தான் எடை போட்டிருப்பர். ஆனால் ஆண்டவர் தீர்ப்பு முற்றிலும் மாறாக இருந்தது. "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல” என்பது வேதவாக்கு (எசா. 55 :8). மக்களுடைய மதிப்பீட்டைவிட இறைவனுடைய மதிப்பீடே நமக்குத் தேவை. இறைவனின் இறுதித் தீர்ப்பு நாளிலே மக்கள் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஒவ்வொரு பக்தனும் இறைவன் முன்னிலையில் ஆயக்காரனாக மாற வேண்டும். பரிசேயத்தன்மை என்னிடம் உண்டா? அதை வேரறுக்க என்ன செய்கிறேன்?

தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப் பெறுவான்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இரண்டு வகை செபங்கள்!

இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் ஆண்டவரின் இல்லத்திற்குள் நின்று கொண்டு செபிக்கின்றார். அவரின் செபம் முழுவதும் அவரையே மையமாக வைத்து இருக்கின்றது. அவர் தன்னைப் பற்றி தன்னிடமே பேசிக்கொள்கின்றார். ‘நான்’ என்ற வார்த்தை ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. பரிசேயரின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, அவர் கடவுளைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, தன்னைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை எனவே தோன்றுகிறது.

வரிதண்டுபவர் தொலைவில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ;கடவுளே பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார். தன்னைப் பாவியாகவும், கடவுளை இரக்கம் மிக்கவராகவும் ஏற்றுக்கொள்கின்றார்.

நாம் வாழும் இந்தக் காலத்தின் கலாச்சாரம் கடவுள் யார் என்பதை மறந்து கொண்டே வருகின்றது. கடவுள் யார் என்பதை நாம் மறக்கின்றோம் என்றால், நாம் யர் என்பதையும் மறந்து விடுகிறோம். ஏனெனில் கடவுளின் சாயலில்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். ‘கடவுள் யார் என்பதை’ மறந்து விட்ட வெற்றிடத்தை நிரப்ப மனிதன் அங்கே தன் சாயலை முன்னிறுத்துகின்றான். மனிதன் தன்னையே கொண்டு நிரப்பினால் எது தவறு? எது சரி? என்பதை எப்படி முடிவெடுப்பது? வலிமையானவர்களின் சொல்லும் செயலும் சரி எனவும், மற்றது தவறு எனவும் மாறி விடும். வலிமையானவன் சொல்வதே வாய்மை என ஆகிவிடுகிறது. அன்பிற்குப் பதில் வலிமைக்குக் கட்டுப்படுபவர்களாக நாம் மாறி விடுகிறோம்.

நாம் யார்? என்பதையும் மறந்து விடுகிறோம். எது சரி? என்ற அறநெறியிலும் பிறழ்வு ஏற்பட்டு விடுகின்றது. பரிசேயருக்குத் தன் பாவநிலை எப்போது மறந்து போயிருக்கும்? ஒரே இரவிலா? இல்லை. படிப்படியாக! கொஞ்சம் கொஞ்சமாக!

கொதிக்கின்ற தண்ணீரில் விழுகின்ற தவளை சூடு தாளாமல் உடனே வெளியே குதித்து விடும். அதே நேரத்தில் சாதாரண தண்ணீரில் தவளையைப் போட்டு மெதுவாகப் பாத்திரத்தை சூடேற்றினால், அதன் வெதுவெதுப்பிலேயே இன்பம் காண்கின்ற தவளை ஒரு கட்டத்தில் இறந்தே போய்விடும். பரிசேயரின் மனச்சான்றும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக மாறியிருக்க வேண்டும்.

பரிசேயர்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் பிடிப்புள்ளவர்கள். பரிசேயர் என்ற வார்த்தைக்கு பிரித்து வைக்கப்பட்டவர் என்பது பொருள். தன் பிறப்பிலேயே, தன் வளர்ப்பிலேயே மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டவர், மேன்மையானவர் என்ற சிந்தனையில் இருப்பவர்கள். தங்கள் செபத்தாலும், நோன்பினாலும், திருச்சட்ட நூற்களைக் கற்பதனாலும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உடையவர்கள். ஆனால் இயேசு அவர்களின் இந்த நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்துகின்றார்.

ஆன்மீகம் இறைவனை நோக்கி இருப்பதற்குப் பதிலாக நம்மை நோக்கித் திரும்பினால் அது ஆபத்தாகவே முடிகிறது. பல நேரங்களில் நமது வழிபாடுகளும், நம் மறையுரைகளும் இறைவனைப் பற்றியதாக இருப்பதை விடுத்து, ‘நாம் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும்’ என்ற அடிப்படையிலேயே நீர்த்துப் போவதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நேரங்களில் நாம் இறைவனை வழிபடுவதற்குப் பதிலாக நம்மை நாமே வழிபடுகிறோம். இறைவன் நம் மையமாவதற்குப் பதிலாக நாமே நம் மையமாகின்றோம்.

இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் தான் மற்றவர்களைப் போல இல்லாதது பற்றி நன்றி செலுத்துகின்றார். இதில் பரிசேயரின் தவறு ‘ஒப்பீடு’. ஆலயத்திற்கு நன்கொடை கொடுப்பவரும், பூசைக்கருத்து கொடுப்பவர்களும் கூட ஒரு கட்டத்தில் ‘நான் மற்றவர்களைப் போல இல்லை. நான் நல்லவன்’ என்ற சிந்தனைக்குக் தள்ளப்படுகின்றனர். நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்க வேண்;டிய இறைச்சாயலே நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து விடுகிறது. இறைவனின் பிரசன்னம் நம்மை ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைக்க வேண்டும். நம் செயல்கள் அளவிலும், நம் பொருள்கள் அளவிலும் நாம் மற்றவரிடமிருந்து உயர்ந்தோ, தாழ்ந்தோ இருந்தாலும் நம் இருத்தல் அளிவில் நாம் அனைவரும் சமமே. நம்மிடமிருக்கும் இறைச்சாயிலில் நாம் அனைவரும் சமமே.

தன் நோன்பையும், தன் காணிக்கையையும் முன்னிறுத்துகின்றார் பரிசேயர். நோன்பும், காணிக்கையும் நம்மை மற்றவரோடு ஒன்றிணைக்கும் காரணிகள். நோன்பு இருக்கும்போது வறியோரின் பசியோடு நம்மை ஒன்றிணைக்கின்றோம். நாம் காணிக்கை செலுத்தும்போது இல்லாதவரோடு நமக்குள்ளதை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். மற்றொரு பக்கம், நோன்பினாலும், பிறரன்புச் செயல்களாலும் இறைவனின் இரக்கத்தை வென்று விடலாம் என நினைக்கின்றார் பரிசேயர். நோக்கம் தவறாக இருக்கும் எந்தச் செயலினாலும் பலன் இல்லை. செயல்கள் நல்லவையாக இருந்து அவற்றின் பின் இருக்கும் நோக்கம் தவறு என்றால் அச்செயல்களால் பலன் ஒன்றும் இல்லை.

வரிதண்டுபவர் இறைவனின் முன்னிலையில் தன் ஒன்றுமில்லாமையை உணர்கின்றார். ‘பிறர் உங்களைவிட உயர்ந்தவர்கள் என எண்ணுங்கள்’ என இறைவன் முன்னிலையிலும், பிறர் முன்னிலையிலும் தன்னைத் தாழ்த்துகின்றார். நம் இருத்தல் அளவில் நாம் அனைவருமே தாழ்ந்தவர்கள்தாம், ஒன்றுமில்லாதவர்கள்தாம். அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?

இன்று நாம் இறைவனை வழிபடுகிறோமா? அல்லது நம்மையே வழிபட்டுக்கொள்கின்றோமா? இது நம் ஆலயமா? அல்லது இறைவனின் ஆலயமா?

ஆண்டவர் ஒருதலைச் சார்பு அற்றவர். அவர் ஒடுக்கப்பட்டோரின், கைவிடப்பட்டோரின் மன்றாட்டுக்களைக் கேட்கின்றார். இறைவன் முன்னிலையில் தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்கள் மேகங்களையும் ஊடுருவிச் செல்லும் இயல்புடையது. இறைவன் முன்னிலையில் நம்மையே வெறுமையாக்கி அர்ப்பணமாக்க அழைப்பு விடுக்கின்றது இன்றைய முதல் வாசகம்.

தன் வாழ்வின் முடிவு நெருங்குவதை உணர்கின்ற தூய பவுல், தான் இறுதிவரை இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருந்ததையும், தான் அசைவுறாத விசுவாசத்தைக் காத்துக் கொண்டதாகவும், இந்தப் போராட்டத்தில் இறைவன் தனக்கு வலுவூட்டியதாகவும், தன் வாழ்வால் தான் இறைவனுக்கு மாட்சி தருவதாக பெருமைப்படுகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு