மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 25: 6-10a |பிலிப்பியர் 4: 12-14, 19-20 |மத்தேயு 22: 1-14

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

இந்தியர்களாகிய நாம்‌ விழாக்‌ கொண்டாடுவதில்‌ பெருமை கொள்கிறோம்‌. பிறந்த நாள்‌ கொண்டாட்டம்‌, திருமண கொண்டாட்டம்‌, காது குத்துக்‌ கொண்டாட்டம்‌, ஜூபிலி கொண்டாட்டம்‌, ஆலய விழாக்‌ கொண்டாட்டம்‌ என்றெல்லாம்‌ வருடம்‌ முழுவதிலும்‌ விழாக்‌ காண்பதில்‌ நாம்‌ விருப்பம்‌ கொண்டவர்கள்‌. இதில்‌ எந்த சாதி-மத இனமுமின்றி எல்லோருமே உட்பட்டவர்களாக உள்ளோம்‌. ஆனால்‌ இந்தக்‌ கொண்டாட்டங் களில்‌ எல்லாம்‌ உச்சக்கட்டமாக அமைவது விருந்து. உறவினர்‌, நண்பர்கள்‌, அண்டை. வீட்டார்‌ எல்லாரும்‌ அழைக்கப்படுகிறார்கள்‌. இதில்‌ சந்தோசம்‌, மகிழ்ச்சி பகிரப்படுகிறது. உறவுகள்‌, நட்புகள்‌ ஆழப்படுத்தப்படுகின்றன.

இதேபோல்‌ நமது கிறிஸ்தவ வாழ்வே ஒரு கொண்டாட்டம்‌ தான்‌. ஒரு கொண்டாட்டத்தில்‌ விருந்து, மகிழ்ச்சி, உறவு, நட்புகள்‌ . எவ்வாறு பகிரப்படுகின்றதோ அதேபோல கிறிஸ்தவ வாழ்வு என்பதே பகிர்ந்தளிக்கப்படும்‌ வாழ்வு.

நீங்கள்‌ வாழ்வு பெறும்பொருட்டு அதை மிகுதியாகப்‌ பெறும்‌ பொருட்டே வந்தேன்‌ (யோவா. 10:10).

இன்றைய நற்செய்தியிலே பகிர்ந்தளிக்கப்படும்‌ ஒரு திருமண விருந்தை முன்‌ வைக்கின்றார்‌ கிறிஸ்து. தந்தையாகிய இறைவன்‌, தன்‌ மகனாகிய கிறிஸ்துவை மணம்‌ புரிந்து நமக்குத்‌ தரும்‌ உணவு, அழைக்கப்பட்டவர்களை எதிர்பார்க்கிறார்‌ விருந்திற்கு. தந்தை கொடுத்த அழைப்பை ஏற்று இயேசு வந்தார்‌. விருந்தால்‌ தன்‌ மகிழ்ச்சியைப்‌ பகிர்ந்துகொள்ள, உறவை, நட்பை ஆழப்படுத்த தன்‌ விருந்திற்கு அழைக்கிறார்‌. ஆனால்‌ அழைக்கப்பட்டவர்களோ நொண்டிச்‌ சாக்குப்‌ போக்கு, உலகச்‌ சம்பந்தமான ஈடுபாட்டில்‌ நாட்டம்‌ கொண்டு நான்‌ தோட்டம்‌ செல்ல வேண்டும்‌, கடைக்குப்‌ போக வேண்டும்‌, இப்போதுதான்‌ திருமணம்‌ முடித்து தேனிலாவில்‌ உள்ளேன்‌ என்றெல்லாம்‌ சொல்லித்‌ தட்டிக்‌ கழிக்கிறார்கள்‌. சிலர்‌ அழைத்தவரை துன்புறுத்தவும்‌ செய்தார்கள்‌. இதுதான்‌ இன்று திருச்சபையிலும்‌, உலகிலும்‌ நடக்கும்‌ நிகழ்ச்சி.

ஒரிசா மாநிலத்தில்‌ கொல்லப்பட்ட நம்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த தந்‌தை அருள்தாஸ்‌ தான்‌ இறக்கும்‌ முன்‌ தனது சொந்த ஊராகிய ராசியமங்களம்‌ வந்தபோது சொன்ன வார்த்தைகள்‌ : சில ஆட்கள்‌ என்னை அடிக்க வந்து மிரட்டுறாங்க. ஊரைப்‌ பார்த்து ஓடிப்போ. இல்லையென்றால்‌ உயிரோடு இருக்கமாட்டாய்‌ என்றெல்லாம்‌ எச்சரிக்கிறார்கள்‌ என்றார்‌. தான்‌ கொல்லப்படுவோம்‌ என்று அறிந்து இருந்தும்‌ தன்‌ இறைப்பணியை ஆற்றிய இந்தத்‌ தந்தையின்‌ துணிவும்‌ தியாகமும்‌ இயேசுவின்‌ மனநிலையையும்‌, புனித பவுல்‌ அடிகளாரின்‌ மனநிலையையும்‌ நமக்குக்‌ காட்டுகிறது.
என்‌ கடவுளே! உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்‌ (எபி. 10:7).
எனக்கு வறுமையிலும்‌ வாழத்‌ தெரியும்‌. வளமையிலும்‌ வாழத்‌ தெரியும்‌. எதிலும்‌ எந்தச்‌ சூழ்நிலையிலும்‌ வாழப்‌ பயிற்சி பெற்றிருக்கிறேன்‌. ஏனெனில்‌ எனக்கு உறுதியூட்டும்‌ இறைவனால்‌ எதையும்‌ செய்ய ஆற்றல்‌ உண்டு (பிலி. 4:12-13).

ஆண்டவர்‌ அனைவரையும்‌ அழைக்கிறார்‌. அனைத்து மனிதருக்கும்‌ நிறைவான மகிழ்ச்சியையும்‌, மனநிறைவையும்‌ தருகின்ற விருந்தில்‌ பங்கு பெற அழைக்கின்றார்‌. இந்த விருந்தில்‌ பங்கு பெற வேண்டுமானால்‌ நமது சுயநலத்‌ தேவைகளை ஒதுக்க வேண்டும்‌. அதற்குத்‌ தியாக மனம்‌ தேவை. முதலில்‌ நம்‌ கிறிஸ்தவ வாழ்வே ஒரு கொண்டாட்டம்‌ என்பதை உணர்ந்தால்‌ விருந்தில்‌ பங்கெடுப்போம்‌. நம்‌ வாழ்வைப்‌ பிறருக்குப்‌ பகிர்ந்தளிப்போம்‌. நாம்‌ பெற்ற திருமுழுக்கில்‌ இந்தக்‌ கொண்டாட்டத்திற்கு நாம்‌ ஆம்‌ என்று ஏற்றுக்கொண்டோம்‌. மாறாக நம்‌ வாழ்வு ஒரு கொண்டாட்டம்‌ என்பதை உணரவில்லையென்றால்‌ விருந்துக்கு வர மறுத்தவர்களின்‌ கூட்டத்தில்தான்‌ நாம்‌ இருப்போம்‌. யூத குருக்கள்‌, வேதபாரகர்கள்‌, பரிசேயர்‌, சதுசேயர்‌ கூட்டத்தில்தான்‌ இருப்போம்‌. காரணம்‌ அகங்காரம்தான்‌, ஆணவம்தான்‌ தடையாக இருக்கும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நல்ல விருந்தைத்‌ தேர்ந்தெருப்போம்‌

இரண்டு வகையான விருந்துகளைப்‌ பற்றி நாம்‌ பேசலாம்‌. ஒன்று ஆக்கும்‌ விருந்து, மற்றொன்று அழிக்கும்‌ விருந்து.

ஆக்கும்‌ விருந்து எப்படி இருக்கும்‌? என்பதைப்‌ பற்றி விரிவாக இறைவாக்கினர்‌ எசாயா முதல்‌ வாசகத்தில்‌ நமக்கு எடுத்துரைக்கின்றார்‌. ஆக்கும்‌ விருந்து - இது ஆண்டவர்‌ நமக்குத்‌ தரும்‌ விருந்து. இந்த விருந்தில்‌ பங்கேற்போரது வாழ்விலே துன்பமிருக்காது. துயரமிருக்காது, கவலையிருக்காது, கண்ணீரிருக்காது: முகத்தை முடியுள்ள முக்காடு நீக்கப்படும்‌: துன்பத்துகில்‌ தூக்கி எறியப்படும்‌.

ஆக்கும்‌ விருந்தை நற்செய்திமிலே இயேசு விண்ணரசுக்கு ஒப்பிடுகின்றார்‌. இந்த விருந்திலே பங்கு கொள்வோருக்கு நீதியும்‌, அமைதியும்‌, மகிழ்ச்சியும்‌ பரிமாறப்படும்‌ (உரோ 14:17). இந்த விருந்தைச்‌ சுவைப்போர்‌ எதையும்‌ செய்யும்‌ ஆற்றல்‌ பெறுவர்‌ (இரண்டாம்‌ வாசகம்‌].

அழிக்கும்‌ விருந்து எப்பழப்பட்டது? என்பதைச்‌ சுட்டிக்காட்ட இதோ ஒரு நிகழ்வு:

வசதியான மனிதரின்‌ வீட்டில்‌ வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக்‌ கிடைத்த விருந்தில்‌ திருப்தி இல்லை. வீட்டை விட்டூத்‌ தெருவுக்கு வந்தது. தெருத்‌தெருவாக உணவுக்கு அலைந்தது! கடைசியாக அதற்கு கிடைத்தது ஒரு காய்ந்த எலும்பு! அதைக்‌ கடித்தது. நாயின்‌ வாயில்‌ கீறல்கள்‌ ஏற்பட்டன: இரத்தம்‌ கசிந்தது. தன்‌ வாயிலிருந்துதான்‌ அந்த இரத்தம்‌ வருகின்றது என்பதை அறியாத அந்த. நாய்‌, எலும்பிலிருந்துதான்‌ அந்த இரத்தம்‌ கசிகின்றது என நினைத்துக்கொண்டு அந்த இரத்தத்தைச்‌ சுவைத்தது.

வழிப்போக்கர்‌ ஒருவர்‌ அந்த நாயைப்பார்த்து, நாயே நீ சுவைக்கும்‌ இரத்தம்‌ எலும்பிலிருந்து வெளிப்படும்‌ இரத்தம்‌ இல்லை. உன்‌ வாயிலிருந்து கசியும்‌ இரத்தம்‌ என்றார்‌. அதற்கு அந்த நாய்‌, நீ என்னை ஏமாற்றப்‌ பார்க்கின்றாயா? நீ சொல்கின்றபடியே வைத்துக்கொள்வோம்‌! என்‌ இரத்தமும்‌ மிகவும்‌ சுவையாகத்தான்‌ இருக்கின்றது. இது எனக்குக்‌ கிடைக்க இந்த எலும்புதான்‌ எனக்கு உதவி செய்கின்றது. ஆகவே நான்‌ இதை விடமாட்டேன்‌ என்று சொல்லிவிட்டு தனது விருந்தைத்‌ தொடர்ந்தது.

காய்ந்துபோன அந்த எலும்பைக்‌ கழத்த நாய்‌ அடைந்த மகிழ்ச்சிக்கும்‌ சிகரெட்‌, மது, பான்பராக்‌ போன்ற பொருள்களால்‌ தங்களையே அழித்துக்‌ கொண்டு சிலர்‌ அடையும்‌ மகிழ்ச்சிக்கும்‌ என்ன வித்தியாசம்‌ இருக்கின்றது?

நாம்‌ நல்ல விருந்தைத்‌ தேர்ந்தெடுத்து நாளும்‌ வளமுடன்‌ வாழ இன்றைய வாசகங்கள்‌ நமக்கு அருள்புரியட்டூம்‌.

மேலும்‌ அறிவோம்‌ :

பேதைமையுள்‌ எல்லாம்‌ பேதைமை காதன்மை
கையல்ல தன்கண்‌ செயல்‌ (குறள்‌ : 532).

பொருள்‌ : அறியாமையுள்‌ எல்லாம்‌ மிகப்பெரிய அறியாமை என்று கருதப்படுவது ஒழுக்கக்கேடான செயல்களின்‌ மீது மிகுந்த நாட்டம்‌ கொண்டு அவற்றில்‌ ஈடுபடுவது ஆகும்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் நமக்குத் தரும் விருந்து மீட்பின் விருந்து.

கர்த்தர் கற்பித்த செபத்தை இரண்டு விதமாகச் சொல்ல உங்களுக்குத் தெரியுமா? சாதாரண சாப்பாடு சாப்பிட்டால், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்றும் ஆனால் விருந்து சாப்பிட்டால், "எங்கள் இன்றைய உணவை அனுதினமும் அளித்தருளும்" என்றும் சொல்ல வேண்டும் பொதுவாக அனைவருமே விருந்துண்டு மகிழ்வதை விரும்புகின்றனர்.

இன்றைய அருள்வாக்கு வழிபாடு இறைவன் நமக்கு அளிக்கும் விருந்தினைப் பற்றிக் கூறுகிறது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "ஆண்டவர் இந்த மலையில் (சீயோன் மலையில்) மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருத்தை ஏற்பாடு செய்வார்" (எசா 25:8) இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது "என் எதிரிகள் காண நீர் எனக்கு விருந்தைத் தயாரித்துள்ளீர்" (திபா 23:5). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விண்ணரசை திருமண விருந்திற்கும் நம்மை மணமகனுக்கும் ஒப்பிடுகிறார். கடவுள் நமக்குத் தரும் விருந்து மீட்பின் விருந்து.

இன்றைய நற்செய்தியில் அரசர் தமது மகனுடைய திருமண விருத்தில் கலந்து கொள்ளும்படி பலருக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் அழைக்கப்பட்டவர்களோ பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறித் திருமண விருந்தைப் புறக்கணிக்கின்றனர். விருந்துக்கு வராததற்கு அவர்கள் கூறும் காரணங்கள்: "நான் என் வயலுக்குப் போக வேண்டும் நான் வியாபாரம் செய்ய வேண்டும் நான் தேனிலவுக்குச் செல்ல வேண்டும்."

ஒவ்வொரு ஞாயிறும் திருச்சபை நம்மைச் செம்மறியின் திருவிருந்துக்கு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு அழைக்கின்றது. ஆனால் அதில் பங்கேற்க நமக்கு நேரமில்லை. அதற்கு நாம் 1008 சாக்குப் போக்குகள் சொல்லுகிறோம். பொதுவாக மக்கள் கூறும் காரணங்கள் "விருந்தாளிகள் வந்துள்ளனர் மழை பெய்கிறது உடம்புக்கு முடியவில்லை; புதுப்படம் பார்க்க வேண்டும் கிரிக்கெட் விளையாட்டுப் பார்க்க வேண்டும் தேர்வுக்குப் படிக்க வேண்டும்; திருப்பலி விறுவிறுப்பாக இல்லை; மறையுரை தூக்க மாத்திரை."

நாம் பல காரியங்களில் பரபரப்பாகச் செயல்படுகிறோம். ஆனால் தேவையான ஒன்றை மட்டும் (லூக் 10:41-42) மறந்து விடுகிறோம். "மனிதர் உலக முழுவதையும் ஆதயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (மத் 18:26) என்ற ஆண்டவரின் அருள்வாக்கைப் புறக்கணிக்கிறோம். மீட்பின் பயனை நாம் பெறாவிடில் பிறந்ததால் எப்பயனும் இல்லை என்பதையும் மறந்து விடுகிறோம்.

ஒருவர் கடற்கரையில் மணிக்கணக்காக நின்று கொண்டிருந்தார். ஏன்? கடல் அலைகள் ஓய்ந்தபின் கடலில் குளிக்கக் காத்துக் கொண்டிருந்தார். கடல் அலைகள் ஓய்வது எப்போது? அவர் குளிப்பது எப்போது? அலைகள் ஓய்வதில்லை. அவ்வாறே நமது வேலைகளும் கவலைகளும் ஓய்ந்தபின் கடவுளை நினைப்பது ஒருபோதும் நடக்காத காரியம். எனவே காலம் உள்ளபோதே நாம் ஆன்ம காரியங்களில் அக்கறை செலுத்த வேண்டும்.

திருமணத்திற்கு வந்தால் மட்டும் போதாது திருமண உடை அணிந்திருக்க வேண்டும். நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது புதுப் பிறப்பின் அடையாளமாக நமக்கு வெண்ணிற ஆடை அளிக்கப்பட்டது. விண்ணுலகில் மீட்படைந்தவர் வெண்ணிற ஆடை அணிந்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது (திவெ34, 4:4)

பெண்கள் விதவிதமாகப் புடவை அணிய விரும்புகின்றனர் "முன்பெல்லாம் பெண்களுக்கு இடையே இல்லாதது போன்று இருந்தது. ஆனால் இப்பொழுது அவர்களுக்கு உடையே இல்லாதது போலிருக்கிறது" என்று ஆதங்கப்படுகிறார் ஒருவர் பாகவதற்கும் சினிமா நடிகைக்கும் உள்ள வேறுபாடு என்ன? "பாகவதர் அங்கவஸ்திரம் அணிந்தள்ளார். சினிமா நடிகையோ அங்கங்கே வஸ்திரம் அணிந்திருக்கிறார்" என்று கடிக்கின்றார் மற்றொருவர். நாம் அணிய வேண்டிய ஆடை என்ன? "அன்பை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள்" (கொலோ 3:14) என்று அறிவுறுத்துகின்றார் புனித பவுல் அகத்தில் அன்பு இல்லாதவர்கள் அந்த அன்பை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தாதவர்கள் நற்கருனைத் திருவிருந்தில் பங்கேற்கத தகுதியற்றவர்கள். அன்பில்லாதவர்கள் வெறும் சதைப் பிண்டங்கள் என்று கடிந்துரைக்கிறார் வள்ளுவர்.

அன்பின் வழியாது உயர்நிலை அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடற்பு (குறள் 80)

இம்மை வாழ்வுக்கு உணவு தேவை. ஆனால் உணவுக்கு நாம் அடிமைகள் அல்ல. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் "வயிறார உண்னவோ பட்டினி கிடக்கவோ நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்" (பிலி 4:12). மண்ணக உணவைவிட விண்ணக உணவு நமக்குத் தேவை. கிறிஸ்து நம்முடன் உண்ண விரும்புகிறார் "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன்.

யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவர்கள்" (திவெ 3: 20) கிறிஸ்து நம் உள்ளக் கதவைத் தட்டும்போது கதவைத் திறப்போமா? அல்லது தட்டிக் கழிப்போமா?

"செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோ பெறுபெற்றோர்" (திவெ 19:9)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விருந்தும் வெண்ணிற ஆடையும்‌

அமெரிக்காவில்‌ ஒர்‌ ஆலயத்தின்‌ வாசலில்‌ பெரிய படம்‌ ஒன்று தொங்குகிறது. ஆண்டவர்‌ இயேசுவின்‌ அழகுமிக்க படம்‌ அது. அதனடியில்‌ இப்படியொரு.வாசகம்‌: “Jesus of Nazareth invites you for his wedding dinner” நாசரேத்து ஊரின்‌ இயேசு தன்‌ திருமண விருந்துக்கு என்னையா அழைக்கிறார்‌? சிந்திக்க வைக்கும்‌ சொற்கள்‌.

எங்கே அந்தத்‌ திருமணம்‌? நமது ஆலயத்தில்தான்‌. எப்போது? திருப்பலி ஒவ்வொன்றும்‌ அவருடைய திருமணம்‌ தான்‌. மணப்பெண்‌ யார்‌? அவர்‌ தினமும்‌ மணக்கும்‌ திருஅவைதான்‌. அழைக்கப்படுபவர்கள்‌? அனைத்துக்‌ கத்தோலிக்க மக்களும்தான்‌. அளிக்கும்‌ விருந்து? வானவர்க்குரிய உணவுதான்‌. நற்கருணைத்‌ திருவிருந்து. விவிலியம்‌ பேசும்‌ மெசியா விருந்தின்‌ செயல்வடிவம்‌. யோபு (குறிப்பிடும்‌ ஊட்டமுள உணவு. (யோபு. 36:16)

இறையரசை ஒரு விருந்தாகக்‌ கருதுவது மறை நூலின்‌ மரபு. இறைவாக்கினர்‌ எசாயாவின்‌ இறைவாக்கு இதற்கு எடுத்துக்காட்டு. மெசியாவின்‌ மீட்பைப்‌ பெரிய விருந்தாகச்‌ சித்திரிக்கிறார்‌ அவர்‌. அப்போது மக்களின்‌ துயரங்கள்‌ அகலும்‌. துன்பங்கள்‌ துடைக்கப்படும்‌ (எசா. 25:6-10). இவ்விருந்து இஸ்ரயேல்‌ குலத்தாருக்கு மட்டுமல்ல, எல்லா இனத்து மக்களுக்குமே என்று எசாயா குறிப்பிடுவது நமது கவனத்தை ஈர்க்க வேண்டும்‌.

இயேசு குறிப்பிடும்‌ திருமண விருந்தும்‌ இறையரசே! இறையரசுக்குத்‌ தகுதி பெற்றவர்களாக அதற்கு அழைக்கப்பட்டவர்கள்‌ யூத மக்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ அந்த அழைப்பை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. பல்வேறு காரணங்களை, சாக்குப்போக்குகளைச்‌ சொல்லி, கிறிஸ்துவின்‌ நற்செய்தியைப்‌ புறக்கணிக்கின்றனர்‌. இதனைக்‌ கண்டித்து அவர்களின்‌ தவறான மதிப்பீட்டைச்‌ சுட்டிக்காட்டவே இந்த உவமையை இயேசு கூறுகிறார்‌. இறையரசுக்கு உரிமையுள்ளவர்கள்‌ என்று தம்மைக்‌ கருதியவர்கள்‌ இப்போது இறையரசுக்குத்‌ தகுதியற்றவர்களாகி விட்டார்கள்‌.

அது மட்டுமா? விழாக்கள்‌ விருந்துகள்‌ எல்லாமே உறவை உருவாக்கிக்‌ கொள்ள, உறவை உறுதிப்படுத்திக்கொள்ள, உறவைப்‌ புதுப்பித்து வளப்படுத்திக்‌ கொள்ள அன்றோ! விருந்து புறக்கணிக்கப்படுகிறதா, உறவின்‌ சிறகுகள்‌ சிதைக்கப்படுகின்றன. முதன்மை பெற வேண்டிய உறவின்‌ தலைவன்‌ இரண்டாம்‌ இடத்துக்குத்‌ தள்ளப்படுகிறான்‌.

நான்கு சாலைகள்‌ சந்திக்கும்‌ இடத்தில்‌ அறிவிப்புப்‌ பலகை ஒன்றை நிறுத்தி ஒருவன்‌ "வாழ்வு என்பது என்ன?” என்ற கேள்வியை எழுதிவைத்தான்‌. அந்த வழியாக வந்த ஒருவர்‌ அதன்‌ கீழே “வாழ்வு என்பது துன்பங்களை, சோதனைகளைச்‌ சந்திக்கின்ற ஒரு போர்க்களம்‌” என்று எழுதி வைத்தார்‌. “எந்திரமாக இயங்கும்‌ இரயில்‌” என்று இன்னொருவர்‌. “இன்பமும்‌ துன்பமும்‌ கலந்துவரும்‌ ஒரு மெகா தொடர்‌ (சீரியல்‌) என்று ஒரு பெண்‌. ஒரு சிறுவனோ இப்படி எழுதினான்‌: “ஒவ்வொரு நாளும்‌ கடவுள்‌ நமக்குத்‌ தரும்‌ அழைப்பு.

அந்த அழைப்பை எப்படிச்‌ சந்திக்கிறோம்‌? புறக்கணித்துத்‌ தவறு செய்கிறோம்‌. தவறை மறைக்கச் சாக்குப் போக்குகளை சொல்கிறோம்‌.

இயேசு எப்படி அந்த அழைப்பை ஏற்றார்‌? தாழ்ச்சி நிறை உள்ளத்தோடு, தந்தையின்‌ திருவுளத்துக்குப்‌ பணிந்த மனத்தோடு முத்தாய்ப்பு வைப்பது போல உவமையை முடிக்கிறார்‌ இயேசு. “அழைப்புப்‌ பெற்றவர்கள்‌ பலர்‌. ஆனால்‌ தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்‌” (மத்‌. 22:14)

தெரிந்து கொள்ளப்படாததற்கு இரண்டு காரணங்கள்‌:

1. அழைப்பைப்‌ புறக்கணிப்பது. சாக்குப்போக்குச்‌ சொல்லி உதற்த்தள்ளுவது: மனித வீழ்ச்சியின்‌ வரலாறே தவறுகளை நியாயப்படுத்தித்‌ தப்பிக்கும்‌ முயற்சியில்தானே தொடங்குகிறது. “நீ ஏன்‌ இவ்வாறு செய்தாய்‌?” என்று கடவுள்‌ கேட்டபோது, “என்னுடன்‌ இருக்கும்படி நீர்‌ தந்த அந்தப்‌ பெண்‌ மரத்தின்‌ கனியை எனக்குக்‌ கொடுத்தாள்‌. நானும்‌ உண்டேன்‌” என்கிறார்‌ ஆதாம்‌. “பாம்பு என்னை ஏமாற்றியது” என்கிறாள்‌ ஏவாள்‌. (தொ.நூ. 3:12-13). நொண்டிக்‌ குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பது போல அழைப்பைத்‌ தட்டிக்‌ கழிக்கச்‌ சந்தர்ப்பங்களைத்‌ தேடுவதா? “அழைப்புப்‌ பெற்றவர்களோ அதைப்‌ பொருட்படுத்தவில்லை. ஒருவர்‌ தன்‌ வயலுக்குச்‌ சென்றார்‌. வேறு ஒருவர்‌ தம்‌ கடைக்குச்‌ சென்றார்‌...” (மத்‌. 22:5).

2. அழைப்பை ஏற்றாலும்‌ அதற்கு ஏற்ற தகுதியற்றிருப்பது: அதாவது திருமண ஆடையின்றி இருப்பது. மனிதனின்‌ தகுதியைப்‌ பார்த்தன்று, தன்‌ அருள்பெருக்கிற்கேற்ப இலவசமாக மீட்பின்‌ அழைப்பை விடுக்கிறார்‌. எனவே நல்லோர்‌ தீயோர்‌ யாவரும்‌ (மத்‌. 22:10) விருந்துக்கு வருகிறார்கள்‌. அழைப்புக்கு முன்‌ தகுதி பார்ப்பதில்லை. ஆனால்‌ அழைப்புக்குப்‌ பின்‌ அதற்கு ஏற்ப வாழ்ந்து தகுதி பெறுவது நமது கடமை இல்லையா? கிறிஸ்தவ அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கைதான்‌ நாம்‌ அணிய வேண்டிய திருமண ஆடையாகும்‌. அழைப்பைப்‌ பெற்றதனால்‌ நாம்‌ தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாகிவிட மாட்டோம்‌. மாறாக அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்வதனால்தான்‌!

சீடன்‌ தன்‌ நண்பனிடம்‌ “எத்தனையோ பேர்‌ சீடராயிருக்க வந்தார்கள்‌. ஆனால்‌ என்னை மட்டும்தான்‌ குரு சீடனாக ஏற்றுக்‌ கொண்டார்‌. எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா?” என்றான்‌. இதைக்‌ கேள்விப்பட்ட குரு சீடனைத்‌ தனியாக அழைத்துச்‌ சொன்னார்‌ “நீ சிறந்தவன்‌ என்றோ, திறமையானவன்‌ என்றோ, நல்லவன்‌ என்றோ உன்னை அழைக்கவில்லை. கடவுள்‌ உன்னை அதிகமாகப்‌ பயன்படுத்த விரும்புகிறார்‌. அவருடைய விருப்பத்திற்கேற்ப நீ வாழ வேண்டும்‌”.

உவமையில்‌ இயேசு குறிப்பிடும்‌ திருமண ஆடை ஏற்கனவே திருமுழுக்கில்‌ நமக்கு அணியப்பெற்றதுதான்‌. “நீங்கள்‌ புதுப்படைப்பாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள்‌. இந்த வெண்ணிற ஆடை உங்களது மேன்மையின்‌ அடையாளமாய்‌ இருப்பதாக. உங்கள்‌ உறவினரின்‌ சொல்லாலும்‌ முன்மாதிரிகையாலும்‌ நீங்கள்‌ உதவி பெற்று இதை மாசுபடாமல்‌ முடிவில்லா வாழ்வுக்குக்‌ கொண்டு போய்ச்‌ சேர்ப்பீர்களாக!”

அந்த வெண்ண்ற ஆடை?

1. மீட்பின்‌ (இரட்சிப்பின்) ஆடை: பாவத்தின்‌ விளைவாக, தான்‌ ஆடையின்றி இருப்பதை உணர்கிறான்‌ மனிதன்‌ (தொ.நூ. 3:7). மனந்திரும்பி கடவுளின்‌ இரக்கத்திற்குள்‌ வரும்போது கடவுளே அவனை மணமகனைப்‌ போல்‌ மீட்பின்‌ ஆடையால்‌ அணி செய்கிறார்‌. (எசா. 61:10).

2. வல்லமை என்னும்‌ ஆடை: தூய ஆவியின்‌ அருள்‌ பொழிவால்‌ நாம்‌ நிரப்பப்படும்போது ஆற்றல்‌ என்னும்‌ ஆடையை அணிந்து கொள்கிறோம்‌. (எசா. 52:1).

3. நீதி என்னும்‌ ஆடை: ஆவி தரும்‌ வல்லமை என்னும்‌ ஆடையை அணிந்து சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்‌. அவரோடு அவரில்‌ இணைந்து நாம்‌ நீதியின்‌ செயல்களைச்‌ செய்யும்போது, இறையாட்சியின்‌ மதிப்பீடுகளை வாழ்வாக்க முயலும்போது நாமே மணமக்களாக்கப்படுகிறோம்‌. (திருவெளி. 19:8).

4. அன்பு என்னும்‌ ஆடை: “அன்பை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள்‌” (கொலோ. 3:14).

ஆக, பாவிகளாக இருக்கிற நம்மை அழகாக உடுத்தி மணமக்கள்‌ என்ற உயர்ந்த இடத்துக்குக்‌ கொண்டு வருகிற நம்‌ இறைவனாகிய ஆண்டவரைப்‌ பாவங்களால்‌ மனம்‌ நோகச்‌ செய்வது, ஆடையின்றித்‌ திருமண விருந்துக்குள்ளே நுழைந்தவனைப்‌ போல்‌ ஆக்குகிறது.

“இறையாட்சி என்பது நாம்‌ உண்பதையும்‌ குடிப்பதையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டதன்று. மாறாகத்‌ தூய ஆவி அருளும்‌ நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக்‌ கொண்டது” (உரோமை. 14:17)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பகிர்வதற்கு அழைப்பு

அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் கென்னடி அவர்கள், வெள்ளை மாளிகையில் ஒரு முறை சிறப்பு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். கலைத்துறையில் மிகவும் புகழ் பெற்றவர்களை மட்டும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்களில், வயதில் முதிர்ந்த William Faulkner என்பவரும் ஒருவர். அவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளர். அரசுத்தலைவர் கென்னடியிடமிருந்து வந்திருந்த அந்த அழைப்பைக் கண்டதும், வில்லியம் அவர்கள், "எனக்கு அதிக வயதாகிவிட்டது. எனவே, புது நண்பர்களை உருவாக்க எனக்கு விருப்பமில்லை" என்று பதில் சொல்லி, அந்த அழைப்பை மறுத்துவிட்டார்.

இப்படி ஓர் அரிய வாய்ப்பை வில்லியம் அவர்கள் மறுத்துவிட்டாரே என்று நாம் எண்ணலாம். அழைப்பை ஏற்க மறுத்ததற்கு, அவர் சொன்ன காரணம், நமக்கு எரிச்சல் மூட்டலாம். வில்லியம் அவர்களைப்பற்றி நம் தீர்ப்புகளை எழுதுவதற்கு முன், நம்மைப்பற்றி கொஞ்சம் சிந்திப்போமே. வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள், எத்தனை, எத்தனை... இந்த அழைப்புக்களையும், வாய்ப்புக்களையும், ஏற்க மறுத்து, நாம் கூறிய சாக்கு போக்குகள், எத்தனை, எத்தனை... இவற்றைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இந்த அழைப்பை ஏற்போமா?

இறைவன் தரும் விருந்துக்கு விடுக்கப்படும் அழைப்பும், அழைப்பை மறுத்து சொல்லப்படும் சாக்குபோக்குகளும் இன்றைய வாசகங்களின் மையக் கருத்துக்கள். இறைவன் தரும் ஒரு விருந்தை, இறைவாக்கினர் எசாயா விவரிக்கும்போது, முதலில் அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இவை வெறும் உணவுப் பொருட்களின் பட்டியலைப்போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து வந்த அடிமை வாழ்வை நினைத்துப்பார்த்தால், இந்தப் பட்டியல், அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும்.

அடுத்த நாள், அல்லது, அடுத்த வேளை, உணவு வருமா என்பதே தெரியாமல், ஏங்கித் தவிக்கும் ஏழைகள், எப்படிப்பட்ட உணவு தங்களுக்குக் கிடைக்கும், அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையெல்லாம் சிந்திப்பது கிடையாது. வகை வகையாய் உணவருந்தும் செல்வந்தர் மனதில், இந்தச் சிந்தனைகளெல்லாம் உருவாகும்.

பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய், அகதிகளாய், நாடோடிகளாய் வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் உண்டதெல்லாம், பரிதாபமான உணவு வகைகளே. மிருகங்களுக்குத் தரப்படுவதுபோல், பெரிய பாத்திரங்களில், அல்லது, பாய்விரிப்பில் கொட்டப்படும் உணவை, அந்த அடிமைகள் உண்ணவேண்டும். அதுவும், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு உண்ணவேண்டும். பொறுமையாய், நாகரீகமாய் காத்திருந்தால், ஒன்றும் கிடைக்காது. இப்படி, ஒவ்வொரு நாளும், ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்கள், ஆற அமர நாற்காலிகளில் அமர்ந்து, விருந்துண்பது எப்படி என்பதையே மறந்திருந்தனர். அவர்களிடம், இறைவன் தரும் விருந்தைப்பற்றி, இறைவாக்கினர் எசாயா, இவ்விதம் கூறுகிறார்:

இறைவாக்கினர் எசாயா 25: 6

இறைவாக்கினர் எசாயா, இந்த வாசகத்தில் குறிப்பிட்டிருக்கும் திராட்சை இரசத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். நல்ல சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில், அன்னை மரியா, கானாவில் நடந்த திருமணத்தின்போது, இயேசுவை அணுகிய அந்த நிகழ்வு நமக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.

எசாயா குறிப்பிடும் “வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசத்தை” உருவாக்க, நேரமும், கவனமும் தேவை. நேரம் எடுத்து, கவனம் செலுத்தி உணவுப்பொருட்களையோ, திராட்சை இரசங்களையோ உருவாக்கும் அந்தப் பழக்கத்தையே, பல நூற்றாண்டுகளாய் இழந்து தவித்தனர், இஸ்ரயேல் மக்கள். சுவையுள்ள திராட்சை இரசத்துடன் விருந்து கொடுத்து பெருமைகொண்ட காலங்களெல்லாம், அவர்களுக்கு, தூரத்துக் கனவுகளாக இருந்தன. இவ்விதம் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, எசாயா கூறும் இந்த உணவுப் பட்டியல், தங்கள் பாரம்பரியப் பெருமையை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பைத் தந்திருக்கும். அல்லது, வரப்போகும் விடுதலை வாழ்வைப் பற்றிய நம்பிக்கையை, அவர்கள் உள்ளங்களில் வளர்த்திருக்கும்.

விருந்தையும், உணவுப் பட்டியலையும் இவ்வளவு விரிவாக நாம் சிந்திக்க வேண்டுமா என்ற எண்ணம் எழலாம். அதற்கு காரணம் உண்டு, அன்பர்களே. அன்று, தங்கள் சுயமரியாதையையெல்லாம் இழந்து, உணவுக்காகப் போராடிய இஸ்ரயேல் மக்களைப் போல, நாம் வாழும் இன்றையச் சூழலிலும் உணவுக்காகப் போராடும் பல கோடி மக்களை எண்ணிப்பார்க்க இன்றைய வாசகங்கள் நமக்கு ஓர் அழைப்பைத் தருகின்றன.

உலகின் பல நாடுகளில், பசியின் கொடுமையால், தங்கள் மனிதத்தன்மையை இழந்து, வாழ்வோரை எண்ணிப்பார்க்க; அவர்கள் மீண்டும் மனிதர்களாக வாழ்வதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்பதை எண்ணிப் பார்க்க; இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. குறிப்பாக, நமக்கு உணவு வழங்கும் விவிசாயிகளை, முன்னேற்றம் என்ற பெயரால், பட்டினியால் கொல்லும் இந்திய அரசின் செயல்பாடுகள், நம்மில் எத்தனை பேரை பாதித்துள்ளது என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக நாம் மேற்கொள்ள இந்த ஞாயிறு அழைப்பு விடுக்கிறது.

தூக்கியெறியும் கலாச்சாரம், நம்மில் எவ்வளவு பாதகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். நாம் உணவைத் தூக்கியெறியும் போக்கைக் குறித்துப் பேசுகையில், சற்று கடினமான வார்த்தைகளையே பயன்படுத்தினார், திருத்தந்தை. உலகில் கோடான கோடி மக்கள் உணவின்றி தவிக்கும் வேளையில், "உணவை, குப்பையில் எறிவது, ஏழைகளுக்கும், பசித்திருப்போருக்கும் போய்ச் சேரவேண்டிய உணவைத் திருடுவதற்குச் சமம்" என்று ஒருமுறை (ஜூன் 5, 2013), தன் புதன் பொது மறைக்கல்வி உரையில் குறிப்பிட்டார்.

வறுமைப்பட்ட பல நாடுகளில் நிலவும் வறட்சியும், பட்டினிச் சாவுகளும் நாம் பல ஆண்டுகளாகக் கேட்டுவரும் ஒரு செய்தி என்பதால், அது நம் உள்ளத்தைத் தொடாமல் போக வாய்ப்பு உண்டு. "வறுமையும், பட்டினியும் உலகில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. என்னால் என்ன செய்ய முடியும்?" என்று இந்தப் பிரச்சனையை அலட்சியப்படுத்தும் ஆபத்து அதிகம் உண்டு.

அரசன் தந்த அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் வயல்களிலும், கடைகளிலும் பணிகள் செய்யப்போன மனிதர்களை, இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். அதேபோல், வறுமைப்பட்ட நாடுகளில் நிகழும் பட்டினிச் சாவுகள் வழியே நமக்கு வரும் அழைப்புக்களையும் நாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நம் பணிகளில், நம் சொந்த வாழ்வில் மீண்டும் மூழ்கிவிடும் ஆபத்து நமக்கும் உண்டு.

வறுமைப்பட்ட நாடுகளில் நிகழும் பட்டினிச் சாவுகளைப் பற்றிப் பேசும்போது, முன்னர் வாசித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. இந்தப் பட்டினி சாவுகளால் சிறிதும் பாதிக்கப்படாமல், தனக்கு விடப்பட்ட பணியை மட்டும் செய்துவிட்டுத் திரும்பிய ஒரு புகைப்படக் கலைஞரைப் பற்றிய செய்தி அது.

மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் புகைப்படங்கள், அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் சிறந்த படத்திற்கு, ஒவ்வோர் ஆண்டும், Pulitzer என்ற விருது வழங்கப்படும். 1994ம் ஆண்டு, இந்த விருதைப் பெற்ற புகைப்படம், சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். அங்கு நிலவிய பட்டினிக் கொடுமையை விளக்கும் ஒரு படம். அப்படத்தில், எலும்பும் தோலுமான ஒரு பெண் குழந்தை, தரையில் ஊர்ந்து செல்வதாகக் காட்டப்பட்டிருந்தது. பல நாள்கள் பட்டினி கிடந்ததால், எழுந்து நடக்கும் சக்தியை இழந்திருந்த அந்தக் குழந்தை, அருகிலிருந்த ஒரு உணவுதரும் மையத்திற்கு, ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அக்குழந்தைக்குப் பின்புறம், பிணம்தின்னும் கழுகு ஒன்று அமர்ந்திருந்தது. அந்தக் குழந்தை எப்போது இறந்து விழும், தன் விருந்தை ஆரம்பிக்கலாம் என்று அந்தக் கழுகு காத்திருந்தது. சூடானில், மனிதர்கள், உணவின்றி இறந்து வந்ததால், பிணம் தின்னும் கழுகுகளுக்கு பெருமளவு உணவு கிடைத்தது என்பதை, அந்தப் படம் சொல்லாமல் சொன்னது.

விருதுபெற்ற அந்தப் படத்தை எடுத்தவர், Kevin Carter என்ற 33 வயது இளைஞர். ஐ.நா.அமைப்பு, சூடானில் மேற்கொண்ட பணிகளை படங்களாகப் பதிவுசெய்யச் சென்றவர் அவர். அவருக்கு Pulitzer விருது கிடைத்த அன்று, பலர், அவரிடம் “அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது?” என்று கேட்டார்கள். அவர் பதிலுக்கு, "நான் அந்தப் படத்தை எடுத்தபின், கழுகை விரட்டிவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டேன். அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது" என்று சொன்னார். அவர் சொன்ன அந்தப் பதிலைக் கேட்டபின், ஒரு நாளிதழ், Kevin Carterஐப் பற்றி பின்வருமாறு எழுதியிருந்தது: "குழந்தைக்கு இந்தப் பக்கம் அமர்ந்து படம் எடுத்த இவருக்கும், குழந்தைக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த அந்தப் பிணம் தின்னும் கழுகுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை." விருது பெற்ற இந்தப் புகைப்படத்தினால் அவர் பெற்ற கண்டனங்கள் Kevin Carterன் மனதை உடைத்தன. விருதுபெற்ற அதே ஆண்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார்.

பசி, பட்டினி, வறுமை இவற்றை நாம் எவ்விதம் நோக்குகிறோம்? பட்டினிச் சாவுகள் நமக்கு வெறும் புள்ளி விவரங்களா? தினசரி செய்திகளா? காட்சிப் பொருள்களா? அல்லது, இவை அனைத்தும், இறைவன் நமக்குத் தரும் சிறப்பான அழைப்புக்களா? நான், எனது, என்ற சிறைகளிலிருந்து வெளியேறுவதற்கு, இறைவன் நமக்குத் தரும் அழைப்புக்களை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு, நம் அன்றாட வாழ்வில் மட்டும் கவனம் செலுத்துவது, வலியச் சென்று, நம்மையே, தன்னலச் சிறைகளுக்குள், மீண்டும் அடைத்துக்கொள்ளும் வழிகள். இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை, எத்தனை முறை, கொன்று, குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு, இன்றும், இனி வரும் நாட்களிலும், பதில்கள் தேடுவது, நமக்கு மீட்பைத் தரும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விருந்துக்கான அழைப்பும் பதிலிறுப்பும்

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு பசி. இந்தப் பசியைப் போக்குவது உணவு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் உணவு உண்டாலும், மனிதர்களைப் பொறுத்தவரையில் உணவு என்பது வெறும் வயிற்றுப் பசி போக்குவது என்பதைத் தாண்டிய பொருள் கொண்டது. உணவு என்பது உறவின் அடையாளமாகவும் காணப்படுகிறது. உறவின் அடையாளமாகப் பரிமாறப்படும் உணவை நாம் விருந்து என்கிறோம்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு விருந்துக்கான அழைப்பு மற்றும் பதிலிறுப்பை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. நாம் பலரை அழைத்து விருந்து படைக்கிறோம். மற்றவர்களின் அழைப்புக்கு பதிலிறுப்பு செய்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 25:6-10), ஆண்டவராகிய கடவுள் நிறைவுகாலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு வைக்கவிருக்கிற விருந்து பற்றி முன்னுரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. நிறைவுகாலம் என்பது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வருகிற நிகழ்வைக் குறிப்பதாகவும் பொருள்கொள்ளலாம். ஆண்டவராகிய கடவுளின் பெயர் 'படைகளின் ஆண்டவர்' என வழங்கப்பட்டுள்ளது. சீயோன் மலையில் படைகளின் ஆண்டவர் விருந்தினை ஏற்பாடு செய்கிறார். இந்த விருந்தின் மூன்று பண்புகளாக இறைவாக்கினர் குறிப்பிடுபவை: (அ) விருந்துக்கான அழைப்பு பொதுவானது - இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லாமல் மக்களினங்கள் அனைவரையும் ஆண்டவராகிய கடவுள் அழைக்கிறார். (ஆ) விருந்து சுவைமிக்கது – பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம். (இ) விருந்து நிறைந்து பெருகி வழிகிறது – வருகிற அனைவரும் உண்ணும் அளவுக்கு அபரிவிதமாக இருக்கிறது. இந்த விருந்தின் வழியாக துன்பம், சாவு, கண்ணீர், நிந்தை என்னும் நான்கு எதிர்மறையான நிலைகளைக் களைகிறார் கடவுள்.

இவற்றையெல்லாம் காண்கிற மக்கள், 'இவரே நம் கடவுள். இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்' என்று பாடுவார்கள்.

ஆண்டவராகிய கடவுள் இந்த உறவின் வழியாக, இஸ்ரயேல் மக்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் மீட்பரை மீண்டும் கண்டுகொள்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமண விருந்து உவமை வாசிக்கிறோம். லூக்கா நற்செய்தியிலும் காணப்படுகிறது இந்த உவமை. தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களைப் பார்த்து இயேசு இந்த உவமையை உரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்துகிறார். யூத சமூகத்தில் திருமண நிகழ்வு என்பது மிக முக்கியமான ஒன்று. ஏழு நாள்கள் முதல் முப்பது நாள்கள் வரை நடக்கக் கூடியது திருமண நிகழ்வு. இங்கே இளவரசனுக்குத் திருமணம் நடக்கிறது. விருந்துக்கான அழைப்பு முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கும் குழுவினர்களுக்கும், இரண்டாவதாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதலில் அழைக்கப்பட்டவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி அழைப்பை நிராகரிக்கிறார்கள். இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்றாலும் அவர்களில் ஒருவர் திருமண உடை அணியாமல் வருவதால் நிராகரிக்கப்படுகிறார். 'அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்' என்னும் வாக்கியத்தோடு உவமை நிறைவு பெறுகிறது.

முதலில் அழைக்கப்பட்டவர்கள் நான்கு நிலைகளில் பதிலிறுப்பு செய்கிறார்கள்: (அ) விருப்பம் இல்லாமல் இருந்தார்கள் (மத் 22:3). (ஆ) அழைப்பைப் பொருட்படுத்தவில்லை (22:5). (இ) வேறு முதன்மைகளைக் கொண்டிருந்தார்கள் - வயலுக்கும் கடைக்கும் செல்தல் (22:5). (ஈ) பணியாளர்களை இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள் (22:6). இந்த நான்கு பதிலிறுப்புகளும் எதிர்மறையாக இருக்கின்றன.

இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நேர்முகமாகப் பதிலிறுப்பு செய்து விருந்தில் பங்கேற்க வந்திருந்தாலும், வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி வருகிறார். திருமண ஆடை என்பது விருந்துக்கான அழைப்பின்போது வழங்கப்படுகிற ஆடை. விருந்துக்குச் செல்பவர்கள் அவ்வாறு வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டே செல்வர். ஆடையை அணிய மறுப்பதன் வழியாக, ஒருவகையில் இந்த நபரும் எதிர்மறையாகவே பதிலிறுப்பு செய்கிறார்.

உவமையின் பொருளைப் பார்க்கும்போது, அரசர் என்பவர் வானகத் தந்தை, மகன் இயேசு கிறிஸ்து, திருமண விருந்து இறையாட்சி, பணியாளர்கள் இறைவாக்கினர்கள், முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள், இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக அழைக்கப்பட்ட புறவினத்தார்கள் அனைவரும் திருமண விருந்துக்குள் நுழையும் தகுதி பெற்றிருந்தாலும், விருந்தில் தொடர்வது என்பது ஒவ்வொருவரும் தம்மையே தகுதியாக்கிக்கொள்வதைப் பொறுத்தே அமைகிறது.

இந்த உவமை இயேசுவின் வலை உவமையை நினைவுபடுத்துகிறது. விண்ணரசு வலை போல அனைத்து மீன்களையும் வாரிக்கொண்டு வந்தாலும் நல்ல மீன்களே பாத்திரத்தில் சேகரிக்கப்படுகின்றன. மற்ற மீன்கள் மீண்டும் கடலுக்குள் அல்லது குப்பையில் எறியப்படுகின்றன. வலையில் சிக்கியதால் மட்டுமே மீன்கள் சேகரிக்கப்படும் என்பது பொருள் அல்ல. மீன்கள் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

முதல் வாசகத்தில் நாம் காணும் விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பைப் பெறுகிறது. இரண்டாம் வாசகத்திலோ விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுகிறது.

விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுவதற்கான காரணம், அரசரின் மேன்மையையும் வல்லமையையும் மக்கள் அறியாததே. இதை வெறும் விருந்து என்று பார்த்தார்களே தவிர, அரசரோடு உறவாடக் கூடிய வாய்ப்பு என்று அவர்கள் பார்க்கவில்லை. மேலும், மேன்மையான விருந்தைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக தாழ்மையான தங்களுடைய முதன்மைகளைத் தேர்ந்துகொண்டார்கள்.

இந்த இரண்டு விருந்து அழைப்புகளும் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

முதலில், வாழ்க்கை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கான அழைப்பை ஆண்டவராகிய கடவுள் நம் அனைவருக்கும் வழங்குகிறார். அவர்தாமே நமக்கு விருந்து பரிமாறுகிறார். அவர் நமக்கு விருந்து அளித்தாலன்றி நாம் பசியாற முடியாது. ஆனால், பல நேரங்களில் நம் காலிக் கோப்பைகளைத் தூக்கிக்கொண்டு மற்ற காலிக் கோப்பைகளைத் தேடிச் செல்கிறோம். காலிக் கோப்பைகள் ஒருபோதும் மற்ற காலிக் கோப்பைகளை நிரப்ப முயலாது என்பதை அறிந்துகொள்வோம்.

இரண்டாவது, அருளடையாளங்கள், குறிப்பாக, நற்கருணை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கு நாம் எல்லாரும் அழைப்பு பெற்றிருந்தாலும், திருமண ஆடை அணியாதவர் விருந்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். திருமண ஆடை என்பது நாம் கொள்ள வேண்டிய தயார்நிலை. விருப்பம் மட்டும் போதாது. தயார்நிலையும் வேண்டும்.

மூன்றாவது, திருமண விருந்தின் நோக்கம் கடவுளோடு உள்ள உறவு. 'இவருக்காகவே நாங்கள் காத்திருந்தோம்' என்று படைகளின் ஆண்டவரைத் தேடி ஓடுகிறார்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளோடு நாம் கொள்ள வேண்டிய உறவு அவரோடு நாம் அருந்தும் உணவின் வழியாகவே நிறைவு பெறுகிறது.

திருமண விருந்தில் பங்கேற்பதற்கான வழி முறைகளை இருவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்:

ஒருவர், அரசர் தாவீது. இன்றைய பதிலுரைப் பாடலில் (காண். திபா 23) 'ஆண்டவரே, என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' எனப் பாடுகிற தாவீது, 'என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது' என்று, ஆண்டவராகிய கடவுள் தரும் விருந்தால் தான் நிறைவு பெறுவதை எடுத்துரைக்கிறார்.

இரண்டு, திருத்தூதர் பவுல். இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20), பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தை நிறைவு செய்கிற பவுல், தன் பணி வாழ்வில் தான் அனுபவித்த எல்லா அனுபவங்களையும் நினைவுகூர்ந்தவராகத் தன் கடிதத்தை நிறைவு செய்கிறார். ஒருநாள் நிறைவான உணவு, மறுநாள் பட்டினி, ஒருநாள் பஞ்சுமெத்தையில் தூக்கம், மறுநாள் மண்தரையில் உறக்கம், ஒருநாள் வெதுவெதுப்பு மறுநாள் குளிர், ஒருநாள் பாதுகாப்பு, மறுநாள் அச்சுறுத்தல், ஒருநாள் சிரிப்பு, மறுநாள் அழுகை என மாறி மாறி தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்கிறார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அந்தச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோமோ அல்லது தலை துண்டிக்கப்படுவோமா என்பதே அவருக்கு உறுதியாக இல்லை. சிறையின் தனிமை, வருத்தும் முதுமை, நோய், இன்னும் நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றனவோ என்ற ஏக்கம் தரும் சோர்வு, தரையின் குளிர், கசையடிகளின் காயம் என அனைத்தும் வருத்தினாலும், 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' எனப் பெருமிதம் கொள்கிறார். இந்தப் பயிற்சியைக் கொடுத்தது யார்? அல்லது அந்தப் பயிற்சிக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தது யார்?

பவுலே தொடர்கிறார், 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' தன் கடவுளை, 'வலுவூட்டுகிறவர்' என்ற தலைப்பு கொடுத்து அழைக்கிறார் பவுல். மேலும், தன் தேவையில் உடனிருந்த பிலிப்பி நகரத் திருஅவையினரைப் பாராட்டி, 'கடவுள் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்' என வாழ்த்துகிறார்.

தான் பெற்றுள்ள நிறைவைத் தன் இறைமக்களும் பெறுவார்கள் என எதிர்நோக்கு கொண்டிருக்கிறார் பவுல்.

உணவும் விருந்தும் விவிலியத்தில் முதன்மையான கருத்துருகளாகத் திகழ்கின்றன. நம் முதற்பெற்றோரின் பாவம் விலக்கப்பட்ட கனியை உண்டதில்தான் தொடங்குகிறது. நற்செய்தி நூல்கள் இயேசு பல விருந்துகளில் பங்கேற்கிறார். விருந்து பற்றிய எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். காணாமற்போன மகன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 15), இளைய மகன் திரும்பிவந்தபோது அனைவருக்கும் விருந்து படைக்கிறார் தந்தை. விருந்தில் கலந்துகொள்ள மணம் இல்லாமல் வெளியே நிற்கிறான் மூத்தமகன். தந்தையின் அழைப்பு அவன் காதுகளில் விழுகிறது. ஆனால், அவனோ மௌனமாக நகர்கிறான்.

விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பு பெறாவிடில் உறவும் முறிந்துவிடுகிறது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருமண ஆடை என்ற தகுதி

இன்று நாம் பிறந்தது முதல் இறக்கின்ற வரை வாழ்கின்ற வாழ்க்கையில் - நின்றால், நிமிர்ந்தால், எழுந்தால் நம்முன் வைக்கப்படும் கேள்வி… உனக்கு என்ன தகுதி இருக்கின்றது?.. என்பதே… வயது, கல்வி, செய்யும் தொழில், பெற்ற செல்வம், பேசும் மொழி, பிறந்த இனம், என பலதரப்பட்ட தகுதிகளை மக்கள் இன்று தனி மனிதனிடம் அவனை அவர்களுள் ஒருவனாக ஏற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர். மனிதர்களால் சமூகம் உருவான நிலை மறைந்து இன்று சமூகத்தால் மனிதர்கள் அடையாளப்படுத்தப்பட்டு உருவாகிறார்கள் என்பதே உண்மை.

நற்செய்தியில் இன்று இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை ஆண்டவர் இயேசு நினைவு கூறுகின்றார். தனது மகனின் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் வராத போது, அரசன் காண்போர் அனைவரையும் விருந்திற்கு அழைத்து வர ஆணை‌ இடுகின்றார். திருமண விருந்துக்கு வந்தவர்களை பார்வையிட்ட போது திருமண ஆடை அணியாத ஒருவரை அரசன் கண்டு அவனை வெளியேற்ற தன் ஊழியர்களுக்கு கட்டளை இடுகின்றார். அன்றைய மரபுப்படி திருமண ஆடை அழைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது, இருந்தும் அதை அணியாமல் வந்தது குற்றமென பார்க்கப்பட்டது.

அரசன் முன் திருமண விருந்தில் அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தத் திருமண ஆடை கொடுக்கப்பட்டிருக்கலாம். அரசன் தந்த சம உரிமையை பயன்படுத்தத் தவறிய -
திருமணஆடை அணியாத அந்த மனிதர் அப்புறப்படுத்தப்பட்டதை குறை காண இயலாது.

இன்றைய காலகட்டத்தில் நாமும் பலவிதமான அழைப்புகளை பெறுகின்றோம். கல்வி, தொழில், சமூகத்தில் அந்தஸ்து - என பலவிதமான அழைப்புகளை சந்திக்கின்றோம்; இருந்தும் - அதில் தேர்ச்சி

பெறுகின்றவர் மிகச் சிலராக இருப்பதை நாம் காண்கின்றோம். காரணம் அழைப்பை தருகின்றவரின் எதிர்பார்ப்புகளை யார் பூர்த்தி செய்கின்றார்களோ அவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். ஆம் அழைக்கப்பட்டவர் பலர் ஆனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர் வெகுசிலர் என்கிறது விவிலியம்.

சரி, இனி நமது ஆன்மீகத்தில்…
நமது பிறப்பில் நமக்குத் தெரியாமலேயே ஒரு வரமாக தரப்பட்ட இந்த கிறிஸ்தவ வாழ்வு நமது உரிமை என நாம் பெருமை கொண்டாலும், இறைவன் தரும் நிலை வாழ்வைப் பெற கிறிஸ்துவின் மதிப்பீடுகள் என்ற திருமண ஆடையை நாம் அணியாது நிற்கும்போது ; நமது உரிமையும் மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது முறையாகின்றது.

புனித பவுல் அடிகளார் இரண்டாம் வாசகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட எப்படிப்பட்ட வாழ்க்கையையும் வாழ அவர் நிலையாய் இருப்பதை எடுத்துக் கூறுகின்றார். அதே வேளை - அதற்கு காரணம் அவருக்குள் இருக்கும் கிறிஸ்துவால் இப்படிப்பட்ட நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார். சற்று யோசிப்போம் நமக்குள் யார் இருக்கின்றார்கள் என்பதை?... கிறிஸ்துவின் மதிப்பீடுகளை நமக்குள் உறுதியுடன் வளர்த்து பிறருள் அதை மலரச் செய்யும்போது பவுல் அடிகளாரின் வார்த்தைகள் நம்முள் உயிர் பெறுவதை யாரும் தடுக்க முடியாது.

கிறிஸ்துவின் மதிப்பீடுகளில் நாம் வலிமை பெற்று உறுதியுடன் உயர்ந்து நிற்கும் பொழுது நம் மத்தியில் இறைவன் நம் வழியாக இவ்வுலகில் நம்மை பயன்படுத்தி அனைவரின் துக்கத்தையும் திகிலையும் மாற்றி ஏன் மரணத்தையே அழித்து மகிழ்வு கொள்ளும் மாபெரும் விருந்திற்கு வானக விருந்திற்கு அழைப்பு தருவார் என்பதை ஏசாயா முதல் வாசகத்தில் சான்று பகர்கின்றார்.

அகிலத்தில் அப்படி ஒரு அன்பின் இறைச் சமூகம் மலரும் எனில் அன்றுஅந்நாளில் அவர்கள் இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். " என்று சொல்வார்கள்.
சொற்களை விட செயல்கள் மிக வலியது எனவே நமது வாழ்க்கையில் நமது செயல்களில் இறை ஆளுமையை வெளிப்படுத்தும்போது அதை பின்பற்ற விளைவோர்க்கு எள்ளளவும் சந்தேகம் இருக்காது.

திருமுழுக்கின் வழியாக தூய வெண்ணிற ஆடை என்ற திருமண ஆடை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை அணிந்து மகிழ்வதும் அணியாமல் இருப்பதும் நமது செயல் நிலைகளின் முடிவாகும். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற உறுதியுடன் கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள முன் செல்வோம். திருமண ஆடையை அணிந்து கொண்டவர்களாக.
ஏனெனில் நாம் தேர்ந்து - தெரிந்து கொள்ள பட்டவர்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவனின் விருந்தில் பங்கேற்க விரைவோம்!

ஒருமுறை யூடியுபில் ஒரு காணொளி காண நேர்ந்தது. சில இளைஞர்கள் தங்கள் பணிக்காக செல்கின்ற வழியில் திடீரென ஒரு திருமண விழாவைக் கண்டார்கள். அது யாருடைய திருமண விழா என்பது அவர்களுக்கு தெரியாத போதிலும் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் தாங்கள் பெண் வீட்டு உறவினர்கள் என்றும் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை தோழர்களும் என்றும் சொல்லி நன்றாக விருந்தினை உண்டதாக அப்பதிவில் கூறினார்கள்.

சற்று வினோதமாகத்தான் இருந்தது இந்நிகழ்வு. அறியாத அழைக்காத ஒருவருடைய விருந்துக்கு சென்று பொய்சொல்லி உண்ணும் உணவுப் பிரியர்கள் தற்போது பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள் நம் சமூகத்தில். இப்படி உலக விருந்துக்கு ஆசைப்படும் நாம் இறைவன் தரும் விருந்துக்கு முந்திக்கொண்டு செல்ல முயல்கிறோமா? என்பதை சிந்திக்கவே இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கடவுள் தம் மக்களுக்காக பல சுவையான பதார்த்தங்கள் நிறைந்த விருந்தினை தயாரித்து வைத்துள்ளார் என்பதையும் மக்களை விருந்தில் பங்கேற்று மகிழ மீண்டும் மீண்டும் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வருகைக்காக காத்திருப்பதையும் விளக்குகிறது. அதே நேரத்தில் நற்செய்தி பகுதியானது அழைப்பு பெற்றோர் காட்டும் அசட்டை தனத்தையும் பங்கேற்றவர்களில் சிலரின் தகுதியில்லா நிலையையும் விளக்குகிறது.

இச்சிந்தனைகளையெல்லாம் நம் வாழ்வோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது நாம் வாழ்கின்ற வாழ்வே கடவுள் நமக்கு தந்துள்ள மிகப்பெரிய சுவையான விருந்து என்பது புலப்படுகிறது.இந்த விருந்திலே கடவுள் பிற மனிதர்மூலமும் சூழல்கள் மூலமும் இறை மற்றும் பிறர் அனுபவத்தின் மூலமும் நாம் பெறும் அன்பு, கருணை,மன்னிப்பு, உற்சாகம், பகிர்வு,உயர்வு, நட்பு, மகிழ்ச்சி மற்றும் சில துயர அனுபவங்கள் கூட சுவை மிகுந்த பதார்த்தங்களாக விளங்குகின்றன. இந்த வாழ்வை தன்னோடு இணைந்து சுவைத்துப்பார்க்க கடவுள் அனுதினமும் நம்மை அழைக்கிறார். அவ்வழைப்பை நாம் ஏற்க வேண்டும்,, தகுதியான உள்ளத்தோடு பங்கேற்க வேண்டும் , என்பவையே இறைவிருப்பம். ஆனால் நாம் கடவுளின் அழைப்பை தட்டிக்கழித்து பல வேளைகளில் தகுதியற்றோர் ஆகிவிடுகிறோம்.

புனித பவுல் ஆண்டவர் வலுவூட்டுவதால் எதையும் செய்ய தன்னால் இயலும் என பெருமிதத்தோடு கூறுகிறார். ஆம். கடவுள் வாழ்க்கை என்னும் விருந்தை நமக்கு கொடுத்து அதை வாழ ஞானத்தையும் சக்தியையும் அனுபவத்தையும் கொடுத்து வலுவூட்டுகிறார். அதை நாம் உணர்ந்தால் நாமும் பல வல்ல செயல்களைச் செய்யலாமன்றோ!

கடவுள் நமக்கெல்லாம் தந்த மாபெரும் விருந்து நாம் பங்கேற்கும் திருப்பலி. அதிலே தன் மகனையே உணவாகத் தருகிறார். அந்த விருந்தை உண்ண நாம் அழைக்கப்பெற்றுள்ளோம். இயேசுவாம் உணவை உண்டால் நாமும் வலுப்பெற்றவர்களாக வாழ்வோம். அவ்வுணவை உண்ண நம்மையே நாம் தகுதிபடுத்த வேண்டும். எனவே நாம் கடவுள் தரும் அழைப்பிற்கு செவிமடுப்போம். அச்செயலே நம்மைத் தகுதிப்படுத்தும்.
கடவுளின் விருந்தில் பங்கேற்க விரைவோமா!

இறைவேண்டல்

எம்மை உம் அன்பு விருந்திற்கு அழைக்கும் கடவுளே! உம் அழைப்பை தட்டிக்கழிக்காமல் செவிமடுத்து உம் விருந்திற்கும் உறவுக்கும் தகுதியுள்ளவர்களாக எம்மை மாற்றுவீராக. ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser