மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 26-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
ஆமோஸ் 6:1, 3-7 |1திமோத்தேயு 6:11-16 |லூக்கா 16:19-31

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஏழை இலாசர் - பணக்காரன்

இன்றைய நற்செய்தியிலே வருகின்ற உவமையில் ஏழை பணக்காரன் என்ற இரு நபர்கள் முன் நிறுத்தப்படுகிறார்கள். ஏழைக்கு பெயர் தரப்பட்டுள்ளது. பணக்காரனுக்குப் பெயர் தரப்படவில்லை. பணக்காரர்கள் நிரந்தரமான முகவரி அற்றவர்கள் என்பதே இயேசுவின் செய்தி. பணக்காரர்கள் விண்ணுலகிலும் நிலையான இடம் பெற வேண்டுமெனில் தங்களுக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்பதே இயேசுவின் உறுதியான போதனை. ஏழைகள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அதற்குக் காரணம் பணக்காரன்தான். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க உறைவிடமும் இல்லாமல் வாடுகின்ற ஏழைகள் இருக்கின்ற நிலையில் பணக்காரர்களை வாழ அனுமதிப்பதே குற்றமாகும். எனவே ஆமோஸ் இறைவாக்கினர் சீயோன் குன்றின் மீது இன்பத்தில் திளைப்போரே. இஸ்ரயேல் மக்கள் தேடி வரும் அளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே உங்களுக்கு ஐயோ கேடு! (ஆமோஸ். 6:1) என்று அச்சத்தை விளைவிக்கும் இறைவாக்கு உரைக்கின்றார் (முதல் வாசகம்).

"தன் தேவைக்கு மேல் பொருள் சேர்த்து வைத்திருப்பவன் திருடன்" என்றார் காந்தியடிகள். "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி. பணக்காரர்களின் பெரிய தவறு தனக்குக் கீழே பசியினால் வாடி இருப்பவர்களைப் பார்க்க மறுக்கும் கோழைத்தனம்தான்.

கடையில் ஒரு மனிதன் தங்க நாணயங்களை விற்றுக் கொண்டிருந்தான். திருடன் ஒருவன் தன் பையில் தங்கங்களை அள்ளிப் போட்டு வேகமாக ஓட ஆரம்பித்தான். அருகில் நின்ற போலீஸ்காரர் இந்த திருடனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்தான். இவ்வளவு ஆட்களும், நிற்க உன்னால் எப்படி இந்தத் (மூன்றாம் வாசகம்) தந்திரத்தோடு செயல்பட்ட கண்காணிப்பாளனின் முன்மதியை மட்டும் இங்கே நாம் பார்க்க வேண்டும். ஆண்டவர் இயேசுவே கூறுகிறார் மிகுதியான உடைமைகளை ஒருவன் கொண்டிருந்தாலும், அவனுக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்.12:15) என்று.

அறம், பொருள், இன்பம் என்ற வழி முறையில், பொருள் மட்டுமல்ல. பொருளோடு அறமும், இறையருளும் சேர்ந்தால் தான் உண்மையான இன்பம் கிடைக்கும். நேற்றைய வேலையை இன்று முடிப்பவன் ஒரு முட்டாள். இன்றைய வேலையை இன்றே முடிப்பவன் ஒரு சராசரி மனிதன். நாளைய வேலையை இன்றே செய்பவன் ஓர் அறிவாளி. இதைத்தான் இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆண்டவர் இயேசு கூறுகிற அநீத செல்வங்களைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் (லூக்.16:9) என்றும், நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது (லூக்.16:13) என்றும் கூறுகிறார். நமது வாழ்வு இவ்வுலகில் குறுகிய காலம்தான். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். இறைவன் கொடுத்த செல்வங்கள். கொடைகள், திறமைகள், ஆற்றல்கள் அனைத்தையும் பயனுள்ள முறையில் முன்மதியோடு வாழ அழைக்கப்படுகிறோம்.

தனக்காக வாழ்பவன் மிருகம்
தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்
பிறருக்காகவே வாழ்பவன் தெய்வம்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நீ என் கையாகச் செயல்படு

செல்வந்தன் ஏன் தீப்பிழம்பில் வேதனையுற்றான்? அந்தப் பணக்காரனிடம் ஏழை இலாசர் பிச்சைக் கேட்டதாகவோ, அவன் தர்மம் செய்ய மறுத்ததாகவோ நாம் படிப்பதில்லை. எந்தக் குற்றமும் செய்யாத ஒருவன் வேதனையுறுவது போலத் தோன்றுகின்றது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் செல்வந்தன் செய்த பாவம், கடமையில் தவறிய பாவம் என்பது நமக்குப் புரியும்.

இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு இந்த உலகத்தில் வாழும் ஒவ்வோர் ஆணையும், ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழாமல், உங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். உலகத்திலே என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்கின்றார்.

பணக்காரன் ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை? பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை தான் சம்பாதித்த சொத்து. தனக்கு மட்டுமே சொந்தம்; அதை நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க எனக்கு உரிமை உண்டு என்று அவன் நினைத்திருக்கலாம். ஒருவேளை அவன் இன்றிருப்போர் நாளை இருப்பதென்ன நிச்சயம்; ஆகவே இன்றே அனுபவி ராஜா அனுபவி, என்று அனுபவிப்போம் என நினைத்திருக்கலாம். ஒருவேளை அவன் பக்கத்தில் இருந்தவர்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களெல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான செய்தியை அவனுக்கு அளித்திருக்கலாம். ஒருவேளை வீட்டைவிட்டு வெளியே வந்து உலகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கின்றது என்பதைப் பார்க்க அவனுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ ? ஒன்று மட்டும் தெளிவாக இருக்கின்றது. பசியாயிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் பசியைத் தீர்க்காதவர்களுக்குப் பாதாளம் ஒன்று. தீப்பிழம்பு ஒன்று காத்துக்கொண்டிருக்கின்றது; அத்தீப்பிழம்பிலிருந்து அவர்களால் விடுதலை பெற முடியாது. அங்கே இரக்கம் என்ற சொல்லுக்கே இடமில்லை (லூக் 16:25-26) என்பதை அந்த செல்வந்தன் அறிந்துவைத்திருக்கத் தவறியிருந்தான். இறந்த பிறகு அந்தப் பணக்காரன் அந்தத் தவறை உணர்ந்து அவனுடைய சகோதரர்கள் வேதனை மிகுந்த இடத்திற்கு வராதவாறு எச்சரிக்கப்படவேண்டும் என விரும்புகின்றான் (லூக் 16:27-28).

ஆம். பசியாயிருப்பவர்களுக்குப் போதிய உணவை நாம் கொடுக்க மறுக்கும் வரை, தவறும் வரை பொருளாசையிலிருந்து நாம் நம்மையே விடுவித்துக்கொள்ளாதவரை (1 திமொ 6:10) நமக்கு இறையாட்சியின் (உரோ 14:17) உரிமைப் பேறு (மத் 25:34), நிலைவாழ்வு [1 திமொ 6:12] கிடைக்கப்போவதில்லை.

ஓர் இலட்சாதிபதி ஒரு நாள் கனவு கண்டான். அந்தக் கனவிலே கடவுள் தோன்றினார். அந்தக் கடவுளை வரவேற்று அவன் உபசரித்தான். பிறகு அவனுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலம், பங்களா. வாடகை வீடுகள், கடைகள், பெரிய தொழிற்சாலை. அவனுடைய வங்கிக்கணக்கு, செல் ஃபோன்கள், டி.வி, டெக், கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டி. இத்தனைக்கும் சொந்தக்காரன் நான் என்றான். அப்போது கடவுள், இவையெல்லாம் நான் உனக்குத் தந்தவைதானே! என்றார். அதற்கு அந்தப் பணக்காரன், ஆம் என்றான். அப்படியானால் இவை யாவும் யாருக்குச் சொந்தம்? என்றார். அவனோ, உமக்குத்தான் என்றான்.

கடவுளோ, என்னால் நேரடியாக ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாது என்பதால் உன்னிடம் இதைக் கொடுத்திருக்கின்றேன். நீ என் கையாகச் செயல்படு என்றார். முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் விடுக்கும் எச்சரிக்கையை நமது கண்முன் நிறுத்தி நம் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம். மேலும் அறிவோம் :

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் : 226).

பொருள் :
பசியால் வாடித் துன்புறும் வறியவர் பசிக் கொடுமையைப் போக்க வேண்டும். அச்செயலே ஒருவன் தான் தேடித்திரட்டிய செல்வதைப் பிற்காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கத்தக்க கருவூலமாகும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர். "நான் கொலை செய்யவில்லை; திருடவில்லை; விபசாரம் செய்யவில்லை; எனக்குச் சொர்க்கம் கிடைக்குமா?" என்று கேட்டார். விவேகானந்தர் அவரிடம் தன் அறையிலிருந்த மேசை, நாற்காலியைக் காட்டி, "இந்த மேசைக்கும் நாற்காலிக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்றால், உமக்கும் சொர்க்கம் கிடைக்கும்" என்றார். "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே" என்று அவர் விவேகானந்தரிடம் கேட்டார். விவேகானந்தர் அவரிடம் கூறினார்: "இந்த மேசையும் நாற்காலியும் கொலையோ விபச்சாரமோ செய்யவில்லை. அவற்றிற்குச் சொர்க்கம் கிடைக்குமா? எனவே, சொர்க்கத்திற்குப் போகவேண்டுமென்றால், தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது; நன்மையும் செய்ய வேண்டும்."

இன்றைய நற்செய்தி குறிப்பிடும் செல்வந்தர் தான் செய்த தீச்செயல்களுக்காக நரகத்துக்குப் போகவில்லை. மாறாக, அவர் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்யாமல் விட்டுவிட்டதற்காக அவர் தண்டனை பெற்றார். அவர் பாலும் பழமும் உண்டு. பஞ்சு மெத்தையில் படுத்து பகட்டான வாழ்வு நடத்தியது குற்றமில்லை. ஆனால் அவர் வீட்டு வாசற்படியில் மனித உருக்குலைந்து பரிதாபமாகப் படுத்துக்கிடந்த ஏழை இலாசரை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. எனவே, அவருடைய இரக்கமற்ற. மனிதநேயமற்ற செயலுக்காகவே அவர் தண்டிக்கப்பட்டார்.

நாம் இரண்டு விதங்களில் குற்றம் இழைக்கலாம். நாம் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்யாமல் விட்டாலும் குற்றம்; நாம் செய்யக்கூடாத தீயசெயலைச் செய்தாலும் குற்றமாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்" (குறள் 466).

மனத்துயர் செபத்தில்: "குற்றங்கள் பல செய்தேன் எனவும் நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனநொந்து வருந்துகிறேன்" என்று பாவ அறிக்கை செய்கின்றோம்.

எனவே. நாம் தீமைகள் செய்யாமல் இருப்பதோடு, நன்மைகள் செய்ய வேண்டும்; குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். கடவுள் பணக்காரர்களுடைய கடவுள் அல்ல. ஏழைகளின் கடவுள். செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான கிறிஸ்து (2 கொரி 8:9), ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும் (லூக் 6:20). செல்வர்களுக்கு ஐயோ கேடு என்றும் (லூக் 6:24) தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் கூறுகிறார்: இன்பத்தில் திளைப்போரே உங்களுக்கு ஐயோ கேடு; குடித்துவீட்டு கும்மாளம் அடிப்போரே நீங்கள் நாடு கடத்தப் படுவீர்கள். உங்கள் இன்பக் கழிப்பு இல்லாது ஒழியும் (ஆமோஸ் 6:1-7).

இதற்கு நேர் மாறாகப் பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவர் பசித்திருப்போர்க்கு உணவளிக்கிறார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (திபா 146). கடவுள் ஏழைகள் பக்கம் என்றால், நாம் யார் பக்கம் இருக்கின்றோம்?

உண்மையான சமயப் பற்றின் வெளி அடையாளம் என்ன? இக்கேள்விக்கு புனித யாக்கோபு கூறும் பதில்: "தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தல் ஆகும்" (யாக்1: 27) தூய யோவான் கேட்கிறார்: "உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டு பரிவுகாட்ட வில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?" (யோவா 3:17). எனவே கடவுளன்பு, பிறரன்பு வழியாகவே எண்பிக்கப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யாததற்குக் காரணம் என்ன? பொருள் ஆசை: மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டுமென்ற பேராசை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தமது சீடர் திமொத்தேயுவுக்குக் கூறும் 'அறிவுரை: "கடவுளின் மனிதனாகிய நீ பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு" (1 திமொ 6:11). பாம்பைக் கண்டு ஓடுவது போல பொருள் ஆசையிலிருந்து ஓடவேண்டும். அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்: செல்வர்கள்' மேட்டிமை உணர்வு கொள்ளக்கூடாது. செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடம் மட்டுமே நம்பிக்கை வைத்து, அவர்கள் தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிக்க வேண்டும் (1 திமொ 6:17-18).

ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவர்களுக்காகக் காத்திருப்பது என்ன? ஒரு பணக்காரர் நிறைய வாழைப்பழங்களைத் தின்று அவற்றின் தோலை வீதியிலே வீசியெறிந்தார். ஒரு பிச்சைக்காரன் அத்தோலை எடுத்துத் தின்றான். பணக்காரர் அந்தப் பிச்சைக்காரனைக் கூப்பிட்டு அவன் முதுகில் பலமுறைக் கையால் குத்தினார். ஆனால் அப் பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டு சொன்னது: "தோலைத் தின்ற எனக்கு இந்தத் தண்டனை என்றால். பழத்தைத் தின்ற உமக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ?" புனித யாக்கோபு செல்வர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை: "செல்வர்களே... உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்... இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்" (யாக் 5:1-5).

ஏழைகளை வாழவைத்தால் நமக்கு வானகப் பேரின்பம் காத்திருக்கிறது. ஏழைகளைச் சாகடித்தால் நமக்குக் கொடிய நரகம் காத்திருக்கிறது. “இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்... உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்" (திபா 95: 7-8).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பெயரும் பின்னணியும்

ஆல்பெர்ட் சுவைட்சர். அவர் பன்முகத்திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர். மாபெரும் மெய்யியல் மேதை, சிறந்த அறிவியல் அறிஞர், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர், உயர்ந்த இறையியல் வல்லுனர், பேர் பெற்ற இசைக் கலைஞர், அனைத்துக்கும் மேலாக மறைத்தூதுப் பணியாற்றிய மருத்துவர்.

அவரது மகத்தான சேவைக்காக 1950ஆம் ஆண்டில் “இந்த நூற்றாண்டின் மாமனிதர்" என்ற பட்டம் கிடைத்தது. 1952இல் அமைதிக்கான நோபல் பரிசை உலகம் வழங்கியது. பத்து ஆண்டுகள் கல்வி, கலை, அறிவியல் என்று பல துறைகளில் உலகளவில் கொடிகட்டிப் பறந்த இவரை, கிறிஸ்துவின் மீது கொண்ட பற்று பொதுநலச் சேவையாளராகத் திசை மாற்றியது. 38ஆவது வயதில் மருத்துவ உயர் படிப்பை முடித்து 43ஆவது வயதில் ஆப்பிரிக்கா சென்று அந்த இருண்ட கண்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் மருத்துவமனை கட்டி 47 ஆண்டுகள் மருத்துவப்பணி மூலம் இறைப்பணி ஆற்றி 90ஆவது வயதில் 1965இல் இறையடி சேர்ந்தார்.

"இத்தகைய பிறரன்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் எப்படி வந்தது?” என்று கேட்டபோது அவர் சொன்னார்: "செல்வரும் ஏழை லாசரும் என்ற உவமையை ஆழச் சிந்தித்ததின் பயனே எனது மனமாற்றமும் வாழ்க்கைத் திருப்பமும். என்னைச் சுற்றிலும் பல்லாயிரம் மக்கள்பசியால், நோயால் துன்புறும்போது நான் மட்டும் இன்பமாக இருப்பதை என்னால் ஈற்றும் சீரணிக்க முடியவில்லை”. இறைவார்த்தை அவரது இதயத்தை ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்தியது.

"நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியா?' (தொ.நூ.4:9) என்ற காயின் கேள்விக்கு இயேசு தரும் விளக்கமே இன்றைய நற்செய்தி. இரங்கும் மனம் கொண்டவர்கள் என்றுமே வாழ்வார்கள். தன்னைச் சுற்றிலும் தங்கள் இருப்பு நிலைக்காகப் போராடுபவர்களைக் கண்டும், மரத்த இதயத்தோடு இருப்பவர்கள் மகிழ்ச்சியற்ற, நிம்மதியற்ற இருளுலகிற்குள் தள்ளப்படுவார்கள் என்பதே அந்த நற்செய்தி!

'செல்வரும் இலாசரும்' என்ற உவமையின் தனிச் சிறப்பு கதையில் வரும் ஒருவருக்கு - அவருக்கு மட்டும் இலாசர் என்று பெயரிட்டிருப்பது, அது சுட்டிக்காட்டும் உண்மைகள் இரண்டு.

1. இலாசர் என்ற பெயருக்கு ஒரு பொருள் உண்டு. அது இயற்பெயரல்ல. காரணப் பெயர். இறைவனே எனக்குத் துணை என்பது அதன் பொருள். தனக்கென ஆளோ செல்வமோ துணையாக இல்லாத நிலையில்கடவுள் மட்டுமே பற்றுக்கோடு என்கிறது பதிலுரைப்பாடல். "ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலை நாட்டுகின்றார்... அனாதைகளையும்கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (தி.பா. 146:7-10). ஏழை பேறு பெற்றவன் ஏழை என்பதால் அல்ல. இறைவனைச் சார்ந்து வாழ்வதால். ஆண்டவரே துணை என்பதற்கு வசதி படைத்தவர்கள் சான்று பகர வேண்டும்.

2. இலாசர் என்ற பெயருக்கு ஒரு பின்னணி உண்டு. புதுமைகள் கூட ஒருவருடைய மனமாற்றத்துக்கு உதவாது. "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால் இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்” (லூக். 16:31). மார்த்தா மரியாவின் உடன்பிறப்பு இலாசரை உயிர்பெற்றெழச் செய்தார் இயேசு. அது மனமாற்றத்துக்கோ இயேசுவில் நம்பிக்கைக்கோ பரிசேயர்களைத் தூண்டவில்லை. மாறாக மனதை மேலும் கல்லாக்கி இயேசுவோடு இலாசரையும் கொல்ல வேண்டும் என்று எண்ண வைத்தது.

ஒருவரின் ஏழ்மைக்கு அவரே காரணமாகக்கூடும் - உழைக்க மனமில்லாத சோம்பேறித்தனம், மது போதை, சூதாட்டம், கூடா நட்பு போன்றவைகளால். ஆனால் பெரிதும் சமூக அநீதியின் விளைவுதான் ஏழ்மை. வாய்ப்பும் வழிகளும் சிலருக்கு மறுக்கப்படும்போது, இருப்பவற்றை எல்லாரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பாதபோது ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அக்கறை இன்றி பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும்போது ஏழ்மை வரவழைக்கப்படுகிறது.

“படகில் இரு கைகளாலும் அள்ளி படகும் பிழைக்கும். இந்த ஏழ்மைக்குப் பலியாகி இவ்வுலக வாழ்வில் நுன்புறுவோருக்கு நீதி இவ்வுலகில் மறுக்கப்பட்டாலும் அது மறு உலகில் நிச்சயம் உண்டு. இறையரசுக்கான ஏக்கம் ஏழைகளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும். இறைவனைத் தவிர அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் உலகம் இகழ்ந்து ஒதுக்கும் ஏழைகளைப் பார்த்து, "நீங்கள் பேறு பெற்றவர்கள்" என்கிறார் இயேசு. வீட்டு வாசலில் கிடக்கும் ஏழையைப் பற்றிய உணர்வே இல்லாமல் செல்வச் செருக்கில் மிதப்பவனுக்கு ஆமோஸ் விடும் எச்சரிக்கை: "இன்பத்தில் திளைத்திருப்போருக்கு இன்பக் களிப்பும் ஒரு நாள் இல்லாதொழியும்” (முதல் வாசகம்). உவமையில் வரும் செல்வந்தன் பாதாளத்தில் புதைக்கப்படுவது மட்டுமல்ல. வதைக்கப்படுகிறான். (லூக். 16:23).

அவன் அட்டூழியம் செய்ததாகவோ எவருக்கும் அநீதி இழைத்ததாகவோ எந்தக் குறிப்பும் இல்லை. எனினும் நரக நெருப்பில் தள்ளப்படுகிறான் என்றால் அவன் செய்த தீச்செயல்களுக்காக அல்ல. நற்செயல் செய்யத் தவறியதற்காக. ஏழையை எட்டி உதைத்தான் என்பதற்காகஅல்ல, எழையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதற்காகவே! செய்யத் தகாதவற்றைச் செய்வதும் குற்றம். செய்ய வேண்டியவற்றைச் செய்ய தவறினாலும் குற்றமே! சாவுக்குப் பின் செல்வந்தனுக்கும் இலாசருக்கும் இடையே நிலவிய, கடக்க இயலாத பாதாளம் உலகில் வாழும்போதே செல்வந்தன் ஏற்படுத்திக் கொண்டதுதான். “ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்கு செவி கொடுக்க மாட்டார்” (நீ.மொ.21:13)

''மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக். 12:15) அப்படியானால் வாழ்வு என்பது எதிலே? பணத்திலோ பொருளிலோ, பகட்டிலோ அல்ல; அன்பிலே, இரக்கத்திலே, மனித நேயத்திலேதான்.

தன் வீட்டு வாயில் அருகே இருந்த ஏழையை எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், வெறுமனே கண்டு கொள்ளாத, கருணை காட்டாத செல்வந்தனுக்கே இந்தக் கதியென்றால், செல்வச் செருக்கில் ஏழைகளை இழிவாக நடத்துவோருக்கு, எள்ளி நகைப்போருக்கு, ஏமாற்றிச் சுரண்டுவோருக்கு என்னவெல்லாம் காத்திருக்குமோ!

பேரரசர் ஒருவர் மலர்ப்படுக்கையில் தூங்குவதே வழக்கம். படுக்கையில் மலர்களைப் பரப்புவதற்கென்றே ஓர் அடிமைப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். ஒரு நாள் தானும் சிறிது மலர்ப்படுக்கையில் படுத்தால் என்ன என்ற ஆர்வம் எழ அரசன் இல்லாத நேரம் பார்த்துப் படுத்தவள் தன்னையறியாது கண்ணயர்ந்துவிட்டாள். வந்து பார்த்த அரசனுக்குச் சினத்தால் கண்கள் சிவந்தன. சவுக்கால் அடித்தான். இரத்தம் பீறிட்டது. சிறிது அதிர்ந்த அவள் தன்னுணர்வு பெற்றவளாகக் கசையடிகளைத் தாங்கிக் கொண்டு கலங்காது சிரித்துக் கொண்டிருந்தாள். "பெண்ணே, இரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறேன், நீ சிரிக்கிறாயே, வலிக்கவில்லையா?” என்று வியக்க, ''பேரரசே, ஒருசில நிமிட நேரமே இம்மலர்ப்படுக்கையில் நான் தூங்கிவிட்டதற்கு இக்கொடிய தண்டனை என்றால், காலம் முழுவதும் படுத்துறங்கும் தங்களுக்கு இறைவன் தரவிருக்கும் தண்டனையை நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை".

"செல்வர்களே... உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்... இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்கைகளைக் கொழுக்க வைத்தீர்கள்” (யாக். 5:1-5).

இறைமக்கள் ஏழை எளியோர் மீது அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருஅவை புதிய மணமக்களை ஆசீர் அளித்து இப்படி வாழ்த்துகிறது: "உலகிலே நீங்கள் இறையண்புக்குச் சாட்சிகளாகத் திகழுங்கள். இவ்வாறு உங்கள் தயவைப் பெற்ற துன்புற்றோரும் வறியோரும் இறைவனின் வீட்டில் உங்களை ஒரு நாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக".

படகும் தண்ணீரும் வீட்டில் செல்வமும் நிறைந்துவிட்டால் இருகைகளாலும் அள்ளி அள்ளி வெளியே தள்ளுங்கள். அப்போதுதான் படகும் பிழைக்கும். வீடும் பிழைக்கும்" - கபிர்தாசர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தப்பி ஓடு, நாடித் தேடு; போராட்டத்தில் ஈடுபடு

உதவும்போது கேட்கும் இசை:
பதினேழாம் நூற்றாண்டில் ஜார்ஜ் விதர் (George Wither) என்றோர் ஆங்கிலக் கவி இருந்தார். பெரிய பேச்சாளராகவும் அறியப்பட்ட இவர் பல இடங்களுக்கும் பேச அழைக்கப்பட்டார்.

ஒருநாள் இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக இவர் நல்லமுறையில் தயாரித்துக்கொண்டு, அழகான ஆடையை அணிந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒருவர் மயங்கிக் கிடந்தார். உடனே இவர் அவரருகில் சென்று, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு, அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்தார். இதனால் இவரது அழகான ஆடை அழுக்கானது.

இதற்கு நடுவில் நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டதால், இவர் வீட்டிற்குச் சென்று வேறோர் ஆடையை மாற்றிக்கொள்ளாமல், அழுக்குப் படிந்த அதே ஆடையுடன் சென்றார். அதைப் பார்த்துவிட்டு இவரது நலவிரும்பிகள், “ஏன் இப்படி அழுக்கடைந்த உடையுடன் வந்திருக்கின்றீர்கள்? நல்லதோர் ஆடையுடன் வரக்கூடாதா?” என்று கேட்டதற்கு, இவர் நடந்தையெல்லாம் அப்படியே சொல்லிவிட்டு, “வழியில் மயங்கிக் கிடந்த அந்த மனிதருக்கு நான் உதவினேன் அல்லவா! அதனால் என்னுடைய செவிகளில் நல்லதோர் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை நான் அந்த மனிதருக்கு உதவாமல் வந்திருந்தாள் என்னுடைய செவிகளில் அபஸ்வர ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

தேவையில் உள்ள ஒருவருக்கு உதவும்போது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது; அதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, தீயவற்றிலிருந்து தப்பியோடி, நல்லவற்றை நாடித் தேடினால், நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

எதிலிருந்து தப்பி ஓடுவது?
மனிதர்கள் செய்யும் பாவத்தை, தீமை செய்தல், தீமை செய்வதைத் தடுக்காதிருத்தல், நன்மை செய்யாதிருத்தல், நன்மை செய்வதைத் தடுத்தல் என நான்கு வகைப்படுத்தலாம். இன்றைய இறைவார்த்தை “நன்மை செய்யாதிருத்தல்” என்ற பாவத்தைப் பற்றிக் கூறுகின்றது.

ஆண்டவர் இயேசுவின் போதனைகளில் மூன்றில் ஒரு பகுதி உவமைகள்தான் என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். அதிலும் குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் செல்வரும் இலாசரும் உவமைக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. அது என்னவெனில், இயேசு சொன்ன எந்த உவமையில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களுக்குப் பெயர் இருக்காது. செல்வரும் இலாசரும் உவமையில் வரும் ஏழைக்கே இலாசர் என்று பெயர் இருக்கின்றது. இதுவே இந்த உவமைக்கு இருக்கும் தனிச் சிறப்பாகும். உவமையில் வரும் ஏழைக்கு இலாசர் என்று பெயர் இருப்பதால், யூத சமூகத்தில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் இயேசு தன்னுடைய பாணியில் ஓர் உவமையாகச் சொல்லியிருக்கின்றார் என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.

இயேசு சொன்ன இந்த உவமையில் வரும் செல்வர், தன்னுடைய வீட்டு வாசலில் கிடந்த இலாசரை அங்கிருந்து துரத்தவில்லை; இருந்தும் அவர் இறந்தபிறகு பாதாளம் செல்கின்றார். காரணம், அவர் தீமை செய்தார் என்பதற்காக அல்ல, நன்மை செய்யத் தவறினார் என்பதற்காகவே ஆகும். ஏன் இவரால் நன்மை செய்ய முடியாமல் போனது எனில், இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு முந்தைய பகுதியில், பவுல் சொல்வதுபோல், “பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்” (1 திமொ 6:10) என்பதாலாகும். அதனால்தான் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் தொடக்கத்தில், “கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு” என்கிறார்.

உவமையில் வரும் செல்வரால் பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓட முடியவில்லை. அதனால்தான் அவரால் நன்மை செய்ய முடியவில்லை. இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலில் இருந்த பணம் படைத்தவர்கள் நாட்டில் இருந்த வறியவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், கொழுத்த கன்றை உண்டு, திராட்சை இரசத்தை அருந்தி, பஞ்சணையில் சாய்ந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்ததைப் பற்றிக்கூறுகின்றது. இப்படி அவர்கள், நாட்டில் இருந்த வறியவர்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பிருந்தும், நன்மை செய்யாததால் தண்டிக்கப்படப் போவதாக ஆமோசால் எச்சரிக்கப்படுகிறார்கள்.

எதனை நாடித் தேடுவது?
“பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு” என்று சொன்ன பவுல், “நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு” என்கிறார்.

இங்கு ஏழை இலாசர் எப்படி, யூதர்களின் தால்முத்தில் விண்ணகத்தைக் குறித்துக் காட்டும் ‘ஆபிரகாமின் மடி’யை அடைந்தார் என நாம் அறிந்துகொள்வது முக்கியம். இலாசர் என்றால் ‘கடவுள் உதவினார்’ அல்லது ‘கடவுளே உதவி’ என்று பொருள். அந்த அடிப்படையில் இலாசர் தன்னுடைய பெயருக்கேற்றாற்போல் கடவுளே தனக்கு உதவி என்று அவரை மட்டும் நம்பியிருந்தார், அவரைப் பற்றிக்கொண்டிருந்தார். இவ்வாறு ஏழையான அவர், சமவெளிப் பொழிவில் இயேசு சொல்வது போல், “இறையாட்சியை உரித்தாக்கிக் கொண்டார்”.

இப்பொழுது பவுல் சொல்லும், “நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு” என்ற வார்த்தைகளுக்கு வருவோம். ஏழை இலாசர் இறைவன்மீது பற்றுக்கொண்டு இறைப்பற்று, நம்பிக்கை ஆகியவற்றை நாடித் தேடினார். அதன்மூலம் இறையாட்சியை உரித்தாக்கிக் கொண்டார். இன்றைக்குப் பலர் நற்செய்தியில் வரும் செல்வரான இளைஞரைப் போன்று, நான் எந்தவொரு பாவமும் செய்யவில்லை. அதனால் நான் நிலைவாழ்வை உரித்தாக்கிக் கொள்வேன் என நினைக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் இயேசு, செல்வரான இளைஞரிடம் சொன்னது போன்று ஒன்று குறைவு படுகின்றது. அதுதான், ஆண்டவர்மீது பற்று வைத்து, நன்மைகள் செய்வதாகும்.

நற்செயலுக்குக் கிடைக்கும் கைம்மாறு:
தப்பி ஓடு... நாடித் தேடு என்று சொன்ன பவுல் நிறைவாக, “நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு” என்று திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார். கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்க காலகட்டத்தில் கிறிஸ்துவின்மீது பற்றுக்கொண்டு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்குப் பலவிதமான துன்பங்கள் வந்தன. இதற்கு அஞ்சி ஒருசிலர் கிறிஸ்துவின்மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் கைவிட்டார்கள். இந்நிலையில் எபேசு நகரில் ஆயராக இருந்த திமொத்தேயு எத்தகைய துன்பம் வந்தாலும் நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்கிறார் பவுல். இவ்வாறு அவரும், அவரது மக்களும் நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடும்போது, நிலைவாழ்வைப் பற்றிக் கொள்ளலாம் என்கிறார் பவுல்.

இயேசுவும் தன் சீடர்களிடம் எத்தகைய துன்பம் வந்தாலும், இறுதிவரை மன உறுதியோடு இருக்கச் சொல்கின்றார் (மத் 24:13) எனவே, நாம் தீமையை விட்டுத் தப்பி ஓடி, நன்மையை நாடித் தேடி, நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபட்டு, இலாசரைப் போன்று விண்ணகத்தை, நிலைவாழ்வை உரித்தாக்கிக் கொள்வோம்

சிந்தனைக்கு:
‘வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது; நாம் எந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்க்கை அமையும்’ என்பார் ஜான் எப். கென்னெடி. ஆதலால், நாம் தீமையை விட்டுவிட்டு, நன்மையை நாடி, அதில் உறுதியாக நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அக்கறையின்மை

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் வாசிக்கும் வாசகங்கள் கடந்த வார வாசகங்களின் தொடர்ச்சியாக அமைகின்றன. கடந்த வாரம் செல்வத்தைக் கையாள்வது பற்றி வாசித்தோம். செல்வத்தால் வரும் மிகப்பெரிய ஆபத்தான அக்கறையின்மை பற்றி இந்த ஞாயிறு நம்மை எச்சரிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 6:1, 4-7) தன்னுடைய சமகாலத்து செல்வந்தர்களைத் தொடர்ந்து சாடுகின்றார் ஆமோஸ். தன்னுடைய இறைவாக்குப் பாடலை, 'ஐயோ!' என்று தொடங்குகின்றார் ஆமோஸ். 'ஐயோ!' என்பது புலம்பலையும், சாபத்தையும் குறிக்கும். 'இன்பத்தில் திளைத்திருப்போர்,' 'கவலையற்றிருப்போர்,' 'உயர்குடி மக்கள்,' 'பெருமைவாய்ந்தவர்கள்' என வௌ;வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அனைத்தும் அவருடைய சமகாலத்து மேட்டுக்குடி மக்களையே குறிக்கிறது. விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார் இறைவாக்கினர். அவர்கள் 'தந்தத்தாலான கட்டிலில் படுத்துக்கொண்டு, பஞ்சணைமீது சாய்ந்துகொண்டு, கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்கின்றனர்.' தந்தம் வெகு அரிதான பொருள். பாலைவனத்தில் பஞ்சணையில் தூங்குவது என்றால் அறைகள் குளிரூட்டப்பட வேண்டும். ஆட்டுக்குட்டிகள் திருவிழா நேரங்களில் மட்டுமே உண்ணப்பட்டன. இவற்றை அதிகம் சாப்பிடுவது என்பது சாதாரண மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்துவிடுவது போலாகும். கன்றுக்குட்டிகள் வளர்க்கப்பட்டு விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்பட்டன. அவற்றையும் உணவாக்குகின்றனர் இவர்கள். மேலும், கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கன்றுக்குட்டிகளை உண்பதன் வழியாகவும், கடவுளுக்கு மட்டுமே இசைக்கப்பட்ட பாடல்களை - தாவீது இசைத்தது போல - தங்களுக்கே இசைத்துக்கொள்வதன் வழியாகவும் அவர்கள் தங்களைக் கடவுளுக்கு இணையாக்கிக்கொள்கிறார்கள்.

விருந்து, இசை, திராட்சை இரசம், நறுமணத்தைலம் போன்ற உருவகங்களால் ஆமோஸ் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வைச் சுட்டிக்காட்டுவதோடு, இவை யாவும் இவர்களைச் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தின என்றும், இதற்காக இவர்களே முதலில் நாடுகடத்தப்பட்டு அந்நியப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றார். மக்களுக்கும் கடவுளுக்கும் உரியதை இவர்கள் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். இவ்வாறு மக்களையும் கடவுளையும் அவமானப்படுத்தினார்கள்.

ஆக, இஸ்ரயேலின் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வும், அதனால் அவர்கள் மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மையும் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒருசேர அழிவைக் கொண்டுவருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 6:11-16), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த அன்புப் பிள்ளையான திமொத்தேயுவிடம் செல்வம் பற்றியும் அது கொண்டுவரும் ஆபத்து பற்றியும் மனம் திறந்து, செல்வத்திலிருந்து தப்பி ஓடவும், இறைவனுக்கு உகந்த சில மதிப்பீடுகளை நாடித்தேடவும் அறிவுறுத்தின்றார் பவுல். இதற்கு முந்தைய பகுதியில் (1 திமொ 6:3-10) எபேசு திருச்சபையில் இருந்த சில மனிதர்களின் நெறிகேடான வாழ்க்கைமுறை பற்றியும், அவர்கள் செல்வத்தைச் சேகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் எச்சரிக்கின்றார். 'பண ஆசையே அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர். இதனால் பலர் நம்பிக்கையிலிருந்து நெறிபிறழ்ந்தனர்' என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார். அவர்களைப் பற்றிப் பேசி முடித்தவுடன், 'ஆனால் ... நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு!' என்று தன் அறிவுரையைத் தொடர்கின்றார். 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகிய ஆறு மதிப்பீடுகளை திமொத்தேயு தனதாக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார். மேற்கானும் ஆறு மதிப்பீடுகளும் ஒருவரிடம் இருக்கும் அக்கறையின்மை அகற்றுவதற்கான மாத்திரைகள். தன்னலம், தன்மையம் என்னும் நம்முடைய மனிதஇயல்பியல் பண்புகள் நம்மை அறியாமலேயே நம்மேல் ஒரு செதிலை உருவாக்கி மற்றவர்களிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடுகின்றன. இம்மாத்திரைகளை நாம் உண்ணும்போது படிப்படியாக இச்செதில்களை நாம் உதிர்க்கின்றோம்.

மேலும், இம்மதிப்பீடுகள் வழியாகவே திமொத்தேயு நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு நம்பிக்கை வாழ்வின் சாட்சியாகவும் திகழ முடியும். நீடித்த அர்ப்பணமும் நிலையாக அக்கறையுமே ஒரு நல்ல தலைவரை உருவாக்க முடியும். பேராசையும் தன்னலமும் இந்த அர்ப்பணத்தைக் குலைத்துவிடும். எனவேதான் பவுல் திமொத்தேயுவை, அக்கறையின்மை காலப்போக்கில் குழுமத்தையே அழித்துவிடும் என்று மறைமுகமாக எச்சரிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 16:19-31) நமக்கு மிகவும் அறிமுகமான பகுதி. இதை ஒரு உருவகமாக பரிசேயர்களுக்குச் சொல்கின்றார் இயேசு. இரு கதைமாந்தர்கள். ஒருவர் செல்வந்தர். இவர் 'விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து தினமும் விருந்துண்கிறார்.' 'செந்நிற மெல்லிய ஆடை' பகட்டின் அடையாளம். 'செந்நிறம் கம்பளம்' ஆடம்பரமான வரவேற்பைக் குறிப்பது போல. ஆனால், இந்த நபருக்குப் பெயர் இல்லை. மற்றவர் இலாசர். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் - அதாவது, செல்வந்தரின் எச்சில் தட்டிலிருந்து கிடைப்பற்றைக் கொண்டு - பசியாறினார். நாய்கள் கூட வந்து நக்கும் அளவுக்குப் புண்கள் திறந்து கிடந்தன. இவ்வாறாக, இன்னும் அதிகமாக அவர் தீட்டுப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு விடயங்கள் பொதுவாக இருந்தன: (அ) இருவருமே யூதர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள், (ஆ) இருவருமே ஆபிரகாமின் மகன்கள் அல்லது மக்கள். மோசேயின் சட்டப்படி (காண். இச 15:7-9) ஒவ்வொரு இஸ்ரயேலரும் தனக்கு அடுத்திருக்கும் இஸ்ரயேலரின்மேல் குறிப்பாக நலிவுற்றவர், வறியவர்மேல் அக்கறை கொண்டுவாழவும், அவர்களுக்கு உரியவற்றைச் செய்யவும் அழைக்கப்பட்டனர். தன் வாசலில் படுத்துக்கிடந்த இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மையால், கண்டுகொள்ளாத்தன்மையினால் மோசேயின் சட்டத்தை மீறியவராகின்றார் செல்வந்தர்.

இருவருமே இறக்கின்றனர். இறப்பு இவர்கள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. 'என் கடவுள் உதவி செய்கின்றார்' என்று பொருள்தரும் பெயர் கொண்ட இலாசர் ஆபிரகாமின் மடிக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றார். செல்வந்தரோ பாதாளத்தில் தனிமையில் வதைக்கப்படுகின்றார். அவர் இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மை அவருக்கு அழிவைக் கொண்டுவருகிறது.

ஆனால், இறந்தபின்னும் அச்செல்வந்தர் தன்னுடைய தவற்றை உணரவில்லை. செருக்கோடும் தன்னலத்தோடும் தொடர்ந்து முறையிடுகின்றார். இலாசரைத் தன்னுடைய பணியாளனாகவும் தூதனாகவும் ஆக்கிக்கொள்ள விரும்புகின்றார். தனக்குத் தண்ணீர் தருமாறு இலாசரைப் பணிக்கவம், தம் இல்லத்திற்குத் தூதனுப்பவும் ஆபிரகாமிடம் வேண்டுகின்றார். செல்வந்தரின் அக்கறையின்மை அவருக்கும் ஆபிரகாம்-இலாசருக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்திவிடுகிறது - 'இங்கிருப்பவர் அங்கும் அங்கிருப்பவர் இங்கும் கடந்து வர இயலாமல் போய்விடுகிறது.'

இவ்வாறாக, அக்கறையின்மையின் விளைவு அழிவு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன இன்றைய வாசகங்கள். முதல் வாசகத்தில் மேட்டுக்குடி செல்வந்தர்களின் வாழ்வு அவர்களுக்கும் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கும் நாடுகடத்தலைக் கொண்டுவருகிறது. இரண்டாம் வாசகத்தில் செல்வம் ஒருவரை அர்ப்பணத்திலிருந்து தவறிவிழச் செய்கிறது. மூன்றாம் வாசகத்தில் அக்கறையின்மை செல்வந்தரை அழிவில் தள்ளுவதோடு பெரிய பிளவையும் சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு மாறாக, அக்கறை காட்டும் ஒருவர், இன்றைய திருப்பாடல் (146) குறிப்பிடும் ஆண்டவர் போல, 'நீதியை நிலைநாட்டுகின்றார், பசித்திருப்போருக்கு உணவளிக்கின்றார், அநாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்.'

அழிவுதரும் அக்கறையின்மையை நாம் எப்படி கடப்பது? அல்லது மற்றவர்மேல் எப்படி அக்கறை காட்டுவது?
மற்றவர்கள்மேல் அக்கறைகாட்டுவதிலும் சிக்கல் இருக்கிறது. அடுத்தவர்கள் என்னிடம் முதலில் கேட்கட்டும் என்று சொல்லி சிலர் அக்கறை காட்ட மறுப்பர். அல்லது சிலர் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டியதால் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கக் கூடும். இருந்தாலும் அக்கறையின்மையைவிட அக்கறை மேலானது.

நம்மிடம் பின்வரும் இரண்டு கேள்விகள் இருந்தால் நம்மால் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது:

அ. விதிப்படிதானே எல்லாம் நடக்கும்?
'நான் நன்றாக இருக்கிறேன் என்றால், நீ ஏழையாக இருக்கிறாய் என்றால் அது விதி' என்று நினைப்பவர்களும், 'நான் நன்றாக இருக்கிறேன் என்றால் உழைக்கிறேன். நீயும் உழைத்தால் நன்றாக இருப்பாய்' என்று நினைப்பவர்களும் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் கண்ட செல்வந்தர்கள் இத்தகைய மனநிலையைத்தான் கொண்டிருந்தனர். தாங்கள் செல்வராய் இருப்பதே கடவுளின் ஆசீர் என்றும், அந்த ஆசீரை அவர்கள் கொண்டாட வேண்டும் என்றும் நினைத்தார்கள். ஆக, தங்களுடைய வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தாங்கள் செய்து கொள்வதை அவர்கள் இதன் அடிப்படையில் நியாயப்படுத்தினார்கள். ஆனால், இது சரியான மனநிலை அன்று. ஒருவேளை அம்பேத்கார் இப்படி நினைத்திருந்தால் தன்னுடைய மக்களின் உரிமைக்காக அவர் போராடியிருக்க முடியுமா?

ஆ. நான் யாருக்கும் தீமை செய்யவில்லையே?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் செல்வந்தர் யாருக்கும், குறிப்பாக இலாசருக்குத் தீமை செய்யவில்லை. தன்னுடைய உழைப்பில் தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு உண்டு மகிழ்ந்தார். யாருக்கும் அவர் தீமை செய்யவில்லை. இலாசரின் உழைப்பை உறிஞ்சவில்லை. இலாசரைத் தன் பார்வையிலிருந்து விரட்டியடிக்க வில்லை. ஆக, தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதுமா? இல்லை. நன்மை செய்யாமல் இருப்பதும் பாவம்தான். நான் யாருடைய வம்புக்கும் போவதில்லை, நான் நடுநாயகமானவன் என்று நினைப்பதெல்லாம் அடக்குபவருக்கு இடம் கொடுப்பதாக அமையும்.

மேலும், நமக்குத் தேவைகள் அன்றாடம் கூடிக்கொண்டே வருகின்றன. வழக்கமாக நமக்கு மேலிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிட்டுக்கொண்டே நம்மிடம் இல்லாதவை பற்றி நாம் புலம்புகின்றோம். இப்படிப்பட்ட புலம்பல் இருப்பவர்கள் ஒருபோதும் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட இயலாது. ஆனால், நமக்குக் கீழிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிடத் துணிந்தால் நம்மால் எளிதில் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இவ்விரண்டு கேள்விகளை விடுப்பவர்தாம் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியும். நேர்முகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நான் எனக்கும் மற்றவருக்கும் இடையே இருக்கின்ற சார்புநிலையை உணர்ந்தால்தான் அக்கறைகாட்ட முடியும். 'கடவுளின் மனிதனாகிய நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு' என்று திமொத்தேயுவுக்குச் சொல்கின்ற பவுல், 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகியவற்றை நாடித்தேடு என்கிறார். ஒன்றிலிருந்து நான் ஓடும்போது மற்றதை நான் நாட வேண்டும். எதையாவது பிடித்துக்கொண்டே இருந்தால்தான் வாழ முடியும். ஆக, நான் மற்றவர்களோடு தொடர்பில் இருக்கிறேன் என்றும், மற்றவரின் வயிறு வாடியிருக்கும்போது, என் தட்டு நிரம்பி வழிந்தால் நான் மற்றவருக்கு உரியதையும் உண்கிறேன் என்றும் உணர்ந்தால் என்னால் அடுத்தவர்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இறுதியாக, இன்று நான் மற்றவர்கள்மேல் அக்கறையோடு இருக்கின்றேனா? அல்லது அக்கறையற்று இருக்கின்றேனா? அக்கறையின்மையில் வாழ்கிறேன் என்றால், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே வெள்ளிப்பூச்சு இருக்கிறது என்பதே உண்மை. இந்த வெள்ளிப்பூச்சு அதிகமாகிக்கொண்டே போனால் எனக்கும் அவருக்கும் - ஆண்டவருக்கும் - இடையே உள்ள பிளவும் அதிகமாகிக்கொண்டே போகும்.

அக்கறையின்மை என்னையும் பிறரையும் அழிக்கும் என்றால்,

நான் மற்றவர்கள்மேல் காட்டும் அக்கறை பிறரையும் என்னையும் வாழ வைக்கும்.

இவ்வாறாக, நான் காட்டும் அக்கறையே நான் அக்கரை சேர்வதற்கான படகும் துடுப்பும் ஆகும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

30 வயது நிறைந்த ஓர் இளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை பெற்றிருந்த அவ்விளைஞரை, பல இசைக்குழுக்கள் தேடிவந்தன. மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.

புகழின் உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார். ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப் பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்கா சென்று பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன. இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே தனக்குள் இந்த மாற்றத்தை உருவாக்கியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை, நமக்குள் மாற்றங்களை உருவாக்க, இந்த ஞாயிறு வழிபாட்டில், நம்மைத் தேடி வந்துள்ளது.

செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை, சென்ற வாரம், ‘நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை’ வழியாக இயேசு கூறினார். அந்த உவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16: 13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.

நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளே என்பதை, 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். ஒரு வைரத்தைப்போல், வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இவ்வுவமையின் முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.

லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் (16:19-21) காணப்படும் இவ்வுவமையின் முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில், இவ்வுவமையின் இரு நாயகர்களை, இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில், செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.
செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:

 • செல்வர் ஒருவர் இருந்தார்.
 • விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
 • நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:

 • இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
 • அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
 • அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
 • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
 • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை. செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த உவமையில் மட்டுமே, கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இச்சிறப்பு, தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.

செல்வருக்கு ஏன் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதை இப்படியும் எண்ணிப் பார்க்கலாம். அந்தச் செல்வரின் சுய அடையாளங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த செல்வத்திலிருந்தே வந்ததால், அவர் தன்னுடைய பெயரை இழந்து வாழ்ந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஒருவர் குவித்துள்ள செல்வத்தால், 'இலட்சாதிபதி', 'கோடீஸ்வரர்' என்ற பட்டங்களைப் பெற்று, அவரது பெயரை இழக்க வாய்ப்பு உண்டு. குவித்து வைத்த செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த செல்வர், தன் பெயரை இழந்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லும் இயேசு, ஏழைக்கு 'இலாசர்' என்ற பொருத்தமான பெயரையும் தந்துள்ளார். இயேசுவின் மிக நெருங்கிய நண்பரின் பெயரும் 'இலாசர்' என்று உணரும்போது, இயேசு இக்கதையில் தன் மனதுக்குப் பிடித்த ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்.

'இலாசர்' என்ற இந்தப் பெயர், பழைய ஏற்பாட்டில் காணப்படும், ‘எலியேசர்’ என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய ஊழியன், எலியேசர். அந்தப் பெயரின் பொருள் "இறைவனே என் உதவி" (God is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர், இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்ததால் பெயரிழந்தவர், அந்த செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது. 30 வயது நிறைந்த ஓர் இளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை பெற்றிருந்த அவ்விளைஞரை, பல இசைக்குழுக்கள் தேடிவந்தன. மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.

புகழின் உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார். ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப் பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்கா சென்று பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன. இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே தனக்குள் இந்த மாற்றத்தை உருவாக்கியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை, நமக்குள் மாற்றங்களை உருவாக்க, இந்த ஞாயிறு வழிபாட்டில், நம்மைத் தேடி வந்துள்ளது.

செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை, சென்ற வாரம், ‘நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை’ வழியாக இயேசு கூறினார். அந்த உவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16: 13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.

நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளே என்பதை, 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். ஒரு வைரத்தைப்போல், வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இவ்வுவமையின் முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.

லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் (16:19-21) காணப்படும் இவ்வுவமையின் முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில், இவ்வுவமையின் இரு நாயகர்களை, இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில், செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.
செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:

 • செல்வர் ஒருவர் இருந்தார்.
 • விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
 • நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:

 • இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
 • அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
 • அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
 • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
 • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை. செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த உவமையில் மட்டுமே, கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இச்சிறப்பு, தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.

செல்வருக்கு ஏன் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதை இப்படியும் எண்ணிப் பார்க்கலாம். அந்தச் செல்வரின் சுய அடையாளங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த செல்வத்திலிருந்தே வந்ததால், அவர் தன்னுடைய பெயரை இழந்து வாழ்ந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஒருவர் குவித்துள்ள செல்வத்தால், 'இலட்சாதிபதி', 'கோடீஸ்வரர்' என்ற பட்டங்களைப் பெற்று, அவரது பெயரை இழக்க வாய்ப்பு உண்டு. குவித்து வைத்த செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த செல்வர், தன் பெயரை இழந்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லும் இயேசு, ஏழைக்கு 'இலாசர்' என்ற பொருத்தமான பெயரையும் தந்துள்ளார். இயேசுவின் மிக நெருங்கிய நண்பரின் பெயரும் 'இலாசர்' என்று உணரும்போது, இயேசு இக்கதையில் தன் மனதுக்குப் பிடித்த ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்.

'இலாசர்' என்ற இந்தப் பெயர், பழைய ஏற்பாட்டில் காணப்படும், ‘எலியேசர்’ என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய ஊழியன், எலியேசர். அந்தப் பெயரின் பொருள் "இறைவனே என் உதவி" (God is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர், இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்ததால் பெயரிழந்தவர், அந்த செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது.

இந்த முதல் ஒப்புமை நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கிய பாடம், நாம் ஏழைகளை எவ்விதம் மதிக்கிறோம் என்பதே. நம் இல்லங்களில் பணியாற்றுவோரின் பெயர்களை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அவர்களை மரியாதைக் குறைவாய், ஏக வசனத்தில், "ஏய், அடியே, இவனே" என்று அழைப்பது தவறு என்பதை, இந்த உவமையின் அறிமுக வரிகளில் இயேசு சொல்லித் தருகிறார்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.

அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம், சிவப்பு. செல்வர் தன்னைத்தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். ‘யூதர்களின் அரசன்’ என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது, இந்த இரண்டாவது ஒப்புமை.

மூன்றாவது ஒப்புமையில் நாம் காணும் வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.

 • செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
 • இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
 • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
 • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகளை ஏவிவிட்டு, இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர், இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.

இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்ற குறைந்தபட்ச உணர்வு செல்வருக்கு இருந்தது என்று நம்மால் சொல்லமுடியும். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும், அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை, அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக “இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.

ஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது, அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல், அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப்போல் ஒருவரை நடத்துவது, மிகவும் கொடுமையான தண்டனை. இத்தகையத் தண்டனையை, அச்செல்வர், இலாசருக்கு வழங்கியதால்தான் அவர் நரக தண்டனை பெற்றார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள்கூட இலாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும், இயேசு, இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும், இலாசரும், ஒன்று. தூசி காலடியில் கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை; அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது, நம் சிந்தனைக்குரியது. வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருந்ததா என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில், ஆயிரத்தில் ஒரு பகுதியை, இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது.

வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகத்தை நாம் தெரிவு செய்கிறோம் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது, அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது, அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல், செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு, கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதைக் காட்டிலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பிளவுகளைக் கடந்து பிறர் துன்பம் போக்குவோம்!

ஒரு மனிதர் குடும்பத்தோடு உணவு விடுதிக்குச் சென்று உணவருந்த மேசையில் அமர்ந்தார். அவர் உள்ளே வரும் போதே அவ்வுணவு விடுதியின் வாசலில் பத்து வயது மதிக்கத் தக்க பையனும் அவனுடைய தங்கையும் அமர்ந்திருந்ததைக் கண்டார். அச்சிறு குழந்தைகள் விடுதியின் கண்ணாடிக் கதவுகள் வழி மற்றவர் உண்கின்றதை பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தனர். அந்த உணவு விடுதிக்கு வந்து போகின்ற ஒருவர் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அம்மனிதர் தன் குடும்பத்திற்கு வாங்கிய உணவு போக இரண்டு பேருக்கு இரு வேளைக்கு உணவு வாங்கினார். அம்மனிதரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. வாங்கிய உணவை எடுத்துச் சென்று வெளியிலே அமர்ந்திருந்த அக்குழந்தைகளுக்குக் கொடுத்தார். உள்ளே வந்த அவர் ஆச்சரியத்தோடு தன்னை நோக்கிய குடும்ப உறுப்பினர்களிடம் இவ்வுணவு விடுதியின் கண்ணாடிக் கதவுகள் உதவி செய்ய எனக்கு தடையேதும் விதிக்கவில்லை எனக் கூறினார்.

ஆம். அன்புக்குரியவர்களே இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் நம்மை பிளவுகளை அல்லது இடைவெளிகளைத் தாண்டி துன்புறுவோரை நோக்கவும் அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்யவும் அழைப்பு விடுக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் செல்வந்தர் மற்றும் ஏழை லாசரைப் பற்றிய உவமையை நாம் வாசிக்கிறோம்.இப்பகுதியை நன்றாக வாசித்துப் பார்த்தோமெனில் செல்வந்தர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது போலத் தோன்றும். அதாவது அவர் ஏழை லாசரை கொடுமை செய்யவில்லை. வீட்டு வாயிலிலிருந்து விரட்டி அடிக்கவில்லை. அவரிடம் வேலை வாங்கவில்லை. ஆனால் அவர் செய்த மிகப்பெரிய தவறு அவருடைய அசட்டைத் தனம். தன் கண் முன்னே வேதனைப்படும் மனிதனை கண்டுகொள்ளாமல் இருந்த கல் நெஞ்சமே செல்வந்தன் செய்த பெரும் பாவம். தன் உணவரைக்கும் வாயிலிக்கும் இடைய இருந்த இடைவெளியைக் கடக்கு மனமில்லாமல் போனதால் விண்ணகத்திற்கும் பாதளத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை செல்வந்தர் அதிகரித்துக் கொண்டார்.

ஆம் நமக்கும் நம் கண்முன்னே துயரப்படுபவரக்கும் இடையே பிளவுகள் அல்லது இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க நமக்கும் விண்ணகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதை நாம் இன்று உணர வேண்டும். நம்மிடம் உதவும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்ற நிலை இருந்தாலும் கூட நமது அன்பும் ஆறுதலும் ஒருவரைத் தூக்கிவிடும். மாறாக அசட்டைத்தனமுடையவர்களாய் உதவி செய்யத் தவறினால் செல்வந்தனுக்கு மறுக்கப்பட்டது போல நமக்கும் மண்ணக உதவியும் விண்ணக உதவியும் மறுக்கப்படும்.

இயேசு மலைப்பொழிவிலே "இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் "என்று கூறுகிறார். செல்வந்தரின் இரக்கமற்ற செயல் அவர் பெற இருந்த இரக்கத்தை நீக்கியதல்லவா. எனவே அன்புக்குரியவர்களே நாம் பிளவுகளைக் குறைத்துக்கொள்ள விழைவோம். இடைவெளிகளை அகற்றி துன்புறுவோரை நெருங்குவோம். விண்ணகம் நம்மை நெருங்கும். பிளவுகளைக் கடந்து பிறர் துன்பம் போக்கத் தயாரா?

இறைவேண்டல்
துயருறுவோரின் அருகிருக்கும் இறைவா!
என் கண்முன்னே துன்புறுவோரை அசட்டை செய்யாமல், இடைவெளிகளையும் கதவுகளையும் கடந்து உதவிட வரமருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser