தூய ஆவியானவரின் செயல்பாடு
ஜோசப், மேரி என்ற படித்த பட்டதாரிகள் இருவரும் திருமண வாழ்வில் கணவன் மனைவியாக தங்களை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் திருமண வாழ்வு நீடிய நாட்கள் நிலைக்கவில்லை. காரணம் ஜோசப் பரம்பரை சம்பிரதாயத்தில் கலந்தவர், பழமைவாதி. எப்போதும் ஆண் அதிகாரம் காட்டுபவர். ஆனால் மேரியோ காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளும் புதுமைப்பெண். அடிக்கடி ஜோசப் சொல்வான்: நான் உன் கணவன். நீ என் மனைவி. நீ எனக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இந்த நிலை மேரியைப் பொறுமையற்ற, சகிக்க இயலா நிலைக்கு இட்டுச் சென்றது.
இதனால் சில மாதங்களிலே திருமண முறிவுக்கு இட்டுச் செல்லப்பட்டார்கள்.
இன்று சகிக்க இயலா நிலைக்குச் சமுதாயத்தில் பலர் தள்ளப்படுகிறார்கள். குடும்பத்திலே கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மாமி, மருமகள் எல்லாரிடமும் இந்த நிலை அதிகமாக நிற்கிறது. இன்றைய இந்தியாவிலே பரம்பரைவாதிகள் தான் பெரும்பான்மையினர், சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நினைத்து சிறுபான்மையோருக்கு உரிமை கிடையாது என்கின்ற மனநிலை உருவாவதைப் பார்க்கிறோம். இதனால் சிறுபான்மையோரின் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். அரசியலிலும், கலாச்சாரத்திலும் சாதிக் குருக்கள், மற்றவர்களைத் தடை செய்வதை நாம் பார்க்கிறோம்.
காரணம் என்ன?.
இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது நான் என்ற அகந்தை. அகந்தையான மனிதன் தான் நினைப்பதும், செய்வதும் சரிதான் என கருதுகிறான். என்னை எதிர்ப்பவர் எல்லாம் தவிடுபொடியாவார்கள் என்ற நிலைக்கு இவன் தள்ளப்படுகிறான். .
இதைத்தான் புனித யாகப்பர் ஒரு மனிதனின் துருப்பிடித்த இதயம் அவனை அணு அணுவாகக் கொல்லும் (யாக. 5:3) என்று அழகாக எச்சரிக்கை தருகின்றார். அகங்காரம் கொண்டவன் ஆவியின் தூண்டுதலுக்குத் தன்னை ஆளாக்குவதில்லை (தி. பாடல் 19:13).
இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இரண்டுபேர் கூடாரத்தில் இறைவாக்கு உரைத்தபோது ஒருவனைத் தடுக்க யோசுவா மோயீசனைக் கேட்டார். மோயீசனோ அதைக் கடிந்து கொண்டார் (எண் 11:25-29). ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் மட்டும்தான் பேய்களை ஓட்ட வேண்டும். மற்றவர் கூடாது எனத் தடை போட்ட சீடர்களைப் பார்த்து: தடுக்காதீர்கள், ஆவியானவர் எங்கும் ஆற்றல் புரிபவர் என்றார். நற்செய்தியிலே இரு இடங்களில் ஆண்டவர் இயேசுவின் பெரும் பாராட்டைப் பெற்றவர்கள் யார் தெரியுமா? புறவினத்தார்கள் தான். இஸ்ரயேல் மக்களிடத்தில் இத்தகைய விசுவாசத்தை நான் கண்டதே இல்லை. ஆனால் என்னே இந்த செந்தூரியன் விசுவாசம் (மத். 8:10) என்றார் இயேசு. அம்மா உன் விசுவாசம் பெரிது என்று கனானியப் பெண்ணைப் பார்த்து இயேசு பாராட்டவில்லையா (மத். 15:28)..
அன்பார்ந்தவர்களே ஆவியானவரால் நிரப்பப்பட்டு அப்போஸ்தலர்களின் வாரிசான ஆயர்கள், உரோமையில் கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் முழக்கமிட்ட ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது, மற்ற மறைகளில் மனித மீட்புக்காகச் சிதறிக்கிடக்கும் உண்மைகளைத் திருச்சபை என்றும் ஏற்க மறுக்காது..
ஏன்! நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கடந்த காலங்களில் சகிப்புத் தன்மையற்ற நிலையிலே, ஆணவத்தால் எடுத்த சில நிலைகளுக்குப் பொது மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் அல்லவா. நாம் இன்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். நாம் புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவின் மனநிலையை (பிலி. 2:5) கொண்டிருக்கிறோமா? தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்த நம் ஆண்டவரின் மனநிலை நம்மிடம் உண்டா! அல்லது நம் மனித ஆவியின் தூண்டுதலுக்கு அடிமையாகி அடுத்தவனை வரவிடாது, வாழவிடாது நாம் நினைப்பதும் செய்வதும் தான் சரி என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோமா?
கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.
இன்றைய நற்செய்தியின் வழியாக, கொடுப்பவர்களுக்குக் கடவுள் தவறாது கைம்மாறு, பரிசு தருவார் என்ற உண்மையை ஆணித்தரமாக இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். மீட்பின் வரலாற்றிலே, கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் கடவுள் தவறாது ஆசிர்வதித்திருக்கின்றார். இதோ சில விவிலியச் சான்றுகள். தொநூ 18:1-14 : ஆபிரகாமுக்கும், சாராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் கொஞ்சி விளையாட பிஞ்சு நெஞ்சம் ஒன்று அந்த வீட்டில் பிறக்கவில்லை ! ஒரு நாள் கவலையால் கலங்கி நின்ற ஆபிரகாம் மூன்று மனிதர்களைக் கண்டார். கூடாரத்தை விட்டு வெளியே சென்று அந்த மூன்று மனிதர்களையும் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர்களது களைப்பு நீங்க அவர்களுக்கு விருந்து படைத்தார். அந்த மனிதர்கள் மூவரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள், தங்கள் மீது அன்பைப் பொழிந்த ஆபிரகாமைப் பார்த்து, ஆண் ட வரால் ஆகாதது எதுவும் உண்டோ ? சாராவுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றார்கள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட படியே ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்தார் (தொநூ 21:1-8). ஆம். கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்..
1 அர 17:8-16 : ஊரெல்லாம், நாடெல்லாம் பஞ்சம் ! அப்போது இறைவாக்கினர் எலியா ஒரு கைம்பெண்ணிடம் கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் கேட்டார். அந்தக் கைம்பெண்ணோ , வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை : பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும் என்றாள். ஆனால் எலியாவோ, கொடு, உனக்குக் கொடுக்கப்படும் என்றார். அவள் கொடுத்தாள். பானையிலிருந்த மாவும் தீரவில்லை. கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை. ஆம், கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்..
யோவான் 2:1-11: கானாவூர் திருமண வீட்டார் இயேசுவிடம் தண்ணீரைக் கொடுத்தார்கள். அவர்களுக்குத் திராட்சை இரசம் கிடைத்தது. யோவான் 6:1-13: கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான். கூட்டத்திலிருந்த எல்லாருக்கும் உணவு கிடைத்தது. ஆம். கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும். கொடுக்கப்படாதவை அனைத்தும் அழிந்து போகும் ; அழிந்து போனவை கொடுக்காதவர்களின் உயிருக்கு உலை வைக்கும் (இரண்டாம் வாசகம்). நமது கடவுள் எடுக்கின்ற கடவுள் அல்ல ; கொடுக்கின்ற கடவுள். தனது ஒரே மகனையே உலகுக்குக் கொடுத்தவர் நம் கடவுள் (யோவா 3:16). தமது ஆவியை அனைவர் மீதும் பொழிந்தவர் நம் கடவுள் (முதல் வாசகம்). சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது..
மேலும் அறிவோம் :
கொடுப்பதூம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் (குறள் : 1005).
பொருள் : பிறருக்கு வழங்கவும் தாம் நுகர்வதும் ஆகிய செல்வத்தின் இரு பயன்பாடும் இல்லாதவரிடம் கோடிக்கணக்கில் பொருள் குவிந்திருந்தாலும் அவை செல்வமாக மதிக்கப்படாமல் போகும்!
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் லூத்தரன் சபைக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண்பதற்காகக் கிறிஸ்துவும் வந்திருந்தார், முதலில் லூத்தரன் சபையினரும் பின்னர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் 'கோல்" போட்டபோது கிறிஸ்து பலமாகக் கைதட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே! நீங்கள் எந்த சபையில் இருக்கிறீர்கள்? கத்தோலிக்க சபையிலா? அல்லது லூத்தரன் சபையிலா?" என்று கேட்டனர், அதற்குக் கிறிஸ்து, "நான் இப்போது கால்பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எந்தச் சபை 'கோல்' போட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே" என்றார்..
இக்கதை நமக்கு உணர்த்தும் உண்மை ; "கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர், உண்மையும் நன்மையும் எங்கிருந்தாலும் அவை கடவுளுக்கே உரித்தானவை. அவற்றைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்," சுருக்கமாக, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34). கடவுளின் செயல்பாட்டை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்க முடியாது என்ற கருத்தை இன்றைய அருள்வாக்கு வழிபாடு உணர்த்துகிறது..
பழைய உடன்படிக்கையில் மோசேவுக்கு உதவி செய்வதற்காக 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களும் மோசேயிடம் இருந்த கடவுளின் ஆவியில் பங்கு பெற்று இறைவாக்கு உரைத்தனர். ஆனால் இக்குழுவைச் சாராத இருவர் இறைவாக்கு உரைத்தபோது, யோசுவா அவர்களைத் தடை செய்யும்படி மோசேயிடம் கேட்டார், மோசே அவ்வாறு தடை செய்யாமல், எல்லாருமே கடவுளுடைய ஆவியைப் பெற்று இறைவாக்கு உரைத்தால் நலமாயிருக்கும் என்றார் (எண்11:25 29). தமக்கிருந்த வல்லமை மற்றவர்களிடமும் விளங்கியதைக் கண்டு மோசே பொறாமை அடையாது மகிழ்ச்சி அடைகிறார், அவரிடம் குறுகிய மனப்பான்மை இல்னல்), "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மை கொண்டு விளங்கினார்.
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் சீடர்களைச் சாராத ஒருவர் கிறிஸ்துவின் பெயரால் பேயோட்டுவதைக் கண்ட சீடர்கள் அவரைத் தடை செய்ய முயன்றனர், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு தடைசெய்ய வேண்டாம் என்று கூறியதோடு, தமக்கு எதிராக இல்லாதவர் தமக்குச் சார்பாக இருக்கின்றார் என்றும் கூறினார் (மாற் 1:39-40).
குருக்கள் மட்டும் தானே நோயாளிகா மீது கைகளை விரித்துக் செபிக்கலாம், ஆனால், இப்போது பொதுநிலையினரும் அவ்வாறு செய்கின்றார்களே என்று ஒரு சிலர் ஆதங்கப் படுகின்றனர். அவர்களுடைய ஆதங்கம் தேவையற்றது. கடவுள் தமது வல்லமையை அருள்பணியாளர்கள் வாயிலாக மட்டுமல்ல, பொதுநிலையினர் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பட்டு, கிறிஸ்துவின் பொதுக்குருத்துவத்தில் பங்கு பெறுகின்றார், 'நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினார்' (1பேது 2:9), “நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது" (1 யோவா 2:27), தூய ஆவியாரையும் கடவுளுடைய வார்த்தையையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்த இயலாது. க சற்று தாம் விரும்பும் திசையில் வீசுகிறது. ஆவியின் செயல்பாடும் அவ்வாறே உள்ளது (யோவா 3:8) கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது (2 திமொ 2:9). கடவுள் எல்லாருக்கும் தந்தை; இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் மீட்பர்.
ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம், "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றதற்கு, இரண்டாவது பைத்தியம், "நான் இப்போதைக்கு உலகத்தை விற்கிற மாதிரி இல்லை " என்றது. உலகமெல்லாம் எள் னு டையது என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம், அவ்வாறே உண்மையெல்லாம் என்னுடையது என் று மார் தட்டுவதும் பைத்தியகாரச் செயலாகும். "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமயங்கள் தங்களிடையே பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.
ஓர் இந்து ஆசிரமத்தில் இருந்த தலைமைச் சந்நியாசி முதுமை அடைந்து விட்ட நிலையில், தமது மறைவுக்குப் பிறகு தம்முடைய பத்து சீடர்களில் யாரை ஆசிரமத் தலைவராக நியமனம் செய்வது என்பதை முடிவு செய்ய விரும்பினார். தமது 13 சீடர்களையும் அழைத்து, அவர்களிடம் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து, பக்கத்து ஊருக்குச் சென்று, அவ்வூரில் பட்டினியாகக் கிடந்த இந்துக்களுக்கு மட்டும் உணவுப் பொட்டலங்களை வழங்கிவிட்டு வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒன்பது சீடர்கள் இந்துக்களுக்கு மட்டும் உணவு வழங்கினர். பத்தாவது சீடரோ முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கூட உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஏன் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "பசியாய் இருந்தவர்களை நான் இந்துக்களாகவோ முகமதியர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ பார்க்கவில்லை. அவர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்தேன்." உடனே அச்சீடரை ஆசிரமத்தின் தலைமைச் சந்நியாசியாக அந்த வயதான சந்நியாசி நியமித்தார்..
மதம், மொழி, இனம், சாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து எல்லாரையும் மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" (திருமூலர் ); "யாதும் ஊரே யாவரும் கேளிர்" (கனியன் பூங்குன்றனார்], ஏழைகளை வாழவைப்பதுதான் உண்மையான சமயப்பற்று. உழைப்பவர்களின் கூலியைக் கொடுக்காமல், செல்வத்தை சேமித்து வைக்கும் பணக்காரர் களுக்குப் பேரழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் யாக்கோபு (இரண்டாம் வாசகம், யாக் 5:1-5).
நாம் நமது செல்வத்தை வங்கியில் அல்ல, ஏழைகளின் வயிற்றில் சேமித்து வைக்கவேண்டும், ஏழைகளின் வயிறே நமது பொருளைக் காக்கும் வங்கி, பாதுகாப்புப் பேழை என்கிறார் வள்ளுவர்..
அற்றார் அழிபசி தீர்த்தல் அல்லது ஒருவன்
பெற்றான் பொருள்வைப்புழி (குறள் 226)
சமயத்தின் மேன்மை சமயத்தில் இல்லை
“மகிழ்வாரோடு மகிழுங்கள். அழுவாரோடு அழுங்கள் ” (ரோமை. 12:15). திருத்தூதர் பவுல் சுட்டிக்காட்டும் கிறிஸ்தவ நெறி இது. மகிழ்வாரோடு மகிழ முடிகிறதோ இல்லையோ, பொறாமைப்படாமல் இருந்தாலே போதும் என்று சொல்லத் தோன்றுகிறது.
அக்பர் தன் அமைச்சரைப் பார்த்துக் கேட்டாராம்: “என் உடலெங்கும் முடியிருக்க என் உள்ளங்கையில் மட்டும் முடி இல்லையே, அது ஏன்?” “தாங்கள் வாரி வாரி வழங்குவதால் தேய்ந்து உதிர்ந்து விட்டது” என்றார் அமைச்சர். “மக்களிடம்?” என்று மன்னர் கேட்க, “தவர்கள் வாங்கி வாங்கிப் பழகி அந்த நிலை ஏற்பட்டுவிட்டது” என்றிருக்கிறார் அமைச்சர். “அதுசரி, துறவிகள் கொள்வதும் இல்லை கொடுப்பதும் இல்லை. பின் ஏன் அவர்கள் உள்ளங்கைகளிலும் முடி இல்லை?'' என்று தொடர்ந்து கேட்க, அமைச்சர் சொன்னாராம் “பொறாமையால் கைகளைப் பிசைந்து பிசைந்து” என்று.
சமயங்களிடையே இன்று தென்படும், பிளவுகள் பிணக்குகள் அனைத்தையும் உற்று நோக்கும்போது, நினைவுக்கு வருகிற கதை இது.
சமயப் பொறாமை இறைவனுக்குச் சேவை செய்வதுபோல நடிக்கத் தூண்டும். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த மூப்பரில் எழுபது பேரை மோசே தேர்ந்தெடுத்து ஆண்டவரின் கூடாரத்தின் முன் நிறுத்தினார். ஆனால் அவர்களில் இருவர் கூடாரத்துக்கு வராமல் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்கி விட்டனர். அவர்கள் மீது இறைவனின் ஆவியார் இறங்கி அவர்களும் இறைவாக்குரைப்பதைக் கேட்ட யோசுவா, “மோசே, என் தலைவரே, அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்று சொல்ல மோசே, “என்னை முன்னிட்டு நீ பொறாமைப் படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினர் ஆகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு” என்றார் (எண் 11: 28-29).
இன்றைய நற்செய்தியிலும் இயேசுவின் சீடர் குழுவைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் பேயோட்டுவதைக் கண்ட சீடர்கள் அவரைத் தடுக்கப்பார்த்தனர். இயேசுவோ, “தடுக்க வேண்டாம்... ஏனெனில் நமக்கு எதிராக இராதவர், நம் சார்பாக இருக்கிறார்” (மார்க். 9:39-40) என்றார்.
இறைவனுடைய ஆவியையும் ஆற்றலையும் கட்டுப்படுத்த நாம் யார்? ஆவியாரின் செயல்பாட்டுக்கு, அருள் பொழிவுக்கு மனிதன் வரையரை செய்வதா? முட்டுக்கட்டை போடுவதா? சூரியனைச் சொந்தம் கொண்டாட அது தனியுடைமை அல்ல! ஆவியார் உடலில் உள்ள கண் போல. அது உடலுக்குச் சொந்தம், உடலும் அதற்குச் சொந்தம். அதற்காக உடலுக்குள் மட்டுமல்ல உடலுக்கு அப்பாலும், வெளியிலும் செயல்பட முடியும்.
கடவுள் எவ்வளவு பரந்த மனமுள்ளவர்!
பெருந்தன்மையானவர்! அதன் முன்னால் நாம் குன்றி, கூனி, குறுகிப் போய் நிற்கிறோம். இனம், மதம், சாதி, சமயம் எனக் குறுகிய வட்டங்களை அமைத்துக் கொண்டு அவற்றுள் கிடந்து புழுங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு சமயத்தின் மேன்மை அந்தச் சமயத்தில் அல்ல. அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை முறையில் மட்டுமே! இந்தப் பின்னணியில் 1883 செப்டம்பர் 15இல் “நாம் ஏன் ஒத்துப்போவதில்லை?” என்ற தலைப்பில் விவேகானந்தரின் “சிக்காக்கோ சொற்பொழிவுகள்” என்ற நூலிலிருந்து ஒரு மேற்கோள்:
ஒரு கிணற்றில் தவளை ஒன்று நீண்டகாலமாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் கடல்தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்து விட்டது. “நீ எங்கிருந்து வருகிறாய்?” கேட்டது கிணற்றுத் தவளை. “கடலிலிருந்து”. “கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு இருக்குமா?” என்று கேட்டு ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்துக்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. “நண்பா இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?” என்றது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதி குதித்து “உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா?” என்று கேட்டது. “சேச்சே, என்ன முட்டாள்தனம், கடலை இக்கிணற்றோடு ஒப்பிடுவதா?” சர்ச்சையை முடித்துக் கொண்டது கடல் தவளை. “நீ என்ன சொன்னாலும் சரி, என் -கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. இவன் பொய்யன். இவனை வெளியே விரட்டுங்கள் என்று கத்தியது”. கிணற்றுத் தவளை... காலம் காலமாக இருந்து வரும் தொல்லை இதுதான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கிறேன். இவ்வாறே கிறிஸ்வன், முகமதியன். எல்லா மத்த்தவனும் நினைக்கிறான்.
சமய சகிப்புக்கூட கிறிஸ்தவப் பண்பு அல்ல என்று கருதும் கத்தோலிக்கத் திருஅவை சமயங்களைப் புரிந்து கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளுதல் என்ற அடிப்படையில் வலியுறுத்தும் கருத்துக்கள், வெளிப்படுத்தும் உணர்வுகள் வேறு எந்தச் சமயச் சிந்தனைக்கும் குறைந்தது அல்ல என்பதுதானே எதார்த்தம்! “உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ போற்றுதற்குரியவை எவையோ...” (பிலிப். 4:8) அவை அனைத்தும் கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தம்.
பொறாமை சாத்தானின் வலிய ஆயுதம். விவிலியமே பொறாமையின் கதைதான். “தின்றால் கடவுள் ஆவாய்” (தொ.நூ. 3:5). மனிதன் கடவுளாகிவிட்டால் கடவுளின் கதி? பொறாமையால் கடவுள் தந்த கட்டளையே “விலக்கப்பட்ட கனி”. இதுதானே சாத்தானின் சிந்தனை. பின் தலைமுறை தலைமுறையாய் பொறாமை மனிதனைத் தீய்த்தது. காயின் ஆபேலைக் கொன்றது, மன்னன் சவுல் தாவீது மீது கொண்டிருந்த, கொலை வெறி, யாக்கோபின் மக்களிடையே நிலவிய பொறாமையால் விளைந்த எகிப்திய அடிமைத்தனம். ஏன், இயேசுவின் சிலுவைச் சாவுக்கே காரணம் பரிசேயர்களின் பொறாமையே. “தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்தார்கள் என்று பிலாத்து உணர்ந்திருந்தான் ” (மார்க். 15:10).
“பொல்லாங்கு செய்வோரைக் கண்டு பொறாமைப் படாதே” (தி.பா. 37:1). கடவுள் சிலரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரும்போது அந்த நல்லவர்களைக் கண்டும் பொறாமைப்படாதே. எண். 12:2இல் மிரியாமும் ஆரோனும் “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?”. என்றனர். ஆண்டவர் இதைக் கேட்டார். விளைவு? எண். 12:10. “கடவுளின் சினம் மூண்டது.” மிரியாமுக்குத் தொழுநோய். 7 நாள் ஊர்விலக்கு. பொறாமையால் ஆசீர் இழப்பும் சிக்கலுமே. பொறாமை என்னும் தீயை எண்ணெய் ஊற்றி வளர்க்காதே. அது அடுத்தவனை எரிக்காது. உன்னையே எரிக்கும். பொறாமை தான் பிறந்த இடத்தையே அழிக்கிறது. துரு இரும்பில்தான் தோன்றுகிறது. ஆனால் அது கடைசியில் இரும்பையே அரித்து அழிக்கிறது அல்லவா! திருத்தூதர் பவுல் எழுதியிருப்பது போல் “வீண்பெருமையைத் தேடாமலும் ஒருவருக்கொருவர் எரிச்சல் படாமலும் ஒருவர் ஒருவர் மேல் பொறாமைப்படாமலும் இருப்போமாக” (கலா. 5:26).
இவன் நம்மைச் சாராதவன், நம் சாதியைச் சாராதவன், நமது மதத்தைச் சாராதவன், நமது ஊரைச் சாராதவன், நமது மொழியைச் சாராதவன், நமது கலாச்சாரத்தைச் சாராதவன் போன்ற எண்ணங்களே வெறுப்புணர்வுகளுக்கும் பிளவு பிரிவினைகளுக்கும் காரணம். நம்மைச் சாராதவர்கள் நமக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம் தவறானது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். மாறி வரும் உலகில் அனைவரும் நம்மைச் சார்ந்தவர்கள்தான். மனித குலத்தின் ஒருமைப்பாட்டில் தான் இறையரசு மலரும்.
“நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (தி.ப. 4:12). இந்த மீட்பையோ, மீட்புத் தரும் இயேசு என்ற பெயரையோ (உரோ. 10:13) யாரும் தங்களுக்கு மட்டுமே என் று சொந்தம் கொண்டாட முடியாது. இயேசுவின் பெயர் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்ட அனைவரும் நமக்கு நண்பர்களே!
இந்தச் ‘சிறியோருக்கு’ எதிரான பாவம்
கிரேக்க நாட்டில் வாழ்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், பல போட்டிகளில் வெற்றிபெற்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். மக்கள், அவருக்கு சிலையொன்றை செய்து, நகர சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளையவர், அச்சிலையைக் கண்டபோதெல்லாம், பொறாமையில் பொங்கினார். ஓர் இரவு, ஊரெல்லாம் உறங்கியபின், அவர் அந்த சிலையை உடைத்து வீழ்த்த, நகரச் சதுக்கத்திற்கு சென்றார். இருளில், தட்டுத்தடுமாறி, சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றி கயிற்றைக் கட்டினார். பின்னர், கீழே இறங்கிவந்து, தன் வலிமை அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தார். சிலை, அவர் மீது விழுந்து, அவரைக் கொன்றது.
பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில், வென்றவர்களை விட, கொன்றவர்களும், கொல்லப்பட்டவர்களுமே அதிகம் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. காயின், ஆபேல் காலம் முதல், மனிதர்களை வதைத்துவரும் பொறாமை என்ற நோயைக் குறித்து சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.
பொறாமை என்ற உணர்வின் ஊற்றாக இருப்பது, 'நான்-நீ', நாங்கள்-நீங்கள்' என்ற பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, நாம் என்றும், நம்மைச் சாராதவர் என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது.
மோசேயுடன் சேராத இருவர், இறைவாக்குரைத்தனர் என்பதைக் கேள்விப்படும் யோசுவா, அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி, மோசேயிடம் விண்ணப்பிக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இதையொத்த மற்றொரு நிகழ்வை நாம் நற்செய்தியிலும் காண்கிறோம்.
மாற்கு 9: 38
அப்பொழுது யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.
இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டு, தவறான முடிவுகள் எடுத்தவர்கள், இறை ஊழியர்கள் என்ற உண்மை நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும், பொறாமை நுழையக்கூடும் என்ற உண்மை, வேதனை தருகிறது. பாடங்களும் சொல்லித்தருகிறது.
நாம் வாழும் இன்றைய உலகில், கடவுள் பெயரால், மதங்களின் பெயரால் பொறாமைத் தீ கட்டுக்கடங்காமல் பற்றியெரிவதை ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வருகிறோம். நமது பொறாமை உணர்வுகள் பொருளற்றவை என்பதை, மோசேயும், இயேசுவும் கூறும் பதிலுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
யோசுவாவுக்கு, மோசே, பெருந்தன்மையோடு தரும் பதில் மிக அழகானது.
எண்ணிக்கை 11:29
மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார்.
அதேவண்ணம், யோவானிடம் இயேசு கூறும் பதிலும், பரந்ததோர் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.
மாற்கு 9: 39
அதற்கு இயேசு கூறியது; "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்" என்றார்.
பொறாமையால் உங்கள் பார்வையை இழந்துவிடாதீர்கள் என்று கூறும் இயேசு, அடுத்து வரும் வரிகளில், உங்கள் பார்வையைப் பறிகொடுத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை, மற்றொரு காரணத்திற்காகப் பரிந்துரைக்கிறார். இப்பகுதியில், இயேசு கூறும் சில அறிவுரைகள், கேட்பதற்கு கடினமாக உள்ளன.
சிறியோருக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, அவர்களை கடலில் தள்ளிவிடுவது மேல் என்றும், நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் உடல் உறுப்புக்களை வெட்டி எறியவேண்டும் என்றும், இயேசு கூறும் ஆலோசனைகள், கேட்பதற்கு மிகக் கடினமாக உள்ளன.
நாம் உட்கொள்ளும் பல மருந்துகள் கசப்பானவையெனினும் உடல் நலனை மனதில் கொண்டு அவற்றை உட்கொள்கிறோம், அல்லவா? அதேபோல், இயேசுவின் கூற்றுகள் நம் ஆன்மாவின் நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.
உடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்... கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்... தேவையற்ற ஆபத்துக்களை தேடிச்செல்வது, மதியீனம்... என்ற அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே!
இத்தகைய அறிவுரைகளைத்தான், இயேசு, இன்றைய நற்செய்தியில், கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவர், இவற்றை, கோபமாக சொல்கிறாரா, சாந்தமாகச் சொல்கிறாரா என்ற ஆய்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணரவும், அதன்படி வாழவும் முயல்வோம்!
"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" - “You must be the change you want to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி. "நான் செல்லும் கடல் பயணத்தில், வீசும் காற்றை என்னால் திசை திருப்ப இயலாது, ஆனால், அந்தக் காற்றுக்கு ஏற்றவாறு, என் பாய்மரத்தை திருப்பி, நான் செல்லவேண்டிய கரையை அடையமுடியும்" என்று சொன்னவர், ஜிம்மி டீன் என்ற புகழ்பெற்ற பாடகர்.
"I can't change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination." Jimmy Dean
அரண்மனையைவிட்டு ஒருபோதும் வெளியே வராத ஓர் அரசர், ஒருநாள், மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்துசென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை, தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, ஊர் முழுவதும், அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்க நினைத்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம், "அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களைமட்டும் மாட்டுத் தோலால் மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே" என்று ஆலோசனை கூறினார்.
ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.
மறையுரை
இந்த ஆண்டு/ முன் தயாரிப்பாக நான்கு ஞாயிறுகளிலும்
- பணிவோடு ஏற்கப்பட வேண்டிய இறைவார்த்தை (யாக் 1:21)
- சமத்துவ வாழ்வை வலியுறுத்தும் இறைவார்த்தை (யாக் 2:1-5)
- செயல்பாட்டுக்கு அழைக்கும் இறைவார்த்தை (யாக் 2:14-18)
- தொண்டாற்றத் தூண்டும் இறைவார்த்தை (மாற் 9:30-37)
என்ற அருமையான மையப் பொருள்களில் நாம் திருவிவிலிய
மாதத்தைக் கொண்டாடி வருகிறோம்.
- கடந்த திங்கள் முதல் நேற்றுவரை பல மையப் பொருள்களில் பல குழுக்களாகப் பணிகளைப் பிரித்துக்கொண்டு கொண்டாடினோம்.
- தூய ஆவியாரின் தூண்டுதல் இன்றி யாரும் இறைவாக்கு உரைக்க முடியாது. அவரது தூண்டுதலில் செய்யப்படும் எந்தச் செயலையும் யாராலும் தடை செய்ய முடியாது.
- எந்த இடத்தில், எப்படி இறைவாக்கு முழங்கப்பட வேண்டுமோ அப்படி நடைபெற இறைவன் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார். அதற்கு ஒத்துழைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
- செல்வரைக் கடவுள் வெறுப்பதில்லை; அவர்களது இறையாட்சிக்கு எதிரான, இவ்வுலகப் போக்கிலான செயல்பாடுகளைத்தான் இறைவன் வெறுக்கிறார்.
- கொடுக்கப்படாத கூலி கூக்குரலிடும். அது எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
- செல்வனின் செயல்பாட்டைச் சீர்படுத்துவது இறைவார்த்தை. அது நேர்மையாஎரைக் குற்றவாளி எனத் தீர்ப்பிடுவதைக் கண்டிக்கிறது.
- கிறிஸ்துவுக்கு எதிராக இல்லாத அனைவரும் அவரது பற்றாளர்கள் தான் தன் பெயரின் பொருட்டு சிறு உதவி செய்பவர் எவரும் கைம்மாறு பெறாமல் போவதில்லை என்று அவரே கூறியிருக்கிறார்.
- இறைவார்த்தைக்கு எதிராயில்லாதவர் அதனை இதயப் பற்றோடு ஏற்கிறார் என்பதே பொருள்.
- எல்லாச் சூழலையும் வெல்லக் கூடிய இறைவார்த்தையை இதயத்தில் பதிப்போம்.
- ஆண்டவருடைய வார்த்தைதான் உண்மை. அதனால் நாம் அர்ப்பணமாக்கப்பட ஆவல் கொள்வோம்.
பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எண். 11:25-29) பாலைவனத்தில் இருந்த இஸ்ராயேல் மக்கள் மோசேவுக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். இதனால் அவர் மக்களை நினைத்து வேதனைப்பட்டு இறைவனிடம், “இம்மக்களை தனியாக சுமப்பது எனக்கு மிகப்பெரிய பளுவாக இருக்கிறது. என்னை கொன்றுவிடும்” என்று முறையிடுகிறார். இதனால் இறைவன் மோசேயிடம் 70 மூப்பர்களை இஸ்ராயேலிலிருந்து தேர்ந்தெடுத்து அவர்களை கூடாரத்தை சுற்றிலும் நிற்கவைக்கச் சொல்கின்றார். அவர்களின் மூலம் மோசேயின் பளுவை குறைக்க நினைக்கின்றார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்கள் கூடாரத்தை சுற்றி நிற்கும் போது ஆவியானவர் அவர்கள் மீது இறங்கி வர அவர்கள் இறைவாக்கு உரைக்கின்றனர். கூடாரத்திற்கு வராத இரண்டு மூப்பர்களும் ஆவியைப் பெற்று உரைக்கின்றனர். இதனைக் கண்ட யோசுவா மோசேயிடம் கூறுகின்றார். ஆனால் மோசே அந்த இரண்டு மூப்பர்களையும் பரந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்கின்றார். நம்மையும் மதிக்கின்ற மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றது.
இரண்டாம் வாசகப் பின்னணி யாக். 5:1-6)
இப்பகுதியானது பணக்காரர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிககையாக அமைந்துள்ளது. ஏனென்றால் பணம் திரட்டூவதிலும், சேமிப்பதிலும், வணிகம் செய்ய வெளிநாடுகள் செல்வதிலும் தான் அன்றைய நாட்களில் பணக்காரர்களின் செயலாய் இருந்தது. மேலும் அவர்கள் தங்கள் வயல்களில் வேலை செய்யும் கூலியாட்களுக்கு உரிய ௯லியை உரிய நேரத்தில் கொடுக்காமலும் இருந்தனர். எந்த ஒரு வேலைக்கான கூலியையும் அந்த நாளின் மாலைக்குள் கொடுக்க வேண்டும் என்பது மோசே சட்டமாக இருந்தது. இதை கடைபிடிக்காமல் ஏழைகளுக்கு தீங்கு செய்து கொண்டிருந்ததால் யாக்கோபு பணக்காரர்களை எச்சரிக்கின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 9:38-48)
இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு பாவத்தில் புரண்டுகொண்டிருக்கும் மக்களை பாவத்திலிருந்து விடூவித்து விண்ணுலகிற்கு அவர்களை அழைத்துச் செல்ல கடவுளால் அனுப்பப்பட்ட “இரண்டாம் மோசே” என்பதை பிரதிபலிக்கின்றது. உலகத்தை மீட்க வந்த இயேசு யாருடைய உதவியும் இன்றி தம்மாலே உலகத்தை மீட்க முடியும். இருந்தாலும் பன்னிரண்டு திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கின்றார். இவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்கள். இந்த திருத்தூதர்கள் தங்களின் பணியை தொடர்ந்தாற்ற மற்றவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இன்று திருச்சபையிலே திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் பணியை தொடர்ந்தாற்ற ௮ழைக்கப்படூகின்றனர். ஆனால் சில சமயங்களில் சில குருக்கள், தூய ஆவி தங்களுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது என்று எண்ணி, குருக்கள் அல்லாத ஒருவர் இயேசுவின் பணியை ஆற்றும்போது அவர்களை விரும்புவதில்லை. இதேப்போல இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தாதர்களை சாராத ஒருவர் பேயோட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு மற்ற சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கூறுகின்றனர். இயேசுவோ அவனை கடிந்து கொள்ளாமல் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்கிறார்.
மறையுரை
இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறான். அதனால்தான் மனிதனை “ஒரு சமூகவிலங்கு” என்று சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் எல்லா- வற்றிற்கும் மந்றவர்களையே சார்ந்திருக்கின்றான். தனக்கு தேவை- யான எல்லாவற்றையும் தன்னால் நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். இத்தகைய மனிதன் வெளிபுறத்திலிருந்து வரும் துன்பங்கள், துயரங்கள் போன்றவற்றிலிருந்து தன்னை பாதுகாக்க ஏதாவது முற்படுகின்றான். இந்த குழு மதநம்பிக்கையின் அடிப்படையில் உருவான குழுவாக இருக்கலாம் அல்லது சாதியின் அடிப்படையில் உருவான ஒரு குழுவாக இருக்கலாம் அல்லது மொழியின் அடிப்படையில் உருவான ஒரு குழுவாக இருக்கலாம். இவ்வாறாக தன்னை ஒரு குழுவில் அடையாளம் கண்டு: கொண்டமனிதன் தன்னுடைய மதநம்பிக்கைதான் உயர்ந்தது மற்றவர்களுடைய மதநம்பிக்கை தாழ்ந்தது அல்லது தன்னுடைய சாதி தான் உயர்ந்தது மற்றவர்களுடைய சாதி தாழ்ந்தது அல்லது தன்னுடைய மொழிதான் உயர்ந்தது மற்றவர்களுடையது தாழ்ந்தது என்று ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்கிறான். ஆனால் இன்றைய வாசகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்ற இந்த குறுகிய வட்டத்தை உடைத்தெரிந்து பெருந்தன்மையோடும், பரந்த மனப்பான்மையோடும் "மற்றவர்களை ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பதுபோல மோசே எழுபது மூப்பர்களை கூடாரத்தை சுற்றிலும் நிறுத்திவைக்கின்றார். ஆண்டவர் தன்னுடைய ஆவியை அவர்களுக்கு அளிக்கின்றார். உடனே அவர்கள் இறைவாக்கு உரைக்கின்றனர். ஆவியைப்பெற்ற எழுபது மூப்பர்களும் ஆண்டவர் தங்களுக்கு மட்டும் தான் ஆவியை அளித்திருக்கின்றார், இறைவாக்கு தங்களால் மட்டும் தான் உரைக்க முழயும், ஆவியானவர் தங்களுக்கே சொந்தம் என்று எண்ணி ஒரு குறுகிய வட்டத்திலே இருக்கின்றார்கள். அதனால்தான் கூடாரத்திற்கு வராமலே ஆவியைப் பெற்ற எல்தாதும், மேதாதும் பாளையத்திலே இறைவாக்கு உரைப்பதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தும்படி மோசேயிடம் கூறுகின்றனர். இவ்வாநாக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்கின்றார்கள். இதேப்போல் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம் சீடர் அல்லாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதை கண்டு இயேசுவின் சீடர்கள் அவனை தடுக்க முற்படுகின்றனர், காரணம் தங்களுக்கு மட்டும் தான் பேய்களை ஓட்டும் அதிகாரத்தை: யும், நோய்களையும் பிணிகளையும் போக்கும் அதிகாரத்தையும் இயேசு அளித்திருக்கின்றார், தங்களால் மட்டும்தான் அதனை செய்ய முடியும் மற்றவர்களால் செய்யமுடியாது என்று எண்ணி இயேசுவின் சீடர்கள் ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்கின்றார்கள். அதனால் தான் சீடர் அல்லாத ஒருவர் எப்படி பேய்களை ஓட்டமுடியும்? அதுவும் இயேசுவில் பெயரால் எப்படி பேய்களை ஓட்டமுடியும்? என்று கேட்டு அவனை தடுக்க முற்படுகின்றனர். இவ்வாறு சீடர்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்களாக ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்கின்றார்கள்.
ஆனால் முதல் வாசகத்தில் பார்ப்பது போல கூடாரத்திற்கு வராமலேயே ஆவியைப் பெற்று இறைவாக்குரைத்துக் கொண்டிருந்த மேதாதுவையும், எல்தாதுவையும் மோயீசன் தடுக்கவில்லை. மாறாக ஏற்றுக்கொள்கிறார். அதேப்போல் நற்செய்தில் இயேசுகிறிஸ்து சீடர் அல்லாத ஒருவர் தன்னுடைய பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு தடுத்து நிறுத்தவில்லை மாறாக “எனக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கின்றார்” என்று கூறி பெருந்தன்மையோடு அவனை ஏற்றக் கொள்கிறார்.
நாமும் நம்முடைய வாழ்க்கையில் மூப்பர்களைப்போல் சீடர்களைப்போல் என்னுடைய மதம், என்னுடைய ஜாதி, என்னுடைய கலாச்சாரம், என்னுடைய மொழி, என்னுடைய குடும்பம் என்று ஒரு குறுகிய வட்டத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கத்தோலிக்க கிறிஸ்துவம் தான் மக்களுக்கு பல நல்ல பணிகளை செய்கிறது. மக்கள் முன்னேற பலவழிகளை காட்டுகிறது, மனிதன் ஓழுக்கமுடன் வாழ பல போதனைகளை கற்பிக்கின்றது என்று எண்ணி நமக்கு நாமே ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு வாழ்கின்றோம். அதனால் கிறிஸ்துவை பின்பற்றாதவர்கள் பல நல்ல காரியங்களை மக்களுக்கு செய்யும்போது குறிப்பாக மக்கள் முனனேற வழிகாட்டுவது, ஒழுக்கமான வாழ்வு வாழ துணைபுரிவது. நல்ல ஒரு குடும்ப வாழ்வு வாழ வழிகாட்டுவது போன்ற பணிகளை செய்யும்போது நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசித்தது போல் சிலர் தமக்கென்று மிகுந்த செல்வங்களை சேர்க்கின்றனர். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று சுயநலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை அவர்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை.
அதேப்போல் சிலர் சாதி என்ற குறுகிய வட்டத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். தன்னுடைய சாதி தான் உயர்ந்தது என்று எண்ணி தன்னுடைய மகன் அல்லது மகளுக்கு தன்னுடைய ஜாதியை சார்ந்தவரே மருமகளாக அல்லது மருமகனாக வர வேண்டும் என்று எண்ணுகின்றனர். மற்ற சாதியை சார்ந்தவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சிலர் தன்னுடைய குடும்பத்தில் மகனோ மகளோ நல்ல மதிப்பெண்கள் பெரும்போதோ அல்லது நல்ல பெயர், புகழ் கிடைக்கும் போதோ மிகுந்த மகிழ்ச்சி: யைடைகின்றனர். ஆனால் பக்கத்து வீட்டு பையனோ, பெண்ணோ அதைப் பெறும்போது அதை ஏற்றுக்கொள்வதில்லை. அதைப்போல எவ்வளவுதான் தவறு செய்தாலும் மற்றவர்கள் நம்மை ஏற்றுக்- கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நாம் ஏற்றுக்கொள்ள முற்படுவதில்லை.
இத்தகைய சூழ்நிலையில் இன்று இயேசு கிறிஸ்து நம்முடைய குறுகிய வட்டங்களை “என்னுடைய மதம்' “என்னுடைய ஜாதி் “என்னுடைய மொழி “என்னுடைய இனம் “என்னுடைய குடும்பம்” போன்றவற்றை உடைத்தெரிந்து மற்றவர்களை பெருந்தன்மையோடும் பரந்த மனப்பான்மையோடும் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடூக்கின்றார். இதற்கு நம்முடைய பலம் மட்டும் போதாது கடவுளின் பலமும் தேவைப்படுகிறது. அதற்கான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
- பொறாமை கொள்ளாமல் மற்றவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நம்மிடம் உள்ள அதிகாரத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- நமக்கு எதிராக இல்லாதவன் நம் சார்பாக இருக்கிறான்.
உண்ணுவதற்கு மன்னாவும், குடிப்பதற்கு நல்நீரும் கொடுத்துதவிய இறைவனுக்கெதிராக, பாலைவனத்திலே இஸ்ரயேலர் முறுமுறுக்கின்றனர். மோசே இறைவனிடம் முறையிடுகிறார். “இவர்கள் எல்லோரையும் நான் ஒருவனாகத் தாங்கக் கூடுமா? இது என்னாலே இயலாது ' (11 : 11 - 15) என்று மோசே கூற, இறைவன் அவருக்கு உதவியாக எழுபதின்மரைத் தேர்ந்தெடுக்கக் செய்து அவர்கள் மேல் தம் ஆவியைப் பொழிகிறார். இந்நிகழ்ச்சி வழி, அதிகாரம் ஆண்டவரிடமிருந்து வருகிறது என்பதும், ஆவியார் எல்லோருக்கும் அருளப்படுகிறார் என்பதும் புலனாகின்றது.
ஆண்டவரிடமிருந்தே அதிகாரம்
ஆண்டவர் ஒருவரே தலைவர். நாம் எல்லோரும் அவரின் பணியாளர்களே. நம் பணிகளுக்கேற்ப அவரே தம் ஆவியாரையும் அருட்கொடைகளையும் நமக்கு அளிக்கிறார். மோசேக்குத் தம் ஆவியை அளித்தவர், “அவ் ஆவியை எழுபது பேருக்கும் பிரித்துக்கொடுத்தார் (11:25) . ஆவியார் ஏதோ ஓரிருவருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள தனிச் சொத்தன்று. சிறப்பாக, திருச்சபைத் தலைவர்கள்,துறவறசபைத் தலைவர்கள் இதை அறிவது இன்றியமையாதது. “நீங்கள் யாவரும் சகோதர சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். (மத், 23:6 - 12).
அதிகாரம் ஆண்டவரிடமிருந்து வருமாயின், அவர் ஒருவரே அனைவருக்கும் தலைவராயின், அதிகாரம் கொண்டுள்ளோர் அவ்அதிகாரத்தைப் பலரோடு பிரித்துப் பகிர்ந்துகொள்வது தேவை. அதிகாரக் குவியல் ஆணவத்திற்கும் அழிவுக்குமே இட்டுச் செல்லும். நாம் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்கிறோமா? அல்லது தன்னிச்சைப்படி தான்தோன்றித் தனமான வாழ்வு வாழ்கின்றோமா?
அதிகாரம் இறைவாக்குரைக்கவும், பணிபுரியவும்
எழுபதின்மர் ஆவியைப் பெற்று “இடைவிடாது இறை வாக்குரைத்தனர் '' (11 : 25) என்பதிலிருந்து, அதிகாரம் சுய நலத்திற்காகக் கொடுக்கப் பட்டதன்று, மாறாக, பிறர் பணிக்காகத் தரப்பட்டது என்பது புலனாகின்றது. ஆவியாரைப் பெற்றுள்ள நாமும் இறைவாக்கினராக, கடவுளின் தூதுவர்களாக, கடவுளால் அனுப்பப்பட்டவர்களாக, மக்களுக்குப் பணிபுரிபவர்களாக வாழ்கிறோமா?
கூடாரத்திற்கு எழுபதின்மரோடு வராத எல்தாது, மேதாது என்ற இருவரும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர். மோசேயோ அவர்களைத் தடுக்க விரும்பவில்லை. “மக்கள் எல்லோருமே இறைவாக்கினர் ஆக ஆண்டவர் அவர்கள் மேல் தம்முடைய ஆவியைத் தந்தால் நலமாயிருக்கும்” (11:29) என்கிறார். இது ஒரு விருப்பம் மட்டுமன்று. வேண்டுதல் மட்டுமன்று, மக்கள் எல்லோருமே ஆவியாரைக் கொண்டிருக்கிறார்கள்; எனவே அவர்கள் இறைவாக்கினர்கள் என்று கூறுவதாயமைகிறது. திருமுழுக்குப் பெற்றோரை நோக்கி, “நீங்களோ, தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்... இறைவனின் புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள் பணி” ( 1 பேதுரு 2 : 9 - 10) என்று பேதுரு சொல்வது இவ் உண்மையையே விளக்குகிறது. எனவே, நம் எல்லோரையும் ஆவியானவர் தம் அருட் கொடைகளால் நிரப்புகிறார் என்பது உண்மை. அவ் அருட்கொடைகளைக்கொண்டு நாமும் இறைவாக்குரைக்கும் திருக்கூட்டமாக, மக்கள் பணிபுரியும் திருச்சபையாக ஒன்றுபட்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது உண்மை. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" . “ஆவியாரின் ஏவுதலின்படி நடங்கள்” (கலா. 5 :16). “ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள் ”' (கலா. 5:13).
ஆவியை அவ் எழுபது பேருக்கும் பிரித்துக் கொடுத்தார்.
இரண்டாம் வாசகம் யாக்: 5:1-6
பணம் இவ்வுலகிலும் சரி, மறுவுலகிலும் சரி, தீமையையே கொணரும் என்று கூறி, பணம் படைத்தோருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் யாக்கோபு. இங்குப் பணம் என்பது சொத்தை மட்டும் குறிக்காது, நமது ஏனைய உடைமைகளான பொருட்கள், “நான் என்ற முனைப்பு முதலியவற்றையும் குறிக்கும்
பணம் எதிர்காலத் தீமை
பணம் மிகுதியாக வைத்திருப்பவன் அப்பணத்தையே கடவுளாகத் தொழுவான். கடவுள்பற்றி, எதிர்காலம்பற்றி எண்ணவே அவனுக்கு நேரமிருக்காது. எனவே அவன் எதிர்காலத்திற்குத் தன்னைத் தயார் செய்ய முடியாத நிலையிலிருக்கிறான். அவன் எதிர்காலத்தில் அவல நிலையையே, நரகத் தண்டனையையே எதிர்பார்க்க முடியும் (5 : 1. எனவே “உங்களுக்கு வரப்போகும் அவல நிலையை நினைத்து அலறி அழுங்கள் (5 : 1) என்பார் யாக்கோபு. அப்பணமே எதிர்காலத்தில் அவனுக்குக் எதிர் சாட்சியாயுமிருக்கும் (5 : 3). இறுதிநாள் என்பது அவனுக்கு அழிவு நாளாகவே இருக்கும் (5 : 5). “* எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது ' (மத். 6 : 24), ஒன்றைச் சார்ந்தால் மற்றதை வெறுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கடவுளை இவ்வுலகில் வெறுத்தொதுக்கியவன் மறுவுலகில் அவரால் வெறுத்தொதுக்கப்படுவான் என்பது படிப்பினை. எனவே மறுவுலகை எண்ணி, மறுவுலகத் தண்டனையைக் கண்முன் வைத்து, பணமுடையோன், பணப்பேய்க்குத் தான் அடிமையாகிவிடாது, அப்பணத்தைத் தனக்கு அடிமையாக்கி, நல்வழிகளில் செலவிடக் கற்றுக் கொள்ளவேண்டும். ““அற்கா இயல்பிற்றுச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்” (குறள் 333). பணம் தற்காலத்தும் தீமை பணம் எதிர்காலத்தில் மட்டுமன்று, நம் வாழ்நாளிலும் நமக்குத் தீமை இழைக்கவல்லது. பணத்தின்மேல் பேராசை வளர்வது ஒரு பக்கம், தேடிச் சேர்த்த பணத்தைப் பாதுகாக்க வேண்டுமே என்ற பயம் மறுபக்கம். ஆம், பணம் இவ்வுலகில் நமக்கு ஈட்டித் தருவது அமைதியற்ற வாழ்வே. பேராசையால் தூண்டப்பட்டு, நீதியைக் கொலை செய்வான் பணக்காரன். பெரும் பணத்தை அடைய எத்தகைய கொடுமையையும் செய்யத் தயங்கான். “ஈீதிமானுக்குத் தண்டனைத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள் (5:6), ங்கள் வயலில் அறுவடை செய்தவர்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள் ' (5: 4) என்று இன்னார் மீது குற்றம் சாட்டுவார் யாக்கோபு. “பணம் பத்தும் செய்யும்" என்பதற்கிணங்க, பணக்காரன் பணம் வரும் வழிகளிலெல்லாம் சென்று அநீதியும் அக்கிரமும் செய்யப் பின்வாங்க மாட்டான். “தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடுவதுமில்லை' (திபா. 14 : 4) என்பது பணக்காரனுக்குக் கூறப்பட்ட தன்றோ? “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்ற முறையிலே தாறுமாறான வாழ்வை நடத்துவான் பணக்காரன். “கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர் (திபா. 14: 1). இத்தகையோனின் பகட்டு வாழ்வு எல்லாம் ஏமாற்றமே, வெறும் போலிக்காட்சியே. “உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச்சான்றாக இருக்கும் ' (யாக். 5:3). நீங்கள் “கொடுக்காத கூலி கூக்குரலிடு கிறது" (5 : 4) . இவ்வார்த்தைகள் நம்மைப் பார்த்துக் கூறப்பட்டதாகக் கொள்ளலாமே. “வேண்டாமை என்னும் விழுச்செல்வம் ஈண்டில்லை, ஆண்டும் அஃதொப்பது இல்” (குறள் 363) என்பதை உணர்வோம்.
( உங்கள் செல்வம் மக்கிப்போயிற்று. )
நற்தெசய்தி: மார்க் 9:38-48
இயேசுவின் படிப்பினைகள் பலவற்றை இப்பகுதியில் தொகுத்துத் தருகிறார் மாற்கு. இன்றைய வாசகம் இயேசுவின் பெயரால் பேயோட்டியோர் பற்றி, சீடர்கள்பால் கொள்ளவேண்டிய தாராள மனப்பான்மை. செயலன்பு பற்றி, அவர்களுக்கு இழைக்கப்படும் இடறல்களுக்குரிய தண்டனைபற்றிக் கூறுகிறது.
சாராதார் மேல் பற்று
இங்கு, புதுமை செய்பவன் இயேசுவின் பெயரால் செய்கிறான். ஆனால் அவன் இயேசுவைச் சாராதவன் (9:38). எனவே அவனை வெறுக்க வேண்டும் என்பதில்லை. பிறர்வீட்டு ரோசாப்பூவும் மணக்கத்தானே செய்கிறது. வினோபா, காந்தி, புத்தர் போன்றோர் “கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொள்ளவில்லை. எனவே அவர்கள் கடவுளைச் சாராதவர்கள் ஆகிவிடுவார்களா? இன்றும் நம்மிடையே வாழும் பிறமதத்தினருள் பலர், கிறிஸ்தவர்களுக்கும் மேலான முறையிலே நல்வாழ்வு வாழ்வதைக் காண்பதில்லையா? அவர்கள் தவத்தாலும் செபத்தாலும் புதுமைகளும் செய்வதில்லையா? இவர்களை நாம் தள்ளிவிடுதல், ஒதுக்கி விடுதல் ஆகாது. இவர்கள் வழியும் இறைவன் செயல் ஆற்றுகிறார் என்பது உண்மை. எங்கெல்லாம் அன்பு, நீதி, சமத்துவம் முதலியவற்றிற்காக உழைக்கிறோமா, அங்கெல்லாம் கடவுளே செயல்படுகிறார். யாரெல்லாம் அன்பு செய்கிறார்களோ, நீதிக்காக உழைக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையிலே இவர்கள் எல்லோருக்கும் அன்பு செய்வோம்.
தாராள மனப்பான்மை
அன்பின் வெளிப்பாடு கொடுத்தல். “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார் ' (யோ. 3 : 16). கொடுப்பதிலே, அளவின்றிக் கொடுப்பதில்தான் அன்பின் உயர்வு அடங்கியுள்ளது. இன்னும் கொடுப்பதற்கு இல்லையே என்று ஏங்கும் அளவுக்கு நமது அன்பு, தாராள உள்ளம் வளர வேண்டும். அதுவும், சகக் கிறிஸ்தவர்கள்பால் இத்தாராள மனப்பான்மை நம்மிடம் மிகவும் வேண்டும். ஏனெனில் நாமெல்லோரும் ஒரே கிறிஸ்துவின் சகோதரர்கள். அந்தியோக்கியத் திருச்சபை, எருசலேம் மக்கள் பஞ்சத்தால் நலிவுற்றபோது ஓடோடி வந்து உதவியது எனத் திருத்தூதர் பணியில் (11 : 29 - 30) வாசிக்கிறோம். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலும் கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவருக்குச் செய்த பணிகள் குறிப்பிடப்படுகின்றன (எபி. 10 : 33 - 34). நாமும் துன்புறும் திருச்சபை மக்களுக்கு, ஏழைக் கிறிஸ்தவர்களுக்கு, நலிந்த பங்குகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். கொடுங்கள், உங்களுக்கு மேலும் கொடுக்கப்படும். “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ” (மத். 25 : 40) என்ற இயேசுவின் வாக்கு நம்மில் உண்மைப்படுமா? “சாதலின் இன்னாதது இல்லை, இனிது அதுவும் ஈதல் இயையாக் கடை'' (குறள் 230)
இடறல் தவிர்த்தல்
நாம் குற்றம் செய்தல் தீயது; நாம் பிறரைக் குற்றம் செய்யத் தூண்டுதல் அதைவிடத் தீயது. எனவே பிறருக்கு இடறலாயிருக்கும் நமது உறுப்புக்களை நாம் வெட்டியெறிய வேண்டும் என்கிறார் இயேசு (10 : 41- 48), இக்கட்டளையை நாம் பின்பற்றினோமாயின் இன்று நம்மிடையே கையில்லாதோர், காலில்லாதோர், கண், காதில்லாதோர் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது விழுக்காடு இருக்கவேண்டும்! எனினும் இக்கட்டளையின் பொருள் இதுவன்று. பிறருக்கு இடறலாய் இருப்பதைப் போல் கொடிய பாவம் இருக்கவே முடியாது என்பதை மிகைப்படுத்திய உருவகம் வழி ஆண்டவர் விளக்குகிறார் எனலாம். பிறருக்கு நல்லவற்றைக் கற்றுக்கொடுக்க முடியாவிடினும், அவர்களை நமது தீய மாதிரிகையால் பாவங்களுக்கு இட்டுச் செல்லாத ஒரு வாழ்வை வாழ்வோமா? நமது வாழ்வு உண்மையாகவே பிறருக்கு மாதிரிகையாயமைகிறதா ? அல்லது, நம்மால் பிறர் பாவத்தில் விழ நாம் காரணமாயிருக்கிறோமா?
நமக்கு எதிராக இல்லாதவன் நம் சார்பாக இருக்கிறான்.