கடைசியானோர் முதன்மையானவர்
ஒவ்வொரு மனிதரும் உழைத்து அதன் மூலம் தங்களுடைய வாழ்வு உரிமையை அமைத்துக் கொள்ளச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால் மக்கள் தொகைப் பெருக்கமும், கணினிமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கி, குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகின்றது. பணம் படைத்தோர், திறமையுள்ளோர் மட்டும் வாழலாம் என்ற நியதி இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இயேசு இன்று சமூக நீதிக்கு அப்பாற்பட்டு, மனித நேயக் கூறுகளை உள்ளடக்கிய உண்மைகளை இன்றைய . வார்த்தை வழிபாட்டில் நமக்குத் தெரிவிக்கின்றார்.
ஒரு நிலக்கிழார் தன் தோட்டத்திலே வேலை செய்ய ஆட்களை அமர்த்துகிறார். பேசிய கூலியோ ஒரு தெனாரியம் (ஒரு டாலர்). காலையிலே வேலையில் ஈடுபடுகிறார்கள். வேலையின்றி நின்ற சிலரை பன்னிரெண்டு மணிக்கும், மதியம் மூன்று மணிக்கும், மாலை ஐந்து மணிக்குமாகப் பலரை வேலையில் அமர்த்துகிறார். மாலை ஆறு மணிக்கு கூலி கொடுக்கும்போது கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை ஒரே கூலி கொடுக்கிறார். முதலில் வந்தவர்கள் முணுமுணுக்கிறார்கள். என்ன அநியாயமான கூலி. கடைசியாக வந்தவரோடு எங்களையும் சமமாக்கிவிட்டீ ரே என்று முறையிடுகிறார்கள்! உங்களுக்கு உரிய கூலியைத் தந்துவிட்டேன். எனக்குரியதை நான் விரும்புகிறபடி கொடுக்கக் கூடாதா? நான் நல்லவனாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்று கேட்கிறார் நிலக்கிழார்.
இந்த உவமை ஏதோ இயேசுவின் கற்பனையில் உதித்த ஒன்று அல்ல. மாறாக பாலஸ்தீன் பகுதிகளில் நடந்த உண்மையைத்தான் இமேசு எடுத்துக்காட்டுகிறார். ஏனென்றால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பழங்கள் அறுவடை செய்யப்படவில்லை என்றால் பாழாய்ப் போகும். எனவே தொழிலாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் அமர்த்தப்படுவர். மாலை நேரத்திலும்கூட தொழிலாளர் பணியில் அமர்த்தப்படுவதுண்டு. இந்த பின்னணியில் தான் இன்று ஒரு உண்மையை நம்மிடம் படம் பிடித்துக் காட்ட விரும்புகிறார் இயேசு. எந்த உண்மையை நமக்குக் கற்பிக்க விரும்புகிறார்?
- எல்லாவற்றிலும் நாங்களே முதன்மையானவர்கள், பாரம்பரியம் மிக்கவர்கள், மேன்மையானவர்கள் என்று பெருமை பாராட்டி வாழ்ந்த சட்ட நிபுணர்கள், வேதபோதகர்கள், பரிசேயர்கள், மூப்பர்கள், குருக்களுக்கு இது ஒரு சாட்டையடியாகும்.
- எங்களோடுதான் இறைவன் உடன்படிக்கைச் செய்தார். நாங்கள்தான் இறைவனின் மக்கள். எங்கள் கொள்கைக்கு எதிராகச் செயல்படுபவர்கள் இறைவனுக்கு ஏற்புடையவர் அல்ல என்று பெருமையடித்த யூதர்களுக்கு இது ஒரு சாட்டையடியாகும்.
- ஏன்! கிறிஸ்தவர்களாகிய நாங்கள்தான் முதன்மையானவர்கள், நாங்கள்தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம், நாங்கள்தான் தோமையார், சவேரியார், அருளானந்தர் கிறிஸ்தவர்கள். பிற இன, மதத்தவரெல்லாம் முதன்மையானவர்கள் அல்லர் என்று உரிமை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு சாட்டையடியாகும்.
லூக்கா நற்செய்தி 15ஆம் அதிகாரத்தில் உள்ள ஊதாரி மகனின் உவமையில் காணப்படும் தந்தையின் நற்செயலுக்காக முணுமுணுத்த மூத்த மகனைப்போல் முதலில் வேலைக்கு வந்தவர்களாக, முதன்மையானவர்களாகத் தங்களை நீதிமான்களாக்கி மற்றவரைப் பாவி என்று பட்டம் கட்டி, தீர்ப்பிட்டு முணுமுணுக்கும் கூட்டத்திற்கு இது ஒரு சாட்டையடி.
நிலக்கிழார் பன்னிரெண்டு மணிக்கு, மூன்று மணிக்கு, ஏன் மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் அதே கூலியைத்தான் கொடுக்கிறார். இங்கே இறைவனின் இரக்கச் சிந்தனையைப் பார்க்கலாம். ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கும் மேலாக உணவு கொடுக்க இயேசு சொன்னார். இவர்கள் - பட்டினியால் மடிவார்களே! இவர்கள்மேல் மனம் இரங்குகிறேன். நீங்களே இவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார் (மாற். 6:37).
வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் சமமாக வேலை செய்யவில்லை. நேரத்திலும் வித்தியாசம் உண்டு. ஆனால் அனைவரும் சம கூலி பெறுகின்றனர். எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்பதைவிட எந்த மனநிலையோடு வேலை செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இயேசு விதவைப் பெண்ணின் காணிக்கையைப் பார்த்து இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கையைப் போட்டாள் (லூக். 21:3) என்றார்.
காலையில் வேலைக்கு வந்தவர் தீர்க்கமாகப் பேசி வேலையில் ஈடுபட்டனர். மற்றவர் எல்லாம் வேலை வாய்ப்புக் கிடைத்தாலே போதும். கூலி பிரச்சனை அல்ல என்ற மனநிலையில் வந்தவர்கள்.
இதில் (1) சமூக நீதியையும் தாண்டி மனித நேயத்தை மதிக்கிறார் இயேசு. இறைவனுடைய நீதி இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது பார்வையில் எல்லா இன மக்களும் அவரது பிள்ளைகள். பணமும், பதவியும், திறமையும் ஒருவனுடைய வாழ்வை நிர்ணயிக்கும் அளவுகோல்கள் அல்ல. எனவே எசாயா நூலில் என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல (எசாயா 55:8) என்கிறார் ஆண்டவர்.
(2) திருச்சபையில் ஏற்றத் தாழ்வு என்பது இல்லை. உங்களிடையே யூதன் என்றும், கிரேக்கன் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை (கலா. 3:28).
இன்றைய ஆளும் வர்க்கம், தொழிலாளர்களையே அடக்கும் விதத்தில் விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு என்றெல்லாம் வாழ்வு உரிமையைக். கேள்விக்குரியதாக்கி வருகிறது. இனி வரும் காலங்களில் உற்பத்தித் திறன் கொண்ட மனிதர் மட்டும்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை! கிறிஸ்துவின் நீதியே திருச்சபையின் நீதி .
நீதியா ? இரக்கமா?
ஒர் அருமையான தாய்! அவளுக்கு ஒரே மகன். அவன் ஒரு குறும்புக்காரச் சிறுவன்! தாய் எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மாறாகத்தான் அவன் செயல்படுவான். அந்தத் தாயும், மகனும் வாழ்ந்த குடிசைக்குப் பக்கத்திலே ஒரு பெரிய ஆறு! அந்த ஆற்றிலே முதலைகள் ஏராளம். அந்த ஆற்றில் தனியாக அந்தச் சிறுவன் குளிக்க விரும்பினான். தாய் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அச்சிறுவன் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தான். வீட்லே வேலை செய்து கொண்டிருந்த தாயின் கண்கள் இரண்டில் ஒன்று வேலை மீதும், மற்றொன்று மகன் மீதும் பதிந்திருந்தன!
திடீரென முதலை ஒன்று சிறுவனின் கால்களைப் பிழத்துக் கொண்டது! ஐயோ! அம்மா என்னைக் காப்பாற்றுங்கள். இது ஊதாரிப் பிள்ளையின் கூக்குரல்! நீதியின் படி அவன் தண்டனைக்குரியவன்! ஆனால் தாயோ ஓடிப்போய் அவனது கைகளைப் பிழத்துக் கொண்டாள். முதலைக்கும், தாய்க்குமிடையே பெரும் போராட்டம்! அபயக்குரல் கொடுத்தாள். அதைக்கேட்டு ஓடி வந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியால் முதலையைச் சுட்டார்! அச்சிறுவனை விட்டுவிட்டு அந்த முதலை தண்ணீருக்குள் மறைந்தது. எப்பழயோ சிறுவன் காப்பாற்றப்பட்டான்.
இந்தத் தாயைப் போன்றவர்தான் கடவுள். இல்லை! இல்லை! இவளை விட, ஏன் எல்லாத் தாய்களையும் விட அதிகமாக நம்மீது இரக்கமழையைப் பொழிபவர் நம் கடவுள் [எசா 49:15-16). இந்த உண்மையைத்தான் இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துச் சொல்கின்றது, நீதியும், இரக்கமும் ஒன்றுக் கொன்று முரணானவை அல்ல! மாறாக நீதியை விட இரக்கம் ஒரு படி உயர்ந்தது. பழைய ஏற்பாட்டிலே நீதியின்படி தண்டிக்கப்பட வேண்டிய நினிவே மக்கள், இரக்கத்தின்படி மன்னிக்கப்படுகின்றனர் என்பதை நாம் காண்கின்றோம் (யோனா 3:1-10]. புதிய ஏற்பாட்டிலே நீதியின்படி தண்டிக்கப்படவேண்டிய பாவத்தில் பிடிபட்ட பெண், இரக்கத்தின்படி மன்னிக்கப்படுவதைப் பார்க்கின்றோம் (யோவா 81-11).
இதனால்தான் இன்றைய முதல் வாசகத்திலே எசாயா மன்னிப்பதில் கடவுள் தாராள மனத்தினர் [எசா 55:7ஆ) என்கின்றார். இன்றைய நற்செய்தியிலே வரும் நிலக்கிழார் போன்றவர் நம் இறைவன் ; அவர் மிகவும் தாராளமாக தனது அருள் கொடைகளை அவரது மக்களுக்கு வாரி வழங்குபவர். இப்படிப்பட்ட கடவுளின் அற்புதப் புனிதர்களில் ஒருவராக விளங்கியவர் புனித பவுலடிகளார். அவர் இன்றைய இரண்டாம் வாசகத்தில் விரைவாக இறந்து இயேசுவோடு வாழ ஆசைப்பட்டாலும் அந்த ஆசையை அவரது மக்களுக்காகத் தள்ளிவைக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார்.
மக்களின் நலனே என் நலன் என்று நாம் ஒவ்வொருவரும் வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
மன்னர் எதுக்கு மான் மேல ஏறி வர்றாரு? எல்லாருக்கும் அவரு நீதிமான்னு தெரியணுமாம், அதுக்குத்தான்.
எல்லாரும் நம்மை நீதிமான் என்று வாழ்த்த வேண்டூம் என்று விரும்புகின்றோம். அது போலவே நாம் எல்லாராலும் இரக்கமுடையவர் என்றும் போற்றப்பட ஆசைப்படுவோமாக.
மேலும் அறிவோம் :
புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்பரலின் நல்ல பிற (குறள் : 213)
பொருள் : பிறருக்கு உதவும் ஒப்பற்ற பண்பாகிய ஒப்புரவுக்கு நிகரான பிறிதொன்றை வானகத்திலும் வையகத்திலும் காண்பது அரிதாகும்.
கணக்குக்கும் காதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? இருபத்து ஒன்றையும் பதினெட்டையும் கூட்டினால் அது கணககு இருபத்து ஒன்று பதினெட்டைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல். அதாவது 21 வயது ஆண் 18 வயது பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல், தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உதறித் தள்ளிவிட்டு ஒரு பையனை நம்பி அவனோடு ஒரு பெண் ஓடுவது ஏன்? காதலுக்குக் கண்ணில்லை. மற்றவர்கள் கணிப்பில் காதலர்கள் மடையர்கள். காதலர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் செயல் ஒரு சாதனை.
அன்பே உருவான கடவுளின் காதலுக்கும் கண்ணும் இல்லை, கணக்கும் இல்லை. காதலர்கள் வழி தனிவழி. அவ்வாறே கடவுளின் வழியும் தனிவழி. அவரது வழியும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டவை என்று கடவுளே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" (எசாயா 55:3)
கடவுளின் வழிகளும் பண்புகளும் என்ன? என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர் ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தான் உண்டாக்கிய அனைததின் மீதும் இரக்கம் காட்டுபவர்" (திப 158:9).
கடவுள் நீதியுள்ளவர். ஆனால் அவர் தமது நீதியை இரக்கத்தின் மூலம் காட்டுகிறார். இந்த அடிப்படையான இறையியல் உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார் உவமை வாயிலாக வெளிப்படுத்துகிறார் (மத் 20:1-6) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி மாலை 5 முணி முதல் 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி கனக்கு அடிப்படையில் அது அப்பட்டமான அநீதி ஆனால் காதல் அடிப்படையில் இது முற்றிலும் சரியானது.
"திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார்" உவமையில் பொதிந்துள்ள இறையியல் உண்மையை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்கள் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அவர்களுக்கு மீட்பளிக்கிறார் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டும் வேலை செய்தவர்கள் பிற இனத்தவர்கள் அவர்களுக்கும் கடவுள் மீட்பளிக்கிறார். இதில் அநீதி ஒன்றுமில்லை.
ஏனெனில் மீட்பு என்பது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியல்ல மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்கும் இலவசக் கொடை அதை எவரும் தமது சொந்த முயற்சியால் பெற இயலாது.அனைவர்க்கும் இலவசமாக மீட்பை வழங்குவதன் மூலம் கடவுள தமது நீதியை வெளிப்படுத்துகிறார். கடவுள் நீதிவேறு மனித நீதிவேறு. மனித நீதி சட்டத்தை அடிப்படையாகக் கொணடது. கடவுள் நீதி இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பரிசேயரின் ஒழுக்கத்தைவிட அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டிய கிறிஸ்துவின் சீடர்கள் ஒழுக்கம் உயர்ந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என்று கிறிஸ்து தெளிவுபடக் கூறியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது (மத் 5:20) கடவுளிடம் ஒருதலைச் சார்பு கிடையாது அவர் எல்லார்க்கும் தந்தை அனைவரும் மீட்படைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் (திமொ 2:1). கடவுள் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் தமது மழையையும் கதிரவனையும் கொடுக்கிறார் (மத் 5:45) கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடப்போர் மீட்படைவது உறுதி (திப 10:34). கடவுளின் இத்தகைய உலகளாவிய மீட்பின் திட்டத்தைக் கண்டு நாம் பொறாமைப்படக்கூடாது எல்லார்க்கும் சமமான கூலி கொடுத்த நிலக்கிழாரிடம் முணுமுணுத்த வேலையாள்களிடம் நிலக்கிழார்: "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" (மத் 20:15) என்று கேட்கிறார். ஒருவருடைய பெரிய பகைவன் பொறாமை, அவருக்கு வேறு பகைவர்கள் இல்லையென்றாலும் அவரை அழிப்பதற்கு பொறாமை ஒன்றே போதும் என்கிறார் வள்ளுவர்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது (குறள் 65)
நமக்குக் கிடைக்கும் நன்மை பிறருக்கும் கிடைப்பதைக் கண்டு நாம் மகிழ வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் "வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நாமும் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்" (லூக் 8:36)
ஒரு வீட்டிலே மனைவி கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அவருடைய கணவர் அவருக்கும், அவரது மாமியாருக்கும் மற்றும் அவ்வீட்டு வேலைக்காரிக்கும் ஒரே விலையில் பட்டுப்புடவை வாங்கி விட்டார். ஆத்திரம் அடைந்த மனைவி கணவரிடம், "என்னையும் வேலைக்காரியையும் ஒரே மாதிரி நடத்தலாமா?" என்று கேட்டு கணவரைச் சரமாரியாகத் திட்டினார்.
தனக்குக் கிடைத்த புடவை வேலைக்காரிக்கும் கிடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு வீட்டில் ஒருநாள் வேலைக்காரி வேலைக்கு வரவில்லை. மனைவி கணவரிடம், "என்னங்க! வேலைக்காரி வரல எனக்குக் கையே ஒடிஞ்சுபோச்சு" என்றார். ஆனால் கணவர் மனைவியிடம், "உனக்காவது கை ஒடிஞ்சுபோச்சு எனக்கு மனசே ஒடிஞ்சுபோச்சு" என்றார். இதைக் கேட்ட மனைவி தன் தலையில் இடி விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனார். வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது ஒரு முறைகேடான செயல்: கண்டனத்திற்கு உரியது. ஆனால் வேலைக்காரியையும் மரியாதையுடன் நடத்துவது பாராட்டுதற்குரியது. பிறப்பின் அடிப்படையிலும் மீட்பின் அடிப்படையிலும் அனைவரும் சமம்.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
அவ்வாறே மீட்பும் ஒக்கும் எல்லா மனிதர்க்கும். (குறள் 92 )
"இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28).
நீதி பற்றி இறைவெளிப்பாடு
கடவுள் மனிதனைத் தம் உருவிலும் தம் சாயலிலும் படைத்தார். (தொ.நூ. 1:26). கடவுளின் சாயல் என்றால் ... ? அவருடைய இயல்பில், பண்பில், உறவு நிலையில் நன்மைத்தனத்தில் பங்குபெற மனிதனை அழைக்கிறார் என்று பொருள். ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?
கடவுளின் எண்ணங்களையும் வழிமுறைகளையும் தனதாக்குவதற்குப் பதிலாகத் தன் எண்ணங்களையும் வழிமுறைகளையும் கடவுளுடையதாக்க முயல்கிறான். இதுதானே சிலை வழிபாடு!
அதனால்தான் இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் மிக அழுத்தமாகச் சொல்கிறார்: “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல... மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பது போல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும் உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன”” (எசா. 95:8,9). அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி.
“ எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” (மத். 20:15). கடவுளின் பதிலாள் போல் உவமையின் தலைவன் நிலக்கிழார் கட்ட கேள்வி நெஞ்சை உலுக்குகிறது.
உழைப்பை மையப்படுத்தி அல்ல, உழைக்கின்ற மனிதரை மமயப்படுத்திய, அவர்தம் மாண்பினை மையப்படுத்திய, அவர்தம் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்திய செயல்பாடு. சுருங்கச் சொல்லின் மரபை மீறி மனிதரைத் தேடி, கூலி கொடுத்துவருகிறார். அன்பும் (இரக்கமும் நீதிநியாயங்களுக்குக் கட்டுப்படுவதில்லை.)
பிற்பகலில் அல்லது மாலையில் வந்தவர்கள் எல்லாரும் சோம்பேறிகளா? ஊர் சுற்றிகளா? அல்ல. வேலை வாய்ப்புத் தேடிக் காத்திருப்பவர்கள். வேலை இல்லையே என்று அங்கலாய்ப்பவர்கள். “எங்களை எவரும். வேலைக்கு அமர்த்தவில்லை” (மத். 20:7). வேலையின்மை இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. அது மட்டுமன்று, காலை ஆறு மணிக்கே திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றவர்கள் கூட எந்த அளவுக்கு நேர்மையோடு உழைத்தார்களோ?
நமது தகுதிக்கு ஏற்பக் கடவுள் செயல்படத் தொடங்கினால் நமது நிலை என்னாகும்? நீதிக்கு ஏற்ப அன்று, இரக்கத்திற்கு ஏற்ப இயங்குபவர் நம் கடவுள். மீட்பு என்பதே நமது அறச்செயல்களின் பொருட்டு அன்று, இறைவனின் அருள் வளத்திற்கு ஏற்ப நாம் பெறுவது. “நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களின் முன்னிட்டு அன்று, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்” (தீ.து. 3:4-5) (மேலும் காண்க எபேசி. 2:4-8)
எனக்கு ஒரு கண் போனாலும் சரி, அடுத்தவனுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்று நினைத்துப் பழக்கப்பட்டவர்கள் நாம். “விரும்புவதைக் கேள். எதுவானாலும் தருகிறேன். ஆனால் உனக்குக் கொடுப்பதை இருமடங்காக உன் அண்டை வீட்டுக்காரனுக்குக் கொடுப்பேன்” என்று கடவுள் வாக்களித்தபோது, “எனக்கு ஒரு வீடு வேண்டும் என்றால் பக்கத்து வீட்டக்காரனுக்கு இரண்டு விடல்லவா கிடைக்கும் அது எப்படி” என்று நினைத்த ஒருவன், “எனக்கு ஒரு கண்ணைக் குருடாக்கும்” என்று வேண்டிக். கொண்டானாம்!
நமக்குக் கிடைப்பதை நாம்தாம் உறுதி செய்கிறோம். ஆக எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.
ஒருவருக்கு வீடுகளில் ஒடு மாற்றுகிற வேலை. அது தொடர்பாக போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒரு மரத்தடியில் சாமி சிலை ஒன்று “இதோ பாரப்பா, இங்கே வா” என்று அழைத்தது.நடுங்கிக் கொண்டே போனபோது, “பயப்படாதே, உன் காலடியில் சிறிது தோண்டிப்பார்'” என்றது சிலை. தோண்டியதும் அவனுக்குத் தலைகால் புரியவில்லை. துவரம்பருப்புப்போல ஒரு பானை நிறைய தங்க மணிகள். பானையில் உள்ளதையெல்லாம் ஒரு துண்டில் கொட்டி மூட்டை கட்டினான். “பானையிலும் நாலு தங்க மணிகளையாவது போட்டுவை” என்று சிலை சொன்னதைக் கேட்டு எண்ணி நான்கு தங்கமணிகளை மட்டும் பானையில் போட்டுப் புதைத்துவிட்டு, தங்கமணி மூட்டையோடு புறப்பட்டுவிட்டான்.
வேலை செய்யச் சென்ற இடத்தில் வீட்டு உத்திரத்தில் மூட்டையைக் கட்டித் தொங்கப்போட்டுவிட்டு ஓடு மாற்றத் தொடங்கினான். அந்த வீட்டுக்கார அம்மா சமையல் செய்யத் தொடங்கியபோது துவரம் பருப்பு இல்லாததை உணர்ந்தாள். கடைக்குப் புறப்பட்டபோது மூட்டை கண்ணில் பட, “இது என்னப்பா?” என்று கேட்டாள். “அதுவா, துவரம் பருப்பு வீட்டுக்காக வாங்கி வைத்திருக்கிறேன்” என்றான். “சரி, அவசரத்துக்கு கொஞ்சம் எடுத்துக்கிட்டு அப்புறம் வாங்கிக் கொடுத்திடலாம்'” என்று நினைத்து மூட்டையைத் திறந்தபோது “அவ்வளவும் தங்கம்' என்று கண்டதும் அதை முழுதும் எடுத்துக் கொண்டு, துவரம் பருப்பு வாங்கி அதில் வைத்து விட்டாள்.
வேலை முடிந்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி. வீட்டுக்காரியிடம் “இதில் தங்கம் இருந்ததே' என்று கேட்டான். “என்ன கனவு காணுறியா?”” என்று கிண்டல் செய்ய, தலையில் கையை (வைத்துக் கொண்டு, சிலையிடம் சென்று முறையிட்டான். உடனே சிலை பேசியதாம். “நான் ஒன்றும் மோசம் பண்ணவில்லை. அந்தத் தங்கம் போக வேண்டியது அந்த அம்மாவிடம்தான். அதைக் கொண்டு போக வேறு ஆள் கிடைக்கல. உன் தலையில் ஏத்தி அனுப்பிவிட்டேன். கவலைப் படாதே. உனக்குரியது அந்தப் பானையில் இருக்கு.” இவன் தன்னையே நொந்து கொண்டான். “தரித்திரப்புத்தி ... எனக்கு. அப்பவே கொஞ்சம் நிறைய அள்ளிப் பானையில் போட்டிருக்கக்கூடாதா?” யாருக்கு எது கிடைக்கணுமோ அதுதானே கிடைக்கும்!
முதலில் வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்குக் கூலி குறைந்துவிட்டது என்று முறையிடவில்லை. பின்னால் வந்தவர்களோடு எப்படித் தங்களைச் சமப்படுத்தலாம் என்பதுதான் அவர்களின் முறையீடு. மனிதனுக்கு மனிதன் கொண்டிருக்கும் பொறாமை, பகைமை, போட்டி மனம், காழ்ப்புணர்ச்சி, தன்னலம் ஆகியவை இதன் மூலம் வெளிப்படுகின்றன. மனித உறவைப் பாழ்படுத்தும் இத்திய பண்புகள் இறைவனுக்கு முன்பாகவும் எதிராகவும் முணுமுணுக்கச் செய்கின்றன. (மத். 20:11-12). ஊதாரி மைந்தன் உவமையில் மூத்தமகன் தந்தையிடம் முறையிடுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம் (லூக். 15:29-30). இப்படி முணுமுணுப்பவர்களைக் கூட “நண்பா” என்று தலைவன் அழைப்பது அவரது தாராளமனத்தை வியக்க வைக்கிறது.
நீதியும் இரக்கமும் கலந்த சமத்துவச் சமுதாயம் வேண்டும். இதுமட்டும்தானா உவமையின் கருத்து? நற்செய்தி என்பது வெறும் சமூகவியல் நூலன்று. இறைவெளிப்பாட்டை விளக்கும் நூல். இறைவெளிப்பாட்டின் எந்த அம்சத்தை? இதற்கு இயேசுவின் காலத்தில் நிலவிய யூதர்களின் கருத்தை அறிய வேண்டும்.
யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுளின் செல்லப்பிள்ளைகள். எனவே மேம்பட்டவர்கள். இறையாட்சியில் முதலிடமும் முன்னுரிமையும் பெற வேண்டியவர்கள். பிற இனத்தாருக்கு இணையாக தங்களைக் கருதக்கூடாது என்ற கணிப்பில் வாழ்ந்தவர்கள். எனவே தங்களுக்கு மீட்பு ஒரு வெள்ளிக் காசாகக் கொடுக்கப்பட்டால், பிறருக்கு அதைவிடக் குறைவாகக் கொடுக்கப்பட வேண்டும். பிறருக்கு ஒரு வெள்ளிக்காசு என்றால் தங்களுக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவர்கள். ஆனால், கடவுளின் எண்ணப்படி கடவுளின் அரசில் அனைவரும் சமமே! பூதர்களாயினும் கிரேக்கர்களாயினும் ஆண் ஆயினும் பெண் ஆயினும் அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும் அனைவரும் சமமே!
ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்றவாறு பணி செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்றவாறு தரப்பட வேண்டும். இதுவே நீதியின் தத்துவம் பற்றிய இறை வெளிப்பாடு.
கடவுள், கடவுளாகவே இருக்கட்டும்
சென்னை ‘சென்ட்ரல்’ இரயில் நிலையத்தில் ஒருநாள், பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு, நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. அவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கிவிட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின், வரிசையில் நின்றுகொண்டிருந்த பலர், அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்து சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள், அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.
வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் சென்றதும், என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொண்டேன்? என்னுடைய வரிசையில் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா? நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். இல்லையா?
‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம், நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள். என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லியிருக்கும் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதை உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் வரலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது. இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை ஒரே ஒரு நற்செய்தியில், அதாவது மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது, அவர்கள் கணிப்பு.
தன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கப்படவேண்டும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார்.
மோசே வழங்கிய இந்த பரிவுமிக்க சட்டத்தைப்பற்றி (இணைச்சட்டம் 24: 14-15) சிந்திக்கும்போது, இன்று நிகழும் பல அவலங்கள் மனதை காயப்படுத்துகின்றன. தங்கள் உழைப்புக்குக் கிடைக்கவேண்டிய கூலி கிடைக்காமல், பசியும், பட்டினியுமாக படுக்கச் செல்லும் பல குடும்பங்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். வறியோரின் வயிற்றில் அடிப்பவர்கள், வளமாக வாழ்ந்துவிட முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று செபிப்போம். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:
மத்தேயு நற்செய்தி 20: 8-16
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.
இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சிகரமான ‘புரட்டிப்போடுதல்’ நிகழ்கின்றது. பாரம்பரியம் என்ற பெயரில், சமுதாயம் பின்பற்றிவந்த தவறான வழிமுறைகளைப் புரட்டிப்போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கச் சொல்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும், அவர்களது ஏமாற்றமும், கோபமும் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும், நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால். இவற்றை நாமும் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறோம் என்பது உண்மைதானே!
இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவற்றைப் பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.
இந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும், நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும், மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில், அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை, கவனமாகக் கேட்போம்.
‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’
"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்க விடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணநலன்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.
கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்துவிடுகிறோம். அந்த நேரத்தில், கடவுள், தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது, அதை புரிந்துகொள்ளமுடியாமல், தடுமாறுகிறோம். இறுதியில் வந்தவர்களுக்கு, நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளை இறைவன் செய்யும்போது, நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கோபம் கொள்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
கடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.
"இறைவனின் தாராளம் - பொறாமையைக் கடக்கும் அன்பு"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 20:1-16) திராட்சைத் தோட்டத் தொழிலாளர் உவமை வழியாக, நாம் எதிர்பார்க்கும் கூலியை விட இறைவன் தரும் "அருள்" எவ்வளவு பெரியது என்பதை இயேசு விளக்குகிறார்.
1. நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் (God Beyond Our Thoughts)
முதல் வாசகத்தில் (ஏசாயா 55:6-9) ஆண்டவர் கூறுகிறார்: "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல." * சிந்தனை: நாம் பெரும்பாலும் "வேலைக்கு ஏற்ற கூலி" என்ற கணக்கீட்டில் வாழ்கிறோம். ஆனால் இறைவனோ, தகுதியைப் பார்க்காமல் "தேவையைப்" பார்த்து வாரி வழங்குபவர். அவர் நீதிபதி மட்டுமல்ல, அவர் ஒரு தாராளமான தந்தை.
2. கடைசி நிலையும் முதன்மை நிலையும் (The Last and the First)
காலையில் வந்தவர்களுக்கும், மாலையில் வந்தவர்களுக்கும் சரிசமமான கூலி கொடுக்கப்பட்டபோது, முதலில் வந்தவர்கள் முணுமுணுக்கிறார்கள்.
• விளக்கம்: முதலில் வந்தவர்களின் பிரச்சனை அவர்களுக்குக் கிடைத்த கூலி அல்ல, மற்றவர்களுக்குக் கிடைத்த "அன்பு". மற்றவர்கள் நலம் பெறுவதைக் கண்டு நாம் ஏன் பொறாமைப்பட வேண்டும்? இறைவனின் அருள் என்பது ஒரு போட்டி அல்ல, அது ஒரு கொடை.
• பாடம்: திருச்சபையில் காலம் காலமாக இருப்பவர்களும், இப்போது புதிதாக மனம் மாறி வந்தவர்களும் இறைவனின் பார்வையில் சமமானவர்களே.
3. வாழ்வது கிறிஸ்துவுக்காக (To Live is Christ)
இரண்டாம் வாசகத்தில் (பிலிப்பியர் 1:20-27) புனித பவுல் ஒரு அற்புதமான நிலையை வெளிப்படுத்துகிறார்: "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு லாபமே."
• பயன்பாடு: நாம் எத்தனை மணி நேரம் உழைக்கிறோம் என்பது முக்கியமல்ல, எந்த நோக்கத்திற்காக (கிறிஸ்துவுக்காக) உழைக்கிறோம் என்பதே முக்கியம்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நம் வாழ்வைச் செம்மைப்படுத்த சில குறிப்புகள்:
• முணுமுணுப்பதைத் தவிர்த்தல்: மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைக்கும்போது, "எனக்கு ஏன் கிடைக்கவில்லை?" என்று ஒப்பிடாதீர்கள். உங்கள் வாழ்வின் ஆசீர்வாதங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
• கடைசி நேர மனமாற்றம்: உங்கள் குடும்பத்திலோ அல்லது பங்கலோ விலகி இருப்பவர்களைக் கண்டால், அவர்களைத் தள்ளி வைக்காதீர்கள். அவர்கள் "கடைசி நேரத்தில்" வந்தாலும் இறைவன் அவர்களை அன்போடு ஏற்பார் என்பதை உணர்ந்து, அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.
• நேர்மையான உழைப்பு: நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் (பங்குப் பணி அல்லது அலுவலகப் பணி) கூலிக்காக மட்டும் செய்யாமல், கிறிஸ்துவுக்காகச் செய்யும் பணியாகச் செய்யுங்கள்.
• இறைவனைத் தேடுங்கள்: ஏசாயா கூறுவது போல, "ஆண்டவரைக் காணக்கூடிய நேரத்தில் அவரைத் தேடுங்கள்." செபத்திற்கும் திருப்பலிக்கும் உரிய நேரத்தை ஒதுக்குங்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"கடவுள் கணக்குப் பார்ப்பவர் அல்ல, அவர் கனிவு காட்டுபவர். நாம் செய்த வேலைக்காக அவர் நமக்குக் கூலி தரவில்லை; அவர் நம்மை நேசிப்பதால்தான் தம்மையே நமக்குத் தருகிறார். பிறருடைய வளர்ச்சியில் மகிழ்ச்சி கொள்வதே உண்மையான கிறிஸ்தவப் பண்பு."
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசாயா 55:6-9)
"என்னுடைய எண்ணங்கள் உங்களுடைய எண்ணங்கள் அல்ல”இந்த வாசக பகுதியானது இரண்டாம் எசாயாவின் ஆறுதலின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த பகுதி இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கிறது. புதிய எருசலேமைப் பற்றி 2-ஆம் எசாயா போதிக்கிறார். புற இனத்தாரின் அரசனின் ஆணையின் படி மக்கள் எருசலேமிற்கு போவார்கள். எனவே மக்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தைக்கு செவி மடுக்க வேண்டும்.
கடவுளுடைய ஞானத்தையும், நோக்கத்தையும் மனித புத்தியை கொண்டு வரையறுக்க முடியாது. எனவே நாடு கடத்தப்பட்ட மக்கள் இறைவனின் தாராள மனப்பான்மையை குறித்து கேள்வி கேட்கக் கூடாது. கடவுள் யாருக்கு என்ன ஆசீர்வாதம் கொடுக்க வேண்டுமோ அதை அவர்தான் முடிவு எடுப்பார். எனவே "கடவுளின் வழிகள் மனித புத்தியால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று". இதைத் தான் சங்கீத ஆசிரியர் இன்றைய பதிலுரைப்பாடலில் வலியுறுத்துகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1தெச. 1:5-10)
தூய பவுல் பிலிப்பிய சமூக திருச்சபையுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். எனவே அச்சமூக கடிதத்தில் கிறிஸ்துவில் மகிழ்ச்சியுற பவுலடிகளார் வலிறுத்துகிறார். தான் எவ்வாறு கிறிஸ்துவை பின்பற்றினாரோ, அதே போல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின் நற்செய்தியை பரப்ப முன்வர வேண்டும். கிறிஸ்துவோடு ஒன்றித்து இருப்பதே நமது வாழ்வின் சட்டமாகக் கொள்ள வேண்டும். தனது நற்செய்தி பரப்புதலின் வழியாக ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழ முடியும். எந்த ஒரு செயலும் இந்த கிறிஸ்துவுடன் கூடிய ஒன்றிப்பை பாதிக்க கூடாது என்று வலிறுத்துகிறார். எனவே தான் பவுல் "வாழ்வு என்பது கிறிஸ்துவே' என்று வலியுறுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 22:34-40)
எருசலேமில் கிறிஸ்துவின் பணியானது விரைந்து வருகிறது. கிறிஸ்துவின் பணியானது அவரை சாவிற்கு இட்டு செல்ல கூடியது. இயேசுவின் சீடர்கள் அவருடைய இறையரசை பற்றி தவறுதலான புரிதலை கொண்டுள்ளார்கள். சீடர்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள இஸ்ரயேல் மக்களை போன்றவர்கள். திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமையானது, இறையரசில் புற இனத்தாரின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. யூதர்கள் முதலில் கடவுளின் அழைப்புக்கு பதில் கொடுத்தாலும், இறுதி நேரத்தில் கடவுளின் அழைப்பு அனைவருக்கும் உரியது என்பதையும், எத்தகைய மனநிலையில் அவர்கள் நுழைகிறார்கள் என்பதையும் இந்த உவமை மையப்படுத்துகிறது. எனவே ஏன் அனைவருக்கும் சமமான ஊதியம் என்ற கேள்வி எழலாம். ஏனென்றால் கடவுளின் ஞானத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரது இறையரசு ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிற கொடை. எனவே கடவுளின் தாராள மனப்பான்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் வலியுறுத்துகிறது.
மறையுரை
"கடவுளின் தாராள மனத்தை யாராலும் புரிய முடியாது"
இன்று வாசித்த திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமையை நான் பங்கில் பீட சிறுவனாக இருந்த போது எனது பங்குத்தந்தை எங்களிடம் விளக்கி நிலக்கிழார் செய்தது சரியா? தவறா? என்ற ஒரு கேள்வியை கேட்டார். பல சிறுவர்கள் தங்களுக்கு உதித்த கருத்துகளைக் கூறினர். அதில் ஒருவன், “சாமி, இரவு பகலா கஷ்டப்பட்டு படித்த எனக்கும் 100 மார்க்... கஷ்டப்படாமல் நேற்று வரை ஊர் சுத்திக் கொண்டு திரிந்த இவனுக்கும் 100 மார்க்.. இது எந்த விதத்தில் நியாயம். நியாயமுனு உங்களுக்கு பட்டதுனா இனிமேல் பரிச்சையே வைக்காதீங்க". இன்னொரு பையன், "சாமி வருடம் முழுவதும் திருப்பலிக்கு வந்த என்னையும் டூர் கூட்டிட்டு போறீங்க. போனவாரம் மட்டும் திருப்பலிக்கு வந்த இவனையும் டூர் கூட்டிட்டு போறீங்க. இது எந்த விதத்தில் நியாயம்?"
எனது நண்பர்கள் புரிந்து கொண்ட மாதிரியே, நாம் வாசித்த திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமையை ஒரு ஆன்மீக
வட்டத்திற்குள் மட்டும் முடக்கி விடக்கூடாது. உலக புகழ்பெற்ற பலரது எண்ணங்களையும், எழுத்துக்களையும் கிளறிவிட்டுள்ளது இந்த வாசகம். சம நிலை பொருளாதாரக் கோட்பாட்டைக் கொண்டிருக்கும் கம்யூனிச சித்தாந்தத்தை தோற்றுவித்தவராக கார்ல் மார்க்ஸை தோற்றுவித்தது இந்த வாசகம். இவ்வாசகத்தை விசாலமான கண்ணோட்டத்துடன் உற்றுப்பார்க்க இவ்வாசகம் சொல்லப்பட்ட வரலாற்று பின்னணியை புறட்டிப்பார்ப்பது சாலச்சிறந்தது. இயேசு கூறிய இவ்வுவமையில் மண் வாசைன நிரம்பியுள்ளது. கலிலேய மண்ணின் பெரும் பகுதி விவசாயப்பகுதி. அதிலும் மூன்றில் ஒரு பகுதி திராட்சை விளையும் பகுதியாக இருந்தது. சாதாரண அடித்தட்டு குடிமகனும் தனது கருத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனக் கருதி தான் வாழும் புறச் சூழலைக் கொண்டு இவ்வுவமையை சொல்கிறார். நிலக்கிழார் ஒரு நாளைக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாட்களை தனது திராட்சை தோட்டத்திற்கு அனுப்பினார்.
ஒரு தெனாரியம் என்பது நமது நாட்டு ரூபாய் மதிப்பான 70 அல்லது 80 ரூபாய் இருக்கும். நம் மண்ணைப் பொறுத்த மட்டிலே ஒரு நிலக்கிழார் தனது தோட்டத்தில் வேலை செய்ய வேலையாட்-களின் வீட்டிற்கே சென்று அழைப்பது வழக்கம். ஆனால் பாலஸ்தீன மண்ணைப் பொறுத்த மட்டில் வேலைக்கு செல்ல விரும்பும் வேலையாட்கள் சந்தை வெளியில் ஒன்றாகக் கூடுவர். அங்கே தங்களுக்கு தேவையான வேலையாட்களை தேர்வு செய்யும் பழக்கத்தை நிலக்கிழார்கள் பெற்றிருந்தனர். இச்சூழலின் பின்னணியில்தான் நிலக்கிழார் விடியற்காலை, 9 மணி, 12 மணி, 3 மணி, 5 மணி என சந்தை வெளிக்கே சென்று வேலையாட்களை தனது திராட்சை தோட்டத்திற்கு அனுப்புகிறார். இங்கே இரண்டு கருத்துகளை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
1. தோட்டத்தின் தேவையை கருதி நிலக்கிழார் வேலையாட்களை அமர்த்தியிருந்தார் என்றால் காலையிலே மொத்த எண்ணிக்கையிலே, ஒரே நேரத்திலே வேலைக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அந்த நிலக்கிழார் தோட்டத்தின் தேவையை விட ஆட்களின் நலனை கருத்தில் கொண்டார்.
2. வீட்டிலோ அல்லது தெருக்களிலோ சோம்பேறியாக வீண் பேச்சு பேசி கொண்டிருந்தவர்களையும் தமது தோட்டத்திற்கு வேலை செய்ய அந்நிலக்கிழார் அனுப்பவில்லை. மாறாக எமக்கு வேலை தருவார் என சந்தை வெளியில் காத்துக் கொண்டிருந்தவர்களை மட்டுமே வேலைக்கு அனுப்புகிறார்.
மாலை 5 மணிக்கு அனுப்பினால் அவர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது அந்நிலக்கிழார் அறியாத ஒன்று அல்ல. ஆனாலும் அவர்களின் ஆர்வம், பொறுமை, முயற்சி இவற்றை அடிப்படையாக வைத்தும் வேலை தராவிட்டால் அவர்களும் அவர்களின் குடும்பங்களும் பட்டினி கிடக்குமோ என்பதை மனதில் இருத்தியே வேலை தருகிறார். இதிலிருந்து நிலக்கிழாரின் தாராள மனப்பான்மையும் இரக்க குணமும் நமக்கு விளங்குகிறது. இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள கூடிய பாடங்கள்:
1. நிலக்கிழாராகிய வானகதந்தை தாராள மனதுள்ளவராகவும், இரக்கமுடையவராகவும் உள்ளார்.
2. இறைவனின் ஞானத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
3. இறைவன் மனிதனின் நலனில் கருத்தாய் இருக்கிறார்.
4. இறைவன் என்னையும் காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற மக்களை இறைவன் நிச்சயமாக காப்பாற்றுவார்.
இன்றைய முதல் வாசகம் இறைவனது தாராள மனப்பான்மையை தெளிவாக விளக்குகிறது. மேலும் அவருடைய எண்ணங்கள் மனிதருடைய எண்ணங்களை விட மேலானது என்றும் குறிப்பிடுகிறது. யாக்கோபு தனது திருமுகத்தில் 1:5ல் "கடவுள் முகம் கோணாமல் தாராளமாய் எல்லோருக்கும் கொடுப்பார்" என்று குறிப்பிடுகிறார். இறைவனின் இப்படிப்பட்ட தாராள மனப்பான்மை நம்மிடம் இல்லாததே, நம் வாழ்வின் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாக இருக்கிறது. அடுத்தவர் நலனில் அக்கறையில்லாததும், அடுத்தவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாததும் தான் நாம் வாழும் உலகிலே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணம். தங்களுக்கு தேவையான கூலி கிடைத்தாலும் அதில் நிறைவடையாமல் மற்றவர்களுக்குத் தங்களைவிட குறைவாகத்தான் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய தொழிலாளர்களை போலவே நமது குடும்பத்திற்குத் தேவையான வசதி இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரருக்கு நம்மை விட அதிகமாக விளைச்சலோ பணமோ கிடைத்தால் அதை பொறாமையோடு பார்ப்பதில்லையா? இப்படிப்பட்ட குறுகிய எண்ணங்களும், பொறாமை உணர்வுகளுமே நம்முடைய வாழ்வின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன என்பதை எப்போது உணர போகின்றோம்?
இறைவனின் தாராள மனமும், இரக்க குணமும், அவரது ஞானமும் நமது குறுகிய எண்ணங்களையும், பொறாமை எண்ணங்களையும் சுட்டெரிக்க இத்திருப்பலியில் வேண்டுவோம்.
பிற மறையுரை கருத்துக்கள்
இறைவன் மனிதர் எல்லாரையும் இரக்கத்துடனும், தாராள குணத்துடனும் மன்னிக்க, அருளைத்தர காரணங்கள் என்ன? எல்லா மனிதரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். எல்லா மனிதரும் கடவுளின் பிள்ளைகள். எல்லா மனிதரிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எல்லா மனிதருக்கும் விண்ணக உரிமை பேற்றை கொடையாக கொடுக்க இறைவன் சித்தம் கொண்டார். எல்லா மனிதரையும் மீட்க தன் ஒரே மகனை அனுப்பினார். எல்லா மனிதரையும், தன் மகன் இயேசுவைப் போல் அன்பு செய்து, பாதுகாத்து பராமரித்து வருகின்றார்.
மனிதன் வெளித்தோற்றத்தைக் கண்டு தீர்ப்பிடுகிறான். கடவுளோ மனிதரின் இதயத்தை உற்று நோக்கி தீர்ப்பிடுகிறார். மனிதன் மதிப்பதை கடவுள் வெறுக்கின்றார். மனிதனுக்கு நிலையானது என தோன்றுவது இறைவனுக்கு நிலையற்றதே. மனிதன் உயர்வாக கருதும் மதிப்பீடுகள் வேறு, ஏனெனில் கடவுளுடைய கருத்துக்கள் மனிதனுடைய கருத்துக்கள் அல்ல.
பொதுக் காலம் இருபத்தைந்தாம் ஞாயிறு
மானுடகுலத்தின் பல்வேறு தேடல்களில் முக்கியமானதும், முதன்மையானதுமாய் இருக்க வேண்டியது இறைவனைத் தேடுவதாகும். அதனால்தான் 'இரையைத் தேடும்முன் இறையைத் தேடு' என்றான் தமிழன். இந்த இறைவனை எங்கே தேடுவது? எப்படி தேடுவது? எப்போது தேடுவது? யார் தேடுவது? என்று பல கேள்விகள் எழுகின்றன. இவற்றுள் சிலவற்றுக்குப் பதிலளிக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால் பல நேரங்களில் இறைவன் அல்லது இறைவார்த்தை இந்த வினாக்களுக்கு அளிக்கின்ற விடைகள் வழக்கமாக நாம் கொண்டிருக்கிற, வழமையாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பதில்களிலிருந்து வேறுபட்டவை. அதனால் அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியவை. இந்த மன நிலையோடு விவிலியம் தரும் விடைகளைக் காண்போம். ஏனெனில் இறைவனின் வழிமுறைகளும், எண்ணங்களும் மிக உயர்ந்தவை (முதல் வாசகம்).
1. எப்போது தேடுவது?
இன்றைய முதல் வாசகம் இந்த வினாவிற்கு விடையளிக்கின்றது. “ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்.அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்” (எசா 55:6) என்கிறார் இறைவாக்கினர் எசாயா. எனவே, இறைவனைத் தேடுவதற்குக் காலம் தாழ்த்தலாகாது. சிலர் இறைவனைத் தேடுவது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ்வது எல்லாம் முதுமையில் செய்ய வேண்டியவை என எண்ணுகின்றார்கள். எல்லா வயதினரும், எப்போதும் செய்ய வேண்டிய நற்பணி அது. புனித பவுலடியார் கொரிந்தியமக்களிடம் “இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள்” (2 கொரி 6:2) என்கிறார். எனவே, இறைவனைத் தேடுவோம். "ஒன்றே செய்வோம். நன்றே செய்வோம், அதை இன்றே செய்வோம்”.
2.எங்கே தேடுவது?
இறைவன் இருக்கும் இடம் எது? இன்றைய இரண்டாம் வாசகம் இதற்குப் பதில் தேடுகின்றது. புனித பவுலடியார் தன் வாழ்வில் ஓர் இழுபறி நிலையைப் பற்றி பேசுகின்றார். அதாவது இவ்வுலகில் வாழ்ந்து இறைவனுக்குச் சேவை செய்து அதில் திருப்தி கொள்வதா? அல்லது மரித்து மறுவுலகில் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதா? இவை இரண்டில் எதைத் தேர்ந்து கொள்வது எனத் தெரியாமல் தத்தளிக்கின்றார். இவ்வுலகில் வாழ்ந்தால் கடவுளுக்குப் பயனுள்ள பணிசெய்யமுடியும். எனவே, "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலி 1:21) என்கிறார்.
இன்றைய வாசகப் பகுதியில் அவர் இவ்வுலகில் வாழ்ந்து இறைபணி செய்வதின் வழியாக இறைவனைக் கண்டடைய முடிவு செய்துவிட்டதாகத் தோன்றுகின்றது. அதனால்தான் இன்றும் என்றும் வாழ்விலும், சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல். இதுவே என் எதிர்நோக்கு (பிலி 1:20) என்றும், "உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன்” (பிலி 1:25) என்றும் கூறுகின்றார். எனவே, மரித்து விண்ணகம் சென்றுதான் இறைவனை அடையவேண்டும் என்றில்லை. வாழ்விலேயே நாம் இருக்கும் நிலையிலேயே நமது வாழ்க்கையை இறைவனுக்கு ஏற்புடையதாக வாழ்வதன் வழியாகவே நாம் இறைவனைக் கண்டடையலாம் என அறிவுறுத்து கின்றது இரண்டாம் வாசகம்.
3. யாருக்கு உரியவர் இறைவன்?
இன்றைய நற்செய்தி இவ்வினாவிற்கு விடை சொல்கின்றது. இறையாட்சியை விளக்க இயேசு கூறிய உவமையில் இந்த விண்ணரசை எல்லாருக்கும் அளிக்க இறைவன் தயாராயிருக்கிறார், விருப்பமாயிருக்கிறார் (வச. 14), நல்லவராய் இருக்கின்றார் (வச. 15). இந்த உவமையில் இருவகை வேலையாள்களை காண்கின்றோம் விடியற்காலையில் ஒரு தெனாரியம் என்று கூலி பேசி வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஒருபுறம்; காலை ஒன்பது மணிக்கும், பன்னிரண்டு மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் எனப் பல்வேறு நேரங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் மறுபுறம்; மாலையானதும் கூலி கொடுக்க வேண்டிய நேரம் வந்ததும், கூலி கொடுக்கும் வரிசையை மாற்றி விடுகின்றார்.கடைசியில் வந்தவர்களுக்கு முதலில் ஒரு தெனாரியம் வழங்கப்படுகின்றது. முதலில் அமர்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு அதிகம் அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஏனெனில் பகல் முழுவதும் வேலைப் பளுவையும், கடும் வெயிலையும் தாங்கிய வர்கள் தாங்கள் (வச. 12) என்பது அவர்களது வாதம். ஆனால் தோட்டத்து உரிமையாள் தான் முதலில் வந்தவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை என்றும், பிந்தியவர்களுக்கு நல்லவனாய் இருக் கிறதாகவும் விளக்குகின்றார்.
இந்த உவமை உண்மையில் இயேசுவின் காலத்திலும், தொடக்கத் திருஅவையிலும் இருந்த ஒரு சிக்கலுக்கு விடை காண்கின்றது. இயேசுவின் காலத்தில் யூதர்கள் ஆண்டாண்டு காலமாய் மோசே சட்டங்களை நுணுக்கமாய் அனுசரித்துக் கொண்டு வந்திருக்க, இயேசு வந்து வரிதண்டுவோரும், பாவிகளும் இறையரசுக்குள் நுழையத் தகுதி பெற்றவர்கள் என அறிவித்துச் செயல்படுகின்றார் (மத் 9:10-11; 11:19). "வரிதண்டுவோரும், விலை மகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர்" எனக் கூறுகின்றார் (மத் 21:31). எனவே, இயேசு இத்தகையோர்க்கு முன்னுரிமை தந்து அவர்களை இறையரசின் பங்காளர் ஆக்கு கின்றார். அதற்கான தமது நிலைவாதமாக இந்த உவமையைக் கூறுகின்றார்.
தொடக்கத் திருஅவையிலும் யூதர்கள் முதலில் கிறித்தவ மறையைத் தழுவினர். திருத்தூதர்களும் யூதர்களாகவே இருந்தனர். ஆனால் பவுலடியாரின் பணிகளுக்குப் பிறகு கிறித்தவம் பிற இனத்தார்க்கும் திறந்துவிடப்பட்டது. பிற்காலத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறஇன கிறித்தவர்கள் தங்களுடன் சமமாக இறையரசின் பங்காளர்களாக இருப்பது யூதக் கிறித்தவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. “எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே” (வச. 12) என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இந்த தொடக்கத் திருஅவையின் சிக்கலுக்கும் இந்த உவமை பதிலளிக்கின்றது. கடவுளின் நிலைப்பாட்டில் முதலில் வந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை. எனவே, கடவுள் நீதியுள்ளவராயிருக்கின்றார். பின் வந்தவர்களுக்கும் அதே கூலியை வழங்கி அவர்கள் மீது இரக்கம் உடையவராக இருப்பதையும் எண்பிக்கின்றார்.
எனவே, இறைவனை யார் கண்டடைவர்? இறையரசில் யார் பங்கடைவார்கள்? என்றால் எல்லாரும் என்பதே விடையாக அமைகின்றது. ஆண்டாண்டுக் காலமாய் இறைவனுக்கு ஏற்புடையவரானோருக்கும் இடமுண்டு. அண்மையில் மனம்மாறி ஆண்டவருக்கு ஏற்புடையவரானோருக்கும் இடமுண்டு. இந்த இரண்டாம் நிலை மக்களுக்கு உவமையின்படி முன்னுரிமையுண்டு. ஏனெனில் இயேசு வரிதண்டுபவர்களுக்கும், பாவிகளுக் கும் நண்பன் (மத் 11:19). நேர்மையாளரை அல்ல; பாவிகளையே அழைக்க வந்தார் (மத் 9:13). ஆக, இறைவனை எல்லாரும் கண்டடையலாம். எல்லாரும் இணைந்து இறைவனைத் தேடுவோம்.
பொதுக்காலம் - இருபத்து ஐந்தாம் ஞாயிறு
முதல் ஆண்டு
முதல் வாசகம் : எசா. 55: 6-9
எசாயா ஆகமத்தில் 40 முதல் 55 வரை உள்ள அதிகாரங்கள் “ஆறுதல் மொழிகள் ஆகமம்” என்று அழைக்கப்படுகிறது. தாய் நாட்டைத் துறந்து பாபிலோனியாவில் பரதேச வாழ்வு வாழ்ந்த இஸ்ரயேல் இனத்தை இறைவன் காப்பார், மீட்பார் என்ற ஆறுதல் மொழிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதை இங்குக் காணலாம். மனம் மாறினால் மன்னிப்பு உறுதி என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டவர் அண்மையில் உள்ளார்
மேகத்தூணிலே, எரியும் புதரிடையே இறைவனைக் கண்டவரும், அவருடன் நெருங்கி உரையாடியவருமாகிய மோசே, இறைவன் தம் மக்களுக்கு அருகில் உள்ளதை உணர்ந்து கூறினார். "நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? " (இச. 4: 7). மோசே கடவுளைக் காட்சியில் தான் கண்டார்; இடி மின்னலிடையே அவர் குரலைக் கேட்டார். அவர் கடவுளின் முகத்தை நேரில் காணவில்லை. யோவான் அறிவிப்பதோ தான் நேரில் கண்ட தெய்வத் திருமகன். “தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம்” (1யோ 1:1). எம் கடவுள் எம்மோடு இருப்பவர்; அவர் எம்மானுவேல்; கிறிஸ்து சகாப்தத்தில் இறைவன் எவ்வளவு அருகில் வந்துவிட்டார்! அவரை அணுகுவோம்! கூவி அழைப்போம்; அவரது பிரசன்னத்தை உணருவோம்.
மன்னிக்கும் வள்ளல்
தாய் நாட்டைத் துறந்து, அந்நிய நாட்டில் அடிமை வாழ்வு வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் நாளடைவில் தம் ஒரே ஒப்பற்ற கடவுளை மறந்தனர்; உடன்படிக்கையை மறந்தனர்; சிலைகளை வழிபட்டனர். படைப்புகளைப் படைப்பாளராக வழிபட்டனர். இந்நிலையில்தான் 2-ஆம் எசாயாவின் குரல் இடியென ஒலித்தது; தண்டனை உண்டென்று எச்சரித்தது. எனினும் கனிவான மொழிகளையும் உதிர்த்தார் எசாயா. பாவி “நம்முடைய கடவுளிடம் வரட்டும்; அவர் இரக்கம் காட்டுவார்; மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்" (7). என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்" (திபா. 86: 15). எத்தனை முறை தன் சகோதரனை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, எத்தனை முறை மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறானோ அத்தனை முறையும் மன்னிக்க வேண்டும் என்பது ஆண்டவரின் பதில் (மத். 18:21). இறைவன் மன்னிப்பதில் வள்ளல் என்பதை வலியுறுத்தவே ஊதாரிப்பிள்ளை உவமை கூறப்பட்டுள்ளது.
எத்தன்மை குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும்
அத்தன்மை நின் அருளும் அன்றோ? பராபரமே! (தாயு)
பாவியாகிய நான் அவநம்பிக்கைக்கு ஆளாகாது மன்னிக்கும் வள்ளலிடம் மண்டியிடுகின்றேனா?
முரணான எண்ணங்கள்
இறைமக்களைத் தம் சொந்த நாட்டிற்கு அழைத்து வருபவன் பிறவினத்தானாகிய சீருஸ் என்பது மக்களுக்குப் புரியாத புதிராய் இருந்தது. இறைவனின் திட்டத்தை இவர் எதிர்த்தவராகவும் இருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு மறுப்புக் கூறும் வகையில் கூறப்பட்டதே “நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; நம்முடைய வழிகள் உங்கள் வழிகளல்ல" என்ற இறைவாக்கு (8). மண், விண்ணை எட்டுவதில்லை. அப்படியே நம் எண்ணங்களால் இறைவனது திட்டங்களை அளக்க முயல்வது அறியாமை. நமது வாழ்விலும், சமுதாயத்திலும் நமக்குப் புரியாத புதிர்கள் ஏராளம். ஏன் எனக்கு எண்ணற்ற சோதனைகள்? ஏன் என் வீட்டில் திடீர் மரணம்? தீர்க்க முடியாத நோய்? "மண்ணிலிருந்து விண் மிக உயர்ந்திருப்பது போல்... உங்கள் எண்ணங்களைவிட நம்முடைய எண்ணங்கள் மிக உயர்ந்திருக்கின்றன” (9) என்ற இறைவாக்கே எம் கேள்விக்குப் பதிலாக அமையும்.
நம்முடைய கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்.
இரண்டாம் வாசகம் : பிலி. 1:20 - 24 . 27
உரோமை நகரச் சிறையிலிருந்து பிலிப்பியர்களுக்கு எழுதிய மடலின் ஒரு பகுதியே இன்றைய வாசகம். சிறையில் பவுல் தன் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கியிருந்தார். கிறிஸ்துவுக்காக உடனே மரணத்தைத் தழுவுவது அல்லது மக்களுக்காக மேலும் உழைப்பது என்ற இருநிலைகளையும் சமமாக நோக்கும் ஒரு தத்துவ ஞானியின் உரையை இன்றைய வாசகத்தில் கேட்கலாம்.
வாழ்வது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே
தமஸ்கு செல்லும் வழியில் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், அவருக்காகவே வாழ்ந்தவர் பவுல். அவருக்காக எண்ணற்ற துன்பங்களை ஏற்றவர். "என்ன நேரிடினும் நான் நிலைகுலைய மாட்டேன்; துணிவை இழக்க மாட்டேன்" (20) என்ற உறுதி பூண்டவர். அவரது வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தது. விடுதலையா அல்லது மரண தண்டனையா என்ற விவாதங்கள் எழுந்தன. தனக்குச் சார்பாக யாரும் பரிந்து பேச வரவில்லையே என்று பவுல் முறையிட்டதும் உண்டு (2 திமொ. 4:16). எனினும் மரண தண்டனைக்காக அவர் அஞ்சவில்லை. வாழ்வையும் சாவையும் ஆண்டவரில் இணைத்தே அவர் எடை போடுகிறார். ஆண்டவரைக் கண்டடைந்த பின் அவரது பேச்செல்லாம் “எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (கலா 2:20) என்பதேயாகும்.
"வாழ்வென்பது கிறிஸ்து" என்ற தொடரில் கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவனுக்கும் உள்ள நெருங்கிய உறவு கூறப்பட்டுள்ளது. இதன் விளக்கமாகவே கிறிஸ்து வழியாக, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு என்ற தொடர்களைப் பலமுறை பயன்படுத்துகிறார் (காண்: 1 தெச. 5:9; உரோ.6:8,11). கிறிஸ்துவில் என்ற சொல்மட்டும் 165 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. தான் கிறிஸ்துவில் வாழ்ந்த அனுபவத்தின் பயன் அது.
நித்திய வாழ்வின் தொடக்கமே சாவாகும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்து கொள்ளும் (1 கொரி. 16:54; காண் எசா. 25:8; ஒசே. 13: 14). மரணத்தின் வாயிலில் நின்ற பவுல், அதை ஆதாயமாகவே கருதுகிறார். ஏனெனில் தான் கிறிஸ்துவில் வாழ்வது போலவே, கிறிஸ்துவில் இறந்து அவரோடு நித்தியத்திற்கும் தான் வாழப்போவதை உறுதியுடன் நம்புகிறார். எனவே மரணம் அவருக்கு இழப்பு அன்று; ஆதாயமே. அவர் மரணத்திற்கு அஞ்சவில்லை; வரவேற்கிறார்; சவால் விடுகிறார் "சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" நானும் கிறிஸ்துவில், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவோடு வாழ்ந்தால் தான்,"எனக்குச் சாவு ஆதாயம்" என்று என்னால் சொல்ல முடியும்.
காந்தம் வலிந்து இரும்பைக் கவர்ந்து இழுத்துக்
கொண்டதுபோல் பாய்ந்து பிடித்து இழுத்து
உன்பதத்தில் வைப்பது எக்காலம்! (பாம்பாட்டிச்சித்தர்)
வாழ்வும் சாவும் சமம்
வாழ விரும்பாதவர் இல்லை; சாவுக்கு அஞ்சாதவர் இல்லை. பவுலோ இரண்டையும் சமமாகவே நோக்குகிறார். எனினும் இவ்வுலகில் மேலும் வாழ்ந்தால் இயேசுவுக்காக உழைக்கலாமே என்ற எண்ணமும் அவரில் எழுகிறது. எதைத் தெரிந்து கொள்வதென்று தெரியவில்லை. எனவே வாழ்வு - சாவு அவருக்கு ஒரு பிரச்சனையாகின்றது. “இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறார்." இயேசுவில் உடனே ஒன்றிக்கும் நோக்குடன் சாவைத் தேர்ந்தெடுக்க விருப்பந்தான். எனினும் அவரது திருத்தூதர் பணி ஆர்வம், மக்கள் நலனுக்காக மேலும் வாழ விரும்புகிறது. தன்னால் ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் அனைத்தையும் இறைவனின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறார். இதுவரை என்னால் கிறிஸ்துவின் புகழ் விளங்கியது போலவே இப்பொழுதும் நான் இருந்தாலும் இறந்தாலும் என்னால் அவரது புகழ் விளங்கட்டும் (20) என்கிறார். என் வாழ்வோ அல்லது சாவோ இறைபுகழ் பரப்பும் மேடையாக உள்ளதா? அல்லது துர்நாற்றமுள்ள சாக்கடையாயுள்ளதா?
''வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன் கழல் விடுவேன் அல்லேன்” (தேவாரம்)
எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே, சாவது ஆதாயமே. இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறேன்.
நற்செய்தி: மத். 20: 1 - 16
திராட்சை நமது திருநூலில் எவ்வளவோ பேருண்மைகளை விளக்குகின்ற பெருமையைப் பெறுகிறது. பாலும் தேனும் பொங்கி வழியும் நாடு என்று வாக்களிப்பட்ட நாடு வருணனை பெற்றது. அதற்கு ஒரு காரணமான இத்திராட்சை கடவுளின் அளவிறந்த பேரிரக்கத்தைச் சுட்டிக்காட்டும் உவமை ஆகிறது.
கடவுளின் இரக்கம்
ஒரு திராட்சைத் தோட்டத்தில் வேலை நிறைய இருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டிய வேலை. ஆதலின் ஏராளமான ஆள் தேவை. பொழுது புலர்ந்தது முதல் வேலைக்கு ஆள்களைத் தேடி அமர்த்துகிறான் தோட்டக்காரன். 9 மணிக்கும் 12 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் 5 மணிக்கும் வேலைக்கு ஆள் தேடிக்கொண்டு வந்து அமர்த்துகிறான். மாலையில் எல்லோருக்கும் ஒரே கூலி தருகிறாள். வேறுபாடு இல்லை!
கடவுளின் இரக்கம் இத்தகையது. தோட்டக்காரன் எல்லோருக்குமே ஒரு நாள் ஊதியத்தைத் தந்துவிடுகிறான். குறைந்த நேரம் வேலை செய்தவர்தாமே என்று எண்ணாமல் கூலி கொடுக்கிறான். வேலை இல்லை என்று சாக்குப்போக்கு சொல்லிச் சோம்பேறியாயிருப்பவனையும் அழைத்து வேலை கொடுத்துக் கூலியும் கொடுக்கிறான். தொழிலாளிகளின் வேலையைப் பற்றி எண்ணாமல் அவர்களின் சாதாரணத் தேவைகளை நிறைவு செய்கிற அன்றைய கூலியைக் கொடுத்துவிடுகிறான். கடவுளும் மனிதனின் திறமைக்கோ, பலனுக்கோ ஏற்றபடி இன்றி, தனது பேரிரக்கம் தூண்டுகிறபடி அவனுக்குக் கைம்மாறு கொடுக்கிறார்! "ஈசன் அளவும் பெருமையும் ஆர் அறிவாரே?" (திருமந்திரம்) என்று வியக்கும்படி செயலாற்றுகிறார் கடவுள்.
நம்மில் பலர் முதலாளிகள். நமக்குக்கீழ் பணிபுரிவோரிடம் எத்தகைய பாசமும் மரியாதையும் காட்டுகிறோம்? ஒருவன் தன் குடும்பத்தைப் பேணி வளர்க்கத் தேவையான நாள் கூலியைத் தருகிறோமா? ஒருவன் வேலையின்றி அலைவது அவனது தவறு அன்று; சமுதாய அமைப்பு அவனை இத்தகைய நிலைக்குத் தள்ளி உள்ளது என்பதையும், இறைவனால் அளிக்கப்பட்ட செல்வமாகிய கொடையை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதையும் நாம் உணர்கின் றோமா? "நான் பசியாயிருந்தேன்; எனக்கு உணவு கொடுத்தீர்கள்" என்று நம்மைப் பார்த்து இயேசு பாராட்டும் அளவுக்கு நாம் நடந்து கொள்வோமா?
கடவுளின் கழிபேரிரக்கம்
கடைசியாக வேலைக்கு வந்தவர் முழுநாள் கூலியும் பெற்றனர்; மற்றவரும் அவ்வாறே. எனவே முதலிலேயே வேலைக்கு வந்தவர் தங்களுக்குப் பேசிய கூலியை விடக் கூடுதலாகக் கிடைக்கும் என்று எண்ணினர். அதைவிட மற்றவர்களுக்குக் குறையக் கிடைப்பதே நியாயம் என்று வாதாடினர். இத்தொழிலாளிகள் பிந்தி வந்தவர்க்குக் குறைவான கூலி கிடைத்திருந்தால் முறையிட்டிருக்க மாட்டார்கள். முறையிட வேண்டியது என்றால் தோட்டக்காரனிடம் மிகப் பணிவாகவும் அன்பாகவும் பேசியிருப்பர். மனித மனம் இயல்பாக, நல்ல மனம்தான். தன்னை மற்றவருடன் ஒப்பிடும்போது தான் அவன் பெருமை, பொறாமை முதலியவற்றிற்கு இடம் தருகிறான்.
தங்கள் முறைப்பாட்டை மரியாதையின்றித் தெரிவிக்கின்றனர். அவ்வாறு முறையிடுவோரையும் “நண்பா” என்று அழைக்கிறான் தோட்டக்காரன்.
இளைய மகனை வரவேற்றதற்காகக் கோபப்படும் மூத்தவனிடம் தந்தை காட்டும் பரிவையும் இவ்வுவமையுடன் ஒப்பிட்டுத் தெளிவு பெற வேண்டும்.
நண்பா உனக்கு நான் அநீதி செய்யவில்லையே! இவ்வாறே கடைசியானோர் முதலாவர்: முதலானோர் கடைசியாவர்.
மையச் சிந்தனை : கிறிஸ்துவின் நற்செய்தியால் மாற்றம் பெறுதல்
(Formation and Transformation by the Gosepel of Christ)
புனித அகுஸ்தின் தன் இளமைப் பருவத்தைப் பாவத்தின் வழியில் செலவழித்தவர். அவருடைய தாய் மோனிக்கா பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் மனம்மாற்றத்திற்காகத் தொடர்ந்து உருக்கமாக இறைவனிடம் வேண்டி வந்தார். அகுஸ்தின் சென்ற இடமெல்லாம் பின்சென்று அவரை மாற்றிட மன்றாடினார். அவ்வேண்டல் ஒருநாள் கேட்கப்பட்டது. அகுஸ்தின் தனியாக இருக்கையில், “அகுஸ்தின், எழுந்து உரோயைர் 13:12ஐ எடுத்து வாசி” என்றொரு குரலைக் கேட்டார். அவர் முன்னால் திருவிவிலியம். அதை எடுத்து, “இரவு முடியப் போகிறது பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக” என வாசித்தார். அவர் திருவிவிலியத்தைத் திறந்தபோது அவர் கண்ணில் பட்ட இந்த இறைவாக்கு அவர் உள்ளத்தைத் தொட்டது. உள்ளம் குத்துண்டவராக, தன்னில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்தார். அவருக்கு உதவிடும் வகையில், அவரது தாய் மோனிக்கா புனித அம்புரோசிடம் மிலானுக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரின் சந்திப்பு, அகுஸ்தினை முழுமையாக மனம் மாற்றியது. அவர் தன்னையே இறைவார்தையால் உருவாக்கிக் கொண்டு, ஆயராக உயர்ந்து, இன்று திருஅவையின் மறைவல்லுநர் எனப் போற்றப்படும் அளவுக்கு பல நூல்களை எழுதினார்; கிறிஸ்துவின் நற்செய்தியால் மாற்றம் கண்டு தன்னையே உருவாக்கிக் கொண்டு, கிறிஸ்துவுக்காக வாழ்ந்தார். அதனால் 16 நூற்றாண்டுகள் கடந்தும் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..
நற்செய்தியைப் புரிவோம்..
நற்செய்தியைப் பழைய ஏற்பாட்டுப் பின்னணியில் இறை வார்த்தை அல்லது கடவுளின் வாக்கு என்றே அழைத்தனர். இந்த வாக்கு வேறு யாருமல்லர், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. இவ்வாக்கைப் பற்றியே யோவான், "தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது... அனைத்தும் அவரால் உண்டாயின... வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா 1:1,3,14) என்று தன்னுடைய கிறிஸ்து இயல் பாடலில் எழுதியுள்ளார். கிறிஸ்துவின் நற்செய்தி பற்றி ஆழமாக அறிய இக்கருத்துகளை மனத்தில் பதித்து வைத்துக் கொள்வது நல்லது.
இறைவாக்கின் இயல்பு...
திருஅவை வரலாற்றில் பல மனிதர்கள் கிறிஸ்துவாலும், கிறிஸ்துவின் நற்செய்தியாலும் தொடப்பட்டு தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக, அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் வனத்துச் சின்னப்பர், புனித பவுல், புனித அகுஸ்தின், புனித இக்னேசியஸ், புனித பிரான்சிஸ் சவேரியார் போன்றோரின் வாழ்வை இங்குக் குறிப்பிடலாம். இந்தக் கிறிஸ்துவின் நற்செய்தி என்பது இறைவார்த்தையாகும். இறைவார்த்தை நம்மைக் கண்டிக்கின்றது, திருத்துகிறது, நமக்குப் பயிற்றுவிக்கிறது, வழிகாட்டுகின்றது, நம்முடன் உறவைக் கட்டியெழுப்புகின்றது. நம்பிக்கைத் தருகின்றது, வாழ்வில் ஏற்படும் தடைகளைத் தாண்டிப் பயணிக்க நமக்கு உதவுகின்றது, உள்ளத்தில் புதிய நம்பிக்கை தந்து உதவுகின்றது.
எனவே, இறைவார்த்தை உருவாக்கம் என்பது தனிமனித உருவாக்கம் சார்ந்ததாகவும், இறைக்குழும வாழ்வு சார்ந்ததாகவும், மண்டலம் சார்ந்ததாகவும், தேசிய அளவு சார்ந்ததாகவும், உலகளாவிய அளவு சார்ந்தாரகவும் இருக்க வேண்டும். இதற்குத் தாய் திருஅவை Lectio Divina என்னும் எளிய ஆன்மிக வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளது. புனித பெனடிக்ட் என்னும் துறவி அறிமுகப்படுத்தி தன் தனிப்பட்ட வாழ்வையும் அதைப் பின்பற்றிய துறவியர்களின் வாழ்வையும் சீர்படுத்தி வாழ உதவினார். அவர் தந்துள்ள எளிய வழிமுறையை நாமும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும். அப்பொழுது தொடர்ந்து நம்மையே இறைவார்த்தையால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
உருவாக்கம் தரும் கிறிஸ்துவின் நற்செய்தி...
கிறிஸ்துவின் நற்செய்தி அனைவரையும் அனைத்தையும் கிறிஸ்து மையமாக மாற்றிட அழைக்கின்றது. முதலில், ஒவ்வொரு மனிதரும், ஏன் ஒவ்வொரு மனித மற்றும் இறைக்குழுமமும் இயேசு கிறிஸ்து எனும் அவரின் ஆளுமையோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவரைப்போல உருவாக்கிக் கொள்ள அழைக்கப்படுகின்றனர். எப்படி” சமாரிய நகரில் இயேசுவைப் பின்பற்றியவர்களின் வாழ்க்கையைக் கண்டவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் கிறிஸ்தவர்கள் (காண். திப 11:26) என்று அழைத்தார்களோ, அதுபோலவே நம்முடைய தனிப்பட்ட வாழ்வும் குழும வாழ்வும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் வகையில் கிறிஸ்துவின் மனநிலையில் (1கொரி 2:16; பிலி 2:5) நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, கிறிஸ்துவின் நற்செய்தி தனிப்பட்ட வாழ்விற்கும் குழும வாழ்விற்கும் மாற்று மதிப்பீடுகளைக் கற்றுத் தருவதுடன், அம்மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்வதற்குப் பயிற்று விக்கின்றது. குறிப்பாக, பகை என்பதை மன்னிப்பாகவும், வெறுப்பு என்பதை அன்பாகவும், யூத இனம் என்பதை உலகளாவிய பொதுமை யாகவும், விளிம்பு என்பதை மையமாகவும், ஆணாதிக்கத்தை பொதுமையாகவும் மாற்றிட உருவாக்கம் தருகின்றது. மூன்றாவதாக, கிறிஸ்துவின் நற்செய்தியை இறைவார்த்தையாக வாசிப்போரை அதற்கேற்ப வாழ்வதற்கு தூய ஆவியார் வழிநடத்துகின்றார்.
மாற்றம் பெற உதவும் இன்றைய வாசகங்கள்
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் ஆண்டவரைத் தேடிட அழைக்கின்றார். அதன் நோக்கம் என்ன ? தீயோர் தம் வழியை மாற்றிக் கொள்வதற்கே என்று குறிப்பிடுகின்றார். இதன் வழியாக ஆண்டவரின் இரக்கத்தைக் கண்ட மனிதர் இழந்து போன வாழ்வை மீண்டும் பெற்றிட முடியும் என வழிகாட்டுகின்றார். அதுபோல், புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் இது எனக்கு ஆதாயமே” (பிலி 2:20) என எழுதி, தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்துவின் நற்செய்தி எவ்வாறெல்லம் மாற்றத்திற்கும் உருவாக்கத்திற்கும் உதவியிருக்கிறது எனக் காட்டியுள்ளார். நற்செய்தியில் ஆண்டவரின் பேரிரக்கம் ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவதுடன், தனிப்பட்ட இரக்கம் காண்பித்து ஒவ்வொருவரின் தேவையை நிறைவேற்றிட வாழ்விக்கின்றது.
வேலையும் கூலியும்
இந்திய அரசு பணித் துறைகளில் துவக்க காலத்தில் பாதுகாப்புத்துறை உட்பட - உயர் அதிகாரிகளின் நியமனத்தில் அவர்களின் குடும்ப பின்புலம் ஒரு காரணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (ராஜ வம்சம், பெரும் நிலக்கிழார்கரகள், பெரும் பணக்காரர்கள் போன்றோர்) காரணம் பிறப்பு முதல் அதிகாரத்தையும் பணத்தையும் கையாளும் நபர் அரசாங்க பணிகளில் அதை முறையாகவும் நீதியாகவும் பயன்படுத்த முன் வருவார் என்ற ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தது. மனிதர்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட ஒரு எண்ணம் இருக்கும்போது… நம்மைப் படைத்து வழி நடத்தும் இறைவனின் குண நலன்கள் எவ்வளவு மேன்மையானவையாக இருக்கும். முதல் வாசகம் ஏசாயா 55:8-9 அதனைப் பறைசாற்றுகின்றது. திருப்பாடல் 145:9 வார்த்தை இறைவனின் நற்செயல்களையும் மேலான இரக்கத்தையும் சான்று பகர்கின்றது.
இன்றைய நற்செய்தியில் இறை மகனார் ஒரு நிலக்கிழார் உவமை வழியாக இறைவன் மற்றும் மனிதன் ஆகியோரின் எண்ணங்களையும் செயல்முறைகளையும் முறைப்படுத்துகின்றார். தன்னால் பிறர் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அதிகாலை முதல் மாலைவரை நிலக்கிழார் தனது தோட்டத்தில் வேலைக்கு ஆட்களை அமர்ந்த தேடிச் செல்பவராகக் காட்சிப்படுத்துகிறார். அப்படி சென்ற அவர், சந்தித்த நபர்களை நாள் ஒன்றுக்கு ஒரு தினாரியம் கூலி என்ற அடிப்படையில் அவருடைய தோட்டத்தில் வேலைக்கு அமர்த்துகின்றார். மாலை ஐந்து மணிக்கும் அதே அடிப்படையில் வேலைக்கு ஆட்களைப் பணி அமர்த்துகின்றார்.
நிழக்கிழார் நல்லவராகவும் இரக்க செயல்கள் கொண்டவராகவும் இருப்பதால் கடைசியில் வேலை தேடி வந்தவர்களையும் அழைத்து வேலை தருகின்றார். கவனிக்க மாலை ஐந்து மணிக்குக் கடைசியாக வந்தவர்கள் எந்த நம்பிக்கையில் வேலை தேடி இங்கு வந்திருப்பார்கள். நிச்சயம் இவர்களும் அதிகாலை முதல் வேலை தேடியவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மாலை 5மணிவரை சென்ற இடங்களில் சந்தித்தவர்கள் வேலை தராததால்; கடைசியாக இந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும். காலம் தவறி, கடைசி நேரத்தில் வந்தவர் கூடப் பயனடையாமல் போகக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிலக்கிழாரால் கடைசியில் வந்தவர்களும் பயனடைந்தார்கள்.
இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் நம்மோடு பயணிக்கும் நமது வாலிப உள்ளங்களை நினைவு கூறுவோம். வேலை நிமித்தம், உயர் கல்வி நிமித்தம் போட்டி, தேர்வுகள் எனச் சென்ற எத்தனை பேர் ஒருவினாடி, ஒரு நிமிடம் காலதாமதம் - எனத் தேர்வு எழுத முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறாகள். தேவைக்கு அதிகமான போட்டியாளர்களைக் கொண்ட சமூகத்தில் இப்படி திரும்பி வந்தவர்களை அவர்களது உறவுகளில் எத்தனை பேர் மீண்டும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். இம்முறையும் இப்படித்தானா?.. என்ற கேள்வியைக் கேட்கத் தயங்காமல் இருப்பவர்களே அதிகம்.
நற்செய்தியில் குறிப்பிடப்படும் கடைசியாக ஐந்து மணிக்கு வந்த வேலையாட்களைப் போல் சகலவித தயாரிப்புகளுடன் முயற்சிகளுடனும் தங்கள் எதிர்காலத்தைத் தேடி பயணிக்கும் அநேக வாலிப உள்ளங்கள் - கேள்விக் குறியுடன் இன்று நிற்கும்போது… தேடலுக்கும் நம்பிக்கைக்கும் நிச்சயம் விடிவு உண்டு என்ற நம்பிக்கையை விதைக்க ; கடைசியில் வந்தவனும் வாழ்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு, தேடிச் சென்று - நல் நம்பிக்கையைத் தந்த நிலக்கிழாரைப் போல்; அவர்களை வாழவைக்க நாம் அழைக்கப் படுகிறோம். நன்மை செய்யவும் - நன்மையைப் பெற்றுக் கொள்ளவும் - நேரம் ஒரு காரணி அல்ல … என்பதற்கு வாழ்வின் கடைசி நொடிகளில் சிலுவையில் நின்ற இறைமகனும் நல்ல கள்வனும் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு ஆகும்.
இதையெல்லாம் அறிந்திருந்தும் நாம் என்ன செய்கின்றோம். இந்த உவமையில் முதலில் பணியமர்த்தப் பட்டவரும் கடைசியில் வந்தவரும் சமமான கூலிக்கு பணி அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள்-தான். முதலில் வந்தவர்கள் இதை மறந்தவர்களாக அவர்களும் நாங்களும் சமமா? என்ற கேள்வியை முன் நிறுத்துகிறார்கள். அதே வேளை தாங்கள் பெற்றுக் கொண்டதை மறந்து விடுகிறார்கள். அடுத்தவர்களோடு தங்களை ஒப்பிடுவதிலேயே வாழ்வின் மகிழ்வை இழக்கிறார்கள். இவ்வாறு கையில் கிடைக்கப்பெற்ற விண்ணரசின் மதிப்பை உணராததால்… முதன்மையானோர் கடைசியாவர்” மாலை ஐந்து மணி வரையிலும் நம்பிக்கையோடு காத்திருந்த கடைசியானோர் முதன்மையாவர். என்கிறார் இறை மகனார்.
பாருங்கள். கல்வாரில் வாழ்வின் கடைசி நொடிகளில் இயேசுவுடன் நின்ற இருவரும் கள்வர்கள் தான்… வித்தியாசம் - இருவரில் ஒருவர் தான் ஒரு குற்றவாளி என்பதை புரிந்து கொண்ட நிலையில் இயேசுவை இறைமகன் என முழுமையாகப் ஏற்றுக் கொண்டார். பயனாக விண்ணரசை தனதாக்கினார்.
யார் முதல் யார் கடைசி என்பதல்ல கேள்வி மாறாக,
தகுதிமிகு வேலைக்காரர்கள் ஆக இருப்பதுவே விண்ணரசை கூலியாகப் பெற வாய்ப்பைத் தரும். பவுல் அடிகளார் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு என்கிறார். (பிலிப்பியர் 1:20). அதாவது தன் உடல் உழைப்பால் கிறிஸ்துவை பெருமைப் படுத்துவதே தன் எதிர்நோக்கு என்கிறார். கிறிஸ்துவிற்காக உழைக்கும் உடல் தகுதியை நாம் பெற்றிருப்பின் ஒரு தினாரியம் என்ற விண்ணரசு அனைவருக்கும் சமமாக வழங்கப்படும். உலக வாழ்க்கைப் பாதையில் போராடியும் கடைசி இடத்தில் நிற்கும் எதிர்கால தேவைகள் நிறைந்த உள்ளங்கள் வாழ்வு பெறவும் இறைவனை நாடுவோம்.
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. (திரு பா 145:17) ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.(திரு பா 145:9)
எனவே முதலும் முடிவும் இல்லாதவர் முன் முழு மனமாற்றத்துடன் முழந்தாள் இடுவோம். சமநிலை ஏற்போம்.