மன்னிப்பு வழங்க மனம் தேவை
- கணினிமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், கணக்கிட்டு பார்க்காமல் எதையும் செய்யாதே என்ற செய்தியானது எல்லா பக்கங்களிலும் ஒங்கி ஒலிக்கும் காலம் இது.
- மன்னிப்பு என்பதே மனித பலவீனம் என்று அர்த்தம் கொள்ளும் காலம் இது.
- மன்னிப்பவர்களையும், மன்னிக்கச் சொல்பவர்களையும் இவ்வுலகில் நடைமுறை தெரியாதவர்கள் என ஏளனமாகப் பார்க்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
- அதே நேரத்தில் இந்த மனிதர் இந்தத் தீங்கு செய்தானே இவனையா நான் மன்னிக்க என்று நினைக்கும் மனிதர்கள் நம்மில் உண்டு.
- நான் மன்னிக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் என்னால் முடிவில்லையே என்று கூறுபவர்களும் நம்மில் பலர் உண்டு.
- நான் மன்னித்துவிட்டேன். ஆனால் மறக்கத்தான் முடியவில்லை அந்தக் காயப்பட்ட மனதால் என்று கூறுபவர்களும் நம்மில் உண்டு.
என்னிடம் ஏது, வன்மம், வைராக்கியம். எனவே மன்னிக்கும் கடமை எனக்கு இல்லையே என்று தங்களையே அதிதூதர்களாக ஆக்கிக் கொள்பவர்களும் உண்டு. மனிதனாக இருப்பவன் இப்படி பைத்தியக்காரத்தனமாகக் கூறலாமா என்பதை உணராது பிதற்றுபவர்களும் உண்டு.
சிறிது கல்வாரி மலைக்கு வருவீர்களா? அங்கே மூன்று சிலுவை மரங்களில் தொங்குபவர் மூவர் என்பதை அறிவீர். இடது புற கள்ளன் நீர் மெசியாதானே, உன்னையும் எங்களையும் காப்பாற்றும் என்று பழித்துரைத்தான் (லூக். 23:39). இது சாபத்தின் சிலுவை. வலது புறக் கள்ளரோ, இயேசுவே நீர் ஆட்சி உரிமைக்கு வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்றார் (லூக். 23:42). இது பரிகாரத்தின் சிலுவை. ஆனால் இயேசுவோ தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்றார் (லூக். 23:34)
அந்த மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இன்றைய வார்த்தையின் வழியாக நமது செபம் கேட்கப்பட வேண்டுமானால் நமக்கு விதிக்கும் நிபந்தனை மிக முக்கியமானது. நம் அயலாரை நாம் மன்னிக்க வேண்டும். ஒரு மனிதர் சாதாரணமாக விரும்புவது இரண்டு விதமான விடுதலை. (1) பசியில் இருந்து விடுதலை (2) பாவத்தில் இருந்து விடுதலை (மத். 6:11-18). ஆனால் தன் அயலாரை மன்னிக்காத எவருக்கும் விடுதலை கிடைக்காது என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக அறிவிக்கிறது.
எப்படியெனில் மன்னிக்கப்பட்ட ஊழியர் அவருக்குக் கடன்பட்ட ஒருவரை மன்னிக்க மறுத்ததை அறிந்த அரசன், மன்னிக்கப்பட்டவரை அழைத்து பொல்லாதவரே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுதும் மன்னித்தேனே! உனக்கு இரக்கம் காட்டினேனே. நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டி இருக்க வேண்டுமென்று சொல்லி, பரம தந்தையும் தன் அயலாரை மன்னிக்காதவரை இப்படியே தண்டிப்பார் என்றார்.
பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழி பெறுவர் (சீராக். 28:1)
பேதுருவை நோக்கி உன் வாளை உறையில் திரும்பப் போடு. ஏனெனில் வாளை எடுப்பவன் வாளாலே அழிந்து போவான் (மத். 26:52) என்றார்.
நிகழ்ச்சி
அன்பார்ந்தவர்களே! இத்தாலி தேசத்திலே இரு பக்கத்து வீட்டுக்காரர்களின் சண்டை கொலையில் முடிந்தது. கொலை செய்தவரைப் பிடிக்க அடுத்த வீட்டுக்காரர் ஓடினார். ஆனால் கொலை செய்தவரோ இவர்தான் கொலை செய்தவர் என்று போலீஸில் பிடித்துக் கொடுத்து, மாசற்றவரைக் குற்றவாளியாக்கி ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் பெற்று, விடுதலைப் பெற்று வீடு திரும்பினார். ஆனால் அவன் வீடு திரும்பிய போது அவரது தந்தையும், தாயும் மன உடைந்து இறந்து போனதை அண்டை வீட்டுக்காரர் சொல்லி அறிந்துகொண்டார். என்ன செய்யப் போகிறாரோ எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆவலோடு நோக்க, இவர் சொன்ன வார்த்தைகள் இறைவன் வழி மகத்தானது. மனிதரால் அறிய முடியாத ஒன்று. அவர் விருப்பப்படியே நடக்கட்டும் என்றான். ஆம்! தன் அயலானைப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகியது.
புனித பவுல் அடிகளார் (உரோ. 14:7-9) கூறுவதுபோல நாம் வாழ்வது இயேசு கிறிஸ்துவுக்காக. இயேசுவின் விருப்பமோ, நம் அயலாரை மன்னித்துப் பரம தந்தையின் மன்னிப்பிற்கு ஏற்புடையவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதே.
- நமது தெய்வம் அன்பின் தெய்வம். அன்பின் கடவுள் (1 யோவா. 4:9). இத்தகைய அன்பு எரிச்சலுக்கு இடம் தராது. பாவிகளை மீட்க வந்தார் ( 1 திமொ. 1:15)
- நமது தெய்வம் மன்னிக்கும் கடவுள் (யோவா. 3:16-17).
- நமது தெய்வம் சமாதானத்தின் கடவுள் (யோவா. 14:27)
- நமது தெய்வம் இரக்கத்தின் தெய்வம் (லூக். 6:36)
எப்போது நாம் மன்னிக்க வேண்டும்? புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல, பொழுது சாய்வதற்குள், உங்கள் சினம் தணியட்டும் (எபே. 4:26). அப்படியென்றால் எவ்வளவு சீக்கிரம் பிறரை மன்னிக்க முடியுமோ அப்போதுதான் நம்மில் அமைதி உண்டாகும்.
எத்தனைத் தடவை மன்னிப்பது? எழுபது தடவை, ஏழு தடவை (மத். 18:22) என்று இயேசு இன்றைய செய்தியில் அறிவிக்கிறார். அப்படியென்றால் மன்னிப்பதற்கு எல்லை இல்லை என்பதைத் தான் அறிவுறுத்துகின்றார்.
என் இதயத்தில் மட்டும் மன்னித்தால் போதுமா? இல்லை. நீ ஆலயத்தில் காணிக்கை செலுத்த வரும்போது உன் சகோதரனுக்கு உன் மீது மனத்தாங்கல் இருந்தால் முதலில் உன் காணிக்கையை வைத்துவிடு. உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின் வந்து காணிக்கை செலுத்து (மத். 5:23-24) என்றார் இயேசு.
பரலோகத்தில் இருக்கிற: எங்கள் பிதாவே என்ற செபத்தில் எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் என்று செபிக்கின்றோம்! அதன் பொருள் புரிந்து செபிக்கின்றோமா! பிறரை மன்னிக்க அல்லது மறுத்தால் நம் குற்றங்களையும் மன்னிக்க வேண்டாம் என்று தானே அர்த்தம்.
மன்னிக்க மறுப்பது, உள்ளத்தில் வெறுப்பை வளர்ப்பது, தன்னை அழிப்பதற்காக முயற்சியை நாமே தொடங்கும் ஈனச் செயலுக்குச் சமம்.
வெறுப்பும், பகைமையும் ஒருவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடியது என்பதை உளவியலார் கூறுகின்றார்.
பழிவாங்குவோர், ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்பது இன்றைய முதல் வாசகம் எச்சரிக்கிறது.
மன்னிக்க மறுத்த ஊழியனுக்குக் கிடைத்தது பரிதாபத் தண்டனை. வெறுப்பும், பழிவாங்கும் எண்ணமும் கொண்டவன் இறைவனின் மன்னிப்பைப் பெறத் தகுதியற்றவன்.
மன்னிப்பு வழங்க மனமில்லையெனில், மன்னிப்புப் பெறுவதற்குத் தகுதியில்லை என்பதே இன்றைய நற்செய்தியின் பாடம் ஆகும்.
மன்னிப்பு என்னும் சிறகை வீரிப்போம்
இருபுறமும் எரியும் கொள்ளிக்கட்டை ! சிறகு முளைத்த எறும்போ நடுவில் மரண பயத்தில் அலறியது. இங்கும் அங்கும் அலைந்தது. தன்னுடைய சிறகுகளால் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டது. ஐயோ! ஐயோ! நான் சாகப்போகின்றேனே! என்னைக் காப்பாற்ற இங்கே யாருமே இல்லையா? என்றது. அருகில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது எறும்பைப் பார்த்து, எறும்பே நீ ஏன் கதறுகிறாய்? உன்னால் எளிதில் நெருப்பிடமிருந்து தப்பமுழியும் என்றது. எறும்பு பரபரப்பானது. சிட்டுக்குருவியைப் பார்த்து, எப்படி? எப்படி? என்றது. சிட்டுக்குருவி சொன்னது : உன்னையே நீ நன்றாகப் பார். சிறகை விரி! பற! என்றது. எறும்பு விழித்துக் கொண்டது. சிறகை விரித்தது, பறந்தது, தப்பித்தது.
நமது வாழ்க்கையிலே பல சமயங்களில் பல ஆபத்தான சூழ்நிலைகளில் தத்தளித்துத் தநமாறுகின்றோம்; சோதனைக்கும் வேதனைக்குமிடையே, கவலைக்கும் கண்ணீருக்குமிடையே,
இழப்புக்கும் இல்லாமைக்குமிடையே, தனிமைக்கும் எகொடுமைக்குமிடையே அகப்பட்டு அல்லலுறுகின்றோம்!
கவிஞர் கண்ணதாசனோடு சேர்ந்து,
எப்படி அழுதால் தெரிந்து கொள்வார் - நான்
எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்?
அப்படி அழுதும் பயனில்லை - இங்கு
யாருக்கும் என்னிடம் தயவில்லையே! எனப் பாடத் தோன்றுகின்றது!
நம்மைத் தாக்கும் துன்ப, துயரச் சுனாமிகளிடமிருந்து தப்பித்து வாழ வழியே இல்லையா? ஏன் இல்லை, இருக்கின்றது என்கின்றன இன்றைய வாசகங்கள். அவை, உங்கள் மன்னிப்பு என்னும் சிறகை விரித்துப் பறங்கள். அப்போது நீங்கள் உயரப் பறந்து, உங்களையே நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்கள் என்கின்றன.
இயேசு தமது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த மன்றாட்டில் [மத் 6:9-13) நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னித்தால், நாம் கேட்கும் வரங்களை, ஆசிகளை விண்ணகத் தந்தை
நமக்குத் தருவார் எனக் கூறுகின்றார். இதே கருத்தைத்தான் இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்கு எடுத்து இயம்புகின்றன..
கடவுள் இரக்கமே உருவானவர். நீதியின்பழ ஆதாமையும், ஏவாளையும் தண்மித்தாலும், இரக்கத்தின்படி மீட்பர் ஒருவரை அவர்களுக்கு வாக்களித்தார் [எதாநூ 3:15). கல்வாரியிலே இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்குமாறு தம் தந்தையிடம் மன்றாடனார் [லூக் 23:34). இப்படிப்பட்ட இறைவன் நம்மிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்ப்பது இயற்கைதானே!
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார் நாம் அனைவரும் இயேசுவுக்கு உரியவர்கள் [உரோ 14:8) என்கின்றார். இயேசுவைப் போல வாழ்ந்து இறைவனின், வானகத் தந்தையின்
ஆசிகள் அனைத்தையும் பெற்று வளமுடன் வாழ, மற்றவரை மனமார மன்னித்து வாழ நற்கருணை ஆண்டவர் அருள்புரிவாராக.
மேலும் அறிவோம் :
கண்ணிற்(கு) அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண் என்(று)உறைம் படும் (குறள் : 575).
பொருள் : பரிவிரக்கம் காட்டுபவருடைய கண்களே அழகிய கண்களாகப் போற்றப்படும். அத்தகு பரிவிரக்கம் இல்லாத கண் புண்ணாகவே எண்ணப்படும்!
மன்னிப்பவரின் உள்ளம் ஒரு மாணிக்கக் கோவில்
கடவுளிடம் ஒருவர் "கடவுளே! உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்" என்று கேட்டாராம். கடவுளின் அடையாள அட்டை என்ன? புனித யோவான் கூறுகிறார் கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவா 4:18) மனிதரிடம் அன்பு என்பது ஒரு சிறிய துளி. ஆனால் கடவுளோ அன்புக் கடல் அவருடைய அன்புக்கு ஆழம், அகலம், நீளம் உயரம் என்பது கிடையாது கடவுள் அன்பின் முழுமை. அவரிடம் அன்பைத் தவிர வேறெதுவும் கிடையாது.
கடவுளின் தனிப் பண்பைப் பற்றி இன்றைய பதிலுரைப் பாடல் பின்வருமாறு கூறுகிறது "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் குற்றங்களை எல்லாம் மன்னிக்கிறார்" (திபா 103) கடவுள் தம் மகன் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கத்தைத் திருத்தூதர் பவுல் பின்வருமாறு கூறுகிறார். "கடவுள் உலகினரின் குற்றங்களை பொருட்படுத்தாமல் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2 கொரி 5:19) எனவே கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்றபடி நம்மைத் தண்டிக்கவில்லை நமது பாவங்களைக் கடவுள் கிறிஸ்துவின்மேல் சுமத்த அவர் நம் பாவங்களுக்குக் கழுவாய் ஆனார்.
கடவுள் நம் குற்றங்களை கணிக்காமல் நம்மை மன்னித்தார் என்றால், நாமும் பிறருடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க வேண்டுமென்பது இன்றைய அருள்வாக்கு வழிபாட்டின் மையக்கருத்தாகும். இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" (சீஞா 23:2). இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் கூறுகிறார் உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால்,விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" (மத் 18:35)
நமக்கெதிராகக் குற்றம் புரிகின்றவர்களை ஏழுமுறை மட்டுமல்ல, எழுபதுமுறை வழுமுறை மன்னிக்க வேண்டுமெனப் பணிக்கிறார் கிறிஸ்து (மத் 1822). மன்னிப்பதற்கு ஒரு வரையறை இல்லை. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் உவமை வாயிலாகக் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் உண்மை "கடவுள் நம்முடைய கனமான பாவங்களை மன்னிக்கிறார். அப்படியிருக்க நாம் நமக்கு எதிராகச் சிறுசிறு குற்றங்களை இழைக்கின்றவர்களை மன்னிக்காமல் இருப்பது முறையா?"
ஓர் இளம் பெண் திருமணமாகி ஒரு சில நாள்களே தன் கணவருடன் வாழ்ந்தார். அதன் பிறகு கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, மண முறிவு கேட்டார் அவரிடம், "உங்கள் கணவரை மன்னித்து அவருக்காகச் செபியுங்கள்" என்றேன். அதற்கு அவர் "என் கணவரை மன்னிக்கத் தயார் ஆனால் அவருக்காகச் செபிக்கச் சொல்லுவது கொஞ்சம் “ஓவராகத் தெரியவில்லையா?" என்று கேட்டார்.
கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்ததுடன், அவர்களுக்காகத் தம் தந்தையிடம் வேண்டிக்கொண்டார். அவரது இச்செயல் மனிதக் கணிப்பின்படி கொஞ்சம் "ஒவராகத்தான்" தெரிகிறது. ஆனால் அவரது செயல் அவர் உண்மையிலேயே கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் தவறிழைப்பது மனிதத்தன்மை. மன்னிப்பது தெய்வத்தன்மை.
பகைவர்களை மன்னிப்பதுடன் அவர்களுக்காகச் செபிக்கும்படி கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகிறார் "உங்கள் பகைவர்களிடம் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகள்" (மத் 5:44)
நாம் பகைவர்களுக்கு நன்மை செய்வதில் நிலத்தைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் நிலமானது தன்னை வெட்டிக் காயப்படுத்துபவர்களைத் தாங்குவதோடு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் கொடுக்கிறது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை (குறள் 151)
ஒரு பெண்மணிக்கு நீண்ட காலமாக ஆஸ்த்மா நோய். அவள் பல மருத்துவர்களை அணுகியும், பல செபக்கூட்டங்களில் கலந்து கொண்டும் அவருக்குக் குணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருவரை மன்னிக்க மறுத்துவிட்டார் என்று அவர் தனது பகைவரை மனப்பூர்வமாக மன்னித்தாரோ அன்று அவருக்குப் பூரண குணம் கிடைத்தது. பிறரை மன்னிக்காவிட்டால், நம் மனப்புண் ஆறாது.
மன்னிப்பவரின் உள்ளம் ஒரு மாணிக்கக் கோவில். மன்னிக்காதவரின் வாழ்வு தடமே இல்லாமல் மறைந்து போகும் என்கிறது ஒரு திரைப்படப் பாடல்.
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலடா - அதை
மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல்
மறைந்தே போகுமடா.
"மன்னியுங்கள், மன்னிப்புப்பெறுவீர்கள்" (லூக்கா 6:37)
மன்னிப்பு என்னும் மாமருந்து
நிகழ்வு
மத்தியப் பிரதேச மாநிலம், தெவாஸ் மாவட்டத்தில் ஆன்மிகப் பணியோடு சமூகப் பணியையும் செய்துவந்தவர் அருள்சகோதரி இராணி மரியா. இவர் 1995 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாள் சமந்தர் சிங் என்பவனால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சமந்தர் சிங் என்ற அந்த மதவெறியன் கைது செய்யப்பட்டு இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டான்.
இது நடந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2003 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 24 ஆம் நாள், அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசாவும், அவருடைய சகோதரி செல்மியும், சகோதரர் ஸ்டீபனும் இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமந்தர் சிங்கைப் பார்க்கச் சென்றார்கள்.
‘நான் நாற்பது முறைக்கும் மேலாகக் கத்தியால் குத்திக்கொன்ற இராணி மரியாவின் குடும்பத்திலிருந்தா என்னைப் பார்க்க வந்திருக்கின்றார்கள்...? அவர்களை எப்படி நான் எதிர்கொள்வது...? அவர்களிடத்தில் நான் என்ன பேசுவது...?’ என்ற ஒருவிதமான பதைபதைப்புடனே அவர்களைப் பார்க்கச் சென்றான் சமந்தர் சிங். அவர்களைப் பார்த்த மறுவினாடி அவன் தன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினான்.
அப்பொழுது அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசா யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். ஆம், எந்தக் கைகள் தன்னுடைய மகளைக் கத்தியால் குத்திக் கிழித்தனவோ, அந்தக் கைகளை அவர் அன்போடு முத்தமிட்டு, ‘என்னுடைய மகளைக் குத்திக்கொன்ற உன்னை நான் மனதார மன்னிக்கின்றேன்’ என்பதைச் சொல்லாமல் சொன்னார். இதனால் அருள்சகோதரியின் குடும்பமும், சமந்தர் சிங்கின் குடும்பமும் ஒன்றானது.
தன் மகளைக் கத்தியால் குத்திக் கொன்றவனை மன்னித்ததன் மூலம், அருள்சகோதரி இராணி மரியாவின் தாயாரும், அவருடைய குடும்பத்தினரும் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய், நிபந்தனையின்றி மன்னித்து வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எத்தனை முறை மன்னிப்பது?
நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம், “என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால், நான் எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்றொரு கேள்வியோடு வருகின்றார். பேதுரு இயேசுவிடம் இப்படியொரு கேள்வியோடு வருவதன் மூலம், ‘மன்னிப்பதில் தான் தாராளமானவான்’ என்பதை நிரூபித்துக் காட்ட விழைகின்றார். காரணம், யூத இரபிகள் தவறு அல்லது பாவம் செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று போதித்து வந்தார்கள். பேதுரு இதை உள்வாங்கிக் கொண்டு, மூன்றோடு மூன்றைச் சேர்த்து, அத்தோடு இன்னொன்றைச் சேர்த்து, இயேசுவிடம் ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார்.
பேதுரு இயேசுவிடம் இப்படிச் கேட்பதன் மூலம், அவர் தன்னைப் பாராட்டுவார் என்று நினைத்திருக்கக் கூடும். காரணம் ஏழு என்பது முழுமையைக் குறித்து நிற்பதால்; ஆனால், இயேசு பேதுருவைப் பாராட்டவில்லை. மாறாக, அவர் பேதுருவிடம், அதைவிடப் பெரிதான ஒரு செயலைச் செய்யச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்
“...ஏழுமுறை மட்டுமா?” என்று கேட்ட பேதுருவிடம் இயேசு, “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை” என்கின்றார் இதன் மூலம் இயேசு பேதுருவிடம், ‘உனக்கெதிராகப் பாவம் செய்யும் சகோதரர், சகோதரியை நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்’ என்று சொல்கின்றார். இதற்காக இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார்.
இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னிடம் மிகுதியாகக் கடன்பட்டிருந்த பணியாளரின் கடனை முழுவதும் தள்ளுபடி செய்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மன்னர் தன்னிடம் பணிபுரிந்து வந்த பணியாளரை முழுவதும் மன்னிக்கின்றார் என்று சொல்லலாம். ஆனால், மன்னரிடமிருந்து மிகுதியாக மன்னிப்பைப் பெற்ற பணியாளரோ, தன்னிடம் குறைந்த அளவே கடன்பட்டிருந்த பணியாளரின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவரை மன்னிக்காமல், சிறையில் அடைக்கின்றார். இதை அறிய வரும் மன்னர், மன்னிக்க மறுத்த பணியாளரைச் சிறையில் அடைக்கின்றார்.
இந்த உவமையில் வருகின்ற மன்னர், நம்முடைய விண்ணகத் தந்தை போன்று. எப்படி இந்த மன்னர் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றாரோ, அப்படி விண்ணகத் தந்தை நம்மைத் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றார். விண்ணகத் தந்தை மட்டும் நாம் செய்த குற்றங்களை மன்னியாது இருப்பார் எனில், திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போன்று, அவருக்கு முன்பாக யாரும் நிலைத்திருக்க முடியாது (திப 130: 3). கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதற்குச் சான்றே, நாம் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதுதான்.
விண்ணகத்தந்தை நம்மைத் தாளராமாய் மன்னிக்கின்றார்; ஆனால், நாம்தான் நம்மோடு இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கத் தயாராத இல்லை. அதைத்தான் உவமையில் வரும் மன்னிக்க மறுத்த பணியாளர் நமக்கு உணர்த்துகின்றார். விண்ணகத் தந்தை நம்மைத் தாரளாமாய் மன்னித்தும், நாம் நம் சகோதரர், சகோதரிகள் செய்யும் குற்றங்களை மன்னிக்காமல், பழிவாங்கத் துடித்தால், நமக்கு என்ன நேரும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து தொடர்ந்து நாம் சிந்திப்போம்.
நீங்கள் அளக்கும் அளவையாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது, உன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று வாசிக்கின்றோம். ஆம், எப்பொழுது நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கின்றோமா, அப்பொழுதுதான் இறைவனால் நம்முடைய குற்றங்களும் பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன. இதையேதான் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில் குறிப்பிடுகின்றார் (மத் 6:14).
இன்றைக்குப் பலர் பிறர் செய்த குற்றங்களை மன்னியாமல், பழிக்குப் பழி என வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். வழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்கின்றார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஆகையால், நாம் பழிக்கு பழி என்ற எண்ணத்தை விட்டொழித்து, பிறர் செய்யும் குற்றங்களை நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளாமாய் மன்னித்து, அவர் நமக்கு அருளுகின்ற மன்னிப்பையும், நலவாழ்வையும் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘மன்னிப்பு என்பது ஒரு கைதியைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு இணையானது. அந்தக் கைதி வேறு யாருமல்ல, நீங்களே’ என்பார் லெவிஸ் பி.ஸ்மெதஸ் (Lewis B.Smedes) என்ற அறிஞர். ஆகையால், நமக்கு விடுதலையும், நலமும் தருகின்ற மன்னிப்பு என்ற பண்பை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம்; விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய் ஒருவர் செய்த குற்றத்தை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
பொதுக்காலம் 24ம் ஞாயிறு
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களும், முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டபோது, கிளிண்டன், அவரிடம், "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று ஆரம்பித்து, "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, அந்த முகத்தில் நான் கண்ட கோபம், வெறுப்பு இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று தயங்கித் தயங்கிப் பேசினார். அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், இவ்வாறு பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இருவேறு திசைகளில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்துவிட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலையுண்டு போயினர். இப்போது அவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப்போகும் உலகில், உனக்கென ஒன்றும் இல்லை' என்று எனக்குள் ஒலித்த குரல், என்னுள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டது. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது. 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே' என்று இந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது. இரண்டாவது குரலைப் பின்பற்ற முடிவு செய்தேன்" என்று மண்டேலா அவர்கள் விளக்கமளித்தார். - Tony Campolo “Let Me Tell You a Story” (2000)
நல்லதை எடுத்துச் சொன்ன மனசாட்சியின் குரலுக்கு, நெல்சன் மண்டேலா அவர்கள் செவிமடுத்ததால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்தது. தன் எஞ்சிய வாழ்நாட்களை சுதந்திரமாக வாழந்த நெல்சன் மண்டேலா அவர்கள், 2013ம் ஆண்டு, தனது 96வது வயதில், தலை சிறந்த ஒரு தலைவராக, மனிதராக, இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். 27 ஆண்டுகள் அநீதமாக சிறைவைக்கப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், தன் வாழ்நாளெல்லாம் வெறுப்பு என்ற சிறைக்குள் வெந்து போயிருப்பார். வரலாற்றில், ஒரு மாமனிதர் என்று, தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புத வரமான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ், அமைதிக்கென உருவாக்கிய அந்த அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.
இயேசு, தன் பணிவாழ்வில் பலமுறை, மன்னிப்பைப்பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். மன்னிப்பைப்பற்றி இயேசு சொன்னவற்றை, செய்தவற்றையெல்லாம் சிந்திக்க பல நாட்கள் தேவைப்படும். இன்று, அவர், மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான், பேதுருவுக்கும் எழுந்தது. அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
மத்தேயு நற்செய்தி 18: 21-22 அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”
ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டி, பெருக்கி, கணக்கு போட ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள். யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ள எண்ணங்களாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.
இயேசு சொன்னதை, நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.
இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சுவிடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்ன கல்வாரி நிகழ்வு நமக்கு நினைவிருக்கும், இல்லையா?
இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இன்றைய சிந்தனையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்ட நெல்சன் மண்டேலா. மன்னிப்பை மையப்படுத்தி வெளிவந்துள்ள பல செய்திகளில், என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட ஒரு செய்தி இது.
2008ம் ஆண்டு Laura Waters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, திரையில் தோன்றும் முதல் வரிகள் இவை: "சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40,000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப் போகிறார்கள்." மனதை அச்சுறுத்தும் இவ்வரிகளுடன் இந்த ஆவணப்படம் ஆரம்பமாகிறது.
ருவாண்டா நாட்டில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70,000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.
மனதைத் தொடும் பல காட்சிகள், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சி. இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப்படம், பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, 2009ம் ஆண்டு, இதேத் தலைப்பில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. Catherine Larson என்பவர் எழுதிய இந்நூல், பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.
இந்த ஆவணப் படத்தில் மன்னிப்பைப் பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதேபோல், இவர்கள், தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."
நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."
கட்டுப்பாடின்றி நம் உள்ளங்களில் வளர்ந்துவிடும் உணர்வுகளால் உருவாகும் ஆபத்தைக் கூறும் ஒரு கதை இது. பிரெஞ்சு எழுத்தாளர், விக்டர் ஹியூகோ (Victor Hugo) அவர்கள் தன் வாழ்வில் இறுதியாக எழுதிய தொண்ணூற்று மூன்று (Ninety Three) என்ற நாவலில் இடம்பெறும் கதை இது: நடுக்கடலில் சென்ற கப்பலொன்று புயலில் சிக்கியது. காற்றின் வேகத்தால் பல திசைகளிலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்ட வேளையில், திடீரென கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும் ஓசை ஒன்று எழுந்தது. அடித்தளத்தில், சங்கியால் பிணைத்து வைக்கப்பப்பட்டிருந்த பீரங்கி வண்டி, கட்டவிழ்த்து, கப்பலின் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தது என்பதை, கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர். அவர்களில் இருவர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கீழ்த்தளத்திற்குச் சென்று, பீரங்கி வண்டியை மீண்டும் சங்கிலியால் பிணைத்தனர். வெளியில் வீசும் புயலைவிட, கப்பலுக்குள் கட்டவிழ்க்கப்பட்ட பீரங்கி வண்டி, கப்பலுக்கு விளைவிக்கக்கூடிய அழிவு பெரும் ஆபத்தானது என்பதை பணியாளர்கள் உணர்ந்ததால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த முயற்சியை மேற்கொண்டனர். அதைப்போலவே, நம் மனங்களில் கட்டுப்பாடின்றி அலைபாயும் வெறுப்பு உணர்வுகள், வெளி உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைவிட அதிக ஆபத்தானவை.
வெறுப்பு, வேதனை என்ற புயல்களும், சூறாவளிகளும் வீசிக்கொண்டிருந்த நாத்சி வதை முகாம்களில், மன்னிப்பு என்ற தென்றலை வீசச் செய்தவர்கள், மனித குலத்திற்கு நம்பிக்கையைக் கொணரும் திருத்தூதர்கள். நாத்சி வதை முகாம் ஒன்றில், சுவற்றில் காணப்பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். ஒரு செபம் போல ஒலிக்கும் இந்த வரிகளுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். “இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவற்றையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும்போது, அவர்கள் விளைவித்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”
"மன்னிப்பு: விடுதலையின் திறவுகோல்!"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 18:21-35), பேதுரு "ஏழு முறை மன்னிக்கலாமா?" எனக் கேட்கிறார். இயேசுவோ "எழுபது தரம் ஏழு முறை" (எல்லையற்ற முறை) மன்னிக்கச் சொல்கிறார்.
1. மன்னித்தால்தான் மன்னிப்பு ( Forgive to be Forgiven )
முதல் வாசகத்தில் (சீராக் 27:30 – 28:7) ஒரு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது: "மனுமகன் தன் சக மனுமகன் மீது சினம் கொள்கிறான்; ஆனால் ஆண்டவரிடம் நலம்பெறத் தேடுகிறான்."
• சிந்தனை: நம் இதயத்தில் மற்றவர்மீது பகைமையையும் கசப்பையும் வைத்துக் கொண்டு, இறைவனிடம் மட்டும் மன்னிப்புக் கேட்பது ஒரு ஏமாற்று வேலை. நாம் மற்றவர்களுக்குக் காட்டும் இரக்கமே, இறைவன் நமக்குக் காட்டும் இரக்கத்தின் அளவுகோலாக மாறுகிறது.
2. கணக்கிலற்ற கடன் ( The Unpayable Debt )
இயேசு ஒரு உவமையைக் கூறுகிறார்: பத்தாயிரம் தாலந்து கடன் பட்ட ஒரு ஊழியன், தன் அரசனிடம் கெஞ்சியபோது அவன் கடன் முழுதும் மன்னிக்கப்பட்டது. ஆனால், அதே ஊழியன் தன்னிடம் வெறும் நூறு தேனாரியம் கடன் பட்ட சக ஊழியனை மன்னிக்காமல் சிறையிலிட்டான்.
• விளக்கம்: நாம் கடவுளுக்குப் பட்டிருக்கும் பாவக்கடன் மிகப்பெரியது (பத்தாயிரம் தாலந்து). அதை அவர் சிலுவையில் தம் இரத்தத்தால் மன்னித்தார். நமக்கு எதிராக மற்றவர்கள் செய்யும் தவறுகள் (நூறு தேனாரியம்) மிகச் சிறியவை. கடவுளிடம் பெரிய மன்னிப்பைப் பெற்ற நாம், பிறருக்குச் சிறிய மன்னிப்பைக் கொடுக்க ஏன் தயங்குகிறோம்?
3. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஆண்டவருக்கே ( Living for the Lord )
இரண்டாம் வாசகத்தில் ( உரோமையர் 14:7-9 ) புனித பவுல் கூறுகிறார்: "நம்மில் எவரும் தமக்கென்று வாழ்வதில்லை... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்."
• பாடம்: நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்றால், ஆண்டவரின் சுபாவமான "மன்னிப்பு" நம்மிடம் இருக்க வேண்டும். பழிவாங்குதல் என்பது சாத்தானின் குணம்; மன்னிப்பு என்பது இறைவனின் குணம்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் ( CTA )
மன்னிப்பு என்பது ஒரு உணர்வு அல்ல, அது ஒரு முடிவு ( Decision ). இந்த வாரம் நாம் செய்ய வேண்டியவை:
• பட்டியலை எரியுங்கள்: உங்கள் மனதில் யாரைப் பற்றியாவது கசப்பான நினைவுகள் அல்லது "இவரை மன்னிக்கவே மாட்டேன்" என்ற எண்ணம் இருந்தால், அதை இன்று பலிபீடத்தில் விட்டுவிடுங்கள். பழிவாங்கும் எண்ணம் உங்களைத்தான் சிறையிலடைக்கும்; மன்னிப்பு உங்களை விடுவிக்கும்.
• மன்னிப்புக் கேளுங்கள்: நீங்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், தயங்காமல் அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேளுங்கள். தாழ்ச்சியே மன்னிப்பின் முதல் படி.
• இறைவனின் இரக்கத்தை நினையுங்கள்: இந்த வாரம் ஒருமுறை ஒப்புரவு அருட்சாதனம் ( Confession ) பெற்று இறைவனின் பெரிய மன்னிப்பை அனுபவியுங்கள். அது பிறரை மன்னிக்க உங்களுக்குப் பலம் தரும்.
• செபத்தில் நினைவு கூர்தல்: உங்களைப் பகைப்பவர்களுக்காக இந்த வாரம் ஒரு 'மகிழ்ச்சியான மறைபொருள்' செபமாலையை ஒப்புக்கொடுங்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சலுகை அல்ல; அது உங்கள் இதயத்தின் அமைதிக்காக நீங்கள் எடுக்கும் ஒரு புனிதமான முடிவு. நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு அடையாளமே நம்மிடம் இருக்கும் மன்னிக்கும் பண்புதான்."
பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (சீரா. 27:30; 28:1-7)
விவிலியத்தின் ஞான நூல்களுள் இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்டிருக்கும் சீராக் நூல் மிக முக்கியமானது. இதன் பெயர் 'சீராவின் மகனான ஏசுவின் ஞானம்' என்பதே. ஆக, இதை எழுதியவர் ஏசு என்பவர் என்பது தெளிவு. இதன் சொல்லோட்டம் ஏறத்தாழ நீதிமொழிகள், யோபு, சபை உரையாளர் புத்தகங்களில் உள்ளது போலவே இருக்கிறது. குறிப்பாக அறிவுரைகளும், மெய் சொற்றொடர்களும் இப்புத்தகத்திலே மலிவு. ஏறத்தாழ கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். இந்நூல் இணைத் திருமுகம் என்ற ஒரு பிரிவைச் சார்ந்தது. அதாவது, இதனோடு சேர்ந்த 6 பிற நூல்கள் எபிரேய விவிலியத்தில் இடம்பெறாமல், கிறிஸ்தவ விவிலியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால் இணைத்திருமுகம் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாசகம் எடுக்கப்பட்டிருக்கும் பகுதி சீராக் நூலின் 5-வது பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக, மனைவியர், குழந்தைகள், செல்வம், நேர்மை, கடன் வழங்குதல், உடல் நலம், பொதுவிடங்களில் பழக்க வழக்கங்கள் போன்ற பலவாறான அறிவுரைகளைக் கொண்டுள்ளது இப்பகுதி. பொதுவாக குடும்பம், சமூகம், பழக்க வழக்கங்கள் முதலிய கருத்துக்கள் காணக்கிடக்கின்றன. இன்றைய முதல்வாசகத்தில் சினங்கொள்ளுதல், மன்னிப்பு போன்றவையே மையக்கருத்தாக அமைகின்றது.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 14:7-9)
இது பவுலால் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இறையியல் தாக்கம் அதிகமிருக்கும் இத்திருமடலில் இறுதிப்பகுதியான இப்பகுதி (12:1-15:13) இல் அதிக வாழ்க்கை நெறிமுறைகள் பற்றிய அறிவுரையைத் தருகிறார் பவுல். இப்பகுதியில், அன்பு செய்பவர்களாக கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும், நல்ல குடிமக்களாக தலைமையில் இருப்போருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் எனவும், உணவு பழக்கங்கள், தூய நாட்கள் முதலியன பற்றியும் உலக இறுதி பற்றியும் பல அறிவுரைகளைத் தருகிறார்.
குறிப்பாக இன்றைய இரண்டாம் வாசகம், கிறிஸ்தவர்கள் தங்களுக்காகவோ பிறருக்காகவோ நன்மையைச் செய்யாமல், அனைத்தையும் கிறிஸ்துவுக்காக செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார் ஆசிரியர். மேலும், இயேசு கிறிஸ்து பிறருக்காக வாழ்ந்தார். பிறருக்காக மரித்தார். அவ்வாறு வாழ்ந்து மரித்த கிறிஸ்துவிற்காக கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும். மரிக்க வேண்டும், என்று பாடம் புகட்டுவதாக அமைகின்றது. மேலும், கிறிஸ்துவில் அனைவரும் ஓர் இனம், பிரிவினைகள் அற்றவர்களாக இருக்க அழைப்புவிடுக்கிறது இவ்வாசகம்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 18:21-35)
இந்நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. பேதுரு தாம் பெருந்தன்மையோடு இருப்பதைக் காட்ட எண்ணி இயேசுவிடம் இக்கேள்வியை கேட்கிறார்: 'எனக்கெதிராக பாவம் செய்தவரை நான் ஏழு முறை மன்னித்தால் போதுமா?' என்று. இயேசு இன்னும் பெருந்தன்மையாக இரு ! என்பதை அறிவுறுத்தி, அதே கருத்தையே உவமையின் வாயிலாக விளக்குகிறார்.
இந்த உவமையானது மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலை: அரசரும் பணியாளரும் அரசன் ஒரு புற இனத்தவன். பணியாள் சொந்த செலவினாலோ, தன் பண ஆசையாலோ அரசரின் பணத்தை பெற்றதாகத் தெரியவில்லை. மாறாக, அரசரின் செல்வத-தை முறையாக கவனியாமல் வந்த கடன் என்கிறார்கள் அறிஞர்கள். ஏனென்றால், 10,000 தாலந்துகள் என்பது ஒரு பெரிய தொகை. ஏரோது தம் பகுதியில் வரி வசூலிக்கும் தொகையே வருடத்திற்கு 900 தாலந்துகள் தான். 10,000 தாலந்துகள் என்பது அண்டை பகுதிகளான சீரியா, பினிசியா, யூதேயா, சமாரியா ஆகியவைகளின் வரித் தொகையை கூட்டினாலும் சரிவராது. ஆக, இயேசு புகட்ட விரும்பும் பாடம் விலக்கப்பட்ட அந்த கடன்தொகை மிகப் பெரியது. அவன் வாழ்நாள் முழுதும் உழைத்தாலும் அதை கட்டமுடியாது என்பதே.
இரண்டாவது பகுதி: பணியாளும் மற்ற பணியாளர்களும். இப்பகுதியில் கடன் விலக்கு வாங்கிய பணியாள் தம் சக பணியாளரோடு எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பது விளக்கப்படுகிறது. தான் விலக்கு வாங்கிய கடன் தொகை எண்ணிலடங்காதது. ஆனால், இவனிடம் கடன்பட்டவரின் தொகை எளிதில் திருப்பிக் கொடுக்கக்கூடியதுதான். இந்த வித்தியாசத்தை உணர்த்த விரும்புகிறார் இயேசு. மூன்றாவது பகுதி: அரசரும் பணியாளரும். இதிலே அரசர் தாம் கொடுத்த மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுகிறார். அந்த பணியாள் தான் அனுபவித்த மன்னிப்பை பிறருடன் பகிரத் தவறியதால் கொடுக்கப்பட்ட மன்னிப்பு திரும்ப எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமன்றி, மன்னியாததால் அப்பணியாள் வதைக்கப் படுகிறார். இறைவனிடம் பெற்றுக்கொண்ட அளப்பறிய மன்னிப்பை பிறருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதை விளக்குவதாக அமைகிறது இவ்வுவமை.
மறையுரை
அமெரிக்காவில் ஒரு சிறுவன் வெள்ளை மாளிகை முன் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த காவலர் அவனிடம் 'என்ன பார்க்கிறாய்?' என்றார். அவனோ வெகுளித்தனமாக, 'இதை நான் வாங்க வேண்டும். இது என்ன விலை இருக்கும்?" என்றான். காவலர் சிரித்தார். பின்னர் கூறினார்: 'இதை உன்னால் வாங்க முடியாது. மேலும் இதை யாரும் விற்பதாகவும் இல்லை. ஏனென்றால் நீ அமெரிக்க குடிமகனாக இருப்பதனால் இது ஏற்கெனவே உன்னுடைய சொத்து. உன் சொத்தை நீயே வாங்கமுடியுமா?' என்றார். சிறுவன் புரிந்துகொண்டு புன்சிரிப்புடன் சென்றான்.
(1) மன்னிக்கப்பட்டுள்ளோம் எனவே மன்னிப்போம்.
இதே போல்தான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு சொத்து என்று ஒன்று உள்ளது. உலகத்திற்கே அது தெரியும். கிறிஸ்தவராய் இருந்தால் அவர் அந்த சொத்தைக் கொண்டவராய்தான் இருப்பார். அதுதான் மன்னிப்பு. கிறிஸ்தவர்கள் மன்னிக்கப் பிறந்தவர்கள் என அனைவருக்கும் தெரியும். மன்னிக்காத கிறிஸ்தவனை மக்கள் மன்னிக்க மறுப்பர். ஏனெனில் கிறிஸ்துவே அந்த முன்மாதிரியை காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். தம்மைக் கொல்பவர்களையும் மன்னித்தார். அவர் வழி பின்பற்றி எத்தனைபேர் அந்த பேறுபெற்ற பாக்கியத்தை - மன்னிக்கும் பாக்கியத்தை பெற்றனர். எத்தனை புனிதர்கள், எத்தனை மறைசாட்சிகள், எத்தனை மனிதர்கள். எண்ணிலடங்காதவை. கிறிஸ்தவர்களாகிய நமக்கு மன்னிக்க வேண்டும் என்று போதனை செய்வது, கதையிலே அந்த சிறுவன் கேட்டதைப்போலவே ஆகிவிடும். தமக்கு ஏற்கெனவே சொந்தமாக இருப்பதை மறுபடியும் பெற்றுக்கொள்ள நினைத்தல் அறிவார்ந்த செயலாகாது.
ஆனால், நம் வாழ்வு எவ்வாறு உள்ளது? நம் சொந்தமாகிய அந்த மன்னிக்கும் மனப்பான்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ளோமா? அல்லது, சாதாரண வேறு ஒரு மனிதனைப்போல் மன்னிக்கும் மனமில்லாமல்தான் வாழ்கிறோமா? இதைச் சிந்திக்கவே அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. குறிப்பாக, இன்றைய திருவாசகங்களின் மையக்கருத்து ஒன்று! நாம் மன்னித்தால்தான் இறைவன் நம்மை மன்னிப்பார் என்பதே! இதை வேறு சொற்களில் சொல்ல எண்ணினால், இறைவன் நம்மை எத்தகைய அளவிற்கு மன்னிக்கிறார். அவ்வாறெனில், நாம் எவ்வாறாக மற்றவரை மன்னிப்பவராக இருக்க வேண்டும்?
(2) எவ்வாறு மன்னிப்பது?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவிடம் 'நான் எத்துணை முறை மன்னிக்க வேண்டும்' என்று கேட்டதோடு நின்றுவிடாமல், 'ஏழு முறை போதுமா?' என்ற பாணியிலே கேட்கிறார். 7 என்பது முழுமையின் எண். 7 முறை என்றால் மிக அதிகமான ஒரு செயலைக் குறிப்பதாக அர்த்தம். தான் எவ்வளவு பெருந்தனமையோடு இருக்கிறேன் என்பதைக் காட்ட பேதுரு இவ்வாறு கேட்க, இயேசுவின் பதில் இன்னும் பயங்கரமாக இருக்கிறது. 'ஏழு முறை மட்டுமல்ல, ஏழுமுறை எழுபது' என்கிறார். அதாவது, முழுமையின் எண்ணாகிய 7 முறை மட்டும் போதாது. இன்னும் 7 என்ற எண்ணை பத்து மடங்காக்கினால் எவ்வளவு வருமோ அவ்வளவு மன்னிக்க வேண்டும் என்கிறார். இதில் கவனிக்கவேண்டியது எத்தனை முறைகள் என்பதையல்ல! மாறாக, மறுபடியும் மறுபடியும் மன்னிக்கும் மனம் கிறிஸ்துவின் சீடர்களிடத்திலே இருத்தல் வேண்டும் என்பதை குறிப்பிடுகிறார் இயேசு. மன்னிப்பில் கணக்கு வைப்பவர் மன்னிப்பதே கிடையாது.
அத்தோடு விட்டுவிடாமல் ஒரு உவமை வாயிலாக இன்னொரு கருத்தையும் விளக்க முனைகிறார். இந்த உவமையின் ஆழமான அர்த்தம் தெரிந்துகொள்ள அதில் வரும் கடன் தொகையை புரிந்துகொள்ளுதல் அவசியம். அந்த அரசர் கொடுத்த கடன் தொகை பத்தாயிரம் தாலந்து. முன்னர் ஒரு தாலந்து என்பது சுமார் 34 கிலோ எடையுள்ள தங்கத்திற்கு ஒப்பாகும். ஆனால், இயேசுவின் காலத்தில் ஒரு தாலந்து என்பது 4.5 கிலோ வெள்ளிக்கு ஒப்பாகும். தற்போதுள்ள மதிப்பின்படி ஒரு தாலந்து சுமார் 2700 ரூபாய்க்கு ஒப்பாகும். அப்படியென்றால், 10,000 தாலந்து என்பது 270,000,000ரூபாய் அதாவது 27 கோடி ரூபாய்க்கு ஒப்பாகும். அரசர் அந்த கடன்பட்டவருக்கு தள்ளிவைத்த தொகை ரூ.27 கோடி.
ஆனால், ஒரு தெனாரியம் என்பது 75 மில்லி கிராம் எடையுள்ள வெள்ளி. இயேசுவின் காலத்தில் இதுவே ஒரு நாள் கூலியாகக் கொடுக்கப்பட்டது. இன்றைய உவமையில் வரும் அந்த பணியாளர் தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளரை கட்டாயப்படுத்துகிறான். 100 தெனாரியம் என்பது சுமார் ரூ. 50 மட்டுமே. இயேசு காட்ட விரும்பும் வித்தியாசம் இது தான். அரசர் 27 கோடி ரூபாய் கடனை தள்ளுபடிசெய்ய, அந்த பணியாளோ வெறும் 50 ரூபாய்க்காக தன்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளை சித்திரவதை செய்கிறான். அரசர் கேட்கும் கேள்வி நியாயமான கேள்வி. 'நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?
இதே போல்தான் நாமும் நடந்து கொள்கிறோம். இறைவன் நமது எத்துனை பெரிய பாவங்களை மன்னிக்கிறார். தம் பேரிரக்-கத்தைக் காட்டி எவ்வாறு நம்மை ஏற்றுக்கொள்கிறார். அத்துனை பேரன்பை சுவைத்த நாம், நம் சகோதர சகோதரிகளுக்கு அதே பேரிரக்கத்தையும், பேரன்பையும், மன்னிப்பையும் காட்ட கடமைப்பட-வில்லையா? இதே கருத்தைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் சீராக் புத்தகத்தில் வாசிக்கக் கேட்டோம். "நீங்கள் மற்றவரின் அநீதியை மன்னித்துவிடுங்கள். அப்பொழுதுதான் ஆண்டவர் உங்கள் பாவங்களையும் மன்னிப்பார்” என்பதே அது. கிறிஸ்தவர்களின் செபமாகிய 'பரலோகத்தில்' மந்திரத்திலும் இதைத்தான் மன்றாடுகி-றோம். 'எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது-போல எங்கள் பாவங்களையும் மன்னியும்' என்று. இது ஒரு நிபந்தனை போன்றது. நாம் மற்றவரது பாவங்களை மன்னித்தால்தான் கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார்.
(3) மன்னிப்பது தெய்வ இயல்பு
மன்னியாது இருப்பதற்கு என்ன காரணம்? முதற்காரணம் நமது ஆணவம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே. சுயமதிப்பு அளவு மீறினால் கொல்லும் செய்தியாகிவிடும். அதுதான் ஆணவமும், நான் என்ற அகந்தையும். இவை இருந்தால் எந்த ஒரு உறவு வாழ்க்கையும் சீர்ப்படாது. சீரழிந்துபோகும். இந்த ஆணவத்தினால் தான் நாம் மன்னிக்க மறுக்கிறோம். நமக்கு நடந்த இழப்பை எண்ணி, பிறர் நமக்கு செய்த துரோகத்தை எண்ணி, மனதிற்குள்ளே அதை புதைத்து, அதற்கு உரமிட்டு நீரிட்டு வளர்த்து, அதை வெறுப்பு என்ற பெரிய ஆலமரமாக வளர்த்துவிடுகிறோம். பின்னர் மன்னிக்காத கொடூரர்களாக வாழ்கிறோம். இதற்கு அடிப்-படை காரணம் நமது ஆணவப்போக்கு. இதை தகர்த்தால் வாழ்வு சீராகும். சீராக் புத்தகமும் இதைத்தான் கூறுகிறது. 'குற்றங்களை பெரிதுபடுத்தாதே! பகைமையை அகற்று. உன் முடிவை நினைத்துப்-பார். அழிவையும் சாவையும் நினைத்துப்பார்.'
(4) மன்னிப்போம் மறப்போம் அதுவே புது உறவு
ஒரு சில பேர் கூறுவார்கள்: என்னால் மன்னிக்க முடியும், ஆனால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மறத்தல் என்பது நமது மனத்தின் வேலை. செய்த துரோகத்தை, அநீதத்தை, வெறுப்பை மறத்தல் கடினம்தான். செய்த நபரை பார்க்கும்போ-தெல்லாம் அவர் நமக்கு செய்த கொடுமைதான் முன்னால் தெரியும். உண்மைதான். ஆனால், மன்னிப்பு என்பது மறத்தலையும் உள்ளடக் கியது. அந்த பழைய சுவடுகள் உள்ளத்தில் இருந்தாலும் மன்னிப்பு என்னும் ஆயுதத்தால், அன்பு என்னும் படைக் கலத்தால் வெறுப்பு என்னும் எதிரியை நம்மால் சமாளிக்க முடியும். மறத்தல் பெரிய மலைபோன்ற காரியமல்ல. கொடுமை செய்த நமது சகோதர சகோதரிகளின் மேல் அன்பை வளர்த்துக்கொண்டால், நன்மதிப்பை வளர்த்துக்கொண்டால், அவர்கள் செய்த பாவம் நம் கண்முன் வராது. மன்னிப்பு அனைத்தையும் மறைக்கும். மறக்கடிக்கும். புதிய கண்ணோட்டம் பிறக்கும். 'நாம் ஒன்றும் பெரிய மகான்களல்ல. நாமும் இது போன்ற துரோகங்களும், அநீதிகளும் செய்துள்ளோம்' என்பதை தாழ்ச்சி நிறைந்த மனதுடன் புரிந்துகொண்டால், நிச்சயம் பிறர் செய்த பாவங்கள் மலையென தெரியாது. மணலென மாறிவிடும். தாழ்ச்சியும் மன்னிப்பும் பிண்ணிப் பினைந்தவை.
(5) அன்பால் மன்னிப்போம், தேவைக்காக அல்ல
மன்னிப்பில் இறுதியான ஒரு அம்சம் உண்டு. அன்பு இருந்தால் மன்னிப்பிற்கு அவசியமே இல்லாமல் போய்விடும். நம் ஆண்டவரின் அன்புக்கட்டளையை என்றும் மறத்தல் கூடாது. 'நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்' என்பதே அது. அன்பு இருந்தால் மன்னிப்பிற்குரிய வேலையே இராது. அறிஞர்கள், "கிறிஸ்தவம் எதிரிகளை அன்பு செய்ய வேண்டும் என்கிறது. எதிரிகளே இல்லாத நிலையை அடைந்துவிட்டால் அவர்களை அன்பு செய்ய வேண்டிய கட்டாயம் எழாதல்லவா' என்று கூறுவார்கள்.
அதேபோல்தான் அன்பு என்பது இருந்து விட்டால் மன்னிப்பே தேவையற்றதாகிவிடுகிறது. தாய் தான் பெற்றெடுத்த மகவின் தவறுகளை மனதில் இருத்தி வெறுப்புகொள்வாளோ? அல்லது அன்புத்தீயால் வெறுப்பை கருக்கி விடுவாளா? பிள்ளைமேல் உள்ள அன்பு மன்னிப்பை சாகடித்துவிடுகிறது. தாய்-சேய் உறவில் மன்னிப்பு என்பதே தேவையற்றதாகிவிடுகிறது.
காதலர்கள் தங்களுக்குள் நடக்கும் பூசல்களை மனதில் இருத்தி வெறுப்பை வளர்த்து வந்தால் அவர்களுக்குள் காதல் மலறுமா? இல்லை அழிந்துபோகும். அன்பு, நடந்த தவறுகளின் பட்டியலை வைத்துக்கொள்வதில்லை. காதலர்களிடையே மன்னிப்பு என்பதே தேவையற்றதாகிவிடுகிறது. காரணம் அவர்களுள் இருக்கும் காதல். இதே அன்புதான் உலக மாந்தர் அனைவரிடமும் இருக்க வேண்டியது.
ஒவ்வொருவரும் மற்றவரை அன்பு செய்தால், மன்னிக்கத் தேவையற்றவர்களாக மாறிவிடுவர். அன்பே பிரதானமாகிவிடும். எல்லாம் அன்பு மயமாக இருக்கும்.
அவ்வாறிருக்கையில், வெறுப்பு இல்லை. அநீதி இல்லை. சினம் இல்லை. அழிவு இல்லை. தீமை இல்லை. எங்கும் அன்பே. நிறைவே. அருளே. எங்கும் நன்மையே. இதுதான் இறையாட்சி. இதுதான் அன்பாட்சி. இதுதான் இயேசு கனவுகண்ட விண்ணரசு. இது மண்ணில் மலர பாடுபடுவோம்.
அன்பை பரப்புவோம்.
மன்னிப்பை வழங்குவோம்.
பெற்றுக்கொண்டதை கொடுக்க
என்ன தயக்கம்!
பெற்றுக்கொள்ளாததையும் கொடுப்பதே
கிறிஸ்தவ பழக்கம்!
பிற மறையுரை கருத்துக்கள்
கிறிஸ்தவ ஒற்றுமை
இரண்டாம் வாசக கண்ணோக்கில் இக்கருத்து அமைக்கப்படுகிறது. தமக்கென வாழாமல், தமக்கென இறக்காமல், ஆண்டவருக்கென்றே வாழ வேண்டும், ஆண்டவருக்கென்றே இறக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் பவுலடிகளார். ஏனெனில் இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார் என்பதை விளக்குகிறார் திருத்தூதர். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவினால்தான் ஒன்றாக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவு. தத்தம் மகிமைக்காகவும், புகழுக்காகவும் வாழாமல், கிறிஸ்துவிற்காகவே வாழவும் இறக்கவும் வேண்டும் என்பது கிறிஸ்தவ ஒற்றுமைக்கு இட்டுச்செல்லும். குறிப்பாக பழக்க வழக்கங்களினாலும், மொழி, இனம் முதலியவற்றாலும் பிரிந்து இருந்த கிறிஸ்தவ சமூகத்திற்கு இவ்வறிவுரையைக் கூறுகிறார் பவுலடிகளார். இன்றைய கிறிஸ்தவ சமூகத்திற்கு இது மிகவும் பொருந்தும். மொழி, இனம், சாதி, கலாச்சாரம் முதலியவற்றால் வேறுபட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து என்ற ஒரு அச்சானியின்கீழ் ஒன்றுபடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி மறையுரையை தொடரலாம்.
பொதுக் காலம் இருபத்தி நான்காம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகம் வெகுளி, சினம், பழிவாங்கல், மன்னித்தல், மன்னிப்புப் பெறுதல் என பல தலைப்புகளைப் பற்றிப் பேசினாலும், இறைவனிடமிருந்து மன்னிப்புப் பெறுதல், பிறரை மன்னித்தல் எனும் கருத்தில் நற்செய்தியோடு ஒத்துப் போகின்றது. இதைப்பற்றி விவாதிக்கும் முன் இன்றைய நற்செய்தியின் அமைப்பைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
நற்செய்தியின் அமைப்பு
இன்றைய நற்செய்தி மத் 18:15-35 எனும் நீண்ட பகுதியின் ஓர் அங்கமாகும். இப்பகுதியை பின்வருமாறு இருபகுதிகளாக பிரிக்கலாம்.
1. பாவம் செய்யும் சகோதரரை திருத்துதல் (மத் 18:15-20).
2. பாவம் செய்யும் சகோதரரை எத்தனை முறை மன்னிக்கலாம் (மத் 18:2-35).
இன்றைய நற்செய்தியாக அளிக்கப்பட்ட இரண்டாம் பகுதியைப் பின்வருமாறு மேலும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.
அ. மன்னிப்பதற்கான உயர்ந்த பட்ச அளவு பற்றிய பேதுருவின் வினாவும், இயேசுவின் பதிலும் (வச. 21-22).
ஆ. இரக்கம் காட்ட மறுத்த ஊழியனின் உவமை இயேசுவின் பதிலுக்கான காரணத்தை விளக்குகிறது (வச. 23-34).
இ. இறுதி வசனம் உவமையிலிருந்து பெறப்பட வேண்டிய செய்தியைக் கூறுகின்றது (வச. 35).
இனி இன்றைய நற்செய்தி தரும் இரு முக்கியச் செய்திகளை விளங்கிக் கொள்ள முயல்வோம்.
1. மன்னிப்பதற்கான வரம்பு
“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனைமுறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மட்டுமா?” (வச. 21) என பேதுரு கேட்பது அவர் மன்னிப்பதில் மிகவும் தாராளமா யிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. ஏழுமுறை என்பது - அவருக்கு உச்சபட்சமான தெரிகின்றது. ஆனால் இயேசுவின் பதில் மன்னிப்பதற்கு வரம்பு விதிப்பது என்பது பொருளற்றது என விளக்குகின்றது. கிரேக்க மூலத்தில் கொடுக்கப்பட்ட எண்ணை எழுபத்து ஏழுமுறை என்றோ அல்ல தமிழ்மொழி பெயர்ப்பில் தரப்பட்டுள்ளதுபோல 'எழுபது தடவை ஏழுமுறை' (70x7) அதாவது 490 முறை என்றோ மொழி பெயர்க்கலாம். இத்தனை முறையும் கணக்கு வைத்திருப்பது இயலாது என்பதால், எண்ணில டங்கா தடவைகள் மன்னிக்கலாம், எப்போதும் மன்னிக்கலாம், மன்னிக்க வேண்டும் என்பதே இங்கு செய்தியாகின்றது (மேலும், காண். தொநூ 4:24).
2. இறைவன் நம் குற்றங்களை மன்னிப்பதற்கும் நாம் பிறரை மன்னிப்பதற்கும் உள்ள தொடர்பு
“ஏன் எண்ணிலடங்கா முறை நம் சகோதரர்களின் குற்றங் களை மன்னிக்க வேண்டும்?" என்பதை விளக்க இயேசு இரக்கம் காட்ட மறுத்த ஊழியனின் உவமையைக் கூறுகின்றார். இந்த உவமையின் அமைப்பை ஒரு நாடகக் காட்சிபோல பின்வருமாறு அமைக்கலாம்.
நிகழ்ச்சியின் சூழல் - (வச. 23).
அரசரும் அவரது ஊழியரும் - (வச. 24-27).
ஊழியரும் அவரது உடன் பணியாளரும் (வச. 28-30).
அரசரும் அவரது ஊழியரும் (வச. 31-34). உவமையின் செய்தி (வச. 35).
“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (வச 35) என்பதே இந்த உவமையின் முக்கியச் செய்தியாகும். இங்கு ஒருவர் தம் சகோதரரை மன்னிப்பதும், இறைத் தந்தை அவரது குற்றத்தை மன்னிப்பதும் ஒப்புமைப் படுத்தப்படுகின்றது. இவை இரண்டுக்கும் இடையே யுள்ள பாரதூர வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள உவமை அரசன் தள்ளுபடி செய்த பத்தாயிரம் தாலந்தையும், ஊழியன் மன்னிக்க மறுத்த நூறு தெனாரியத்தையும் புரிந்து கொள்வது அவசிமாகின்றது.
பழங்கால யூத நாணய மதிப்பின்படி ஒரு தெனாரியம் என்பது ஒரு மனிதனின் ஒருநாள் சராசரி கூலியாகும் (காண் மத் 20:2). எனவே ஊழியன் தள்ளுபடி செய்ய மறுத்தது ஏறக்குறைய மூன்று மாத சம்பளம் அல்லது உழைப்பு. ஆனால் ஒரு தாலந்து என்பது ஆராயிரம் முதல் பத்தாயிரம் தெனாரியம் ஆகும். ஆக பத்தாயிரம் தாலந்து சம்பாதிக்க ஒருவன் எவ்வளவு நாள் உழைக்க வேண்டும், எதையெல்லாம் விற்கவேண்டும் என நாம் கற்பனை செய்து கொள்ளலாம். அவ்வளவையும் தள்ளுபடியாகப் பெற்ற ஒருவன் தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டவனின் கடனை மன்னிக்க மறுக்கின்றான் என்பதே உவமையின் செய்தி.
இதை இறைவன் நம் பாவங்களை மன்னிப்பதற்கும், நாம் பிறர் குற்றங்களை மன்னிப்பதற்கும் பொருத்திப் பார்க்கும் போது, இறைவன் நம் எண்ணிலடங்காப் பாவங்களை எப்போதும் மன்னிக்கத் தயாராயிருக்கின்றார். ஆனால் அந்த மன்னிப்பைச் சுவைக்க நாம் நம் உடன் சகோதர சகோதரிகளின் குற்றங்களை மன்னிக்க வேண்டும். அடுத்தவரை மன்னிக்க நாம் தயாராயில்லாத போது கடவுளும் நம்மிடம் 'நீதி'யாக நடந்துகொண்டு நம்மைத் தண்டிப்பார் என்பதே இன்றைய நற்செய்தி தரும் பாடமாகும்.
அடுத்தவர் குற்றங்களை கணக்கு வைக்காமல் மன்னித்து இறைவனின் அளவில்லா மன்னிப்பை அனுபவிப்போம்.
பொதுக்காலம் - இருபத்து நான்காம் ஞாயிறு
முதல் ஆண்டு
முதல் வாசகம் : சீஞா. 27 : 33 - 28; 1 - 9
வாழ்வுக்கு வேண்டிய அறிவுரைகளை அதிகமாகக் கொண்டது சீராக்கின் ஞானம். இவை காலத்தை வென்றவை. சட்டத்தைச் சரிவர அனுசரிக்கப் பயன்படுபவை. மன்னிப்புப் பற்றிய மாறாத உண்மைகளை இன்றைய வாசகம் கூறுகிறது.
கோபமும் பகையும்
"கோபம் வெறி இவை இரண்டும் வெறுப்புக்குரியன. கோப வெறியால் விலங்குகள் ஒன்றையொன்று அடித்துக்கொண்டு சாகின்றன. கோபத்தால் மனிதனும் விலங்காகிறான்; பாவியாகிறான். "பாவிகளிடம் இவை இரண்டும் உண்டு" (33). தேவைப்படும்பொழுது-ஒழுங்கை நிலைநிறுத்த -மற்றவரைத் திருத்த-சினம் கொள்வது கடமையாகவும் இருக்கலாம். ஆனால் மற்றவனை அழிக்கவேண்டுமென்றுபொங்கி எழும் கோபம் சமுதாயத்திற்கு எதிரான பாவம்: "கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்” (நீமொ.15:1; காண் 12: 16). "ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ''தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்” (மத்.5:22).
“தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் ” (குறள் 205)
கோபவெறி கொண்டவனை இறைவன் தண்டிக்கிறார். கோபத்தை வென்றவனைக் கடவுள் மன்னிக்கிறார். “உனக்குத் தீமை செய்யும் அயலானுக்கு மன்னிப்புக் கொடு; அப்போது தான் நீ மன்றாடும்போது உனக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும் (28:2). "எங்களுக்குத் தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்" என்று செபிக்கக் கற்பித்தார் இயேசு.
முரண்பாடுகள்
மற்றவனை மன்னிக்காத மனிதன், தன்னை மன்னிக்கும்படி கடவுளிடம் மன்றாடுகிறான்; மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாதவன், கடவுள் தனக்கு இரங்கப் பிரார்த்திக்கிறான்; அறிவுள்ளவன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்பவன், அறிவை மறைக்கும் கோபத்திற்கு ஆளாகின்றான் (4:5). இம் முரண்பாட்டைச் சுட்டிக் காட்டும் உவமையே ஆண்டவர் அருளிய “கடன்பட்டவன் உவமை" (மத். 18 : 22 - 39). எந்த அளவையால் அளப்பீர்களோ, அந்த அளவையால் அளக்கப்படும் என்பது ஆண்டவர் இட்ட நிபந்தனை. இறைவனின் மன்னிப்பிற்கும் இரக்கத்திற்கும் எல்லையில்லை எனினும், அவை நமக்குக் கிடைக்க வேண்டுமானால் நாமும் இரக்கம் கொண்டு, மன்னிக்க வேண்டும். "உன்னைப் போல் உன் அயலானுக்கும் அன்பு செய்" என்ற அளவுகோலை நான் பின்பற்றுகின்றேனா?
வேண்டுகோள்
“உன் முடிவுகளை நினைத்துப் பகைமையை விட்டுவிடு.” இறுதி முடிவாகிய மரணம், தீர்வை, மோட்சம், நரகம் என்ற பேருண்மைகள் ஒருவனை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள். "உன் வாழ்வில் முக்கியமான கட்டங்களில், முடிவான தீர்மானங்களை எடுக்கும்பொழுது உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்" என்பது ஞானிகளின் அறிவுரை. எனவே தெய்வ பயத்தோடு நட; "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்” என்கிறது நீதிமொழி (1:7; 9:10; திபா. 110:10).
“உன்னத கடவுளின் உடன்படிக்கையை நினைத்துக் கொள்" என்பது மற்றொரு வேண்டுகோள். உடன்படிக்கை தெய்வத்தின் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்டது; எனவே தெய்வ முத்திரையைப் பெற்றது. இஸ்ரயேல் இனம் இதை ஆமோதித்து “ஆமென்; அப்படியே ஆகக்கடவது' என்றது. தான் வாக்களித்ததை மீறுவது துரோகம். நாமும் திருமுழுக்கில் சாத்தானையும் அதன் ஆரவாரங்களையும் விட்டு விட்டு, கிறிஸ்துவுக்கே ஆளாவோம் என்று வாக்களித்தோம். இதுதான் நாம் செய்து கொண்ட புதிய உடன்படிக்கை, நாம் வாக்களித்ததற்கேற்ப வாழ்ந்து வருகிறோமா?
உனக்குத் தீமை செய்யும் அயலானுக்கு மன்னிப்புக் கொடு.
இரண்டாம் வாசகம் : உரோ. 14 : 7 - 9
தனக்கென வாழாத தயாநிதி நமதாண்டவர். அவர் வாழ்ந்ததும் இறந்ததும் நமக்காகவேயாகும். அப்படியே நம் வாழ்வும் சாவும் இயேசுவில்-இயேசுவுக்காகச் செய்யும் புனித செயலாக இருக்கவேண்டும் என்ற உண்மையைப் பவுல் வலியுறுத்துகிறார்.
தனி மரம் தோப்பாவதில்லை
மனிதன் மற்றவரின் தொடர்பின்றி வாழ்வதில்லை. "நம்முள் எவனும் தனக்கென்று வாழ்வதில்லை; தனக்கென்று சாவதில்லை" (7). ஒவ்வொருவரின் வாழ்வும் இதற்குச் சான்று. "நான் சந்தித்த அனைத்தின் ஒரு பகுதியே மனிதனாகிய நான்" என்பது யுலிசசின் கூற்று. பழைய மரபுகள், முன்னோர்களின் முயற்சியின் விளைவு, நாட்டின் பண்பாடு ஆகிய இறந்த காலக் கூறுகளைக் கொண்டுள்ளான் மனிதன். நிகழ்காலத்தில் நவீன நாகரிகம், புதிய முன்னேற்றம், சமுதாய மாற்றங்கள் ஆகிய அனைத்தாலும் அவன் பாதிக்கப்பட்டுள்ளான்; அவற்றால் உருவாக்கப் பட்டுள்ளான். தன்னுடன் தொடர்புகொண்டவர்களை நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ மாற்றும் சக்தியும் பெற்றுள்ளான். தனி மனிதனின் வாழ்வு எதிர் காலத்தையும் பாதிக்கிறது. ஏனெனில் வருங்கால வாரிசை உருவாக்குபவன் மனிதனே. ஒருவனது நற்பண்புகள் சமுதாயத்தை ஒளிமயமாக்குவது போல, ஒருவனது பாவ வாழ்வும் சமுதாயத்தைத் தீட்டுப்படுத்துகிறது. எனவே நமது சிந்தனையும், சொல்லும் செயலும் தனித்தியங்குவதில்லை. அது சமுதாயத்தைப் பாதிக்கிறது என்பதை உணர்ந்து, நாம் சமுதாயத்தின் உப்பாய், ஒளியாய்த் திகழ வேண்டும்.
இயேசுவில் - இயேசுவுக்காக வாழ்தல்
"வாழ்ந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; செத்தாலும் ஆண்டவருக்கு என்றே சாகிறோம்" (8). ஆண்டவரது பிரசன்னம் ஒரு மறையுண்மை. உயிர்த்த கிறிஸ்துவின் தொடர்பை நம்மால் துண்டித்து விட முடியாது. நிழல் போல் கிறிஸ்து நம்மைத் தொடர்கிறார்.
'ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுள் கலந்து
தேனாய் அமுதாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்
ஆனா அறிவாய் அளவிறந்த பல் உயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய்” (திருவாச)
மரணத்தை வென்ற மாமன்னன் கிறிஸ்து
அவர் “நம்மைப் பாதாளத்தில் விட்டுவிட மாட்டார்; புனிதர் அழிவு காண விடமாட்டார்" (காண் திபா. 15 : 10). எனவே திருமுழுக்கின் பயனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் இருந்தாலும் இறந்தாலும் வாழும் கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டுள்ளான். மீட்கப்பட்ட மக்கள் பாடிய புதியதொரு பாடலைத் திருவெளிபாடு கூறுகிறது; “ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்” (5:9). எனவே மரணத்திற்குப் பின்னர் அனைத்தும் முடிந்து விடுமோ என்ற அச்சமோ, இருட்டறையான பாதாளத்தில் புதைக்கப்படுவோமோ என்ற பயமோ பொருளற்றது.
"எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைத்தால்
அங்கே வந்து என்னோடு உடன் ஆகி நின்று அருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை
ஆளும் நாயகமே” (தேவாரம்)
வாழ்ந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்: செத்தாலும் ஆண்டவருக்கென்றே சாகிறோம்: ஆகவே வாழ்ந்தாலும் செத்தாலும் ஆண்டவர்க்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
நற்செய்தி : மத். 18 : 21 - 35
பிறரைத் திருத்துவதில் கண்டனத்தைவிட மன்னிப்பிற்கே முன்னுரிமை உண்டு என்பதைப் புனித பேதுரு புரிந்துகொண்டார். ஆனால் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் மன்னிக்க வேண்டும்? இந்த வினாவிற்கு விடை தருகிறது இன்றைய நற்செய்தி
ஏழு முறை மன்னிப்பு
'குற்றம் புரிந்தவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறையா?” என்று பேதுரு கேட்பதில் உள்ள உணர்ச்சியைக் கவனிக்க வேண்டும். ஏழுமுறை யாராலும் மன்னிக்க முடியாது; அது மிக அதிகம் என்ற கருத்து அடங்கி இருக்கிறது. ஒருவன் சான்றோன் என்றால் ஏழுமுறை மன்னித்தால் போதும். அதற்கு மேலும் மன்னிக்கக் கடமை இல்லை. சாதாரண மனிதனுக்கு ஏழுமுறை என்பதே பெரிது!
ஏழு என்பது ஒரு பெருந்தொகை; ஆயினும் எண்ணிக்கைக்கு உட்பட்ட தொகை என்றே பொருள் கொள்வர். ஆறுக்கு அடுத்த எண் என்பது ஆகாது. ஆனால் நம் பெருமான் எழுபது முறை ஏழுமுறை என்றதன் மூலம் எண்ணிக்கையற்ற மன்னிப்பு நியாயம் என்கிறார். சாதாரண ஏழு முறையே பெரிது என்றால் அளவற்ற மன்னிப்பு எத்தகையது?
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்” (குறள் 156)
என்று பொறுத்தலின் பெருமையைக் கூறுவார் வள்ளுவர். “உங்கள் விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என்பது நம் பெருமானின் பொன் மொழி அன்றோ?
மன்னிக்கத் தெரியாதவன்
அரசனின் அதிகாரி பல்லாயிரம் தாலந்து கடன்பட்டவன்; குடும்பம் முழுவதும் அடிமைகளானாலும் அடைக்க முடியாத அளவு கடன்! அனைத்தையும் மன்னித்து விடுகிறான் அரசன்!! பத்தாயிரம் தாலந்து என்பது மிக மிகப் பெரிய ஒரு தொகை என்பதையே குறிக்கும்.
இவ்வளவு மன்னிப்புப் பெற்ற ஒருவன் 100 வெள்ளிக்காசு கடன்பட்டவனை மன்னிக்க மறுக்கிறான். ஒரு வெள்ளிக்காசு ஒரு நாளைய மிகக் குறைந்த பட்சக் கூலி. அன்றாடச் செலவிற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடப் பற்றாது. மிக மிக வறியவனால்தான் இக்கடன் தொகையைக் கட்ட முடியாது. அவனும் மன்னிப்புக் கூடக் கேட்கவில்லை. கடனை அடைத்துவிட இன்னும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும்படியே கேட்கிறான். அதற்கும் அதிகாரி இசையவில்லை!
கடவுள் மனிதனை மன்னிப்பதையும், மனிதன் மனிதனைப் பொறுப்பதில்லை என்பதையும் படம்பிடித்துக் காட்டுவது இவ் உவமை.
“வலியோர் முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து” (குறள் 250)
கடனை அடைக்க நீண்ட காலம் தருவது; கடனை மன்னிக்க விரும்பாதது; கடனை முழு மனத்துடன் மன்னித்து விடுவது... என்ற மூன்று நிலைகளில் நமது நிலை என்ன?
நாம் மன்னித்தால்தான் மன்னிப்புப் பெறுவோம் என்பதை உணர்கின் றோமா? "உங்களுள் ஒவ்வொருவனும் தன் சகோதரனை முழு உள்ளத்தோடு மன்னிக்காவிட்டால் என் வானகத் தந்தையும் இவ்வாறே உங்களுக்குச் செய்வார்” என்பது ஆண்டவர் கூறும் அறிவுரை (35).
நான் உனக்கு இரக்கம் காட்டியது போல நீயும் உன் உடனூழியனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?
கிறிஸ்துவே நற்செய்தி ( Christ Himself is the Gospel )
சிதைவுண்ட இயேசுவின் முகம்
இன்றைய உலகில் இயேசு கிறிஸ்துவின் முகம் பல்வேறு வகையில் சிதைக்கப்பட்டு வருகின்றது. போர்களாலும், வன்முறை யாலும், ஏன் அதையும் கடந்து, காலம் காலமாக சமூகத்தில் இருந்து வரும் அநீதிகளால், இயற்கை அழிவுகளால், பெண்ணிய அடிமைத் தனங்களால், மனிதரையே மனிதர் சந்தைப் பொருளாக்கி விற்கும் போக்குகளால், சிலரின் இலாபத்திற்காக இயற்கையையே முற்றிலும் அழிக்கும் மனச்சாட்சியில்லாத வியாபாரிகளால், பிறரின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் மனநோயாளிகளால், குடும்ப வாழ்வையே சிதைக்கும் ஆன்ட்ராய்டு அடிமைத்தனத்தால், இப்படி இன்னும் பல உள்ளன.
நாம் வாழும் இந்த உலகை மீட்க, இறையாட்சியை மையப்படுத்தி நற்செய்தி அறிவித்த இயேசு கிறிஸ்துவையே திருத்தூதர்களும் சீடர்களும் நற்செய்தியாக அறிவித்தனர். அந்த நற்செய்தியை எழுதி வைத்து, அனைவரும் வாழ்வு பெறும் வழிகளையும் நிலைவாழ்வு பெறும் எளிய வழியையும் காட்டிச் சென்றுள்ளனர். அந்த நற்செய்தியின் அடிப்படையில் எழுந்த விழுமியங்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இறைக் குழுமங்களுக்கு இயேசுவின் சாயலை இழந்து இருளில் கிடந்தவர்களை மீண்டும் கட்டியெழுப்ப வழிகாட்டினர்.
கிறிஸ்துவே நற்செய்தி ( Christ Himself is the Gospe l) - பொருள் என்ன?
கிறிஸ்துவே நற்செய்தியா ? இதன் பொருள் என்ன ? இயேசு ஆண்டவர் நற்செய்தியை அறிவிக்கும்போது இறையாட்சியை மையப்படுத்தி அனைத்தும் இயங்க வேண்டும் என்று திருத்தூதர்களுக்கும் சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அந்த இறையாட்சி கடவுளையே மையப்படுத்தியதாகவும், மானிடர் அனைவரும் சகோதரத்துவ உறவில் வளர, வாழ வேண்டும் எனவும் கற்றுத் தந்தார். அந்த இறையாட்சியைத் தன் போதனையிலும் வாழ்விலும் கண்டுகொள்ள தன் வாழ்வையே இயேசு பாடமாக்கினார். அதனால்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நற்செய்தி என்று அழைக்கிறோம்.
இவ்வாறு, நாம் கிறிஸ்துவே நற்செய்தி என்கையில், அதற்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன என அறிய வேண்டும். அவை எவை எவை ? இவை ஆள் சார்ந்தவையா? அல்லது ஆளுமை சார்ந்தவையா ? அல்லது அவரைப் பற்றிய திருச்சட்டம் மற்றும் இறைவாக்குகள் சார்ந்தவையா ? அல்லது பிறர் புரிந்து கொண்டதைச் சார்ந்தவையா ? இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன. திருவிவிலியம் காட்டும் மீட்பு வரலாற்றையும், கடவுளின் தொடர் வெளிப்பாடு களையும், இறைவாக்குகளையும் திருச்சட்டத்தையும், அவைமட்டுமல்ல அவர் தாய் மரியா மற்றும் வளர்ப்புத் தந்தை யோசேப்போடும் உள்ள உறவையும், அவரோடு உடன் பயணித்தவர்களின் உறவுப் பரிமாற்றத்தையும், அவரைப் பற்றி அறிவிக்கப்பட்டு, பிறகு எழுதப்பட்ட நம்பிக்கை சார்ந்த நற்செய்திகளையும், அவரின் சீடர்கள் போதித்தவை மற்றும் எழுதியவை பற்றியும், ஏன் இதுவரை உலக வரலாற்றில் அவரைப் பற்றிக் கூறி இருப்பவைகள், எழுதியிருப்பவைகள் ஆகிய அனைத்தையும் ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்வதால் கிடைக்கும் பதில் மொழி 'கிறிஸ்துவே நற்செய்தி' என்பதற்கான முழமையான பதிலாக அமையும்.
கிறிஸ்துவே நற்செய்தி என்று கூறுகையில் அது அவரின் ஆள்தன்மை ( Person ) சார்ந்த பரிமாணத்தையும்; இரண்டு, ஆளுமை ( Personality) சார்ந்த பரிமாணத்தையும்; மூன்று, இறைவார்த்தை ( Message ) சார்ந்த பரிமாணத்தையும்; நான்கு, அவரின் நிகழ்வுகள் ( Christ-event ) சார்ந்த பரிமாணத்தையும்; ஐந்து, தொடக்கக் காலச் சீடர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் இயேசுவைப் புரிந்து கொண்ட அனுபவப் போதனைகள் ( Apostolic Interpreta-tion ) சார்ந்த பரிமாணத்தையும் ஆறு, ஈராயிரம் ஆண்டளவாக திருஅவை வளர்த்தெடுத்துள்ள இறையியல் ( Theology ) சார்ந்த பரிமாணத்தையும் ஏழு, 'வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்' (பிலி 2:20) என்று பவுல் சொன்னது போல வழிபாடுகளில் கொண்டாடப்படும் அருளடையாளங்கள் ( Sacraments ) சார்ந்த பரிமாணத்தையும், எட்டு, நம் வாழ்வியல் ( Existential ) சார்ந்த பரிமாணத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். இதன் வழியாக, ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவைப்போல மாறவும் வாழவும் அழைக்கப்படுகின்றனர்.
நம் வாழ்விற்கு...
சீராக்கின் ஞானம் இந்த உலகில் வாழும் மானிட வாழ்வைச் சீரழிக்கும் எதிர்மறையான பாவங்களைப் பற்றி பேசுகின்றது. அது வெகுளியும் சினமும் வெறுப்புக்குரியன என்கிறது. மாறாக, சினம் தவிர்த்து, பிறரின் பாவத்தை மன்னிக்க அழைத்து, வாழ்வின் இறுதி நாளையும் எண்ணிப் பார்த்து கடவுளின் இரக்கம் பெற பிறரை மன்னிக்க நம் ஒவ்வொருவரையும் அதன் ஆசிரியர் அழைக்கின்றார். சினம் பாவத்திற்கு இட்டுச் செல்வதுடன், ஒவ்வொரு மனிதரும் கடவுள் கொடுத்த உயர் மனிதச் சாயலையும் இழப்பதற்கும், நிலைவாழ்வையும் இழந்துவிடுவதற்கும் காரணமாகி விடும் என எச்சரிக்கின்றனர். எனவே, சினம் என்னும் பாவவழியில் அல்ல, மாறாக மன்னிப்பின் வழியில் கடவுளின் சாயலான மனிதத்தைச் சிதைவுறாமல் காக்கும் பொறுப்பு நமக்குண்டு.
அதுபோல, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில், நாம் அனைவரும் ஆண்டவருக்குரியவர்கள் என்ற மனநிலையில் வாழ்ந்து கிறிஸ்து இயேசு என்னும் ஆளுமைக்காகவே வாழ அவர் அழைக்கின்றார். அதாவது, கிறிஸ்துவே நற்செய்தி என்பதை அறிந்து, நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவுக்காகவே வாழ வேண்டும். இதன் பொருள் என்ன ? எவ்வகையிலும் நம் வழியாக கடவுள் கொடுத்துள்ள கிறிஸ்துவின் சாயலை இழக்காமல், நாம் அனைவரும் மீட்புக்குரியவர்களாக வாழ வேண்டும் என்று கற்றுத் தருகின்றார்.
இதை இன்னும் வேறொரு கோணத்தில் மத்தேயு நற்செய்தியில் காண்கின்றோம். அதாவது, அன்றாட வாழ்வில் மன்னிக்க முடியாமையால் சிதைந்து கொண்டிருக்கும் இயேசுவின் முகத்தை என்ன மனநிலை கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்ற வழியை நற்செய்தியில் இயேசு கற்றுத் தருகின்றார். யூதச் சமய முறைப்படி, ஏழு முறை மன்னிப்பது என்பது முழுமையாக ஒருவர் மன்னித்து விட்டார் என்பதன் பொருளாகும். அதாவது, இவ்வளவு மன்னித்தும் திருந்தாமல் தொடர்ந்து பாவம் செய்யும் தன் சகோதரரை என்ன செய்வது? என்ற வெறுப்புணர்வும் கோப உணர்வும் கலந்து கேட்கப்படும் கேள்வியாகவே இதைக் கருத வேண்டும். பாவம் செய்வோரை யூத மன்னிப்பின் அளவுகோல் வைத்து ஏழுமுறை மன்னித்தால் போதும் என்னும் வரைமுறையைக் கடந்து போக இயேசு கற்றுத் தருகின்றார். பிற மனிதரில் இயேசுவின் ஆள் தன்மையை மீட்க வேண்டும் என்றால், நிபந்தனையில்லாமல் அவரை மன்னிக்க வேண்டும். அதாவது, மன்னிப்பவர் இயேசுவின் சாயலைத் தன் மன்னிப்பின் வழியாக முழுமைப்படுத்துகின்றார்.
இறைவன் - மன்னிப்பு - மனிதன்
இன்றைய வார்த்தை வழிபாடு மன்னிப்பின் மகத்துவத்தை அதன் முக்கியத்துவத்தை அதனால் மனுக்குலம் பெறும் நன்மைகளை வரிசைப்படுத்துகின்றது. மன்னிப்பு என்ற இந்தக் குணம் இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த ஒரு படைப்பிலும் இருப்பதில்லை. தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற வார்த்தைக்கு இணங்க, ஆறறிவு உள்ள ஒவ்வொருவரும் அவரவர்கள் பெற்றுக் கொண்ட இந்த மன்னிப்பு என்ற பெருங்கொடையை பிறரோடு முழுமையாகக் குறைவின்றி நிறை மனதுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
மன்னிப்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, எண்ணிக்கைகளுக்கும் அப்பாற்பட்டது; என்பதை இன்றைய நற்செய்தியில் இறைமகனார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். அன்றைய யூத சமுதாயத்தில், எந்த ஒரு காரியத்தையும் மூன்று முறை தொடர்ந்து செய்யும்பொழுது அது முழுமை அடைந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. மூன்று முறை ஒருவரை மன்னித்து விட்டால் அதற்குப் பின் அவரை மன்னிக்கத் தேவையில்லை என்பது அன்றைய கோட்பாடு. அதேவேளை தலைமுறை தலைமுறையாக அந்த மக்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட மன்னிப்புகளை நினைவு கொண்டிருப்பார்களாயின் இந்தக் கோட்பாடு தவறு என்பதை உணர்ந்து இருப்பார்கள்.
விண்ணரசில் இணைந்திடும் வாய்ப்பை மக்களுக்குத் தந்திட விரும்பிய இறை மகன், மன்னிப்பை மனிதர்களின் விண்ணக பயணம் தடுமாறாமல் இருக்க உறுதுணையாக இருக்கும் ஊன்றுகோல் என உடன் எடுத்துக்கொள்ளக் கூறுகின்றார். பேதுரு எத்தனை முறை என்று கேட்டபோது எழுபது ஏழு முறை என்று, மனிதர்கள் மிகவும் சாதாரணமாக நினைத்த மன்னிப்பை அதன் முக்கியத்துவத்தை உணரும் வண்ணமாக மிகைப்படுத்தி எழுபது ஏழு முறை என்று கூறினார். இன்றைய நாட்களிலும் இந்த ஏழு என்ற எண் அல்லது எண்ணிக்கை ஒரு முழுமையின் அடையாளமாக உணரப்படுகின்றது.
இறைவன் தனது படைப்புத் தொழிலை ஏழு நாட்களை முடித்தார் என்று விவிலியம் கூறுகின்றது. இன்றைய வாழ்க்கை முறையில் ஏழு நாட்கள்- ஒரு வாரம், ஏழு சுரங்கள் ஒரு முழு இசை, வானவில்லின் வண்ணங்கள் ஏழு என மனிதனுடன் இணைந்த முழுமை அடைந்த ஏழின் அடுக்குகளை இன்னும் பல நிலைகளில் உறுதி செய்ய முடியும்.
இறைமகன் எனவேதான் பேதுருவிடம், மன்னிப்பு தரும்போது எண்ணிக்கை அல்ல, முழுமையாக நிறை மனதோடு கண்டிப்பாகத் தரும்போது மட்டுமே அந்த மன்னிப்பு முழுமையை அடைகின்றது என்பதை; புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், பயன்படுத்தவும் - எழுபது ஏழு முறை என்று பேதுருவின் உள்ளத்திற்குள் சுமத்தினார்.
மன்னிப்பை பெற்றுக் கொள்பவர்களைப் பற்றிப் பேதுருவும் கேட்கவில்லை, இறை மகனும் கூறவில்லை. இங்கு மன்னிப்பை தருபவர் செயல் நிலை மட்டுமே முன்னிலைப் படுத்தப் படுகிறது. நமது நிலை என்ன? நாம் மன்னிப்பை பெற்றுக் கொள்பவர்களா? அல்லது மனநிறைவோடு பிறருக்கு - அயலானுக்கு மன்னிப்பை தந்திட, தந்து மகிழ்ந்திட முன் வருபவர்களா?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வாரியில் மன்னிப்பைத் தரும்போது இறைமகனின் நிலையைப் பாருங்கள். இன்று ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின் நாம் எப்படி வாழ்வோம் என்பதை எண்ணிப் பாராமல் தனது கடைசித் துளி ரத்தத்தையும் சிந்தி முழுமையான மன்னிப்பை நமக்குத் தந்துள்ளார். இச்செயலுக்குப் பின் மீண்டும் நம்மை மன்னித்திட இறைமகன் இன்று மனித உடலில் இல்லை. எனவே தான், ஒரே ஒரு முறை தனது மரணத்தின் வழியாக முழுமையாக எந்த எதிர்பார்ப்புமின்றி மணக்குலத்தை இயேசு மன்னித்தார். இப்படிப்பட்ட இந்த மன்னிப்பு பரிபூரணமாக - முழுமையாக இருந்ததால்தான் இன்று நாம் புனித பவுல் அடிகளார் கூறுவது போல அந்தக் கிறிஸ்துவின் அன்பிற்கு - மன்னிப்பிற்கு கடன் பட்டவர்களாய் இருக்கின்றோம். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பதல்லவா சிறப்பு.
இந்தக் கண்ணோட்டத்தில் நற்செய்தியில் வரும் எஜமானனையும் அவன் முன் கடன் பட்ட ஊழியனையும் உற்று நோக்கும்போது இயலாத ஊழியனை, முழுமையாக நிறைவாக மன்னித்த எஜமானன் ஒரு பக்கமும்; பெற்றுக்கொண்ட மன்னிப்பை - பெற்று மகிழ்ந்தவன் அதைப் பிறருக்கு - தன்னிடம் கடன் பட்டவருக்குத் திருப்பித்தர மனம் இல்லாதவனாகக் குறையுள்ளவனாக நிற்பதையும் காண்கின்றோம். நிபந்தனையற்ற கடவுளின் அன்பை, மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், அதை முழுமையாக நம்முன் நிற்கும் அயலானோடு பகிர்ந்து கொள்ள கிறிஸ்துவுக்குள் கடன் பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை மறக்கக் கூடாது.
இந்த மன்னிப்பை முழுமையாகப் பிறரோடு பகிர்ந்திட நமக்குள் நம்மோடு தடையாக இருக்கும் சாதாரண மனித கோபதாபங்கள் வன்மம் பழிக்குப் பழி போன்ற குணங்களை விட்டு விடச் சீராக் ஆகமம் இன்று அழைப்பு விடுகின்றது மேலும் சக மனிதன் மீது சினம் கொள்ளும்போது கடவுள் நமக்கு நன்மைகளை எப்படி தருவார் என்றும் கேட்கின்றது.
யோவான் 8 : 4 - 11ஐ நாம் வாசிக்கும்போது ஒருவரை எப்படி மன்னிக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு அழகாகச் செயல்படுத்திக் காட்டுவதை வாசிக்க முடியும். முழுமையாகத் தண்டனைக்கு உட்பட்ட ஒரு பெண் இறை மகனால் தெளிவாகக் காப்பாற்றப்பட்டு முழு மன்னிப்பை பெற்றவளாக வீடு திரும்புகின்றார். இத்தகைய மனநிலையை - செயல் திறனைத்தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். இந்த மன்னிப்பு என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால் மண் +இனிப்பு என்று பிரியும். மண் என்ற மனித குலம் இனிப்பு என்ற இன்பங்களால் நிறைந்திருக்க அதன் மத்தியில் மன்னிப்பு இணைந்து மலர்ந்திருக்க வேண்டும். மனிதன் தனியாக வாழ்வது நல்லதல்ல என்று, அன்றே இறைவன் ஆணும் பெண்ணும் ஆக ஒருவர் பிறருக்காக இணைந்து வாழ்ந்திட மனிதனைப் படைத்தார். அப்படிப்பட்ட வாழ்வு இன்புற்று இருக்க இருவர் மத்தியில் மன்னிக்கும் உன்னதம் இருக்க வேண்டும். இல்லாததால் தான் ஆதாம் ஏவாளையும் ஏவாள் அலகையையும் கைக்காட்டும் இழிய நிலை உண்டானது.
ஆக, இனியாவது, பவுல் அடிகளார் கூற்றிற்கு இணங்க நம்மிடையே எவரும் தமக்கென்று வாழாமல்; தமக்கென்றும் இறக்காமல் ;. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்வோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறப்போம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அவருடைய அன்பிற்கும் மன்னிப்பிற்கும் கடன் பட்டவர்கள் ஆனோம். மேலும் இறைமகன் கூறும் நல்ல சமாரியன் உவமையை நினைத்துப் பார்த்து அயலான் யார் என்பதையும் ஆண்டவர் யார் என்பதையும் முடிவு கொள்வோம். இன்றைய நற்செய்தியின் படி எஜமானனுக்கு உரிய வாழ்க்கையை கல்வாரி வழியாக இறைமகன் நமக்குத் தந்திருக்கின்றார்; அதை விடுத்து சக ஊழியரைத் தண்டிக்கும் சாமானியனாக நாம் ஏன் வாழ வேண்டும்?.
கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட மன்னிப்பை முழுமையாக எழுபது ஏழு முறை பிறருக்கு தருபவர்களாக வாழ்வோம். அதாவது ஒரே ஒருமுறை நாம் தரும் மன்னிப்பு எழுபது ஏழு முறை தந்ததற்கு சமமானதாக நிறை உள்ளதாக இருக்க வேண்டும். இன்று நம் இன்றைய வாழ்வில் மன்னிப்பை கேட்கும்போது ஆண்டவனாக அனைவரையும் பார்க்கும் நாம் அடுத்தவருக்குக் கொடுக்கும்போது அயலானாக நிற்காமல் ஆண்டவனாகக் கிறிஸ்தவனாக, கடைசித் துளி ரத்தம் சிந்தும் முன்பே முழுமையான மன்னிப்பை தருபவர்களாக வாழ அழைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப் பட்டிருக்கின்றோம். இதையும் ஏற்காமல் நாம் நாமாகத்தான் இருப்போம் என்றால்
இயேசு தனது நற்செய்தியில்
நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
(மத்தேயு நற்செய்தி 7:2) என்று கூறுவதை…
நினைவு கொள்வோம். வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திடவே…