சீடத்துவம்
மனிதன் ஒருவரைப் பின் தொடருவது என்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. சிலர் வார்த்தைகளால் கவரப்படு கிறார்கள். ஒரு சிலர் கொள்கைகளால் கவரப்படுகிறார்கள். ஒரு சிலர் இலட்சியம் நிறைந்த வாழ்வால் உந்தித் தள்ளப்பட்டும் பின் தொடர்வர்.
இயேசு என்ற மாமனிதரைப் பின் தொடர விரும்பியவர்கள் பலர். அவரைப் பின் தொடர அடிப்படைத் தன்மைகள் இன்றைய நற்செய்தியில் (லூக். 14:26-27) தெளிவாக்கப்படுகிறது. இது மறுதலிப்பு அல்ல. மாறாகப் புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்தல் ஆகும்.
இலட்சியத் தெளிவு
சீடராக மாறவிரும்பும் எவரும் தம் வாழ்வை உணர்ச்சிப் பூர்வமாக அழித்துவிட முடியாது. உணர்ச்சி வயப்பட்டு மறுதலித்து விடவும் முடியாது. ஆனால் அந்த நபரின் கொள்கையினைப் பற்றிய அறிவுப்பூர்வமான. உணர்வுப்பூர்வமான ஒரு தெளிவான நிலையைப் பெறவேண்டும். பின்தொடர்வது என்பது தெளிவாக்கப்பட வேண்டிய ஒன்று. சீடத்துவம் என்பது எளிதான ஒன்று அல்ல. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று பெற முடியும் என்ற தெளிவு தேவை.
இலட்சிய தயாரிப்பு
இலட்சியத் தெளிவு கொண்டவர் அதற்கான தயாரிப்பில் இறங்க வேண்டும் (லூக். 14:28-32). சீடத்துவம் என்பது சிந்திக்காமல் மூழ்கிவிடுவதல்ல. சீடத்துவம் ஓர் ஆபத்தான பாதை. அதற்குத் தயாரிப்புத் தேவை. எவரெஸ்ட் மலை ஏறுபவன் தயாரிக்கிறான். விளையாடுபவன் தன்னைப் பயிற்சியில் தயாரிக்கிறானே!
இலட்சிய உறவு
பின் தொடர விரும்புவரின் கொள்கையினையும், கொள்கை விடுக்கும் ஆபத்துகளையும் அறிந்தவராய் அந்த நபரோடு ஓர் ஆள் தன்மை உறவு கொண்டிருப்பர். இந்த உறவு இரத்த உறவு அல்ல. மாறாக ஞான உறவு. இதைத்தான் மாற்கு சொல்கிறார் (மாற்கு 3:14) இயேசு சீடர்களைத் தம்மோடு இருப்பதற்காக அழைத்தார் என்று. இயேசுவின் சீடத்துவமே இலட்சிய உறவின் அடிப்படை.
இலட்சியப் பயணம்
தெளிவு பெற்றவர்கள், உறவை வைத்தவர்கள் அந்த லட்சியம் நிறைவேறும் வரை பயணம் செய்வார்கள். இவர்களுக்குத் தடைகள் பல வர வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான சீடர்கள் இந்தத் தடைகளை எல்லாம் கடந்து செல்வார்கள். இவர்களுக்கு வரும் தடைகளே, இவர்களுக்குச் சிலுவைகள் (லூக். 14:27). இதைத்தான் இயேசு சுமந்து வர அழைக்கிறார். இவைகள் வாழ்வின் படிக்கற்கள்.
என் வார்த்தைகள் உங்களுள் நிலைத்திருந்தால் விரும்பியதெல்லாம் கேளுங்கள். கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா. 15:7).
நான் கட்டளையிடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் என் நண்பர்களாய் இருப்பீர்கள் (யோவா. 15:14).
நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை (யோவா. 15:17).
நான் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் அன்பு. இந்த அன்பினால் நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள் (யோவா. 13:34-35).
பிறப்பின் பயன் என்ன?
ஒருவனுக்குத் துறவியாக ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஒரு பெரிய துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான். காட்டிலிருந்த துறவி நாட்டிலிருந்து வந்தவனைப் பார்த்து. கையில் என்ன? என்றார். அதற்கு அந்த மனிதன், பையிலே பணம். அவசரத்துக்கு உதவும் எனக் கொண்டுவந்திருக்கின்றேன் என்றான். அதற்குத் துறவி, துறவி என்பவன் கடவுளே கதி என வாழவேண்டும். நீ துறவியாக விரும்புகின்றாய்; உனக்கு இந்தப் பணம் தேவையில்லை. நீ அந்தப் பையைப் கொண்டுபோய் அதோ அந்த ஆற்றுக்குள் எறிந்துவிட்டு வா என்றார். அந்த மனிதனோ சோகம் நிறைந்த உள்ளத்தோடு ஆற்றங்கரைக்குச் சென்று. கரையிலே அமர்ந்து, ஒவ்வொரு காசாக எடுத்து அதை ஆற்றுக்குள் எறிந்துகொண்டிருந்தான். இரண்டு, மூன்று காசுகளை எறிந்திருப்பான். பின்னால் நின்ற துறவி. மீதி காசை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ! காசை விட்டுவிட உனக்கு ஆசை. ஆனால் காசின் மீது நீ வைத்திருக்கும் ஆசையை இன்னும் நீ விடவில்லை. உனக்கு காசு மீது ஆசை இல்லையென்றால் பை முழுவதையும் தண்ணீருக்குள் தூக்கி எறிந்திருப்பாய் என்றார்.
துறவு என்றால் அனைத்தையும் விட்டுப்பிரியத் தயாராக இருத்தல் என்பது பொருள். துறவிலே இரண்டு வகையான துறவு உண்டு: வெளித் துறவு, உள் துறவு.
வெளித் துறவு என்பது இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் அவரது உயிரின் உயிராக விளங்கிய பிலமோனை விட்டுப்பிரிய முன்வந்து போல, நமக்குப் பிரியமான மனிதர்களை, பொருள்களை, இடங்களை, சூழ்நிலைகளை விட்டுப் பிரிய முன்வருவது. அப்படி வெளித் துறவைப் பின்பற்ற முன்வருகின்றவர்கள் கீழ்க்கண்ட பயன்களை அனுபவிப்பார்கள்:
- எல்லாவற்றையும் அயலாருக்காக இழக்க முன்வரும் மனவலிமையைப் பெறுவார்கள்.
- தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் சுதந்தரத்தைப் பெறுவார்கள்.
உள் துறவு என்பது கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நமது எண்ணங்களையும், திட்டங்களையும் (முதல் வாசகம்) விட்டுவிடுதலில் அடங்கியுள்ளது. இத்தகைய உள் துறவைப் பின்பற்றுகின்றவர்கள் கீழ்க்கண்ட ஞானக்கனிகளைச் சுவைத்து மகிழ்வர்:
- சேர்த்து வைத்ததை எப்படிக் காப்பாற்றுவது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
- பெறுவதில் அல்ல. கொடுப்பதில்தான் இன்பம் இருக்கின்றது என்பதால், இதயத்திற்கு இதமான இன்பம் கிடைக்கும்.
இழப்பை இழப்பாகக் கருதும்போது, இழப்பு நமக்கு இழப்பாகத் தெரியும். இழப்பை இழப்பாக அல்ல, இழப்பை இலாபமாகக் கருதும்போது இழப்பு நமக்கு இலாபமாகத் தெரியும்.
இலட்சங்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம்; ஆனால் இலட்சியங்கள் இல்லாமல் வாழக்கூடாது. எடுப்பது அல்ல கொடுப்பதே. துறப்பதே நமது இலட்சியமாக இருக்கட்டும்.
நமது வாழ்வில் துறப்பதைக் கூட்டி, கொடுப்பதைப் பெருக்கி, கிடைப்பதை வகுத்து, எடுப்பதைக் கழித்து, பயன் - பிறப்பின் பயன் - என்ற விடையைப் பெற்று அகமும் முகமும் மலர வெற்றி நடைபோடுவோம்.
மேலும் அறிவோம்:
இயல்பாகும் நோன்பிற்கொன்(று) இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள் 344).
பொருள் : எந்தப் பற்றும் இல்லாது இருத்தலே துறவுக்கு ஏற்புடைய செயலாகும்! ஏதேனும் ஒன்றில் பற்று வைக்கத் தொடங்கினால், அது தொடர்ந்து பல்வேறு பற்றுக்களை மேற்கொள்வதற்கு ஆசையைத் தோற்றுவிக்கும்!
தனது மனைவிக்குக் குடை பிடித்துச் சென்ற ஒரு கணவரைப் பார்த்துச் சிரித்தனர் மக்கள். கணவர் அவர்களிடம் கூறியது: "நான் காரியத்துடன்தான் என் மனைவிக்குக் குடை பிடிக்கிறேன். ஏனெனில் தெருவின் வலப்பக்கத்தில் நகைக் கடையும் இடப்பக்கத்தில் துணிக் கடையும் இருக்கின்றன. அவைகளைப் பார்த்தால் என் மனைவிக்கு நகையும் புடவையும் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். வலது பக்கத்தில் நகைக்கடை வரும்போது குடையை வலது பக்கத்தில் சாய்த்துப் பிடிப்பேன். இடது பக்கத்தில் துணிக்கடை வரும்போது குடையை இடது பக்கத்தில் சாய்த்துப் பிடிப்பேன். இவ்வாறு நகைக் கடையோ, துணிக்கடையோ அவளது கண்களில் படாமல் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவேன்."
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்கூட, ஆண்களும் கூட, இல்லறத்தார் மட்டுமல்ல, துறவறத்தாரும்கூடப் பொருள்களை வாங்கிக் குவிப்பதில் கருத்தாய் உள்ளனர். ஆனால் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: "உங்களுள் தன் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது" (லூக் 14:33). மேலும், கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் உற்றார் உறவினரையும், ஏன் தங்கள் உயிரையும் கூட வெறுத்து, தங்கள் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார் (லூக் 15: 25-27).
மத்தேயு நற்செய்தியில் கிறிஸ்து இந்த நிபந்தனைகளை தம் சீடர்களுக்கு மட்டும் விதிக்கின்றார் (மத் 10:37-38). ஆனால் லூக்கா நற்செய்தியிலோ கிறிஸ்து இந்த நிபந்தனைகளை எல்லா மக்களுக்கும் விதிக்கின்றார் (லூக் 14:25), மத்தேயு நற்செய்தியில், சீடர்கள் தங்கள் உற்றார் உறவினரைக் கிறிஸ்துவைவிட அதிகமாக அன்பு செய்யக் கூடாது என்று கூறுகின்றார் (மத் 10:37). ஆனால் லூக்கா நற்செய்தியிலோ சீடர்கள் தங்கள் உற்றார் உறவினரை (மனைவி, மக்கள் உட்பட) " வெறுக்க வேண்டும்" என்கிறார் (லூக் 14:26). லூக்கா நற்செய்தி முழுத்துறவையும், வேரோட்டமான சீடத்துவத்தையும் வலியுறுத்துகிறது, சீடத்துவம் மிகவும் விலையுயர்ந்தது. போர்புரியச் செல்லும் அரசர், வீடு கட்டுபவர் ஆகிய உவமைகள் மூலமாக. சீடராகுமுன் அதன் விலை என்ன என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்கிறார் கிறிஸ்து. ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்; காரியத்தைச் செய்தபின் அதைப்பற்றிச் சிந்திப்பது இழுக்கானது என்கிறார் வள்ளுவர்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள் 467)
முழுமைத் துறவுக்குக் கிறிஸ்துவே சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறார். பன்னிரண்டு வயதில் தமது பெற்றோருடன் இருந்த உறவைத் துண்டித்த கிறிஸ்து (லூக் 2:49), தமது பொது வாழ்வின்போது தமது குடும்பத்தாரின் ஒட்டு மொத்தமான உறவையும் துண்டித்துக் கொள்கிறார் (லூக் 8:21). மேலும் அவருக்கு எந்த உடைமையுமில்லை; தலைசாய்க்கவும் அவருக்கு இடமில்லை (லூக் 9:57). கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுவதாகக் கூறுகின்றார் திருத்தூதர் பவுல் (பிலி 3:8). அவரிடம் ஒன்றுமில்லை; அதன் காரணமாகவே அவரிடம் எல்லாம் இருக்கிறது என்கிறார் (2 கொரி 6:10). பொருள்கள் ஒருவரிடம் இருக்கும்போதே எல்லாவற்றையும் துறக்க வேண்டும்; துறந்தபின் பெறக்கூடிய இன்பங்கள் பல உண்டு என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வள்ளுவர்.
வேண்டின் உண்டாகத்துறக்க; துறந்தபின் ஈண்டு இயற்பால் பல. (குறள் 342)
நீரழிவு நேயாளியிடம் மருத்துவர், “நீங்கள் நாள்தோறும் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும்" என்று கூறியபோது நோயாளி, "டாக்டர்! நடக்கிற காரியமாகச் சொல்லுங்க" என்றாராம். அவ்வாறே கிறிஸ்து கோரும் முழுமைத் துறவு நடக்கிற காரியம் போல் தெரியவில்லை என்று பலர் நினைக்கலாம். அவர்களுக்குக் கிறிஸ்து கூறுவது: "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" (லூக் 18:27).
கிறிஸ்து கூறிய உண்மைத் துறவு தொடக்ககாலத் திருச்சபையில் நிகழ்ந்தது. தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமை அனைத்தையும் விற்றுத் திருத்தூதர்களிடம் கொடுத்து பொதுவுடைமை வாழ்வு நடத்தினார்கள் (திப 2:42-45). ஆனால் காலப்போக்கில் அது வழக்கொழிந்து போய்விட்டது.
தனது வீட்டுக்கு வந்த நண்பர்க்கு ஒருவர் கெட்டியான, சுவையான சூப்பைக் கொடுத்தார். அச்சூப்பில் மீதியிருந்ததைத் தண்ணீர் கலந்து இரண்டாம், மூன்றாம், நான்காம் நாளும் கொடுத்தார். நண்பர் அவரிடம், "இது சூப்பா?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "இது சூப்பினுடைய, சூப்பினுடைய, சூப்பினுடைய சூப்பு," அவ்வாறே நாம் கடைப்பிடிப்பது நற்செய்தியா? என்று கேட்டால், அதற்குரிய பதில்: "நாம் கடைப்பிடிப்பது. நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய நற்செய்தி." நற்செய்தியை கலப்படம் செய்து அதன் வீரியத்தைக் குறைத்துவிட்டோம்.
அன்று கிரேக்க நாட்டு தத்துவ மேதை ஒருவர், பட்டப்பகலில் கையில் விளக்கேந்தி மனிதனைத் தேடினார். இன்று கிறிஸ்து பட்டப்பகலில் விளக்கைக் கையிலேந்தி அவருடைய சீடர்களைத் தேடுகிறார். இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர், ஆனால் சல்லடை போட்டு சலித்து எடுத்தாலும் ஒரு சீடரையும் கண்டுபிடிக்க இயலாது. கிறிஸ்துவை ஒப்பற்றச் செல்வமாகக் கருதி அவரைப் பின்பற்ற, இன்றைய முதல் வாசகம் குறிப்பிடும் ஞானம் தேவைப்படுகிறது, மெய்யுணர்வு பெற்றவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் துறந்து கிறிஸ்துவைப் பின்பிற்ற இயலும், கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்; உணர்ந்து கொள்ளக்கூடியவர் உணரட்டும்.
"நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).
பின்பற்றுவதா, பிரதிபலிப்பதா?
இத்தாலி நாட்டைக் குடியரசாக மாற்ற தளபதி கரிபால்டி தனது வீரர்களுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினார். என்றாலும் மனம் தளர்ந்துவிடவில்லை. மீண்டும் வீரர்களை அழைத்தார். "திரும்பவும் போரிட விரும்புகிறேன். உங்களுக்குக் கொடுக்க பணமோ பொருளோ என்னிடம் இல்லை. என்னால் பசி பட்டினியை மட்டுமே தரமுடியும். காயமும் இரத்தமுமே நீங்கள் அணிந்து கொள்ளும் பதக்கமாக இருக்கும். என்னோடு இணைந்து போரிட விரும்புகிறவர்கள் - நான் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது ஓர் அடி முன்னே எடுத்து வைத்து வரவும்” என்று அறைகூவலிட்டார். கண்களைத் திறக்கிறார். வீரர்கள் அப்படியே நின்றிருந்தனர். கரிபால்டி மிகவும் சோர்வடைந்துவிட்டார். அதைக் கண்ட ஒரு வீரன் வேகமாக விரைந்து "தவறாக நினைக்க வேண்டாம். பட்டாளம் முழுவதுமே ஓர் அடி முன்னுக்கு வந்துவிட்டதால் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. வெற்றி நமதே" என்று முழங்கினான். ஆம்,, வெற்றி அவர்களதே என்பதை வரலாறு சொல்கிறது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த இலட்சிய உணர்வு, கொள்கைப் பிடிப்பு, தியாகச் சிந்தை!
இவ்வுலகில் இறையரசைக் கட்டி எழுப்ப முன்வந்த இறைமகன் இயேசுகூட இத்தகைய மனநிலையை தன் சீடர்களிடம் எதிர்பார்க்கிறார். இயேசுவைப் பின்பற்றத் தடையாக இருக்கும் எதையும் - அது உடைமையோ, உறவோ, உயிரோ எதுவாயினும் - இழக்கத் துணிபவனே இயேசுவின் உண்மையான சீடனாக முடியும்.
ஒரு செல்வந்தன் தானே தனக்கு உலகமாக இருந்தான். தனக்கு அப்பால் எதையும் பார்க்க முடிந்ததில்லை. தான் தான் என்று வாழ்ந்திருந்தவன். எல்லாம் தனக்கு மட்டுமே தெரியும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவன். அறிவு புகட்ட நினைத்த அவனுடைய நண்பன் அவனை அழைத்துச் சன்னல் கண்ணாடியில் பார்க்கச் சொன்னான். திறந்த வெளியில் மலைகள், மரங்கள், மனிதர்கள் எல்லாம் தெரிந்தன. பின்னர் வெள்ளி பூசிய கண்ணாடியில் பார்க்கச் சொன்னான். தன்னை மட்டுமே பார்க்க முடிந்தது. வெள்ளியும் தங்கமும் மனிதனுடைய கண்களை மறைக்கும். அதனால்தான் இயேசு சொல்கிறார்:
உறவு உன் கண்ணைக் குருடாக்குகிறதா? விட்டுவிடு.
உடைமை உன் கண்ணைக் குருடாக்குகிறதா? விட்டுவிடு.
உயிரே கூட உன் கண்ணைக் குருடாக்குகிறதா? விட்டுவிடு.
வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை நீந்திக் கடக்க நினைப்பவன் கைகளிலும் கால்களிலும் 'பற்று' என்ற பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டு நீச்சலடிக்க முடியுமா?
பணத்தால், பொருளால் ஓரளவு திருப்தி இருந்தும் வாழ்க்கையில் ஏதோ ஒரு வெற்றிடத்தை உணர்ந்தானே அந்தப் பணக்கார இளைஞன் (மார்க். 10:22). தேவையான ஆன்மீக விடுதலை பெறாதது தானே இயேசுவைப் பின்பற்றத் தடையாக இருந்தது.
உடைமைகள் தடைகள் மட்டுமல்ல பல சமயங்களிலும் சுமைகள். இறைச்சிக் கடையிலிருந்து கரித்துண்டைத் தூக்கிக் கொண்டு அந்த நாய் ஓடியது. கடைக்காரன் கல்லால் எறிந்து கொண்டே அதை விரட்டிச் சென்றான். கல்லெறியால் காயமுற இரத்தம் ஒழுக நாய் ஓடியது. அதற்குள் ஏழெட்டு நாய்கள் அந்த நாயைப் பின் தொடர, நிற்கவோ இளைப்பாறவோ முடியாத நாயின் கால்கள் பின்னிக் கொண்டன. கண்கள் செருகின. இனியும் அதனால் ஓட முடியாது. கறித் துண்டைக் கீழே போட்டுவிட்டு பக்கத்து மரத்தடியில் ஒண்டிக் கொண்டது. விரட்டி வந்த நாய்களும் இந்த நாயைப் பொருள்படுத்தாமல் இறைச்சியைச் தேடி விரைந்தன. மூச்சுவாங்க இளைத்து நின்ற நாய் தனக்குள் சொல்லிக் கொண்டது: “இப்போது எவ்வளவு நிம்மதி! என் விருப்பப்டி நான் எங்கேயும் போகலாம், எதுவும் செய்யலாம். போட்டியோ பொறாமையோ இல்லாத இந்த உலகம் இப்போது எனக்குச் சொந்தம்”.
இயேசுவோடு இருந்தபோதே யூதாஸ் இறந்துவிட்டான். காரணம்? பண ஆசை. மீட்படைந்த சக்கேயுவின் மனநிலை - விட்டுவிடுவது மட்டுமல்ல. இழப்புக்கு ஈடுகட்டுவது - சிந்தனைக்குரியது.
இத்தாலியின் 12ஆம் நூற்றாண்டுப் புனிதர் பிரான்சிஸ் அசிசியார் தன் இலட்சியத்திற்குத் தன் தந்தையே தடையாக இருந்தபோது, தன்னைப் புரிந்து கொள்ளத் தவறியபோது, "இனி விண்ணகத் தந்தையே எனக்கு அப்பா” என்று தோளில் இருந்த துண்டை உதறிச் சென்ற நிகழ்ச்சி நினைவில் இல்லையா?
பொதுநிலையினரின் பாதுகாவலர் என்று நாம் புகழ்ந்து போற்றும் புனித தாமஸ்மூர் தன் மனைவியைவிட, மக்களை விட, ஏன் தன் உயிரையும் விட இயேசுவையும் அவர் நிறுவிய திருஅவையையும் நேசிக்கவில்லையா?
பெற்றோரைப் போற்றுவதும் பேணிக்காப்பதும் மகனின் கடமைதான். ஆனால் தந்தையின் அலுவல் என்றபோது பெற்ற தாயையோ வளர்த்த தந்தையையோ பெரிதாக நினைக்கவில்லை இயேசு. காணாமற்போன 12 வயதுச் சிறுவன் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" (லூக். 2:49) என்று கேட்கவில்லையா? "என் தாய் யார்? என் சகோதர்கள் யார்?" (மத். 12:48) என்ற இயேசுவின் கேள்வி உணர்த்துவது என்ன?
இயேசு யார் என்பதற்கான பொருள்மிக்க விளக்கத்தைத் திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்: "கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்'' (பிலிப். 2:6,7). இப்படிப்பட்ட இயேசு தன் சீடர்களும் தன்னைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். “பணியாளர் தலைவரை விடப் பெரியவரல்ல: தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்கிறார் ஆண்டவர் (லூக். 13:16, 12:26). அந்த சீடத்துவம் விடுக்கும் சவால்களுக்குத் தன்னால் ஈடு கொடுக்க முடியுமா என்று முன்னமே அமர்ந்து தீர்க்கமாகச் சிந்திப்பது மிக மிகத் கோபுரம் கட்டுபவரும் போரிடச் செல்பவரும் தன் நிலையைக் கணித்துச் செயல்படுவது போல் இயேசுவின் சீடனும் செயல்படவேண்டும் என்கிறார் இயேசு (லூக். 14:28-33).
இந்தத் திட்டமிடலுக்கு மனித அறிவும் ஆற்றலும் மட்டும் போதுமானதல்ல. இறை ஞானம் வேண்டும். அதைத் தூய ஆவி அருள்வார் (முதல் வாசகம்).
அழைப்புப் பற்றிய வங்கக்கவி தாகூரின் கருத்து இது! ஒரு கூடை நிறைய மாம்பழம் ஒருவர் வந்து ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்து ஒன்றைப் பொறுக்கி எடுக்கிறார். என்ன நேர்கிறது? பொறுக்கி எடுத்த அந்த ஒரு பழம் பிற அனைத்துப் பழங்களினின்றும் பிரிகிறது. அந்தப் அந்தப் பிரிவு ஓர் இழப்பே! ஆனால்... அதனைப் பொறுக்கி எடுத்தவர் பழத்துக்குச் சொந்தமன்றோ!
"ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே" (தி.பா. 16:5) என்ற திருப்பாடல் ஆசிரியரின் உணர்வு இருந்தால் அங்கே இழப்பு உணர்வுக்கு இடமேது?
கணவனுக்காகத் தன் பெற்றோரை, தன் குடும்பத்தை தான் வளர்ந்து வாழ்ந்த சூழலை, ஏன் தன் ஆசைகளைக் கூட விட்டுவரும் பெண்ணுக்கு அவை இழப்பா? மண வாழ்க்கையின் இயல்பான எதிர்பார்ப்பு இல்லையா!
"ஒருவிதை தன்னை அழித்துக் கொண்டுதான் மரமாகிறது. ஒரு துளி தன்னை இழந்த பின்பே கடலாகிறது. ஆனால் மனிதன்...? மனிதன் தன்னை இழக்கத் தயாரில்லை. பின் எப்படி இறைத்தன்மை இவனில் விளைய முடியும்?” - ஒஷோ (ரஜனிஷ்).
இயேசுவுக்கு வேண்டும் சீடர்கள், இரசிகர்கள் அல்ல.
வெறம் பக்தர்கள் அல்ல! இயேசுவைப் பின்பற்றுவதை விட அவரைப் பிரதிபலிப்பதில்தான் சீடனுக்குப் பெருமை!
முதல் வாசகப் பின்னணி (சா.ஞா. 9:13-18)
சாலமோன் அரசன் தன்னுடைய இறையனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். ஞானத்தின் கருப்பொருள் என்ன என்பதை எடுத்து விளக்கி இறையுறவைப் புதுக் கண்ணோட்டத்தில் காண வழி செய்கின்றது இவ்வாசகம். ஞானம் இல்லாத போது நாம் இறைவனைக் கண்டூணர்வது என்பது இயலாத ஒன்றாகிவிடுகின்றது. மனித புலன்களால் அறிய இயலாதக் கடவுளை, மதிநுட்ப அறிவைக் கொண்டு, காண முடியாது என்பதைத் தெளிவுப்படுத்தும் பகுதி. இந்நூல் எழுதப்பட்ட காலக்கட்டங்களில், மக்களின் மனம் கடவுளை விட்டூ வெகுத் தொலைவில் இருந்திருக்க வேண்டும். பிற்கால ஆசிரியர்கள் இந்நூலில் உள்ள சில பகுதிகளில் தங்களின் கருத்துகளைப் பரிந்துரைத்திருக்கலாம். அக்காலத்தில் கிரேக்கத் தத்துவங்கள் உலகமெங்கும் பரப்பப்பட்டிருந்தது. எனவே அறிஞர்கள் அனைவரும் கடவுளை அறிய “அறிவு” இருந்தால் போதுமென நினைத்தக் காலகட்டத்தில் ஞானத்தைப் பற்றி சற்று உயர்வாக எழுதியிருந்திருக்கலாம்.
இரண்டாம் வாசகப் பின்னணி (பில. 9-10, 12-17)
செல்வந்தரான பிலமோன், அடிமையான ஒனேசிமுஸ்சை மீண்டும் ஏற்றுக் கொள்வதன் மூலம் கிறிஸ்தவ அன்பைப் பிரதிபலிக்கின்றார். “கிறிஸ்துவின் கைதியாயிருந்த” (வ.8) தூய பவுல் சிறையிலே தான் இருப்பதைக் குறிப்பிட்டாலும், கிறிஸ்துவின் அன்புச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டிருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளலாம். ஒனேதிமுஸ் மனமாறியவுடன், அவனை “நான் ஈன்றெடுத்தப் பிள்ளை” என்று வர்ணிப்பது, கிறிஸ்துவின் அன்புக் கோட்டைக்குள் நுழைந்தக் குழந்தையாகக் காட்டுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகப் பகுதி, பவுலுக்கும் ஒனேசிமுஸ்க்கும் உள்ள அன்புறவை விடக் கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவ நெறிதவறிய மக்களுக்கும் உள்ள அன்புறவு சற்று மேலானது என்பதை விளக்குகின்றது. இக்கடித்ததில் தூய பவுல், கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்பான அன்பு செய்வது குறித்து தெளிவுப்படுத்து கின்றார். கிறிஸ்தவ அன்பு ஒருவரை ஒருவர் இணைக்கும் பாலமாக இமைய வேண்டும். இறைவன் முன்னிலையில் நாம் அனைவரும் சமம் என்பதை எடுத்துக் காட்டுவது அன்பே என்று கூறுகின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 14:25:33)
இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கின்றார் (9-19). பயணத்தின் போது கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளைப் போதித்துக் கொண்டே செல்கின்றார். இன்றையப் பகுதியில் இறைப்பணியாளன் (அல்லது) தூதுவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நயம்பட எடுத்துரைக்கின்றார், லூக்கா நற்செய்தியாளர். முற்பகுதியில் 9:23 27, 57, 62-இல் சீடத்துவத்தின் பண்புகளைப் பற்றி எடுத்து கூறினாலும் இங்கு, சீடத்துவப் பணி முழு மன நிறைவோடு அமைய வேண்டும் என்பதை ஒப்புமைகள் மூலம் எடுத்து கூறுகின்றார். எவனொருவனாலும், மனித உயிரின் மீதுள்ள ஆசையாலும் உறவு முறைகளோடூம் பொருளாசையினாலும் இறைவனை வந்தடைய முடியாது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார்.
மறையுரை
நம் கடவுளை மூன்று வாசகங்களும் தெளிவுபடூத்துகின்றன. ஞானத்தின் மூலமாகவும், அன்பின் வழியாகவும், உறவுகள், பொருளாசைகள் இவற்றைத் தவிர்ப்பதினாலும், உண்மையான பரம் பொருளாகிய இறைவனை, இறை அன்பைப் பெற்றுக் கொள்ள முடியும். அன்பே ஞானத்திற்கு வழி செய்கின்றது, அன்பினால்தான். உலக ஆசைகளை வெறுத்து ஒதுக்க முடியும். இதையே இன்றைய நிலையில்லா உலகில் அன்பு எவ்வளவு அவசியம் என்பதையும், ஞானத்தின் பேறுபலன்களைச் சுவைத்து உணர அன்பு என்ற கனிரசம் இன்றியமையாதது என்பதையும் பவுல் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக் காலம் ஒருபத்தி மூன்றாம் ஞாயிறு
வழக்கமாக ஞாயிறு வாசகங்களில் முதல் "வாசகமும் நற்செய்தியும் இணைந்து செல்லும். ஆனால் இன்று இரண்டாம் வாசகமும் நற்செய்தியும் “சீடன் - சீடத்துவம்' எனும் கருத்தில் இணைந்து செல்கின்றன. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் தனக்குச் சீடரான ஓனேசிமு பற்றி தனது இன்னொரு சீடரான பிலமோனுக்கு மடல் எழுதுகின்றார். நற்செய்தியில் இயேசு தன்னைப் பின்பற்றி வருபவரிடம் இருக்கவேண்டிய பண்பு நலன்களைப் பற்றி விவரிக்கின்றார். இதைப்பற்றி விரிவாகக் காணும் முன் இன்றைய நற்செய்திப் பகுதிக்கான சில பின்னணித் தகவல்களை அறிந்து கொள்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி லூக் 74:15-35 எனும் நீண்ட பகுதியில் இரண்டாவது பகுதியாகும். இப்பகுதிக்குப் (வச. 15-35) லூக் 7427-14 பின்னணியாக அமைகின்றது. அதாவது இயேசு பரிசேயர் தலைவர் வீட்டில் விருந்தில் இருக்கின்றார். மற்றவர்கள் அவர்மீது குற்றம் சுமத்தக் காத்திருக்கின்றார். இயேசு நீர்க் கோவையுள்ள ஒருவரை குணமாக்குகின்றார். அதற்கான காரணத்தை விளக்கு கின்றார். பின் பந்தியில் நடந்துகொள்ளும் முறையை விளக்கி “தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்படுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்'' (வச. 11) எனும் உயரிய கருத்தையும், இறையரசின் தலைகீழ் மாற்றத்தையும் ஏழையரைவிருந்துக்கு அழைக்கவேண்டும் எனும் அறிவுரையுடன் முடிக்கின்றார். இவற்றை யெல்லாம் கடந்த ஞாயிறு கண்டோம் இதைத் தொடர்ந்து, பந்தியின் சூழலிலே இன்னொரு கருத்து, அதாவது, “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் யார்?” என்பதற்கு இயேசு ஓர் உவமையின் வாயிலாகப் பதிலளிக்கின்றார். அதில் பெரிய விருந்துக்கு மூன்று வகையான அழைப்பு விடப் படுவதையும், மூன்று வகையினர் அந்த அழைப்பை நிராகரிப் பதையும் விளக்குகின்றார். எனவே இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதி அழைப்பு, ஏற்க, எதிர்ப்பு எனும் சூழலில் நிறைவுபெற இன்றைய பகுதி அதையொட்டி இயேசு தன் பின்னே தன்னைப் பின்பற்றி வந்த பெருந்திரளான மக்களுக்கு சீடத்துவதின் சவால், அதற்குத் தரவேண்டியவிலை பற்றி விவரிக்கின்றார்.
இன்னொரு வகையில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தை லூக்கா விவரிக்கும்போது மனமாற்றத்திற்கான அழைப்பு, சீடத்துவத்தைப் பற்றிய போதனை ஆகியவற்றைப் பற்றியும் விளக்கிக் கொண்டு போவார். கடந்த உவமையில் பரிசேயர்களுக்குப் பொருள்கள்மீதும், உறவுகள் மீதும் அதிக பற்று கொண்டிருப்போர் இறையாட்சியைச் சுவைக்க முடியாது என்பதை விளக்கியபின் (வச. 76-24), பெருந்திரளான மக்களுக்கும் அதே செய்தியை நேரடியாகவும், இரு உவமைகள் மூலமாகவும் மீண்டும் வலியுறுத்துகின்றார் (வச. 25-33).
1. இயேசுவே முதன்மை
விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டவர் உவமையில் ஒருவர் “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று” என்று (வச. 20) உறவைக் காரணம் காட்டி விருந்துக்கு வராமல்போன பின்னணியில் இயேசு “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் “அகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால் அவர் என் சீடராயிருக்க முடியாது” (வச. 26) என்கிறார். மேலும் வேறு இருவர் வயல், ஏர் மாடுகள் என தம் உடமைகளை காரணம் காட்டி (வச. 78-19) மறுத்தனர். எனவே 'இயேசு, “உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது” (வச. 33). எனவே உடமை, உறவுகள், ஏன் தன் உயிரையும் விட அதிகமாய் இயேசுவை அன்பு செய்பவரே அவரின் சீடராக முடியும். இவற்றையெல்லாம் (உறவு, உயிர், உடமை) துறப்பதே உண்மையான சிலுவை. எனவே, “தம் சிலுவையைச் சுமக்காமல் என்பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது” (வச. 27) என்கிறார் இயேசு.
2. எண்ணித் துணிக...
சீடத்துவத்தைப் பற்றிய அறிவுரையைத் தொடர்ந்து (வச. 26-27) இயேசு இரு உவமைகள் மூலமாக இந்த அழைத்தல் வாழ்வை அல்லது சீடத்துவ வாழ்வை ஏற்பதற்கு முன் தீர யோசித்து, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துகின்றார். எனவே “உன்னால் மூடிக்க மூடியாது என்றால் தொடங்காதே' என்பதே இவ்விரு உவமைகளின் சாரம். இதையே திருவள்ளுவர் “எண்ணித் துணிக... கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்றார்.
முடிவாக. . .
முதலாவதாக, இயேசுவின் சீடராக இருப்பது என்பது இறைவனிடமிருந்துவரும்அழைப்பாகஇருந்தாலும்நாம் அதற்குச் செவிமடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த அழைத்தல் வாழ்வில் இயேசுவே முதன்மையானவராக இருக்கவேண்டும். உறவுகளோ, உடமைகளோ, உயிரோ இதில், இயேசுவுக்கும் சீடருக்கும் இடையேயான உறவில் இடை வந்து விடக் கூடாது. இத்தகைய சீடத்துவ வாழ்க்கையைத் தேர்ந்து தெளிந்து, திட்டமிட்டு இறையருள் துணையுடன் வாழ இன்றைய இறைவார்த்தை அழைக்கின்றது.
பொதுக்காலம் - இருபத்து மூன்றாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : சாஞா. 9: 13 - 18
ஞானம், இறைவனால் அருளப்படும் அறிவு, அதன் செயலாற்றல் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது சாலமோனின் ஞானம். இஸ்ரயேல் வரலாற்றின் தொடக்கத்தில் தொழில் நுட்பத்திறன், அதற்கு ஆசிரியர்கூறிய விளக்கம் ஆகியவை ஞானமாக எண்ணப்பட்டது. நாளடைவில் ஞானம் ஒரு ஒழுக்க நெறியாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பாக எண்ணப்பட்டது. தொடர்ந்து, ஞானம் இறைவனுடன் என்றும் இருக்கும் ஓர் ஆளாக உருவகிக்கப்பட்டது. இறைவனது படைப்பிலே பங்கெடுக்கும் அளவுக்கு அது உயர்த்தப்பட்டது. அதே ஞானம் இஸ்ரயேல் மக்களிடையே தங்கி அவர்களை வழி நடத்தும் கருவியாகக் கருதப்பட்டது. "இறைவா இத்தகைய ஞானத்தை எனக்குத் தருவாயாக" என்று மன்றாடும் பாணியில் அமைந்துள்ளதே இன்றைய வாசகம்.
இறை ஞானம்
இறைவனின் மறுபதிப்பே இறைஞானம்,
"ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்” (1 அர 3:9)
“ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது" (நீத. 3:15)
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர் (நீமொ.1:7)
ஞானத்தின் மேல் ஆசிரியர் கொண்டிருந்த மதிப்பும் (7:7-14) அதன் பெருமையும் (7: 22-28) விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
“உம்மிடத்தில்தான் ஞானம் இருக்கிறது; உம் வேலைகள் அதற்குத்தான் தெரியும். நீர் உலகை உண்டாக்கியபோது அது உம் அருகில் இருந்தது. அது என்னுடனிருந்து என்னுடன் உழைக்கவும், உமக்கு உகந்தவற்றை எனக்குக் கற்றுக் கொடுக்கவும் உமது பரிசுத்த வான் வீட்டிலிருந்து அதை அனுப்பியருளும்” (9: 9 - 10). இறை ஞானத்தின் சிறு துளி நம்மை வழி நடத்தும்படி மன்றாடுவோம். இறைவனின் ஞானமே இயேசுவாகப் பரிணமித்துள்ளது (யோ. 1:1-5) என்பதை உணர்கின்றேனா?
மனித ஞானம்
"மனிதர்களுள் ஒருவன் அறிவு நிறைந்தவனாயிருந்தாலும், நீர் அருளும் ஞானமும் அவனிடமில்லையேல் அவன் ஒன்றுமில்லை” என்பது வேதவாக்கு. எனவேதான் இவ்வுலகப் போக்கின்படி “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, "ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்” என்கிறார் பவுல் (1 கொரி 3: 19). மனிதன் எவ்வளவுதான் தன் அறிவைப் பெருக்கினாலும் இறைஞானத்தின் எல்லையை எட்ட முடியாது. உலக ஞானிகள் ஒப்பற்ற இறைவனின் இலக்கணத்தை அவரது வெளிச் செயல்கள் கொண்டு விளக்கினார்களே தவிர, அவரது உள் வாழ்வை மூவொரு கடவுளின் முழுமையை அவர்களால் அறிய முடியவில்லை.
"பாரார், விசும்பு உள்ளார், பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான்" (திருவாசகம்)
சாதாரண மனித ஞானத்தால் இறையுள்ளத்தை எம்மால் அறிந்து கொள்ள முடியாது. நம்முடைய எண்ணங்கள் குறையுடையவை-பயனற்றவை. நமது உடல் ஒரு மண் குடிசை; அதில் அழியாத ஆன்மா குடி கொண்டுள்ளது. இந்த மட்பாண்டம் உடைந்து மண்ணோடு மண்ணாகிவிடும். அழியக் கூடிய உடல் ஆன்மாவைப் பளுவாக்குகிறது. அழுத்துகிறது. எனவே நீர் ஞானத்தைத் தராமலும், உன்னதத்திலிருந்து பரிசுத்த ஆவியை அனுப்பாமலும் இருந்தால் உமது திருவுளத்தை அறியக் கூடியவன் யார்? (17) என்று கேட்கிறார் ஆசிரியர். நம் சாதாரண மனித வாழ்வால் அடைய முடியாத ஒன்றை, திருமுழுக்கு வழியாக-தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதன் வழியாக- அடைந்துள்ளோம்.
ஞான ஒளிக்காகத் தூய ஆவியின் துணையை வேண்டுவோம்.
நீர் ஞானத்தைத் தராமலும், உன்னதத்திலிருந்து உமது பரிசுத்த ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உமத திருவுளத்தை அறியக்கூடியவன் யார்?
இரண்டாம் வாசகம் : பில. 1: 9 10. 12-17
தவறு செய்து, தன் தலைவன் பிலமோனிடமிருந்து ஓடிவந்த ஒனேசிமுவை, பவுல் அன்புடன் வரவேற்றார். அவனது விசுவாசக் கண்ணைத் திறந்து இயேசுவில் அவனுக்குப் புது வாழ்வு அளித்தார். தவறு செய்த அடிமையை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்படி, பிலேமோனுக்கு எழுதப்பட்ட சிபாரிசுக் கடிதமே இது.
அடிமையிடம் அன்பு (பரிவு)
சிறையிலிருந்த பவுலின் சிறிய மடல் இது. தன்னால் விசுவாச வாழ்வுக்கு அழைக்கப்பட்டு திருநீராட்டுப் பெற்றவர்களைத் தன் பிள்ளைகளாகவே எண்ணி அன்பு செய்பவர் பவுல். "நற்செய்தியின் வழியாய் நான்தான் உங்களைக் கிறிஸ்துவுக்குள் ஈன்றெடுத்தேன்” என்பார். ஒனேசிமுவும் இவரது அன்பு மகன். "பயனுள்ளவன்” என்பதே ஒனேசிமு என்பதன் பொருள். தான் செய்த ஒரு குற்றத்திற்காகப் பயனற்றவனாகப் பரதேச வாழ்வு வாழ்ந்த இவன், பவுலின் பணியில் பயனுள்ளவனாக மாறிவிட்டான்.
அடிமை வாழ்வு அன்று சமுதாயத்தில் ஒன்றிவிட்ட ஓர் அமைப்பு. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை வாணிகப் பொருளாக எண்ணி வாங்கி விற்கும் அடிமை வாணிகம் அன்று ஒரு தொழில். மக்கள் மனித விலங்குகளென நடத்தப்பட்ட அன்றுதான் ஒனேசிமு தன் உயிர் என்கிறார் பவுல் (12). அவனைத் தன்னிடம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவன் மீது பாசம் கொள்ளுகிறார். தன் எஜமானனை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்த இவன், இனிப் பிரியமாட்டான் என்று உறுதி கூறுகிறார். பவுல் தவறியவனுக்கு அபயம் அளித்து அன்பு செய்ததுபோல், தவறியவர்களை நானும் அன்புடன் வரவேற்கிறேனா? பலவீனத்தால் தகாத பழக்கத்திற்கு ஆளாகியிருப்போரை என் நல்லுரையால்-வாழ்வால் திருத்தி நல்வழி காட்டுகின்றேனா?
எஜமான் - அடிமை நல்லுறவு
அடிமை அமைப்பை அடியோடு அகற்றிவிடப் பவுலால் முடியவுமில்லை; அவர் முயலவுமில்லை. ஆனால் வாய்ப்புக் கிட்டும் பொழுதெல்லாம் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற மறையுண்மையை வலியுறுத்துகிறார் (காண் 1கொரி. 12:13; கலா. 3:28). எஜமான், அடிமை அமைப்பு முறையை மாற்ற முடியாத நிலையில், அந்த உறவைச் சீர்படுத்துகிறார். இவ்வுறவைப் புதிய கண்ணோட்டத்தில் காண்கிறார். ஒருவன் எந்த நிலைக்கு அழைக்கப் பட்டானோ அந்த நிலையிலேயே அவன் கடவுள் திருமுன் நிலைத்திருக்கட்டும் என்கிறார் (காண் 1 கொரி. 7:21-24). ஒவ்வொருவரும் நடக்க வேண்டிய நெறியைக் குறிப்பிடுகின்றார். “அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும் முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்”... அப்படியே தலைவர்களும் அடிமைகளிடம் அன்பு காட்ட வேண்டும் (காண் எபே. 6:5-9)
“எங்கு எங்குப் பார்த்தாலும் எவ்வுயிருக்கும் அவ்வுயிராய்
அங்கு அங்கு இருப்பது நீ அன்றோ, பராபரமே" (தாயு)
இன்றைய சமுதாயத்திலும் தம்மையே எஜமானர்களிடம் விற்று விட்ட கொத்தடிமைகள் இல்லாமல் இல்லை. பணியாளர்களைக் கொத்தடிமை களாக நடத்தும் முதலாளிகள் உள்ளனர். வீட்டு வேலைக்காரர்களை மனிதர்களாகவே மதிக்காத மனித மிருகங்களும் உள்ளன. இது சமுதாயப் பாவம் என்பதை உணர வேண்டும். செல்வந்தர்கள் மேலும் மேலும் பொருளைக் குவித்துப் பணத்தில் மிதப்பதும், ஏழைகள் மேலும் சுரண்டப்பட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டு அடிமைகளாக கொடுமைப்படுத்தப்படுவதும் சமுதாய துரோகம் என்பதைப் பொறுப்புள்ள வர்கள் - திருச்சபை உணர வேண்டும். அடிமையாக்கப்பட்டவர் களுக்காகப் பரிந்துபேச நான் தயாரா? தவறு செய்பவர்களைக் காணும்பொழுது, நானும் தவறக்கூடும் என்பதை உணர்ந்து, அவர்களுக்குப் பரிவு காட்டுகிறேனா?
அவனை உம்மிடம் அனுப்புவது என் உயிரையே அனுப்புவது போலாகும்.
நற்செய்தி: லூக். 14 : 25 - 33
இயேசுவைப் பின்செல்வதில் தடையாயிருக்கும் எதையும், எவரையும் நிராகரிக்காதவன் அவரது சீடனாயிருக்க முடியாது. தனது உயிரையும் இழக்கத் துணிபவனே ஆண்டவரின் உண்மையான சீடன். கோபுரம் கட்டுதல், போருக்குச் செல்லுதல் என்ற உவமைகள் வழியாகச் சீடத்துவம் விளக்கம் பெறுகிறது.
அனைத்திற்கும் மேல் ஆண்டவர்
“தாய் தந்தையரைப் பேணுவாயாக" என்பது இயற்கை விதி; இறைவனின் கட்டளை. “புதிய கட்டளை கொடுக்கிறேன்: ஒருவர் ஒருவர்க்கு அன்பு செய்யுங்கள்” என்பது ஆண்டவர் அளித்த புதிய கட்டளை. அதே ஆண்டவர் தாய் தந்தையரை, மனைவி மக்களை வெறுத்தொதுக்கி விடு என்று கூற முடியாது. எனவே என் பெற்றோர் உற்றார் மீது நான் காட்டும் அன்பும் இறையன்புக் கண்ணோட்டத்தில் அமைய வேண்டும் என்பதே ஆண்டவரின் போதனை. ஆண்டவர் அன்புக்குத் தடையாயிருக்கும் எந்த அன்பும் உண்மையான அன்பாகாது. வேத கலாபனை காலத்தில் “இயேசுவா, வாழ்வா?” எதைத் தேர்ந்தெடுப்பது என்ற பிரச்சனை எழுந்த போது, இயேசுவைத் தேர்ந்தெடுத்துத் தம் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள் இயேசுவின் நிபந்தனையை ஏற்று அவரைப் பின்சென்ற உண்மையான சீடர்கள். ஊழலும், பொய்யும் புரட்டும் மலிந்துள்ள சமுதாயத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றுவதில் வரும் தொல்லைகளை ஏற்று, நேர்மையான வழியில் நடப்பவன், இயேசுவின் சீடன். “ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்” (பிலி 3:7-8, 10)
“பெற்ற தாய் தன் மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
(கர்த்தர்தனை) நான் மறக்கமாட்டேன்”
(திருவருட்பா) என்று சபதம் செய்வேனா?
இரு உவமைகள்
கிறிஸ்துவைப் பின்செல்வது கடினமானது; உலக மதிப்பீடுகளுக்கு மாறான போதனையைப் பின்பற்றுவது எளிதன்று. இவரது சீடர்கள் எதிர் நீச்சல் போடத் தயாராயிருக்க வேண்டும். எனவே தான் "விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது" என்கிறார் இயேசு (மத். 11:12). கோபுரம் கட்ட விரும்புபவன் வரைபடம் வரைந்து, தன் செல்வநிலையைக் கணித்து, தேவையை உணர்ந்து, ஆட்களைச் சரிசெய்து, இடத்தைத் தேர்ந்தெடுத்து கோபுர வேலையைத் தொடங்குவான். இப்படிச் செய்யாவிட்டால் அவன் அதை முடிக்க முடியாத நகைப்புக்குள்ளாவான். அப்படியே போருக்குச் செல்பவரும் கீழ்க்கண்ட குறள் நெறியைப் பின்பற்றுவர்.
"வினைவலியும் தன்வலியும் மாற்றான்
வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்” (குறள் 471) "
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” (குறள் 467)
இச்சாதாரணச் செயல்களில் இவ்வளவு கவனம் தேவை என்றால், வாழ்க்கைப் பிரச்சனையாகிய இயேசுவின் சீடனாயிருப்பதில் எவ்வளவு கவனம், துணிவு தேவை என்ற பாடம் இங்குப் போதிக்கப்படுகிறது.
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லாதவன் என் சீடனாய் இருக்க முடியாது.