மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 23ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசேக்கியேல் 33:7-9 | உரோமையர் 13:8-10 | மத்தேயு 19:15-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

நமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது குறள் .

“உன்னை அன்பு செய்வதுபோல உன் அயலானையும் அன்பு
செய் ” என்பது இறைவாக்கு.

நம்மைப் படைத்து, காத்து, பராமரித்து வருகின்ற கடவுளுக்கு  நாம் நமது நன்றியை முதலில் காணிக்கையாக்க வேண்டும் . எங்ஙனம் நமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பதை விளக்குவதுதான் இன்றைய இறைவார்த்தைகள் .

நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுவது சுயநலம் .  பிறர் மட்டும் நலமுடன் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுவது பொறுப்பற்ற செயல் . நானும் வாழ்ந்து பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி, செயல்படுவது பொது நலமாகும் ; அதுவே உலக நலமுமாகும் . இவ்வுலக நலம் பேணுதலில் நாம் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக, ஊன்றுகோலாக இருக்க வேண்டும் . “தோள் கொடுப்பான் தோழன் ” என்பார்கள் . ஆதியில் “எங்கே உன் சகோதரன் ” (தொநூ. 4 :9) என்று வினவப்பட்டபோது “அவனுக்கு நான் என்ன காவலாளியா?” (தொநூ. 4:9) என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. அது தொடக்கம் . அதிலிருந்து இறைவன் மனிதக் குலத்தைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தி வாழ்விக்க முயலுகின்றார் . அதன் பரிணாம வளர்ச்சிதான் பிறரைத் தீங்கிலிருந்து விலகி வாழ அறிவுறுத்தும் கடமையை ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ளான் என்று இறைவாக்கினர் வழியாக  விளக்கப்படுகிறது.

திருச்சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும் , இயேசுவின் ஒரே சட்டம் அனைத்தையும் முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. அதைத்தான் புனித பவுல் அடிகளார் , “பிறரிடத்தில்   அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவர் ” (உரோ.. 13:8) என்கிறார் .

கிறிஸ்துவினுடைய போதனைகளைக் கிரகித்துக்கொண்டு, அவரின் உயிர்ப்பின் மகிமையில் வாழ விழைந்த ஆதித் திருச்சபையில் ஒருவர் மற்றவருக்கிடையேயோான பிரச்சனைகளையும் , மனத்தாங்கல்களையும் எங்ஙனம் சுமூகமாகத் தீர்த்து வைப்பது என்பதை விளக்குவது நற்செய்தி. குறைகள் இல்லா மனிதர்கள் இல்லை. ஆனால் , குறைகளைச் சுட்டிக்காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்கிறவர் உண்மையான சமூகப் பிரச்சினையுள்ள, உறவுகளை மதிக்கின்ற மனிதராகிறார் . பிரச்சனைகளுக்கு மேல் தனி மனித மாண்பு போற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நற்செய்தியின்படி வாழ முற்படுவோம் .

 • வழி. தவறினோரை வாஞ்சையுடன் அணுகுவோம் .
 • வன்சொல் தவிர்த்து வழிகாட்டி
 • வாழ்வுக்கு இலக்கணமாம் ஆண்டவரிடம் இணைந்து செல்வோம் !
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இருளைப் பழிக்காதே, ஒளியை ஏற்றிவை.

ஒரு நாள் குரு ஒருவர் தனது சீடர்களையெல்லாம் அழைத்து, அவர்களுள் மிகவும் சிறந்த சீடன் ஒருவனையும் , மிகவும் மோசமான சீடன் ஒருவனையும் தேர்ந்தெடுத்து, நீங்கள் இருவரும் நாட்டுக்குள் சென்று, மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து வாருங்கள் எனச் சொல்லி அவர்களை நாட்டுக்குள் அனுப்பி வைத்தார் .

மக்களைச் சந்தித்து பத்து நாள்கள் கழித்து இருவரும் துறவற மடத்திற்குத் திரும்பினர் . நல்லவன் , நான் சந்தித்த எல்லாருமே நல்லவர்கள் என்றான் . தீயவனோ, நான் சந்தித்த எல்லாருமே தீயவர்கள் என்றான் . குருவோ, யாரும் நூற்றுக்கு நூறு நல்லவருமல்ல; நூற்றுக்கு நூறு தீயவருமல்ல. ஒவ்வொரு நல்ல மனிதருக்குள்ளிருக்கும் தீயதை நீக்குவதும் , தீய மனிதருக்குள்ளிருக்கும் நல்லதை வெளிக்கொண்டு வருவதும் துறவிகளாகிய நமது கடமையாகும் என்றார் .

கடவுள் தாம் படைத்த உலகத்தை நல்லது என்று கண்டார் [தொநூ 1:25]; தம் உருவிலே மானிடரைப் படைத்தார் [தொநூ 1:27]. மனிதர்கள் சோதனைக்கு உட்பட் டுத் தங்களது சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்திய போது அவர்கள் மனம் காயப்பட்டது; அவர்களுக்குள் பாவம் புகுந்தது. அவர்களின் பாவம் அவர்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவினால் நேருக்கு நேர்   தடுத்தாட் கொள்ளப்பட்ட பவுலடிகளாரைக் கூட பாவச் சோதனை விட்டு  வைக்கவில்லை. அவர் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலே, நான் ஊனியல்பினன் ; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன் ; நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய  விரும்புகின்றேனோ அதை நான்   செய்வதில்லை : எதை  வெறுக்கின்றேனோ அதையே செய்கின்றேன் [உரோ 7:14-15]  என்கின்றார் .

ஆகவே நம்மில் யாரும் , நான் நூற்றுக்கு நூறு புனிதமானவன் , புனிதமானவள் என்று பெருமை பாராட்மக் கொள்ள முடியாது. நாம் அத்தனைபேரும் பாவிகளே [உரோ 3:9-18].

நாம் செய்ய வேண்டியிதல்லாம் ஒன்றே. இன்றைய நற்செய்தியும் , முதல் வாசகமும் சுட்டிக்காட்டுது போல, நம்மைச்   சுற்றியுள்ள பாவிகள் , தங்களது பாவங்களிலிருந்து வி டுதலை பெற அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் . இருளைப் பழிப்பதை விட விளக்கேற்றிவைப்பது நல்லது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ' இறைவாக்கினர் எசேக்கியேலிடம் , மானிடா! நான் உன்னை இஸ்ரயேல்   வீட்டாருக்குக் காவலாளியாக ஏற்ப டுத்தியுள்ளேன் . என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை
எச்சரிக்க வேண் டும் [எசே 33:7] என்கின்றார் . நற்செய்தியிலே இயேசு, நமது சகோதர, சகோதரிகளின் குற்றங்களை எடுத்துக்காட்ட நம்மை அழைக்கின்றார் [மத் 18:15].

நாம் நம்மீது அன்புகூர்வது போல் , நம் அயலார் மீதும் அன்பு கூர  வேண்டும் [இரண்டாம் வாசகம் ].

மேலும் அறிவோம் :  

அறிவினான் ஆகுவ(து) உண்டா பிறிதின் நோய்
தம்சநாய்கபோல் போற்றாக் கடை (குறள் : 315).

பொருள் : பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதிப் பேணிப் போற்றாவிட்டால் ஒருவர் பெற்றுள்ள அறிவினால் பயன் எதுவும் இல்லை!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உங்கள் எதிரிகளோடு உடன்பாடு

பயங்கரக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட இளைஞனுடைய அப்பாவிடம் அவர் நண்பர் கேட்டார், "உங்கள் பையன் பயங்கரமாகக் குடிக்கிறானே அவனைக் கேட்டால் என்னr?"  அதற்கு அப்பா கூறினார். "நான் கேட்டால் அவன் கொடுக்கமாட்டான்." மகனைத் திருத்த வேண்டிய அப்பாவே மகனிடம் மதுபானத்தை எதிர்பார்க்கிறார். இது எப்படி இருக்குது?

பல தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பையனை அனுடைய அப்பா திருந்தவில்லை. இறுதியில் அவன் சிறையில் அடைக்கப்பட்டான் அப்பா அவனைச் சிறையில் பார்க்கச் சென்றபோது மகன் அப்பாவிடம் சொன்னது

துள்ளி திரிகின்ற பருவத்தில் -என்
துடுக்கு அடக்கி -என்னைப்
பள்ளிக்கு அனுப்பாத - என்
தந்தையாகிய பாதகனே

உரிய காலத்தில் தன்னுடைய தவறுகளைச் கட்டிக்காட்டித் தன்னைத் திருந்தாத தகப்பனை அவனுடைய மகன் "பாதகனே" என்று அழைத்தான்.

தவறு செய்கிறவர்களைத் திருத்துவது நம்முடைய கடமை பெற்றோர்கள் பிள்ளைகளையும் நண்பர்கள் நண்பர்களையும் திருத்த வேண்டும். கூடிக் குடித்து  கும்மாளம் அடிப்பதற்காக நட்பு இல்லை. நண்பன் தவறு செய்யும்போது அவன் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கே நட்பு உள்ளது

நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற்பொருட்டு (குறள் 784)

இவ்வுலகம் தீயவர்களால் கெடுவதில்லை. தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு, கண்டனக் குரல் எழுப்பாமல்   இருப்பவர்களால் தான் உலகம் கெடுகிறது. இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் தீமை செய்பவர்களைத் திருத்த வேண்டும் என்று அறிவுறத்துகிறது. முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாகக் கூறுகிறார். தீயவர்களை நாம் எச்சரித்தும் அவர்கள் தீமையில் செத்தால் அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. மாறாக தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில்  இறந்தால், அவர்களுடைய அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் .

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாம் தீமை புரிபவர்களை எவ்வாறு திருத்த வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். தவறு இழைப்போரைத் தனிப்பட்ட முறையில் திருத்த வேண்டும் அது இயலவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு பேர் முன்னிலையில் அவரைத் திருத்த வேண்டும். அதுவும் நடக்கவில்லை என்றால், வழக்கைத் திருச்சபைக்குக் கொண்டுவரவேண்டும் திருச்சபையின் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர் பிற இனத்தவருக்குச் சமம்! திருச்சபைக்குத தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு. அத்தீர்ப்புக்குக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து வலியுறுத்துகிறார் கிறிஸ்தவர்களிடையே ஏற்படும் வழக்குகளைச் சிவில் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறார் திருத்தூதர் பவுல் (1கொரி 6:1-8). மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய திருப்பணியாளர்களும் துறவறத்தாரும் சொத்துரிமைக்காக இன்று நீதிமன்றம் செல்வது நீதிபதிகளுக்கே அதிர்ச்சியூட்டுகிறது.

இருவர் ஒரு பொருள்மீது உரிமை பாராட்டி வழக்குமன்றம் செல்வதால் யார் பயனடைகின்றனர்? ஒரு பசுமாட்டின் மீது இருவர் உரிமை பாராட்டி நீதிமன்றம் செல்கின்றனர். ஒருவர் இது என் மாடு என்றுகூறிப் பசுவின் கொம்பைப் பிடித்து இழுக்கிறார். மற்றவர் "இது என் மாடு" என்றுகூறிப் பசுவின் வலைப் பிடித்து இழுக்க நடுவில் வழக்குரைஞர் பசுவின் மடியிலிருந்து பால் கரந்து குடித்துக் கொண்டிருக்கிறார்!. இருவர் நீதிமன்றத்துக்குப் போவதால் வழக்குரைஞர்களுக்குத் தான் இலாபம் இது தேவையா? நீங்கள் உங்கள் எதிரிகளோடு உடன்பாடு செய்யாமல் நீதிமன்றம் சென்றால், நடுவர் சிறையில் உங்களை அடைப்பார் கடைசிக் காசுவரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டர்கள்" (மத் 525-26) என்று கிறிஸ்து எச்சரித்துள்ளார் ஒரு காதலன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சம் தலைமுடியை வைத்து அனுப்பினான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் கூறினான் "என் காதலி என் கடிதத்தை மொட்டைக் கடிதம் என்று நினைக்கக்கூடாது" என்றான். இன்று திருச்சபையில் திருப்பணியாளர்கள் கூட ஒருவர் மற்றவருடைய பெயர் களங்கப்படும் விதத்தில் மொட்டைக் கடிதங்கள் எழுதுகின்றனர்; சுவரொட்டிகளில் பிறருடைய அந்தரங்க வாழ்வை அம்பலத்திற்குக் கொண்டுவந்து ஆனந்தம் அடைகின்றனர். இவர்களுடைய வக்கிரப் புத்தியால் தூய ஆவியாருக்கே மன உளைச்சல் ஏற்பட்டு மருந்துவ விடுப்பில் சென்று விட்டாராம்!

கிறிஸ்தவர்களிடையே தலைதூக்கும் பொறமை, மனக்கசப்பு கட்சி மனப்பான்மை பேய்த்தன்மை வாய்ந்தது என்கிறார் திருத்தூதர் யாக்கோபு (யாக் 3:13-16). திருச்சபையில் இடறலை உருவாக்கும அலகையின் கையாட்களின் "கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது" என்கிறார் ஆண்டவர் (மத் 18:6-7). ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அமைதிக்குழு இருக்க வேண்டும் இக்குழு சமரச முயற்சியில் இடுபட வேண்டும் இக்குழுவின் நியாமான தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர்களைத் திருச்சபையிலிருந்து நீக்கிவிட வேண்டும். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அன்புதான் உச்சச் சட்டம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13:10, பிறரைக் குறை கூறுவதிலும் பிறரை விமர்சனம் செய்வதிலும் அன்பே முதலிடம் பெற வேண்டும்.

அன்பே இல்லாத விமர்சனம் தவறு. விமர்சனமே இல்லாத அன்பும் தவறு. அன்போடு கூடிய விமர்சனமே சரியாகும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

குற்றமும்‌ சுற்றமும்‌

கற்பனைக்‌ கதையல்ல. நடந்ததாகச்‌ சில ஆண்டுகளுக்கு முன்‌ நாளிதழ்‌ சொன்ன செய்தி இது!

கொலைக்களத்திற்குக்‌ கொண்டு செல்லப்படுகிறான்‌ இளைஞன்‌ முத்து. தூக்கிலிடுமுன்பு அங்கிருந்த நீதியரசர்‌ அவனிடம்‌ “கடைசி ஆசை என்று ஏதாவது இருந்தால்‌ சொல்‌” என்கிறார்‌. அதற்கு அவன்‌ ஒரு முறை தன்‌ தாயைப்‌ பார்க்க வேண்டும்‌ என்று சொல்ல, நீதியரசர்‌ அவனது தாய்ப்பாசத்தை எண்ணி நெகிழ்ந்துபோய்‌ தாயை அழைத்துவர ஏற்பாடு செய்கிறார்‌. தாயைக்‌ கண்டதும்‌ தூக்குமேடை விட்டு ஓடிச்‌ செல்கிறான்‌. தன்‌ தாயைக்‌ கட்டியணைத்து முத்தமிடுவான்‌ என்று நினைத்த அனைவரும்‌ அதிர்ச்சியடைய, முத்து தன்‌ தாயின்‌ கழுத்தை நெறித்துக்‌ கொல்ல முயல்கிறான்‌. அருகில்‌ இருந்தவர்கள்‌ உடனே ஓடிச்‌ சென்று மகனையும்‌ தாயையும்‌ பிரிக்கின்றனர்‌. “ஏன்‌ இப்படிச்‌ செய்தாய்‌?” என்று நீதியரசர்‌ வினவ, “நான்‌ இந்த அளவுக்கு கொலை, கொள்ளை பாலியல்‌ வன்முறை என்று குற்றங்களுக்கு ஆளாகக்‌ காரணமே என்‌ தாய்தான்‌. பள்ளியில்‌ நான்‌ முதன்முறை திருடியபோது என்‌ தாய்‌ என்னைக்‌ கண்டித்திருந்தால்‌, திருந்தி இருப்பேன்‌. இவ்வளவு தூரம்‌ நான்‌ சென்றிருக்க மாட்டேன்‌. எனவே என்னோடு அவளும்‌ செத்து ஒழியட்டும்‌” என்கிறான்‌ உறுதிப்பட.

“துள்ளித்‌ திரிகின்ற பருவத்தில்‌ என்‌ துடுக்கடக்கி - என்னை பள்ளிக்கு அனுப்பிலனே என்‌ தந்தையாகிய பாதகனே” என்ற பட்டினத்தாரின்‌ பாடல்‌ அடிகள்‌ ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. உரிய காலத்தில்‌ தவறுகளைச்‌ சுட்டிக்காட்டாத, தட்டிக்‌ கேட்காத பெற்றோர்களோ, நண்பர்களோ பாதகர்களே!

இந்த உலகம்‌ கெட்டுச் சீரழிவது தீயவர்களால்‌ அல்ல, தீயவர்களின்‌ தீச்செயல்களைக்‌ கண்டு கண்டிக்காமல்‌ கண்டனம் செய்யாமல்‌ மௌனமாக இருப்பவர்களால்தான்‌.

திருத்துவது என்பது இறைவாக்குப்பணி என்கிறது இன்றைய வழிபாடு.

யோபு 5:17-18 கூறுகிறது : “இதோ கடவுள்‌ திருத்தும்‌ மனிதர்‌ பேறுபெற்றோர்‌. ஆகவே வல்லவரின்‌ கண்டிப்பை வெறுக்காதீர்‌. காயப்படுத்தினாலும்‌ கட்டுப்போடுபவர்‌ அவரே. அடித்தாலும்‌ ஆற்றுகின்ற கை அவரதே”. “பிள்ளாய்‌ ஆண்டவர்‌ உன்னைக்‌ கண்டித்துத்‌ திருத்துவதை வேண்டாம்‌ என்று தள்ளி விடாதே; அவர்‌ கண்டிக்கும்போது அதைத்‌ தொல்லையாக நினையாதே. தந்‌தை தன்‌ அருமை மகனைக்‌ கண்டிப்பது போல்‌ ஆண்டவர்‌ தாம்‌ யாரிடம்‌ அன்பு கொண்டிருக்கிறாரோ, அவர்களைக்‌ கண்டிக்கிறார்‌” என்ற நீதிமொழிகளை (3:11-12) மேற்கோள்‌ காட்டி எபிரேயர்‌ (12:5-6) நினைவுபடுத்துவதும்‌ சிந்தனைக்குரியது.

த(க)ண்டித்துத்‌ திருத்துவது என்பது கடவுளின்‌ தந்தைக்குரிய அக்கறையாகும்‌, ஈடுபாடாகும்‌. எனவேதான்‌ தான்‌ நேசித்த இஸ்ரயேல்‌ மக்களை நேரிய வழியில்‌ நடத்த / நெறிப்படுத்த அவர்கள்‌ நடுவே இறைவாக்கினரை அனுப்பினார்‌. “மானிடா! நான்‌ உன்னை இஸ்ரயேல்‌ வீட்டாருக்கும்‌ காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்‌. என்‌ வாயினின்று வரும்‌ வாக்கைக்‌ கேட்கும்‌ போதெல்லாம்‌ நீ என்‌ பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும்‌”. (எசேக்‌. 33:7) தீயவர்களை நாம்‌ எச்சரித்தும்‌ அவர்கள்‌ திருந்தாது தீமையில்‌ செத்தால்‌, அவர்கள்‌ அழிவுக்கு நாம்‌ பொறுப்பாளிகள்‌ அல்ல. மாறாக தீயவர்களை நாம்‌ எச்சரிக்காமல்‌ இவர்கள்‌ தீமையில்‌ மாண்டால்‌ அவர்கள்‌ அழிவுக்கு நாம்‌ பொறுப்பாளிகள்‌ (எசேக்‌. 33:8-9). இந்தச்‌ சமூக அக்கறையுள்ள எவரும்‌ “நான்‌ என்ன, என்‌ சகோதரனுக்குக்‌ காவலாளியோ?”” (தொ.நூ. 4:9) என்று காயீனைப்‌ போலத்‌ தட்டிக்‌ கழித்துத்‌ தப்பிக்க முடியுமா?

எவ்வாறு திருத்துவது என்பதை இன்றைய நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. முதலில்‌ தனியாக, பிறகு ஒரிரு நண்பர்களோடு இணைந்து, அதன்பின்‌ திருஅவையின்‌ வழி நின்று திருத்த வேண்டும்‌. திருஅவைக்கும்‌ செவி சாய்க்காவிடில்‌, அவன்‌ உனக்குப்‌ புற இனத்தான்‌ போல்‌ இருக்கட்டும்‌ என்கிறார்‌ இயேசு.

இறைவாக்கினர்‌ நாத்தான்‌ மன்னன்‌ தாவீதின்‌ பிழையைச்‌ சுட்டிக்காட்டத்‌ தவறவில்லை. திருமுழுக்கு யோவான்‌ ஏரோதின்‌ தவறைக்‌ கண்டிக்கத்‌ தயங்கவில்லை. அருளானந்தர்‌ என்ற புனிதர்‌ தடியத்தேவன்‌ என்ற சிற்றரசனைத்‌ திருத்தப்‌ பின்வாங்கவில்லை. ஏன்‌, இயேசுவே பரிசேயர்களின்‌ வெளிவேடங்களைத்‌ தோலுரித்துக்‌ காட்ட அஞ்சியதில்லை.

இறைவனைத்‌ தந்தை என்று அழைக்கும்‌ இறைமக்களாகிய நாம்‌, சகோதர உறவில்‌ பிணைக்கப்படுகிறோம்‌. நமது வாழ்வு, நிறைவு, மீட்பு நமது சகோதரனையும்‌ சார்ந்து இருக்கிறது. செய்யக்கூடாததைச்‌ செய்வது பாவம்‌ என்றால்‌ செய்ய.வேண்டியதைச்‌ செய்யத்‌ தவறுவதும்‌ பாவம்தானே! நாம்‌ சார்ந்த இந்தச்‌ சமுதாயத்திலே நமக்குள்ள சமூகப்‌ பொறுப்பைக்‌ கோடிட்டுக்‌ காட்டுகிறார்‌ இயேசு. எவன்‌ எக்கேடு கெட்டால்‌ எனக்கென்ன, நான்‌ உண்டு என்‌ வேலை உண்டு என்று ஏனோ தானோ என்ற போக்கைத்‌ தவிர்த்து அனைவரும்‌ கடவுளின்‌ பிள்ளைகள்‌ என்ற அடிப்படை உறவிலே பிறக்கும்‌ உரிமையைப்‌ பயன்படுத்திச்‌ சகோதரனைத்‌ திருத்த நல்வழிப்படுத்தக்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌. திருத்தும்‌ கடமையின்‌ உள்நோக்கமாக அன்பும்‌ அக்கறையுமே இருக்க வேண்டும்‌. அவனது வளர்ச்சி நோக்குடைய ஈடுபாடு - அடுத்தவரை அன்பு செய்வது என்பது அவருக்கு எது நல்லதோ அதை மட்டும்‌ செய்வது. சகோதரனின்‌ வளர்ச்சியைக்‌ கருத்தில்‌ கொண்டு திருத்த மனமில்லாதவர்கள்‌ நாம்‌, அவர்களின்‌ குறைகளை மட்டும்‌ வெளிச்சம்‌ போட்டுக்‌ காட்டத்‌ தயங்குவதில்லை.

ஒரு புளியமரத்தைத்‌ தூரத்தில்‌ இருந்து பார்த்தால்‌ முழு மரமும்‌ யும்‌. அதன்‌ -அடியில்‌ நின்று பார்த்தால்‌ ஒரு சில கொப்புக்கள்‌ யும்‌, புளியமரத்தினடியில்‌ ஒரு பொந்து இருந்து அதனுள்‌ உட்கார்ந்து பார்த்தால்‌ மரமே தெரியாது. நாம்‌ நமக்குள்‌ இருக்கிறோம்‌. ஈது வாழ்வில்‌ நாம்‌ செய்யும்‌ தவறுகள்‌ நமக்கே தெரிவதில்லை. நமது ணுக்கு அருகில்‌ இருக்கும்‌ புருவத்தை நம்மால்‌ பார்க்க முடிகிறதா? குறையைக்‌ காணும்‌ நாம்‌ நமது குறையை அறியாமல்‌ இருக்கிறோம்‌.

எவரிடம்‌ தான்‌ குறையில்லை? “நல்லவர்கள்‌ நானிலத்தில்‌ இரண்டு பேர்‌! நிச்சயமாக நீயும்‌ நானும்‌ அல்ல! ஒருவன்‌ இப்போது உயிரோடு இல்லை. மற்றவன்‌ இன்னும்‌ பிறக்கவில்லை” - இதுதான்‌ உண்மை. 5ஆம்‌ ஜார்ஜ்‌ மன்னரின்‌ முடிசூட்டுவிழாவின்போது அவரைப்‌ பாராட்டிப்‌ பல ஆங்கிலக்‌ கவிஞர்கள்‌ பாடினார்கள்‌: அதில்‌ ஒரு பெண்‌, “இவரிடம்‌ ஒரு குறையையாவது கண்டால்‌ நான்‌ இவரை மனிதர்‌ என்‌று அழைத்திருப்பேன்‌” என்று பாடி முதல்‌ பரிசைப்‌ பெற்றுக்‌ கொண்டாள்‌.

எல்லாரும்‌ தவறக்‌ கூடியவர்களே! எனவே திருந்துவதும்‌ " திருந்த உதவுவதும்‌ சமூகத்‌ தேவையாகிறது. இதனைச்‌ செய்வதில்‌ பொறுமையும்‌. கனிவும்‌, சாந்தமும்‌ கலந்த அணுகு முறை அவசியம்‌ என்பதே இன்றையச்‌ செய்தி. தவறான அணுகுமுறையின்‌ மூலம்‌ திருச்சபையின்‌ சமூகங்கள்‌ பல உறுப்பினர்களை இழந்திருக்கிறது என்பது கசப்பான வரலாறாகும்‌.

அடுத்தவனுடைய தவறுகளை வெகு எளிதாக மறப்பதற்கு வழி என்னவெனில்‌ நம்முடைய தவறுகளைப்‌ பற்றி அடிக்கடி நினைத்துக்‌ கொள்வதுதான்‌.

தந்தையின்‌ தலையில்‌ ஒருசில நரை முடிகள்‌ இருப்பதைக்‌ கண்ட மகன்‌ தந்தையிடம்‌, “ஏன்‌ உங்கள்‌ தலையில்‌ ஒரு சில முடிகள்‌ மட்டும்‌ வெள்ளையாக இருக்கின்றன?” என்று கேட்டான்‌. மகன்‌ தவறு செய்யக்‌ கூடாது என்ற நல்ல எண்ணத்தில்‌, “பிள்ளைகள்‌ செய்யும்‌ தவறு அல்லது கெட்ட செயல்‌ ஒவ்வொன்றிற்கும்‌ ஒவ்வொரு வெள்ளை முடி தந்தையின்‌ தலையில்‌ தோன்றும்‌” என்று தந்தை சொன்னார்‌. மகன்‌ சொன்னான்‌: “அதானே பார்த்தேன்‌. தாத்தாவின்‌ தலை முழுவதும்‌ ஏன்‌ வெள்ளை முடிகளாக இருக்கின்றன என்று இப்போதுதான்‌ புரிகிறது...

“தீயோரை அவர்கள்‌ தம்‌ வழியிலிருந்து திரும்ப வேண்டும்‌ என்று நீ எச்சரித்தும்‌ அவர்கள்‌ தம்‌ வழியிலிருந்து திரும்பாவிட்டால்‌ அவர்கள்‌ தம்‌ குற்றத்திலேயே சாவர்‌. நீயோ உன்‌ உயிரைக்‌ காத்துக்‌ கொள்வாய்‌” (எசேக்‌. 39:9).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

குடும்ப உறவுகள்

கடந்த சில ஆண்டுகளாக, மின்னஞ்சலில் அவ்வப்போது ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய கட்டுரை இது.

பல பந்துகளை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகத் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையை செய்வதற்கு, தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரையின் முதல் சில வரிகள் இதோ: “பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளையும் நீங்கள் மாற்றி மாற்றி தூக்கிப்போட்டு படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் – அதாவது, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், உடைந்துவிடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது, மிகக் கடினமான காரியம். அல்லது, இயலாத காரியம் என்று கூடச் சொல்லலாம்.”வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள் போன்றவை... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்துகொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.

நமது தொலைக்காட்சிகளில் வரும் பல மெகாத் தொடர்கள், குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டுகொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் நம்மில் பலரை கண்ணீரில் மூழ்கச் செய்கின்றன.

எண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு. ‘இத்தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. அவ்வப்போது, குடும்பங்களில், நிஜமான மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் இந்தக் குடும்பங்களை மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல், குடும்பப் பிரச்சனைகளை மீண்டும், மீண்டும் காட்டும் நமது மெகாத் தொடர்கள், இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வது அபூர்வம். அப்படியே சொல்லப்படும் தீர்வுகளும் பயனுள்ளவையா அல்லது வெறும் பரபரப்பை உருவாக்குகின்றனவா என்பதும் கேள்விதான்.

தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி நம்மை குடும்பத்தின் பிரச்சனைகளுக்கு அழைத்து வந்திருப்பதால், இத்தொடர்களைப் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கும் அளவுக்கு, நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை அலசிப் பார்க்க, இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.

குடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது என்ன செய்ய முடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை இன்று இயேசு நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்று, நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:

மத்தேயு நற்செய்தி 18: 15-17

“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.”

இப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெரிதும் விலகிவிடும். Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கப்படும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.

இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். “உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.

பொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்லவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய நாம் முதல் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:
மத்தேயு 5: 23-24
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன?

நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம்விட்டுப் பேசுவதற்குப் பதில், தேவையற்ற, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.
நம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

2013ம் ஆண்டு நாம் கொண்டாடிய நம்பிக்கையின் ஆண்டின் ஓர் உச்சக்கட்ட நிகழ்வாக, அக்டோபர் 26ம் தேதி, பல்லாயிரம் குடும்பங்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்கு திருப்பயணமாக வந்திருந்தனர். அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பசிலிக்கா வளாகத்தில் மாலை நேரம் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, மனநல அளவில் மாற்றுத்திறன் கொண்ட ஒரு சிறுவன் திருத்தந்தையைச் சுற்றிச் சற்றி வந்ததையும், அவரது இருக்கையில் ஏறி அமர்ந்ததையும் நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

அந்தக் கூட்டத்தில் திருத்தந்தை அவர்கள், நலமான குடும்ப வாழ்வு அமைய நமக்குத் தேவையானது மூன்றே வார்த்தைகள் என்று கூறினார். இத்தாலிய மொழியில் Permesso, Grazie, Scusa என்ற இம்மூன்று வார்த்தைகளைக் கூறியத் திருத்தந்தை, கூடியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.

குடும்பங்களில் எதையும் செய்வதற்கும், சொல்வதற்கும் மற்றவர்கள் அனுமதியைப் பெறும் வார்த்தை, Permesso. தமிழில் இதற்கு இணையாக நாம் சொல்லக்கூடியது... தயவுசெய்து. மற்றவர்களுக்கு நன்றி கூறும் வார்த்தை - Grazie. தவறு செய்யும்போது, மன்னிப்பு கேட்கும் வார்த்தை - Scusa. தயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகள், உண்மையாகவே, உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக இருந்தால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. குடும்பங்களில் நல்லச் சூழல் உருவாக, எத்தனையோ மனநல அறிவாளிகள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்ற விழையும் நாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லித்தரும் எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே! இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்!

இறைமகன் இயேசுவும், திருத்தந்தையும் கூறும் எளிய அறிவுரைகளின்படி வாழ முயலும் குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் நிறைந்து பொங்க வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:

மத்தேயு 18: 20

“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அன்போடு நல்வழிப்படுத்துவோம்

நிகழ்வு

திருவிவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே (William Barclay) சொல்லக்கூடிய நிகழ்வு இது. நகர்ப்புறத்தில் வளர்ந்த மூன்று இளைஞர்கள், தங்களுடைய படிப்பு தொடர்பாக சிற்றூரில் இருந்த ஒரு வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அந்த வீட்டை ஒட்டிப் பண்ணை நிலம் ஒன்று இருந்தது. அந்த வீட்டில் கோழி, ஆடு, மாடு என்று பலவும் இருந்தன. அவற்றுக்கு நடுவில் இருப்பது நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த அந்த மூன்று இளைஞர்களுக்கும் புதிய அனுபவமாக இருந்தது.

ஒருநாள் அந்தப் பண்ணை நிலத்திலிருந்த இளங்கன்று ஒன்று எப்படியோ தப்பித்து பண்ணை நிலத்திலிருந்து ஊருக்குள் ஓடிவிட்டது. அதைப் பார்த்த நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களும் அதைப் பிடித்துக்கொண்டு வருவதற்கு அதன் பின்னாலேயே ஓடினார்கள். ஒருவழியாக அவர்கள் அதைப் பிடித்தும் விட்டார்கள்.

அவர்கள் அந்த இளங்கன்றைப் பிடித்ததும், அதைப் பண்ணை நிலத்திற்குக் கொண்டு வருவதற்கு பின்னாலிருந்து இருவர் தள்ளியும், முன்னாலிருந்து ஒருவர் அதன் கொம்பைப் பிடித்து இழுத்தும் பார்த்தார்கள். இளங்கன்றோ ஓர்அடிகூட நகராமல், அப்படியே முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த கன்றுக்குச் சொந்தக்காரப் பெண்மணி அதன் வாயில் தன் விரல்களைச் சப்பக் கொடுத்துக்கொண்டு, மறுகையில் இருந்த வைக்கோலை அதன்முன் காட்டிக்கொண்டே முன்னால் நடந்துசென்றார். கன்றோ அவர் பின்னாலேயே சென்று, பண்ணை நிலத்தை அடைந்தது.

நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நகர்ப்புற இளைஞர்கள் அவரிடம், “நாங்கள் மூன்று பேரும் சேர்த்து இழுக்கும்பொழுது வராத கன்று, நீங்கள் அதன் வாய்க்குள் விரலைச் சப்பக் கொடுத்து, முன்னால் நடந்துசென்றதும், உங்கள் பின்னாலேயே வந்துவிட்டதே! அது எப்படி?” என்றார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “இந்தக் கன்று உட்பட வழிதவறிப் போன யாரையும் கட்டாயப்படுத்தினால் அவர்கள் முரண்டுதான் பிடிப்பார்கள். மாறாக, அவர்களிடம் அன்போடு சொல்லிப் பார்த்தால், அவர்கள் மிக எளிதாக நல்வழிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்.

ஆம். அதிகாரத்தினாலோ, அடக்குமுறையினாலோ ஒருவரை நல்வழிக்குக் கொண்டுவர முடியாது; அன்பால்தான் ஒருவரை வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் நெறிதவறி வாழக்கூடிய ஒருவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வருவது...? நெறிதவறி வாழக்கூடிய ஒருவரை நல்வழிக்குக் கொண்டுவருவதில் நமக்கு இருக்கின்ற கடமை என்ன...? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் ஒவ்வொருவரும் காவலாளியே!

இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கெதிராக ஒருவர் தவறு செய்கின்றபொழுது அல்லது ஒருவர் நெறிதவறிப் போகின்றபொழுது, அவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, நெறிதவறிப் போன ஒருவரை நல்வழிப்படுத்துவதில் நமக்கு இருக்கின்ற சமுதாயக் கடமை என்ன என்பதைக் குறித்து இன்றைய முதல்வாசகம் எடுத்துச் சொல்வதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில் ஆண்டவராக கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலிடம், “நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்” என்கின்றார். “காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்” என்று ஆண்டவர் எசேக்கியேலிடம் சொல்லக்கூடிய சொற்கள், காயின் ஆண்டவரிடம் சொல்லக்கூடிய, “நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” (தொநூ 4: 9) என்ற சொற்களை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. உண்மையில் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களையும், இந்தச் சமூகத்தையும் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும் காவலாளிதான்.

ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம், நான் உன்னைக் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன் என்று சொல்லக் காரணம், இஸ்ரயேல் மக்கள் நெறிதவறி நடக்கின்றபொழுது, அவர்களுடைய தவற்றைச் சுட்டிகாட்டி, எச்சரிக்கவேண்டும் என்பதால்தான். ஆண்டவர் சொன்னதுபோன்று, இறைவாக்கினர் எசேக்கியேல் இஸ்ரயேல் மக்கள் தவறுசெய்கின்றபொழுது, அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரிக்காவிட்டால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்மேல் விழும் என்றும், அவர் அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரித்தால், அவர் தம் உயிரைக் காத்துக்கொள்வார் என்றும் கூறுகின்றார் ஆண்டவர்.

ஆம், ஓர் இறைவாக்கினர் அல்லது தலைவர் என்பவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்குக் காவலாளியாக இருந்து, அவர்கள் நெறிதவறிப் போய்விடாமல் காத்துக்கொள்ளவேண்டும்.

அன்போடு நல்வழிப்படுத்த வேண்டும்

நெறிதவறிச் செல்வோரை எச்சரித்து, அவரை நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஆண்டவர் எசேக்கியேலிடம் சொன்னார் எனில், இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடாகிய நம்மிடம், நெறிதவறிச் செல்கின்ற ஒருவரை எந்தெந்த வழிகளில் எச்சரித்து, நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்று சொல்கின்றார்.

நெறிதவறிச் செல்லும் ஒருவரை நல்வழிக்குக் கொண்டு வருவதற்கு இயேசு மூன்று விதமான வழிமுறைகளைச் சொல்கின்றார். ஒன்று, தனியாகச் சென்று நெறிதவறியவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவரை நல்வழிக்குக் கொண்டுவருதல். இரண்டு, இருவர் அல்லது மூவராகச் சென்று, நெறிதவறியவரை நல்வழிக்கு கொண்டு வருதல். இணைச்சட்ட நூல், ‘எந்தவொரு குற்றமும் இருவர் அல்லது மூவரது சாட்சியத்தாலேயே உறுதி செய்யப்படும்’ என்பதை (இச 19:5) இயேசு இங்கு இணைத்து, இருவர் அல்லது மூவர் மூலம் நெறிதவறிய ஒருவரை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்கின்றார்.

நெறிதவறியவரைத் திருஅவை மூலம் எச்சரித்து, அவரை நல்வழிக்குக் கொண்டு வருதல் இயேசு சொல்லும் மூன்றாவது வழிமுறை. இதற்கும் ஒருவர் செவிசாய்க்காவிடில் அவர் வேற்றினத்தார் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும் என்கின்றார் இயேசு. ஆம், ஒருவர் நெறிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக இன்னொருவர் எச்சரிக்கின்றபொழுது, அதைக் கேட்டு, அவர் நல்வழிக்கு வந்தால் அவருக்கு நல்லது. அதை விடுத்து, விடுத்த எச்சரிப்பையும் கேளாமல், தொடர்ந்து நெறிதவறி நடந்தால், முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போன்று, அவர் தன் குற்றத்திலேயே சாகவேண்டியததான். நெறிதவறிச் செல்வோரை மேலே சொல்லப்பட்ட மூன்றுவிதமான வழிமுறைகளைப் பின்பற்றி, ல்வழிக்குக் கொண்டுவருகின்றபொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, திருச்சட்டத்தின் நிறைவான அன்போடு நல்வழிப்படுத்தினால், அது நலம்பயக்கும்.

மனமொத்து இருக்கின்ற இடத்தில் இறைவன் இருக்கின்றார்

நெறிதவறிச் செல்வோரை அன்போடு நாம் நல்வழிப்படுத்தும்பொழுது, அவரும் நல்வழிக்கு வந்தார் எனில், அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறொன்றும் கிடையாது. ஏனெனில் நெறிதவறி நடக்கின்ற ஒருவர் நல்வழிக்கு வருகின்றபொழுது அங்கு மனமொத்த நிலை ஏற்படும். அப்படி மனமொத்த நிலை ஏற்படும்பொழுது, நாம் வேண்டுவது கேட்கப்படும். மட்டுமல்லாமல், அங்கு இறைவனின் உடனிருப்பும் இருக்கும். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கின்றார்.

ஆகையால், நெறிதவறிச் செல்லும் ஒருவர் நல்வழிக்கு வரவேண்டும். அப்படி அவர் நல்வழிக்கு வரும்பொழுது, எல்லாரும் மனமொத்திருந்தால் அங்கே இறைவன் குடிகொண்டிருப்பார் என்பது உறுதி. நாம் நல்வழியில் நடந்து, மனமொத்து வாழத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

‘ஒரு நல்ல தலைவர் யாரெனில், தனக்குக் கீழுள்ள ஒருவர் தவறு செய்கின்றபொழுது, அவர் மனம்நோகாவாறு அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவரே’ என்பார் ஜான் வுடன் என்ற அறிஞர். ஆகையால், நாம் பிறர் தவறு செய்கின்றபொழுது, அவரை அன்போடு திருத்தி நல்வழிப்படுத்துவோம். நாமும் நல்வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அடுத்தவரை வெற்றிகொள்தல்!

இன்றைய முதல் வாசகத்தில் எச்சரிக்கையும் பொறுப்புணர்வும் வழங்கப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலை இஸ்ரயேல் வீட்டாரின் காவலாளியாக நியமிக்கிறார். அவர் மனமாற்றத்தின் செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

எசேக்கியேல் இறைவாக்கினர் இங்கே 'காவலாளி' என அழைக்கப்படுகிறார். பண்டைக்கால மேற்கு ஆசியச் சமூகத்தில், காவலாளி என்பவர் நகரின் வாயிலருகே அல்லது கோபுரத்தின்மேல் நின்றுகொண்டு நகருக்கு வரவிருக்கிற ஆபத்துகள் பற்றி மக்களை எச்சரிப்பார். இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் ஓர் ஆன்மிகக் காவலாளிபோல நின்றுகொண்டு மக்களை எச்சரித்து வழிநடத்த வேண்டும். கடவுள் எசேக்கியேல் இறைவாக்கினருக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுக்கிறார். அந்தப் பொறுப்பு என்னவெனில் இஸ்ரயேல் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி, அவர்களுடைய தீய வழியிலிருந்து அவர்களைத் திருப்புவது. மக்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் செய்தியை அவர்களுக்கு அறிவிப்பது காவலாளியின் பணி. எசேக்கியேல் இறைவாக்கினரும் அவ்வாறே பொறுப்புடன் செயல்பட வேண்டும். தீயோர் தம் வழியைவிட்டுத் திரும்புவதே இறைவாக்கினர் முன்மொழியும் அழைத்தல். இருந்தாலும் ஒவ்வொருவரும் அவருடைய தீயவழியை விட்டுவிடுவது அவருடைய கையில்தான் இருக்கிறது.

ஆக, பொறுப்புணர்வு என்னும் கருத்துருவை மையமாகக் கொண்டிருக்கிறது முதல் வாசகம். இறைவாக்கினர் எசேக்கியேலின் பொறுப்புணர்வு மக்களுக்குக் காவலாளியாக இருப்பதில் அடங்கியுள்ளது. ஒவ்வொருவருடைய மனமாற்றத்தின் பொறுப்புணர்வு தனிநபர் சார்ந்ததாக இருக்கிறது. எசேக்கியேல் அவருடைய இறைவாக்குப் பணியால் மக்களை வெற்றிகொள்ள வேண்டும். தொடக்கநூலில், 'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' எனக் கேட்கிற காயின் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார் (காண். தொநூ 4:1-9). ஆனால், யோசேப்பு தன் சகோதரர்கள் அனைவருடைய வாழ்வுக்கும் பொறுப்பேற்கிறார் (காண். தொநூ 37-50).

புனித பவுல் உரோமையருக்கு எழுதும் தனது கடிதத்தின் நிறைவில், கிறிஸ்தவ வாழ்வு பற்றிய அறிவுரையைத் தருகின்றார். அதில், 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்றும், 'அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' என்கிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில், அன்பு செய்யும் ஒருவர் அனைத்துத் திருச்சட்டங்களையும் கடைப்பிடிப்பவர் ஆகிறார். இந்த வார்த்தைகளின் பின்புலத்தில்தான், புனித அகுஸ்தினாரும், 'அன்பு செய். பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்!' என்கிறார். ஆக, நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு நாம் ஒருபோதும் தீங்கு நினைக்கவோ, தீங்கிழைக்கவோ செய்யாது. ஏனெனில், 'அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது ... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்' (காண். 1 கொரி 13:5,7). ஆக, அன்பு என்னும் சொல், வெறும் உணர்வு என்ற நிலையில் இல்லாமல், செயல்வடிவம் பெற பவுல் அழைக்கிறார். கட்டளைகளை மீறுதல் என்பது முதலில் அன்புப் பிறழ்வே என்பது பவுலின் புரிதல்

அன்பின் வழியாக ஒருவர் மற்றவரை வெற்றிகொள்தல் அவசியம்.

இன்றைய நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியாளரின் குழுமப் பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) தவறு செய்யும் நம்பிக்கையாளரின் குற்றம் கடிந்து அவரை மீண்டும் குழுமத்துக்குள் ஏற்றுக்கொள்தல். (ஆ) இறைவேண்டலில் மனம் ஒத்திருத்தல். (இ) இயேசுவின் திருமுன்னிலையின் இடமாகக் குழுமம் திகழ்தல்.

மனிதர்கள் வாழ்வதற்கும் இயங்குவதற்கும் சமூகம் தேவைப்படுகிறது. சமூகத்தால் அவர்கள் மாற்றம் பெறுகிறார்கள். சமூகத்தை அவர்கள் மாற்றுகிறார்கள். ஆனால், மனிதர்கள் குழுமமாக வாழும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. அவற்றுள் முதன்மையான ஒன்று ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பது. தீங்கு நினைப்பதும் தீங்கு செய்வதும் மனிதர்கள் செய்யும் முதற்குற்றமாக இருக்கிறது. ஒருவர் நமக்குத் தீங்கு நினைத்தால் அல்லது தீங்கு செய்தால் அவரை நம் உறவு வட்டத்திலிருந்து தள்ளி வைக்க விரும்புகிறோம். ஆனால், இயேசுவோ தீங்கு செய்கிற நபரை வெற்றிகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார். நம்பிக்கையாளர்களின் குழுமத்தில் ஏற்படும் உறவு உரசல்களை எப்படி சரி செய்வது என்பதை இயேசு எடுத்துரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். இது மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) ஒற்றைக்கு ஒற்றை சந்தித்து உரையாடுவது. (ஆ) ஒன்று அல்லது இரண்டு பேரைக் கூட்டிச் சென்று உரையாடுவது. (இ) திருச்சபையிடம் சொல்வது. இந்த மூன்று படிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணிகள் மூன்று: (அ) அடுத்தவரை இழப்பது அல்ல, மாறாக, வெற்றி கொள்வதே நம் முதன்மையான இலக்காக இருக்க வேண்டும், (ஆ) நான்தான் ஒப்புரவுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். (இ) தனிமனித மாண்பும் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

நாம் இறைவேண்டல் செய்யும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தில் நம் தேவைகளைக் கடவுளிடம் எடுத்துரைக்கிறோம். ஆனால், தனிநபர் வாழ்வைத் தாண்டி குழுமத்தின் வழியாகவும் நாம் இறைவேண்டல் செய்ய முடியும் என்பது இயேசுவின் பாடம். இருவர் இந்த உலகில் மனம் ஒத்துக் கடவுளிடம் கேட்டாலே அது அவர்களுக்கு அருளப்படும்.

மேலும், மனிதர்கள் தங்கள் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒருவர் மற்றவரோடு சமரசம் செய்து வாழ்ந்தால் அங்கே இறைவன் பிரசன்னமாக இருக்கிறார்.

ஆக, குழும வாழ்வில் எவரையும் நாம் விட்டுவிடல் ஆகாது. அனைவரையும் உள்ளடக்கிய குழுமத்தை உருவாக்க வேண்டுமெனில், அனைவரையும் குறிப்பாகத் தீங்கிழைப்பவர்களைக் கடிந்துரைத்து அவர்களை வெற்றிகொள்தல் அவசியம்.

இந்த நாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) காவலாளி என்னும் நம் பெயர்

நாம் ஒவ்வொருவரும் 'காவலாளியாக' இருக்கிறோம் - குடும்பத்தில் மற்றும் குழும வாழ்வில். காவலாளியாக இருக்கிற நபர் இயல்பாகவே மற்றவர்கள்மேல் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்டவராக இருக்கிறார். காவலாளி என்னும் நிலை சமூக மதிப்புக்குரிய நிலை அல்ல. மாறாக, கடமைகள் நிறைந்த நிலை. காவலாளியாக இருக்கிற நபர் அனைவரையும் எதிர்கொள்கிறார். எந்தவொரு தீங்கையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

(ஆ) அன்பே திருச்சட்டத்தின் நிறைவு

அன்பு என்பது நமக்குள் எழுகிற அல்லது ஒருவர் மற்றவர் உறவுநிலையில் எழுகிற ஓர் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு செயல்பாடு. அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத செயல்பாடு. மனிதர்களாகிய நம்மிடம் எழும் பொறாமை மற்றும் போட்டி மனப்பான்மை மற்றவர்களுக்குத் தீங்கிழைக்குமாறு நம்மைத் தூண்டுகின்றன. மற்றவர்களுக்குத் தீமை நினைப்பதன் வழியாக அல்லது செய்வதின் வழியாக அவர்களுடைய வளர்ச்சியை அல்லது மேன்மையை நாம் சிதைக்க நினைக்கிறோம். ஆனால், அனைத்தையும் அன்பினால் எதிர்கொள்பவர் அனைவரையும் வெற்றிகொள்கிறார்.

(இ) குழுமத்தின் அவசியம்

இன்றைய உலகம் நம்மைத் தனிநபர்களாக வாழுமாறு அறிவுறுத்துகிறது. சிறுநுகர் வாழ்வு என்பது இன்று உறவுநிலைகளிலும் புகுத்தப்படுகிறது. குறைவான நபர்களிடம் உறவாடி, நிறைவாகத் தனிமை போற்றுவது நலம் என்று கற்பிக்கப்படுகிறது. ஆனால், குழுமம் என்பது நம்மை நமக்கே பிரதிபலித்துக் காட்டுகிற ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியின் துணை கொண்டு நாம் நம்மைத் திருத்திக்கொள்ள இயலும். மேலும், குழும வாழ்வே கடவுளின் பிரசன்னத்தை நம் நடுவில் கொண்டுவருகிறது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்.

இறைவனின் வழிமுறைகளும் நமது செயல்முறைகளும்

"டேய் கடன்கார"
இப்படி ஒரு வார்த்தை கேட்காதவர்கள் இருக்க முடியாது. கடன் என்பது நாம் பெற்றுக் கொண்ட ஒன்றை யாரிடம் பெற்றுக் கொண்டோமோ அவர்களுக்கு, அல்லது அவர்கள் நியமிக்கும் நபருக்கு திருப்பிக் கொடுப்பதை கடன் என்கிறோம். நாம் அறியாமல் எந்த விலையும் கொடுக்காமல் இலவசமாக பெற்றுக்கொண்ட மகிமை மிகு கிறிஸ்துவின் அன்பு திருப்பித் தரப்பட வேண்டிய ஒன்றாக நம்மிடம் இருக்கின்றது என்பதை புனித பவுல் அடிகளார் நமக்கு நினைவுபடுத்துகின்றார்.

"கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று தமிழ் இலக்கியம் கடன் பெற்றவரின் வேதனையை தெளிவாக் கூறுகின்றது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டார். அவருடைய மகன் எங்களிடம் வந்து, அவர் தந்தை பெற்றிருந்த கடன் தொகையை உடனடியாக திருப்பிக் கொடுத்தார். நான் அவரிடம் தந்தையின் காரியங்களை முடியுங்கள், இதற்கு என்ன அவசரம்; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன். அவர் அதற்கு, எங்கள் மார்க்கத்தின் படி கடனோடு ஒருவர் அடக்கம் செய்யப் படலாகாது; எனவே அவர் சுதந்திரமாக இவ்வுலகை விட்டுச்செல்ல, நீங்கள் இந்த கடனை திருப்பி பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நமது வழிபாடு முறைகளில் கடன் திரு நாட்கள் என்று, குறிப்பிட்ட நாட்களை சிறப்பிக்கின்றோம். அதன் பொருள் நம் தனி மனித விருப்பத்திற்கு முக்கியம் தராமல், அந்நாட்களை நாம் கண்டிப்பாக; திரு அவையின் கட்டளைப்படி சிறப்பிக்க வேண்டும் என்பதே.

"நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்" என்று எச்சரிக்கும் பவுல் அடிகளார் கிறிஸ்துவின் அன்பையும் முழுமையாக திருப்பிக் கொடுத்து சுதந்திரமாக வாழ அழைப்பு விடுக்கின்றார்.

நமக்கு தரப்பட்டுள்ள பணி (வேலை) என்ன என்பதை முதல் வாசகம் "மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்" என்று வழிமுறைகின்றது. ஆம், கிறிஸ்துவின் மகிமை மிகு‌ அன்பிற்கு கடன் பட்ட ஒவ்வொருவரும் அதை முறையாக திருப்பித் தருவதை கண்காணித்திட நாம் ஒருவர் மற்றொருவருக்கு காவலாளியாக நியமிக்கப்பட்டு இருக்கின்றோம் என்பதை மறக்கக்கூடாது. காயினிடம் "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று இறைவன் கேட்ட போது காயின் ". நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்று பதிலுறைத்தான்.

இன்று நீங்களும் நானும் கல்வாரியின் அன்பிற்கு கடன்காரர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதை முழுமையாக திருப்பிக் கொடுப்பதில் நம்மை நாமே கண்காணிக்கும் காவலாளியாக வாழ்ந்திட அழைக்கப்படுகின்றோம். வேலியே பயிரை மேய்ந்தால்… அன்பை திருப்பித் தர கடமைப்பட்ட நாமே திருப்பித் தராமல் இருந்தால்… நற்செய்தியில் இயேசு பெற்றுக்கொண்ட அன்பை எவ்வாறேனும் பகிர்ந்து வாழ்ந்திட சில வழிமுறைகளை தருகின்றார்.

நம் சகோதரர்களுக்கு - அயலானிற்கு நாம் அன்பு செலுத்த முடியவில்லை என்றால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது முயற்சித்துப் பார்க்கவும், முடியவில்லை என்றால்! இருவர் மூவர் துணை கொண்டும்; அல்லது திருச்சபையின் துணையோடும் நாம் முயற்சிக்க வேண்டும் என்று வரையறுக்கின்றார்.

திருச்சபைக்கும் (உலகிற்க்கும்) செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போல இருக்கட்டும் என்கிறார். இப்படி தனி ஒருவராக தான் பட்ட கடனை - பெற்றுக் கொண்ட அன்பை திருப்பித் தர உலகறிய முயற்சிக்க வேண்டும் என்பது இறை மக்களாகிய நமக்கு தரப்படும் இயேசுவின் வழிமுறைகள் (instructions) ஆகும்.

வழிமுறைகள் என்று ஒன்று இருக்கும் போது அதற்கான செயல்முறைகள் (procedure)இருப்பதும் முறைதானே. அப்படியாயின் நாம் பெற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கு நமது செயல்முறைகள் என்ன?
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் முழுமையாக எதிர்பார்க்கும் ஒரு செயல்முறை:-

 1. கர்த்தர் யாவையும் எனக்காக செய்து முடிக்க வேண்டும்.
 2. ஏனெனில் அனைத்திற்கும் அவர் ஆதி காரணமாக இருக்கின்றார்.
 3. கல்வாரியின் மீட்பு எனக்கு சகல பாவங்களில் இருந்தும் விடுதலை தந்து விட்டது.

இப்படி தனி ஒருவராக- நமக்காகவே, நாம் எதுவும் செய்ய விருப்பப்படாமல் அனைத்திற்கும் இறைவனைச் சார்ந்து அவர் வழியாக அவரையே செய்ய வைக்க ஆசைப்படும் செயல்முறைகள் நமக்கு மகிழ்ச்சியை தருகின்றன.

  அனேக வேலைகளில், அயலானைச் சார்ந்தவைகளிலும் "நாம் எதுவும் செய்யாமல்" கடவுள் உங்களை காத்திடுவார் என்று கூறுவது… நம்புவது நமது செயல்முறையாக இருக்கின்றது. அதேவேளை நடைமுறையில் நமக்கு என்று வரும்போது, நமக்கு அந்த அன்பு தேவைப்படும் போது, நம்மோடு இருக்கும் இறைவன் மட்டுமல்ல; நம்மைச் சுற்றி வாழும் ஒவ்வொரு அயலானும் நம்மை நேசிக்க வேண்டும் - நமக்காக நம்மோடு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு நம்மிடம் குறைவுகள் இல்லை..

இறையன்பை மானசீகமாக உணர்ந்தாலும், உலக வாழ்க்கையில் அந்த அன்பு நமது ஐம்புலன்களால் உணரப்பட்டு நம்மை ஆட்கொள்ளும் போது மட்டுமே; அந்த அன்பிற்கு அயலான் என்ற ஒருவன் கண்டிப்பாக தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இதற்குத்தான் - இறை மகன் இயேசு, தனியாகவோ அல்லது திரு அவையின் வழிநடத்தலின்படியோ… அயலானின் அன்பில் நிலைத்திருக்க நம்மை அழைக்கின்றார். இப்படி இருவர் மூவர் என இணைந்து வாழும் வாழ்க்கையில் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்று அவரே உறுதி கூறுகின்றார்.மத்தேயு18:20

வாருங்கள் இறைவன் நம்முடன் தான் இருக்கின்றார் என்பதை உலகிற்கு உறுதி செய்வோம். ஆம், இருவர் மூவர் என இணைந்து வாழும் வாழ்க்கையில் …. இறைவன் நம்மோடு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உறவை வளர்ப்போம்!

இரு நண்பர்களுக்கிடையே சிறிய சண்டை ஒன்று ஏற்பட்டது. இருவருக்குமே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மனதிலே இருந்தது. ஒருவர் தன் நண்பனிடம் நேரடியாகச் சென்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதோடு தன் நண்பனிடம் அவருடைய குற்றத்தையும் சுட்டிக்காட்டி ஒப்புரவு செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பி அவனிடம் செல்லத் தயாராகும் போது ,இவர்கள் பிரச்சனையிலே சம்பந்தப்படாத ஒருவர் இவரிடம் வந்த "தவறெல்லாம் உன்னுடையதே " என்பது போல பேசிவிட்டார். இதைக்கேட்டவருக்கோ மிகுந்த வருத்தம். "நமக்குள்ளேயே சமரசமாகப் பேசித் தீர்த்துவிடலாம் என எண்ணினேன் நான். ஆனால் நீயோ என்னைப் பற்றி மற்றவரிடமெல்லாம் சொல்லி உன்னை ஞாயப்படுத்திக்கொண்டாய். இதற்கு மேல் நமக்குள் ஒன்றுமில்லை " எனச் சொல்லிவிட்டு வருத்தத்துடன் சென்றார்.

அன்புக்குரியவர்களே நம்மிடையே உறவுச் சிக்கல்களும் பிளவுகளும் ஏற்பட முக்கியக் காரணமே சம்பந்தப்பட்டவரோடு மனம் திறந்து பேசாததே. சிலர் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு விலகிவிடுவர். சிலர் சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்ற எல்லாரிடம் சொல்லி பிரச்சனையை பெரிதாக்குவர். இரண்டுமே தவறானது. இரண்டுமே ஒப்புரவை ஏற்படுத்தாது.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது இதுவே. இருவருக்கிடைய பிரச்சனைகள் ஏற்பட்டால், ஒருவர் மற்றவருக்கெதிராக தவறிழைப்பதாக உணர்ந்தால் இருவரும் தனியாகப் பேசிக்கொண்டு சமரசம் செய்ய வேண்டும். பேசி பலனில்லாத போதுதான் தன் பக்கம் நீதியுள்ளவர் பிறர் உதவியை நாட வேண்டும். இயேசு நமக்கெல்லாம் ஒரு எளிதாக பின்பற்றக்கூடிய வழிமுறையை, வாழ்க்கை நெறியை கற்றுத்தருகிறார்.

இச்செயலை செய்ய நம் உள்ளங்களைக் கடினப்படுத்தக் கூடாது. நம்மிடையே தாழ்ச்சியும், மன்னிக்கின்ற மனமும் கொஞ்சம் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நாமெல்லாரும் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யும் போது அவர் ல வழிகளில் நம்மை எச்சரிக்கிறார். அவையெல்லாம் நாம் அழியவேண்டுமென்றல்ல மாறாக நாம் உறவோடு வாழவேண்டுமென்றே. எனவே இயேசு கற்று தந்த வழியில் உறவை வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.அவ்வாறு அவர் பெயரில் நாம் ஒன்றி இருக்கும் போது அவர் நம்மோடு இருப்பதை நாம் உணரலாம். முயல்வோமா!

இறைவேண்டல்

உறவின் ஊற்றே இறைவா!
ஒருவருக்கொருவர் நன்மை செய்து மன்னித்து உறவில் வாழவும், உம் உடனிருப்பை உணரவும் வரமருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser