ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்றபோது ஒரு சிறுவனின் புதுநன்மை விழாவிலும், அவனது தாத்தாவின் 50-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பங்கெடுக்க வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான விருந்தினர்கள் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எல்லா (International food) நாட்டின் உணவையும் உள்ளடக்கிய சுவையான விருந்து தயாரிக்கப் பட்டிருந்தது. சுவையான பல நாட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நல்லதொரு நன்றி அறிதல் திருப்பலிக்குப் பின் விருந்து நடைபெற்றது.
ஆனால் எல்லாப் பிறந்த நாட்கள் கொண்டாட்டங்களைவிட இது வித்தியாசமான ஒன்று. அழைப்பிதழில் நன்கொடைகள். அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், வாங்கப்படாது என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏழை நாடாகிய ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுத்தால் அது ஆயர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வருகை தந்த அனைவரும் தாராள உள்ளத்துடன் தந்த அன்பளிப்புக்கள் 25 லட்சம் கிடைத்தது. அதை இந்திய நாட்டிற்கு அனுப்புவதாக அறிவித்தார்கள். இந்த விருந்தானது நம் ஆண்டவர் படம் பிடித்துக் காட்டும் விருந்துக்கு மிகப் பொருத்தம் ஆகும். நீ விருந்துக்கு அழைக்கப்படும்போது முதல் இடம் தேடாதே ஏனெனில் அழைப்பவன் தான் யாருக்கு எந்த இடம் எனக் குறிப்பிட உரிமை உண்டு. அது நீ அல்ல. இரண்டாவது நீ விருந்து கொடுக்கும்போது ஏழைகள், அனாதைகள், ஊனமுற்றோர் இவர்களை அழைத்து உதவி செய். இவர்கள் உடன் திருப்பித் தரமுடியாதவர்கள். ஆனால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக்கப்படுகிறது.
- ஆண்டவர் இரண்டு கருத்துகளை இன்று முன் நிறுத்த விரும்புகின்றார்.
- நாம் நம்மையே தாழ்த்திக்கொள்ளவில்லை என்றால் பிறரால் தாழ்த்தப்படுவோம் என்ற எச்சரிக்கையைத் தருகிறார்.
தாழ்ச்சி உள்ளவர்கள் மற்றவர்மீது குறிப்பாக ஏழைகள்மீது அக்கறை காட்ட முடியும். வாழ்விலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட நியூட்டன் தன் வாழ்வின் இறுதியில் நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல், அங்கு ஒரு சங்கு எனச் சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று தன்னைப் பற்றித் தாழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
அன்னை தெரெசாவும் தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம் என்றார்கள்.
தாழ்ச்சி உள்ளவர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.
- தாழ்ச்சியோடு செயல்படுபவர்கள் கடவுளால் உயர்த்தப்படுவார்கள். எனவே யாக்கோபு தன் திருமடலில் ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார். (யாக். 4:10) என்கிறார்.
- நீதிமொழிகள் இறுமாப்பு ஒருவரை தாழ்த்தும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும் (நீதிமொழி 29:23) என்கின்றன. அன்னை தெரெசா இதற்குச் சான்று.
- தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. எளியோருக்குத்தான் நற்செய்தி என்கிறார் இயேசு. ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு. அதாவது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு விண்ணரசின் மறைபொருளை கடவுள் வெளிப்படுத்துகிறார் (லூக். 10:21). எளியோருக்குத் தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீராக்
- 3:19).
தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிமைப்படுத்தும் பேறுபெற்றவர்கள். சீராக் நூலில் கூறப்படுவதுபோல, தாழ்ந்தோரால் அவர் மாட்சிமை பெறுகிறார் (சீராக் 3:20).
இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் நம் ஆண்டவர் இயேசு (யோவா. 17:4). நம் தாய் மரியா.
தாழ்ச்சி உள்ளவர்கள் வாழ்வில் வீழ்வதில்லை. மாறாக ஆணவம் உள்ளவர்கள்தான் வீழ்த்தப்படுவார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார், வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (லூக். 1:53). தாழ்ச்சி உள்ளவர்கள் விட்டுக் கொடுக்கும் மனம் உடையவர்கள். தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுப்பதாகும்.
மார்ட்டின் லூத்தர் கூறுகிறார். 'ஒரு ஆற்றின் குறுகியப் பாலத்தின் நடுவே இரண்டு மலைகள். ஆடுகள் எதிர் எதிராக நடந்து வந்தன. விலகிச் செல்வதற்கு வழியில்லை. மோதிக்கொண்டால் ஆற்றில் விழ வேண்டும். பின்னோக்கிச் செல்லவும் முடியாது. இந்த நிலையில் ஒரு ஆடு படுத்துக் கொள்ள மற்ற ஆடுகள் அதன்மீது கடந்து சென்றன. தாழ்ச்சி இருந்தால் வாழ்க்கைப் பாலத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடப்போம் என்பது உறுதி.''
- ஒருமுறை வின்சென்ட் தே பவுல் அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். பெண்ணொருத்தி அவரை அணுகி, என் மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். ஆகட்டும். பார்க்கலாம் என்றார். அந்தப் பெண்ணுக்கு வந்தது கோபம். உடனே வேலை கொடுக்காமல் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்வதா எனச் சொல்லி மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கிப் புனிதர்மீது எறிந்தாள். தலையில் காயம், குருதி கொட்டியது. குருதியைத் துடைத்துக் கொண்டே தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, இந்தப் பெண் இவளது மகனை எவ்வளவு அன்பு செய்கிறாள் பாருங்கள் என்றார். இன்று இந்தப் புனிதர் வணக்கம் பெறுகிறார்.
அருகம்புல் தரையிலே படர்ந்து வளரும் தாவரம். தண்ணீர் உள்ள இடத்தில் தலைதூக்கி நிற்கும். வெயிலிலும், மழையிலும் அழிவுறாத ஒன்று. எல்லாக் காலங்களிலும் கால்நடைகளுக்கு
உணவாகிறது. மனிதருக்கு மருந்தாகிறது. ஆம் தாழ்ச்சியுள்ளவர்கள் அருகம்புல் போன்றவர்கள். தாழ்நிலை பொருளாதாரம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்பவர்கள் சார்ந்து இருப்பவர்கள். தன் ஒவ்வொரு செயலையும் இறைவனில் ஊன்றிச் செய்பவர், எப்பொழுதும் ஒரே நிலைப்பாடு கொண்டவர், எல்லாருக்கும் பணிந்திருப்பவர், பணி செய்பவர், நம்பிக்கைக்குரிய மருந்தாக உள்ளவர். இதைத்தான் சீராக் நூல் போற்றுகிறது.
- ஆனால் அகந்தை உள்ளவர்கள் திருத்தம் பெற இயலாதவர்கள். தன் எண்ணம், தன் மேம்பாடு, தன் செயல்களே மேலானவை என்று தம்மையே கடவுளாக்கிக் கொள்பவர்கள். இவர்களது வாழ்வு அழிவு சக்திகளாகத்தான் மாறும். சமூக அமைப்பில் வேறுபாட்டைப் புகுத்திச் சமூகம் துண்டாக்கப்படும். பழைய ஏற்பாட்டிலே குருக்கள், பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி பிறரை ஏற்காத அகந்தை நிலையில் வாழ்ந்தார்கள். இவர்களைத்தான் இயேசு கடினவார்த்தை கொண்டு சாடினார். (லூக். 18:9-14) ஆயக்காரன் - பரிசேயன் உவமை.
- இயேசு முதல் இடம் பிடித்து விருந்துண்ண வந்தவர்களுக்குக் கூறுவதாவது, உங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் பணியாளராக இருக்கட்டும் (மத். 20:27). குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள் (மத். 18:3) என்றும் கூறுகிறார்.
இரண்டாவது விருந்து படைக்கிறவர்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறார். உறவினர்களோடும், அடுத்திருப்போரிடமும், செல்வந்தர்களோடும் பகிர்ந்து கொள்வதைவிட தாழ்நிலை நிற்பவர்களோடு பகிர்தல் மேலானது என்றும் கூறுகின்றார். தாழ்ச்சி என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்வது, செயல்பாடாக மாறும்போது தன்னை ஏழைகளோடு ஒருவராக மாற்றிக் கொள்வது. கைமாறு எதிர்பாராமல் பணி செய்வது. இது கடினமான பண்பு. இதைச் சிறிது சிறிதாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் (மத். 11:29) என்கிறார் இயேசு. தன்னையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவின்தாழ்ச்சியைவிட நாம் பின்பற்ற வேறு எதுவும் இல்லை. இதைப் பின்பற்றியவள்தான் நம் தாய் மரியா. இதோ உமது அடிமை. உம் வார்த்தையின்படி நடக்கட்டும் என்றாள் (லூக்.1:38).
இரு தத்துவங்கள்:
- தண்ணீரில் நீந்துபவன் கையைக் கீழே அமுக்கினால்தான் மேல்நோக்கி வர முடியும்.
- ஆகாயத்திலே பறக்கிற பறவையானது தன் இறக்கைகள் இரண்டையும் கீழே அமுக்குவதால் தான் மேல் நோக்கிப் பறக்க முடியும்.
எதையும் எதிர்பாராமல் தர்மம் செய்வோம் !
ஓ மனிதா!
ஆடிவரும் தென்றலும்
பாடிவரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்திடமிருந்து எதையுமே
எதிர்பார்ப்பதில்லை!
நீ இயற்கையின் சிகரமல்லவா?
வெளியே வா!
உன் சுயநலச் சிறையை விட்டு
வெளியே வா!
உடைத்தெறி - உடைத்து எரி -
கைம்மாறு கருதி தர்மம் செய்யும்
உன் மனத்தை உடைத்தெறி - உடைத்து எரி -
அப்போது உனக்கு
வானம் கூட வசப்படும்.
இதுதான் இன்றைய நற்செய்தி தரும் அருள்வாக்கு!
இன்றைய நற்செய்தியிலே நாம் யாருக்கு உலகத்திலே விருந்து வைக்க வேண்டும்? யாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்? என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். நாம் பேறுபெற்றவர்களாய், அதாவது ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக, உயிர்த்தெழும்போது
அவரிடமிருந்து கைம்மாறு பெறுகின்றவர்களாக வாழ, நாம் இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமக்கு நம் ஆண்டவர்
சுட்டிக்காட்டுகின்றார்!
இன்று இயேசு நம்மைப் பார்த்து, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாக யார் திரும்ப உதவி செய்ய முடியாதோ அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கின்றார். செல்வரும் இலாசரும் உவமையில் ஆபிரகாம் செல்வரைப் பார்த்து, மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் ; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகின்றார் ; நீயோ மிகுந்த வேதனைப்படுகின்றாய் (லூக் 16:25) என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.
நாம் விண்ணகத்தை அடையவோ. விண்ணக எருசலேமை அடையவோ. பல்லாயிரக்கணக்கான வானதூதர் நடுவில் வாழவோ, நேர்மையாளர்களின் கூட்டத்தில் சேரவோ, புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கவோ (எபி 12:22-24) விரும்பினால். கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். கைம்மாறு கருதாது. அதாவது எதையும் எதிர்பார்க்காது, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல் நம்மால் வாழ முடியுமா?
நமக்கு முன்னே வாழ்ந்தவர் கோடி உண்டு! இதோ விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்!
அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாம் இயலில் நாமான் நலம் பெற்றதைப் பற்றி நாம் படிக்கும்போது, செய்த புதுமைக்குக் கைம்மாறாக எதையுமே ஏற்றுக்கொள்ள விரும்பாத எலிசா இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம்!
சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான், எலிசா கூறியபடியே ஏழுமுறை யோர்தான் நதியில் மூழ்கி நலமடைகின்றார். நலமடைந்தவுடன் அவர் எலிசாவிடம் வந்து, இதோ, உம் அடியான்: என் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும் (2 அர 5:15) என்றார். அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை (2 அர 5:16).
எலிசாவின் பணியாளன் கேசகி, எலிசாவிற்குத் தெரியாமல் நாமானிடமிருந்து அன்பளிப்புப் பெற்றபோது அவனைத் தொழுநோய் பிடித்துக்கொண்ட நிகழ்ச்சியை அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாவது இயலில் நாம் படிக்கின்றோம் (2 அர 5:20-27).
கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்த எலிசாவைக் கடவுள் மாபெரும் இறைவாக்கினராக, மக்களால் வானளாவப் புகழப்படும் தீர்க்கதரிசியாக உயர்த்தினார். எலிசா நோயினால் பாதிக்கப்பட்டு, சாகக்கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு எலிசாவைப் பார்த்து, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே ” என்று சொல்லி! கதறி அழுதான்.
எலிசா இற பிறகு ரது எலும்புகள்கூட புதுமை செய்தன (2 அர 13:21ஆ) என்று அறிகின்றோம்.
புதிய ஏற்பாட்டிலே எதையுமே மக்களிடமிருந்து எதிர்பார்க்காது தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொண்ட கன்னி மரியாவைச்
சந்திக்கின்றோம். மங்கள வார்த்தைத் திருநாளன்று தன் வாழ்வை உலகுக்குக் கொடுத்தார் (லூக் 1:26-38). கானாவூர் திருமணத்தின்
போது தம் மகன் வழியாகத் திராட்சை இரசத்தை திருமண வீட்டாருக்குக் கொடுத்தார் (யோவா 2:1-11). கல்வாரியில் பாவிகள் மீட்புப்பெற
தம் மகனையே கொடுத்தார் (யோவா 19:25-27).
வாழ்க்கையில் ஒருமுறைகூட அன்னை மரியா தனக்கென்று எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இப்படிப்பட்ட வாழ்வுக்குப் பரிசாக மரியாவிற்கு எத்தகைய பரிசுகளைக் கடவுள் தந்திருக்கின்றார் என்பதை ஊரறியும், உலகறியும். இன்று அன்னையின் பெயர் சொன்னால் எங்கும் அருள் மணக்கும், எட்டுத்திக்கும் புகழ் மணக்கும்; விண்ணகமும், மண்ணகமும் அருள்நிறை மரியே வாழ்க! என வாழ்த்தும்.
எதையும் எதிர்பார்க்காது பிறருக்கு உதவி செய்கின்றவர்களுக்கு மட்டுமே மறு உலகம் கிடைக்கும்; இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும் விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.
இம்மை போதும், மறுமையை யார் பார்த்தது? என்ற வெளிப்புலன்களுக்கு உட்பட்ட எண்ண அலைகளுக்குள் நாம் சிக்குண்டு வாழ்ந்தால், அந்தச் சிக்கலிலிருந்து விடுபட இன்றே நாம் தர்மம் செய்யப்புறப்படுவோம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, நம் உள்ளத்தில் பற்றி எரியும் சுயநலத்தை, பாவத்தைத் தர்மம் அணைக்கும் (சீஞா 3:30).
மேலும் அறிவோம்:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு)
என்னாற்றும் கொல்லோ உலகு (குறள் : 211).
பொருள்: காலம் அறிந்து, உலக மக்கள் வாழ்வதற்காக வான்மழை பொழிகிறது. அதற்கு இவ்வுலகம் எத்தகைய மாற்று உதவியும் செய்வதில்லை. மழை பொழியும் மேகத்தைப் போன்றவர் உலக நலம் கருதும் ஒப்புரவாளர் ஆவர். அவர்கள் எதிருதவி எதையும் எதிர்பாராது
உதவுகின்றனர்.
ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று. "என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்டக்கூடாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு அறிஞர் கூறியது: "முதலில் கோட்டை எங்கே கிழிப்பது என்பதை உங்கள் மனைவியைக் கேட்டுக் கிழியுங்கள்."
இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவம் என்ற அரக்கன்; கலக்கப் போவது யார்? நீயா? நானா? என்ற அகம்பாவம். யார் பெரியவர்?: கணவரா? மனைவியா?: மாமியா? மருமகளா?; ஆளுங்கட்சியா ? எதிர்க்கட்சியா?: அருள்பணியாளர்களா? பொது நிலையினரா? இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு தாழ்ச்சியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஆணவத்தால் வீழ்ச்சியுற்ற உலகைத் தமது தாழ்ச்சியால் உயர்த்திய இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: "தம்மை உயர்த்துபவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 14:11) கிறிஸ்துவே தாழ்ச்சிக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி, சாவை. அதுவும் சிலுவைச் சாவை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தினார்; எனவே கடவுள் அவரை எல்லார்க்கும் மேலாக உயர்த்தினார் (பிலி 2: 6 -11). அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: "நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்று என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11: 29).
தாழ்ச்சி என்பது ஒருவருடைய மனநிலையைப் பொறுத்தது. தாழ்ச்சியுடையவர் எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார்; ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். கிறிஸ்து தமது விருப்பத்தை நிறைவேற்றாமல் தமது தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றினார். வர் மேட்டுக்குடி மக்களோடு பழகாமல் ஏழை எளியவர்களுடன் பழகினார். விவிலியத்தில் 'அனாவிம்' என்ற வர்க்கத்தினர் இருந்தனர். அவர்களிடம் செல்வமோ செல்வாக்கோ இல்லை; அவர்கள் செல்வந்தர்களால் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் முழுக்க. முழுக்கக் கடவுளையே சார்ந்திருந்தனர். இவர்கள் "கடவுளின் ஏழைகள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களைப்பற்றி இன்றைய பதிலுரைப்பாடல் பின்வருமாறு கூறுகிறது: "கடவுளே நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" (திபா 68: 10).
அனாவிம் வர்க்கத்தினர்தான் கிறிஸ்து தமது மலைப் பொழிவில் குறிப்பிடும் "ஏழையரின் உள்ளத்தோர்" (மத் 5:3) மற்றும் "கனிவுடையோர்" (மத் 5: 5). ஏழைகளும் சாந்தம் உள்ளவர்களும்தான் இறையாட்சியின் அருளடையாளங்கள்; விண்ணரசின் வாரிசுகள். இவர்களைப் பற்றித்தான் அன்னை மரியா பின்வருமாறு பாடியுள்ளார்; "கடவுள் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்" (லூக் 1:50-53). எனவே தாழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்றால், அனாவிம் வர்க்கத்தினரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய மனநிலை இல்லாதவர்கள் கடவுளுக்கு அன்னியமானவர்கள் என்பதை அறிக. இன்றைய முதல் வாசகத்தில் சீராக் கூறுகிறார்: "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட" (சீஞா 3:18). ஒருவர் எவ்வளவுக்கு உயர் பதவியில் இருக்கின்றாரோ அவ்வளவுக்குப் பணிவுள்ளவராக இருத்தல் வேண்டும்; அது செல்வர்களுக்கு மிகவும் தேவை; பணிவு என்பது செல்வர்களுக்குக் கூடுதலான செல்வம்; அது அழகுக்கு அழகு சேர்ப்பது போன்றதாகும் என்கிறார் திருவள்ளுவர்.
எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)
தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. ஓர் அக்கா தன் தங்கையிடம் கூறியது: "நீ என் தங்கச்சி; நாமிருவரும் ஒரு கட்சி: நம்மால் ஒன்றும் செய்ய முடியாது: ஏனெனில் நாமிருவரும் பொட்டச்சி," இவ்வாறு சொல்வது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும். மரியன்னையிடம் தாழ்ச்சி இருந்தது. எனவேதான் அவர் கூறினார்: "அவர் (கடவுள்) தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" (லூக் 1:48). ஆனால் மரியன்னையிடம் தாழ்வு மனப்பான்மை இல்லை. எனவேதான் அவர் தன்னைப் பற்றி இறைவாக்குரைத்தார்: "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக் 1:49).
தாழ்ச்சி என்பது உண்மை நிலை. உண்மை நிலை என்ன? " நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளோ விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" (1 கொரி 3:6-7). நாம் அடையும் வெற்றியைப்பற்றி இறுமாப்புக் கொள்ளாமல், அவ்வெற்றியை நமக்குக் கொடுத்த இறைவனுக்கு மகிமை அளிப்பதே உண்மையான தாழ்ச்சியாகும். அகநிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்தால், புறநிலையில் ஏழை எளியவர்களுடன் பழகுவோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் அறிவுரை: "விருந்துக்குப் பணக்கார உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்காமல், ஏழை எளியவர்களையும் அழையுங்கள். அப்போது மறுமையில் கைம்மாறு கிடைக்கும்" (லூக் 14:12-14).ஒரு பணக்காரர் தனது திருமண வெள்ளிவிழாவை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டாடி, அனாதை சிறுவர், சிறுமிகளுக்கு விருந்தளித்தார். நாமும் அவ்வாறு செய்யலாமே! அதற்கு மனமாற்றம் தேவை. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "நாம் இருப்பது சீனாய் மலை அல்ல; மாறாக, சீயோன் மலை," முன்னது அடிமை வாழ்வையும், பின்னது உரிமை வாழ்வையும் குறிக்கின்றன. நாம் ஆணவம் என்னும் அடிமைத்தளையை உதறித் தள்ளிவிட்டு, பணிவு என்னும் உரிமை வாழ்வைக் கடைப்பிடிப்போம்.
"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்" ( 2 கொரி 5: 17).
தலையாயது தாழ்ச்சி
நெப்போலியன் என்றாலே இன்றுகூட நிமிர்ந்து நிற்கும் வீர இள நெஞ்சங்கள். இப்படி ஓர் ஈர்ப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் அவன் வாழ்க்கையோ...
கண்கண்ட கிறிஸ்துவாக உலகில் திகழ்ந்த திருத்தந்தைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். காலங்காலமாக பாப்பரசர் மணிமுடி சூடப் பெருமை கண்ட ஃபிரான்ஸ் நாட்டு மரபை மாற்றி தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டு தனக்கு நிகர் யார் என்ற செருக்கில் இறுமாந்திருந்தான். கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொருத்தியோடு குடும்பத்தின் புனிதத் தன்மைக்கே களங்கமாக இருந்தான். முறை கெட்ட அவன் வாழ்வால் பாப்பரசர் திருஅவையை விட்டே அவனைப் புறம்பாக்கினார். தள்ளுண்ட செய்தி கேட்டு அவர் வருந்தவில்லை. ஏளனமாகச் சிரித்தான். இறுமாப்போடு சிரித்தான். "இவர் என்னைப் புறம்பாக்கி விட்டால் என் கையிலோ என் வீரர்களின் கைகளிலோ உள்ள துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்திடுமோ?” இந்த ஏளனச் சிரிப்பு தனக்குத்தானே விதித்துக் கொண்ட தீர்ப்பு என்பதை அவன் அப்போது உணரவில்லை. காலமும் வரலாறும் உணர்த்தின.
வெற்றி மேல் வெற்றி பெற்று வீறுடன் ரஷ்ய-நாட்டை நோக்கிப் படையெடுத்தான். அப்போது ரஷ்யர்கள் எதிர்த்து நிற்கவில்லை. போரிடுவதில் புது முறையைக் கையாண்டனர். தங்கள் நாட்டின் எல்லைப்புறம் தொடங்கி தங்கள் ஊர்களை தகர்த்துக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அழிந்துபட்ட ஊர்களைக் கைப்பற்றியபோது நெப்போலியன் படைக்கான உணவு கிடைக்கவில்லை. தலைநகர் மாஸ்கோவை நெருங்கியபோது பனிக்காலம் வேறு தொடங்கியது. உலகிலேயே கடுமையானது ரஷ்யக் குளிர். உணவின்றிப் பசியால் அவதி ஒரு புறம். பனியின் குளிரால் நடுக்கம் ஒருபுறம். அவனை அறியாமலேயே அவனது வீரர்களை அறியாமலேயே அத்தனை பேருடைய கைகளிலிருந்தும் துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்தனவாம். தனக்கு நிகர் யார் என்ற செருக்கின் விளைவு சீரழிவைத் தந்தது.
இது நேற்று இன்று என்றல்ல, நெப்போலியன் காலத்தில் மட்டுமல்ல. படைப்பின் தொடக்கத்திலேயே எழுந்தது. எனக்கு நிகர் யார்? என்ற அறிவின் ஒளிதாங்கி லூசிபெரின் புரட்சிப் புலம்பலை எதிர்த்துப் பொங்கி எழுந்த மிக்கேல் அதிதூதரின் அறைகூவல்தானே "இறைவனுக்கு நிகர் யார்?” என்பது! “தங்கள் பார்வையில் ஞானிகள் என்றும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு" (எசா. 5:21).
சொல்லுவார்கள்: "கோபம் கொண்டவன் தன்னை இழக்கிறான். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கிறான். கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கிறான்”. முற்றிலும் உண்மை. ஆணவம் முன் செல்லும். அவமானம் பின்தொடரும். "முதலில் வருவது இறுமாப்பு. அதனை அடுத்து வருவது அழிவு. மேன்மையடையத் தாழ்மையே வழி " (நீ. மொ. 18:12, 11:2). இறையச்ச உணர்வோடு கூடிய தாழ்ச்சி அது. "தாழ்மை உள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சமுள்ளவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்” (நீ.மொ. 22:4)
தலையாய பாவம் ஆணவம் என்றால் தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தரைக்குள் மறைந்திருக்கும் இந்த வேரிலிருந்துதான் தளிர்க்கின்றன விண்ணகப் பண்புகள் அனைத்தும்.
தாழ்ச்சி என்பது உண்மை என்பார்கள். தன்னைப் பற்றிய நேர்மையான பார்வை (simply an honest look at myself). நான் இருப்பது போல என்னைப் பார்ப்பது. அது தாழ்வு மனப்பண்மை அல்ல. பிந்தியது தன்னைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருப்பதில்லை. எனவே எதையும் விரக்தியுடன் நோக்கும் நமக்கோ பிறருக்கோ வளர்ச்சி தராது. தளர்ச்சியையே தரும்.
தாழ்ச்சிக்கு இயேசுவே நமக்கு முன்னோடி - வழிகாட்டி. "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலிப். 2:5) என்பார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான் - தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அடையாளம்.
ஆணவத்தால்தான் அழிவுற்றான் மனிதன். அவனை மீட்க மாற்றாகத் தாழ்ச்சியைத்தானே இறைவன் தேர்ந்தெடுக்க முடியும்! மனிதத்தன்மையிலிருந்து இறைத்தன்மைக்கு உயர விழைந்தான் மனிதன் (விலக்கப்பட்ட கனியைத் திண்றதன் நோக்கம் அது). ஆனால் இறைவனோ இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்குத் தன்னையே தாழ்த்தினார்.
"கிறிஸ்து தம்மையே தாழ்த்தி ... சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதனால்தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" (பிலிப். 2:6-11). தொடக்கக் காலத் திருஅவை திருவழிபாட்டில் பயன்படுத்திய எவ்வளவு பொருத்தமான புகழ்ப்பா இது! இறைமகன் மனிதப் பிறப்பெடுத்த செயலில் மட்டுமல்ல. அவருடைய வாழ்வு முழுவதுமே தாழ்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வாயிற்று. அதனால் கிறிஸ்தவத் தாழ்ச்சி என்பது -
- "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்'' (மத். 11:29) என்று தன்னைக் குறித்துச் சொன்ன இயேசுவைப் போல் இருப்பது.
- தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தி, "தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கு" (மார்க். 10:45) என்று பிறருக்காகவே வாழ்ந்த இயேசுவைப் போல் வாழ்வது.
பூமிதானம் என்ற புரட்சித் திட்டத்துக்கு வித்திட்டவர் வினோபா.1931ஆம் ஆண்டு அவருக்குக் காந்தி அண்ணலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் படிக்கும்போதே அவர் முகம் மாறியது. உடனே கடிதத்தைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார். அதைப் பார்த்த நண்பருக்கு ஆச்சரியம். அதிரிச்சியும்கூட. குப்பைக் கூடையில் கிடந்த கடிதத்துண்டுகளையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒன்றிணைத்துப் படித்துப் பார்த்தார். அதில் காந்தி அவர்கள் "தங்களைப் போன்ற மிகப் பெரிய மாமனிதரை நான் இதுவரை கண்டதில்லை” என்று எழுதியிருந்தார். “என்னங்க இது, பத்திரப்படுத்த வேண்டிய ஒன்றை இப்படிக் கிழித்துப் போட்டீர்களே!" என்று கேட்க, அதற்கு வினோபா "பெரியவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு காரணமாக சில தவறுகள் செய்யலாம். அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பெருந்தன்மையோடு எழுதிய வார்த்தைகளை நான் பாதுகாக்க முனைந்தால் நாளடைவில் அவை என் மண்டைக்குள் புகுந்து என் மனதைப் பாழாக்கி விடாதா? அப்புறம் நான் அகந்தையால் ஒன்றுக்கும் உதவாதவன் ஆகிவிடுவேன்” என்றாராம். மாமனிதரே என்றாலும் மனிதர் தரும் பெருமை தேடாத மாண்பு என்னே! "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட... இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை. ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது" (முதல் வாசகம் சீராக். 3:18,28).
'ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில் செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். ஆகையால் கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்" (1 பேதுரு 5:5,6).
கிறிஸ்துவின் தாழ்ச்சியில் நாம் பங்கு பெற்றோமானால் கிறிஸ்துவின் மாட்சியிலும் பங்கு பெறுவோம். அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. நிறைகுடம் தழும்பாது என்பது பழமொழி. தாழ்ச்சி என்பது தாழ்நிலையன்று. உயர்ந்த குணம். தாழ்ச்சி நம்மை உயர்த்தும். தற்பெருமை நம்மை வீழ்த்தும். எனவேதான் “தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” (லூக்.14:11) என்றார் இயேசு.
ஓர் எச்சரிக்கை: தாழ்ச்சி என்பது கூட அகந்தையின் அடையாளமாகிவிடும் ஆபத்து உண்டு.
உயர்வில் தாழ்ச்சி கொள்வோம்.
தாழ்ச்சியால் உயர்வு காண்போம்.
இஞ்ஞாயிறன்று, நம்மைச் சிந்திக்கவும், செபிக்கவும் அழைக்கும் கருத்து - மனித வாழ்வில் நிகழும் விருந்தோம்பல் என்ற அழகிய அனுபவம். இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப் பற்றி, அந்த விருந்தில் இயேசு சொல்லித்தந்த பாடங்களைப் பற்றிச் சிந்திக்க, இன்றைய நற்செய்தி நமக்கு வாய்ப்பளிக்கிறது. விருந்தைப் பற்றி இவ்வுலகம் சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வு செய்தால், ஓர் அடிப்படையான அம்சம் வெளிப்படும். உலகம் சொல்லித்தரும் விருந்து விதிமுறைகள், வெளிப்புறத்தைச் சார்ந்தவை. நம் உள்ளங்களில், அகந்தை, பகைமை போன்ற உணர்வுகள் அலைமோதினாலும், விருந்து நேரத்தில், வெளிப்படையாக அவற்றைக் காட்டிக்கொள்ளாமல், 'ஜென்டில்மேன்' என்ற முகமூடி அணிந்து, விருந்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று உலகப் பாடங்கள் சொல்லித்தருகின்றன.
இதற்கு மாறாக, இன்றைய நற்செய்தியில், (லூக்கா 14:1,7-14) இயேசு சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வுசெய்தால், அவை, உள்மனநிலையைச் சார்ந்த விதிமுறைகள் என்பதை உணரலாம். இந்த விதிமுறைகளை இயேசு துணிவுடன் கூறிய அந்தச் சூழலை நினைத்துப் பார்த்தால், இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பு, பல மடங்கு உயரும்.
யூத விருந்துகளில், அதுவும், பரிசேயர் தலைவர் வீட்டில், ஒய்வு நாளில் நடந்த விருந்தில், பல சடங்குகள் இருந்திருக்க வேண்டும். இயேசு அவற்றையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சடங்குகளும், சம்பிரதாயங்களும் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை. இத்தகைய சுதந்திர மனநிலையோடு வாழ்ந்தவரை, பரிசேயர் வீட்டு விருந்து கட்டிப்போட முயன்றது. இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் நாம் காணும் "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்" என்ற சொற்கள், இந்த விருந்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும், தன்னை, கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் தோன்றிய உண்மைகளை, இயேசு பாடங்களாகப் புகட்டினார்.
அவரது முதல் பாடம், விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது பாடம், விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்று நினைக்கத்தோன்றும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், இயேசு, ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையை, தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச்சொன்னார் இயேசு. இயேசு வழங்கிய முதல் பாடம், விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு... அதுவும், அவர் கலந்துகொண்ட விருந்தில் பலர் முதன்மையான இடங்களைத் தேடிச்சென்றனர் என்பதை உணர்ந்து, இயேசு அவர்களுக்குப் பணிவு பாடத்தைச் சொல்லித்தந்தார். - லூக்கா 14: 7-11. அவர் சொல்லித்தந்த பணிவு பாடங்களுக்குச் சிகரமாக, தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். என்ற புகழ்பெற்ற அறிவரையை வழங்குகிறார், இயேசு. தாழ்ச்சியைக் குறித்து, இன்றைய முதல் வாசகத்திலும், சீராக்கின் ஞானம், அழகிய பல அறிவரைகளை வழங்கியுள்ளது.
விருந்து நேரங்களில், அவரவர், தங்கள் பெருமைகளைப் பறைசாற்ற வேண்டும் என்று, இவ்வுலகம் சொல்லித்தரும் பாடங்களுக்கு முற்றிலும் மாறாக, இயேசு சொல்லித்தரும் தாழ்ச்சிப் பாடம், மாற்றுச் சிந்தனைகளை உருவாக்குகிறது. இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனைக்காட்சி அரங்கேறும்.
நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர், நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்துவிடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன், நான் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத்தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிரித்தபடியே அமர்ந்துள்ளேன். வீட்டுத்தலைவர் என்னருகே வந்து, என்னையும் வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி, "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடமிருந்து வரவில்லை. என் மனம் உடைந்துபோகிறது. இயேசு சொன்னதுபோல் கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்த என் தாழ்ச்சி, அர்த்தம் இல்லாமல் போகிறது.
நான் இப்போது சித்திரித்தக் காட்சியைக் கற்பனை செய்யும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்... ஆனால், இத்தகையத் 'தாழ்ச்சி'யை எத்தனை முறை நாம் பல வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பது பயனளிக்கும். இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று, அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே அல்ல. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் நாடகம், வெளிவேடம்! வெளிவேடமிடும் பல வரைமுறைகளைத்தான் ‘விருந்து வழிமுறைகள்’ என்று இவ்வுலகம் சொல்லித் தருகிறது. உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காணமுடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொல்லித்தந்த பாடம், பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளியவைத்திருக்கும்.
இயேசுவின் அடுத்தப் பாடம், அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது. செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில், கணக்குகள் நிரம்பி வழியும். யாரை அழைக்க வேண்டும், யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள் என்று, விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும். என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யாரைச் சந்திப்பது, யாரைக் கண்டும் காணமல் போவது என்று, விருந்தினர்களின் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.
ஒரு சில விருந்துகளில், மது அதிகமாகி, மதி குறைந்து போகும். மூன்று நாட்களுக்கு முன், ஆகஸ்ட் 29ம் தேதி, திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாளை நினைவுகூர்ந்தோம். அவரது தலை வெட்டப்பட்டது, ஒரு விருந்து நேரத்தில். மதுவின் போதையில், ஏரோது மன்னன், வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க, அது யோவானின் தலை வெட்டப்படும் அளவுக்கு அத்துமீறிச் சென்றது. ஒவ்வொரு விருந்துக்கும் சென்றபோதெல்லாம் இயேசுவின் மனதில் இந்த வேதனை நிழலாடியிருக்கும்.
இப்படிப்பட்ட செயற்கைத் தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற அனைத்து சுவைமிக்க ஆன்ம உணவையும் படைக்கும் இத்தகைய விருந்தைப் பற்றி இயேசு கூறும் வார்த்தைகள், இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.
லூக்கா 14: 12-14
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (சீரா. 3:17-20, 28-29)
ஏறத்தாழ கி.மு. 180-இல் இஸ்ரயேல் மக்கள் செலுக்கிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டனர். அப்போது யூதர்கள்மேல் கிரேக்க மொழியும், பண்பாடும், வழிபாட்டு முறைகளும் திணிக்கப்- பட்டிருந்தன. இதனால் யூதர் பலர் இவற்றை விரும்பி ஏற்றுக்- கொள்ளத் தொடங்கினார். இக்காலக் கட்டத்தில்தான் சீராக்கின் மகன் ஏசு தன் இனத்தாரை யூத மறையில் உறுதிப்படுத்தி உண்மையான ஞானம் இஸ்ரயேலில்தான் உள்ளது. அதுவும் திருச்சட்டத்தைக் கடைபிடிப்பதில்தான் உள்ளது என்பதையும் தெளிவாக உணர்த்துகிறார்.
தன் இன மக்கள் தவறு செய்யாமல் இருக்க வேண்டி ஒவ்வொரு சூழலிலும் யூதர்களுக்குத் தன் ஞானத்தினால் அறிவுரை வழங்கித் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவுடன் வாழ வழிகாட்டுகிறார். எச்சூழலிலும் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற வகையில் அறிவுரை வழங்குகிறார். பணிவு, அடக்கம் இவைகளைக் கடைப்பிடித்தால் ஆண்டவரின் பரிவு கிட்டும் எனவும் இறுமாப்புடன் வாழ்ந்தால் அழிவுதான் மிஞ்சும் எனவும் எச்சரிக்கின்றார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 12:18-19, 22-24)
இயேசுவைத் தனது மீட்பராக ஏற்றுக்கொண்ட எபிரேய மக்களின் புதிய வாழ்க்கை நிலையைத் திருமுகத்தின் ஆசிரியர் நமக்கு விளக்குகிறார். அவர்கள் பெற்று கொண்ட கடவுளின் அருளைப் புறக்கணித்துவிடாமல் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கின்றார். மேலும், கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டவர்- களாகிய நீங்கள் கிறிஸ்துவை விட்டு யூத மதத்திற்கு மீண்டும் திரும்பக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். அவ்வாறு செய்தால் தண்டனைக்குரியவர்களாவீர்கள் என்றும் கண்டிக்கிறார். மேலும் அவர், இயேசுவைச் சீயோன் மலைக்கு ஒப்பிட்டு அவரே உயிருள்ள விண்ணகம் என்று தெளிவுபடக் கூறுகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 14:1, 7-14)
இயேசு தான் வாழ்ந்தக் காலத்தில் பல்வேறு தரப்பு மனிதர்களோடு பந்தியமர்ந்து உறவாடியதை விவிலிய நிகழ்ச்சிகள் நமக்குக் காட்டுகின்றன. அதாவது பாவிகளோடும், ஆயக்காரரோடும் அவர் பந்தி அமர்வதோடு மட்டுமல்லாமல் (மத்தேயு 9:11) ஓய்வு நாள் ஒன்றில் பரிசேயர் தலைவரின் வீட்டிற்கு உணவருந்தச் செல்கிறார். அந்த விருந்திலே ஏழைகளும் சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டோர் ஊனமுற்றோர், பார்வையற்றோர் புறக்கணிக்கப்படுவதைக் காண்கிறார். இச்சூழ்நிலையில்தான் இயேசு கைம்மாறு கருதாமல் வாழ்க்கையில் நலிந்தவர்களை ஊனமுற்றோரை விருந்துக்கு அழைத்து உபசரிக்கவும் அதனால் பேறு பெற்றவர்களாக மாறும் நிலை ஏற்படும் என்றும் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் நன்மை செய்ய எந்த நாளும் ஏற்றதே என்கிறார்.
மறையுரை
தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றுதான் விரும்புவான். உங்களையும் என்னையும் கேட்டால் கூட “வாழ்க்கையில் முன்னுக்கு வராதவன் முட்டாள்” என்று தெளிவாகக் கூறி விடுவோம். நாட்டில் நாலு பேர் நம்மை மதிக்க வேண்டும், உயர்வாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழுவதில் தவறில்லை. ஆனால் நான் மற்றவர்களைவிட உயர்வானவன், எனக்குத் தான் எதிலும் முதலிடம் கிடைக்கும் என எண்ணி மற்றவர்களை வாழ்வில் முன்னேற விடாமல் தடை கல்லாக நின்று தான் மட்டும் உயர வேண்டும் மற்றவர்கள் என்னைப் புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும்போது தான் மனிதன் தன் நிலையை உணராமல் தவறான பாதைகளில் உயர்வடைய முயலுகிறான். இதனால் தற்பெருமை கொள்கிறான்.
இன்று பலர் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள பெருமையையும் மதிப்பையும் தேடித்தேடி அலைகிறார்கள். இது இவ்வுலக அரசாட்சிக்கு ஏற்றதாக இருந்தாலும் இதனால் பயன் இல்லை. மாறாக இவ்வுலகமே இறையாட்சிக்கு உட்பட்டிருக்கின்ற பொழுது இறையரசில் தாழ்ச்சியோடு இருப்பவர்களே பெருமைப்- படுத்தப்படுவார்கள். அவர்களுக்குத்தான் புதிய உடன்படிக்கையின்- படி விண்ணரசில் இடம் அளிக்கப்படும் என்பதை இன்றைய வழிபாடு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இன்றைய வாசகங்களின் வழி நமக்கு உணர்த்தும் செய்தியும் 'தாழ்ச்சி' பற்றியதே.
தாழ்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார். தாழ்ச்சியுடன் இருந்தால் மாட்சியடைவோம். தாழ்ச்சி என்ற சொல்லைக் குறிக்கும் எபிரேய மூலச் சொல்லுக்குப் 'பணிதல்' அல்லது 'தலை குனிதல்' என்று பொருள் படும். இதுவே ஆங்கிலத்தில் வருகின்ற தாழ்ச்சி என்ற வார்த்தை Humility என்பது. இது Humaus என்ற மூல வார்த்தையிலிருந்துதான் வந்தது. Humaus என்றால் மண், அல்லது ஒன்றுமில்லாமை என்று பொருள் தரும். அதாவது நாம் நம்மையே உயர்த்திக் கொள்ளாமல் ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கிக் கொள்வதும் இறைவனுக்குப் பணிந்திருத்தலும்தான் உண்மையான தாழ்ச்சி. அதே நேரத்தில் பிறர் நம்மை ஒன்றுமில்லாதவர்களாகக் கீழ்நிலைக்குத் தாழ்த்தினால் அது 'அவமானம்' எனப்படும். "இருமாப்பு, தலைக்கனம், இருக்கின்ற இடத்தில் தாழ்ச்சிக்கு வழியில்லை. அதனால் அழிவுதான் வரும். எனவே மேன்மையடையத் தாழ்ச்சிதான் வழி" (நீ. மொ 18:12).
சில சமயங்களில் நாம் நமது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றாற் போலச் சில காரியங்களைச் சாதிக்க முடியும். சில காரியங்களில் சோதனையாகத் தோல்வி ஏற்படும். ஏனென்றால் தன்னைச்சார்ந்து தற்பெருமை கொண்டு என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தில் செயல்படுவதுதான் காரணம். எனவே யார் எல்லா காரியங்களையும் தாழ்ந்த உள்ளத்தோடு அளவற்ற வல்லமையும், ஞானமும் நிறைந்த இறைவனின் உதவியையும், பரிவையும் எதிர்பார்த்துச் செய்கிறார்களோ அவர்களிடம் தாழ்ச்சி என்ற புண்ணியம் உள்ளது என்பதை அறிய முடியும். இதைத்தான் முதல் வாசகத்தில் தந்தையானவர் தன் அன்பு மகனுக்குக் கூறும் அறிவுரையாக உள்ளது.
"நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய். இதனால் ஆண்டவர் முன்னிலையில் பரிவு கிட்டும். ஏனென்றால் ஆண்டவரின் ஆற்றல் பெரிது (சீராக் 3:17-20) எனவே பணிவும் தாழ்ச்சியும் நமக்கு இரு கண்களாக இருக்க வேண்டும்.
"நான் என் திறமைகள்மீது அளவற்ற நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்து வந்தேன். நான் எதன் மீது நம்பிக்கை வைத்தேனோ அது திடீரென்று பயனற்றவையாகத் தோன்றியது. அப்போதுதான் நான் ஒன்றுமில்லாதவன் என்று உணர்ந்தேன். அதன் பிறகுதான் அழிவில்லா ஞானத்தை வழங்கும் இறைவனைத் தேடினேன். அப்பொழுதுதான் என் வாழ்க்கைப் பயணம் மேலெழும்பிச் செல்ல ஆரம்பித்தது. அப்பயணத்தின் இறுதியில் இறைவனைக் கண்டு கொண்டேன்'' என்று தூய அகஸ்டின் கூறுகிறார். இவர் ஒரு மெய்யியல் வல்லுநராக இறையியல் ஞானியாகத் திகழ்ந்தவர். எப்பொழுது இவர் தன் உள்ளத்தை இறைவனுக்குப் பணிய வைத்தாரோ அன்றே இறைவன் இவருக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிற ஆற்றலை அவருக்குப் பரிசாகக் கொடுத்தார். இதனால் புனிதர் என்ற உயர் நிலையடைந்தார். இதே போல் தூய அசிசியார், தூய குழந்தைத் தெரேசாள், தூய பெர்நதத், முத்தி. அன்னைத் தெரசாள் என்று பலர் தங்களின் தாழ்மையான குணத்தால் உயர் நிலையடைந்தனர்.
ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தும் தன் வாழ்வின் 30 ஆண்டுகள் தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்தார் என்றும், ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் எனவும் லூக்கா 2:51-52-இல் வாசிக்கின்றோம். அவர்தான் கடவுள் என்ற நிலையை அறிந்திருந்தும் தன்னை மேலானவராக, மிக உயர்ந்தவராகக் காட்டிக் கொள்ளாமல் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும், வளர்த்தத் தந்தைக்கும் பணிந்து வாழ்ந்தார். இதன் மூலம் நமக்குப் பணிவைக் கற்று கொடுத்துத் தாழ்ச்சியினால் ஞானத்தைப் பெற வழி வகுக்கிறார்.
இன்றைய நாட்களில் நாம் கண் கூடாகப் பார்ப்பதும் கேட்பதும் தாழ்ச்சி என்ற புண்ணியத்திற்கு எதிர் மறையாகத்தான் உள்ளது. சிலர் தங்களின் திறமை, செல்வம், அறிவாற்றல், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். ஏன்? தன் ஏழ்மையான கல்வியறிவற்ற பெற்றோர்களைக் கூட மற்றவர்கள் முன் ஏற்றுக் கொள்ளத் தயங்குவர்கள், மறுதலிப்பர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் மீது பாவத்தையும், சாபத்தையும்தான் வருவித்துக் கொள்கிறார்கள். தன் பெற்றோரை உயர்வாக மதிக்கின்றத் தாழ்மையான உள்ளம் உடையவர்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன வென்றால் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும் (22:4).
நற்செய்தி வாசகத்திலே இயேசு, விருந்தில் பங்கு பெறுவதையும் யாரை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்றச் செய்தியையும் நமக்குத் தெளிவாகத் தருகிறார். தாழ்ச்சியாக வாழ அழைப்பையும், அதன் நன்மையும் கூறுகிறார்.
இஸ்ரயேல் மக்களிலே பரிசேயரும், சதுசேயரும் எப்பொழுதும் தாங்கள் உயர்ந்த இடத்திலே இருக்க வேண்டும், மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும், மரியாதைச் செலுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இவர்கள் எந்த ஒரு பெரிய நிகழ்ச்சியிலும், விருந்துகளிலும் முதலிடம் தனக்குத் தரப்பட வேண்டும் என்ற மன நிலை உடையவர் களாக இருந்தார்கள். அது மட்டுமின்றி மற்றவர்களை மட்டம் தட்டித் தாழ்வாக எண்ணி பாகுபாடு, ஏற்றத்தாழ்வுப் பார்ப்பவர்கள். இதனால் மனித மாண்பு, சகோதர அன்பு, மனித நேயம், சிதைக்கப் படுவதையும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு ஏற்படுவதையும் இயேசு காண்கிறார். இந்தக் குறைபாடுகள் தாழ்மை- யின்மையைத் தெளிவாகக் காட்டுவதைத் தன் சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்குகின்றார். இதோடு நில்லாமல் தாழ்மை- யுடன் இருக்கவும் கற்றுக் கொடுக்கிறார். கானாவூர் திருமணத்திலே ஏற்பட்ட குறையைத் திராட்சை ரசம் தீர்ந்து விட்ட நிலையில் தண்ணீரை இரசமாக மாற்றித் திருமண விருந்திலே தாகத்ததைத் தணித்தார். ஆனால் இன்று இந்த விருந்திலே மனிதத் தாகத்ததைக் கண்டு கொண்டார். மனிதர்கள் மதிக்கப்படாமல் அவமானப்படுகின்ற நிகழ்வைக் காண்கின்றார்.
பெரும்பாலும் விருந்து என்று சொன்னால் 'பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்ற பழமொழிதான் நம் நினைவுக்கு வரும். இதன் அர்த்தத்தைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதாவது விருந்துகளில் உணவு அருந்த முதல் பந்திக்குச் செல்ல வேண்டும். படைப்பிரிவில் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள படைப்பிரிவின் பின்னால் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் நம் கையானது உணவு சாப்பிட வாய்க்கு முன் செல்கிறது. சண்டையில் எதிரியைத் தாக்க வாள் பிடித்த கைப்பின்னிருந்து முன்னுக்கு வந்து அவனை வீழ்த்துகிறது.
இதுபோலத் தான் விருந்துகளில் முன்னிடம் தேடும்பொழுது அங்கேப் பின்னுக்குச் செல்ல நேரிடும். ஏனென்றால் நம்மைவிட உயர் அதிகாரிகள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள். நாம் முதலிடம் தேடி அமரும்பொழுது உயர் அதிகாரியின் பொருட்டு நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவமானப்படுகிறோம். இந்த அவமானம் தேவையற்ற ஒன்று. இதைக் குறித்துத்தான் இயேசு நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொள் என்கிறார். விருந்துக்குப் போகும்பொழுது பின்னிடத்தில் உட்கார். நீ மதிப்புக்குரியவன் என்றால் உன்னை முன்னிடத்திற்கு அழைக்கும்பொழுது மற்றவர் முன் பெருமையடைவாயென இயேசு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.
மேலும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் தன் மதிப்புக்கு ஏற்பக் கைம்மாறு திரும்பக் கொடுக்கலாம். அல்லது கைம்மாறு பெறலாம். இதைத்தான் இயேசு வேண்டாம் என்கிறார், மாறாக விருந்துக்கு ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊன முற்றோரையும், பார்வையற்றோரையும் அழைக்கச் சொல்கிறார். ஏனென்றால் இவர்களிடம் திரும்பக் கொடுக்க ஒன்றுமில்லை. ஏன் இவர்களால் உழைத்துப் பணம் சம்பாதித்து விருந்து உணவு சாப்பிட இயலாது. குறையுள்ள இவர்களும் கடவுளின் பிள்ளைகளே. இவர்களைப் பந்திக்கு அழைக்கும்பொழுது அழைப்பவர் பேறு பெற்றவராகிறார். இதனால் விருந்தும் மகிமை அடைகிறது. உடைந்துப் போன ஒதுக்கப்பட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேர்ந்து மனித நேயம் மலர்ந்திடும். உயர்வு தாழ்வின்றி விருந்துகளில் மனிதத் தாகம் இல்லா நிலை ஏற்படும். இருப்பவர்கள் இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்ளத்தான் இறைவன் ஒரு சிலருக்குச் செல்வத்தைத் தருகின்றார். தாழ்த்தப்பட்டோரை, கைவிடப்பட்டோரை அழைத்து ஒரு வேளை விருந்துக் கொடுக்கத் தன்நிலையிலிருந்து இறங்கிச் செயல்படத் தாழ்ச்சி வேண்டும். இதைத்தான் இயேசு உயர்ந்துச் செல்வச் செழிப்பில் வாழ்கின்றவர்களைத் தாழ்நிலைக்கு இறங்கி வந்து விண்ணக வாழ்வுக்கு உயர்ந்திட மேலான அழைப்பு விடுக்கிறார். ஏழை எளியோருக்குச் செய்யும் பணி இறைவனுக்குச் செய்யும் பணி என்பதை நமக்குக் காட்டுகிறார். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்” -பழமொழி.
ஆண்டவர் இயேசுவும் புதிய உடன்படிக்கையின் வழியாய் தன்னையேப் பலியாக்கி திருஉணவாக நமக்கு வழங்குகின்றார். இந்தத் திருவிருந்திலே எந்த விதமான பாகுபாடும் ஏற்றத்தாழ்வு- களும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற நிலையும் இல்லை. ஏழைகளும், பணக்காரர்களும், அனாதைகளும், கைம்பெண்களும், உடல் ஊனமுற்றோரும், பார்வையற்றோரும் உண்டு மகிழும் சமப்பந்தி விருந்தாக இறைவனின் விருந்து நமக்கு வழங்கப்படுகிறது. இந்த விருந்தினை நாம் உட்கொள்ள நம்மை நாம் தாழ்த்தி நம் குற்றம் குறைகளை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதுமானது. நாம் இறைவனின் அன்புப் பிள்ளைகளாக மாறுவோம். இந்தத் திரு- விருந்துக்கு எந்தக் கைமாறும் தேவையில்லை. தாழ்ச்சி என்ற புண்ணியமே தேவையானது. இயேசுவை அணுகிச் செல்வதே அதற்கு மேலானது. அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற விருந்துகள் எல்லாம் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் ஏற்படும் ஒரு நல்ல நிகழ்வுதான். வாழ்க்கையில் பெற்ற எல்லையற்ற மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள, உறவுகள் மேம்படவும், ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தவும், புதிய உறவுகள் மலரவும் தான் என்பது உறுதியாகக் கூறலாம்.
இந்த உறவுகளை எல்லா ஏழைகளோடும் மலர்ந்திட வைப்பதே இயேசுவின் ஆவல். சமப்பந்தி விருந்தாக, அன்பின் விருந்தாக, மாறும்பொழுது எந்த விருந்தும் இயேசுவின் மதிப்பீடுகளுக்கு உட்பட்டதாக அமைகிறது. இப்படி விருந்துகள் வைக்கப்படும் பொழுதுதான் நாம் வாழுகின்ற சமுதாயம் உயிருள்ள சமுதாயமாகிறது. தானும் தன் வீட்டாரும் மட்டும் விருந்து கொண்- டாடுவதும், உண்ணுவதும் என்றால் அது விருந்தாகாது. இயேசுவைப் போல் பல்வேறுபட்ட மக்களோடு பந்தியமர்தலே தாழ்ச்சியின் அடை- யாளம். தம்மைத் தாழ்த்துவதினால் உண்டாகும் கைம்மாறு நம் ஆண்டவரின் கரங்களில் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாய் தொடரும் பலியினில்:
எனக்குத் தகுதி இருக்கிறது என்று எண்ணுவதில் குறையில்லை. ஆனால் அதைவிடத் தகுதி மற்றவர்க்கு இருக்கிறது என்று நினைக்க வேண்டும். இந்தத் தாழ்ச்சி எண்ணம் தான் நாம் இருக்கும் இடங்களில் வேலை செய்யும் இடங்களில் பங்குத் தளத்தில் இருக்க வேண்டும். "ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள், அவர் உங்களை உயர்த்துவார்” (யாக் 4:10).
பிற மறையுரைக் கருத்துக்கள்
- தனது புகழுக்காகச் சேவை செய்வதைவிட மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகத் தன்னை இழப்பது.
- பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பில்தான் ஆண்டவன் குடிகொள்கிறார்.
- மதிப்பிற்கு முதலிடமா? மனிதனுக்கு முதலிடமா?
- இறுமாப்பு கொள்ளாதே! இருக்கையை இழக்காதே.
பொதுக்காலம் - இருபத்திரண்டாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : சீஞா. 3: 19-21, 30-31
மோசேயின் சட்டங்களில் உள்ள தெய்வீகக் கட்டளைகளை நடை முறைக்குக் கொண்டுவரும் முறைகளைக் கூறுகிறது சீராக்கின் ஞானம். கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணவன் ஆகியோருக்கு அறிவுரை கூறும் பகுதிகள் பல உள்ளன. ஞானத்தின் ஊற்றையும் சிறப்பையும் கூறிய ஆசிரியர், அதன் இயல்பையும் பயனையும் விளக்கி, அகந்தையற்றவனே-தாழ்ச்சியுடையவனே-உண்மையான ஞானி என்கிறார்.
தாழ்ச்சியின் மாட்சி
எபிரேய மொழியில் தாழ்ச்சி என்ற சொல்லுக்குக் குனிதல் அல்லது பணிதல் என்பது பொருள். தாழ்ச்சி உள்ளவன் தன்னை இறைவனிடம் கையளித்து அவர் விருப்பப்படி நடப்பான். ஏழை எளியவர்கள் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்ததால், யாவேயின் மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களை அதிகார வர்க்கமும் முதலாளிக் கூட்டமும் கொடுமைப்படுத்திய நிலையிலும், இறைவன் “எளியோரை நேரிய வழியில் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்” (திபா. 25 : 9) என்று நம்பினர். இத்தகைய யாவேயின் ஏழைகளை மனத்தில் கொண்டே, எளிய மனத்தோர் பேறுபெற்றோர்; சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர் என்றார் (மத். 5 : 2,4) நமதாண்டவர். தாழ்வு மனப்பான்மை தாழ்ச்சியாகிவிடாது. இறைவன் முன் தன் உண்மை நிலையை ஏற்றுக் கொள்வதே தாழ்ச்சியாகும். இதன் முதற்கனி சாந்தம். "முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்” என்கிறார் பவுல் (எபே. 4:2; காண்: கொலோ. 3:12). தாழ்ச்சியும் சாந்தமும் உயர்ந்தோரின் பண்பு. "எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கு அனைத்திலும் உன்னைத் தாழ்த்து” (20).
"உங்களுள் பெரியவராய் இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராய் இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” என்பது ஆண்டவரின் அருள்வாக்கு (மத். 20:26 27). தாழ்நிலை நின்ற தன்னை இறைவன் கடைக்கண் நோக்கியதாக மரியாள் இறை புகழ் பாடுகின்றாள். என் செல்வம், செல்வாக்கு, ஆற்றல்கள் ஆகிய அனைத்தும் இறைவனின் கொடைகள் என்பதை உணர்கின்றேனா? இறைவனுக்கு முன் நான் ஒன்றுமில்லை என்பது என் மனநிலையா? என்னைவிட அறிவில்- பண்பில்-பக்தியில் உயர்ந்தோர் உள்ளனர் என ஏற்றுக்கொள்கின்றேனா?
அகந்தை அழிவுப் பாதை
தான் என்ற ஆணவம் கொண்டவர், அனைத்தும் அறிந்தவன் நான் என்ற பேதைமை, பணத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்ற அகந்தை உள்ளவர்கள் இறைவனால் நிராகரிக்கப்படுவர். "இறுமாப்பு வரும் முன்னே; இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்" என்பது நீதிமொழி (11:2).
“உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்” என்பது மரியாளின் பொன்மொழி (லூக். 1: 51).
தலையான பாவங்களில் முதலாவது அகங்காரம்; தான் என்ற ஆணவம். தான் அழிந்தால் தான் இறைவன் எம் உள்ளத்தில் கோயில் கொள்வார். ஆண்டவராகிய இறைவன் செருக்குற்ற தீர்நகர் அரசனுக்குக் கூறிய சொற்கள் சிந்தனைக்குரியவை:
"உன் இதயம் செருக்குற்றது; உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக்கொண்டாய்; எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்.” (காண்: எசே.28: 17)
மகனே எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ, அவ்வளவுக்கு உன்னைத் தாழ்த்து. அப்போது கடவுள் முன் இரக்கத்தைக் காண்பாய்.
இரண்டாம் வாசகம் : எபி. 12 : 18 - 19, 22 - 24
விண்ணிலே வீற்றிருக்கும் இறைவன் உயர்ந்த மலையின் சிகரத்தில் குடியிருப்பதாக மக்கள் நம்பினர். “ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை, மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப்படும்” என்கிறார் எசாயா (2:2). சீனாய் மலையுச்சியில்தான் யாவே, மோசேயுடன் பேசினார்; பத்துக் கற்பனைகளைக் கொடுத்தார். இன்று புதுயுகம் பிறந்துள்ளது. புதிய மலை சீயோன்; இந்த விண்ணக எருசலேமாகிய இறைவனின் உறைவிடம் நோக்கி நம் பயணம் தொடர்கிறது. பழமைக்கும் புதுமைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது இன்றைய வாசகம்.
இறைக் காட்சிகள்
எரியும் நெருப்பு - இருண்டமேகம் காரிருள் சுழற்காற்று. எக்காள முழக்கம்-இடியொத்த குரல்; இச்சூழலில்தான் கடவுள் மோசேக்குக் காட்சி கொடுத்தார். மலையடிவாரத்தில் போடப்பட்ட எல்லைக் கோட்டை மக்கள் மீறினால் மடிந்தொழிவர் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். கடவுள் மோசேயுடன் பேசியதையும், கடவுளைக் கண்டதால் அவர் தலையில் முளைத்த கொம்பு போன்ற ஜோதியையும் கண்ட மக்கள் அச்சமுற்று “நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில் நாங்கள் செத்துப் போவோம்” என்றனர் (காண் : ນ. 20 : 19, 20).
புதிய ஏற்பாட்டின் தொடக்கத்திலும் கடவுள் காட்சி கொடுத்தார். கடவுள் ஒன்றும் அறியாத -இயலாத - குழந்தையாக ஒரு மலைக்குகையில் தோன்றினார். ஏழை எளியோராகிய இடையர்களைத் தம்மிடம் அழைத்தார். செல்வந்தரும் ஞானிகளுமான மூவர்களையும் தம்மிடம் அழைத்தார். இங்கிருந்துதான் நமது பயணத்தைத் தொடங்குகிறோம். இப்பயணம் சீயோன் -மலையில் உயிருள்ள கடவுளின் நகராகிய வானக எருசலேமில் நிறைவு பெறும். இப்புதிய பயணத்தில் பழைய ஏற்பாட்டுப் பயங்கரப் பின்னணியிலிருந்து பிரிக்கப்பட்டு இறைவனை அப்பா, தந்தாய் என்று உரிமையுடன் அழைக்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். நம்பிக்கையுடனும் அன்புடனும் அவரை நாடுகின்றேனா?
புதிய வானம்-புதிய பூமி
மெல்கிசெதேக் முறைமைப்படி இயேசு என்றென்றும் தலைமைக் குருவாகி, நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச் சீலையைக் கடந்து சென்றிருக் கிறார் (காண் : எபி. 6 : 20). அவர் மகத்துவ மிக்கவரது அரியணையின் வலப்புறத்தில் வானகத்தில் அமர்ந்துள்ளார் (81). வாழும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, வாகைசூடிய மன்னரின் மகிழ்விடத்தை நாடிச் செல்லும் வாழ்வு நம்முடையது. இவ்வாழ்வில் நாம் பெற்றுள்ள பெருங்கொடைகளுக்கு அளவில்லை. “இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள் ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை” (லூக். 10: 24, காண்: 1 யோ. 1: 1 - 2) என்கிறார் நமதாண்டவர்.
ஞானத்திலே சிறந்த சாலமோன் கூட மூவொரு கடவுளை அறியவுமில்லை; "பிதா-சுதன்-தூய ஆவியின் பெயராலே” என்று இறை புகழ் பாடவுமில்லை. பழைய ஏற்பாட்டிலே தம் கற்பனைகளைக் கற்பலகையில் எழுதினார் கடவுள். நாமோ மையால் அன்று, தூய ஆவியால்; கற்பலகையில் அன்று, உள்ளங்களாகிய உயிர்ப் பலகையில் எழுதப்பட்ட கடிதங்கள் (2 கொரி. 3 : 3). அவர்களுக்கு மீட்பர் வருவார் என்று கூறப்பட்டது; நமக்கோ மீட்பர் எம்மானுவேலாக வந்துள்ளார்; நம்மை மீட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர்கள் வெறும் அடையாளங்களை நம்பியே வாழ்ந்தனர்; நாமோ அடையாளங்கள்குறித்த உண்மைப் பொருளை அடைந்து விட்டோம். அவர்கள் வான தூதர்களையும் பிதாப் பிதாக்களையும், இறைவாக்கினரையும் தூதுவர்களாய்ப் பெற்றிருந்தனர்; நாமோ தெய்வத் திருமகனையே எம் இடையாளராக-இணைப்பாளராகப்-பெற்றுவிட்டோம். அவர்கள் பரிசுத்தம் என்ற மூலஸ்தானத்தைப் பெற்றிருந்தனர்; நாமோ திருமுழுக்கின் வழியாகப் பரிசுத்தரின் கோயிலாகி விட்டோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்று நிகழ்ச்சிகள். இறை இயேசுவை, மையமாக-குறிக்கோளாகக்-கொண்டுள்ள நாம் வரலாறே படைத்துவிட்டோம். இப்புதுயுகத்தில் வாழும் நான் என் ஆண்டவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? எப்படி நன்றி கூறுவேன்?
புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளரான இயேசுவின் முன்னிலையில் நிற்கிறீர்கள்.
நற்செய்தி:. 14: 1, 7 - 14
நமதாண்டவர் பாவம் தவிர மற்றனைத்திலும் ஒரு சாதாரண மனிதனாகவே காணப்பட்டார்; செயல்பட்டார். ஒருமுறை அவர் விருந்துண்ணச் சென்ற போது அனைவரும் பந்தியில் முதலிடம் தேடினர். தான் கண்டதையே ஓர் உவமையாகக் கொண்டு இறையரசில் நடந்துகொள்ளவேண்டிய முறையைக் குறிப்பிடுகிறார். முதல் பகுதி முண்டியடித்துக் கொண்டு முதலிடம் தேடிய விருந்தினரைப் பற்றியது; மறு பகுதி விருந்துக்கு அழைக்கப்பட வேண்டியவரின் பட்டியலைத் தருகிறது.
முதலிடம் தேடுவோர்
பொதுக் கூட்டங்களுக்குச் சென்று முதலிடத்தில் அமர்வோர் பலர்; ஆனால் இவர்களைவிட முக்கியமானவர்கள் வந்துவிட்டால் இவர்கள் இடம் பறிபோகும். எனவேதான் "அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோருக்குரிய இடத்தில் நில்லாதே" என்று அறிவுரை கூறுகிறது நீதிமொழி (25:6-7). விருந்தின் அடிப்படையில் ஆண்டவர் கூறிய அறிவுரை ஆழமானது. ஒருவனை உயர்த்துகிறவரும் தாழ்த்துகிறவரும் இறைவனே. மனிதனின் உருவம் பார்த்து இறைவன் அவனை மதிப்பதில்லை. எனவேதான் யாக்கோபு கூறுகிறார், "பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள் (2:1-4). இப்படி மக்களை மதிப்பிடுவது தவறு.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தாங்கள் சட்டங்களை அனுசரிப்பதாலும், சமயப் பெரியோர்கள் என்பதாலும் தனிச் சலுகையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். விண்ணரசிலும் தங்களுக்கு முதலிடம் கிடைக்கும் என்று நம்பினர். இது தவறு என்ற பாடம் இங்குப் போதிக்கப் படுகிறது. ஆயக்காரனைப் போல் தாழ்ச்சியுடன் இறைவனை வேண்டுவோர் உயர்த்தப்படுவர். பரிசேயனைப் போல் தன்னை மிதமிஞ்சி உயர்த்தி இறையரசில் இடம்பிடிக்க முயல்வோர் தாழ்த்தப்படுவர் (காண் : லூக்.18:10-14). பெருமை-பகட்டு-ஆணவம் ஆகியவற்றிற்கு இறையரசில் இடமில்லை என்பதை உணர்கின்றேனா?
ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
நாதா! நீ நீக்க ஒரு ஞானவிளக்கு இல்லையோ? (தாயு)
விருந்தினரைத் தேர்ந்தெடுத்தல்
விருந்து கொடுத்த பரிசேயன் தன்னைப் போல் மேல்மட்டத்தில் உள்ளவரையே அழைத்திருக்க வேண்டும். அவர்களிடமிருந்து அவன் கைம்மாறு எதிர்பார்த்தான். இதற்கு மாறாக உள்ளது இயேசுவின் போதனை. "நீ விருந்து நடத்தும்பொழுது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், பார்வையற்றறோர் ஆகியோரைக் கூப்பிடு. அப்போது நீ பேறு பெற்றவன். உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை" (14). புறக்கணிக்கப்பட்டோரின் பசி போக்குவதே உண்மையான அறம்; அன்பு.
“ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்;
ஆற்றாமாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந் நெறிவாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை)
செல்வந்தன் மேலும் செல்வத்தைப் பெருக்குவதையும், ஏழைகள் மேலும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுவதையும் உலகில் காண்கிறோம். தன்னிடமுள்ளதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்ளாது, இருப்பவர்க்கே அளித்தால், அது மீண்டும் வேறொரு வகையில் தன்னைச் சேருமே என்ற கண்ணோட்டத்தின் விளைவு. இது கிறிஸ்துவின் போதனைக்கு முரணானது என்பதை உணர்கின்றேனா? எனது நண்பர்கள் வறியரா, அல்லது வளமுடன் வாழ்பவரா?
தன்னை உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார். தன்னைத் தாழ்த்துகிறவரோ உயர்த்தப் பெறுவார்... ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், பார்வையற்றோர். ஆகியோரைக் கூப்பிடு, அப்போது நீ பேறு பெற்றவன்.
தாழ்ச்சியிலிருந்து உயர்வு
உணவு இயேசு வாழ்ந்த சமூகத்தில் மட்டுமல்ல, நம் சமூகத்திலும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. எங்கே ஒருவர் சாப்பிடுகிறார், யாரோடு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார், எங்கே அமர்ந்து உண்கிறார் என அனைத்துமே முக்கியமானதாகவும், ஒருவரின் சமூக அந்தஸ்தைக் காட்டுவதாகவும் இருக்கின்றன.
இயேசுவின் இன்றைய போதனை விருந்தினர்களுக்கும், விருந்து வைப்பவர்களுக்கும் என இரண்டு நிலைகளில் உள்ளது.
விருந்திற்கு வருபவர்கள் தாங்களாகவே மேன்மையைத் தேடிக்கொள்ளக்கூடாது எனவும், விருந்து வைப்பவர்கள் தங்கள் மேன்மைக்கேற்ற மக்களையே அழைக்கக்கூடாது எனவும் கற்பிக்கின்றார்.
இந்த இரண்டிலும் மையமாக இருப்பது ‘நம் அடையாளங்களை நம்மால் இழக்க முடியுமா?’ என்பதுதான். நாம் பிறந்தது முதல் பல அடையாளங்களைச் சுமந்து கொண்டேதான் இருக்கின்றோம். நம் பெற்றோர், நம் ஊர், நாம் பேசும் மொழி, நாம் வழிபடும் கடவுள், நம் படிக்கும் படிப்பு, நாம் பார்க்கும் வேலை, நாம் வகிக்கும் பதவி, நாம் வாழும் நாடு, நாம் சார்ந்திருக்கும் மனித இனம் என எண்ணற்ற அடையாளங்கள் நம்மையறியாமலேயே நம்மேல் ஒட்டிக்கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒரே இரவில் துடைத்து எறிந்து விடுவதும் சாத்தியமில்லை.
நம் வாழ்வில் பல சிக்கல்கள் வருவதற்குக் காரணம் நம் அடையாளங்களோடு நாம் நம்மை ஒன்றிணைத்துக்கொள்வதுதான். நம்மை ஒன்றித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அவர்களின் அடையாளங்களோடே இணைத்துப் பார்க்கின்றோம். அடையாளங்களோடு இணைத்துப் பார்ப்பது நமக்கு மிக சாதகமாக இருக்கிறது. மற்றவர்களை ஏற்று அன்பு செய்யவும், கண்டுகொள்ளாமல் இருக்கவும், வெறுக்கவும் அடையாளங்கள் நம்மைத் தூண்டுகின்றன.
ஓர் அடையாளம் மற்ற அடையாளத்திலிருந்து நம்மை பிரிக்கிறது. முதன்மை இருக்கை என்ற அடையாளம் இறுதி இருக்கை என்ற அடையாளத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. நண்பர்கள் என்ற அடையாளம், நண்பர்கள் அல்லாதவர்கள் என்ற ஒரு குழுவை வேறுபடுத்திக் காட்டுகிறது. உடன்பிறந்தோர், உறவினர் என்ற அடையாளம் உறவினர் அல்லாதவரை நம்மிடமிருந்து பிரிக்கிறது. பணம் உடையவர் என்ற அடையாளம், பணமில்லாதவரிடமிருந்து பிரிக்கிறது.
இன்றைய நற்செய்தி நமக்கு வைக்கும் பாடங்கள்:
- நம் அடையாளங்கள் நம் இயல்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. நம் இயல்பு நம் அடையாளங்களைவிட உயர்ந்தது. நம் இயல்பைக் கண்டுபிடித்து அதில் வளர்வதுதான் நிறைவு தருகின்றது. அடையாளங்கள் நிலையானவை அல்ல. நாம் வங்கியின் மேலாளர் என்ற அடையாளம், நம் பணி ஓய்விற்குப்பின் அர்த்தம் இல்லாததாகின்றது. நாம் நம்மை நம் அடையாளங்களோடும், மற்றவர்களையும் அவர்களின் அடையாளங்களோடும் இணைத்துப் பார்த்தலை விடுக்க வேண்டும்.
- நாம் உணவைப் பகிரும்போது நம் மனித இயல்பிலிருந்து இறைஇயல்பிற்குக் கடந்து போகின்றோம். எப்படி இறைவன் மற்றவர்களுக்கு உணவு தருகிறாரோ, அதேபோல நாமும் மற்றவர்களுக்குப் பகிர்கின்றோம். அப்படிச்செய்யும்போது வேறுபாடு படுத்திப் பார்க்கும் மனித இயல்பை விடுத்து, அனைவரையும் இணைத்துப் பார்க்கும் இறைவனின் இயல்பைப் பெற வேண்டும். ‘அவர் நல்லோர் மேலும், தீயோர் மேலும் தன் கதிரவனை ஒளிரச் செய்கிறார்’ எனில் நாமும் அனைவரையும் ஒரே கண்கொண்டு பார்க்க அழைக்கப்படுகின்றோம். நம் நண்பர்களும், சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரும், நம் உறவினர்களும், நம் அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளும் சமம் என்ற நிலைப்பாட்டை நாம் பெற வேண்டும்.
- இன்றைய நற்செய்தி நம் கலாச்சாரம் நம்மைக் கட்டிவைக்கும் கட்டுக்களிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. நம் கலாச்சாரம் நம்மை அதிகாரத்தோடும், ஆள்பலத்தோடும் நம்மையே இணைத்துக்கொள்ளச் சொல்கின்றது. யார் அதிகாரம் கொண்டிருக்கிறார்களோ, யார் ஆள்பலம் கொண்டிருக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றும், அவர்களே முதன்மையானவர்கள் என்றும் முன்னிறுத்துகின்றது. நம் உயர்வு நம்மைச்சுற்றியிருப்பவர்களிடமிருந்து வருவதில்லை. நம் உள்ளேயிருந்தே வருகின்றது.