தொடக்கம்
சில வாரங்களாகச் செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சியிலும் தொடர்ந்து வரும் செய்தி, பெப்சி, கொக்கோ கோலா போன்ற பானங்கள் பற்றியது. இதில் கான்சர் (புற்று நோயை) உண்டாக்கும் நச்சுத் தன்மையுள்ளது என்பதை சோதனையில் கண்டு பிடித்துவிட்டோம் என்பது.
கட்சி வேறுபாடு இன்றி, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி பாராளுமன்றத்தில் பெரிய அமளி ஏற்படுத்தியது. அதன் வளாகத்தில் அப்பானங்கள் கொண்டு வரத் தடைசெய்யப்பட்டன. தெருக்களில் ஆர்ப்பாட்டம், கூடி நின்று பெப்சி, கொக்க கோலா பாட்டில்களை உடைத்து தரையிலே கொட்டிய காட்சி . கடைகளிலே, அலுவலகங்களிலே, வீட்டிலே பேச்சு. நாடே விழித்துக் கொண்டது போல ஒரு காட்சி! இது பாராட்டத்தக்க செயல்தான்!
ஆனால் பெப்சி, கொக்கோ கோலாவை விட அதிக நச்சுத் தன்மை உள்ள காரியங்கள் அறுபத்து மூன்று ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் மலிந்து கிடக்கின்றனவே! அதைப்பற்றி யாருக்கும் கவலை உண்டா? அக்கறையுண்டா?
மருத்துவத் துறையிலே போலித்தனம், கல்வித் துறையிலே வியாபாரம், காவல் துறையிலே காம வெறியர்கள். லஞ்சம் என துறைக்குத் துறை நிறைந்து கொண்டிருக்கும் நாசகார நச்சுக் கிருமிகள் எத்தனை எத்தனை? ஏராளம்? ஏராளம்?
இது மட்டுமா? தூங்கிக் கிடக்கும் நல்ல சமுதாயத் திட்டங்கள், சாதி, மத, மொழிப் பிளவுகளால் மனித நேயத்தைப் பிளக்கும் தீயச் சக்திகள். சிறையுள்ளே இருக்க வேண்டியவர் செல்வாக்கோடு வெளியே உலவி வரும் தீயவர்கள், லஞ்சக் கடலிலே மூழ்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள், சமயவாதிகள், அரசு ஊழியர்கள் எனப் பல நச்சுத் தன்மையுடைய நாசக் கிருமிகள் இந்த நாட்டிலே நிறைந்து கிடக்கின்றனரே? இதுதான் வெளிவேடம்! பரிசேயத் தன்மை! கொக்கோ கோலா, பெப்சி தயாரிக்க அமெரிக்காவிலிருந்தா தண்ணீர் கொண்டு வந்தார்கள்? நம் ஊர் தண்ணீர்தானே! அது மாசுபட்டுள்ளதே! நஞ்சடைந்துள்ளதே ! சாக்கடையோடு கலந்து வருகிறதல்லவா! இதைப்பற்றி யாருக்காவது அக்கறை, கவலை உண்டா?
சமீபத்தில் இந்து பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன் வரையப்பட்டு இருந்தது. பிரதமர் வாஜ்பாய்க்குப் பல முகங்கள் உண்டு என்று காட்டும் விதத்தில் கற்பனையோடு வரையப்பட்ட கார்ட்டூன் அது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதே போன்று பல முகங்கள் கொண்டவர்களாகப் பரிசேயத் தன்மையோடு நாம் வாழ்கிறோம் என்பது அப்பட்டமான உண்மை!
பகுதி - II
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அன்றைய மக்கள் தலைவர்கள் எனப்படும் பரிசேயர், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் வந்து முறையிடுகிறார்கள்.
உம் சீடர்கள் மூதாதையர் மரபுகளைப் பின்பற்றுவது இல்லையே. தீட்டான கைகளால் உணவு அருந்துகிறார்கள் (மாற்கு 7:5) என்றார்கள். இயேசு இதற்குத் தெளிவாகப் பதில் கொடுக்கிறார்.
எது அவசியமோ அதை விட்டு விட்டு உப்பு சப்பு இல்லாத மரபுகளைக் கடைப்பிடித்துக் கொள்கிறீர்கள்.
இந்த மக்களோ உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. ஏனெனில் கடவுளின் கட்டளைகளான நீதி, நேர்மை, நியாயம், உண்மை , நன்மை, அன்பு இவைகளைப் பின்பற்றாமல் போலித்தனமான மரபுகளுக்கு அல்லவா நீங்கள் அடிமையாகக் கிடக்கிறீர்கள் (மாற் 7:6-7) என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.
ஓர் ஆளைப்பற்றி இரண்டே வரிகளில் சுருக்கமாக எழுது என்றால் அவ்வளவு எளிதல்ல! ஆனால் விவிலியத்தை முழுதும் இரண்டே வரிகளில் எழுது என்றால் அது இயலுமா? ஆம் நிச்சயமாக இயலும். இதைத்தான் உன் கடவுளாகிய ஆண்டவரை முழு உள்ளத்தோடு அன்பு செய். உன்னைப்போல உன் அயலானையும் அன்பு செய் (இணை . சட். 6: மத். 2:37-39) என்று இயேசு சொன்னார். திருச்சட்டமும், இறைவாக்கும் இவ்விரு கட்டளை களுக்கு அடிப்படை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பரிசேயர்கள், கைகளையும், கால்களையும் பாத்திரங்களையும் கழுவும் புறத்தூய்மையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். ஆனால் அகத் தூய்மையை மறந்தனர். எனவேதான் இன்று இயேசு பரிசேயர்களின் வெளி வேடத்தைக் கண்டிக்கிறார். எந்த அளவுக்கு என்றால் கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கும்,
வெள்ளை யடிக்கப்பட்ட கல்லறைகள் (மத். 23:24, 27) என்றும் சாடினார்.
கதை
தோட்டக்காரர் அழகான பூச்செடிகளின் விதைகளை 40 தொட்டிகளில் விதைத்து வேலைக்காரனைக் கூப்பிட்டுத் தண்ணீர் ஊற்றும்படி சொல்லி ஒரு மாதம் வெளியூர் சென்றார். திரும்பி வந்தபோது வெண்டைச் செடிகள் முளைத்திருந்தன. எங்கே பூச்செடி எனக் கேட்டபோது, தண்ணீர் ஊற்றினேன், முளைக்கவில்லை. எனவே வெண்டை விதைத்தேன். முளைத்தன விரைவில். அதன் பிறகுதான் வேறு விதைகள் முளைத்தன. அவைகளைக் களைகள் என்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன் என்றான் கூலியாள்.
இதேபோலத்தான் பரிசேயர்கள் நிலை. கடவுள் கட்டளையைக் காற்றில் பறக்கவிட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள். எனவே இயேசு சொன்னார், "நீங்கள் கடவுள் கட்டளையைக் கைவிட்டுவிட்டு மனித மரபுகளைப் பின்பற்றி வருகிறீர்கள்" (மாற் 7:8).
முடிவுரை மதம் மக்களைப் பாவி, தூயவன், தீண்டதக்கவன், தீண்டத் தகாதவன் என்ற பிரிவினைக்கு ஆளாக்காமல், மனிதர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இறையனுபவத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு நம் ஆண்டவர் இயேசு நமக்கு வழிகாட்டியாக உள்ளார். புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல நாமும் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருப்போம் (பிலி. 2:5).
உதவிக்கு ஆற்றல் உண்டு
இறைவனுக்கு ஏற்புடையவர்கள் யார்? என்பதற்கு இன்றைய நற்செய்தி பதில் கூறுகின்றது. கடவுள் அகத்தில் அழகுள்ளவர்களையே அதிகம் அன்பு செய்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட இதோ மீட்பின் வரலாற்றில் நடந்த நிகழ்வு ஒன்று.
1 சாமு 16:1-13 முடிய உள்ள பகுதி!
கடவுள் தமக்குக் கீழ்ப்படியாத சவுல் அரசனுக்குப் பதிலாக, இஸ்ரயேல் நாட்டுக்கு வேறோர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். ஆகவே கடவுள் சாமுவேல் என்னும் இறைவாக்கினரை அழைத்து, பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகின்றேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் (1 சாமு 16:1) என்றார்.
ஈசாய் முதல் மகனை சாமுவேல் முன்னால் நிறுத்தினார். சாமுவேல் கடவுளைப் பார்த்து. இவனைத் திருப்பொழிவு செய்யலாமா? என்றார். கடவுளோ சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே;ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை ; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1 சாமு 16:7) என்று கூறிவிட்டார்.
ஈசாய் ஏழு குழந்தைகளை சாமுவேல் முன் நிறுத்தினார். கடவுள் அந்த ஏழு குழந்தைகளையும் தேர்ந்தெடுக்கவில்லை! பிறகு சாமுவேல் ஈசாயிடம், உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? (1 சாமு 16:11) என்று கேட்க, ஈசாய் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்னும் சிறுவனை அழைத்துவரச் சொல்கின்றார். தாவீதின் உள்ளம் தூய்மையாக இருந்ததால் அவனைத் திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலுக்கு கடவுள் ஆணையிடுகின்றார். திருப்பொழிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது (1 சாமு 16:13).
கடவுள் தந்த கட்டளைகளை (முதல் வாசகம்) புறத்தில் பின்பற்றினால் போதும் என இஸ்ரயேலர் நினைத்தபோது, இயேசுவோ கடவுளின் கட்டளைகளைப் புறத்தில் கடைப்பிடித்தால் மட்டும் போதாது, அகத்திலும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; உடல் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது, உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார்.
நமது மனம் தூய்மையாக இருந்தால்தான் கடவுளின் ஆசி கிடைக்கும்! ஓர் ஊரிலே பெரிய பணக்காரன் இருந்தான். அவன் இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லை என்று சொல்வதில்லை! ஒருநாள் ஏழை ஒருவர் அவரிடம் சென்று சாப்பாடு கேட்டார். பணக்காரர் கையில் சோறு இருந்தது! ஆனால் பிச்சைக் கேட்டவரின் பாத்திரத்தில் உணவைப் போட தயங்கினார். காரணம் பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தில் தூசிபடிந்து அது அசுத்தமாக இருந்தது. உன் பாத்திரத்தை சுத்தமாக்கு; சோறு போடுகின்றேன் என்றார் பணக்காரர். பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தை சுத்தம் செய்தார். அவருக்கு உணவு கிடைத்தது. இந்தக் கதையில் வந்த பணக்காரரைப் போன்றவர் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, நமது உள்ளத்தையும் மனத்தையும் தூய்மைப்படுத்தக்கூடிய ஆற்றல், துன்புறும் அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் நாம் செய்யும் உதவிகளுக்கு உண்டு என்கின்றார்.
மேலும் அறிவோம் :
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் : 231).
பொருள் : வறியவராகிய ஏழைக்கு உணவு முதலானவற்றை வழங்குவதால் புகழ் பெருகும். அத்தகைய புகழாகிய பயன்தரும் ஆக்கத்தைத்தவிர, வாழும் மாந்தர்க்கு எழுச்சி தருவது வேறு எதுவும் இல்லை.
"இரண்டாவது குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக" என்ற கேள்விக்கு, ஒரு மாணவன், "இரண்டாம் குலோத்துங்க சோழன் முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின்னால் இருந்தவன்; மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்' என்று எழுதியிருந்தான். அவனுடைய அபார மூளையை அருங்காட்சியத்தில் வைக்க வேண்டும்!
கடவுளுடைய கட்டளைகளை, குறிப்பாகப் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து. கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்கும் இடையே உள்ள உறவைச் சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, புனிதப்படுத்தி கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, பரிசேயர்கள் கைகளையும் கால்களையும், கிரகணங்களையும் தட்டுகளையும் கழுவித் தங்களைத் தூய்மைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்தினர். புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அகத்தூய்மையில் கோட்டை விட்டனர். கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கினர். எனவே, இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பரிசேயர்களின் வெளிவேடத்தைக் கண்டித்து அகத்தூய்மையை வலியுறுத்துகிறார், வெளியிலிருந்து உள்ளே செல்வது மனிதனை மாசுபடுத்துவதில்லை, மாறாக மனிதருடைய உள்ளத்திலிருந்து வெளியே வருபவை. அதாவது கொலை, களவு, பாத்தமை, காமவெறி ஆகியவை (பத்துக் கட்டளைகளுக்கு எதிரானவை) மனிதனை மாசுபடுத்துகின்றன என்கிறார் இயேசு.
அறன் என்பது அகத்தூய்மையே; மற்றனைத்தும் பகட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன என்கிறார் வள்ளுவர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து
அறன்: ஆகுல நீர பிற (குறள் 34 )
நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மலராக்கி அன்பை மஞ்சன நீராக்கி, கடவுளுக்கு வழிபாடு செய்கிறார் தாயுமானவர்,
"நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வா ராய் பராபரமே",
ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டு நண்பர்களில் ஒருவன் தன் அம்மாவுக்குப் பயந்து கொண்டு ஞாயிறு திருப்பலிக்குச் சென்றான். மற்றவன் புத்தம் புதிய திரைப்படத்திற்குச் சென்றான். மறுநாள் இருவருமே ஒரு விபத்தில் இறந்தனர். திரைப்படத்திற்குச் சென்றவனுக்கு விண்ணகமும் கோவிலுக்குச் சென்றவனுக்கு நரகமும் கிடைத்தது. ஏன்? திரைப்படத்திற்குச் சென்றவன் திரை அரங்கில் இருந்தாலும் அவனுடைய எண்ணம் ஆலயத்தில் இருந்தது. மாறாக, ஆலயத்திற்குச் சென்றவனுடைய எண்ணமெல்லாம் திரை அரங்கில் இருந்தது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதைவிட, நம் உள்ளம் எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம். 'நீ எங்கே என் நினைவுகள் அங்கே!'.
உதட்டளவில் கடவுளைப் புகழ்ந்து, உள்ளத்தளவில் கடவுளுக்கு அந்நியமாக வாழ்ந்த பரிசேயர்களை, இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி கடிந்துரைக்கிறார் இயேசு கிறிஸ்து. "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது" (மாற் 7:6).
தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட ஒருவர் நாற்பது தொட்டிகளில் அபூர்வரக விதைகளை நட்டு. தனது வேலைக்காரனைக் கூப்பிட்டு, தான் வெளியூர் சென்று பத்து நாள்கள் கழித்துத் திரும்புவதாகவும் அதுவரை பூத்தொட்டிகளில் தண்ணீர் ஊாற்றும்படியாகவும் கூறி வெளியூர் சென்றார். பத்து நாள்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது பூத்தொட்டிகளில் வெண்டை விதைகள் முளைத்திருப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று வேலைக்காரனிடம் விளக்கம் கேட்டார். வேலைக்காரன் அவரிடம், "முதலாளி! ஐந்து நாள்கள் நான் பூத்தொட்டிகளில் தண்ணீர் மாற்றியும் ஒன்றும் முளைக்கவில்லை. எனவே வெண்டை விதைகளை ஊன்றி தண்ணீர் விட்டேன்; அவை விரைவாக முளைத்துவிட்டன. அதன் பிறகு வேறு விதைகள் முளைத்தன; அவைகளைக் களையென்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன்" என்றான்.
அவ்வேலைக்காரன் முதலாளி நட்ட பூ விதைகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, தான் நட்ட வெண்டை விதைகளை வளர்த்தான். அவ்வாறே பரிசேயர்களும் கடவுளுடைய கட்டளைகளைக் காற்றில் பறக்க விட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள், இதைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார், "நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருபவர்கள் (மாற் 7:8).
இறையன்பு பிறரன்பில் வெளிப்பட வேண்டும், இன்றைய இரண்டாம் வாசகத்தில் உண்மையான சமயம் என்ன என்பதைப் புனித யாக்கோபு விளக்குகின்றார். தூய்மையான, மாசற்ற சமய வாழ்வு என்பது அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிப்பதாகும் (யாக் 1:27). "ஏழை விதவைகளையும் அனாதைகளையும் ஆதரிக்காத எந்த மதத்தையும் நான் நம்பத் தயாராக இல்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர். பரிசேயர்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மைப்படுத்தினர். அதற்குப் பதிலாக, கிண்ணத்திற்குள்ளே உள்ளதை. அதாவது உணவை ஏழைகளுக்குத் தர்மமாகக் கொடுத்தால் உள்ளும் புறமும் அனைத்துமே தூய்மையாகும் என்கிறார் இயேசு கிறிஸ்து (லூக் 11:41).
எனவே, இறையன்பையும் பிறரன்பையும் வளர்க்கவே சமயங்கள் உள்ளன. இவை இரண்டையும் வளர்க்காத சமயங்களின் கோட்பாடுகளும், வழிபாட்டு முறைகளும் சாரமற்ற சக்கைகள்! சமுதாயத்தின் சாபக்கேடுகள்! இறைவனைக் குழிதோண்டி புதைக்கும் சவக் குழிகள்!!!
ஞானி வளர்த்த பூனை
சிரிப்பு, புன்முறுவல் எல்லாமே நட்பின் அடையாளம். நல்லுறவின் வெளிப்பாடு. எனினும் நம்மைப் பார்த்துச் சிரிப்பவன் எல்லாம் நண்பனாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. வில்லனாகக்கூட இருக்கலாம். வெறும் கிறுக்கனாகக் கூட இருக்கலாம். A man may smile and smile and be a villan என்று ஆங்கிலக் கூலிஞன் ஷேக்ஸ்பியர் சொல்லவில்லையா? சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுப்பவன் என்று நாம் சொல்வதில்லையா?
மனிதன் மனிதனோடு கொள்ளும் இந்த உறவுக் கோளாறுகள் பணிதன் கடவுளோடு கொள்ளும் உறவிலும் வெளிப்படலாம். அதுபோலவே வழிபாடு எப்போதும் எல்லாருக்கும் பக்தியின் அடையாளமாக அல்ல, வெறும் வாடிக்கையாகக் கூட இருக்கலாம். வாழ்க்கைத் தாக்கம் இல்லாத வெறும் கடமைக்காகச் செய்யும் சடங்காகக் கூட இருக்கலாம்.
'பறவையின் பாடல்” என்ற நூலில் ஒரு குட்டிக் கதை உண்டு. 'ஞானி வளர்த்த பூனை” என்பது தலைப்பு. மாலை வழிபாடு நடந்த போதெல்லாம் மடத்தில் ஞானி வளர்த்த பூனை குறுக்கும் நெடுக்குமாக டடியது. மிகவும் இடையூறாக இருந்தது. எனவே மாலை வழிபாடு டெகொடங்குமுன்னே முதலில் பூனையைக் கட்டிப்போட ஆணையிட்டார் நுறவியான ஞானி. ஒரு நாள் துறவி இறந்துவிட்டார். அவர் இறந்து வெகு நாளாகியும் அவருடைய சீடர்கள் மாலை வழிபாட்டின்போது தொடர்ந்து பூனையைக் கட்டிப்போட்டனர். சிறிது காலத்திற்குப் பின் அந்தப் பூனையும் இறந்துவிடவே சீடர்களிடையே சலசலப்பு. மாலை வழிபாட்டின்போது கட்டிப்போட பூனை வேண்டாமா? பூனையைக் கட்டிப் பொடாமல் வழிபாட்டை எப்படித் தொடங்குவது? என்று நினைத்த சீடர்கள் தேடி அலைந்து வேறொரு பூனையை விலை கொடுத்து வாங்கி வந்தனர். பூனையைக் கட்டிப்போட்ட பின் தான் அவர்களால் நிம்மதியாக வழிபாடு நடக்கு முடிந்தது. பூனை கட்டப்பட்டதன் நோக்கத்தையே மறந்து பூனையைக் கட்டுவதை ஒரு சடங்காகவே மாற்றிவிட்டார்கள். ஆண்டுகள் பல கடந்தன. மாலை வழிபாட்டில் பூனையின் பங்கு” என்று இறையியல் ஆய்வுக் கட்டுரையையே எழுதி வைத்தனர்.
Tradition is the law of fools என்றான் ஒருவன். இது எதிர்மறைச் சிந்தனைதான். எனினும் மரபு என்பது முட்டாள்களின் சட்டமாகும் வாய்ப்பு உண்டு. வழிபாட்டுக்கு: இடையூறு என்று பூனையைக் கட்டச் சொன்னால் பூனையைக் கட்டுவதே வழிபாட்டின் ஓர் அங்கமாகி விடுவதா?
அன்பு உணர்வு கலவாத கட்டளைகளின் கடையப்பிடிப்பு வெறும் அடிமைத்தனம். கட்டளைகளின் கடைப்படிப்பு இல்லாத அன்பின் வெளிப்பாடு வெறும் போலித்தனம்.
இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாகக் கருதப்பட்ட பரிசேயர்களும் ஒரு சில மறைநூல் அறிஞர்களும் இயேசுவை அணுகி முறையிடுகின்றனர். “உங்கள் சீடர்கள் நம் முனனோரின் மரபுகளைப் பின் பற்றுவதில்லையே, நீங்கள் எல்லாம் மரபுக்கு அப்பாற்பட்டவர்களா? நமது மூதாதையரின் பழக்க வழக்கங்கள் தவறானவை என்பது உங்கள் எண்ணமா?
இக்குற்றச்சாட்டுக்கு இயேசு பதிலளிக்கிறார். “எது இன்றியமையாததோ அதை விட்டுவிட்டு உப்புசப்பில்லாத மரபுகளை இறுகப் பிடித்துத் தொங்குகிறீர்களே”” என்று சொல்லி, இறைவாக்கினர் எசாயாவின் கூற்றை மேற்கொள் காட்டி அவர்களின் வெளிவேடங்களை வெட்ட வெளிச்சமாக்குகிறார். “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது.” (மார்க். 7:6, எசா. 29:13).
இறைவனின் கட்டளைகளை வெறும் முன்னோரின் மரபுகளாக்கும் ஆபத்தைக் கண்டிக்கிறார் இயேசு. அத்தகையோரை “அப்பன் வெட்டிய கிணறு என்று உப்புத் தண்ணீரைக் குடிக்கும் மூடர்” என்று சாடுவார் பாரதி. மரபு, மரபு என்பதற்காக அல்ல, இறைவனின் விருப்பம் என்பதற்காகவே அருத்தம் பெறுகிறது.
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த மேலான கொடைகள் இரண்டு:
1. அவர் வாக்களித்து நாடு. “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்'' (இ.ச. 4:2).
* உடன்படிக்கை உறவின் வெளிப்பாடக அமைந்த அவரது கட்டளைகள். “நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்” (இ.ச. 4:5).
* அந்தக் கட்டளைகள் இறைவனின் விருப்பத்தை வெளிப்படுத்தின.
*அக்கட்டளைகளை அறிந்து ஏற்றுக் கொண்டபோது ஞானத்தில், அறிவாற்றலில் வளர்ச்சி தந்தன (இ.ச. 4:6).
*அக்கட்டளைகள் கடவுளோடு உறவை ஆழப்படுத்தின (இ.ச. 4:7).
*அக்கட்டளைகள் தன்னிலே முழுமையானவை. அதனால்தான் “அவற்றோடு எதையும் சேர்க்கவோ நீக்கவோ வேண்டாம்” (.ச. 4:2) என்றார் மோசே.
மேற்கூறியவை அனைத்தும் கடவுளது கட்டளைகளின் மேன்மையை உணர்த்துகின்றன.
கட்டளைகள் செயல்வடிவம் பெறுகிறபோது மரபுகள் தோன்றுகின்றன. கட்டளைகளைப் போல, மரபுகளும் இறைவிருப்பத்தை வெளிப்படுத்தினால், இறை-மனித உறவை வளர்த்தால், ஞானத்தில் வளரச் செய்தால் போற்றப்பட வேண்டும் இல்லையென்றால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
“ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்" என்பதுபோல அகத்தூய்மை பற்றிய உணர்வின்றி புறத்தூய்மை பற்றி அலட்டிக் கொள்ளும் பரிசேயரின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் இயேசு. “நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்... உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள் ' (மார்க். 7:8-9) என்று சாட்டை எடுக்கிறார்.
புறத்தே இருக்கின்ற பொருள்களோ சூழ்நிலைகளோ ஒருக்காலும் மனிதனைக் கடவுளிடமிருந்து பிரித்துவிட முடியாது. எனவே வெளியே உள்ள எதையும் நல்லது தீயது எனப் பிரிப்பது தவறு. ஒருவன் தன்னுடைய மனநிலையாலும் நடத்தையாலுமே கடவுளிடமிருந்து பிரிக்கப்படலாம். இதனையே “வெளியே இருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளே இருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும் ' (மார்க் 7:15) என்று சொல்லும் இயேசு தொடர்ந்து அப்படித் தீட்டுப்படுத்துபவை பற்றிய ஒரு பட்டியலையே தருகிறார் (மார்க். 7:21-23).
குடிக்கிற நீர், உண்ணுகிற உணவு, உடுக்கிற உடை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் எவ்வளவு அருவெறுப்பு, முகச்சுளிப்பு! இவை அனைத்தையும் விட மனம் தூய்மையாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாமா?
“உண்மையை அறிவிக்கும் வாக்கினால் நம்மை ஈன்றெடுத்த இறைவன் அவ்வாக்கின்படி வாழ நம்மை அழைக்கிறார். “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:18,22).
தலைக்கவசம் பற்றி அரசு சட்டம் வகுத்தது என்றால், கவசமின்றிப் பயணம் செய்யும் நம் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்ள அன்று. மாறாக நம் உயிரைக் காத்துக் கொள்ளவே. இதனைப் புரிந்து கொள்ளாமல் விபத்துக்குள்ளாகும் வேளையில் தவறை எண்ணி வருந்துவதால் என்ன பயன்? சட்டங்களும் கட்டளைகளும் மனித நல் வாழ்விற்கே!
சட்டம் என்பது வெறும் எழுத்தாலானது அல்ல. எழுத்துக்களிடையே இழையோடும் உணர்வாலானது. எழுத்துககள் மனிதன் தருவது. உணர்வுகள் கடவுள் தருவது.
சடங்குகளால் இடம் பெயரும் கடவுள்
ஐசக் ஒலே (Isaac Ole) என்ற இளையவர், தன் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். அவர்கள் குடும்பத்தில் நிலவும் பெருமை மிகுந்த ஒரு பாரம்பரியத்தைப்பற்றி பாட்டி சொன்னது, ஐசக்கை அதிகம் கவர்ந்தது. அதாவது, ஐசக்கின் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று, மூன்று தலைமுறையினர், தங்கள் 21வது பிறந்தநாளன்று, ஊருக்கு நடுவே இருந்த ஏரியில் நடந்து சென்று, மறுகரையில் இருந்த 'கிளப்'பில் முதல் முறையாக, சட்டப்பூர்வமாக மது அருந்திவிட்டு, மீண்டும் ஏரியில் நடந்து, வீட்டுக்குத் திரும்பினர் என்று பாட்டி சொன்னது, ஐசக்கின் மனதில் ஆழப் பதிந்தது.
ஐசக் ஒலே, தன் 21வது பிறந்தநாளன்று, நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஏரிக்குச் சென்றார். இருவரும் ஒரு படகில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து அடுத்தக் கரைக்கு நடந்து செல்ல, ஐசக் படகைவிட்டு இறங்கி, நீரில் கால் வைத்தபோது, தண்ணீரில் மூழ்கினார். படகிலிருந்த நண்பர் அவரைக் காப்பாற்றி, கரை சேர்த்தார்.
அவமானமும், ஆத்திரமும் நிறைந்தவராய், வீடு திரும்பிய ஐசக், பாட்டியிடம் சென்று, "என் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, எல்லாரும் 21வது வயதில் ஏரியில் நடந்தார்கள் என்றால், என்னால் மட்டும் ஏன் அது முடியாமல் போனது?" என்று கத்தினார்.
பாட்டி அவரை அமைதிப்படுத்தி, அமரவைத்து, "ஏனெனில், உன் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும் சனவரி மாதம் பிறந்தவர்கள். எனவே, அவர்களுடைய பிறந்தநாளன்று, ஏரி பனியால் உறைந்திருந்தது. நீயோ, வெப்பம் நிறைந்த ஜூலை மாதம் பிறந்தவன்" என்று அன்பாக விளக்கமளித்தார்.
இது ஒரு சிரிப்புத் துணுக்கு என்றாலும், சிந்தனையைத் தூண்டும் கதை இது. பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மிக எளிதாக மறைக்கப்படும் உண்மைகளைப்பற்றி சிந்திக்க, இந்தத் துணுக்கு உதவியாக இருக்கும். கொள்ளுத்தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; அப்பா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்... என்று வரிசையாகச் சொல்லி, 21ம் பிறந்தநாளன்று, ஆண் வாரிசுகள் ஏரியில் நடப்பது, அக்குடும்பத்தின் பாரம்பரியம் என்பதில், குடும்பத்தினர் பெருமைப்பட்டனர். ஆனால், அந்த சாகசத்தின் பின்னணியில், சனவரி மாதம், குளிர்காலம், ஏரி நீர் உறைந்திருப்பது போன்ற விவரங்கள், பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மறைந்துவிட்டன. பின்னணிகளை மறைத்துவிட்டு, ஏரியில் நடப்பதை மட்டும், ஒரு பாரம்பரியச் சடங்காக மாற்றிவிட்டது அக்குடும்பம். பாரம்பரியச் சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.
குடும்பங்களில், சமுதாயத்தில், பணியாற்றும் இடங்களில் பல பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்குக் காரணங்களும் உள்ளன. ஆனால், காலப்போக்கில், காரணங்கள் மறக்கப்பட்டு, அல்லது, மறைக்கப்பட்டு, 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்ற கட்டாயமாக மாறும்போது, அவை சடங்குகளாகின்றன. இத்தகையைச் சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுளோடும், கோவிலோடும் இணைக்கப்படும்போது, அவை, இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச் சடங்குகளாக மாறிவிடுகின்றன. பல வேளைகளில், இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் கடவுளைவிட முக்கியமான இடம் பெறும் ஆபத்தும் உள்ளது. இத்தகைய ஓர் ஆபத்தைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை, அழைக்கின்றன. வெறுமையான சடங்குகளை மதம் என்று சொல்லும் விபரீதத்தை ஆய்வு செய்ய, இன்றைய வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.
இன்றைய நற்செய்தியில், ‘கழுவுதல்’ என்ற மரபு பற்றிய விவாதம் எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது. சம்பிரதாயக் கழுவுதல் (Ritual Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை உறுதி செய்கின்றன: மாற்கு நற்செய்தி 7: 3-4
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
மேலோட்டமாகப் பார்த்தால், இச்சடங்கு மக்களின் உடல் நலனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம் பொருள்கொள்ள முடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்கள் சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல், வெளியில் சென்று வீடு திரும்புவோரும் கிருமிகள் பலவற்றைச் சுமந்து வர வாய்ப்புண்டு. எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது, உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்க இயலாது.
ஆனால், பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டிய காரணம், புற இனத்தவருடன் அவர்கள் கொண்ட தொடர்புகள். சந்தையில் வாங்கிய பொருள்கள், வெளி உலகில் அவர்கள் நடமாடிய இடங்கள் ஆகியவை, புற இனத்தவரும் பயன்படுத்திய இடங்கள், அல்லது, பொருள்கள் என்பதால், அவை 'தீட்டுப்பட்டவையாக' மாறுகின்றன. இந்தக் காரணமே, அவர்களை, இந்த கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ளத் தூண்டியது. இத்துணை முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல், இயேசுவின் சீடர்கள் தங்கள் உணவை உண்டது, அதிர்ச்சியையும், சர்ச்சையையும் உருவாக்கியது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இவற்றை, கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று, மோசே, மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியதை, இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். இணைச்சட்டம் 4: 1-2
இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.
சேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய தெளிவான அறிவுரையை மறந்துவிட்டு, அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து, சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்து வைத்தனர். (Hebrew: "613 mitzvot") (ஒரு சில மரபுகளின்படி, 685 சட்டங்கள் இயற்றப்பட்டன என்று சொல்வோரும் உண்டு.)
சட்டங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில் மீண்டும் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்: எசாயா 29 : 13
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச்சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!
மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை, உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும் சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர் வில்லியம் பார்க்லே அவர்கள், ஒரு குட்டிக்கதை வழியே கூறியுள்ளார்.
மதப்பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல் வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர், அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர், மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு, தன் எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.
மதத்தின் உண்மைப் பொருள் மறைந்துவிடும் நேரங்களில், அந்த வெற்றிடத்தை, சடங்குகளும், சட்டங்களும் நிரப்பிவிடுகின்றன. இந்த எண்ணத்தை உணர்த்தும் மற்றொரு கதை இதோ - 'தாத்தா சாகக்கிடக்கிறார்' என்ற அவசரச் செய்தியைக் கேட்டு, இரவு நேரத்தில் பங்குத்தந்தை, அந்த முதியவர் வாழ்ந்த இல்லம் நோக்கிச் சென்றார். அப்போது, திடீரென, ஒருவர், பங்குத்தந்தையை துப்பாக்கி முனையில் மிரட்டி, பணம் கேட்டார். தன் 'பர்ஸை' எடுப்பதற்காக பங்குத்தந்தை முயன்றபோது, அவர் குரு என்பதைக் கண்டுகொண்ட மனிதர், "மன்னிக்கவும் சாமி. நீங்கள் ஒரு குரு என்று தெரியாமல் இப்படி செய்துவிட்டேன். நீங்கள் போகலாம்" என்று கூறினார். இரவு குளிராக இருந்ததால், பங்குத்தந்தை, அம்மனிதரிடம் 'சிகரெட் பாக்கெட்'டை நீட்டினார். உடனே, அம்மனிதர், "வேண்டாம் சாமி. நான் வெள்ளிக்கிழமைகளில் சிகரெட் குடிப்பதில்லை" என்று கூறினார்.
மதத்தின் சடங்குகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதில் நாம் காட்டும் ஆர்வம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து பின்பற்றுவதில் காணாமல் போய்விடுகிறது. இத்தகைய 'குருட்டு' ஆர்வத்தை தவறாகத் தூண்டிவிட்டு, அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க மதத்தலைவர்களும் மதத்தை ஓர் ஆயுதமாக மாற்றி, அதை அழிவிற்குப் பயன்படுத்த, அனைவரையும், குறிப்பாக, இளையோரை, தூண்டி வருகின்றனர் என்பது, நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மை.
உண்மையான மதம், அல்லது சமயம் சார்ந்த வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில், யாக்கோபு தெளிவாகக் கூறியுள்ளார்: யாக்கோபு எழுதிய திருமுகம் 1:27
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.
புனித யாக்கோபு வரையறுத்த இந்த சமயவாழ்வை தன் சொந்த வாழ்வாக மாற்றி, வறியோருடன் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை தெரேசா செய்துவந்த பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர் அவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவற வாழ்வில் இணைந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்து செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று அன்னை தெரேசா அவர்கள், அந்த பத்திரிகையாளரிடம் சொன்னார்.
இறைவனுக்கு நெருக்கமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவின் திருநாளை, செப்டம்பர் 5, வருகிற வியாழனன்று சிறப்பிக்கிறோம். அந்த அன்னையின் பரிந்துரையால், நாம் பின்பற்றும் மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனையும், மக்களையும் நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.
இதய உருவாக்கம்
‘கல்வியின் இதயம் என்பது, இதயத்திற்குக் கல்வி புகட்டுவது’ என்பது ஆங்கிலப் பழமொழி. சமயங்களின் விதிமுறைகளின் நோக்கம் இதய உருவாக்கமே என்று முன்மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
விவிலியத்தில் ‘கட்டளை’ என்ற வார்த்தை முதன்மையானதாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். புதிய ஏற்பாட்டில் இயேசு இரண்டு கட்டளைகளாக இவற்றைச் சுருக்கித் தருவதுடன், புதிய கட்டளை என்று அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தின் சூழல் மோசேயின் இரண்டாம் கட்டளை வழங்குதல். அதாவது, சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் பயணத்தில் அத்தலைமுறை மறைந்து புதிய தலைமுறை பிறக்கின்றது. புதிய தலைமுறைக்கு ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளையும் விதிமுறைகளையும் நியமங்களையும் மீண்டும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் மோசே. மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் இக்கட்டளைகளை அவர்கள் கடைப்பிடித்தல் அவசியம்.
பழைய ஏற்பாட்டில் சட்டங்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றை நாம் உடன்படிக்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும். ‘நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் எம் மக்களாக இருப்பீர்கள்’ (விப 6:7) என்று இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், அவர்களைத் தம் உரிமைச் சொத்து என ஆக்கிக்கொள்கின்றார். ஆண்டவர் தருகின்ற உணவும், பாதுகாப்பும், உறவும் உடன்படிக்கை அவர்களுக்கு வழங்குகின்ற உரிமைகள் ஆகும். உரிமைகளின் மறுபக்கமே கடமைகள். இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்க சில கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக, கட்டளைகளை மீறுவது என்பது உடன்படிக்கை உறவை மீறுவதற்கு ஒப்பானது.
ஆகையால்தான், ‘இஸ்ரயேலரே! கேளுங்கள்!’ என்கிறார் மோசே. ஏனெனில், ‘கேள்’ என்பதற்கு, தமிழில் இருப்பது போலவே, ‘செவிகொடு’ மற்றும் ‘கீழ்ப்படி’ என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, கட்டளைகளைக் கேட்டுக் கீழ்ப்படிதலின் முதல் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்பது. இதையே, ‘மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?’ என்று மோசே கேட்கின்றார். இரண்டாவதாக, கட்டளைகள் வழியாக இஸ்ரயேல் மக்கள் ஞானமும் அறிவாற்றலும் பெற்றனர். அறிவாற்றல் என்பது தேர்ந்து தெளிதல். எடுத்துக்காட்டாக, திருமண உறவில் பிரமாணிக்கமாக இருக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் வரும்போது, ‘விபசாரம் செய்யாதே!’ என்ற கட்டளை, அவர்கள் எளிதாகத் தேர்ந்து தெளிய உதவி செய்தது.
இவ்வாறாக, கட்டளைகள், நெறிமுறைகள், மற்றும் நியமங்கள் இஸ்ரயேல் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி உடன்படிக்கை உறவில் அவர்கள் நிலைத்திருக்கவும், ஒவ்வொரு சூழலிலும் தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு உதவி செய்கின்றன.
இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் யாக்கோபு எருசலேம் திருஅவையின் தலைவராக விளங்கியவர். இவர் இயேசுவின் சகோதரர். இவருடைய பெயரில் இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது எனவும், இத்திருமுகத்தின் ஆசிரியர் ஒரு யூதக் கிறிஸ்தவராக இருந்திருக்கலாம் என்பது பரவலான கருத்து. இணைச்சட்ட நூலிலும் ஞான இலக்கியங்களிலும் நாம் காண்பது போல, பல வாழ்வியல் பாடங்களும் அறிவுரைகளும் இத்திருமுகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைக் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றனர். புதிய ஏற்பாட்டில் புதிய இஸ்ரயேல் மக்கள் பெற்றிருக்கின்ற மீட்பு என்ற கொடை கடவுளிடமிருந்து வருகின்றது என்பதை ஆசிரியர் முதலில் பதிவு செய்கின்றார்: ‘நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.’ உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் பெற்றெடுக்கப்பட்ட மக்கள், இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் அல்லாமல், அதன்படி நடக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
சமய வாழ்வு என்பது இரண்டு நிலைகளில் வெளிப்பட வேண்டும் என ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்: ஒன்று, ‘துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிக்க வேண்டும்.’ அன்றைய கிரேக்க-உரோமை சமூகத்தில் சொத்துரிமையும் சமூக மேனிலையும் ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. தந்தையரை இழந்த பிள்ளைகளும், கணவர்களை இழந்த மனைவியரும் எந்தவொரு உரிமையும் இன்றி இருந்தனர். ஆக, சமூக மற்றும் பொருளாதார ஆதாரத்தை இவர்களுக்கு நம்பிக்கையாளர்கள் வழங்க வேண்டும். அல்லது சமூக நீதியுணர்வு கொண்டிருக்க வேண்டும். இரண்டு, ‘உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வது.’ தங்களைச் சுற்றியுள்ள புறவினத்து மக்களின் சமய மற்றும் அறநெறி வாழ்வியல் முறையை விட நம்பிக்கையாளர்கள் சிறந்த வாழ்வியல் முறையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆக, கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள சமய அடையாளம் அல்லது கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டு, தாங்கள் சமூக நீதியுணர்விலும், மேலான வாழ்வியல் நெறியிலும் வளர்வதே இதய உருவாக்கம்.
இயேசுவுக்கும் அவருடைய சமகாலத்து சமயத் தலைவர்களுக்கும் இடையே எழுந்த உரசல் ஒன்றை நம் கண்முன் கொண்டு வருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் – ‘ஃபரிஸேய்ன்’ என்றால் ‘விலக்கி நிற்பது’ என்பது பொருள் – மறைநூல் அறிஞர்களும் கட்டளைகளை மிகவும் நுணுக்கமாகக் கடைப்பிடித்தனர். கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில் கட்டளைகளின் பின்புலத்தில் நிறைய சடங்குகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு, ‘மூதாதையர் மரபு’ என்று பெயரிட்டனர். அப்படிப்பட்ட மரபில் ஒன்றுதான் கைகளைக் கழுவுதல், கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்றவை. இயேசுவின் சீடர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தங்களைப் போன்ற போதகர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசு அவர்களின் செய்கையைக் கண்டிக்காமல் இருப்பதை அவர்கள் இயேசுவிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு, கடவுளின் கட்டளையின் நோக்கம் என்ன என்பதையும், அதை எப்படிப் பின்பற்றுவது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
கட்டளைகளைப் பின்பற்றுவதை இயேசு தடை செய்யவில்லை. மாறாக, அதற்கு ஒரு புதிய புரிதலைக் கொடுக்கின்றார். வெளிப்புறச் செயல்பாடுகளும் நடைமுறைகளும் சட்டத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளங்கள் என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முன்மொழிந்தபோது, இதய உருவாக்கமே சட்டத்தைப் பின்பற்றுவதன் அடையாளம் என்ற புதிய புரிதலைக் கொடுக்கின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது, இயேசு மேன்மையான அறநெறி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
எசாயாவின் இறைவாக்குப் பகுதியை மேற்கோள் காட்டி அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றார். மனிதக் கட்டளைகளைக் கடவுளின் கோட்பாடுகள் என்று கற்பிக்கும் அவர்களின் ஆன்மிகம் உதட்டளவில் மட்டுமே உள்ளது என்று எச்சரிக்கின்றார். முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் கட்டளைகளை வழங்கியதன் நோக்கம் உடன்படிக்கை உறவை நிலைப்படுத்தவே. கைகளைக் கழுவுவதாலும், பாத்திரங்களைக் கழுவுவதாலும் அந்த உடன்படிக்கை உறவு மேம்படுவதில்லை. மாறாக, தூய்மையான மனச்சான்றும், சமத்துவமான பார்வையுமே உடன்படிக்கை உறவை மேம்படுத்துகின்றன. யூதர்கள்-புறவினத்தார்கள், ஆண்கள்-பெண்கள் என்று மனிதர்களை வெளிப்புறத்தில் தூய்மை-தீட்டு என்று பாகுபடுத்திய பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்திலிருந்த தீட்டு – பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு – பற்றிக் கண்டுகொள்ளவில்லை. அல்லது அகத்தீட்டு அவர்களிடம் அதிகம் இருந்ததால்தான் மக்களை புறத்தில் தீட்டாக்கிப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஆக, அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் இதய உருவாக்கம் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.
இதய உருவாக்கம் என்றால் என்ன?
கடவுளுக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கும் உள்ள உறவின் ஒழுங்கமைவே இதய உருவாக்கம். இயேசு சுட்டிக்காட்டுகின்ற ‘பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு’ ஆகியவை மேற்காணும் உறவின் ஒழுங்கமைவைச் சீர்குலைக்கின்றன.
பல நேரங்களில் இதய உருவாக்கத்தை விடுத்து, மரபு உருவாக்கத்திற்கும், சடங்குகள் உருவாக்கத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஏனெனில், அவை நமக்கு எளிதாகவும், மற்றவர்களால் பாராட்டப்படக் கூடியனவாகவும் இருக்கின்றன.
‘ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்திடத் தகுதியுள்ளவர் யார்?’ என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கும் கேள்வியே (காண். திபா 15) நம் உள்ளத்திலும் எழ வேண்டும். அந்தக் கேள்விக்கு விடையளிக்கின்ற கடவுள், ‘அவரையும் மற்றவர்களையும் நோக்கிய நேரிய இதயத்தின் உருவாக்கமே தகுதி’ என வரையறுக்கின்றார்.
மரபுகள் நம்மைத் தன்மையம் கொண்டதாகவும், தற்பெருமை கொள்பவர்களாகவும், மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களாகவும் மாற்றிவிடுகின்றன.
நாம் வாசிக்கின்ற இறைவார்த்தை, பங்கேற்கின்ற திருப்பலி, மேற்கொள்கின்ற திருப்பயணம், உச்சரிக்கின்ற செபங்கள், உருட்டுகின்ற செபமாலை மணிகள் அனைத்தும் நம் இதய உருவாக்கத்தை நோக்கியதாக இருந்தால் நலம். அவை வெறும் ‘மூதாதையர் மரபு அல்லது வெளிப்புறச் சடங்கு’ என்று சுருங்கிவிட்டால் நம் இதயம் அவரிடமிருந்து தூரமாகி விட்டது என்று பொருள்.
இதய உருவாக்கம் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது:
(அ) கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது: முதல் வாசகத்தில், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது உடன்படிக்கை உறவை ஆழப்படுத்தி, இஸ்ரயேல் மக்களின் அறிவாற்றலைக் கூர்மைப்படுத்துகின்றது. இவ்வாறாக, இதய உருவாக்கம் நிகழ்கிறது.
(ஆ) இறைவார்த்தையைப் பின்பற்றுதலும் அறநெறி வாழ்வும்: இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவர்கள், தங்களுடைய சமய வாழ்வை நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், மேன்மையான அறநெறி வாழ்வை வாழ்வதிலும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே, இதய உருவாக்கம்.
(இ) உள்ளார்ந்த தூய்மையும் உள்ளத்தின் உண்மையும்: கட்டளைகளை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கின்றோம் என்ற எண்ணத்தில், கடவுள் நம்மிடம் பார்க்கின்ற அகத்தின் தூய்மையைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது. புறத்தூய்மையை விடுத்து, அகத்தைத் தூய்மையாக வைக்க முயற்சி செய்யும்போது இதய உருவாக்கம் நடைபெறுகின்றது.
கட்டளைகளை கடைபிடிக்கத் தயாரா?
கட்டளைகளும் விதிமுறைகளும் ஒரு மனிதனை அந்த மனிதன் சார்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே. மாறாக அந்த கட்டளைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் ஒடுக்க அல்ல. அன்றும் சரி இன்றும் சரி சட்டங்களும் விதிமுறைகளும் ஒரு சிலருக்கு திணிக்கப்பட்ட சுமையாகவும் ஒரு சிலருக்கு பாதுகாப்பு உறையாகவும் இருப்பது வழக்கமாகிவிட்டது. கட்டளைகள் அல்லது சட்டங்கள் அனைவருக்கும் சமமாக அல்லது நீதியாக விளங்குவதேயில்லை என்பது வருத்தத்திற்குரியது.
ஆண்டவரின் சட்டமோ அவ்வாறானது அல்ல.
ஒரு காணொளியிலே இவ்வாறு ஒரு காட்சி. ஒரு சிறுவன் ரொட்டித்துண்டு திருடியதற்காக பிடிக்கப்பட்டு நீதிபதியின் முன் கொண்டு செல்லப்பட்டார். அச்சிறுவன் தான் செய்த தவற்றை ஒப்புக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டது. பின் அந்நீதிபதி அச்சிறுவனை அத்தவறு செய்ய தூண்டிய சூழல் பற்றி விசாரித்த போது, "வயது முதிர்ந்த நோயுற்ற தாயை கவனிக்க தன் படிப்பை விட்டுவிட்டு வேலைத்தேடிச் சென்றான் அச்சிறுவன். அந்த ரொட்டிக்கடைக்காரரிடம் வேலை கேட்ட போது அவர் தர மறுத்ததாகவும் அவமானப்படுத்தி தன்னை திருடன் என சொன்னதாகக் கூறினான்.யாசகமாக ஒரு ரொட்டித்துண்டு கேட்டபோதும் கடைக்காரர் தரமறுத்தார். பின்னர் அன்றைய நாள் பசியை தீர்க்க வேறுவழியின்றி ஒரு ரொட்டித்துண்டை எடுத்து ஓட முயன்று பிடிபட்டதாக எடுத்துச்சொன்னான் "அச்சிறுவன். அதைக்கேட்ட நீதிபதி அக்கடைக்காரர் கல்மனதோடு நடந்து கொண்டதை உணர்ந்து அச்சிறுவன் மேலுள்ள அபராதத்தை நீக்கினார்.மேலும் அகச்சிறுவனை தன் வார்த்தைகளாலும் நடத்தையாலும் திருடத்தூண்டிய கடைக்காரருக்கு தகுந்த தண்டனை கொடுத்து, நீதியும் மென்மையான மனமும் உள்ளவர்களுக்கு சட்டம் துணைசெய்யும் என்று கூறினார் அந்நீதிபதி. நடைமுறையில் இத்தகைய நீதியான நீதிபதிகளைக் காண முடியுமா என்றால் கேள்விக்குறிதான்.
ஆண்டவர் சீனாய் மலையில் மோசேக்கு கொடுத்த கட்டளைகள் பத்து மட்டுமே. அவை இறையன்பையும் பிறரன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இன்றைய முதல்வாசகத்தில் ஆண்டவவர் இஸ்ரயேல் மக்களிடம் இச்சட்டங்களோடு எதையும் கூட்டாமல் எதையும் குறைக்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்றார். ஆனால் காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் அதிலும் படித்த மேல்தட்டு யூதர்கள் அந்த பத்துக்கட்டளைகளையும் கூட்டி பெருக்கி நூற்றுக்கணக்கான சட்டங்களாகத் திரித்து அவற்றை அடித்தட்டு மக்கள் மேல் திணித்தார்கள். கடவுள் தந்த சட்டங்களில் இருந்த அன்பு என்ற சாராம்சம் மறைந்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்தது. சாப்பிடும் முறை, கைகழுவுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற அற்ப காரியங்களில் சட்டத்தை கடைபிடித்த அவர்கள் சக மனிதர்களை அன்போடு நடத்தும் முறைமைகளை மறந்தார்கள். இதை இயேசு கண்டிப்பதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.
இதன்மூலம் நாம் பெறும் செய்திகள் என்னென்ன?
1. அன்பும் நீதியும் இல்லா சட்டம் சட்டமே அல்ல.
2. சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பதால் மட்டும் நாம் இறைமக்கள் ஆகிவிடமுடியாது.
3. இறையன்பையும் பிறரன்பையும் மையமாகக்கொண்ட நீதிநெறிகளை கடைபிடித்து வாழ்பவர்களே கடவுளின் கட்டளைகளை உண்மையில் கடைபிடிப்பவர்கள்.
இதை உணர்ந்து செயல்படுவோம்.
இறைவேண்டல்
நீதியின் இறைவா! உமது அன்பு கட்டளைகளை கடைபிடித்து உம்மக்களாய் வாழ அருள் பொழிவீராக. ஆமென்.
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (இ.ச. 4:1-2,6-8)
இணைச்சட்ட நூலில் வரும் பெரும்பான்மையான பகுதிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட லேவியர் ஆகமம், விடுதலைப்பயண நூல், எண்ணாகமம் போன்ற புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. சீனாய் மலையிலிருந்து யோர்தான் பள்ளத்தாக்கு வரையிலான பயணத்தின் வரலாற்று நிகழ்வுகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீண்ட மூன்று சொற்பொழிவுகளை மோசே இதில் அளிக்கின்றார். இறைவனுக்கும் மக்களுக்கும் இணைப்பாளராக விளங்கிய மோசே எந்நிலையிலும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். மேலும் மோசே உடன்படிக்கையின் வரலாற்றை நினைவூட்டி இறைவனின் சட்டங்களை விளக்குகின்றார். இறைவனின் சட்டங்கள் ஞானத்தை உள்ளடக்கியது என்றும் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். இரண்டாம் வாசகப் பின்னணி யாக். 1:17-18,21-22:27)
இந்நூலின் ஆசிரியர் யாக்கோபு. மரபுக் கருத்துப்படி யாக்கோபு ஆண்டவரின் சகோதரர், எருசலேம் திருச்சபையின் தலைவர். பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர்.(கலா. 1:19; 2:9,12; தி.ப. 15:13) இந்நூல் சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தவர்க்கு (யாக். 1:1) எனத் தொடங்குவதின் மூலம் சிரியா மற்றும் பாலஸ் தீனத்தில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவங்களை குறிக்கலாம். இன்றைய வாசகப் பகுதியில் ஞான வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய மூன்று கருத்துகளை யாக்கோபு கூறுகின்றார். அவை
1). இறைவன் நல்லவர். நல்லவை அனைத்தும் அவரிடமிருந்தே வருகின்றன.
2) சினமற்ற வாழ்வு சிறப்பான வாழ்வு.
3) விசுவாச வாழ்வின் அளவுகோல் பிறர்நலம் பேணல்.
மேலும் அனைவராலும் கைவிடப்பட்டவர்களுக்குப் புரியும் தொண்டே சிறப்பானதாகும் எனவும் அனாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்க வேண்டும் எனவும் இறைச் சட்டங்கள் மூலம் எடுத்துக் காட்டுகிறார் (யாக். 1:27).
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 7:1-8,14-15,21-23)
பெரும் பாலான அறிஞர்களின் கருத்துப்படி முதலாவதாக எழுதப்பட்ட மாற்கு நற்செய்தி பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல் கி.பி. 64-70-ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தியாளர் இன்றைய நற்செய்தி மூலம் பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் மற்றும் பூதர் அனைவரும் பின்பற்றி வந்த மூதாதையர் மரபை எடுத்துக்காட்டுகிறார். கை, கால் சுத்தம் செய்தல், பாத்திரங்களை கழுவுதல் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் தூய்மை செய்தல் போன்ற சுத்திகரிப்பு மரபை விளக்குகிறார். அதைத் தொடர்ந்து பழமைக்கும் புதுமைக்கும் உள்ள போராட்டம், அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும் உள்ள தொடர்பு, வெளிவேடத்தன்மை மற்றும் அவற்றால் ஏற்படும் தீமைகள் ஆகியவை பற்றிய விளக்க உரையையும் இன்றைய நற்செய்தியில் காணலாம். மேலும் யூத சமூகத்தில் சடங்குமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடை பிடிப்பது புண்ணியம். கடை பிடிக்காதது பாவம் என்ற நிலை இருந்து வந்தது. எனவே யூதர்கள் சட்டங்களை மட்டும் பின்பற்றி அதில் இருக்கும் உண்மையான நிலைபாட்டினை, சட்டங்கள் கூறும் 'நல்வாழ்வுக்கான நெறிகளை வாழத்தவறினர். இத்தகைய நிலையை இயேசு பகிரங்கமாகச் சாடூவதை நற்செய்தி விளக்குகிறது. “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகுதொலைவில் இருக்கிறது (மாற்கு 7:6; எசா. 29:13).
மறையுரை
“சட்டம் ஒரு இருட்டறை” என்பதை நாம் கேள்விபட்டிருக் கிறோம். ஆம் அந்த இருட்டறையிலே அடிமைப்பட்டு கிடந்தவர்கள் சாதாரண யூத மக்கள். சட்டம் என்பது ஒரு மீன் வலை. அதில் பெரிய மீன்கள் வலையை கிழித்துக்கொண்டு வெளியே செல் கின்றன. சின்ன மீன்கள் மாட்டிக்கொள்கின்றன என்ற வாக்கியங்கள் யூத சமூகத்திற்கு பொருத்தமானவை. ஏனெனில் பெரிய மீன்களான பரிசேயர்கள் சதுசேயர்கள் மற்றும் மறைநூல் வல்லுநர்கள் சட்டங்கள் என்ற பெயராலும் மரபுகள் என்ற பெயராலும் சாதாரண யூத குடிமக்களை பிறர் அன்பு, மனித அன்பு, மனித மாண்பு இல்லாமல் நடத்தி வந்தனர். யூதர்களின் சட்டங்களும் நெறிமுறை களும் பழக்கவழக்கங்களும் கழுதை போன்றுதான் இருந்தது. கழுதையானது ஒருவர் அதன் பின்னே சென்றால் உதைக்கும் அதன் முன்னே சென்றால் கடிக்கும். இதே நிலைமைதான் யத மக்களுக்கும் சட்டங்கள் சம்பிரதாயங்கள் என்ற பெயரால் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயேசு ஆன்மீகப் புரட்சியை மட்டு மல்ல சமுதாயப் புரட்சியையும் ஏற்படுத்தினார். அகவிடுதலையுடன் புறவிடுதலையும் அளித்தார்.
இயேசு கிறிஸ்து தமது காலத்திலிருந்த எல்லாவிதமான அநீதிகளையும் வன்முறையாகக் கண்டனம் செய்தார். சாரமற்ற சக்கை போன்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சாடினார். பரிசேயரின் வெளிவேடத்தை தோலுரித்துக் காட்டினார். செபக் கூடங்களில் முதல் இருக்கைகளையும் பொதுவிடங்களில் வணக்கத்தையும் விரும்பும் பரிசேயரின் வெளிவேடமாகிய புளிப்பு மாலைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும் படி நம் ஆண்டவர் இயேசு கூறினார் லூக்கா 12:2).
சட்டம் மனிதனுக்காக இருக்கின்றதே தவிர மனிதன் சட்டத்திற்காக இல்லை என்பதை கோடிட்டுக் காட்டினார். மனித நலன்களை மனித மாண்பை மேம்படுத்தாத சமயம் மற்றும் சட்டங்கள், பழக்கவழக்கங்கள் போலியானது பொய்யானது என்பதை உணர்த் தினார். சமுதாய விடுதலை, சமய விடுதலை இரண்டும் இறையரசின் பரிமாணமாகும் என்பதை சுட்டிக்காட்டினார். ஆம் சம்பிரதாய சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல் அதற்குள் போய்ச் சிக்கிக் கொள்வது அல்ல சமய வாழ்க்கை.
ஒருமுறை வேதம், உபநிஷத்துகள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த ஞானம் கொண்ட சாமியார் ஒருவர் இருந்தார். அவர் தனது. சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது பூனை ஒன்று. சாமியாருக்கு எதிரே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டி-. ருந்தது. இதனால் அந்த சாமியாரின் கவனம் சிதறவில்லை. ஆனால். சீடர்களின் கவனம் சிதறியது. ஆகவே பூனையை பிடித்துப் பக்கத்து. தூணில் கட்டும் படி சாமியார் சொல்ல பூனையும் தூணில் கட்டப் பட்டது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று அடுத்தடுத்து வந்த நாட்களிலும் பூனை தொந்தரவு கொடுத்ததால் சாமியார் பாடம் எடுக்கும் போதெல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப் பட்டது. சில வருடங்களில் சாமியார் இறந்துவிட்டார். சீடர் ஒருவர் அந்த ஆசிரமத்தின் புதிய சாமியார் ஆனார். அவர் சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போதெல்லாம் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில மாதங்களில் அந்தப் பூனையும் இறந்தது. அடுத்த நாள் பாடம் எடுக்க வந்த சாமியார், “பாடம் எடுக்கும் போத பூனை கட்டப்பட வேண்டும் என்று தெரியாதா? உடனே புதிய பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்” என கட்டளை யிட்டார். இந்த புதிய சாமியாருக்கு பாடத்தை விட பூனைதால் முக்கியமான ஒன்றாகியது. இதே நிலைதான் யூதர்களின் சமுதாயத் திலும் இருந்தது என்று கூறினால் மிகையாகாது.
கை கழுவுதல் என்பது தூய்மைக்காக ஏற்படுத்தபட்ட ஒரு செயலாகும் அதுவே யூத குலத்தின் ஒரு காலகட்டத்தில் மாறி கைகழுவினால்தான் சாப்பிட வேண்டும் என்றானது. இப்படி ஏகப்பட்ட சட்டங்களை சம்பிரதாயங்களை வைத்துக்கொண்டு உண்மையான இறைவனை மனித மாண்பிலும் உதறிதள்ளினார்கள் யூத தலைவர்கள், இதனால் எசாயா, “மனித கட்டளைகளை கோட்பாடு: களாக கற்பிக்கின்றார்கள். இவர்கள் என்னை வழிபடுவது வீண்” என்று எழுதியுள்ளார் (எசா. 29:13).
மேலும் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லவை ஏனெனில் மனிதருக்கும் உள்ளேயிருந்து வருவதே அவர்களை தீட்டுப்படுத்தும் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றை செய்ய தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை யனைத்தும் உள்ளத்திலிருந்து மனிதரை தீட்டுப்படுத்துகின்றன, என இயேசு உள்ளொன்று வைத்து வெளியொன்று செய்வதை இன்றைய நற்செய்தி வழியாக சாடுகிறார். (மாற்கு 7:20-23) எனவே வெளிசுத்திகரிப்பை விட உள்ளார்ந்த சுத்திகரிப்பு அவசியமான தாகும்.
இறைவனின் பார்வையில் சட்டங்கள் மனித மாண்புக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான ஒன்றுதான். ஏனெனில் சட்டங்கள் சம்பிரதாயங்கள் இல்லாத சமுதாயத்தை ஒழுக்கம் என்பது இருக்காது. சுருங்கச் சொன்னால் அது கடிவாளம் இல்லாத குதிரை போன்றது. ஆகையால்தான் இறைவன் இஸ்ராயேல் மக்களின் வளர்ச்சிக்காக சட்டங்கள் தருவதை முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. நான் இன்று நேர்மை மிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். என (இ.ச. 4-7) இறைவன் கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு மனித நேயத்தை வளர்க்கும் சட்டங்களை தருகிறார். அது என்னவென்றால் துன்புறும் அனாதை- களையும் கைம்பெண்களையும் கவனிப்பதிலும் உலகத்தால் கறை- படாதபடி தம்மை காத்துக்கொள்வது ஆகும் (யாக். 1-27).
ஆனால் யூதர்களே சட்டங்களை பிறரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தாமல் பிறரை நசுக்கவும் தற்பெருமைக்காகவுமே பயன்- படுத்தினார்கள். சக்கையை வைத்துக்கொண்டு சாரை தாக்கி எறிவது போல வார்த்தைகளை பிடித்துக்கொண்டு உண்மையான வாழ்வின் பாதையினை தொலைத்தனர்.
இன்று நமது நடைமுறை வாழ்வினை எடுத்துக்கொள்வோம். நாம் நம்முடைய சமுதாயத்தில் உள்ள சட்டதிட்டங்களை எம்- முறையில் அணுகுகிறோம் இயேசுவின் பார்வையில் சட்டங்களை பார்த்து பின்பற்றுகிறோமா? அல்லது யபூததலைவர்களின் பார்வையில் சட்டங்களை பார்த்து பின்பற்றுகிறோமா? இன்றைய நற்செய்தியின் மூலம் ஆண்டவர் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார். வெளிப் படையான செயல்களை மட்டும் செய்து வெளிவேடங்களுக்காக நீதிமானாக, பக்திமானாக காட்டிக்கொள்ள முனையும் நம்மை எச்சரிக்கிறார். மாட்டின் வாலை பிடித்துக்கொண்டு மூக்கு கையிரை விட்டவர்கள் போலத்தான் நாம் பெரும்பான்மையான சமயத்தில் இருக்கின்றோம். ஆலயத்திற்கு வருவது ஜெபிப்பது விவிலியம் வாசிப்பதோடு நாம் பெரும்பான்மையான சமயத்தில் நின்றுவிடுகின் றோம். நமது வீட்டின் அருகே இருக்கும் ஏழை எளியவர்களை மறந்து விடுகின்றோம். நாம் செய்யும் குற்றங்களை மறைக்க பிறர் மீது பழி போடுகிறோம். பொய் சான்று பகர்கின்றோம். எப்போது வாசிக்கும் இறைவார்த்தைக்கு உருவம் கொடுத்து வார்த்தையை வாழ்வாக்க போகிறோம்?
நமது இதயத்தில் கசப்புணர்வு, காழ்ப்புணர்ச்சி, போட்டி, அகங்காரம், ஆணவம் இருக்கும் வரை நம்முடைய சட்டங்கள், பழக்க வழக்கங்கள், நம்மை நேர்மையாளனாக நீதிமானாக மாற்ற முடியாது. இதன் விளைவாக, நாமும் கெட்டு, சட்டங்களையும் கெடுத்து, பிறரையும் கெடுப்போம் என்பது தான் உண்மை. எனவே மனிதனை மாற்றி மனிதத்தை உயர்த்த கடவுள் தந்த சட்டங்களை முழுமையாக புரிந்து, அதன் சக்கையை விட்டு சாற்றினை சுவைப்போம். இயேசு, சட்டங்களை குருட்டுத்தனமாக அல்ல. மாறாக, மனப்பக்குவத்தோடு, சரியாக அவற்றை கடைபிடிக்க நம்மை அழைக்கிறார். அழைத்தலுக்கு செவிமடுத்து அவற்றை வாழ்வாக்கு வோம் பிறருக்க அந்த அருளின் வாழ்வை பகிர்ந்தளிப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* இன்று நம்முடைய. வாழ்வில் நம் பங்கில் வெளி ஆடம்பரங்- களுக்கு முக்கியத்துவம் தருகிறோமா? அல்லது ஒப்புரவு அருட்- சாதனத்திற்கு முக்கியம் தந்து அகவாழ்வுக்கு, அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் தருகிறோமா?
* உள்ளத்தில் இருப்பதை அறிவார். அப்படியிருக்க நாம் மட்டும் உள்ளத்தை மறைத்து, உதட்டில் ஒன்று பேசுவதேன்?
* திருச்சட்டங்களுக்கு நாம் எவ்வித்தில் மரியாதை செய்கிறோம்? யூதர்களைப்போலவா? அல்லது இயேசுவைப் போலவா?
பொதுக்காலம் - இருபத்திரண்டாம் ஞாயிறு
மோசே, சட்டங்களை மக்களுக்கு அறிவிக்கு முன் கூறிய அறிவுரையின் ஒரு பகுதியே இன்றைய வாசகம். ஒவ்வொரு கட்டளையும் இறைவனிடமிருந்து வருகிறது; அவரது ஞானத்தை உள்ளடக்கியுள்ளது. இச்சட்டங்களுக்குப் பணிந்து நடந்தால் நம்வாழ்வு வளம் பெறும்; விண்ணகமும் நமது வீடாகும்.
கூர்ந்து கேள்.
“நீங்கள் பிழைத்திருக்கும் படிக்கும், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் கொடுக்கவிருக்கிற நாட்டிலே நீங்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிற கட்டளைகளையும் நீதிகளையும் கூர்ந்து கேளுங்கள் " (1. இஸ்ரயேல் மக்களைப் போல் நாமும் பயணிகள். நாம் சேர வேண்டிய இறுதி இடம் விண்ணக வீடு. “நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள் (நீமொ. 2 :1; காண் 3: 1; 4 : 10). வேத ஏடுகள் இறைவனது வார்த்தைகளைச் சுமந்து வரும் மணிப்பேழை. அவை உயிருள்ளவை. “விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா" (மத். 24: 35) என்பது நமதாண்டவரின் அருள்வாக்கு. “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றாள் அன்னைமரியாள் (லூக். 1 : 38). அதன் பயனாக உருவிலாத் திருமகன் அவள் கருவில் உருவானார். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவன் பாறை மீது அடித்தளம் அமைத்துக் கட்டடம் கட்டுபவனுக்கு ஒப்பாவான் (காண் லூக். 6 : 47). “என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத்தீர்ப்பு அளிக்கும் (யோ. 12 : 48).
வேத வாக்குகளையோ, அல்லது திருச்சபையின் பாரம்பரியத்தில் உள்ள மறையுண்மைகளையோ கூட்டியோ குறைத்தோ போதிப்பது பற்றி எச்சரிக்கிறது இன்றைய வாசகம். வெளிச் சடங்குகள், திருவழிபாட்டு முறைகள் மாறலாம். ஆனால் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட மறைமண்மைகளை மாற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. எனினும் இயேசுவின் பெயரால் இன்று எத்தனை திருச்சபைகள்! என்ன முரண்பாடான போதனைகள்! காலத்திற்கேற்ப மறையுண்மைகளும் ஒழுக்க நெறிகளும் மாற்றப்படலாம் என்ற குரல் திருச்சபையிலும் ஒலிக்காமல் இல்லை. இவர்கள் இன்றைய வாசகத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும். “நான் உங்களுக்குச் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றையும் கூட்டவும் குறைக்கவும் வேண்டாம் (2). இறைவனது வார்த்தைக்குச் செவி சாய்த்து அவர் விருப்பப்படி நடக்கின்றேனோ?
கேட்டதன்படி நட
நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதோடு நில்லாமல் அவற்றின் படி நடந்து கொள்ளவும் வேண்டும். “ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர் ' என்கிறார் யாக்கோபு (1 : 23). கனியினின்று மரத்தை மதிப்பிடுகிறோம். அப்படியே நமது செயலைக் கொண்டே நம்மைத் தரம் பிரிப்பர். இஸ்ரயேல் மக்கள் இறைவனின் கட்டளைகளைக் கடைப் பிடித்ததால்தான் சிறந்த இனமாக ஏனைய மக்களால் புகழப்படுகின்றனர் (6). யாவே என்ற இறைவனுக்கும் இஸ்ரயேல் இனத்தவர்க்கும் இருந்த உறவு மிகவும் நெருக்கமானது. புனிதமானது. எனவேதான் “நம் கடவுளுக்கும் நமக்கும் இடையே இருக்கிற நெருங்கிய உறவு, வேறு எந்தப் புகழ் பெற்ற இனத்தவர்க்கும் அவர்களுடைய தேவர்களுக்கும் இடையே உண்டோ? இல்லை (7) என்று வியப்படைகிறார் மோசே. இந்த நெருக்கத்தின் விளைவால் அவரது சட்டங்களின்படி மக்கள் நடக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இஸ்ரயேல் இனத்தவரைவிட நமது கடமை பெரிது. தெய்வத்திருமகனை நமது மத்தியிலே -நமது மனித சாதியிலே (1) நாம் கொண்டுள்ளோம். நாம் அவரது இரத்தத்தின் இரத்தம். அவரது சொல்லைக் கேட்டு -அதன்படி நடப்பது நமது கடமை என்பதை உணர்கின்றோமா?
என் வார்த்தைகளில் ஒன்றையும் கூட்டவும் வேண்டாம் குறைக்கவும் வேண்டாம்.
ஞான வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய மூன்று கருத்துக்களைக் கூறுகிறார். யாக்கோபு. இறைவன் நல்லவர்; நல்லவை அனைத்தும் அவரிடமிருந்தே வருகின்றன; சினமற்ற வாழ்வு சிறப்பான வாழ்வு; விசுவாச வாழ்வின் அளவுகோல் பிறர் நலம் பேணல்.
கொடைகளின் ஊற்று இறைவன்.
இறைவன் நன்மையின் நிறைவு. அவரது நன்மைத்தனம் தொடர்ந்து செயல்படுகிறது. விண்மீன்கள் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும்; தண்ணிலாவின் ஒளிக்கு மேகங்கள் தடைவிதிக்கும்; மாலையில் சூரியன் மறைந்துவிடும். மாறாக, இறைவனின் கொடைகள் ஒரே சீராக நமக்குக் கிடைக்கின்றன. அவரது வள்ளல்தன்மை வற்றாதது. ஒருவேளை இறையொளி எனக்கு வேண்டாமென அவர் காட்டும் வழியை ஒருவன் நிராகரித்தாலும், இறைவன் அவனுக்கு நன்மை செய்ய விரும்பி, அவன் மனமாற்றத்திற்காகக் காத்திருக்கிறார்.
இறைவனின் கொடைகளில் சிறந்தது இறைமக்களாகும் பேறு பெறுதலே யாகும். அறுவடை காலத்தின் தொடக்கத்தில் சேகரிக்கப்பட்ட தானியங்கள், பழ வகைகளை முதற்கனி என்கிறோம். இவற்றை இறைவனுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்பது மோசே கட்டளை (காண் விப, 23 : 19 ; 34 : 26). சந்தைக்கு முதல் தானியம் வருவது, தொடர்ந்து நெல் வகை வரும் என்பதன் அடையாளம். இஸ்ரயேல் மக்கள் முதற்கனி ஆவர் என்பதில் இவர்கள் யாவேக்குச் சொந்தமானவர்கள் என்பதும், இவர்களைத் தொடர்ந்து பிற மக்களும், இறைமக்கள் ஆவர் என்பதும் உணர்த்தப்படுகிறது. மரணத்தை வென்று உயிர்த்த இயேசுவும் முதற்கனி என அழைக்கப்படுகிறார் ( 1 கொரி. 15 : 20). நாம் அனைவரும் உயிர்ப்போம் என்பதன் முன் அடையாளம் அவர். திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் இறைவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட முதற்கனிகள்; புதுப்படைப்புகள். ஏனையோரும் எம் வழியாக எம்பிரானைக் கண்டடையக் கருவிகளாக விளங்க வேண்டியவர்கள். என் கிறிஸ்தவ வாழ்வால் இறைவனுக்கு ஏற்புடைய முதற்கனியாக விளங்குகின்றேனா? நாம் நமது சுயமுயற்சியால் முதற்கனி ஆகிவிடவில்லை. “அவரிடம் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சை யினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்” (யோ. 1: 12 - 13: காண் எபே 1-5 - 6) நம் உயர் பிறப்புக்கு ஏற்ப வாழ்வும் செயலும் அமைந்துள்ளதா?
சினத்தின் சிறுமை
பொங்கி எழும் தகாத உணர்ச்சிகளில் சினமும் ஒன்று. “கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்” (நீமொ. 15:1) “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் என்பது நமதாண்டவரின் எச்சரிக்கை (மத். 5 : 22). சினங்கொள்வதால் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் விளைவதில்லை (21) எனவே:
“மறத்தல் வெகுளியை யார் மாட்டும்; தீய
பிறத்தல் அதனால் வரும் " (குறள் 303)
உள்ளத்தில் சினமும், பழிவாங்கும் எண்ணமும் இருப்பின் இறை வார்த்தையைக் கேட்பதால் பயனில்லை என்பதே நாம் படித்துக் கொள்ளவேண்டிய பாடம்.
இறைக் தொண்டன்
ஆண்டவர் முன் அனைத்து சேவையும் புனிதமானதுதான். எனினும் யாவராலும் கைவிடப்பட்டவர்களுக்குப் புரியும் தொண்டே சிறப்பானதாகும். அனாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்க வேண்டும் என்பது சட்டங்களின் வழியாக வலியுறுத்தப்படுகிறது. பசித்தவனுடன் அப்பத்தைப் பகிர்ந்து கொள்; ஆடையில்லாதவனைப் போர்த்து; ஏழைகளுக்கு இடம் கொடு; கைம்பெண்களைக் கைவிட்டு விடாதே என்ற போதனைகள் வேதநூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன (காண் விப. 22 : 23 ; எசா. 56 : 7; 1: 10 - 17 எரே. 5 : 28, இச. 27 : 19; திப. 6 : 1) “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர் இறைவன் '' (திபா. 68 : 5). இறைவனது சாயலாகப் படைக்கப்பட்ட நாம் பிறர் தொண்டில் அவரைப் பிரதிபலிக்கிறோமா?
கடவுள் முன்னிலையில் புனிதமானது, வேதனையுறும் அனாதைகள் கைம்பெண்கள் இவர்களை ஆதர்ப்பது.
நற்செய்தி:- மாற்கு 7:1-8,14-15,21-23
கை கால் சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் பற்றிய உரையாடலில் ஓர் ஆழமான சமய உண்மை அடங்கியுள்ளது. பழைமைக்கும் புதுமைக்கும் போராட்டம், அகத் தூய்மைக்கும் புறத் தூய்மைக்கும் உள்ள தொடர்பு, உள்ளத்தை மறைக்கும் கபட நாடகத்தின் தீமைகள் ஆகியவை பற்றிய விளக்க உரையை இன்றைய நற்செய்தியில் காணலாம்.
சுத்திகரிப்புச் சடங்குகள்
வழிபாட்டிற்காக சாட்சியக் கூடாரத்திற்குள் புகும் போதும், ஆண்டவருக்குத் தூப வகைகளை ஒப்புக்கொடுக்கும்படி பலிபீடத்திற்கு வரும் போதும் கைகால்கள் கழுவவேண்டும் என்று விடுதலைப் பயண நூல் கூறுகிறது ( 30 : 17 - 21; காண்: லேவியராகமம்) திருவழிபாட்டின்போது மட்டுமன்றி மக்கள் உண்ணும் முன்பும் கை கழுவ வேண்டும் என்றும், தீட்டுப்பட்ட கரங்களுடன் இறை புகழ் கூறி உணவருந்தினால் அவ்வுணவும் தீட்டுப்பட்டதாகும் எனவும் பரிசேயர் கூறினர். இதுவும் மோசே சட்டம் போலவே கட்டாயம் அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்தனர். இந்த அடிப்படையில்தான் பாத்திரங்கள் கிண்ணங்கள், செம்புகள் போன்றவற்றையும் பயன்படுத்துமுன் சுத்தப்படுத்தினர். தாங்கள் கடைப்பிடித்த இந்த ஒழுங்கு முறைகளை இயேசுவின் சீடர்கள் பின்பற்றாததால் பரிசேயர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். கை கழுவுதல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல் ஒர் எடுத்துக் காட்டேயாகும். பழமையான வெளி ஆசாரங்களை கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பது முக்திக்குத் தேவைதானா என்பதே அடிப்படைக் கேள்வி. வெளி ஆசாரங்களில் அன்று; ஆத்மார்த்தமான அன்புத் தொண்டில், தூய உள்ளத்துடன் செய்யப்படும் வழிபாட்டில் தான் புனிதத்தன்மை அடங்கியுள்ளது என்பதை இயேசு வலியுறுத்துகிறார். செபக் கூடங்களில் முதல் இருக்கைகளையும் பொதுவிடங்களில் வணக்கத்தையும் விரும்பும் பரிசேயரின் வெளி வேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும்படி கூறியுள்ளார் நமதாண்டவர் (லூக். 12 : 2).
மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின் (குறள் 280)
சுத்தமும் அசுத்தமும்
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் நல்லவை. உணவு மனித உள்ளத்தையும் ஆன்மீகத் தூய்மையையும் பாதிப்பதில்லை. உள்ளமே நன்மைக்கும் தீமைக்கும் ஊற்று. “மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்தறன் (குறள் 34). கொலை, களவு, மோகம், விபசாரம், பேரரசை போன்ற தீய செயல்களும், செருக்கு,கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல் ஆகிய தீய பழக்கங்களும் உள்மனத்தினின்றே எழுகின்றன. ஒருவன் கை கால்களைக் கழுவுவதால், பாத்திரங்களைச் சுத்தம் செய்வதால் ஆழ்மனத்திலுள்ள அசுத்தங்கள் அகன்று விடுவதில்லை. எனவே நமது உள்ளங்கள் கழுவப்படவேண்டும். உள்ள சுத்தியைப் புறக்கணித்து, வெளி ஆசாரங்களில் ஈடுபடுவது வெளிவேடமேயாகும். எனவே தான் தாயுமானவர் :
“கொலைகளவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ
மலை இலக்கா நின் அருள்தான் வாய்க்கும் பராபரமே -
உள்ளம் குழைய, உடல் குழைய, உள் இருந்த
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே. "
இரக்கமே உருவான இயேசு பெருமான் வெளிவேடதாரிகளைக் கடுமையாகத் தாக்குகிறார். கோவிலுக்குத் தவறாது செல்வதாலோ, மற்றவர் முன் நல்லவன் என்று பெயர் எடுப்பதாலோ ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவனாகி விடுவதில்லை. உள்ளத்தில் நல்லெண்ணம், சொல்லில் வாய்மை, செயலில் நேர்மை உள்ளவரே இறைவனின் அருளைப் பெறுவர். வெளி ஆசாரங்களில் அதிகக் கவனம் செலுத்துவதைவிட மனத்துக்கண் மாசிலன் ஆவதில் ஆர்வமுடன் முயல்கிறேனா?
புறத்தேயருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக் கூடியது ஒன்றுமில்லை.