நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்க மக்களுக்குச் சொற்பொழிவு ஆற்றப் புறப்படும் முன், தன் குருவின் (இராமகிருஷ்ணனின்) மனைவி சாரதா மணி தேவியிடம் ஆசி பெற விரும்பி அவர் வீடு சென்றார். உள்ளே சென்றபோது அம்மையார் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆசி பெற வந்த விவேகானந்தரைப் பார்த்து அந்தக் கத்தியை எடுத்துத் தா என்றார்கள். அப்படியே விவேகானந்தர் செய்தார். காய் நறுக்கும் கத்தியைப் பெற்ற சாரதா மணி அம்மையார் உனக்கு என் நல்வாழ்த்துக்கள்! நீ வெற்றி பெறுவாய். போய் வா மகனே! என்றார்கள். கத்திக்கும், வெற்றிக்கும் என்ன தொடர்பு என்று அறிந்துகொள்ள விரும்பிய விவேகானந்தர் இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். மகனே! உன்னை சோதிக்கவே கத்தியை எடுத்துத் தரச் சொன்னேன். பெரும்பாலும் கத்தியை தருபவர் கைப்பிடியைப் பிடித்துக் கூர்மையான கத்திப் பகுதியை நீட்டுவார்கள். நீயோ, கூர்மையான பகுதியை நீ பிடித்துக் கொண்டு, கைப்பிடிப் பகுதியை என்னிடம் கொடுத்தாய். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் துன்பத்தைத் தானே தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்தான் இப்படிச் செய்வார்கள். எனவே நீ வெற்றி பெறுவாய், போய் வா மகனே! என வாழ்த்தி அனுப்பினார் சாரதா மணி அம்மையார்.
துன்பத்திற்கும் வெற்றிக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. துன்பத்திற்கும், உயிர்ப்பிற்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. இதனால்தான் இன்றைய நற்செய்தியிலே துன்பம் வேண்டாம் என்ற பேதுருவைப் பார்த்து இயேசு, "என் கண் முன் நில்லாதேசாத்தானே! நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய். நீ எண்ணுவதெல்லாம் மனிதனுக்கு ஏற்றவை பற்றியே" (மத். 16:23) என்று கடிந்து கொண்டார்.
கரும்பு, ஆலைக்குள் புக அச்சப்பட்டால் அதிலிருந்து எப்படி சர்க்கரை பிறக்கும்? சந்தன மரம், காயப்பட மறுத்தால் அதிலிருந்து எப்படி மணம் பிறக்கும்? தீக்குச்சி, தன்னையே எரித்துக்கொள்ள மறுத்தால் எப்படி அதிலிருந்து ஒளி பிறக்கும்? கடலுக்குள் மூழ்கத் தயாராக இருப்பவர் மட்டுமே முத்தை எடுக்க முடியும். சுரங்கத்தில் நுழையத் தயாராய் இருப்பவர் மட்டுமே தங்கத்தை எடுக்க முடியும். அதேபோல் துன்பத்தைச் சந்திக்கத் தயாராய் இருப்பவர் மட்டுமே வெற்றியைச் சுவைக்க முடியும்.
இதனால் இயேசு அன்று பேதுருவைப் பார்த்து, என் கண் முன் நில்லாதே என்றார். இன்றைய முதல் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தத்தளித்துத் தடுமாறும் இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கிறோம். புனித பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகிறார். கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களை ஒப்படையுங்கள் (உரோ. 12:1) என்கிறார் திருத்தூதர் பவுல்.
இறைவார்த்தை, தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் துன்பமும், துயரமும் தருவது எதற்காக? அவர்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காகவா? நிச்சயம் இல்லை! இன்னும் பயனுள்ள கருவிகளாக, இறைவனின் பணியாட்களாக மாற்றுவதற்காகவே.
ஒருவர் மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் கத்தியோடு சென்றார். அவரைப் பார்த்தவுடன் மூங்கில் மரங்கள் பயந்து நடுங்கின. எங்கே தன்னை வெட்டி விடுவாரோ என்று அஞ்சின. ஒவ்வொரு மூங்கிலையும் பார்த்து வந்த மனிதர், தனக்குத் தேவையான மூங்கில் ஒன்று அங்கு இருப்பதைப் பார்த்தவுடன், அதை வெட்ட ஆரம்பித்தார். அந்த மூங்கில், தன் தலைவிதியை நினைத்து வேதனைப்பட்டது. அழ ஆரம்பித்தது. தொடர்ந்து வெட்டிய மனிதர் வீட்டிற்குக் கொண்டு வந்து நெருப்பில் வாட்ட ஆரம்பித்தார். வேதனையால் அந்த மூங்கில் இன்னும் அதிகமாகத் துடித்தது. அந்த மனிதரோ இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அந்த மூங்கிலில் துளை போட ஆரம்பித்தார். வேதனையால் நொந்துபோனது அந்த மூங்கில். அந்த மனிதரையும் சபிக்க ஆரம்பித்தது. ஆனால் துளையிட்ட மூங்கிலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தவுடன், புல்லாங்குழலாக மாறி தேனினும் இனிய இசையை எட்டுத் திக்கும் பரப்பியது. இப்போது அந்த மூங்கில் அந்த மனிதரை நன்றியோடு பார்த்தது!
மனிதரும் ஒரு மூங்கில்தான். துன்பங்கள் அவரை வாட்டி அவருக்குள் துளை போடவில்லையென்றால் அவர் மூடிய மூங்கிலாக இருப்பார். வாழ்வில் துன்பங்களால்துளையிடப்படாத மனிதர், இசை என்ற மகிழ்ச்சியான வாழ்வை எழுப்ப முடியாது. வாழ்வைப் பிறருக்கும் வழங்க முடியாது. இந்தசெய்தியைத்தான் ஆண்டவர் இயேசு இன்றையநற்செய்தியிலே, என்னைப் பின் செல்ல விரும்புகிற எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என்பொருட்டுத் தன் வாழ்வை இழப்பவர் எவரும் வாழ்வடைவார் (மத் 16:24)என்கிறார். எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே (தி.பா. 119:71) என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர்.
ஆகவே அருமையானவர்களே! சிலுவையை, ஒரு துன்பத்தை, ஒரு நோயை இறைவன் அனுமதிக்கிறார் என்றால் நம்மை மகிமைப்படுத்தவே எனப் புரிந்து கொள்வோம். நாம் ஒரு சிலுவையை முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டால் அது சுகமான சுமையாக மாறிவிடும். செல்வம், பெயர், புகழ், அதிகாரம் இவற்றை மட்டுமே ஆதாயமாக்கிக் கொள்ள ஆயிரக்கணக்கானோர் அலைமோதுகிறார்கள். ஆனால் இறைவன் விரும்புவது அடுத்தவர் நலனை முன் நிறுத்தி ஆண்டவரை ஆதாயமாக்கிக் கொள்ள நாம் அழைக்கப்பட்டவர்கள். இதில் துன்பம், துயரம்,சுமைகள், தோல்விகள், வேதனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற இன்றையத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.
என் கண்முன் நில்லாதே சாத்தானே!
துறவியாக விரும்பிய இளைஞன் ஒருவன் அவனது தாயிடம் ஆசி பெற விரும்பினான் . ஆசி பெறச்சென்ற மகனைப் பார்த்து, அந்தக் கத்தியை எடுத்துக்கொடு என்றாள் தாய் . அப்படியே செய்தான் மகன் . காய் நறுக்கும் கத்தியைப் பெற்றுக் காண்ட தாய் மகனைப் பார்த்து, உனக்கு என் நல்வாழ்த்துக்கள் ; நீ வெற்றி பெறுவாய் என்றாள் . கத்திக்கும் , வெற்றிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்துகொள்ள விரும்பினான் மகன் . தாய் மகனிடம் : மகனே, நீ கத்தியை எப்படி எடுத்துக் கொடுக்கின்றாய் ? என்பதைச் சோதிப்பதற்காகவே நான் கத்தியை எடுத்துக் கொடுக்கும்படி உன்னிடம் சொன்னேன் . பெரும்பாலும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு கூர்மையான பாகத்தை நீட்டுவார்கள் . ஆனால் நீயோ கத்தியின் கூர்மையான பாகத்தைப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பான கைப்பிடி உள்ள பகுதியை என்னிடம் நீட்டினாய் . பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் , தானே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்தான் இப்படிச் செய்வார்கள் . உன் கருணை உள்ளம் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்றாள் .
துன்பத்திற்கும் கருணைக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு!
துன்பத்திற்கும் வெற்றிக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு!
துன்பத்திற்கும் உயிர்ப்புக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு!
இதனால்தான் இன்றைய நற்செய்தியிலே, துன்பம் வேண்டாம் என்ற பேதுருவைப் பார்த்து இயேசு, என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய் ; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய் [மத் 16:23) என்கின்றார் .
ஆலைக்குள் புக கரும்பு அச்சப்பட்டால் அதிலிருந்து எப்படி சர்க்கரை பிறக்கும் ? சந்தனமரம் காயப்பட மறுத்தால் அதிலிருந்து எப்படி மணம் பிறக்கும் ? தீக்குச்சி தன்னையே எரித்துக்கொள்ள மறுத்தால் எப்படி அதிலிருந்து ஒளி பிறக்கும் ?
கடலுக்குள் மூழ்கத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே முத்தை எடுக்க முடியும் ! சுரங்கத்துக்குள் நுழையத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே தங்கத்தை எடுக்க முடியும் ! துன்பத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே வெற்றியைச் சுவைக்க முடியும் !
இதனால்தான் இயேசு அன்று பேதுருவைப் பார்த்து, என் கண்முன் நில்லாதே சாத்தானே! என்றார் .
சாதாரணமாக யாரும் துன்பப்பட விரும்புவதில்லை! இன்றைய முதல் வாசகத்தில் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தத் தடுமாறும் இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கின்றோம் ! துன்பப்பட நாம் முன்வரத் தயங்குவதினால் தான் வெற்றி நம் அருகில் வரத் தயங்குகின்றது!
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் துன்பத்தைத் தாங்கிக் காள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகின்றார் . அவர் கடவுளுக்கு உகந்த, தூய உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள் [உரோ 12:1ஆ] என்கின்றார் . எல்லாவற்றையும் , உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் , நாம் கடவுளுக்குப் பலியாகக் கொடுக்க முன்வரும்போது, அங்கே நமது விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லாமல் போய்விடும் ; அங்கே இறையன்பு அரசாட்சி புரியும் ! எங்கே இறையன்பு இருக்கின்றதோ அங்கே பிறர் அன்பும் இருக்கும் !
அன்பு இருக்கும் இடத்திலே துன்பம் இருக்காது ; மாறாக, கருணையும் , வெற்றியும் கைக்கோர்த்து நிற்கும் .
மேலும் அறிவோம்
தன்பம் உறவரினும் செய்க துணி(வு)ஆற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் : 600).
பொருள் :
துன்பம் பெரிதாகத் தோன்றும் என்றாலும் இறுதியில் | மகிழ்ச்சியை உண்டாக்கும் செயலைச் செயல் உறுதிப்பாட்டூடன் நிறைவேற்ற வேண்டும் .
துன்பம் நம்மைக் கண்டு பயந்து ஓடிவிடும்
இரண்டு பேர் கிணற்றில் குதித்தனர். அவர்களில் ஒருவர் தண்ணீல் மூழ்கிச் செத்தார். ஏனெனில் அவர் தலைக்களம் பிடித்தவர். மற்றவர் தண்ணீர் மேல் மிதந்தார். ஏனெனில் அவர் மரமண்டையர். கிறிஸ்துவின் சீடர்களில் ஒரு சிலர் தலைக்கணம் பிடித்தவர்களாக இருந்தனர். எனவேதான் அவர்கள் தங்களுக்குளே யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர் (மாற்கு 9:34). மேலும் அவர்கள் மரமண்டைகளாகத் திகழ்ந்தனர். ஏனெனில் கிறிஸ்து சிலுவை மரணம் பற்றிக் கூறியதை அவர்களால் புரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் கிறிஸ்து எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களிடம் "அறிவிலிகளே இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா?" என்றார் (லூக் 24:25).
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் பாடுகளைப் பற்றி முதன் முறையாக அறிவித்தார் ஆனால் பேதுருவால் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே கிறிஸ்துவையே அவர் கடிந்து கொள்கிறார். மெசியாவும் சிலுவையும் படி இணைந்து செல்ல முடியும் என்று அவர் கேட்கிறார். கிறிஸ்துவை அவர், "மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார். ஆனால் அவர் நினைத்த மெசியா மகிமையின் மெசியா, இஸ்ரயேல் மக்களை ஆளவிருக்கும் மெசியா, சிலுவையில் அறையப்படவேண்டிய மெசியா அல்ல. சிலுவை எப்பொழுதும் சீடர்களுக்கு இடறலாக இருந்தது.
திருத்துதர் பவுல் கூறுகிறார். "நாங்கள் அறிவிப்பது சிலுவையில் அறையப்பட்ட மெசியா, சிலுவையோ யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் உள்ளது. ஆனால் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து கடவுளின் வல்லமை கடவுளுடைய ஞானம்" (1கொரி 1:23-24)
சிலுவையின்றிக் கிறிஸ்து இல்லை சீடத்துவமும் இல்லை. கிறிஸ்துவின் சீடராக இருக்க விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் (மத் 18:24). சிலுவையைச் சுமக்காத எவரும் கிறிஸ்துவின் சீடராக இருக்கமுடியாது, (லூக்கா 14:27).
திருமணத்தின்போது மணமகன் கழுத்தில் கட்டப்படும் மெல்லிய மஞ்சள் நிறத் தாலிக் கயிற்றை அகற்றிவிட்டு, கெட்டியான தங்கத் தாலிச் சங்கிலி கட்டப்படுவதுபோல, பேதுருவின் முதல் உறுதியுற்ற அழைத்தல் அவரே இரண்டாவது அழைத்தலால் உறுதி அடைகின்றது. மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை "என் பின் வா" (மத் 4:19) என்று கிறிஸ்து அழைத்தார். ஆனால் பேதுரு கிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்து தனது அழைத்தலை இழந்தார். கிறிஸ்து அவரை மன்னித்து இரண்டாம் முறை, "என்னைப் பின்தொடர்" (யோவா 21:19) என்றார் பேதுருவுடைய சீடத்துவம் அவருடைய சிலுவைச் சாவால் நிறைவு அடையும் என்பதையும் கிறிஸ்து அவருக்குச் சுட்டிக்காட்டினார் (யோவா 21:18).
கடவுளால் சிறப்பான அழைப்புப் பெற்றவர்கள் மற்றவர்களைவிட அதிகம் துன்புறுகின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கான இறைவாக்கினர் எரேமியா கடவுளிடம் பின்வருமாறு முறையிடுகிறார்: "ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" (எரே 267) ஆயுள் முழுவதும் அருங்கொடையில் தன்னைக் கரைத்துக் கொண்ட ஒரு பெண்மணி புற்றுநோயால் இறந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம், "சாமி இயேசு என்னைக் கைவிட்டு விட்டார்" என்று சொல்லி அழுதார். அவரிடம் நான் "அம்மா இயேசுவே சிலுவையில் என் இறைவா என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூறினார். ஆனால் இறுதியில், "தந்தையே என ஆவியை உமது கையில் ஒப்படைக்கிறேன்" என்று கூறினார். அவ்வாறே நீங்களும் கடவுளிடம் சரணடையுங்கள்" என்றேன் அவரும் அமைதியாக மரணம் அடைந்தார்.
துன்பத்தைக் கடவுளின் சாபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் " (எபி 12:6). கிறிஸ்து சிலுவையால் மாட்சிமை அடைந்தார் சிலுவையில் அவர் உயர்த்தப்பட்டார் சிலுவையிலிருந்து மாந்தர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார் (யோவா 12:32). ஒவ்வொரு துன்பமும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி மாட்சிமை அடையச் செய்கிறது.
ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து அவரை மருமகனிடம் ஒப்படைத்து "மாப்பிள்ளை என் மகள் கண் கலங்காமல் பார்த்துக்கொள்" என்றார். அதற்கு மருமகன் "கவலைப்படாதே மாமா வெங்காயத்தை நானே உரிக்கிறேன்" என்றாம்! வெங்காயத்தை நறுக்கும்போது கண் கலங்குகிறது. நறுக்கப்பட்ட வெங்காயம் தன்னை நறுக்கியவரைப் பார்த்து, "நறுக்கப்பட்ட நானே கண்ணீர் சிந்தவில்லை அப்படியிருக்க நறுக்கிற நீ ஏன் கண்ணி சிந்த வேண்டும்?" என்று கேட்டதாம் துன்பத்தை கண்டு நாம் பயப்படாமல் இருந்தால், துன்பம் நம்மைக் கண்டு பயந்து ஓடிவிடும் என்கிறார் வள்ளுவர்.
இடும்பைக்கு இடும்பபடுப்பவர் இடும்பைக்கு
இடும்பைபடாஅதவர் (குறள் 623)
தன்னைச் சிலுவையிலிருந்து பிரிக்க நினைத்த பேதுருவைக் கிறிஸ்து "சாத்தானே" என்று அழைத்தார் அன்று கிறிஸ்துவை கோபுரத்திலிருந்து குதிக்கச் சொன்ன சாத்தான், அவரைக் கடைசியாகச் சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னான் ஆனால் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை மாறாகச் சிலுவையில் தொங்கி நம்மை மீட்டார் கிறிஸ்து நம்மைச் சிலுவையிலிருந்து விடுவிக்கமட்டார். ஆனால் சிலுவையின் மூலம் விடுவிப்பார் சிலுவை கடவுளுடைய ஞானம் கடவுளுடைய வல்லவை!
திருத்தூதர் பவுல் சிலுவையைப் பற்றி கொண்டிருந்த மனநிலை நம்மிடம் இருப்பதாக "நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தமட்டில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்" (கலா 6:14)
குறுக்கு வழியா? குறுகிய வழியா?
முதல் உரோமைப் பேரரசன் ஜூலியஸ் சீசர். இங்கிலாந்து நாட்டைக் கைப்பற்றக் குறிவைத்தான். தன் படை வீரர்களையெல்லாம் கப்பல்களில் ஏற்றிக் கொண்டு இங்கிலாந்து நாட்டுக் கடற்கரையை வந்தடைந்தான். பக்கத்திலிருந்த டோவர் மலையில் ஏறும்படி கட்டளையிட்டான். போர்வீரர்கள் மலையின் உச்சிக்கு ஏறியவுடன், அனைவரையும் பின்பக்கம் திரும்பிப் பார்க்கச் சொன்னான் பேரரசன். அங்கே பேரதிர்ச்சி தரும் காட்சி! அவர்களை ஏற்றிவந்த கப்பல்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. அப்போது பேரரசன் முழங்கினான்: “நான்தான் கப்பல்களை எரித்துவிடச் சொன்னேன். ஏனென்றால் தப்பித்து வீடு சென்று விடலாம் என்ற எண்ணத்துடன் உங்களில் யாரும் போரிட நான் விரும்பவில்லை. உயிரை வெறுத்துப் போரிட்டு ஒன்றில் வெற்றியடைய வேண்டும். இன்றேல் சாவைச் சந்திக்க வேண்டும். வாருங்கள். வீறுகொண்டு செல்வோம். வெற்றி நமதே!”. போரிட்டு வெற்றி கண்டார்கள்.
வெற்றி அல்லது வீர மரணம் - இது ஜூலியஸ் சீசர். செய்து முடி. இல்லையேல் செத்து மடி - இது மகாத்மா காந்தி. இயேசுவைப் பொறுத்தவரை - மரணத்தின் வழியாகவே வெற்றி சாவின் வழியாகவே சாதனை சிலுவை வழியாகவே மகிமை.
பாரதி பாடினான் “காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று. இயேசுவின் சிந்தனையே சாதல் வழிதான் காதல். தனக்குச் சாதல், தன்னலத்துக்குச் சாதல்.
சிலுவையில்தான் இயேசுவின் தனித்துவம் - மகத்துவம். இந்தச் சிந்தனை இல்லாததால்தான் சென்ற வாரம் பாராட்டு மாலை பெற்ற பேதுருவுக்கு இந்த வாரம் கண்டனக் கணை. மரணம்பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு பேதுருவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. "ஆண்டவரே இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத். 16:22) எதற்கு இந்த வம்பு?
இயேசுவின் மீது கொண்ட அன்பினால் பேதுரு இவ்வாறு சொன்னாலும் அது இறைத் திட்டத்துக்கு மாறுபட்ட உலகக் கண்ணோட்டம் அல்லவா! இறைவனின் விருப்பத்துக்கும் திட்டத்துக்கும் மாறுபட வரும் எதுவும் சாத்தானிடமிருந்து வருவதாகத் தானே இருக்கும்.
"என் கண்முன்னே நில்லாதே சாத்தானே”. வேறு எங்கோ கேட்டதுபோல் தோன்றவில்லையா? (மத். 4:10). பசியைப் போக்கக் கற்களை அப்பமாக்கச் சொன்ன பாலைவனச் சோதனை. இயேசுவைத் துன்பங்களிலிருந்தும் சாவிலிருந்தும் பிரிக்க நினைப்பவன் சாத்தான். சாவு வேண்டாம் என்று சொல்வதும் சாத்தானிடம் சரணடைவதும் ஒன்றே!
"நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு மறுமொழியாகப் பேதுரு, "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார் (மத். 16:15-16). அது சரியான பதில்தான். ஆனால் நிறைவான பதிலா? ஏசாயா முன்னுரைத்த “மெசியா துன்புறும் ஊழியன்" என்ற உண்மையும் உணர்வும் பேதுருவுக்கு ஏன் வரவில்லை? இயேசுவின் தனித்துவமும் மகத்துவமும் சிலுவையே!
தன்னலமறுப்பும், உயிரைக்கூட இழக்கும் துணிவும் சிலுவையைச் சுமக்கத் தேவை. அதுவே இயேசுவின் சீடனுக்குரிய பண்புக் குரு எவ்வழி சீடன் அவ்வழி!
சேலம் மறைமாவட்டத்தின் ஆயராக மேதகு சிங்கராயர் பொறுப்பேற்றது, திருநிலை பெற்றது 2000ஆவது ஆண்டு அக்டோபர் 18ஆம் நாளில். அதற்குச் சிலநாட்களுக்கு முன்பு ஆயர் பணிபற்றிய அவரது பேட்டி ஒன்றில் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்;
எனக்கு வழிகாட்டுவது சிலுவை. துணை நிற்பது நற்கருணை
ஆற்றல் அளிப்பது தூய ஆவி
எந்த மனிதனும் மேற்கொள்ளும் இலட்சியப் பயணத்துக்கு உரமூட்டும் வார்த்தைகள்! சிலுவை, துன்பம் என்றதுமே, தீர்வைத் தேடுகிறோமே தவிர, அது வழி நடத்தக்கூடியது, வாழ்வு தரக்கூடியது என்ற எண்ணம் எத்தனை பேருக்கு எழுகிறது?
சிலுவை என்பது எது? வறுமை, கவலை, நோய் போன்ற துன்பங்கள் மட்டுமல்ல, அவைகளுக்கு அப்பால் அமையும் தன்னல மறுப்பு. "பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலிய (கலா.5:19) ஊனியல்பின் இச்சை ஒழிப்பும் கூட. தன்னல மறுப்பு என்பது இழப்பு அல்ல. ஒன்றுக்கு நூறாகப் பலன்தருவதற்காகவே மடியும் கோதுமை மணி. சிலுவை என்பது துன்பமல்ல, தியாகம்."
சிலுவை யூதர்களுக்கு இடறல், கிரேக்கர்களுக்கு மடமை, அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானம் அல்லவா! (I கொரி. 1:23- 25).
உலகமே ஒரு கல்வாரி மலை. அங்கே எல்லா மனிதர்களும் சிலுவையில் தொங்கித்தான் தீர வேண்டும். ஆனால் இயேசுவின் இடது பக்கத்திலா வலது பக்கத்திலா? இடது பக்கத்துக் கள்ளனைப் போல "நீர் மீட்பர் என்றால், சிலுவையிலிருந்து இறங்கு, என்னையும் இறக்கு” என்று கேட்கப் போகின்றோமா, இல்லை வலது பக்கத்துக் கள்ளனைப் போல "இயேசுவே, நீர் ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும்" என்று இதயத்தை அவரை நோக்கி எழுப்பப்போகின்றோமா? என்பதைப் பொருத்தது நமது வாழ்க்கையின் பொலிவு!
சிலுவை தேவையா, ஏன் இந்த வம்பு? என்று ஒதுங்காமல் சிலர் இப்படி வம்பில் மாட்டிக் கொண்டதால்தான் நல்லவைகள் பல பிறந்திருக்கின்றன.
- ஆபிரகாம் லிங்கன் மனித அடிமை வியாபாரத்தை ஒழிக்க 'முனைந்து செயல்பட்டார்; பாடுபட்டார்.
- மகாத்மா காந்தி தீண்டாமையை வேரறுக்க, இந்து முசுலீம் ஒற்றுமையை நிலை நிறுத்தப் போராடினார்.
- மார்ட்டின் லூத்தர் கிங் கருப்பின மக்களின் விடுதலைக்காகத் தன்னைக் கையளித்தார்.
- எல் சர்வதோர் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ, பசிக்கும் பட்டினிக்கும் முதலாளி முதலைகளின் அநீதிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிச் செத்து மடிந்த தன் ஏழை எளிய மக்களுக்கு விடுதலை தர முனைப்போடு ஈடுபட்டார்.
அத்தனை பேரும் துப்பாக்கிக் குண்டு உடலைத் துளைக்கப் பலியானார்கள். அவர்கள் சந்தித்தது பேரிழப்புத்தான். ஆனால் இழப்புக்களை நேசித்தார்கள். யுகத்தை வென்றார்கள்.
இழப்புக்களை நேசிப்பதா? அது எப்படி? “அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும் நான் ஆண்டவரில் களி கூர்வேன்... ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை” (அபக்கூக்கு 3:17-19).
விண்ணரசுக்குக் குறுக்கு வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி சிலுவையைத் தவிர்ப்பது குறுகிய வழி சிலுவையைச் சந்திப்பது. சவாலாக ஏற்பது.
துன்பத்தைக் குடித்துச் சமாளி - இது பாமரன் நிலை துன்பத்தைச் சிரித்துச் சமாளி (இடுக்கன் வருங்கால் நகுக) - இது வள்ளுவர் தத்துவம் துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது கிறிஸ்தவ வாழ்க்கை முறை
இறைவாக்கினராக வாழ்வது எளிதல்ல
புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வெளியிட்ட சுற்றுமடல்களில், இரண்டு புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. 1961ம் ஆண்டு அவர் வெளியிட்ட “Mater et Magistra” அதாவது, "அன்னையும் ஆசிரியரும்" என்ற சுற்றுமடலும், 1963ம் ஆண்டு, நல்மனம் கொண்ட உலகமக்கள் அனைவருக்கும் விடுக்கும் ஓர் அழைப்பாக அவர் வெளியிட்ட “Pacem in Terris” அதாவது, "உலகில் அமைதி" என்ற சுற்றுமடலும் புகழ்பெற்றவை.
சமுதாயப் பிரச்சனைகள் பெருகிவந்த 1960களில், இவ்வுலகில், திருஅவை ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவது “Mater et Magistra” என்ற சுற்றுமடல். இம்மடல் வெளியான ஒரு சில வாரங்களில், ஒரு கத்தோலிக்க எழுத்தாளர், பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் தலைப்பு: “Mater sí, Magistra no!” அதாவது, "அன்னை...வேண்டும்; ஆசிரியர்...வேண்டாம்" என்று அமைந்திருந்தது.
அளவுகடந்த அன்பைப் பொழியும் அன்னையாக திருஅவையை உருவகித்துப் பார்க்கையில் மனம் குளிர்கிறது. ஆனால், கண்டிப்புடன் பாடங்கள் புகட்டும் ஆசிரியராக திருஅவையை எண்ணிப் பார்க்கையில் கசக்கிறது. காயப்பட்டக் குழந்தைகளாக, அன்னையின் அணைப்பைத் தேடி, நாம் பலமுறை, கோவிலை, திருஅவையின் பணியாளர்களை அணுகிவந்துள்ளோம். ஆனால், காயப்பட்டதற்குக் காரணம் நாம்தான் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியராக திருஅவை ஒரு சில முறை மாறியபோது, அந்தக் கண்டிப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகம் காட்டும் தவறான போக்கிற்கு எதிராக விவிலியம் காட்டும் உன்னத வழிகளை, கசப்பான உண்மைகளை, திருத்தந்தையர், தங்கள் மடல்கள் வழியே வெளியிடும் வேளைகளில், "அன்னை...வேண்டும்; ஆசிரியர்...வேண்டாம்" என்ற குரல் மீண்டும், மீண்டும் எழுந்துள்ளது.
'அன்னை' என்ற இலக்கணத்தில், 'ஆசிரியர்' என்ற அம்சமும் இணைந்துள்ளது. எந்த ஓர் அன்னையும் தன் குழந்தைக்கு அளவுகடந்த அன்பை மட்டுமே எந்நேரமும் பொழிந்தால், அக்குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு அந்த அன்பே ஒரு தடையாக அமையும். தவறும்போது, தடுமாறும்போது அக்குழந்தைக்குத் தகுந்த வழியைக் காட்டுவதும் அன்னையின் பொறுப்பு. அவ்வேளைகளில், கரிசனை கலந்த கண்டிப்புடன் செயலாற்றும் ஓர் ஆசிரியராக அன்னை மாறவேண்டும்.
சென்ற ஞாயிறு, அன்னையாக விளங்கிய இயேசு, இந்த ஞாயிறு ஆசிரியராக மாறுகிறார். 'நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?' என்று கேட்ட இயேசுவுக்கு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உயர்ந்ததொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டார் பேதுரு. இயேசு அவரிடம், “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்தேயு 16:17-18) என்று பேதுருவை வாழ்த்தினார் இயேசு. இந்த வாழ்த்துரையைக் கேட்டு, பேதுரு ஒரு கனவுப் பல்லக்கில் அமர்ந்து பவனி வந்திருப்பார். ஆனால், இது நடந்து ஒரு சில நிமிடங்களில், “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்” (மத்தேயு 16:23) என்று இயேசு, பேதுருவை, அனல் தெறிக்கும் வார்த்தைகளில் கடிந்துகொண்டார். ஆனந்தத்தில் மிதந்த பேதுரு, அதிர்ச்சியில் உறைந்து நின்றிருப்பார். கனவில் தான் மிதந்துவந்த பல்லக்கிலிருந்து, படுகுழியில் விழுந்ததைப் போல உணர்ந்திருப்பார்.
பல்லக்கில் மிதந்ததற்கும், படுகுழியில் விழுந்ததற்கும் பேதுருவே காரணமாகிறார். இயேசுவை, 'மெசியா' என்று அறிக்கையிடுவதில் பெருமை அடைந்தார் பேதுரு. 'மெசியா' என்ற சொல்லுக்கு, 'அர்ச்சிக்கப்பட்டவர்' அல்லது, 'அருள்பொழிவு செய்யப்பட்டவர்' என்பது பொருள். இஸ்ரயேல் அரசர்கள் அனைவரும், அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பதை பேதுரு நன்கு அறிந்தவர். எனவே, அவர் இயேசுவை 'மெசியா' என்று அறிக்கையிட்டபோது, அவர் விரைவில் ஓர் அரசனாக அருள்பொழிவு பெறுவார் என்று உள்ளூர எண்ணியிருக்கலாம். அதுவும், விரைவில், தாங்கள் எருசலேம் நகரில் நுழைந்ததும், இந்தக் கனவு நனவாகி, இயேசு அரியணை ஏறுவார் என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தை நிறைத்திருக்கலாம். பேதுரு சொன்ன வார்த்தைகளை ஆமோதிப்பதுபோல இயேசுவும் அவரை மனதாரப் புகழ்ந்தார். இயேசுவின் புகழுரை, பேதுரு அவரைப் பற்றிக் கொண்டிருந்த கனவை உறுதிப்படுத்தியிருக்கும்.
அந்நேரத்தில், அங்கு ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது. இயேசு, தான் எப்படிப்பட்ட 'மெசியா' என்பதையும், தனக்கு எருசலேமில் காத்திருக்கும் வரவேற்பைப் பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறார்: இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். (மத்தேயு 16:21) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இந்த வார்த்தைகள், பேதுருவுக்கும் சரி, நமக்கும் சரி, நற்செய்தியாக ஒலிக்கவில்லை.
இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத பேதுரு, நடைமுறை வாழ்வுக்கு ஏற்ற சில அறிவுரைகளை இயேசுவுக்குத் தரவிழைகிறார். இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்ற ஆதங்கத்தில் பேதுரு கூறிய அறிவுரைகளுக்கு இயேசுவின் பதில் ஏன் இவ்வளவு கோபமாக வெளிவந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பேதுருவை, இயேசு 'சாத்தானே' என்றழைப்பது, நம்மில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.
தன் பணிவாழ்வின் துவக்கத்தில், இயேசு, பாலை நிலத்தில் சாத்தானைச் சந்தித்தார். அங்கு சாத்தான் தந்த மூன்று சோதனைகளையும், மேலோட்டமாகப் பார்த்தால், அவை ‘நல்ல’ சோதனைகள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி, சாத்தான், இயேசுவைத் தூண்டவில்லை. குறுக்கு வழிகள், எளிதான வழிகள், உலகோடு சமரசம் செய்துகொள்ளும் வழிகள் இவையே சோதனையாக வந்தன. அதுவும், "நீ இறைமகன் என்றால், இவற்றைச் செய்யும்" என்ற ஒரு தூண்டிலைப் போட்டு, இயேசுவைப் பிடிக்க சாத்தான் முயன்றது.
இன்றைய நற்செய்தியிலும் அந்த பாலை நில சோதனைகளின் எதிரொலிகளை நாம் உணரலாம். தன் பணிவாழ்வின் துவக்கத்தில் சாத்தான் வழியே வந்த சோதனைகளைச் சந்தித்த இயேசுவுக்கு, பணிவாழ்வின் இறுதிக் கட்டத்தில், அவர் எருசலேமை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தன் நெருங்கிய நண்பர் வழியே சோதனை வந்தது.
பேதுரு இயேசுவுக்கு வழங்கிய அறிவுரையும் தவறான அறிவுரை அல்ல. இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன், ஆதங்கத்துடன் பேதுரு கூறிய அறிவுரை அது; நடைமுறைக்கு ஏற்ற அறிவுரை. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், "இயேசுவே, நீர் ஏன் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளவேண்டும்? உலகத்தோடு ஒத்துப்போக வேண்டியதுதானே!" என்ற பாணியில் பேதுரு அறிவுரை வழங்கினார்.
நமக்கு வரும் பெரும்பாலான சோதனைகளும் இப்படிப்பட்டவையே. கொலைசெய்யவோ, கொள்ளை அடிக்கவோ, ஊழலில் ஊறிப் போகவோ நமக்குச் சோதனைகள் வருவதில்லை. உலகத்தோடு ஒத்துப் போவது, எளிய வழிகளை, குறுக்கு வழிகளைத் தேடுவது, அங்கும், இங்கும் சிறிது 'அட்ஜஸ்ட்' செய்து, அநீதிகளோடு சமரசம் செய்துகொள்வது என்பவையே, நமக்குப் பெரும்பாலான நேரங்களில் வரும் சோதனைகள். நமக்கு நெருங்கியவர்களிடமிருந்து இச்சோதனைகள் வரும்போது, இன்னும் சிக்கலாக மாறிவிடுகின்றன. அவர்கள் நம்முடைய நன்மைக்காகத்தானே சொல்கிறார்கள் என்ற போராட்டம் எழுகின்றது.
உண்மையான நீதி, அமைதி, அன்பு ஆகிய உயரிய சிகரங்களை அடைய குறுக்கு வழிகளோ, எளிதான பாதைகளோ கிடையாது. கடினமானப் பாதைகளில், தனித்துச் செல்லும் பயணங்கள் இவை. இத்தகையதொரு பயணத்தை இயேசு மேற்கொண்டார். அவரைப் பின்பற்ற விழைவோருக்கும் இத்தகையப் பயணமே காத்திருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு ஒரு சவாலாக நம்முன் வைக்கிறார்:
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்” என்றார்.
‘சவால்’ என்ற வார்த்தை நமக்குள் வீர உணர்வுகளை உருவாக்கலாம். நெருப்பில் குதிப்பது எளிது. எதோ ஒரு வேகத்தில் குதித்துவிடலாம். ஆனால், தொடர்ந்து நெருப்பில் நடந்து, அல்லது, அந்த நெருப்புடன் போராடி, அதை வெல்வது மிகவும் கடினம். இறைவாக்கினர்கள் பலர், இந்தப் போராட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதை, துணிவுடன் எடுத்துச் சொல்லும் பணியை, இறைவன் அவர்களுக்கு அளித்தார். விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள், இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து, ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும் வரை இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்தி வந்த இறைவனிடம் இறைவாக்கினர் எரேமியா பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் இப்படி நாம் கேட்கிறோம்.
எரேமியா 20: 7-9
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது. ‘ஏன் எனக்கு வம்பு’ என்று பேசாமல் இருந்தாலும் உமது வார்த்தைகள் என் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவைப் போல பல கோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.
இந்திய அரசு பழங்குடி மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள் தவறானவை என்பதைக் கண்டு, தான் 'ஒரு மௌனப் பார்வையாளனாக' வாழப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த ஓர் இறைவாக்கினர். அரசு செய்வது தவறு என்ற கசப்பான உண்மையை எடுத்துரைத்த அந்த உன்னத இறைவாக்கினர், இன்று எரேமியா போன்ற இறைவாக்கினர்களுடன் விண்ணகத்தில் வாழ்கிறார்.
மனதுக்குச் சங்கடமான உண்மைகள் சொல்லப்படும்போது, உண்மையைச் சந்திக்க மறுத்து, நாம் ஓடி ஒளியலாம். அல்லது, அந்த உண்மையைச் சொன்னதால், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைப் போல் உயிர் துறக்கலாம். இதையே இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார். ஒரு கேள்வியின் வடிவில் இயேசு விடுக்கும் இந்தச் சவால், புனித பிரான்சிஸ் சேவியரைப் போல பல்லாயிரம் உன்னத உள்ளங்களை விழித்தெழச் செய்தது. இன்று இயேசு நமக்கு விடுக்கும் இந்தச் சவால், நமக்குள்ளும் மாற்றங்களை உருவாக்குமா? இதோ இயேசு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அந்த உன்னத சவால்: மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத்தேயு 16:26)
“துன்பங்கள் நம்மைச் சிதைப்பதில்லை; செதுக்கும்”
நிகழ்வு
ஓர் ஊரில் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் இருந்தார். இவர் வயலின் இசைப்பதற்கும் மற்றவர்கள் வயலின் இசைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. குறிப்பாக இவர் வயலின் இசைக்கும்பொழுது, அதிலிருந்து வழிந்தோடிய இசை கேட்போரைக் கட்டிப்போடச் செய்தது. இதுகுறித்து அந்த வயலின் இசைக்கலைஞரிடம் அவருக்கு அறிமுகமான ஒருவர், “நீங்கள் வயலின் இசைக்குபோது மட்டும், அதிலிருந்து வழிந்து வரும் இசை மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கின்றதே...! அது எப்படி?” என்றார்.
அதற்கு அந்த வயலின் இசைக்கலைஞர், “நான் வயலினை இசைக்கின்றபொழுது அதிலிருந்து வழிந்துவரும் இசை மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கின்றது என்று நீங்கள் சொல்கிறீர்களே...! இது உடனடியாக வந்துவிடவில்லை. தொடக்கத்தில் நான் உருவாக்கிய வயலினை இசைக்கும்பொழுது, இவ்வுளவு ஆத்மார்த்தமான இசை பிறக்கவில்லை; ஏதோவொன்று குறைவுபடுவது போன்று எனக்குத் தோன்றியது. அப்பொழுதுதான் நான் காட்டில் மிக உயரமாகவும், அதேநேரத்தில் இடி, மின்னல், சூறாவளிக் காற்று ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு மிகவும் உறுதியாகவும் இருக்கின்ற டிம்பர் மரத்திலிருந்து வயலினை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதன்படி நான் இடி, மின்னல், சூறாவளிக் காற்று ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு, காட்டில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் டிப்பர் மரத்திலிருந்து வயலினை உருவாக்கினேன். அதனால்தான் நான் வைத்திருக்கும் இந்த வயலினிலிருந்து வழிந்து வரும் இசை அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கின்றது” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அந்த வயலின் இசைக்கலைஞர் தன்னிடம் கேள்வி கேட்டவரிடம் தொடர்ந்து சொன்னார்: “எப்பொழுதும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு, இலட்சியத்தை நோக்கித் தொடர்ந்து நடப்பவருக்கு நிச்சயம் ஒருநாள் அதற்கான கைம்மாறு கிடைக்கும்.”
ஆம், துன்பங்கள் ஒருபோதும் நம்மைச் சிதைப்பதில்லை; அவை நம்மைச் செதுக்குபவையாக இருக்கின்றன. ஆகையால், அத்தகைய துன்பங்களை நாம் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு, இறுதிவரை பயணித்தால் அதற்கான கைம்மாறு நிச்சயம் ஒருநாள் நமக்குக் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் எடுத்துச் சொல்கின்றன. அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
துன்பமே வேண்டாம் என்று சொல்லும் பேதுரு
இன்றைய நற்செய்தி வாசகம், கடந்த ஞாயிறு நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இதில் இயேசு தன்னுடைய பாடுகளைப் பற்றியும், உயிர்ப்பைப் பற்றியும் தன்னுடைய சீடர்களிடம் முதன்முறையாக அறிவிக்கின்றார். இதைக் கேட்ட பேதுரு, இயேசு சொன்னதில் இருந்த முதற்பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு, அதாவது இயேசு பாடுகள் படவேண்டும் என்பதை மட்டும் பிடித்துக்கொண்டு, அவரைத் தனியாக அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம்” என்கிறார்.
பேதுரு இயேசுவிடம் பேசிய வார்த்தைகளுக்கும், பாலைநிலத்தில் சாத்தான் இயேசுவிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” (மத் 4: 9) என்ற வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பேதுரு இயேசுவிடம் பாடுகளே வேண்டாம் என்கிறார். சாத்தானோ இயேசுவிடம் தன்னை வணங்கினால் பாடுகளே படாமல் உலக அரசுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறது. இதனால்தான் இயேசு பேதுருவிடம், சாத்தானிடம் சொன்ன (ஏறக்குறைய) அதே வார்த்தைகளைச் சொல்லி, “என் கண்முன் நில்லாதே சாத்தானே!” என்கின்றார்.
பல நேரங்களில் நமக்குச் சோதனைகளும் தடைகளைகளும் நம்மீது அன்பு கொண்டிருப்பவர்களிடமிருந்தும், நமக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்துமே வரும். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று நமக்குச் சோதனைகளும் தடைகளும் வருகின்றபொழுது, மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
துன்பமே தூயகத்திற்கு இட்டுச்செல்லும் என்றுரைக்கும் இயேசு
தன்னுடைய இலட்சியப் பயணத்திற்குத் தடையாக இருந்த பேதுருவைக் கடிந்துகொள்ளும் இயேசு, பின்னர் தன்னுடைய சீடர் பக்கம் திரும்பித் தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார். இயேசு சீடர்களிடம் சொல்வதில், தன்னலம் துறத்தல், சிலுவையைத் தூக்கிக்கொள்ளுதல், பின்பற்றுதல் என்ற மூன்று கூறுகள் இருக்கின்றன. இவற்றைக் குறித்து இப்பொழுது பார்ப்போம்.
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னலத்தைத் துறக்கவேண்டும் என்பது, அவரைப் பின்பற்றுகின்ற யாவரும் தன்னுடைய விரும்பு, வெறுப்பு, குடும்பம், சொந்த பந்தங்கள் யாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவருக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துரைகின்றது. இயேசுகூட தன்னுடைய குடும்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கே முதன்மையான இடம் கொடுத்தார் (லூக் 2: 49). அடுத்ததாக, சிலுவையைத் தூக்கிக்கொள்ளவேண்டும் என்று இயேசு சொல்வது, அவமானங்களையும் துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. நிறைவாக, இயேசு கூறுகின்ற “பின்பற்றவேண்டும்” என்ற வார்த்தைகள் இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து, எல்லாவற்றையும் துறந்து, அவமானங்களையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அவரைப் பின்தொடரவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன.
ஆதலால், இயேசுவின் சீடர் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். துன்பங்களை ஏற்றுக்கொள்ளாமல், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர் ஒருபோதும் அவருடைய சீடராக இருக்க முடியாது.
நாம் துன்பத்தை வேண்டாம் என்கிறோமா? ஏற்றுக்கொள்கின்றோமா?
இன்றைய நற்செய்தி வாசகம், பேதுரு சொல்வது போல், துன்பமே வேண்டாம் என்றொரு வாய்ப்பினையும், இயேசு சொல்வதுபோல், துன்பங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றொரு வாய்ப்பினையும் நமக்கு முன்பாக வைக்கின்றது. இவற்றில் நாம் வாழ்வையா? அல்லது சாவையா? எதைத் தேர்ந்துகொள்ளப் போகிறோம் (இச 30: 15) என்பது நம் கையில்தான் உள்ளது.
இந்த இடத்தில் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இப்பகுதியில் புனித பவுல், “இந்த உலகப் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மற்றம் அடைவதாக! அப்பொழுது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள்” என்பார். உலகப் போக்கு என்பது பேதுரு சொல்வது போல், துன்பமே வேண்டாம் என்று சொல்வது. இது நமக்கு நிலைவாழ்வை, விண்ணகத்தில் நிலையான இடத்தைத் தந்துவிடாது; ஆனால், இயேசு சொல்வது போல், நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களை ஏற்றுக்கொண்டால், நாம் இயேசுவின் உண்மையான சீடராக இருப்போம். விண்ணகத்திலும் இடம் பெறுவோம்.
ஆகவே, நாம் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டும் பாடுகளும் துன்பங்களும் நிறைந்த பாதையில் பயணித்து, அவருடைய உண்மையான சீடர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘கரையில் நின்று உற்றுப்பார்த்தன் மூலம் நீ கடலைக் கடக்க முடியாது’ என்பார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளராகிய ரவீந்தரநாத் தாகூர். நாம் கடலைக் கடக்கவேண்டுமெனில், அதில் பயணம் செய்யவேண்டும். அதுபோன்று நாம் நம்முடைய இலக்கான விண்ணகத்தை அடைவதற்குத் துன்பங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே, நாம் நம்மைச் செதுக்குகின்ற துன்பங்களை மனவுறுதியோடு ஏற்றுக்கொண்டு இலக்கினை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
திரும்பிப் பார்த்து!
இன்றைய முதல் வாசகப் பகுதி (காண். எரே 20:7-9), 'எரேமியாவின் கெத்சமனி' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பஸ்கூர் என்ற குருவுக்கும் எரேமியாவுக்கும் எழும் வாக்குவாதத்தில், பஸ்கூர், எரேமியாவைத் தாக்கிச் சிறையில் அடைக்கின்றார் (காண். எரே 20:1-2). எரேமியா எருசலேமுக்கும் அதன் ஆலயத்திற்கு எதிராக இறைவாக்கு உரைத்ததற்காக பஸ்கூர் அவரைத் தண்டிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பிரமாணிக்கமின்மையாலும், உடன்படிக்கை மீறுதலாலும் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதாலேயே எரேமியா அவ்வாறு இறைவாக்குரைக்கின்றார். ஆனால், பஸ்கூர் அதை விரும்பவில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கருதி அன்பு செய்த நகரமும் ஆலயமும் அழிந்துபோகும் என்ற செய்தியை, தெய்வநிந்தனையாகவும், நாட்டிற்கு எதிரான சதியாகவும் கருதினார் பஸ்கூர். தான் பிறந்த ஊருக்கு எதிராக தானே இறைவாக்குரைக்கின்ற நிலைக்கு ஆளான எரேமியா, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ளாததோடு தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதையும் உணர்ந்து, ஆண்டவராகிய கடவுளிடம் முறையிடுகின்றார்: 'ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்! நானும் ஏமாந்து போனேன்!'
எருசலேம் நகரையும், நகரின் மக்களையும், ஆலயத்தையும் எரேமியா மிகவே விரும்பினார். ஆனால், தன் மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராக சிலைவழிபாடு செய்து, உடன்படிக்கையை மீறியதால் வந்த தீங்கைத் தடுக்க அவரால் இயலவில்லை. மாறாக, அந்தத் தீங்கை அவரே அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றார். நகரின் அழிவைச் சொன்னாலாவது மக்கள் மனம் மாறுவார்கள் என நினைக்கிறார் எரேமியா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவருடைய பணி தோல்வியில் முடிவதோடு, அவர் நிந்தைக்கும், அவமானத்திற்கும், சிறைத்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் ஆளாகின்றார். இந்தத் தோல்வியில்தான் ஆண்டவராகிய கடவுள்முன் முறையிடுகின்றார் எரேமியா.
சிறு பிள்ளையாக இருந்தபோதே, எரேமியாவைத் தன் பணிக்கெனத் தெரிவு செய்கிறார் கடவுள். ஆனால், இளவலாக இருக்கின்ற எரேமியாவுக்கு இறைவாக்குப் பணி இப்போது கடினமாக இருக்கிறது: 'நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.' 'அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்' என்று இறைவாக்குப் பணியைத் துறக்க நினைக்கின்றார். ஆனால், அவருடைய கிணறு வறண்டுபோன அந்தப் பொழுதில் தன் உள்ளத்தில் எழும் போராட்டத்தைக் கண்டுகொள்கின்றார்: 'உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கி வைத்துச் சோர்ந்து போனேன். இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.'
ஆக, வலியும் துன்பமும், ஏமாற்றமும், சோர்வும், விரக்தியும் தன்னைச் சூழ்ந்தாலும், சட்டெனத் திரும்பிப் பார்த்து இறைவனின் உடனிருப்பு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்கிறார். தொடர்ந்து இறைவாக்கினர் பணி ஆற்றுகிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 12:1-2), உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலின் இறுதிப் பகுதியான அறிவுரைப் பகுதி தொடங்குகிறது. அறிவுரைப் பகுதியின் தொடக்கமாக, பவுல் இரண்டு வகை வாழ்க்கை நிலைகளை ஒப்பிட்டு, நம்பிக்கையாளர்கள் மேன்மையானதைத் தெரிவு செய்ய அழைப்பு விடுக்கின்றார். உலகப் போக்கிலான ஒழுக்கம் ஒருவகை, உடலைப் பலியாகப் படைத்தல் இன்னொரு வகை. 'உங்களைக் கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்' என்கிறார் பவுல். 'பலியாதல்' என்பது மிக முக்கியமான வார்த்தை. பலியாகின்ற ஒன்று தனக்கென எதையும் வைத்துக்கொள்ள இயலாது. பலியாக்கப்பட்ட ஒன்றை நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆக, செல்வம், பெருமை, புகழ் என உரோமை அலைந்து திரிந்த அந்தக் காலத்தில், அவற்றுக்கு மாறாக, 'பலியிடுதல்' என்னும் செயலை முன்வைக்கிறார் பவுல். மேலும், தூய்மை அல்லது புனிதத்தில் வளர்வது என்பது, தானாகவே நடக்கிற ஒரு செயல் அல்ல, மாறாக, ஒருவர் தானே தெரிவு செய்து மேற்கொள்ள வேண்டிய ஒன்று என்பது பவுலின் கருத்து. இப்படி, ஒருவர் தன்னையே பலியாகத் தருவதன் வழியாகவே, அல்லது துன்பம் ஏற்பதன் வழியாகவே, அல்லது கடவுளிடமிருந்து தப்பி ஓடாமல் இருப்பதன் வழியாகவே, 'உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைந்து, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதை' அறிந்துகொள்ள இயலும்.
நற்செய்தி வாசகம் (காண். மத் 16:21-27) கடந்த வார வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. இயேசுவை மெசியா என அறிக்கையிட்ட பேதுரு, அந்த மெசியா நிலையானது துன்பத்தின் வழியாகவே வரும் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. முதலில், இயேசு தம் பாடுகள்-இறப்பு-உயிர்ப்பை முதன்முறை முன்னுரைக்கிறார். இரண்டாவதாக, பேதுரு இயேசுவையும் இயேசு பேதுருவையும் கடிந்துகொள்கிறார்கள். மூன்றாவதாக, சீடத்துவத்தின் விலை பற்றிய போதனையை இயேசு வழங்குகிறார்.
இந்த நற்செய்திப் பகுதியில் வரும் ஒரு சொல்லாடல் நம் சிந்தனையைத் தூண்டுகிறது: 'இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து!'
நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருவோம். பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக்கொண்டு சென்று, 'ஆண்டவரே, இது வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாது' எனக் கடிந்துகொள்கிறார். பேதுரு இயேசுவுக்கு நேரே நின்று உரையாடுகிறார். அல்லது மரியாதையின் பொருட்டு அவரின் பின்னால் நின்றுகொண்டு உரையாடுகிறார். இப்போது இயேசு திரும்பிப் பார்க்கிறார். அப்படி என்றால், இயேசுவின் பின்னால் பேதுரு நின்றுகொண்டிருக்கிறார். திரும்பிப் பார்க்கிற இயேசு, 'என் கண்முன் நில்லாதே!' என்கிறார். அப்படி என்றால், இயேசுவின் முன்னால் பேதுரு நின்றிருந்தாரா? என்னும் குழப்பம் இங்கே வருகிறது. இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
இயேசுவுக்குப் பின்னால் பேதுரு நின்றதால்தான் இயேசுவின் பார்வையை அவர் பெறவில்லை. ஆனால், அவரைத் திரும்பிப் பார்க்கிற இயேசு அவருடைய பார்வையை மாற்றிப் போடுகிறார். சீடத்துவம் பற்றிய போதனை பேதுருவுக்கு விரைவில் பொருந்தும். ஆக, தமக்கு நேர்வது தம் சீடர்களுக்கும் நேரும் எனச் சொல்லி அவருடைய புரிதலைத் தெளிவுபடுத்துகிறார்.
ஆக, கடவுள்முன் முறையிடுகிற எரேமியா சற்றே திரும்பிப் பார்த்ததால் இறைவனின் உடனிருப்பைக் கண்டுகொள்கிறார்.
உரோமை நகர மக்கள் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டு விட்டுச் சற்றே திரும்பிப் பார்ப்பதால், 'எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது' என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.
பேதுருவைத் திரும்பிப் பார்க்கிற இயேசு, சீடத்துவத்தின் பரிமாணத்தை அவருக்குக் காட்டி, அவருடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறார்.
திரும்பிப் பார்த்தல் நம் வாழ்வில் நிகழ நாம் என்ன செய்ய வேண்டும்?
(அ) பொறுமை காத்தல்
வாழ்வின் எந்த நிலையிலும் நம் உணர்வுகள் நம் சிந்தனையை ஆட்சிசெய்ய நாம் அனுமதித்தல் கூடாது. நிதானமும் பொறுமையும் நமதாக இருந்தால், நம் உணர்வுகளை நம்மால் ஆட்சி செய்ய இயலும். தன் சகஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் கோபம், கையறுநிலை, பதற்றம் ஆகியவற்றால் கடவுளிடம் ஓடுகிறார் எரேமியா. கடவுளின் திருமுன்னிலையில் அவர் அமர்ந்திருக்கும்போது பொறுமையைக் கற்றுக்கொள்கிறார். திரும்பிப் பார்த்தல் அந்த நொடியில் அரங்கேறுகிறது.
(ஆ) புதுப்பிக்கப்பெற்ற உள்ளம்
நம் உடல் செல்கள் அன்றாடம் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்கின்றன. ஆனால், உள்ளம் புதுப்பிக்கப்பெறுவதற்கு நம் முயற்சி அவசியம். பழையதை அகற்றிவிட்டு, புதியதைப் பற்றிக்கொள்ள நம் உள்ளத்தைப் பழக்க வேண்டும். பரந்த மனப்பான்மை, தாராள உள்ளம் ஆகியவை புதுப்பிக்கப்பெற்ற உள்ளத்தின் வெளிப்பாடுகள்.
(இ) ஆண்டவர் நம் பக்கம் திரும்புதல்
ஆண்டவரின் பார்வை நம் பக்கம் திரும்பும்போதும் நம் வாழ்க்கை திரும்புகிறது. பேதுருவை இயேசு கடிந்துகொண்டாலும், அவருடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறார். நம் வாழ்விலும் ஆண்டவர் நம்மைப் பல்வேறு நபர்கள் வழியாகக் கடிந்துகொள்கிறார். கடிந்துரைகள் அனைத்தும் நம்மை நாமே ஆய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்புகள். அடிக்கடி நாமும் நமக்கு வெளியே நின்று நம்மைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். அப்போது வாழ்வின் உண்மைகள் நமக்குப் புரியத் தொடங்கும்.
திருப்பாடல் ஆசிரியரோடு நாமும், 'கடவுளே! நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்! உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகிறேன். நான் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன். உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது' என்று சொல்வோம். அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டவர்கள் தங்கள் வாழ்வைத் திரும்பிப் பார்த்து மீண்டும் அதை உரிமையாக்கிக்கொள்பவர்கள்!
இவை நிகழாது இருக்கட்டும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 16: 21- 27) ஒவ்வொரு வசனமும் நமக்குக் கற்றுத் தரும் நல்ல பண்புகள். கவனத்துடன் தியானிப்போம்.
வாழ்த்துக்களோ, வசையோ, - புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ, - பாராட்டுகளோ, குற்றம் காணுதலோ எதுவாக இருந்தாலும்; தனியாகப் பிறரிடம் நேருக்கு நேர் பகிர்வது நல்லது. காரணம், அதன் பின்விளைவுகள் எப்படி இருப்பினும் தனிப்பட்ட அந்த இரு நபர்களுக்கு மத்தியில் மட்டும் இருக்கும். இதுவே கடவுளுக்கும்-இயேசுவுக்கும் ; மனிதனுக்கும் - பேதுருவுக்கும் உள்ள உறவை இந்தத் தனிப்பட்ட உரிமையுள்ள புரிதல் "பாறை" "மெசியா" எனப் பாராட்டவும் செய்யும், அதே வேளை "பகைவன்" (சாத்தான்) எனக் கடிந்து கொள்ளவும், "யாரிடம் செல்வோம்' என்று மன்றாடவும் உரிமை தரும். பந்தம் மேலும் வலுப்படுத்தப்படும்.
மத்தேயு 16: 22
ஒரு வீட்டின் திறவுகோல் யாரிடம் உள்ளதோ அவர்கள் அந்த வீட்டின் உரிமையாளர்கள். இது உலக வழக்கம், வானக வீட்டின் திறவுகோலை பேதுருவிடம் தந்த இறைவன்; இதோ பேதுரு மனிதர்களின் (தனது) விருப்பத்திற்கு இணங்கச் செயல்படும்போது வான்வீட்டின் உரிமையாளர் என்ற தகுதியை இழந்தவராக இறைவனுக்கே (இயேசுவிற்கே) பகைவனாக (சாத்தானாக) காணப்படுகின்றார். ஆக ஒவ்வொருவரும் நாளும் இறை அன்பில் வளர்ந்திட இறை சித்தத்திற்கு முதலிடம் தருபவர்களாக இறைவ்னின் நண்பர்களாக இணைந்து வாழ அழைக்கப்படுகின்றோம்,
மத்தேயு 16 23
சாதாரண மனிதனின் பார்வையில் சிலுவை என்பது ஒரு மாபெரும் துயரத்தின் அடையாளம். ஆனால், கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்களுக்கு அது வெற்றியின் சின்னம். அருளின் அடையாளம். ஆசீர்களின் உற்று. மேற்குறிப்பிட்ட மூன்றும் ஒவ்வொரு மனிதருக்கும் அதிகமாகத் தேவைப்படும் வாழ்வின் வளங்கள். மண்ணைத் தொட்ட தாவீதின் வழி மரபினரான மரியின் மைந்தன், ஒரு முறையேனும் யூத அதிகாரத்திற்கு ஒரு யூதனாகச் செவிமடுத்து இருப்பாராயின் இன்று சரித்திரத்தில் அவர் அடையாளம் இல்லாமல் இருந்திருப்பார். மாறாக இறை சித்தம் அவர் வாழ்வு என்பதால் தனது கடமையைக் கருத்துடன் கைக் கொண்டு தன்னையே சிலுவை வழி அர்ப்பணம் ஆக்கினார். இயேசுவிற்கு அவர் தோள்களில் சிலுவை, அவரது மனு அவதாரத்தின் கடமையாக நின்றது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய கடமைகள் மிகக் கண்ணியமான சிலுவைகளாக அவனுடைய தோள்களில் நிறுத்தப்பட்டுள்ளது, இதைப் புரிந்து கொண்டவர்களுக்கு - அன்புடன் நிறைவேற்றுபவர்களுக்கு; சிலுவை வாழ்வின் வெற்றியின் சின்னம். வளங்களின் பொக்கிஷம்
மத்தேயு 16 : 24
நானே உண்மை என்கின்ற இயேசுவின் பொருட்டு, அந்த உண்மையை ஒளிரச் செய்திட கடமையைக் கருத்தாய் செய்வதில் மெழுகுவர்த்தியென நம்மையே அழித்தாலும்; பிறர் இருள் அகல செயல்படுவது நமக்கு நிலை வாழ்வைத் தரும். அளப்பரிய ஆக்கத்திற்காக அழிவை ஏற்க்கும் மண்ணில் விழும் விதையாக மாறுவது தவறல்ல.
மத்தேயு 16 : 25
உலகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைக் காணவும் கண்டு அனுபவிக்கவும் நாம் உயிருடன் வாழ்ந்தாக வேண்டும். இறந்து போன ஒருவருக்கு உலகம் ஒன்றும் இல்லை. எனவே நாம் பயனுள்ளதாக, நமக்கு எனத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது - நல்வாழ்வை மட்டுமே. உலக வாழ்வு, விண்ணக வாழ்வு; எதுவாயினும் "நானே உயிர்" என்ற உயிரோடு உறவில் பயணிக்கும்போது நிறைவாழ்வு நிச்சயம் நமதாகும்.
மத்தேயு 16 26
எல்லாம் கடந்து போகும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை - நாம் பயணித்த பாதைகள் தான் நம்மைச் சென்றடையச் செய்யும் எல்லைகளையும் காண முடிவு செய்கின்றன. ஆம், அவரவர் செயல்களுக்கு ஏற்பப் பலன்களும் நம் கண் முன் நிற்கின்றது. பாதையையும் பயணத்தையும் நாம்தான் நிர்ணயிக்க வேண்டும். முடிவுகளை நிர்ணயிக்க மனம் தெளிவுடன் இருக்க வேண்டும்.
மத்தேயு 16 :27
எனவே
கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக நம்மைப் படைப்போம். இந்த உலகத்தின் போக்கின்படி வாழாமல் எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.
கடவுளுடைய அழைப்பு நமக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று அறியுமாறு நமது அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!
இறைவன் நம்மோடு.
ஆண்டவரிடம் மயங்கத் தயாரா?
ஒரு முறை என்னுடைய வகுப்பில் படித்த இந்து மத சகோதரர் ஒருவர் "நாளை எங்கள் ஊரில் திருவிழா. மிகவும் சிறப்பாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். நான் பூ மிதிக்கிறேன் " என்றார். உடனே நான் "பூ மிதித்தல் என்றால் என்ன?" எனக் கேட்டேன். அதற்கு "நெருப்புத் தணல் மீது நடப்பது " என்று பதிலளித்து விட்டு சென்றுவிட்டார். அதனை என் மனம் அசைபோட்டுக்கொண்டே இருந்தது. பூமிதிக்க வேண்டும் என்ற உடனே என் மனம் பூக்களின் மீது ஒய்யாரமாக நடப்பது என கற்பனை செய்துவிட்டது. ஆனால் தீயின் மீது நடப்பதை கற்பனை செய்து பார்க்கக்கூட தயங்கியது.
இப்படித்தான் ஆண்டவரிடம் மயங்குவதும். ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர் நானும் மயங்கிப்போனேன் என்று நாம் எல்லாரும் அழகாகப் பாடுவோம் அதன் பொருள் புரியாமலேயே!
எரேமியா கூறிய இவ்வார்த்தைகள் நமக்கு இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. எரேமியா இவ்வார்த்தைகளைக் கூறியது எப்போது தெரியுமா? மனம் மாறாத இஸ்ரயேல் மக்கள் அவரை நகைத்து, துன்புறுத்தி, தீர்த்துக்கட்ட எண்ணிய சமயங்களில். இறைவாக்குப்பணி என்பது சவாலானது ;உயிருக்கே உலை வைக்கக்கூடியது எனத் தெரிந்தும் ஆண்டவருடைய வார்த்தையை, அவர் கொடுத்த பணியை மறுக்க முடியாமல் ஏற்று பணிசெய்த அவர் "ஆண்டவரே நீர் என்னை மயக்கிவிட்டீர் " எனக் கூறுகிறார்.
இயேசு இன்றைய நற்செய்தியில் தன் சிலுவையை தூக்கிக்கொண்டு வராத எவரும் தன் சீடராய் இருக்க முடியாது எனக் கூறுகிறார். இயேசு வல்ல செய்பவராகவும் அதிகாரத்தோடு போதிப்பவவராகவும் இருந்ததால் அவரைப் பின் தொடர சீடர்களுக்கு பெருமையாகவும் மதிப்பாகவும் இருந்தது.அவர்கள் ஒருவித மயக்த்தில் இருந்தார்கள் எனலாம். எனவேதான் இயேசு தனது பாடுகளை அறிவித்த போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் தங்கள் மதிப்பும் மரியாதையும் போய்விடும் என்ற எண்ணம் மட்டுமல்ல. அவருக்கே இந்த நிலையென்றால் நமக்கு என்ன நிலை வரும் என்ற பயமே. எனவே இயேசு சீடத்துவ வாழ்வு சவாலானது; துன்பங்கள் நிறைந்தது என வெளிப்படுத்துகிறார்.
துறவற வாழ்வோ, திருமண வாழ்வோ, உயர் பதவிகளோ, நாம் செய்யும் பணிகளோ நமக்கு மதிப்பையும் பெருமையும் தரும் என்ற மயக்கத்தோடு மட்டும் நாம் அவற்றை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் தத்தளிப்பது உறுதி. ஆனால் அவற்றில் வரும் இடர்பாடுகளையும் சவால்களையும் நாம் இறை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவ்வாழ்வு பலன் தரும்.
ஆம் ஆண்டவரிடம் மயங்குவது என்பது சிலுவைகளை விரும்பிச் சுமப்பதே அன்றி ...வேறெதுவும் இல்லை. ஆனால் இந்த மயக்கம் நம்மை நல்வழிக்கு நடத்திச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அதற்கு நாம் செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் இவ்வுலக காரியங்களின் படி ஒழுகாமல் ஆவியின் அறிவுறுத்துதலின் படி வாழ்வது.உலகத்திடம் மயங்கினால் மகிழ்வது போலத் தோன்றும். ஆனால் அம்மயக்கம் அழிவுக்கு இட்டுச்செல்லும். ஆண்டவரிடம் மயங்குவோம். துன்பங்கள் வரும். துயரங்கள் நம்மைச் சூழும். ஆனால் அவற்றை நம்மால் வெல்ல இயலும். நிலைவாழ்வும் கிடைக்கும்.
ஆண்டவரிடம் மயங்கத் தயாரா?
இறைவேண்டல்
அன்பு ஆண்டவரே! இவ்வுலகப்போக்கின் படி ஒழுகாமல், உலக மாயைகளுக்கு மயங்காமல் உம்மிடம் சரணடைந்து வாழ வரமருளும். ஆமென்
