மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 21ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோசுவா 24:1-2, 15-18|எபேசியர். 5:21-32|யோவான். 6:60-69

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.

கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவார்த்தை வழியில்

ஒரு பங்குப் பணியாளர் ஞாயிறு மறையுரையின் போது, ஒரு மருந்து பாட்டிலெ மக்களுக்குக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். அதற்கு பங்கு மக்கள், மருந்துப் பாட்டில் என்றார்கள். இதன் மீது என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதா? என்றார். மக்களோ, தெரியவில்லை, நீங்களே படித்துச் சொல்லுங்கள் என்றனர். பங்கு பணியாளர் படித்தார். காலையில் ஒரு ஸ்பூன், மதியம் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடும்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு மக்களைப் பார்த்து, இந்த மருந்துப் பாட்டிலை உங்கள் கையில் கொடுத்து, இதில் எழுதியுள்ளபடி குடியுங்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அதற்கு மக்கள், அதில் எழுதியுள்ளபடி செய்வோம் என்றார்கள்.

அப்போது பங்குப்பணியாளர் மக்களைப் பார்த்து, ஒரு டாக்டர் சொல்வதை நம்புகின்றீர்கள் ? கடவுள் சொல்வதை, இறைவார்த்தையை நம்ப ஏன் தயங்குகின்றீர்கள்? என்றார். அன்றிலிருந்து அந்தப் பங்கில் பெரும் ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் துவங்கின.

நமக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் இறைவார்த்தைக்கு உண்டு (நற்செய்தி). கடவுளின் வார்த்தை நேர்மையானது (திபா 33:4).
கடவுளின் வார்த்தைக்குக் குணமளிக்கும் ஆற்றல் உள்ளது (திபா 107:20).
கடவுளின் வார்த்தை நமது காலடிக்கு விளக்கு (திபா 119:105).
கடவுளின் வார்த்தை வல்லமை மிக்கது (எசா 55:10-11).
கடவுளின் வார்த்தை என்றும் அழியாதது (மத் 24:35).
கடவுளின் வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகின்றது (இரண்டாம் வாசகம்).

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதை மனத்தில் கொண்டு, நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற அன்னை மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைவார்த்தையை நம்பி அதை நம் வாழ்வின் மையமாக்கி வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள் : 643)

பொருள் : சொல்லாற்றல் என்று சான்றோரால் பாராட்டப்படுவது கேட்ட வரைக் கவரத்தக்கதாகவும் கேளாதவரைக் கேட்க விரும்பச் செய்வதாகவும் விளங்குவதாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டுவரும்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச் செய்கின்றனர். அவ்வாறே கிறிஸ்து நற்கருணை மசோதாவை, நம்பிக்கைக் கோட்பாட்டை யூதர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" (யோவா 6:60) என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அவ்வாறு இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை (யோவா 6:66).

தம் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட இயேசு சிறிதும் கலங்கவில்லை . மாறாக, தம்முடன் இருந்த பன்னிருவரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறார்களா?* (யோவா 6:67) என்றுதான் கேட்டார்.

உண்மை ஒருபோதும் பின்வாங்காது; சுடச்சுட ஒளிரும் பொன்னைப் போன்று எதிர்க்க எதிர்க்க மிளிரும் தன்மை உடையதுதான் உண்மை, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே: இச்செகத் துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று எத்தகையச் சவாலையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதுதான் உண்மை.

வழியும் வாழ்வும், உண்மையும் உயிருமான கிறிஸ்து நற்கருணை மசோதாவை பெரும்பான்மையோரின் வாக்கெடுப்பிற்கு விடவில்லை. மாறாக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நிறைவேற்றினார், கடந்த 2000 ஆண்டளவாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைப்பற்றித் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது மறையாது. குன்றாது குறையாது, திருச்சபை வாழ்வு முழுவதற்கும் ஊற்றாகவும் சிகரமாகவும் உள்ளது.

நற்கருணை மறை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு கை கொடுக்காது, அதற்குத் தேவையானது வானகத் தந்தையின் அருள், எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் தந்தை அருன் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"(யோவா 6:65) என்று கூறி, தமது நீண்ட உரைக்கு முத்திரை வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து 'ஆமென் என்ற பெயர் கொண்டவர்; நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியானவர் {திவெ 3:14}; ஒரே நேரத்தில் அவர் 'ஆம்' என்றும் 'இல்லை ' என்றும் பேசாமல், 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்.

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல, நயவஞ்சகர்கன்.

ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், 'நீ மாலையானால் நான் அதில் மலேராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலாவேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருனை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஓடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம் தேர்ந்து கொண்டவர்கள்

திரைப்படம் ஒன்றில் இப்படி ஒரு காட்சி. பெற்றோரை இழந்த இரு சகோதரர்கள். மூத்தவன் தன் தம்பியை பாசத்தோடும் கண்டிப்போடும் வளர்த்து ஆளாக்கி விடுகிறான். ஒரு தாயின் நிலையிலிருந்து அண்ணியும் அன்பைப் பொழிகிறாள். குடும்பத்தில் செல்வமும் வசதியும் பெருகுகிறது. தீயமனம் படைத்த நண்பர்கள் இளையவனின் மனதைக் கெடுக்கிறார்கள்: "உன் அண்ணன் சொத்தையெல்லாம் தன் விருப்பம் போல் செலவிடுகிறார். நாளை உன்னை ஏமாற்றிவிடுவார். இப்போதே உனக்கு உரியதைப் பிரித்து வாங்கிவிடு”. அந்த ஆலோசனையின்படி தம்பியும் தன் அண்ணனைப் பார்த்து பாகப்பிரிவினை கோருகிறான். தன்மீது நம்பிக்கை இழந்துவிட்ட தம்பியை எண்ணி அண்ணன் அதிர்ச்சி அடைகிறான். அனலில் இட்ட புழுப்போலத் துடிக்கிறான். இருப்பினும் தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்கிறான்.

குறிப்பிட்ட நாளில் ஊர்ப் பெரியவர்கள், உற்றார் உறவினர் அனைவரையும் கூட்டிப் பாகம் பிரிக்கின்றான். தன்னிடம் இருந்த பொன், பொருள், நிலம் வீடு அனைத்தையும் மொத்தமாக ஒரு பக்கம் வைக்கின்றான். எதிர்ப்புறத்தில் அண்ணன் போய் நின்று கொண்டு “நம் செல்வங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்” என்றான். உண்மையைப் புரிந்து கொள்ளாத ஒருவர் குழம்புகிறார். சொத்து எல்லாம் ஒரே கும்பலாக ஒரு பக்கத்தில் அல்லவா இருக்கின்றன. எங்கே இரண்டு பாகங்கள் என்று தவிக்கிறார். ஆனால் உண்மையிலேயே சொத்து அனைத்தும் ஒரு பக்கம் இருக்க அண்ணன் மறுபக்கம் இருந்தார். “நான் வேண்டுமா இந்தச் செல்வங்கள் வேண்டுமா?” நல்ல முடிவெடுக்க. தன் தம்பியை அழைக்கிறார். அறிவு தெளிந்து தம்பி தன் அண்ணனிடம் ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்துப் பற்றிக் கொள்கிறான்.

பழைய ஏற்பாட்டில் யோசுவா இப்படி இஸ்ரயேல் மக்களை முடிவெடுக்க அழைக்கிறார். மீட்பின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவெடுக்கும்போது இறைவன் நம்பிக்கை அறிக்கையை எதிர்பார்க்கிறார். ஆபிரகாம், யாக்கோபு எனத் தொடங்கி அம்முறை இஸ்ரயேல் மக்களுடன் சீனாய் மலையில் உடன்படிக்கையாக நிறைவுறுகிறது.

மோசேயை அடுத்து இஸ்ரயேல் மக்களை வழி நடத்தும் பொறுப்பேற்ற யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையுமுன் திரும்பவும் இந்த நம்பிக்கை அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. “உங்களை விடுதலை செய்து வழி நடத்திய அன்புக் கடவுளா? அந்நிய பொய்த் தெய்வங்களா? முடிவெடுங்கள்” என்று யோசுவா மக்களைச் சிந்திக்க வைக்கிறார். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசு. 24:15) என்று உறுதிபடக் கூற, மக்களும் "நாங்களும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என்கின்றனர்.

அதே தொனியில் பேதுரு வெளியிட்ட நம்பிக்கை அறிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" (யோ. 6:68,69). எந்தப் பின்னணியில்? "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோ. 6:51) என்ற இயேசுவின் உரையைக் கேட்ட சீடர்கள் மத்தியில் பிளவு ஏற்படுகிறது. “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்ற சோக வரியை யோ. 6:66இல் பார்க்கிறோம். மீண்டும் இயேசு “எதிர்க்க ப்படும் அடையாளமாகிறார்” (லூக். 2:34).

“நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர்” (1 பேதுரு 2:9) என்று அழுந்தக் கூறும் பேதுரு இங்கே “இயேசுவின் சீடர்கள் நாம் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் மட்டுமல்ல, மாறாகத் தேர்ந்துகொண்ட மக்கள்” (We are not just the chosen people but the choosing people) என்று வலியுறுத்துவதை உணர்கிறோம்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏனோ தானோவென்று மதில் மேல் பூனையாக, ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்று இரு மனம் கொண்டவர்களாக இருக்க முடியாது. “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்” (லூக். 11:23) என்று இயேசு தெளிவுறுத்தவில்லையா? குடிகாரன் ஒருவன் தினமும் கோவிலிலே மிக்கேல் சம்மனசிடம் வேண்டிக் கொள்வானாம். ஆனால் முடிக்குமுன் வானதூதரின் காலடியில் கிடக்கும் பேயிடமும் சிறு செபம் சொல்லி தொட்டு முத்தி செய்வானாம். இது பற்றிக் கேட்டபோது, “என் வாழ்க்கை எங்கே போய் முடியுமோ யார் கண்டது? சொர்க்கத்துக்குப் போனால் மிக்கேல் அதிதூதர் பார்த்துக் கொள்வார். நரகத்துக்குப் போனால் ... பேயிடமும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்வது நல்லதுதானே!'' என்றானாம். இது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தால் நம் இறைநம்பிக்கைக்கு நல்லதல்லவா!

இயேசுவைப் பின்பற்றுவது என்பது வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் உறுதியான நிலைப்பாடு எடுப்பது. அதாவது தெளிவான தெரிவு செய்வதாகும். அன்றாட வாழ்க்கையில் உடுத்துகிற உடை, படிக்கிற புத்தகம், செய்ய விரும்பும் தொழில், தொழிலிலே கூட்டாளி, வாழ்க்கைத் துணை என்று நாம் தேர்ந்து கொள்பவைகள் பல. அதே வேளையில் நாம் தேர்ந்து கொள்ள இயலாத முக்கியமானவைகள் உள. எடுத்துக்காட்டாக நமது பெயர், நமது பெற்றோர், நாம் சார்ந்துள்ள இனம், ஏன் பிறப்புக்கூட. நாம் விரும்பியா, ஒப்புதல் தந்தா மனிதனாக, இந்தியனாக கிறிஸ்தவனாகப் பிறந்தோம்?

நாம் கிறிஸ்தவர்களாகப் பிறந்திருக்கிறோம். கிறிஸ்தவர்களாக ஆகி இருக்கிறோமா? பெற்றதனாலா அப்பா அம்மா? "என்னைப் பெற்றெடுக்க யார் சொன்னது. எனக்காகவா சுமந்தீர்கள்? உங்கள் இன்பத்துக்காகத்தானே என்னைச் சுமந்தீர்கள்!" என்று இன்றைய இளைஞன் கேட்கிறான். அப்பா அம்மாவாக செயல்பட வேண்டாமா? பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அவர்களை நேசிக்கிறோம். இந்தியனாகப் பிறக்க வேண்டும் என்று கேட்டதில்லை. ஆனால் தாய்த்திருநாடு என்று பெருமைப்படுகிறோம். பிறப்பால் கிறிஸ்தவர்களானவர்களை விட மனமாற்றத்தால் கிறிஸ்தவர்களானவர்கள் உறுதிப்பாட்டோடு இருக்கிறார்கள் என்றால் காரணம் : தெரிவு'.

இயேசுவை ஒரு முறையல்ல மீண்டும் மீண்டும் குறிப்பாக நம் நம்பிக்கை கிண்டலுக்கு ஆளாகிறபோது, எதிர்ப்புக்கும் அரசு சலுகை இழப்புக்கும் ஆளாகுகிறபோது, இப்படிக் கடினமான குழப்பமான சூழல்களில் இயேசுவை தெரிந்து தேர்ந்தெடுக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும்.

“யாரிடம் போவோம் இறைவா” - பேதுருவின் உருக்கம் இயேசுவின் உள்ளத்தைத் தொட்டிருக்கும். இந்த நிலையில் இயேசுவுக்கு இன்னொரு சங்கடம் போக விரும்பியவர்கள் எல்லாம் போய் விட்டார்கள். போக வேண்டிய அந்த யூதாஸ் போகாமலேயே 'அப்போஸ்தல' வேடத்தில் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறானே, எவ்வளவு பெரிய வேதனை!

ஆயிரம் எதிரிகளைவிட ஒரு துரோகி ஆபத்தானவன் அல்லவா! அடையாளம் கண்டு கொண்ட பிறகும் கூட இயேசுவால் அவனை பிறர் முன்னே காட்டிக் கொடுக்க முடியவில்லை. அவரது உயர்ந்த பண்பு அப்படி! அதே நேரத்தில் அவனது துரோகம் பற்றி மறைமுகமாகவாவது முன்னறிவிப்புச் செய்யாமல் இருக்கவும் அவரது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன். ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” (யோ. 6:70).

இறைமகன் இயேசுவாக அல்ல, மானிட மகன் இயேசுவாக அவரது மனம் படும்பாடு நம் உள்ளங்களிலும் உளியைப் பாய்ச்சத்தான் செய்கிறது. இயேசு என்னைத் தேர்ந்து கொண்டார். நானும் அவரைத் தேர்ந்து கொண்டேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நம் நம்பிக்கை ஊன்றப்படட்டும்.

இயேசுவின் சீடன் கிறிஸ்தவனைப் பொருத்தவரை, பிறந்ததற்காக வாழ்கிறோம் என்ற அவல உணர்வு நெஞ்சில் தஞ்சம் புகக்கூடாது. வாழ்வதற்காகப் பிறந்தோம், வாழ்விப்பதற்காகப் பிறந்தோம் என்ற பெருமித உணர்வு ஊற்றெடுக்கட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள்-மக்கள்-மையப்படுத்திய முடிவுகள்!

கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு வழிபாடுகளில் யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப் பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இன்று ஐந்தாவது வாரமாக, இப்பிரிவின் இறுதிப் பகுதி நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

6ம் பிரிவு, அற்புதமான ஒரு விருந்துடன் துவங்கி, இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச் சூழலுடன் முடிகிறது. 6ம் பிரிவின் துவக்கத்தில், சிறுவன் ஒருவன் வழங்கிய ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும், 5000த்திற்கும் அதிகமான மக்களை, ஒரு பகிர்வுப் புதுமைக்கு அழைத்துச் சென்றது. அப்புதுமையால் நிறைவுபெற்ற மக்கள், அத்தகைய உணவும், பகிர்வும் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவைத் தேடிச் சென்றபோது, அவர், கொஞ்சம், கொஞ்சமாக அவர்களது எண்ணங்களை வேறு திசைகளில் திருப்பினார். பெரியதொரு சவாலை அம்மக்கள்முன் வைத்தார்.

ஏனைய உயிரினங்களைப் போலவே, மனிதருக்கும் உருவாகும் வயிற்றுப்பசியை உணவைக்கொண்டு போக்கிவிடலாம்; ஆனால், மனிதர்களுக்கு மட்டுமே உருவாகும் வேறு பல பசிகளைப் போக்க, ஒருவர் தன்னையே முழுமையாக வழங்கவேண்டும் என்பதே, இயேசு அவர்கள் முன் வைத்த சவால்.

உலகினரின் பசியைப் போக்க, "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவான் 6:51) என்று இயேசு கூறியதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியுற்றனர். இயேசு இன்னும் ஒருபடி மேலே சென்று, 'என் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே நிலைவாழ்வு பெறமுடியும்' (யோவான் 6:54) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். சவால்கள் நிறைந்த இச்சொற்கள், சூழ இருந்தோரை, அதிர்ச்சியில், இன்னும் சொல்லப் போனால், அருவறுப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். எனவே, அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர். (யோவான் 6:60)

அற்புத விருந்துடன் ஆரம்பமான ஒரு நிகழ்வு, அதிர்ச்சி தரும் சவாலாக தங்களை அடைந்தபோது, மக்களும், சீடர்களும் முடிவெடுக்க இயலாமல் தடுமாறினர். இயேசுவைப் பின்தொடர்ந்தால், எளிதாக உணவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள், இயேசு விடுத்த சவால்களைச் சமாளிப்பது கடினம் என்று உணர்ந்து, அவரை விட்டு விலகினர். இதையொத்த ஒரு சூழலை, இன்றைய முதல் வாசகத்திலும் காண்கிறோம். யோசுவா, தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்து, மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அவர்கள் முன் ஒரு சவாலை வைக்கிறார். ஆண்டவரைப் பின்தொடர்வதா, வேற்று தெய்வங்களைப் பின்தொடர்வதா என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து, "இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்." (யோசுவா 24:15) என்று தன் முடிவைப் பறைசாற்றுகிறார்.

மனித வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம் முடிவெடுப்பது. இந்த அடிப்படை அனுபவத்தை ஆழமாகச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்லும் சீமோன் பேதுருவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

யோசுவாவும், சீமான் பேதுருவும் கூறிய சொற்களில் உள்ள ஒரு பொதுவான அம்சம் நம் கவனத்தை ஈர்க்கிறது. இருவருமே தங்கள் முடிவை ஒருமையில் எடுப்பதாகக் கூறவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24: 15) என்று உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை அவரது குடும்பத்தினர் என்று மட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.

தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே, மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும் நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும் இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. சிறு, சிறு முடிவுகள் அந்நேரங்களில் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

யோவான் நற்செய்தி 6: 68-69

“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்”

"வேறு யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்தப் புதுவாழ்வு... உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத் தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டியச் சூழலில், குடும்பத்தினர் இணைந்து வந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்களைப் போல, இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து, மக்கள் சார்பாக நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

இன்றைய நற்செய்தி ஒரு செய்தியை நமக்குத்தருகிறது. இதுவரை இயேசுவைச்சாராத மற்றவர்கள்‌, இயேசுவின்‌ போதனையை ஏற்றுக்‌ கொள்வது கடினமென்றும்‌, அது குழப்பத்தை உண்டாக்குகிறது என்றும்‌ சொல்லி வந்தனர்‌. ஆனால்‌, இன்றைய பகுதியில்‌ இயேசுவோடு உடனிருந்த சீடர்களே, இயேசுவின்‌ போதனையைக்கேட்டு, “இதை ஏற்றுக்கொள்வது கடினம்‌: இப்பேச்சைக்‌ கேட்டுக்கொண்டிருக்க முடியுமா ?” என்று சொல்லிக்‌ கொள்கிறார்கள்‌. இயேசுவின்‌ போதனை சீடர்களுக்கு ஏற்றுக்‌ கொள்வதற்குக்‌ கடினமாக இருக்கிறது. கிறிஸ்தவ மறையைப்‌ பொறுத்தவரையில்‌, இரண்டு கடினமான காரியங்களை நாம்‌ பார்க்கலாம்‌.

1. நம்மை முழுவதும்‌ இயேசுவிடம்‌ சரணடையச்‌ செய்ய வேண்டும்‌.

2. இயேசு சொல்கிற வார்த்தைகளைச்‌ செயல்படுத்த வேண்டும்‌. இதில்‌ இயேசுவிடம்‌ நம்மைச்‌ சரணடையச்செய்வது அனைவரும்‌ விருப்பத்தோடு செய்கிற செயல்பாடுகளுள்‌ ஒன்று. ஆனால்‌, இயேசுவின்‌ மதிப்பீடுகளை, விழுமியங்களை வாழ்வாக்குவது எல்லாராலும்‌ முடிகின்ற ஒன்று அல்ல. ஏனென்றால்‌, அது ஒரு சவாலான வாழ்வு. நம்மையே ஒறுத்து வாழ்கிற வாழ்வு. உடலின்‌ உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அடக்கி ஆள்கிற வாம்வு. சுயத்தை விடுத்து பொதுநலனில்‌ அக்கறை கொள்கிற வாழ்வு. ஆனால்‌,

அத்தகைய வாழ்வுதான்‌ உன்னதமான வாழ்வு. இறைவன்‌ நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற வாழ்வு. அத்தகைய உன்னதமான வாழ்வை வாழத்தான்‌ கிறிஸ்தவர்‌ களாகிய நாம்‌ அனைவரும்‌ அழைக்கப்படுகிறோம்‌. அது கடினமான, சவாலான ஒன்றாக இருந்தாலும்‌, முடியாத ஒன்றல்ல. ஆண்டவரின்‌ துணைகொண்டு நம்மால்‌ எதையும்‌ செய்ய முடியும்‌. அப்படிப்பட்ட ஒரு சாட்சிய வாழ்வு வாழ, இறைதுணையை நாம்‌ நாடுவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல்

‘தெரிவு’ (சாய்ஸ்) என்ற ஒற்றைச் சொல் நம்மை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. ‘எனக்கு எது வேண்டும்’ என்பதை நான் என் உணர்வுத்தூண்டுதலால் அல்லாமல், அறிவுப்பூர்வமாக ஆய்ந்து தேர்ந்துகொள்ள முடியும். இதுவே மனுக்குலம் பெற்றிருக்கின்ற விருப்புரிமை. இந்த விருப்புரிமையின் அடிப்படையில் நாம் அனைத்திலும் இறைவனை மட்டுமே தெரிந்துகொண்டால் வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று, இறைவனைத் தெரிந்துகொள்ள நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் முன் மக்களைத் தூய்மைப்படுத்தும் சடங்கு நடக்கிறது. யோசுவா மோசேயின் சாயலாக இரு நிலைகளில் முன்மொழியப்படுகின்றார்: முதலில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பாதம் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்தது போல, யோசுவா அவர்களைப் பாதம் நனையாமல் யோர்தான் ஆற்றைக் கடக்கச் செய்கின்றார். இரண்டாவதாக, மோசே ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையை நிறைவேற்றியது போல, செக்கேமில் ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். மோசே உடன்படிக்கை செய்யும்போது புறத்தூய்மையை வலியுறுத்துகின்றார். ஆனால், யோசுவா அகத்தூய்மையை வலியுறுத்துகின்றார்.

சிலைவழிபாட்டிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதே யோசுவாவின் அழைப்பு. லாபான் வீட்டிலிருந்து தப்பி ஓடி வருகின்றார் யாக்கோபு. அவரை விரட்டி வருகின்ற லாபான் தன் வீட்டுச் சிலைகளை அவர் தூக்கி வந்ததாகக் குற்றம் சுமத்துகிறார். வீட்டுச் சிலைகளைத் தூக்கி வந்தது ராகேல். சிலைகள் வைத்திருந்த சாக்கின்மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மாதவிலக்கு உள்ளதாகச் சொல்லி, அந்தச் சாக்கையும் சிலைகளையும் காப்பாற்றுகின்றாள். அன்று தொடங்கி இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படும் வரை சிலைகள் அவர்களுக்குப் பெரும் கண்ணியாக இருக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் யாவே என்ற ஏகக்கடவுளை வழிபடுமுன் ஏகப்பட்ட கடவுளர் நம்பிக்கையே கொண்டிருந்தனர். அவர்களால் மற்ற தெய்வங்களை எளிதாக விட இயலவில்லை. குறிப்பாக கானான் நாட்டில் விளங்கிய வளமை வழிபாடு அவர்களை மிகவும் ஈர்த்தது. நிலத்தின் வளமைக்கும், கால்நடைகளின் பலுகுதலுக்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் எனக் கானானியர் கடவுளர்களை வைத்திருந்தனர். இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் தங்கத் தொடங்கியபோது விவசாய சமூகமாக உருவெடுத்ததால் மற்றவர்களின் வளமை வழிபாட்டிலும் பங்கேற்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. இந்தப் பின்புலத்தில்தான், ‘யாருக்கு ஊழியம் புரிவீர்கள்?’ என்று கேட்கின்றார் யோசுவா.

‘ஊழியம் புரிதல்’ என்பது விடுதலைப் பயண நூலில் மிக முக்கியமான வார்த்தை. ஏனெனில், எகிப்தில் பார்வோனுக்கு ஊழியம் புரிந்துகொண்டிருந்த மக்களைத் தனக்கு ஊழியம் புரியமாறு அழைத்துச் செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவதை விடுத்து மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் புரிவது ‘பிரமாணிக்கமின்மை’ அல்லது ‘விபசாரம் செய்தல்’ என்ற பெரிய பாவமாகக் கருதப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் இரு நிலைகளில் உந்தப்பட்டு, ‘நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்’ என்று சொல்கின்றனர்: முதலில், தங்கள் தலைவராகிய யோசுவாவின் முன்மாதிரி. யோசுவா இங்கே ஒரு நல்ல தலைவராக இருக்கிறார். ‘நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்’ என்று நிபந்தனைகள் எதுவுமின்றி முன்மொழிகின்றார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் செய்த வியத்தகு அடையாளங்களை எண்ணிப்பார்க்கின்றனர். ஏறக்குறைய இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையினர் இங்கே நிற்கின்றனர். தங்கள் மூதாதையர் தங்களுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்கின்றனர்.

ஆக, முதல் வாசகத்தில் தங்கள் சிலைகளை விடுத்து ஆண்டவராகிய கடவுளைத் தெரிந்துகொள்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர திருஅவைக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (பவுல்), புதிய இயல்பு, ஒளிபெற்ற வாழ்க்கை ஆகியவை பற்றிய கருத்துருக்களை முன்வைத்த பின்னர், குடும்ப உறவு பற்றிப் பேசுகின்றார். இது ஒரே நேரத்தில் குடும்ப வாழ்வு பற்றிய அறநெறிப் போதனையாகவும், திருஅவையியல் பற்றிய கருதுகோளாகவும் இருக்கிறது.

‘திருமணமான பெண்களே, கணவருக்குப் பணிந்திருங்கள் … திருமணமான ஆண்களே உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்ற போதனை பலருக்கு நெருடல் தருகின்ற பகுதியாக இருக்கின்றது. பெண்கள் ஏன் பணிந்திருக்க வேண்டும்? இது ஆணாதிக்க சிந்தனை என்று சில பெண்ணியவாதிகள் தங்கள் எதிர்ப்பைப் பல தளங்களில் பதிவு செய்கின்றனர். உண்மையில் இது பெண்ணடிமைத்தன அல்ல, பெண் விடுதலை சிந்தனையே. எப்படி? இந்தப் பாடத்தின் பின்புலத்தில் இருப்பது கிரேக்க-உரோமை குடும்ப வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையின்படி, ‘பெண்’ அல்லது ‘மனைவி’ என்பவர் கணவருடைய ஓர் உடைமை. அதாவது, கணவன் தனக்கென்று ஆடு, மாடு, வீடு, வைத்திருப்பதுபோல, ‘பெண்’ அல்லது ‘மனைவியை’ வைத்திருப்பார். மனைவிக்கென்று எந்தச் சொத்துரிமையும் கிடையாது. ஆக, பொருள் போலக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்ட பெண்ணை, ஆள் போலக் கருதி அன்பு செய்யுமாறு பணிக்கின்றார் பவுல். தன்னை அன்பு செய்கிற ஆணின்மேல் உரிமை கொண்டாடும் பெண், அந்த உரிமையை மதிப்பு என்று பதிலிறுப்பு செய்ய வேண்டும். ஆக, ஆணின் உரிமை அன்பு என்றும், பெண்ணின் உரிமை பணிவு என்றும் வெளிப்படுகின்றது.

இந்த உறவுக்கு உதாரணமாக, கிறிஸ்துவைக் கணவர் என்றும், திருச்சபையை மனைவி என்றும் உருவகிக்கின்றார் ஆசிரியர். கிறிஸ்து திருச்சபைக்காகத் தன்னையே ஒப்புவிக்கின்றார். அத்தகையே தற்கையளிப்பை கணவர் மனைவிக்குத் தர வேண்டும். மேலும், அத்திருச்சபை கறைதிறையோ, வேறு எக்குறையோ இல்லாமல் இருப்பதுபோல மனைவியும் பிளவுபடா உள்ளத்துடன் தன் கணவருக்குப் பணிந்திருக்க வேண்டும். கணவரின் உடைமை அல்ல மனைவி. மாறாக, அவருடைய உடல் என்று வரையறுக்கின்ற ஆசிரியர், இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது என்று வியக்கின்றார்.

ஆக, திருச்சபையின் நம்பிக்கையாளர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கிறார்கள் என்றால், ஆண்டவரின் தற்கையளிப்பை உணர்கிறார்கள் என்றால், அதை அவர்கள் தங்கள் குடும்ப உறவில் காட்ட வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில், நாம் கடந்த நான்கு வாரங்களாகக் கேட்டு வந்த, ‘வாழ்வுதரும் உணவு நானே’ என்னும் இயேசுவின் பேருரை நிறைவுக்கு வருகின்றது. பேருரையின் இறுதியில், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் முடிவெடுக்க வேண்டும். மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் இறுதியில், ‘இருவகை அடித்தளங்கள்’ உருவகத்தின் வழியாக, தம் சீடர்கள் எவ்வகையான அடித்தளத்தைத் தெரிவு செய்கிறார்கள் என்ற கேள்வியை விடுக்கிறார் இயேசு. அவ்வாறே, இங்கும் தம் சீடர்கள் தன்னைத் தெரிவு செய்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வியை முன்வைக்கின்றார் இயேசு. ‘வாழ்வுதரும் உணவு’ பேருரையின் தொடக்கத்தில் ஐயாயிரம் பேர் இருந்தனர். பின்னர் அது ஒரு சிறிய கூட்டமாக மாறுகிறது. பின் தொழுகைக்கூடத்தில் உள்ள சிறிய குழுவாக மாறுகிறது. தொடர்ந்து இயேசுவின் சீடர்கள். இறுதியில் பன்னிரு திருத்தூதர்களுடன் பேருரை நிறைவு பெறுகிறது. அகன்ற இடத்தில் தொடங்கும் உரை, குறுகிய இடத்தில் முடிகிறது. அப்படி முடியும் உரை வாசகரின் உள்ளம் நோக்கி நகர்கிறது. அதாவது, தனது வாசிப்பின் இறுதியில் வாசகர், இயேசுவைத் தெரிந்துகொள்கிறாரா அல்லது இல்லையா என்பதை அவரே முடிவுசெய்ய வேண்டும்.

இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சீடர்கள், ‘இதை ஏற்றுக்கொள்வது கடினம். இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று இடறல்படுகின்றனர். மூன்று காரணங்களுக்காக இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: ஒன்று, நாசரேத்தூரில் பிறந்த ஒருவர் தன்னையே எப்படி வானினின்று இறங்கி வந்த உணவு என்று சொல்ல முடியும்? என்ற இடறல். இரண்டு, இயேசுவைப் பின்பற்றுவதால் உடனடி பரிசு அல்லது வெகுமதி என்று எதுவும் இல்லை. மூன்று, அவர்கள் இயேசுவின்மேல் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றங்களாக முடிகின்றன. ‘வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது’ என்ற மிக அழகான வாக்கியத்தை மொழிகின்றார் இயேசு. அதாவது, காணக்கூடிய இயல்பு மறையக்கூடியது. காணாதது நிலையானது. அவர்கள் இயேசுவின் உடலை மட்டுமே கண்டு, அந்த உடலின் சதையை நினைத்து இடறல்பட்டனர். ‘வார்த்தை மனுவுருவானர்’ என்பதை அவர்கள் காணவில்லை.

ஆனால், பேதுரு அதைக் கண்டுகொள்கின்றார். ‘நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?’ என்று இயேசு பன்னிருவரைக் கேட்டவுடன், ‘ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?’ என்று தன் கேள்வியால் விடை அளிக்கின்றார் பேதுரு. மேலும், ‘வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ என்கின்றார். ஆக, பேதுரு இயேசுவில் வார்த்தையைக் காண்கின்றார். வார்த்தை மனுவுருவாயிருப்பதைக் காண்கின்றார். தொடர்ந்து, ‘நீரே கடவுளின் தூயவர் அல்லது கடவுளுக்கு அர்ப்பணமானவர்’ என்ற நம்பிக்கை அறிக்கை செய்கின்றார்.

ஆக, இயேசுவின் போதனை கேட்டு இடறல்பட்டு, அவரை விட்டு விலகிய சீடர்கள் ஒரு பக்கம். இயேசுவை மட்டுமே தெரிந்துகொண்ட பன்னிருவர் இன்னொரு பக்கம்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் சிலைகளை விடுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் குடும்ப உறவுகளில் உள்ள வேறுபாட்டையும், மேட்டிமை உணர்வையும் களைகின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், பன்னிரு திருத்தூதர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். அவரிடம் வாழ்வையும் தூய்மையையும் கண்டுகொள்கின்றனர்.

இன்று நாம் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றோமா?

நம் தெரிவு வழக்கமாக மூன்று விதிமுறைகளால் கட்டப்படுகின்றது: (அ) இன்பம்-வலி. இன்பமான ஒன்றைத் தெரிவு செய்து துன்பமான மற்றொன்றை விட்டுவிடுவது. (ஆ) நன்மை-தீமை. நன்மையானதைப் பற்றிக்கொண்டு தீமையானதை விட்டுவிடுவது. (இ) பரிசு-தண்டனை. நமக்குப் பரிசாக உள்ளதை எடுத்துக்கொண்டு, தண்டனை போல இருப்பதை விட்டுவிடுவது.

கடவுளைத் தெரிந்துகொள்தல் வலி தருவதாலும், உடனடி பரிசு எதுவும் இல்லாததாலும் அவரை நாம் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம். அல்லது தெரிந்துகொள்வதைத் தள்ளி வைக்கின்றோம். நன்மை-தீமை என்ற தளத்தில் இயங்கும்போது மட்டுமே நம்மால் அவரைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நாம் நம்மை அறியாமல் தூக்கி வருகின்ற குட்டி தெய்வங்கள், நம் உள்ளத்தில் உள்ள மேட்டிமை உணர்வு, அல்லது கடவுள் பற்றிய முற்சார்பு எண்ணம் ஆகியவற்றால் நாம் அவரைத் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம்.

தெரிவு செய்தல் என்பது மூன்று நிலைகளில் நடக்க வேண்டும்: ஒன்று, நம் முன் இருப்பவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது. இரண்டு, அல்லவை விடுத்து நல்லவை பற்றுவது. மூன்று, அந்தப் பற்றுதலில் நிலைத்து நிற்பது.

தெரிவுகளே நமக்கு ஆற்றல் தருகின்றன. தெரிவுகள் பலவாக இருக்கும்போது நம் ஆற்றல் சிதைந்து போகிறது. ஒன்றைத் தெரிந்தால், நன்றைத் தெரிந்தால் ஆற்றல் சிதைவு மறைந்து பொறுப்புணர்வு கூடும். நம் தெரிவுக்கு நாமே பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்வே நமக்கு ஆற்றல் தருகிறது. அந்த ஆற்றல் நம்மை தலைசிறந்த மனிதர்களாக வாழவும், மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழவும் தூண்டுகிறது.

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல் என்பது நம்மையே தெரிந்துகொள்ளும் புதுப்பிறப்பு போன்றது. அகுஸ்தினார் ஆண்டவரைத் தெரிந்துகொண்ட அன்று தான் தன்னையே தெரிந்துகொண்டார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நிலைவாழ்வு தரும் இறைவனைத் தேடி...

இன்று நம் வாழ்வில் பல "ஆண்டவர்" கள் உள்ளார்கள் என்று சொன்னால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை என்று மறுப்போம். ஆனால் நாம் பல தெய்வங்களை நம் வாழ்வில் கொண்டுள்ளோம் என்பது உண்மை. இதை இன்னும் தெளிவாக நாம் உணர கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை முதன்மையை நேரத்தை நாம் பலவற்றிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சில வேளைகளில் நம் வேலைகளும் பொறுப்புகளும் நம் தெய்வங்களாகின்றன. பல சமயங்களில் நம் கடந்த காலமும் கவலைகளும் கடவுளாகின்றன. இன்னும் சில சமயங்களில் நம் பலவீனங்கள் நம்மை ஆண்டவராய் ஆள்கின்றன. கேளிக்கைகள் சிற்றின்பங்கள் இவற்றை முதன்மைப்படுத்திக்கொண்டு நாம் வாழ்கிறோம். என்றால்.....ஆண்டவருக்கு எப்போது பணிசெய்யப்போகிறோம் ?

முதல் வாசகத்தில் யோசுவா தானும் தன் வீட்டாரும் கடவுளுக்கே அஞ்சி பணிபுரிந்து வாழ்வதாகக் கூறுகிறார். அதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கடவுள் செய்த அரும் பெரும் செயல்களை நன்றியோடு நினைத்தவர்களாய் தங்களுக்கும் ஆண்டவர் மட்டுமே எந்நாளும் தெய்வம் என முழங்கினர்.

அதே போல இரண்டாம் வாசகத்தில் பவுலடிகள் திருமணமானவர்களுக்கு கூறும் அறிவுரையில் கூட கிறிஸ்து ஒருவருக்கே அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள் என்று கூறுகிறார். இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் பற்றி கூறிய போதனையைக் கேட்டு பலர் விலகிய போதும் பேதுரு " நாங்கள் யாரிடம் போவோம். நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன" என்று சொல்லி இயேசுவை நம்பினார் என்பதை நற்செய்தி வாசகப்பகுதியில் நாம் காண்கிறோம்.

இன்று நம் நிலை என்ன? கடவுளை மட்டும் நம் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு பணிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக நாம் நம்முடைய குழப்பங்கள் சோதனைகள் துன்பங்கள் நிறைந்த காலத்தில் அவர் செய்த நன்மைகளையெல்லாம் நினைக்க வேண்டும். இரண்டாவதாக நிலை வாழ்வு தரும் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும். இதை உணர்வோம். செயல்படுவோம். நிலைவாழ்வு தருபவர் அவர் ஒருவரே.

இறைவேண்டல்

எங்கள் ஆண்டவரே! உம்மையல்லாமல் எமக்கு வேறு தெய்வம் இல்லை என்ற அசையா நம்பிக்கையில் வாழ்ந்து நிலைவாழ்வு தரும் உம்மைத் தேடி வர அருள்தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 21-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (யோசு. 24:1-2,15-18)

இஸ்ரயேல்‌ மக்கள்‌ சொந்த நாட்டை அடைந்தவுடன்‌ சீனாய்‌ மலையில்‌ கடவுளுடன்‌ அவர்கள்‌ ஏற்படுத்திய உடன்படிக்கையை மீண்டும்‌ புதுப்பிக்க யோசுவா அழைப்பு விடுக்கிறார்‌. கடவுள்‌ தனக்கு வாக்களித்த நாட்டை அடைவதற்கு முன்‌ மோசே இறந்து விடுகிறார்‌. அவர்‌ இறப்பதற்கு முன்பாக கடவுள்‌ யோசுவாவை தலைவராக நியமிக்கும்படி மோசேவுக்கு அறிவறுத்துகிறார்‌. மோசேயும்‌ அவ்வாறே நிறைவேற்றுகிறார்‌. (இ.ச. 31:1-8) யோசுவாவின்‌ தலைமையில்‌ இஸ்ராயேல்‌ மக்கள்‌ பல்வேறு பகுதிகளை வெற்றிக்கொண்டு கைப்பற்றுகின்றனர்‌. கடவுள்‌ ஆபிரகாமிற்கும்‌ அவருடைய வழிமரபினருக்கும்‌ வாக்களித்தபடியே நிறைவேற்றுகிறார்‌. ஆனால்‌ அவர்களின்‌ வெற்றி முழுமைப்பெறாததற்கு இஸ்ராயேல்‌ மக்களின்‌ நம்பிக்கை இல்லாத நிலையே காரணம்‌. யாவே கடவுளின்‌ மேல்‌ அவர்கள்‌ கொண்ட நம்பிக்கை நலிவுற்றது. அவரவர்கள்‌ சொந்த நாட்டை அடைந்தவுடன்‌ யோசுவா அனைத்து இனத்தலைவர்‌களையும்‌ செக்கேம்‌ என்ற இடத்தில்‌ கூடூமாறு அழைத்தார்‌. ஏனெனில்‌ அப்போது அது ஒரு தூய இடமாக கருதப்பட்டது. இங்குதான்‌ கடவுள்‌ ஆபிரகாமிற்கு தோன்றி உன்‌ வழிமரபினருக்கு இந்நாட்டைக்‌ கொடுப்பேன்‌ என்று உறுதியளித்தார்‌ (தொ.நூ. 12:7). ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்குப்பின்‌ யோசுவா மீண்டும்‌ கடவுள்‌ தம்‌ வார்த்தையில்‌ உண்மையுள்ளவர்‌ என்பதை அவர்கள்‌ தங்களுடைய சொந்த நாட்டை அடைந்த பின்‌ உணரும்படி அவர்‌களுக்கு அழைப்பு விடுக்கிறார்‌. அதன்பின்‌ யோசுவா அதற்கு சாட்சியமாக அங்கு பலிபீடம்‌ ஒன்று அமைத்தார்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ உண்மை கடவுளை தேர்ந்தெடுப்பதா (அல்லது) வேற்று தெய்வத்தை தேர்ந்தெடுப்பதா என்பது பற்றி முடிவு செய்ய இந்த வாசகம்‌ கூறுகிறது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபே. 5:21-32)

கிறிஸ்தவர்கள்‌ கிறிஸ்துவுடன்‌ கொண்டூள்ள உறவைத்‌ "தங்கள்‌ வாழ்வில்‌ காட்ட வேண்டும்‌. எவ்வாறெனில்‌ இயேசு எவ்வாறு “திருச்சபையை அன்பு செய்தாரோ அதே அன்பை குடும்ப வாழ்வில்‌ பிரதிபளிப்பதன்‌ மூலம்‌ நாம்‌ நம்முடைய உடன்படிக்கையை புதுப்பிக்கிறோம்‌, திருமணத்தின்‌ மூலம்‌ நாம்‌ மீண்டும்‌ கடவுளுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவை உறுதிப்படுத்துகிறோம்‌. யூத திருமணமுறைப்படி திருமணத்திற்கு முன்‌ மணமகள்‌ நீராட வேண்டும்‌. எவ்வாறு திருமுழுக்கில்‌ நீர்‌ பாவங்களை போக்கி தூய வாழ்வை கொடுக்கின்றதோ அதேபோல்‌ இச்சடங்கில்‌ இறைவார்த்தை மற்றும்‌ உறுதிபாட்டின்‌ மூலம்‌ புதிய உடன்படிக்கை ஏற்படுகின்றது. திருமணத்தில்‌ கணவன்‌ கிறிஸ்துவின்‌ இடத்தை பிடிக்கிறான்‌, அதே சமயத்தில்‌ மனைவி திருச்சபையின்‌ பிரதிபலிப்பாக விளங்குகிறாள்‌. எனவே கணவன்‌, மனைவி திருச்சபையின்‌ அங்கத்தினர்‌. பழைய ஏற்பாட்டில்‌ யாவே கடவுள்‌ இஸ்ராயேல்‌ மக்களுடன்‌ உடன்படிக்கை மேற்கொண்டார்‌. புதிய ஏற்பாட்டில்‌ அப்ப இரச வடிவில்‌ கிறிஸ்து இயேசுவோடு நாம்‌ கொண்டுள்ள உடன்படிக்கையானது புதுப்பிக்கப்‌படுகிறது. நற்செய்தி வாசகப்‌ பின்னணி (யோவான்‌ 6-60-69) இந்த பகுதியின்‌ இறுதியில்‌ இரண்டு நபர்கள்‌ முன்மாதிரியாக கொடுக்கப்பட்டூுள்ளனர்‌. முதலாவதாக பேதுரு “ஆண்டவரே வாழ்வு தரும்‌ வார்த்தைகள்‌ உம்மிடம்‌ தான்‌ உள்ளன, என்ற வார்தையின்‌ மூலம்‌ நிலைவாழ்வு இயேசுவோடு இணைந்திருப்பதால்‌ மட்டுமே முடியும்‌ என்ற கருத்தை கூறுகின்றார்‌. அடுத்ததாக யுதாசு வெளித்‌தோற்றத்தில்‌ இயேசுவோடு இருப்பதாக காட்டிக்‌ கொண்டான்‌. ஆனால்‌ உள்ள அளவில்‌ அவன்‌ யேசுவை விட்டுப்‌ பிரிந்து இருட்டில்‌ வாழ்ந்து கொண்டிருந்தான்‌. எனவே அவன்‌ இயேசுவை காட்டிக்‌கொடுத்து நிலைவாழ்வை இழந்தான்‌. இஸ்காரியோத்‌ என்னும்‌ வார்த்தை அரமேயத்தில்‌ “காட்டி கொடுப்பவன்‌” என்று பொருள்படும்‌.

மறையுரை

இன்றைய நற்செய்தியில்‌ யூதாசு வெளித்தோற்றத்தில்‌ இயேசுவோடும்‌, திருத்தூதர்களுடனும்‌ இருப்பதாக காட்டிக்‌ கொள்‌கிறான்‌. ஆனால்‌ ஆன்மீகத்தில்‌ அவன்‌ யேசுவை விட்டு பிரிந்து பலமைல்கள்‌ தூரம்‌ இருந்தான்‌. ௮வன்‌ முதலில்‌ இயேசுவை வெறுத்தான்‌ பின்பு முற்றிலுமாக மறுதலித்தான்‌. நாமும்‌ பல்வேறு சமயங்களில்‌ இயேசுவோடு இருப்பதாக வாக்குறுதிகளை அள்ளிக்‌கொடுக்கிறோம்‌. ஆனால்‌ எந்த அளவுக்கு அதில்‌ நிலைத்து நிற்கிறோம்‌. நம்முடைய வெளிப்புறத்தோற்றங்கள்‌ எல்லாம்‌ நாம்‌ இயேசுவோடு இருப்பதாக காட்சி அளிக்கின்றது. ஆனால்‌ நம்‌ உள்ளம்‌ பலமைல்கள்‌ கடந்து நிற்கிறது. எனவே ஒவ்வொரு வழிபாடும்‌ நம்மை இறைவனோடு நெருங்கி வர அழைப்பு விடுக்கின்றது. கடவுள்‌ நம்‌ அடிப்படை தேவையை பூர்த்தி செய்வது அவர்‌ நமக்கு அளிப்பது பரிசு ஆனால்‌ அதையும்‌ கடந்து தன்னையே உணவாக அளிப்பது அவர்‌ நமக்கு அளிக்கும்‌ மாபெரும்‌ கொடையாகும்‌. எனவே இதனை நாம்‌ முற்றிலுமாக உணர்ந்தவர்‌களாக இயேசுவை நம்‌ வாழ்வாக்குவோம்‌.

அப்போது நாம்‌ பசியால்‌ துன்பப்பட்டு இறப்பதிலிருந்து விடூபட முடியும்‌. நாம்‌ அவருடைய வார்த்தைகளை ஏற்று திருவிருந்தில்‌ பங்கெடுத்து விசுவாசம்‌ வாழ்வு வாழ்வதன்‌ மூலம்‌ இயேசு நமக்கு ஆன்ம உணவாக இருக்கின்றார்‌. ஒவ்வொருமுறையும்‌ நாம்‌ நற்கருணையை பகிர்கின்றபோது. திருமுழுக்கின்‌ மூலம்‌ நாம்‌ இறைவனோடு மேற்கொண்ட உடன்‌படிக்கையை மறுபரிசீலனை செய்ய அழைக்கப்படுகின்நோம்‌. இது தனிப்பட்ட முறையில்‌ இறைவன்‌ நமக்கு கொடுக்கும்‌ ஒரு அழைப்பு. லேவியின்‌ ஆகமத்தில்‌ நாம்‌ வாசிக்கின்றோம்‌ “நீங்கள்‌ என்‌ மக்கள்‌ நான்‌ உங்கள்‌ கடவுளாய்‌ இருப்பேன்‌”. எவ்வாறெனில்‌ கடவுள்‌ தன்‌ அன்பை கொடுத்தார்‌. அவருடைய உதவி, பாதுகாப்பு எல்லாவற்றிற்கும்‌ மேலாக தன்னுடைய உயிரையே சொந்த பிள்ளை என்ற நிலையில்‌ அவருடைய கட்டளைகளை கடைப்பிடித்து, அவருடைய அன்பை மற்றவருக்கு கொடுத்து வாழ அழைக்கப்‌படுகின்றோம்‌ ஆணால்‌ எந்த உடன்படிக்கையை திருமுழுக்கில்‌ பெற்றோமோ அதனை மறந்து விடுகின்றோம்‌. எனவே இயேசு நம்மிடம்‌ கேட்பது நம்முடைய உடன்படிக்கையில்‌ நாம்‌ உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்‌. நம்மையே முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும்‌.

யோசுவா காலத்தில்‌ இருந்த மக்கள்‌ போல நாமும்‌ எதைத்‌ தெரிந்து தேர்ந்தெடுத்து வாழவேண்டும்‌. துன்பத்தில்‌ கவனமுடன்‌ இருக்க வேண்டும்‌. இயேசுவையோ, மாற்று தெய்வத்தையோ, அன்பையோ அல்லது சுயநலத்தையோ, சரியானவற்றை தேர்ந்தெடுத்தால்‌ நாம்‌ மிகவும்‌ கொடுத்து வைத்தவர்கள்‌. இயேசுவின்‌ புதுமைகளை கண்டவுடன்‌ யேசுவைப்‌ பின்பற்ற அலைமோதிய கூட்டம்‌ மறையத்‌ தெடங்குகிறது. இவர்கள்‌ திருவிழா, திருவருட்சாதனக்‌ கிறிஸ்தவர்கள்‌. தங்களது கிறிஸ்தவ வாழ்விலும்‌, குடும்ப வாழ்விலும்‌ வாக்குறுதி கொடுத்துள்ளோம்‌ என்ற உணர்வு இல்லாமல்‌ வாழ்பவர்கள்‌ மற்றும்‌ சிலர்‌ தங்களது கிறிஸ்தவ வாழ்வில்‌, சடங்குகளையும்‌, சம்பிரதாயங்களையும்‌ மட்டும்‌ பிடித்துக்‌ கொண்டு விசுவாச வாழ்வில்‌ ஆழமில்லாமல்‌ வாழுகின்ற கிறிஸ்தவர்கள்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ இதற்கு ஒரு சிறந்த உதாரணம்‌. “ஆண்டவரை கைவிடமாட்டோம்‌' என்று வாக்குறதி கொடுத்து அவர்கள்‌ காலப்போக்கில்‌ கடவுளை மறந்து அவருக்கு எதிரான சிலைவழிபாட்டிலும்‌, வேறுதெய்வ வழிபாட்டிலும்‌ ஈடுபட்டனர்‌. இதேபோல்‌ நம்மில்‌ பலர்‌ துன்பம்‌ வருகின்ற போது கடவளை மறந்து வேறு எங்கு நிம்மதி கிடைக்கும்‌ என்று தேட ஆரம்பிக்‌கின்றனர்‌. இன்னும்‌ சிலரது வாழ்வில்‌ எவ்வளவுதான்‌ துன்ப துயரங்‌- கள்‌ சூழ்ந்தாலும்‌ அவற்றிற்கு மத்தியிலும்‌ தங்களது வாக்குறுதியை பற்றிப்பிடித்துக்கொள்கிறார்கள்‌. “நானும்‌ என்‌ வீட்டாரும்‌ ஆண்டவருக்கே ஊழியம்‌ செய்வோம்‌' என்று சொன்ன யோசுவாவும்‌, “ஆண்டவரே நாங்கள்‌ யாரிடம்‌ செல்வோம்‌ நிலைவாழ்வை அளிக்கும்‌ வார்த்தைகள்‌ உம்மிடம்‌ தானே உள்ளன என்று கூறிய பேதுருவும்‌ சிறந்த உதாரணங்கள்‌. நம்‌ மத்தியிலும்‌ இந்த மூன்றுவகை மனிதர்‌கள்‌ இருக்கின்றார்கள்‌. நமது கிறிஸ்துவ வாழ்விலும்‌, குடும்ப வாழ்விலும்‌, நாம்‌ கொடுத்துள்ள வாக்குறுதிகள்‌ பின்பற்றப்படும்‌ போது நாம்‌ நல்ல கிறிஸ்தவர்ளாக வாழ்கின்றோம்‌. இத்தகைய ஒரு அழைப்பை தூய பவுல்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ நமக்கு முன்‌ வைக்கின்றார்‌. நாம்‌ நம்முடைய அன்றாட வாழ்வில்‌ எந்த அளவிற்கு நம்முடைய வாக்குறுதியில்‌ நிலைத்து நிற்கிறோம்‌ என்பதை எண்ணிப்பார்ப்போம்‌. நீதி, நியாயத்திற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகள்‌. அரசியல்‌, பொருளாதார நிலையில்‌ நம்முடைய வாக்குறுதி எந்த அளவுக்கு உண்மையுள்ளதாக இருக்கின்றது என்பதை எண்ணிப்பார்ப்போம்‌ இறைத்திட்டத்திற்கு எதிராக கொடுக்கும்‌ வாக்குறுதிகளை தடை செய்வோம்‌ விசுவாச வாழ்வில்‌ நிலைப்போம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1 குடும்பம்‌ ஒரு திருச்சபை.
2 நிலைவாழ்வு ஒரு நிறைவாழ்வு.
3 உண்ட வீட்டிற்கு வஞ்சகம்‌ செய்ய எண்ணுதல்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - இருபத்தொன்றாம்‌ ஞாயிறு

முதல் வாசகம் : யோசுவா: 24 : 14-29

யோசுவா ஆகமத்தின்‌ முடிவுரையாக அமைவது 24-ஆம்‌ அதிகாரம்‌. இது சிக்கேம்‌ உடன்படிக்கை என்றும்‌ அழைக்கப்படும்‌. அதன்‌ ஒரு பகுதி இன்றைய வாசகமாக நமக்கு அமைந்துள்ளது.

கடவுளைத்‌ தொழுக

வாக்கு, மனம்‌ அணுகாத பூரணப்‌ பொருள்‌ கடவுள்‌. “சீர்‌இட்ட உலக அன்னை வடிவான தந்தை” கடவுள்‌. அனைத்திலும்‌ வல்லவன்‌, அனைத்திலும்‌ உள்ளவன்‌, குணக்கடல்‌ பெருக்கவன்‌, நினைப்பவர்‌ நெஞ்சினன்‌ என்று புகழ்‌ பெறுபவன்‌ கடவுள்‌. அவனைத்‌ தொழுது எழுவது மனிதனுக்கு அழகு. ஆனால்‌ “பொல்லாத பொய்ம்மொழியும்‌ அல்லாது நன்மைகள்‌ பொருந்து குணம்‌ ஏதும்‌” (தாயுமானவர்‌) அறியா மாக்கள்‌ மெய்யங்‌கடவுளை மறந்தனர்‌. இஸ்ரயேல்‌ இதற்கு விதி விலக்கு அல்லர்‌.

ஆதலின்‌ வழிபாடுகள்‌ நடத்தித்‌ தமது பற்றுறுதியை வெளிப்படுத்தும்படி அடிக்கடி இவர்கட்கு நினைவுபடுத்த வேண்டி இருந்தது. சிக்கேம்‌ உடன்படிக்கை என்று அழைக்கப்படும்‌ இவ்வழிபாட்டுக்‌ கூட்டத்தில்‌ “யானும்‌ என்‌ வீட்டாரும்‌ ஆண்டவரையே தொழுது வருவோம்‌" என்று யோசுவா முன்மொழிகிறார்‌. மக்களும்‌ தொடர்ந்து வழி மொழிகின்றனர்‌.

உண்மையுடனும்‌ முழு இதயத்துடனும்‌ கடவுளை வழிபட வேண்டும்‌ என்று யோசுவா வலியுறுத்துகிறார்‌. அதற்கு ஏற்ப, பணிவோம்‌, தொழுவோம்‌, வழிபடுவோம்‌ என்று ஒரே பொருள்‌ உடைய பலசொற்கள்‌ முரசு அறைவது போல அடுக்கடுக்காக எடுத்த எடுப்பிலேயே இன்றைய வாசகத்தில்‌ ஏழு முறை அமைந்து உள்ளன.

யோசுவா மக்களை நோக்கி “ஆகையால்‌ நீங்கள்‌ ஆண்டவருக்கு அஞ்சி உண்மையுடனும்‌ முழு இதயத்துடனும்‌ அவருக்குப்‌ பணி புரிந்து உங்கள்‌ முன்னோர்‌ தொழுது வந்த தேவர்களை அகற்றி விடுங்கள்‌ என்றார்‌... இஸ்ரயேல்‌ மக்கள்‌ இரு தலைவர்களுக்கு ஊழியம்‌ செய்ய முடியாது. உங்கள்‌ முன்னோர்‌ தொழுது வந்த தேவர்களையே வழிபடுவதாயின்‌ மொசோப்பொதேமியாவில்‌ உங்கள்‌ முன்னோர்கள்‌ தொழுதுவந்த தேவர்களை வழிபடுவதா, அமோறையர்‌ நாட்டுத்‌ தேவர்களை வழிபடுவதா என்பதில்‌ எது உங்களுக்கு விருப்பமோ அதை இன்றே தீர்மானித்து விடுங்கள்‌ ' என்றார்‌ (15).

அதற்கு மறுமொழியாக, “நாங்கள்‌ ஆண்டவரை விட்டு விலகி அந்நிய தேவர்களைத்‌ தொழுவது எங்களுக்குத்‌ தூரமாய்‌ இருப்பதாக" என்றனர்‌ (16). திருமுழுக்கின்‌ வழியாக நாமும்‌ சாத்தானையும்‌ அதன்‌ ஆரவாரங்‌களையும்‌ உதறித்‌ தள்ளிவிட்டோம்‌. திருமுழுக்கு வாக்குறுதிகளை ஆண்டுதோறும்‌ புதுப்பிக்கின்றோம்‌. அதன்படி வாழ்கின்றோமா? உண்மையிலே சாத்தானையும்‌, அதன்‌ வெறி ஆட்டங்களையும்‌, தவறான பழக்கங்களையும்‌ விட்டுவிட்டோமா?

ஏன்‌, எவ்வகை வழிபாடு

கடவுள்‌ தூயவர்‌, வல்லவர்‌. தனி உரிமை பாராட்டுபவர்‌. உள்ளம்‌ அறிபவர்‌. ஆதலின்‌ வழிபாட்டிற்கு உரியவர்‌.
கடவுள்‌ மீட்பர்‌. அற்புதர்‌. பாதுகாவல்‌, வெற்றி வழங்குபவர்‌. ஆதலின்‌ அவர்‌ தொழுகைக்கு உரியவர்‌.
கடவுள்‌ ஈடு இணை அற்றவர்‌. ஆதலின்‌ தனியொரு மனத்துடன்‌ வழிபடத்தக்கவர்‌.
தன்னிலேயே தன்னேரில்லாதவர்‌. இஸ்ரயேல்‌ வரலாற்றில்‌ முன்‌ நின்று கை கொடுத்தவர்‌. ஆதலின்‌ உண்மையோடும்‌ முழு இதயத்தோடும்‌ வழிபடத்‌ தக்கவர்‌ . மக்கள்‌ இவர்பால்‌ உள்ளத்தைத்‌ திருப்ப வேண்டும்‌. அதன்‌ வெளிப்பாடாகக்‌ கடவுளின்‌ கட்டளைகளைக்‌ கைக்கொண்டு நடக்க வேண்டும்‌.
ஆதலின்‌ மனத்திருப்பம்‌, உறுதிப்பாட்டில்‌ நிலைப்பு, செந்நெறி ஒழுகல்‌ ஆகிய அனைத்தும்‌ வழிபாட்டுப்‌ பண்புகள்‌ ஆகின்றன.

யானும்‌ என்‌ வீட்டாரும்‌ ஆண்டவரையே தொழுது வருவோம்‌.

இரண்டாம் வாசகம் : எபே. 5 : 21-32

கிறிஸ்தவர்களின்‌ ஒழுக்கம்‌ பரிசேயரின்‌ ஒழுக்கத்திலும்‌ சிறந்திருக்க வேண்டும்‌. இவ்வொழுக்கம்‌ புதுவொழுக்கம்‌; அது நம்‌ பெருமானை மையமாகக்‌ கொண்டு அவரால்‌, அவரோடு, அவரில்‌ வாழும்‌ வாழ்க்கை. இப்பொதுநெறியை விளக்கி விட்டுக்‌ குடும்பத்தில்‌ பின்பற்ற வேண்டிய முறையைப்‌ பவுல்‌ புலப்படுத்துகிறார்‌. இது நம்‌ மறை காட்டும்‌ இல்லறம்‌ ஆகும்‌.

பணிந்திருங்கள்

இசைந்திருங்கள்‌, இணங்கியிருங்கள்‌ என்ற பொருளில்‌ கணவனும்‌ மனைவியும்‌ ஒருவருக்கு ஒருவர்‌ பணிந்திருக்க வேண்டும்‌. யார்‌ யாருக்குப்‌ பணிய வேண்டும்‌? ஒருவர்‌ ஒருவருக்கு ! உடலின்‌ உறுப்புகளில்‌ உயர்வு தாழ்வு கிடையாது. அங்ஙனமே குடும்பத்தில்‌ கணவன்‌ மனைவியிடையே உயர்வு தாழ்வு இல்லை. “உடம்போடு உயிரிடை அன்ன, மற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு ” (குறள்‌ 1122) என்பர்‌ வள்ளுவர்‌. ஆதலின்‌ புதிய ஏற்பாட்டின்படி, கணவன்‌ மனைவிக்குப்‌ பணிந்து நடப்பதும்‌, மனைவி கணவனுக்குப்‌ பணிந்து நடப்பதும்‌ இருவருமே கிறிஸ்துவுக்குப்‌ பணிந்து நடப்பதாகும்‌. “இருவரும்‌ ஒரே உடலாய்‌ இருப்பர்‌" (தொநூ. 2 : 24) என்பதனால்‌ உண்டாகிற புதிய அமைப்பு இதுவாகும்‌.

மனைவியரே கணவனுக்குப்‌ பணிந்திருங்கள்

இது அடுத்து வரும்‌ கட்டளை. ஏன்‌? கணவன்‌ மனைவி என்போர்‌ இருவரும்‌ தலையும்‌ உடலும்‌ போன்றவர்‌ என்பதால்‌. எத்தகைய கணவனுக்கு? தன்‌ மனைவியின்‌ பொருட்டு உயிரையே தியாகம்‌ செய்யத்‌ துணியும்‌ கணவனுக்கு! உயிரைத்‌ தியாகம்‌ செய்ய முன்வரும்‌ கணவன்‌ அநீதி இழைப்பவனாக, அல்லல்‌ தருபவனாக எவ்வாறு இருக்க இயலும்‌? கிறிஸ்துவைப்போல்‌ இருக்கும்‌ கணவனுக்குப்‌ பணிந்திருப்பது பெருமையே அன்றி இழுக்கு ஆகாது!

எல்லா இனத்தாருடனும்‌ உறவுகொண்டாடவும்‌ அமைதியை வளர்க்கவும்‌ (1 பேது. 2 : 12, உரோ. 12 : 18) சங்கம்‌ நம்மை அழைக்கிறது. நாமே பெரியோர்‌; நமக்கே மீட்பு என்று எண்ணிப்‌ பிறரை இழிவாக எண்ணுவது சகோதர மனப்பான்மையாமோ?

அர்ச்சகர்கள்‌

கடவுள்‌ எல்லா நாடுகளிலிருந்தும்‌ மக்களை ஒன்று சேர்க்க விரும்புகிறார்‌. அந்தக்‌ காலத்தில்‌ யூதர்கள்‌ அறிந்திருந்த நாடுகளின்‌ பெயர்கள்‌ அனைத்தும்‌ இன்றைய வாசகத்தில்‌ உள்ளன. அவர்கள்‌ காணிக்கை களைக்‌ கொண்டுவருவர்‌. அதுமட்டுமன்று; அவர்களில்‌ பலர்‌ அர்ச்சகர்‌ களாகவும்‌ குருக்களாகவும்‌ தேர்ந்து கொள்ளப்படுவர்‌.

யூதர்கள்‌ மட்டுமே அர்ச்சகராகலாம்‌; குருக்கள்‌ ஆகலாம்‌. அதிலும்‌ லேவியர்‌ இனத்திலிருந்து மட்டுமே இவர்கள்‌ தேர்ந்துகொள்ளப்படுவார்கள்‌. இதுவே இதுவரை யூதர்களின்‌ மரபு. ஆனால்‌ இப்போது பிற இனத்தாரும்‌ ஆண்டவனின்‌ இல்லத்தில்‌ திருப்பணி புரிவர்‌. அவர்கட்குக்‌ கடவுள்‌ தம்மை வெளிப்படுத்துவார்‌ என்று இறைவாக்கினர்‌ அறிவிக்கிறார்‌.

எத்தனை நூற்றாண்டுகள்‌ ஆகிவிட்டன இந்த அற்புதமான நற்செய்தி அறிவிக்கப்பட்டு! ஆயினும்‌ இன்றுகூட மதப்‌ பூசல்களும்‌ பிணக்குகளும்‌ 'மலிந்தே காணப்படுகின்றனவே? ஏனென்றால்‌ “வாதுக்குச்‌ சண்டைக்குப்‌ போவார்‌; வருவார்‌; வழக்கு உரைப்பார்‌; தீதுக்கு உதவியும்‌ செய்திடுவார்‌” (பட்டினத்தடிகள்‌) என்றபடி கடவுளின்‌ மேன்மையை மறந்து தமது பெருமையைத்‌ தேடுவோர்‌ இருப்பதனால்தான்‌. சாதி, தொழில்‌, செல்வம்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ எத்தனைபேர்‌ இன்று அர்ச்சகராக ஆக முடியாது தவிக்கின்றனர்‌!

வேற்றினத்தார்‌, பிற மொழியினர்‌ அனைவரையும்‌ கூட்டிச்‌ சேர்க்க நாமே வருகிறோம்‌.

இரண்டாம் வாசகம் எபி. 12:5-7: 11-13

வாழ்க்கையில்‌ உண்டாகும்‌ துன்பங்கள்‌ மூலம்‌ நாம்‌ நற்பயிற்சி பெற வேண்டிய தேவையை இன்றைய வாசகம்‌ நமக்கு உணர்த்துகின்றது.

கடவுள்‌ தரும்‌ பயிற்சி

வேத கலாபனை தோன்றினால்‌ நம்‌ தலைவர்‌ கிறிஸ்துவைப்‌ பின்பற்றும்‌ பொருட்டுத்‌ துன்பத்தைத்‌ தாங்கிக்கொள்ள வேண்டும்‌. “அவர்‌ தம்முன்‌ இருந்த மகிழ்ச்சியின்‌ பொருட்டு, நிந்தையைப்‌ பொருட்படுத்தாமல்‌ சிலுவையைத்‌ தாங்கினார்‌.” ஆனால்‌, மற்றக்‌ காலங்களில்‌ துன்பம்‌ ஏன்‌? துன்பத்தின்‌ வழியாகக்‌ கடவுள்‌ தம்‌ பிள்ளைகட்குப்‌ பயிற்சி அளிக்கிறார்‌. “ஞானமுள்ள மகன்‌ தந்தையின்‌ நற்பயிற்சியை ஏற்றுக்‌ கொள்வான்‌ '' (நீமொ. 13:1. கடவுளோ துன்பத்தின்‌ மூலம்‌ நம்மை விசுவாசிகளாக்குவதுடன்‌ தம்‌ மக்களாகவும்‌ ஆக்குகிறார்‌.

கடவுள்‌ தரும்‌ பயிற்சியின்‌ மூலம்‌ அவரது அளவற்ற தூய்மையில்‌ நமக்குப்‌ பங்கு கிடைக்கிறது. கடவுள்‌ வாக்களித்துள்ள “தீய நாட்டத்தால்‌ சீரழிந்துள்ள உலகை விட்டு விலகியோடி இறைத்தன்மையில்‌ பங்கு பெறுங்கள்‌. இதற்கென்றே கடவுள்‌ நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்‌ ' (2 பேது. 1: 4).

கலைகளில்‌ பயிற்சி பெறுவோர்‌ எடுக்கும்‌ முயற்சிகளினால்‌ வருத்தம்‌ உண்டாகிறது. வருத்தம்‌ பாராமல்‌ விடாமுயற்சியுடன்‌ பயில்வோர்‌ நிறைவு அடைகின்றனர்‌. மனத்தில்‌ அமைதியும்‌ தன்னம்பிக்கையும்‌ தோன்று கின்றன. இவ்வாறே கடவுளின்‌ பயிற்சியினாலும்‌ அமைதியும்‌ நிறைவும்‌ தோன்றும்‌. “அருள்‌ உடையோரைத்‌ தவத்தில்‌, குணத்தில்‌, அருளன்பில்‌, இருளறு சொல்லினும்‌ காணத்தகும்‌ " என்று பொருத்தமாக உரைக்கிறார்‌ பட்டினத்தடிகள்‌.

திடம்‌ அடைக

“சோர்வுற்ற கைகளையும்‌ தளர்ந்துபோன முழங்கால்களையும்‌ திடப்படுத்துங்கள்‌. நீங்கள்‌ நடந்து செல்லும்‌ பாதையை நேர்மையாக்குங்கள்‌” என்று எசாயா ஆகமத்தை மேற்கோள்‌ காட்டுகிறார்‌ திருமடல்‌ ஆசிரியர்‌.

கடவுளால்‌ பயிற்றுவிக்கப்‌ பெற்றவன்‌ திடம்‌ அடைவான்‌. ஏனெனில்‌ துன்பத்தினால்‌ பொறுமையும்‌ மனவுறுதியும்‌ பரிவும்‌ அடைவான்‌. கடவுளையும்‌ மனிதனையும்‌ நேசித்துச்‌ சேவிப்பதற்கு இவையல்லவா உறுதியான அடிப்படை?

தான்‌ உறுதி அடைவது மட்டுமன்றிப்‌ பிறரையும்‌ அவன்‌ திடப்படுத்த முடியும்‌. விசுவாசத்தில்‌ தளர்ந்து ஆட்டம்‌ கண்டவர்களை அவனால்‌ உறுதிப்படுத்த இயலும்‌. துன்பத்தில்‌ உறுதியாக இருப்பவரைக்‌ காணின்‌ மற்றையோர்க்கு. உறுதி உண்டாவது நிச்சயம்‌.. “ அடுக்கிவரினும்‌ அமிவிலான்‌ உற்ற இடுக்கண்‌ இடுக்கண்‌ படும்‌” என்பார்‌ திருவள்ளுவரும்‌ (625).

ஆதலின்‌ கடவுளின்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌ துன்புறுவோர்‌ பேறுபெற்றோர்‌. ஏனெனில்‌ தாமும்‌ நலம்‌ அடைந்து, பெற்ற பெருவளத்தைப்‌ பிறருடன்‌ பகிர்ந்துகொள்ளும்‌ வல்லமை அடைவர்‌.

ஆண்டவர்‌ யார்மேல்‌ அன்புகூர்கீறாரோ இவரைக்‌ கண்டித்துத்‌ திருத்துகிறார்‌.

நற்செய்தி : லூக். 13: 22-30

மீட்படைவோர்‌ யார்‌? இந்தக்‌ கேள்வி ஆதிமுதல்‌ எழுகின்ற கேள்வி; என்றும்‌ எழுகின்ற கேள்வி. முயற்சியுடையோர்‌ மீட்பு அடைவார்‌ என்கிறது இன்றைய வாசகம்‌.

மீட்படைவோர்‌ யார்‌?

இஸ்ரயேல்‌ குலம்‌ மீட்பு அடையும்‌ என்று நம்பினர்‌ யூதர்‌. அதிலும்‌ பரிசேயர்‌ குழுவே மீட்பு அடையும்‌ என்ற எண்ணம்‌ பரவியது. ஆதலின்‌ மீட்பு அடைவோர்‌ சிலர்‌ தாமோ என்ற கேள்வி.

“மீட்பு அடைவோர்‌ மிகச்‌ சிலரே; அவருள்‌ எனக்கு உறுதியாக இடம்‌ உண்டு" என்ற பொருளில்‌ போதிப்போர்‌ பலர்‌. பலர்‌ மீட்பு அடைய மாட்டார்கள்‌ என்பதில்‌ ஒரு திருப்தி. அற்பத்‌ திருப்தி.

வாயிலைத்‌ தட்டுவோர்‌ சிலர்‌. “எங்களுக்குக்‌ கதவைத்‌ திறந்துவிடும்‌” என்று உரிமையுடன்‌ கேட்பவர்‌ ஒரு சாரார்‌.

உறவினைச்‌ சுட்டிக்காட்டிக்‌ கதவைத்‌ திறந்துவிடும்படி கேட்போர்‌ சிலர்‌.

ஆனால்‌ மீட்பிற்கு ஆசைப்பட்டோரும்‌ உறவினைச்‌ சுட்டிக்‌ காட்டினோரும்‌ ஒடுக்கமான வாயில்‌ வழியே விரைந்து நுழையாததால்‌- அயராத முயற்சியில்‌ ஈடுபடாததால்‌ வெளியே நிற்கும்‌ கதி ஏற்படுகிறது.

உறவினைச்‌ சுட்டிக்காட்டிக்‌ கதவைத்‌ திறந்துவிடும்படி கேட்போர்‌ சிலர்‌.

ஆனால்‌ மீட்பிற்கு ஆசைப்பட்டோரும்‌ உறவினைச்‌ சுட்டிக்‌ காட்டினோரும்‌

ஒடுக்கமான வாயில்‌ வழியே விரைந்து நுழையாததால்‌- அயராத முயற்சியில்‌ ஈடுபடாததால்‌ வெளியே நிற்கும்‌ கதி ஏற்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குலம்‌ என்பதனால்‌ விண்ணரசில்‌ இடம்‌ பெற்றுவிட முடியாது. பிறவினத்தார்‌ என்பதால்‌ வெளியே தள்ளப்படுவதும்‌ இல்லை. வருந்திப்‌ பாடுபட்டு மீட்பைத்‌ தேடுவோர்‌ கண்டடைவர்‌. கடவுள்‌ தரும்மீட்பு அனைவரும்‌ அடையக்‌ கூடியதாயினும்‌, “முயற்சி திருவினையாக்கும்‌; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்‌' என்பதை நாம்‌ செயல்படுத்த வேண்டும்‌ (குறள்‌ 616).

என்ன கேள்வி, என்ன விடை?

மீட்பு அடைவோர்‌ சிலர்‌ தாமோ-என்பது வினா. ஆம்‌ என்றோ, இல்லை என்றோ நம்‌ பெருமான்‌ பதில்‌ இறுக்கவில்லை! ஆனால்‌ “உனக்கு மீட்பு. உண்டா என்பது உனது கையில்‌” என்று விடை தருகிறார்‌. 1. ஒடுக்கமான வாயில்‌ வழியே நுழைக; 2. காலம்‌ தாழ்த்தாது நுழைக; 3. பாடுபட்டு நுழைக என்று விடை பகர்கிறார்‌.

இன்னொரு வகையான பதிலும்‌ கிடைக்கின்றது. யூதர்‌ மட்டுமே மீட்பு. அடைவர்‌ என்ற எண்ணப்‌ பின்னணியில்‌ எழுந்தது கேள்வி. ஆனால்‌ திகைப்பு ஊட்டும்‌ விடை கிடைக்கின்றது. “கிழக்கிலும்‌ மேற்கிலும்‌, வடக்கிலும்‌, தெற்கிலும்‌ இருந்து மக்கள்‌ வந்து கடவுளின்‌ அரசில்‌ பந்தி அமர்வர்‌.' ஒருபுறம்‌ ஆபிரகாமின்‌ புதல்வர்கள்‌ வெளியே நின்று புலம்புகிறார்கள்‌. மறுபுறம்‌ ““மேலைநாட்டினர்‌ ஆண்டவரின்‌ பெயருக்கு அஞ்சுவர்‌; கீழைநாட்டினர்‌ அவரது மாட்சிக்கு நடுங்குவர்‌" (எசா. 59 : 19) என்பதற்கு ஏற்பப்‌ புற இனத்தார்‌ விருந்திலே இடம்‌ பெற்றிருப்பர்‌.

வீணான வினாவிற்கு வேண்டிய பதில்‌ கிட்டவில்லை. ஆனால்‌ வேண்டியதற்கும்‌ மேலான விந்தையான பதில்‌ கிடைக்கிறது.

ஒடுக்கமான வாயில்‌ வழியே நுழையப்‌ பாடுபடுங்கள்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அகன்று போகலாமா?

நிகழ்வு:

2007ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் கந்தமால் என்ற பகுதியில் மிகக் கொடூரமான தாக்குதல் கிறித்தவர்களுக்கு எதிராக நடைபெற்றது. உலக அரங்கில் பரவலாகப் பேசப்பட்ட ஒரு சம்பவம் இது. கிறித்துவை அறிவிக்கிறார்கள், அவர் வழி வாழ்கிறார்கள் என்ற காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள். அச்சமயம் அவர்கள் தங்கியிருந்த ஊர்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு, அவ்வூரிலிருந்து துரத்தப்பட்டனர். 2008ஆம் ஆண்டு மீணடும் பயங்கர தாக்குதல் அங்கே நிகழ்ந்தது. 2008, ஆகஸ்ட் 25 தொடங்கி ஆகஸ்ட் 28 வரை மக்களின் நிலை தலைகீழாய் மாறியது. வழி தெரியாது தவித்தனர். ஏனென்றால் ஏறக்குறை 395 ஆலயங்கள் சூரையாடப்பட்டன. 5600 வீடுகள் எரிக்கப்பட்டன. 13 கல்வி நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 11,000க்கும் மேற்பட்ட மக்கள் அவ்விடத்திலிருந்து விரட்டப்பட்டனர். 310 கிராமங்கள் முழுமையாய் பாதிக்கப்பட்டன. இவையெல்லாம் நடந்தேறியபொழுது காட்டுக்குள் சிலர் தஞ்சம் அடைந்தனர். முகாம்களில் முகவரி தேடி இன்னும் பலர் நின்றனர். அந்நேரம் பத்திரிக்கையாளர்கள் சந்தித்து அவர்களின் நிலைபற்றிக் கேட்டறிந்தபொழுது ஒருவர் ‘எங்களை வேண்டுமானால் நீங்கள் அகற்றலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கும் இயேசுவை, மாதாவை உங்களால் அகற்ற முடியாது. நாங்கள் இவ்விடத்தைவிட்டு அகன்று போகலாம். ஆனால் எங்கள் இயேசுவை விட்டு அகன்று போக மாட்டோம். அவருக்காய் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்குவோம். எங்களை இவ்வூரிலிருந்து அகற்றலாம். ஆனால் இயேசுவைவிட்டு எங்களை உங்களால் அகற்ற முடியாது. நாங்களும் அகன்று போகமாட்டோம்’ என்றார். இத்தகைய பதிலை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு அழுத்தமான, ஆழமான, அர்த்தமுள்ள நம்பிக்கை நிறைந்த கத்தோலிக்க கிறித்த வாழ்வு பாருங்கள்!

இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிற்றுக்கிழமையில் அடியெடுத்து வைக்கும் நாம்; எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டுமென்று பறைசாற்றுகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. கத்தோலிக்க கிறித்தவர்களாய் வாழும் நாம் அத்தகைய நம்பிக்கையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை உறுதியாய் சொல்கிறது இன்றைய வாசகங்கள். கடவுள் ஒரு நாளும் நம்மைவிட்டு அகல்வதில்லை. ஒரு நாளும் நம்மை விட்டு விலகுவதில்லை. ஒரு பொழுதும் நம்மைவிட்டு அகன்று போவதில்லை. இதைத்தான் பின்வரும் இறைவார்த்தைகளின் பின்னணியில் சிந்திக்கின்றோம்:

எரே 30:22 – “நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்” விப 20:2-3 – “நானே உன் கடவுளாகிய ஆண்டவர் அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தலாகாது”

திபா 121:4-5 – “இதோ, இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதும் இல்லை. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார். அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே உமக்கு நிழல் ஆவார்!”
கலா 3:26 – “கிறிஸ்து இயேசுவின் மீது கொணடுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்”

இவ்வாறாய் இறைவன் தன்னை தன் மக்களுக்காய் வழங்கினார். தன்னை நம்பி வந்த மக்களை இறைவன் எந்நாளும் பாதுகாத்தார் என்று விவிலியம் பறைசாற்றுகிறது. இதைத்தான் விப 2:25 இல் ‘கடவுள் தன் மக்கள் படும் துன்பத்தைக் கண்டார்’ என்று வாசிக்கின்றோம். அதன்பின்னர் அவர்களுக்குக் கடவுள் மோசே வழியாய் வாழ்வு தந்தார் என்றும் பார்க்கின்றோம். இத்தகைய இறைவன் எவ்வாறெல்லாம் நம் வாழ்வில் நம்மோடு இருக்கிறார் என்பதை தொடர்ந்து சிந்திக்க அழைப்பு விடுகிறது இஞ்ஞாயிறு வழிபாடு

முதல் வாசகத்தில்,

யோசுவா செக்கேமில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்றுச் சேர்த்து, நானும் என் வீட்டாரும் கடவுளுக்கே ஊழியம் புரிவோம் என்று கடவுளைவிட்டு அகன்று போகாத, அழைத்த இறைவனை நம்பியே வாழும் குடும்பமாய் தன்னையும் தன் குடும்பத்தையும் இறைவனிடத்தில் ஒப்படைக்கிறார். மக்களைப் பார்த்து: ‘நீங்கள் கடவுளை விட்டு வேற்றுத் தெய்வங்களுக்கோ அல்லது எமோரியரின் தெய்வங்களுக்கோ ஊழியம் புரிகிறீர்களா’ என்று கேட்கிறார். அதற்கு மக்கள் நாங்களும் உம்மைப் போன்று இஸ்ரயேலின் கடவுளையே நம்புகிறோம். அவரைவிட்டு அகன்று போகமாட்டோம் என்று பதில் மொழி அளிக்கிறார்கள். ‘அவரே எங்கள் கடவுள்’ (யோசுவா 24:18) என்று மனதார நம்பி பறைசாற்றுகிறார்கள். நம்பிக்கையோடு தங்கள் வாழ்வைக் கடவுளிடத்தில் கையளிக்கிறார்கள்.

நற்செய்தியில்,

யோவான் நற்செய்தியின் 6ஆம் அதிகாரத்தில் நாம் வாசிப்பதுபோல இயேசு தன்னையே உணவாகவும், இரத்தமாகவும் கொடுக்கிறார். இதைச் சொல்கின்றபொழுது, ‘இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்: இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று இயேசுவின் வார்த்தைக்கு எதிராகப் பேசிச் சிலர் அகன்று போக நினைக்கிறார்கள். மத் 12:30இல் ‘என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராக இருக்கிறான்’ என்ற இயேசுவின் வார்த்தைக்கேற்ப அந்நாளில் இயேசுவின் போதனைகளுக்கு எதிராகப் பேசினார்கள். அவரை விட்டு விலகி போனார்கள். அப்போது இயேசு தன் திருத்தூதர்களைப் பார்த்து, “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” (யோவா 6:67) என்று கேட்கிறார். அதற்கு நம் கத்தோலிக்க திருஅவையின் முதல் திருத்தந்தை, புனித பேதுரு, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” என்று மறுமொழி தருகிறார். நாங்கள் உம்மை விட்டு எங்குப் போவது என்று தங்கள் நம்பிக்கையை அறிக்கையிட்டு, உம்மைவிட்டு எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை எடுத்துரைக்கிறார்கள். இதை;தான் யோவா 15:5இல் “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” என்று இயேசு கூறுவதைப் பார்க்கின்றோம். லேவி 26:11 இல் பார்ப்பது போன்று, “என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை. உங்கள் நடுவே நான் உலவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்!” என்று சொன்னதை இயேசுவின் வழியாய் யாவே இறைவன் நிறைவேற்றினார். இதனை இன்னும் ஆழமாய் வலுப்படுத்தவே புனித பவுல் எபேசு நகர மக்களுக்கு இப்படியாய் இரண்டாம் வாசகத்தில் எழுதுகிறார்.

இரண்டாம் வாசகத்தில்,

புனித பவுல் எபே 5: 21-32இல் நாம் இறைவனோடு கொண்டிருக்கின்ற உறவு வாழ்வை கணவன் மனைவியிடையே உள்ள அன்புறவின் அடிப்படையிலும், இயேசுவுக்கும் திருஅவைக்கும் உள்ள உறவு ஒன்றிப்பின் அடிப்படையிலும் விளக்குகின்றார். அன்பு, பணிவு, கீழ்ப்படிதல், நம்பிக்கை இந்த நான்கின் பின்னணியில்தான் கணவன் மனைவி ஒன்றித்து வாழ முடியும். ஒற்றுமையின் விளைநிலமாய் விளைச்சல் அளிக்க முடியும் என்று உரைக்கின்றார். இதுதான் இயேசு விரும்பியது. அவரை விட்டு அகன்று போகாமல் இருக்க புனித பவுல் காட்டுகிற பாதை மேற்சொன்ன நான்கும்தான் ஆழமான அன்பு, பரந்தபட்ட பணிவு, உச்சக்கட்ட கீழ்ப்படிதல், அசையா நம்பிக்கை. இவை யாரிடத்தில் உள்ளதோ அவர்கள் ஆண்டவரை விட்டு அகன்று போகமாட்டார்கள். அப்படியென்றால் நமக்கான வாழ்க்கைப் பாடம் என்ன? ஆண்டவரை விட்டு அகன்று போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

1. ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும்
2. ஆண்டவருக்கு அடிமையாக வேண்டும்
3. ஆண்டவரை ஆழமாய் புரிந்துகொள்ள வேண்டும்
4. ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும்

அன்பு செய்ய வேண்டும்:

இச 6:5இல் “உன் முழுஇதயத்தோடும், உன் முழுஉள்ளத்தோடும், உன் முழுஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” என்ற வார்த்தைக்கேற்ப நாம் கடவுளை முழுதாய் அன்பு செய்ய வேண்டும். யார் கடவுளை முழுமையாய் அன்புச் செய்கிறோமோ அவர்கள் கடவுளை விட்டு அகன்று போவதில்லை. ஏனென்றால் கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? என்று உரோ 8:35இல் பவுல் கேள்வி கேட்கிறார்: “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? இவ்வாறாக இறைவன் மீது என் அன்பு ஆழமாய் இருந்தால் எதுவும் நம்மைக் கடவுளிடமிருந்து அகற்ற முடியாது என்பது தெளிவு.

அடிமையாக இருக்க வேண்டும்:

நாம் ஆண்டவரைவிட்டு அகன்று போகாமல் இருக்க வேண்டுமெனில் நாம் இவ்வுலகத்தின் அடிமையாய் இருப்பதைவிட ஆண்டவருக்கு அடிமையாய் இருத்தலே சிறந்தது. லூக் 1:38இல் “நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா தன்னை, தன் வாழ்வைக் கடவுளுக்கு அடிமையாக்கினார். பிலி 3:7-8 இறைவார்த்தைகளில் புனித பவுல் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் கிறித்துவை ஆதாயமாக்கிக் கொள்ள குப்பையெனக் கருதுகிறேன் என்கிறார். அப்படியென்றால் அவர் இவ்வுலகத்திற்கு நான் அடிமையாய் வாழ விரும்பவில்லை. என்னை அழைத்த இயேசுவுக்கே அடிமையாய் வாழ ஆசைப்படுகின்றேன் என்று இயேசுவை ‘ஒப்பற்ற செல்வமாய்’ கருதுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் சொல்படுகின்ற பணிந்து வாழ்தல், கீழ்ப்படிந்து வாழ்தல், அன்புச் செய்து வாழ்தல் இவையெல்லாம் நாம் இறைவனுக்கு அடிமையாகும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே ஆண்டவருக்கு அடிiயாக முயல்வோம்.

ஆழமான புரிதல் வேண்டும்:

நம்முடைய அறிவு வரையறைக்குட்பட்டது. இவ்வுலகில் இருக்கின்றவற்றையே நாம் அவ்வளவு எளிதாய் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்புறம் எங்ஙணம் கடவுளைப் புரிந்து கொள்ள முடியும் என்கிற கேள்விகள் சிலருக்கு எழலாம். இவையெல்லாம் அறிவுத்தளத்தில் எழுகின்ற கேள்விகள். ஆன்மிகத் தளத்திலும், ஆண்டவர் உடன் பயணிக்கிறார் என்கிற நம்பிக்கைத்தளத்திலும் சிந்தித்தால் பேதுருவைப் போல நாமும் பதில் சொல்ல முடியும். யோவா 6:68இல் “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?” இத்தகைய பதில்தான் நம்மிடம் எழ வேண்டும். இறைவா உன்னையன்றி வேறு கடவுள் எங்களுக்கு இல்லை. வேற்றுத் தெய்வங்களை நாங்கள் வழிபடமாட்டோம் என்கிற உறுதிப்பாடுதான், நம் கடவுளை நாம் புரிந்து கொள்வது. 2பேதுரு 1:10-11இல் வாசிக்கின்றோம், “ஆகவே சகோதர, சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்டவர்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இந்த நிலையில் உறுதியாக நிற்க முழுமுயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் தடுமாறமாட்டீர்கள். அப்பொழுது நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும் உரிமை உங்களுக்கு நிறைவாக அருளப்படும்”. ஆகவே ஆண்டவரை புனித பேதுரு போல ஆழமாய் புரிந்து கொள்ள நம் பயணத்தை இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும்.

அசைக்க முடியாத நம்பிக்கை:

நாம் கடவுளை விட்டு அகன்று போகாமல் இருப்பதற்கு நாம் கொணடி; ருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே அடிப்படையான வாழ்வியல் சிந்தனை. ஆழமான ஆன்மிகத் தேடல். நானும் என் குடும்பத்தாரும் ஆண்டவருக்கு ஊழியம் செய்வோம் என்று யோசுவா சொன்னதற்கு காரணமே (யோசுவா 1:5-8) இறைவன் மீது அவர் கொணடி; ருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே. என்னைப் பெயர்ச் சொல்லி அழைத்த இறைவன் என்னை என்றும் கைவிடமாட்டார். ஏனெனில் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” (எபிரே 13:8) என்ற உச்சக்கட்ட நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள உதவுகிறார் யோசுவா. இதைத்தான் எபிரே 12:28இல், “அசைக்க முடியாத அரசைப் பெற்றுக் கொணட் நாம், நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நன்றியுணர்வோடும், இறைப்பற்றோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு உகந்தமுறையில் அவருக்கு வழிபாடு செய்வோம்” என்று நம்மில் விளங்க வேண்டிய அசைக்க முடியா நம்பிக்கையை அறிதிட்டு கூறுகிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். இதே போன்று பேதுரு தன் அறிக்கையில், “நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” (யோவா 6:68) என்கிறார். எனவே நாமும் அசைக்க முடியா நம்பிக்கையை இறைவன் மீது வைப்போம்.

இவை நான்கும் நம்மில் இருந்தால் நாம் கடவுளை விட்டு அகன்று போகாமல் இருக்கலாமா? என்றால் அதிலும் ஒரு சூட்சமத்தை இயேசு வைக்கிறார். இந்த அன்புச் செய்தல், அடிமையாகுதல், ஆழமாய் புரிதல், அசைக்க முடியா நம்பிக்கையோடு வாழ்தல் இவையனைத்தும் நம் சொந்த முயற்சியால் உருவாவதில்லை. அது இறைவனின் பேரருளால் நடக்க வேண்டும். நிகழ்த்தப்பட வேண்டும். இத்தகு பார்வையைத்தான் இயேசு நற்செய்தியில், “என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது” (யோவா 6:65) என்று கூறுகிறார். ஆகவே ஆண்டவரின் அருளை வேண்டுவோம்! அவரை அன்புச் செய்வோம், அவருக்கு அடிமையாகுவோம், அவரை ஆழமாய் புரிந்து கொள்வோம், அவர்மீது அசைக்க முடியா நம்பிக்கையை வைப்போம்!! அப்போது நாம் என்றுமே ஆண்டவரை விட்டு அகன்று போகமாட்டோம்!!!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser