மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 21ஆம் ஞாயிறு

1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 22:19-25|உரோமையர் 11:33-36|மத்தேயு 16:13-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

இயேசு எனக்கு யார்?

நிகழ்ச்சி

பல ஆண்டுகளாக ஒருவர் மேஸ்திரியாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தான். அவரின் செயல்பாடுகள், நேர்மைக் குணம் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேஸ்திரி முதலாளியிடம் சென்று, “ஐயா! நான் அடுத்த மாதத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுவிடலாம் என நினைக்கிறேன்” என்றான். முதலாளி கோபமாக, "இப்படி திடீரெனச் சொன்னால் எப்படி? இன்னும் ஆறு மாதங்கள் நீ என்னிடம் வேலை செய்துதான் ஆக வேண்டும்” என்றார். “உன் குடிசைக்கு எதிரே உள்ள பாறை மீது ஒரு நவீன மாடலில் ஒரு வீடு கட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு வேலையிலிருந்து நீ நின்றுகொள்” என்றார். சரி என்று சொல்லி ஆறு மாதத்திற்குள் பாறைமீது அழகான ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொடுத்தார் அந்த மேஸ்திரி. அப்போது முதலாளி அந்த மேஸ்திரியைப் பார்த்து, நீ பல ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்தவர். சில நேரங்களில் உனக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் போயிற்று. பல சமயங்களில் என்னை நீ சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகள் என்னைவிட்டுப் பிரியாமல், பலவிதமான துன்பங்களோடு என்னோடு இருந்து, எனக்கு ஆறுதல் தந்தாய். காலப்போக்கில் மனதளவில் நீ என்னை மற்றவர்களைவிட நன்கு புரிந்துகொண்டாய். அதற்கு வெகுமதியாக உனக்கு நான் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் பாறைமீது நீ கட்டிய வீட்டை உனக்கே பரிசாகத் தருகிறேன் என்று கூறி, புதிய வீட்டுச் சாவியை அந்த மேஸ்திரியிடம் கொடுத்தார் அந்த முதலாளி.

ஆண்டவர் இயேசுவும் தனது மேஸ்திரியாக இருந்த பேதுருவையும் இவ்வாறுதான் எடைபோட்டார். எனவே உன் பெயர் பாறை, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களை உனக்குத் தருவேன் (மத். 16:18) என்று கூறி அதிகாரத்தின் சாவியை புனித பேதுருவிடம் ஆண்டவர் இயேசு ஒப்படைக்கின்றார். ஏனெனில் தொடக்கத்தில் இயேசுவை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்ட பேதுரு, காலப்போக்கில் அனுபவத்தின் வழியாக, இதயப்பூர்வமாக உணர்ந்து கொண்டார். எனவேதான் நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத். 16:17) என்று வெளிப்படுத்தினார்.

அன்பார்ந்தவர்களே! மூன்று ஆண்டுகளாகத் தன்னோடு இருந்து, உண்டு, உறங்கி சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து, தான் செய்த வல்ல செயல்களையெல்லாம் கண்ணாரக் கண்ட தன் சீடர்களை நோக்கி, இயேசு ஒரு கேள்வி எழுப்புகிறார். மனுமகனை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் (மத். 16:14-15) என்றும் கேட்கிறார். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் ? இதுவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர் இயேசுவில் விசுவாசமிழந்தனர். உற்றார், உறவினர் அவர்மேல் இடறல் பட்டனர். சீடர் பலர் இயேசு தன் உடலை உணவாகத் தருவேன் என்றவுடனும் நெருக்கடி நிலை ஏற்பட்டவுடனும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றனர். இந்த சூழலில் தந்தையாகிய இறைவன் இவ்வுலகிற்கு இயேசுவை எதற்காக அனுப்பினார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனரா , அந்தப் பணியை இந்தச் சீடர்கள் தொடர்ந்து செய்வார்களா? தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் தன்னைப் புரிந்துகொண்டார்களா என்பதை அறிய , ஒரு நேர்முகத் தேர்வு நடத்துகிறார் இயேசு. ஏனெனில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (உரோ. 11:33) கடவுளின் அருட்செல்வம் ஞானம், அறிவு, தீர்ப்புகள் இவற்றை மனிதன் தன் அறிவினால் அறிய இயலாது. அனைத்தும் அவரிடமிருந்தே, அவருக்காகவே இருக்கின்றன என்கிறார் புனித பவுல் அடிகளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலை வந்தபோது, இயேசுவின் இதயம் எழுப்பிய கேள்விதான், மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள். ஆனால் இயேசுவை அனுபவ ரீதியாக அறிந்த பேதுரு , ஒரே வரியில் பதில் சொல்லி, இயேசுவின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார். இதை அறிந்த இயேசு, பேதுருவை அடித்தளமாகக் கொண்டு திருச்சபையைக் கட்டுவேன் என்கிறார்.

இயேசு எனக்கு யார்? சிலுவையில் தொங்கிய வலது புறத்துக் கள்வன், நான் யார் ? ஏன் இப்படி ஆனேன் என்று சிந்தித்தான். விபச்சாரப் பெண் மதலேன் மரியாள் இப்படி ஏன் தள்ளப்பட்டேன் என்று சுய ஆய்வு செய்தாள். சக்கேயு தன் எதிர்கால நிலைப்பாடு என்ன என்று யோசித்தான். இதனால் அறிவு ரீதியாக மட்டுமல்ல, இதயப்பூர்வமாக இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்

 • இந்த மூவரும். இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பிற மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? கல்வி, மருத்துவம் போன்ற உதவியால் மதம் மாற்றுபவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் கோழைகள் ! அல்லேலூயா கோஷ்டிகள், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்கிறார்களா? அப்படியென்றால் அது உண்மையா?
 • நாம் நம்மைச் சுற்றி எத்தகைய சமூகத்தைக் கட்டி எழுப்புகிறோம்? சாதியம், ஆணாதிக்கம், மத அடிப்படை வாதம், சுய நலம் நிறைந்த அடிமை சமூகத்தையா? அல்லது நீதி, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தையா?
 • மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

  நமக்குள்ளே ஒரு விலை உயர்ந்த கருவூலம் உண்டு

  ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு வயதான பெண்ணொருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் அமெரிக்காவிலே பெரிய செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அந்த வயதான பெண்ணோ , அவனுடைய தாயோ ஸ்காட்லாந்தில் வறுமையில் வாடினார்.
  ஒருநாள் பக்கத்து வீட்டுப் பெண் அந்த ஏழைப் பெண்ணைப் பார்த்து, பாட்டி, நீ இங்கு இப்படி வறுமையில் வாடுவது தெரிந்தால் உன் மகன் உனக்கு நிச்சயமாக உதவி செய்வார் என்றாள். அதற்கு அந்தப்பாட்டி, என் மகனுக்கு என்ன செலவோ! பணம் அனுப்புவதில்லை! ஆனால் வாரம் தவறினாலும் அவன் அன்போடு எழுதும் கடிதம் மட்டும் எனக்கு வரத் தவறாது. கடிதத்தோடு ஓர் அழகான படமும் வரும். அந்தப் படங்ளையெல்லாம் சேர்த்து வைத்திருக்கின்றேன். அவை அழகாக இருக்கின்றன என்றார். அந்தப் பாட்டியோ பைபிளை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதற்குள்தான் எல்லா படங்களும் இருக்கின்றன என்றார். அடுத்த வீட்டுப் பெண் பைபிளைத் திறந்தாள். அதற்குள் இருந்ததெல்லாம் படங்கள் அல்ல பணம், அமெரிக்க டாலர் நோட்டுகள்.

  பாவம் அந்த வயதான பெண்! அவளிடம் விலை உயர்ந்த ஒரு கருவூலம் இருந்தது. இருந்தும் அவள் ஏழையாக வாழ்ந்து கொண்டிருந்தாள் !

  நம் நடுவே, நமக்குள்ளே ஒரு விலை உயர்ந்த கருவூலம் உண்டு. அந்தக் கருவூலத்தின் பெயர் இயேசு ! அவருடைய அருமையையும், பெருமையையும் நாம் உணர்ந்து, அவரை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பேதுருவைப்போல மெசியாவாக, கடவுளின் மகனாக (மத் 16:16) ஏற்று வாழ்கின்றோமா?

  இயேசுவைக் கடவுளாக நாம் ஏற்றுக்கொண்டால், நமக்குள் கடவுளின் மிகுதியான அருள் செல்வம், அவருடைய ஆழமான ஞானம், அறிவு, அறிவுக்கு எட்டாத அவருடைய தீர்ப்புகள், ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய செயல்முறைகள் (இரண்டாம் வாசகம்) அனைத்தும் குடிகொள்ளும்.

  அப்பொழுது நமக்குள்ளும், நம் நடுவிலும் புதிய யுகம் ஒன்று பிறக்கும் ; நாம் வாழ்வின் திறவுகோலை (முதல் வாசகம்) கையிலேந்தி வலம் வருவோம்.

  மேலும் அறிவோம் :

  உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
  உள்ளியது உள்ளப் பெறின் (குறள் : 540).

  பொருள் : நினைக்கத் தக்கதை நினைத்து அதனை மறவாது செய்தால், ஒவ்வொருவரும் தாம் அடைய நினைத்த பொருளை எண்ணியவாறே பெறுவது எளிதாகும்!

  "நான் யார்?"

  16-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த ஒருவர் காலையில் வெளியே சென்றவர் நள்ளிரவு வீடு திரும்பினார். அரசி கதவைத் தாளிட்டுத் தூங்கிவிட்டார். அரசர் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான்தான் இங்கிலாந்து அரசர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை . மறுபடியும் அரசர் கதவைத் தட்ட, "யார் அது?" என்று அரசி கேட்க, அரசர், "நான்தான் முப்படைகளின் தலைவர்” என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை . ஆத்திரமடைந்த அரசர் மூன்றாம் முறைச் சற்றுக் கோபத்துடன் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான்தான் உன் அன்புக் கணவர்" என்று சொன்னவுடன் அரசி கதவைத் திறந்து அரசரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். ஒருவர் அரசராகவும் முப்படைத் தலைவராகவும் இருக்கலாம். ஆனால் அரசிக்கு அவர் முதலில் கணவர். அதன் பிறகுதான் மற்றெல்லாம்.

  இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்ட கேள்விக்கு, அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவிய கருத்துக்களைப் பிரதிபலித்து, கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியா, எலியா, இறைவாக்கினருள் ஒருவர் என்றும் பதில் கூறினர். ஆனால் இதெல்லாம் உண்மையான பதில் இல்லை . அந்நிலையில் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார்; கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்,

  அரசியைப் பொறுத்தமட்டில் அரசர் முதலில் அவரது கணவர், அவ்வாறே கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் அவர் முதல் முதல் கடவுளின் மகன். அதன் பின்தான் அவருடைய மற்றப் பணிகள், கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்கிறார். "எனது பணி என்ன?" என்று கேட்கவில்லை. ஒருவருடைய இயல்பிலிருந்து அவருடைய செயல்கள் பிறக்கின்றன. இந்த அடிப்படையான மெய்யியல் உண்மையை மறந்து ஒருசில இறையியலார்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு அவருடைய பணிகளை மையப்படுத்தி அவரை ஒரு புரட்சியாளராக வெளிச்சம் போட்டுக் காட்டுவது முழுமையான இறையியலாக இருக்க முடியாது. அன்று மகதலா மரியா அழுது கொண்டு, என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கு வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" (யோவா 20:13) என்று கேட்டதைப் போல் கேட்கவேண்டியுள்ளது.

  கிறிஸ்துவை கடவுளுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு மட்டும் போதாது. இறைவெளிப்பாடு தேவைப்படுகிறது. எனவேதான் கிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார்: "யோனாவின் மகளான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தத்தையே வெளிப்படுத்தினார்" (மத் 16:17), கிறிஸ்துவிடம் வருவதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் தேவைப்படுகிறது. "என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" (யோவா 6:65) என்று கிறிஸ்து யூதர்களிடம் கூறியது இதை எண்பிக்கிறது.

  பேதுருவின் நம்பிக்கை அறிக்கையின் மீது தமது திருச்சபையைக் கட்டி எழுப்புவதாகக் கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்து பேதுருவைப் பாறை என்று அழைக்கின்றார் விவிலியம் கடவுளைப் பாறை என்று அழைக்கிறது. "என் கற்பாறையும் கோட்டையும் நீரே" (திபா 31:3), பாறை உறுதியானது; அதைவிட உறுதியானது கடவுளின் அன்பு, "மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது தான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10).

  கடவுள் உண்மையுள்ளவர், கிறிஸ்துவும் உண்மையுள்ளவர். கிறிஸ்துவுக்கு 'ஆமென்' என்று பெயர்; ஏனெனில் அவர் தம்பிக்கைக்குரியவர்; உண்மையான சாட்சி (திவெ 3:14), அவ்வாறே திருச்சபையும் உண்மையானது. திருத்தூதர் பவுல் திருச்சபையைக் "கடவுளின் வீடு" என்றழைத்து, “திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது" (1 திமொ 3:14-15) என்கிறார்.

  இன்றைய முதல் வாசகம் பின்வருமாறு கூறுகிறது. தாவீது குடும்பத்தின் திறவுகோலைக் கடவுள் கிறிஸ்துவுக்குக் கொடுப்பார், அவருக்குத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் இருக்கும் (எசா 22:19-23). கிறிஸ்து தமக்குள்ள அதிகாரத்தைப் பேதுருவுக்குக் கொடுக்கிறார். பேதுருவின் வழித்தோன்றல்கள் திருத்தந்தையர்கள். திருத்தந்தையர் களின் தலையான பணி விசுவாசிகளை உறுதிப்படுத்தும் பணி (லூக் 22:32) பேதுரு மட்டுமல்ல முழுத் திருச்சபையும் கிறிஸ்துவிடமிருந்து திறவுகோலைப் பெற்றது என்கிறார் புனித அகுஸ்தின், இரண்டாம் வத்திக்கான் சங்கமும் முழுத் திருச்சபையும் விசுவாச, அறநெறி கோட்பாட்டில் வழுவா வரம் கொண்டுள்ளது என்று அறிக்கையிட்டுள்ளது. "தூயவரான கடவுளால் அருள்பொழிவு பெற்று தம்பிக்கை கொண்டோர் அனைவரின் கூட்டம் நம்பிக்கையிலே தவற முடியாது" (திருச்சபை, எண் 12).

  மனைவி ஒருவர் தன் கணவரிடம், "என்னங்க என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டதற்கு கணவர் அவரிடம், "நீ போட்டிருக்கிற நகையெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு"
  என்றார். அதற்கு மனைவி, "அத்தனையும் கல்யாணி கவரிங் நகை" என்றார். இன்று "கவரிங் நகை" போன்ற போலியான சபைகள் மக்களைக் கவர்ந்து ஈர்க்கின்றனர்.  போலிப் போதகர்களின் கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று திருச்சபையின் ஒன்றிப்பில் நிலைத்திருப்பது என்று திருச்சபைச் சட்டம் கூறுகிறது. "கிறிஸ்தவ விசுவாசிகள், தங்கள் செயல்பாட்டு முறையிலும் கூடத் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்கக் கடமைப்பட்டுள்ளனர் " (தி. ச. 209, ப 1).
  .
  திருச்சபையில், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதுபோல, *திருச்சபை நோயுற்றிருப்பதற்காகவே அதை நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும்." 'தமது சிறு மந்தையாகிய' (மத் 12:32) திருச்சபையைக் கிறிஸ்து கைவிட மாட்டார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" (மத் 16-18).

  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

  நதியின் பாதையை நகல் எடுத்தால்...

  உன்னதமான கத்தோலிக்கக் கிறிஸ்தவர். உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர். அவருக்கு 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத் தோழர்கள் என்று திரளாகப் பலர் கலந்து கொண்டனர். அத்தனை பேரும் அவரது நேர்மை, நிருவாகத் திறன், நேரம் தவறாக் கடமையுணர்வு, ஊழல் கறை படியாத கைகள் என்று வாயாரப் புகழ்ந்தனர். இறுதியாக ஒரு சில வார்த்தைகள் பேச அவரது மனைவியை அழைத்தார்கள். தயங்கி எழுந்த அவர் சொன்னார்: "நீங்கள் பட்டியலிட்ட அத்தனை பண்புகளுக்கும் சொந்தக்காரர்தான் என் கணவர். ஆனால் என்னைப் பொருத்தவரை அனைத்துக்கும் அப்பால், அவரை அரவணைத்து வழிநடத்தும், மன்னித்து ஏற்றுக் கொள்ளும் அன்பான கணவராக, குடும்பத்தலைவராகப் பார்க்கிறேன். எங்கள் திருமணம் பெற்றோர் ஏற்பாடு செய்த ஒன்று. அவரோடு முன்பின் பழகியதில்லை. 46 ஆண்டுகளுக்கு முன்னே புதுமணப் பெண்ணாகத் திருமண வழிபாட்டில் அவரருகில் நின்றபோது ஓரக்கண்ணால் உற்று நோக்கினேன். இவரை விட இன்னும் கொஞ்சம் நல்லவரை, இன்னும் கொஞ்சம் அழகானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்று கூட அப்போது தோன்றியது. ஆனால் இன்று மீண்டும் கணவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இவர்தான் என் கணவராக இருப்பார். இவரைத் தவிர வேறு எவரையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.'" பிசிறடிக்காத உறுதிப்பாடு கலந்த சொற்கள். அதற்குக் காரணம் தன் கணவரோடு பல ஆண்டுகள் அவர் பெற்றிருந்த நெருக்கமான அனுபவமே!

  உறவுகள் வளர்ந்து வலுப்பெறுவதும், தளர்ந்து வலு இழப்பதும் ஒருவரது அனுபவத்தால்தான். இறைவனோடு கொள்ளும் உறவுக்கும் அது பொருந்தும். அத்தகைய உறுதியான, ஆழமான உறவு அனுபவத்துக்கு இயேசு நம்மை அழைக்கிறார். அதனால் எழுந்ததுதான் அந்தக் கேள்வி: “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்.16:15).

  “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" (யோ. 1:46). ஏளனம் தொனிக்கும் இந்த சந்தேகக் கேள்வியில் இயேசுவின் பின்னணியை இரண்டாம் நிலைக்குத் தள்ளியவர் பர்த்தோலோமேயு என்ற நத்தனியேல். ஆனால் இந்தக் கேள்விக்கு ஞானம் தரும் பதில் "வந்து பாரும்." ஆய்ந்துஅறியும் அனுபவத்தில் நம்பிக்கை ஆழம் பெறுகிறது. தொலைவில் நின்று 'நாசரேத்தில் நல்லதா?' என்று கேட்ட நத்தனியேல் இயேசுவின் அருகில் வந்தபோதோ, நாசரேனாகிய இயேசுவில் நன்மையின் மொத்த உருவைக் கண்டது மட்டுமல்ல, இயேசுவில் தன் குருவை, இறைமகனை, இஸ்ரயேலின் அரசனைக் காண முடிந்தது (யோ. 1:49). நாமும் தொலைவில் நின்று கேள்வி கேட்பதோடு ஒதுங்கிவிடாது, அருகில் வந்து அனுபவித்து உணர்ந்து நம்பிக்கையில் வளர்வதே ஞானமாகும்.

  இரிசிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். துறவியாகட்டும், ஆறாகட்டும் தோன்றிய இடம், பிறந்து வளர்ந்த பின்னணி இதெல்லாம் பார்ப்பது நல்லதல்ல என்பது பொருள். பார்க்கத் தொடங்கினால் புரிந்து கொள்ளும் திறந்த மனம் வேண்டும்.

  நதியின் பாதையை நகல் எடுத்தால் - நம்
  கடல்நீர் எதுவும் புனிதமில்லை
  நடந்ததையெல்லாம் கணக்கெடுத்தால் – அட,
  நம்மில் எவரும் புனிதனில்லை.
  சிந்தனைக்குரிய கவிதை வரிகள்

  .

  இயேசுவின் மூலம் நாசரேத்தா? யோசேப்பா? அல்ல. தந்தையான கடவுள் அன்றோ! எனவே தொலைவிலிருந்து அருகில் நோக்கும்போது தந்தையான கடவுளே மூலம் என்பது தென்படும். தெளிவுபடும். எனவே இறைமகன் என்று அறிக்கையிடச் செய்கிறது, வந்து பாரும் என்ற அழைப்பும் அனுபவமும். நமது தனிப்பட்ட வாழ்வுச் சூழலில் இயேசுவுக்கும் நமக்குமுள்ள உறவு என்ன? இயேசு எனக்கு யார்? தந்தையா, தாயா, தலைவனா, நண்பனா, மருத்துவனா...? இந்தக் கேள்விக்கான நேர்மையான பதிலே நம் நம்பிக்கை எந்த அளவுக்கு வலுவுள்ளது என்பதை வெளிப்படுத்தும்.

  இயேசு திருஅவையைப் பேதுருவிடம் ஒப்படைத்தது அவரது ஆளுமையைப் பார்த்தோ, அவரது திறன்மிக்க செயல்பாடுகளின் பொருட்டோ அல்ல. அவரது உறுதியான நம்பிக்கையைக் கண்டே. திருஅவையின் அடித்தளம் நம்பிக்கை. இந்த அனுபவத்தைக் தொடக்கத்திலேயே பெற்றவர் பேதுரு. “அந்திரேயா, தன் சகோதரன் சீமோனைப் பார்த்து மெசியாவைக் கண்டோம் என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து 'நீ யோவானின் மகன் சீமோன். இனி கேபா (பாறை) எனப்படுவாய்' என்றார்" (யோ. 1:41,42).

  இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்ட கேள்விகள் இரண்டு. 1. “மானிட மகன் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? ” (மத். 16:13).
  2. "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத். 16:15).

  இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு? முதல் கேள்விக்குப் பதில் கூற ஒரு பத்திரிகையாளனாய் (Journalist) இருந்தால் போதும். இரண்டாவது கேள்விக்கோ ஒரு நம்பிக்கையாளனாய் (believer) இருக்க வேண்டும்.

  நான் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதுபோல் இயேசு இன்று நம்மைப் பார்த்து "நீங்கள் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" என்று கேட்கிறார்.

  கோமா நிலையில் ஒரு பெண். கடவுள் முன் நிறுத்தப்படுகிறார். "நீ யார்?" என்று கடவுள் கேட்க, “நான்தான் மேரி" என்கிறாள். “உன் பெயரையா கேட்டேன். நீ யார்?”. “நான் ஒரு ஆசிரியை”. “நீ என்ன வேலை செய்கிறாய் என்றா கேட்டேன். நீ யார்?" "நான் ஒரு கத்தோலிக்கப் பெண்”. “நீ எந்த சமயத்தைச் சார்ந்தவள் என்றா கேட்டேன். நீ யார்?”

  உண்மையில் கிறிஸ்தவன் என்ற நிலையில் எனது அடையாளம் எனது பெயரில் அல்ல, எனது தொழிலில் அல்ல, எனது திறமையில் அல்ல, எனது சமயத்தில் அல்ல.

  நான் கடவுளின் பிள்ளை. "நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்" ( I யோ. 3:1).நான் கடவுளின் சாயலைத் தாங்கியவன். அதனால்தான் இயேசு சொன்னார் : “உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல், நீங்களும் நிறைவுள்ளவர்களாக இருங்கள்”.

  நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையிலிருந்து தவறியபோது, கடவுளின் சாயலைக் கறைபடியச் செய்தபோது, இயேசு தன் உயிரைக் கொடுத்து, இரத்தத்தைச் சிந்தி நம்மை மீண்டும் புதுப்படைப்பாக்கினார். அதனால்தான் கிறிஸ்தவன் என்பவன் இயேசுவை மீட்பராக, ஆண்டவராகக் கொண்டு அவரில் சரணடைந்தவன். இயேசுவின் சீடன் தூய ஆவியின் துணை கொண்டு அவரைப் பின் செல்பவன்.

  புனித அகஸ்தினார் செய்த செபம்: “Noverim te, Noverim me". இறைவா, நான் உன்னை அறிய வேண்டும். உன்னில் நான் என்னை அறிய வேண்டும்.

  இன்றைய நற்செய்தியில் தன் திருஅவையைக் கட்டப்போவதாகச் சொல்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த அடித்தளம் என்ன? சீமோனுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது இயேசுவே அவருக்கச் சூட்டிய ஓர் அடையாளப் பெயர். “உன் பெயர் பேதுரு" (மத். 16:18). பேதுரு என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் பாறை என்பது பொருள்.

  இயேசு தம் திருஅவையைக் கட்டியது ஒரு பாறையின் மீது. பேதுருவின் நம்பிக்கை என்னும் பாறை மீது திருஅவை கட்டப்பட்டது போல நாமும் இறைநம்பிக்கை என்னும் பாறையை அடித்தளமாகக் கொண்டு நமது கிறிஸ்தவ வாழ்வைக் கட்டி எழுப்புவோம்.

  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

  2014ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் கொரியாவிலிருந்து இத்தாலிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் தன்னுடன் பயணம் செய்த நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பேட்டியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, திருத்தந்தை அளித்த பதில், இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கிறது. 2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ நகரில் திருத்தந்தை கலந்துகொண்ட உலக இளையோர் நாள் நிகழ்வை பின்னணியாக வைத்து, அந்நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு திருத்தந்தை அளித்த பதிலும், இதோ:

  நிருபர்: ரியோ நகரில் கூடியிருந்தோர், 'பிரான்செஸ்கோ, பிரான்செஸ்கோ' என்று கத்தியபோது, நீங்கள் அவர்களிடம் 'கிறிஸ்து, கிறிஸ்து' என்று கத்தச் சொன்னீர்கள். இவ்வளவு புகழை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? இவ்வளவு புகழுடன் எவ்வாறு வாழ்கிறீர்கள்?

  திருத்தந்தை: இதற்கு எவ்விதம் பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் இவ்வளவு மகிழ்வுடன் இருப்பதைக் கண்டு, நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மக்களின் தாராளமனதைக் கண்டு மகிழ்கிறேன். அவர்களுக்கு இறைவன் மிக நல்லவற்றையே செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். ஆழ்மனதில், என் பாவங்கள், தவறுகள், இவற்றை நான் எண்ணிப்பார்க்க முயல்கிறேன். நான் முக்கியமானவன் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.

  இந்த புகழ், ஆரவாரம் அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப் பின், நான் என் தந்தையின் இல்லம் செல்வேன் என்று தெரியும். இவற்றை (மக்களின் புகழ்ச்சியை) அதிகம் நம்பாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றிய எண்ணங்களோடு இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்பது பொருத்தமாகத் தெரிகிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு தலைவர், எவ்விதம் சிந்தித்து, செயல்பட்டு, வாழவேண்டும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை, யாரும் மறுக்கமுடியாது. ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணி செய்வதற்கே என்பதை, தான் திருஅவை தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

  இதற்கு மாறாக, ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளர்’ என்றும் மேடையில் முழங்கிக்கொண்டு, அதற்கு எதிர்மாறாகச் செயலாற்றும் தலைவர்களையும் நாம் இன்றைய உலகில் பார்த்து வருகிறோம்.

  இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. ஒருவருக்கு அதிகாரம் தரப்படுவதை, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் இன்றைய வாசகங்களில் விவரிக்கின்றனர்.

  பதவியிலிருந்த செபுனா என்ற அதிகாரி, அகந்தை கொண்டு, தன் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாததால், அவரை நீக்கிவிட்டு, எலியாக்கிம் என்பவரை இறைவன் உயர்த்துவதை, இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார். திருஅவையின் முதல் தலைவராக, புனித பேதுருவை இயேசு அறிவிப்பதை நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுகிறார். எலியாக்கிமுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை, பல்வேறு உருவகங்கள் வழியே இறைவன் விவரிக்கிறார். இதோ அப்பகுதி:

  எசாயா 22: 20-22

  அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.

  அங்கி, கச்சை, தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் என்ற பல அடையாளங்கள் வழியே எலியாக்கிமின் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது.

  இந்த ஆடம்பர அடையாளங்களைத் தொடர்ந்து, இறைவன் பயன்படுத்தும் இரு உருவகங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதிகாரத்தில் உள்ள ஒருவரை, இறைவன் எவ்விதம் உருவாக்குகிறார் என்பதை, இவ்விரு உருவகங்களும் தெளிவாக்குகின்றன:

  எசாயா 22:23

  உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான். இஸ்ரயேல் குலத்தின் தலைவனை, இறைவன், உறுதியான இடத்தில் முளைபோல் அடித்துவைப்பார் என்ற சொற்கள், அதிகாரத்தில் இருப்போரிடம் விளங்கவேண்டிய சில அம்சங்களை விளக்குகின்றன. உறுதியான நிலத்தில் அடிக்கப்படும் முளையில் கயிறுகட்டி, கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. எவ்வளவு பலமாகக் காற்றடித்தாலும், நிலத்தில் அடிக்கப்பட்டுள்ள முளை, கூடாரத்தைக் காப்பாற்றும். அதேபோல், மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகள் பாதுகாப்பாக மேய்வதற்கு, அடித்துவைக்கப்பட்ட முளையில் அவை கட்டப்படும். காக்கும் தொழிலைச் செய்யும் முளைபோல, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான பணி, காக்கும் பணி என்பதை இவ்வுருவகம் முதலில் நமக்கு உணர்த்துகிறது.

  அடுத்ததாக, உறுதியான இடத்தில் ஒரு முளை ஊன்றி நிற்பதற்கு, அது, தன் தலைமீது அடிகளைத் தாங்கவேண்டும். எவ்வளவு வலிமையாக அடிகள் விழுகின்றனவோ, அவ்வளவு ஆழமாக முளை, பூமிக்குள் புதைந்து, உறுதியாக நிற்கமுடியும். அதை நம்பி கூடாரங்களையோ, மிருகங்களையோ அதில் கட்டமுடியும். அதேபோல், தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள்மீது விழும் பல அடிகளைத் தாங்கிக்கொண்டு உறுதியுடன் நின்றால், பயனுள்ள தலைவர்களாகச் செயல்பட முடியும்.

  அடுத்ததாக, அரியணை என்ற உருவகமும் தலைவனுக்குரிய ஒரு பண்பை விளக்குகிறது. அரியணையை யாரும் சுமப்பது கிடையாது; அதுவே மற்றவர்களைச் சுமக்கிறது. அது மற்றவர்களைத் தாங்கும்போதுதான் பயனும், புகழும் பெறுகிறது. காலியாக இருக்கும் அரியணை, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. அதேபோல், தலைவர்களும், மற்றவர்களைத் தாங்கும்போதுதான், பயனும், புகழும் பெறுகின்றனர்.

  அண்மையில், மின்னஞ்சல் வழியே என்னை வந்தடைந்த ஒரு புகைப்படத்தில், யானை ஒன்று நதியைக் கடந்து செல்வதாகவும், அதன் முதுகின் மேல் நாயொன்று நின்றுகொண்டிருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட Michael Watson என்பவரது கூற்று, ஆழமான உண்மையைச் சொல்லித் தருகின்றது – Strong people don’t put others down. They lift them up. அதாவது, சக்திமிக்கவர்கள், அடுத்தவர்களை, கீழேத் தள்ளுவதில்லை. அவர்களை உயர்த்துகிறார்கள்.

  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக, திருஅவையின் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திய விதத்திலிருந்து, அவர் 'உறுதியான இடத்தில் அடித்துவைக்கப்பட்ட முளைபோலவும், பிறரைத் தாங்கும் அரியணைபோலவும்' விளங்குவதைக் காணமுடிகிறது.

  2014ம் ஆண்டு, ஆசிய இளையோரின் புகழ் மழையில் நனைந்து, புத்துணர்வு பெற்று, கொரியாவிலிருந்து, ஆகஸ்ட் 18, திங்கள் மாலை, உரோம் நகர் திரும்பினார், திருத்தந்தை. அடுத்தநாள், ஆகஸ்ட் 19, செவ்வாய் அதிகாலையில், திருத்தந்தையின் நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மூவர், ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தம்பி, மறைந்த Alberto Bergoglio அவர்களின் மகன், Emmanuel Bergoglio அவர்கள் ஓட்டிச்சென்ற கார், ஒரு லாரியுடன் மோதியதில், அக்காரில் பயணித்த எம்மானுவேல் அவர்களின் மனைவி, Valeria அவர்களும், அவர்களுடைய இரண்டுவயது குழந்தை Joseம், எட்டுமாதக் குழந்தை, Antonioவும் கொல்லப்பட்டனர். 35 வயதான எம்மானுவேல் அவர்கள், பலத்த காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.

  வேதனை நிறைந்த இச்செய்தியால், உருவான மனப்புயலை சுமந்துகொண்டு, ஆகஸ்ட் 20, புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கமானப் பணிகளைத் தொடர்ந்தது, ஓர் உன்னதத் தலைவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. அன்றைய மறையுரையில், தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை மக்கள் முன் எடுத்துரைத்து, திருத்தந்தையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்பதைச் சுட்டிக்காட்டியபின், மக்களின் செபங்களுக்காக அவர் விண்ணப்பித்தார். புதன் பொது மறையுரையை வழங்கிய நேரம் முழுவதும் திருத்தந்தை நடந்துகொண்ட விதம், 'உறுதியான இடத்தில் அடித்துவைக்கப்பட்ட முளைபோல, பிறரைத் தாங்கும் அரியணைபோல' அவர் இருந்தார் என்பதை உணரவைத்தது.

  புகழ் மாலைகள் வந்து குவிந்தாலும் சரி, துன்பம் என்ற புயல் வீசினாலும் சரி, சீரான மனநிலையுடன் செயல்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைத்துவம், அதிகாரம் என்ற சொற்களுக்கு, ஆழ்ந்த அர்த்தங்கள் தருகிறார். திருத்தந்தை பெற்றிருக்கும் சீரான மனநிலைக்கு ஒரு முக்கிய காரணமாக நான் கருதுவது, அவர் தன்னைப்பற்றி கொண்டுள்ள தெளிவான புரிதல் அல்லது, 'சுய அறிவு' (self knowledge). ஒருவர் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள, தன்னையே சரியாகப் புரிந்துகொள்ள, சுயத் தேடல்கள் நிகழவேண்டும். இத்தகைய ஒரு தேடலை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

  வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள், நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில், பல கேள்விகள், நம் உள்ளத்தில் எழும். அவற்றில், மிக முக்கியமான ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி. குறிப்பாக, ‘பிறர் கண்களில் நான் யாராகத் தெரிகிறேன்?’ என்ற கேள்வி.

  இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. நான் யார் என்ற தேடலை அடிப்படையாகக் கொண்டு, இயேசு எழுப்பிய இரு கேள்விகள், அன்று, சீடர்களுக்கும், இன்று, நமக்கும், சவாலாக அமைந்துள்ளன. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பன, அவ்விரு கேள்விகள்.

  "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், மறைகல்வி ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம். ஆனால், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இந்தக் கேள்விக்குப் பதிலாகவேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. சவால்கள் நிறைந்த அழைப்பு!

  இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நாம் கற்றுத்தேர்ந்த பதில்கள் அனைத்தும், வரிசையாக வெளிவரும். ஆனால், அந்த புத்தக அறிவோடு, நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர் 13: 1) எனவே, நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு, இயேசு கொடுக்கும் அழைப்புதான், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. இந்த அழைப்பை ஏற்பதற்கு, உண்மையிலேயே மிகுந்த துணிவு தேவை. இந்தத் துணிவை உணர்த்தும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது...

  கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். உலகப் புகழ்பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்குமாடி கட்ட்டங்களுக்கிடையே, கயிறு கட்டி, சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது.
  அதை அற்புதமாக அவர் செய்து முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடி வந்து அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்" என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.
  "என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப் பற்றி நான் கேள்வி பட்டபோது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது நானே நேரில் அவற்றைப் பார்த்துவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுச் சொன்னார்.
  "மற்றவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி..." என்று கேட்டார் அந்தக் கலைஞர்.
  "உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய், அதிசயமாய் சொன்னார்.
  "நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப் போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.

  அந்தக் கழைக்கூத்துக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர் தன் திறமையில் நம்பிக்கை வைத்து, தான் ஆற்றும் ஆபத்தான சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு கரைந்து விட்டார்.

  இயேசு தந்த அழைப்பை, புரிந்தும் புரியாமலும், புனித பேதுரு, தன் உள்ளத்தில் உணர்ந்த ஓர் உண்மையை எடுத்துரைக்கிறார். “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று அறிக்கையிடுகிறார். தன் அறிவுத்திறனைக் கொண்டு அல்ல, மனதில் தோன்றிய விசுவாச உணர்வுகளைக் கொண்டு, தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை, புகழ்வதோடு மட்டுமல்லாமல், திருஅவையின் முதல் தலைவராகவும் அவரை நியமிக்கிறார், இயேசு.

  திருஅவையின் 266வது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயேசுவை, தன் அறிவால் உணர்ந்ததைவிட, உள்ளத்தால் அதிகம் உணர்ந்தவர் என்பதை, நாம் பலவழிகளில் அறிவோம். தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை திருஅவைத் தலைவராக அறிவித்து, இயேசு அவரை வழிநடத்தியதுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், உடல், உள்ள நலத்துடன் வழிநடத்த வேண்டுமென்று இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.

  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

  “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்”

  நிகழ்வு

  சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவிலிருந்த ஒரு கத்தோலிக்கத் திருக்கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் யூதப் பெண்மணி ஒருவர் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தார். தற்செயலாக அவரைப் பார்த்த அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரிடம், “பொதுவாக யூதர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்வதில்லையே! அப்படியிருக்கும்போது நீங்கள், எங்களுடைய வழிபாட்டில் கலந்துகொள்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது! ஒருவேளை நீங்கள் கத்தோலிக்கராக மாறிவிட்டீர்களா...?” என்றார்.

  அதற்கு அந்த யூதப் பெண், “நான் யூத மறையில்தான் இன்னும் இருக்கிறேன்; கத்தோலிக்கராக மாறவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுத் அவர் தொடர்ந்து பேசினார்: “யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றபோதும், அவர் மூன்றாம் நாள் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தார்! இயேசு இறைமகன் இல்லையென்றால் அவரால் உயிர்த்தெழுந்திருக்க முடியுமா...? அவருடைய உயிர்த்தெழுதல் மட்டுமல்ல, அவருடைய வாழ்வும் பணிகளும்கூட அவர் இறைமகன் என்பதற்குச் சான்றுகள். இதனாலேயே நான் அவரை இறைமகன் என்று ஏற்றுக்கொண்டு, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டேன்.”

  அந்த யூதப் பெண் இவ்வாறு விளக்கமளித்ததைக் கேட்ட, கிறிஸ்துவப் பெண் இயேசுவின்மீது இன்னும் ஆழமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.

  ஆம், இயேசு இறைமகன்; மெசியா. அதைத்தான் இந்த நிகழ்வும், பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இயேசு இறைமகன், மெசியா என்றால், அவர் எப்படிப்பட்ட மெசியா என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

  மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?

  ஒரு நிறுவனமோ அல்லது இயக்கமோ... எதுவாக இருந்தாலும், அதை அவ்வப்பொழுது ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த நிறுவனமும் இயக்கமும் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் நல்ல முறையில் இயங்க முடியும்.

  இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு சேர்ந்து அப்பணியைச் செய்துவந்தார். இத்தகைய சூழ்நிலையில், அவர் தன்னோடு இருந்த சீடர்கள், தன்னைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய விரும்பினார். அதற்காக அவர் அவர்களிடம், இரண்டு கேள்விகளைக் கேட்கின்றார். இயேசு அவர்களிடம் கேட்கின்ற முதல் கேள்வி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்பதாகும். இயேசு இப்படியொரு கேள்வியை தன் சீடர்களைப் பார்த்துக் கேட்டதும் அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும், வேறு சிலர் எலியா எனவும், மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்கின்றார்கள்.

  இயேசு செய்த பணிகளைப் பார்த்துவிட்டு ஏரோது, “இவர் திருமுழுக்கு யோவான்தான்” (மத் 14: 1-2) என்றான். இயேசுவை மக்கள் எலியா என்று சொன்னதற்குக் காரணம், சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்ற எலியா (2அர 2: 11), ஆண்டவரின் நாள் வருமுன் வருவார் (மலா 4:5) என்ற நம்பிக்கை இருந்ததால் ஆகும். இயேசுவை மக்கள் எரேமியா என்று சொன்னதற்குக் காரணம், அவருடைய இறப்பைக் குறித்து திருவிவிலியத்தில் எங்கும் பதிவுசெய்யவில்லை. அதனால் இயேசுவை, இறைவாக்கினர் எரேமியா என்றும் சொன்னார்கள். இப்படி மக்கள் தன்னைக் குறித்து எப்படியெல்லாம் சொல்கின்றார்கள் என்பதை அறிந்த இயேசு, அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்கின்றார்.

  நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?>

  இயேசு தன்னுடைய சீடர்களிடம் கேட்கின்ற இரண்டாவது கேள்வி, “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்பதாகும். இயேசு முதல் கேள்வியோடு நிறுத்திருக்கலாம். காரணம் மக்கள் எண்ண ஓட்டத்தையே சீடர்களும் வெளிப்படுத்தினார்கள்; ஆனால், அவர் தன்னோடு இருந்தவர்கள் தன்னைக் குறித்து அறியாமல் இருந்தால், அது அவ்வளவு நல்லதல்ல என்பதால், அவர்களிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்கின்றார்.

  இயேசு கேட்ட இரண்டாவது கேள்விக்கு, எப்பொழுதும் சீடர்களின் சார்பாக அல்லது எல்லாரையும் விட முந்திக்கொண்டு பேசும் பேதுரு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். பேதுரு இவ்வாறு உரைத்ததும் இயேசு அவரிடம், நீ பேறுபெற்றவன்... இதை உனக்கு விண்ணகத்திலுள்ள தந்தையே வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றார். ஆம். மறையுண்மையை இறைவன் ஒருவருக்கு வெளிப்படுத்தாவிட்டால், அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் மறையுண்மைகள் குழந்தைகளுக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படும் (மத் 11: 25) பேதுரு குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அவர் இயேசுவை, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். இதற்காகவே இயேசு பேதுருவை நீர் பேறுபெற்றவன் என்கின்றார். மட்டுமல்லாமல், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருஅவையைக் கட்டுவேன்.....” என்கின்றார்.

  தான் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு

  மக்கள், தன்னை யாரென்று சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டறிந்த பின், தன்னுடைய சீடர்கள், தன்னை யாரெனச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்த பின், இயேசு அவர்களிடம், “தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று கண்டிப்பாய்க் கூறுகின்றார்.

  பேதுரு இயேசுவைப் பற்றி, “மெசியா” என்று சரியாய்த்தானே சொன்னார்...? பிறகு எதற்கு இயேசு, தாம் மெசியா என்பதை எவரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னார் என்ற கேள்வி எழலாம். இதற்கு முக்கியமான காரணம், சீடர்களும் சரி, யூதர்களும் சரி, ‘மெசியா’வைப் பற்றிக்கொண்டிருந்த தவறான புரிதல் ஆகும். சீடர்கள் உட்பட யூதர்கள் மெசியா என்பவர், உரோமையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தங்களை விடுவித்து, ஆட்சியை நிலைநிறுத்துவார் என்றுதான் நினைத்தார்கள். உண்மையில் இயேசு யூதர்கள் நினைத்ததுபோன்று அரசியல் மெசியா கிடையாது; அவர் துன்புறும் மெசியா. மேலும் அவர் பகைவர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுத்தரும் மெசியா கிடையாது; பாவத்திலிருந்து மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் மெசியா. அதனால்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தாம் மெசியா என்பதை எவரிடம் சொல்லவேண்டாம் என்கின்றார்.

  நாம் இயேசுவைத் துன்புறும் மெசியாவாகவோ அல்லது அரசியல் மெசியாவாகவோ பார்ப்பதற்கும் நம்முடைய வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. எப்படியெல்லாம் இயேசுவை அரசியல் மெசியாவாகப் பார்க்கின்றபொழுது, நாம் இன்றைய அரசுகளைப் போன்று மக்களை அடக்கியாளத் துடிப்பவர்களாக இருப்போம். மாறாக, இயேசுவை நாம் துன்புறும் மெசியாவாகப் பார்த்தோமெனில், பிறருக்காக நாமும் துன்பங்களை ஏற்கத் துணிபவர்களாக இருப்போம். ஏனெனில், நம்முடைய எண்ணம் எப்படியோ, அப்படியே நம்முடைய வாழ்வும் இருக்கும்.

  ஆகையால், நாம் இயேசுவை துன்புறும் மெசியாப் பார்த்து, பிறருடைய துன்பங்களில் நாமும் பங்குகொண்டு, அவர்களுடைய துன்பத்தைப் போக்கி, இன்பமாக மாற்ற, நம்மையே நாம் கையளிப்ப முன்வருவோம்.

  சிந்தனை

  ‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5: 5) என்பார் யோவான். ஆகையால், நாம் இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொண்டு, அவரைப் போன்று மானிட மீட்புக்காகப் பணிபுரிந்து, பலியாகத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

  கடவுளின் தெரிவு

  'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
  பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா!
  விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.'
  பேதுருவைப் பார்த்து இயேசு சொல்லும் மேற்காணும் வார்த்தைகள், பேதுருவின்மேல் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையைக் காட்டுகின்றன. அல்லது, வலுவற்ற பேதுருவை இயேசு தேர்ந்துகொண்டு அவரை வல்லமையாக்கும் செயல் நமக்குப் புலனாகிறது.
  கடவுளின் தெரிவு நமக்கு ஆச்சரியமானதாகவே இருக்கிறது.
  இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 22:19-23), அசீரியப் படை இஸ்ரயேலைச் சுற்றி நின்றபோது, தன் நாட்டு மக்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் அரசர் செப்னா. அவரிடமிருந்து அரசாட்சியைப் பறிக்கும் ஆண்டவராகிய கடவுள், எளியவனான எலியாக்கிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். வலுவற்றை ஒன்றைத் தேர்வு செய்கின்றார் கடவுள்.
  இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 11:33-36), கடவுளின் அருள்செல்வத்தாலேயே நாம் நிரப்பப்படுகின்றோம் என்று, கடவுளின் அருளின் மேன்மையை அடிக்கோடிடுகின்றார் பவுல்.
  இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
  (அ) வலுவற்ற நம்மைத் தெரிவு செய்வதன் வழியாகக் கடவுள் தன்னையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகின்றார்.
  (ஆ) கடவுளை அறிவதும் அறிக்கையிடும் அவர் நம்மைத் தெரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன. பேதுரு நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். அந்த அறிக்கை அவருடைய அறிதலின் வெளிப்பாடாக இருக்கிறது.
  (இ) 'கடவுளிடம் கொடுத்து வைத்தவர் எவருமிலர்' என்கிறார் பவுல். கடவுள் நமக்குக் கடன்பட்டவர் அல்லர். ஆனால், அவர் நம்மைச் செல்வராக்குகின்றார்.
  இறுதியாக,
  இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், 'நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?' என இயேசு தன் சீடர்களிடம் கேட்கின்றார்.
  சீடர்களும், 'திருமுழுக்கு யோவான்,' 'எலியா,' 'எரேமியா,' 'இறைவாக்கினர்' என விடையளிக்கின்றனர்.
  பேதுரு மட்டுமே, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என அறிக்கையிடுகின்றார்.
  கடவுள் ஒருபோதும் மற்றவர்களைப் போல இருப்பதில்லை.
  அல்லது, மற்றவர்களை விட மேலானவர் என்பதை பேதுரு அறிந்திருந்தார்.
  அந்த அறிதல் மிக எளிதாக வருவதன்று.
  மேலும், இன்றைய உலகில் நாம் பல நேரங்களில் அடுத்தவர்களைப் போல இருக்கவே விரும்பி, நம் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகிறோம். அடுத்தவரைப் போல இருப்பதைவிட, அடுத்தவரை விட மேலாக இருக்கும்போது நாம் தனித்தன்மை பெற்றுவிடுகிறோம்.

  இயேசு யார்? என அறிந்துகொள்ள முனையும் நாம், அதே கேள்வியில், நாம் யார் என்பதையும் அறிந்துகொள்கிறோம்.

  ஆகையால்தான், பேதுரு விடையளித்தவுடன், பாறையாக மாறுகின்றார்.

  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

  நான் யார்…?

  கடந்த வாரம் உறவு உரிமை போராட்டம் என்று நமது வாழ்வை கண் முன் நிறுத்திய இறை வார்த்தைகள், இந்த வாரம் மேற்குறிப்பிட்ட உறவு உரிமை போராட்டம் என்ற முக்கோண பரிமாணங்களின், முழுமையான உயிர் மூச்சாகச் செயல்படும் ஒரு வாழ்வின் இயக்கச் சக்தியை நமக்கு நினைவு படுத்துகின்றது. ஆறறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வினாடியும் தன் உள்ளத்தில் நினைவு கொண்டிருப்பது, அறிந்து கொள்ள துடிப்பது, தனது வாழ்வாக வாழ நினைப்பது; ஒரே ஒரு கேள்வியின்

  பதிலைத்தான்.

  தூங்கிக் கொண்டு இருப்பவனையும் விழித்துக் கொண்டு இருப்பவனையும் ஒருமித்து யோசிக்க வைக்கும் அந்தக் கேள்வி "நான் யார்" என்பதுதான். தினம் தினம் தன்னைத்தானே தேடி செயல்பட வைக்கும் உந்து சக்திதான் - அந்த "நான் யார்" என்ற கேள்வி. இந்தக் கேள்விக்கு, பதில் தெரிந்தவன் அமைதியாகின்றான்; தெரியாதவனோ, அலைந்து கொண்டிருக்கின்றான்.

  முதலில் இன்று பவுல் அடிகளார் அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, என்று கூறியவர் "தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” என்று நமது இயலாமையையும் நினைவு படுத்துகின்றார். அவருடைய வார்த்தைகளுக்கு நம்மிடம் மாற்றுக் கருத்துக்களோ, மறுப்போ இல்லை என்பதே உண்மை. இந்த உலக வாழ்வில் நம்மிடையே வாழும் மனிதர்கள் அவர்களுடைய வலிமையாலும் ஞானத்தாலும் பொருள் வளத்தாலும் என்ன செய்ய முடியும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அன்றாடம் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

  இது இப்படி இருக்க, சர்வ வல்லமையும் அதிகாரமும் கொண்ட இறைவன் என்ன செய்ய முடியும்?... ஏன் செய்கின்றார்?... என்பதை ஏசையா முதல் வாசகத்தில் நினைவு கூறுகின்றார். பாருங்கள், இறைவன் மனிதர்களை அரவணைக்கவும் - அகற்றி விடவும் அவர் கைக்கொள்ளும் தகுதிச் சான்று "என் ஊழியன்" என்ற உண்மையான உறவின் நிலைப்பாடு மட்டும்தான்.

  மேன்மைமிகு, இந்த உறவில் உரிமையுடன் நாம் நிலைத்து வாழும்போது அவர், தந்தையின் தலைமை பண்பிற்கு (எசாயா:22:21) நம்மை உயர்த்துகின்றார். ஆம், இதில் நாம் நினைவு கொள்ள வேண்டியது ஒவ்வொரு தந்தையும் ஒரு தலைவனே - ஒவ்வொரு தலைவனும் ஒரு தந்தையே. இறைவனை நாம் தந்தை என்றுதான் அழைக்கின்றோம். நம்மோடு இறைவனால் நமக்குள் இணைக்கப்பட்டுள்ள இறை சாயலை, (தொ:1:26) தந்தையின் பண்புகளை, முழுமையாக அவருடைய ஊழியனாக நாம் வெளிப்படுத்தும்போது மேன்மை மிகு அரியணை(தலைமை) நமது உரிமை ஆகின்றது. (எசாயா 22 : 23).

  நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தனது சீடர்கள் தன்னைப் பற்றி எத்தகைய மனநிலையோடு தன்னுடன் பயணிக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள இரண்டு வகையான கேள்விகளைக் கேட்க்கின்றார். ஒன்று மக்களைச் சார்ந்ததாகவும் இரண்டாவது தனது சீடர்களைச் சார்ந்ததாகவும் கேட்கப்பட்டிருக்கின்றன. சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

  அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் நாம் மிகவும் விழிப்பாக இருக்கின்றோம். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் அடுத்தவர்களின் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றோம். அதாவது நமது வாழ்க்கை முறை பிறர் போற்றும் நிலைக்கு இருக்க வேண்டும் என்று தினமும் போராடுகின்றோம். இயேசு இன்று இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்கவில்லை. மாறாக எனக்குரியவர்கள் என்ற அவருடைய சீடர்களிடம் “ஆனால் நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கின்றார். "நான் யார்" என்று ஒருமையில் கேட்கிறார். இதற்குப் பின் பேதுருவின் பதில் அதற்கு அவர் பெற்றுக் கொண்ட அதிகாரம் அரியணை மேன்மையென அனைத்தும் நாம் அறிந்ததே.

  அறியாதது - பேதுருவைப் போலவே இயேசுவின் பெயர் கொண்டு… நமது எல்லா மன்றாட்டுகளையும் இயேசுவின் நாமத்தினால் என்றுதான் தந்தையாம் கடவுளிடம் சமர்ப்பிக்கின்றோம். பேதுரு பெற்றுக் கொண்ட சகல மேன்மைமிகு அந்தஸ்துகள் அனைத்தையும், வான் வீட்டில் மட்டுமல்ல - உலக வாழ்விலும் நாமும் பெற்று மகிழ முனைப்போடு முன் சென்று கொண்டிருக்கின்றோம். உண்மைதானே; தேவையும் அதுதான். ஆனால் நாம் பெற்றுக் கொள்வது என்ன?. பேதுருவைப் போல் மன்றாட்டுக்களை ஏறெடுக்கும் முன் நாம் பேதுருவாக வாழ அழைக்கப்படுகிறோம் என்பதை எந்த அளவிற்கு நினைவு கொண்டுள்ளோம்?

  இயேசுவின் நான் யார் என்று கேள்விக்குப் பதிலாகத் தந்தையாம் கடவுள் யோர்தான் நதிக் கரையிலும், தாபோர் மலை உச்சியிலும் "இவரே என் அன்பார்ந்த மகன்" என்று அறிக்கையிட்டார். பேதுருவோ "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று சொல்கின்றார். இப்படிப்பட்ட ஒருவரை "காலம்" அவரை மரண விளிம்பில் நிறுத்தியபோது, அதிகாரத்தின் அடையாளமான பிலாத்துவால் இவரே மனிதன் எனப் பொருள்படும் வண்ணம் "இதோ மனிதன்" என்றும், கல்வாரியில் கடைசிவரை இருந்த நூற்றுவர் தலைவனால் உண்மையாகவே இவர் கடவுளின் மகனாக இருந்தார் என்றும் சான்று பகரச்செய்தது. அத்தோடு இயேசுவின் "அவர் யார்" என்ற அவருடைய பன்முக ஆளுமைக்கு இன்றும் காலம் சாட்சியாக நிற்கின்றது.

  ஆக, உண்மையாகவே நேர்மையாளராக - நீதிமானாக ஒரு மனிதன் முழுமையாக வாழும்போது, அவர் வாழும் கடவுளின் மகனாகவும், அவருடைய “பேரன்பிற்குரியவராகவும் இருக்கின்றார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துரைக்கின்றது. . அதாவது ஏசாயா கூற்றுக்கு இணங்க என் ஊழியன் என்று இறைவன் பெருமைப்படும் நிலைக்கு வாழ்பவன் எனவும் பொருள் கொள்ள முடிகிறது.

  சரி, ஆண்டவர் இயேசு அன்று கேட்ட அதே இரண்டு கேள்விகளை இன்று நம்முன் வைப்பார் எனில் நமது பதில் என்ன?.

  கேள்வி ஒன்று:- கிறிஸ்தவர்கள் எனப் பெயர் சூட்டி பெருமை கொள்ளும் உங்களை மக்கள் யார் என்று சொல்கிறார்கள்?
  கேள்வி இரண்டு:- “நான் உங்களை, நீங்கள் யாரெனச் சொல்கிறீர்கள்?”
  என்று கேட்டால்…!

  நமது பதில் என்ன?.

  தொடக்க நூலின் படி படைப்பால் நாம் இறைவனின் பிள்ளைகள். அதே நேரம், நமது வாழ்க்கை முறைகளால் அவரது ஊழியர்கள் என்று தலை நிமிர்ந்து நிற்க முடியுமா?... தலை நிமிர்ந்து நின்றால் மட்டுமே, நாம் கிறிஸ்தவர்கள் என்று அடுத்தவர்கள் நீங்கள் யார் என்று கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியும்.

  ஒரு சாதாரண மனிதன் தான் பெற்றுக் கொண்ட இறைசாயலை முழுமையாக வெளிப்படுத்தி வாழும்போது; "உலகையே மீட்டெடுக்கும் மெசியாவாக- கிறிஸ்து- அவனாக" அவன் யாரெனக் கேட்கும் அடுத்தவனுக்கு அடையாளம் ஆகின்றான்.

  இதோ இன்று,

  நீங்கள் யார் என்று இறைவன் கேட்கும் கேள்விக்குக் குறைந்தபட்சம். இதோ உமது ஊழியர்கள் என்று பதில் கூறும் தகுதியை நாம் பெற்றுக்கொள்ள நாளும் தொழுவோம் நல்லவனை…

  இறைவன் நம்மோடு.

  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
  மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
  ser