மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 20ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 56:1,6-7|உரோமையர் 11:13-15,29-32|மத்தேயு 15: 21-28

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

கனானியப் பெண்

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே நம்மைச் சிந்திக்கத் தூண்டும் வகையிலே விசுவாசத்தைப் பற்றிய அழகிய ஒரு நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது.

விசுவாசம் பற்றிப் பல வகையிலே நாம் விளக்கம் பெறலாம். ஆனால் இன்றைய நற்செய்தி தரும் விசுவாசம் என்பது புதுமையாக உள்ளது. விசுவாசம் நம்பிக்கை என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை எனலாம். விசுவாசம் என்பது இரு துருவங்கள் ஒன்றாகச் சந்திப்பது. எப்படி? வாக்கு மாறாதவர் தேவன். தன் உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் தவறாதவர். நம்மை நோக்கி வருகிறார். எனவே உடன்படிக்கையில், நம் வாக்குறுதியில் தவறும் நாம் அந்த உன்னத தேவனை நெருங்க, அவரோடு ஒன்றிக்க நடக்கும் சந்திப்புத்தான் விசுவாசம்.

இதற்குத் தகுந்த சான்றுதான் இன்றைய நற்செய்தியில் தரப்பட்ட கனானேயப் பெண்ணின் விசுவாசம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பாளை மறைமாவட்டம் புளியம்பட்டி என்ற திருத்தலத்திலே நான்கு குருக்களோடு சேர்ந்து ஒரு கடைசிச் செவ்வாய்க் கிழமை மதியம் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். காணிக்கைப் பவனி முடிந்து எழுந்தேற்றம் தொடங்கும் முன்பாக நெற்றியிலே திருநீறு வார்த்த ஒரு அம்மா, பீடத்தில் வந்து சிறிது மலர்கள், இரண்டு ரூபாய், அதோடு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும் பக்தியோடு பீடத்தில் வைத்து பக்கத்திலே அவருக்குத் தெரிந்த நிலையிலே மண்டியிட்டு செபித்தார். நடுவில் நின்ற குருவுக்கு இந்த நிகழ்ச்சியைக் கண்டு சிறிது கோபம், எரிச்சல் தென்பட்டது. கீழே தள்ளச் சொன்னார். அருகில் நின்ற ஒரு சிலர் குருக்களும் இப்படி காட்சி தந்தார்கள். ஆனால் யாரும் கீழே தள்ளவில்லை . ஆனால் பலி முடிந்தபின் அந்தப் பெண்மணி எங்களை நெருங்கி வந்து, சுவாமி! என் மீது கோபப்பட்டுவிடாதீர்கள். நான் ஒரு இந்துப் பெண். கடந்த ஆண்டு இதே நாளில் என் கணவன் என்னை விதவையாக விட்டுச் சென்றார். அதனால் இறைவனுக்கு ஏதாவது காணிக்கை ஒப்பு கொடுக்க விரும்பினேன் அவரது நினைவாக. இதற்குச் சரியான இடமும் நேரமும் நீங்கள் நிறைவேற்றும் பூசைதான் என நினைத்தேன். ஏனெனில் கடவுள் உங்கள் காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்போது என் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வார் அல்லவா! நான் செய்வது தவறுதலாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் அந்தப் பெண். இந்த வார்த்தைகள் எங்களை அப்படியே மவுனத்தில் ஆழ்த்தி, அவளது விசுவாசத்தை எண்ணி மகிழ்ச்சியும், பிரமிப்பும் அடைய வைத்தன.

சமயத்தில் நாம் கடவுளின் மக்கள். நமது விசுவாசமே உயர்ந்தது என எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சாராத சிலர் விசுவாசத்தில் ஊன்றியவர்களாய், அர்ப்பணத்தில் நிறைவுள்ளவர்களாய் இறைவனோடு இரண்டறக் கலந்தவர்களாக வாழ்வதை நாம் பார்க்க முடியும். அதற்குச் சான்றுதான் கனானியப் பெண். இவள் ஒரு புறவினத்தாள். கொச்சைத் தமிழிலே சொல்ல வேண்டுமானால் ஒரு அஞ்ஞானி . தன் எளிய விசுவாசத்தோடு இயேசுவை நெருங்குகிறாள். தன் அர்ப்பணக் காணிக்கையாக தன் மகளை முன் வைக்கிறாள். என் மகளை குணமாக்கும் என்று வேண்டுகிறாள்.

சீடர்களோ (குருக்களோ) முணு முணுக்கிறார்கள். கோபம் அடைகிறார்கள். எரிச்சல்படுகிறார்கள். இயேசு இல்லையென்றால் அடித்தே துரத்தியிருப்பார்கள். இவர்களையும் தொட வேண்டும் என்ற சிந்தனையில் நம் இறைவன் இயேசு ஒரு கொள்கையைச் சொல்லுகிறார். நான் இஸ்ரயேல் மக்களுக்கல்லவா சொந்தம். அவர்களே புதுமைப் பெறும் வரம் பெற்றவர்கள்.

ஆனால் அந்தப் பெண்ணின் விசுவாசத் தத்துவத்தைப் பாருங்கள். அவர்கள் உம் மக்கள் தான். நீ கூறியதுபோல நாங்கள் நாய்கள் தான். ஆனால் அந்த நாய்களுக்கு மேசையில் இருந்து கீழேவிழும் துண்டுகளைப் பொறுக்கித் தின்ன உரிமையில்லையா? என்று கேட்கிறாள்.

இயேசுவின் பதிலைப் பாருங்கள்: அம்மா! உன் விசுவாசம் பெரிது. நீ போகலாம். உன் மகள் குணமாகிவிட்டாள். எனக்குத் தெரிந்த மட்டும் விவிலியத்தில் உன் விசுவாசம் பெரிது என்று வேறுயாரையும் இயேசு வாழ்த்தியதாக நான் காணவில்லை. இந்த புறவினத்தாளை பற்றித்தான் கூறியுள்ளார்!

இன்று அதே ஆண்டவர் நம்மைப் பார்த்து ஜாண், அந்தோனி, ஆரோக்கியராஜ், பீட்டர் ராஜ், ஜெபமாலை உன் விசுவாசம் பெரிது என்று சொல்வாரா?

இன்றைய முதல் வாசகத்திலே இசையாஸ் கூறியதுபோல, தன்னை மதித்து, தன் உடன்படிக்கையின் மக்களாக வாழ விரும்பும் அனைவரின் காணிக்கைகளையும் செபங்களையும் ஏற்றுக் கொள்வதாக வாசிக்கின்றோம். இதையே 2-ம் வத்திக்கான் சங்கம் பிற சமயம் பற்றியக் கொள்கைத் திரட்டில் தன் மகிமையை வெளிப்படுத்தபிற மறைகளையும், வேதங்களையும் பயன்படுத்துகிறார் பழைய ஏற்பாட்டில் நிறைவேற்றியதுபோல. எனவே பரிசுத்த ஆவியானவர் செயல்பட வரையறைகள் இல்லை என்பது ஆணித்தரமாகத் தரப்படுகிறது. எனவே நம்மில் ஒருவகையான தற்பெருமையில் தோன்றும் திருப்தி நம் விசுவாசத்தை ஆழப்படுத்தாமல் விடலாம். அது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகக்கூட இருக்கலாம். எப்படி பரிசேயர் தாங்களே கடவுளின் மக்கள், தங்களுக்கே கடவுள் சொந்தம், வான் வீடும் அவர்களது பட்டா பூமி என்று கருதியது போல நம்மிலே அந்த உணர்வுகள் தோன்றலாம். அதனால் நாமே மிக நல்லவர் - நாமே எல்லாம் தெரிந்தவர் - நாமே வேதத்தை அனுசரிப்பவர் என்ற சிந்தனை மேலோங்கி ஆவியானவர் நம்மிலே செயல்பட நாம் தடையாக இருக்கலாம்.

 • இன்று ஆண்டவர் தரும் செய்தி, பிறவினத்தாரின் விசுவாசம் - அவர்களின் காணிக்கை அவர்களது பரிகார முயற்சி, உடன்படிக்கை செபம் போன்றவை, உன் பக்தி முயற்சிகளைவிட உயர்ந்த நிலையில் இருக்கும் கற்றுக்கொள்ளத் தவறாதே என்பதாகும்.
 • இந்தகனானேயப் பெண்ணைப் போல என்னை நெருங்கி வா, விலகி விடாதே. நீயும் நிறைவு பெறுவாய் எனக் கூறுகிறார். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1:37). விசுவாசத்தால் எல்லாம் கூடும் (மாற்கு 9:23).
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கடவுள் எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்பவர்

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்;
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்;
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்;
இல்லாதார் இல்லாத நிலை வேண்டும்
என்று ஆசைப்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் இனம், மொழி, நாடு அனைத்தையும் கடந்து நின்று, அனைவர்க்கும் வரம் தருபவர் இறைவன் என்ற உண்மையை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் வாசகம்: இங்கே இறைவன், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு (எசா 56:7ஆ) என்கின்றார்.

இரண்டாம் வாசகம்: இங்கே புனித பவுலடியார் பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கின்றேன் : உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கின்றேன் என்கின்றார்.

நற்செய்தி : இங்கே இஸ்ரயேல் குலத்தைச் சேராத பெண்ணொருத்தியைப் பார்த்து இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் என்கின்றார்.
இறைவன் எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்பவர்.
இதோ நமது காலத்திலே நடந்த இரு நிகழ்வுகள்!

அன்று தனது தாயின் சொல்லிற்கிணங்க தண்ணீரைத் திராட்சை இரசமாக்கிய இயேசு இன்றும் லூர்துநகர், பாத்திமா நகர், வேளை நகர், பூண்டி போன்ற இடங்களில் புதுமை செய்துவருகின்றார் என்பதை ஊரறியும், ஏடறியும்.
இதோ உலகெல்லாம் போற்றும் வேளாங்கண்ணியிலே தனது அன்னையின் வழியாக இயேசு செய்த இரு புதுமைகள் :

பால்காரப் பாலகனின் பானையிலிருந்த பாலைப் பொங்கச் செய்தது.
முடவனான மோர்காரச் சிறுவனை எழுந்து நடக்க வைத்தது.

பால்காரப் பாலகனும், மோர்காரச் சிறுவனும் கிறிஸ்தவர்கள் அல்லர். இருவரும் பிற மறையைச் சேர்ந்தவர்கள்!

ஆம். கடவுள் எல்லாரையும் தனது குழந்தைகளாகப் பாவித்து, எல்லாருக்கும் வரம் தரும் நல்லவர். இறைவனின் இனிய குழந்தைகளாக வாழ நாமும் வேற்றுமை பாராட்டாது எல்லாரையும் அன்பு செய்து, எல்லாருக்கும் உதவி செய்து வாழ்வோம்.


மேலும் அறிவோம் :

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (குறள் : 215).

பொருள் : உலக மக்களால் போற்றப்படும் பொதுநல நாட்டம் கொண்ட சான்றோரின் செல்வமும் அறிவும் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் ஊருணியானது நீரால் நிறைந்து விளங்குவது போன்றதாகும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நிறைவாகச் செபிக்கிறவர், நிறைவான ஆற்றல் பெற்றவர்.

ஒரு மனைவி தன் கணவரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "என் கணவர் தெய்வம் மாதிரி. நான் சொல்லுற எதையும் காதிலே வாங்கிக்க மாட்டார்." கடவுளுக்குக் காது இருக்கிறதா? அவர் மனிதருடைய அபயக் குரலைக் காதில் வாங்கிக் கொள்கிறாரா? என்று பலர் நினைக்கின்றனர். இக்கேள்விக்கு விவிலியம் கூறும் பதில் : "செவியைப் பொருத்தியவர் கேளா திருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?" (திபா 94:9). ஆனால் ஒரு சில நேரங்களில் கடவுள் நமது மன்றாட்டுகளுக்கு உடனடியாகச் செவிமடுக்காமல், காலம் தாழ்த்தி, நமது நம்பிக்கையைப் புடமிட்டுச் சோதிக்கிறார் என்கிறார் புனித பேதுரு. "அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப் படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1 பேது 1:7).

இன்றைய நற்செய்தியில் பிற இனத்தைச் சார்ந்த கனானியப் பெண்மணியின் நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. தன் மகளைக் குணப்படுத்த வேண்டுமென்று அவர் இயேசுவின் பின்னால் கத்திக்கொண்டு போகிறார். ஆனால் கிறிஸ்துவோ அவரது குரலைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நடந்து கொள்கிறார். அது மட்டுமல்ல, பிற இனத்தாரை நாய்க்கு ஒப்பிடுகிறார். ஒருவர் தன் தாய்மாமனுக்குக் கடிதம் எழுதியபோது, அன்புள்ள தாய்மாமனுக்கு என்று எழுதுவதற்குப் பதிலாக தவறுதலாக, அன்புள்ள நாய்மாமனுக்கு' என்று எழுதிவிட்டார். அதனால் பயங்கரச் சண்டை மூண்டது.

இயேசுவின் காலத்தில் யூதர்கள் பிற இனத்தாரை நாய்கள் என்று அழைத்தனர். அந்த வழக்காற்றைப் பயன்படுத்துகிறார் இயேசு . ஆனால் அது அவர் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்க வைத்த ஓர் அமிலப் பரிசோதனை. அப்பரிசோதனையில் அப்பெண் வெற்றி பெறுகிறார். இயேசுவின் சொல்லை வைத்தே அவர் இயேசுவின் மேல் வெற்றி கொள்கிறார். பிள்ளைகள் சாப்பிடும் போது சிதறி விழுகின்ற உணவை நாய்கள் சாப்பிடுவதில்லையா? என்று சொல்லி இயேசுவையே வியப்புக் கடலில் ஆழ்த்துகிறார். இயேசு அவரின் நம்பிக்கையைப் பாராட்டி, "அம்மா உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" (மத் 15:28) என்று கூற, அப்பெண்ணின் மகள் குணமடைகிறாள்.

கடவுள் யூத இனத்தாருக்கு மட்டுமல்ல பிற இனத்தாருக்கும் கடவுள். இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்தாரைக் குறித்து கடவுள் கூறுகிறார்: "அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன். இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்" ( எசா 56:7).

மீட்பின் வரலாற்றில் பிற இனத்தார் கிறிஸ்துவை மெசியாவாக ஏற்ற நிலையில், யூத இனத்தார் அவரை மெசியாவாக ஏற்றுக் கொள்ளாததற்கு உரிய காரணத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆழமாக விளக்குகிறார் திருத்தூதர் பவுல். யூத இனத்தார், பிற இனத்தார் மீட்படைந்ததைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களும் கிறிஸ்துவை ஏற்று மீட்படைவர் என்கிறார்.

ஒரு வீட்டில் நான்கு வயது சிறுவனுக்கு அம்மா ஒரு தட்டில் உணவு வைத்துக் கொடுக்கிறார். அவன் அதை உண்ண மறுக்க, அவனிடம், "உன் சாப்பாட்டை உன் அண்ணனுக்குக் கொடுக்கப் போகிறேன்" என்று சொல்கிறார். உடனே அச்சிறுவன் தன் சாப்பாட்டை அண்ணன் சாப்பிடுவதா? என்று பொறாமைப்பட்டு உடனடியாக சாப்பிடுகிறான். அவ்வாறே தாங்கள் பெறவேண்டிய மீட்பு பிற இனத்தாருக்குப் போய்விட்டதே என்று யூத இனத்தார் ஆதங்கம் அடைவர். அப்போது அவர்களும் கிறிஸ்துவை ஏற்று மீட்படைவர் என்கிறார் புனித பவுல். கடவுளுடைய மீட்பின் முழுமையான திட்டம் உரிய காலத்தில் திண்ணமாக நிறைவேறும். ஏனெனில் புனித பவுல் கூறுகிறார்: " கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோ 11:25).

செபத்தின் வல்லமை பற்றி புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார். கடவுள் உலகை ஆளுகிறார். ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை முடியும்' என்று சொல்ல வைக்கிறார். கனானியப் பெண்மணி இப்புனிதரின் கூற்றை எண்பிக்கின்றார். இயேசு முடியாது' என்று சொன்ன பிறகும் கனானியப் பெண் அவரை முடியும்' என்று சொல்ல வைக்கிறார்.

"வீட்டில் அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா?" என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில் : "அம்மாதான் பெரியவங்க. என் அப்பா அவருடைய தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆயிரம் பேரை அடக்கி ஆளுகிறார். ஆனால் வீட்டிலே என் அம்மா அப்பாவையே அடக்கி ஆளுறாங்க" கடவுள் உலகையே ஆளுகிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார்.

செபத்தின் வல்லமை பற்றி யாக்கோபு கூறுகிறார்: "நேர்மையாளருடைய மன்றாட்டு பயனளிக்கும். எலியா நம்மைப் போன்று எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார். மூன்று ஆண்டு ஆறு மாதம் மழை இல்லாது போயிற்று மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது" (யாக் 5:16-18).

 • நிறைவாகச் செபிக்கிறவர், நிறைவான ஆற்றல் பெற்றவர்.
 • குறைவாகக் செபிக்கிறவர், குறைவான ஆற்றல் பெற்றவர்.
 • செபிக்க மறந்தவர், ஆற்றல் அற்றவர்.
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கடவுளை ஆளும் மனிதன்

செபம், கடுந்தவம், அயரா உழைப்பு இவற்றில் வைத்த நம்பிக்கையே வியான்னி மரி யோவானை;ப பங்குக்குருக்களின் பாதுகாவலராக்கியது.

ஒரு நாள் அவர் என் கனவில் வந்தார் “கடவுளை விடச் சக்தி வாய்ந்த மனிதரை எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே.

“கடவுளை விடச் சக்தி வாய்ந்தவரா? அது யாரோ?” என்று கேட்டேன். “அவர்தான் செபிக்கத் தெரிந்த மனிதர்” என்றார் புனிதர்.

“அது எப்படி?” உரையாடலைத் தொடர்ந்தேன்.

"கடவுள் முடியாது என்று சொன்னபிறகும் செபிக்கத் தெரிந்த மனிதர் தனது செபத்தினால் கடவுளை முடியும் என்று சொல்ல வைக்கிறார்." விளக்கினார் வியான்னி.

ஒரு கணம் சிந்தித்தேன். புனிதரின் இந்தக் கூற்று மரியாவின் வாழ்வில் முழுக்க முழுக்க உண்மையாகவில்லையா? எனது நேரம் இன்னும் வரவில்லை, எனவே புதுமை செய்ய இயலாது என்று சொல்லிவிட்ட நிலையிலும் மரியாவின் மனந்தளரா மன்றாட்டுத்தானே கானாவூர் திருமணத்தில் முடியும் என்று இயேசுவைச் செயல்பட வைத்தது! (யோவான் 2:1-11).

கானாவூரில் மரியா என்ன, கானானியப் பெண் விசுவாசத்தோடும் விடாமுயற்சியோடும் வியத்தகு தாழ்ச்சியோடும் இயேசுவையே வென்ற கதை நமக்குத் தெரியும். நம்பிக்கையோடு கூடிய செபத்துக்குத்தான் எவ்வளவு வல்லமை! இயேசுவின் மௌனம், மறுப்பு மொழி, இழித்துரைப்பு இவற்றிற்கிடையிலும் அந்தப் புற இனத்துப் பெண்ணின் விசுவாசத்துக்கு முன்னே இயேசுவன்றோ தோற்று நிற்கிறார்! தன் திட்டத்தையே கூட மாற்றிக் கொள்கிறார். (மத்.15:21-28).

விடுதலைப் பயணத்தில் இஸ்ரயேல் மக்கள் ஒரேபு மலையை விட்டுப் புறப்பட்ட போது வணங்காக் கழுத்துள்ள மக்களாக இருந்த இஸ்ராயேலரோடு கூட இறைவன் செல்ல மறுத்து ஒரு தூதனை அனுப்புவதாகச் சொல்ல மோசேயின் பரிந்துரை செபம் எப்படிக் கடவுளின் எண்ணத்தையே மாற்றி “நீ கூறியபடியே செய்வேன்” என்று சொல்ல வைத்தது? (வி.ப. 33:1-19).

என் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரையாடலுக்கு முத்தாய்ப்பு வைத்தார் புனித வியான்னி: “கடவுள் உலகை ஆள்கிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை ஆள்கிறார்".

புனிதர் சொன்னதையெல்லாம் தொகுத்துப் பார்க்கிறேன். செபத்தின் மேன்மை, அதன் ஆற்றல் பற்றி இவ்வளவு ஆழமாக அழுத்தமாக செபமனிதர் வியான்னியை விட வேறு யார் சொல்லி இருக்க முடியும்?

"கடவுளை விடச் சக்தி வாய்ந்த மனிதரை எனக்குத் தெரியும். அவர்தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் முடியாது என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்த மனிதர் தனது செபத்தினால் கடவுளை முடியும் என்று சொல்ல வைக்கிறார். கடவுள் உலகை ஆள்கிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை ஆள்கிறார்"

பெரிய பெரிய சாதனைகள் அனைத்தும் திறமையினால் அல்ல, விடா முயற்சியினாலேயே சாத்தியமாகியுள்ளன. விதைத்ததும் செடியாவதில்லை விதைகள். நினைத்ததும் நிறைவேறுவதில்லை கனவுகள். நம்பிக்கை கொள் ... இருளின் முடிவில் நிச்சயம் உண்டு விடியல்!

கடவுளிடமிருந்து அருள் பெற நம்பிக்கைதான் முக்கியமேயொழிய ஒருவனது குலமோ, மதமோ, பணமோ அல்ல என்பதுதானே கானானியப் பெண் நமக்குக் கற்றுத்தருவது! "பிற இனத்து மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன் ... என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு..." (எசா. 56:7). ஆனால் அந்த இல்லத்தை நோக்கிய வழியில் கடவுள் எப்படியெல்லாம் கானானியப் பெண்ணின் நம்பிக்கையைச் சோதனை அனலில் வறுத்தெடுக்கிறார்! "அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (I பேதுரு 1:7).

நம்பிக்கை சோதனைக்கு ஆளாகிறது என்பதைவிட, அது பயிற்சிக்கு உட்படுகிறது என்பதே உண்மை. "தாவீதின் மகனே என்மீது இரங்கும்” என்ற கானானியப் பெண்ணின் கதறலுக்கிடையே இயேசு காத்த மௌனமாகட்டும், “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” (மத். 15:24) என்ற மறுப்புமொழியாகட்டும், "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல" (மத். 15:26) என்றஇழித்துரைப்பாகட்டும், எல்லாமே விசுவாசப் பயிற்சியின் வேறுபட்ட பரிணாமங்கள்.

நற்செய்தியில் மறுமொழிகூறாமல் இயேசு மௌனம் காத்த இடங்கள் உண்டு. ஏரோதுவுக்கு முன்னால் (லூக். 23:9) பிலாத்துவுக்கு முன்னால் (யோ. 19:9) ஆகியவை எடுத்துக்காட்டுகள். இந்த மௌன நேரங்கள் இயேசு நம் இதயத்தைத் தேடும் நேரங்களாகும். மனித மனங்களை வாசித்தறியும் நேரங்கள்! நம் செபங்களில் இயேசு நம்மையும் நம் வாழ்வின் சூழல்களையும் உற்று நோக்குகிறார். என்று உணர்ந்து கொள்வோம். இயேசுவின் மௌனத்தைப் புரிந்து கொள்ளாதவன் இயேசுவின் வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே கொடுக்கும்வரை கேட்டுக் கொண்டே இருப்போம். திறக்கும் வரை தட்டிக் கொண்டே இருப்போம்.

இறைநம்பிக்கையைத் தசைக்கு ஒப்பிடலாம். எவ்வளவு பயிற்சிக்கு உட்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது வலுப்பெறும். பயிற்சிக்கு உட்படாத இறை நம்பிக்கை தொங்கு சதையாகப் பலவீனப்படும். செபப்பழக்கம் இறைவார்த்தை வாசிப்பு, அருள்சாதன ஈடுபாடு எல்லாமே நம்மைத் தொடர் பயிற்சிக்கு உட்படுத்தும்.

"நாயினும் கடையேன்” இறையடியார்களின் உணர்வாகத் தமிழ் பக்தி இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. காரணம்?

1. எந்த வேடத்தில் தலைவன் வந்தாலும் இனம் கண்டு கொள்ளும் நாய், நானோ எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளை இனம் கண்டு கொள்வதில்லை. எனவே நாயினும் கடையேன்.

2. தான் கக்கி உமிழ்ந்த வாந்தியையே நக்கிச் சுவைக்கும் நாய். “நாய் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும். அதுபோல மூடர் தாம் செய்த மடச்செயலையே மீண்டும் செய்வர்” (நீ.மொ. 26:11). நானோ என் பாவச் சேற்றிலேயே புரண்டு இன்புறுபவன். எனவே நாயினும் கடையேன்.

இயேசுவின் முன் தன்னை நாயாக ஏற்று இறையடியார்களின் வரிசையிலேயே இடம் பெற்றுவிட்டாள் கானானியப் பெண்!

"இறைவன் மனிதனிடம் சொல்கிறார் :
நான் உன்னைக் குணப்படுத்துகிறேன்.
அதனால் உன்னைக் காயப்படுத்துகிறேன்.
நான் உன்னை நேசிக்கிறேன்.
அதனாலேயே உன்னைக் கண்டிக்கிறேன்” - தாகூர்.

"வெகு தொலைவில் உறையும் கடவுளையே பிரார்த்தனை நமக்கு மிக அருகில் கொண்டு வந்து அவருடைய ஆற்றலை நம்முடைய முயற்சியோடு, உழைப்போடு ஒருங்கிணைத்து விடுகிறது” என்பார் கேஸ்பரின்.

"பிரார்த்தனையின் மூலமாகக் கடவுளின் மன உணர்வை என்னால் மாற்ற முடியும் என்றால் நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கடவுளைத் தொல்லைப்படுத்தியாவது என்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வேன்” என்பார் மில்ட்டன்.

பறந்து செல்லும் பறவைகள் ஆறுகளை எப்படிக் கடப்பது என்று திகைக்கிறதில்லை. செபிக்கத் தெரிந்த மனிதர்கள் வெள்ளம் போன்ற துன்பங்களைக் கண்டு மலைக்கிறதில்லை.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

‘நாம்’–‘அவர்கள்’ - பிரிவை இணைக்க...

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் 11ம் தேதி, The Guardian என்ற ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தி, நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்கிறது. இந்தச் செய்தி, உலகின் எல்லா நாடுகளிலும் பரவிவரும் ஓர் அரசியல் தந்திரத்தை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. "Don't be fooled by the myth of 'migrant invasion'", அதாவது, "'குடிபெயர்ந்தோரின் படையெடுப்பு' என்ற கட்டுக்கதையால் ஏமாற்றப்படவேண்டாம்" என்பது, இச்செய்தியின் தலைப்பு. இச்செய்திக் கட்டுரையின் ஆரம்ப வரிகள், இன்றைய அரசியலைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, இந்த ஞாயிறு வழிபாட்டின் வாசகங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன.

"ஒரு நாடு, மற்றொரு நாட்டிற்குள், அனுமதியின்றி, தன் இராணுவ வலிமையுடன் நுழைவதே, படையெடுப்பாகும். (அதிகார வெறியால் மதியிழந்த இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமிர் புடின், தன் நாட்டு இராணுவத்தை பயன்படுத்தி, கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் மேற்கொண்டுவரும் வன்முறையை 'படையெடுப்பு' என்று நாம் கூறமுடியும்.) தங்கள் நாடுகளில் நிகழும் ஆக்ரமிப்பு, தாக்குதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்து, ஏனைய நாடுகளில் அடைக்கலம் தேடிச்செல்லும் சிறு, சிறு குழுவினரின் வருகை, 'படையெடுப்பு' அல்ல. இருப்பினும், பிரித்தானிய அரசியல், குடிபெயர்ந்தோரின் வருகையை, 'படையெடுப்பு' என்ற சொல்லால் வர்ணித்து, மக்கள் உள்ளங்களில் அச்சத்தை உருவாக்குகின்றது" என்று, இக்கட்டுரையின் ஆரம்ப வரிகள் கூறுகின்றன.

பிரித்தானிய அரசியல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இந்த அரசியல் தந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். அதிலும், அண்மைய ஒரு சில ஆண்டுகளாக, இந்தத் தந்திரத்தை, ஓட்டுவாங்கும் மந்திரமாகவும், பல அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான குடியுரிமை திருத்தச் சட்டம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு எல்லையில் முன்னாள் அரசுத்தலைவர் டிரம்ப் எழுப்பிவந்த சுவர், மணிப்பூர் மாநிலத்தில் அரசின் முழு ஆதரவுடன் நடைபெற்றுவரும் வன்முறை ஆகியவை, குடிபெயர்ந்தோரின் வருகையை ‘ஆபத்தான படையெடுப்பு’ எனக் காட்டும் அரசியல் தந்திரத்தின் அவலமான அடையாளங்கள்.

ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தில் வேரூன்றியிருந்த வரவேற்பும், விருந்தோம்பலும், மறைந்து, அந்நியரை ஆபத்தாகக் கருதும் சிந்தனை, கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் வளர்ந்துள்ளது. நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று பாகுபாடுகள், பெருகிவருவதால், மோதல்களும், கலவரங்களும் பெருகிவருகின்றன. பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்:

இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்.

பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணையமுடியும் என்று இறைவன் வழங்கும் உறுதி மொழிகள், தேனாக நம் காதுகளில் பாய்கின்றன, விவிலியத்தின் பல இடங்களில் காணக்கிடக்கும் இத்தகைய உறுதிமொழிகள், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, ஏனைய மதத்தவருக்கும், மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. அவர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை, ஆழமாக வாசித்தபின், ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக்கொடுமைகளில் சிக்கித்தவித்த இந்தியாவுக்கு, கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார்.

தன் விருப்பத்தை, நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன், அவர், ஒரு ஞாயிறன்று, கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர், காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென அடுத்த வீதியில் உள்ள கோவிலுக்கு அவர் செல்லவேண்டும் என்றும் கூறினார். அன்று, அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் அக்கோவில் பக்கம் திரும்பவேயில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாக இருப்பதே மேல்" என்று, அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

பிரிவுகளை வலியுறுத்தும் தடைகளைத் தாண்டி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண், நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித்தருகிறார். தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண், தீயஆவி பிடித்த மகளுக்குத் தாய் என்று, அடுக்கடுக்காக, சுமத்தப்பட்ட பல தடைகளை, துணிவுடன் தாண்டி, அப்பெண், இயேசுவை அணுகிவருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம், மீண்டும், மீண்டும், அவர் வருகிறார்.

இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்து, இயேசு, அப்பெண்ணிடம் கூறும் கடுமையான சொற்கள், நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. இயேசு, அந்தப் பெண்ணின் நம்பிக்கையை சோதிக்கவே இவ்வாறு பேசினார் என்று, நாம் காரணங்கள் கூறினாலும், இயேசு இவ்வாறு பேசியது, நமக்குள் நெருடலை உருவாக்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தான் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு எண்ணங்களை உள்வாங்கியிருந்த இயேசுவுக்கு, அப்பெண் பாடம் புகட்டினார் என்ற கோணத்திலும், இந்நிகழ்வை நாம் சிந்திக்கலாம். இயேசுவுக்கு பாடம்புகட்டிய அந்தத் தாயின்பக்கம் நம் கவனத்தைத் திருப்புவோம்.

தன் மகளை எப்படியாகிலும் குணமாக்கிவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்... அதை, ஒருவகையான வெறி என்றுகூடச் சொல்லலாம்... அத்தகைய வெறியுடன், அப்பெண், இயேசுவைத் தேடி வந்திருந்ததால், அவர் கூறிய கடினமான சொற்களையும், தனக்கு உதவும்வண்ணம், நேர்மறையான கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, அந்தத் தாய், தன் விண்ணப்பத்தை மீண்டும், மீண்டும் இயேசுவிடம் விடுக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை, இயேசு வலியுறுத்திக் கூறியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்பதை, ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணின் நம்பிக்கை, நமக்கு பாடமாக அமைகிறது.

பெண்கள், குறிப்பாக, அன்னையர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அசாத்தியமானது என்பதை நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி, ஓர் ஏழைத்தாயின் அசைக்கமுடியாத உறுதியையும், நம்பிக்கையையும் வெளிக்கொணர்ந்தது. தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற அத்தாயைக் குறித்து வெளியானச் செய்தியின் சுருக்கம் இதோ:

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார் திவ்யா. மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால், தந்தை, குடும்பத்தைவிட்டு சென்றுவிட்டார். இதனால் தனி நபராக, திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி...

எக்காரணத்துக்காகவும், மகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி அவர்கள், கடந்த 12 ஆண்டுகளாக, மகளை, இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து, அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி அவர்கள், மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார். கருவாய் மகளை 10 மாதங்கள் சுமந்த தாய், கல்விக்காக 12 ஆண்டுகளாகச் சுமப்பது, அங்குள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், அண்மையில் வெளியான மற்றொரு செய்தி இதோ: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற தாய், கால்களிலும், கைகளிலும் குறையுடன் பிறந்த தன் மகள் கௌரிமணியை கடந்த 12 ஆண்டுகளாக இடுப்பில் சுமந்து சென்று பள்ளியில் படிக்க வைத்தார். அன்னையின் இந்த தியாகச் செயலுக்கு தகுந்த பதிலிறுப்பாக இளம்பெண் கௌரிமணி, இவ்வாண்டு 12ம் வகுப்புத் தேர்வில் 425 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இச்செய்தி, ஜூலை 16ம் தேதி வெளியாகியிருந்தது.

மனித வரலாற்றின் துவக்கத்திலிருந்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும், பத்மாவதி மற்றும் அனிதா போன்று, பலகோடி அன்னையர் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்ந்துவருகின்றனர். அங்கக்குறையுடன் பிறந்த தங்கள் மகள்களையும், மகன்களையும் வாழ்வில் வெற்றிபெறச் செய்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் இத்தகைய அன்னையருக்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண், அன்று, இயேசுவுக்கும், ஒரு சில பாடங்களைச் சொல்லித்தந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாடங்களை உள்வாங்கிய இயேசு, அப்பெண்ணின் நம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” (மத். 15: 28) என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

கிறிஸ்தவ மறையில் பிறந்து, வளர்ந்துவரும் பலர், நம்பிக்கையில் குன்றியிருப்பதையும், கிறிஸ்துவைப்பற்றி ஓரளவே தெரிந்த வேற்றுமதத்தவர், பேரளவு நம்பிக்கை கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் கானானியப் பெண்ணைப்போல, வேற்று மதத்தவர் பலர், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு, சவாலாகவும், பாடமாகவும் அமைந்துள்ளனர் என்பதை பணிவுடன் ஏற்று, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

பாகுபாடுகளை மூலதனமாக்கி, நம்மை, சுயநலச் சிறைகளில் அடைத்துவைக்கும் அரசியல்வாதிகள், வெட்கித் தலைகுனியும்வண்ணம் இயற்றப்பட்டுள்ள ஓர் அழகிய தமிழ் செய்யுள் கூறும் எண்ணங்கள், நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று துவங்கும், கணியன் பூங்குன்றனார் அவர்களின் கவிதை வரிகள், வெறும் கவிதையாக, பாடலாக, நின்றுவிடாமல், நடைமுறை வாழ்வின் இலக்கணமாக மாறவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; ....
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு - 192ம் பாடல்)

இதோ, இக்கவிதையின் பொருளுரை: எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் சொந்தம் நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை... பிறந்து வாழ்வோரில், பெரியோரை வியந்தது இல்லை. சிறியோரை இகழ்ந்தது அறவே இல்லை.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கையின் ரொட்டித் துண்டுகள்!

கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை நம்பிக்கை குறைக்கிறது. நம்பிக்கை என்ற ஒன்று உதித்தவுடன் கடவுள் நம்மவர் என ஆகிறார். இஸ்ரயேலர்களுக்கு மட்டுமே கடவுள், அவர்களுக்கு மட்டுமே மீட்பு என்னும் குறுகிய பார்வை மறைந்து, அனைவரும் கடவுளை நோக்கி வர முடியும் எனச் சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகம் மூன்றாவது எசாயா (56-66) என்னும் எசாயா நூலின் பகுதியின் தொடக்கப் பகுதியாக இருக்கிறது. மூன்றாவது எசாயா பகுதி நிறைய நேர்முகமான கருத்துகளைத் தாங்கியிருப்பதோடு, ஆறுதல் மற்றும் எதிர்நோக்கின் செய்தியைத் தருகிறது. முதல் வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை உடன்படிக்கைப் பிரமாணிக்கத்திற்கு அழைக்கிறார். உடன்படிக்கைப் பிரமாணிக்கம் என்பது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதிலும், ஓய்வுநாளை அனுசரிப்பதிலும், இவற்றையும் தாண்டி நீதியை நிலைநாட்டி நேர்மையைக் கடைப்பிடிப்பதில் அடங்கியுள்ளது. ஆக, வெறும் வழிபாடு சார்ந்த பிரமாணிக்கம் தாண்டி உறவு அல்லது அறநெறி சார்ந்த பிரமாணிக்கம் வலியுறுத்தப்படுகிறது. இரண்டாம் பகுதியில், பிற இனத்தாரும் ஆண்டவரின் திருமலைக்கு வருவர் என்றும், அவர்களும் தம் இல்லத்தில் இறைவேண்டல் செய்வர், அவர்களுடைய அண்ணகரும் (திருநங்கையர், திருநம்பியர்) தமக்குத் திருப்பணி ஆற்றுவர் என்னும் ஒரு பெரிய புரட்சிகரமான சிந்தனையை அறிவிக்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

'திருமலை' என்பது ஒரே நேரத்தில் 'சீனாய் மலையையும், சீயோன் மலையையும்' குறிக்கிறது. சீனாய் மலையின்மேல் மோசே மட்டுமே ஏறிச்செல்ல முடிந்தது. மற்றவர்கள் அந்த மலை அருகில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. சீயோன் மலை ஆலயம் இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டுத்தலமாக மட்டுமே இருந்தது. இவ்விரு மலைகளிலும் தூய்மை-தீட்டு என்னும் கருத்துரு கடைப்பிடிக்கப்பட்டு, தூய இனமாகிய இஸ்ரயேல் அனுமதிக்கப்பட்டு, தூய்மையவற்றவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டவராகிய கடவுள் இப்போது இத்தகைய கருத்துருவை உடைக்கிறார். நம்பிக்கை வழியாகக் கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறார். இவ்வாறாக, பிறஇனத்தாரைக் கடவுள் தமக்கு அருகில் அழைப்பதோடு, அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள் என்னும் பரந்த எண்ணத்தை இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார்.

இரண்டாம் வாசகப் பகுதி, 'இஸ்ரயேலர்களுக்கு மீட்பு' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பவுல், தான் பிற இனத்தாருக்குத் திருத்தூதராக இருந்தாலும், அவர்களை இயேசுவின்மேல் உள்ள நம்பிக்கைக்கு இட்டுச் சென்றாலும், தன் இனத்து மக்களுக்கு இயேசுவை அறிவிக்க முடியவில்லை என்றும், அவர்களை நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல இயலவில்லை என்றும் வருந்துகிறார். பவுல் தன் கையறுநிலையில், பிறஇனத்தார் பற்றிய பொறாமை வழியிலாவது தன் மக்கள் கிறிஸ்துவின் பக்கம் திரும்பமாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கிறார். இருப்பினும், 'கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை' என்று சொல்லிப் பொறுமை காக்கிறார். நம்பிக்கை எப்படி கடவுளையும் நம்மையும் அருகில் கொண்டுவருகிறதோ, அது போலவே நம்பிக்கையின்மை கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அதிகமாக்குகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கும் கானானியப் பெண் ஒருவருக்குமான உரையாடலை வாசிக்கக் கேட்கிறோம். நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல் வழியாக அவர் இயேசுவுக்கு அருகில் வருவதோடு, பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளான தன் மகள் நலம் பெறவும் வழிசெய்கிறாள். இந்த நிகழ்வு தீர், சீதோன் என்னும் பகுதியில் நடக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் கானானியர் என்னும் புறவினத்தார் இப்பகுதியில் வாழ்ந்தனர். கானானியர் இஸ்ரயேல் மக்களின் எதிரிகளாக இருந்ததோடு, விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள், தூய்மையற்றவர்கள் என்றும் கருதப்பட்டனர்.

இந்தப் பின்புலத்தோடு இளவல் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். அவர் மூன்று நிலைகளில் இயேசுவைவிட அந்நியப்பட்டவராக இருக்கிறார்: (அ) அவர் ஒரு பெண், (ஆ) அவர் ஒரு பிறஇனத்துப் பெண், (இ) பேய் பிடித்த மகளுடைய தாய். தன் பாலின அடையாளத்தையும், சமூகம் தனக்கு இட்டழைத்த அடையாளங்களையும் அவள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

'ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' என இயேசுவிடம் வேண்டுகிறார். 'தாவீதின் மகன்' என்பது மத்தேயு நற்செய்தியில் இயேசுவுக்கு வழங்கப்படும் முதன்மையான தலைப்பு. இத்தலைப்பை அவள் உதடுகள் தாங்கியிருப்பதே இயேசுவின்மேல் அவளுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்லவில்லை. அவருடைய நம்பிக்கைக்கான முதல் தடை இது.

ஆனால், அத்தடையை எளிதாக வெல்கிறார் இளவல். 'இவள் கத்திக்கொண்டு வருகிறாளே! அனுப்பிவிடும்' எனச் சீடர்கள் இயேசுவிடம் பரிந்துரை செய்கிறார்கள். அப்பெண் இப்போது சீடர்களுக்கு இடறலாக அல்லது தொந்தரவாக இருக்கிறாள். இது இரண்டாவது தடை.

'இஸ்ரயேல் குலத்தோருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என்று தன் பணியின் நோக்கு வாக்கியத்தை அறிவிப்பதன் வழியாக, அந்தப் பெண் தன் அருகில் வருவதற்கான கதவுகளை மூடுகிறார் இயேசு. இந்த இளவல் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவள் இல்லை என்பதை இயேசு அவளுடைய பேச்சு, அல்லது உடை, அல்லது பாவனை, அல்லது வந்த பாதை ஆகியவற்றை வைத்து அறிந்திருப்பார். இது மூன்றாவது தடை.

'எனக்கு உதவியருளும்!' என மீண்டும் இறைஞ்சுகிறார் பெண். தன் மகள் எப்படியாவது நலம் பெற வேண்டும் என்பதும், இயேசுவால் மட்டுமே அவளை நலமாக்க இயலும் என்பது இப்பெண்ணின் எண்ணமாக இருக்கிறது. தாம் ஏற்கெனவே மொழிந்தவற்றை உருவகமாக மொழிகிறார் இயேசு. சற்று முன்னர் இஸ்ரயேல் மக்களை ஆடுகள் என அழைத்தவர், இப்போது அவர்களைப் பிள்ளைகள் என அழைத்துப் பிற இனத்தாரை நாய்க்குட்டிகள் என உருவகமாக அழைக்கிறார். பிள்ளைகளின் ரொட்டியில் பங்கு இல்லை என்றாலும், மேசையின் மேலிருந்து கீழே விழும் ரொட்டித் துண்டுகளில் நாய்க்குட்டிகளுக்குப் பங்கு உண்டு என்கிறார் பெண். இயேசுவின் சமகாலத்தில் உண்ணப்பட்ட ரொட்டி நாம் இன்று வைத்திருக்கும் சதுரம் அல்லது வட்ட வடிவில் அல்ல, மாறாக, பாம்பு போல நீண்டதாக இருந்தது. குழந்தைகள் அவற்றைத் தாமாக உண்ண இயலாது. பெரியவர் ஒருவர் யாராவது அமர்ந்து பிட்டுக் கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் குழந்தையால் உண்ண இயலும். அப்படி பிட்டுக் கொடுக்கிற பெரியவர் அங்கே சுற்றிக்கொண்டிருக்கிற நாய்க்குட்டிக்கும் கொஞ்சம் பிட்டுப் போடுவதுண்டு. ஆக, நாய்க்குட்டிகள் பசியாறுவது குழந்தைகளால் அல்ல, பிட்டுக்கொடுக்கும் பெரியவரால்தான். இயேசுவைத் தன்னுடைய பெரியவர் எனக் கருதுகிறாள் பெண். இவ்வாறாக, நான்காவது தடையையும் தாண்டுகிறார்.

விளைவாக, அந்நேரமே அவருடைய மகளின் பிணி நீங்கிற்று.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) நம்பிக்கை

'நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்னும் இயேசுவின் சொற்களுக்குச் சான்றுபகர்வதாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நம்பிக்கையின் வழியாக தன் மகளுக்கு நலம் பெற்றுத் தருகிறாள் கானானியப் பெண். ரொட்டித் துண்டு போல இருந்த அவளுடைய நம்பிக்கைகூட இத்தகைய பெரிய வல்ல செயல் நடக்க உதவி செய்தது.

(ஆ) விடாமுயற்சி

நம்பிக்கை என்பது ஒரு பக்கம் கடவுளின் கொடை என்றாலும், அதில் வளர நமக்கு உதவி செய்வது நம் செயல்களே. நம்பிக்கைப் பயணத்தின் தடைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக வென்றெடுக்க வேண்டும். விடாமுயற்சி கொண்டிருப்பவர்களே நம்பிக்கையில் தொடர்ந்து நடக்க முடியும். இரண்டாம் வாசகத்தில், தன் இனத்தாரை கிறிஸ்துவின்மேல் உள்ள நம்பிக்கை நோக்கி அழைத்து வருவதில் விடாமுயற்சியுடன் செயல்படுகிறார் பவுல்.

(இ) இறைவேண்டல்

நம்பிக்கை என்பது உள்ளார்ந்த மனப்பாங்கு என்றால், இறைவேண்டல் அதை வெளிப்படுத்துவதற்கான வழி. கானானியப் பெண்ணின் இறைவேண்டல் மிக எளிமையாகவும், தெளிவாகவும் இருந்தது. தான் விரும்புவது என்ன என்பதை அறிந்திருந்தார் இளவல். முதல் வாசகத்தில், தன் இல்லத்தை, 'அனைவருக்குமான இறைவேண்டலின் வீடு' என அறிவிக்கிறார் கடவுள்.

நம்பிக்கை கடவுளுக்கும் நமக்குமான இடைவெளியை மட்டுமல்ல, ஒருவர் மற்றவருக்குமான இடைவெளியையும் குறைக்கிறது. 'நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' - இந்த நம்பிக்கையின் தொடக்கப்புள்ள தன்-நம்பிக்கையே!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உறவுகள், உரிமைகள், அதற்காக தொடரும் போராட்டங்கள்

கற்காலம் தொட்டு இன்றைய கம்ப்யூட்டர் காலம்வரை இந்த உறவு உரிமை மற்றும் போராட்டம் என்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகள்தான் மனித சமுதாயத்தை வாழ வைக்கும் மாபெரும் இணைப்புகள் ஆகும். உறவுகளால் உரிமைகளும், உரிமைகளால் போராட்டங்களும், போராட்டங்களால் மீண்டும் உறவுகளும் - என்ற ஒரு முக்கோண வளர் பிறை முடிவில்லா தொடர்கதைகள் இந்த மனித சமுதாயத்தின் ஆக்கப்பூர்வ உணர்ச்சிக் கலவைகள்.

நம் நாடு, நம் மக்கள், நமது மொழி, நமது இனம், நம் இறைவன் - எனப் பன்மையில் பயணிக்கும்போது அங்கு உறவு மலர்கின்றது. தனி மரம் தோப்பு ஆகாது என்பது தமிழ் முதுமொழி. ஆம், இருகைகள் இணையும்போதுதான் உறவுகள் மலர்கின்றன. மனிதனோடு மனிதன் என்ற இணைப்பு உறவை வளர்க்கின்றது; அதுவே இறைவனோடு மனிதன் என்ற ஒன்றிப்பில் உறவின் உன்னதத்தை - நிறைவை வெளிப்படுத்துகின்றது.

மனிதனும் இறைவனும் இணைந்த உன்னத உறவை அதன் மகிழ்வை இன்றைய முதல் வாசகம் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. புற இனத்தார் என்று புள்ளி வைக்கப்பட்ட மனிதர்கள், தங்களுடைய நிலையான நீதியும் நேர்மையும் உள்ள வாழ்க்கையால் - திருச்சட்டத்திற்கும் இறை வார்த்தைக்கும் கட்டுப்படும் ஓய்வு நாள் ஒழுக்கத்தை குறைவின்றி நிறைவேற்றியதால் - இறைவனே மகிழ்ந்து அவர்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு, அவருடைய திருமலைக்கு அழைத்து வருவதையும்; இறைவேண்டல் செய்யப்படும் அவருடைய இல்லத்தில் அவர்களை மகிழ்ந்திருக்கச் செய்வதையும் கண்முன் நிறுத்துகின்றது. ஒதுக்கப்பட்டவர்கள் இறைவனோடு உறவாடி மகிழ்வதையும் காண முடிகின்றது.

நாம், நமது எனப் பன்மையால் பாரெல்லாம் பறந்தோடிய உறவுகள்; என், எனது, என்ற ஒருமையை சந்திக்கும்போது உரிமைகள் உயிர்பதை தவிர்க்க இயலாது. இந்த உரிமை இருபுறம் கருக்குள்ள வாளைப் போன்றது. இதனை முறையாகப் பயன் படுத்தினால் ஆக்கமிகு அறுவடைகளை செய்யவும் முடியும் ; தவறாகப் பயன்படுத்தினால் - அடிமரத்தையே வெட்டி வீழ்த்தவும் முடியும். தனி மனிதனாகத் தந்தையிடம் உள்ள செல்வத்தில் என் பங்கு, என் சொத்து, என் வாழ்வு - என உரிமைகளை உரக்கச் சொன்னவன் ; ஊதாரி மைந்தன் ஆனான். அதேவேளை அவனுடைய தந்தையோ இதோ தூரத்தில் வருபவன் என் மைந்தன் என்ற உரிமையுடன் எழுந்து சென்றதால் ஊதாரி மைந்தன் இழந்த உரிமைகளைப் பெற்ற திருந்திய மைந்தன் ஆகிறான். உறவுகளை உரம் போட்டு ஊக்கமுடன் வளர்க்க எல்லைக்கு உட்பட்ட, தேடி வந்தவனை ஓடி அணைக்கும் "தந்தை அன்பின்" உரிமையைப் போன்ற ; அளவான, அவசியமான உரிமைகள் நிச்சயம் தேவை. எல்லையற்ற உரிமைகள் மீண்டும் ஊதாரி மைந்தர்களையே உருவாக்கும். இன்றைய உரிமைக் குரல்களின் தாக்கம் உலகில் விதைத்தது என்ன?. தனிமை, தான்-தோன்றித்தனம், கேட்பாரற்றநிலை, ஏன்?, எதற்கு? என்ற விடை அறியா கேள்விகள் - முடிவில் வெறுப்பும் வீண் வம்புகளுமாக வாழ்க்கை வீணாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டும்; ஒன்றும் செய்ய இயலாத மனிதர்களை உருவாக்கியதுதான் - இந்த உரிமைக் குரல்களின் இன்றைய அடையாளம்.

சவுல் உறவுகளை உடைக்க குதிரை ஏறிப் பயணித்தார். வழியில், இறைவனால் புள்ளி வைக்கப்பட்டு; பவுலாக மாறியபின் புற இனத்தாரின் உரிமைகளுக்கு - உரமாகக் குரல் கொடுத்தார். "யாவே" இறைவனுக்குள் எல்லை மீறிய உரிமை கொண்டாடிய யூத இன மக்கள் பொறாமைப்படும் நிலைக்குப் புற இனத்தாரின் உரிமைகளை மீட்டெடுப்பதில் பெருமை கொள்ளும் பவுல் அடிகளார் ஆனார். இன்றைய இரண்டாம் வாசகம் நினைவு படுத்தும் நிகழ்வு இது. . எனவே இருபுறம் கருக்குள்ள கூரான உரிமை எனும் வாளை இருகரம் இணைந்த உறவுகள் என்ற உறைக்குள் பாதுகாப்பாக வைப்போம்; உறவுகளுக்கு நல் உரமாகும் உரிமைகளை மீண்டும் மீட்டெடுப்போம்.

உறவுக்கும் உரிமைக்கும் சமநிலை உருவாக்கத் தொடரும் போராட்டங்கள் நல்லோரின் கடமை ஆகின்றன. நற்செய்தியில் வரும் கனேநேயப் பெண் தனது உரிமைக்கான போராட்டத்தில் கத்திக் கதறி தொடர்ந்து பயணிக்கின்றார். இருந்தும் இயேசுவின் அலட்சியமும் நிராகரிப்பும் பிள்ளைகளின் உணவைத் தர இயலாது என மொழிகின்றன. ஆனால் அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று பணிவுடன் தன் உரிமையை முன் வைத்தபோது தன் மகளின் விடுதலையை பரிசாகப் பெற்றாள். (மத் 15:27)

இப்படி அன்றாடம் நாம் சந்திக்கும் உரிமைப் போராட்டங்களை இயேசுவும் சந்திக்கின்றார். "தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்ற வார்த்தைகள் அவரை, நின்று ; திரும்பிப் பார்த்துச் செயல்பட வைத்ததை - விவிலியம் சான்று பகர்கின்றது. உரிமையை எதிர்பார்க்கும் நம்மிடம், எஜமானன் மீது நாய்க்குட்டிகளுக்கு இருக்கும் விசுவாசமும் நன்றியும் - நமக்கு இறைவன் மீது இருக்குமேயானால் ரொட்டித் துண்டு அல்ல, முழு அப்பம் நிச்சயம் உண்டு.

ஒன்றை தேடி அடைய தொடர்ந்து செயல்படுவதை போராட்டம் என்கிறோம். "என்னடா அங்கே சத்தம் என அன்னை கேட்டாள். அண்ணனை விளையாட அழைத்தேன் என இளையவன் பதில் தந்தான்" இவைகள் தினம் தினம் கேட்கும் மிகவும் சாதாரணமான வார்த்தைகள். ஆழ்ந்து கவனித்தால் அன்னையின் - பிள்ளைகள் நலன் தேடும் போராட்டமும், இளையவன் அண்ணன் என்னோடு விளையாட வேண்டும் என்று அவன் கொண்ட உரிமையையும்; நான் தான் அவன் அண்ணன் என்ற உறவும் - மறைந்து நிற்பதை நாம் காண முடியும். வாழ்க்கைப் பயணத்தில் சலசலப்புகள் சகஜம். அதே வேளை, என்ன சத்தம் என எட்டிப் பார்க்கும் இறை வார்த்தைகளையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பாருங்கள் விருந்தும் கேளிக்கைகளும் தயாராக இருந்தும் தன் உரிமைக்கு முதலிடம் தந்து வாசலிலேயே விலகி நிற்கும் மூத்தவனாக நாம் வாழாமல் அனைத்தையும் இழந்து இருந்தாலும் ; தந்தை- மகன் என்ற உறவை மறக்காமல் நினைவு கொண்டவர்களாக, தொடர்ந்து போராடிப் பயணித்த அந்தத் திருந்திய இளைய மகன் போலவும் தனது மகளின் நலன் தேடும் இந்தக் கனேநேய பெண்ணைப் போலவும், நமது உரிமையைப் பறைசாற்றும் - அடையாளப்படுத்தும் முத்திரை மோதிரத்தை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

அன்று இளையவனை அலங்கரிக்க வேலையாட்கள் இருந்தார்கள். கனேநேய பெண்ணின் போராட்டத்தைச் சமநிலைப்படுத்தி இயேசுவிடம் பரிந்துரைக்கச் சீடர்கள் இருந்தார்கள். இன்று நமக்குத் துணை நிற்கத் திரு அவை - இறை சமூகம் இருக்கின்றது. ஒருவேளை, யாருமே இல்லை என்றாலும் நீதியும் நேர்மையும் கொண்டு வாழ்பவர்கள், திருச்சட்டமும் இறை வார்த்தைகளும் பரிந்துரைக்கும் ஓய்வு நாளை இறைவனோடு இணைந்து அனுபவிப்வர்கள் - "நாம் என்றால்" - இறைவனே அவருடைய இல்லத்தில் மகிழ்ந்திருக்க நம்மை அழைத்துச் செல்வார் என்கிறது இறை வார்த்தை. வாருங்கள் உறவில் பிறப்போம், உரிமையில் வளர்வோம்; போராட்டத்தால் புதுப் படைப்பாகுவோம்.

இறைவன் நம்மோடு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser