மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 19-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 18:6-9 | எபிரேயர் 11:1-2,8-19 | லூக்கா 12: 32-48

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஒரு கிராமத்தில் ஒரு நாட்டு வைத்தியருக்கு மருந்து தயாரிக்கப் பச்சிலை தேவைப்பட்டது. அந்த இலை இரு கற்பாறையின் இடுக்கில் பாதாளத்தில் முளைத்திருந்தது. அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாத நிலை. அந்த நாட்டு வைத்தியர் தனது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு மலையின் மீது ஏறினார். தான் கொண்டு வந்த கயிற்றால் மகனின் இடுப்பில் கட்டி அவனை கீழே இறக்கினார். அந்த மகன் இலைகளைப் பறித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தந்தையிடம் திரும்பினான். இதைப் பார்த்த மற்றவர்கள் அந்தச் சிறுவனைப் பார்த்து உனக்கு பயமே இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவன், என் தந்தை என்னைக் கீழே விடமாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் எனக்கு எந்த பயமோ, அச்சமோ ஏற்படவில்லை என்றான்.

1. எங்கே நம்பிக்கை உண்டோ. அங்கே அச்சமோ, பயமோ, அதிர்ச்சியோ, குழப்பமோ இருக்காது.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள் என்று சாலமோனின் ஞானம் கூறுகின்றது.

மனித வாழ்வு சிறக்க நம்பிக்கை மிக அவசியம். குழந்தை பிறக்கும்போது நமக்கு மகன் பிறந்துள்ளான் என்ற எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியடைகின்றனர் பெற்றோர்.

படிக்கின்றவர் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால் நமக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் உழைக்கின்றனர்.

நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நம்மீதும், பிறர் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கைக் கொண்டு நம்மைச் சிறப்புடன் வாழ வைக்கிறது. இந்த நம்பிக்கையைப் பற்றிய அழகானதொரு மறையுரையை எபிரேயருக்கு எழுதியக் கடிதத்தில் (2வது வாசகம்) அதன் ஆசிரியர் தருகிறார். நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி. 11:1).

பழைய ஏற்பாடு:-
ஆபேலை நேர்மையாளராக மாற்றியதே நம்பிக்கைதான் (எபி. 11:4)

நோவாவை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதும் நம்பிக்கை தான் (எபி.11:7)

முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற மகனைத் தந்ததும் நம்பிக்கைதான் (எபி. 11:11)

புதிய ஏற்பாட்டிலே
நோயாளிகள் நலம் பெற்றது நம்பிக்கையால்தான் (மத். 9:27- 31)

பாவிகள் மன்னிப்பு பெற்றதும் நம்பிக்கையால்தான் (லூக். 7:36-50)

இறந்தவர்கள் உயிர் பெற்றதும் நம்பிக்கையால்தான் (யோவா. 11:1-44)

இன்றைய காலக் கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலை மாறத்தான் எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நட்சத்திரமாக இயேசு தோன்றுகிறார். சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (யோவா. 14:1-2). அவர் உங்களுக்கு நீதியின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின் ஆட்சியைத் திட்டமிட்டிருக்கிறார். (உரோ. 14:17).

உங்கள் உணர்வுகளில் நம்பிக்கை எதிரொலிக்கட்டும் + உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை நடனமாடட்டும் உங்கள் சொற்களில் நம்பிக்கைக் கற்கண்டாகட்டும் உங்கள் செயல்களில் நம்பிக்கை நங்கூரமாகட்டும் ❖ உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை மலரட்டும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆண்டவரே அடைக்கலம் (தி.பா. 9:9) அழிந்துபோகும் இந்த உலக செல்வங்களில் நாம் மதி மயங்கி வாழாதபடி விழிப்பாய் இருக்கும்படி ஆண்டவர் இன்றைய நற்செய்தியிலே அறைகூவல் விடுக்கிறார். சோதனைக்கு உட்படாதபடி விழிப்பாய் இருங்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கை என்றால் என்ன?

ஒரு கிராமத்திலே ஒரு மருத்துவர். அவருக்கு ஒரு பச்சிலை தேவைப்பட்டது! அந்த இலை இரண்டு மலைகளுக்கு நடுவே, பாதாளத்தில் ஒரு கற்பாறையின் இடுக்கில் முளைத்திருந்தது! அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாது.

அந்த மருத்துவர் தனது ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு மலையின் மீது ஏறினார். தான் கொண்டுசென்ற கயிற்றை மகனின் இடுப்பில் கட்டி, அவனைக் கீழே இறக்கினார். அந்த மகன் இலையைப் பறித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தந்தையிடம் திரும்பினான்.

இதைப் பார்த்தவர்கள் அச்சிறுவனைப் பார்த்து : உனக்குப் பயமே இல்லையா? என்றார்கள். அதற்கு அந்த மகன், என் தந்தை என்னைக் கீழே விட்டுவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றான்.

எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே அச்சமோ, அதிர்ச்சியோ, நடுக்கமோ, தயக்கமோ, குழப்பமோ இருக்காது!

இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்பட்டார்கள் என்று சாலமோனின் ஞானம் கூறுகின்றது (சாஞா 18:6-9).

நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி : கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1).

பழைய ஏற்பாட்டிலே,
ஆபேலை நேர்மையானவராக மாற்றியது நம்பிக்கைதான் (எபி 11:4).
நோவாவை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது நம்பிக்கைதான் (எபி 11:7).
ஆபிரகாமுக்கு ஈசாக்கைத் தந்தது நம்பிக்கைதான் (எபி 11:11).

புதிய ஏற்பாட்டிலே,
நோயாளிகள் உடல் நலம்பெற்றது நம்பிக்கையால்தான் (மத் 9:27-31); பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது நம்பிக்கையால்தான் (லூக் 7:36-50];இறந்தவர்கள் உயிர் பெற்றது நம்பிக்கையால்தான் (யோவா 11:11-44). ஆம். நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை!

நாம் எப்படிப்பட்ட நூற்றாண்டிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்? ஒரு கல்லூரி ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து: 2050-இல் உலகம் எப்படியிருக்கும்? என்றார். மாணவன் ஒருவன் எழுந்து, 2050 இல் உலகத்தில் எந்த மனிதனும் இருக்கமாட்டான். மூன்றாவது உலகப்போரில் எல்லாரும் இறந்துபோவார்கள் என்றான்.நம்பிக்கை அற்ற நிலை!

இந்த நிலை மாற வழியே இல்லையா? ஏன் இல்லை! எங்கிருந்தோ ஓர் ஒளி நம்மீது வீசுகின்றது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நட்சத்திரமாம் இயேசு தோன்றுகின்றார். அவர் நம்மோடு. இன்றைய நற்செய்தியின் வழியாகப் பேசுகின்றார்: சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்! உங்கள் பரம தந்தையின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களுக்கு அவரது ஆட்சியை, நீதியின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின் ஆட்சியை (உரோ 14:17) வழங்கத் திட்டமிட்டிருக்கின்றார்! அவருடைய திட்டம் நிறைவேறும் நாள்வரை அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல் பொறுமையாகக் காத்திருங்கள். நம்பிக்கையை ஆடையாக அணிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உணர்வுகளில் நம்பிக்கை எதிரொலிக்கட்டும்!
உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை நடனமாடட்டும்!
உங்கள் சொற்களில் நம்பிக்கை கற்கண்டாகட்டும்!
உங்கள் செயல்களில் நம்பிக்கை நங்கூரமாகட்டும்!
உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை நடுநாயகமாகட்டும்!
இறையாட்சி உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீங்கள் முன்னேறினால் அனைத்துப் பேறுகளும் உங்களதே!
மேலும் அறிவோம் :

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் 9).

பொருள்:
இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது. அதுபோன்று எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயன் அற்றவை ஆகும்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓர் எருமைமாடு ரோட்டின் நடுவிலே படுத்திருந்தது. ஒருவர் அதைத் தடியால் அடித்து எழுந்திருக்கும்படி கேட்டதற்கு அந்த எருமைமாடு கூறியது: "நான் எழுந்திருக்கமாட்டேன்; ஏனென்றால் நான் நீதிமன்றத்தில் இடைக் காலத்தடை (Stay order) வாங்கியிருக்கின்றேன்" என்றதாம். இக்காலத்தில் எருமைமாடுகூட நீதிமன்றத்தில் இடைக் காலத்தடை வாங்க முடியும்.

நீதிமன்றம் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கும்போது, அவர் அத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ‘இடைக்காலத்தடை வாங்க முடியும். ஆனால் சாவு வரும்போது அதற்கு இடைக்காலத்தடை' வாங்க முடியுமா?

ஒரு சிறுவனிடம், "உனக்குச் சாகப் பயமில்லையா?" என்று நான் கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால் போகவேண்டியதுதான்" என்று பதில் சொன்னான். எல்லாவற்றிற்கும் ஒரு நேரமும் காலமும் உண்டு என்கிறார் சபை உரையாளர்: "பிறப்புக்கு ஒரு காலம். இறப்புக்கு ஒரு காலம்" (சஉ 3:1). என்று நாம் இவ்வுலகில் பிறந்தோமோ அன்றே நமது சாவின் நேரம் குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தை நாம் அறியோம். எனவேதான் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்; "நீங்களும் ஆய்த்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்" (லூக் 12:40).

நாம் எப்பொழுதும் விழிப்பாய் இருந்து ஆயத்தமாய் இருக்க வேண்டும். அதாவது. நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களைப்போல், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணியை நிறைவேற்ற வேண்டும். இதற்கு கிறிஸ்துவே ஓர் எடுத்துக்காட்டு. அவர் தம் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தந்தையிடம் கூறினார்: "நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்" (யோவா 17:4). ஆம், கிறிஸ்து தந்தை தம்மிடம் ஒப்படைத்த வேலையைச் செய்து முடிப்பதில் கண்ணும். கருத்துமாய் இருந்தார். ஓய்வுநாள் அன்றுகூட அவர் குணமளிக்கும் பணியைச் செய்தார். ஏன் அவர் ஓய்வுநாளை மீறுகிறார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறியது: "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" (யோவா 5:17). கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நமது அன்றாட அலுவலைச் செய்து முடிக்க வேண்டும். நாம் இறக்கும்போது கிறிஸ்துவைப்போல், "எல்லாம் நிறைவேறிற்று" (யோவா 19:28) என்று கூறமுடியுமென்றால், நாம் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள்.

ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கற்களை உடைத்துக் கொண்டிருந்த ஒருவரிடம், “என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "நான் ஓர் அழகிய கோயிலைக் கட்டி எழுப்புகிறேன்". கூலிக்கு வேலை செய்வதாக அவர் கூறவில்லை. மாறாக, ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்புவதாகச் சொன்னார். அவரின் பார்வை ஆழமானது, அர்த்தமுள்ளது. எந்தவொரு வேலையும் இழிவானதல்ல. மாறாக, எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே இழிவானது. எந்த வேலை செய்தாலும், அதன் மூலம் நாம் மாபெரும் ஓர் அழகிய உலகைக் கட்டி எழுப்புகின்றோம் என்ற உயர்வான எண்ணம் நம்மை ஆட்கொள்ள வேண்டும். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுத் தலைவர் தங்களிடம் ஒப்படைத்துச் சென்ற பணியை விழிப்புணர்வுடன் செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள் என்றும். வீட்டுத் தலைவரே அவர்களுக்குப் பந்தியில் பணிவிடை செய்வார் என்றும் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார் (லூக் 12:37). இது நமக்குச் சற்று வியப்பாகத் தோன்றலாம். எந்த முதலாளி தனக்கடியில் வேலை செய்யும் தொழிலாளிக்குப் பந்தி பரிமாறுவார்? என்று கேட்கலாம். ஆனால் நம் தலைவர் கிறிஸ்து அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார். "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்" (திவெ 3:20). கிறிஸ்து தமது பணியாளர்களுடன் சமபந்தியில் அமர்வார்; அவரே அவர்களுக்குப் பணிபுரிவார்.

நாம் மேற்கொள்ளும் பணிகளில் இடையூறு எழும்போது இன்றைய இரண்டாம் வாசகத்தில் வருகின்ற ஆபிரகாமை நம் கண்முன் நிறுத்த வேண்டும். கடவுள் ஆபிரகாமை வேற்று நாட்டுக்குப் போகும்படி பணித்த போது, அவர் எங்கே போகவேண்டுமென்று தெரியாதிருந்தும் புறப்பட்டார். அவர் அவ்வாறு செய்தது கடவுளின்மேல் அவருக்கிருந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் (எபி 11:8), ஆபிரகாம் தாம் செல்லவேண்டிய பாதையை அறியாமல் சென்றதால், அவர் சரியான பாதையில் சென்றார். நாம் நமது பாதையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வதால், நாம் தவறான பாதையில் செல்கிறோம். நாம் செல்வது கடவுளின் பாதையில் அல்ல, மனிதனின் பாதையில், ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட முன்வந்ததால், அவர் ஈசாக்கை மீண்டும் பெற்றார். நாம் நமது குட்டி குட்டிச் சிலைகளை விட்டுவிட மனமின்றி, தலைவர்களுக்கு ஊழியம் செய்யும் இருமனப்பட்ட உள்ளம் கொண்டவர்களாய் இருக்கின்றோம்.

ஒருவர் ஒரு மலை விளிம்பில் நடந்தார். கால் இடறிக் கீழே விழுந்தபோது, மலையின் இடுக்கில் இருந்த ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு, "கடவுளே! என்னைக் காப்பாற்று" என்று கத்தினார். கடவுள் அவரிடம், "நான் உன்னைக் காப்பற்றுவேன். ஆனால் உன் கைகளை மரக்கிளையிலிருந்து எடுத்துவிடு" என்றார். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டு, "கடவுளே! என்னைக் காப்பாற்று" என்றார். நாமும் பணம், பதவி, சொந்தம், பந்தம் ஆகியவற்றை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு கடவுளிடம் பாதுகாப்புத் தேடுகின்றோம். இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்" (திபா 33:20). உண்மையில் கடவுள் நமது கேடயமாய் உள்ளாரா? “எந்நிலையிலும் நம்பிக்கையைக் கேடயமாய்ப் பிடித்துக் கொள்வோம்" (எபே 6:16). தலைக்கவசம் அணியலாம். அணியாமல் இருக்கலாம். ஆனால் நம்பிக்கையைத் தலைக்கவசமாய் கட்டாயம் அணிய வேண்டும்.

கைமாறு கருதாமல் நம் கடமையைச் செய்வோம். கடவுள் நம்மைக் கரைசேர்ப்பார். இறுதியில் நாம் அடையவிருக்கும் இன்பத்தைக் கண்முன் கொண்டு துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொள்வோமாக.

துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் 669)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விழிப்பும் விவேகமும்

உலகிலேயே மிகப் பெரிய பிரமாண்டமான 'டைட்டானிக்' கப்பலை கடந்த நூற்றாண்டில் உருவாக்கிக் கடலில் விட்டபோது, அதில் அவசரகாலத்திற்குரிய உயிர் காக்கும் படகுகள் ஆறுதான் இருந்தனவாம். "இவ்வளவு பெரிய கப்பலில் ஆயிரக்கணக்கில் பயணம் செய்பவர்களுக்காக ஆறு படகுகள் மட்டும் போதுமா?" என்று கேட்டபோது அதனை உருவாக்கியவர் சொன்னாராம்: "இந்த ஆறு படகுகள் கூடத் தேவையில்லை. ஏனெனில் இந்தக் கப்பலைக் கடவுளால் கூட ஒன்றும் செய்துவிட முடியாது" என்று.

ஆனால் என்ன நேர்ந்தது? 1912 ஏப்ரல் 14ம் நாள் பனிப்பாறையில் மோதி முறிந்து உடைந்து மூழ்கியது. பயணம் செய்த 1600 பேர்களில் ஒரு சிலரே அந்த ஆறு படகுகள் மூலம் தப்பிக்க முடிந்தது. கடவுளின் வல்லமையை மதியாதோர் காணும் முடிவு இதுதான்!

இயந்திரத்தை இயக்கிய பொறியாளர் மட்டும் ஒரு தொலைபேசியின் எச்சரிக்கைச் செய்திக்குச் செவி சாய்த்து உரிய நேரத்தில் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகத்தைத் தவிர்த்திருக்கலாம். மூன்று நிமிடங்கள் தொலைபேசி மணி அலறியதாம். “கப்பலைத் திசை திருப்புங்கள். எதிரே மிகப்பெரிய பனிப்பாறை" என்பதுதான் அந்த எச்சரிக்கை. விழிப்புணர்வோடு செயல்படாததால் நிகழ்ந்த துயர விபத்து.

இயேசுவின் இன்றைய அறைகூவல்: “நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்" (லூக். 12:40).

பேய்களின் தலைவன் லூசிஃபர் மூன்று குட்டிப் பேய்களை அழைத்து, "உலகிற்கு உங்களை அனுப்பினால் கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்க என்ன செய்வீர்கள்?” என்று கேட்டது.

‘கடவுளே இல்லை' என்று மக்களிடம் சொல்வேன் என்றது ஒரு பேய்.
'நரகம் என்பதெல்லாம் கற்பனை என்பேன்' என்றது இன்னொரு பேய்.
'இதெல்லாம் இப்போது எடுபடாது, எப்பயனும் தராது. மக்கள் உங்களை நம்பமாட்டார்கள்' என்றது தலைமைச் சாத்தான்.
உடனே மூன்றாவது குட்டிப் பேய் “நல்லது செய்ய இப்ப என்ன அவசரம். இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. தற்போது நமக்குத் தேவை பணம், பொருள், வசதி வாய்ப்புக்கள். அவற்றை எந்த வழியிலும் பெருக்கிக் கொள்வோம். கடைசிக் காலத்தில் அன்பு, மன்னிப்பு, தவம், பிறர் மீது பரிவு இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கலாம் என்று சொல்லிக் காலத்தைத் தள்ளிப் போடச் சொல்வேன்” என்றது. உடனே லூசிஃபர் அதனைப் பாராட்டி 'உன்னால்தான் நரகம் நிரம்பும்' என்றதாம். “இன்று காலை 10 மணிக்கு ஒரு வீட்டில் கொள்ளையடிப்பேன். அதன்பின் 11 மணியிலிருந்து திருந்தி நல்லவனாக நடப்பேன்" என்று சொல்லும் திருடனைப் பார்த்துச் சிரிக்க மாட்டோமா? அதுதவிர, காலை 10.30 மணிக்கே மாட்டிக் கொண்டு சாக நேர்ந்தால் அவனுடைய கதி? அதனால்தான் “தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் பணியாளர்கள் விழிப்பாய் இருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்" (லூக். 12:38) என்கிறார் இயேசு.பேய். இறைவன் மீது கொண்ட அன்பும் ஆழமான நம்பிக்கையுமே நம்மை விழித்திருக்கச் செய்யும். "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (எபி. 11:1) என்ற இறை வார்த்தையை உள்ளத்தில் இறுத்திக் கடவுள் வாக்குமாறாதவர் என்ற மனம் தளராத நிலையே நம்பிக்கை.

பழைய ஏற்பாட்டில் எபிரேயர்களின் வரலாற்றில் பலத்துக்கு ஒரு சிம்சோன் போல, ஞானத்துக்கு ஒரு சாலமோன் போல, நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் ஆபிரகாம். யூதர்களின் நம்பிக்கையின்மையை முன்னிட்டு, திருமுழுக்கு யோவான் ஆபிரகாமைப் புகழ்ந்து "ஆபிரகாமின் நம்பிக்கை அவருக்குக் கல்லில் இருந்து மக்களை உருவாக்க வல்லது" (மத். 3:9) என்று கூறுகிறார்.

கடவுள் தாம் சொன்னதை நிறைவேற்றுவார் என்ற மனந்தளராத நிலை. கடவுள் சொன்னால் நடக்காததும் நடக்க முடியாததும் நடந்தே தீரும் என்ற அசையாத மன உறுதி.

நம்பிக்கையின் இந்தப் பின்னணியில் இன்றைய நற்செய்தியில் இரண்டு விதமான பணியாளர்களைப் பார்க்கிறோம்.
-நம்பிக்கைக்கு உரியவர்கள்
- தனக்கு அளித்த பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து பொறுப்புடன் செயல்படுபவர்கள்.
- நம்பிக்கைத் துரோகிகள்
தனது தலைவரின் விருப்பத்தைத் தெரிந்திருந்தும் தன் விருப்பம்போல் தான் தோன்றித் தனமாக செயல்பட முடிவு செய்கிறவர்கள்.
தலைவர் காலம் தாழ்த்துகிறார் என்று எண்ணி செய்ய வேண்டியதைச் செய்யாமல் காலம் தாழ்த்துபவர்கள்.
கடவுள் மீது நம்பிக்கை கொண்டு வாழவும் கடவுளுக்கு நம்பிக்கைக் குரியவர்களாக இருக்கவும் இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. அதற்கு விசுவாசம், விழிப்பு, விவேகம் நிறைந்த வாழ்வு வேண்டும்.
சோழ நாட்டு இளவரசருக்குத் திருமணம். தேனிலவுக்காகக் கடற்கரை மாளிகைக்குக் குதிரைகள் பூட்டிய தேரில் இளவரசியோடு சென்றார். "நேரம் இரவு. எதிரிகள் எதுவும் செய்யலாம் எனவே விழித்திருந்து குதிரைகளையும் தேரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள். தூக்கம் வந்தால் எதையாவது நினைத்துக் கொண்டிரு" என்று தேரோட்டியிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து வந்து தேரோட்டியை இளவரசர் கவனித்தார். தேரோட்டி ஏதோ சிந்தனையில் இருந்தான். “என்ன சிந்தனை?" என்று இளவரசர் கேட்க, "கடல் நீர் இவ்வளவு உப்பாக இருக்கிறதே, இது இயற்கையிலேயே உள்ளதா அல்லது யாராவது உப்பைக் கொட்டியிருப்பார்களா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்" என்றான். “நல்ல சிந்தனைதான். இதுபோல சிந்தித்துக் கொண்டே தூங்காமல் இரு” என்று சொல்லிவிட்டுச் சென்றார் இளவரசர்.

அடுத்து இரண்டு மணி நேரம் கழித்து வந்து இளவரசர் பார்த்தார். தேரோட்டி அவரைப் பார்த்து "நீங்கள் சொன்னபடியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வானம் முழுவதும் நீல நிறமாக உள்ளதே, இது இயற்கையிலேயே நீல நிறம்தானா, அல்லது யாராவது பெயின்ட் அடித்திருப்பார்களா?” என்று கேட்டான். “நல்ல ஊழியன் நீ. உன்னைப் போல இப்படி விழித்திருந்து பணியாற்றும் ஊழியனைப் பார்த்ததில்லை. விடியப் போகிறது. கவனமாக இரு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இளவரசர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பொழுது விடிந்தது. இளவரசர் வந்தார். "டேய் பொழுதுதான் விடிந்து விட்டதே, இன்னும் என்ன சிந்தனை? புறப்படு போவோம்" என்றார் இளவரசர். தேரோட்டி அமைதியாகப் பதில் சொன்னான்: "இளவரசே, இங்கே கட்டியிருந்த குதிரைகளைக் காணோம். அவை தானாகவே ஓடியிருக்குமா அல்லது யாராவது அவிழ்த்துக் கொண்டு சென்றிருப்பார்களா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”.

இங்கே தேரோட்டி விழித்திருந்து பயன் என்ன?
எதற்காக விழித்திருந்தானோ அதைக் கோட்டை விட்டுவிட்டானே! அதனால்தான் “அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருங்கள்" (1 பேதுரு. 5:8) என்கிறார் திருத்தூதர் பேதுரு.

நம்பிக்கையோடு விழித்திருங்கள். வாக்களித்தவர் நம்பிக்கைக்குறியவர் (எபி. 11:11).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

 பிரேசில் நாட்டு ரியோ தெ ஜனெய்ரோ மாநகரில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் ஆரம்பமாகியுள்ளன. ஆகஸ்ட் 3, 2016 புதனன்று, தன் மறைக்கல்வி உரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விளையாட்டுக்களில் கலந்துகொள்வோருக்கும், இதை ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, ஒரு சில கருத்துக்களையும் கூறினார்:
“அமைதி, சகிப்புத்தன்மை, ஒப்புரவு ஆகிய உயர்ந்த பண்புகளுக்காக ஏங்கியிருக்கும் இவ்வுலகிற்கு, நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நம்பிக்கையைக் கொணரட்டும். பதக்கங்கள் வெல்வதைவிட, தோல் நிறம், கலாச்சாரம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து, நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற உணர்வை வளர்ப்பதை, தங்கள் இலக்காகக் கொள்வதே, வீரர்களுக்கும், இவ்வுலகிற்கும் அவசியமானத் தேவை” என்று திருத்தந்தை கூறினார்.
206 நாடுகளை சேர்ந்த 11,000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டுக்கள், எவ்வித ஆபத்தும் இன்றி, நல்ல முறையில் முடிவடைய இறைவனின் பாதுகாப்பை மன்றாடுவோம். ஒரு விளையாட்டு விழாவிற்கு இவ்வளவு பாதுகாப்பு தரவேண்டியுள்ளதே என்ற எண்ணம், வேதனையைத் தூண்டுகிறது. எந்நேரத்தில், எவ்விடத்தில், எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும் என்பது தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இந்த வன்முறைகளில் பல, மதத்தின் பெயரால் நிகழ்வதால், இவற்றை மதப் போர்களாக எண்ணிப் பார்க்கிறோம். ஜூலை 26, 2016 பிரான்ஸ் நாட்டில் 86 வயது நிறைந்த Jacques Hamel என்ற அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், இரு இளையோரால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவ்விளையோருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த வன்முறை நிகழ்ந்ததற்கு அடுத்தநாள், ஜூலை 27,2016 போலந்து நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானப் பயணத்தில், தன்னுடன் பயணித்த ஊடகவியலாளர்களுடன் ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பிரான்ஸ் நாட்டில், அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டது உட்பட, தற்போது உலகின் பல நாடுகளில் நிகழும் வன்முறைகளை, ஒரு போருக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார், திருத்தந்தை:
“நாம் தற்போது சந்தித்துவருவது, மத அடிப்படையில் உருவாகும் போர் என்பதுபோல் பேசப்பட்டாலும், இது உண்மையிலேயே அதிகாரப் பேராசையினால் உருவாக்கப்படும் போர். பணம், இயற்கை வளங்கள், மக்களை அடக்கியாளும் அதிகார ஆசை என்ற காரணங்களே போர்களாக உருவாகின்றன. எல்லா மதங்களும் அமைதியை விரும்புகின்றன; ஆனால், அதிகார ஆசை கொண்ட மனிதர்களோ போரை விரும்புகின்றனர். பிரான்ஸ் நாட்டில், திருப்பலியில், அமைதிக்காக செபித்துக் கொண்டிருந்த வேளையில், அருள் பணியாளர் கொல்லப்பட்டிருப்பது, தற்போது நிலவும் அதிகாரப் பேராசையின் ஒரு வெளிப்பாடு” என்று பேசினார் திருத்தந்தை.

ஜூலை 31, 2016 ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து நாட்டிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பி வந்த வழியில், பயங்கரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டுவது தவறு என்பதை வலியுறுத்திக் கூறினார். சமூக அநீதிகளும், மனிதரைவிட பணத்தைப் பெரிதாக எண்ணி வழிபடும் போக்கும், பயங்கரவாதத்தை வளர்க்கும் முக்கிய காரணங்கள் என்று கூறியத் திருத்தந்தை, இளையோருக்கு போதிய நன்னெறி வழிகளையும், பொருளாதார வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்காதிருப்பது, பயங்கரவாதக் குழுக்களுக்கு அவர்களை இட்டுச்செல்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

நமது பேராசையும், சுயநலமும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் அதிகமாக, மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். சேகரித்து, குவித்துவைக்கும் வியாதிக்கு உட்பட்ட செல்வந்தர்களையும், அரசியல்வாதிகளையும் நாம் நன்கு அறிவோம். இதனால், இல்லாதவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் பாதாளம் உருவாகிவிட்டது. இந்த வேறுபாடுதான் நமக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்டது. இல்லாதவர்கள், விரக்தியின் எல்லைக்கு விரட்டப்படும்போது, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது, அவர்களுக்கு உள்ள ஒரே வழி, இருப்பவர்களைத் தாக்குவது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகள் பலவற்றின் ஆணிவேராக நாம் காண்பது... இருப்பவர் - இல்லாதவர் என்ற இணைக்கமுடியாத இருவேறு உலகங்கள். இப்படிப் பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இருப்பவரின் உலகம் ஆயுதங்களையும், அரசியல் தந்திரங்களையும் நம்பி வாழ்கிறது.

பேராசையின் உயிர் மூச்சாய் இருப்பது, பணம். பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளை அடிக்கடி கூறி, பணத்திற்கு ஏறத்தாழ ஒரு தெய்வீக நிலையை அளித்து வருகிறோம். பணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல. அவற்றைத் திரட்டுவதிலும், குவித்து வைப்பதிலும் நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கி விடுகிறது. தானியங்களைச் சேர்த்து, குவித்து வைத்த ஓர் அறிவற்ற செல்வனைப் பற்றி சென்ற ஞாயிறன்று ஓர் உவமை வழியாக இயேசு எச்சரிக்கை விடுத்தார். இன்றைய நற்செய்தியில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளை நம் அனைவருக்கும் தருகிறார் இயேசு. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளைக் கேட்போம்:
லூக்கா நற்செய்தி 12: 33-34
உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்று நாம் சிந்திக்கும்போது, அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்புப் பணம் நம் உள்ளத்தை இருளாய் கவ்வுகின்றது. திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.
2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர் நடிகைகள்  என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்நூலின் தலைப்பு: இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வம். இதை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது எப்படி? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back? A compilation of articles by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie, May 2009)

செல்வத்தைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இச்சீரழிவு, உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள், கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.
இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை (Capitalism's Achilles Heel) வெளியிட்டார். Bakerன் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் இருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 டிரில்லியன் டாலர்கள். இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு டிரில்லியன் டாலர் அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். Raymond W. Bakerன் கணக்குப்படி, உலகில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு, குறைந்தது, 25 டிரில்லியன் டாலர்கள்!

ஒரு டிரில்லியன் டாலர் என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது, பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு  நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க, பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு டிரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.
ஒரு டிரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம் வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம் தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு ஒரு டிரில்லியன் டாலர்கள் ஒவ்வோர் ஆண்டும் பற்பல அயல்நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.

Raymond W. Baker மற்றொரு வேதனை தரும் உண்மையையும் தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு டிரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும் Raymond W. Baker கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் 25 டிரில்லியன் டாலர்கள், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், நல்ல உடல், உள்ள நலனோடு வாழ முடியும். எவ்வளவு அழகான கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே இயேசுவும் ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

Ernest Hemingway என்பவர் நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம்  தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு, சென்ற வாரம் நமக்குத் தந்த எச்சரிக்கை இதுதான்: “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” லூக்கா 12: 15
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இயேசு, வானத்துப் பறவைகளையும், வயல்வெளி மலர்களையும் பார்த்து, பாடங்கள் பயில நம்மைப் பணிக்கிறார். (லூக்கா 12: 24-28) இறைவனின் பராமரிப்பை நம்பி அவை வாழ்கின்றன என்பதை ஒரு பாடமாக இயேசு தந்தாலும், பறவைகளும், மலர்களும் சொல்லித் தரும் மற்றொரு பாடமும் மனிதர்களாகிய நமக்கு இன்று மிகவும் தேவையான ஒரு பாடம். அதுதான், பகிர்வு. வானத்துப் பறவைகளிடம் பகிர்ந்துண்ணும் பழக்கம் உண்டு என்பதை அறிவோம். மலர்களோ, தன்னிடம் உள்ள நறுமணத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. இந்தப் பகிர்வையே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக நாம் கேட்டோம்:
லூக்கா நற்செய்தி 12: 33-34
உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
தர்மத்தில், பகிர்வில் இவ்விதம் வளரும் உலகம், பாதுகாப்பிலும் அதிகம் வளரும். அந்த உலகில், மக்கள் கூடிவரும் இடங்கள், விளையாட்டு விழாக்கள், இன்னும் பல விழாக்கள் அனைத்தும் பாதுகாப்புப் படைகள் இல்லாமலேயே பாதுகாப்புடன் நடைபெறும். அந்த சுதந்திர மண்ணகத்தை உருவாக்க இறைவன் நம் அனைவருக்கும் துணைபுரியட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"பொறுப்பாய் இருப்போமா?"

பொறுப்புணர்வு என்பது மனிதன் கொண்டிருக்க வேண்டிய பண்புகளில் முக்கியமான ஒன்று. நம்முடைய மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவருக்கு குடும்பத்தை வழிநடத்தக் கூடிய பொறுப்பு இருக்கின்றது. குடும்பத் தலைவிக்கு ஒரு தாயாகவும் நல்ல ஒரு மனைவியாகவும் இருந்து குடும்பத்தை பாசத்தோடு வழிநடத்தக்கூடிய பொறுப்பு இருக்கின்றது. பெற்றோர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை சிறப்பாக வழிநடத்தக்கூடிய பொறுப்பு இருக்கிறது. பிள்ளைகளுக்கும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவும் பெற்றோருக்கும் பெரியவருக்கும் மதிப்பு கொடுக்கவும் பொறுப்பு இருக்கிறது. நாட்டை ஆளும் நாட்டு தலைவர்களுக்கு நாட்டு மக்களை சிறப்பாக நிறையுள்ள பாதையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பு இருக்கிறது. அதேபோல குடிமக்களுக்கும் நாட்டின் சட்டங்களையும் ஒழுங்குகளை மதித்து சிறப்பாக பயணிக்க பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்களை உருவாக்கக்கூடிய பொறுப்பு இருக்கிறது. மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற பொறுப்பு இருக்கிறது. பணி செய்கின்ற இடங்களிலே முதலாளிக்கு தொழிலாளியை சிறப்பாக வழிநடத்தக் கூடிய பொறுப்பு இருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிக்கு உண்மையுள்ள பணியாளர்களாக பணியாற்ற பொறுப்பு இருக்கிறது. கடைசி காலகட்டத்தில் பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. தன்னோடு வாழக்கூடிய சக மனிதர்களை அன்பு செய்யக்கூடிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது. இவ்வாறாக மனித வாழ்விலே ஒவ்வொருவருமே பொறுப்புள்ள மனிதர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் எதையும் ஏனோதானோ என்று செய்யாமல் சிறப்பாக செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே நற்செய்தின் வழியாக இதைத்தான் சிந்திக்க அழைப்பு கொடுக்கிறார். ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை பறைசாற்ற விழிப்போடும் அறிவுகௌ கூர்மையோடும் இருக்க வேண்டும்‌ என்ற ஆழமான கருத்தை சுட்டிக்காட்டுகிறார். கடவுள் நம்முடைய தலைவராக இருந்து இந்த இறையாட்சியின் மதிப்பீடுகளை மண்ணில் விதைக்க நமக்கு பொறுப்பினைக் கொடுத்திருக்கிறார். அதை விழிப்போடு பொறுப்பாளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் செய்கிற பொழுது நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம்.

இயேசுவின் உண்மைச் சீடர்களாக இருந்து பொறுப்புணர்வோடு செயல்பட இவ்வுலகம் சார்ந்த அழியக்கூடிய செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும். இந்த உலகத்தில் நாம் என்னதான் செல்வத்தை சேர்த்து வைத்தாலும் அது மக்கும் தன்மை கொண்டது. நிலையற்ற தன்மை உள்ளது. எனவே ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை முழுமையாக ஏற்று அனுபவித்து, அது தருகின்ற இறையாட்சி மதிப்பீடுகளை பிறருக்கு வழங்குகிற பொழுது கடவுளுக்கு முன்பாக நாம் சிறந்த பொறுப்பாளர்களாக மாறுகிறோம்.

கடவுள் நமக்கு மிகுதியான அருளையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த அருளையும் ஆசீர்வாதத்தையும் இறை அனுபவத்தையும் பயன்படுத்தி எல்லா மக்களும் மீட்புடைய நற்செய்தி அறிவிக்கும் பொழுது நாம் பேறு பெற்றவர்களாக மாறுகிறோம். ஏனெனில் மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் மிகுதியாக கேட்கப்படும். எனவே பொறுப்புணர்வோடும் விழிப்போடும் அறிவுக் கூர்மையோடும் இயேசுவின் நற்செய்தி விழுமியத்திற்கு சான்று பகிர நம்மையே முழுமையாக கையளிப்போம்.

இறை வேண்டல்
வல்லமையுள்ள இறைவா! பொறுப்புணர்வோடு எங்களிடம் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றி சிறந்த நற்செய்தியின் தூதுவர்களாக மாறிட அருளைத் தாரும். ஆமென்.

நலமான வாழ்வுதனை கொடுப்பது நம்மில் எழும் நம்பிக்கையே!

நிகழ்வு:
ஏறக்குறைய 48 ஆண்டுகளுக்கு முன் இளம் வயது பட்டதாரி ஒருவர் தான் படித்த படிப்புக்கு வேலை கிடையாத பொழுது, கிடைத்த சிறு சிறு வேலைகளையெல்லாம் செய்து தன் வாழ்வை நடத்தி வந்தார். அவ்வாறு அவர் தன் பணியின் நிமித்தமாக கோவை மாநகரத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. பயணத்தைத் தொடர்கிறார். கடினப்பட்டு படித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரே ஒரு துணையாய் தன்னுடன் இருந்தது தான் படித்த படிப்பினுடைய சான்றிதழ்தான். அதையும் தவறவிட்டுவிடுகிறார். தொலைத்து விடுகிறார். வாழ்வே முடிந்ததென்று மனம் கலங்கி நிற்கிறார். சரியான வேலை இல்லை. அடுத்தவரிடத்திலே மதிப்பு இல்லை. அவமானம், வேதனை, நல்ல நிலைமைக்கு வரவில்லையென்ற கவலை இத்தனைக்கும் மத்தியில் இவ்வளவு பெரிய இழப்பு என்றால் யாரால் தாங்க முடியும். ஒடிந்து போகிறார் அந்த இளைஞன். இருந்தாலும் அவரிடத்தில் இருந்த நம்பிக்கையை மட்டும் அவர் விட்டுவிடவே இல்லை. சென்னைக்கு போகிறார். கல்விக்குழுமத்திடம் பதிவு செய்து, மாற்றுச்சான்றிதழலைப் பெறுகிறார். இருப்பினும் இன்னும் வேலை கிடைக்காத சூழல், மனவருத்தம், கவலைகள் தன்னை வாட்டினாலும் இறைவன் என்னைக் கண்டிப்பாக கரைசேர்ப்பார். அவர் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கை என்னை வாழ வைக்கும் என்று தொடர்ந்து போராடுகிறார். உழைக்கிறார். கடினமான வாழ்வியல் பின்னணியில் கண்ணியமிக்க தந்தையாக இருந்து தன் குடும்பத்தை வழிநடத்துகிறார். அன்று அவர் கொண்டிருந்த நம்பிக்கைதான் அவருக்கு நலமளித்து நலமான வாழ்வைப் பேண செய்தது. அத்தகைய நம்பிக்கையில்தான் இன்று வரை தன் வாழ்வை முழுவதுமாக அணுகுகிறார், நம்பியதால் நலம் காண்கிறேன் என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் அன்றொரு இளைஞனான தவித்தவர் பின்னாளில் தான் கொண்ட இறைநம்பிக்கையினாலும், தன்னம்பிக்கையினாலும் ஆசிரியப் பணியில் இணைந்து உதவி தலைமையாசிரியராக பணி ஓய்வு பெறுகிறார். அவரின் பெயர் திருச்சியைச் சேர்ந்த ஆசிரியரான திரு.அருளானந்தம்.

இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே,
இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்பிக்கையால் ஒருவர் நலமடைகிறார் என்கிற அருமையான செய்தியை வலியுறுத்தி நம் வாழ்வைச் சிந்தித்து பார்க்க அழைப்பு கொடுக்கிறது. நாம் வாழும் இச்சமூகம் பல்வேறு பின்புலங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதன் மையம் நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையின் அடையாளமாய்; திகழ்கிறது என்றால் அது மிகையல்;ல. எந்த துறையை எடுத்தாலும், எந்த வாழ்வியல் நிகழ்வைக் கண்ணோக்கினாலும் அவையெல்லாம் அன்றாட பேசு பொருளாய் மாற்றப்படுவதற்கு காரணமே அதில் தென்படும் நம்பிக்கைதான். அதைத்தான் இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்றது.

முதல் வாசகத்தில்;
எவ்வாறு இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வில் கடவுள் கொடுத்த வாக்குறுதியின் பின்னணியில் தங்களிடையே காணப்படும் நம்பிக்கையை உறுதிப்படுகிறார்கள் என்பதை வாசிக்கின்றோம். நீங்கள் விடுதலையடைந்தது, பலி ஒப்புக்கொடுத்தது, ஒருமித்து உடன்பட்டது இவையனைத்து உங்களிடத்தில் விளங்கிய நம்பிக்கையால் உருவாகிய நலமான செயல்கள் என்பதை கடவுள் அம்மக்களுக்கு வெளிப்படுகிறார். அதையே வாக்குறுதியாக வழங்கி, இவற்றை தலைமுறைதோறும் பறைசாற்ற பணிப்பதை எடுத்துகிறது சாலமோனின் ஞானநூல்.

இரண்டாம் வாசகத்தில்,
நலமான வாழ்வுதனை கடவுள் எவ்வளவு தூரம் நம் வாழ்வில் பிரதிபலிக்கிறார் என்பதை முதுபெரும் தந்தையாகிய ஆபிரகாமின் வாழ்விலிருந்து கடவுள் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் எவ்வாறு நம்பிக்கையில் ஆழப்பட்டு தன் நலமான ஆசீரைப் பெற்றுக்கொண்டார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஒருவர் எந்தளவு கடவுள்மீது நம்பிக்கை வைக்கிறாரோ அந்தளவிற்கு அவரின் வாழ்வு நலன்களால் நிரப்பப்படும் என்பதற்கு ஆபிரகாம் சிறந்த உதாரணம்.

நற்செய்திக்கு வருகின்ற பொழுது,
ஆபிரகாமிடத்தில் விளங்கிய நம்பிக்கை வாழ்வும், முதல் வாசகத்தில் தென்படுகின்ற இஸ்ரயேல் மக்களின் வாழ்வுநிலையும் நம்மில் எதிரொலிக்க எதார்த்தமான வழிகளை, வாழ்வியல் சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கிறது இன்றைய நற்செய்தி பகுதி. இயேசுவின் இந்த போதனை நம்பிக்கையாளர்களாகிய நம் அனைவருக்கும் நலமான வாழ்வைக் கொடுக்கின்றன என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் லூக்கா நற்செய்தியாளர்.

எவ்வாறு புரிந்து கொள்வது?
இயேசு இன்று நம்முன் கொடுக்கின்ற உவமையின் பின்னணியில் சிந்திக்கின்ற போது ஒரு பணியாள் தன் வாழ்வில் எந்தளவு நம்பிக்கைக்குரியவனாக இருக்க வேண்டுமென்பதில் தொடங்கும் இயேசு வார்த்தையில், நம்புவதால் உன் வாழ்வு நலம் காணும், நலன்களையே அனுபவிப்பாய் என்கிற ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார். அதற்கு மூன்று வகையான வழிமுறைகளையும் தருகிறார். யார் ஒருவர்; தன் வாழ்வில் முழுமையான ஆசீரை பெற வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ அவர் என்னச் செய்யலாம் இயேசு காட்டும் வழியில் பயணித்து அதற்கான ஆசீரை தமதாக்கலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் பின்வரும் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன.

முழுமையான நம்பிக்கை
விழிப்பு நிலை
பொறுப்புமிக்க பணிவிடை

எங்கே இந்த மூன்றும் வெளிப்படையாய் அமைகிறதோ அங்கே நம்பிக்கையால் யாவரும் நலமடைய முடியும் என்பதே இன்றைய நாள் வாசகங்கள் கொடுக்கும் நம்பிக்கை.

முழுமையான நம்பிக்கை:
முழுமையான நம்பிக்கை என்பது நாம் நினைப்பது நடக்கும் என்ற எதிர்நோக்கு (எபி11:1). அதாவது திருத்தூதர்களைப் பார்த்து இயேசு என்ன சொல்கிறார்: சிறு மந்தையே அஞ்சாதே. அப்படியென்றால்;, நீங்கள் விரும்பும் வாழ்வை எவ்வாறு பெற்றுக்கொள்வீர் அல்லது எப்படி கிடைக்கும் என்று யாராவது கேட்டால், அது உங்களிடத்தில் வெளிப்படும் முழுமையான நம்பிக்கையால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுதான் 'நலமான வாழ்வாய்' நமக்கு கிடைக்கிறது. இதைத்தான் திபா 33:20 சொல்கிறது: "நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும், கேடயமும் ஆவார்". இப்படிப்பட்ட விசுவாசப் பார்வைதான் நம்மை முழுமையான நம்பிக்கை வாழ்வுக்குள் அழைத்து செல்லும்.

விழிப்பு நிலை அல்லது விழிப்பாய் இருத்தல்:
கடவுள் மீது நாம் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கை நம் வாழ்வில் பிரதிபலித்து நலத்தையும், வளத்தையும், வரத்தையும் பெற்று மகிழ வேண்டுமென்றால் நம்பிக்கையின் அடுத்த நிலையான அத்தகு நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள தேவையான விழிப்புநிலை நமக்கு தேவை. நலமான வாழ்வு எனக்கு வேண்டுமென்றால் நிச்சயமான நாம் விழிப்போடு இருக்க வேண்டும். எப்படி? நலமாய் இருக்க வேண்டிய என் வாழ்வு நலமற்றதாய் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே விழிப்பு நிலை. உதாரணமாக, நற்செய்தியில் வரும் உவமையில், வீட்டுப்பணியாளர் பொறுப்பில் உள்ளவர் தன் தலைவர் எந்த நேரத்திலும் வருவார் என்ற விழிப்பு நிலையில் இல்லாததால்தான் அவர் தன் விருப்பப்படி வாழ்கிறார். விழிப்பு நிலை இல்லாத போது நம் நம்பிக்கையும் அலையில் சிக்கி சிதையும் படகாகதான் இருக்கும். அத்தகைய நிலை நம்மில் உருவாகாமல் இருக்கவே இயேசு விழிப்பாய் இருங்கள். எல்லையற்ற நலத்தினைப் பெறுங்கள் என்று பறைசாற்றுகிறார்.

பொறுப்போடு பணிவிடை புரிதல்:
வாழ்வில் ஏற்க வேண்டிய முழுமையான நம்பிக்கை விழிப்பு நிலையின் வழியாக தென்படுவதோடு மட்டுமல்ல அது முழு நிறைவையும் அடைய வேண்டுமென்றால், அதில் பொறுப்புமிக்க பணிவிடை அவசியம். எவ்வாறு? வீட்டு உரிமையாளர் எக்காலத்திலும் வந்தாலும் அவருக்கு பணிவிடை புரியும் பணியாளருக்கே தலைவர் உதவிகள் செய்து வாழ்வை உயர்த்துவார். நலமானதை செய்வார். அதுபோலத்தான் நாமும் இயேசு எந்நேரத்தில் வருவார் என்பது யாருக்கும் தெரியாது, இருப்பினும், அப்படிப்பட்ட தருணத்தில் நாம் பொறுப்போடு பணிவிடை புரிய வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழி 'பணிவிடை புரிய தயாராய் இருப்பது' தான். இத்தகு எண்ணத்தில் ஆழமாய் வேரூன்ற இறைவன் இன்றைய நாளில் நம்மை அழைக்கிறார். அத்தகைய அழைப்புக்கு ஆம் சொல்லும் விதமாய் நம்முடைய பணிகள் அமையட்டும். அதற்கான வரத்தை ஒவ்வொரு நாளும் இறைவனிடத்தில் வேண்டுவோம்.

முழுமையான நம்பிக்கையும், விழிப்பாய் இருக்கும் நிலையும், பொறுப்போடு பணிவிடை புரிதலும் நம்மில் இருக்கும் நம்பிக்கையை இன்றும் வலுப்படுத்தி நலமான வாழ்வைப் பெற்றிட உதவட்டும். இறைவனே நம் வாழ்வின் உற்றத்துணை என்னும் எண்ணத்தை உருவாக்கட்டும்.

"ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்" (திபா 31:24)

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு