மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 19ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1 அரசர்கள் 19:9அ, 11-13அ; | உரோமையர் 9:1-5; | மத்தேயு 14:22-33

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


வாழ்வோம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாய்.

இன்றிருந்து நாளை இல்லாமல் போகும் அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆள்பவர்களும் அணுக முடியா ஆகாய உயரத்தில் இருக்கிறபோது, அகிலத்தைப் படைத்த ஆண்டவர் அணுகக் கூடியவரா? அல்லது அணுகினால் அழிப்பவரா? என்ற வினா நம்முடைய உள்ளத்தில் எழாமலில்லை.

இவ்வினாவிற்கு விடை தருவது இன்றைய இறைவார்த்தை. ஆண்டவர் அன்போடு தன்னை நோக்கி வர, தன் அருகில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க அழைக்கிறார் என்பதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகளைத் தரலாம். சீனாய் மலையில் மோசேயின் அனுபவம் (காண். வி.ப. 19:3), சிறுவன் சாமுவேலின் அனுபவம் (காண் 1 சாமு. 3:1-15). இங்ஙனம், தம்மை அணுகி வருகிறவர்களுக்கு வாழ்வின் வழிகாட்டுதல்களை நல்கும் ஆண்டவர் எக்குணம் கொண்டிருப்பார் ? கடுமனம் படைத்தோரையும், வலிமையால் வஞ்சிக்கிறவரையும் அறிவீனன் கூட அணுகமாட்டான். ஆனால், மென்மையான உள்ளமும், பாசமும், பண்பும் நிறைந்தவர்களை பைத்தியகாரர்கள் கூட அணுகிப் பக்குவப்படுவார்கள், பாசத்தால் நிரப்பப்பட்டு, மனம் நிறைந்தவர்களாய்ச் செல்வர். உலகைப் படைத்து, காத்து, வாழ்விக்கின்ற இறைவன் உருக்குலைக்கிறவர் அல்ல, மாறாக மென்மையானவர், அழிப்பவர் அல்ல, மாறாக வாழ்விப்பவர் என்பதை ஐயமற விளக்குவதுதான் எலியாசு அனுபவம். சுழற்காற்றிலல்ல, நிலநடுக்கத்திலல்ல, தீயிலல்ல, மாறாக மெல்லிய காற்றில், சுகமாக வருடி நம் சுமைகளைக் களைந்து, நம்மை வழிநடத்துகிறார்.

மென்மையான , இலேசான பொருட்கள் நீரில் மூழ்குவதுண்டோ ? மேன்மையான இறைவன் நீரின் மேல் நடக்கிறார். அவர் எதிலும் மூழ்கார். ஆனால், அவரில் மூழ்கித்
திளைக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். மனிதருக்கு, தன்னை விடப் பெரியவர் எவரும் இல்லை என்கின்ற ஒரு அசாதாரண எண்ணம் உண்டு. எனவேதான், தான் செய்யாததை மற்றொருவ செய்கிறபோது அதில் சந்தேகமும், அதைச் சோதித்தறிய வேண்டும் என்ற ஆவலும் உருவாகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தியில் பாக்கிறோம். நீரின் மேல் நடந்து வருகின்ற ஆண்டவரைக் கண்டவுடன் பேதுருவின் உள்ளத்தில் முதலில் சந்தேகம். எனவேதான் ஐயோ பேய் என்று அலறினார். இரண்டாவது சோதித்தறிய வேண்டும் என்ற ஆவல். எனவேதான், ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல் மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் என்றார். சந்தேகத்தையும், சோதித்தறிந்ததையும் தாண்டி அவர் உள்ளத்தில் அச்சம் உருவானபோது நிலைகுலைந்து போகிறார். ஆண்டவரும் அவரைக் கடிந்து கொண்டு நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

எனவே, எலியாசு வழியாகத் தான் மென்மையானவன் என்பதை வெளிப்படுத்தும் இறைவன், பேதுரு வழியாக தன்னில் நம்பிக்கை கொள்கிற எவரும் சந்தேகம் களைந்து, சோதித்தறிவதில் குறியாக இல்லாமல், அச்சம் நீங்கி வாழ அழைப்பு விடுக்கிறார். இறை நம்பிக்கை நம்மை வாழ்விக்கும் வாழ்வோம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாய்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மொழி எது?

ஒரு மதகுரு தினந்தோறும் கோயிலில் பல மணி நேரம் செபிக்கும் வயதான மனிதர் ஒருவரைப் பார்த்தார். ஒரு நாள் மதகுரு அவரிடம், கோவிலுக்குள் பல மணி நேரம் அமர்ந்திருக்கின்றாயே! என்ன செய்கின்றாய்? என்றார். அதற்கு அந்த வயதான மனிதர், செபிக்கின்றேன் என்றார்.

கடவுள் உன்னோடு பேசுவாரா? என்றார் மதகுரு. பேசமாட்டார் என்ற பதில் வந்தது. நீ கடவுளோடு பேசுவாயா என்றார்? மதகுரு. பேச மாட்டேன் என்ற பதில் வந்தது. பிறகு எப்படிச் செபிப்பாய்? என்றார் மதகுரு. மௌனம்தான் செபம் என்ற பதில் வந்தது. மதகுருவுக்கு செபத்தைப் பற்றிய உண்மையான அறிவு கிடைத்தது.

ஒருவரோடு நாம் பேசும்போது அவருக்குப் பிடித்தமான மொழியில் அவரோடு பேசுகின்றோம். கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மொழி மௌனம், அமைதி.

நாம் மௌனமாக இருக்கும்போது, நாம் அமைதியை அனுபவிக்கும்போது கடவுள் நம்மை, நமது உள்ளத்தை, நமது மனத்தை, நமது வாழ்க்கையைக் கடந்து செல்வார்.
இன்றைய முதல் வாசகத்தில் குகைக்குள்ளிருந்த இறைவாக்கினர் எலியாவைப் பார்த்து இறைவன், வெளியே வா. மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கின்றேன் (1 அர 19:11அ) என்கின்றார். இப்படிச் சொன்ன ஆண்டவரை எலியா சுழற்காற்றில் சந்திக்கவில்லை ; நிலநடுக்கத்தில் சந்திக்கவில்லை ; தீயில் சந்திக்கவில்லை. மாறாக, அவர் அடக்கமான, அமைதியான மெல்லிய ஒலியில் இறைவனைச் சந்திக்கின்றார் (1 அர 19:12,13).

அன்று ஆறுதலைத் தேடி அலைந்த எலியாவுக்கும், காற்றிலிருந்தும், கடலிலிருந்தும் காப்பாற்றப்பட்ட பேதுருவுக்கும் (நற்செய்தி) காட்சி அளித்த இறைவன் இன்று நம்மைச் சந்தித்து நமக்கு வேண்டிய வரங்களைத் தர தயாராக இருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் அமைதியாக ஆண்டவர் பாதத்திலே அமர முன்வரவேண்டும். அமைதியில் இரண்டு வகையான அமைதி உண்டு ; ஒன்று வெளி அமைதி, மற்றொன்று உள் அமைதி! வெளிப்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் அமைதிப்படுத்துவதில் வெளி அமைதியும், ஆசை, அறிவு, நினைவு, கற்பனை, உணர்வு ஆகிய உள்புலன்களை அமைதிப்படுத்துவதில் உள் அமைதியும் அடங்கியுள்ளது.

அமைதியை அனுபவிக்க மூன்று அழகான வழிகள் உள்ளன :
கண்களை மூடி இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொல்லலாம்.

கண்களை மூடி ஒரு பஜனைப் பாடலைப் திரும்பத் திரும்பப் பாடலாம்.
கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடலாம்.

அமைதியிலே, மௌனத்திலே, ஆண்டவரின் ஆவியாரால் நாம் தூண்டப்படுவோம் (இரண்டாம் வாசகம்). பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம் என்று வாழ அனைவரும் முன்வருவோம்.

மேலும் அறிவோம் :

அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள்: 1).

பொருள் :

எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதலாக அமைகிறது. அதுபோன்று உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் முதல்வனாக விளங்குகிறான்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் நம்பிக்கை

ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "சூரியன் பூமியைச் சுத்துதா? அல்லது பூமி சூரியனைச் சுத்துதா?" என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவன், "தலை சுத்துது சார்." என்றான், நம்மிலும் நம்மைச் சுற்றிலும் அரங்கேறும் பல்வேறு அவலங்களைப் பார்க்கும்போது நமக்குத் தலை சுத்துகிறது. மயக்கம் வருகிறது.

ஒரு பெண்மணி மருத்துவரிடம் சென்று "டாக்டர்! காலையில் எழுந்தவுடன் அரைமணி நேரம் என் தலை சுத்துகிறது" என்றார். அதற்கு மருத்துவர், "அப்படியானால் அரைமணி நேரம் கழித்து எழுந்திரு" என்றார். மருத்துவர்கள் மருந்து கொடுக்கிறார்கள். அது நமது நோய்களைத் தற்காலிகமாக மட்டுமே குணப்படுத்தும். மீண்டும் நோய் நம்மைத் தாக்கும். நோய்க்கு, குறிப்பாக மனக் கவலைக்கு நிரந்தர மருந்து உண்டா ? கடவுளிடம் சரணடைவதே மனக்கவலைக்கு ஒரே மருந்து என்கிறார் வள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் தான் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (குறள் 7)

இன்றைய தற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையைக் கண்ட சீடர்களும் மக்களும் அவரை அரசராக முடிசூட்ட முயன்றனர். ஆனால் இயேசுவோ அதை ஏற்க மறுத்து, சீடர்களிடம் அக்கரைக்குப் படகில் செல்லும்படி கட்டளையிட்டார். அவர் இக்கரையிலேயே தங்கிவிட்டார். இயேசுவால் தனிமைப்படுத்தப்பட்ட சீடர்கள் கடலில் செல்லும் போது கடல் கொந்தளிக்க, புயல் காற்று வீசுகிறது. பயத்து செத்துக் கொண்டிருந்த வேளையில் கடலில் இயேசு நடந்து வந்தார். அவர்கள் அவரைப் பேய் என்று கருதி பயத்தால் அலறினர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், "துணிவோடு இருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்" என்கிறார்.

நம்முடைய வாழ்க்கைப் படகைப் பல்வேறு துன்பங்கள் அலைக்கழிக்கின்றன. அவ்வேளையில் கடவுள் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நினைக்கிறோம். ஆனால் இருள் நம்மைக் கவ்விக் கொள்ளும் வேளையிலும் கடவுள் தம்மோடு இருக்கிறார். "அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கொடுக்கிறார், துன்ப வேளையில் நமக்குக் கைகொடுக்கும் திருப்பா, "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சேன்" (திபா 23:4),

இயேசு சீடர்களிடம், "நான்தான்" என்று கூறியதில் ஆழமான ஓர் இறையியல் உண்யை பொதிந்துள்ளது. பழைய ஏற்பாட்டிலே மோசே கடவுளின் பெயர் என்னவென்று கேட்ட போது கடவுள் கூறிய பதில்! "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" (விப 3:14). கிறிஸ்து "நான்தான்" என்று கூறியதன் மூலம் தாம் கடவுள் என்பதை உணர்த்துகிறார். கடவுள் என்றும் இருப்பது போல் இயேசுவும் என்றும் இருக்கிறார். இன்றைய நற்செய்தியில், புயல் நின்றவுடன் படகில் இருந்தவர்கள் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்” (மத் 14:33) என்று அறிக்கையிடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து என்றும் நம்மோடு இருக்கும் இம்மானுவேல் (மத் 1:22-23), உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20). அவரே நமது ஒளி, நமது மீட்பு. யாருக்கு நாம் அஞ்ச வேண்டும்? அவர் நமது அடைக்கலம், எனவே யாருக்கு நாம் நடுங்க வேண்டும் (திபா 27:1).

பேதுருவும், இயேசுவைப்போல் கடலில் நடக்க முற்பட்டபோது அவா காற்றின் வேகத்தைக் கண்டு அஞ்சி தண்ணீரில் மூழ்கப் போனபோது, "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார். இயேசு அவரது கையைப் பிடித்து, தம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்று கூறி அவரைக் கடிந்து கொண்டார்.

ஓர் ஊரின் அருகாமையில் ஆறு ஓடியது. ஆற்றின் அக்கரையில் ஒரு சத்தியாசி இருந்தார். ஊரிலிருந்து ஒரு கைம்பெண் ஆற்றில் படகேறி அக்கரையில் இருந்த அவருக்கு பசும்பால் கொண்டுவந்து கொடுத்து வந்தார். அவர் ஒரு சில நாள்களில் படகோட்டித் தாமதமாக வந்தபோது தாமதமாகச் சந்நியாசிக்கு பால் கொண்டு போனார். இதை அறிந்த சந்நியாசி அவரிடம், "இனிமேல் படகில் வராதே, பகவான் பெயரைச் சொல்லி ஆற்றில் நடந்து வா" என்றார். அக் கைம்பெண்ணும் ஆற்றில் நடந்தார். இதைக் கண்ட சந்நியாசியும் அப்பெண் பின்னால் ஆற்றில் நடந்தபோது ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். சாதாரண எளிய கைம் பெண்ணுக்கு இருந்த கடவுள் நம்பிக்கை அச்சந்நியாசிக்கு இல்லாமற் போனது.

அதிகமாக படித்தவர்களிடம் இருக்கும் கடவுள் தம்பிக்கையைவிடச் சாதாரண பாமர மக்களிடமே அதிகமாகக் கடவுள் நம்பிக்கை காணப்படுகிறது என்பது உண்மையே. கடவுளும் விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதும் உண்மையே (லூக் 10:21)

துன்பம் நம்மை வாட்டி வதைக்கும்போது கடவுள் தம்மிடம் கூறுவது: "அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன். உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்கு உரியவன், நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா: தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்படமாட்டாய். நெருப்பு உன்மேல் பற்றி எரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே” (எசா 43:1-3).

படகு தண்ணீர் மீது சென்றால், அது உல்லாசம்,
தண்ணீர் படகுக்குள் சென்றால், அது கைலாசம்,
நமது வாழ்வு உல்லாசமா? கைலாசமா?
நாம் உலகை வென்றால் அது உல்லாசம்,
உலகம் நம்மை வென்றால் அது கைலாசம்,

கிறிஸ்து நமக்குக் கூறுவது: "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். தான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன் (யோவா 16:33).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உலகமே பயத்தின்‌ மடியில்‌!

தவ வலிமை பெற்ற முனிவர்‌ அவர்‌. அவரிடம்‌ ஒரு சுண்டெலி வந்து, “ஐயா, பூனையைக்‌ கண்டாலே எனக்குப்‌ பயம்‌. என்னைப்‌ பூனையாக மாற்றிவிடுங்கள்‌” என்று கெஞ்சியது. அவரும்‌ இரக்கப்பட்டு - அப்படியே பூனையாக மாற்றினார்‌. மறுநாள்‌ அந்தப்‌ பூனை “நாய்‌ விரட்டி விரட்டித்‌ துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விடுங்கள்‌” என்று மன்றாடியது. நாயாக மாற்றினார்‌. அடுத்த நாள்‌, “புலி என்னைப்‌ படாதபாடு படுத்துகிறது. புலியாக மாற்றுங்கள்‌” என்று வேண்ட நாய்‌ புலியானது. புலி வந்து, “முனிவரே என்னை வேட்டையாடத்‌ துப்பாக்கியும்‌ கையுமாக வேடன்‌ காடு முழுவதும்‌ அலைகிறான்‌. என்னை வேடனாக்குங்கள்‌”” என்றது. முனிவரும்‌ பொறுமையுடன்‌ மாற்றினார்‌. சில நாட்களில்‌ வேடன்‌ வந்து “சுவாமி, மற்ற மனிதர்களைக்‌ கண்டாலே நடுங்குகிறேன்‌. அதனால்‌ என்னை ...” சொல்லி முடிக்கும்முன்‌ முனிவர்‌ கோபத்தோடு “சுண்டெலியின்‌ இதயம்தான்‌ இருக்கிறது. நீ எதுவாக மாறினாலும்‌ உன்‌ இதயம்‌ மாறாதவரை உன்‌ அச்சம்‌ உன்னைவிட்டுப்‌ போகாது. என்னாலும்‌ எதுவும்‌ செய்ய இயலாது. பழையபடி நீ சுண்டெலியாக வாழ்வதற்குத்தான்‌ தகுதி” என்று சொல்லிவிட்டார்‌.

பயந்தவனுக்கு உலகம்‌ வழிபாட்டுப்பொருள்‌: துணிந்தவன்‌ உலகிற்கு வழிபாட்டுப்பொருள்‌. - இது ஒரு தத்துவம்‌!

உடலில்‌ இருப்பது சாவின்‌ பயம்‌. இன்பத்தில்‌ இருப்பது நோயின்‌ பயம்‌. பணத்தில்‌ இருப்பது திருடர்‌ பயம்‌. மதிப்பில்‌ இருப்பது இழத்தலின்‌ பயம்‌. அழகில்‌ இருப்பது மூப்பின்‌ பயம்‌. அறிவில்‌ இருப்பது தோல்வி பயம்‌. குணத்தில்‌ இருப்பது வசையின்‌ பயம்‌. வாழ்க்கையில்‌ இருப்பது எல்லாம்‌ பயம்‌ - இதுதான்‌ எதார்த்தம்‌!

வகுப்பில்‌ ஆசிரியை மாணவிகளைப்‌ பார்த்துக்‌ கேட்கிறாள்‌: “பயந்து நடுங்கும்‌ உயிரினங்களைப்‌ பற்றிச்‌ சொல்லுங்கள்‌”. மாணவி ஒருத்தியின்‌ பதில்‌: “எலி பூனைக்குப்‌ பயப்படுகிறது. பூனை நாய்க்குப்‌ பயப்படுகிறது. நாய்‌ ஓநாய்க்குப்‌ பயப்படுகிறது. ஓநாய்‌ கரடிக்குப்‌ பயப்படுகிறது. கரடி சிங்கத்துக்குப்‌ பயப்படுகிறது. சிங்கம்‌ சர்க்கஸில்‌ எங்க அப்பாவுக்குப்‌ பயப்படுகிறது. எங்க அப்பா எங்க அம்மாவுக்குப்‌ பயப்படுகிறார்‌. எங்க அம்மா கரப்பான்பூச்சிக்குப்‌ பயப்படுகிறாள்‌...

உலகமே பயத்தின்‌ பிடியில்‌! அதனால்தான்‌ சொன்னான்‌ பாரதி, “அஞ்சிஅஞ்சிச்‌ சாவார்‌, இவர்‌ அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று.

நமது வாழ்க்கை பலநேரம்‌ பயத்தில்தான்‌ கரைகிறது.

வீட்டிலிருக்கும்‌ இருட்டை விரட்டுவதற்காக ஒருவன்‌ வாளி வாளியாக இருட்டை மொண்டு கொண்டுவந்து வீதியில்‌ கொட்டிக்‌ கொண்டிருந்தானாம்‌. எத்தனை ஆண்டுகள்‌ இப்படிச்‌ செய்தாலும்‌ இருட்டைச்‌ சுற்றியே சிந்தித்துக்‌ கொண்டிருந்தால்‌ இருட்டை வெளியேற்ற முடியாது. ஒளி இல்லாமை என்பதுதான்‌ இருட்டு. அதனால்‌ ஒரு சின்ன விளக்கை ஏற்றிவைத்தால்‌ இருட்டுத்தானாக ஓடி மறையும்‌.

“ஆண்டவரே என்‌ ஒளி. அவரே என்‌ மீட்பு. யாருக்கு நான்‌ அஞ்சவேண்டும்‌? ஆண்டவரே என்‌ உயிருக்கு அடைக்கலம்‌. யாருக்கு நான்‌ அஞ்சி நடுங்க வேண்டும்‌?” (திபா 27:1).

பயமும்‌ இருட்டு மாதிரிதான்‌. அன்பு அன்பு இல்லாமைதான்‌ பயம்‌. அன்பு என்ற விளக்கை வைத்தால்‌ பயம்‌ தன்னிலே மறைந்துவிடும்‌.

“சாவின்‌ இருள்‌ சூழ்‌ பள்ளத்தாக்கில்‌ நான்‌ நடக்க நேர்ந்தாலும்‌ நீர்‌ என்னோடு இருப்பதால்‌ எத்தீங்கிற்கும்‌ அஞ்சிடேன்‌. உம்‌ கோலும்‌ நெடுங்கழியும்‌ என்னைத்‌ தேற்றும்‌” (தி.பா. 23:4).

நம்மோடு இருக்கின்ற அவர்‌ நம்மை அன்பு செய்பவர்‌. ஆற்றல்‌ மிக்கவர்‌. அதனால்தான்‌ இயேசு சீடர்களைப்‌ பார்த்து, “துணிவோடிருங்கள்‌. நான்தான்‌. அஞ்சாதீர்கள்‌” (மத்‌. 14:27) என்று கூறுகிறார்‌. பேதுருவைப்‌ பார்த்து “நம்பிக்கை குன்றியவனே, ஏன்‌ ஐயம்‌ கொண்டாய்‌” (மத்‌. 14:31) என்று சாடுகிறார்‌. இறைவன்‌ நம்மை அன்பு செய்கிறார்‌. அவரது அன்பு ஒருபோதும்‌ நம்மைக்‌ கைவிடாது என்ற உணர்வுதானே நம்பிக்கை! நம்பிக்கை என்பது தூய ஆவியின்‌ வழியாக இறைவன்‌ தன்‌ அடியார்களுக்குத்‌ தருகின்ற வரங்களில்‌ ஒன்று. (1 கொரி. 12:9).

ஒரு நாள்‌ மாலை முல்லா நசூருதீன்‌ தன்‌ இள மனைவியோடு கடலில்‌ படகில்‌ உல்லாசமாக இருந்தார்‌. அப்போது திடீரென்று புயல்‌ அடித்தது. கடல்‌ அலைகள்‌ ஆர்த்தெழுந்தன. படகோ பேயாட்டம்‌ ஆடியது. மனைவியை மரணபயம்‌ தொற்றிக்‌ கொண்டது. ஆனால்‌ முல்லா சிறிதும்‌ பயமில்லாமல்‌ இருந்தார்‌. “உங்களுக்குப்‌ பயமாக இல்லையா?” என்று கணவனை ஆச்சரியத்தோடு கேட்டாள்‌. அதற்கு முல்லா நசுருதீன்‌ பதில்‌ சொல்லாமல்‌ தன்‌ இடுப்பில்‌ செருகி இருந்த கத்தியை எடுத்து மனைவியின்‌ குரல்வளையைக்‌ குத்துவது போல்‌ ஒங்கினார்‌. மனைவியின்‌ முகத்தில்‌ எந்தவிதச்‌ சலனமும்‌ இல்லை. அப்போது முல்லா தன்‌ மனைவியைப்‌ பார்த்து, “கத்தி என்றால்‌ உனக்குப்‌ பயமாக இல்லையா?” என்று கேட்டார்‌. அதற்கு அவள்‌, “கத்தி வேண்டுமானால்‌ ஆபத்தானதாக இருக்கலாம்‌. ஆனால்‌ அதைப்‌ பிடித்துக்‌ கொண்டிருப்பவர்‌ என்‌ மீது அளவு. கடந்த அன்பு வைத்திருப்பவர்‌. என்‌ கணவர்‌. அதனால்‌ எனக்குப்‌ பயமேதும்‌ இல்லை” என்றாள்‌.

“அதே போலத்தான்‌ எனக்கும்‌. இந்தப்‌ புயலும்‌ அலையும்‌ அச்சுறுத்தும்‌ ஆபத்தானதாக இருக்கலாம்‌. ஆனால்‌ இதை ஆட்டுவித்துக்‌ கொண்டிருக்கும்‌ கடவுள்‌ அன்பு மயமானவர்‌. அதனால்‌ எனக்குப்‌ பயமில்லை” என்றார்‌ முல்லா.

திருப்பாடல்‌ ஆசிரியரும்‌ அதே உணர்வில்‌ ஆடிப்பாடுகிறார்‌. “கடவுள்‌ நமக்கு அடைக்கலமும்‌ ஆற்றலுமாய்‌ உள்ளார்‌. இடுக்கணுற்ற வேளைகளில்‌ நமக்கு உற்ற துணையும்‌ அவரே. ஆகையால்‌ நில உலகம்‌ நிலை குலைந்தாலும்‌, மலைகள்‌ ஆழ்கடலில்‌ அதிர்ந்து நடுங்கினாலும்‌, கடலில்‌ அலைகள்‌ கொந்தளித்துப்‌ பொங்கினாலும்‌ அவற்றின்‌ பெருக்கால்‌ குன்றுகள்‌ அதிர்ந்து நடுங்கினாலும்‌ எங்களுக்கு அச்சம்‌ என்பதே இல்லை” (தி.பா. 46:1-2).

கடவுள்‌ மீது வைக்கும்‌ நம்பிக்கை - அது தரும்‌ அன்பு, பயத்தை அகற்றும்‌. கடவுளிடம்‌ கூட நாம்‌ செலுத்த வேண்டியது அன்புதானே தவிர, பயம்‌ அல்ல.

இருட்டுக்கும்‌ வெளிச்சத்துக்குமான இடைப்பட்ட நிலையில்‌ உலகம்‌ இயங்கிக்‌ கொண்டிருக்கிறது. இது விடியப்போகிற கருக்கலா அல்லது இருட்டப்போகிற அந்தியா? இந்த மங்கிய ஒளியைப்‌ பகலாக்கும்‌ முயற்சியே நம்பிக்கையின்‌ இலக்காகிறது!

“யாக்கோபே, உன்னைப்‌ படைத்தவரும்‌, இஸ்ரயேலே உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர்‌ இப்போது இவ்வாறு கூறுகிறார்‌: அஞ்சாதே, நான்‌ உன்னை மீட்டுக்‌ கொண்டேன்‌... நீ எனக்கு உரியவன்‌. நீர்நிலைகள்‌ வழியாக நீ செல்லும்‌ போது நான்‌ உன்னோடு இருப்பேன்‌. ஆறுகளைக்‌ கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா. தீயில்‌ நடந்தாலும்‌ சுட்டெரிக்கப்பட மாட்டாய்‌. நெருப்பு உன்மேல்‌ பற்றியெரியாது. ஏனெனில்‌ உன்‌ கடவுளாகிய ஆண்டவர்‌ நானே. இஸ்ரயேலின்‌ தூயவரும்‌ உன்னை விடுவிப்பவரும்‌ நானே” (எசா. 43: 1-3).

சீடர்கள்‌ கலங்கி “ஐயோ, பேய்‌” என அச்சத்தினால்‌ அலறியபோது, “துணிவோடிருங்கள்‌, நான்‌ தான்‌ அஞ்சாதீர்கள்‌” (மத்‌. 14:27) என்றார்‌ இயேசு.

“நான்தான்‌” - அது யார்‌ அந்த நான்‌? “யார்‌ கதவைத்‌ தட்டுவது?” என்று கேட்க, “நான்தான்‌, கதவைத்‌ திற” என்றால்‌ மிகவும்‌ நெருக்கமானவர்‌, நேசத்துக்குரியவர்‌ என்றுதானே பொருள்‌! உறவையோ, பெயரையோ சொல்லியா கதவைத்‌ தட்டுவான்‌ கணவன்‌! இயேசு நமக்கு அவ்வளவு நெருக்கமானவர்‌, நேசமானவர்‌!

“ஆண்டவரை உம்‌ புகலிடமாய்க்‌ கொண்டீர்‌. உன்னதரை உம்‌ உறைவிடமாக்கிக்‌ கொண்டீர்‌. ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது. வாதை உம்‌ கூடாரத்தை நெருங்காது” (தி.பா. 91:9-10).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தண்ணீர்... நடக்கவா? மூழ்கவா?

நம் உடலைப்பற்றிய இரு எண்ணங்கள் இன்றைய ஞாயிறு சிந்தனையை துவக்கி வைக்கின்றன. உங்களில் யாராவது உங்கள் காது, மூக்கு, வாய் இவற்றை நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா? நமது உடலில் கை, கால், வயிறு போன்ற பகுதிகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதே நேரம் கண், காது, மூக்கு, வாய், முதுகு என்று, நம் உடலின் பல பகுதிகளை நம்மால் நேரடியாகப் பார்க்கமுடியாது. கண்ணாடியில் தெரியும் அவற்றின் பிம்பங்களைத்தான் பார்க்கமுடியும். நம்மோடு பிறந்து, நம் உடலின், நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கும் இப்பகுதிகளை நாம் நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருப்பதுபோல், நம் வாழ்வின் ஆதாரமாய், அடித்தளமாய் இருக்கும் இறைவனையும் நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது முதல் எண்ணம்.

உடலின் பல பகுதிகளை நாம் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்ப்பதில்லை. அப்பகுதிகளில் ஏதேனும் வலி அல்லது பிரச்சனை என்று வரும்போது மட்டுமே, அவற்றைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு எழுகின்றன. அதேபோல், வாழ்க்கையில் வலி ஏற்படும் வேளைகளில், நாம் இறைவனைத் தேடுகிறோம் என்பதும் உண்மை. வாழ்வில், துன்பங்கள், போராட்டங்கள் சூழும் நேரங்களில், நம் கடவுள், கண்ணாமூச்சி விளையாடுவது போல, அல்லது, காணாமற் போய்விட்டதைப் போல உணர்கிறோம். இது இரண்டாவது எண்ணம். நம்மால் நேரடியாகப் பார்க்கமுடியாவிட்டாலும், நாம் அவற்றைப்பற்றி எப்போதும் எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், நம் உடலின் பகுதிகளாய் இருக்கும் பல உறுப்புக்களைப் போல், நம் கடவுளும், எங்கும், எப்போதும் நம்முடன் இருக்கிறார்.

உலகப்புகழ் பெற்ற மனநல மருத்துவர், கார்ல் யுங் (Carl Jung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: "Called or Not, God is Present" "அழைத்தாலும், அழைக்கவில்லையென்றாலும், எப்போதும் நம்முடன் இருப்பவர் இறைவன்". மறுக்கமுடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய் பதிக்க, இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு வாய்ப்பளிக்கிறது. நம் வாழ்வில், எவ்வடிவில், எவ்வகையில், கடவுள் உடன் இருக்கிறார் என்ற உண்மையை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா வழியாகவும், நற்செய்தியில் புனித பேதுரு வழியாகவும் கற்றுக்கொள்ள முயல்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா, தன் உயிருக்குப் பயந்து, குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்திற்குப் பணி செய்த பொய்வாக்கினர்களை நூற்றுக் கணக்கில் பழி தீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசி ஈசபேலின் கையால் இறப்பதற்கு அஞ்சி, நாட்டைவிட்டு ஓடிப்போகிறார். தான் வாழ்ந்தது போதும் என்று விரக்தியடைந்த இறைவாக்கினர் எலியாவை, தன் திருமலைக்கு அழைத்துச் செல்கிறார், இறைவன். அங்கே, தன்னைச் சந்திக்கும்படி, இறைவன், எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பைத் தொடர்ந்து வந்த சுழல்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றில் இறைவன் இல்லை. இவற்றிற்குப் பின் வந்த ‘அடக்கமான மெல்லிய ஒலி’யில் (1 அரசர்கள் 19: 12-13) இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.

சக்தி வாய்ந்த அரசியை எதிர்த்து, தன்னைக் காக்கவரும் இறைவன், சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவற்றின் வழியே வரவேண்டும் என்பது, எலியாவின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது, எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம். நாம் எதிர்பார்க்கும் வழிகளில் வராமல், எதிர்பாராத விதமாய் வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே இறைவனின் அழகு. இதையே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சியிலும் நாம் காண்கிறோம்.

இயேசு கடல்மீது நடந்தது, பேதுரு கடல்மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை, அல்லது, இரவே, இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். (மத்தேயு நற்செய்தி 14: 22) பசியால் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு, உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைத்தார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும் அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசு ஏன் இவ்விதம் நடந்துகொண்டார் என்பதற்குரிய காரணத்தை யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியிலும் இயேசு, 5000 பேருக்கு உணவளித்த புதுமை சொல்லப்பட்டுள்ளது. அப்புதுமை முடிந்ததும், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான் இவ்விதம் கூறியுள்ளார்:

யோவான் நற்செய்தி: 6: 14-15

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். அதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், அன்று அவரது செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப் புதுமை, இயேசுவின் மீது இருந்த மதிப்பை, இன்னும் பல மடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார்.

கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள், ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது, அதே கற்களை எறிந்து, அவரைக் கொன்று, சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...

மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று நமக்குள் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கூட்டங்கள் எழுப்பும் ஆரவாரத் துதிகளிலேயே மயங்கிக்கிடக்கும் நமது தலைவர்கள், அவ்வப்போது, கூட்டத்திலிருந்து தப்பித்துப் போய், தங்கள் வாழ்க்கையை, தனியே கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்!

தந்தையோடு தனியே உறவாடச்சென்ற இயேசு, அங்கேயேத் தங்கிவிடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடிவந்தார். அதுவும், கடல்மீது நடந்து வந்தார். கடல்மீது நடப்பது என்ற உருவகம், தீய சக்திகள் அனைத்தையும் தன் காலடிக்குக் கொணர்தல் என்ற கருத்தை உணர்த்தும் ஓர் உருவகம். உரோமையப் பேரரசைக் கவிழ்க்க, உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள், என்ற விண்ணப்பத்தோடு இயேசுவை அரசராக்க நினைத்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு. காரணம்? அவரது சக்தியை உரோமைய அரசுக்கு எதிராக மட்டும் பயன்படுத்துவதை இயேசு விரும்பவில்லை. மாறாக, இவ்வுலகின் தீய சக்திகளுக்கு எதிராக, தன் சக்தியைப் பயன்படுத்துவதையே அவர் விரும்பினார். இந்தச் சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு வருவதைக் காட்டும் வகையில், இயேசு கடல்மீது நடந்தார்.

கடல்மீது நடந்துவருவது இயேசுதான் என்பதை, சீடர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம், அவர்களைச் சூழ்ந்தெழுந்த கடல் அலைகளிலும், சுழற்றியடித்த காற்றிலும் இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்கமுடியவில்லை. நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும் துன்பங்களையும், போராட்டங்களையும் மட்டுமே பார்த்துவிட்டு, கடவுளைப் பார்க்கமுடியாமல் தவித்த நேரங்கள் எத்தனை, எத்தனை? கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்? Jennifer Jill Schwirzer என்ற கவிஞர் எழுதிய ‘காலடித்தடங்கள்’ (Footsteps) என்ற கவிதையின் சுருக்கம் இது: மனிதன் ஒருவன், தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்குச் சான்றாக, பாதையில் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் பாதையில், ஒரு சில நேரங்களில், ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே அம்மனிதன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.

இயேசு கடல்மீது நடந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. மத்தேயு மட்டும், இன்னுமொரு நிகழ்வை இங்கு இணைக்கிறார். அதுதான்... பேதுரு கடல் மீது நடந்த புதுமை. (மத்தேயு நற்செய்தி 14: 26-32)

“நானும் நீரில் இறங்கி நடக்கவா?” என்று, பேதுரு, ஒரு குழந்தைபோல பேசுகிறார். இயேசுவும் குழந்தையாக மாறி, “வா” என்று கூறி, ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடந்துவரச் சொல்லி அழைத்தது, ஒரு சவால். அதுவும், புயல், அலை என, பயமுறுத்தும் சூழலில், இயேசு, பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது, பெரியதொரு சவால். இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்னவென்றால், பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பைத் தருவதற்கு முன்பு, இயேசு, காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான், இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக, அந்தப் புயலின் நடுவில், இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று, அவரைச் சந்திக்கலாம் என்பதை, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகிறார்.

மற்றுமோர் கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. பேதுரு நீரில் மூழ்கினார் என்பதைக் கேட்கும்போது, மனதில், சின்னதாய் ஒரு நெருடல் உண்டாகிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. மீன் பிடிப்பவராக வாழ்ந்த பேதுருவுக்கு தண்ணீர், அலைகள், புயல் ஆகிய அனைத்தும் அத்துப்படி. அவர் எத்தனையோ புயல்களில் தண்ணீரில் சிக்கி, தன் திறமையால், தன்னையும், படகையும் கரை சேர்த்திருப்பார் என்பதை நாம் அறிவோம். இந்த நிகழ்வில் அவர் மூழ்கக் காரணம் என்ன?

நமது திறமைகள், நமது முயற்சிகள் இவற்றையே அளவுக்கு அதிகமாக நம்பும்போது, இவை அனைத்தும் நம்மிடமிருந்து விடைபெற்றுப் போகக்கூடும் என்பதைச் சொல்லித்தரவே பேதுரு நீரில் மூழ்கினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதையொத்த கருத்தை இறையியல் பேராசிரியரான அருள்பணி Ron Rolheiser அவர்கள் தன் மறையுரை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

பேதுரு நீரின்மேல் நடந்தது, பின்னர் தடுமாறி, தண்ணீரில் மூழ்கியது ஆகியவற்றை ஒப்புமைப்படுத்தி, நம் விசுவாச வாழ்வில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி அருள்பணி Rolheiser அவர்கள் அழகாக விளக்கமளித்துள்ளார். நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு. இந்த மாற்றத்தை, அருள்பணி Rolheiser அவர்கள் கூறும்போது, நம் விசுவாசம், சில நாள்கள், நம்மை, தண்ணீரின் மேல் நடக்க வைக்கிறது; வேறு சில நாள்கள், தண்ணீரில் போட்ட கல்லைப்போல, மூழ்கச் செய்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இந்த மாற்றத்திற்கு அவர் கூறும் ஒரு முக்கிய காரணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

எப்போதெல்லாம் நம் விசுவாசம் இறைவனை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம் நம்மால் தண்ணீர்மேல் நடக்க முடிந்தது. ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள் நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவதால், நமது கவனம் இறைவனைவிட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை இவற்றின் மீது திரும்பி, நம்மால் இது முடியும் என்ற இறுமாப்பைத் தருகிறது. அவ்வேளையில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.

இயேசு பேதுருவிடம், "வா" என்றழைத்ததும், தன் படகு தந்த பாதுகாப்பை உதறிவிட்டு, நம்பிக்கையுடன் தண்ணீரில் தடம் பதித்தார். ஆனால், ஒரு சில நொடிகளில், தான் ஆற்றும் செயலின் அற்புதம் அவரைத் திக்குமுக்காட வைத்தது. போதாததற்கு, சூழ்ந்திருந்த புயலும் அவரது சந்தேகத்தை வளர்த்தது. எனவே, அவர் மூழ்கத் துவங்கினார்.

தண்ணீர் மீது நடப்பது, தண்ணீரில் மூழ்குவது என்ற இருவேறு நிலைகளை, மறைப்பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வழியே அருள்பணி Rolheiser அவர்கள் விளக்குகிறார்: ஆங்கிலேயரான டொனால்ட் நிக்கோல் (Donald Nicholl) என்ற இறையியலாளர், ஆப்ரிக்காவில் பழங்குடியினரிடையே பணியாற்றி வந்த மறைபணியாளர் ஒருவரைப்பற்றி 'Holiness' அதாவது, 'புனிதம்' என்ற தன் நூலில் கூறியுள்ளார். இரு இனத்தவரிடையே உருவான ஒரு கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர் அழைக்கப்பட்டார். அந்த சமரசக் கூட்டத்தில் என்ன சொல்வது, என்ன செய்வது என்பவை எதுவும் தெரியாமல் அந்த மறைபணியாளர் திகைத்தார். இருந்தாலும், இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கூட்டத்திற்குச் சென்றார். அக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, அவ்விரு இனத்தவரையும் எளிதாக ஒருங்கிணைத்தார்.

இந்த அனுபவத்தால் துணிவு பெற்றவராய், அடுத்துவந்த பிற மோதல்களையும் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர், தானாகவே முன்வந்தார். தன் அனுபவம், திறமை இவற்றைப் பயன்படுத்தி, சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அந்த கூட்டங்களில் அவரது முயற்சிகள் தோல்வியைத் தழுவின. மறைபணியாளரின் வெற்றி, தோல்வியைப் பற்றி நிக்கோல் அவர்கள் தரும் விளக்கம் இதுதான்:

"இனமோதல்கள் பற்றி சரியாக எதுவும் தெரியாதபோது, இறைவனை முற்றிலும் நம்பி, கூட்டங்களில் கலந்துகொண்ட மறைபணியாளர், சமரசங்களை உருவாக்கினார். அப்போதெல்லாம், இறைவனை நம்பி, அவர் நீரின்மேல் நடந்து சென்றார். பழங்குடியினரைப் பற்றி, அவர்களது மோதல்கள் பற்றி தனக்குத் தெரியும் என்ற எண்ணத்தில், தன் திறமைகளை, அறிவுத்திறனை நம்பி மறைபணியாளர் சமரசக் கூட்டங்களில் கலந்துகொண்டபோது, கல்லைப்போல் தண்ணீரில் மூழ்கினார்" என்று நிக்கோல் அவர்கள் எழுதியுள்ளார்.

இறைவன் இன்று நமக்கு விடுக்கும் அழைப்புக்கள் இவைதான்:
"பாதுகாப்பிற்காக உன்னையே பூட்டிவைத்துள்ள குகையைவிட்டு வெளியே வா. எதிர்பாராத வடிவங்களில் என்னைச் சந்திக்க வா."
"பாதுகாப்பான படகைவிட்டு இறங்கி, நீர் மீது நடந்துவா. சூழ்ந்திருக்கும் புயலை மறந்து, என்னை நோக்கியவண்ணம் நடந்து வா."

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும், அஞ்சாது செல்வோம்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்”

நிகழ்வு

அந்த ஊருக்கு வெளியே ஒரு துறவுமடம் இருந்தது. அந்தத் துறவுமடத்தில் ஒரு துறவியும், ஐம்பதுக்கும் மேற்பட்ட துறவிகளும் இருந்தார்கள். ஒருநாள் துறவுமடம் இருந்த பகுதியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பல கட்டடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாயின; துறவுமடத்தில் இருந்த கோயிலும்கூட இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் சீடர்கள் யாவரும் அச்சத்தில் உறைந்து போயிருந்தார்கள்.

அப்பொழுது அவர்கள்முன் வந்த துறவி, “இதற்கெல்லாமா அஞ்சி நடுங்குவது...? உண்மையான துறவி எதற்கும் அஞ்சுவதில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசினார்: “நீங்களெல்லாம் அஞ்சி நடுஞ்சிக் கொண்டிருந்தபொழுது, நானோ கொஞ்சம்கூட அஞ்சாமல், சமயலறைக்குச் சென்று, நீர்க்குவளையை எடுத்து, அதிலிருந்த நீர் முழுவதையும் குடித்து முடித்தேன். அப்படி நான் குடிக்கும்பொழுது, என்னுடைய கைகள் கொஞ்சம்கூட நடுங்கவில்லை. இதை யாராவது கவனித்திருந்தால் எனக்குக் கொஞ்சம்கூட அச்சமில்லை என்பது புரிந்திருக்கும்.”

துறவி இப்படிச் சொல்லி முடித்ததும், அவருக்கு முன்பு நின்றுகொண்டிருந்த சீடன் ஒருவன், தன் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த துறவி அந்தச் சீடனிடம், “சீடனே! இப்பொழுது நீ எதற்காகச் சிரித்தாய் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். அதற்குச் சீடன், “குருவே! நீங்கள் சமயலறைக்குச் சென்று உங்களுடைய கையில் எடுத்தது, நீர்க்குவளை அல்ல; சாம்பார் சட்டி. உண்மையில் நீங்கள் குடித்தது நீர் அல்ல; சாம்பார். அச்சத்தில் எதையெதையோ செய்துவிட்டு, அஞ்சவே இல்லை என்று சொல்கின்றீர்களே!” என்றான். இதைச் சுற்றியிருந்து கேட்டுக்கொண்டிருந்த சீடர்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டனர்.

ஆம், இந்த நிகழ்வில் துறவியையும், அவருடைய சீடர்களையும் போன்றுதான் நாம் ஏதோ ஒன்றுக்கு அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், சீடர்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்பொழுது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருளென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மலைமீது ஏறிய இயேசு

கடந்த வார நற்செய்தி வாசகத்தில் (மத் 14: 13-21) இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருப்பார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து, இயேசு மக்கள்கூட்டத்தையும், பின் தன் சீடர்களையும் அங்கிருந்து அனுப்பிவிட்டு மலைமேல் ஏறுகின்றார். இயேசு ஏன் மக்கள் கூட்டத்தையும், தன் சீடர்களையும் அனுப்பிவிட்டு, மலைமேல் ஏறினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், ஈசபேல் அரசி இறைவாக்கினர் எலியாவைக் கொன்றுபோட்டுவிடுவதாகச் சொன்னதும் (1 அர 19: 2), அவர் உயிருக்குப் பயந்து கடவுளின் மலையான ஒரேபு மலைமேல் ஏறுவார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, அவருடைய உயிருக்கு ஆபத்து வர, அதனால்தான் அவர் மலைமேல் ஏறினாரா? என்றால், நிச்சயமாக இல்லை. மாறாக, மக்கள் இயேசு செய்த அருமடையாளத்தைப் பார்த்துவிட்டு ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்று அவரைப் பிடித்து அரசராக்க முயன்றார்கள் (யோவா 6: 15) அதனால்தான் அவர் மலைமேல் ஏறுகின்றார்.

மலைமேல் ஏறிய இயேசு, தந்தைக் கடவுளிடம் வேண்டுவதற்குத் தன்னுடைய நேரத்தைச் செலவிடுகின்றார். இயேசு தந்தைக் கடவுளிடம் வேண்டுகின்றபொழுது, அவர் தனக்காக மட்டும் வேண்டினாரா? அல்லது தன்னுடைய சீடர்களுக்கும் சேர்த்து வேண்டியிருப்பாரா? என்ற கேள்வி எழலாம். இயேசு தனக்காக மட்டுமல்ல, தன்னுடைய சீடர்களுக்காகவும் வேண்டியிருப்பார். இதைப் பெரிய குருவாம் இயேசுவின் இறைவேண்டலில் இடம்பெறும், “...தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென வேண்டுகிறேன்” (யோவா 17: 15) என்ற சொற்களில் மிக அழகாகக் காணலாம். இன்றும் கூட, இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசுகின்றார் (எபி 7: 25) என்பதை நாம் அறிகின்றபொழுது, இயேசு தன் சீடர்களாகிய நம்மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கடலில் நடந்து வந்த இயேசு

மலைமேல் ஏறிய இயேசு, தனக்காக மட்டுமல்ல, தன்னுடைய சீடர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டி, அவர்கள்மீது தனக்கிருந்த கரிசனையும் அன்பையும் வெளிப்படுத்தினார். இயேசுவின் அன்பும் கரிசனையும் அத்தோடு நின்றுவிடாமல், சீடர்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றது. அதை இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் காணலாம்.

இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த இயேசு, கடலில் பயணம் செய்துகொண்டிருந்த தன்னுடைய சீடர்கள், எதிர்க்காற்று அடித்து அலைகழிக்கப்படுவதையும், அவர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதையும் அறிந்து (மாற் 6: 48) கடல்மீது நடந்து வருகின்றார். இதற்கு முன்பு ஒருமுறை சீடர்கள் கடலில் பயணம்செய்தபொழுது, இயேசு அவர்களோடு இருந்தார் (மத் 8: 23-27). ஆகையால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டத்தைக் கண்டு சீடர்கள் பதறினாலும், அவர் பதறாமல் தூங்கிக்கொண்டிருந்தார்; ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களோடு இல்லை. அதனால்தான் அவர் சீடர்கள் ஆபத்தில் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உதவக் கடலில் நடந்து வருகின்றார்.

இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்டு சீடர்கள், “ஐயோ, பேய்’ என்று அச்சத்தில் அலறியபொழுது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசு சீடர்களிடம் “நான்தான்” என்று சொல்வது, கடவுளாகிய நான் உங்களோடு என்றும் இருக்கின்றேன் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது (விப 3: 14; எசா 41:4, 43:10, 52:6). ஆம், கடல் உட்பட எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டிருக்கும் கடவுள் (யோபு 9:9; திபா 77: 19), நம்மோடு இருக்கின்றபொழுது நாம் எதற்கு அஞ்சவேண்டும்! துணிவோடு இருப்பதுதானே முறை!

தன்மீது-கடவுள்மீது-கண்களைப் பதிய வைக்கச் சொல்லும் இயேசு

கடல்மீது நடந்து வந்த இயேசுவைப் பார்த்துவிட்டு பேதுரு, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்கிறார். இயேசுவும், “வா” என்கிறார். இதைத் தொடர்ந்து பேதுரு கடல்மீது நடந்து நட, பெருங்காற்று வீசியதைக் கண்டு, அவர் கடலில் மூழ்கத் தொடங்குகின்றார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்து அவரைப் படகில் ஏற்றுகொள்கின்றார்.

கடலில்மீது நடந்த பேதுரு திடீரென்று கடலுக்குள் மூழ்கக் காரணம், அவர் இயேசுவின் வைத்த பார்வையைப் பெருங்காற்றின்மீது வைத்ததுதான். நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் ஆண்டவர்மீது கண்களைப் பதிய வைத்து வாழவேண்டும். ஏனெனில், நமக்கு வருகின்ற ஆபத்துகளை விடவும் ஆண்டவர் பெரியவர். எனவே, நாம் ஆண்டவர்மீது நம் கண்களைப் பதிய வைத்து, அவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்மூலம் எல்லா வகையான அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.

சிந்தனை

‘நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்’ (எசா 28: 16) என்று ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக உரைப்பார். ஆதலால், நாம் ஆண்டவர்மீது நமது கண்களைப் பதிய வைத்து, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதனால் அச்சமில்லா வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நொறுங்குண்ட மூவர்!

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் மூன்று நொறுங்குண்ட மனிதர்களைச் சந்திக்கின்றோம்:

(அ) 'என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' - எலியா

பாகாலின் நானூறு பொய் இறைவாக்கினர்களைக் கொன்றழித்த எலியா, சீனாய் அல்லது ஒரேபு மலையில் ஆண்டவரைச் சந்திக்கின்றார். தன்னுடைய வெற்றியின் இறுதியில் விரக்தி அடைகின்றார் எலியா. 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' எனக் கண்ணீர் விடுகிறார். ஒரு நாளைக்கு முன் பெரிய ஹீரோவாக இருந்தவர், இப்போது ஜீரோ போல ஆண்டவர் முன் படுத்துக் கிடக்கின்றார்.

(ஆ) 'என் உள்ளத்தில் பெருந்துயரம் உண்டு!' - பவுல்

புறவினத்தாரின் திருத்தூதர் என்று புகழ்பெற்ற பவுல், தன் சொந்த மக்களைத் தன்னால் மீட்க முடியவில்லையே என்றும், நற்செய்தியின் பக்கம் அவர்களைத் திருப்ப முடியவில்லையே என்றும் வருந்துகின்றார். 'என் உள்ளத்தில் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு' என அதைக் குறித்து ஆண்டவர் முன் புலம்புகின்றார். புறவினத்தார்முன் ஹீரோ போல விளங்கியவர், தன் சொந்த இனத்தாராகிய இஸ்ரயேல் மக்கள்முன் ஜீரோ போல ஆகின்றார்.

(இ) 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' - பேதுரு

ஆண்டவர்தாம் கடல்மீது நடந்து வருகிறார் என அறிகிற பேதுரு, அவரை நோக்கித் தானும் கடல்மேல் நடந்துசெல்ல விழைகின்றார். 'வா!' என்ற இயேசுவின் கட்டளையை ஏற்று நடக்கத் தொடங்கியவர், பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என அலறித் துடிக்கின்றார். மீன்பிடித்தொழில் செய்யும் பேதுரு நீச்சல் மறந்து நிற்கிறார். மற்ற திருத்தூதர்கள்முன்னும் இயேசுவின் முன்னும் ஒரு ஹீரோ போலத் தன் பயணத்தைத் தொடங்கியவர், புயலின் முன் ஜீரோவாக மாறுகின்றார்.

நம்பிக்கை மற்றும் நற்செய்தி ஆர்வத்தின் பிதாமாகன்கள் என்றழைக்கப்படுகின்ற இம்மூவரும் நொறுங்குண்ட நிலையில் இருக்கின்றனர். அல்லது தங்களின் வாழ்வில் நொறுங்குநிலையை அனுபவித்துள்ளனர்.

என்ன வியப்பு என்றால், அவர்களின் நொறுங்குநிலையில்தான் கடவுள் செயலாற்றுகின்றார்: எலியாவுக்கு மெல்லிய ஒலியில் தோன்றுகிறார். பவுலுக்குத் தன் மாட்சியை வெளிப்படுத்துகின்றார். பேதுருவின் கரம் பிடித்துத் தூக்குகின்றார்.

ஆக, நம் வலுவின்மையில் இறைவனின் வல்லமை செயலாற்றுகிறது என்ற நற்பாடத்தைத் தருகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

நாம் செய்ய வேண்டியது என்ன?

  • (அ) என்னுடைய நொறுங்குநிலை மற்றும் வலுவின்மையைப் பட்டியலிடுவது. உடல்சார், உள்ளம்சார், உறவுசார் வலுவின்மைகளைக் கணக்கெடுக்க வேண்டும் முதலில்.
  • (ஆ) என் நொறுங்குநிலையிலிருந்து நான் வெளிவர வேண்டும் எனில், அதற்கு எதிர்ப்புறமாக என் முகத்தைத் திருப்ப வேண்டும். கார்மேல் மலையிலிருந்து எலியா சீனாய் பக்கம் திரும்ப வேண்டும். இஸ்ரயேலரிடமிருந்து பவுல் இயேசுவின் பக்கம் திரும்ப வேண்டும். புயலின் பக்கம் இருந்து பேதுரு தன் முகத்தை ஆண்டவரின் பக்கம் திருப்ப வேண்டும்
  • .
  • (இ) கடவுள் தன் வல்லமையால் என் வலுவின்மையைக் களைந்தபின், நான் முந்தைய நிலையை உதறித் தள்ள வேண்டும். எலியா போல அவருடன் நடக்க வேண்டும். பவுல் போல அவர்மேல் ஆர்வம் கொள்ள வேண்டும். பேதுரு போல அவருடன் படகில் ஏற வேண்டும்.

இதையே,

மனித நொறுங்குநிலை இறைவனின் உறுதியையும்,
மனித வலுவின்மை இறைவனின் வல்லமைiயும் தழுவிக்கொள்வதை,

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 85) உருவகமாகப் பதிவு செய்கிறது:

'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்.
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.
நல்லதையே ஆண்டவர் அருள்வார்.
நல்வினையையே நம் நாடு நல்கும்.'

நொறுங்கிக் கிடக்கும் நம்மை நோக்கி அவர் வருகின்றார். மென்மையான தென்றல் ஒலியில் அவர் வருகின்றார். நம் படகிலிருந்து அவர் தூரமாகத் தெரிகிறார். ஆனால், அருகில் அவர் வரும்போது, 'துணிவோடிருங்கள்! அஞ்சாதீர்கள்!' என்கிறார் அவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அச்சம் தவிர்ப்போம் ஆற்றல் பெறுவோம்

ஆண்டவரில் பெருமை கொள்வோம்.

மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடம் இருந்தே (இஸ்ரவேலர்களிடமிருந்து)தோன்றினார்.(உரோ 9:5) ஒரு மனிதனாக, தன்னைப் போன்றே சக மனிதனும் அமைதியிலும் மகிழ்விலும் இறைவனில் வாழ வேண்டும் என்ற ஆர்வம்; கல்வாரியில் மனுமகனை இறைவனுக்கு உகந்த பரிகாரப் பலியாக மாற்றியது.

முதல் வாசகத்தில் :- "படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது பேரார்வம் கொண்டவராய் இருக்கும் இறைவாக்கினரான எலியா குகையில் இரவைக் கழித்தாரென வாசித்தோம். இதை அவர் "விடியலுக்காகக் காத்திருந்தார்" என்றும் பொருள் கொள்ளலாம். அதேவேளை இறைவன் மீது அவர் கொண்ட பேரார்வம் அவர் வாழ்ந்த இடத்தில் இருந்த தீமைகளை (பொய்யான இறைவாக்கினர்களை) அழித்தது மட்டுமல்லாமல் இறைவனோடு இணைந்து செயல்பட தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொண்டவராக, வாழ்ந்த இடத்தை விட்டு இறைவனை தேடி- ஓடி - ஒரேபு மலையை அடையச் செய்தது. அவரது கண் விழிப்பும், காத்திருப்பும் வீண் போகவில்லை கடவுள் அவரை அழைத்தார்.

வலிமையும், அழிவும் மிகுந்த - பெரும் சூழல்காற்று, நிலநடுக்கம், பெரும்தீயென எதிலும் இறைவனை காணாத அவர் ; ஆக்கம் தரும் அடக்கம் மிகு மெல்லிய ஒலியில் - இறை பிரசன்னத்தை உணர்ந்தவராக அவரைக் கண்டு அவர் வார்த்தைக்குச் செவிமெடுத்தார்.

நமது இன்றைய உலக வாழ்வில் நமது உடல் மற்றும் உலக தேவைகளை மட்டுமின்றி ஆன்மீக தேடல்களையும் - பெரும் சூழல்காற்று, நிலநடுக்கம், பெரும்தீ என்பவை தொடர்ந்து தாக்குகின்றன. உண்மைதான் - இருந்தும்; எலியா கேட்ட அந்த ஆக்கம் தரும் அடக்கம் மிகு மெல்லிய ஒலியை நாமும் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டு வாழ்வில் விடியலைக் காண எலியா "இறைவன் மீது கொண்ட பேர் ஆர்வம்" என்ற முகத்திரை நம்மிடமும் இருக்க வேண்டும் என்று திரு அவை நினைவு படுத்துகின்றது.

பவுல் அடிகளார் கொண்ட ஆர்வம்:- மனிதர் என்னும் முறையில் தன் இனத்தாரும் கிறிஸ்துவுக்குள் கடந்து வரத் தன்னையே இழக்கவும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். மேலும் ஒரு திருத் தொண்டராக- கிறிஸ்து - இஸ்ரேயர்களிடமிருந்தே தோன்றினாலும்; இயேசு ஆண்டவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென். என்று அறிக்கையும் இடுகின்றார்.

பேதுருவோ இன்னும் ஒரு படி மேலே போய், அஞ்சாதீர்கள் என்ற இறை வார்த்தையைக் கேட்ட அடுத்த நொடியே இயேசுவின் மீது கொண்ட ஆர்வத்தாலும் அவர் வார்த்தையின் ஆளுமையாளும் கொந்தளிக்கும் அலைக்குள் - குதித்து விடுகின்றார்.

நம்மிடம் ஆர்வம் உள்ளதா? இருந்தால்! முதலில் இந்த வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம் !. இதோ வார்த்தையானவரின் வார்த்தைகள்

"நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் ஐயம் கொள்கிறீர்கள் ?.. வாருங்கள்.துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்", என்றார். ஆண்டவர் இயேசு மீண்டும் அஞ்சாதீர்கள் என்கிறார்.

நமது தமிழ் மரபு" அச்சம் என்பது மடமை - அஞ்சாமல் வாழ்வது கடமை" என்று அறிவுறுத்துகின்றது. "மடமையுடைய உலக ஆதாயங்களை வாழ்வாகக் கொள்வதை விட ஞானத்தை வாழ்வாகப் பெறுவது சிறப்பு" என விவிலிய வாழ்வு வரையறுக்கின்றது .

வாழ்க்கை பயணம் கொந்தளிக்கும் ஆழ்கடல் என்றாலும், அஞ்சாதீர்கள் என்ற அவர் வார்த்தையைச் செவிமடுத்தவர்களாக - நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகளை, வேரறுக்க அஞ்சாதவர்களாக; துணிச்சலுடன் கடவுளின் மீது ஆர்வமும், அவரது வார்த்தையின் மீது முழு நம்பிக்கையும் கொண்டவர்களாக-இயேசுவை நோக்கி நடந்து சென்றிட இன்றும் நாம் அழைக்கப்படுகின்றோம். (மத் 14:29)

முடிவு, அவர் நம்மோடு பயணிப்பார், காற்றும் அடங்கும்; கவலைகளும் மாறும் எங்கும் அமைதி நிலைக்கும். அவரே இறைமகன் என்பதை நாம் உணர்ந்து. அவருக்காக அவர் வழியில் பணிந்து வாழவும் முடியும். செயல்படுவோம் கிறிஸ்துவுக்குள் செயல்படுவோம். மடமை அகற்றி அச்சம் தவிர்த்து அன்பால் அகிலத்தை வார்த்தையோடு இணைத்து வளமாக வாழ்வோம்.

இன்றைய மூன்று வாசகங்களிலும் ஒரு மனிதனின் ஆர்வம் எதைச் சார்ந்து இருக்க வேண்டும்? ஏன்? எப்படி.? என்பதற்கான தெளிவுகளை நாம் காண முடிகின்றது. இறைவன் மீது பேரார்வம் கொண்ட எலியா, பவுல் அடிகளார், மற்றும் பேதுரு ஆகியோரின் வாழ்வில் தொடர்ந்த மாற்றங்களை, அதனால் அவர்கள் பெற்ற நன்மைகளை நாம் காண முடிகின்றது. நமது ஆர்வம் எதில் உள்ளது எப்படி உள்ளது எதற்காக உள்ளது…?. என நம்மை யோசிக்க வைக்கின்றது.

அச்சம் அற்றவர்களுக்குத் தான் ஆர்வம் என்பதும் இருக்கும், ஆர்வம் உள்ளவர்களிடம்தான் அவர்களை இயக்கும் ஆற்றலாக ஆண்டவர் இயேசுவும் இருப்பார். எனவே, "அஞ்சாதீர்கள், இறைவன் நம்மோடு."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser