மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 18ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தானியேல்7:9-10,13-14|2பேதுரு 1: 16-19|மத்தேயு17:1-9

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா

ஆகஸ்ட் 6, இஞ்ஞாயிறு, நாம் கொண்டாடும் ஆண்டவரின் தோற்றமாற்றம் நிகழ்வு, பல்வேறு உன்னத எண்ணங்களை நமக்குள் உருவாக்குகின்றது. அத்துடன், இந்நிகழ்வு கொண்டாடப்படும் ஆகஸ்ட் 6ம் தேதி, வேறுபல வேதனை எண்ணங்களையும் நம் உள்ளத்தில் விதைக்கின்றது. ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல், மனித வரலாற்றை உருமாற்றியது. உருகுலைத்தது என்பதே பொருத்தமான சொல்...

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஹாரி ட்ரூமன் (Harry Truman) அவர்களும், ஏனைய அரசு அதிகாரிகளும், அணுகுண்டு தாக்குதலை நடத்த, ஆகஸ்ட் 6ம் தேதியைத் தேர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நிச்சயம், அவர்கள், ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்படும் விழாவை ஒரு காரணமாக எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தோற்றமாற்றம் விழாவன்று அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதால், இவ்விரு நிகழ்வுகளையும் இணைத்து சிந்திக்க, நமக்கோர் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அணுகுண்டு வீசப்பட்ட நேரம், காலை 8.16. அந்த நேரத்தைச் சற்று எண்ணிப்பார்ப்போம். அது, ஆகஸ்ட் 6ம் தேதி என்பதால், ஹிரோஷிமாவில் இருந்த பல கத்தோலிக்கக் கோவில்களில், தோற்றமாற்ற நிகழ்வைக் கூறும் நற்செய்தி ஒலித்திருக்கும். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள தோற்றமாற்றம் நிகழ்வைப் பதிவுசெய்ய, நற்செய்தியாளர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளுக்கும், அணுகுண்டு தாக்குதலைக் கண்டவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளுக்கும் உள்ள ஒப்புமை, நம் கவனத்தை ஈர்க்கின்றது.

தோற்றமாற்றத்தைப் பற்றி கூறும் நற்செய்தியில், இயேசுவின் முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்தது; அவரது ஆடைகள், ஒளிபோன்று வெண்மையாயின; ஒளிமயமான மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அம்மேகத்திலிருந்து குரலொன்று ஒலித்தது என்பவை, நற்செய்தியில் பதிவாகியுள்ள கூற்றுகள்.

அணுகுண்டு தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களில் பலர், பூமியில் விழுந்த சூரியன், ஒளிமயமான மேகம், இடிமுழக்கம், நிலநடுக்கம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தினர்.

தோற்றமாற்றத்தால் உருவான ஒளி, மேகம், ஒலி ஆகியவை நம்பிக்கையைக் கொணர்ந்தன. அணுகுண்டு தாக்குதலால் உருவான ஒளி, மேகம், ஒலி ஆகியவை, அழிவைக் கொணர்ந்தன, மனித குலத்தின் மீதிருந்த நம்பிக்கையைத் தகர்த்தன.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு நிகழ்த்திய அணுகுண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி நாம் பக்கம்பக்கமாக வாசித்துவிட்டோம். எனவே புள்ளிவிவரங்களில் நாம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். அணுசக்தியின் பாதகமான விளைவுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே நம் கவலை. ஹிரோஷிமா அணுகுண்டு அழிவு முதல், 2011ம் ஆண்டில் நிகழ்ந்த Fukushima அணு உலை விபத்து வரை, மனிதகுலம், அணுசக்தியை இன்னும் நம்பி வாழ்கிறதே என்ற கவலையை, இறைவனிடம் எடுத்துச்சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அணுசக்தியை, அணுஉலைகளைப் பற்றிய கருத்துக்கள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவைதானா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை இன்று பெருமளவில் பாதிக்கும் ஓர் உண்மையை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விசுவாசக் கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, ஆண்டவரின் தோற்றமாற்றம் விழாவும், முதல் அணுகுண்டு தாக்குதலும் இணைந்துவந்த ஆகஸ்ட் 6ம் தேதி, நல்லதொரு தருணம்தானே! இந்த ஆன்ம ஆய்வை மேற்கொள்ள இறைவனின் இல்லம் தகுந்த இடம்தானே!

அணு சக்தியை காப்பாற்ற, பொய்மையில் நாம் வாழ வேண்டியுள்ளது என்பது, ஒரு முக்கியமான எண்ணம். அணுசக்தியின் ஆபத்தான உண்மைகள் மக்களிடமிருந்து எப்போதும் மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்றில், பல வலுவான சான்றுகள் உண்டு. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க அரசு, அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள், சங்கடமான கேள்விகளை எழுப்பினர்.

அவர்களது குரலை அடக்கும்வண்ணம், அமெரிக்க அரசு அறிக்கைகளை வெளியிட்டது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று பேசி, மக்களை நம்பச்செய்தது. ஆயினும், அன்றுமுதல் இன்றுவரை, அமெரிக்கச் சமுதாயம் அந்தப் பொய்யைச் சீரணிக்கமுடியாமல் தவிக்கிறது. இதில் கூடுதலான ஓர் எண்ணம் என்னவெனில், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.16 மணிக்கு, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அமெரிக்காவில் இரவு நேரம். மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த உறக்கத்திலிருந்து மக்கள் விழித்தெழுந்துவிடக்க்கூடாது என்ற குறிக்கோளுடன், மேலும், மேலும் பல பொய்கள் மக்களைச் சென்றடைந்தன. அந்த உறக்கத்திலிருந்து அமெரிக்க மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது கசப்பான உண்மை.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதும், அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் விடுத்த ஓர் அறிக்கை இவ்வாறு இருந்தது: "கடவுளின் பராமரிப்புக்கு நாம் நன்றி கூறுகிறோம். ஜெர்மன் நாட்டவர் கண்டுபிடிக்க இயலாத அணுகுண்டை நாம் முதன்முதலில் கண்டுபிடித்து, அதை பயன்படுத்தினோம். வெற்றிகண்டோம்" என்று அவர் கூறினார். அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் கூறிய வெற்றி, உண்மையிலேயே வெற்றிதானா என்பதை நாம் சிந்திக்கும்போது, இயேசு, தன் தோற்றமாற்ற நிகழ்வுக்கு முன், சீடர்களுக்குக் கூறிய ஒரு புகழ்பெற்ற இறைவாக்கியம் நம் நினைவுக்கு வருகிறது.

தோற்றமாற்ற நிகழ்வுக்கு முன்னதாக, இயேசு, தன் சிலுவை மரணத்தைக் குறித்து சீடர்களிடம் கூறினார். (மத். 16:21) அதைக் கேட்ட பேதுரு, "ஆண்டவரே! இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்று வீரமுழக்கமிட்டபோது, "என் கண்முன்னே நில்லாதே சாத்தானே!" என்று இயேசு அவரைக் கடிந்துகொண்டதோடு நிறுத்திவிடவில்லை. தன்னைப் பின்செல்ல விரும்புவோர், சிலுவையைத் தூக்கிக்கொண்டு, தன் பின்னே வரவேண்டும் என்ற சவாலையும் முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, இயேசு எழுப்பிய ஒரு கேள்வி, தன் சீடர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவாலாக இன்றுவரை அமைந்துவந்துள்ளது: "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (மத். 16:26).

ஜெர்மானியர்களுக்கு முன்னதாக, அணுகுண்டை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதால், இவ்வுலகையே வென்றதுபோன்ற ஓர் உணர்வுடன், அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் பேசியது, இயேசு கூறிய அந்தச் சொற்களை நினைவுக்குக் கொணர்கின்றது.

1945ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்களை நியாயப்படுத்த பல பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் தற்போதுள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல்லாயிரம் பொய்கள் நம்மிடையே உலவி வருகின்றன. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகம் முழுவதையும் ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் நம்பிவருகின்றன. அணு உலைகளைப் பற்றியும், இதுவரை அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. அணு ஆலைகளில் உருவாகும் கழிவுகள் பூமியில் புதைக்கப்படுவதால், அந்த நிலம் பலநூறு ஆண்டுகளுக்கு கதிரியக்கம் கொண்டதாக மாறுகிறது என்பதையும், அங்கு எந்த ஒரு தாவரமோ, உயிரினமோ வாழமுடியாது என்பதையும் பற்றி யாரும் பேசுவதே கிடையாது. இதில் மற்றொரு கொடுமை என்னவெனில், முதல்தர நாடுகளில் உருவாக்கப்படும் அணுக்கழிவுகள், வறுமைப்பட்ட நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிலத்தடியில் புதைக்கப்படுகின்றன. இந்த உண்மைகள் எதுவும் வெளிப்படுவது கிடையாது.

தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுமாறு மக்கள் போராடினர். முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே அணு உலைகளைப்பற்றிய முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. அணுசக்திக்கு மாற்றாக எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்த முடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும். அப்படி நாம் பயன்படுத்தும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு நமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை நிறைவேற்றும் ஆற்றல், இந்தச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.

நமது பேராசையால் விளையும் அழிவுகள், அடுத்த தலைமுறையையும் சேர்த்து பாதிக்கின்றன என்பது மிக வேதனை தரும் உண்மை. இன்று நாம் கொண்டாடும் தோற்றமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து, முதல் மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள ஒரு புதுமை, அடுத்தத் தலைமுறையை நோக்கி நம் சிந்தனைகளைத் திருப்புகிறது. கதிரவனைப்போன்ற ஒளியுடன் இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தீய ஆவி பிடித்த ஒரு சிறுவனை இயேசு குணமாக்கினார். தீயிலும், தண்ணீரிலும் அச்சிறுவனை விழச்செய்த தீய ஆவியை இயேசு விரட்டினார்.

ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டுக்கு அமேரிக்கா சூட்டியிருந்த பெயர், Little Boy - சின்னப்பையன். 'சிறுவன்' அல்லது 'சின்னப்பையன்' என்ற அணுகுண்டு, ஹிரோஷிமா நகரில் விழுந்து, கதிரவனைப்போல் எரிந்தபோது, ஆயிரமாயிரம் சிறுவர், சிறுமியர், தீயில் விழுந்து சாம்பலாயினர். இன்னும் பல்லாயிரம் சிறுவர், சிறுமியர் கொடிய நோய்களால் மெல்ல, மெல்ல கருகி, சாம்பலாயினர். அவர்களில் ஒருவர் - சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தை.
Sadako Sasaki and The One Thousand Cranes
https://www.linkedin.com

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோவுக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அச்சிறுமிக்கு, இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கும், இன்னும் பலநூறு சிறுவர், சிறுமியருக்கும் உருவான இரத்தப் புற்றுநோய், அணுக்கதிர் வீச்சினால் உருவானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி சடக்கோ, இனி ஓராண்டு வாழக்கூடும் என்று கூறப்பட்டது. சாவதற்கு தான் விரும்பவில்லை என்று, அவர் கூறியபோது, அச்சிறுமியின் தோழிகள், அவரிடம், 'காகித நாரைகள்' பற்றிய பாரம்பரியக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகித நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை நிறுவினர்.

இன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்தது. அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக்கூடாது என்ற ஆசையும் அக்குழந்தையின் மனதில் தோன்றியிருக்கும் என்று நம்பலாம். இன்றும், சடக்கோவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின் கடமை.

உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழியவேண்டும்; வன்முறையை, பல வடிவங்களில் கட்டவிழ்த்துவிடும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும் என்ற நமது ஆசைகள், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல், உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். நம்மை உருமாற்றவும், நம்மை ஆட்டிப்படைக்கும் சுயநலம் என்ற தீய ஆவியை விரட்டவும் வலிமை கொண்ட ஆண்டவனை நம்பாமல், பேராசை வெறி என்ற தீய ஆவியால் நாம் ஆட்கொள்ளப்பட்டால், ஆண்டவனை ஒதுக்கிவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை!!!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் தோற்றமாற்றம்

இன்று பெரும் புகழ்பெற்ற “Man’s Search for Meaning” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் பிராங்கிள் (Victor Frankl) என்பவர் ஆவார். இவர் ஓர் உளவியலாளர். பிறப்பால் ஒரு யூதர்.

இரண்டாம் உலகப்போரின்போது கொடுங்கோலனாகிய ஹிட்லரின் நாசிப்படை யூதர்களை வதைமுகாமில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தபோது அந்த முகாமில் மாட்டிக்கொண்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த இலட்சக்கணக்கான யூதர்களில் இவரும் ஒருவர். ஹிட்லரின் சித்திரவதைக்குப் பயந்து, அந்த சித்ரவதை உள்ளாகி தினம் தினம் ஆயிரக்கணக்கான யூதர்கள் இறந்துபோனார்கள். ஆனால் விக்டர் பிராங்கிளும் அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள் சிலரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி, அங்கிருந்து வெளியே வந்தார்கள்.

பின்னர் விக்டர் பிராங்கிள் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பொறுமையாக அசைபோட்டுப் பார்த்தபோது, எது தன்னையும், தன்னுடைய நண்பர்களையும் ஹிட்லரின் வதைமுகாமிலிருந்து உயிர்பிழைக்கச் செய்தது என்று தீவிரமாக யோசித்தார். அப்போது அவர் “எதிர்காலத்தில் அடைய இருந்த இலட்சியம்தான் தன்னையும் தன்னுடைய நண்பர்களையும் எவ்வளவோ சித்ரவதைகளையும், துன்பங்களையும் பொறுத்துக்கொள்ள தூண்டியது. அதே நேரத்தில் எதிர்காலம் குறித்த எந்த ஒரு தெளிவும் இல்லாததால்தான் பிறர் உயிர் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது” என்ற உண்மையை உணர்ந்துகொண்டார்.

எப்படி விக்டர் பிராங்கிள் என்ற மனிதரையும் அவருடைய நண்பர்களையும் அவர்களுடைய இலட்சியக் கனவு உயிர்பிழைக்கச் செய்ததோ அதுபோன்று இந்த மண்ணுலகை பாவத்திலிருந்தும் சாவின் பிடியிலிருந்தும் விடுவிக்கவேண்டும் என்ற இலட்சியக் கனவுதான் ஆண்டவர் இயேசுவை பாடுகளையும், சிலுவைச் சாவையும், நிந்தை அவமானங்களையும் ஏற்கத் தூண்டியது என்று சொன்னால் அது மிகையாது. ஆம், இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழா இயேசு எருசலேமில் அடைய இருக்கும் சிலுவை, பாடுகளை உறுதி செய்வதாக இருக்கின்றது. மேலும் இந்த விழா நமக்கு உணர்த்தும் இன்னும் ஒருசில உண்மைகளைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்

. இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவனது மேலைத் திருச்சபைகளில் ஏழாம் நூற்றண்டிலிருந்தும், கீழைத் திருச்சபைகளில் ஒன்பதாவது நூற்றாண்டிலிருந்தும் கொண்டாடப்பட்டு வருவதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் 1456 ஆண்டு ஹுன்யாடி ஜோன்ஸ் (Hunyadi Jones) என்ற மன்னன் துருக்கியர்களை வெற்றிகொண்டதன் நிமித்தமாக அப்போது திருத்தந்தையாக இருந்த மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர் இவ்விழாவை ஆகஸ்டு மாதம் 6 – ம் தேதி கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 6 ம் தேதி கொண்டாப்பட்டு வருகின்றது.

இப்போது இவ்விழா உணர்த்தும் செய்திகளை சற்று நாம் விரிவாகச் சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக ஆண்டவரின் உருமாற்றம், குழப்பத்தில் இருந்த சீடர்களுக்கு நம்பிக்கையூட்டியது என்று சொன்னால் அது மிகையாது. எப்படி என்றால் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம், “மானிட மகன் எருசலேமிற்குச் சென்று மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்படவும், மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்படவேண்டும்” என்று சொல்லிவந்தார் (மத் 16: 21). இதனால் அதுவரை இயேசுவை மீட்பர், மெசியா என்று நினைத்துவந்த சீடர்கள், இயேசு உண்மையிலே மெசியா இல்லையா? என சந்தேகத்தில் உழலத் தொடங்கினார். இத்தகைய பின்னணியில் தான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நடைபெறுகிறது. இந்த உருமாற்ற நிகழ்வின்போது இயேசுவோடு உடன்சென்ற பேதுருவும் யோவானும் யாக்கோபும் அவர் உண்மையிலே மெசியாதான் என்ற உண்மையை உணர்ந்துகொள்கிறார்கள்.

பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதை அழகாக உறுதிபடுத்துகிறார், “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார்” என்று சொல்கிறார். ஆகவே, இயேசுவின் உருமாற்றத்தால் சீடர்கள் அதுவும் முதன்மைச் சீடர்கள் இயேசு உண்மையிலே மெசியா என்ற நம்பிக்கையில் உறுதி அடைந்தார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

பல நேரங்கில் நம்முடைய வாழ்க்கையில் சோதனைகள், துன்பங்கள் ஏற்படும்போது கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வி எழலாம். ஆனாலும் நாம் மனவுறுதியோடு இருந்து, ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வின் வழியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக இயேசுவின் உருமாற்றம் நமக்குத் தரும் செய்தி; இயேசுவின் இந்த உருமாற்றம் அவரது விண்ணக மகிமையின் முன்சுவையாகும். ஆண்டவராகிய இயேசு பாடுபட்டு இறந்து, உயிர்த்தெழுந்து, அதன்பிறகு விண்ணேற்றம் அடையும்போது எப்படி இருப்பார் என்பதை இந்த நிகழ்ச்சியின் வழியாக நாம் அறிந்துகொள்கிறோம். நற்செய்தியில் படிக்கின்றோம், “அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின” என்று. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இதை இன்னும் சிறப்பாக வாசிக்கின்றோம், “வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; “இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபடவேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது” என்று.

ஆகவே, இயேசு விண்ணகத்தில் எப்படி இருப்பார் என்பதையும் அவர் எப்படி அரசாள்வார் என்பதையும் இந்த நிகழ்வின் வழியாக நாம் புரிந்துகொள்ளலாம்.

நிறைவாக இயேசுவின் இந்த உருமாற்றம் அவர் எப்படி தந்தையின் அன்புக்குரிய மகனாக விளங்குகிறார் – விளங்கினார் - என்பதையும் நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தியில் மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று குரல் ஒலிப்பதாக படிக்கின்றோம். நிச்சயமாக இயேசு கிறிஸ்து தந்தையின் உலகை மீட்கும் பணியில் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து, அதற்காக பாடுகளையும், சிலுவை மரணத்தையும் ஏற்றுக்கொண்டதால்தான் விண்ணகத் தந்தையின் அன்புக்கு உரிய மகனாக மாறமுடிந்தது. நாமும் இறைவனின் குரல் கேட்டு, அவர் வழியில் நடக்கும்போது விண்ணகத் தந்தையின் அன்புக்கு உரிய மக்களாக மாறுவோம் என்பது உறுதி.

ஆனால் நடைமுறையில் நாம் ஆண்டவருக்கு செவிசாய்த்து, அவரின் அன்பிற்குரிய மக்களாக வாழ்கிறோமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பத்தின்படி நடக்கின்றோம், குறிப்பாக துன்பங்களையும், பாடுகளையும் ஏற்கத் தயங்குகின்றோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய பாடுகள், சிலுவை மரணத்தின் வழியாக தந்தைக்குகந்த நல்ல மகனாக இருந்தார். நாமும் துன்பங்களைத் துணிவோடு ஏற்று இறைவனின் விருப்பத்தின் படி நடக்கும்போது விண்ணகத் தந்தையின் அன்புப் பிள்ளைகளாக வாழமுடியும் என்பது உறுதி.

கிராமத்தில் இருந்த ஒரு தந்தை சாகும் தருவாயில் இருந்தார். எனவே அவர் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, “நான் இறந்த பிறகு எனக்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முதலாமவன், “தந்தையே! நீங்கள் இறந்த பிறகு உங்களுக்கு ராஜமரியாதை செலுத்துவேன். எப்படியென்றால் முப்பது குண்டுகளை விண்ணில் செலுத்தி, உங்களது இறப்பை அமர்க்களப் படுத்துவேன்” என்றான். அதற்கு தந்தை, “நீ என்னுடைய மகனாக இருக்கத் தகுதியற்றவன்” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பினார்.

அடுத்ததாக இரண்டாமவன் வந்தான். அவனிடத்தில் தந்தை அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன், “அன்புத் தந்தையே! நீங்கள் இறந்த பிறகு பத்து கொழுத்த கன்றுகளை கன்றினை அடித்து, அவற்றை உங்கள் நினைவாக ஊர்மக்கள் அனைவருக்கும் உணவாக கொடுப்பேன்” என்றான். இதைக் கேட்ட தந்தை சீற்றம் கொண்டார். “நான் இறந்ததற்கு அந்த வாயில்லா ஜீவன்கள் என்ன பாவம் செய்தன. அவற்றை ஏன் தேவையில்லாமல் அடிப்பதாகச் சொல்கிறாய்?” என்று சொல்லி அவனையும் வெளியே அனுப்பினார்.

இறுதியாக இளைய மகன் வந்தான். அவனிடமும் தந்தை அதே கேள்வியைத் தான் கேட்டார். அதற்கு அவன், “தந்தையே! நீங்கள் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்த பிறகு, நீங்கள் எனக்குத் கற்றுத்தந்த நெறியின்படி வாழ்வேன். நீங்கள் இல்லாத குறையை, உங்கள் மகனாகிய நான் எனது நல்ல செயல்களால் நிவர்த்தி செய்வேன்” என்றான். இதைக் கேட்ட தந்தை அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டு, “மூவரில் நீதான் என்னுடைய உண்மையான மகன், உன்னை என்னுடைய மகன் என்று சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து, தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

ஆம், தந்தையின் விருப்பத்தின்படி நடக்கின்ற மகன்தான் தந்தையின் அன்பிற்கு உரிய மகனாக மாறமுடியும். இயேசு தன்னுடைய பாடுகள், மரணத்தால் வாழ்வால் தந்தையின் அன்பிற்குரிய மகனாக மாறினார். நாமும் நம்முடைய வாழ்வால், நற்பணியால், சேவை மனப்பான்மையால், துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் மனதிடத்தால் இறைவனின் அன்பிற்கு உரிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் தோற்றமாற்றம்

இன்று ஆண்டவரின் தோற்றமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடு கின்றோம். தமக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு யோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லோரையும் ஏற்றுக்கொண்டார்; ஆனால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து அன்பு செய்தார். அந்த வகையில் இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தனர்.

மலையில் ஏறிச் சென்றவர் உருமாறினார் என மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல், 'அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது" என்கிறார் மத்தேயு. முகம் மட்டுமல்ல, ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் எலியாவையும் கண்டு கொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல், இயேசுவோடு உரையாடிக் கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்: "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூட கூடாரங்களை அமைக்கட்டுமா? உமக்கு விருப்பமா?” பேதுரு தன் கண் முன்னால் இது காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய விரும்புகிறார். அதாவது, ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். ஃபோட்டோ எடுக்கும்போது என்ன நடக்கிறது? நாம் இருக்கும் இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகி றோம். ஆகையால்தான் ஒரு ஃபோட் டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த நேரத்தில் எடுக்கப் பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை. ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்து விடுகிறது.

பேதுரு இயேசுவையும், மோசேவை யும், எலியாவையும் மூன்று கூடாரங் களுக்குள் வைத்து அப்படியே உறை யச் செய்ய விரும்புகின்றார். பேதுரு வின் கேள்விக்கு இயேசுவோ, மோசேவோ, எலியாவோ பதில் சொல்லவில்லை. ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது: 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.' பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது. அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள். புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் – விளைவு. அச்சம்! முகங்குப்புற விழுவதைச் சரணாகதியின், அடையாளம் என்றும் அல்லது பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி விழுந்து கிடந் தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்!" என் கிறார். அத்தோடு, 'இங்கே நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை யாரிடமும் சொல்லாதீர்கள்!! என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு தொடர்புடையது.

தோற்றமாற்ற நிகழ்வை இயேசு எப்படிப் பார்த்தார்? சீடர்கள் எப்படிப் பார்த்தனர்?

முதல் கோணம்: இயேசு இந்த நிகழ்வை எப்படிப் பார்த்தார்?

இந்த நிகழ்வை இயேசுவே முன்னெடுக்கின்றார். இடத்தையும், நேரத்தையும், உடன் வரவேண்டிய நபர்களையும் இயேசுவே தேர்ந்தெடுக்கின்றார். அந்த நிகழ்வு பற்றி வெளிநபர்கள் தெரிந்துவிடக் கூடாது என்பது பற்றி எச்சரிக்கையாக இருக்கின்றார். நிகழ்வின் இறுதியிலும், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என்று கட்டளையிடுகின்றார்.

இயேசுவைப் பொறுத்தவரையில் அவர் தம் வாழ்வில் ஏற வேண்டிய முதல் மலை. இந்த மலை யில் அவர் மாட்சி பெறுகிறார். அவர் ஏற வேண்டிய இன்னொரு மலையில் அவர் இகழ்ச்சி அடைவார், இங்கே சீடர்கள் அருகே இருக்கின்றனர். அங்கே அவருடன் யாரும் இருப்பதில்லை. இங்கே மோசேவும், எலியாவும் தோன்றுகிறார்கள். அங்கே இரு கள்வர்கள் அருகில் இருப்பார்கள். இங்கே 'இதோ, என் அன்பார்ந்த மைந்தர்' என்று தந்தை குரல் கொடுக்கின்றார். அங்கே இறைவா, ஏன் என்னைக் 'என் இறைவா, என் கைநெகிழ்ந்தீர்?' என இயேசு அபயக் குரல் எழுப்புகின்றார். இங்கே அவரு டைய ஆடை வெண்மையாக இருக்கிறது. . அங்கே ஆடையின்றி நிர்வாணமாகத் தொங்குவார். இந்த மலையும், அந்த மலையும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க இயலாதவை என்பதை இயேசு அறிந்திருந்தார். இரண்டு மலைகளும் இயேசுவுக்கு ஒன்றாகவே தெரிகின்றன. இந்த மலையின் மாட்சி கண்டு அவர் மகிழவில்லை. அந்த மலையின் இகழ்ச்சி கண்டு துவண்டுபோகவில்லை.

உருமாற்றம் என்பது இத்தகைய உளமாற்றம் தான். நமக்கு வெளியே நடக்கும் எதைக் கண்டும் அலட்டிக்கொள்ளாமல் இருக்காது. தோற்றமாற்ற நிகழ்வில் அனைத்தும் வெளிப்புறமே நிகழ்கின்றன. ஆனால், நடக்கின்ற நிகழ்வுகளுக்கு அவர் உள்ளார்ந்த பதிலிறுப்பு தருகின்றார். "இதை யாருக்கும் சொல்லசொல்ல வேண்டாம்'. இயேசு சொல்வதேன்? இந்த அனுபவம் மற்றவர்களுக்குச் சொன்னால் புரியாது. நம் வாழ்வில் நடக்கும் துன்பகரமான நிகழ்வுகளை நாம் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்துவிடுவது நல்லது. ஏனெனில், நாம் சொல்லியும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம் வலி இரட்டிப்பாகிவிடும்.

ஆக, இயேசுவைப் பொறுத்தவரையில் தோற்றமாற்றம் என்பது 'தாம் யார்' என்பதைத் தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு. கல்வாரியின் அவலம் காண்பவர்கள் இயேசுவுக்கு மாட்சியும் இருந்தது என்று எண்ணிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

இரண்டாம் கோணம்: இந்த நிகழ்வை சீடர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

'உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும் எலியா வுக்கு ஒன்றும்' என்று கூடாரங்கள் அடித்து, அந்தப் பொழுதை அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றனர். இன்னொரு பக்கம் அச்சம் அவர்களை மேற்கொள்கிறது.

'இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற கட்டளை தங்கள் காதுகளை வந்தடைந்தபோது, இயேசுவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. 'செவிசாய்த்தல்' அல்லது "கேட்டல்" என்பது யூதர்களைப் பொறுத்த வரையில் முதல் ஏற்பாட்டு, 'இஸ்ரயேலே! கேள்!' என்னும் சொல்லாடல்களைத்தான் அவர்களுக்கு நினைவூட்டியிருக்கும். இங்கே இயேசுவைக் கடவு ளாக முதன் முதலாகச் சீடர்கள் அறியத் தொடங்கு கின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டியிருக்க வேண்டும். ஆனால், புரட்டவில்லை. இதற்குப் பின்னரும் இயேசு அவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பேதுரு மிக அழகான உருவகம் ஒன்றைப் பயன்படுத்துகின் றார்: 'பொழுது புலர்ந்து, விடிவெள்ளி உங்கள் இத யங்களில் தோன்றும்வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது. அதாவது, நான் உள்ளொளி பெறும் வரை எனக்கு வெளியில் இருப்பதெல்லாம் வெறும் விளக்கின் வெளிச்சமே. உள்ளொளி பெற்றவுடன் என் வாழ்வே ஒளிரத் தொடங்குகிறது. அங்கே இருள் என்பதே இல்லாமல் போய்விடுகின்றது. சீடர்கள் அச்சம் என்னும் இருளால் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னரே இந்நிகழ்வைப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவின் உருமாற்றம் சீடர்களின் உள்ளத்தை பின்னால்தான் மாற்றுகிறது.

இரு பாடங்கள்:

ஒன்று, வாழ்வின் எதார்த்தங்கள் நம்மைப் பாதிக்காதவண்ணம் வாழக் கற்றுக்கொள்வது. இரண்டு, உள்ளொளிப் பயணத்தைத் தொடங்குவது, தொடர்வது.

முதல் வாசகத்தில், தொன்மை வாய்ந்தவர் அரியணையில் வீற்றிருப்பதைக் காட்சியில் காண்கிறார் தானியேல். திருவெளிப்பாட்டு நடையின் நோக்கம் இதுவே. அதாவது, துன்பம் எல்லாம் மறைந்து, மாட்சி பிறக்கும். துன்பம் மாட்சிக்கு இட்டுச் செல்கிறது. “உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவரின்..." (திபா 97) உருமாற்றம் நம் உள்ளத்தின் மாற்றத்தைத் தூண்டி எழுப்பட்டும். மாட்சியும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்கட்டும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இயேசுவைப் போல மாறுவோமா!

இன்று ஆண்டவருடைய தோற்ற மாற்ற விழா. தாபோர் மலை மேலே தன் மூன்று சீடர்கள் காண உருமாற்றம் பெற்றார் இயேசு. இந்த உருமாற்ற நிகழ்வு நமக்கு கூறும் செய்தி என்ன? நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? சிந்திப்போம்.

முதலாவதாக இயேசுவின் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் பிரகாசமாய் இருந்தால் முகமும் பிரகாசிக்கும் அல்லவா. இயேசுவின் முகம் பிரகாசித்ததற்கு காரணம் அவருடைய மனதிலிருந்த மகிழ்ச்சி. ஆம் மகிழ்ச்சி உள்ளவர்களின் முகம் பிரகாசிக்கும் . மகிழ்ச்சி என்பது துன்பங்கள் இல்லா நிலையல்ல. இயேசுவுக்குத் தெரியும் தான் பாடுபட்டு இறக்கப்போவது. இயேசுவுக்கு தெரியும் தன்னை பலர் எதிர்ப்பது. இருந்த பின்னரும் கூட அவருடைய மனதில் மகிழ்ச்சி நிரம்பியது. காரணம் அவர் தந்தை கடவுளிடம் கொண்டிருந்த அன்பு, பற்று,நம்பிக்கை. அத்தோடு உலகத்தின் மேல் பற்றில்லாமல் கடவுள் திட்டத்தை நிறைவேற்றுவதில் கொண்டிருந்த நிறைவு. நமது மகிழ்ச்சி எங்கே உள்ளது? . முதலில் நம்மிடம் உண்மையான மகிழ்ச்சி உள்ளதா? இருந்தால் நமது முகமும் பிரகாசிக்கும். நாமும் இயேசுவாய் மாறலாம்.

இரண்டாவதாக இயேசுவினுடைய ஆடை வெண்மையானது. வெண்மை தூய்மையின் அடையாளம். ஆம். இயேசு தூய்மையின் அடையாளமாய்த் திகழ்ந்தார். மனிதனாகவே வாழ்ந்தாலும் உலகத்தால் அவர் மனம் கறைபடியாதிருந்தது. அதனால்தான் அவரால் சோதனைகளை வெல்ல முடிந்தது. தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் என மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவிலே நாம் வாசிக்கிறோம். இன்று நாம் தூய்மையுடையவர்களாய் இருக்கிறோமா? உலகத்தால் நம் மனமும் ஆன்மாவும் கறைபடாமல் காத்துக்கொள்கிறோமா? சிந்திப்போம். பல வேளைகளில் தூய்மையற்றவர்களாய் நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே தூய்மையை காத்துக்கொள்ள முயன்றால் நாம் இயேசுவாக மாறலாம்.

மூன்றாவதாக எலியாவும் மோசேயும் இயேசுவோடு உரையாடினார்கள் என வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் இயேசுவின் ஞானத்தையும் தெளிவான பார்வையையும் குறிக்கிறதாக உணர முடிகிறது. இயேசு விண்ணரசு, மண்ணக வாழ்வு, இறைதிருஉளம் பற்றிய மிகத்தெளிவான ஞானமுடையவராய் இருந்ததால்தான் இறைவாக்கினர்கள் இயேசுவோடு உரையாடினர். நாம் ஞானமும், தெளிவான பார்வையும் கொண்டவர்களாய் இருக்கிறோமா? அவ்வாறு இருந்தால் நாமும் இயேசுவைப்போல மாறலாமன்றோ!

அன்புக்குரியவர்களே இயேசுவின் தோற்றமாற்ற விழா நம்மை அழைப்பது இதற்காகத்தான். இயேசுவைப்போல மகிழ்ச்சி நிறைந்தவர்களாக தூய்மை நிறைந்தவர்களாக ஞானம் நிறைந்தவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதே இவ்விழா நமக்கு விடுக்கும் அழைப்பு. இது கடினமாகத் தோன்றலாம். ஆனால் இயலாத காரியம் இல்லை. கடவுள் நமக்கு அருள் தருவார். நாம் இயேசுவைப்போல வாழ முயலும் போது நம்மையும் நோக்கி "இவர்கள் அன்பார்ந்த மைந்தர்கள் " என்பார். இயேசுவைப் போல மாற முயலுவோமா!

இறைவேண்டல்

அன்புத்தந்தையே இறைவா! உம் அன்பார்ந்த மகன் இயேசுவைப்போல நாங்களும் உருமாற உருவாக வரமருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உள்ளம் தேடும் ஒளியின் தோற்றம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றதன் வினைப் பயனாக கிறிஸ்துவர்களாக அவரோடு, அவரில், அவராக - மாற்றம் அடைந்திட உலகோடு இணைத்து நம்மைப் பகிர்ந்து வாழ அழைப்பு பெற்றிருக்கும் நமக்கு : இன்று ஆண்டவரின் தோற்றம் - மாற்றம் என்ற நிகழ்வை - பெரும் அதிசயத்தை, ஆராதித்து வணங்கிட திருஅவை அழைப்பு தருகின்றது. இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது அதன் மூலக்கூறு என்ன என்பதை சற்று கவனிப்போம்.

இயேசு தோற்றம் மாறுதல் (Transfiguration of Jesus.) என்பது புதிய ஏற்பாட்டின்படி, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ; ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு, (மத்17:1) - இறைவனைக் காணச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்வினைக் குறிக்கின்றது. நற்செய்தி நூல்கள் (மத்தேயு 17:1–9, மாற்கு 9:2-8, லூக்கா 9:28–36) மூன்றிலும் இந்நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பேதுரு எழுதிய 2ம் திருமுகத்திலும் (அதி 1:16-18) இதுபற்றிய சான்று உண்டு.

ஒரு சாமானியனுக்கு மனதுள் எழும் கேள்வி ?

இது சாத்தியமா ? என்பதே. இதற்கு இறைமகன் இயேசு கூறும் பதில் சாத்தியம் - என்பதுதான்….. எப்படி…?
நாம் தனிமையில் மத் 6:6ல் உள்ளபடி, இறைவனிடம் வேண்டும்பொழுது உள்ளறைக்குச் சென்று, (ஆன்மாவின் ஆழத்திலிருந்து) கதவை அடைத்துக் கொண்டு (ஐம்புலன்களின் ஆர்ப்பரிப்பை இறை உணர்வில் ஒன்றாக இணைத்துக் கொண்டு) , மறைவாய் உள்ள நமது வானகத் தந்தையை நோக்கி வேண்டும்போது, (தோற்றமாற்ற நிகழ்வில் இயேசு மலை உச்சியில் உலகின் கண்களுக்கு மறைவாக இருந்ததார்) மறைவாய் உள்ளதைக் காணும் நமது வானகத் தந்தை நமக்கும் கைம்மாறு அளிப்பார்.

கவனிக்க "மறைவாய் உள்ளதை" என்பதன் பொருளை "தீயவனின் செயல்களுக்கு மறைந்தவராகவும் அதாவது இறந்தவராகவும் அதே வேளை இறைபணிகளில் பேதுருபோல் (மத் 17:4)
முன்னிலையிலும், இறைவன் முன் உயிர் உள்ளவர்களாகவும்" என்று பொருள் கொண்டு செயல்பட்டால் ….தோற்ற - மாற்ற நிகழ்வில் அவருடன் இருந்த சீடர்கள் பெற்றுக்கொண்ட - யாருக்கும் கிடைக்காத அற்புதமான இந்த அரிய வாய்ப்பை நாமும் பெற முடியும் என்பதே உண்மை. இறைவனில் ஒன்றாகி, அவரில் இணைந்து, தனிமையில் "அவருக்குக் காது கொடுத்து" - ஜெபிக்கும்போது, - ; இது சாத்தியமே…

பாருங்கள் ; லூக்கா நற்செய்தி 9:29ல்

அவர் வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது என்று படிக்கின்றோம். ஒரு உண்மையான ஒன்றிப்பு - ஜெபம் நிச்சயம் அற்புத மாற்றங்களைத் தரும்.

நாம் இந்த அதிசயமும் அற்புதமும் நிறைந்த மாற்றத்தை அனுபவிப்பது எப்படி?... கவனிப்போம்:-
இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். (மத்17:3). என்பது வேத வாக்கு. நாம் அடைகின்ற மாற்றம் தனி மனிதனுக்கு உரியது அல்ல அது நம்மிலிருந்து கடந்து பகிர்வு பெற்று அனைவருள்ளும் பயனளிக்க வேண்டும் என்பதைத்தான் மேற்கண்ட ஒளி வெள்ளத்தில் ஏற்பட்ட நட்பின் பகிர்வுச் சான்று பகர்கின்றது.

யாருள் கடந்து பகிர்ந்து பயனளிக்க வேண்டும்?

இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். (மத்17:3) ஆம், அந்த மாற்றத்தை - "அவரை ஏற்றுக் கொள்பவருள்" கடந்து - பகிர்ந்து பயனளிக்க வேண்டும்.

மாண்பும் மாட்ச்சியும் உள்ள இந்த மாற்றத்தைப் பகிர்ந்திட அப்படித் தகுதியுள்ள மனிதர் யார்?.
திருச்சட்டத்தைப் பெற்றுத் தந்த மோசேவைப் போலவும், இறை வார்த்தைகளைப் எடுத்துரைத்த எலியாவைப் போலவும் - எவர் ஒருவர்; திருச்சட்டத்தையும், இறை வார்த்தையையும், மதித்து; இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்கின்றனரோ; அவர்கள் இந்த மாற்றத்தின் பகிர்வைப் பெற்றுக்கொள்ள தகுதியுள்ள மனிதர்கள்.

இக்காட்சியில் நமது பங்கு என்ன?

பேதுரு இயேசுவின் நலனிலும் மேன்மையிலும் அக்கறை கொண்டவராக அவரைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்று. (மத் 17:4) கேட்டதைப் போல் - நாமும் மாற்றங்கள் தொடர்ந்து நிலைக்க - மனுக்குலம் நலனும், அமைதியும் பெற்று; நிலை வாழ்வைக் காண, அயராது - திருச் சட்டத்தையும் இறைவார்த்தையையும் ; வாழ்வாகக் கொண்டு "வாடாமல்" விதைத்துக் கொண்டிருக்கும் இறை மனிதர்களின் நலனில் "குறைந்தபட்சமாவது" அக்கறையும் - பராமரிப்பும் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்க்கையால் சாமானியன் பெரும் பயன்….?

திருச்சட்டத்தின் மீது அசையா நம்பிக்கையும் மதிப்பும் கொண்டவர்களாக ,இறை வார்த்தையை (இயேசுவை) பகிர்ந்து, அவ்வார்த்தையின் (அயலானின் அதாவது இயேசுவின்) நலனில் கவனம் உள்ளோராக, நாம் மாற்றம் பெற்று நிலைக்கும்போது; தொன்மையானவர் "மேகம்" என அந்த அயலான்மீதும் நம்மீதும் நிழலிடுவார் (மத் 17:5, லூக் 9: 34-35, மாற் 9:7) என்று மூன்று நற்செய்தியாளர்களும் நமக்குச் சான்று தருகின்றனர். ஆக, இறை பேரன்பின் பராமரிப்பு நமக்கும் - சாமானியனுக்கும் உண்டு என்பதும் உறுதியாகின்றது.

சரி, இவையெல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு அச்சத்தைத் தராதா…?

இறையாளுமை கொண்ட இத்தகைய மாற்றங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் அச்சத்தையும் தந்தாலும் (மத்17:6) நம் அருகில் இருக்கும் இயேசு அயலானாக - அருகில் வந்து நம்மைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்பார். என்பது -மத் 17:7ன் கூற்று.
அதுமட்டுமல்ல - பயணங்கள் தொடரும்போது, நமது பாதுகாவலராக
நம்மோடு பயணித்து நம்மை வழிநடத்துவார் என்பதும் உண்மை (மத் 17:9)எனவே அச்சம் வேண்டாம் தோற்றம்- மாற்றமே வேண்டும்.
அதற்கு:-

 1. இறைவனை "நான்-என்-இறைவன்" என்ற உரிமையின் தனிமையில் - ஆன்மாவின் ஆழத்திலிருந்து கூப்பிட வேண்டும்.
 2. நமது உடலின் கதவுகளான ஐம்புலன்களை இறைவனின் ஆளுமைக்குள் அடைத்து வைக்க வேண்டும்.(மத்6:6)
 3. இறைவனோடு இணைந்து அவர் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டும்.
 4. சுயநலம் இல்லாதவர்களாகத் திருச்சட்டத்தையும் இறைவார்த்தையையும் அனைவருள்ளும் பகிரும், "அவர் சொன்னதைச் செய்யும் அன்னை மரியின் மைந்தர்கள்" ஆக வாழ்ந்திட வேண்டும்.
 5. இயேசுவின் நலன் தேடிய பேதுரு போல, ஆதாயமின்றி அருகில் இருக்கும் அடுத்தவர் நலம் காக்க வேண்டும்.
 6. அஞ்சாதே என்பவரோடு - இயேசுவோடு கரம்கோர்த்து அச்சமின்றி இறைவனின் மேகக் கூடாரத்திற்குள் நுழைய வேண்டும்.

ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது. வேண்டாம் என்றாலும் விடாதது. ஒளி நம் மீதும் ஊடுருவிப் பிரகாசிக்க வேண்டுமெனில் நானே ஒளி என்பவரோடு, நம் பயணத்தைத் தொடர வேண்டியது தவிர்க்க முடியாதது. பயமின்றி பயணிப்போம்.

பாருக்குள் அச்சத்தைத் தவிர்த்தவர்களாகப் பாசத்தையும்
அன்பையும் பிரதிபலிப்பவர்களாக பயணிப்போம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser