மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 17-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தொடக்க நூல் 18: 20-32| கொலோசையர் 2: 12-14|லூக்கா 11:1-13

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


செப வாழ்வு

செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வரலாற்றிலே மறக்க முடியாத அதிர்ச்சித் தரும் சோக நாள். உலகிலே உயர்ந்த சக்தி வாய்ந்த நாடு, வல்லரசு (Serower) நாங்கள் தான். பணத்தாலும், பொருளாதாரத்தாலும், தொழிற்துறை விஞ்ஞான ரீதியிலும் நாங்களே உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் அமெரிக்கர்கள். ஆனால் நாட்டின் பாதுகாப்பு என்று சிந்திக்கின்றபோது, பணமும், ஆயுதமும், விஞ்ஞான வளர்ச்சியும் என்ன செய்ய முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். ஏனெனில் நியூயார்க் நகரில் உள்ள ஒப்பற்ற இரண்டு கட்டடங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, தவிடு பொடியாகி எண்ணற்ற உயிர்களையே பலியாக்கியபோது நாடே பயந்தது. தன் பலவீனத்தை உணர ஆரம்பித்தது. எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற பயம் அமெரிக்காவையே கவ்விப் பிடித்தது. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையற்ற உணர்வு அமெரிக்கர்கள் மனதில் பதிந்தது. எனவேதான் ஆலயம் தேடாத மக்கள் எல்லாம் இறைவனை. ஆலயங்களைத் தேட ஆரம்பித்தார்கள். இறைவனிடம் மன்றாட வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது. கும்பகோணத்தில் 90-க்கும் மேலான குழந்தைகள் தீயில் கருகியபோதும் நம் பலவீனத்தைத் தான் இது படம்பிடித்துக் காட்டியது. எல்லா மதத்தினரும் இறைவனிடம் மன்றாடத் தொடங்கியுள்ளார்கள் இந்தப் பச்சிளம் சிட்டுகளுக்காக!

மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சமூக வாழ்க்கை. இதனால் பிறரோடு பழகுதல், உரையாடுதல், தருதல், பெறுதல் என்பது மனித சமூக வாழ்வின் செயல்பாடுகள். இத்தகையச் செயல்பாடுகள் இல்லாத மானிட வாழ்க்கையை நாம் நினைக்க முடியாது. ஆனால் மானிட சமூக உறவுக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு உண்டு. அதுதான் கடவுள்- மனித உறவு. கடவுளை ஏற்றுக்கொள்ளுதல், அவரை நம்புதல், அவரைப் போற்றிப் புகழ்தல், அவரிடம் வேண்டுதல் செய்தல் போன்றவை கடவுள் மனித உறவின் கூறுகளாக உள்ளன. இன்றும் நாம் வாசிக்கக் கேட்ட விவிலிய வாசகங்கள் இறை மனித உறவின் ஓர் இன்றியமையாத கூறு. பண்பு என்று தெளிவாக்குகிறது. செபத்தைப் பற்றியத் தெளிவான சில சிந்தனைகளைத் தருகிறது.

இந்த உலகில் மக்கள் சிலர் எவ்வாறு செபத்தை நோக்குகிறார்கள் என்று சிந்திப்பது நல்லது.

 • சமூகத்தில் மற்றும் பொருளாதார தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் கடவுள் ஏதாவது புதுமை செய்து குறுக்கு வழிகாட்டமாட்டாரா என்று பிரச்சனையைத் தீர்க்கும் ஆயுதமாகச் செபத்தைச் சிலர் கருதுகிறார்கள்.
 • தனியாகவோ, அல்லது குழுவாகவோ அமர்ந்து கைதட்டி சப்தமாக பாடி செபித்தால் தன் மனப்பாரம் குறையும், உடல் வலியும் மாறும் என்று செபத்தை ஒரு மருந்தாகக் கருதி அணுகுபவர்கள் உண்டு.
 • ஆண்டவரே நான் இத்தனை முறை உம்மிடம் வந்துள்ளேன். இத்தனை தடவை தவறாமல் நவநாட்களில் கலந்துள்ளேன். எனவே நான் விரும்பும் காரியத்தை எனக்குக் கட்டாயம் தரவேண்டும் என்று கடவுளை மடக்குவது போல, செபத்தைக் கையூட்டாக, பேரம் பேசி லஞ்சம் கொடுப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள்.

சிலர் கடவுளை ஒரு கடுமையான நீதிபதியாக, காவல் துறை அதிகாரியாகக் கருதி, தண்டனையிலிருந்து தப்பிக்க, காணிக்கை, பாதயாத்திரை, ஆடு, கோழி வெட்டுதல், முடி எடுத்தல் என்றெல்லாம் கடவுளின் கோபத்தைத் தணிப்பதாகச் செபத்தோடு இணைத்துச் செய்கிறார்கள்.

ஆனால் இன்றைய வாசகங்கள், உண்மையான செபம் என்ன? எத்தகைய மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆபிரகாம் இறைவனோடு பேசுவது ஒரு நண்பனோடு பேசுவதுபோல உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. நல்லவர்கள் சிலர் இருந்தால் அதற்காக அந்த நகரையே, ஊரையே அழிக்கவேண்டாம் என்று கடவுளிடம் உரிமையோடு மன்றாடுகின்றார்.

செபம் என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையே நடக்கும் ஒரு உறவின் உரையாடல். செபம் என்பது மனித உள்ளத்தை இறைவன்பால் உயர்த்துவது. மனித உள்ளம் இறைவனோடு இரண்டறக் கலப்பது. இதனால் கடவுளோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவின் வெளிப்பாடுதான் செபம். இதைத்தான் ஆபிரகாம் ஆண்டவரோடு வாதாட, கடவுள் கருணை, இரக்கம் உள்ளவர் என்பதையும், அதேநேரத்தில் நீதியும் நிறைந்தவர் என்பதையும் இன்றைய முதல் வாசகம் காட்டுகிறது.

இன்று நற்செய்தியில் வாசித்ததுபோல (லூக். 11:1-2) திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்குக் கற்றுத் தந்ததுபோல எங்களுக்கும் கற்றுத் தாரும் என்று இயேசுவின் சீடர்கள் கேட்டார்கள். ஏனெனில் இயேசு தன் தந்தையோடு உறவாடுவதையும், அதனால் அவர் அனுபவிக்கும் நெருக்கமான உறவையும் அவர்களால் உணர முடிந்தது. அந்த நேரத்தில்தான் இயேசு ஒரு சிறப்பான செபத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இதில் செபம் இறைநோக்கும் அதே சமயத்தில் மனித நோக்கும் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் காட்டுகிறார். செபத்தில் புகழ்தல், நன்றி கூறல், ஆராதித்தல், மன்றாடுதல் தேவை. இதை உள்ளடக்கிக் கடவுளைப் போற்றிப் புகழவும், இரண்டாவது மானிடத் தேவைகளை உள்ளடக்கியும் அழகான செபத்தை நமக்கு இயேசு கற்றுத் தந்துள்ளார். இதை வாயால் மட்டும் செபிப்பதல்ல. மாறாக வாழ்க்கையில் இடம் பெறும் செபமாக மாற்ற வேண்டும்.

ஆனால் நான் செபிக்கும்போது நான் கேட்டது கிடைக்க வில்லையே என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர். இதனால் இனி நான் கோவிலும் செல்வதில்லை, ஆலயமும் போவதில்லை என்பவர்கள் ஏராளம்!

நம்மிடம் உள்ள தடைகள் என்ன? பாவத்தோடு இருக்கிறோமா?

ஒரு தாய் அலுவலக வேலை முடித்து வீடு திரும்பும்போது தன் குழந்தைக்குத் தின்பண்டம் வாங்கி வருகிறாள். தாயைக் கண்ட மகன் ஓடோடி வந்து தாயின் கையில் உள்ள தின்பண்டத்தைப் பறிக்கப் பார்க்கிறான். தாய் கொடுக்க மறுக்கின்றாள். மகனே! வீட்டுக்கு வா. வீதியில் விளையாடி உன் கையெல்லாம் ஒரே தூசி. முதலில் கையைக் கழுவு. அதன்பின் இந்தப் பண்டத்தைத் தருவேன் என்கிறாள் அந்த அன்புத் தாய். ஆம்! நாம் பாவத்தோடு எதையும் இறைவனிடம் பெற முடியாது. நமது குற்றங்களுக்காக முதலில் இறைவனிடம் மன்னிப்புப் பெற வேண்டும் (கொலோ.2:13).

 • புனித பேதுரு (1 பேதுரு 1:15) கூறுவதுபோல உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவராக இருங்கள்.
 • உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள் என்கிறார் இயேசு (மத்.6:48)
 • தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் (மத். 5:8)

நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள். கேட்டாலும் அடைவதில்லை (யாக். 4:3)

இரண்டாவது, பிறரை மன்னிக்கும் உள்ளம் கொண்டவர்களாய் இருந்தால்தான் செபிக்க முடியும். செபிப்பதையும் பெற முடியும்.

 • நீங்கள் உங்கள் பகைவரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (லூக். 6:35)
 • உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராக இருங்கள் (லூக். 6:36) எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக்.6:38)
 • அப்பா பிதாவே! இவர்களை மன்னியும். ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாது செய்கிறார்கள் (லூக். 23:34)
 • நாமும் கர்த்தர் கற்பித்த செபத்தில் சொல்லுகிறோம். நாங்கள் பிறரை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னித்தருளும் (லூக். 11:4)
 • காணிக்கைச் செலுத்த வரும்போது மனத்தாங்கல் இருந்தால் முதலில் சமாதானம் செய் (மத். 5:23-24)
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில், உங்கள் வானகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் (மத். 6:15)

மூன்றாவதாக, நாம் பரிசுத்த உள்ளத்தோடு கேட்கலாம். சில நேரத்தில் கேட்டும் பெறாமல் இருக்கலாம். ஏனெனில் அது நமக்குத் தேவையா என்பதை அறியாமல் இருப்போம். அறிந்த இறைவன் நமக்குத் தேவை இல்லையென்றால் தராமல் இருக்கலாம்.

நான்கு வயது சிறுவன் தன் தாயோடு இரயில் பிரயாணம் செய்தான். வண்டியில் உட்கார்ந்ததும் அம்மாவிடம் இது என்ன! அது என்ன? என்று ரயிலில் உள்ள பொருட்களைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தான். குறிப்பாக சங்கிலியைப் பார்த்து அது என்ன என்று கேட்டான். இதற்கு அபாயச் சங்கிலி என்று பெயர். இதைப் பிடித்து இழுத்தால் ஓடுகின்ற ரயில் நிறுத்தப்படும் என்றாள் தாய். ரயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் பொம்மை கீழே விழுந்துவிட்டது. அம்மா! சங்கிலியைப் பிடித்து இழுங்கள் என அழுதான், அடம் பிடித்தான், ஒப்பாரி வைத்தான். ஆனால் தாயோ இழுக்கவில்லை. குழந்தையின் வேண்டுதலுக்குச் செவி கொடுக்கவில்லை. ஏனெனில் இந்தச் சிறு பொம்மைக்காக அத்தனை பேருடைய பயணத்தையும் தடை செய்ய விரும்பவில்லை அந்தத் தாய். அதுபோலத்தான் இறைவனும் சில வேளைகளில் இவ்வாறு செயல்படுவது உண்டு.

உலகத் தந்தையர்கள் தம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்திருக்கிறார்கள் என்றால் நம் வானகத் தந்தை நம் தேவைகளை நன்றாக முழுமையாக அறிந்திருக்கிறார்.

செபத்தின் முக்கியம்

  இயேசு வேண்டுவதற்காக, ஒரு மலைக்குப் போனார். அங்கு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக். 6:12)
 • சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் (மத். 26:41)
 • இடைவிடாது செபியுங்கள் (1 தெச. 5:17)
 • செபமற்ற வாழ்வு செத்த வாழ்வு
 • குடும்ப செபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு
 • நம் செபம் அறிவுப்பூர்வமாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்

அன்னை தெரெசா இத்தனை ஆயிரம் பேரை வைத்து எவ்வாறு பராமரிக்க முடிந்தது என்று கேட்டபோது, நற்கருணை நாதருக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செலவிடுகிறோம். அவர் எங்களை வழிநடத்துகிறார் என்றார்.

காந்தி மகான் ஒவ்வொரு வெள்ளியும் மௌன விரதம் இருந்து செபித்தார்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கதவு திறக்கும்

சில ஆண்டுகளுக்கு முன் வேளாங்கண்ணிப் பங்கிலே நடந்த நிகழ்ச்சி இது. ஆந்திராவிலிருந்து தமிழ் தெரிந்த தாயொருவர் தன் மகனோடு வேளை நகருக்கு வந்திருந்தார். சுமார் பன்னிரெண்டு வயது நிரம்பிய தன் மகனுக்கு புதுநன்மை கொடுக்கவேண்டும் என்றார். உங்களுடைய பங்குத் தந்தையின் கடிதம் இருந்தால்தான் புதுநன்மை கொடுக்கமுடியும் என்றேன். அதற்கு அந்தத் தாய், புதுநன்மை கொடுப்பதுபற்றி எனது பங்குத் தந்தையிடம் பேசிவிட்டேன். ஆனால் என்னால் கடிதம் வாங்க முடியவில்லை. காரணம், நான் இங்கு புறப்பட்டபோது அவர் பங்கு இல்லத்தில் இல்லை என்றார். அதற்கு நான், சரி, பிறகு வந்து பாருங்கள் என்றேன். அந்தச் சிறுவனும், ஃபாதர், தயவு செய்து எனக்குப் புதுநன்மை கொடுங்கள். சட்டையெல்லாம் தச்சி எடுத்துகிட்டு வந்துட்டோம் என்றான்.

மறுநாள் என் அறைக்குள் தாயும், மகனும்! சரி, உங்கள் பங்குத் தந்தையின் ஃபோன் நம்பராவது தெரியுமா? என்றேன். அந்தத் தாய் தவறான நம்பர் ஒன்றைக் கொடுத்தார். முயற்சி செய்தேன்; எந்தப் பயனும் இல்லை. நீங்களே இந்த நம்பருக்குப் ஃபோன் செய்து உங்கள் பங்குத் தந்தையை என்னோடு பேசச் சொல்லுங்கள் என்றேன். அன்று மாலை முயற்சி செய்து பார்த்துவிட்டு, என்னால் பங்குத் தந்தையோடு பேசமுடியவில்லை என்றார் அந்தத் தாய்!

ஆந்திராவிலிருந்த, எனக்குத் தெரிந்த, அருள்பணியாளர் ஒருவரோடு தொலைபேசியில் பேசினேன். அவர் ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து அந்த எண்ணோடு தொடர்புகொள்ளச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். எப்படியோ, கடைசியாக அந்தத் தாயின் பங்குத் தந்தையோடு பேசினேன். உத்தரவு கிடைத்தது. அந்தச் சிறுவனுக்கு புதுநன்மை அளிக்கப்பட்டது.

மூன்று நாள்கள் என் அறைக் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்த அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பியது கிடைத்தது. இந்தப் பெண்ணைப் போன்ற நண்பனொருவனை இன்றைய நற்செய்தியிலே நாம் சந்திக்கின்றோம்.

கதவு சாத்தப்பட்டிருந்தது! ஆனால் நண்பனோ, நண்பா! கதவைத் திற என்றான்.

கதவைத் தட்டுவதை அவன் நிறுத்தவே இல்லை ! இறுதியாகக் கதவு திறந்தது. தொல்லையின் பொருட்டு கதவைத் திறந்த நண்பன், தன் நண்பன் கேட்டதைக் கொடுத்தான்.

இந்த உவமை நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மை என்ன? இறைவன் தமது மனத்தைச் சில நேரங்களில் மாற்றிக்கொள்வதுண்டு ! யோனா நூலில் 3:10 - இல் கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொண்டார் என்று படிக்கின்றோம். யோவான் நற்செய்தியில் 2:4 -இல் எனது நேரம் இன்னும் வரவில்லையே என்கின்றார் இயேசு. ஆனால் 2:7 - இல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்கின்றார். இயேசு தனது மனத்தை மாற்றிக்கொள்வதைக் காண்கின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிரகாமின் வேண்டுதலுக்கிணங்க அவரது மனத்தை மாற்றிக்கொள்வதைப் பார்க்கின்றோம். பத்து நல்லவர்கள் இருந்தால் கூட சோதோம், கொமோராவை அழிப்பதில்லை என்று ஆண்டவர் ஆபிரகாமிடம் கூறுவதைக் காண்கின்றோம்.

இந்த உண்மை நமது மன்றாட்டு வாழ்வில் நாம் மனம் தளர்ந்து போகாமல் நாம் மன்றாட உறுதுணையாக இருக்கவேண்டும். இவ்வளவு வேண்டியும் இன்னும் இது நடக்கவில்லையே என எண்ணி நாம் நமது மன்றாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது.

இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுல் அடிகளார், கடவுள் உங்களை அவரோடு (கிறிஸ்துவோடு) உயிர்பெறச் செய்தார்; நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார் (கொலோ 2:13) என்று கூறுகின்றார். இது என் வாழ்வைப் பொருத்தவரையில் உண்மையே என நம் ஒவ்வொருவராலும் இன்று சொல்ல முடியுமா?

முடியும் என்றால் இறைவனுக்கு நன்றி சொல்வோம். இல்லையென்றால் நாம் அழிவுறாதபடி இடைவிடாது மன்றாடி இறைவனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெற்று புண்ணிய வாழ்விற்கு உயிர்த்தெழுந்து வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள்: 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒரு மனைவி தன் கணவரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: " என் கணவர் கடவுளைப் போன்றவர்; ஏனெனில் நான் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளமாட்டார்." ஒருசிலர் கடவுளைப் பற்றி இவ்வாறு நினைக்கின்றனர். கடவுள் நமது செபத்தைக் கேட்கின்றாரா? அல்லது காது கேளாத செவிடரா? இக்கேள்விக்குக் கடவுள் கூறும் பதில் என்ன? "செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ?" (திபா 94:9), மனிதருக்குக் கேட்கும் செவியைக் கொடுத்த அவர் மனிதருடைய குரலைக் கேட்கின்றார். அவர் செவிடர் அல்ல. இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: ' ஆண்டவரே. நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்" (திபா 138:3).

கடவுளிடம் நாம் கேட்பதை மனந்தளராமல் கேட்க வேண்டும். என்று இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு. நண்பர் ஒருவர் அப்பம் கேட்டுத் தன் வீட்டின் கதவை நள்ளிரவில் விடாமல் தட்டிக் கொண்டிருந்ததால் அவரின் தொல்லை தாங்காமல் அவருக்குத் தேவையான உணவைக் கொடுக்கிறார் ஒருவர். ஒரு மனிதனே தன்னிடம் விடாமல் கேட்ட ஒருவருடைய வேண்டுகோளை நிறைவேற்றினால், நல்ல கடவுள் நாம் அவரிடம் இடைவிடாமல் கேட்கும்போது, நிச்சயமாக நாம் கேட்பதைக் கொடுப்பார். எனவே, நாம் கேட்க வேண்டும். அதாவது தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கேட்பதையோ தட்டுவதையோ நிறுத்தக்கூடாது.

கடவுளிடம் பேரம்பேச முடியுமா ? இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளிடம் பேரம் பேசுகிறார்: கடவுளும் அவருடைய பேரத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறார். ஆனால் சோதோம் நகரில் 10 நீதிமான்கள் கூட இல்லாததால் அந்நகர் தீக்கிரையானது. இக்காலத்தில் நிலைமை மாறிவிட்டது என்று கூற முடியுமா? "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக் 18:8) என்று ஒரு பெரிய கேள்வியை எழுப்பிவிட்டுச் சென்றுள்ளார் இயேசு. கடவுளின் நன்மைத் தன்மை கடுகளவும் குறைவதில்லை; ஆனால் மக்களின் நம்பிக்கைதான் குறைந்துகொண்டே வருகிறது. நம்புவோர்க்கு எல்லாம் கைகூடும்.

புனித ஜான் மரிய வியான்னி என்பவர் செபத்தின் வல்லமையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: "கடவுள் உலகையே ஆளுகிறார்; ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதரோ கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்னபோதிலும், செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்."

அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா? இந்தக் கேள்விக்கு ஒரு சிறுவன் கூறும் பதில்: "நிச்சயமாக அம்மாதான் பெரியவர். என் அப்பா அவருடைய தொழிற்சாலையில் ஆயிரம்பேரை அடக்கி வேலை வாங்குகிறார். ஆனால் வீட்டிலோ என் அம்மா என் அப்பாவையே அடக்கி வேலை வாங்குகிறார்."

செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார் என்று புனித ஜான் மரிய வியான்னி கூறியது உண்மை என்பதைக் கானாவூர் திருமணத்திலே நாம் காண்கின்றோம். மரியா இயேசுவிடம் " திராட்சை இரசம் தீர்ந்து விட்டது" (யோவா 2:3) என்று கூறியபோது, இயேசு மரியாவிடம். "எனது நேரம் வரவில்லை" (யோவா 2:4) என்கிறார். அதாவது, புதுமை செய்ய முடியாது" என்கிறார். ஆனால், மரியா மனந்தளராமல் பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5) என்று கூறுகிறர், புதுமை அரங்கேறுகிறது. தண்ணீர் திராட்சை இரசமாகிறது. செபத்தின் வல்லமை வெளிப்படுகிறது. 'முடியாது' என்று சொன்ன இயேசுவை மரியா தமது வேண்டுதலால் 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்.

மகன் அப்பாவிடம் 'ஸ்கூட்டர்' கேட்கின்றான். அப்பா வாங்கிக் கொடுக்க மறுக்கிறார். அம்மா தலையிட்டு, " இந்தாங்க! அவன் கேட்கிறத வாங்கிக்கொடுங்க" என்கிறார். அப்பா மறுத்துப் பேசாமல் மகனுக்கு "ஸ்கூட்டர்" வாங்கிக் கொடுக்கிறார். ஏனெனில் அவர் தன் மனைவி கிழிச்சக் கோட்டை ஒருபோதும் தாண்டவே மாட்டார்! "இந்தாங்க" என்ற சொல்லுக்கு எவ்வளவு சக்தி!

நாம் செபிக்கும்போது நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையுடன் செபிக்க வேண்டும். நாம் அடிமைகள் அல்ல; கடவுளின் பிள்ளைகள், எனவே கடவுளை "அப்பா தந்தையே" அழைக்கின்றோம் (உரோ 8:15), தம் மகனையே கையளித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளுவார் (உரோ 8:32) இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகக் கூறுகிறார்! கடவுள் தம்மிடம் கேட்பவருக்குத் தூய ஆவியைக் கொடையாகக் கொடுக்கிறார். (லூக் 11:13), கொடையை விட கொடையாளியே முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

முடிவாக வாழ்வுக்கும் செபத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. "நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே செபிக்கின்றோம். நாம் நன்றாக வாழ்வதில்லை; ஏனெனில் நாம் நன்றாகச் செபிப்பதில்லை. நம் நன்றாக செபிப்பதில்லை, ஏனெனில் நாம் நன்றாக வாழ்வதில்லை."

முழுமையாகச் செபிக்கின்றவர். முழுமையான மனிதர்: அரைகுறையாகச் செபிக்கின்றவர். அரைகுறையான மனிதர்: ஒருபோதும் செபிக்காதவர், மனிதரே இல்லை.

"எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாக் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1தெச 5:16)

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கேட்பதா முக்கியம்?

இறைவனை வேண்டி ஒருவன் தவமிருந்தான். ஒருநாள் இறைவன் அவன் முன் தோன்றி "உனக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்டார். “நான் கேட்பதை நீங்கள் தருவீர்களா?” என முதலில் அவன் பீடிகை போட்டான்.

இறைவனோ "தருவேன். ஆனால் உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதோ அது பூமியில் உள்ள அனைவருக்குமே கிடைப்பதாகத்தான் வரம் தருவேன். எனவே அதை மனதில் கொண்டு என்ன வேண்டுமானாலும் நீ கேள்” என்றார்.

நமக்குக் கிடைப்பது அனைவருக்கும் கிடைக்கும் என்று இறைவன் சொல்கிறாரே என்று அந்த மனிதன் மனதுக்குள் வருத்தமாக இருந்தாலும் இப்போது நாம் கேட்கவேண்டியதைக் கேட்காவிட்டால் இறைவன் மறைந்துவிடுவார் என நினைத்து “என் வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் தங்கக்காசுகளாக மாறிட வேண்டும்" என்று கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டு இறைவனும் மறைந்தார்.

அந்த மனிதன் உற்சாகம் பீறிட வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்தான். அங்கே எல்லாமே தங்கக்காசுகளாக மாறி இருந்தன.

கை நிறையத் தங்கக்காசுகளை அள்ளிக்கொண்டு தனக்குத் தேவையானவற்றை வாங்க கடைவீதிக்கு ஓடினான்.

ஆனால் அங்கோ அரிசிக்கடைக்கு ஓடினால் அங்கே அரிசி இல்லை. எல்லாமே தங்கக்காசுகளாய் மாறிக் கடைக்காரன் சோர்வுற்றிருந்தான். துணிக்கடைக்கு ஓடினால் அங்கும் துணிகள் இல்லை. எல்லாம் தங்கக்காசுகளாய் மாறிக் கடைக்காரன் விழித்துக் கொண்டிருந்தான்.

ஏமாற்றத்தால் அந்த மனிதன் திகைத்துப் போய் ஆண்டவனைத் தேடி ஓடினான்.

ஆண்டவனும் அவன் முன் தோன்றி, "பைத்தியக்காரனே, உனக்கு நடப்பது போல ஊருக்கும் நடக்கும் என்று சொன்னேனே, இப்போது உன்னிடம் தங்கக்காசுகள் மட்டும்தானே இருக்கின்றன. இதை வைத்துச் சாப்பிட முடியுமா? உடுத்த முடியுமா? உனக்குக் கிடைப்பது எல்லாருக்குமே கிடைக்கும் என்று நான் சொன்னதை வைத்து நீ புத்திசாலித்தனமாக எனக்கு உழைப்பு மேல் ஆர்வம் வேண்டும், உழைக்கத் தேவையான சக்தி வேண்டும், உழைப்புக்கு ஏற்ற பலன் வேண்டும் என்று கேட்டிருந்தால், உலகத்தில் எல்லோருக்கும் உழைப்பின் மேல் ஆர்வம் ஏற்பட்டு அதன் மூலம் அனைவரும் உழைத்துத் தேவையான செல்வங்களைப் பெருக்கி இருக்கலாமே! புதிய சமுதாயமே உருவாகியிருக்குமே" என்று அறிவுரை கூறி மறைந்தார்.

"கேளுங்கள், கொடுக்கப்படும்" (மத். 7:7) என்றார் இயேசு. கேட்பதா முக்கியம்? எதைக் கேட்பது? எப்படிக் கேட்பது? என்ற தெளிவன்றோ தேவை!

இறைவன் தன் எல்லையற்ற ஆற்றலை நம்மோடு பகிர்ந்து கொள்ளக் கையாளும் வழிகளில் ஒன்று செபம். சிந்திக்கும் மனிதன் இறைவன் தந்த ஆற்றலைக் கொண்டு எப்படிப் புதிய உலகைப் படைக்க முடியுமோ, அதுபோல செபிக்கும் மனிதன் இறையாற்றலைப் பகிர்ந்து கொண்டு புதிய வாழ்வை; புதிய உலகைப் படைக்க முடியும்.

சிந்திக்கக் கொஞ்சம் அறிவாளியாக இருக்க வேண்டும். செபிக்க அந்த அளவு தேவையில்லை. எல்லா மனிதரும் எளிதாகச் செபிக்க முடியும். கொஞ்சம் செபிக்கக் கற்றிருக்க வேண்டும். "ஆண்டவரே ... இறைவனிடம் வேண்ட... எங்களுக்கும் கற்றுக் கொடும்" (லூக். 11:1).

நீ கேட்பது எதுவாகவும் இருக்கட்டும் - கேள். அது உனக்கு உகந்ததா என்று இறைவன் தீர்மானிக்கட்டும்.

நீ கேட்பது புதிதாகவே இருக்கட்டும் - கேள். அது உனக்குச் சரியானதா என்று அவர் விடை கூறட்டும்.

நீ கேட்பது அரிதாகவே இருக்கட்டும் - கேள். அது உனக்கு முறையானதா என்று அவர் பதில் சொல்லட்டும்.

நீ கேட்பது பெரிதாகவே இருக்கட்டும் - கேள். அது உனக்குப் பொருந்துமா என அவர் முடிவு செய்யட்டும்.

கேளுங்கள். உங்கள் சரியான தேவைகளை செபத்தில் கேளுங்கள். அது ஆண்டவரால் தரப்படும்.

செபம் என்பது ஓர் அன்புப் பரிமாற்றம். செபத்துக்கு வார்த்தைகள் முக்கியமல்ல. உணர்வும் உறவும் முக்கியம்.

"நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல் மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?” (இ.ச.4:7). இப்படி மோசே சீனாய் மலை அனுபவங்களை மக்களோடு பகிர்ந்து கொள்கிறார். சமய நம்பிக்கை என்பது இறை அனுபவங்களின் வழி வளர்வது.

வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி முதல் செய்தியாய் வானொலியில் பேசியது என்ன தெரியுமா? “எனது இளமையில் நான் மாதாக் கோவில் வழிபாட்டுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே உள்ள பாதிரியார் 'விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே' என்று விளித்து மன்றாடுவார். அப்போது நான் நினைப்பது உண்டு, பூமியிலிருந்து நாம் வேண்டுவதெல்லாம் விண்ணில் உள்ள தந்தையின் காதில் எப்படி விழும் என்று. அவர் என்ன ஒயர்லெஸ் கருவியா வைத்திருக்கிறார்? இங்கிருந்து விண்ணகம் என்ன கூப்பிடும் தூரத்திலா இருக்கிறது? என்றெல்லாம் கிண்டலடித்திருக்கிறேன். ஆனால் அற்ப மனிதனாகிய நான் இன்று எங்கோ இருந்து பேசும் என் வார்த்தைகளை எங்கோ கண்டம் விட்டுக் கண்டம் வாழும் நீங்கள் கேட்க முடிகிறது என்று உணரும்போது நாம் எழுப்பும் எந்த வேண்டுதலையும் ஆற்றல் மிக்க வானகத்தந்தை கட்டாயம் கேட்பார் என்று உறுதியாக நம்புகிறேன்".

நாம் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாக நற்கொடைகளையும் கனிகளையும் அருளுகின்ற தாராளத் தந்தை அவர். "பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் மீனுக்குப் பதிலாகப் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!" (லூக். 11:11-13). நம்பிக்கையோடு செபிக்கின்றபோது கொடைகளுக்கெல்லாம் ஊற்றாகிய தூய ஆவியையே இறைவன் அளிப்பார் என்று இயேசு உணர்த்துகிறார்.

இறைவன் நமது தேவைகளை (ஆசைகளை அல்ல) நிறைவேற்றும் பாசமிகு தந்தை. ஆனால் நாம் இறைவனின் கொடைகளைப் பெறாமல் இருக்கக் காரணம் என்ன? செபிக்கும் விதத்தை மறு சிந்தனை செய்ய வேண்டுமோ!

செபம் என்றால் என்ன?

"இறைவன் திருமுன் திறந்த கைகளோடு நின்று கொண்டிருப்பது".

அதாவது “ஆண்டவரே என்னை ஆட்கொள்ளும். இதோ, என் எத்தனை கனவுகள், எண்ணங்கள், ஆசைகள், ஏக்கங்கள்! அவற்றில் உமக்குப் பிடிக்காதவற்றை அகற்றவும் திறந்த கைகள். அவற்றில்தான் பிடித்தவற்றைக் கொடுக்கவும் உமக்கு முழு உரிமை உண்டு. செயல்படும்” என்ற மனநிலையில் அவர் முன் நிற்பது.

"இஸ்ரயேலே, நீ திரும்பி வருவதாக இருந்தால் என்னிடம் திரும்பி வா என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை அகற்றிவிட்டால் என் திரு முன்னிலிருந்து அலைந்து திரிய மாட்டாய்" (எரே.4:1)

எப்படி செபிக்க வேண்டும் என்று இயேசு கற்றுத் தருகிறார்.

"விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, எனது பெயர் அல்ல, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக. எனது ஆட்சி அல்ல, உமது ஆட்சி வருக. எனது விருப்பம் அல்ல, உமது திருவுளம் நிறைவேறுக".

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தளரா நம்பிக்கையும், தக்க கைம்மாறும்

இன்னும் மூன்று அடிதான்:

ஒரு மலைப்பாங்கான பகுதியில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்ட ஒருவர் அதைப் பெரிய விலை கொடுத்து வாங்கினார். நிலத்தை வாங்கியதும் அவர் தனியாளாகவே தோண்டத் தொடங்கினார்.

பல நாள்களாக நிலத்தைத் தோண்டிய அவர், அதில் தங்கம் எதுவும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என நினைத்துக்கொண்டு அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். அப்போது அந்த நிலத்தில் தங்கம் இருப்பதாகச் சொன்னவர் அவரிடம், “தயவு செய்து இன்னும் மூன்று அடி நிலத்தைத் தோண்டிப் பாருங்ங்கள். நிச்சயம் தங்கம் கிடைக்கும்” என்றார். அதற்கு நிலத்தை விலைகொடுத்து வாங்கியவர், “இவ்வளவு தூரம் தோண்டியும் கிடைக்காத தங்கம், இனிமேலும் கிடைக்கவா போகிறது?” என்று சொல்லி, அந்த நிலத்தைத் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் விலைக்கு விற்றுவிட்டார்.

புதிதாக நிலத்தை விலைக்கு வாங்கியவர், சரியாக மூன்று அடிதான் தோண்டினார். மூன்றாவது அடியில் அவருக்குத் தங்கம் கிடைத்தது. இச்செய்தியை அறிந்த முன்னவர், “இன்னும் மூன்று அடி நிலத்தைத் தோண்டியிருந்தால், தங்கம் கிடைத்திருக்குமே! இப்படிப் பாதியில் முயற்சியைக் கைவிட்டு, எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிட்டோமோ!’ என்று மிகவும் வருந்தினார்.

ஆம், எந்தவொரு செயலையும் தளரா நம்பிக்கையுடன் செய்யவேண்டும். அப்படி நாம் செய்தால் அதற்குத் தக்க கைம்மாறு உண்டு. அதைத்தான் இந்தநிகழ்வும், பொதுக் காலத்தின் பதினேழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

தளரா நம்பிக்கையுடன் இறைவேண்டல்:
“ஒருவர் இறைவேண்டலே வேண்டாம் என்று அதை விட்டு விலகியிருந்தால், அவர் தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆற்றலிலிருந்து விலகி இருக்கின்றார் என்று பொருள்” என்பார் பில்லி சண்டே என்ற பிரபல மறைப்போதகர். இயேசு இறைமகன், அவர் மூவொரு கடவுளில் இரண்டாம் ஆள். அப்படியிருந்தும் அவர் கடவுளோடு இறைவேண்டல் மூலம் ஒன்றித்திருந்தார். தவிர, ஒவ்வொரு முதன்மையான நிகழ்விற்கு முன்பும் அவர் இறைவனிடம் வேண்டினார். இதையெல்லாம் பார்த்த அவரது சீடர்கள் தங்களுக்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தருமாறு கேட்கின்றனர். இயேசு கற்றுத் தரும் இறைவேண்டலில் மிகுதியான சொற்கள் இல்லை; இரத்தினச் சுருக்கமாய் மிகவும் குறைவான சொற்களே உள்ளன. ஆனாலும் ஓர் அணு அளவுக்கு அவ்வளவு வீரியமுள்ளதாக இருக்கின்றது.

இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, இயேசு தம் சீடருக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலுக்குப் பிறகு, அவர் அவர்களிடம், இறைவனிடம் தளரா நம்பிக்கையோடு வேண்ட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றார். அதற்காக அவர் ஓர் உவமையையும் சொல்கின்றார். இயேசு சொல்லும் அந்த உவமையில், நள்ளிரவில் தன் நண்பரிடம் அப்பம் கேட்டு வரும் மனிதர், ஒரு பிச்சைக்காரரைப் போன்று தன் நண்பரிடம் அப்பம் வேண்டும் என்று கேட்டு, இறுதியில் பெற்றுக்கொள்கின்றார். முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளிடம் சோதோம் கொமோராவில் ஐம்பது நேர்மையாளர்கள் இருந்தால் அவற்றை அழிக்க மாட்டீர்தானே? என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்து 45, 40, 30, 20, 10 நேர்மையாளர்கள் இருந்தால் அவற்றை அழிக்கமாட்டீர்தானே? என்று கேட்கின்றார். அந்த அளவுக்கு அவர் தளரா நம்பிக்கையோடு ஆண்டவரிடம் வேண்டுகின்றார்.

ஆகையால், நாம் இறைவனிடம் வேண்டும்போது தளரா நம்பிக்கையோடு வேண்ட வேண்டும். அப்படி வேண்டினால் அதற்குத் தக்க கைம்மாறு உண்டு.

பிறருக்காக வேண்டுவதே முழுமையான இறைவேண்டல்:
ஒருவர் செய்யும் இறைவேண்டல் எப்போது முழுமை பெறுகின்றது எனில், அவர் தனக்காக அல்ல, பிறருக்காக வேண்டுகின்றபோதுதான். இதற்கு இயேசு நமக்கு மிகப்பெரிய முன்மாதிரி. பெரிய குருவாம் இயேசுவின் இறைவேண்டல் என அழைக்கப்படும் இறைவாக்குப் பகுதியில் அவர், “அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்” (யோவா 17:9) என்கிறார். இவ்வாறு இயேசு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்காக வேண்டுவதன் மூலம், ஒவ்வொருவரும் பிறருக்காக வேண்ட வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றார்.

நற்செய்தியில் நள்ளிரவில் அப்பம் கேட்டு வரும் மனிதர் தனக்காக அப்பம் கேட்டு வரவில்லை; மாறாகத் தன் நண்பருக்காக அப்பம் கேட்டு வருகின்றார். அப்படியெனில், இறைவனிடம் நாம் வேண்டுகின்றபோது தளரா நம்பிக்கையுடன் வேண்டவேண்டும். அதே வேளையில் நமக்காக (மட்டும்) அல்ல, பிறருக்காக(வும்) வேண்ட வேண்டும். இக்கருத்திற்கு வலுசேர்ப்பதாய் இருக்கின்றது இன்றைய முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளிடம் கடவுளிடம் வேண்டுகின்றபோது தனக்காக வேண்டவில்லை. மாறாக, அவர் பாவம் மிகுதியாக இருந்த சோதோம் கொமோராவில் இருந்த நேர்மையாளர்களுக்காக வேண்டுகின்றார். அதுவும் தளரா நம்பிக்கையோடு வேண்டுகின்றார். எனவே, நாம் கடவுளிடம் வேண்டுகின்றபோது இயேசுவைப் போன்று, ஆபிரகாமைப் போன்று நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் வேண்டவேண்டும். அப்போதுதான் நமது இறைவேண்டல் முழுமை பெறும்.

பேரன்பு மிக்கவர் பெரியன செய்வார்:

கடவுளிடம் வேண்டும்போது தளரா நம்பிக்கையோடும், பிறருக்காகவும் வேண்ட வேண்டும் என்று சிந்தித்தோம். இங்கு நமக்கொரு கேள்வி எழலாம். அது என்னவெனில், கடவுளிடம் நாம் தொடர்ந்து அல்லது தளாராமல் மன்றாடினால்தான் அவர் நமது வேண்டுதலைக் கேட்பாரா? ஒரே ஒருமுறை மட்டும் வேண்டினால் அவர் நமது வேண்டுதலைக் கேட்கமாட்டாரா? என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுளிடம் நாம் தொடர்ந்து கேட்டால்தான் அவர் தருவார் என்கிற அளவுக்கு அவர் ஒன்றும் கல்நெஞ்சக் காரர் இல்லை. ஏனெனில், மனிதர்களே தம் பிள்ளைகள் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுக்காதபோது, கடவுள் மட்டும் அப்படிக் கொடுப்பாரா? நிச்சயமாக இல்லை. மாறாக, அவர் தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியை கொடுப்பார். ஏனெனில், அவர் பேரன்பு மிக்கவர்; அதைவிடவும் அவர் நமது குற்றங்களை மன்னிக்கின்றவர்.

கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், “கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்” என்கிறார். இது எவ்வளவு உண்மையான வார்த்தைகள். திருப்பாடல் ஆசிரியர் சொல்வது, கடவுள் மட்டும் நமது குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால் யார்தான் அவர் திருமுன் நிலைத்து நிற்க முடியும்? அவரோ மன்னிப்பு அளிப்பவர் (திபா 130: 3-4). அவர் மன்னிப்பு அளிப்பவர் என்பதால்தான் சோதோம் கொமோராவில் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் போதும் என்ற நிலையிலிருந்து, பத்து நீதிமான்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வருகின்றார். கடவுள் நாம் செய்த குற்றங்களையெல்லாம் மன்னிக்கக் காரணம், அவர் பேரன்பு மிக்கவராய் இருக்கின்றார் என்பதால்தான்.

எனவே, பேரன்பு மிக்கவரும், நம்மைத் தாராளமாய் மன்னிப்பவருமான ஆண்டவரிடம் நாம் தளரா மனத்துடனும், அதே நேரத்தில் பிறருக்காகவும் மன்றாடி இறையாசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:
‘உண்மையான மகிழ்ச்சி ஒருவருக்கு உள்ளத் தூய்மையினாலும் தளரா இறைவேண்டலினாலுமே கிடைக்கும்’ என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். எனவே, நாம் இறைவனிடம் தளரா நம்பிக்கையோடு மன்றாடுவோம்; அதுவும் பிறருக்காக மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்றால், அவர் நம்மைப் பாதுகாப்பவர் என்றால், அந்த வேலையை அவர் சரியாகச் செய்யலாமே! நாம் தினமும் அவரிடம், 'என்னைக் காப்பாற்று!' என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா? கடவுள் தம்மிடம் செபிப்பவர்களைப் பாதுகாக்கிறார், செபிக்காதவர்களை அழிக்கின்றார் என்றால், அவரின் கடவுள் குணம் நம் செபத்தால் வரையறை செய்யப்பட்டதா? தம்மைப் புகழாதவர்களை அவர் பழிவாங்குகின்றார் என்றால், மனிதரைப் போலத்தானே அவரும் செயல்படுகிறார். இல்லையா? நம் வாழ்வில் நடக்கும் எல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. அப்படி இருக்க நம் செபம் நம் வாழ்வின் போக்கை எப்படி மாற்ற முடியும்? செபிப்பது என்றால், எப்படி செபிப்பது? திருஅவை வரையறுத்துக் கொடுத்த செபங்கள் வழியாகவா? அல்லது நானாக என் மனத்தின் ஆழத்திலிருந்தா? அமைதியாக செபிப்பது சரியா? சத்தம் போட்டு செபிப்பது சரியா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால், நான் ஏன் ஆலயத்திற்கு வந்து செபிக்க வேண்டும்? என் வீட்டிலும், நான் பயணம் செய்யுமிடத்திலும், பணி செய்யும் இடத்திலும் இயல்பாக செய்யும் செபத்தை அவர் கேட்க மாட்டாரா?

நிற்க.

விடைகளை விட கேள்விகளே நிறைய இருப்பது போலத் தோன்றினாலும், இன்றைய இறைவாhர்த்தை வழிபாடு சொல்லும் சுருக்கமான விடைகள் இரண்டு:

ஒன்று: இறைவேண்டல் அல்லது செபம் என்பது ஒரு உறவு. இறைவனைத் தந்தையாகவும், நம்மையே மகனாகவும், மகளாகவும் பாவித்து ஒருவர் மற்றவரோடு பேசிக் கொள்ளும் உரையாடல் தளமே செபம்.

இரண்டு: சிரிப்பு, சிந்தனை போன்ற உணர்வுகள் எப்படி மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானதோ, அப்படியே செபமும் மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானது. கோழிகள் செபம் செய்வதாகவோ, நாய்க்குட்டிகள் முழங்கால்படியிட்டு இறைவேண்டல் செய்வதாகவோ நாம் பார்த்ததில்லை. ஏனெனில் அவை தங்களின் வரையறையை (லிமிட்) அனுபவிக்க முடியாது. நம்மால் மட்டுமே நம் வரையறையை அனுபவிக்க முடியும். நம்மால் நம் வரையறையை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அந்த வரையறையைக் கடந்து சிந்திக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, நான் ஒருவரிடம் 1 லட்சம் கடன் பட்டிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதை திருப்பிச் செலுத்த இன்றே கடைசி நாள். ஆனால் என்னிடம் இன்று வெறும் 10 ரூபாய் மட்டுமே இருக்கின்றது. இந்த 10 ரூபாய்க்கு மேல் என்னால் ஒரு ரூபாய் கூட இன்று புரட்ட முடியாது என்பது என் வரையறை அனுபவம். அதே வேளையில், இன்று நான் கடனைத் திரும்ப செலுத்தாததால் நாளை நான் சிறைக்கு அனுப்பப்படுவேன் என்று, நாளை நடப்பதை இன்றே என்னால் சிந்திக்க முடியும். என் வரையறையைக் கடந்து சிந்திக்க என்னால் முடியும்போது, நான் என்னை அறியாமாலே என் மனத்தை இறைவனிடம் எழுப்புகின்றேன். இதுவே இறைவேண்டல்.

மெம்ரே என்ற இடத்தின் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமை மூன்று மனிதர்கள் சந்தித்ததை கடந்த ஞாயிறன்று வாசிக்கக் கேட்டோம். அந்த நிகழ்வின் தொடர்ச்சியே இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:20-32). ஆபிரகாமைச் சந்தித்த மனிதர்கள் நேராக சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர். அந்த இரண்டு நகரங்களிலும் பாவம், குறிப்பாக பாலியல் பிறழ்வு பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க்கொண்டிருக்க, சோதோம்-கொமோரா அழிவைப் பற்றி கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும், சோதோம்-கொமோரா நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து பேசுவதுமே இன்றைய முதல் வாசகம்.

மூன்று தூதர்கள் ஆபிரகாமின் இல்லத்திற்கு வந்திருந்தாலும் (காண். 18:2), சோதோம்-கொமோரா நகரங்களை நோக்கிச் சென்ற தூதர்கள் இரண்டுபேர் (காண். 19:1) மட்டுமே. மூன்றாம் நபராகிய கடவுளே அல்லது அவரின் தூதரே இப்போது ஆபிராமுடன் உரையாடுபவர். ஆபிரகாம் நீதிமானாகவும், நேர்மையாளராகவும் இருந்ததால், கடவுள் தாம் செய்யவிருப்பதை அவருக்கு வெளிப்படுத்துகின்றார் (காண். 18:19). ஆபிரகாம் இறைவன் திருமுன் நின்று கொண்டிருப்பது அவரின் பரிந்து பேசும் செயலையும், இறைவேண்டலையும் அடையாளப்படுத்துகிறது.

'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?' என்று தொடங்குகிறது ஆபிரகாமின் உரையாடல். இந்தக் கேள்வியின் பின்புலத்தில் இருப்பது முதல் ஏற்பாட்டு தோரா நூல்களின் இறையியல். 'தீயவர்கள் அழிவார்கள். நீதிமான்கள் வாழ்வார்கள்' என்றும் 'தீயவர்களை அழிக்கும் கடவுள் நீதிமான்களை அழிக்க மாட்டார்' என்பதே அந்த இறையியல். ஆக, பாவம் செய்தால் அழிவு. நீதியாக நடந்தால் வாழ்வு. இந்தப் பின்புலத்தில் 50 நீதிமான்கள், 45 நீதிமான்கள், 40 நீதிமான்கள், 30 நீதிமான்கள், 20 நீதிமான்கள், 10 நீதிமான்கள் இருந்தாலும் அந்நகரங்களை அழித்துவிடுவீரோ என்று பேரம் பேசுகின்றார் ஆபிரகாம். '10 நீதிமான்கள் இருந்தால்கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன்' என வாக்குறுதி தருகின்றார் இறைவன்.

ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆனால், ஆபிரகாமின் செபம் கடவுளின் மனத்தை மாற்றவில்லை. நகரங்களை அழிப்பதற்காக தூதர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். 10 நீதிமான்கள் கூட அந்நகரங்களில் இல்லை என்பதைக் காட்டவே இந்நிகழ்வு எழுதப்பட்டது போல இருக்கிறது.

ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று இறைவனிடம் பரிந்து பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டுவிட்டது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 2:12-14). 'கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு' பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இறந்தவர்கள், அவரோடு உயிர்பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, 'இறப்பு', 'கடன் பத்திரம்' என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும் மனிதருக்கும் நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார்.

இறப்பு என்பது ஒரு திரை. ஏனெனில் அந்தத் திரைக்குப் பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கிறிஸ்துவை அறிந்தவர்கள் அவரோடு இறப்பதால், அவர் உயிர்ப்பைக் கண்டுகொண்டதுபோல இவர்களும் கண்டுகொள்வார்கள். அதுபோல, கடன் பத்திரம் என்பது ஒப்பந்த விதிகள் கொண்டது. ஒப்பந்தம் கடவுள்-மனித உறவுக்கு நடுவே திரையாக இருக்கின்றது. கிறிஸ்து நம் குற்றங்களை மன்னித்ததால் அந்த கடன் பத்திரம் கிழிக்கப்பட்டு திரை அகற்றப்படுகிறது.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டில் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நின்ற திரை கிறிஸ்து வழியாக கிழிக்கப்பட்டதால்தான், நம்மால் கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்க முடிகிறது.

'தந்தையே' எனக் கடவுளை அழைத்து அவரோடு உரையாடுதல் பற்றியும், அந்த உரையாடலுக்குத் தேவையான காரணிகள் பற்றியும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 11:1-13). இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக உள்ளது: (அ) ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம் (11:2-4), (ஆ) வெட்கமில்லாத நண்பர் பற்றிய உவமை (11:5-8), மற்றும் (இ) கடவுள் நம் செபங்களைக் கேட்கிறார் என்ற வாக்குறுதி (11:9-13).

இயேசு தன் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக் கொடுக்கும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக (மத் 6:9-13) இருக்கிறது. ஆனால், லூக்காவில் அப்படி இல்லை. இயேசுவை 'இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பவராக' (11:1) முன்வைத்து, அந்த இறைவேண்டலின் தொடர்ச்சியாக அவர் தன் சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுப்பதாக எழுதுகின்றார் லூக்கா. 'எங்கள்,' 'விண்ணகத்திலிருக்கும்,' 'உம் திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக,' 'எங்களைத் தீமையிலிருந்து விடுவித்தருளும்' என்னும் சொல்லாடல்கள் லூக்கா எழுதும் செபத்தில் இல்லை. இரண்டு புகழ்ச்சி ('தூயது உம் பெயர்,' 'உமது ஆட்சி வருக,' மூன்று விண்ணப்பம் ('உணவு,' 'மன்னிப்பு,' 'விடுதலை') என இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கிறது லூக்காவின் செபம். இறைவனின் மேன்மையை அறிக்கையிடுவதும், அவரிடம் நம் உடல், உள்ள நலனுக்காக வேண்டுவதாகவும் இருக்கின்றது இச் செபம்.

செபத்தைக் கற்றுக்கொடுத்த இயேசு, தொடர்ந்து ஓர் உவமையைச் சொல்கின்றார். இரண்டு நண்பர்கள். ஒரு நண்பருக்கு அப்பம் தேவையாக இருக்கின்றது. அதைக் கடனாகப் பெறுவதற்காக மற்ற நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். முதலில் எழ மறுக்கும் அந்நண்பர், இந்நண்பரின் விடாத தட்டுதலால், 'நட்பின் பொருட்டு அல்ல, மாறாக, தொல்லையின் பொருட்டு அப்பங்களைக் கடன் கொடுக்கிறார்!' (11:8). இங்கே நாம் பார்க்க வேண்டிய ஒரு கிரேக்க வார்த்தை 'அநைடெய்யா'. இதை 'விடாமுயற்சி,' 'துணிச்சல்,' 'வெட்கத்தை விட்டு' என மொழிபெயர்க்கலாம். இந்த உவமையில் 'வெட்கத்தை இழந்த' நண்பர் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருப்பவரே. நாளை இந்த நண்பரை அவர் வெளியில் சந்திக்கும்போது எந்த முகத்துடன் அவரைச் சந்திப்பார்? தன் தூக்கம் மற்றும் சுகத்திற்காக தன் நட்பை அவர் விட்டுக் கொடுத்தது ஏன்?

இந்த உவமையை மட்டும் சொல்லிவிட்டு அது தரும் செய்தியைச் சொல்லாமல் விடுகின்றார் இயேசு.

நண்பர்கள் தங்கள் மேலான நட்பை மறுதலித்தாலும் இறைவன் தன்னிடம் கேட்கும் பிள்ளைகளை மறுதலிக்காதவர் என்பதே பாடம். ஆக, நட்பையும் மிஞ்சுவது இறைவனின் உறவு. நண்பர்கூட உறங்கி விடுவார். ஆனால், 'இஸ்ரயேலைக் காக்கும் இறைவன் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதுமில்லை' (திபா 121:4).

மேற்காணும் உவமை, 'விடாமுயற்சிக்கான' எடுத்துக்காட்டாக இருந்தாலும், தொடர்ந்து இயேசு விடாமுயற்சி பற்றி பேசுகின்றார்: 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' எனச் சொல்லும் இயேசு, 'விடாமுயற்சியுடன்' கேட்கவும், தேடவும், தட்டவும் அழைக்கின்றார்.

அடுத்ததாக, கடவுள் நம் செபங்களைக் கேட்டு, நாம் கேட்பதை நமக்கு அருள்கிறார் எனத் தொடர்கின்றார் இயேசு. 'உங்கள் தந்தை மீனுக்குப் பதிலாக பாம்பையும், முட்டைக்குப் பதிலாக தேளையும் கொடுப்பாரா?' எனக் கேட்கும் இயேசு, 'தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்' என்று சுட்டிக்காட்டி, தன் தந்தையை நல்லவராகவும், நற்கொடைகள் அளிப்பவராகவும் முன் நிறுத்துகின்றார். எல்லா நற்கொடைகளிலும் மேலாக இருக்கின்ற 'தூய ஆவியானவரை' கொடையாக அளிப்பார் வானகத் தந்தை.

இவ்வாறாக, 'தந்தையே' என கடவுளை அழைக்கக் கற்றுத் தரும் இயேசு, அந்த அழைப்பில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியையும், அந்த அழைப்பின் கொடையாகிய தூய ஆவியையும் பற்றிச் சொல்கின்றார்.

நட்பு செய்ய முடியாததை செபம் செய்து முடிக்கிறது. நட்புக்காக திறக்காத கதவு நண்பனின் விடாமுயற்சிக்காகத் திறக்கிறது. நட்பை மிஞ்சுகிறது செபம். தந்தையின் விரலை எட்டித் தொட நாம் கொடுக்கும் குரலே செபம்.

நாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை என்ன?
1. இறைவேண்டல் என்பது ஓர் உறவு
மனிதர்கள் நாம் ஒருவர் மற்றவரோடு உறவு கொள்ள படைக்கப்பட்டாலும், பல நேரங்களில் நம் உறவு நம் வரையறையாக இருக்கிறது. நம் உறவைவிட நாம் மேலெழும்பிச் செல்ல நினைத்தாலும் நம்மால் முடிவதில்லை. மற்றொரு பக்கம், நாம் நம்பியிருக்கும் உறவுகள் நமக்குப் பல நேரங்களில் கை கொடுப்பதில்லை. நம்மை நம்பியிருக்கும் உறவுகளுக்கு நாம் கைகொடுப்பதில்லை. இதில் யாரும் மற்றவர்களைக் குறை சொல்லத் தேவையில்லை. ஏனெனில் நாம் எல்லாருமே வரையறைக்குட்பட்டவர்களே. ஆக, வரையறைக்குட்படாதவரின் உறவுதான் செபத்தின் அடித்தளம். இந்த உறவுக்காரர் என்னும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதைத்தான் விளக்குகிறது இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும். தன் உள்ளத்தில் இருப்பதை தன் பணியாளர் ஆபிரகாமுடன் பகிர்ந்து கொள்கிறார் இறைவன். தன் பிள்ளைகள் தட்டியவுடன் கதவைத் திறந்து அப்பம் அளிக்கின்றார் இறைவன். இறைவன் என் தந்தை. அவருக்கும் எனக்கும் உள்ள உறவே செபம். தங்கள் வரையறையை உணர்ந்தவர்களும், கடவுளை தந்தை என ஏற்றுக்கொள்பவர்களும் மட்டுமே செபிக்க முடியும்.

2. செபம் என்பது மந்திரக்கோல் அல்ல!
செபம் என்பது அலாவுதீனின் அற்புத விளக்கோ, அலிபாபா குகை வாசலோ, மாயவித்தைக்காரனின் கோலோ அல்ல! செபத்தால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என நினைப்பது சால்பன்று. பிள்ளைக்குரிய திறந்த மனம் செபத்தில் மிக அவசியம். 'எனக்கு அது வேண்டும், இது வேண்டும்' என நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கின்றன. ஆனால், அவர்கள் கேட்டது அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நம்மோடு அவர்கள் உறவை முறித்துக்கொள்வதில்லை. வயது வந்தவுடன் சிலர் முறித்துக்கொள்கிறார்கள்! குழந்தைகளாக இருக்கும் வரை நம்மிடம் 'சார்பு எண்ணம்' (டிபென்டன்சி) மேலோங்கி இருக்கிறது. இந்த உணர்வுதான் நமக்கு திறந்த மனத்தையும் தருகின்றது. செபத்தில் நாம் எதைக் கேட்டாலும் நம்மிடம் இந்த உள்ளமே இருக்க வேண்டும். அடுத்ததாக, இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் என்பது மந்திரம் அல்ல. 100 தடவை இதை எழுதினால், அல்லது சொன்னால் நான் விரும்பியது கிடைக்கும் என நினைத்தல் கூடாது. இந்த செபம் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை நமக்கு நினைவுபடுத்துகிறது. அவ்வளவுதான்!

3. கேளுங்கள் - தேடுங்கள் - தட்டுங்கள்
நம் கடவுள் கொடுப்பவர், கண்டடையச் செய்பவர், திறப்பவர். இந்த வார்த்தைகள் திறந்த காசோலை போன்றவை. நாம் இதை கருத்தாய்ப் பொருள் கொள்ளல் வேண்டும். கடவுள் நம் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்று இயேசு சொல்கிறாரே தவிர, நாம் கேட்கும் அனைத்தும் கிடைக்கும் என்று நமக்கு உத்திரவாதம் தரவில்லை. நம் கேட்டல், தேடல், தட்டுதல் அனைத்தும் மேலான ஒரு மதிப்பீட்டிற்காக - இறையாட்சிக்காக - இருத்தல் நலம் (காண். 12:31-32). நாம் மட்டுமல்ல. கடவுளும் நம்மிடம் கேட்கின்றார். நம்மைத் தேடி வருகின்றார். நம்மைத் தட்டுகின்றார். நாம் அவரின் கேட்டலுக்கும், தேடலுக்கும், தட்டுதலுக்கும் பதில் தருதல் அவசியம்.

4. விடாமுயற்சி
முதல் வாசகத்தில் ஆபிரகாம் சோதோம்-கொமோரா நகரங்களுக்காகப் பரிந்து பேசுவதில் மனந்தளரவில்லை. இந்த மனந்தளரா நிலையைத் தான் நண்பர்கள் உவமையிலும், கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்னும் கட்டளை வழியாகவும் சொல்கின்றார். இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் இந்த கொடுக்கல்-வாங்கலை நமக்கு நாமே ஏன் ஒப்பீடு செய்து பார்க்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டே சோம்பித்திரியும் என் மனத்தோடோ, அல்லது விடமுடியாத ஒரு பழக்கத்தோடோ (குடிப்பழக்கம்), 'இல்லை! நான் இனிமேல் சுறுசுறுப்பாக இருப்பேன். குடிக்க மாட்டேன்' என்று சொல்லிக்கொண்டே வந்தால் அந்த மனம் நம் தொந்தரவின் பொருட்டாவது மாறும் என்பது நிச்சயம். விடாமுயற்சி இறைவேண்டலில் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் இருத்தல் அவசியம்.

5. தந்தை உள்ளம்

மண்ணுலகின் தந்தையரே தம் பிள்ளைகள் நன்மை கேட்டால் தீமை செய்யத் துணியாதபோது வானகத்தந்தை இன்னும் எவ்வளவு மேன்மையானவராக இருப்பார்? வானகத் தந்தையின் தாராள உள்ளம் இன்று நமக்குக் கற்றுக்கொடுப்பது 'உறவுகளில் தாராள மனம்.' மற்றொரு வகையில் நாம் வேண்டும் செபங்களும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலிகளும், மேற்கொள்ளும் திருயாத்திரைகளும் நம் எண்ணங்களை நிறைவு செய்யாதபோது 'வானகத் தந்தை' மறுத்துவிட்டார் என்று இறைவன்மேல் கோபமாக மாறுகின்றதா? ஏமாற்றமாக உருவெடுக்கின்றதா? அல்லது இறைவன் நாம் கேட்கும் நலன்களைவிட மேலானதைத் தருவார் என்ற நம்பிக்கையை உதிக்கச் செய்கிறதா? இறைவேண்டலில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் பரந்த உள்ளத்தோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளலாமே!

இறுதியாக, 'இதுதான் நான்!' என்று இறைவனின் பிரசன்னத்தில் அமர்ந்து, என் இயல்பை, என்னால் இயல்பவற்றை, இயலாதவற்றை அவரிடம் கொண்டுவருவதும், 'அவர் என்னைப் பார்க்கிறார்,' 'நான் அவரைப் பார்க்கிறேன்' என்று ஒருவர் மற்றவரின் கண்கள் பணிப்பதும், எழுவதும்தான் செபம். என் வரையறை இதுதான் என்று என் வாழ்க்கை சொல்ல, அந்த கையறு நிலையிலிருந்து எட்டி என் தந்தையின் விரல் தொட நான் எழுப்பும் என் ஏக்கப் பெருமூச்சே செபம்! விரல் தொடும் குரல் செபம்! அந்த விரல் மேல் நோக்கி இருந்தாலும் கீழ் நோக்கி இருந்தாலும்!

செபத்தின் அரிச்சுவடி

ஆசைகள், அச்சங்கள், ஏக்கங்கள், கனவுகள், திட்டங்கள், இவை அனைத்தும், மனிதராய்ப் பிறந்த நம் அனைவரின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட உண்மைகள். மத நம்பிக்கை கொண்டவர்கள், இவற்றை, இறைவனிடம் விண்ணப்பங்களாக அனுப்ப முயல்வர். இந்த விண்ணப்பங்களை நாம் பொதுவாக செபங்கள் என்று அழைக்கிறோம். செபிப்பது, அனைவருக்கும், இயல்பான, எளிதான அனுபவம் அல்ல. இதில் போராட்டங்கள் பல நிகழும். குறிப்பாக, நாம் எழுப்பும் விண்ணப்பங்களுக்கு எதிர்பார்த்த பதில்கள் கிடைக்காதபோது, பல்வேறு கேள்விகள் நம்மைச் சூழும். ஏன் செபிப்பது? எதற்காக செபிப்பது? எப்போது, எங்கே, எப்படி செபிப்பது?... என்ற கேள்விகள் நம்மில் எழுகின்றன. செபத்தைப் பற்றிய கேள்விகளுக்கு, குழந்தைகள், தங்களுக்கே உரிய வழியில் சில பதில்கள் தருவதை நாம் காணமுடியும். ஒரு தாய், தன் குழந்தைகளுடன் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிடும் முன் அவர்களது ஆறு வயது சிறுவன், தான் செபிக்க விரும்புவதாகச் சொன்னான். பின் கண்களை மூடி, செபத்தை ஆரம்பித்தான். "இறைவா, நீர் நல்லவர், உம்மால் எல்லாம் செய்யமுடியும். நீர் எங்களுக்குத் தரப்போகும் உணவுக்காக நன்றி. உணவுக்குப் பின் அம்மா வாங்கித் தரப்போகும் ஐஸ் க்ரீமுக்கு இன்னும் அதிக நன்றி... ஆமென்" என்று செபித்து முடித்தான். ஐஸ் க்ரீம் கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அவன் இந்த செபத்தை கொஞ்சம் சப்தமாகவே சொன்னதால், அந்த உணவு விடுதியில் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களும் சிறுவனின் செபத்தைக் கேட்டு சிரித்தனர்.

அடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர், "ஹும்... இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு, செபம் சொல்லக்கூடத் தெரியல. கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு ஒரு செபமா?" என்று உரத்தக் குரலில் சலித்துக்கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் சிறுவனின் முகம் வாடியது. "அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டான். அம்மா அவனை அணைத்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று தேற்ற முயன்றார்.

மற்றொரு மேசையிலிருந்து இன்னொரு வயதானப் பெண்மணி அந்தக் குழந்தையிடம் வந்து, கண்களைச் சிமிட்டி, "நான் கேட்ட செபங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல செபம்" என்றார். பின்னர், தன் குரலைத் தாழ்த்தி, அச்சிறுவனிடம், "பாவம், அந்தத் தாத்தா. அவர் கடவுளிடம் இதுவரை ஐஸ் க்ரீம் கேட்டதேயில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவது, மனசுக்கு ரொம்ப நல்லது" என்று சொல்லிச் சென்றார்.

சிறுவன் முகம் மலர்ந்தான். தன் உணவை முடித்தான். அவன் வேண்டிக் கொண்டதைப் போலவே, உணவு முடிந்ததும், அம்மா ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார். சிறுவன் அந்த ஐஸ் க்ரீம் கிண்ணத்தை வாங்கியதும், தன் செபத்தைக் குறை கூறிய அந்தத் தாத்தா இருந்த மேசைக்கு எடுத்துச் சென்றான். பெரிய புன்முறுவலுடன், "தாத்தா, இது உங்களுக்கு. இதைச் சாப்பிட்டால், மனசுக்கு நல்லது" என்று சொல்லி, தாத்தாவுக்கு முன் ஐஸ் க்ரீமை வைத்துவிட்டுத் திரும்பிவந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

எதைப்பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம் என்று சொல்லித் தருவதற்கு, குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள் என்பதை மறுக்கமுடியாது. ஐஸ் க்ரீம் வேண்டும் என்ற ‘சில்லறை’த்தனமான வேண்டுதல்களையும் கேட்கலாம்; உலகில் நீதியும், அமைதியும் நிலவவேண்டும் என்ற உன்னதமான வேண்டுதல்களையும் கேட்கலாம். கேட்பது, சில்லறைத்தனமானதா, அல்லது, உன்னதமானதா என்பதை அந்த விண்ணப்பத்தை எழுப்பும் உள்ளம்தான் தீர்மானிக்க வேண்டும்.

செபிக்கக் கற்றுத்தாருங்கள் என்று தன்னை அணுகிய சீடருக்கு, செபத்தைப்பற்றிய நீண்டதொரு இறையியல் விளக்கத்தை இயேசு சொல்லித் தரவில்லை. அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று. இயேசு சொல்லித் தந்த ஒரே செபமான 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற செபம், இன்றைய நற்செய்தியாக (லூக்கா 11: 1-13) நம்மை வந்தடைந்துள்ளது. இச்செபத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்தால், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். கடவுளின் அரசு வரவேண்டும் என்ற உன்னதமான கனவுடன் ஆரம்பமாகும் இச்செபத்தில், எங்களுக்கு உணவைத் தாரும், எங்கள் குற்றங்களை மன்னித்தருளும், மன்னிப்பது எப்படி என்று சொல்லித் தாரும், தீமைகளிலிருந்து காத்தருளும்... என்று, இயேசு சொல்லித்தரும் பல விண்ணப்பங்கள், வாழ்க்கைக்குத் தேவையான, மிக, மிக எளிமையான, விண்ணப்பங்கள். எளிமையையும், உன்னதத்தையும் இணைத்து செபிக்க, நமக்கு குழந்தை மனம் தேவை.

இன்றைய முதல் வாசகம் (தொடக்க நூல் 18: 20-32) செபத்தின் வேறு சில அம்சங்களை உணர்த்துகிறது. செபம் என்பது, கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, வாக்குவாதமாகவும் மாறும். சோதோம் நகரைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். 50 நீதிமான்கள் இருந்தால் இந்த நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45, 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்கு இறைவனை இழுத்து வருகிறார், ஆபிரகாம். சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு நகரைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆபிரகாமின் ஆதங்கம், இதை ஒரு செபமாக மாற்றுகிறது.

நல்லதொன்று நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆபிரகாம் நச்சரிக்கிறார். இறைவனும், பொறுமையாய், அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தப் பேரம் பேசும் போட்டியில், யார் வென்றது, யார் பெரியவர், கடவுளா, ஆபிரகாமா? என்ற கேள்விகளெல்லாம் அர்த்தமற்றவை. நல்லது நடக்கவேண்டுமென மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அவை, செப முயற்சிகளாய் இருந்தாலும் சரி, பிற முயற்சிகளாய் இருந்தாலும் சரி, அந்த நல்லெண்ணமே அம்முயற்சிகளைச் செபமாக மாற்றும் வலிமை பெற்றவை. தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தி ஆபிரகாம் மேற்கொள்ளும் இந்த செபத்தை, பரிந்துரை செபம் (Intercessory Prayer) என்றழைக்கிறோம்.

நீதிமான்களை முன்னிறுத்தி ஆபிரகாம் இப்பரிந்துரை செபத்தை மேற்கொள்வது, மேலும் ஓர் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தீமைகளை இவ்வுலகில் கட்டவிழ்த்துவிடும் சக்திகள் வெற்றிபெறுவதுபோல் தோன்றினாலும், அவற்றை முறியடிக்க, ஒரு சில நீதிமான்களின் நன்மைத்தனம் போதும் என்ற நம்பிக்கையை, ஆபிரகாமின் பரிந்துரை செபம் நமக்கு உணர்த்துகிறது.

பரிந்துரை செபம், இயேசு கூறும் உவமையிலும் இடம் பெறுகிறது. நள்ளிரவில் உதவிகேட்டு வந்த நண்பர், தன்னுடைய பசியைத் தீர்க்க தன் நண்பர் வீட்டின் கதவைத் தட்டவில்லை. மாறாக, தன்னை நம்பி வந்த மற்றொரு நண்பரின் பசியைப் போக்கவே அந்த அகால நேரத்தில், அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார். இந்த உவமைக்கு முன்னர் இயேசு சொல்லித் தந்த அந்த அற்புத செபத்துடன் இந்த நண்பரின் முயற்சியை இணைத்துச் சிந்திக்கலாம். அந்த அழகிய செபத்தில், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தாரும்' என்று வேண்டுகிறோம். 'என்னுடைய உணவை எனக்குத் தாரும்' என்ற தன்னல வேண்டுதல் அல்ல இது. இது ஒரு சமுதாய வேண்டுதல். அந்த வேண்டுதலின் ஓர் எடுத்துக்காட்டாக, தன் நண்பரின் உணவுத் தேவையை நிறைவேற்ற, நள்ளிரவு என்றும் பாராது, உதவி கேட்டுச் செல்லும் ஒருவரை இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார்.

நமது சொந்தத் தேவைகளை நிறைவு செய்ய, பிறரிடம் உதவிகேட்டுச் செல்வது கடினம் என்றாலும், நமது தேவை, நம்மை உந்தித் தள்ளும். ஆனால், அடுத்தவர் தேவைக்கென பிறரது உதவியைத் தேடிச் செல்வதற்கு, கூடுதல் முயற்சி தேவை. அதுவும், மூடப்பட்ட கதவு, உதவி தர மறுக்கும் அடுத்த வீட்டுக்காரர் என்ற தடைகளையெல்லாம் தாண்டி, இந்த உதவியைக் கேட்பதற்கு, மிக ஆழமான உறுதி தேவை.

அருளாளர் அன்னை தெரேசா நம் நினைவுக்கு வருகிறார். அவர், பிறரிடம் உதவி கேட்டுச் சென்றதெல்லாம், வறியோரை, நோயுற்றோரை வாழ வைப்பதற்கு. ஒருமுறை அவர் ஒரு கடை முதலாளியிடம் தன் பணிக்கென தர்மம் கேட்டு கையை நீட்டியபோது, அந்த முதலாளி, அன்னையின் கையில் எச்சில் துப்பினார். அன்னை அதை தன் உடையில் துடைத்துவிட்டு, கடை முதலாளியிடம் சொன்னார்: "எனக்கு நீங்கள் தந்த அந்தப் பரிசுக்கு நன்றி. இப்போது, என் மக்களுக்கு ஏதாவது தாருங்கள்" என்று, மீண்டும் அவரிடம் கையேந்தி நின்றாராம். அந்த முதலாளி, இதைக் கண்டு அதிர்ச்சியில் நிலை குலைந்து, மனம் வருந்தியதாகவும், அன்னைக்கு உதவி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

உலகில், ஒவ்வொரு நாளும், பல கோடி மக்கள் பசியோடு படுத்துறங்கச் செல்கின்றனர். அவர்கள் பசியைப் போக்க நாம் முயற்சிகள் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அடுத்தவர் பசியைப் போக்க நம்மிடம் ஒன்றும் இல்லாதபோதும், மனம் தளராது மற்றவர் உதவியை நம்மால் நாட முடிந்தால், இறை அரசு இவ்வுலகில் வருவது உறுதி.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் வயிறார உண்ணும் அளவுக்கு இவ்வுலகில் உணவு ஒவ்வொரு நாளும் தயாராகிறது. ஆயினும், அந்த உணவைப் பகிர்ந்துகொள்ள மனமில்லாமல், நம்மில் பலர், மீதமுள்ள உணவை குப்பையில் எறிந்துவிட்டு, கதவுகளை மூடி, படுத்துவிடுகிறோம். குப்பையில் எறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னது, ஓர் எச்சரிக்கையாக இவ்வேளையில் ஒலிக்கிறது. "எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது..." (லூக்கா 11:7) என்று, காரண காரியங்களோடு, இவ்வுவமையில் சொல்லப்படும் மறுப்பை, பல வழிகளில் நாமும் சொல்லி, நம்மையே சமாதானப்படுத்தி, உறங்கியிருக்கிறோம்.

இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள மற்றோர் ஆபத்தையும் இங்கு சிந்திப்பது நல்லது. பகிர்ந்து தரவோ, அடுத்தவருக்கு உதவவோ நமக்கு மனமில்லை என்பதோடு நாம் நிறுத்திவிடாமல், நம் பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வகையில் நாம் சொல்வது, அவர்களுக்கும் தன்னலப் பாடங்களைச் சொல்லித் தர வாய்ப்பாக அமைகிறது.

பசியைப் போக்கும் முயற்சிகள் எடுக்கும் உலகம் ஒருபுறம். அந்த முயற்சிகளுக்குச் செவி கொடுக்காமல், கதவுகளை மூடும் உலகம் மறுபுறம். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நாம் செலவிடும் தொகையில் ஆயிரத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினால் போதும்... உலக மக்களின் பசியை முற்றிலும் துடைக்கலாம்... செல்வம் மிகுந்த நாடுகளில் செல்ல மிருகங்களின் உணவுக்கென செலவாகும் தொகையைக் கொண்டு, பல ஏழை நாடுகளில் மக்களின் பசியை நீக்கலாம்... இத்தகைய ஒப்புமைப் புள்ளிவிவரங்களை நாம் இன்று முழுவதும் பட்டியலிடமுடியும். அது நமது நோக்கமல்ல. இயேசு கூறும் இந்த உவமையில் நாம் யாராக வாழ்கிறோம்? அடுத்தவர் பசியைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா? பிறர் பசியைப் போக்கும் வாய்ப்புக்கள், நம் வாசல் கதவைத் தட்டினாலும், கதவை மூடிவிட்டு, உறங்கும் மனிதராக வாழ்கிறோமா? என்ற கேள்வியை ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வோம். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நாம் உறங்கிக் கொண்டிருந்தால், மற்றவர் தேவைகளை நிறைவேற்ற, மனக்கதவைத் திறந்து, மனிதராக முயல்வோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

செபிக்கும் மக்களாக வாழத் தயாரா?

செபம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் அங்கமாக இருக்கிறது. செபிக்கின்ற மனிதர்கள் இறைவனின் அருள்கொடைகளை நிறைவாகப் பெறுகின்றனர். புனித ஜான் மரிய வியான்னி "கடவுள் உலகை ஆளுகிறார். செபிக்க தெரிந்த மனிதர்கள் கடவுளை ஆளுகிறார்கள்" என்று கூறுகிறார். செபத்தால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. செபத்தின் வல்லமையால் இறைவனின் அளப்பெரிய அருளை நிறைவாகப் பெற முடியும். எனவே நாம் ஒவ்வொருவரும் செபிக்கின்ற மக்களாக வாழ முயற்சி செய்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் சோதம் கொமோரா மக்களுக்காக பரிந்துரை ஜெபம் செய்கிறார். ஒரு நீதிமானின் பொருட்டாவது அந்த நகரை அழிக்க வேண்டாம் என்று நம்பிக்கையோடு கடவுளின் மனதை மாற்றும் அளவுக்கு செபிக்கிறார். ஆனால் ஒரு நீதிமான் கூட இல்லாத காரணத்தினால் அந்த நகரானது அழிக்கப்படுகிறது.இப்பகுதி பரிந்துரை செபத்தின் வல்லமையை நமக்கு உணர்த்துகிறது. நாம் நமக்காக மட்டும் செபிக்காமல் பிறருக்காக செபிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இவ்வாசகம் நமக்குத் தருகிறது.

அதேபோல இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்" என்று கூறுகிறார். நம்முடைய செப வாழ்வு மேலோட்டமானதாக இல்லாமல், விடாமுயற்சியோடும்ஆழமான நம்பிக்கையோடும் இருக்கின்ற பொழுது கடவுளின் அளப்பரிய ஆசீர்வாதத்தை நிறைவாக பெற முடியும்.ஆனால் நாம் கேட்பதும் தேடுவதும் தட்டுவதும் கடவுளின் விருப்பதிற்கு ஏற்றதாக அமைவதே சிறந்த செபமாகும்.

இயேசு ஆண்டவர் தந்தையிடம் செபித்தார். அதனால் தான் அவருடைய பணிகளை சிறப்பாகவும் வல்லமையோடும் செய்ய இயன்றது. எனவே நாம் செப வாழ்வில் ஆழமாக வேரூன்ற வேண்டும்.

நம்முடைய வாழ்வில் தனி செபம், குடும்ப செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் எவ்வளவு உழைத்தாலும் கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்கிற பொழுது கடவுள் உழைப்பிற்கேற்ற பலனை பன்மடங்கு கொடுப்பார். அதற்கு உறுதியான நம்பிக்கையோடும், மன உறுதியோடும், கிடைக்கும் என்ற ஆழமான வேட்கையோடும், செபிக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவருமே செபிக்கின்ற மக்களாக வாழ முயற்சி செய்யும் போது கடவுளின் ஆற்றலை நிறைவாகப் பெற முடியும். ஆண்டவர் நமக்கு கொண்டு வந்த நற்செய்தி மதிப்பீடுகளை இன்னுமாக பிறருக்கு கொடுத்து நாமும் சாட்சியமாக மாற முடியும். எனவே செபத்தின் வழியாக இறைவனின் அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெறக்கூடியவர்களாக மாறுவோம். அதற்கு தேவையான அருளை மன உறுதியோடு வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் நம்பிக்கையோடு செபித்து ஆசீர்வாதத்தை நிரம்ப பெற்றிட அருளை தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு