புதையலைப் போல இறையரசைக் கண்டுபிடி..
ஒரு நடுநிலைப் பள்ளியிலே ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் கூற வேண்டும் என்று அறிவித்துக் கேள்விகள் கேட்டார். மாணவர்களும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தகுந்த முறையில் ஆம், இல்லை என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக ஒரு மாணவன் எழுந்தான். சார்! அரை மணி நேரம் கேள்வி கேட்டீங்க. நான் இப்போது ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். ஆம்! அல்லது இல்லை என்று பதில் சொல்வீர்களா என்றான் மாணவன். கேள் என்றார் ஆசிரியர்.
சார் இப்ப நீங்க குடிக்கிறதை நிறுத்திட்டீங்களா? என்றான். ஆம் என்றால் இதுவரை குடித்தார் என்றாகிவிடும். இல்லை என்றால் இன்னும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றாகிவிடும். எனவே ஆசிரியர் பதில் சொல்லத் தெரியாது திகைத்தார். பார்த்தீர்களா மாணவருடைய ஞானமுள்ள கேள்வியை! ஆனால் நாம் ஞானத்தோடு எதைத் தேட வேண்டும் எதற்கு ஆம் என்று பதில் கூற வேண்டும் என்பதற்காக இயேசு அழகாக புதையல், முத்து பற்றிய உவமைகள் தருகிறார். எதை எப்பொழுது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பவன்தான் ஞானி. அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் பற்றாது. ஞானியாகவும் இருக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் (1 அரச 3:5-12) கூறப்பட்ட சாலமோன் மன்னனை நோக்குங்கள். தாவீதுக்குப் பின் அவரது மகனான சாலமோன் அரியணை ஏற , ஆண்டவர் கனவில் தோன்றி, உனக்கு என்ன வேண்டும்? கேள் என்றார். பொன்னோ, பொருளோ எதிரிகளை வெற்றி கொள்ள படைபலமோ கேட்காமல் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை எது, தீமை எது என்று (1 அரச 3:9) பகுத்தறியவும் தேவையான ஞானத்தைக் கொடும் என்றார். எதை எப்பொழுது, எப்படிச் சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்ததால் சாலமோனை ஞானி என்று அழைக்கிறோம்.
இயேசு சொன்ன புதையல், விலையுயர்ந்த முத்து உவமைகளும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன. கூலிக்காரன் நிலத்தை உழும்போது புதையல் காண்கிறான். அதை மூடி மறைத்துவிட்டு தனக்குள்ளதெல்லாம் விற்றுப் புதையலைத் தனதாக்கிக் கொள்ள அந்த நிலத்தை வாங்குகிறான். விலையுயர்ந்த முத்தைக் கண்ட வியாபாரி அதை வாங்கத் தனக்குள்ளதெல்லாம் விற்றுவிடுகிறான். அதனை வாங்கிக் கொள்கிறான். இந்த இரண்டு உவமைகளும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் கருத்தில் வித்தியாசம் உண்டு. கூலிக்காரன் தற்செயலாகப் புதையலைக் காண்கிறான். அதைப் பெறப் புறப்பட்டவன் ஞானியாக மாறி இறையாட்சியின் பண்புகளைச் சிக்கெனப் பற்றிக் கொள்கிறான்.
ஆனால் வியாபாரியோ முத்துக்காகத் தேடுகிறார். தேடுதலின் முடிவாக அவர் முத்தை அடைகிறார். இருவரும் வித்தியாசமான வழிகளைப் பின்பற்றி இறையாட்சியை அடைகிறார்கள். பல ஆண்டுகள் தேடுதலுக்குப் பின் பவுல் அடிகள் தமாஸ்கு செல்லும் வழியில் இறையரசைக் காண்கிறார். நல்ல கள்ளன் சிலுவையில் ஒரு சில நிமிடங்களிலே இறையரசைக் கண்டான்.
இந்த இரண்டு உவமைகளும் தீர்க்கமான முடிவை எடுக்கும் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. புதையுண்டு கிடக்கும் புதையலைப் போல இறையரசைக் கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல் விலையுயர்ந்த முத்தைத் தேடுவது போல இறையரசை நாம் தேட வேண்டும். உழவனும், வியாபாரியும் உடனே செயல்படுகின்றனர். இவ்வாறு நாமும் செயல்பட வேண்டும்.
இன்று நாம் எதைத் தேடுகிறோம், எதற்கு முன் உரிமை கொடுக்கிறோம் என்பதைப் பரிசோதிக்க வேண்டும். களஞ்சியத்தைக் கட்டி கோதுமை சேர்த்து வைத்த அறிவு கெட்ட மதியீனனைப்போல் (லூக். 12:20) அல்ல நமது வாழ்வு. உயர்ந்த உன்னத வாழ்வான இறையரசு என்ற புதையலுக்காக, விலையுயர்ந்த முத்தாக உள்ள இறையரசுக்காக அழைக்கப் படுகிறோம்.
மரியாவை நோக்குங்கள். ஆம்! இல்லை என்று கூறக்கூடிய ஒரு நிர்ப்பந்த நிலை. கணவன் இன்றி நான் குழந்தைப் பெற முடியாது என்று நினைத்தால் இல்லை என்று பதில் கூறி இருக்கலாம். அதனால் உலக மீட்பரைத் தர மறுத்திருக்கலாம். ஆனால் உலகம் மகிழ ஆம் என்று இறையரசுக்கு அர்ப்பணித்தாள் மரியா. ஏனெனில் சரியாக விடையளிக்கத் இறைஞானம் கிடைத்தது. நாம் மரியா மூலமாகத் இறைஞானம் கிடைக்க செபிப்போம்.
மரியாள் ஆண்டவரை நோக்கிச் சொன்னது இதோ உமது அடிமை (லூக் 1:38) என்று. மரியா நம்மை நோக்கிச் சொல்வது அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா. 2:5).
யாருக்கு விண்ணரசு கிடைக்கும்?
நேர்மையாளர்களுக்கு மட்டுமே விண்ணரசு கிடைக்கும் என்பதை நற்செய்தி தெளிவாக்குகின்றது (மத் 13:49). நேர்மையாளர்கள் எனப்படுபவர் யார் என்பதற்கு மத் 25:31-40 விளக்கம் தருகின்றது. நேர்மை என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு உதவி செய்வதாகும்.
உண்மையான உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இதோ ஓர் உண்மை நிகழ்ச்சியின் வழியாக ஒரு விளக்கம்.
மதுரையிலிருந்து வெளிவரும் தினமலரில் (மே, 31,2005) வெளிவந்த செய்தி இது. உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவநாத் சிங். அவரின் மனைவி பெயர் புலாரி தேவி. இவர்களுக்கு ஒரு மகள். அந்த மகளுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயித்திருந்தார்கள். சிவநாத்சிங் டில்லியில் கட்டுமானப் பணியில் வேலை செய்துவந்தார். ஒரு நாள் அவர் சற்றும் எதிர்பாராத வேளையிலே சாலை விபத்தில் சிக்கினார். அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்கவில்லை. அவர், தான் இறப்பது உறுதி எனத் தெரிந்துகொண்டார்.
ஒரு நாள் டாக்டர் வேணுகோபாலைப் பக்கத்தில் அழைத்து இவ்வாறு கூறினார் : ஐயா, நான் எப்படியும் சாகப்போகின்றேன். என் கண்கள், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் என்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்துங்கள். அவர்களாவது பிழைக்கட்டும் என்றார். இந்த ஏழைத் தொழிலாளிக்கு இவ்வளவு நல்லகுணமா என்று வியந்தார் டாக்டர். பத்திரத்தில் கைரேகை வாங்கப்பட்டது. அடுத்த நாளே சிவநாத்சிங் இறந்து விட்டார். அவருடைய முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்பட்டன.
இந்தத் துயரச் சம்பவம் நடந்த மறுநாள், துணை ஜனாதிபதியை அலுவலக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் இருதயம் சரியாக வேலை செய்யவில்லை! அவருக்கு சிவநாத்தின் இருதயம் பொருத்தப்பட்டது! சில நாள்களுக்குப் பிறகு துணை ஜனாதிபதிக்கு இருதயத்தைக் கொடுத்தது யார் என்று தெரியவந்தது! எப்படியோ சிவநாத்தின் முகவரியைக் கண்டுபிடித்து, துணை ஜனாதிபதி சிவநாத்தின் பெண் திருமணத்திற்கு ஐந்து புடவைகளையும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணின் திருமணம் இனிதே நடந்தது. சிவநாத் ஒரு நேர்மையாளர்.
நாலுகாலு கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்!
நான்குபேர் தூக்கையிலே நித்தியத்திற்கும் தூக்கம்!
நித்தியத் தூக்கத்திற்குப் பிறகு நாம் எழுவோம்! எழும்போது நம்முன்னே மோட்சத்தையும், நரகத்தையும் (மத் 13:50) பார்ப்போம். அன்று நாம் விண்ணகத்துக்குள் நுழைவதும், நுழையாமலிருப்பதும் இன்று, இந்த மண்ணகத்திலே நாம் வாழும் வாழ்வைப் பொருத்திருக்கின்றது.
நம்மை நேர்மையாளர்களாக வாழவிடாமல் தடுப்பது எது? அறியாமை! இந்த அறியாமையை நம்மிடமிருந்து போக்கி, எது சரி? எது தவறு? எது நீதி? எது அநீதி? எது இவ்வுலகைச் சார்ந்தது? எது மறுவுலகைச் சார்ந்தது? எது பாவம்? எது புண்ணியம்? என்பதைச் சுட்டிக்காட்டி, நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்க (இரண்டாம் வாசகம்), சாலமோன் பெற்ற ஞானத்தை நமக்குத் தர (முதல் வாசகம்) என்றும் தூய ஆவியார் தயாராக இருக்கின்றார். கேட்பவர்களுக்குத் தூய ஆவியார் உதவி செய்வார் (லூக் 11:9-13).
மேலும் அறிவோம்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் : 461).
பொருள் : எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அந்தச் செயலால் உண்டாகும் கேட்டையும் ஆக்கத்தையும் தொடர்ந்து வரும் பயனையும் நன்றாக ஆராய்ந்து தொடங்க வேண்டும் .
கிறிஸ்து என்னும் முத்து..
கடவுள் ஒரு பக்தருடைய வீட்டுக்குச் சென்று மூன்று வரங்கள் கேட்கச் சொன்னார். பக்தர் தனது வீட்டிலிருந்த மர நாற்காலியைத் தங்க நாற்காலியாக மாற்றச் சொன்னார். கடவுள் தமது ஆள்காட்டி விரலை நீட்டி நாற்காலியைத் தங்க நாற்காலியாக மாற்றினார். பக்தர் கடவுளிடம் தன் வீட்டிலிருந்த மேஜையையும் தங்க மேழையாக மாற்றும்படி இரண்டாம் வரம் கேட்டார். கடவுளும் தமது ஆள் காட்டி விரலை நீட்டி மேஜையையும் தங்க மேஜையாக மாற்றினார். மூன்றாவது வரம் என்ன வேண்டும் என்று கடவுள் பக்தரைக் கேட்டார். பக்தர் கடவுளிடம், *கடவுளே! உங்கள் ஆள்காட்டி விரலைக் கொடுங்கள்" என்றார். பக்தருடைய பேராசைக்கு அளவே இல்லை,
நாம் கடவுளிடம் கேட்கும் வரங்கள் எல்லாமே இம்மை நலன்களே. எடுத்துக்காட்டாக, நல்ல வேலை, நல்ல மனைவி மக்கள், நிலபுலம், நீடிய ஆயுள் போன்றவை. ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் கடவுளிடம் நன்மை தீமையைப் பகுத்தறிய தேவையான ஞானத்தைக் கேட்கிறார். கடவுள் சாலமோனுக்கு ஞானத்தையும் அத்துடன் மற்ற இம்மை நலன்களையும் அளிக்கின்றார்
கல்வியை நாம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பெறமுடியும். ஆனால் ஞானம் என்பது தூய ஆவியாரின் முதற் கொடையாகும். செல்வத்துள் தலைசிறந்த செல்வம் கேட்டறியும் செல்வம் என்றார் வள்ளுவர்,
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411)
கடவுள் தமக்கு வழங்கும் பெரிய செல்வம் அவரது வார்த்தையைக் கேட்டுப் பெறுகின்ற ஞானமாகிய செல்வம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விண்ணரசை புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகிறார். இந்தச் செல்வத்தைப் பெறுவதற்காக மற்றச் செல்வங்களை விட்டுவிட ஒருவர் தயாராக இருத்தல் வேண்டும். அதுவே உண்மை ஞானம்!
விண்ணரசு என்பது ஒரு பொருள் அல்ல; மாறாக, அது ஓர் ஆள்; அந்த ஆள் இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்து கூறுகிறார் “இறையாட்சி கண்ணுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ இங்கோ அல்லது அதோ அங்கோ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவில் செயல்படுகிறது” (லூக் 17:20-21), மக்கள் நடுவில் நிற்பவர், செயலாற்றுபவர் கிறிஸ்துவே. "அவரே கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1:24).
கிறிஸ்து எல்லாச் செல்வங்களையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். கிறிஸ்துவை உடைமையாக்கிக் கொள்ள மற்ற அனைத்தையும் குப்பையென உதறித் தள்ளிவிட்டார் புனித பவுல், "கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். .... கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8). கிறிஸ்துவுக்காக அவருடைய சீடர்கள் அனைத்தையும் துறந்தனர். "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" (மாற் 10:28) என்று பேதுருவால் கூற முடித்தது.
காதல் ஒருவரை பைத்தியமாக்குகிறது. ஒரு காதலன் தன் காதலிக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: “நான் அமாவாசையாக இருந்தேன், என்னைப் பெளர்ணமி ஆக்கினாய், நான் அஃறிணையாக இருந்தேன், என்னை உயர்திணை ஆக்கினாய். நான் உயிரற்ற மெய்யாய் இருந்தேன், என்னை உயிர்மெய் ஆக்கினாய். நான் தெளிவாக இருந்தேன், என்னைப் பைத்தியமாக்கினாய் மனிதக் காதல் மட்டுமல்ல, தெய்வீகக் காதலும் ஒருவரைப் பைத்தியமாக்குகிறது. திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்" ( 1 கொரி 4:10), புனித பிரான்சிஸ்கு அசிசியார் தனது சொத்துரிமையை துறந்து, "என் கடவுளே! என் எல்லாமே!" என்றார். இது உலகின் பார்வையில் மடமை.
கிறிஸ்துவையும் இறை ஆட்சியையும் தேடிக் கொண்டிருந்தால், இவ்வுலக நலன்களைப் பெறுவது எப்படி? இக்கேள்விக்குக் கிறிஸ்து தரும் பதில்: அனைத்துக்கும் மேலாகக் கடவுளது ஆட்சியைத் தேடினால், மற்றனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் (மத் 6:33), மற்றனைத்தும் என்றால் நமக்குத் தேவையான உணவு, உடை, இல்லிடம் ஆகியவை. இம்மையில் கிறிஸ்துவுக்காகத் துறந்து விடுபவர்கள், அவர்கள் துறந்தவற்றை யெல்லாம் நூறு மடங்காக இம்மையில் பெறுவதோடு மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர் (காண், மாற் 10:29-30).
எல்லாவற்றையும் உரிய காலத்தில் துறந்து விட்டால், இங்கு பெறக்கூடிய இன்பங்கள் பல உண்டு என்கிறார் வள்ளுவர்,
வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்
கண்டு இயற்பால பல (குறள் (342)
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பாகத் திருச்சபை பின்வருமாறு கடவுளிடம் மன்றாடியது: "இறைவா! நாங்கள் விண்ணக நலன்களை விருப்புமுடன் நாடவும், மண்ணக நலன்களை வெறுக்கவும் அருள்புரியும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப்பின் திருச்சபைச் சற்று வித்தியாசமாக மன்றாடுகிறது. "இறைவா! நாங்கள் விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவும், மண்ணாக நலன்களை ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்க்கவும் அருள்புரியும்."
எனவே நாம் மண்ணக நலன்களை வெறுக்காமல் அவற்றை ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். புனித பவுல் கூறுவதுபோல, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ... அவற்றை மனத்தில் இருத்துவோம் (பிலி 4:8).
ஒரு குழந்தை தன் கையில் ஒரு கத்தியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதைக் கொடுக்க மறுத்தது. பளபளக்கும் ஒரு 'நெக்லசைக்' காட்டியபோது, கத்தியைக் கீழே போட்டுவிட்டு, 'நெக்லசைப்' பிடித்துக் கொண்டது. அக்குழந்தை போல் நாம் பலவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கிறிஸ்து என்னும் முத்தைப் பற்றிக் கொள்ளும் வண்ணம் மற்றவற்றை இழக்க வேண்டும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார்: கடவுள் தாம் அழைத்தவர்களைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருடைய மாட்சிமையில் பங்குபெறச் செய்கிறார் (உரோ 8:30), கடவுள் தரும் இறைமாட்சிமையை இழக்காமல் இருக்க ஞானம் தேவை.
பொருட் செல்வமும் தேவை; அருட் செல்வமும் தேவை. பொருட் செல்வம் இல்லாதோர் இவ்வுலக இன்பத்தை அடைய முடியாது. அருட் செல்வம் இல்லாதோர் மறுமை இன்பத்தை அடைய முடியாது.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியங்கு (குறள் 247)
ஒலிம்பிய விளையாட்டு வீரனாக...
வாழ்வில் எதனைச் சொத்தாக, பெரும் செல்வமாகக் கருதுகிறீர்கள்? சவாலான கேள்வி! ஏனெனில் “எங்கே உங்கள் செல்வம் இருக்கிறதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" (மத். 6:21)
இப்போது இறைவன் உனக்குக் காட்சி தந்து, “எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றால் நீ எதையெல்லாம் கேட்பாய்? நோயுற்றுத் தவிக்கிறேன், உடல் நலம் வேண்டும். குடும்பத்தில் பண நெருக்கடி. கொஞ்சம் பொருளாதார வசதி வேண்டும். பல ஆண்டுகளாய் குழந்தைப் பேறு இல்லை. ஒரு மழலைச் செல்வம் வேண்டும்... இப்படி எத்தனையோ! இவற்றில் தவறேதும் இல்லை. இவற்றைக் கோமாளித்தனமானதாகவோ, குறைபாடானதாகவோ கருதத் தேவையில்லை. ஆனால் பின்னணி மனநிலை?
ஓர் ஆசிரியர் திருப்பயணத்திற்கென மாணவர்களை வேளாங்கண்ணிக்குக் கூட்டிச் சென்றார். ஆலயத்துள் சென்று செபித்தபின் அனைவரையும் பார்த்து ஆசிரியர் "என்ன வரம் கேட்டீர்கள்?” என்று வினவினார். ஒவ்வொருவரும் ஏதேதோ கேட்டதாகப் பட்டியல் போட்டனர். ஆசிரியர் திருப்திப் படவில்லை. “நீங்க என்ன சார் கேட்டீங்க?” என்றான் ஒரு மாணவன். “அறிவு - நல்லறிவு வேண்டும் என்று கேட்டேன்டா" என்று பதிலுரைத்தார். “அவுங்க அவுங்களுக்கு இல்லாததைத் தானே சார் கேட்பாங்க" என்றானே அந்தச் சிறுவன். ஆசிரியர் அதிர்ந்துவிட்டார்.
எது நமக்கு இல்லை என்ற மனநிலையில் செபிக்கிறோம். ஆனால் எது தேவையானது, எது சரியானது, எது முன்னுரிமை பெற வேண்டியது என்ற கோணத்தில் (ஞானத்தில்) செபிக்க வேண்டும். எடுத்துக்காட்டு மன்னன் சாலமோனின் மன்றாட்டு.
நாட்டை ஆள வாரிசு இல்லையே, கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே என்ற வருத்தம் அந்த பாக்தாது மன்னனுக்கு. அடிக்கடி நாட்டு மக்களுக்கு விருந்து வைத்துத் தன்னைத் தேற்றிக் கொண்டான். ஒரு முறை தன் பிறந்த நாளை முன்னிட்டு விருந்தொன்று படைத்தான். அமைச்சர்கள், செல்வர்கள் மட்டுமன்றி, அடிமைகள், வறியவர்களைக் கூட அழைத்திருந்தான். விருந்து முடிந்ததும் அறை முழுதும் இருந்த விலையுயர்ந்த பொருள்களைக் காட்டி, எல்லோரும் இங்குள்ள எந்தப் பொருளையும் தொட்டுத் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளலாம் என்றார். உற்சாகத்தோடு ஒவ்வொருவரும் எதையாவது தொட்டுச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆனால் அரசனுக்கு அருகில் நின்ற ஒரு சிறுமி மட்டும் அசையாமல் நின்றாள். அதைக் கவனித்த அரசன், "உனக்கு ஒன்றும் தேவையில்லையா? நீயும் எதையாவது தொடு. அது உனதாகும்” என்றதும், சிறிதும் தயக்கமின்றி சிறுமி கையை நீட்டி அரசனையே தொட்டாள். அவளது மதிநுட்பத்தைக் கண்ட அரசன் அவளிடம், “நீ என்னைச் சொந்தமாக்கிக் கொண்டதால் இந்த அரசு முழுவதுமே உனக்கே சொந்தம். எனக்கு வாரிசும் நீதான்” என்றான்.
பொருள்களை விடுத்து அவற்றுக்குச் சொந்தக்காரரான அரசனைச் சொந்தமாக்கிக் கொண்ட சிறுமியின் அறிவுக்கூர்மையை வியந்து பாராட்டுகிறோம். அதேபோல் சாலமோனின் ஞானமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீடிய ஆயுள், நிறைந்த செல்வம், படைபலம், பகைவர் மீது வெற்றி என்றெல்லாம் கேட்கவில்லை. நீதியோடு தீர்ப்பு வழங்க, நேர்மையோடு ஆட்சி செய்ய, நல்லது கெட்டது பகுத்துணர, தேவையான ஞானத்தைக் கேட்டார்.
“சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது" (1 அரசர் 3:10) காரணம்?
1. கடந்து போகும் நிலையற்ற ஒன்றை அல்ல, நிலையான, நிறைவான ஒன்றை, அதாவது ஞானத்தைக் கேட்டார்.
2. அதையும் தனக்காக அல்ல, மற்றவர்களின் நலனுக்காகக் கேட்டார்.
இன்று நாம் வாழும் சமுதாயத்தில் மானிட மதிப்பீடுகளும் இறையாட்சியின் விழுமியங்களும் மதிப்பிழந்து வருகின்றன. பணம், பதவி, பட்டம், சொத்து, ஊழல், இன்பம், வன்முறை இவைகள் முன்னுரிமை பெற்று மதிப்பீடுகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்ட சூழ்நிலையில் இறையரசை, தேடிக் கிடைத்தற்கரிய புதையலாகவும், விலைமதிப்பற்ற முத்தாகவும் நம் முன் நிறுத்துகிறார் இறைமகன் இயேசு. இவ்வுவமைகள் வெளிப்படுத்தும் விண்ணரசின் பண்புகள் மூன்று:
1. விண்ணரசு விலைமதிப்பில்லாதது, கிடைத்தற்கரியது.
2. எந்த விலையும் கொடுத்து எந்த தியாகத்தையும் செய்து பெறத் தக்கது.
3. அளவில்லா மகிழ்ச்சியைத் தருவது. எடுத்துக்காட்டாக ஏரோது மாளிகையை விட்டு வெளியே வந்ததும் விண்மீனைக் கண்ட கீழ்த்திசை ஞானிகளின் மகிழ்ச்சி (மத். 2:10).
இயேசு விண்ணரசை ஏன் புதையலுக்கு ஒப்பிடுகிறார்? பாலஸ்தீன் நாட்டில் ஓயாத போர்களும் கலவரங்களும் வந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். அப்பொழுதெல்லாம் மக்கள் விலையுயர்ந்த பொருள்களையும், ஆபரணங்களையும் பூமியில் புதைத்துவிட்டு ஓடிச் சென்றுவிடுவார்கள். நாடு அமைதியடைந்தபின் மீண்டும் திரும்பி வந்து புதைத்த இடங்களில் தோண்டி எடுப்பர். சில வேளைகளில் அவை பூமியிலிருந்து எடுக்கப்படாமலே கூட இருக்கும். எனவே “பூமியே பணத்தைப் பாதுகாக்கும் வங்கிப் பெட்டகம்” என்று கூடச் சொல்லலாம். ஆகவே வணிகர்களோ உழவர்களோ நிலத்தை உழும்போது கவனத்துடனும் எதிர்பார்ப்புடனும் செயல்படுவார்களாம்.
இவ்வுலகில் முன்னேற எவ்வளவோ முன்மதியுடனும் ஞானத்துடனும் நடந்து கொள்கிறோம். ஒரு வேலையில் இருக்கும்போதே, இன்னும் அதிக வருவாய் தரும் வேறொரு வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். சிறிய செலவு செய்து பெரிய பயனை அடைவதிலும் நல்ல முறையில் பணத்தை முதலீடு செய்வதிலும் திட்டமிட்டுச் செயல்படுகிறோம். அதே முன்மதியையும் ஞானத்தையும் நம் கிறிஸ்தவ வாழ்விலும் காட்ட வேண்டாமா? விண்ணரசுக்குரியவற்றிலும் சிரத்தை வேண்டாமா?
இறையரசு என்பது முற்றிலும் இன்னொரு உலகைச் சார்ந்தது அல்ல. இறந்தபின்தான் கிடைக்கக்கூடியது என்பதல்ல. ஆன்மா, உடல் என்று பிரித்துப் பார்க்காமல் மனிதனை நிறை வாழ்வுக்கு அழைத்துச் செல்வது. இறைத்தந்தையே அதன் ஊற்று. மனித நலமே அதன் மையம். சகோதர உறவுகளே அதன் வெளிப்பாடு. அதனால் அன்பு, நீதி, சமத்துவம் இவையே அதன் மதிப்பீடுகள்! இன்று இயேசு இருந்தால் புதையலாகவோ முத்தாகவோ அல்ல ஒலிம்பியத் தங்கப் பதக்கமாக இறையரசைச் சுட்டிக்காட்டுவார்.
புதையலைத் தேடும் உழவனாக, முத்தைத் தேடும் வணிகனாக, ஒலிம்பியப் பதக்கத்தை இலட்சியமாகக் கொண்ட விளையாட்டு வீரனாக நாம் இறையரசைத் தேட வேண்டும். ஆனால் அவர்களுக்கும் நமக்குமுள்ள முக்கிய வேறுபாடு, அவர்கள் இறந்தால் முத்தோ, புதையலோ, பதக்கமோ பின்தொடராது. ஆனால் நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இறையரசு பொலிவு பெறும்.
"பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றிவாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோளின்றி ஓடுபவரைப் போல் ஓட மாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச்சண்டை இடமாட்டேன்” (1 கொரி. 9:25,26).
"ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே. அறிவுக்கும் முன்மதிக்கும் ஊற்றானவர் அவரே. நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கிறார். மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்" (நீ.மொ.2:6-7).
முதன்முதலில் இறையரசைத் தேடுங்கள் மற்ற அனைத்தும் கூட்டிக் கொடுக்கப்படும்.
இறையரசின் ‘விலை’
இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவு காட்சி, நம் ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது:
1 அரசர்கள் 3: 5, 7,9
அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், "என் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான, ஞானம் நிறைந்த உள்ளத்தை, அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்டார்.
இந்தக் கனவுக் காட்சியுடன் சிறிது கற்பனையைக் கலந்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம். இன்றைய ஞாயிறு வழிபாடு நடைபெறும் ஆலயம் ஒன்றில், பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்கள் கலந்துகொள்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வழிபாட்டில், இன்றைய முதல் வாசகம் வாசிக்கப்படும்போது, அங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் உள்ளங்களில், எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கேட்கும் இறைவனிடம், தன் பதவிகால நீட்டிப்பு, அளவற்ற செல்வம், உடல்நலம், எதிர்கட்சிகளின் தோல்வி என்ற ‘முக்கியமான’ வரங்களைக் கேட்பதற்குப் பதில், ‘எதற்கும் உதவாத, தேவையற்ற’ வரமான ஞானத்தை வேண்டிக்கேட்ட மன்னன் சாலமோனை, ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், ‘பிழைக்கத்தெரியாத மனிதர்’ என்று, எண்ணி, தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்திருப்பர்.
சாலமோனின் இந்த வேண்டுதல், இறைவனை மகிழ்வுறச் செய்தது என்பதை, இன்றைய வாசகம், தெளிவாகக் கூறியுள்ளது.
1 அரசர்கள் 3: 10-13
சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது, நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்" என்றார்.
பகுத்தறிவு என்பது, மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த ஒரு கொடை. நன்மை, தீமை இவற்றை பகுத்து, பிரித்து அறிவது மட்டும் பகுத்தறிவு அல்ல, அதற்கும் மேலாக, நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிவதே, உண்மையான பகுத்தறிவு, உண்மையான ஞானம். இத்தகைய ஓர் அறிவுத்திறனையே, சாலமோன், விரும்பி, வேண்டி, கேட்டுக்கொண்டார்.
நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிய, தனிப்பட்ட மனநிலை தேவை. ஜூலை 31, இத்திங்களன்று, புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். இப்புனிதர் வழங்கிய ஆன்மீக முயற்சிகளில், 'தேர்ந்து தெளிதல்' என்பது மிக முக்கியமான ஒரு பாதை. மேலும், "இறைவனின் அதிமிக மகிமைக்கே" என்பது, இப்புனிதர் வழங்கிய விருதுவாக்கு. இறைவனின் மகிமையை நிலைநாட்டுவது என்பதோடு நின்றுவிடாமல், இறைவனின் மகிமையை இன்னும் கூடுதலாக நிலைநாட்ட தேவையான மனநிலையைத் தருமாறு வேண்டினார், அப்புனிதர்.
MAGIS என்றழைக்கப்படும் “இன்னும் கூடுதலாக” என்ற மனநிலையை உருவாக்க, இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. வாழ்வில் நம்மை வந்தடையும் நல்லவற்றிலும், மிகச் சிறந்தவற்றை கண்டுபிடித்து, அவற்றை உரிமையாக்கிக் கொள்ள, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் மன உறுதி வேண்டும் என்பதையே, இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது. இறையரசைத் தேடிக் கண்டுபிடித்தல், அதைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்தல் என்ற கருத்துக்களை, மூன்று உவமைகள் வழியே இயேசு இன்று சொல்லித் தருகிறார். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளில், நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.
'புதையல்' என்ற சொல், பொதுவாக, பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசின் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிக வெப்பநிலை ஆகியவற்றை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அங்கு உருவாகும் வைரமும், உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல், வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளைக் கொண்டு வாழும் வைரங்களாக நாமும் மாறமுடியும் என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.
அடுத்தது, நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதம், இறையரசின் மற்றொரு பண்பை நமக்குச் சொல்லித் தருகிறது. வெளியிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே, விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது. அதேபோல், நமது உள்ளங்களில், உத்தரவின்றி நுழையும் அன்னிய எண்ணங்களையும், கருத்துக்களையும், அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் நாம் என்பதை, முத்து உவமையிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
புதையல், முத்து என்ற சொற்களைக் கேட்டதும், அவற்றின் 'விலை' என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வாய்ப்புண்டு. வர்த்தக உலகம் நம்மீது திணித்திருக்கும் ஆபத்தான ஒரு கண்ணோட்டம் இது. இன்றைய உலகில், எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது, மிகவும் வேதனையான நடைமுறை. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகள் இவ்வளவு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கும் பேசப்படுகிறது. நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்தும், பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அதேபோல், ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட தலைவர், தேர்தலில் வென்றாலோ, தோற்றாலோ, அதுவும், பங்குச்சந்தை குறியீட்டைக் கொண்டு பேசப்படுகிறது. இவ்விதம் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படுவதால், நமது எண்ண ஓட்டங்கள், வர்த்தகப் பாணியிலேயே அதிகம் செல்கின்றன. இந்நிகழ்வுகளின்போது வெளிப்படும் மனிதாபிமானம், பிறரன்புப் பணிகள், தியாகங்கள் போன்ற இறையரசின் உன்னத விழுமியங்கள் அதிகம் பேசப்படுவதில்லை.
வர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, வாழ்வின் அனைத்து உண்மைகளையும் அளக்கும்போது, அங்கு, இலாபம், நஷ்டம் என்ற கேள்விகள் எழுகின்றன. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப்பாடு, மனித வர்த்தகம்.
ஜூலை 30, இஞ்ஞாயிறன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. எதையும் விலைப்பேசத் துடிக்கும் வர்த்தக மனப்பான்மை நம்மிடையே வளர்ந்துவிட்டதால், மனிதர்கள், குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் வர்த்தகப் பொருள்களாக மாறியுள்ளனர். உலகெங்கும் இன்று 2 கோடிக்கும் அதிகமானோர், வியாபாரப் பொருள்களைப்போல் விற்கப்படுகின்றனர். இவர்களில் 76 விழுக்காட்டினர், பெண்கள், மற்றும் சிறுவர், சிறுமியர். அநீதியான இச்சூழல் மாறி, மனிதர்களை, மதிப்பு நிறைந்த கருவூலங்களாக, முத்துக்களாக கருதும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள இன்று இறைவனிடம் வேண்டுவோம்.
புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவு வேண்டும் என்பதை உணர்கிறோம். இலாப, நஷ்டம் பார்த்து, அனைத்தையும் பேரம் பேசி வாழும் இவ்வுலகப் போக்கிலிருந்து விடுதலை பெற்று, இத்தகையத் துணிச்சலான முடிவை எடுப்பதற்கு இறைவன் வழிகாட்ட வேண்டும்.
உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நமக்குள்ளும், நம் குடும்ப உறவுகளிலும் புதைந்துள்ள விலைமதிப்பற்ற முத்துக்களை, வைரங்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல் வாழும் நம்மை விழித்தெழச் செய்யும் சிறு கதை இது: பல ஆண்டுகள், ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் இருந்ததைக் கண்டனர்.
புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு, வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போலத்தான் நாமும்... நமக்குள் புதைந்திருக்கும், நம்மைச் சூழ்ந்திருக்கும் எத்தனையோ கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், உலகம் உருவாக்கித்தரும் பொய்யான மதிப்பீடுகளைத் துரத்திச் செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை, சக்தியை நாம் வீணாக்குகிறோம். பல வேளைகளில், இந்தப் பொய்யான மாயைகளை அடைவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, நம்மிடம் உள்ள புதையல்களை, முத்துக்களை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் அடையாளம் காணும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம். நாம் அடையாளம் கண்ட கருவூலங்களைப் பெறுவதற்கு, அல்லது, தக்கவைத்துக் கொள்வதற்கு, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நம்மைச் சுற்றி வாழ்வோரை, வர்த்தகப் பொருள்களாகக் காணாமல், அவர்களை, விலைமதிப்புக்களையெல்லாம் கடந்த இறைவனின் சாயல்களாகக் காணும் கண்ணோட்டத்தை இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
விண்ணரசும் புதையலும்
நிகழ்வு
ஆற்றங்கரையோரமாய்த் துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் இரண்டு சீடர்கள் இருந்தார்கள். துறவிக்கு வயதாகிக்கொண்டு போனதால், அவர் இந்த மண்ணுலகில் வாழப் போவது இன்னும் சிறிதுகாலம்தான் என்பதை உணர்ந்த அவருடைய இரண்டு சீடர்களும் அவரிடம், “சுவாமி! நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பாக, எங்களுக்கு ஓர் அறிவுரை சொல்லிவிட்டுப் போங்கள்” என்றார்கள். உடனே துறவி அவர்களிடம், “இந்த இடத்தில் புதையல் ஒன்று இருக்கின்றது. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் ஓரிரு நாள்களில் இறந்துபோனார்.
துறவி இறந்தபின்பு, அவருடைய இரண்டு சீடர்களும் அவர் சொன்னதுபோன்று புதையலைத் தேடத் தொடங்கினார்கள். ஒரு சீடர் கையில் கடப்பாரை, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, துறவி இருந்த இடத்தில் ஆழமாகக் குழிதோண்டிப் புதையலைத் தேடத் தொடங்கினார். அவர் தோண்டிய குழி ஆழமாகவும் அகலமானதும் ஆனதே ஒழிய, புதையல் கிடைத்தபாடில்லை. இன்னொரு சீடரோ, துறவி இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி, ஒரு துண்டை விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார்.
இப்படியிருக்கையில் அந்த வழியாக வானதூதர் ஒருவர் வந்தார். அவர் இரண்டு சீடர்களும் செய்துவந்த செயலைப் பார்த்துவிட்டு, “புதையலை ஒருவர் மண்ணுக்குள் தேடுகின்றார்; இன்னொருவரோ தனக்குள் தேடுகின்றார். இறுதியில், தனக்குள் தேடுபவருக்கே புதையல் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆம், புதையலைத் தனக்குள் தேடிய இரண்டாவது சீடருக்கே கிடைத்தது.
இறையாட்சி - விண்ணரசு - உங்கள் நடுவே, உங்குக்குகுள்ளே செயல்படுகின்றது என்று இயேசு சொல்வாரே! (லூக் 17: 21). அது போன்று விண்ணரசு நம் நடுவே, நமக்குள்ளே இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்து, எவர் ஒருவர் தூய ஆவியார் தங்கும் கோயிலான தனக்குள் (1 கொரி 6: 19) தேடுதலைத் தொடங்குகின்றாரோ, அவர் புதையலைக் கண்டுகொள்வார். இத்தகைய செய்தியைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று, நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை விண்ணரசு விலைமதிக்கப்பெறாத புதையலுக்கு ஒப்பானது என்ற செய்தியைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணரசு, புதையலைப் போன்று விலைமதிப்பற்றது
வீட்டை விட்டுக் கடற்கரையோரமாய் வரும் இயேசு (மத் 13: 1), மக்களிடம் விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வழியாகப் விளக்கத் தொடங்குகின்றார். விண்ணரசைக் கடுகுவிதைக்கும் புளிப்பு மாவுக்கும்... ஒப்பிட்டுப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தியில் விண்ணரசைப் புதையலுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். இயேசு எதற்கு விண்ணரசைப் புதையலுக்கு ஒப்பிடுகின்றார் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
பழங்காலத்தில் இன்றைக்கு இருப்பது போன்று பணத்தையும் நகைகளையும் பொருள்களையும் சேர்த்துவைக்க வங்கிகள் கிடையாது. அதனால் நிலம்தான் மக்கள் தங்களுடைய பொருள்களைச் சேமித்து வைப்பதற்கான ‘வங்கியாக’ இருந்தது. இதற்கு நடுவில் எதிரி நாட்டினர் தங்களுடைய நாட்டின்மீது போர்தொடுக்கும்பொழுது, அவர்களிடமிருந்து தாங்கள் சேர்த்து வைத்த விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாக்கும் வண்ணம், ஒரு பெரிய பானையில் பொருள்களைப் போட்டு, அதை மண்ணைத் தோண்டிப் புதைத்து வைத்தார்கள். எதிரிகள் படையெடுப்பின்பொழுது ஒருவேளை அவர்கள் கொல்லப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம். இதனால் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட புதையல் அப்படியே இருக்கும். பின்னாளில் மண்ணைத் தோண்டிப் பார்க்கின்றவருக்கே அந்த விலைமதிக்கப்பெறாத புதையல் கிடைக்கும்.
இத்தகைய விலைமதிக்கப்பெறாத, யாருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைக்காத, இன்னும் சொன்னால் சிரமப்பட்டுத் தோண்டுகின்றவருக்கே கிடைக்கக்கூடிய புதையலை இயேசு விண்ணரசிற்கு ஒப்பிடுவதன் வழியாக, விண்ணரசு விலைமதிக்கப்பெறாதது, அகலமான வாயில் வழியாக அல்ல, இடுக்கமான வாயில் வழியாக நுழைவோருக்கு அது கிடைக்கக்கூடியது என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார்.
இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும்
இயேசு, விண்ணரசைப் புதையலை ஒப்பிடுவதன் வழியாக ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றார். அது என்னவெனில், நற்செய்தியில் வரும் புதையலைக் கண்டுபிடித்த நபர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அல்லது தமக்குள்ள எல்லாவற்றையும் இழந்து புதையல் இருந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதுபோல, நாமும் நம்மிடம் இருப்பதை; ஏன் நம்மையே இழக்கத் தயாராய் இருந்தோமெனில் விண்ணரசை உரித்தாக்கிக் கொள்ளலாம். இது இயேசு சொல்லும் செய்தியாகும்.
இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர், எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்பொழுதுகூட, “தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்” (மாற் 8: 34) என்றே சொல்கின்றார். ஆகையால், இயேசுவின் சீடராக இருப்பதற்கு எப்படித் தன்னலத்தை துறப்பது அல்லது இழப்பது அவசியமானதாக இருக்கின்றதோ, அப்படி விண்ணரசை நம் உரித்தாக்கிக் கொள்வதற்கு நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.
விண்ணரசை அடையும்பொழுது எல்லாவிதமான ஆசியும் கிடைக்கும்
நாம் நம்மை இழந்து, விலை மதிக்கப்பற்ற புதையலாகிய விண்ணரசை அடைகின்றபொழுது, எல்லா விதமான ஆசிகளையும் பெற்றுக்கொள்கின்றோம் என்கின்ற இன்னோர் உண்மையையும் இன்றைய இறைவார்த்தை எடுத்துக்கூறுகின்றது. இந்த உண்மையை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இன்றைய முதல் வாசகத்தை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சாலமோன் மன்னனிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கின்றபொழுது, அவர், “ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும்” என்பார். இதனால் உவமை அடையும் கடவுள், அவருக்கு அவர் கேட்ட ஞானத்தை மட்டுமல்லாது, அவர் கேளாத செல்வத்தையும் புகழையும் தருவதாக வாக்களிப்பார் (1அர 3: 13). ஆம், நாம் நம்மை இழந்து விண்ணரசை அடைகின்றபொழுது விண்ணரசில் இறைவன் நமக்கு எல்லாவிதமான ஆசிகளையும் தருவார். இயேசுகூட, “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6: 33) என்றுதான் கூறுவார். ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதையும் நம்மையும் இழந்து, விண்ணரசை உரித்தாக்கிகொண்டு, அதன்மூலம் எல்லா ஆசிகளையும் பெற்றுக்கொள்ள முயல்வோம்.
பல நேரங்களில் நாம் நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இல்லை என்பது வேதனை கலந்த உண்மை. எப்பொழுது நாம் நம்மை இழக்கத் துணிகின்றோமோ, அப்பொழுது நாம் நம்மைக் கண்டுகொள்கின்றோம். ஆகையால், நாம் விண்ணரசுக்காக நம்மையே இழக்கத் தயாராவோம்.
சிந்தனை
“உன்னைக் கண்டுகொள்வதற்கான மிகச்சிறந்த வழி, மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் உன்னை இழப்பதே” என்பார் காந்தியடிகள். ஆகையால், நாம் விண்ணரசை அடைய மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் வழியாகவும், இயேசுவின் வழியில் நடப்பதன் வழியாகவும் நம்மை இழப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
புதையல்
நம் வாழ்வின் புதையலை அடையாளம் காணவும், ஆய்ந்து பார்க்கவும், தேர்ந்து தெளியவும், விரும்பி வாங்கவும் நம்மை அழைக்கின்றது இன்றைய இறை வார்த்தை வழிபாடு, 'இறைவனும், இறைவன் சார்ந்தவை மட்டுமே புதையல்' என்பதை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இன்றைய முதல் வாசகம் (1அர 3:5, 7-12), கடவுள், சாலமோனுக்குக், கனவில் தோன்றிய நிகழ்வைத் தாங்கி நிற்கிறது. சாலமோன், மிகவும் இக்கட்டான நிலையில், ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகின்றார். தாவீது முதுமைப் பருவம் அடைகின்றார். அவருடைய முதுமைப் பருவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்ற அவருடைய மகன் அதோனியா, ‘நானே அரசனாவேன்’ எனச் சொல்லி, தனக்கென ஒரு குழுவைக் கூட்டி, தன்னை அரசனாக்கிக் கொள்கின்றார். இந்நிலையில்தான், பத்சேபா, நாத்தானுடன் இணைந்து, தன் மகன் சாலமோனை அரசனாக்குகிறார்.
சாலமோன் அரசனானபோது அவருக்கு வயது ஏறக்குறைய 15 முதல் 20 அல்லது அதற்கும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், தான் அரசனானவுடன் இரண்டு நற்காரியங்கள் செய்கின்றார். ஒன்று, கிபயோனுக்குச் சென்று ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றார். இப்படிச் செலுத்தியதன் வழியாக, தன்னை அரசனாக ஏற்படுத்திய ஆண்டவராகிய கடவுளுக்கு, தன் தந்தையைப் போல பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாக வாக்களிக்கின்றார். இரண்டு, நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் சாவையோ ஆண்டவரிடம் வரமாக கேட்காமல், ஆண்டவராகிய கடவுளின் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை-தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை வரமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்கின்றார். இவ்விரண்டு நற்காரியங்களிலும், சாலமோன், ஆண்டவரை தன்னுடைய புதையலாக, முதன்மையாக, முழுமையாக, முறைமையாகத் தெரிந்து கொள்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 13:44-52), விண்ணரசு பற்றிய மூன்று உவமைகளை வாசிக்கின்றோம். முதல் இரண்டு உவமைகளும் விண்ணரசு பற்றியதாக மட்டும் இருக்க, இறுதி உவமை விண்ணரசு பற்றியதாகவும், இறுதிக்கால நிகழ்வு பற்றியதாகவும் இருக்கிறது.
நிலத்தில் புதையலைக் கண்டுபிடித்த ஒருவர், அந்தப் புதையலை மட்டும் எடுத்துச் செல்லாமல், அல்லது அந்தப் புதையல் இருக்கும் இடத்தை மட்டும் விலைக்கு வாங்காமல், தமக்குள்ள யாவற்றையும் விற்று, அங்கிருந்த கருவேல மரங்கள், முள் செடிகள், கட்டாந்தரை என முழுமையான நிலத்தையும் வாங்கிக்கொள்கின்றார். நிதி மேலாண்மை அடிப்படையில்தால், அவர் செய்தது மடமையாகத் தெரிகின்றது ஆனால் நிறையப் புதையல்கள் அந்த நிலத்தில் இருக்கலாம் என நம்பிக்கை பார்வை கொண்டிருக்கிறார் அவர். மேலும், புதையலைக் கண்ட நொடியில், அவர் கணக்குப் போட்டுப் பார்க்கின்றார். தன்னிடம் ஏற்கெனவே உள்ள சொத்தின் மதிப்பைவிட, இதன் மதிப்பு உயர்ந்தது என்று அறிந்தவுடன்தான், தன் உடைமைகளை விற்கத் துணிகின்றார். விலையுயர்ந்த முத்தைத் தேடி அலையும் வணிகரும், தமக்குள்ள அனைத்தையும் விற்கின்றார். முத்தை வாங்கிக்கொள்கின்றார். இப்படிச் செய்யும்போது அவர் 'இடர்வரவு' அல்லது 'மறையிடர்' (ரிஸ்க்) எடுக்கின்றார். ஏனெனில், முத்தை வாங்கியபின், அது வெறும் பிளாஸ்டிக் பாசி என்று இருந்தால் என்ன செய்வது?
கடலில் வலை வீசும் ஒருவர், நல்ல மீன்களைக் கூடையில் சேர்த்து, கெட்ட மீன்களை வெளியே எறிகின்றார். ஏனெனில், கெட்டவற்றை நல்லவற்றோடு வைத்திருப்பது, இடத்தை அடைத்துக் கொள்வதோடு, சுமையாக இருப்பதோடு, இருக்கின்ற நல்ல மீன்களையும் கெடுத்துவிடும். ஆக, மெதுவாக அமர்ந்து, பொறுமையுடன், நேரம் எடுத்து, கெட்டவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரித்தெடுக்கின்றார்.
புதையல், முத்து, நல்ல மீன்கள் என்னும் மூன்றுமே புதையல்கள்தாம். அவற்றை ஒருவர் முழுமையாக வாங்க வேண்டும் (நிலம் போல). முதன்மையாகத் தேட வேண்டும் (முத்து போல). முறைமையாகப் பிரித்தெடுக்க வேண்டும் (நல்ல மீன்கள் போல).
மேலும், மேற்கண்ட புதையல்களைப் பெற. ஒருவர்.
அ) சரியாகக் கணக்கிட அல்லது மதிப்பிட வேண்டும்;
ஆ) மறையிடர் ('ரிஸ்க்') எடுக்க வேண்டும்;
இ) தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ய வேண்டும்.
புதையல்களைப் பெறுவது எளிதா?
எளிதல்ல!
இறைவன் என்னும் புதையலை எப்படிப் பெற்றுக்கொள்வது? இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 8:28-30) நமக்கு விடை சொல்கிறது. 'தூய ஆவி அருளும் வாழ்வு' என்னும் பகுதியை நிறைவு செய்கின்ற பவுல், 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்' அல்லது ‘கூட்டொருமை') மிக அழகான மேலாண்மையியல் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத் திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு. அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்’. அல்லது ஆவியார் அனைத்தையும் ‘ஒருங்கியக்கம்’ செய்கிறார். ஆக, நாம், நம்முடைய புதையலை, முழு மூச்சோடு தேடினால், இந்த உலகமே நமக்கு ஒத்துழைக்கும். அந்தப் புதையல் எதுவாக இருந்தாலும்!
எடுத்துக்காட்டாக, வாடகைக்கு வீடு தேடிப் போகிறோம். ஒரு வீடும் அமைவதில்லை. நாம் எதிர்பாராத நேரத்தில், திடீரென நாம் சந்திக்கும் ஒருவர் வழியாக அந்த வீடு நமக்குக் கிடைக்கிறது. நிலம் வாங்க வேண்டும் என நினைக்கிறோம். ஒன்றும் அமையாமல் இருக்கின்றது. திடீரென எல்லாம் கைகூடுகிறது. பெண் பார்க்க, திருமணம் முடிக்க, குழந்தை பிறக்க என எல்லா மங்களகரமான நிகழ்வுகளும் நமக்குத் திடீரென கைகூடுகின்றன. இதைத்தான், `ஆள் செய்யாததை நாள் செய்யும்’ என்கின்றனர் பெரியவர்கள். சபை உரையாளரோ இதையே "கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்" (கூஉ 3:11) என்கிறார்.
நம்முள் இருக்கும் ஆவியாரோடு நாம் இணைந்துகொண்டு, கடவுளின் திட்டப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, நம் அன்றாட வாழ்வு நகர்ந்துகொண்டே இருந்தால் போதும், அவர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார்.
மேற்கண்ட வாசகங்களின் பின்புலத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள்:
அ) தூக்கத்திலும் தெளிவு
சாலமோனுக்குக் கடவுள் தூக்கத்தில் தோன்றுகின்றார். ஆனால், தூக்கத்திலும் தெளிவாக இருக்கின்றார் சாலமோன். எனது வாழ்வின் இலக்கு எனக்குத் தெளிவாக இருக்கிறதா? தூக்கத்திலும், 'இது தான் அது!" என்று நான் சொல்ல முடியுமா? அல்லது நேற்றைக்கு ஒரு பக்கம், இன்றைக்கு ஒரு பக்கம், நாளைக்கு இன்னொரு பக்கம் என நான் அலைக் கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றேனா?
ஆ) மகிழ்ச்சி
புதையலைக் கண்டவர், மகிழ்ச்சியோடு தனக் குள்ளதை இழக்கின்றார். முத்தைக் கண்டவர், மகிழ்ச்சியோடு, தன் பழைய முத்துகளை இழக் கின்றார். நல்ல மீன்களைக் கண்டவர், மகிழ்ச்சி யோடு கெட்டவற்றை வெளியே வீசுகின்றார். இங்கே இரண்டு விடயங்கள்: எனக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ, அதுவே எனது வாழ்வின் புதையல். இன்பம் தருவது அல்ல; இன்பம் சில நிமிடங்களில் மறைந்து விடும். மகிழ்ச்சி தராதவை அனைத்தும் சுமைகளாக மாறிவிட வாய்ப்பு உண்டு. இரண்டு, மகிழ்ச்சியை நான் அடைய, இன்பத்தை இழக்க முன்வர வேண்டும். நன்முத்தைப் பெற, பிற முத்துகளை இழக்க வேண்டும். அப்படி இழக்காமல் நான் நன் முத்தை உரிமையாக்க முடியாது. நன்முத்து வந்தவுடன், பிற முத்துகளுக்கு மதிப்பில்லை. மதிப்பற்ற வற்றை நான் ஏன் தூக்கித் திரிய வேண்டும்?
இ) ஆவியாரோடு இணைந்திருத்தல்
எந்த நேரமும் நான் என்னுடைய தொப்புள் கொடியை எனக்கு மேல் இருக்கின்ற இறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவரிடம்தான் என் முதல் உறவு தொடங்கியது (எபே 1:4). இந்த உலகில் நான் புதையல்களைக் காணுமுன், எனக்குப் புதையலாக இருந்தவர் அவர். இந்த உலகின் புதையல்கள் மறைந்தவுடன், என் புதையலாக இருப்பவர் அவரே.
இறுதியாக, பதிலுரைப்பாடலில் (திபா 119) ஆசிரியர் கூறுவதுபோல, "ஆண்டவரே! நீரே எனக் குரிய பங்கு!" என்று முதன்மையாக, முழுமையாக, முறைமையாக அவரைப் பற்றிக்கொள்ளுதல் நலம்!
தேவைகளும் தேடல்களும்
தேவைகளில்லாத மனிதன் இல்லை, எனவே தேவைக்கான தேடல்களில் பயணிக்காதவர் மனிதரே இல்லை. இந்தத் தேடல்களின் பின்புலம் தனி மனிதனின் பொறுப்புகளாக (responsibility) நிற்பதை நாம் காண முடிகின்றது. சாலமோனுக்கு ஒரு அரசனாக - மக்களுக்கு நன்மை தீமையைப் பகுத்தாய்ந்து நீதி வழங்க வேண்டிய பொறுப்பு இருப்பதால், ஞானம் நிறைந்த உள்ளம் அதற்குத் தேவை என்பதை உணர்ந்தவராக ஞானத்தை இறைவனிடம் தேடினார்.
ஒன்றை அடைய வேண்டும் என்றால் வேறொன்றை இழக்க வேண்டும் என்பது உலக நியதி. சாலமோன் உயர்ந்த ஞானத்தைப் பெற - உலக அரசர்களின் தவிர்க்க இயலாத தேவைகளான நீடிய ஆயுள், பெரும் செல்வம், பகைவர்களின் வீழ்ச்சியென - ஒரு அரசரின் தேவையாக இருந்த அனைத்தையும் வேண்டாமென ஒதுக்கியவராக - நிறை ஞானத்தை மட்டும் இறைவனிடம் கேட்டார்.
இயேசு நற்செய்தியில் குறிப்பிடும் இருவர் தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு - இழந்துவிட்டு, அவரவர் கண்ட புதையலையும் ; விலை மதிப்பற்ற முத்தையும் அடைந்தனர் என்பதைக் காண்கின்றோம்.
"முந்தமுந்த விண்ணரசைத் தேடுங்கள்"
என்றவர், விண்ணரசைப் பெறுவதற்காக எதையும் இழக்கலாம் என்று அதன் முக்கியத்துவத்தை நாம் உணரும் வண்ணம் ஊவமைகளின் வாயிலாகக் கூறுகின்றார். அதேவேளை, வலையாக உருவகப் படுத்தப்படும் விண்ணரசு பாரபட்சமின்றி அனைவருக்கும் வாய்ப்பைத் தந்தாலும் "அழைக்கப்பட்டவரோ பலர் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெகுசிலர்" என்ற வார்த்தைக்கு ஏற்ப, தகுதியுள்ள நேர்மையாளர்கள் ஓட்டத்தின் முடிவில் ; வானக வாழ்வு பெறுகின்றனர் - என்பதையும் தெளிவு படுத்துகின்றார்.
இப்படிப்பட்ட தேர்விற்க்குத் தகுதியுள்ள நேர்மையாளர்களாக, நமது வாழ்வு மலர ; நாம் இறை மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டும். கடவுளிடம் அன்புகூர்பவர்களாக வாழ வேண்டும், அத்துடன் அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு இணைந்து ; நல்ல பலன் தருபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையும் - பவுல் அடிகளார் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்.
"கலப்பையில் கை வைத்தபின் எவரும்" என்ற எச்சரிக்கைக்கு ஏற்ப நமது வாழ்க்கையில்," முன் நோக்கியவர்களாக" நம் உள்ளங்களை. "ஆழ, அகல" உழுது நம்முள் விதைக்கப்படும் இறை வார்த்தைக்கு 100 மடங்குப் பலன் கிடைக்கும்போது; கூடைக்குள் வைக்கப்படும் நல்ல மீன்களைப் போன்று விண்ணகத்தில் நமக்கென்று உள்ள நல்வாழ்விற்க்கு தேர்ந்தெடுக்கப்படவர் ஆகின்றோம்.
இயேசு பிரான்…" கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று மத்தேயு நற்செய்தி 13:9,மற்றும் 43 வசனஙகளில் இரு முறை ஒரே செய்தியை ஆணித்தரமாக நினைவு படுத்துகின்றார்.
"உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் சொன்னதை சாலமோன் முழுமையாகக் கேட்டார். (1 அரசர்கள் 3:5) அதற்க்குப் பின் தனது தேவையை, கடவுள் முன் வைத்தார். "கேட்கட்டும்" என்ற வார்த்தையைப் பொதுவாக இரண்டு நிலைகளில் புரிந்து கொள்ளலாம். 1). நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம்
2). அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இந்த "கேட்கட்டும்" என்ற வார்த்தை உணர்த்தும் இருவழிப்பாதையில் நாம் பயணிக்க அழைக்கப்படுகிறோம். ஒரு வழியென இறை வார்த்தையை நாம் கேட்கும் போதுதான் மறுவழி என்று நமது வார்த்தை இறைவன் முன் ஏறெடுக்கப் படுகின்றது
சாலமோன் இருவழிப் பாதையென முதலில் கடவுள் கூறியதை முழுமையாகக் கேட்டு, பின் தன் தேவையை அவர் முன் நிறுத்தினார். முடிவு அவருக்கு நிகராக, அவருக்கு முன்போ, அல்லது பின்போ யாருக்கும் இல்லாத நிலைக்கு மாட்ச்சியும் மாண்பும் இறைவனிடமிருந்து பெற்றார்.(1 அரசர்கள் 3:12). இந்த மாட்சியும் மாண்பும் நமக்கு வேண்டுமா ?.. வேண்டாமா ….? வேண்டுமென்றால் இன்று வரை நாம் "சிக்கன பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவழிப் பாதை "(நாம் கூறுவதை பிறர் - கடவுள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்) என்ற பழக்கத் தோஷத்தை விட்டு விட்டு, சாலமோனைப் போல் இருவழிப் பாதையில் பயணிப்போம். கேட்கச் செவியுண்டு - என இறை வார்த்தையைக் கேட்டு, உணர்ந்து அதன்வழி நாம் செயல்பட்டபின், நமது தேவையாகிய - விண்ணரசை இறைவனிடம் கேட்போம்.
கடைசி மூச்சு உள்ளவரைத் தேவைகளும் அதன் தேடல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தனது தேவை, தனது தேடல் என்று சுயநலமிக்க ஒரு வழிப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தான் வாழ்கின்ற சமூகத்தில் இருந்தும்; முடிவில் இறைச்சமூகத்தில் இருந்தும் பிரிக்கப்பட்டு - தூக்கி எறியப்படுவார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். எனவே…..ஒருவழிப் பாதைப் பயணத்தை இன்றோடு முடித்துக் கொள்வோம். காரணம் அதன் முடிவு … "தீச்சூளையும், அழுகையும், அங்கலாய்ப்புமாக இருக்கும்."
என்று மத்தேயு நற்செய்தி 13:42, மற்றும் 50 வது வசனங்களில் இருமுறை தெளிவாக இறைமகன் எச்சரிக்கின்றனர். இன்றைய சமூக உறவுகளில் நாம் சந்திக்கும் விரிசல்களுக்கு "நான் கூறுவதை இவர் அல்லது அவர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள்தான்" காரணம் என்பதை நாம் மறுக்க முடியுமா?. நமது பயணம் இறைவனோடு இணைந்த இருவழிப் பயணமாக அமையட்டும். ஆம், நமது தேவையோ ; சந்தேகமற நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக மாற வேண்டும் என்பதே... அப்படி நிகழும்போது ; அனைத்தும் நமக்குச் சேர்த்து அளிக்கப்படும் என்ற இறைமகனின் உறுதி தரும் வார்த்தையிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.
"இறைவனின் பாதை - இருவழிப் பாதை" என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக, தேவைகள் பலவானாலும் தேடல் ஒன்றேயென விண்ணகம் நோக்கி, நானே வழி என்ற அவரோடு இணைந்து பயணிப்போம் ; மண்ணில் இறையாட்சி மலர்ந்திடவே.