மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 12: 13, 16-19 | உரோமையர் 8: 26-27 | மத்தேயு 13: 24-43

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்







நீடித்த வாழ்வு நமக்குக் கிடைக்கின்றது

ஒரு காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் தன் இரு சீடர்களை அழைத்தார். ஒரு சீடரிடம், ஊருக்குள் போய் ஒரு நல்ல மனிதரை அழைத்து வா' என்றார். அதேபோல் மற்றொரு சீடரைப் பார்த்து, ஊருக்குள் போய் ஒரு கெட்ட மனிதரைக் கூட்டி வா' என்றார். இருவரும் போனார்கள். ஒரு வாரம் தேடினார்கள். ஆனால் வெறும் கையோடு திரும்பினார்கள். யாரும் கிடைக்க வில்லையா? என்று கேட்டார் முனிவர். குருவே எல்லா இடங்களையும் தேடி அலைந்தேன். ஒரு நல்லவர் கூட கிடைக்கவில்லை. எல்லாரிடத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது' என்றார். இரண்டாவது சீடர் வந்து, குருவே, தேடாத இடமே இல்லை . ஆனால் ஒரு கெட்டவர் கூட கிடைத்த பாடில்லை. ஏனென்றால் எல்லாரிடத்திலும் ஏதாவது ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது' என்றார்.

உண்மையும் பொய்யும் சேர்ந்ததுதான் இந்த உலகம். உப்பும் தண்ணீ ரும் கலந்து தான் கடலாகிறது. இரவும் பகலும் சேர்ந்துதான் ஒரு நாள் உருவாகிறது. பள்ளமும் மேடும் சேர்ந்துதான் பாதை ஆகிறது. பயிரும் களையும் சேர்ந்துதான் நிலமாகிறது. என் இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வாழ்க்கையே அமைகிறது. இதில் நல்லவரும் கெட்டவரும் வாழ்கின்றனர்.

எல்லாம் வல்ல , முடிவற்ற அன்பும், முடிவற்ற நன்மையும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரென்றால் உலகில் எப்படித் தீமை ஆட்கொள்ள முடியும். ஏன் தீமையை உடன் களைவதில்லை என்ற கேள்வியை மனிதன் கேட்கிறான். கடவுள் நல்லவர் (மாற். 10:18). இதற்குப் பதில் தரும் வகையில் தான் இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்படுகின்றது. தீமை என்பது இறைவனிடமிருந்து வருவது அல்ல. சாத்தானின் செயல். மனிதரின் சுதந்திரச் சக்தியால் தானே தனக்குத் தேர்ந்தெடுப்பது நல்லது அல்லது தீயது. ஆனால் இறைவன் மனிதனின் சுதந்திரத்தை மதிக்கின்றவர். பழைய ஏற்பாட்டிலே மோசே மக்களை நோக்கிச் சொன்னார்: "உங்களுக்கு வாழ்வையும், சாத்தான் உண்டாக்கிய சாவையும் முன் வைக்கின்றேன். ஆனால் உண்மையான வாழ்வைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு. இதே வார்த்தைகளைத் தான் யோசுவா, மோசேக்குச் சொன்னார்.

ஆனால் அன்பார்ந்தவர்களே! நாம் சில நேரத்தில் இது என் தலைவிதி அல்லது இவன் தலை எழுத்து என்று பதில் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியிலே ஒரு விளக்கம் தரப்படுகின்றது. தோட்டத்தின் ஊழியன், தன் தலைவனிடம் போய், நான் போய்க் களைகளைப் பிடுங்கி எறியவா என்ற கேட்டவுடன் அதைத் தலைவர் தடுக்கின்றார். நீ களையை பிடுங்கும்போது பலன் தரும் நல்ல பயிரும் பிடுங்கப்படும். தீயவர் என்பவரிடத்தில் நல்லவையும் உண்டு. நல்லவரிடத்தில் தீயவையும் உண்டு. தீயவரிடத்தில் நல்லதும் வரலாம். எனவே அவசரப்பட வேண்டாம். ஒருவேளை காலம் தாழ்த்தும் நிலை ஒருவரை நல்லவராக்கலாம் என்று ஆண்டவர் கூறுகின்றார். நமக்காக இறைவன் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லோரும் மனம் மாறவேண்டும் என விரும்புகிறார் (2 பேதுரு 3:9). எனவே இந்த உவமையின் மூலம் நீடித்த வாழ்வு நமக்குக் கிடைக்கின்றது என்றால் நாம் மனம் திரும்பி நல்லதை தேர்ந்தெடுத்து வாழ்வு பெறவேண்டும் என்றுதான் இறைவன் வயது கூட்டித் தருகின்றார். எப்படித் தெரியுமா?

தாய்லாந்து தேசத்தில் ஒருவகையான குரங்குகள் உண்டு. அவைகள் மாசாக்கா என்று அழைக்கப்படுகின்றன. மக்களுக்குப் பலவகையான தொல்லைகள் கொடுக்கும் குரங்கு வகைகள். ஆனால் மக்கள் அவற்றை அழித்து ஒழிப்பதில்லை. ஏனெனில் இந்த குரங்குகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளார்கள். நாட்டிற்கும் மக்களுக்கும் வாழ்வுக்கு ஏற்ற பண வசூல் கிடைக்கிறது. இதேபோல்தான் சுதந்திரத்தில் தவறான பாதையில் சென்று மற்றவருக்குப் பாரமாக இருக்கிறார்கள் மக்கள் சிலர். ஆனால் கடவுள் இவர்களை உடன் தண்டிப்ப தில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் அன்புகாட்டி மனம் திரும்ப சந்தர்ப்பம் கொடுக்கிறார். நமக்காக அவர் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லோரும் மனம் மாற வேண்டும் என விரும்புகிறார் (2 பேதுரு. 3:9). இந்தச் செய்தியை நாம் ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் கடவுள் உலகத்தை உண்டாக்கியபோது (தொ.நூ. 1:31) அவை நல்லவை எனக் கண்டார். இடையில் தீமைகளும் தோன்றின (தொ.நூ .6:5-6).

இறைவன் இறுதியாக ஒரு நம்பிக்கையையும், எச்சரிக்கையையும் வைக்கின்றார்! அலகை வல்லமை உடையவன் அல்ல. இயேசு கிறிஸ்து உலகை வென்றுவிட்டார் (1 கொரி. 15:55). சாவே உன் வெற்றி எங்கே. சாவே உன் கொடுக்கு எங்கே என்று கேட்கிறார் பவுல். சாத்தானையும் முறியடித்துவிட்டார். உலக முடிவில் சாத்தானின் கொட்டம் முடிவடையும். அப்போது கந்தக நெருப்பில் அவனும் அவர் சகாக்களும் சுட்டு எரிக்கப்படுவார்கள். உண்மைக்கும் பொய்மைக்கும், இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நல்லவை கெட்டவைக்கு நடந்த போராட்டம் முடிவு பெறும். இறுதியில் பொய் தோல்வி அடையும். உண்மையே வெல்லும். எனவே இயேசுவின் வருகையை எதிர்நோக்கி , (மத். 6:13 லூக். 11:4) எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் என்று விழிப்போடு செபிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விண்ணரசு என்றால் என்ன?

இன்றைய நற்செய்தியின் மையக் கருத்து விண்ணரசு. விண்ணரசு என்றால் என்ன? என்பதற்கு ஓர் அற்புதமான விளக்கத்தைப் புனித பவுலடிகளார் தந்துள்ளார். இறையாட்சி (விண்ணரசு) என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது (உரோ 14:17).

சுவிட்சர்லாந்து நாட்டின் உச்சநீதி மன்றத்திலே ஓர் அழகிய ஓவியம் உண்டு ! அந்த ஓவியத்திலுள்ள நீதி தேவதையின் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்படாமலும், அதன் கையிலிருக்கும் வாளின் முனை அதன் பாதங்களுக்கு முன்னேயிருக்கும் ஒரு புத்தகத்தைச் சுட்டிக்காட்டுவது போலும் அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் இறைவார்த்தை (The Word of God) என்று எழுதப்பட்டிருக்கின்றது. நீதிபதிகள் இறைவார்த்தையை அளவுகோலாக வைத்தே நீதி வழங்க வேண்டும் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகின்றது. ஆக, நீதி என்பது இறைவார்த்தையின் ஒளியில் அவரவர்க்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பதாகும்.

இரண்டாவது உலகப் போரின்போது இரவு நேரத்தில் இலண்டன் மீது குண்டு மாரி பொழியப்பட்டது. மக்கள் சுரங்கங்களில் இரவு நேரத்தைக் கழித்தார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவப் பெண் மட்டும் அவள் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல், இரவு நேரத்தில் அவள் வீட்டிலேயே தங்கி அமைதியாக உறங்கி எழுந்தாள். உனக்குப் பயமே இல்லையா? என்று கேட்டபோது, அவள் அமைதி ததும்பும் முகத்தோடு, நான் உறங்கினாலும், என் கடவுள் உறங்குவதில்லை என்றாள். என் கடவுள் என்னோடு இருக்கின்றார். ஆண்டவரே என் ஆயர் ; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார் (திபா 23:1-2) என்று திருப்பாடல் ஆசிரியரோடு நாம் பாடும்போது நம் உள்ளத்திலே ஓர் இதம் பிறக்கும், ஒரு நம்பிக்கை உணர்வு பிறக்கும். அந்த இதத்திற்குப் பெயர்தான் நம்பிக்கை, அந்த நம்பிக்கை உணர்வுக்குப் பெயர்தான் அமைதி .

நல்லுறவு என்னும் மலருக்குள்ளிருக்கும் தேன்தான் மகிழ்ச்சி. நமக்கும் இறைவனுக்குமிடையே , நமக்கும் நம் அயலாருக்குமிடையே, நமக்கும் நம் மனசாட்சிக்குமிடையே , நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்குமிடையே நல்ல உறவு நின்று நிலவுமானால் நமக்குள் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ; அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

உண்மையான நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கடவுளிடமிருந்து மட்டுமே நாம் பெற முடியும்; செபத்தால் மட்டுமே இவற்றை நம்முடையவையாக்கிக்கொள்ள முடியும் (முதல் வாசகம்).

இதுவே நமது செபமாக இருக்கட்டும் : தூய ஆவியாரே, நாங்கள் நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் எல்லாம் வல்ல பரமதந்தையிடமிருந்து பெற்று வாழ எங்களுக்குத் துணையாக வாரும்! பாவிகளாகிய , பலவீனர்களாகிய எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும். எங்கள் உள்ளங்களை ஊடுருவிப்பாயும் ஆற்றல் மிக்க ஆவியாரே, உமது பரிந்து பேசுதலின் மீது முழு நம்பிக்கை வைத்து, புனித பவுலடிகளாரின் அறிவுரைக்குச் செவிமடுத்து (இரண்டாம் வாசகம்) உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம். எங்களை நீதியினாலும், அமைதியினாலும், மகிழ்ச்சியினாலும் அருள்பொழிவு செய்து எங்களை வாழ்வாங்கு வாழவையும். இந்த மண்ணகத்திலேயே விண்ணரசைச் சுவைக்கும் பாக்கியத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தாரும். ஆமென்.

மேலும் அறிவோம் :

முதல் இலார்க்(கு) ஊதியம் இல்லை மதலையாம்
சார்பு இலார்க்(கு) இல்லை நிலை (குறள் : 449).

பொருள் : முதலீடு செய்யப் பொருளில்லாத வணிகர்க்கு , அதனால் வரக்கூடிய ஈட்டமாகிய ஊதியம் எதுவும் கிடைக்காது. அதுபோன்று, தளர்வுற்றபோது ஆதரித்துத் தாங்கும் பெரியோர் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லாது போகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் மிகுந்த பொறுமையோடு மனிதர்களை ஆள்கிறார்

ஓர் ஆலமரத்தடியில் படுத்து உறங்கிய ஒருவர் கண் விழித்தார். அம்மரத்தின் அருகாமையில் இருந்த ஒரு சுரைச் செடியில் பெரிய சுரைக்காய் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து கடவுளிடம், "கடவுளே, உமக்கு அறிவு இருக்கிறதா? இவ்வளவு பெரிய ஆலமரத்துக்குச் சிறிய பழத்தையும், இவ்வளவு சிறிய சுரைக் கொடிக்குப் பெரிய காயையும் என் படைத்தாய்?" என்று கேட்டார். அவ்வேளையில் ஆலம்பழம் ஒன்று அவர் கண்மேல் விழுந்தது. உடனே, "கடவுளே! என்னை மன்னித்துடு; ஆலமரத்திற்குப் பெரிய பழம் இருந்திருந்தால், இந்தேரம் என் கண்கள் சிதறிப் போயிருக்கும்" என்றார்.

பலவேளைகளில் இயற்கைச் சீற்றங்களையும் மனிதரின் அவலங்களையும் கண்டு கடவுளைக் குறை கூறுகிறோம். ஓர் ஊரிலே ஒரே தெருவிலே ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன. ஒரு பெண் திருமணம் செய்து, பூவும் பொட்டும் வைத்து, கழுத்தில் தாலி அணிந்து மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதே தெருவில் வேறொரு பெண் தன் கணவரைப் பறி கொடுத்து, தாலி அறுபட்டு, வெள்ளைப் புடவை அணிந்து, விதவையாகக் காட்சி அளிக்கிறார். வேறுபட்ட இரண்டு காட்சிகளைக் கண்ட புலவர் பக்குடுக்கை நன்கணியார், கடவுள் பண்பில்லாமல் உலகைப் படைத்துள்ளார்; இவ்வுலகம் கொடியது எனப்பாடியுள்ளார்.

படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம் - புறம் 194

இவ்வுலகில் ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் என்பது கடவுளின் நியதி என்றால் அக்கடவுளே பிச்சை எடுத்து அழியட்டும் என்று கடவுளையே சபிக்கிறார் வள்ளுவர்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் (குறள் 1062)

கடவுள் இவ்வுலகை நன்றாக, மிகவும் நன்றாகப் படைத்தார். "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன" (தொநூ 1:31), நன்மையே உருவான கடவுளிடமிருந்து தீமை வரமுடியாது, "சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழவோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை" (சாஞா 1;13) அப்படியானால் கடவுளின் படைப்பில் தீமை எவ்வாறு துழைந்தது? இக்கேள்விக்கு "வயலில் தோன்றிய களைகள் உவமை" மூலம் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பதிலளிக்கிறார். வயலில் நல்ல பயிர்கள் நடுவே களைகள் தோன்றுகின்றன. இக்களைகளை விதைத்தவன் பகைவன், அலகை. அலகை யார்? பொய்யன், பொய்மையின் பிறப்பிடம் (யோவா 8:44); மனிதர்களை விழுங்க முயலும் கர்ச்சிக்கும் சிங்கம் (1 பேது 5:8), உலகம் முழுவதும் அவன் பிடியில் இருக்கிறது ( 1 யோவா 5:19).

களைகளை உடனடியாகக் களையக் கடவுளிடம் சக்தி இல்லையா? இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "கடவுள் மிகுந்த பொறுமையோடு மனிதர்களை ஆள்கிறார்" (சாஞா 12:18), பதிலுரைப் பாடல் கூறுகிறது: "கடவுள் அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்" (திபா 86:15), பொறுமை உள்ள கடவுள் உடனடியாகத் தீயவர்களை அழிக்காமல், இறுதி நாள் வரை பயிர்களுடன் களைகளையும் வளர அனுமதிக்கிறார். அறுவடை நாளில் களைகளைப் பறித்துச் சுட்டெரிப்பார் (மத் 13:30).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது உலகம் புத்துயிர் பெறும் புதிய வானகமும் புதிய வையகமும் மலரும். அந்நாள்வரை உண்மையும் பொய்யும், ஒளியும் இருளும், சாவும் வாழ்வும் கலந்தே இருக்கும். உலக முடிவில்தான் தீயோர் தீக்குளையில் தள்ளப்படுவர்; நேர்மையாளர் விண்ணகத்தில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் (மத் 13:43), நெறிகெட்டவனை ஆண்டவர் வாயினால் ஊதி ஒழிப்பார் (2 தெச 2:6), மனிதர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக நெருப்பு ஏரியில் எறியப்படும் (திவெ 20:10).

இறுதியில்தான் நன்மை தீமையை வெல்லும் என்று கூறிக்கொண்டு நாம் செயலற்று இருக்கக் கூடாது. இப்போதே தீய சக்திகளின் அச்சை முறிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் அயோக்கியதனத்தை, மதவாதிகளின் போலித்தனத்தை, வன்முறையாளர்களின் வக்கிரப் புத்தியை, வியாபாரிகளின் கலப்படத்தை. உலகச் சந்தையின் இறையாண்மையை. வல்லரசுகளின் புதிய காலனி ஆதிக்கத்தை இனம் கண்டு வோறுக்க வேண்டும். ஏனெனில் இத் தீய சக்திகளின் மூலமாக அலகை தனது இருளின் ஆட்சியைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

ஓர் ஆலமரத்தடியில் குட்டிச் சாத்தான்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட லூசிப்பேய் அவற்றைச் சாட்டையால் அடித்து, "என் மனிதர்களைக் கெடுக்காமல் சோம்பேறிகளாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அக்குட்டிச் சாத்தான்கள், "தலைவா! தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் மனிதர்கள் எங்களைவிட நன்றாகச் செய்கிறார்கள்!" என்றன. சாத்தானின் கையாட்கள் திருச்சபையிலும் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்கு உரியது. "திருச்சபை தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளது" என்று திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியது குறிப்பிடத்தக்கது. எனினும், நாம் மன விரக்தி அடையாது தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். இப்போராட்டத்தில் தூய ஆவியார் நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று திருத்தூதர் பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார் (உரோ 8:26), இவ்வுலகின் தலைவனாகிய அலகைக்குக் கிறிஸ்துவின் மேல் அதிகாரமில்லை (யோவா 14:30). கிறிஸ்து தமது இறுதிச் செபத்தில், "தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்று வேண்டு கிறேன்" (யோவா 17:15) என்று நமக்காக மன்றாடியுள்ளார். அவரது மன்றாட்டு வீண்போகாது.

புனித யோவான் கூறுகிறார்: "உங்களுள் இருப்பவர் (கடவுள்) உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவா" (1 யோவா 4:4). புனித யாக்கோபு கூறுகிறார்: “அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும் (யாக் 4:7), எனவே, நாம் கடவுள் நம் சார்பில் இருப்பதை உணர்ந்து தீய சக்திகளை எதிர்ப்போம். அலகையின் அச்சாணியை முறிப்போம்.
"எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” (மத் 6:13).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொறுமை தெய்வீகமானது

ஊழலும் இடறலும் மல்கிய யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அரசியல் உலகில் ஊழலுக்குப் பஞ்சமில்லை. திருஅவையில் இடறல்களும் கொஞ்சமல்ல.

இத்தகைய இன்றைய உலகைக் காப்பது எது? மனித அறிவும் ஆற்றலுமா? வளர்ந்து பெருகுகிற வல்லரசுகளா? ஐ.நா. நிறுவனமா? விஞ்ஞானத்தின் வியத்தகு சாதனைகளா?

அல்ல. அல்ல. இறைவனின் எல்லையற்ற பொறுமையே உலகைக் காக்கிறது.

பயிர்களிடையே களை. நல்லவர்களிடையே தீயவர். புனிதர்களிடையே பாவிகள் - மனித சமுதாயத்தில் மட்டுமல்ல, இறைவனின் புனித சபையிலும் கூட.

தீர்ப்புநாள் வராதா, தீயவரை அழிக்காதா என்று ஆத்திரத்தோடு காத்திருந்த தன் காலத்து மக்களை அமைதிப்படுத்தத் திருத்தூதர் பேதுரு கூறிய அறிவுரை: "ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும் ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலர் கருகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார்" (II பேதுரு 3:8,9)

கடவுளின் புனித வயலில் நீ பயிரா, களையா? இறைநம்பிக்கை இல்லாத குடியானவன் ஒருவன் வார இதழ் ஒன்றில் எழுதினான்: "ஆடிப்பட்டம் தேடி விதைத்தேன். நல்ல அறுவடை இருக்க வேண்டுமென்று நான் என்றும் மன்றாடியதில்லை. தை பிறந்தது, வயலும் அறுவடைக்கு வந்தது. என் களஞ்சியங்கள் நிரம்பின. விளைச்சல் மிகுதியால் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டினேன். நல்லவர்களுக்கு வெகுமதியும் கெட்டவர்களுக்கு தண்டனையும் கொடுக்கும் கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?”. வாசகர் ஒருவர் மறு வார இதழில் பதிலாக எழுதினார், “கடவுள் தை மாதத்தில் தன் கணக்கை முடிப்பவர் அல்ல” என்று. ஆம், அரசுதான் அன்றே கொல்லும், தெய்வமன்று! லூக். 12:13-21இல் இயேசு சொன்ன அறிவற்ற செல்வனின் உவமையும் நினைவு கூறத்தக்கது. “என் நெஞ்சமே உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அவனிடம் “அறிவிலியே, இன்று இரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்போது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?” என்று கேட்டார் கடவுள்.

தவறு செய்த கணத்திலேயே தண்டனை என்பது இறைவனின் நியதியாகஇருந்தால் எத்தனைபேர் இன்று உயிரோடு இருப்போம்? மீட்பின் திட்டத்தில் நாம் காணும் கடவுளின் பொறுமைக்குக் காரணம் என்ன?

1. இறைவனின் இரக்கப்பெருக்கு:
கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார். மனிதனோ கடவுளைத் தன் சாயலாக்குகிறான் - தன்னைப் போலத் தண்டிப்பவராக, கண்டனம் செய்பவராக, பகைப்பவராக, பழிவாங்கத்துடிப்பவராக, களைந்தெறிபவராகக் காண்கிறான். சிலை வழிபாடு என்கிறோமே - கடவுளை இப்படிக் கொடிய சாயலாக்குவதுதான் சிலை வழிபாட்டின் கோர வடிவம்!

பொறுமை தெய்வீகமானது! அது கோழைத்தனம் அல்ல. அந்த இறைவனின் வியத்தகு பொறுமைக்கு அடித்தளம் என்ன தெரியுமா? "உமது ஆற்றலே நீதியின் ஊற்று ... நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர். மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய உமக்கு வலிமை உண்டு" (சா.ஞா. 12:16,18)

அதோ விபசாரத்தில் கையும் மெய்யுமாக அகப்பட்ட அந்தப் பெண் ஓநாய்களுக்கிடையே ஆடாக நடுங்கினாள். ஓங்கிய கல் ஏந்திய கையோடு வெறியர் கூட்டம். இயேசுவின் கையும் ஓங்கியது. உயர்ந்தது - கல் எறிய அல்ல, அருள் சொரிய, மன்னிப்பு வழங்க. “நான் தீர்ப்பிடேன். இனி பாவம் செய்யாதே" (யோ. 8:11). கனிவான அந்தச் சொற்கள் களையாக நின்ற அவளைப் பயிராக வன்றோ மாற்றியது! விபசாரியையும் மன்னித்து அனுப்பிய பொறுமை, மகதல மரியாவை ஆட்கொண்டு அணைத்த பொறுமை, ஊதாரி மகனுக்காக விழித்துக் காத்திருந்த பொறுமை, இன்று நமக்காகவும் காத்திருக்கிறது.

2. நம்மீது வைத்த நம்பிக்கை: நின்று கொல்லும் தெய்வம். உண்மைதான். ஆனால் அது நிற்பது கொல்வதற்காக அல்ல. வேறு எதற்காக?

பயிரோடு களை வளர்வதா? வளர விடுவதா? இது கதையிலும் உவமையிலும் தான் நடக்கும். வயலிலும் உழவுத் தொழிலிலும் நிகழாது. வயலில் விளையும் பயிர் பயிர்தான், களை களைதான். ஒரு நாளும் பயிர் களையாகாது. களை பயிராகாது. களையால் பயனும் இல்லை. பயிருக்குத்தான் கேடு. ஆனால் மனித சமுதாய வயலில் பயிரும் மனிதனே. களையும் மனிதனே. களை பயிராகலாம். பயிர் களையாகலாம். திருத்தூதன் யூதாசு துரோகியாகவில்லையா? வலது பக்கத்துக் கள்ளன் புனிதனாகவில்லையா? “இடறி விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா?' (எரே. 8:4)

எனவே, களை பயிருக்குத் தீங்காக இருந்தாலும் பாவி புனிதனுக்கு இடறலாக இருந்தாலும், களை பயிராகாதா, தீயவன் திருந்த மாட்டானா என்ற இறைவனின் ஏக்கமும் நம்பிக்கையுமே களையை வளர விடுகிறது. தீயவனை விட்டு வைக்கிறது. "உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டு விடும் பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்" (சா.ஞா. 12:20).

களையைக் குறிக்கும் Weed என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: "பயிரிடப் படாமல் வளரும் பயனற்றதும் கேடு விளைவிப்பதுமான தாவரம்”. களை பற்றிய புதிய அறிவியல் பார்வை என்ன தெரியுமா? "தன்னிடம் உள்ள நற்பண்பு, நற்பயன் கண்டுபிடிக்கப்படாத தாவரம்”. A plant whose virtues have not yet been discovered என்கிறார் இரால்ஃப் வால்டோ எமர்சன். களைகளும் கூட நல்லது. அவையும் கடவுளின் படைப்புத்தானே?

களைகளின் மறுமலர்ச்சிக் காலம் இது. களைகள் என்று களைந்தெறிந்ததெல்லாம் சத்தான உணவாக, குணம் தரும் மருந்தாக மாறிக் கொண்டிருக்கிறது. புல் பூண்டுகளில் மட்டுமல்ல, மனிதர்களிலும் களைகள் என்று கருதப்படுபவர்கள் முற்றும் கண்டனத்துக்குரியவர்கள் அல்ல, உதவாக்கறை என்று ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்ற சிந்தனையின் காரணமாகவும் களைகளை விட்டு வைக்கக் கடவுள் விரும்புகிறாரா?!

"நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்யும், நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழைபெய்யச் செய்யும் இறைவன்" (மத். 5:45), நிச்சயமாக மனித வாழ்க்கையில் “நீதியை வெற்றிபெறச் செய்யும் வரை நெரிந்த நாணலை முறியார், புகையும் தீயை அணையார்”(மத். 12:19,20).

கிறிஸ்தவம் தோற்றுவிட்டதா என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை காண முயன்றார் ஆங்கில மேதை G.K. செஸ்டர்டன். கொலை, கொள்ளை, வறுமை, பிணி, விபத்து என்று பல அவலங்கள் உலகை ஆட்டிப் படைக்கும் நிலையில் இறையாட்சி வந்து விட்டது என்று கிறிஸ்தவம் போதித்தால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? கிறிஸ்தவம் பொய்த்துவிட்டது என்றல்லவா பொருள் என்று ஒரு சிலர் சொல்லலாம். இதற்கு செஸ்டர்டன் சொல்லும் பதில் : கணிசமான மக்கள் நற்செய்தியின் போதனைப்படி வாழத் தொடங்கிவிட்டால் குறிப்பாக இயேசுவின் மலைப்பொழிவை வாழ்வாகக் கொண்டால் உலகமே வேறுபட்டதாக மாறாதா! ஒவ்வொருவரும் அன்னை தெரசாவைப் போல் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தால் உலகில் தீமைகள் அடிச்சுவடு இல்லாமல் மறைந்துவிடும். ஆயினும் இறையாட்சி மெதுவாக அமைதியில் வளர்ந்து கொண்டே இருக்கிறது - புளிப்பு மாவைப் போல்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கதிர்களும் களைகளும்

புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டியும், இயேசுசபை அருள்பணியாளருமான, Anthony de Mello அவர்களின் 'One Minute Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை இது:

குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள், சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை, தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று, சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை." உண்மைக்கும், நமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதைகளே என்று, இயேசு உணர்ந்திருந்தார். எனவே, அவர், இறைவனையும், இறையரசையும் அறிமுகம் செய்வதற்கு உவமைகளைப் பயன்படுத்தினார். சென்ற ஞாயிறு, 'விதைப்பவர் உவமை'யை வழங்கிய இயேசு, இந்த ஞாயிறு, மூன்று உவமைகளை வழங்குகிறார். வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு என்ற இந்த மூன்று உவமைகளும், விண்ணரசின் பண்புகளை விளக்கும் உவமைகள் என்று இயேசு கூறியுள்ளார்.

விண்ணரசின் முக்கியப் பண்பான வளர்ச்சி பற்றி, இவ்வுவமைகள் வழியே, இயேசு சொல்லித்தருகிறார். எந்த ஒரு வளர்ச்சியும், மின்னலைப்போல் தோன்றி மறைவது இல்லை; உண்மையான வளர்ச்சி, பல தடைகளைத் தாண்டி, மெதுவாக, ஆனால், உறுதியாக, இறுதியாக வெளிப்படும்; அதைக் காண்பதற்கு, பொறுமை தேவை என்ற பாடங்களை இன்றைய மூன்று உவமைகளும் நம் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. அனைத்திற்கும், உடனுக்குடன் தீர்வுகள் காணவேண்டும் என்ற அவசரம் கொண்டிருக்கும் நமக்கு, இந்த அவசரத்தால், பயிரையும், களையையும், நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்துப்பார்க்கப் பொறுமையின்றித் தவிக்கும் நமக்கு, இன்றைய உவமைகள், 'வேகத் தடையை'ப் (Speed breaker / speed bump) போல வந்து சேருகின்றன.

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் (மத்தேயு 13: 3) என்று சென்ற வார உவமையை அறிமுகம் செய்த இயேசு, இந்த வாரம், இருவர் விதைப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்:

மத்தேயு 13: 24-25

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்” என்று இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார்.

இந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, விதை விதைத்தவரைக் காட்டிலும், இரவோடிரவாக, களைகளை விதைத்துச் சென்றவர், நம் கவனத்தை ஈர்க்கின்றார், நமக்குள் நெருடல்களை உருவாக்குகின்றார். எந்த ஒரு நிலத்திலும், பயிர்களுடன் ஒரு சில களைகளும் வளர்வது இயற்கைதான். ஆனால், களைகள், பயிர்களைவிட அதிகம் பெருகவேண்டும் என்ற எண்ணத்துடன், களைகளை விதைப்பவர், இன்றைய உலகில், திட்டமிட்டு தீமைகளை வளர்ப்போரை நினைவுபடுத்துகிறார். தானாகவே மலிந்துவரும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் அவலத்தை நாம் அறிவோம்.

எடுத்துக்காட்டாக, ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், குற்றங்களில் சிக்கி, அந்நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்நிறுவனங்கள் உருவாக்கிய கணணி மென்பொருள்களில் 'virus' எனப்படும் களைகளை நுழைத்துச் சென்றனர் என்பதை நாம் அறிவோம். கணணிகள் வழியே, தகவல் தொழிநுட்ப உலகில் அவ்வப்போது விதைக்கப்படும் களைகளான 'virus'கள் இவ்வுலகிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. இவ்வாண்டு மேமாதம், கணணி உலகில் நிகழ்ந்த ஒரு 'சைபர் தாக்குதலால்' (Cyber attack) 99 நாடுகளில், கோடிக்கணக்கான கணணிகள் செயலிழந்தன. குறிப்பாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் மருத்துவமனைகள் முடங்கிப்போயின.

இறையரசின் வளர்ச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுபோல், இறையரசிற்கு தடையாக வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதிலும் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் முதல் உவமையில் தெளிவாக்குகிறார். களைகளைக் கண்டதும், அவற்றை அகற்றிவிட விரும்பிய பணியாளர்களிடம், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்” என்று நில உரிமையாளர் அறிவுரை வழங்குகிறார்.

களைகளை அகற்றிவிட பணியாளர்கள் காட்டிய அவசரத்தை, பல்வேறு நாடுகளில், காவல்துறையும், நீதித்துறையும் காட்டிவருகின்றன. களைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில், இத்துறைகள் காட்டியுள்ள வேகமும், அவசரமும், பல அப்பாவியான பயிர்களைப் பலிவாங்கியுள்ளன என்பது, நாம் அடிக்கடி கேட்கும் செய்திதானே!

இவ்வாண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான ஒரு செய்தி, பயிரா, களையா என்பதை அறியும் பொறுமையின்றி செயலாற்றிய காவல் மற்றும் நீதித்துறைகளைப் பற்றியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கான்சாஸ் நகரில், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஓர் இளைஞர், 17 ஆண்டுகள் சென்று, குற்றமற்றவர் என்று, கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்டார். ரிச்சர்ட் அந்தனி ஜோன்ஸ் என்ற இவ்விளைஞர், 1999ம் ஆண்டு, பூங்கா ஒன்றில் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டதால், 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்தக் கொள்ளை நடந்ததைக் கண்ட சிலர், அதைச் செய்தது ரிச்சர்ட்தான் என்று அடையாளப்படுத்தியதை வைத்து, நீதிபதியும், 'ஜூரி' என்றழைக்கப்படும் நடுவர் குழுவும் இணைந்து, ரிச்சர்டுக்குச் சிறைதண்டனை வழங்கினர். தான் இக்குற்றத்தைச் செய்யவில்லை என்றும், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில், தான் மற்றோர் இடத்தில் இருந்ததாகவும், இளையவர் ரிச்சர்ட், பலமுறை எடுத்துச் சொல்லியும், பயனின்றி போனது.

அவர் சிறையில் 15 ஆண்டுகள் கழித்தபின், அச்சிறைக்கு வந்த வேறு சில கைதிகள், ரிச்சர்ட், தங்களுக்குத் தெரிந்த மற்றொரு நண்பரைப்போலவே இருக்கிறார் என்று கூறினர். அந்த நண்பரின் பெயரும் 'ரிச்சர்ட்' என்பதை அவர்கள் கூறியதும், ரிச்சர்ட், தன் வழக்கறிஞர்கள் வழியே, இந்த ‘மற்றொரு ரிச்சர்ட்டை’க் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டாவது ரிச்சர்டின் புகைப்படங்கள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இருவரும், ஒரே தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருந்ததால், பூங்காவில் கொள்ளையடித்தவர் யார் என்பதை அடையாளப்படுத்தியவர்கள் தவறு செய்திருக்கலாம் என்று நீதிமன்றம் உணர்ந்து, சிறையில் இருந்த ரிச்சர்ட் அவர்களுக்கு விடுதலை வழங்கியது. குற்றம் செய்த ஒருவரைப்போல இருந்த ஒரே காரணத்திற்காக, இளையவர் ரிச்சர்ட், தனக்கு விதிக்கப்பட்ட 19 ஆண்டுகள் தண்டனையில், 17 ஆண்டுகளை சிறையில் கழிக்க நேரிட்டது.

தன் விடுதலையைத் தொடர்ந்து, இளையவர் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன: "ஒரே வகையான தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருப்பது, மிக, மிக அரிதான ஓர் ஒற்றுமை. இதைக் கொண்டு, முதலில், எனக்கு தண்டனையும், இப்போது, விடுதலையும் கிடைத்திருப்பது, அரியவகை அதிசயம் என்றே சொல்லவேண்டும். இதை நான், அதிர்ஷ்டம் என்று நம்பமாட்டேன். இது எனக்குக் கிடைத்த ஆசீர் என்றே நம்புகிறேன்" என்று ரிச்சர்ட் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக, 17 ஆண்டுகள் சிறையில் துன்புற்றபின்னரும், தனக்குக் கிடைத்த விடுதலை, வெறும் ‘அதிர்ஷ்டம்’ அல்ல, அது ஓர் 'ஆசீர்வாதம்' என்று கூறுமளவு பக்குவப்பட்டிருந்த இளையவர் ரிச்சர்ட் அவர்கள், சிறையில் இருந்த பல்வேறு களைகள் நடுவே ஒரு பயிராகவே வளர்ந்தார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. பயிரையும், களையையும் பிரித்துப்பார்க்கும் பொறுமையின்றி, அல்லது, பல வேளைகளில், களைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அப்பாவி மக்களை பழிவாங்கும் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும், இறைவன், பொறுமையையும், நேரிய சிந்தனையையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

பயிரையும், களைகளையும் பகுத்துப் பார்க்க நமக்குப் பொறுமை தேவை என்பதே, இவ்வுவமையில் இயேசு சொல்லித்தரும் முக்கியமானப் பாடம். 'அகழ்ந்தாரைத் தாங்கும் நிலம்' என்று, நிலத்தை, நாம், பொறுமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறோம். தன்னில் விதைக்கப்பட்ட பயிர்களையும், களைகளையும் எவ்விதப் பாகுபாடுமின்றி, வளரவிடுகிறது, நிலம். அந்த நிலத்தைப் பின்புலமாகக் கொண்டு தன் உவமையைக் கூறியுள்ள இயேசு, பொறுமையுடன் காத்திருந்து, பயிர்களும், களைகளும் முற்றிலும் வளர்ந்தபின் அவற்றை பிரிப்பதே இறையரசின் அழகு என்று, இவ்வுவமையில் சொல்லித்தருகிறார்.

அதேவண்ணம், கடுகுவிதை உவமையும், புளிப்பு மாவு உவமையும் பொறுமையைச் சொல்லித்தருகின்றன. விதைகளை விதைத்த மறுநாளே செடிகளை எதிர்பார்ப்பது மதியீனம் என்பதை அறிவோம். ஒருவர் தன் வீட்டின் பின்புறம் இருந்த சிறு தோட்டத்தில் சில விதைகளை ஊன்றி வைத்தார். ஒவ்வொருநாளும் காலையில், தோட்டத்திற்குச் சென்று, மண்ணைத் தோண்டி, தான் ஊன்றிய விதைகள் வளர்ந்துவிட்டனவா என்று அவர் பார்த்து வந்தாராம். அந்த விதைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல், மாவில் புளிப்புமாவைக் கலந்தபின், அதை மூடி வைக்கவேண்டும். மாவு முழுவதிலும் புளிப்பு ஏறுவதற்குக் காத்திருக்கவேண்டும். புளிப்பு ஏறிவிட்டதா என்று பார்க்க, அந்த மாவு உள்ள பாத்திரத்தை அடிக்கடி திறந்தால், உள்ளிருக்கும் மாவில் புளிப்பெற வாய்ப்பில்லை. பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றிய கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை!

பொறுமையைப் பற்றி சிந்திக்கும்போது, இளையவர் ஒருவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டது நம் நினைவுக்கு வருகிறது. பொறுமையின்றி எப்போதும் பதட்டத்துடன் வாழ்ந்துவந்த அந்த இளையவர், இறைவனிடம் வேண்டினார்: "இறைவா, எனக்குப் பொறுமையைத் தாரும். இப்போதே, இந்த நொடியே அதை எனக்குத் தாரும்" என்று வற்புறுத்தி வேண்டினாராம்.

நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும், துரிதமாக, உடனடியாக கிடைக்கவேண்டும் என்று அவசரப்படுவது நாம் வாழும் 'உடனடி யுகத்தின்' (Instant Era) இலக்கணமாகிவிட்டது. 'துரித உணவு' (fast food) என்ற நிலையைக் கடந்து, உடனடி உணவுகளை தயாரிக்கத் துவங்கிவிட்டோம். உடனடி நூடுல்ஸ் (instant noodles), உடனடி தோசை, உடனடி இட்லி என்று, அனைத்திற்கும் 'ஆலாய்ப் பறக்க' ஆரம்பித்துவிட்டோம். அதேபோல், டிஜிட்டல் வழி தகவல் பரிமாற்றத்தால், நம் விரல் நுனியில் அனைத்துச் செய்திகளையும் ஒரே நேரத்தில் பெற விழைகிறோம். நம்மீது திணிக்கப்படும் செய்திகள், நூற்றுக்கணக்கில் நம்மை வந்தடைவதால், எந்த ஒரு செய்தியையும், ஆர, அமர, முழுமையாகப் பார்த்து, படித்து, சிந்தித்து, செயல்படும் பொறுமை நம்மிடம் இல்லை. நம்மை வந்தடையும் செய்திகளில், எவை தேவையானவை, தேவையற்றவை, எவை பயனுள்ளவை என்று தரம்பிரித்துப் பார்த்து, பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்துவிட்டோம்.

இதனால், நம் மத்தியில், உண்மையானச் செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகிய பயிர்கள் வளர்வதற்குப் பதில், நம் அவசர சிந்தனை எனும் நிலத்தில், வதந்திகள், புறணிகள், அவதூறுகள் என்ற களைகளே மண்டிக்கிடக்கின்றன. நாமும், நம் பங்கிற்கு, அடுத்தவருக்கு இச்செய்திகளை அனுப்புவதன் வழியே, அவரது தொடர்புக் கருவிகள் என்ற நிலத்தில், இந்தக் களைகளை அவசரமாக விதைத்துவிடுகிறோம்.

நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கதிர்கள், களைகள் இரண்டைும் வளர்கின்றன. கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம் என்பதை பின்வரும் கதை நமக்குச் சொல்லித் தருகிறது.

‘செரோக்கி’ (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே அவற்றின் பண்புகள் வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ அந்த ஓநாயே வெற்றிபெறும்.

நாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப் போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா? கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"கோதுமையும் களைகளும்: இறைவனின் பொறுமையும் நம் முதிர்ச்சியும்"

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 13:24-43) இயேசு மூன்று உவமைகளைக் கூறுகிறார்: கோதுமையும் களைகளும், கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு. இதில் "கோதுமையும் களைகளும்" உவமை நம் வாழ்வின் எதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

1. இறைவனின் பொறுமை (The Patience of God)

வயலில் கோதுமையோடு களைகளும் வளர்வதைக் கண்ட வேலையாளர்கள், உடனே பிடுங்கி எறியத் துடிக்கிறார்கள். ஆனால் நிலத்தின் உரிமையாளர், "அறுவடை வரை பொறுத்திருங்கள்" என்கிறார்.
• விளக்கம்: உலகம் முழுவதும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. தீயவர்களை உடனடியாகத் தண்டிக்காமல் இறைவன் கால அவகாசம் தருகிறார் என்றால், அதற்குப் பெயர் "இயலாமை" அல்ல, "இரக்கம்". தீயவர்கள் மனம் மாற அவர் வாய்ப்பளிக்கிறார்.
• சிந்தனை: நாம் மற்றவர்களைத் தீர்ப்பு வழங்கத் துடிக்கிறோம். ஆனால் இறைவன் நம்மிடம் இருக்கும் "களைகளை" (பாவங்களை) மாற்ற எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2. சிறிய தொடக்கம், பெரிய முடிவு (Small Beginnings)

கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு உவமைகள் இறைஅரசின் வளர்ச்சியைக் குறிக்கின்றன.
• பாடம்: நம்முடைய சிறிய செபங்கள், ஒரு சிறு உதவி, ஒரு சிறு புன்னகை போன்றவை சிறியதாகத் தெரிந்தாலும், அவை காலப்போக்கில் பெரிய மாற்றங்களை (கடுகு மரம் போல) உருவாக்கும் ஆற்றல் கொண்டவை.

3. ஆவியாரின் உதவி (The Help of the Spirit)

இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 8:26-27) பவுல் அடியார் ஒரு அழகான உண்மையைச் சொல்கிறார்: "நாம் எதற்காக, எப்படிச் செபிக்க வேண்டும் என்று நமக்கே தெரியாது. ஆனால் தூய ஆவியார் நம் பலவீனத்தில் நமக்குத் துணைநின்று நமக்காகப் பரிந்து பேசுகிறார்." • ஆறுதல்: நம்மிடம் வார்த்தைகளே இல்லாதபோது, நம் பெருமூச்சுகளே செபமாக இறைவனை அடைகின்றன.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்த வாரம் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை:
• தீர்ப்பு வழங்காதிருங்கள்: உங்கள் குடும்பத்திலோ அல்லது பங்கிலோ ஒருவர் தவறு செய்யும்போது, அவர்களை உடனடியாகத் தள்ளிவைக்காமல், அவர்கள் மனம் மாற இறைவனிடம் செபியுங்கள். "களைகளை" பிடுங்கும் அதிகாரம் இறைவனுடையது, நம்முடையது அல்ல.
• மனமாற்றத்திற்கான நேரம்: உங்கள் உள்ளத்தில் இருக்கும் "களைகள்" (கோபம், பொறாமை, சோம்பல்) எவையெனக் கண்டறியுங்கள். அறுவடை காலம் (முடிவுக் காலம்) வரும்முன்பே அவற்றை நற்பண்புகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
• சிறு துளி பெருவெள்ளம்: "என்னால் என்ன செய்ய முடியும்?" என நினைக்காதீர்கள். ஒரு பிடி புளிப்பு மாவு முழு மாவையும் புளிக்க வைப்பது போல, உங்கள் ஒருவரின் நற்செயல் உங்கள் குடும்பத்தையே மாற்றும்.
• தூய ஆவியாரிடம் சரணடைதல்: செபிக்கத் தெரியாத நேரங்களில், அமைதியாக அமர்ந்து "ஆவியானவரே, நீரே எனக்காகச் செபியும்" என்று அவரிடம் உங்களை ஒப்படையுங்கள்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"களைகளுக்கு நடுவேதான் கோதுமை வளர வேண்டும்; தீமைக்கு நடுவேதான் நன்மை சாட்சியம் பகிர வேண்டும். இறைவன் பொறுமையுள்ளவர், நாமும் பொறுமையோடு நன்மையை விளைவிப்போம்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 16-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (ச.ஞா. 12:13, 16-19)

பாலஸ்தீனத்திற்கு வெளியே எகிப்து நாட்டு அலஸ்சான்திரியாவில்‌ வாழ்ந்து வந்த ஒரு யூதரால்‌ கி.மு. முதல்‌ நூற்றாண்டின்‌ நடுவில்‌ கிரேக்க மொழியில்‌ எழுதப்பட்டிருக்கப்பட வேண்டும்‌; இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுல்‌ இறுதியாக எழுத்து வடிவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என அறிஞர்கள்‌ கருதுகிறார்கள்‌. இவ்வாசகத்தில்‌ கடவுள்‌ நீதி உள்ளவர்‌ என்றும்‌, எல்லார்‌ மீதும்‌ இரக்கம்‌ உள்ளவராய்‌ இருக்கிறார்‌ என்றும்‌, சரியான தீர்ப்பு வழங்குவார்‌ என்றும்‌, சபையுறையாளர்‌ கூறுகிறார்‌. எனவே நீதிமான்கள்‌ மனித நேயம்‌ கொண்டு மக்களை நடத்த வேண்டும்‌ என்றும்‌ கடவுள்‌ மன்னிப்பு கேட்கும்‌ எவருக்கும்‌ தவறாமல்‌ மன்னிப்பு வழங்குவார்‌ என்றும்‌ கூறுகிறார்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (உரோ. 8:26-27)

விவிலியத்தில்‌ உள்ள ஆழமான இறையியல்‌ கருத்துக்கள்‌ நிறைந்து இருப்பது உரோமையர்‌ திருமுகமாகும்‌. சிலர்‌ தவநானக்‌ கருத்துக்களை உரோமையில்‌ பரப்பி, செயல்கள்‌ மற்றும்‌ சட்டத்‌ திற்கு மிகுந்த முக்கியத்துவம்‌ கொடுக்க முன்‌ வந்தனர்‌. யூத மறைக்கெதிரான பல தவறானக்‌ கருத்துக்களை பவுல்‌ பரப்புதின்றார்‌ என கூறிவந்தனர்‌. தம்முடைய போதனையைக்‌ குறித்தும்‌, தூய ஆவியின்‌ செயலைப்பற்றித்‌ தெளிவானக்‌ கண்ணோட்டத்தை உரோமைக்‌ கிறிஸ்தவர்கள்‌ பெற வேண்டும்‌ என்றும்‌, புது வாழ்வை நமக்கு தருவது தூய ஆவியே. ஏனெனில்‌ தூய ஆவியால்‌ நம்பிக்‌ கைக்‌ கொள்வோர்‌ பாவம்‌, சாவு ஆகியவற்றின்‌ பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர்‌.

மேலும்‌ நம்‌ ஓவ்வொருவருக்காகவும்‌, தூய ஆவியார்‌ கடவுளிடம்‌ பரிந்துப்‌ பேசுகிறார்‌ என்றும்‌ கூறுகிறார்‌. இதன்மூலம்‌ திருச்சட்டத்தினாலோ அல்லது விருத்தச்சேதனத்தினாலோ இறைவனின்‌ பிள்ளைகளாக மாந முடியாது. மாநாக தூய ஆவியைப்‌ பெறுவதன்‌ மூலம்‌ நாம்‌ அனைவரும்‌ ஆண்டவரின்‌ பிள்ளைகளாக மாறுவோம்‌ என்று கூறி உரோமை மக்களுக்கு ஆவியைப்‌ பற்றி எடுத்துரைக்கின்றார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மத்தேயு 13:24-43)

இம்‌ மண்ணுலகில்‌ தனது தந்தையின்‌ அரசாட்சியை நிறுவ வந்த இறைமகன்‌ இயேசு தனது சீடர்களுக்கு விண்ணரசை நிறுவுவதற்கு எந்த முறைகளில்‌ எல்லாம்‌, தடைகள்‌ வரும்‌ என்பதை அழகான, உவமையின்‌ வழியாக எடுத்துக்‌ கூறுகிறார்‌. நாம்‌ எப்போது சோர்வடைகின்றோம்‌ என்பதை தீயவன்‌ எதிர்ப்பார்த்துக்‌ கொண்டிருப்பான்‌. ஆகவே, சோதனைகளின்‌ மத்தியிலும்‌ நாம்‌ இறையரசை அமைக்கப்‌ பாடுபட வேண்டும்‌. அதற்கு நாம்‌ எப்போதும்‌ இறைவன்‌ முன்‌ விழிப்புடன்‌ இருந்து செயல்பட வேண்டும்‌. மேலும்‌ இடர்பாடுகள்‌ வந்தாலும்‌, இன்னல்கள்‌ வந்தாலும்‌ இறைமகன்‌ மேல்‌ நம்பிக்கை வைத்தவர்களாக, பொறுமையோடு இருந்து சோதனைகளை சாதனையாக்க வேண்டும்‌. ஆகவே, விழிப்புடன்‌ இருந்து வாழ வேண்டும்‌ என்பதை தனது திருத்தூதர்களுக்கு இயேசு கூறுகிறார்‌.

மறையுரை

செப வாழ்வு, உறவு வாழ்வு!

கிறிஸ்தவர்களின்‌ வாழ்க்கை செபம்‌ எனும்‌ அடித்தளத்தில்‌ மட்டுமே அமைந்திருக்க வேண்டும்‌. அப்போதுதான்‌ இறைவனுக்கு ஏற்பு உடையவர்களாக, அவரின்‌ அன்பு பிள்ளைகளாக எப்போதும்‌ இருந்து அவரின்‌ அருளைப்‌ பெற முடியும்‌. எப்போது நாம்‌ செபிக்‌ காமல்‌ இருக்கிறோமோ, அப்போதெல்லாம்‌ தீயவன்‌ பல்வேறு சோத னைகளை அனுப்பி நம்மை அவனுக்கு அடிமையாக மாற்றி விடுவான்‌. இதைத்தான்‌ இன்றைய நற்செய்தி வழியாக இயேசு கூறுகிறார்‌. “தூங்கும்‌ போது' அதாவது இங்கு தூக்கத்தை (உடலளவில்‌) குறிக்கவில்லை, மாறாக ஆன்மீக வாழ்விலே தூக்க மாக இருப்பதைக்‌ கூறுகின்றார்‌. பகைவன்‌ என்று “சாத்தானையும்‌' களைகளை “சோதனைகளாகவும்‌' கூறுகின்றார்‌.

இரவுக்கு விடியல்‌ எல்லை, வறுமைக்கு வளமை எல்லை. கன்னியின்‌ இளமைக்கு தாய்மை எல்லை. ஆனால்‌ கிறிஸ்தவனின்‌ செபவாழ்வுக்கு எல்லையே இல்லை. இதை என்று நாம்‌ உணரு கின்றோமோ, அப்போதே, அந்த நிமிடமே நமது வாழ்க்கையில்‌ ஒரு வித மாற்றத்தைக்‌ காண முடியும்‌. வாழ்க்கையில்‌ செபம்‌ செய்வதால்‌ என்ன பயன்‌ கிடைக்கும்‌ என்று பார்க்கின்ற போது, நாம்‌ மூன்று முக்கிய நிலைகளை நமது செப வாழ்வில்‌ இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

செபம்‌


⚪நாம்‌ கடவுளோடு நெருக்கமான உறவு வைத்துக்‌ கொள்ள முடியும்‌.
⚪ நாம்‌ நமது வாழ்வில்‌ கடவுளின்‌ திட்டத்தை அறிந்து கொள்ள முடியும்‌.
⚪ நாம்‌ நமது வாழ்வின்‌ நிலையை அறிந்துக்‌ கொள்ள முடியும்‌.

செபமே விண்ணகத்தின்‌ முதல்படி என்று தூய லீமா ரோஸ்‌ கூறுகிறார்‌. இவர்தான்‌ அமெரிக்காவில்‌ இருந்து தோன்றிய முதல்‌ புனிதை. அவரால்‌ செபத்தின்‌ மூலம்‌ இறைவனின்‌ அருளை பெறு: முடிந்ததால்‌ மட்டுமே இவ்வாறு சொல்ல முடிந்தது. நமது ஆண்டவர்‌ இயேசுவின்‌ வாழ்க்கையைச்‌ சற்றுப்‌ புரட்டிப்பார்த்தால்‌, அவர்‌ தன்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ செபம்‌ செய்வதில்‌ கழித்துள்ளதை நாம்‌ அறிந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக ஒவ்வொரு புதுமைக்கு முன்னும்‌, பின்னும்‌ அவர்‌ செபத்தின்‌ மூலம்‌ தன்‌ தந்தையின்‌ உதவியை பெறுவதை நாம்‌ பார்க்கலாம்‌ (யோவா 11:42). அதுபோல நாம்‌ எப்போதெல்லாம்‌ செபம்‌ செய்கின்றோமோ அப்போது பல்வேறு நன்மைகளை, மாற்றங்களை நமது அன்றாட வாழ்வில்‌ காண முடியும்‌.

பழைய ஏற்பாட்டிலிருந்து


⚫ செபம்‌ வெற்றியைத்‌ தேடித்‌ தருகின்றது (விடு பய 17:11-12) - மோசே தன்‌ கையை உயர்த்திருக்கும்‌ போதெல்லாம்‌ இஸ்ராயேல்‌ வெற்றி அடைந்தனர்‌.
⚫ செபம்‌ நமக்கு நோய்‌, நொழுயிலிருந்து விடுதலை தரும்‌ (2சாமு 24:25), தாவீதின்‌ மன்றாட்டு கேட்கப்பட்டது, இஸ்ராயேலிருந்து கொள்ளை நோய்‌ நீங்கியது.
⚫ செபம்‌ நம்மை பிரச்சனையிலிருந்து விடுதலை செய்கின்றது (தானி 13:42-43).

புதிய ஏற்பாட்டிலிருந்து


⚪வாழ்க்கையில்‌ நல்ல முடிவை எடுக்க செபம்‌ நமக்கு உதவி செய்கின்றது (லூக்கா 6:12). இயேசு சீடர்களை தேர்ந்தெடுத்தல்‌.
⚪ செபம்‌ இறைவனோடு உறவாட நமக்குத்‌ துணை செய்கிறது (மாற்கு 1:35). இயேசு தனிமையில்‌ செபம்‌ மூலம்‌ இறைவனோடு ஒன்றித்து இருத்தல்‌.
⚪ செபம்‌ மற்றவர்களை (எதிரிகளை) மன்னிக்கக்கூடிய மனநிலையை நம்மில்‌ உருவாக்குகின்றது. செபத்தில்‌ நிலைத்து நின்றதால்தான்‌ இயேசுவால்‌ அவரின்‌ எதிரிகளைக்கூட மன்னிக்க முடிந்தது. “தந்தையே! இவர்களை மன்னியும்‌, ஏனெனில்‌ தாங்கள்‌ செய்வது என்னதென்று இவர்களுக்கு தெரியவில்லை”.
⚪ நாம்‌ நமது செப வாழ்க்கையில்‌ அசட்டைத்தனமாக, சோம்போறித்தனமாக, இருந்தால்‌ சாத்தான்‌ நம்மை சோதனயில்‌ தள்ளிவிடுவான்‌. நாம்‌ இறைவனின்‌ அருளை இழந்துவிடக்‌ டும்‌. இதனைத்தான்‌ ‘சோதனைக்கு உட்படுத்தாதிருக்க விழித்திருந்து இறைவனிடம்‌ வேண்டுங்கள்‌ (மத்தேயு 26:41) என்று இறைமகன்‌ இயேசு கூறுகிறார்‌.
⚪ நாம்‌ நமது அன்றாட வாழ்க்கைக்கு வருவோம்‌. நாம்‌ நமது குடும்பத்தில்‌ செபிக்கின்றோமா? நமது சொந்த தனிப்பட்ட வாழ்க்கையில்‌ செபத்திற்கு எவ்வளவு நேரம்‌ செலவிடுகின்றோம்‌? நம்மைப்பார்த்து நம்‌ பிள்ளைகளும்‌ செபிக்க விரும்புகிறார்களா? உப்பில்லா பண்டம்‌ குப்பையிலே என்று சொல்வார்கள்‌. அதே- போல்‌, நம்‌ கிறிஸ்தவ வாழ்க்கையில்‌ செபம்‌ இல்லை என்றால்‌ அது வெற்றிடமாக உள்ள வாழ்வாகும்‌.

நாம்‌ நமது வாழ்வில்‌ செபிக்கத்‌ தவரியத்‌ தருணங்களுக்காக மனம்‌ வருந்தியவர்களாக, இறைமகன்‌ இயேசுவிடம்‌ அவரின்‌ சீடர்கள்‌ கேட்டதைப்‌ போல நாமும்‌ “எங்களுக்கு செபிக்கக்‌ கற்றுக்‌ கொடும்‌' (லூக்கா 11:1) என்று கேட்போம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌


⚫ செபம்‌ இல்லா வீடு கூரையில்லா வீட்டிற்கு சமம்‌. கூடிச்‌ செபிக்கும்‌ குடும்பம்‌ கூடி வாழும்‌.
⚫செபத்தால்‌ கூடாதது ஒன்றுமில்லை. ஏனெனில்‌ செபத்தை கேட்கின்ற தேவனால்‌ கூடாத காரியம்‌ ஒன்றுமில்லை.
⚫ எவ்வளவு நேரம்‌ செபிக்கின்றோம்‌ என்பதை விட எவ்வாறு செபிக்கின்றோம்‌ என்பதே முக்கியம்‌.
⚫செபம்‌ செய்கின்ற மனிதன்‌ வீண்‌ வேலைகளில்‌ ஈடுபடமாட்டான்‌. செபம்‌ செய்வதில்‌ உறுதியாய்‌ நிலைத்து நிற்க வேண்டும்‌. அப்போது ஆண்டவர்‌ நம்‌ பக்கம்‌ நிற்பார்‌.
⚫ ஒழுங்கற்று நடக்கும்‌ மனிதனால்‌ செபிக்க முடியாது. செபிக்கும்‌ மனிதனால்‌ ஒழுங்கற்றத்‌ தனமாக நடக்க இயலாது. செபம்‌ எதிரிகளைக்கூட உனக்கு நண்பனாக மாற்றி அமைக்கும்‌. கூடாது, ஆன்மாவின்‌ ஆழத்திலிருந்து செபிக்க வேண்டும்‌.
⚫ கண்ணை மூடாமல்‌ தும்ம முடியாது, தண்ணீர்‌ படாமல்‌ குளிக்க முடியாது. அதேபோல உண்மையான கிறிஸ்தவர்களால்‌ செபிக்காமல்‌ வாழ முடியாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுகக் காலம் பதினாறாம் ஞாயிறு

இன்றைய நற்செய்திப் பகுதி கடந்த வாரத்தின் நற்செய்திப் பகுதியின் தொடர்ச்சியாகும். எனவே, இன்றும் இயேசுவின் உவமைகள் தொடர்கின்றன. இன்றைய நற்செய்தியில் கோதுமையும், களைகளும் உவமை (வச 24-30), கடுகு விதையின் உவமை (வச. 31-32), புளிப்பு மாவின் உவமை (வச. 33), இயேசு உவமை களில் பேசக் காரணம் (வச. 34-35), கோதுமையும், களைகளும் உவமையின் விளக்கம் (வச. 36-43) ஆகிய உட்பகுதிகள் உள்ளன. மற்ற உவமைகள் அடுத்த வாரத்தின் நற்செய்தியாக அளிக்கப்படும்.

இன்றைய நற்செய்திப் பகுதியின் முதல் உவமைப் பகுதி முந்தைய உவமையைப் போலவே விதைகளைப் பற்றிப் பேசினாலும் அவைகளை களைளோடு இணைத்துப் பேசுகிறது. இந்த உவமைப் பகுதி இறையரசின், மத்தேயுவின் வார்த்தைகளில் விண்ணரசின், வேறொரு பரிமாணத்தை விளக்குகிறது. அதாவது இறையரசு நல்லதாயிருக்க, இறையரசின் மக்கள் நல்லவர்களாயிருக்க, அங்குத் தீமைகளும், தீயவர்களும் காணப்படுவது எப்படி? உலகில் காணப்படும் தீமையையும், தீயவர்களையும் எப்படி விளங்கிக் கொள்வது? அதைவிட முக்கியமாக இந்தத் தீமையையும், தீயவர்களையும் கையாள்வது எப்படி? இவற்றை, இவர்களை உடனடியாக விலக்கிவிடலாமா? அழித்து விடலாமா? அப்படிச் செய்துவிடத்தான் முடியுமா? அதனால் வருகின்ற சாதக பாதகங்கள் யாவை? ஆகிய வினாக்களுக்கு இன்றைய உவமைமூலம் விடையளிக்கின்றார் நமதாண்டவர்.

முதலாவதாக, தீமையுடன், தீயவருடன் இயேசு பொறுமையாக நடந்து கொள்ளச் சொல்கிறார். உவமையில் விதைகளும், களைகளும் நிரந்தரமானவை. விதைகள் களைகளாக முடியாது, களைகள்‌ விதைகளாக முடியாது. ஆனால்‌ மனிதர்கள்‌ அப்படியல்ல. தீயவர்கள்‌ எப்போதும்‌ நல்லவர்களாக மாற சாத்தியக்கூறு உள்ளது. அதற்கு வாய்ப்புத்‌ தருகின்றார்‌ ஆண்டவர்‌ (எபே 3:18). இக்கருத்தை புனித பேதுரு இன்னும்‌ தெளிவாய்‌ விளக்குகிறார்‌. “ஆண்டவர்‌ தம்‌ வாக்குறுதியை நிறைவேற்றக்‌ காலந்தாழ்த்துவதாகச்‌ சிலர்‌ கருதுன்றனர்‌. ஆனால்‌ அவர்‌ அவ்வாறு காலம்‌ தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப்‌ பொறுமையோடிருக்கிறார்‌. யாரும்‌ அழிந்து போகாமல்‌, எல்லா ரும்‌ மனம்‌ மாற வேண்டுமென விரும்புறொர்‌' (2 பேது 3:9). எனவே, தீமையோடு, தீயோரோடு கொஞ்சம்‌ பொறுமை காத்து, அவர்களும்‌ மனம்‌ மாறி நல்லவர்களாக ஒரு வாய்ப்பு அளிக்கிறார்‌ இறைவன்‌.

இரண்டாவதாக, தீயோரை நல்லோரிலிருந்து பிரிப்பதும்‌, தீயோரைத்‌ தண்டிப்பதும்‌, இறைவனின்‌ வேலை. அவர்‌ அதை தமக்கேயுரிய விதத்தில்‌, தமது திட்டத்தின்படியான நேரத்தில்‌ செய்வார்‌. இதை மனிதர்‌ தன்மேல்‌ எடுத்துக்கொள்ளக்கூடாது. மனிதரைத்‌ தீர்ப்பிஙவவெதும்‌, தண்டிப்பதும்‌ இறைவனின்‌ உரிமை. மானிடரான நம்முடையது அல்ல; மேலும்‌, உலகில்‌ காணப்படும்‌ தீமைகளைச்‌ சரிசெய்வதும்‌, தீமையும்‌, நன்மையும்‌ கலந்திருக்கும்‌ உலகை நன்மையானதாக சீர்செய்வதும்‌ இறைவனின்‌ பணி. எனவே, மனிதர்‌ அதில்‌ குறுக்டைக்கூடாது.

மூன்றாவதாக, ஒரு சில வகைகளில்‌ களைகளும்‌, பயிர்களும்‌ வெளித்தோற்றத்தில்‌, தொடக்கத்தில்‌ ஒன்றுபோலத்‌ தோன்றும்‌. அவைவளர்ந்து, பூத்து, காய்க்கும்போதுதான்‌ அவற்றின்‌ உண்மைத்‌ தன்மைவெளிப்படும்‌. எனவே, அவசரப்பட்டு அவற்றைப்‌ பிடுங்கப்‌ போய்‌ அவற்றிற்குப்‌ பதிலாக பயிர்களையும்‌ பிடுங்கிவிடும்‌ அபாயம்‌ இருக்கின்றது (வச. 29). எனவே, சிறிது காலம்‌ காத்திருந்து அவற்றின்‌ கனியைக்‌ கொண்டு களைகளைப்‌ பிரித்தெடுப்பதே அறிவுடைமையான செயலாக இருக்கும்‌.

தாவரங்களிலே இந்நிலை என்றால்‌, மனிதரில்‌ இது இன்னும்‌ சிக்கலானது. எம்மனிதரையும்‌ வெளித்தோற்றத்தைக்‌ கொண்டு நல்லவர்‌ என்றோ, தீயவர்‌ என்றோ தீர்ப்பிடுவது மிக மிகக்‌ கடினம்‌. “பல குற்றவாளிகள்‌ தப்பித்தாலும்‌ நல்லவர்‌ ஒருவர்‌ தண்டிக்கப்‌ பட்டு விடக்கூடாது” என்பது நீதி இயலின்‌ ஒரு முக்கயெக்‌ கோட்‌ பாடு. அறியாமல்கூட நீதிமான்கள்‌ தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது. எனவே, அவர்களின்‌ உண்மைத்‌ தன்மை தெள்ளத்தெளிவாக அவர்களின்‌ செயல்களில்‌ முழுமையாக வெளிப்படும்வரை காத்திருப்பதுதான்‌ சரியான ஒன்றாக இருக்கும்‌ என இறைவன்‌ அறிவுறுத்துகிறார்.

இறுதியாக, இன்றைய நற்செய்தியில்‌ இறையரசின்‌ வேறு ஒரு தன்மையை, பரிமாணத்தை விளக்குவதற்காக கடுகு விதை, புளிப்பு மாவு உவமையை நமதாண்டவர்‌ கூறுகின்றார்‌ (வச. 31-33). இதன்படி இறையரசின்‌ தொடக்கம்‌ சிறியதாய்‌ அதிக முக்கியத்‌ துவம்‌ இல்லாததாக இருந்தாலும்‌ அது வளர்ந்து, பெரிதாகின்ற போது அது விளைவிக்கின்ற பலன்கள்‌ அளப்பரியதாய்‌ உள்ளன.

கடுகு விதையின்‌ அளவு மிக மிகச்‌ சிறியதாயிருந்தாலும்‌ அந்தச்‌ செடி. அல்லது மரம்‌ வானத்து பறவைகள்‌ கூடு கட்டி வாழும்‌ அளவுக்கு, அவற்றிற்கு வாழ்வாதாரம்‌ வழங்கும்‌ அளவுக்கு முக்கியமானதாக அமைகின்றது. இந்த உவமையை தாயம்‌ திருஅவைக்கு ஒப்பிடும்போது பன்னிரு திருத்தூதூரகளைக்‌ கொண்டு தொடங்கப்பட்ட திரு அவை இன்று ஆல்போல்‌ வளர்ந்து ஐந்து கண்டங்களில்‌ பல கோடி மக்களுக்கு மீட்‌ பின்‌ கருவியாகவும்‌, வாழ்வை வழங்குவதாகவும்‌ இருப்பது எத்துணை உன்னதக மானது!

புளிப்பு மாவின்‌ உவமையும்‌ இத்தகையதே. மிகச்‌ சிறிய புளிப்பு மாவு மூன்று மரக்கால்‌ - ஏறக்குறைய நூறு பேர்‌ உண்ணத்‌ தேவையான - மாவை புளிப்பேற்றுகின்றது. எனவே, எந்த ஒரு நற்செயலையும்‌, நல்லதுக்கான முதல்‌ முயற்சியையும்‌, அதன்‌ அளவு கருதியோ, முக்யெத்துவம்‌ இல்லாமை கண்டே ஒதுக்கி விட முடியாது. காலப்போக்கில்‌ அதன்‌ வளர்ச்சி அபாரமானதாக, அது ஏற்படுத்தும்‌ பலன்கள்‌ வீரியம்மிக்கதாக இருக்கும்‌ என நம்ப வேண்டும்‌. அதற்கு நம்மாலான உதவிகளைச்‌ செய்யவேண்டும்‌. அது நமக்கு பிற்கால வரலாற்றில்‌ இடம்‌ பெற்றுத்தரும்‌ என்பது திண்ணம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - 16 ஆம்‌ ஞாயிறு-முதல்‌ ஆண்டு

முதல் வாசகம் : சாஞா. 12:13,16-19

ஆண்டவர்‌ இஸ்ரயேலரை அவர்கள்‌ வரலாற்றிலே வழி நடத்திச்‌ சென்றதை சாலமோனின்‌ ஞானம்‌ வாசகம்‌ எடுத்துக்‌ கூறுகிறது. சிறப்பாக, இங்கு ஆண்டவரின்‌ பற்பல குணங்கள்‌ விளக்கமுறுகின்றன.

காப்பாற்றும்‌ கடவுள்‌

உலகையும்‌ மக்களையும்‌ படைத்த கடவுள்‌ தம்‌ சாயலாகிய மனிதர்களைப்‌ பாதுகாத்துக்‌ காப்பாற்றி வழி நடத்தி வருகிறார்‌ என்பது உண்மை. இஸ்ரயேலரை எகிப்தின்‌ அடிமைத்தனத்தினின்று பாதுகாத்தார்‌. பின்‌, வனாந்தரத்தில்‌ அவர்களுக்கு உண்ண மன்னாவும்‌, குடிக்க நீரும்‌ தந்து பாதுகாத்தார்‌. எதிரிகளின்‌ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வழி நடத்தினார்‌. பாபிலோனியத்‌ தளையிலிருந்து விடுதலை அளித்துப்‌ பாதுகாத்தார்‌. எனவேதான்‌ இஸ்ரயேலர்‌, “அனைவரையும்‌ அக்கறையாய்க்‌ காப்பாற்றுவதற்கு உம்மைத்‌ தவிர வேறு கடவுள்‌ இல்லை” (12 : 13) என்று பாடுவர்‌. “அவர்‌ உம்‌ கால்‌ இடறாதபடி பார்த்துக்கொள்வார்‌; உம்மைக்‌ காக்கும்‌ அவர்‌ உறங்கிவிடமாட்டார்‌. இதோ! இஸ்ரயேலைக்‌ காக்கின்றவர்‌ கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும்‌ இல்லை” (திபா. 121) என்பது இன்றும்‌ நமக்கு எவ்வளவு பொருந்தி அமைகிறது? நம்மை அன்றாடம்‌ காத்துவரும்‌ கடவுளுக்கு நன்றி கூறுவோம்‌. அவர்‌ பாதுகாப்பை என்றும்‌ நாடுவோம்‌; அவரிடம்‌ சரணடைவோம்‌.

நீதிக்‌ கடவுள்‌

கடவுளுடைய தனிப்பெரும்‌ குணம்‌ அவரது நீதியாகும்‌. தீயோரைத்‌ தண்டித்து, நல்லோருக்கு வாழ்வளிப்பவர்‌ அவர்‌. எனவே “நீர்‌ நீதியுள்ளவர்‌. அனைத்தையும்‌ நீதியோடு ஆள்கிறீர்‌”” (12 : 15) என்பார்‌ ஆசிரியர்‌. எனினும்‌ கடவுளின்‌ நீதி இரக்கமுள்ள நீதி என்பதை மறக்கக்கூடாது. எனவேதான்‌ “நீர்‌ கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்‌”” (12 : 18) என்கிறது வாசகம்‌. நீதிக்‌ கடவுளின்‌ பிள்ளைகளாகிய நாம்‌ நீதி வாழ்க்கை வாழ்வோமா? அநீதத்தை நம்‌ வாழ்விலிருந்தும்‌ பிறர்‌ வாழ்விலிருந்தும்‌ அகற்ற முயல்வோமா? நீதிக்கு குரல்‌ கொடுப்போமா? நீதி தழைக்கப்‌ பாடுபடுவோமா? “நீதியை நிலைநாட்டும்‌ வேட்கை கொண்டோர்‌ பேறுபெற்றோர்‌ (மத்‌. 5: 6).

இரக்கமிகு கடவுள்‌

நீதியும்‌ இரக்கமும்‌ கல்ந்து செல்வதே நம்‌ இறைவனின்‌ தனித்தன்மை. நீதிக்கு அவர்‌ ஊற்று, (12 : 16). இரக்கத்திற்கு அவர்‌ பிறப்பிடம்‌ (12 : 16). எனவேதான்‌, “இரக்கமும்‌ பரிவும்‌ உள்ள இறைவன்‌; சினம்‌ கொள்ளத்‌ தயங்குபவர்‌; பேரன்பு மிக்கவர்‌; நம்பிக்கைக்குரியவர்‌. ஆயிரம்‌ தலைமுறைக்கும்‌ பேரன்பு செய்பவர்‌ ' (விப 34: 6) என்று வேதாகமம்‌ அவரை ஏத்துகிறது. நாமெல்லோரும்‌ அவர்‌ இரக்கத்தையும்‌ கனிவையும்‌ அன்றாடம்‌ சுவைத்தவர்கள்‌ ! இரங்கும்‌ கடவுளிடம்‌ நம்பிக்கையோடு செல்வோம்‌. அவரும்‌ மனமிரங்கி நமக்கு உதவிடுவார்‌. நாமும்‌ நம்‌ கடவுள்‌ போன்று ஏழை எளிமோர்க்கு இரக்கம்‌ காட்டுவோம்‌. “இரக்கமுடையோர்‌ பேறுபெற்றோர்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ இரக்கம்‌ பெறுவர்‌ ' (மத்‌. 5:7) என்பதை உணா்வோமா?

வல்லமை மிக்க கடவுள்

படைப்பில்‌ தம்‌ வல்லமையைக்‌ காட்டினார்‌ கடவுள்‌ ; மீட்பிலும்‌ தம்‌ வல்லமையைக்‌ காட்டினார்‌. அவருடைய வல்லமையாற்றலே இன்றும்‌ நம்மை வழி நடத்துகிறது. கடவுளுடைய வல்லமை வெளிப்படுவது நமது வலுவின்மையிலேதான்‌. எனவேதான்‌ பவுல்‌ “மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமைமிக்கது ' (1 கொரி. 1 : 25) என்பார்‌. “வல்லமையின்‌ நிறைவை உடையவர்‌” கடவுள்‌ என்று வாசகமும்‌ கூறுகிறது (12 : 17). “ஆற்றலில்‌ இணையற்ற ' நம்‌ கடவுள்‌ (12 : 18) நமக்கு என்றும்‌ உறுதுணையாயிருக்கிறார்‌. “இதோ! உலக முடிவுவரை எந்நாளும்‌ நான்‌ உங்களுடன்‌ இருக்கிறேன்‌ ' (மத்‌, 28 : 20) என்ற இயேசுவின்‌ சொற்கள்‌ நமக்கு உறுதியும்‌ மனத்திடனும்‌ அளிப்பதாக. *“அச்சமில்லை, அச்சமில்லை அண்ணல்‌ இயேசு அருகிருக்க ' என்று பாடுவோமா? “வல்லவராம்‌ கடவுள்‌ எனக்கு அரும்பெரும்‌ செயல்கள்‌ செய்துள்ளார்‌” (லூக்‌. 1 : 49) எனப்‌ பண்ணிசைப்போம்‌.

மிகுந்த பொறுமையோடு எங்களை நீர் நடத்துகிறீர்.

இரண்டாம் வாசகம் : உரோ. 8:26-27

செபத்தில்‌ ஆவியானவரின்‌ உதவி பற்றி இன்றைய வாசகம்‌ எடுத்துக்‌ கூறுகிறது. “அப்பா, தந்தாய்‌ ” என்று நாம்‌ அழைப்பது ஆவியாராலேதான்‌ (8 : 15; கலா. 4 : 6) என்பது மறுக்க முடியாத உண்மை. எனவேதான்‌ செபம்‌ என்பது, நம்மிடம்‌ உள்ள தெய்வீகம்‌ அல்லது இறைத்தன்மை (தொநூ. 1:26 - 27) நமக்கு அப்பால்‌ இருக்கும்‌ தெய்வீகத்தைக்‌ கூவி அழைப்பது என்பர்‌.

செபம்‌ தேவை

அழுத பிள்ளைதான்‌ பால்‌ குடிக்கும்‌. கேட்டவர்தான்‌ பெற்றுக்கொள்வர்‌. குறையுள்ள மனிதர்‌, படைக்கப்பட்ட மனிதர்‌ என்ற முறையிலே நம்‌ எல்லோருக்கும்‌ தேவைகள்‌ பல உள்ளன. இவற்றை நாம்‌ தேடி அடைகிறோம்‌; அல்லது கேட்டுப்‌ பெறுகிறோம்‌. இத்தேடுதலும்‌ கேட்டலும்‌, அனைத்தும்‌ வல்ல இறைவன்பால்‌ செலுத்தப்படும்போது அது செபம்‌ எனப்படுகிறது. நம்‌ ஆண்டவரும்‌, “கேளுங்கள்‌, உங்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌; தேடுங்கள்‌ நீங்கள்‌ கண்டடைவீர்கள்‌; தட்டுங்கள்‌ உங்களுக்குத்‌ திறக்கப்படும்‌” (மத்‌. 7 : 7) என்று கூறுவதைக்‌ காண்க. “அப்பா, தந்தையே, எல்லாம்‌ உம்மால்‌ இயலும்‌” (மாற்‌. 14 : 38) என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இயேசுவே தந்தையை நோக்கிச்‌ செபிப்பது நமக்குச்‌ செபத்தின்‌ இன்றியமையாமையைச்‌ சுட்டுவது அறியற்பாலது. எனவே, செபம்‌ நமது அன்றாடத்‌ தேவை என்பதை உணர்ந்து, செபிப்போம்‌. செபிக்க எங்களுக்குக்‌ கற்றுத்‌ தாரும்‌ என்று வேண்டுவோம்‌. தனிசெபம்‌, குழுசெபம்‌, விவிலிய செபம்‌, வீட்டுச்‌ செபம்‌ முதலியவற்றில்‌ நமது ஈடுபாடு என்ன? குடும்பச்‌ செபம்‌ நமது அன்றாடக்‌ கடமையாயிருக்கிறதா?

தூய ஆவியாரின்‌ துணை

திருமுழுக்கில்‌ நாம்‌ பெற்றுள்ள ஆவியார்‌ என்றும்‌ நம்மோடிருக்கிறார்‌; நம்மிலே செயலாற்றுகிறார்‌. எப்படிச்‌ செபிப்பது, எதற்காகச்‌ செபிப்பது என்று நாம்‌ அறியாத நிலையிலே, தந்தை தாய்‌ தம்‌ பிள்ளைகளுக்குக்‌ கற்றுத்தருவது போல, ஆவியாரும்‌ நம்மோடு நமக்காகச்‌ செபிக்கிறார்‌ (8: 26). அவர்‌ நம்மோடு செபிப்பதால்‌ நம்‌ செபம்‌ அவரது செபமாகிறது. அவரது பெருமூச்சாகிறது. அவர்‌ நமக்காகச்‌ செபித்தால்‌ நம்‌ செபம்‌ மிகவும்‌ வல்லமையுள்ளதாக மாறுகிறது; அவர்‌ நமக்காகப்‌ பரிந்துபேசும்போது, இறைத்தந்தை அச்செபத்திற்குப்‌ பதில்‌ அளியாமல்‌ இரார்‌. எனவேதான்‌, பவுல்‌, “தேவ ஆவியை அணைத்துவிட வேண்டாம்‌” (2 தெச. 5 : 19 - 20) என்பார்‌. தேவ ஆவியை அணைப்பது என்பது நம்மில்‌ செயலாற்றுவதைத்‌ தடுப்பதாகும்‌. ஆவியார்‌ நம்மில்‌ செயலாற்றிப்‌ புரியும்‌ பணிகளில்‌ முக்கியமானது செபமாகும்‌. எனவே, செபத்தைப்‌ புறக்கணிப்பது தேவ ஆவியாரையே நம்மிலிருந்து அகற்றுவதற்கு ஒப்பாகும்‌. அவருடைய சொல்லொண்ணாப்‌ பெருமூச்சுகளைத்‌ தடுத்துவிடுவதாகும்‌. நமது வலுவற்ற நிலையை உணரும்‌ போது தான்‌ வலிமை தரும்‌ ஆவியாரை நாம்‌ நாடமுடியும்‌. எனவே, நமது இயலாத்தன்மையை எடுத்துக்கூறி ஆவியாரின்‌ உதவியை வேண்டுவோம்‌. அவரும்‌ நம்‌ தேவைகளுக்கேற்ப, இறைத்‌ தந்தையிடம்‌ நமக்காகப்‌ பரிந்து பேசுவார்‌ என்பது திண்ணம்‌. தூய ஆவியாரே, வாரும்‌. உம்‌ அருட்கொடையாகிய செபத்தை எனக்குக்‌ கற்றுத்தாரும்‌; என்னோடிருந்து எனக்காகப்‌ பரிந்து பேசும்‌ என்று வேண்டிடுவோம்‌. அவரும்‌ நமக்கு துணை நிற்பார்‌.

நம்‌ வலுவற்ற நிலையில்‌ நமக்கு ஆவியானவர்‌ துணை நிற்கிறார்‌.

நற்செய்தி மத்: 13.24-43

நல்ல விதையும்‌ களையும்‌ பற்றிய படிப்பினை மத்தேயு நற்செய்தியின்‌ அறிவுரைப்பகுதியில்‌ வரும்‌ ஓர்‌ உவமையாகும்‌. இதன்‌ அடிப்படைக்‌ கருத்து. இறுதிக்‌ காலத்தைப்‌ பற்றியது. இவ்விறுதிக்‌ காலம்‌ இன்றைய வாழ்வின்‌ தொடர்ச்சியே என்பதனால்‌ இன்றைய வாழ்வின்‌ விளக்கமாயும்‌ அமைகிறது இவ்வுவமை.

கட்டுகளாகக்‌ கட்டுங்கள்‌

நல்ல நிலத்தில்‌ களைகள்‌ தோன்றுவது இயல்பு. அதேபோன்று நம்‌ ஒவ்வொருவர்‌ வாழ்க்கையிலும்‌ தீயன, பாவங்கள்‌, குற்றம்‌ குறைகள்‌ இருப்பது நம்‌ மனிதத்தன்மையின்‌ ஒரு நிகழ்வு எனலாம்‌. ஏனெனில்‌, இறைவனைத்‌ தவிர வேறு எவரும்‌ பாவமற்ற வாழ்க்கை வாழ்தல்‌ அரிது. களைகளை விதைத்தது பகைவனாய்‌ இருக்கலாம்‌; களை வளர நிலம்‌ காரணமாயும்‌ இருக்கலாம்‌. எனவே நம்‌ பாவங்கள்‌ அனைத்திற்கும்‌ காரணம்‌ சாத்தான்‌ என்பதைவிட, நாமே உண்மைக்கும்‌ நீதிக்கும்‌ எதிரான நமது மதிப்பீடுகளே, நமது சுயவெறியே காரணம்‌ என்பதை உணர்ந்து, நாமே அவற்றைக்‌ கட்டுகளாகக்‌ கட்டி, ஒட்டு மொத்தமாக அழித்துவிடல்‌, எரித்துவிடல்‌ கடன்‌. இறைவன்‌ இறுதிக்‌ காலத்தில்‌ அவற்றை எரித்துவிடுவது ஒருபுறமிருக்க, நாமே அன்றாடம்‌ அவற்றை ஒட்டுமொத்தமாக விலக்கிட முயல வேண்டும்‌. ஒரிரண்டு பாவ வெளிப்பாடுகளைத்‌ தவிர்ப்பது மட்டுமன்று, நம்‌ பல பாவங்களுக்கும்‌ அடிப்படைக்‌ காரணியை இனம்‌ கண்டு, “கட்டுகளாகக்‌ கட்டி” எரிக்க முயல வேண்டும்‌. புனிதத்திலே வளர இது இன்றியமை யாதது. எனவே, நமது அடிப்படைப்‌ பகைவனைக்‌ கண்டுணர்வோமா? அவனை நம்‌ வாழ்விலிருந்து அகற்ற முயல்வோமா? நமது அடிப்படைப்‌ பகைவன்‌ அநீதியா? தற்பெருமையா? பணத்திமிரா? சுயவெறியா? சித்தித்து செயல்படுவோம்‌.

களஞ்சியத்தில்‌ சேர்த்து வையுங்கள்‌

நல்லது எனப்படுவது போற்றத்தக்கது; நம்மிடம்‌ வைத்துக்கொள்ள வேண்டியது. களஞ்சியத்தில்‌ வைக்கப்படும்‌ பொருள்‌ இன்றியமையாதது; எதிர்காலத்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்வது. இதுபோன்றே நமது நற்குணங்கள்‌, புண்ணியங்கள்‌ களஞ்சியத்தில்‌ இருந்தால்தான்‌ வெளியே எடுக்கப்பட்டுத்‌ தேவையான நேரங்களில்‌ பயனளிப்பதாயிருக்கும்‌. களஞ்சியம்‌ காலியானால்‌, எல்லோரும்‌ பட்டினியே. எனவேதான்‌ நம்‌ களஞ்சியங்கள்‌ குறையாது தானியங்கள்‌ சேர்த்துவைக்கப்பட வேண்டும்‌. பஞ்ச காலங்களில்‌ உதவ இருப்பது களஞ்சியத்‌ தானியமே. நம்‌ ஆன்மீக வாழ்விலும்‌ இத்தகைய களஞ்சியங்கள்‌ வேண்டும்‌. நல்ல குணங்கள்‌ பலவற்றை நாம்‌ பெருக்கிக்கொண்டு நம்‌ களஞ்சியங்களில்‌ சேர்த்து வைக்கும்போது, ஆபத்து வேளைகளில்‌, பாவத்‌ தருணங்களில்‌, சோதனைச்‌ சமயங்களில்‌ இந்நற்பண்புகள்‌ நமக்குத்‌ துணையாய்‌ இருக்குமன்றோ? எனவே, அன்றாடம்‌ அன்புவழி, நீதிவழி, நற்செயல்கள்வழி நம்‌ களஞ்சியங்களை நிரப்புவோம்‌. விண்ணகத்திற்கான இக்களஞ்சியங்கள்‌ என்றுமே முற்றிலும்‌ நிறைவுறா. ஆதலின்‌ செய்தது போதும்‌, ஏராளமாகச்‌ செய்துவிட்டோம்‌, இனி அயர்ந்திருப்போம்‌ என்பது தவறு. “எந்த அளவையால்‌ அளக்கிறீர்களோ அதே அளவையால்‌ உங்களுக்கும்‌ அளக்கப்படும்‌; இன்னும்‌ கூடுதலாகவும்‌ கொடுக்கப்படும்‌” (மாற்‌. 4 : 24 - 25) என்பதை உணர்ந்து, நற்செயல்களால்‌ நம்‌ களஞ்சியங்களை நிரப்புவோம்‌. நற்செயல்கள்‌ புரிய இடம்‌ காலம்‌ தேவையில்லை. எங்கும்‌ என்றும்‌ நம்‌ களஞ்சியங்களை நிரப்பிக்‌ கொண்டேயிருப்போமா? உள்ளவனுக்கு மேலும்‌ கொடுக்கப்படும்‌ என்பதை உணர்வோம்‌.

கோதுமையையோ என்‌ களஞ்சியத்தில்‌ சேர்த்து வையுங்கள்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

களைகளாக அல்ல; கதிர்களாக

என் பையன் எட்டாம் வகுப்புவரை நல்லா இருந்தான். தினமும் கோவிலுக்குப் போவான். திருப்பீடத்தில் உதவி செய்வான். ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குத் - தவறமாட்டான். ஊர் சுற்றப் போவதில்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தான். தேவைப்பட்டால் மட்டுந்தான் அலைபேசி பயன்படுத்துவான்; அதுவும் அனுமதியோடு. ஆனால் இப்போ ரொம்ப மாறி விட்டான். அவனது நடத்தையைப் பார்க்கும்போது பயமாக இருக்கு.
எங்கள் அலுவலர் பணிப் பொறுப்பு ஏற்ற நேரத்தில் எல்லாரிடமும் மிக அன்பாக இருந்தார். எல்லாரையும் சமமாகவும், மரியாதையாகவும் நடத்தினார். எங்கள் தேவைகள் என்னவென்று புரிந்து அதற்கான வசதிகளைச் செய்தார். ஆனால் இப்போ ரொம்ப மாறிவிட்டார். அவ்ரிடம் எதாவது கேட்க பயமாக இருக்கு.

திருமணமான முதல் மூன்று மாதத்தில் என் கணவர் என்னை மிக அன்பாக நடத்தினார். மனம் விட்டுப் பேசுவார். வீட்டுத் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வார். இப்போ குடிக்கிறார். நண்பர்களோடு சுற்றுகிறார். நேரத்திற்கு வீடு வருவதில்லை. அவர் இப்போ ரொம்ப மாறி விட்டார். அவ்ரை நினைக்கும்போது பயமாக இருக்கு.

இவ்வாறான உரையாடல்கள் அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழ்வதைக் கேட்கிறோம்; பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம். நன்றாக இருப்பவர்கள் ஏன் எதிர்மறை வாழ்வுக்குள் நுழைகிறார்கள்? பிறர் அணுகவியலா நிலைக்கு ஏன் ஆளாகிறரர்கள் ?

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல பயிர்களிடையே விதைக்காமலே வளரும் களைக்ளைக் குறித்துச் சொல்லும் இயேசு இது பகைவனுடைய வேலை' (மத் 13;28) எனப் பதிலளிக்கின்றார். யார் இந்தப் பகைவன் ?

இயேசு குறிப்பிடும் பகைவன் உருவற்றவன்; ஆனால் நம் உணர்வோடு கலந்தவன். உயிரற்றவன்; ஆனால் உயிரைப் பறிப்பவன், உள்ளமற்றவன்; ஆனால் உள்ளத்தைக் கெடுப்பவன். இங்கே இயேசு பயன்படுத்தும் ஆள்கள் தூங்கும்போது' என்ற வார்த்தையைக் கவனத்தில் கொள்வது முக்கியம். இது உறக்கத்தைக் குறிப்பது அல்ல; மாறாக விழிப்பின்மை, இறைமை உணர்வின்மை, மனித நேையமின்மை, பொதுநலமின்மை போன்ற இன்மைகள்' இதயத்தை ஆக்கிரமிக்கும்போது, அவையே நம்மை பகைவனைாக மாற்றுகின்றனை. இந்நிலைகளைக் கடந்து “புளிப்புமாவாக“, “கதிர்களாக“ வாழவே இயேசு பணிக்கின்றார். சிறியவராகவோ, சிறிய எண்ணிக்கையிலோ இருந்தாலும் இறைமதிப்பீடுகளில் வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் சமூக மாற்றப் புளிப்புமாவாகலாம். மக்களின் பசியாற்றும் கதிர்களாகலாம் என்பதே இயேசு நம்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு