மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்டம் 30:10-14 | கொலோசையர் 1:15-20 | லூக்கா 10:25-37

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



நல்ல சமாரித்தன்

ஒரு கிராமத்து பெண் ஒரு ஞானியிடம் சென்று நான் மீட்புப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் ஆம்! அது மிகவும் எளிது. மீட்புப் பெற வேண்டும் என்ற விருப்பம் உனக்கு வேண்டும் என்றார் அந்த ஞானி. இதேபோல்தான் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சட்டவல்லுநன் ஆண்டவர் இயேசுவிடம் இந்தக் கேள்வியை எழுப்பினான்.

ஆண்டவர் இயேசு, என் வார்த்தையைப் பின்பற்றி என் கட்டளையை ஏற்று அதன்படி நடப்பதாலே நிலை வாழ்வு பெற முடியும் (யோவா. 8:51) என்று கூறுகிறார். இன்னும் ஒரு படி சென்று என் மீது நம்பிக்கை வைப்பவன் என்றுமே சாகமாட்டான் (யோவா. 6:47) என்கிறார் ஆண்டவர்.

மோசே வழியாக இறைவன் கொடுத்த 10 கட்டளைகளை கால ஓட்டத்தில் யூதர்கள் பலுக்கிப் பெருக்கி இயேசுவின் காலத்தில் சுமார் 618 சட்டங்கள் ஆக்கினர். எனவே. நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று திருச்சட்ட வல்லுநன் (அறிஞன்) இயேசுவைச் சோதிக்க விரும்பினான். உள்ளத்தை அறியும் இறைவன் இயேசு அவனுக்கு அழகான நல்ல சமாரியன் உவமையை வைக்கிறார். உனக்கு அடுத்து இருப்பவனுக்கு அன்பு செய் என்கிறார் இயேசு. எனக்கு அடுத்து இருப்பவன் யார் என்று கேட்டான். அப்போது இயேசு இந்த அழகான நல்ல சமாரியன் உவமையைத் தருகிறார்.

எருசலேமிலிருந்து எரிக்கோ போகிறான் ஒருவன். தான் போகும்போது கள்வன் கையில் அகப்பட்டு, அடிபட்டு அனைத்தையும் இழந்து காயமுற்றுக் கிடக்கிறான் அநாதையாக. அதன் வழியே சென்ற ஒரு யூத குரு கண்டும் விலகிச் செல்கிறார். ஒரு யூத குருமாணவன் (லேவியன்) அவரைக் கண்டும் மறுபக்கம் விலகிச் செல்கிறான். ஆனால் அவ்வழியே வந்த சமாரியன் அருகில் வந்து அடிபட்டவன் மீது பரிவு கொண்டு காயங்களில் திராட்சை ரசம், எண்ணெய் வார்த்து அவனைக் கட்டித் தன் கழுதையின் மீது ஏற்றி ஒரு சாவடிக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான்.

இதில் வந்த மூன்று கதாபாத்திரங்களை (பேர்களை) உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

திருடன் கொள்ளைக்காரன்:- இவனது சிந்தனை, செயல் அத்தனையும், என்னுடையதெல்லாம் என்னுடையதே! உன்னுடையதும் என்னுடையதே என்ற சுரண்டல் புத்தி கொண்டவன். இது இவனது ஆழமான சுயநலத்தைக் காட்டுகிறது. இவன் யார் தெரியுமா? தண்ணீரில் கிடந்த பஞ்சு பொம்மை போன்றவன். பஞ்சு பொம்மையானது தண்ணீரை உறிஞ்சி, தன்னைப் பெருக்கி வைத்து, தண்ணீரைக் காலியாக்குவது. இந்த நிலையில்தான் இந்தக் கள்வர்கள் பிறர் உடைமைகளை அபகரித்து பிறரையும் காலில் போட்டு மிதிப்பவர்கள்.

குரு, லேவியன்:- இவர்கள் இருவர்கள் எப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள் தெரியுமா? என்னுடையதெல்லாம் என்னுடையதே! உன்னுடையதெல்லாம் உன்னுடையதே. எனக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற மனநிலை உடையவர்கள். இவர்கள் தண்ணீர் உள்ள வாளியிலே நெடுநேரம் கிடக்கும் இரும்பு பொம்மை போன்றவர்கள். இந்தப் பொம்மை தனக்கு எந்த மாற்றமும் பெறுவதில்லை. தண்ணீருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்து வதில்லை. இதேபோல்தான் இந்தக் குருவும், இந்த லேவியரும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தங்களைச் சுற்றி ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்திற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். பிறர் இன்பத்திலும். துன்பத்திலும் பங்கு பெறத் தெரியாதவர்கள். சமுதாய ஈடேற்றத்தில் ஈடுபாடு காட்டாதவர்கள். ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள். பதுங்கிக் கொண்டு தங்களைப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள். பழைய ஏற்பாட்டில் எரோபவா அரசனின் சிலை வழிபாட்டைக் கண்டுகொள்ளாத அமாசியா என்ற குருவைப் போல (ஆமோஸ் 7:10-17), அல்லது பயந்து ஒதுங்கிக் கொண்ட பிலாத்தைப் போன்றவர்கள் அல்லவா இந்தக் குருவும், வேலியனும்.

சமாரியன் மனநிலை: உன்னுடையதெல்லாம் உன்னு டையதே. என்னுடையதும் உன்னுடையதே என்ற தியாக மனநிலையை உடையவன் சமாரியன். இந்த மனநிலை கொண்டவர் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒருசிலரே. தன்னையே தண்ணீருக்குள் இருக்கும்போது இழந்து, தண்ணீருக்குச் சுவை சேர்க்கும், சர்க்கரைப் பொம்மையைப் போல் தங்கள் நேரத்தையும், சக்தியையும், செல்வத்தையும் இழந்து பிறருடைய வாழ்வை வளமூட்டும் நல்ல மனிதர்கள் இவர்கள். பிறர் வாழ்வு வளம் பெற, உயர, உரமாகத் தங்களையே கரைப்பவர்கள். சமாரியர்கள் என்பவர்க கலப்பின மக்கள். எனவே யூதர்கள் இவர்களை வெறுத்தார்கள். தீண்டத்தகாதவர்கள் எனவும் கருதினார்கள். ஆனால் இவர்களோ மனிதர் அனைவரும் சமம், மனித மாண்பை மதிக்கின்றவர்களாக நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று காட்டுபவர்கள்.
எனவே பணமோ, பட்டமோ, பதவியோ நிலைவாழ்வைப் பெற்றுத்தர முடியாது. அன்பு ஒன்றுதான் அதைச் செய்ய முடியும். அப்படியே நீரும் செய்யும் (லூக். 10:37) என்ற இயேசுவின் சொல்லை ஏற்று, சமாரிய மனிதன் ஆற்றிய அன்புச் செயலை நம் வாழ்வில் செயல்படுத்த முயலுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வேண்டியது விழிப்புணர்வே

இயேசு ஓர் ஆசிரியர். ஆசிரியர்கள் சாதாரணமாக உவமைகள் வழியாக, உருவகங்கள் வழியாக, கதைகள் வழியாக, பழமொழிகள் வழியாகத்தான் பேசுவார்கள்; தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு நம்மை அழைத்துச் செல்வார்கள்.

நல்ல சமாரியர் உவமையின் வழியாக இயேசு பிறரன்பு என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்டி நமது இதயத்திலே திருமுழுக்கு நாளன்று இயேசுவின் ஆவியால் எழுதப்பட்ட அன்புக் கட்டளையை (முதல் வாசகம்) வாழ்வாக்க அழைக்கின்றார்.

உண்மை அன்பை ஒரு காசுக்கு ஒப்பிடலாம். அதற்கு இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்திற்குப் பெயர் தன்னை மறத்தல்; மற்றொரு பக்கத்திற்குப் பெயர் மற்றவரை நினைத்தல். சமாரியர் தன்னை மறந்தார்; தனது வியாபாரத்தை மறந்தார்; தன் சுகத்தை மறந்தார்; அனைத்தையும் மறந்து அடிபட்டுக் கிடந்தவரின் பரிதாப நிலையை மட்டும் நினைத்தார்; அவரின் தேவையை மட்டும் நினைத்தார்; அவரின் உயிரை மட்டும் நினைத்தார்; அவருக்கு உதவி செய்தார்.

சாதாரணமாக, மற்றவரை அன்பு செய்யவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம்! இதோ சுயநலம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.

இரு நண்பர்கள்! ஒருவன் இல்லறத்தைத் தேர்ந்தெடுத்தான், மற்றொருவன் துறவறத்தைத் தேர்ந்தெடுத்தான்! இல்லறத்தைத் தேர்ந்தெடுத்தவன் பரம ஏழையானான். ஏழை இல்லறவாசி ஒரு நாள் தனது துறவற நண்பனை காட்டிலே சந்தித்தான்.

துறவியான நண்பன் ஏழையைப் பார்த்து, உனக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனச்சொல்லி, ஒரு சிறு கல்லைத் தொட்டான். அந்தக் கல் பொன்னானது. அந்தத் தங்கக் கட்டியை ஏழை நண்பனிடம் கொடுத்தான். ஏழை திருப்தி அடையவில்லை. பின்பு அந்தத் துறவி மரக்கட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தமது சுட்டுவிரலால் தொட்டான். அது பொன்னானது. அதை ஏழை

பெற்றுக்கொண்டான். அப்போதும் அவன் திருப்தி அடையவில்லை! இன்னும் உனக்கு என்ன வேண்டும்? என்றான் துறவி நண்பன். அதற்கு அந்த ஏழை, எதைத் தொட்டாலும் பொன்னாக்கும் உனது சுட்டுவிரலை எனக்குக் கொடு என்றான்.

அந்த ஏழை மனிதனின் எண்ண அலைக்குப் பெயர்தான் சுயநலம்.

சுயநலத்திலிருந்து விடுதலை அடைய நமக்கு ஓர் அழகான வழியை புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார். உங்களது உடலின் (திருச்சபையின்) தலையாக விளங்குபவர் இயேசு! உங்களது தலையாக விளங்குபவர் இயேசு என்றால், அவர் சொல்கின்றபடி நடப்பதுதானே முறை என்று நமக்கு அறிவுரை பகர்கின்றார். மேலும் அறிவோம்:

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்(று) உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு (குறள் : 351).

பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று கொள்ளுவது அறியாமை ஆகும்; அத்தகைய மயக்கம் உடையவர் இழி பிறப்பினராகக் கருதப்படுவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

பகவத்கீதை இந்துக்களையும், பைபிள் கிறிஸ்தவர்களையும், குரான் முகமதியர்களையும் உருவாக்கியுள்ளன. ஆனால் இம்மூன்றும் சேர்ந்து மனிதர்களை உருவாக்கவில்லை. மனிதனாகப் பிறப்பது ஒரு விபத்து; மனிதனாக வாழ்வது ஒரு சாதனை. இன்று சமயங்களுக்கும், கோவில்களுக்கும், வழிபாடுகளுக்கும பஞ்சமில்லை. ஆனால் மனிதனுக்கு அதாவது, மனித நேயத்துக்குத்தான் பஞ்சம் வந்துவிட்டது.

"மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டதற்கு ஒருவர் கூறிய பதில்: மாட்டின் கழுத்தில் தொங்குவது “பெல்". மனிதன் கழுத்தில் தொங்குவது 'செல்.' இந்தக் கேள்விக்கு சாக்ரட்டீஸ் கூறிய பதில்: "ஒரு மாடு அடுத்த மாட்டைப் பற்றி அக்கறை கொள்ளாது. ஆனால், ஒரு மனிதன் அடுத்த மனிதனைப்பற்றி அக்கறை கொள்வான். அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி.

அடுத்தவரைப் பற்றி அக்கறை கொண்டு, மனித நேயத்தோடு வாழவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியில் நல்ல சமாரியர் உவமை வழியாக இயேசு வலியுறுத்துகின்றார். "கடவுளை மற. மனிதனை நினை" என்ற தந்தை பெரியாரின் கூற்று நாத்திகத்தின் வெளிப்பாடாக நமக்குத் தோன்றலாம். ஆனால் நல்ல சமாரியர் உவமையின் சுருக்கம்; “கடவுளை மற. மனிதனை நினை" என்பதே! ஆலய வழிபாட்டுக்காகச் சென்ற குருவும் லேவியரும் கள்வர் கையில் அகப்பட்டு. குற்றுயிராய் கிடந்தவருக்கு முதல் உதவி செய்ய முன்வரவில்லை. அவர்களிடம் கடவுள் பற்று இருந்தது. மனித நேயம் இல்லை. மாறாக கீழ்சாதியைச் சார்ந்த சமாரியனிடம் கடவுள் பற்று இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் மனித நேயம் இருந்தது. மரண ஆபத்தில் இருந்தவர் யூதராக இருந்தும் சமாரியர் அவருக்கு முதல் உதவி செய்து அவரைச் சாவடியில் சேர்த்து . அவருக்கான மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

'குற்றுயிராய் கிடந்தவரைத் தொட்டால் நமது கதி என்ன ஆகும்?" என்று தங்களையே மையமாக வைத்து செயல்பட்டனர் குருவும் லேவியரும். ஆனால், குற்றுயிராய்க் கிடந்தவரைத் தொடாவிட்டால் அவர் கதி என்ன ஆகும்?” என்று பிறரை மையமாக வைத்து சமாரியர் செயல்பட்டார். நாம் எந்த ரகம்? நம்மையே மையமாக வைத்து செயல்படும் தன்னலவாதிகளா? அல்லது பிறரை மையமாக வைத்துச் செயல்படும் பொதுநலவாதிகளா? அல்லது எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத மந்தவாதிகளா?

"எனக்கு அயலான் யார்?" (லூக் 10:29) என்று சட்ட வல்லுநர் கேட்கின்றார். ஆனால் இயேசுவோ அவருடைய கேள்வியை மாற்றி, "கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு யார் அயலான்?" (லூக் 10:36) என்று கேட்கின்றார். நமக்கு அடுத்திருப்பவர் எல்லாம் நமது அயலான் அல்ல; மாறாக, யாருக்கு நம் உதவிக்கரம் தேவைப் படுகிறதோ அவரே நமது அயலான். மேலும், துன்புறும் எவரும். அவரின் மதம், இனம், மொழி வேறுபட்டிருப்பினும், அவர் நமது அயலான். ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்; காரணம் அவனும் மனிதன்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்; "இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்" (கொலோ 1:15). ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயல் (தொ நூ 1:26). எனவே, மனிதர் கடவுளின் சாயல் என்னும் இறையியல் அடிப்படையில் நாம் அயலாரை அன்பு செய்யும் புனிதமான கடமையைக் கொண்டுள்ளோம்.

வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார்; "மந்திரம் ஒதுவதையும் பாடல் பாடுவதையும் செபமாலை உருட்டுவதையும் நிறுத்து! கோவிலின் தனிமையான இருளடைந்த மூலையிலே கதவுகளை அடைத்துக் கொண்டு யாரையப்பா வணங்குகிறாய்? கண்களைத் திறந்து பார். கடவுள் உன் முன்னிலையில் இல்லை. கடினமான தரையை உழுகின்ற உழவனிடத்தில் அவர் இருக்கின்றார். சாலை அமைக்கச் சரலைக்கல் உடைத்துக் கொண்டிருப்பவனிடத்தில் அவர் இருக்கின்றார். அவர்களுடன் அவர் மழையில் நனைகின்றார்; வெயிலில் காய்கின்றார்."

தாகூரின் கூற்று நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால் இயேசுவின் கூற்றும் தாகூரின் கூற்றுடன் ஒத்திருக்கின்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும். “நான் பசியாய் இருந்தேன்; தாகமாய் இருந்தேன்; அன்னியனாய் இருந்தேன்; நோயுற்றிருந்தேன்; சிறையிலிருந்தேன்; என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்"( காண்:மத் 25:35-40). ஏழை எளியவர்களிடத்திலும் துன்புறுகின்றவர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார். மனிதனை மதிப்பது இறைவனை மதிப்பதாகும்; மனிதனை மிதிப்பது இறைவனை மிதிப்பதாகும்.

இறை வழிபாடு மனித நேயத்தை வளர்க்க வேண்டும். மனித நேயத்தை வளர்க்காத இறைவழிபாடு வடிகட்டிய சிலை வழிபாடாகும். ஏழையின் உடலிலும் இரத்தத்திலும் இருக்கும் கிறிஸ்துவை மதிக்காதவன், நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்க முடியாது - அயலானை வெறுத்துவிட்டு ஆண்டவனை அன்பு செய்வதாகக் கூறும் எவனும் பொய்யன். கடவுளின் அன்பு அவனிடம் இல்லை (1 யோவா 4:40). கடவுளை முழு இதயத்தோடு அன்பு செய்ய வேண்டும். அயலாரை நம்மைப்போல் அன்பு செய்ய வேண்டும். கடவுளுடைய இக்கட்டளையை அறிய நாம் விண்ணில் பறக்கவோ, கடல் கடந்து செல்லவோ தேவையில்லை. அவை நம் இதயத்தில் கடவுளால் பொறிக்கப்பட்டுள்ளன என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது (இச 30:10-14).

போக்குவரத்துக் காவலர் ஊதிய விசிலைப் பொருட்படுத்தாது, வாகன நெரிசல்மிக்க ஒரு சாலையைக் கடக்க முயற்சி எடுத்த ஒரு பாட்டியிடம் காவலர், “என்ன பாட்டி! விசில் அடிச்சா திரும்பிப் பார்க்காமல் போறீங்க?" என்று கேட்டார். அதற்கு அப்பாட்டி, "விசில் அடிச்சா திரும்பிப் பார்க்கிற வயசா இது?” என்று கேட்டார்.

விசில் அடிச்சா திரும்பிப் பார்க்காத பாட்டிகள் இருக்கலாம்; ஆனால் விசில் அடிச்சா திரும்பிப் பார்க்கிற காதலர்கள் நிறைய இருக்கின்றனர். "சரிகமபதநி. சைட் அடிப்பேன் கவனி" என்கின்றனர் பலர், ஆனால், பிறருடைய அழுகைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றவர்கள் எத்தனைபேர் உள்ளனர்?

ஆத்திகம் பேசி அடுத்தவர்களின் அழுகைக் குரலைக் கேட்காதவர்களைவிட, நாத்திகம்பேசி அயலாருக்கு உதவி செய்பவர்கள் கடவுளுக்கு நெருக்கமாய் உள்ளனர். இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அறைகூவல்: கடவுளை மற: மனிதனை நினை.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நல்ல சமாரியரின் நகல்களாவோம்

கருப்பின மாமனிதர் என உலகம் புகழும் மார்ட்டின் லூத்தர் கிங் மகத்தானவர். தனக்கென ஒரு தனித்துவத்தைத் தன் உழைப்பாலும் தியாகத்தாலும் உலகத்தில் உணர வைத்தவர்.

ஓர் அமெரிக்க வெள்ளைக்காரன் மார்ட்டின் லூத்தர் கிங்கைத் தன் பார்வையில், பேச்சில், செயலில் மிருகத்துடன் பழகுவதுபோல் அருவெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டு வந்தான். ஆனால் மார்ட்டின் லூத்தர் கிங்குக்கென ஒரு நிதானம், ஒரு விவேகம் உள்ளூரச் செயல்பட்டுக் கொண்டே இருந்தது. அமைதியே உருவான அவர் சொன்னார்: “நண்பா, நான் சுத்தமாக இல்லையெனில், சுத்தத்தைக் கற்றுத்தா. நான் முகமலர்ச்சியற்று இருப்பின், என்னில் புன்னகை புலரச் செய். என்னிடம் நற்பண்புகள் இல்லையென்றால், நற்குணங்களில் பயிற்சி கொடு. ஆனால் நீ என்னை வெறுப்பது என்னுடைய கருப்பு நிறத்திற்காகத்தான் என்றால் நான் என்ன செய்ய இயலும்? படைத்தவனைத் தான் கேட்க வேண்டும்".

நீங்களும் நானும் இச்சூழலைச் சந்தித்தால், கத்தியைக் கையில் எடுப்போம். ஆனால் இம்மனிதரும் ஓர் ஆயுதத்தை எடுத்தார். அதுதான் அன்பு, உண்மை, பொறு மற்றும் அகிம்சை. அவைதான் ஒரு நாள் கருப்பினச் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய அமெரிக்க வெள்ளையரை நாணிக் கூனிக் குறுக வைத்தது - "Lasting Impression" என்ற நூலில் காணும் நிகழ்வு இது.

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் (வழிபாட்டில் பாடுகிறோம். செயல்பாட்டில் ...?) காரணம் அவனும் மனிதன். அது மட்டும்தானா? காரணம் அவனும் இயேசு, இறைச்சாயல் என்பதன்றோ! "மிகச்சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத். 25:40) என்ற இயேசுவின் கனவு சொல்லில் மட்டுமல்ல, செயலில் அழுத்தம் பெறுகிறது நல்ல சமாரியர் உவமையில்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அன்பு செய்ய, அன்பு செய்யப்பட விழைகிறோம். அதனை குடும்பம், உறவு, சாதி, ஊர், இனம் என்று குறுகிய வட்டத்துக்குள் வெளிப்படுத்துகிறோம். ஆனால் இயேசு விடுக்கும் சவால்: "உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?... பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?'' (மத். 5:46,47).

இங்கே அன்பு செய்கிறாயா இல்லையா என்பது அல்ல கேள்வி. என் அயலான் யார்? “எனக்கு அடுத்திருப்பவன் யார்?” (லூக். 10:29) என்பதே! அந்தக் கேள்விக்கான பதிலே நல்ல சமாரியர் கதை.

பாகுபாடு பாராமல் நண்பனோ பகைவனோ நன்னயம் செய்தல் வேண்டும். தேவையில், சிக்கலில், துன்பத்தில், ஆபத்தில் தவிப்பவரைத் தேடிச்சென்று உதவுபவரே அயலான், அடுத்திருப்பவன் என்கிறார் இயேசு.

ஓர் இந்துத் துறவி அன்னை தெரசாவிடம், "நீங்கள் கிறிஸ்தவர். கிறிஸ்தவர்களில் பாதிப்புக்கு ஆளாகும், வாழ்வதற்குப் போராடும் தொழுநோயாளிகள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற அனாதைகள்... இத்தகையோருக்கு உதவுவதற்குப் பதில் சமய வேறுபாடு இன்றி அனைவருககும் ஏன் அன்புப் பணியாற்றுகிறீர்கள்? மதம் மாற்றுவதற்காகவா?” என்று கேட்டார். "யாரையும் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நாங்கள் அன்பு செய்பவர்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் அனைவரையும் அன்பு செய்யக் கடமை ஏற்றவர்கள்" என்றாராம் அன்னை.

1998ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் லாஸ் ஏஞ்சல்ஸ் 'டைம்ஸ்' செய்தித்தாளில் வெளிவந்த ஒரு நிகழ்வு. அமெரிக்காவில் சட்டக் கல்லூரித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்வு எழுதிய 50 வயதான மனிதர் திடீரென்று மாரடைப்பால் துடித்தார். இதைக் கண்ட இரு மாணவர்கள் தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டு மருத்துவர் வரும்வரை முதலுதவி செய்து அவரைப் பிழைக்க வைத்தனர். அவர்கள் இழந்த 40 நிமிடங்களை தேர்வு ஆய்வாளர் வழங்க மறுத்ததால் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்: "வழக்கறிஞர்களாக விரும்பும் உங்கள் இருவருக்கும் எந்த நேரத்தில் எது முக்கியம் எனத் தெரிந்திருக்க வேண்டும். எனவே தேர்வில் நீங்கள் இழந்த அந்த 40 நிமிடங்கள் உங்களுக்குத் தரப்படாதது சரியே".

இதுதான் உலகின் போக்கு. இதைக் குறித்தே அன்னை தெரசா கூறுவார்: "இன்றும் உலகத்தில் மிகக் கொடிய நோய் தொழு நோயல்ல, புற்று நோயல்ல, மாறாக யாராலும் கவனிக்கப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத, அன்பு செய்யப்படாத அவலமே மிகப்பெரிய தீங்கு". “நான் என்ன, என் சகோதரனுக்கு காவலாளியா?" (தொ.நூ.4:9) என்ற காயினின் குரல் இன்று பரவலாக ஒலிப்பது வேதனைக்குரியது.

எருசலேமிலிருந்து எரிக்கோ சென்ற வழிப்போக்கன் சந்தித்தது மூன்று விதமானர்கள்:
1. திருடன், கொள்ளைக்காரன்: “என்னுடையதெல்லாம் என்னுடையதே உன்னுடையதும் என்னுடையதே" என்ற சிந்தனை கொண்டவன்.
2.குரு, லேவியர்: "என்னுடையதெல்லாம் என்னுடையதே, உன்னுடையதெல்லாம் உன்னுடையதே" என்ற உணர்வு கொண்டவன்.
3. சமாரியர்: ''உன்னுடையதெல்லாம் உன்னுடையதே.
என்னுடையதும் உன்னுடையதே" என்ற தியாக மனநிலை கொண்டவன். இவர்களில் நாம் யார்?

ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியை கேட்டாள்: “அந்தக் குருவுக்கும் லேவியருக்கும் உதவ வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?" துடுக்காண ஒரு மாணவன் சொன்னான்: "திருடனால் கொள்ளையடிக்கப்பட்ட அவனிடம் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது என்ற ஏமாற்ற உணர்வாக இருக்கலாம்".

எதிர்பார்ப்பு எதுவுமின்றி தேவையில் சிக்கலில் பிறருக்கு உதவும்போது நமது நேரம், முயற்சி, சக்தி, செல்வம் ஆகியவற்றை இழக்க நேரிடும். இழப்பை ஏற்றுக் கொள்ள மனப்பக்குவமும், அதைப் பொருட்டாக நினையாத பெருந்தன்மையும் இன்றியமையாதது. இதற்கு எடுத்துக்காட்டு நல்ல சமாரியர்.

குற்றுயிராய்க் கிடந்தான் ஓர் அனாதை. அவனைத் தூக்கி வந்தார் அன்னை தெரசா. விலையுயர்ந்த மருந்துகளைக் கொடுக்கச் அன்னை.மருத்துவர் சொன்னார்: "இவன் உடனே செத்துப் போவான். இந்த மருந்தெல்லாம் வீண்தானே”. அன்னை தெரசா கண்ணில் நீர்மல்கச் சொன்னார்: "இவன் செத்துப்போவான். ஆனால் இவனுள் வாழும் கிறிஸ்து என்றும் சாகார்”.

கிறிஸ்து சாகார். அவரது அன்புப் பசியும் சாகாது. எங்கெல்லாம் மனித மாண்பு சிதைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இறைவனின் மாண்பு சிதைக்கப்படுகிறது. மண்ணிலும் மரத்திலும் சிலை வடித்து இறைவனை நினைவூட்டிக் கொள்ளும் நம்மால் மனிதனில் மட்டும்எப்படி இறைச்சாயலை இனம் காண இயலாமல் போகிறது?

சீனாவில் ஒரு சாலையில் குற்றுயிராய்க் கிடந்த ஓர் ஏழையை ஓர் அமெரிக்கப் போதகர் அணுகிப் பணிவிடை புரிந்தார். விழித்ததும் வெள்ளையர் ஒருவர் இப்படிப் பணிபுரிவதை எண்ணி வியந்து “ஏன் இப்படிச் செய்கிறீர்?” என்று கேட்டாராம். போதகரோ இயேசுவைப் பற்றிச் சொல்லி அவர் பணித்ததைக் குறிப்பிட்டார். “அவர் எப்பொழுது வாழ்ந்தார்?” என்று கேட்க “2000 ஆண்டுகளுக்கு முன்னே" என்று சொன்னார். அவன் கேட்டானாம் “இரண்டாயிரம் ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதை உணர்த்தவில்லையே!"

ஆம், அன்பும் இரக்கமும் காட்டாத தவறு இயேசுவை அறிக்கையிடாத தவறாகும். கிறிஸ்தவ வாழ்வு என்பது "அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை” (கலா.5:6). "செயலற்ற நம்பிக்கை பயனற்றது" (யாக். 2:20).

தேவையில் இருக்கும் மனிதன், நாம் விசுவாசத்தில் வாழ்ந்திட இறைவன் தரும் கொடையாகும். நமது நம்பிக்கையை அளக்கும் கருவியாகும். அன்பை வாழ்வாக்கிட நாம் பெறும் வாய்ப்பாகும்.

அன்பினால் நம் இதயம் நனையட்டும். அப்போது இரக்கம் கசியும். கருணை பிறக்கும். நல்ல சமாரியருடைய பணி நம் வாழ்வில் தொடரும்.

நல்ல சமாரியரின் நகல்கள் நாம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

'நல்ல சமாரியர்'

நாம் வாழும் இவ்வுலகில் கொடுமையான நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நிகழும்போது, நாம் என்ன செய்கிறோம் என்ற ஒரு ஆன்ம ஆய்வை மேற்கொள்ள இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. 'நல்ல சமாரியர்' என்ற உலகப் புகழ்பெற்ற உவமையை மையமாக்கி நாம் மேற்கொள்ளும் இந்த ஆன்ம ஆய்வில் பல முக்கியமான கேள்விகளைச் சந்திக்கிறோம்.

நகர் வாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அக்கறையின்மை என்பது இன்று உலகளாவிய ஒரு நோயாகப் (Globalisation of indifference) பரவியுள்ளது என்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் ஆற்றிய திருப்பலியின் மறையுரையில் குறிப்பிட்டார்.

அந்த மறையுரையில், தொடக்க நூலில் நாம் காணும் இரு கேள்விகளைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கடவுள் ஆதாமை நோக்கி எழுப்பிய கேள்வியும், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கடவுள் காயினிடம் எழுப்பிய கேள்வியும் இன்றளவும் மனித சமுதாயத்தின் மனசாட்சியைத் துளைக்கும் கேள்விகள் என்று திருத்தந்தை கூறினார்.

ஆதாமும், காயினும் இக்கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியாமல் திகைத்தனர். கடவுள் கேட்டக் கேள்வியின் பதில் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்ளும் வழியை அவர்கள் சிந்தித்தனர். கேள்வி கேட்ட கடவுளை, திசை திருப்ப முயன்றனர். சாக்குப் போக்குகள் சொல்லி, தப்பிக்கப் பார்த்தார் ஆதாம். எதிர் கேள்வி கேட்டு மழுப்பினார் காயின்.

கேள்வி வடிவிலோ, பிற வடிவங்களிலோ கடவுளின் வார்த்தைகள் நம்மை வந்தடையும்போது, அந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மைகள் நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாக்குவதால், அவற்றைவிட்டு விலக நாம் முயற்சிகள் எடுக்கிறோம். கடவுளின் வார்த்தைகள் வெகுதூரத்தில் இருப்பதாக நாமே கற்பனை செய்து, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம். இதற்கு நேர்மாறாக, கடவுளின் கட்டளை என்ற உண்மை எப்போதும் உன் கண்முன்னே உள்ளது, அதைத் தேடி நீ வானத்திற்குச் செல்ல வேண்டாம், கடல்களைக் கடக்க வேண்டாம் என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நமக்குச் சொல்லும் வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன.

இணைச் சட்டம் 30: 11-14 இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகுதொலையிலும் இல்லை. நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

உண்மையும், எதார்த்தமும் தெளிவாகத் தெரிந்தாலும், அவற்றைக் காண்பதற்குப் பதில், நம்மைக் காத்துக் கொள்வதற்குச் சாதகமான வழிகளில் சிந்திக்கவே நாம் முயல்கிறோம்.

இத்தகைய ஒரு சூழலை லூக்கா நற்செய்தி பத்தாம் பிரிவில் நாம் வாசிக்கிறோம். இறைவன் மீதும், அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வது ஒன்றே நிலைவாழ்வை அடையும் ஒரே வழி என்பதை, திருச்சட்ட அறிஞர் உணர்ந்திருந்தாலும், அந்த உண்மையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகளை அவர் தேடினார். இந்த உண்மையிலிருந்து அவர் ஏன் தப்பித்துக்கொள்ள முயன்றார்? என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம்... இயேசு இன்றைய நற்செய்தியில் இரு முறை விடுத்துள்ள ஆபத்தான சவால்கள். இறையன்பு, அயலவர் அன்பு என்ற இரு உன்னத கட்டளைகளைத் திருச்சட்ட அறிஞர் மனப்பாடமாகக் கூறியதும், இயேசு கூறிய வார்த்தைகள்: "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்." (10 : 28) இந்த உன்னத கட்டளைகளை மனப்பாடம் செய்வது மட்டும் போதாது. அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று இயேசு விடுத்த ஆபத்தான சவாலைச் செயல்படுத்த அஞ்சிய திருச்சட்ட அறிஞர், மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். உலகப் புகழ்பெற்ற கேள்வி அது: "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (10 : 29)

பதிலைத் தெரிந்து வைத்துக்கொண்டே எழுப்பப்பட்ட குதர்க்கமான கேள்வி இது என்பதை எளிதில் உணரலாம். இயேசுவை மடக்கிவிடலாம் என்ற கனவுடன் கேட்கப்பட்ட கேள்வி இது. "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கடவுள் கேட்டபோது, பதிலுக்கு, "நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" (தொ.நூ. 4 : 9) என்று காயின் கேட்டாரே, அது போன்ற குதர்க்கமான கேள்விதான் இதுவும்.

இயேசு அந்தக் குதர்க்கமானக் கேள்விக்கு அளித்த பதில், 'நல்ல சமாரியர்' என்ற ஓர் அற்புத உவமையாக 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மனித சமுதாயத்தை வாழ வைத்துள்ளது. இந்த உவமை நமக்குத் தெரிந்த உவமை என்பதால், நம் கவனத்தை வேறு திசையில் திருப்புவோம். இயேசுவிடம் இந்த உவமையைத் தூண்டி எழுப்பிய திருச்சட்ட அறிஞரின் கேள்வியையும், இந்த உவமையின் இறுதியில் இயேசு எழுப்பிய கேள்வியையும் இணைத்துச் சிந்திப்பது பயனளிக்கும்.

"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (10 : 29) என்பது திருச்சட்ட அறிஞர் எழுப்பிய கேள்வி. "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" (10 : 36) என்பது உவமையின் இறுதியில் இயேசு தொடுத்தக் கேள்வி.

திருச்சட்ட அறிஞர் "எனக்கு" என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறார். இயேசுவோ "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு" என்பதை அழுத்திக் கூறுகிறார். இயேசுவின் கேள்வியை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், "உமக்கு அடுத்திருப்பவர் யார் என்பதை விட, நீர் யாருக்கு அடுத்திருப்பவராக இருக்கிறீர் என்பதே முக்கியம்" என்பதை இயேசு அழுத்தந்திருத்தமாய் கூறுகிறார். அதுமட்டுமல்ல, “நீர் யாருக்கு அடுத்தவர் என்பதை உணர்ந்துவிட்டீரா? மிக்க நன்று. நீரும் போய் அப்படியே செய்யும்" (10 : 37) என்பது இயேசு இறுதியாக நமக்குத் தரும் கட்டளை. அதாவது, இறையன்பு, பிறரன்பு ஆகிய நியமங்கள், வெறும் மனப்பாடக் கட்டளைகளாக, சிந்தனைகளாக இருப்பதில் பயனில்லை; அவை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இயேசு இவ்வுவமையின் துவக்கத்திலும், இறுதியிலும் "நீர் அப்படியே செய்யும்" (10: 28,37) என்ற சொற்களை நம்முன் ஒரு சவாலாக வைக்கிறார். 'உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை' என்ற சூழலில் வாழும் நமக்கு, 'அடுத்தவர்மீது அக்கறை கொள்வோர் பேறுபெற்றோர்' என்ற தலைப்பில் Tommy Lane என்ற அருள் பணியாளர் வழங்கியுள்ள வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன. இந்த நம்பிக்கை வார்த்தைகளுடன் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

  • பிறர்மீது அக்கறை கொள்ளவும், அதனை வெளிப்படையாகக் காட்டவும் துணிவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் அன்பை மக்கள் உணரும்படி செய்வர்.
  • வேறெதுவும் செய்ய இயலாதச் சூழலிலும் துன்புறுவோருடன் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள், தாங்கமுடியாததாய்த் தோன்றும் துன்பங்களையும் தாங்குவதற்கு உதவி செய்வர்.
  • பிரதிபலனை எதிர்பாராமல் கொடுப்பவர்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள், கொடுப்பதை தன் இலக்கணமாகக் கொண்ட இறைவனை மக்களுக்கு வழங்குவர்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (இ.ச. 30:10-14)

இந்த வாசகமானது மோசேயின் மூன்றாம் உரையிலிருந்து (29:1-30:20) எடுக்கப்பட்டுள்ளது. இதில் மீட்படைவதற்குத் தேவையான கடவுளின் கட்டளையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டளையானது வானிலோ, அல்லது கடலிலோ வைக்கப்பட- வில்லை, மாறாக உங்களுடைய இதயத்தில் வைக்கப்பட்டுள்ளது. என மோயீசன் குறிப்பிடுகிறார். எனவே கடவுளின் கட்டளையைத் தேடி எங்கும் செல்லவேண்டாம், மாறாக உங்கள் மனசாட்சியின்படி கடவுளிடம் திரும்பி வாருங்கள் எனக் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (கொலோ. 1:15-20)

கொலேசு நகர திருச்சபையானது பெரும்பாலும் புறவினத்து மக்களைக் கிறிஸ்தவர்களாகக் கொண்டிருந்தது. அவர்கள் ஆவிகளின் மீது பயமும், தெளிவான அறிவும் இல்லாதவர்களாக இருந்தார்கள். எனவே இன்றைய வாசகத்தில் தூய பவுல்
1. கிறிஸ்து அனைத்து மனிதர்களுக்கும், ஆவிகளுக்கும் மேலா- னவர். அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2. இவ்வுலகத்தில் வாழும் அனைத்தும் அவராலே உண்டாக்கப்- பட்டன. எனவே அவரின் சக்திக்கு அப்பாற்பட்டு வந்த ஆவிகளும் எதுவும் செய்ய முடியாது. அவர் நமக்கு அருகிலே உள்ளார் என கூறுகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 10:27-37)

இயேசுவுக்குத் தொல்லை கொடுப்பதே சட்டவல்லுனன் கேட்ட கேள்வியின் நோக்கம். ஆனால் இயேசு கேட்டவனையே திறமையாக மடக்கி அவனையே பதில் கூறச் செய்கிறார். ஒவ்வொரு யூதனும் இ.ச. 6:4-9 வசனங்களைக் கொண்டத் தாயத்தை நெற்றியிலோ கையிலோ அணிந்திருப்பான். அதோடு மறை அறிஞர் லேவி. 19:18- வசனத்தையும் சேர்த்துக் கொள்வர். "உனது தாயத்தைப்பார் அது உன் கேள்விக்குக் பதில் அளிக்கும்" என இயேசு மறைமுகமாகக் கூறி, "சட்டநூலில் என்ன எழுதியுள்ளது? என்ன படிக்கிறீர்? என்று கேட்கிறார். சட்டவல்லுனன் தனது தோல்வியை ஏற்க மறுத்து தான் கேட்டது சரிதானெனக் காட்ட. ''எனது அயலான் யார்?” எனக் கேட்கிறான். இக்கதை வரலாற்று நிகழ்ச்சியாய் இல்லா- விட்டாலும் நம்பத்தகுந்தது. எருசலேம் கடல் மட்டத்திலிருந்து 2300 அடி உயரத்திலுள்ளது. எரிக்கோ கடல் மட்டத்திலிருந்து 300 அடி கீழேயுள்ளது. இரு இடங்களுக்குமுள்ள தூரம் ஏறக்- குறைய 20 மைல். பாதை இறக்கங்களும், வளைவுகளும், அடர்ந்த புதர்களும், குகைகளும் மிகுந்தது.

மறையுரை

அன்பு செய்யக் கற்றுக்கொள் அதற்குச் செலவு என்பது இல்லை. ஆனால் அந்த அன்பு நமக்குக் கொடுக்கும் பலன்களுக்கு அளவேயில்லை. 'நான் உன்னை அன்பு செய்கிறேன்' என்று மற்றவர்களைப் பார்த்துக் கூறுகிறோம். ஆனால் அந்த 'அன்பு' என்ற வார்த்தைப் பல நேரங்களில் வெறுமனே உச்சரிக்கப்- படுகின்றது. எப்போது அன்பு இதயத்திலிருந்து வெளிப்படுகின்றதோ அப்போதுதான் அன்பிற்கு உயிரோட்டம் கிடைக்கிறது. உருவம் கிடைக்கிறது, உறவு கிடைக்கிறது. உண்மையான அன்பு மற்றவர்களை வாழ வைக்கிறது, உண்மையான அன்பு மற்றவருக்கு உறவைக் கொடுக்கிறது, மகிழ்ச்சி படுத்துகிறது, வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. நேசிக்கும் இதயம், அன்பு செய்யும் இதயம் வறண்ட உலகைக் கூடப் பசுமையான சாரல் நிறைந்த உலகாக மாற்ற இயலும். அன்பிற்கு இருக்கும் வலிமை இந்த உலகில் வேறு யாருக்கும், எந்த பொருளுக்கும் ஏன் அணுகுண்டுக்குக்கூட இல்லை.

இரண்டு வகையான அன்பு ஒரே பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இறையன்பு மற்றும் பிறரன்பு. இவை இரண்டும் மதிப்பு மிகுந்த நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்டு மறுபக்கம் வெறுமனே காணப்பட்டால் அதற்கு மதிப்பு கிடையாது. மாறாக அது கள்ள நாணயமாகவே கருதப்படும். இன்றையத் திருவழிபாடும் வாசகங்களும் இறை - யன்பிலும் பிறரன்பிலும் வளர, வாழ அழைப்பு விடுக்கின்றன. இறை- யன்பின்றி பிறரன்பில்லை. இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு அயலான் அல்லது அடுத்திருப்பவர் யார் என்பதையும் அவர்களை அன்பு செய்ய வேண்டுமென்று நல்ல சமாரியன் உவமையை நமக்குக் கூறுகிறார். எரிக்கோவிலிருந்து எருசலேம் செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும். வழியும் கரடுமுரடாகக் காணப்படும். மக்கள் அங்கு அதிகம் வாழவில்லை என்றாலும் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் அதிகம் இருப்பார்கள். இந்த வழியாக எருசலேமிலிருந்து எரிக்கோவிற்குச் சென்று கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன் கள்வர்களால் தாக்கப்பட்டு, உடைமைகளை இழந்து, ஆடைகளை இழந்து, குற்றுயிராய் விடப்பட்டு கிடந்தான். இந்த வழியாகக் குரு வருகிறார், கண்டும் விலகிச் செல்கிறார். ஏன் குரு அவ்வாறு செய்தார் என்றால் யூதச் சட்டப்படி சவத்தை அதாவது இறந்தவர்களின் உடலைத் தொட்டவர் ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவர்களாகக் கருதப்படுவர். இதனால் திருச்சடங்குகளை நிறைவேற்ற இயலாது. எண்ணிக்கைப் புத்தகம் 19:11-22-இல் இந்தச் சட்டமானது கூறப்பட்டிருக்கிறது. ஒருவேளை அந்த மனிதனை எடுத்துச் செல்லும் போது இறந்து விட்டால் என்ன செய்வது, தீட்டுபட்டவனாக ஆகிவிடுவேனோ என்ற பயத்தில், திருச்சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இறைவனுக்கு ஏற்புடையவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலை இருந்தாலும் மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறார். நமது வாழ்விலும் இறைவனை அன்பு செய்வதாக எண்ணிக் கொண்டு திருயாத்திரைச் செல்கிறோம், நாள்தோறும் திருப்பலியில் பங்கு பெறுகிறோம் மகிழ்ச்சியாக. யார் எப்படி இருந்தால் என்ன நாம் நிம்மதியாக இருந்தால் போதும் என்று இந்தக் குருவைப் போன்று வாழ்ந்து வருகிறோம். இப்படி வாழும் போது உண்மையிலேயே இறைவனை அன்பு செய்கிறோமா என்பது ஒரு கேள்விக் குறி.

இரண்டாவதாக ஒரு லேவியர் வருகிறார். அடிபட்டு கிடந்த மனிதனைப் பார்த்துவிட்டு மறுபக்கமாய் விலகிச் செல்லுகிறார். ஏனென்றால் இவரும் யூதர். தம்மேல் பழி வந்து விடுமோ என்று 'கழுவுகிற மீன்களில் நழுவுகிற மீன் போல்' விலகிச் சென்று விடுகிறார். இவருக்கும் யூதச் சட்டங்கள்தான் முக்கியம். ஒருவர் துன்புற்ற நிலையில் இருக்கின்ற போது அவரை விட்டுச் செல்லுகின்ற மனப்பான்மை நம்மில் பலருக்கு உண்டு. விபத்துகளில் சிக்கியிருப்பவர்கள் பலரின் உயிர் இப்படிக் கண்டும் விலகிச் செல்வதனால் காப்பாற்றப்பட முடியாமல் போயிருக்கின்றது. காரணம் காவல் துறை, சட்டம் போன்றவற்றில் நாம் அலைக்கழிக்கப்படுவோம் என்ற மனப்பான்மை மனித நேயத்தை மங்கச் செய்கிறது, மனித மாண்பை உயிருடன் கொல்கிறது இத்தகைய நிலை. ஆனால் இப்போது அரசு "யாராவது விபத்தில் அடிபட்டுக் கிடந்தால் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள். மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு நீங்கள் சென்று விடலாம். உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது" என்கிறது. செயல்படுவோமா?

மூன்றாவதாக ஒரு சமாரியர் வருகிறார், இவர் அவன்மீது பரிவு கொள்கிறார், இரக்கப்படவில்லை. இரக்கப்படுவது மனதளவில், 'ஐயோ பாவம்' என்று சொல்லி அந்த இடத்தை விட்டே நகர்ந்து போவதாகும். அன்று இயேசு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரது போதனையைக் கேட்டுக் களைப்புற்றிருந்த வேளையில் அவர்கள்மேல் பரிவு கொண்டு வயிறார உண்ண உணவு கொடுத்தார், இதைப் போன்று இந்தச் சமாரியன், அந்த மனிதன் மீது பரிவு கொண்டு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். யார் இந்தச் சமாரியர்? யூதச் சமுதாயத்தவரால் ஒதுக்கப்பட்டு தனியாக வாழ்ந்து வந்தவர்கள்தான் இந்தச் சமாரியர்கள். யோவான் 4:10-இல் இயேசுவிடம் சமாரியப் பெண் 'நான் சமாரியப் பெண். நீரோ யூதன். என்னிடம் நீர் தண்ணீர் கேட்பதெப்படி' என்றார். இத்தகைய யூதச் சமுதாயத்தவர்களால் தாழ்வாகக் கருதப்பட்ட சமாரியரிடம் மனித நேயம் இருந்தது, மனித மாண்பு வெளிப்படுத்தப்- பட்டது, பிறரன்பின் வெளிப்பாடு இருந்தது.

வழிப்போக்களை எடுத்தச் சமாரியர் பரிவுடன் உதவி செய்கிறார், உயிர் கொடுக்கிறார், உறவைக் கொடுக்கிறார். தன்னிடம் இருந்தப் பணத்தை அவனுக்காகச் செலவழிக்கிறார். "இவரைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இறையன்பு மற்றும் பிறரன்பின் வெளிப்பாடு இந்தச் சமாரியரிடம் இருப்பதை இயேசு தெளிவாக எடுத்துரைக்கிறார். இயேசுவின் படிப்பினைகள் முழுவதும் இறையன்பும் மற்றும் பிறரன்பும் அடங்கி- யிருந்தன. கண்களால் காணும் நம் சகோதர சகோதரிகளை அன்பு செய்யாமல் கண்களால் காண முடியாத நமது அறிவுக்கு எட்டாத இறைவனை அன்பு செய்கிறேன் என்றால் அது பொய். இறைவனை நாம் எவ்வாறு அன்பு செய்ய இயலும்? (1யோவான் 4:20). "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25:40). அன்னைத் தெரசா கல்கத்தா மாநகரிலே பல ஏழை, எளிய நோயினால் துன்புறும், கைவிடப்பட்ட அனைவரையும் அரவணைத்து அன்பு செய்தார். இவர்கள் அனைவரையும் அன்பு செய்ததன் வாயிலாக இறைவனை அன்பு செய்தார். அன்பின் சிகரமாகத் திகழ்ந்தார்.

நமது அன்றாட வாழ்வில் நமக்கு அடுத்திருப்பவர் அயலான் யார்? (லூக்கா 10:29) நமது கண்முன்னே அடுத்தவரின் உதவிக்காய் ஏங்குபவர்கள், தினசரி வாழ்க்கையைக் கூடச் சமாளிக்க முடியாமல் தவிப்பவர்கள், உறவை இழந்து, உடமை இழந்து, வாழ்வில் வழி உண்டா எனத் தேடும் அனைவரும் நம் அயலார்கள். இவர்களைக் கண்டும் காணாமல் சென்றால் நமது வாழ்வு ஒரு குருவைப் போன்று அல்லது லேவியனைப் போன்று ஆகிவிடும். குடும்பத்தின் தேவைகளை அறிந்தும் குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவர்களும் லேவியர்களே. பெற்றோர்கள் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றட்டும், பிள்ளைகள் பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றட்டும். அருகிலிருப்பவர்களை அன்பு செய்யுங்கள். நாம் திருவிவிலியத்தை நாள்தோறும் வாசித்து, தியானித்து, திருப்பலியில் பங்குபெற்று, நற்கருணை உண்டாலும், பசியால் வாடும் ஒருவருக்கு ஒரு வேளை உணவு கூடக் கொடுக்க இயலவில்லை என்றால் கடவுளை அன்பு செய்கிறேன் என்று சொல்வதில் அர்த்தமில்லை. நல்ல சமாரியரைப் போல் அடுத்தவரை அன்பு செய்வோம்.

உனது வாழ்வில் மாற்றம் காண சமுதாயத்தில் ஏற்றம் காண அன்பு செய், முழுமனதுடன் பிறரை அன்பு செய். நீ கடவுளையே அன்பு செய்பவனாக உயர்த்தப்படுவாய். அன்பு செய்யும் இதயம் வறண்ட உலகைக் கூடப் பசுஞ்சோலையாக மாற்றிவிடும்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • நிலைவாழ்வு பெற வேண்டுமானால் உனது அயலானை அன்பு செய்ய வேண்டும். அயலான் என்பவன் அனைத்து மனிதர்களையும், ஏன் உன்னுடைய மிகவும் வேண்டத் தகாத எதிரிகளையும் குறிக்கும்.
  • எண்ணிக்கையிலடங்காதச் சட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதே. உன் அயலானை அன்பு செய்தால் அனைத்தையும் நிறைவேற்றுபவனாக மாறுவாய்.
  • மீட்புக்குரிய அனைவருக்கும் வழி திறந்தே இருக்கின்றது. ஆனால் அதன் நுழைவுக் கட்டணம் மற்றவரை அன்பு செய்வதே.
  • பணம், பொருள் செல்வாக்கு, புகழ் இவை அனைத்தும் மீட்பு கொடுக்காது. மாறாக அன்பு மட்டுமே மீட்பைக் கொடுக்கும்.
  • மற்றவரை அன்பு செய்வதன் மூலம் கடவுளின் கட்டளையைக் கடைபிடிக்கிறோம் (இ.ச. 30:16). கடவுளோடு ஒன்றித்து இருக்கி- றோம். அதனால் எந்தப் பயம் இல்லாமல் கிறிஸ்துவோடு பயணிக்கிறோம் (கொலோ. 1:15-20).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் பதினைந்தாம் ஞாயிறு

பின்னணி

இயேசுவின் உவமைகளுள் காணாமல் போன மகன் உவமை போன்ற புகழ்பெற்ற நல்ல சமாரியன் உவமை இன்று நமக்கு நற்செய்தியாக அளிக்கப்பட்டுள்ளது அது தரும் செய்தியை அலசி ஆய்வதற்கு முன் இவ்வுவமை கூறப்பட்ட பின்னணியைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்வோம்.

இயேசு இறைவாக்கினராக எருசலேம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறபோது இந்த உவமையைக் கூறுகின்றார். இப் பயணத்தின்போது இயேசு பல்வகை மாந்தரைச் சந்திக்கின்றார். அவர்கள் இயேசுவுக்கு பல்வகையில் பதிலிறுப்புச் செய்கின்றனர். இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முன்பாக இயேசு தம் சீடர்களைப் 'பேறுபெற்றவர்கள்' எனப் புகழ்கின்றார் (காண். லூக் 10:23-24). அதற்கடுத்த பகுதியில் திருச்சட்ட அறிஞர் 'அவரைச் சோதிக்கும் நோக்குடன்' (வச.25)அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.லூக்7:30- ன் பின்னணியில் திருச்சட்ட அறிஞர்கள் இறைத்திட்டத்தையும், இறைவாக்கினரையும் புறக்கணித்தவர்களாகக் கொள்ளப்பட வேண்டும்.இன்றைய நற்செய்தியைத் தொடர்ந்து வருகின்ற பகுதியில் இரு சகோதரிகள் எப்படி இயேசுவைத் ‘தம் வீட்டில் வரவேற்றனர்' என விவரிக்கின்றார் லூக்கா (காண். லூக் 10:38- 42). ஆக ஏற்பும் எதிர்ப்பும் எனும் சூழலில் இறைவாக்கினரான இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் தொடர்கின்றது.

பிற நற்செய்திகளுடன் ஒப்பீடு

நல்ல சமாரியர் உவமை லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் ஒன்றாக இருந்தாலும் அது கூறப்படும் பின்னணி யான திருச்சட்டம் பற்றிய விவாதம் பிற ஒத்தமை நற்செய்தி களிலும் காணக்கிடக்கின்றது (காண். மாற் 12:28-34; மத் 22:34- 40). அவ்விடங்களில் ‘முதன்மையான கட்டளை எது' என விவாதம் தொடங்குகின்றது. அதற்குப் பதிலாக இச 6:5-ன் இறையன்பு கட்டளையும் லேவி 19:18-ன் பிறரன்புக் கட்டளையும் பதில்களாகத் தரப்படுகின்றன. பிற ஒத்தமை நற்செய்திகளில் உள்ளதுபோல் முதன்மையான கட்டளை, இரண்டாவது கட்டளை (காண். மாற் 12:30-31) எனப் பிரித்துக் காட்டாமல் லூக்கா இறையன்புக் கட்டளையையும் பிறரன்புக் கட்டளையையும் ஒன்றாக இணைத்துக் கூறுகின்றார். இதன் வழியாகப் பிறரன்புக் கட்டளையை இறையன்புக் கட்டளைக்கு இணையாக்கு கின்றார். இதை விளக்க ஓர் உவமையையும் தருகின்றார். இனி உவமையின் செய்தியை அறிந்து கொள்ள முயல்வோம்.

மூன்று அதிர்ச்சிகள்

இயேசுவின் இந்த உவமை வாசிப்பவரை அதில் ஈடுபடுத்தி விடுகின்றது. ஒன்று மாற்றி ஒன்று என மூன்று அதிர்ச்சிகளைக் கொண்டு இந்த உவமையை அமைத்துள்ளார் இயேசு. இயேசுவின் காலத்து யூதர், குரு, லேவி, சமாரியர் ஆகியோர் இடையே இருந்த சமூக, கலாச்சார, சமய உறவுகளின் பின்னணியில் இந்த உவமையை வாசித்தால் இந்த அதிர்ச்சிகள் நமக்குத் தெளிவாகும்.

அ. தேவையில் உள்ள யூதன்

இறைவனின் திருநகராம் எருசலேமிலிருந்து இறங்கிப் போன ‘யூதன்' ஒருவனுக்கு இழைக்கப்படும் வன்முறை முதல் அதிர்ச்சி. அவன் கள்வர் கையில் அகப்படுகிறான், அவன் ஆடைகள் உரியப்படுகின்றன, அடிக்கப்பட்டு குற்றுயிராய் விடப் படுகின்றான் (காண். வச. 30). யூதன் ஒருவன் தேவையில் இருக்கின்றான், வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளான்.

ஆ.உதவ மனமில்லா சமயத் தலைவர்கள்

அவ்வழியே வந்த குருவும் லேவியரும் ஆகிய யூத சமயத் தலைவர்கள் சக யூதனுக்கு உதவாமல் ‘அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றது’ (வச 31-32) இரண்டாவது அதிர்ச்சி. ஒரு சமயத் தலைவர் தன் சக சமய பற்றாளருக்கு, நம்பிக்கையாளருக்கு இயல்பாய் ஓடிச்சென்று உதவ வேண்டும், உதவியிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அவர்கள் விலகிச் சென்றதற்கு வேறொரு சட்டம் காரணமாய் இருந்திருக்க வேண்டும். அதாவது லேவி 11:31-32ன்படி இறைபணி செய்வதற்கு தீட்டுப்படாமலிருக்க வேண்டும். எனவே 'இறந்த உடலை’ (ஒரு வேளை யூதன் இறந்திருந்தால்) தீண்டுவது அவர்களை தீட்டுள்ளவர்களாக மாற்றிவிடும். எனவே இவர்கள் இறையன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்க பிறரன்புக் கட்டளையைப் புறந் தள்ளுகின்றனர்.

இ. முன்வந்து உதவிய சமாரியன்

யூதருக்கும் சமாரியருக்கும் இடையே இருந்த பகைமையின் பின்னணியில் சமாரியர் ஒருவர் முன்வந்து அடிப்பட்ட யூதனுக்கு உதவுவது மூன்றாவது அதிர்ச்சி. சமாரியர் செய்த உதவிகளை விவரமாக விவரிக்கின்றார் இயேசு. அவர் "அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து 'இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார் (வச. 33-35) என அவரின் இரக்கச் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

எனக்கு அடுத்திருப்பவர் - யாருக்கு நான் அடுத்திருப்பவர்? இன்றைய நற்செய்திப் பகுதியின் நிகழ்வைத் தொடங்கு கின்ற திருச்சட்ட அறிஞர் தன்னை மையப்படுத்தி, தன் அறிவை வெளிக்காட்ட இயேசுவிடம் அவரை 'சோதிக்கும் நோக்குடன்' (வச. 25) வினா தொடுக்கின்றார். தம்மை 'நேர்மையாளர்' என காட்ட விரும்பி இரண்டாவது வினாவைத் தொடுக்கின்றார். 'எனக்கு அடுத்திருப்பவர்யார்?' (வச.29) எனும் தன்மைய, கர்வமான வினாவிற்கு விடைசொல்ல வந்த இயேசு உவமையை முடிக்கின்ற போது, நிகழ்வின் மையத்தைத் திருச்சட்ட அறிஞரிடமிருந்து நகர்த்தி‘கள்வர் கையில் அகப்பட்டவருக்கு அடுத்திருப்பவர்யார்?? (வச 36) எனக் கேட்டுத் தேவையில் இருப்பவரை மையப்படுத்தி அவருக்குயார் அடுத்திருப்பவராக இருக்க முடியும் எனக் கவனத்தை அடிபட்டவர் மீது குவிக்கின்றார் இயேசு. ஆக 'யார் எனக்கு அடுத்திருப்பவர்?' என அகந்தையுடன், கர்வத்துடன் கேட்பதை விடுத்து யாருக்கு நான் அடுத்திருப்பவராக இருக்க முடியும் என தாழ்ச்சியுடன் தேடி பணி செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இறுதியாக...

'நிலைவாழ்வை என்ன செய்ய உரிமையாக்குவதற்கு வேண்டும்?' (வச 25) எனத் தொடங்கிய விவாதம் சட்டங்களைப் பற்றிப் பேசி (வச. 26-27), இறுதியாக இரக்கம் காட்டுவதைப் பற்றிச் சொல்லி(வச.37) நிறைவடைகின்றது.எனவே இரக்கம் காட்டுவதே இறையன்பு பிறரன்பு கட்டளையைக் கடைப்பிடிக்கவும், நிலை வாழ்வு அடையவும் வழி. இரக்கம் கொண்டு வாழ்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - பதினைந்தாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் இச.30:10-14

தொடக்க நூலில் கூறப்பட்டுள்ள திருச்சட்டப் பகுதியின் தொடர்ச்சியாக விளங்குகிறது இணைச்சட்டம். இதில் வரலாறும் சட்டங்களும் கலந்து காணப்படுகின்றன. "நீங்கள் என் மக்கள்; நான் உங்கள் கடவுள். எனக்கு அன்பு செய்து என் கட்டளைகளின்படி நடந்தால் நீங்கள் வாழ்வீர்கள்' என்பது இறைவன் இஸ்ரயேல் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை. "உமக்குப் பணிந்து நடப்போம்" என்பது மக்கள் தந்த பதில். எனினும் இவ்வாக்குறுதி பல முறை மீறப்பட்டுள்ளதற்கு வரலாறு சான்று. பாபிலோனியாவிலிருந்து திரும்பி வந்த மக்களிடம் மோசே ஆற்றும் திருவுரையே இன்றைய வாசகம்

.

ஆண்டவரின் கட்டளை

இஸ்ரயேல் மக்களிடம் இறைவன் எதிர்பார்த்தது அவர்களது பிளவு படாத அன்பு. இஸ்ரயேலே உற்றுக்கோள்: "நம் கடவுளாகிய ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு ஆன்மாவோடும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்வாயாக" (6 : 4). இதையே முதன்மைக் கட்டளையாக நமதாண்டவரும் குறிப்பிடுகின்றார் (மத். 22 : 37). இறைவனுக்கு அன்பு செய்பவன் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பான். அன்பு செய்கிறேன் என்று வாயளவில் கூறி, அவரது விருப்பத்தை செயல்படுத்தாதவன் பொய்யன். ஆண்டவருக்கு செயலளவில் அன்பு செய்பவன் அனைத்து அருட்கொடைகளையும் பெறுவான் என்பது வேதவாக்கு. ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவரை இஸ்ரயேல் இனம் தன் நாட்டில் வளமுடனும் நலமுடனும் இருந்தது. கடவுளை மறந்து சிலை வழிபாட்டில் ஈடுபட்டு இறைவனில் நம்பிக்கை இழந்து வேற்று அரசர்களின் துணையைத் தேடியபொழுது, தம் சுதந்திரத்தை இழந்து அந்நிய நாட்டில் அகதிகளாய் வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனைப் பிரிந்து வாழும்பொழுது அமைதியை இழந்து தவிக்கிறது என்பதன் எதிரொலியை இஸ்ரயேல் வரலாற்றில் காணலாம்.

ஒருவனே போற்றி ஒப்பிலா
அப்பனே போற்றி வானோர்
குருவனே (ஆசானே) போற்றி எங்கள்
கோமளக் கொழுந்தே போற்றி
வருக என்று என்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின்பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே (திருவாசகம்)

செய்வதற்கு எளிது

இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கட்டளைகள் நமக்கு எட்டாத தொலைவில் இல்லை; நமது புத்திக்குப் புலனாகாதவை அல்ல; கடல் கடந்து தேட வேண்டிய செல்வம் அல்ல; இவை எம் இதயத்தில் எழுதப்பட்டவை. வேத நூலில் இறைவனின் குரலாக ஒலிப்பவை. எம்மால் அனுசரிக்க இயலாது என எவரும் கூற முடியாது. தனது சிலுவையை இயேசு மற்றவர் தோளில் சுமத்துவதில்லை. "என் சீடனாயிருக்க விரும்பினால் உன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்" என்று தான் கூறுகிறார்.

"இதோ ஆண்டவரின் அடிமை : உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்று கூறி இறைவனின் திருச்சித்தத்தைச் செயல்படுத்தியவள் நமதன்னை. “அவர் உங்களுக்குச் சொல்லுவதை யெல்லாம் செய்யுங்கள்” என்று மரியா கானாவூர் திருமணத்தில் கூறினாள். பணியாட்களும் அப்படியே செய்தனர். தண்ணீர் இரசமானது; முதற்புதுமை நடந்தது. சாலை ஒழுங்குகள் நமக்குச் சங்கடமாக இருக்கலாம். ஆனால் அவை நமது பாதுகாப்புக்காகவே அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை அனுசரிப்பதிலே ஏற்படும் சிறு சிறு சங்கடங்களைப் பொருட்படுத்தாது அவற்றை அனுசரித்தால், நாம் பாதுகாப்புடன் வாழ வாய்ப்பு ஏற்படும். அப்படியே இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருப்பினும், அவற்றை அனுசரித்தால் அவற்றின் பலனைச் சுவைக்க முடியும்.

நீ அந்தக் கட்டளையின் படி நடக்கும் பொருட்டு அது உனக்கு மிகவும்
அண்மையிலேயே இருக்கிறது. அது உன் வாயிலும் இதயத்திலும் உள்ளது.

இரண்டாம் வாசகம் : கொலோ. 1: 15 - 20

கிறிஸ்து படைப்பிற்கெல்லாம் முதல்வர் (1 : 5); இறந்தோர்க்கும் இருப்போர்க்கும் ஆண்டவர் அவர் (1:18; உரோ. 14:9). வானதூதர்கள் வலம் வந்து அவரை ஆராதிக்கின்றனர். கிறிஸ்துவின் முதன்மைத் தன்மையை பலகோணங்களில் விளக்குகிறார் பவுல். அண்டங்களின் தோற்றத்திற்கும் செயலுக்கும், அவற்றின் இறுதி நிறைவுக்கும் ஆதியும் அந்தமுமாய் இருக்கும் பரம்பொருள் இறைமகன் இயேசு. கண்ணுக்குப் புலப்படும் அனைத்து படைப்புகளின் கூறுகளையும், அகில உலகின் அனைத்து படைப்புகளின் கூறுகளையும், அகில உலகின் அனைத்து ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்தித் தன்னில் இணைப்பவர் அவரே. எனவேதான் நமதாண்டவரின் முதன்மைக்கு முடிவேயில்லை என்கிறார் கிறிஸ்தோஸ்தோம். "தனக்குவமை இல்லாத்" தனிமகன் இயேசுவின் மாண்பு பற்றிய காவியமே இன்றைய வாசகம்.

அவர் கடவுளின் சாயல்

கிறிஸ்து தந்தையினின்று தோன்றியதாலும், (யோ. 5: 1;7:16) தந்தையின் மாட்சியை முற்றிலும் பிரதிபலிப்பதாலும் அவரது சாயலாகிறார். மனிதனை இறைவனின் சாயலாகப் படைப்பதற்கு முன்பாகவே, நித்தியத்திற்கும் இறைமகன் தந்தையின் சாயலாக விளங்கினார். இதை அறியாத மனிதன் தன் விருப்பத்திற்கேற்ப இறைவனின் சாயலை சிலையாக்கி வணங்கி வந்தான். இவை வெறும் மாயை (காண் உரோ.1 : 23) என்கிறார் பவுல். இயேசுவைப் போலவே, அவரில் இணைந்துள்ள மனிதனும் இறைவனின் சாயலாகின்றான். நாம் எந்த அளவுக்கு கிறிஸ்துவின் மறுபதிப்பாய் விளங்குகிறோமோ, அந்த அளவுக்கு இறைவனின் சாயலாகிறோம் (காண் உரோ. 8:29; 1 கொரி. 15 : 49). இதை உணர்ந்து கிறிஸ்துவை நமது எண்ணத்தில், சொல்லில், செயலில் பிரதிபலிக்கின்றோமா?

அனைத்திற்கும் மேலானவர்

ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல். ஞானம் ஒன்றே என்றாலும், எல்லாம் செய்யவல்லது..." (சாஞா. 7:26 - 27). ஞானத்தைப் பற்றிய வாக்குகள் அனைத்தும் கிறிஸ்துவையே சுட்டுகின்றன. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாவன, கட்புலனாகாதன, அரியணை சூழ்வோர், ஆட்சி புரிவோர், தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் ஆகிய அனைவரையும் படைத்தவர் அவர் (16). எனவேதான் அவர் அனைத்திற்கும் மேலானவர். உருவமற்றவரான வானதூதர்கள், மனுவுருவெடுத்த தெய்வத் திருமகனைவிட மேலானவர்கள் என்ற வாதத்தை மறுக்கிறார் பவுல். இறைவனாம் தந்தைக்குக் கூறப்பட்டுள்ள அனைத்துப் பண்புகளையும் கிறிஸ்துவில் கண்டு, அவரை மண்ணுக்கும் விண்ணுக்கும் வேந்தனாகக் காண்கிறார் பவுல். "எல்லாமுன் அடிமையே, எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன் செயலே" (தாயு).

மீட்பின் மன்னர்

கிறிஸ்து அகில உலகின் ஆண்டவர்; மக்களுக்காகவே மன்னன்... குடிமக்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களைக் காத்துப் பேணுவது மன்னனின் கடமை. தன் குடிகளைச் சிறைப்பிடித்து, கொள்ளைப் பொருளாகக்கொண்டு சென்றவர்களின் கோரப் பிடியினின்று அவர்களைக் காக்க வேண்டியது அரசனின் வேலை. தன் படைப்புகளாகிய மக்கள் பாவச்சிறையில், சாத்தானின் அடிமைத் தனத்தில் அவதிப்படுவதைக் கண்ட தெய்வத் திருமகன் அவர்களது மீட்புப் பணியிலே தன்னையே பலியாக்கினார். பாவத்தினால் விளைந்த குழப்பத்தையும் பிளவையும் தன் சிலுவை மரணத்தால் நீக்கி, விண்ணிலும் மண்ணிலும் ஒப்புரவு ஏற்படுத்தினார். பாவத்தினால் மனிதன் மட்டுமல்ல, படைப்பு முழுவதும் பாதிக்கப்பட்டது. கிறிஸ்துவின் மரணத்தினால் படைப்பு முழுவதும் ஒப்புரவாக்கப்பட்டது (காண் உரோ. 8:20 - 24). என்னைத் தன் திருமகன் வழியாகத் தன் சாயலாகப் படைத்து, எனக்குத் தலைவனாய் அனைத்திற்கும் மேலான ஆண்டவரைத் தந்து, அவர் வழியாக என்னை மீட்டுக் காத்த கருணைக் கடலாம் இறைவனுக்கு எப்படி நன்றி கூறுவேன்? "நன்றி மறப்பது நன்றன்று" (குறள் 108). எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

அவர் கட்புலனாகக் கடவுளின் சாயல்.
படைப்பிற்கெல்லாம் தலைப் பேறானவர்.

நற்செய்தி லூக். 10:27 - 37

ஆண்டவரைச் சோதிக்கும் நோக்குடன் கேட்கப்பட்ட கேள்வியும் அதன் பதிலுமே இன்றைய நற்செய்தியின் முற்பகுதி (25 : 28). “என் அயலான் யார்?” என்ற அடுத்த வினாவின் விடையே பிற்பகுதி.

முடிவில்லா வாழ்வுக்கு வழி

முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும் என்பது கேள்வி. கேட்டவனிடமிருந்தே பதிலை வரவழைக்கிறார் இயேசு. “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்பது ஆண்டவரின் கட்டளை (இச.6:15). இவ்வாசகம் அடங்கிய தாயத்தை ஒவ்வொரு யூதனும் நெற்றியிலோ கையிலோ அணிந்திருப்பான். இதை வீட்டு நிலையிலும் எழுதி வைப்பதுண்டு. எனவே இதுவே முக்கியமான கட்டளை என்பதை அனைவரும் அறிவர். இயேசுவும் இதையே முக்கிய கட்டளையாகக் குறிப்பிடுகிறார் (மத். 22: 35-40).

ஆண்டவருக்கு அன்பு செய்வதும், அயலானுக்கு அன்பு காட்டுவதும் ஒரே சட்டத்தின் இரு கூறுகள்; ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றின்றி மற்றதில்லை. எனவேதான் "நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனை அன்பு செய்யாதவன், தான் கண்டிராத கடவுளுக்கு அன்பு செய்ய இயலாது” என்கிறார் யோவான் (காண் 1:4; 19-21, கலா. 5:14). "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு” என்றும் (உரோ 13:10). "நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன; இவற்றுள் அன்பே தலைசிறந்தது” என்றும் (1 கொரி.13: 13) பவுல் கூறுகிறார். என் நித்திய வாழ்வை நிர்ணயிப்பது செயல்படும் அன்பே என்பதை உணர்கின்றேனா?

அயலான் யார்? உவமை வழியாக இக்கேள்விக்குப் பதில் அளிக்கிறார் இயேசு. உவமையில் வரும் குரு, எருசலேமில் தன் அர்ச்சனைப் பணியை முடித்துவிட்டு யெரிக்கோ சென்றவர். வழியில் குற்றுயிராய்க் கிடந்தவன் இறந்துவிட்டான் என்று எண்ணி நடந்திருக்கலாம்; அல்லது இறந்தவனைத் தொட்டுவிட்டால் தீட்டுக்கு ஆளாகி, தொடர்ந்து வழிபாடு நடத்த முடியாதே என்று எண்ணி (எண்ணா 19:11; 21:1) மேலே சென்றிருக்கலாம். பிறருக்கு உதவுவதைவிட வழிபாடு நடத்துவதே மிகவும் முக்கியம் என்று எண்ணியவர் இவர். லேவியனும் இக்குருவைப் போல் நடந்து கொண்டான். இவர்கள் தன்னலவாதிகள்; உணர்ச்சியற்ற மரக்கட்டைகள்; இவனுக்கு உதவுவதால் தமக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சிய கோழைகள்.

இவர்களுக்கு முற்றிலும் மாறானவன் அவ்வழி வந்த சமாரித்தன். இச்சமாரித்தன் சட்டங்களைச் சரிவர அனுசரியாத பாவிகளாக யூதர்களால் எண்ணி இகழப்பட்டனர்; இயேசுவையும் சமாரியன் என்றே இகழ்ந்து ஒதுக்கினர் (காண் யோ. 8 : 48). ஆனால் சட்டங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத சமாரியன்தான் தன் பகைவனாகிய யூதனின் காயங்களைக் கட்டி, தன் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள சாவடிக்குக் கொண்டு சென்று அவன் உயிரைக் காத்தவன். “இரக்கம் காட்டுபவன் கடவுளுக்கு நெருக்கமாயுள்ளான்" என்ற உண்மையை இவன் அறிந்திருந்தான். தெருவில் குற்றுயிராய்க் கிடப்பவர்க்கு உதவினால் போலீஸ், நீதிமன்றம் என்றெல்லாம் அலைய வேண்டியிருக்குமேயென்று விலகிச் செல்பவர்கள் குரு, லேவியனின் வாரிசுகள். எனக்கு என்ன ஏற்பட்டாலும் சரி என்று துணிந்து, வீதியில் விபத்திற்குள்ளாகி இருப்பவரை மருத்துவமனை சேர்த்து, அவரது உயிரைக் காப்பவர் நல்ல சமாரித்தனின் வாரிசு ஆகிறார். கட்சிக் கொள்கை, சாதி, நாடு என்ற எல்லைகளைத் தாண்டி எவரெவருக்கு நம் உதவி தேவையோ அவரெல்லாம் அயலான். குறுகிய வட்டத்தில் வாழாது, பரந்த மனதுடன் அனைவருக்கும் சிறப்பாக நம் பகைவர்க்கும் அன்பு செய்ய வேண்டும் என்று நமதாண்டவர் போதிக்கின்றார்.

"அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும். ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”

இயேசு, நீரும் போய் அவ்வாறே செய்யும் என்று கூறினார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாயில்! இதயத்தில்! கையில்!

இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது: பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம். பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், மந்திரங்களை உச்சரிப்பதையும், வழிபாடுகள் நடத்துவதையும் முதன்மைப்படுத்துகிறது. ஞான மார்க்கம் இறைவனின் திருநூல்களை அறிவதையும், இறைவன் பற்றிய மறைபொருளை சிந்தித்து, தியானித்து அறிதலையும் முதன்மைப்படுத்துகிறது. கர்ம மார்க்கம் பிறரன்புச் செயல்கள் செய்வதையும், தன்னுடைய வேலைகளை சரிவரச் செய்தலையும் முதன்மைப்படுத்துகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வரும் வாய், இதயம், கை என்னும் மூன்று வார்த்தைகளும் முறையே பக்தி, ஞானம், மற்றும் கர்மம் ஆகியவற்றைக் குறிப்பது போல இருக்கின்றன. இறைவனின் திருச்சட்டங்கள் தூரத்தில் இல்லை, மாறாக, அவை வாயிலும், இதயத்திலும் உள்ளன என்று மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்க, இயேசுவோ இன்னும் ஒரு படி மேலே போய், அது கையில் – அதாவது, செயலில் – இருக்கிறது என்று இன்னும் அதை நெருக்கமாக்குகிறார்.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 10:25-37) திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பது மற்ற நற்செய்திகளில் காணக் கிடந்தாலும் (காண். மாற் 12:28-34, மத் 22:34-40, லூக் 18:18-20), லூக்கா மட்டும்தான் இந்த கேள்வியைப் பயன்படுத்தி ‘நல்ல சமாரியன்’ உருவகத்தைப் பதிவு செய்கின்றார்.

இயேசு பணிக்கு அனுப்பிய எழுபது (எழுபத்திரண்டு) சீடர்களும் மகிழ்வோடு திரும்புகின்றனர். அவர்களின் மகிழ்வில் மகிழ்கின்ற இயேசு தன் தந்தையை வாழ்த்திப் புகழ்கின்றார் (காண். லூக் 9:21-22). தொடர்ந்து, ‘நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர்!’ (லூக் 9:23) என தம் சீடர்களை வாழ்த்துகின்றார். இந்தச் சூழலில் அங்கே வருகிறார் திருச்சட்ட அறிஞர். அவர் வருவதன் நோக்கம் இயேசுவைச் சோதிக்க.

‘போதகரே’ என்றுதான் இயேசுவை அழைக்கிறார். இந்த அழைப்பிலேயே ஒரு கிண்டல் இருக்கிறது. ‘திருச்சட்டத்தை முறையாகக் கற்ற ஒருவரையே’ இந்த தலைப்பு கொண்டு அழைப்பர் யூதர்கள். ‘நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ – ‘நிலைவாழ்வை உரிமையாக்குதல்’ என்பது ஒவ்வொரு யூதரும் ஏங்கிக் கொண்டிருந்த ஒன்று. ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட இந்த ‘உரிமையாக்குதல்’ வாக்குறுதி (காண். தொநூ 12:1-3) தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாக நினைத்தனர் அவர்கள். இயேசு அவருக்கு விடையாக மற்றொரு கேள்வியை முன்வைக்கின்றார்: ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?’ மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசுவே பதில் தருகின்றார். ‘ஆண்டவரை அன்பு செய்’ என இச 6:5ஐயும், ‘அயலானை அன்பு செய்’ என லேவி 19:18ஐயும் மேற்கோள் காட்டுகின்றார். இச 6:4-9 ஒவ்வொரு யூதரும் அறிந்திருக்கும் ஒரு இறைவார்த்தைப் பகுதி. ‘இதயத்தோடும்,’ ‘ஆன்மாவோடும்,’ ‘வலிமையோடும்,’ ‘மனத்தோடும்’ என்னும் நான்கு வார்த்தைகளில் முதல் மூன்று வார்த்தைகள் மட்டுமே எபிரேய அல்லது கிரேக்க பதிப்புகளில் உள்ளன. மூன்று வார்த்தைகளோ, நான்கு வார்த்தைகளோ, இவ்வார்த்தைகள் நமக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே: நம் வாழ்வின் எல்லாமாக இறைவன் வேண்டும் – இதயத்தின் ஆழத்தில், ஆன்மாவின் அடையாளமாய், நம் புத்தியின் தெளிவாய், நம் ஆற்றலின் நிறைவாய். நம் உடலின் எந்தச் சிறுபகுதியும் அவரிடமிருந்து அந்நியப்பட்டுவிடக் கூடாது. இறைவனை அன்பு செய்யும் கட்டளையோடு ஒன்றித்துச் செல்லும் மற்ற கட்டளை அடுத்தவரை அன்பு செய்வது (காண். 1 யோவா 4:7-21). ‘உன்னைப்போல்’ என்ற வார்த்தையில் ஒருவர் தன்னை அன்பு செய்ய வேண்டிய கட்டளையும் பதிவு செய்யப்படுகிறது. மூன்று அன்புகள்: ஆண்டவரை, அடுத்தவரை, என்னை – இதே வரிசையில் என் வாழ்வில் இருக்க வேண்டும்.

திருச்சட்ட அறிஞர் இந்தக் கட்டளைகளை அறிந்திருந்தார். ஏனெனில், அகிபாவின் போதனையின்படி, ‘திருச்சட்டத்தை அறிதல் அதைப் பின்பற்றுவதைவிட மேலானது!’ ஆனால், இயேசுவைப் பொருத்த வரையில், அறிதல் மட்டும் போதாது நிலைவாழ்விற்கு. ‘அப்படியே செய்யும். நீர் வாழ்வீர்’ என கட்டளையும், வாக்குறுதியும் தருகின்றார் இயேசு. ஆக, திருச்சட்ட அறிஞர் ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்ட கேள்வியையே, ‘நீர் செய்யும்!’ என விடையாகத் தருகின்றார் இயேசு.

ஆக, நிலைவாழ்வு என்பது ஆண்டவரை, அடுத்தவரை, தன்னை அன்பு செய்வது. இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வந்த அறிஞருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, இன்னொரு கேள்வியை எழுப்புகிறார் அறிஞர்: ‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’

யூத சமயம் வரையறைகள் நிறைந்தது. ‘தூய்மை – தீட்டு’ என்ற அடிப்படையில்தான் அவர்களின் சமூகமும், சமயமும் கட்டப்பட்டிருந்தது. யூதர்கள் புறவினத்தார் மற்றும் சமாரியர்களிடம், குருக்கள் மற்ற மக்களிடம், ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிறைய சட்டங்களும், விதிமுறைகளும் வழக்கத்தில் இருந்தன. வரையறைகள் நிர்ணயித்தல் சமூகத்தின் செயல்முறைக்கு அதிகம் தேவைப்பட்டது. அது ஒரு சமயக் கடமையாகவும் பார்க்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான், ‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’ ‘என் அயலான் என்பதை நான் என்பதை நான் எப்படி வரையறுப்பது?’ எனக் கேட்கிறார். இயேசு சொல்லும் கதையின் நாயகன் வரையறையைக் கடந்து நிற்கின்றான். அவனது இனம், மதம், சமூகம், தொழில் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ‘ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குச் சென்றார்’ என்று மட்டும் குறிப்பிடுகின்றார் இயேசு. ‘ஒருவர்’ என்பது லூக்கா உவமைகளில் பரவலாகக் காணக்கிடக்கும் கதைமாந்தர் (காண். 12:16, 14:2, 15:11, 16:1, 19:12, 20:9). எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு செல்லும் வழி ஆபத்தானது. ஏறக்குறைய 3300 அடி தாழ்வாக இருக்கும் இந்தப் பாதை 25 கிமீ தூரம் செல்லக்கூடியது. திருடர்கள் பதுங்குவதற்கு ஏற்ற குழிகளும், புதர்களும் இவ்வழியில் நிறைய உண்டு. அவர்களின் கைகளில் சிக்கிய நம் கதைமாந்தர் குற்றுயிராய் விடப்படுகிறார். உடைமையின்றி, உடல்நலமின்றி இருக்கும் இவர் இப்போது அதிக தேவையில் இருக்கிறார். ‘தற்செயலாக’ அந்த இடத்திற்கு வரும் அடுத்த வழிப்போக்கர் வாசகருக்கு நம்பிக்கை தருகிறார். வந்தவர் ஒரு குரு. கண்டிப்பாக இவர் உதவி செய்வார் என வாசகர் நினைத்துக் கொண்டிருக்க, ‘அவர் மறுபக்கம் சென்றார்.’ நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தொடர்ந்து வரும் லேவியரும் அவ்வாறே செய்கின்றார். அவர்கள் எதற்காக மறுபக்கம் சென்றார்கள் என்று சொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள் அப்படிச் சென்றதை நாம் நியாயப்படுத்த முடியாது. தொடர்ந்து வரும் மூன்றாமவர்தான் கதையில் முக்கியமானவர். ‘குரு, லேவி, இஸ்ரயேலர்’ என எல்லாரும் எதிர்ப்பார்க்க, மூன்றாம் நபரை, ‘ஒரு சமாரியன்’ என அறிமுகப்படுத்துகிறார் இயேசு. இவ்வாறாக, நீண்ட காலம் மக்கள் மனத்தில் இருந்த ‘சமாரிய வெறுப்பை’ கிண்டி விடுகின்றார் இயேசு. அசீரியர்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் தூய்மையை இழந்துவிட்ட யூதர்களே சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர் (காண். 2 அர 17:6, 24). சமாரியர் ஒருவரை கதாநாயகனாக முன்வைப்பதன் வழியாக இயேசு மக்கள் மனத்தில் இருந்த வரையறை எண்ணங்களையும், வேற்றுமை உணர்வுகளையும் புரட்டிப் போடுகின்றார்.

குரு மற்றும் லேவியைப் போல சமாரியர் காயம் பட்ட மனிதனைக் கண்டாலும் அவரை விட்டு விலகிச் செல்லவில்லை. மாறாக, அவர்மேல் பரிவு கொள்கின்றார். ‘அவரை அணுகி,’ ‘எண்ணெயும் மதுவும் வார்த்து,’ ‘அவற்றைக் கட்டி,’ ‘விலங்கின் மீது ஏற்றி,’ ‘சாவடிக்குக் கொண்டு போய்,’ ‘அவரைக் கவனித்துக் கொள்கின்றார்’ – இப்படி அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் லூக்கா. ‘இந்த மூவரில் காயம்பட்டவரின் அயலார் யார்?’ என அறிஞரிடம் கேட்கின்றார் இயேசு. ‘சமாரியர்’ என்ற வார்த்தையைக் கூட சொல்ல மறுக்கும் திருச்சட்ட அறிஞர், ‘அவருக்கு இரக்கம் காட்டியவரே!’ என்கின்றார். இவர் இப்படிச் சொன்னது அந்த சமாரியரின் இரக்கத்தையும், செயலையும் அடிக்கோடிடுவதுபோல இருக்கிறது. ‘அயலாராக இருப்பது’ என்பது ஒருவர் தானாக விரும்பி செயல்படும் நிலையே. ‘நமக்கு ஒரு நல்ல அடுத்திருப்பவர் வேண்டுமெனில், நாமும் முதலில் நல்ல அடுத்திருப்பவராக இருத்தல் அவசியம்.’

‘இதைச் செய்யும், வாழ்வீர்’ (வ. 28) என்று முதலில் கட்டளையிட்ட இயேசு. இப்போது, ‘நீரும் போய் அவ்வாறே செய்யும்’ என்கிறார் (வ. 37). ‘வாழ்வீர்’ என்ற வாக்குறுதி இப்போது இல்லை. அயலாருக்கு நாம் காட்டும் பரிவன்பு எல்லாவகை பரிசுகளையும் கடந்தது. காயம்பட்ட மனிதனிடம் எந்தவொரு அன்பளிப்பையும் சமாரியர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆக, இரக்கம் என்பது கணக்குப் பார்க்கும் இதயம் அல்ல. நிலைவாழ்வு என்பது வெறும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. பரிவு அல்லது இரக்கம் தேவையை மட்டுமே பார்க்கும்.

இவ்வாறாக, ‘உனக்கு மிக அருகில்’ இருக்கிறது நிலைவாழ்வு என திருச்சட்ட அறிஞருக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலும் (காண். இச 30:10-14) இதே எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.

எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றபின், வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி, இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே, மோவாபு பள்ளத்தாக்கில், புதிய தலைமுறை இஸ்ரயேலருக்கு, இதுவரை நடந்த அனைத்தையும், யாவே இறைவன் தந்த திருச்சட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். ‘ஆண்டவர் மீது அன்புகூர்வாயாhக!’ என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது ‘புரியாததோ’ அல்லது ‘வெகு தொலைவில் இருப்பதோ,’ ‘விண்ணிலோ’ அல்லது ‘கடலுக்கு அப்பாலோ’ இருப்பது அல்ல, மாறாக, ‘உனக்கு மிக அருகில்,’ ‘உன் வாயில்,’ ‘உன் இதயத்தில்’ இருக்கிறது என்கிறார். ஆக, ஒருவர் தன் உள்ளத்திலிருந்தே இந்தக் கட்டளையை உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும். ஒருவரின் உள்ளுறைந்து கிடப்பதே இறைவனின் கட்டளை. இந்த நெருக்கம் கட்டளையின் மேல் ஒருவர் கொள்ள வேண்டிய ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. ‘எனக்குப் புரியவில்லை’ என்றும், ‘அதைப்பற்றி எனக்குத் தெரியாது,’ என்றும் ‘நான் அதைக் கண்டதில்லை’ என்றும் யாரும் ஒதுங்கிவிடவும் முடியாது. அடிபட்டுக் கிடந்த அந்த பெயரில்லாத மனிதரைப் போல திருச்சட்டம் என் கண்முன், என் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. குரு மற்றும் லேவி போல மறுபக்கம் ஒதுங்கிச் செல்லாமல், சமாரியர்போல கைநீட்டி நான் தழுவிக் கொள்ள வேண்டும் திருச்சட்டத்தை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:15-20) தொடக்கத் திருஅவையில் புழக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தியல் பாடல் (காண். பிலி 2:6-11). கிறிஸ்து தொடக்கமில்லாதவர், படைப்பனைத்தையும் முந்தியவர் என்று சொல்லும் பவுல், தொடர்ந்து, ‘கிறிஸ்துவே திருச்சபையின் தலை’ என்கிறார். ஆக, தூரமாக இருந்த ஒருவர் இன்று திருச்சபை என்னும் உடலின் தலையாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளார். கிறிஸ்துவில் நடந்தேறிய இந்த நெருக்கத்தை, ‘ஒப்புரவாதல்’ என்ற இறையியல் கருதுகோள் வழியாக முன்வைக்கிறார் பவுல்: ‘சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்’ (1:20). விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று ‘மிக அருகில் உள்ளது.’ கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் ஒன்றையொன்று கைகோர்த்து நிற்கின்றன கிறிஸ்துவில். கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, ‘மிக அருகில் உள்ள’ கடவுள்தன்மையைத் தொட்டு நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.

ஆக, திருச்சட்டம், இயேசு, அயலார் என்னும் மூவரும் நம்முடைய வாய் மற்றும் இதயத்தைத் தாண்டி கையால் தொட்டுவிடும் நெருக்கத்தில் இருக்கின்றனர்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால் ஒன்றுதான்: ‘வாய்’ மற்றும் ‘இதயத்தை’ தாண்டி என்னால் ‘கைக்கு’ செல்ல முடிகிறதா?

நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குருவுக்கும் லேவியருக்கும் ‘அடுத்திருப்பவர்’ என்பர் அவர்களுடைய வாயிலும், இதயத்திலும் இருந்தாரே தவிர அவர்களுடைய கைகளில் இல்லை. தங்களுடைய வாயால் இறைவனைப் புகழ்ந்த, தங்களுடைய இதயத்தால் இறைவனைச் சிந்தித்த அவர்களால் அடிபட்டுக் கிடந்த அயலாருக்கு கரம் நீட்ட முடியவில்லை. கரம் நீட்டுதல் மூன்று நிலைகளில் சாத்தியமாகும்:

அ. அறிதலிலிருந்து செய்தலுக்குக் கடத்தல்

‘நிறைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?’ என கேட்டு வருகிற அறிஞரிடம், ‘நீ முதலில் செய்!’ என கட்டளை கொடுத்து அனுப்புகிறார் இயேசு. ஆக, கட்டளைகளை அறிதல் அல்ல, மாறாக, அவற்றைச் செய்தல் அல்லது அவற்றின்படி நடத்தல் அல்லது அவற்றைச் செயல்படுத்துதலே நிறைவாழ்வைத் தரும். சர்க்கரை நோய் உள்ளவர் உணவில் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்பது நான் கொண்டுள்ள அறிவு. இந்த அறிவு மட்டும் இருந்தால் போதுமா? இல்லை. அறிவோடு சேர்ந்து செயலும் இருக்க வேண்டும். ‘சர்க்கரை சேர்க்கக் கூடாது’ என்று அறிந்துள்ள நான் அதைச் செயல்படுத்த வேண்டும் – என் உணவில் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிவு மட்டும் ஆற்றல் அல்ல. அறிவோடு கூடிய செயலே ஆற்றல். அறிதலிலிருந்து செயல்பாட்டிற்கு திருச்சட்ட அறிஞரை அழைத்துச் செல்கின்றார் இயேசு.

ஆ. ‘எனக்கு அருகிருப்பவர் யார்?’ எனக் கண்டுணர்தல்

என் பெற்றோர், உறவினர், நண்பர், அறிமுகமானவர் ஒரு வட்டம் என் அருகில் இருந்தாலும், என் அருகிலிருப்பவர்கள் இவர்கள் அல்லர். எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், எல்லாம் சிதைந்து, முகம் இழந்து, உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்துக் கொண்டு இருப்பவரே என் அருகிலிருப்பவர். அவரின் ஒரே தேவை என்பது ‘தேவை மட்டுமே.’ அந்த தேவையை நான் நிறைவு செய்தால் நானும் அவரின் அருகிருப்பவரே. அவரின் தேவையில் நான் அவருக்கு பரிவு காட்டுவதற்குப் பதிலாக, அவரின் அடையாளத்தை நான் தேட ஆரம்பித்தாலோ, அல்லது ‘இவருக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என நான் கணக்குப் பார்க்க ஆரம்பித்தாலோ என்னால் அவரின் அடுத்திருப்பவராக இருக்க முடியாது. அவரின் முணகல் சத்தம் என் காதில் விழ வேண்டும். நான் என் கழுதையிலிருந்து இறங்க வேண்டும். குனிய வேண்டும். என் கையை அழுக்காக்க வேண்டும். என் உடையை இரத்தக்கறையாக்க வேண்டும். அவரைத் தொட வேண்டும். மருந்திட வேண்டும். காயத்திற்குக் கட்டுப்போட வேண்டும். என் விலங்கில் ஏற்றிக்கொண்டு சென்று அவரின் பாதுகாப்பை நான் உறுதி செய்ய வேண்டும். ‘அவரைப்போல’ நானும் செய்ய என்னை அழைக்கிறார் இயேசு.

இ. நிலைவாழ்வு – இங்கே இப்போதே!

இறப்பிற்குப் பின் வருவதல்ல நிறைவாழ்வு. இருக்கும்போதே வருவதுதான் நிலைவாழ்வு. ‘ஆண்டவர்-அடுத்திருப்பவர்-நான்’ என்ற புதிய மூவொரு இறைவனை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இந்த மூவொரு அன்பில் நான் இணைந்திருந்தால் அதுவே எனக்கு நிலைவாழ்வு. ‘நான் ஆண்டவரை அல்லது அடுத்தவரை அல்லது என்னை அன்பு செய்தால் எனக்கு நிறைவாழ்வு கிடைக்கும்’ என்று நினைப்பது சால்பன்று. ஆக, அன்பு என்பது நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் கொடுக்கும் விலை அன்று. அப்படி அதை விலை என நான் நினைத்தால், நான் ஆண்டவரையும், அடுத்தவரையும், என்னையும் வியாபாரப் பொருளாக்கிவிடுகிறேன். அடுத்தவரை அல்லது காயம்பட்டவரை அன்பு செய்து நான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்கிறேன் என்றால், அங்கே நான் அவரை ஒரு பொருளாக ஆக்கிவிடுகிறேன் என்றுதானே அர்த்தம். ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆள். அவரை நான் பொருளாக்க எனக்கு உரிமை இல்லை. நான் செய்யும் அன்பிற்கு எனக்கு நிறைவாழ்வு அல்லது நிலைவாழ்வு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தொடர்ந்து அன்பு செய்வேன் என்ற மனப்பான்மை என்னில் உதிக்கிறதா? நிறைவாழ்வு என்பது பயணத்தின் இறுதியில் நான் கண்டடையும் பொருள் அல்லது இடம் அல்ல. மாறாக, பயணமே நான் கண்டடையும் பொருள். என் இலக்கு பயணத்தின் இறுதி அல்ல, மாறாக, பயணமே. இந்தப் பயணத்தில் வழிப்பாதையில் விழுந்துகிடக்கும் அனைவரும் என் அடுத்திருப்பவரே. அவரைத் தொட்டுத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு நிறைவாழ்வே!

‘உனக்கு அருகில் நான்’ என என் ஆண்டவரும், என் அடுத்திருப்பவரும் என்னிடம் சொல்ல, ‘உனக்கு மிக அருகில் நான்’ என நான் அவர்களிடம் சொல்ல முடிந்தால் அதுவே நிலைவாழ்வு. வாயில் தொடங்கும் இப்பயணம் கைகளில் முடியட்டும் – இன்றும் என்றும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு