கடவுளின் வார்த்தை செயல் மிக்கது.
1862- ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிலே உள் நாட்டுப் போர் மூண்டது. வெர்ஜினியாவில் வட அமெரிக்கர் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளிம்பில் தள்ளப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன், ஜான் மார்க் மில்லன் என்பரை தளபதியாக நியமித்துத் தலைமை ஏற்று நடத்த பணித்தார். மற்ற அமைச்சர்கள் எதிர்ப்பு கொடுத்தாலும் ஆபிரகாம் துணிந்து இவரையே அனுப்பினார். தளர்ந்த உள்ளங்களையும், தள்ளாடிய கால்களையும் பலப்படுத்தி, உற்சாகமூட்டி யாரும் சொல்ல முடியாத வியத்தகு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் ஜான் மார்க் மில்லன்.
அன்பார்ந்தவர்களே , இஸ்ரயேலின் அரசை யார் நிறுவ வருவார் என்று அறியாது, ஒரு விதத்தில் கலங்கிப் போய் இருந்த சீடர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் தேவைப்பட்டது. எனவே அழகான ஒரு கதையாக, ஓர் உவமையாக விதை விதைப்பவர் உவமையைத் தருகிறார் இயேசு. இந்த உவமை உங்களுக்குத் தெரிந்தது தான். பல முறை கேட்டிருக்கிறீர்கள். ஆனால் எக்கருத்தை இயேசு வலியுறுத்த விரும்புகிறார்?
விதைக்கும் விவசாயியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் சிந்தனை ஒன்று. விதைக்கப்படுகின்ற விதையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறு சிந்தனை வெளிப்படும்.
விதையைப் பெற்றுக்கொண்ட பல்வேறு நிலங்களின் தன்மையில் பார்த்தால் மற்றொரு சிந்தனை வெளிப்படும்.
நல்ல பண்பட்ட நிலத்தில் விழுந்த விதை தரும் பலனைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை வெளிப்படும். ஏனெனில் பண்பட்ட நிலத்தில் விழுந்த விதைகள் கூட ஒரேமாதிரி 100 மடங்கு பலன் தரவில்லையே 60 மடங்கு , 30 மடங்கு அல்லவா தருகின்றன.
கதையைச் சொன்ன இயேசுவின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் பல சிந்தனைகள் எழலாம்.
இறைவார்த்தையை ஏற்றவர்கள் பலர் உண்டு. அது அவர்களில் வெவ்வேறு பலனை ஏற்படுத்தியது.
- இறை வார்த்தையை ஏற்ற ஆபிரகாம் இஸ்ரயேல் குலத்துக்கு தந்தையானார் (தொநூ. 17:25)
- இறைவாக்கைக் கேட்டு அதை ஏற்ற தாவீது அரசன் மனம் மாறினார் (2 சாமு. 12:13)
- இறைவார்த்தையைக் கேட்டு, ஆகட்டும் என்றுரைத்த மரியா இயேசுவின் தாயானாள் (லூக் 1:38)
- இறையரசின் நற்செய்திக்குச் செவிமடுத்த சக்கேயு, சவுல் மனம் மாறி சீடர்களாக மாறினார்கள் (லூக். 19:8)
- ஏன் நற்செய்தி கேட்ட யூதர்கள் மனம் வருந்தி திருமுழுக்குப் பெற்றனர் (தி.பணி. 2:41)
ஒரு முறை ஒரு சிறுவன், கல் சிலை உருவாக்கும் இடத்தில் செதுக்குவதை பார்த்துக்கொண்டே நின்றான். கல்லை செதுக்கும் போது கற்கள் சிதறி விழுவதை மட்டும்தான் பார்த்தான். வேறு எந்த உருவத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் சென்று சிற்பி செதுக்கி வைத்திருந்த சிலையைப் பார்க்க அவன் தந்தை அழைத்துச் சென்றார். கல்லில் உருவாகிய, உயிருள்ளது போல காட்சி தந்த . சிங்கம் போல உருவாக்கப்பட்ட அந்தச் சிலையைப் பார்த்துப் பிரமிப்பும் ஆச்சரியமும் கொண்ட சிறுவன் கேட்டான், ஐயா இந்தக் கல்லில் சிங்கம் இருக்கும் என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று.
அன்பார்ந்தவர்களே, இந்தச் சிறுவன் கேட்டதுபோல், நாமும் நம்மில் கடவுளின் வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் செயலாக்குவதை உணர வேண்டும். இன்று எசாயா தீர்க்கத்தரிசி கூறுவது, மழை பெய்தால் பயிர் முளைத்துப் பலன் தருவதுபோல இறைவார்த்தை நம்மில் செயலாற்ற வேண்டும். ஏனெனில் கடவுளின் வார்த்தை (எபிரே. 4:12) செயல் மிக்கது.
இறைவார்த்தை முள்ளை மலராக்கும், கல்லைக் கனியாக்கும்
புனித அகுஸ்தினார் இளைஞனாக இருந்தபோது, கொலை தவிர மற்ற எல்லாப் பாவங்களையும் செய்தார் எனக் கூறலாம். அவர் ஒரு பெரிய பாவி! அவர் மனம் திரும்பவேண்டுமென்று அவருடைய தாயார் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் அழுது மன்றாடினார்.
அகுஸ்தின் வாழ்க்கையிலே ஒரு நாள்! அவர் ஒரு தோட்டத்திலே அமர்ந்திருந்தார்! அவர் அமர்ந்திருந்த தோட்டத்திற்கு வெளியேயிருந்து எடு. படி என்று ஒரு சத்தம்! ஒரு வேளை அவை தாயொருத்தி தன் பிள்ளையைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கலாம்! அவற்றைக் கடவுளால் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக நினைத்துக்கொண்டு அகுஸ்தின் விவிலியத்தைத் திறந்தார். அவருடைய கண்களில் பட்ட பகுதி (உரோ 13:13-14) பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைசச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல் பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்பதாகும். இந்த இறைவார்த்தைகள் அவருடைய வாழ்க்கையிலே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அவர் மாபெரும் புனிதரானார். இறைவார்த்தை முள்ளை மலராக்கியது ; கல்லைக் கனியாக்கியது : மனிதனைப் புனிதனாக்கியது.
இதோ இன்று நம்மிடையே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி! ஓர் அருங்கொடை இயக்க செபக்கூட்டத்தில் ஒரு குடும்பத் தலைவர் தந்த சாட்சியம். அவர் ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்தார். திடீரென தொழிற்சாலை மூடப்பட்டது! வேலை போய்விட்டது!
வறுமையும், கொடுமையும் வீட்டில் தாண்டவமாடின! விடியலின் தூரம் வெகுதூரத்தில் கூட தெரியவில்லை! அந்த வீட்டிலே கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். நாம் நான்கு பேரும் விஷம் குடித்துச் செத்துவிடலாம் என்றார் குடும்பத் தலைவர். அன்று இரவு அந்த நான்கு பேரின் நடுவிலே விஷமிருந்தது. எப்போதும் அந்த வீட்டுத் தலைவி, தூங்கச் செல்வதற்கு முன்னால், விவிலியத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க அனைவரும் தியானிப்பது வழக்கம். மனைவி, இன்று நாம் நித்தியத்திற்கும் உறங்கப்போகின்றோம். விவிலியத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துவிட்டு, விஷத்தைக் குடிக்கலாமே என்றார். கணவரும் சரி என்றார். மனைவி வாசித்த பகுதி இதுதான் : மத் 6 : 25 - 34. அந்த வாசகம் முடிந்ததும் கணவர் சொன்னார் : நாம் விஷம் அருந்திச் சாக வேண்டாம். வானத்துப் பறவைகளைக் காப்பாற்றும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார் என்றார். பொழுது விடிந்தது! அஞ்சலொன்று வந்தது! அது தொழிற்சாலையில் உனக்கு மீண்டும் வேலை என்ற செய்தியைத் தந்தது.
ஆம். சாவுக்குக்கூட சாவுமணி அடிக்கும் ஆற்றல், வல்லமை, சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக கடவுள் நம்மைப் பார்த்து, மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன : அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே. என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும் (எசா 55:10-11அ) என்கின்றார். இன்றைய நற்செய்தியிலே இயேசு, இறைவார்த்தை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு பலன் தரும் என்கின்றார்.
விவிலியம், இறைவார்த்தை, ஒரு கேள்விக்குறி அல்ல; மாறாகக் கேள்விகளுக்குப் பதில்! இன்றைய இரண்டாம் வாசகம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்குப் பதில் கூறுகின்றது : இக்காலத்தில் நாம்படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகின்ற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (உரோ 8:18).
- விவிலியத்திலுள்ள ஒவ்வோர் இறைவார்த்தையும்
- கோடை காலத்தின் குளிர்த் தென்றல்!
- வசந்த காலத்தின் வண்ண மலர்!
- கார்காலத்தின் கருணை முகில்!
- போர்க்காலத்தின் அமைதிப் புறா!
ஆகவே, ஆண்டவரின் அருள்வாக்கு, அது என் வாழ்வின் செல்வாக்கு என்று நாம் ஒவ்வொருவரும் வாழ முன்வருவோம்!
மேலும் அறிவோம்:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் (குறள் : 198).
பொருள் : அரும்பெரும் பயன்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் மிக்கவர், கேட்பவர்க்கு மிகவும் பயன்படாத எந்தச் சொற்களையும் ஒருபோதும் சொல்லமாட்டார்!
வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம், "கணக்கு வகுப்புக்கும் வரலாற்று வகுப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று, "சார்! என்னைப் பொருத்தமட்டில், கணக்கு வகுப்பில் விட்டு விட்டுத் தூங்குவேன்; வரலாற்று வகுப்பில் விடாது தூங்குவேன்" என்றார்.
ஆசிரியர் சிறந்தவராக இருந்தால் மட்டும் போதாது, மாணவர்களும் ஆசிரியர் போதிப்பதைக் கேட்கக்கூடிய திறன் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். நன்னூல் சூத்திரம் மாணவர்களை முதல்நிலை மாணவர்கள், இடைநிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என்று மூன்று விதமாகப் பிரித்துக் காட்டியுள்ளது.
முதல்நிலை மாணவர்கள் அன்னப் பறவை மற்றும் பசு போன்றவர்கள். பாலையும் தண்ணீரையும் கலந்து கொடுத்தாலும் அன்னப் பறவை பாலை மட்டும் பருகும். பசு தான் உண்ட உணவை மீண்டும் வாயில் கொண்டு வந்து நன்றாக அசைபோட்டு ஜீரணிக்கும். அவ்வாறே முதல்நிலை மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் சொல்லுவதில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வர். மேலும் வீட்டுக்குச் சென்று வகுப்பில் கேட்டவற்றை திரும்பவும் படித்து உள்வாங்குவர்.
இடைநிலை மாணவர்கள் கிளியைப் போன்றவர்கள், ஆசிரியர் சொன்னதை மட்டும் திரும்பச் சொல்வார்கள்; சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். கடைநிலை மாணவர்கள் ஓட்டைப் பானை போன்றவர்கள் கேட்ட எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்; அவர்கள் புத்தியில் ஒன்றும் நிற்காது.
இன்றைய அருள்வாக்கு வழிபாடு, கடவுளுடைய வார்த்தைக்கு உள்ள ஆற்றல் பற்றியும், அதை கேட்போரின் பல்வேறுபட்ட மனநிலையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. முதல் வாசகம் கடவுளுடைய வார்த்தையை மழைக்கு ஒப்பிடுகிறது. மழை பூமியை நனைத்து உண்பவகுக்கு உணவும், விதைப்பவர்க்கு விதையும் கொடுக்கும். அவ்வாறே கடவுளுடைய வார்த்தையும் கடவுள் விரும்பும் பலனை விளைவிக்கும் (எசா 55:10-11).
ஆனால், கடவுளுடைய வார்த்தை ஏன் விழுமிய பயன் அளிப்பதில்லை? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் அளிக்கிறது. நன்னூல் சூத்திரம் மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவதுபோல, கிறிஸ்து கடவுளுடைய வார்த்தையைக் கேட்பவர்களை நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகிறார். அவர்கள் முறையே பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள், பாறைமேல் விழுந்த விதை போன்றவர்கள், முட்செடிகள் நடுவே விழுந்த விதை போன்றவர்கள் மற்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள்.
பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள் யார்? அவர்கள் ஆலயத்துக்கு வந்தாலும் அவர்கள் மனம் வேறு எங்கேயோ அலைபாயும்; வெளியே நின்று கொண்டு புகைப் பிடித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பர்; அல்லது மறையுரையின் போது விட்டு விட்டும் விடாமலும் தூங்குவார்கள். கடவுளுடைய வார்த்தை அவர்கள் உள்ளத்தில் துழையா வண்ணம் தடை செய்பவர்கள். ஏரோது மன்னனையும் பரிசேயர்களையும் போன்றவர்கள். பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போன்றவர்கள் யார்? கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்பவர்கள் (திபா 95:7-8), கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு ஒடுபவர்கள்; எந்த சபையிலும் திலைத்திருக்காதவர்கள். கொள்கைப்பிடிப்பு அற்றவர்கள்; இவர்கள் மாற்கு நற்செய்தியில் வரும் இளைஞரைப் போன்றவர்கள், அவர் உள்ளாடையின்றி உடம்பில் ஒரு துப்பட்டியைப் போர்த்திச் சிலுவை சுமந்து சென்ற கிறிஸ்துவுக்குப்பின் சென்றார். அவரைப் பிடித்தபோது, துப்பட்டியை விட்டு விட்டு நிர்வாணமாக ஓடினார்! அவ்வாறே துன்பம் வரும்போது கிறிஸ்துவை விட்டு விட்டு ஒரு சிலர் ஓடிவிடுவர்.
முட்செடிகளுக்கு நடுவே விழுந்த விதை போன்றவர்கள் யார்? இவர்கள் கடவுளுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு கேட்டாலும், உலகக் கவலையாலும் செல்வ மாயையாலும் அதை நெருக்கி விடுபவர்கள், இவர்கள் நற்செய்தியில் வரும் செல்வரான இளைஞருக்கு ஒப்பானவர்கள். அவர் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினார். கிறிஸ்து அவரிடம் அவருக்குள்ள உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையாய்த் தம்மைப் பின்பற்ற கேட்டார். ஆனால் அவரோ செல்வத்தை விட்டுவிட மனமின்றிக் கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றார் (மத் 19:21-22), சிற்றின்பத்தை நாடி பேரின்பத்தை விட்டு விடுகின்றவர்கள். அவ்வாறு செய்வது முறையல்ல என்கிறார் வள்ளுவர்.
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் (குறள் 73)
நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? அவர்கள் மீட்பரின் அன்னை மரியா போன்றவர்கள். மரியா கடவுளுடைய வார்த்தையைத் திறந்த மனத்துடன் ஏற்று அதற்குத் தம்மை முற்றிலுமாக ஒப்புவித்தார் (லூக் 1:37). அதைத் தமது சீரிய செம்மனத்தில் பதிய வைத்துச் சிந்தித்தார் (லூக் 2:19). அதில் இறுதி வரை உறுதியாக இருந்து சிலுவை அடியில் நின்றவர் (யோவா 19:25). சாகாமலேயே மறைசாட்சிக்குரிய வெற்றிவாகை சூடியவர், மரியா கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்ததால் பேறுபெற்றவர் (லூக் 11:27-28). கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் துன்புறுவார்கள்; பேறுகால வேதனை அடைவர்; ஆனால் இறுதியில் முழுமையான விடுதலை பெறுவர் என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 8:18-23).
ஒரு ஞானியை ஒரு முரடன் கொல்லுவதற்காகக் சுத்தியை ஓங்கினான். ஞானியார் சிரித்துக் கொண்டே அவனிடம், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்றார். முரடன் கத்தியைக் கீழே போட்டு விட்டான். ஞானியாம் அக்கத்தியை எடுத்து முரடனைக் கொல்லப் போவதாக மிரட்டி, "இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்?" என்று கேட்டதற்கு அவன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்றான். அந்த நேரத்தில்கூட அவனுக்குக் கடவுள் மேல் நம்பிக்கை வரவில்லை.
யார் நம்மைக் காப்பாற்றுவார்? மனிதர் அல்ல, கடவுளே "மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே மேல்" (திபா 118:8), கடவுளை நம்புவோம். அவருடைய வார்த்தைக்குச் செவிமடுப்போம். அதை தம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். நாம் யார்? பாதை நிலமா? கற்பாறையா? முட்புதரா? நல்ல நிலமா? என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:31-32).
வார்த்தை வாழ்வாகட்டும்!
சிற்பி ஒருவர் மூன்று அழகான சிற்பங்களை - எல்லாம் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை ஒரே அச்சில் வார்த்தெடுத்தவை போல ஓர் அரசனிடம் பரிசாகக் கொடுத்துச் சொன்னார்: “அரசே, மூன்றும் ஒன்றுபோல் தோன்றுகிறது என்று நினைத்து எதையும் எவரிடமும் கொடுத்துவிடாதீர்கள். காட்சியகத்தில் வைத்துப் பேணுங்கள். தோற்றம்தான் ஒன்றுபோல, ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உண்டு".
புரட்டிப் புரட்டிப் பார்த்தார் மன்னர். வேறுபாடுதான் தெரியவில்லை. எத்தனையோ பேரைக் கேட்டார். எவருக்கும் தனித்தன்மை புரியவில்லை. இறுதியாக ஓர் இளைஞன் உற்றுப் பார்த்துவிட்டு ஓர் தென்னை ஈக்கியை எடுத்தான். ஒரு சிற்பத்தின் காதுக்குள் நுழைத்தான். இன்னொரு காது வழியாக வெளிவந்தது. இன்னொரு சிற்பத்தில் ஒரு காது வழி சென்ற குச்சி வாய் வழி வந்தது. மற்றொரு சிற்பத்திலோ காது வழி சென்று கழுத்து வழியாகக் கீழ் இறங்கி நெஞ்சுக்குள் கத்திட்டு நின்றது.
ஒரு காதில் கேட்டு மறு காது வழியாக விடும் மனிதர்கள்.
ஒரு காதில் கேட்டு, வாய் வழியாக விடும் மனிதர்கள்.
ஒரு காதில் கேட்டுச் சிந்தையில் நிறுத்திச் செயல்படும் மனிதர்கள்.
"நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.” (லூக். 8:15)
விதை வீரியமானது தான். விதைப்பவரும் திறமையானவர்தான். விளைநிலத்தின் தன்மைக்கேற்ப அன்றோ வேறுபட்ட பலன் கிடைக்கும்! திருத்தூதர் பவுல் கலாத் 6:8இல் இருவித நிலங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1. ஊனியல்பாகிய நிலம் அதில் அழிவே அறுவடைக்கு வரும். 2. ஆவிக்குரிய வாழ்வாகிய நிலம். அதில் நிலை வாழ்வே விளைச்சலாகும். "நிலம், அதன் மீது அடிக்கடி பெய்யும் மழை நீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன் தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும். மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின் அது பயனற்றுச் சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு இரையாக்கப்படும்" (எபி. 6:7)
இயற்கையின் படப்பிடிப்பான 'விதைப்பவர் உவமை' இயேசு சொன்னதாக எழுத்துருவில் காணும் முதல் உவமை. அதனை வாசிக்கும் போதெல்லாம் - மனித உள்ளம் பாதையோரமாகப் பண்படாமல் கிடக்கும் நிலையை எண்ணிப் பார்ப்பதா? பாறையாக இறுகிக் கிடப்பதை நினைத்து வருந்துவதா? முள்ளும் முரடுமாகப் புதர் மண்டிக் கிடக்கும் அவலத்தைக் கண்டு வேதனைப்படுவதா? அல்லது பாதை என்றும் பாராமல், பாறை என்றும் ஒதுக்காமல் முள்புதர் என்றும் தள்ளாமல் எங்கும் - நல்லவனோ தீயவனோ - எல்லாரும் மீட்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் தன் அருளையெல்லாம் அள்ளி வீசும் இறைவனின் இரக்கப் பெருக்கை, தாராள சிந்தையை எண்ணி வியப்பதா?
தமிழரோ உழுதபின் விதைப்பர் யூதரோ விதைத்தபின் உழுவர் என்ற விளக்கம் எல்லாம் விதைப்பவரின் செயல்பாட்டுக்குச் சப்பைக்கட்டாகாது.
எந்த விவசாயி பாதை இது, பாறை இது, புதர்ப்பகுதி இது என்று தெரிந்து அறிந்து விதைப்பான்? தெரியாமல் விழுந்தால், விதை முளைக்கவில்லையே நல்ல பலன் அளிக்கவில்லையே என்று புலம்புவான்? 'இறைவன் என்ன முட்டாளா?' என்ற எண்ணம் தலை நீட்டவில்லையா? ஆம், மனித மீட்புக்காக அடிமை உருவெடுத்த (பிலிப் 2:7) கடவுள் மடமை வடிவெடுக்கவும் தயங்குவதில்லை. ஆனால் மனிதன் எதனை முட்டாள்தனமாகக் கருதுகிறானோ அதுவே தெய்வ ஞானத்தின் திட்டமாக இருக்கிறது. “ஏனெனில் மனித ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” (1 கொரி. 1:25)
இறைவனின் அருளுக்குக் குறைவில்லை. ஆனால் அந்த அருளால் மனிதர் எல்லாரும் ஒரே அளவில் பயன்பெறுவதில்லை. மழை பரவலாகப் பெய்யும்போது காட்டிலே கடலிலே, மேட்டிலே, மடுவிலே, வயலிலே, வரப்பிலே விழுகிறது. ஆனால் விழும் இடத்திற்கேற்பப் பலன் வேறுபடுகிறது. ஓரிடத்தில் நில்லாது ஓடும். வேறிடத்தில் தேங்கிக் கிடக்கும். ஓரிடத்தில் புதர் வளர உதவும். வேறிடத்தில் பயிர் செழிக்க உதவும். அப்படியே இறை வார்த்தையும் அவனவன் தன்மைக்கு ஏற்பப் பலனளிக்கும்.
சூரிய உதயத்தில் எல்லா மலர்களுமா மலர்கின்றன. தாமரை மலர்ந்து சிரிக்கிறது; அல்லி வாடிக் கூம்பி விடுகிறது.
பொருட்செல்வம், அருட் செல்வம், கல்விச் செல்வம், மழலைச் செல்வம்.... இப்படிச் செல்வங்கள்தாம் எத்தனை வகை! ஆனால் திருத்தூதர் பவுலுக்கு ...?
“உண்மையில் என்னைப் பொருத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசு பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருகிறேன்." (பிலிப். 3:8)
இயேசு யார்? “தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது' ... கடவுளாயும் இருந்தது... வாக்கு மனிதர் ஆனார்.. நம்மிடையே குடிகொண்டார்” (யோ.1:1.14)
இயேசு என்னும் இறைவார்த்தை இவ்வுலகில் இரு கோணங்களில் இரு நிலைகளில் வெளிப்படுகிறது.
மனித உடலுரு எடுத்தது : இது நற்கருணை.
மனித சொல்லுரு எடுத்தது : இது விவிலியம்.
விவிலியத்தில் இறைவார்த்தையின் ஆற்றலை விளக்க எத்தனை உருவகங்கள்! மழையாக (எசா. 55:10-11), நெருப்பாக (எரே. 20:9, லூக் 24:32), வாளாக (எபி. 4:12, எபேசி. 6:17), சம்மட்டியாக (எரே. 23:29) சித்திரிக்கப்படும் இறைவார்த்தை இன்றைய நற்செய்தியில் விதையாக மனித உள்ளத்தில் ஊன்றப்படுகிறது.
ஊன்றப்படும் குறையில்லா இறைவார்த்தை நிறைபலன் அளிக்கவில்லையென்றால், சிந்திக்க எழும் கேள்வி: உன் நெஞ்சம் பாதையோரமா, கற்பாறையா, முட்புதரா, சீரிய நல்ல நிலமா?
வார்த்தை நம் வாழ்வாகட்டும்.
ஒரு பெரியவர் குருவானவர் ஒருவரிடம் வந்து அங்கலாய்த்தாராம்: “சுவாமி, விவிலியத்தைப் படி படி என்று சொல்கிறீர்கள். படிக்கிறேன். ஒன்றும் புரிவதில்லை. அதுதான் பிரச்சனை.” குரு பதிலளித்தார்: “புரியவில்லை என்பது உங்களுக்குப் பிரச்சனை. புரிகிறது என்பதுதான் என் பிரச்சனை”. அதாவது புரிகிறது ஆனால் வாழ முடியவில்லையே என்று கவலைப்படுகிறார்.
“எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.இறை வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:21,22)
“என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்" (யோ. 8:31). அதுதான் நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தை (யோ. 6:68).
நாம் இறைவனது கையில் விதைகள். பலன் தருவதற்காக அவரால் படைக்கப்பட்டவர்கள் பலன்தரா ஒன்றுமில்லாப் பயனற்ற மனிதர்களைப் படைக்க இறைவன் தன் பொன்னான நேரத்தை வீணடிப்பதில்லை. ஆற்றலும் திறமையும் நிறைந்த மனிதர்களாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார். ஒரு மாங்கொட்டைக்கு, ஒரு பெரிய மரமாகி அதிக அளவு மாங்கனிகள் தருகிற சக்தி உண்டு. ஒரு சிறிய தக்காளி விதைக்கு, செடியாகி பல தக்காளிப் பழங்களை தருகிற சக்தி உண்டு. அதுபோல நாம் ஒவ்வொருவரும் இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்ந்து பலருக்கு வாழ்வு கொடுக்கும் வல்லமை உண்டு.
"கேட்கும் திறனை இழந்துவிட்டோமா?"
இளையவர் ஒருவர், ஒரு நாள், இறைவனிடம் நிபந்தனைகளை அடுக்கிவைத்தார்: "இறைவா, மோசேக்காக முட்புதரை நீர் எரித்ததுபோல், எனக்கும் எரித்துக்காட்டும், நான் உம்மைப் பின்தொடர்வேன். யோசுவாவுக்காக மதில் சுவரை நீர் இடித்ததுபோல், எனக்கும் இடித்துக்காட்டும், நான் உமக்காகப் போராடுவேன். கலிலேயக் கடலில் அலைகளை நீர் அடக்கியதுபோல், எனக்கும் அடக்கிக்காட்டும். உமக்கு நான் செவிசாய்ப்பேன்..." என்று தன் நிபந்தனைகளை அடுக்கிய இளையவர், ஒரு சுவரும், புதரும் அருகருகே அமைந்திருந்த கடற்கரையொன்றில் அமர்ந்து, கடவுள் என்ன செய்வார் என்பதைக் காணக் காத்திருந்தார்.
இளையவர் சொன்னதைக் கேட்ட இறைவன், அவருக்கு உடனடியாகப் பதிலளித்தார்.
அவர், நெருப்பை அனுப்பினார், புதரை எரிக்க அல்ல, மனித உள்ளங்களை...
அவர், சுவரை இடித்தார், கற்களால் ஆன சுவரை அல்ல, பாவங்களால் கட்டப்பட்ட சுவரை...
அவர், புயலை அடக்கினார், கடலில் அல்ல, ஆன்மாவில்...
இவற்றையெல்லாம் செய்துமுடித்த கடவுள், அந்த இளையவர் என்ன பதில் சொல்வார் என்று காத்திருந்தார், காத்திருந்தார், தொடர்ந்து காத்திருந்தார். அந்த இளையவரோ, புதரில், சுவரில், கடலில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததால், இறைவன் ஒன்றும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
இறுதியில், அந்த இளையவர், இறைவனிடம், "என்ன, உமது ஆற்றலையெல்லாம் இழந்துவிட்டீரா?" என்று சிறிது ஏளனமாகக் கேட்டார். இறைவன் மறுமொழியாக, "நீர் உமது கேட்கும் திறனை இழந்துவிட்டீரா?" என்று கேட்டார்.
"ஒரு மென்மையான இடிமுழக்கம்: புயல் நடுவே இறைவனுக்குச் செவிமடுத்தல்" (A Gentle Thunder: Hearing God Through the Storm) என்ற நூலில் மேக்ஸ் லுக்காடோ (Max Lucado) என்பவர் எழுதியுள்ள உவமை இது. இயேசுவும், இன்றைய நற்செய்தியில், ஓர் உவமையைக் கூறிய பின்னர், "உங்கள் கேட்கும் திறனை இழந்துவிட்டீர்களா?" என்ற கேள்வியை, நம் அனைவரிடமும் கேட்கிறார். இதை ஒரு கேள்வியாகக் கேட்பதற்குப் பதில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத். 13:9) என்ற சொற்கள் வழியே, ஒரு சவாலாக, ஓர் அழைப்பாக நம்முன் வைத்துள்ளார். இந்தச் சவாலை, அழைப்பை, இந்த ஞாயிறு வழிபாட்டில், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.
'செவி' என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உறுப்பு. இந்த உறுப்பைப் பெற்றிருக்கும் மனிதர்கள் அனைவருமே கேட்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. 'கண்' என்ற உறுப்பிருந்தும், பார்வைத் திறனின்றி, 'செவி' என்ற உறுப்பிருந்தும், கேட்கும் திறனின்றி, 'வாய்' என்ற உறுப்பிருந்தும் பேசும் திறனின்றி வாழ்வோரை நாம் அறிவோம். இயேசு இங்கு குறிப்பிடுவது அவர்களைப் பற்றியல்ல. இவ்விதம் வாழ்ந்தோரின் குறைகளை, தன் புதுமைகள் வழியே இயேசு குணமாக்கினார் என்பதை, நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
கேட்கும் திறனிருந்தும், கேட்க விருப்பமின்றி வாழ்வோருக்கு, இயேசு, இந்த சவாலை, அழைப்பை விடுக்கிறார். 'கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய்' வாழும் நமக்கு விடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, இயேசுவின் அழைப்பு, சவால், ஒலிக்கிறது. செவியிருந்து, கேட்கும் திறனும் இருந்து, கேட்காமல் இருக்க முடியுமா? முடியும். நம்மைச்சுற்றி, நாலாப்பக்கமும் அளவுக்கு மீறிய இரைச்சல்கள் நிறைந்து வழியும்போது, எதையும் கேட்கமுடியாமல் போகும். அல்லது, அவற்றைக் கேட்க விரும்பாமல் நாம் செவிகளையும், மனதையும் மூடிவைக்க முடியும். நம் செவிப்பறைகளைத் தாக்கும் அர்த்தமற்ற ஒலி அலைகள், நம் செவிகளைத் தாண்டி, அறிவில், மனதில் பதிந்து, மாற்றங்களை உருவாக்காமல் கடந்துவிடும். நம்மைச் சுற்றி நாம் பெருக்கிக்கொண்ட தொடர்புக்கருவிகள் உருவாக்கும் 'இரைச்சல்கள்', நமக்குள், எவ்வித பாதிப்புக்களை, மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை ஆய்வு செய்வது பயன்தரும் ஒரு முயற்சி.
தொலைக்காட்சி, நாளிதழ்கள், வானொலி, செல்லிடப் பேசி, போன்ற கருவிகள் வழியே நம்மை ஒரு நாளில் வந்தடையும், ஒலி, ஒளி வடிவச் செய்திகளும், தகவல்களும், குறைந்தது, 100 இருக்கும். நம்மை ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு தகவல் கடலில் மூழ்கச்செய்யும் இந்தச் செய்திகள், எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே, நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய ஆன்ம ஆய்வு.
வாழ்வில் மாற்றங்களை உருவாக்காமல், நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்லாமல், வெறும் பார்வையாளர்களாக நம்மைச் சிறைப்படுத்தி வைக்கும் இந்த 'இரைச்சல்கள்', எவ்வித பலனையும் அளிக்காது என்பதே, இன்றைய நற்செய்தி தரும் எச்சரிக்கை. இத்தகைய 'இரைச்சல்களுக்கு' பழகிப்போய்விடும் நாம், இறைவனின் வார்த்தைகளையும் 'இரைச்சலாக'க் கருதி, அவற்றையும் ஒதுக்கி வைத்துவிடும் ஆபத்துக்கு உள்ளாகிறோம். இந்த ஆபத்தை நமக்கு உணர்த்தவே, இயேசு, "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற எச்சரிக்கையை விடுக்கிறார். இந்த எச்சரிக்கை, இறைவாக்கினர் எசாயா வழியே ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில், தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்:
மத்தேயு 13:11,15
இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்."
இறைவனின் குரலை, திறந்த மனதுடன் கேட்டால், மனம் மாறவேண்டியிருக்கும், செயலாற்றவேண்டியிருக்கும். அவரது செயல்களை, விசுவாசக் கண்களோடு பார்த்தால், அவரைப் பின்செல்லவேண்டியிருக்கும். இதை பிரச்சனையாக எண்ணி அஞ்சுபவர்கள், தாங்கள் எதுவும் கேட்காததுபோல், பார்க்காததுபோல், வாழ விரும்புகின்றனர். செயலாற்ற விருப்பமின்றி, உள்ளம் கொழுத்துப்போய் மந்தமாகிவிடுவதால், இறைவன் இவ்வுலகில் இன்னும் தொடர்ந்து செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைக் கேட்க விருப்பமின்றி, இவ்வுலகம் நம் மேல் திணிக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளுக்குள் சிறைப்பட்டு விடுகிறோம். அதே நம்பிக்கையின்மையை மற்றவர் உள்ளங்களிலும் விதைக்கிறோம்.
இன்றைய நற்செய்தியில் 'விதைப்பவர் உவமை'யைப் பகிர்ந்துகொள்ளும் இயேசு, அதே மூச்சில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற அழைப்பையும் விடுத்துள்ளார். இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகள், பொதுவாக, விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.
விதைப்பவர் எடுத்துச் சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா? அல்லது, விதைப்பவர் தாராள மனதுடன் விதைகளை அள்ளித் தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர் இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே பொருத்தமாக உள்ளது. தயக்கம் ஏதுமின்றி, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் இறைவனிடம், "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டும்", "பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்" என்பன போன்ற பழமொழிகள் அர்த்தமற்று போகும். அத்தகைய இறைவனின் வார்த்தைகளை உலகில் விதைக்கச் செல்லும் நாம், தரம் மிகுந்த, நன்கு உழுது உரமிடப்பட்ட நிலத்தில் மட்டுமே விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றால், அது இறைவார்த்தையை விலங்கிட்டு சிறைப்படுத்தும் முயற்சியாக அமையும். நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், விலங்கிட்டு சிறையில் அடைத்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகம் இவ்வாறு பதிவு செய்துள்ளது: இறைவாக்கினர் எசாயா 55: 10-11 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில் அவர் விதைத்த வார்த்தைகள் வெறுப்பாக வெடித்தாலும், அவர் சளைக்காமல் விதைத்து வந்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதையும், முட்புதர்களும், இயேசுவின் வார்த்தையால், மலர்ச்செடிகளாயின என்பதையும் நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம். வெறும் ஆர்வக் கோளாறால் அவரைக் காண வந்தவர்கள், பாதையோர நிலங்கள் என்பதை அறிந்தும், இயேசு, அந்தப் பாதைகளில் விதைப்பதை நிறுத்தவில்லை. ‘இறைவார்த்தையை விதைப்பது’ என்றதும், கோவில்களிலும், வேறு பல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணவேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்! பாகுபாடுகள் பார்க்காமல், ஐயங்களால் அவதிப்படாமல், விதைகளைத் தெளிப்பதைப் பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு வருகிறது... நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை, திருவாளர் மைக்கிள் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர், அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது மைக்கிள் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம், நிருபருக்கு வியப்பாக இருந்தது. மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே, அந்த வியப்பான விவரம். "உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, மைக்கிள் அவர்கள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக் கதிரின் மகரந்தத் தூள் காற்றில் கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக் கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்களின் நிலங்களில் தரக் குறைவான சோளக் கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும், நல்ல சோளத்தை உருவாக்க வேண்டும். எனவேதான், நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று, அவர் சொன்ன பதில், வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும் சொல்லித் தருகின்றது. விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், முதலில், திறந்த மனதுடன் இறைவார்த்தையைக் கேட்கும் செவியுடையோராய் இருக்கும் வரத்தை இறைவன் தர வேண்டுவோம். தாராள மனதோடு, இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் உன்னத வாழ்வு வாழ்வதற்கு உதவியாக, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!
நூறு மடங்கு பயன்!
உங்கள் திருவிவிலியம் எப்படி இருக்கின்றது?
ஓர் இளைஞன் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவிருந்தான். அப்போது அவனுடைய தாய் அவனிடம் ஒரு திருவிவிலியத்தைக் கொடுத்து, “மகனே! இது சாதாராண நூல் அல்ல, எத்தனையோ மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்ட நூல். இதனை நீ எக்காரணத்தைக் கொண்டும் தூசுபடிய விட்டுவிடாதே. அப்படிச் செய்தால் பாவம் உன்மேல் வெற்றிகொண்டுவிடும்” என்றார்.
இளைஞனும் தன்னுடைய தாய் தனக்குச் சொன்ன அறிவுரையைக் கருத்தாய்க் கேட்டுக்கொண்டு விட்டு வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கு அவனுக்கு புதிதாக நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். அவர்கள் அவனைச் சுக போக வாழ்க்கை வாழ எவ்வளவோ தூண்டினார்கள்; ஆனால், அவன் தன் தாய் சொன்னது போன்று திருவிவிலியத்தைத் தூசி படிய விடாமல் தொடர்ந்து வாசித்து வந்ததால், அவர்கள் விரித்த மாய வலையில் அவன் வீழ்ந்திடாது இருந்தான்.
இதற்குப் பின்பு வந்த நாள்களில் அவன் ‘திருவிவிலிய வாசிப்புக் குழு’ என்றொரு குழுவைத் தொடங்கி, திருவிவிலியம் வாசிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினான். நாளடைவில், அந்தக் குழு அவன் படித்த பல்கலைக்கழகம் முழுவதும் பரவி, திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கி, அதன்மூலம் ஏராளமான நன்மைகளை அவர்கள் அடையத் தொடங்கினார்கள்.
கடவுள் மனிதர்களுக்கு அருளிய மிகப்பெரிய கொடை அவரது வாழ்வளிக்கும் வார்த்தைகள் அடங்கிய திருவிவிலியம். அதனை நாம் வாசித்து வாழ்வாக்கும்போது மிகுந்த பயன் தருவோம். இத்தகைய மேலான செய்தியைத் தாங்கி வருகின்றது பொதுக் காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை. நாம் எப்படி கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவது? அதில் உள்ள தடைகள் என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
வல்லமையுள்ள வார்த்தை
“இறைவனின் வார்த்தையே விதை. அதை விதைப்பவர் கிறிஸ்துவே. அவரைக் கண்டடைவோர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார்” என்று நாம் இன்று நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியாகப் பாடினோம். இயேசுவுக்குச் செவிகொடுப்போர் நிலைவாழ்வை அடைகின்றனர் என்பதையே இவ்வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன; ஆனால், நடைமுறையில் எத்தனை பேர் இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றார்கள் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
முதல் வாசகம் மழையைப் போல பனியைப் போல கடவுளின் வார்த்தையும் எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அதனை நோக்கத்தை நிறைவேற்றாமல் போகா என்கிறது. அப்படியானால், கடவுளின் வார்த்தை எத்துணை வல்லமையானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
நான்கு விதமான மனிதர்கள்
ஒருசிலர் இறைவார்த்தையைக் கேட்கலாம்; ஆனாலும் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை; அல்லது இறைவார்த்தையைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்களது உள்ளம் மூடியே இருக்கும். இதற்கு இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். இவர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டாலும் அவரிடம் குற்றம் காணும் நோக்கத்துடன் அதனைக் கேட்டதால், அவருடைய வார்த்தைகளில் இருந்த ஆழமான மறையுண்மையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்படிப்பட்டவர்களை இயேசு இன்றைய நற்செய்தியில் வழியோர நிலத்திற்கு ஒப்பிடுகின்றார்.
மத்தேயு நற்செய்தியில் இயேசு, “இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” (மத் 24: 13) என்பார். ஒருசிலர் இறைவார்த்தையை ஆர்வமாய்க் கேட்பார்கள்; ஆனால், அந்த வார்த்தையில் நிலைத்திருக்காமல், உடனே தடம் புரண்டுவிடுவார்கள். இதற்கு இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைச் சொல்லலாம். அவர்கள் இயேசுவின் வார்த்தையை ஆர்வமாய்க் கேட்டாலும், உடனே அதனை மறந்துவிட்டார்கள். இல்லையென்றால், அவர்கள், இயேசுவைச் சிலுவையில் அறையும் (மத் 27: 23) என்று உரக்கக் கத்தியிருக்க மாட்டார்கள். இப்படி உறுதியற்ற மனிதர்களைத்தான் இயேசு மண்ணில்லா பாறை நிலத்திற்கு ஒப்பிடுகின்றார்.
“நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6: 24) என்பது இயேசுவின் அற்புதமான போதனைகளில் ஒன்று. பலருக்குக் கடவுளும் முக்கியம், உலக செல்வமும் முக்கியம். இப்படி அவர்கள் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதால், உலக ஆசை அவர்களை நெருக்கி, அவர்களைப் பயன் தரமுடியாமலே செய்துவிடுகின்றது. இதற்கு இயேசுவின் சீடர்களுள் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமான யூதாசு இஸ்காரியோத்துவை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவன் இயேசுவின் சீடனாய் இருந்தபோதும், பணத்தாசையால் இயேசுவைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தான். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் இயேசு முட்செடி நிலத்திற்கு ஒப்பிடுகின்றார்.
நற்பெயர் பெற்றவர் யார் என்பதற்கு, “அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்” (திபா 1: 1-2) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுவார். ஒருவர் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்று விடாமல், அதனை ஆழ்ந்து தியானிக்க வேண்டும். அதன்படி வாழவேண்டும். அப்போதுதான் அவரால் நற்பேறு பெற்றவராக முடியும். மரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டார். அத்தோடு நின்றுவிடாமல் அதனை ஆழ்ந்து தியானித்து, அதன்படி வாழ்ந்து நல்ல நிலைமாய் மாறி, நமக்கெல்லாம் முன் மாதிரி காட்டினார். இந்த நான்கு வகையான மனிதர்களில் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடர்களும் சவால்களும்
கடவுளின் வார்த்தை எவ்வளவு வல்லமையானது என்பதையும், அதன்படி வாழும்போது மிகுந்த பயன் தரலாம் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்தோம்.
கடவுளின் வார்த்தையின்படி வாழ்வது ஒன்றும் அவ்வளவு எளிதானது இல்லை. அதன்படி வாழும்போது நாம் நிறைய சவால்களையும் துன்பங்களையும் சந்தித்தாக வேண்டும். எத்தனையோ புனிதர்கள் கடவுளின் வார்த்தையின்படி வாழ்ந்ததால்தான் துன்பங்களையும் அவமானங்களையும் சவால்களையும் சந்தித்தார்கள். இன்றைக்கும் கூட நாம் எல்லாரையும் போல உலகப் போக்கிலான வாழ்க்கை வாழும்போது துன்பங்களைச் சந்திப்பதில்லை. கடவுளின் வார்த்தையின்படி வாழும்போதுதான் துன்பங்களைச் சந்திக்கின்றோம்; தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றோம்; ஆனால், இந்தத் துன்பங்கள் எல்லாம் சிறிது காலத்திற்குத் தான்; கடவுள் தரும் மாட்சிதான் நீடித்திருக்கும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும் பவுலின், “இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை” என்ற வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
ஆகையால், நாம் எத்தகைய துன்பங்களும் இடர்களும் வந்தாலும் இறைவார்த்தையில் நிலைத்து நிற்க வேண்டும். அப்போதுதான் நம்மால் மரியாவைப் போன்று நூறு மடங்கு பயன் தர முடியும்.
சிந்தனைக்கு
“கடவுளின் வார்த்தையை அறியாமல் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது” என்பார் ஜாக் விர்ட்சன் என்ற அறிஞர். ஆகையால், நாம் கடவுளின் வார்த்தையைக் கருத்தூன்றி வாசித்து, அவரது திருவுளத்தை உணர்ந்து, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இரு விதைகளும் - இரு வினைகளும்
நாம் கடந்த ஞாயிறு அன்று வாசித்த ‘ஆறு வகை நிலங்களின்’ தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. இதன் பின்புலம் இதுதான். மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். நேர்மையாளர்கள், பொல்லாதவர்கள். பொல்லாதவர்களைத் தங்கள் குழுமத்திலிருந்து வெளியேற்றுவதா? அல்லது அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதா? வெளியேற்றுவது என்றால், எப்போது வெளியேற்றுவது? வைத்துக் கொள்வது என்றால், எதுவரை வைத்துக்கொள்வது? அவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
வயலில் தோன்றிய களைகள் உவமை
நற்செய்தியாளரின் வழக்கமாக, மத்தேயு உவமைப் பொழிவில் சொல்லப்பட்டுள்ள உவமைகள் இறையாட்சி பற்றிய உவமைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த உவமை இரண்டு காரணங்களுக்காகச் சொல்லப்படுகிறது: ஒன்று. இறையாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்ன என்பதை அறிய. இரண்டு, இறுதி நாள் நிகழ்வுகளைப் பற்றியது அல்லது இறுதித்தீர்ப்பின் போது நடப்பது பற்றியது.
இன்றைய உவமையில், எல்லாம் இரட்டைப் படையில் இருக்கின்றன:
விதைகள் இருவகை: கோதுமை, களை.
விதைப்பவர்கள் இருவகை: நிலக்கிழார், பகைவன்.
எதிர்வினைகள் இரு வகை: அனைத்தையும் வளர விடுவது, களைகளைப் பறிப்பது.
விளைவுகள் இருவகை: கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது, களைகள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன.
உணர்வுகள் இருவகை; நிலக்கிழாரின் பொறுமை, வேலையாள்களின் அவசரம்.
மனிதர்கள் இருவகை: நேர்மையாளர், நெறிகெட்டோர்.
வாழ்வியல் நிலை இருவகை: கடவுளின் பொறுமை, மனித அவசரம்.
‘கடவுளின் பொறுமை, மனித அவசரம்' என்னும் இறுதி இணையை மையமாக வைத்து, இன்றைய நாள் வாசகங்களைப் புரிந்துகொள்வோம்.
வயலில் களைகளைக் கண்ட பணியாளர்களுக்குக் கோபம் வருகிறது. தங்கள் தலைவரிடம் ஓடி, ‘வயலில் களைகள் காணப்படுவது எப்படி? நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?' எனக் கேட்கின்றனர். பணியாளர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டுபிடித்த அவர், 'வேண்டாம்! இவ்வளவு ஆர்வத்திலும் அவசரத்திலும் நீங்கள் கோதுமையையும் பறித்துவிடுவீர்கள்!” என்கிறார்.
இத்தலைவர் வெறும் விவசாயி மட்டுமல்ல; மாறாக, மேலாண்மையியலில் சிறந்தவரும் கூட. அதாவது, வயலின் ஒரு பாத்தியில் 50 கோதுமைச் செடிகள், 50 களைகள் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். முளைத்து வருகின்ற பருவத்தில் கோதுமைச் செடிகளும், களைகளும் ஒன்றுபோலத் தெரியும். 40 களைகளோடு சேர்த்து 10 கோதுமைச் செடிகளையும் பறித்துவிட்டால், தலைவருக்கு 10 செடிகள் நஷ்டம். ஆனால், வேலைக்காரர்கள் ரொம்ப எளிதாக ‘ஸாரி!' சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இவர்களுக்கு அது வெறும் 'ஸாரி!' தான். தலைவருக்கோ அது அவருடைய சொத்து. வேகமாக மனக்கணக்குப் போடுகிற அவர், தன்னுடைய எந்தக் கோதுமையையும் இழக்கத் தயாராக இல்லை.
இந்த இடத்தில் நாம் மற்றொரு மேலாண்மையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, தலைவனைவிட, ஊழியக்காரன் பரபரப்பாக இருக்கக்கூடாது. தலைவனே தூங்கப் போய்விட்டான். ஊழியக்காரன் ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்? இவன் புலம்புவதால் களை வளராமல் போய்விடுமா? அல்லது இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைத்தால் தலைவன் அள்ளிக் கொடுப்பானா? இல்லை! அப்புறம் ஏன் இந்த ஆரவாரம்! தலைவனுக்கு எல்லாம் தெரியும். அமைதியாகத் தூங்கச் செல்வதே பணியாளனுக்கு அழகு.
தலைவன் இங்கே பொறுமை காப்பதால் சில பிரச்சினைகளும் எழுகின்றன:
அ) களைகள் கோதுமைக்குத் தேவையான நிலத்தின் ஊட்டத்தை எடுத்துக்கொள்கின்றன.
ஆ) கோதுமைக்குப் பாய்ச்சப்படும் நீரைப் பறித்துக்கொள்கின்றன.
இ) களைகள், பல பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தங்கள்பால் ஈர்ப்பதால், அவற்றாலும் கோதுமைப் பயிருக்குத் தீங்கு நேர்கின்றது.
ஈ) களைகள் மண்டிக்கிடக்கும் போது அது வயலின் அழகைக் கெடுக்கிறது.
ஆனாலும், தலைவர் அமைதி காக்கிறார்? ஏன்? ஒரு கோதுமைப் பயிர்கூட அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொள்கின்றார்.
இதுதான் கடவுளின் பொறுமை! ஆக, கடவுள் காத்திருக்கின்றார்!
களைகளின் இயல்பு மாறுவதில்லை. களை எப்போதும் களைதான். பாதி தூரம் களையாக வந்தபின், அது கோதுமையாக மாற முடியாது. களையின் இயல்பு. தன்னுடைய காத்திருத்தலால் மாறாது என்று தெரிந்தாலும், கடவுள் காத்திருக்கின்றார்.
கடவுளின் பொறுமை எதிரியின் செயலை இறுதியில் அழிக்கின்றது. களைகளின் இருப்பு கோதுமைப் பயிர்களுக்கு நெருடலாக இருந்தாலும், இறுதியில் களைகள் பறித்து எரிக்கப்படும்வரை அவை காத்திருக்க வேண்டும். களைகளின் இருப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரமான தண்ணீரும், உரமும், ஊட்டமும் அநீதியாகப் பகிரப்படுவதை அல்லது பறித்துக் கொள்ளப்படுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
கடவுளின் பொறுமை பல நேரங்களில் நம் அவசரத்தோடு பொருந்துவதில்லை. 'நம்பிக்கையின் பிதாமகன்' என அழைக்கப்படுகின்ற ஆபிரகாமே, தனக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறை வேறும் என்ற பொறுமை இல்லாமல், தனக்கான வாரிசாக, தன்னுடைய அடிமையின் மகன் எலியேசரை, உரிமைப் பிள்ளையாகத் தத்தெடுக்க முனைகின்றார். 'மீட்பின் நாயகன்' என அழைக்கப்படுகின்ற மோசே, 'பாறைக்குக் கட்டளையிடு!' என்று கடவுள் சொன்னதை மறந்து, 'பாறையை இருமுறை அடித்து' தன்னுடைய அவசரத்தால், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றார். இஸ்ரயேலின் முதல் அரசராகிய சவுல், ஆண்டவருக்குப் பலி செலுத்தி, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என அவசரப்பட்டு, அமலேக்கியரின் கால்நடைகளை அழிக்காமல், அவற்றை ஆண்டவருக்கென ஒதுக்கி வைத்ததால், அரச நிலையை இழக்கின்றார். ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகிய தாவீது, 'ஆண்டவரிடம் கேட்டால் அவர் எனக்கு மனைவியைத் தருவார்' என்று அறிந்திருந்தாலும், அவசரப்பட்டு பெத்சேபாவைத் தழுவிக்கொள்கின்றார். அவளுடைய கணவனைக் கொல்கின்றார். விளைவு, வாள் அவருடைய தலைக்குமேல் இறுதிவரை தொங்கிக் கொண்டே இருந்தது.
மனித அவசரங்கள் பல நேரங்களில் கோதுமைப் பயிர்களை அழிப்பதோடு, நிலத்தையும் பாழ்படுத்தி விடுகின்றன.
கடவுளின் பொறுமையை நாம் எப்படிப் பெறுவது?
- நம்பிக்கை பார்வை கொண்டிருப்பதால்.
- தீமையின் இருப்பை ஏற்றுக்கொள்வதால்.
- தீமை என்னுடைய நன்மையை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொள்வதால்.
- வாழ்வின்மேல் உரிமை கொண்டாடுவதால்.
- நன்மைத்தனத்தில் வளர்வதால்.
- இதுவும் கடந்து போகும்!' என எண்ணுவதால்.
இறுதியாக, நாம் களைகளின் நடுவில் சிக்கிக் கொண்ட கோதுமைப் பயிர்களாக, ஆண்டவரை நோக்கி பெருமூச்சு எழுப்பினாலும் (இரண்டாம் வாசகம்), அவர் பல நேரங்களில், 'பொறு!' என்கிறார். ஏனெனில், அவர் 'பொறுமையும், பேரன்பும் கொண்டவர்’ (முதல் வாசகம், பதிலுரைப் பாடல், திபா 86).
கடவுளோடு ஒத்துழைத்து நல் நிலங்களாவோமா!
தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்துக்கொண்டிருந்தார். கொடுத்து முடித்த உடன் அவர் மிகுந்த மனவேதனையோடு மாணவர்களைப் பார்த்து" எல்லாருக்கும் ஒன்றுபோல்தான் பாடம் எடுத்தேன். ஐம்பது பேரில் வெறும் பத்து பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். மீதம் நாற்பது பேருக்கு என்ன ஆயிற்று? " என்று கேட்டார். வகுப்பு முழுதும் மிக மிக அமைதியாயிற்று. பின் ஆசிரியர் "தேர்ச்சி பெற்றவர்கள் சரியாகப் புரிந்து கொண்டார்கள். சிரமம் எடுத்து, முயற்சி செய்து, தங்கள் விருப்பங்களை தியாகம் செய்து படித்ததால் அதற்கான பலன் கிடைத்தது. மற்றவர்கள் யாரும் இதைச் செய்யவில்லை அல்லவா! உங்களுடைய எதிர்காலம் சிறக்க வேண்டுமென்றால் அதற்காக முயற்சி செய்யுங்கள்.உங்களை வருத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு தான் இழப்பு. நான் என் கடமையை செய்வேன்" எனக் கூறிவிட்டு சென்றார்.
இச்சிறுநிகழ்வை நம் ஆன்மீக வாழ்வோடு இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் சற்று ஒப்பிட்டு பார்ப்போம்.
விதைப்பவர் உவமை இன்று நமக்கு தரப்பட்டுள்ளது. நான்கு வகை நிலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமும் ஒவ்வொரு முறையும் இவ்வுவமையை தியானிக்கிறோம். இவ்வுவவமைக்கான பொருளும் நமக்கு மிக மிக நன்றாகவே தெரியும். ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் நாம் தோற்றுவிடுகிறோம்.
நல்ல நிலங்களாக வாழந்து பலன்தர வேண்டுமென்பதே நம் ஆண்டவரின் விருப்பமென்றால் அதை நாம் நிறைவேற்ற வேண்டாமா!
நல்ல நிலம் ஆரம்பத்திலேயே நல்ல நிலமாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் கற்களும் முட்களும் இருந்திருக்கலாம். ஊட்டச்சத்துகள் குறைவாக இருந்திருக்கலாம். கவனிப்பாரற்று பராமரிப்பாரற்று தரிசாக இருந்திருக்கலாம். அது பிற்காலத்தில் நன்றாக கவனிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு ,உரமிடப்பட்டு, களைகள் நீக்கப்பட்டு, உழப்பட்டு பின் நல்நிலமாய் மாறியிருக்கலாம்.அந்த நிலம் நல் நிலமாய் மாற எவ்வளவு மாறியிருக்கலாம்வலிகளை கடந்து சென்றிருக்கும். அத்தோடு நின்றுவிடவில்லை விதைக்கப்பட்ட விதைகள் வளர்வதற்கு தன்னுடைய சத்துக்களையெல்லாம் நிலம் தருகின்றது. விதைகள் நிலத்தைக் கீறி முளைக்க தன் கடினத்தன்மையை விட்டுக்கொடுக்கிறது அல்லவா.இவற்றால் தானே அது நல்நிலம் எனப்படுகிறது.
இவ்வாறுதான் நம் வாழ்க்கையும் கூட.நம் வாழ்க்கை பலன் தர வேண்டுமெனில் நம்மில் உள்ள தேவையற்றவை அகற்றப்பட வேண்டும். நாமும் அறிவு, ஞானம் ,நற்குணங்களால் உரமூட்டப்பட வேண்டும்;கவனிக்கப்பட வேண்டும்; வழிநடத்தப்பட வேண்டும்; இவற்றோடு நாம் பெற்றுக்கொண்டவற்றை மற்றவருக்கு கொடுக்கும் மனம் வேண்டும். நம் கடினத்தன்மைகள் யாவும் அழிய வேண்டும்; அப்போது தான் நாமும் நல்ல நிலத்திற்கு ஒப்பாவோம். இவ்வாறு நம்மை நல்ல நிலமாக்குவது யார்? நம் கடவுளே. நம்மைப் பண்படுத்தி நல்ல நிலமாக்கும் கடவுள் தான் ,நம் வாழ்வை சோதித்தறிய விதைகளாம் இறைவார்த்தையை விதைக்கிறார். இறைவார்த்தையை நாம் வாழ்கின்ற விதமே நாம் கொடுக்கும் உண்மையான பலன்.
நல்ல நிலம் தன்னை பண்படுத்துபவருக்கு ஒத்துழைப்பது போல கடவுளுக்கு ஒத்துழைக்காது நாம் வாழ்ந்தால் நாம் வெறும் பாதைகளாக, பாறைகளாக, முட்செடிகள் நிறைந்த தரிசு நிலங்களாக ஆன்ம நலமின்றி வாழ்ந்து மடிய வேண்டியதுதான். கடவுளுக்கு நம்மைக் கையளித்து நல் நிலங்களாவோமா!
இறைவேண்டல்
கடவுளே! எங்களைப் பண்படுத்தும் உழவனே! உம்மோடு ஒத்துழைத்து நல் நிலங்களாகி, நீர் விதைத்த இறைவார்த்தையை வாழ்வாக்கி பலன் தர அருள் புரியும். ஆமென்.
விதையும் நிலமும்
விதையும் உண்டு விளை நிலமும் உண்டு விதைப்பவர் எங்கே….?
ஆண்டவர் இயேசு வாழ்ந்த நாட்களில் அவர் என்ன செய்தார்? எப்படிச் செய்தார்? ஏன் செய்தார்? என்ற கேள்விகளுக்கு இந்த விதைப்பவன் உவமை தெளிவான பதில் தருகின்றது. இயேசு பாரபட்சம் அற்றவராக, கண்டும் காணாத, கேட்டும் கேட்காத மக்களுக்கும் (வழியோரம்)... கல்நெஞ்சம் கொண்ட மனிதருக்கும் (பாறை நிலம்) ... உலக தேவைகளின் தேடல்களினால் நெருக்கப்பட்ட மனிதர்களுக்கும் (முட்புதர்)… இறை வாஞ்சையோடு வாழ்கின்ற நல்ல உள்ளங்களுக்கும் (நல்ல நிலம்) ஏகமாக விதைகளை, நல்ல விதைகளை (இறை வார்த்தை)... மண்ணில் சகல மாந்தர்களும் பயனுறவே வாரி வாரி விதைத்தார்.
இயேசு தானாகத் தன் கைப்பட விதைத்த பின்பும், விளைச்சலின் பலன் இந்த நான்கு விதமான மனிதர்களின் மத்தியில்; இறைவாஞ்சையுடன் வாழ்ந்த நல்ல உள்ளங்களால் மட்டுமே அதுவும் 30, 60, 100… எனப் பலன் தர முடிந்தது என்கின்றார். ஆம், கவனிக்க வேண்டியது - இவர்கள் மத்தியிலும் எல்லோராலும் 100 மடங்குப் பலன் தர முடியவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறும் இயேசு; 30, 60 மடங்கு எனப் பலன் தந்தோரையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்.
இதோ பரந்த உலகம் கண் முன் நிற்கின்றது பாரத தேசம் பழம் பெரும் தேசம் என்பதற்கு இணங்க "உயிர்த்த ஆண்டவரின் கண்கண்ட சாட்சியான" திருத்தொண்டர் தோமா இந்திய தேசத்தில் நமது முன்னோர்களுக்கு இறை வார்த்தையை விதைத்தார். விதைக்கப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடிந்தும் மகசூலின் நிலை என்ன? 30 60 100 இதில் இன்று எது நமக்குப் பொருந்தும்? சந்தேகம் என்ன 30 மடங்கு என்பதே நமக்குப் பொருந்துமா என்பது மாபெரும் கேள்வி? இதற்கு யார் காரணம் விதையா? விளை நிலமா? அல்லது விதைப்பவரா?
முதலாவது விதை.
இயேசுவின் இறை வார்த்தைகளைவிட நல்லதோர் விதையை நானிலம் காண முடியாது. ஆக, விதை; விளைச்சல் கொண்ட நல்ல விதையே.
இரண்டாவது நல்ல விளை நிலம்
இறை உணர்வும் இறை தேடலும் தமிழ் கலாச்சாரத்தைவிட அதிகமாக உலகின் எந்த வாழ்வியலிலும் இருக்குமா எனச் சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால் மாபெரும் கேள்வி விடையாக நிற்கும். ஆக விதைக்க நல்ல நிலம் தமிழ் நிலமே என்பதில் சந்தேகம் இல்லை.
மூன்றாவதாக விதைப்பவர்
இயேசுவின் வாழ்வையும் அவருடைய மாட்சிமையையும் (உயிர்ப்பையையும்) தன்னுடைய சொந்த ஐம்புல உணர்வால் சான்று பகிர்ந்த திருத்தொண்டர் தோமையை விடச் சிறந்ததொரு இறை நம்பிக்கை கொண்ட இந்த மண்ணிற்கான விதைப்பவரை நாம் பெற்றிருக்க முடியாது.
மூன்று நிலைகளும் முத்தென முழுமையாகச் சரியாக இருந்த பின்பும் செயலில் தொய்வு உண்டாகக் காரணம் யாது? இப்படிப்பட்ட இறைவாஞ்சை கொண்ட நல்ல நிலத்தில் அறுவடை குறைந்ததற்கு காரணம் யார்? கண்கண்ட சாட்சியான தோமா விதைத்தபின் அச்செயலை தொடர்ந்து செயல்படுத்த தோழமை கொண்டு தோள் கொடுத்தோர் எத்தனை பேர்? எங்குத் தொலைத்தோம் ஏன் தயங்கினோம்… காரணங்கள் புரியவில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின் நின்று நிதானமாகக் கவனித்தோம் என்றால் விதைக்கும் பஞ்சமில்லை விலை நிலத்திற்கும் பஞ்சமில்லை ஆனால் இன்று எங்கும் எதிலும் விதைப்பவருக்கு பஞ்சமாக இருக்கின்றது என்பதே உண்மை
.
ஒருவேளை, இன்றும் நாங்கள் நல்ல நிலமாகத் தான் இருக்கின்றோம் விதைப்பவரைக் காணவில்லை என்கிறோமா?
நாங்கள் நல்ல நிலம் தான் விதையும் விதைக்கப்பட்டது ஆனால் பராமரிக்க ஆள் இல்லை என்கிறோமா?
அல்லது, பாருங்கள் விளைச்சல் 30, 60, 100 மடங்கு என இருக்கின்றது; அறுவடை செய்து களஞ்சியத்தில் சேர்க்க ஆளில்லை என்கிறோமா?
என்ன செய்ய நாம் ஆதாமின் வம்ச வழி அல்லவா? சுலபமாக ஏவாளை கைகாட்டும் சந்ததி தானே.
இறைவன் அறுவடை குறித்து இன்று நம்மைக் கேட்டால் மேற்கூறிய ஏதோ ஒரு பதில் தயாராக இருக்கும் என்பதில் சந்தேகம் நமக்கில்லை. ஏனெனில் நாம் கிறிஸ்தவர்கள். ஆம் பிறருக்கு கிறிஸ்து அவர்கள் அல்லது இவர்கள்.
ஒரே ஓர் இயேசு கிறிஸ்து உலகில் மூன்று ஆண்டுகள் அதிலும் 3 மணி நேரம் ரத்தம் சிந்திக் குறிப்பாக மன்னிப்பை விதைத்ததின் விளைவு உலகத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்று அவர் பக்கம் . இன்று நம்மோடு பயணிக்கும் அயலானுக்கு கிறிஸ்துவாக ஆயிரம் கிறிஸ்தவர்கள் அவதாரம் கொண்டுள்ளோம். இந்த அவதாரம் அவரின் (கிறிஸ்துவின்) மதிப்பீடுகளை நமக்குள் 30, 60, 100 எனப் பிரதிபலிக்க வேண்டும். நம்மைக் கண்ணுறும் நம் அயலானுள்ளும், அதேவேளை இந்த மதிப்பீடுகள் 100 மடங்கு ஊடுருவிப் பிரதிபலிக்க வேண்டும் ; என்பதல்லவா இறைமகனின் விருப்பம்.
வாருங்கள் கலியனின் மணி மணியான அன்பு, மன்னிப்பு, அரவணைப்பு என்ற விதைகளை நல்ல நிலம் தேடி மீண்டும் ஒரு விதைப்பவனாக விவேகத்தோடு, விலாசமான மனதோடு, விதைக்கச் செல்வோம் . நமது அயலானும் ஆவலுடன் 30, 60, 100 என விளையும் விளைச்சலை - அறுவடை செய்ய நம்மோடு நிற்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாக.
இன்றைய நவநாகரீக விஞ்ஞான உலகில் விதையும் உண்டு விளை நிலங்களும் உண்டு. அத்தோடு, தேவைப்படும் அதிநவீன உரமும் உபகரணங்களும் கைவசம் உண்டு . மாறுவோம் விதைப்பவர்களாக மாற்றுவோம் உலகை "அன்பு ஆளும் உலகாக".
