மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எரேமியா 20: 10-13|உரோமையர் 5: 12-15|மத்தேயு 10: 26-33

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஒரு முறை இங்கிலாந்து நாட்டைப்‌ பகைவர்கள்‌ தாக்கினார்கள்‌. இங்கிலாந்து அடியோடு அழிந்துவிடுமோ என்று மக்கள்‌ அஞ்சினார்கள்‌. அரசனோ அந்த நாட்டின்‌ சரித்திரத்தை அழியவிடக்‌ கூடாது எனக்‌ கருதி குழந்தைகளையெல்லாம்‌ பாதுகாப்பான இடத்திற்குக்‌ கொண்டு செல்ல ஆணையிட்டார்‌. எல்லாக்‌ குழந்தைகளும்‌ புகைவண்டியிலே ஏற்றப்பட்டார்கள்‌. ஆனால்‌ ஒரு ஐந்து வயது சிறுமி தேம்பித்‌ தேம்பி அழுதாள்‌. அவளது 8 வயது அண்ணன்‌ ஏன்‌ அழுகிறாய்‌ என்று கேட்டான்‌. எனக்குப்‌ பயமாக இருக்கிறது என்று சொன்னாள்‌ அந்தச்‌ சிறுமி. சிறிது நேரம்‌ யோசித்த சிறுவன்‌, தங்கச்சி! பயப்படாதே! நம்‌ அரசன்‌ பாதுகாப்பான இடத்திற்குக்‌ கொண்டு போகும்படி ஆணையிட்‌ டிருக்கிறார்‌. நானும்‌ உன்னோடு இருக்கிறேன்‌, பயப்படாதே! என்று தங்கையைத்‌ தட்டிக்‌ கொடுத்தான்‌. ஆம்‌! இந்த நிகழ்ச்சியை நம்‌ வாழ்வோடு இணைத்து ஒப்பிடலாம்‌. துன்பத்தால்‌ துயரத்தால்‌ அழுகின்ற இன்றைய சமுதாயத்தை அந்தச்‌ சிறுமிக்கு ஒப்பிடலாம்‌. ஆறுதல்‌ சொன்ன அண்ணன்தான்‌ நம்‌ மூத்த சகோதரர்‌ ஆண்டவர்‌ இயேசு கிறிஸ்து. வண்டியை ஓட்டிச்‌ செல்ல ஆணையிட்டவர்‌ நம்‌ வானகத்‌ தந்தை.

இன்றைய நற்செய்தியிலே, அஞ்சாதீர்கள்‌! காசுக்கு இரண்டு சிட்டுக்‌ குருவிகள்‌ விற்பதில்லையா? எனினும்‌ அவற்றில்‌ ஒன்று கூட உங்கள்‌ தந்தையின்‌ விருப்பமின்றி தரையில்‌ விழாது. உங்கள்‌ தலைமுடியெல்லாம்‌ எண்ணப்பட்டிருக்கிறது. சிட்டுக்‌ குருவிகள்‌ பலவற்றையும்‌ விட நீங்கள்‌ மேலானவர்கள்‌ (மத்‌. 10:29-81) என்கிறார்‌ நம்‌ ஆண்டவர்‌ இயேசு.

இன்றைய முதல்‌ வாசகத்திலே வாசிக்கக்‌ கேட்டதுபோல, இறைவனின்‌ செய்தியை எரேமியா, அரசனிடம்‌ எடுத்துரைத்த போது, அரசனோ அச்செய்திக்குச்‌ செவிமடுப்பதற்குப்‌ பதிலாக, எரேமியாவை தேசத்துரோகி என குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான்‌. ஏன்‌! தன்‌ நண்பர்கள்கூட எரேமியாவின்‌ - வீழ்ச்சிக்காகக்‌ காத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஆனால்‌ இந்தக்‌ கொடுரமான பிரச்சனைகள்‌ மத்தியில்‌ எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை! இறைவன்‌ தன்னோடு இருப்பதை உணர்ந்தார்‌. உறுதியான மனநிலையோடு எதிர்கொண்டார்‌.

நான்‌ உன்னோடு இருப்பேன்‌ (வி.ப. 3:12) என்று கடவுள்‌ சொன்னதை ஏற்று நம்பியபோது மோசேயின்‌ அச்சம்‌ நீங்கியது.

கடவுளால்‌ ஆகாதது ஒன்றுமில்லை (லூக்‌. 1:37) என்பதை ஏற்றபோது, அன்னை மரியாவின்‌ பயம்‌ நீங்கியது.

கடவுள்‌ நம்‌ சார்பாக இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர்‌ யார்‌? கடவுளின்‌ அன்பினின்று நம்மைப்‌ பிரிப்பவன்‌ யார்‌? (உரோ. 8:31,35) என்று துணிந்து போதித்தார்‌ திருத்தூதராகிய புனித பவுல்‌ அடிகளார்‌.

கவிஞன்‌ பாரதி பாடினார்‌:

அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே! இச்சகத்தோரெல்லாம்‌ எதிர்த்து நின்ற போதிலும்‌ அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!

பிரச்சனையற்ற மனித வாழ்வு இருக்க முடியாது. துன்பமில்லா வாழ்வு இன்பத்தை உணர வைக்க முடியாது. எனக்கு இனிப்புதான்‌ பிடிக்கும்‌ என்று தினமும்‌ அல்வாவை அல்லது லட்டை தின்றால்‌ நமக்கு என்ன ஆகும்‌ என்பது தெரியுமல்லவா! கொஞ்சம்‌ காரமும்‌ சாப்பிட்டால்தான்‌ முடியும்‌. எனவே பிரச்சனைகளைக்‌ கண்டு நாம்‌ பயந்து ஓடுவோமென்றால்‌ அது நாய்‌ துரத்துவதுபோல நம்மைத்‌ துரத்தும்‌. எதிர்த்து நின்றால்‌ அது நம்மை விட்டு விலகி ஓடும்‌. எனவே பிரச்சனைகளை எதிர்கொள்ள இரண்டு விதமான நிலைகள்‌ நமக்குத்‌ தேவை. முதலாவதாக நம்மிடம்‌ இறைவன்‌ ஆற்றல்களையும்‌, வல்லமையையும்‌ தந்துள்ளார்‌ என்பதை இனம்‌ காண வேண்டும்‌.

ஒருவன்‌ கோழியைக்‌ கண்டால்‌ பயந்து ஓடுவான்‌. எனவே மனநோய்‌ நிபுணரிடம்‌ கொண்டு வந்தார்கள்‌. ஏன்‌ பயப்படுகிறாய்‌ என்று நிபுணர்‌ கேட்டபோது, டாக்டர்‌ நான்‌ ஒரு புழு. என்னை எல்லோரும்‌ புழு என்றுதான்‌ அழைக்கிறார்கள்‌. எனவே கோழி என்னைக்‌ கொத்தித்‌ தின்ன வருகிறது. எனவே நான்‌ பயந்து ஓடுகிறேன்‌ என்றார்‌. மனநோய்‌ டாக்டர்‌ தன்‌ திறமைகளையெல்லாம்‌ பயன்படுத்தி நீ ஒரு புழு அல்ல, நீ ஒரு மனிதன்‌, பயப்படாதே என்று சொல்லி ஆற்றுப்படுத்தி வீடு அனுப்பினார்‌. ஆனால்‌ வீடு சென்றவர்‌ மறுபடியும்‌ கோழியைக்‌ கண்டு பயந்து ஓடினார்‌. எனவே திரும்பவும்‌ மனநோய்‌ டாக்டரிடம்‌ கொண்டு வந்தார்கள்‌. அப்போது டாக்டர்‌, நீ மனிதர்தானே, பின்‌ ஏன்‌ பயந்து ஓடுகிறாய்‌ என்று' கேட்டபோது, டாக்டர்‌! நான்‌ புழு அல்ல என்பது எனக்குத்‌ தெரிகிறது. ஆனால்‌ அந்தக்‌ கோழிக்குத்‌ தெரியாது அல்லவா என்றார்‌. இதேபோலத்தான்‌ மனிதர்‌ தன்‌ ஆற்றலையும்‌ ஆக்க சக்தியையும்‌ சுய அடையாளத்தையும்‌ அறியாத நிலை. இப்படிப்பட்டவர்‌ எண்ணிக்கை இன்று சமுதாயத்தில்‌ அதிகரித்துக்‌ கொண்டே வருகிறது. இறைவன்‌ நம்மோடு இருந்து தன்‌ ஆற்றலால்‌ நம்மைப்‌ பலப்படுத்திக்‌ கொண்டே. இருக்கிறார்‌ என்ற மனநிலையை நாம்‌ கொண்டிருக்க வேண்டும்‌. கடவுள்‌ நமக்கு அடைக்கலமும்‌, ஆற்றலுமாய்‌ உள்ளார்‌. இடுக்கண்‌ உற்ற வேளைகளில்‌ நமக்கு உற்ற துணையாக உள்ளார்‌ (திபா. 46:1) என்ற திருப்பாடல்‌ இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது.

இன்றைய மனோதத்துவ அறிஞர்களின்‌ கருத்துப்படி மனிதரின்‌ உணர்வுகள்‌ இரண்டு மட்டுமே. ஒன்று அன்பு, இரண்டாவது அச்சம்‌. அன்பால்‌ அனைத்தையும்‌ வெல்கிறான்‌. அச்சத்தால்‌ அனைத்தையும்‌ இழக்கிறான்‌. அன்பு ஒருவரை மனிதராக்குகிறது. அச்சம்‌ ஒருவரைக்‌ கோழையாக்குகிறது. இறைவனின்‌ துணை நம்‌ பக்கம்‌ என்று எண்ணும்போது அச்சம்‌ மறைகிறது. ஆதிக்கிறிஸ்தவர்கள்‌ துன்புறுத்தப்பட்டார்கள்‌. ஆனால்‌ இயேசுவின்‌ விழுமியங்களும்‌, இறை சார்புத்‌ தன்மையும்‌ அவர்களை அஞ்சவிடவில்லை. இறைவனின்‌ ஆற்றலும்‌, பராமரிப்பும்‌ நிச்சயமாக நமக்கு உண்டு என்று உணர்ந்த ஆதிக்‌ கிறிஸ்தவர்கள்‌, உடலைக்‌ கொல்லுவோருக்காக அஞ்சவில்லை.

அச்சமின்றி வாழ நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌? விவிலியத்தில்‌ 365 முறை அஞ்சாதீர்கள்‌ என்ற ஆண்டவர்‌ வார்த்தை நமக்குத்‌ தரப்பட்டுள்ளது. ஆண்டவர்‌ என்‌ நல்லாயன்‌. பசும்புல்‌ தரையில்‌ சேர்ப்பார்‌. நீர்‌ நிலைகளுக்கெல்லாம்‌ அழைத்துச்‌ செல்வார்‌. காரிருள்‌ சூழ்ந்த பள்ளத்தாக்கில்‌ நான்‌ நடக்க நேர்ந்தாலும்‌ எனக்குப்‌ பயமே இல்லை (திபா. 23) என்பதை உணர்ந்தோம்‌ என்றால்‌ நாம்‌ தைரியம்‌ பெறுவோம்‌. ஏனெனில்‌ நம்‌ ஆண்டவர்‌ கண்ணுக்கு நாம்‌ விலையேறப்பட்டவர்கள்‌. மதிப்புக்குரியவர்கள்‌ (எசா. 43:4). எனவே இறைவனின்‌ மாறா அன்பில்‌ சந்தேகமின்றி நம்பிக்கை கொள்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கை என்னும்‌ தீபத்தை ஏற்றி வைப்போம்‌ !

இன்றைய நற்செய்தியில்‌ இயேசு, அஞ்சாதிருங்கள்‌ [மத்‌ 10:31) என்கின்றார்‌. அஞ்சுதல்‌ என்றால்‌ பயப்படுதல்‌. நாம்‌ சாதாரணமாக எப்‌பொழுது பயப்படுகின்றோம்‌ ? நாம்‌ தனிமைப்படுத்தப்படும்போது பயப்படுகின்றோம்‌.

“தம்பி உடையான்‌ படைக்கு அஞ்சான்‌' என்பார்கள்‌. நமக்குத்‌ துணைபுரிய யாராவது நம்‌ அருகிலிருந்தால்‌, நாம்‌ எதைக்‌ கண்டும்‌, யாரைக்‌ கண்டும்‌ அஞ்சுவதில்லை. மாறாக தனிமை நம்மை பற்றிக்‌ கொள்ளும்போது அச்சமும்‌ நம்மை பற்றிக்‌கொள்கின்றது.

ஒருமுறை வேளாங்கண்ணித்‌ திருவிழாவின்போது தொண்ணூற்றெட்டு குழந்தைகள்‌ காணாமல்‌ போய்விட்டார்கள்‌. அத்தனை குழந்தைகளும்‌ கண்டுபிடிக்கப்பட்டார்கள்‌. ஆனால்‌ தங்களுடைய தாய்‌ தந்தையரை, உற்றாரை, உறவினரை, நண்பரை, அன்பரைக்‌ காண்பதற்கு முன்னால்‌ அந்தக்‌ குழந்தைகள்‌ அழுத அழுகை இருக்கின்றதே! அந்தோ பரிதாபம்‌! எத்தனையோ கங்கைகளும்‌, காவிரிகளும்‌ அந்தக்‌ குழந்தைகள்‌ காப்பகத்திலே ஆறாய்ப்‌ பெருக்‌கடுத்து ஓடின! அவர்கள்‌ ஏன்‌ அழுதார்கள்‌? பயப்பட்டதால்‌, அஞ்சியதால்‌ அவர்கள்‌ அழுதார்கள்‌! ஐயோ நான்‌ தனியாக இருக்கின்றேனே என்ற எண்ணம்‌ அவர்களை அழவைத்தது ! தாயையோ, தந்‌தையையோ அவர்கள்‌ கண்டதும்‌ அவர்கள்‌ அழுகை நின்றது.

இன்று இயேசு நம்மைப்‌ பார்த்து, காசுக்கு இரண்டு சிட்டுக்‌ குருவிகள்‌ விற்பதில்லையா? எனினும்‌ அவற்றில்‌ ஒன்று கூட உங்கள்‌ தந்தையின்‌ விருப்பமின்றித்‌ தரையில்‌ விழாது. உங்கள்‌ தலைமுடியெல்லாம்‌ எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக்குருவிகள்‌ பலவற்றையும்‌ விட நீங்கள்‌ மேலானவர்கள்‌. எனவே அஞ்சாதீர்கள்‌ (மத்‌ 10:29-31) என்கின்றார்‌.

வறியோரின்‌ உயிரைத்‌ தீயோரின்‌ பிடியினின்று விடுவிக்கும்‌ ஆற்றல்‌ கடவுளுக்கு உண்டு (முதல்‌ வாசகம்‌]. நம்மைப்‌ படைத்த கடவுள்‌ நம்மை ஒரு போதும்‌ கைவிடமாட்டார்‌ என நாம்‌ நம்பும்போது நம்மை எப்படிப்பட்ட அச்சமும்‌ நெருங்காது. நான்‌ உன்னோடு இருப்பேன்‌ [விப 3:12௮) என்று கடவுள்‌ சசான்னதை ஏற்றுக்கொண்டபோது, மோசே மனத்திலிருந்த அச்சம்‌ நீங்கியது.

கடவுளால்‌ இயலாதது ஒன்றுமில்லை [லூக்‌ 1:37] என்பதை நம்பியபோது, அன்னை மரியா மனத்திலிருந்த பயம்‌ மறைந்தது.

கடவுள்‌ நம்‌ சார்பில்‌ இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர்‌ யார்‌? (உரோ 8:31) என்கின்றார்‌ பவுலடிகளார்‌.

நாம்‌ படும்‌ துன்பங்களையும்‌, துயரங்களையும்‌, நாம்‌ எதிர்கொள்ளும்‌ எதிரிகளையும்‌, ஆபத்துக்களையும்‌ பார்த்துக்கொண்டு நம்‌ கடவுள்‌ ஒருபோதும்‌ கைகட்டி நிற்கவும்‌ மாட்டார்‌, கைகொட்டி சிரிக்கவும்‌ மாட்டார்‌. நம்மீது கொண்ட அன்பினால்‌ தம்‌ ஒரே மகனை இந்த உலகிற்குக்‌ கடவுள்‌ அனுப்பிவைத்தார்‌ [யோவா 3:16) என்று யோவான்‌ கூறுகின்றார்‌. அந்தத்‌ திருமகனாகிய புதிய ஆதாமோ, நாமிழந்த வாழ்வை இறைவனிடமிருந்து நமக்குப்‌ பெற்றுத்‌ தந்தார்‌ என்கின்றார்‌ புனித பவுலடிகளார்‌ [இரண்டாம்‌ வாசகம்‌].

இன்று நமது இதயக்‌ கோயிலில்‌ கடவுள்‌ நம்பிக்கை என்னும்‌ தீபத்தை ஏற்றிவைப்போம்‌! ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு சந்தேகம்‌ என்னும்‌ காற்றால்‌ அணையாது காத்து நிற்போம்‌!

மேலும்‌ அறிவோம்‌ :

தனக்குவமை கல்லாதான்‌ தாள்‌சசர்ந்தார்க்‌(கு) அல்லால்‌ மனக்கவலை மாற்றல்‌ அரிது (குறள்‌ : 2).

பொருள்‌ : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன்‌ திருவடி சேர்வோர்‌ உள்ளத்தில்‌ துன்ப துயரங்கள்‌ நீங்கிவிடூம்‌. ஏனையோர்‌ மனக்கவலை மாறாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு கணவர்‌ தினமும்‌ குடித்துவிட்டு தன்‌ மனைவி மக்களை அடித்துத்‌ துன்புறுத்தி வந்தார்‌. இதைக்‌ கேள்விப்பட்ட பங்குத்தந்தை ஓர்‌ இரவு பேய்‌ வேடம்‌ போட்டுக்‌ கொண்டு குடிகாரர்‌ வீட்டுக்குச்‌ சென்று அவரைப்‌ பயமுறுத்தினார்‌. ஆனால்‌ அக்குடீகாரர்‌ சிரித்துக்‌ கொண்டே, “நீ பேய்தானே! நீ பங்குசாமியாரோ என்று பயந்துவிட்டேன்‌” என்றார்‌.

சிலர்‌ எதற்கெடுத்தாலும்‌ பயப்படுவர்‌; “அஞ்சி அஞ்சிச்‌ சாவார்‌, இவர்‌ அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்ற பாடலுக்கு உரியவர்கள்‌. சிலர்‌ எதற்குமே பயப்பட மாட்டார்கள்‌. “அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்‌ அச்சமில்லை” என்ற பாடலுக்குச்‌ சொந்தக்காரகள்‌. அஞ்சவேண்டிய காரியங்களுக்கு அஞ்சுபவர்கள்தான்‌ அறிவாளிகள்‌; மற்றவர்கள்‌ மடையர்கள்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல்‌ அறிவார்‌ தொழில்‌ (குறள்‌ 428)

இன்றைய நற்செய்தியில்‌ நாம்‌ யாருக்கு அஞ்சக்கூடாது; யாருக்கு அஞ்ச வேண்டும்‌ என்பதைத்‌ தெளிவுபடுத்துகிறார்‌ கிறிஸ்து. நாம்‌ மனிதர்களுக்கு அஞ்சக்கூடாது; ஏனேனில்‌ அவர்கள்‌ நமது உடலுக்கு மட்டுமே கேடு விளைவிக்க முடியும்‌; ஆனால்‌ ஆன்மாவை அழிக்க முடியாது. நாம்‌ கடவுளுக்கு அஞ்ச வேண்டும்‌. ஏனெனில்‌ அவர்‌ நமது உடலையும்‌ ஆன்மாவையும்‌ நரகத்தில்‌ அழிக்க முடியும்‌ (மத்‌ 10:28).

நாம்‌ மனிதருக்குப்‌ பயப்படக்கூடாது என்பதற்குக்‌ கிறிஸ்துவே நமக்கு வழிகாட்டியாகத்‌ திகழ்கிறார்‌. தம்மைக்‌ கொல்ல ஏரோது மன்னன்‌ திட்டமிட்டிருக்கிறான்‌ என்று தம்மிடம்‌ கூறியவர்களைப்‌ பார்த்து கிறிஸ்து, “இன்றும்‌ நாளையும்‌ பேய்களை ஓட்டுவேன்‌; பிணிகளைப்‌ போக்குவேன்‌; மூன்றாம்‌ நாளில்‌ என்‌ பணி நிறைவேறும்‌ என நீங்கள்‌ போய்‌ அந்த நரியிடம்‌ கூறுங்கள்‌” (லூக்‌ 13:32) என்று துணிவுடன்‌ கூறினார்‌. மன்னன்‌ ஏரோதை நரி என்று அழைக்க அவர்‌ தயங்கவில்லை; பயப்படவில்லை. ஆப்பிளை நறு (ரி)க்குப்‌ போட்டால்‌ என்ன செய்யும்‌? நரி அதைத்‌ தின்றுவிடும்‌! இது கடிஜோக்‌, ஆனால்‌ ஏரோது என்ற நரி பலருடைய உயிரைக்‌ குடித்தது என்பது உண்மை. கிறிஸ்துவைப்‌ பின்பற்றி அவருடைய சீடர்களும்‌ மனிதர்களுக்குப்‌ பயப்படவில்லை. கிறிஸ்துவைப்‌ பற்றிப்‌ பேசக்கூடாது என்று தலைமைக்‌ குருக்கள்‌ திருத்தூதர்களை அச்சுறுத்தியபோது அவர்கள்‌ கூறினார்கள்‌: “மனிதர்களுக்குக்‌ கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்‌” (திப 5:29). தலைமைக்‌ குருக்கள்‌ அவர்களை நையப்புடைத்தனர்‌. ஆனால்‌ அவர்களோ அதைப்பற்றி மகிழ்ச்சி அடைந்தனர்‌. கிறிஸ்துவைப்பற்றி அவர்கள்‌ தொடர்ந்து அஞ்சாமல்‌ போதித்தனர்‌ (திப 5:40-42).

16-ஆம்‌ நூற்றாண்டில்‌ இங்கிலாந்தை ஆண்ட மன்னர்‌ எட்டாம்‌ ஹென்றி போட்டித்‌ திருச்சபையை ஏற்படுத்தினார்‌. அவாது முதலமைச்சர்‌ தாமஸ்மூர்‌ அரசரை ஆதரிக்காமல்‌ எதிர்த்துப்‌ பேசினார்‌. மன்னர்‌ அவருக்கு மரண தண்டனை விதித்துச சிறையில்‌ அடைத்தார்‌. தாமஸ்மூரின்‌ மனைவி லூயிசா என்பவர்‌ தாமஸ்ஹர்‌ அரசரை ஆதரிக்க வேண்டுமென்று அவரிடம்‌ எவ்வளவோ கெஞ்சினாள்‌. ஆனால்‌ தாமஸ்மூர்‌ அவரிடம்‌. “அடி பைத்தியகாரி! உன்னுடன்‌ கொஞ்சநாள்‌ இன்பமாய்‌ வாழ்வதற்காக, முடிவில்லா நெருப்பில்‌ நான்‌ வேகவேண்டுமா?” என்று சொல்லி தனது முடிவை மாற்றாமல்‌ வேதசாட்சியாக உயிரைக்‌ கொடுத்தார்‌. இன்று அவர்‌ புனிதர்‌. பொதுநிலையினரின்‌ பாதுகாவலர்‌, மனிதருக்கு அல்ல, கடவுளுக்கே அஞ்ச வேண்டும்‌ என்பதற்குத்‌ தாமஸ்மூர்‌ இலக்கணமாகத்‌ திகழ்கிறார்‌.

நாம்‌ கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்‌; அவருக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்‌. “ஆண்டவரிடம்‌ கொள்ளும்‌ அச்சமே ஞானத்தின்‌ தொடக்கம்‌” (நீமொ 1:17). தூய ஆவியாரின்‌ கொடைகளில்‌ ஒன்று கடவுளைப்‌ பற்றிய அச்ச உணர்வ. கிறிஸ்துவின்மீது ஆண்டவரைப்‌ பற்றிய அச்ச உணர்வ; தரும்‌ ஆவி தங்கியது. அவரும்‌ ஆண்டவருக்கு அஞ்சி ஈடப்பதில்‌ மகிழந்திரூந்தார்‌ (எசா 11:2-87). கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்குத்‌ தலைமுறை தலைமுறையாய்‌ அவர்‌ இரக்கம்‌ காட்டி வருகிறார்‌ (லூக்‌ 1:50). “ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம்‌ தூதர்‌ சூழ்ந்து நின்று காத்திடுவர்‌” (திபா 34:7).

கடவுள்‌ பயம்‌ என்பது அடிமைக்குரிய பயமில்லை. மாறாக, பிள்ளைக்குரிய பயம்‌. நமது அன்புத்‌ தந்தையாகிய கடவுளை மனம்‌ நோகச்‌ செய்துவிடுவோமோ என்ற பயம்‌. இன்றைய அதி நவீன உலகில்‌ கடவுள்‌ பயமும்‌ பாவ உணர்வும்‌ குறைந்துகொண்டே. வருகிறது. எனவே மனிதர்‌ பாவத்தைப்‌ பயமின்றிச்‌ செய்கின்றனர்‌.

ஓருவர்‌ திருமணமான ஒரு பெண்ணைக்‌ கற்பழிக்க முயன்றபோது அப்பெண்‌, “கடவுளே! என்னைக்‌ காப்பாற்று!” என்று கதறினார்‌. அப்போது அந்த மனித மிருகம்‌, “இந்தச்‌ சின்ன விசயத்துக்குப்போய்‌ அவ்வளவு பெரிய ஆளை ஏன்‌ கூப்பிடு கிறாய்‌?” என்று கேட்டது. விபசாரம்‌ என்பது சின்ன விசயமா?

பள்ளி மாணவன்‌ ஒருவன்‌ அடிக்கடி அவனுடைய அம்மா இறந்துவிட்டதாகக்‌ கூறி விடுமுறை எடுத்தான்‌. வகுப்பு ஆசிரியர்‌ அவனிடம்‌, “உனக்கு எத்தனை அம்மாடா?” என்று கேட்டதற்கு அவன்‌, “சார்‌! என்னுடைய அப்பாவைப்பற்றி உங்களுக்குத்‌ தெரியாது” என்றான்‌.

மனிதர்களிடையே நிகழும்‌ அறநெறி ஒழுக்கச்‌ சிதைவால்‌ பாலியல்‌ நோய்கள்‌ கொள்ளை நோயாகப்‌ பரவிக்கொண்டு வருகின்றன. பாவத்தின்‌ சம்பளம்‌ மரணம்‌ என்றால்‌, பாவத்தின்‌ “போனஸ்‌” என்ன? அதுதான்‌ “எய்ட்ஸ்‌' என்னும்‌ உயிர்கொல்லி நோய்‌. ஆதாம்‌ வழியாகப்‌ பாவமும்‌ பாவத்தின்‌ கூலியான சாவும்‌ மனிதரைக்‌ கவ்விப்‌ கொண்டது என்கிறார்‌ புனித பவுல்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ (உரோ 5:2).

கடவுளுக்குப்‌ பயந்து வாழ்வோருக்குப்‌ பல துன்பங்கள்‌ வரும்‌. கடவுளுக்கு அஞ்சி நடந்த இறைவாக்கினர்‌ எரேமியா எவ்வாறு பல இன்னல்களுக்கு இலக்கானார்‌ என்பதை முதல்‌ வாசகத்தில்‌ எரேமியாவே எடுத்துரைக்கிறார்‌. ஆனாலும்‌ அவர்‌ பயப்படவில்லை. மாறாக “என்னைத்‌ துன்புறுத்துவோர்‌ இடறி விழுவர்‌. அவர்கள்‌ வெற்றி கொள்ள மாட்டார்கள்‌” (எரே 20:11) என்று நம்பிக்கை கொள்கிறார்‌. இறைவாக்கினர்‌ எரேமியா “துன்புறும்‌ ஊழியராகிய கிறிஸ்துவுக்கு முன்‌ அடையாளம்‌.” கிறிஸ்து எண்ணற்றத்‌ துன்பங்களுக்கு உள்ளானார்‌. ஆனால்‌ கடவுள்‌ அவரை எல்லாவிதத்‌ துன்பங்களிலிருந்தும்‌ விடுவித்து மகிமைப்படுத்தினார்‌.

நாம்‌ கடவுளுக்கு அஞ்சி வாழும்போது துன்புறுவோம்‌. அத்தகைய சூழலில்‌ கிறிஸ்து நமக்கு வழங்கும்‌ ஆறுதல்‌ அளிக்கும்‌ செய்தி: “உலகில்‌ உங்களுக்குத்‌ துன்பம்‌ உண்டு. எனினும்‌ துணிவுடன்‌ இருங்கள்‌. நான்‌ உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்‌”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அஞ்சாமை கிறிஸ்தவ உடைமை

ஓர் ஆலயத்தில் புகழ்பெற்ற நற்செய்தியாளர் ஒருவர் போதிக்க எழுந்தார். அவையின் முன்வரிசையில் அந்த நாட்டு அரசன் இருப்பதைக் கண்டதும் சிறிது அதிர்ந்தார். காரணம், அந்த அரசன் அவ்வளவு நல்லவன் அல்ல. மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுபவன். நற்செய்தி அறிவிப்பில் அவனது தீமைகளைச் சுட்டிக்காட்டாமல் எப்படிப் பேச முடியும்? அதன் விளைவு என்னவாயிருக்கும்? உரையாற்றத் தொடங்குமுன் ஒருகணம் தனக்குள்ளே உரக்கச் சொல்லிக் கொண்டார்: “என் நெஞ்சே, நீ என்ன பேசப்போகிறாய் என்பது குறித்து எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் இந்த நாட்டின் அரசன் இங்கே இருக்கிறான்”. மறுகணம் மாற்றிச் சொன்னார்: “என் நெஞ்சே, நீ என்ன பேசத் தயங்குகிறாய், தவறுகிறாய் என்பது குறித்துக் கவனமாயிரு. ஏனெனில் அரசருக்கெல்லாம் அரசர் இறைவன் இங்கே உன்முன் இருக்கிறார்”.

தீமையைக் கண்டு சீறி எழ இயேசு என்றும் அஞ்சியதில்லை. இயேசுவைப் பின்பற்றும் சீடர்களுக்கு இயேசுதானே அளவுகோல். இயேசுவின் சீடன், தீமை தன்னை அச்சுறுத்தவிடலாமா? புகழ் பெற்ற ஜான் நாக்ஸ் என்பவரது கல்லறையில் இன்றும் காணப்படும் வாசகம் இது : “கடவுளுக்கு மட்டுமே பயந்த இந்த மனிதர், மனிதருக்கு ஒருபோதும் பயப்படாதவராக இருந்தார்".

கிறிஸ்தவச் சாட்சிய வாழ்வில் நமக்கு வலிகளும் வேதனைகளும் வருவது இயல்பு. ஆனால் இயேசுவின் பேரன்பு கலந்த வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்காக நாம் வாழ்ந்து வரும் போது, வேதனை வலிகள் எல்லாம் நமக்கு அதிசய இறையாசீராக அமையும். நாம் இறைமகனோடு ஒன்றித்து அவரில் வாழ்ந்து வரும்போது வேறு எந்த மனித ஆதிக்கச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் நம்மைக் கண்ணின் கருவிழியெனக் காப்பவர் நம் அருகில் உள்ளார்.

விடுதலை உணர்வைத் தூண்டவே பாரதி “உச்சி மீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று முழங்கினார். சிலர் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவார்கள். வேறு சிலர் எதற்கும் பயப்படாமல் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று முரட்டுத்தனமாக இருப்பார்கள். இயேசு அறிவித்த விடுதலைப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் யாருக்கு அஞ்சவேண்டும், யாருக்கு அஞ்சக்கூடாது என்பது பற்றி நற்செய்தி அழுத்தமாகத் தெளிவுறுத்துகிறது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத். 10:28)

சிலருக்கு எதற்கும் அச்சம். காரணம், தங்கள் போலி வாழ்க்கையின் முகமூடி கிழியுமோ, சாயம் வெளுக்குமோ என்ற பயம். இயேசு எதற்கும் எவருக்கும் அஞ்சாதவர். தன்னைக் கன்னத்தில் அறைந்த காவலரிடம் "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? " (யோ. 18:23) என்று கேட்டவரல்லவா இயேசு! வாய்மையின் வாழ்வு அவருடையது. உண்மையை உரைத்துத் துணிவுடன் இருந்தால், இறையச்சத்தோடு செயல்பட்டால் இறைப்பராமரிப்பில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் உலகத்தில் நாம் எவருக்கும் அஞ்ச வேண்டாம்.

ஜெர்மனி நாட்டுப் பேரரசன் பெரிய பிரடரிக்கு (கி.பி. 1712- 1781) தனது நாட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்றார். அவர் வகுப்பறையில் நுழைந்தபோது ஆசிரியை புவியியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அரசர் ஒரு சிறுமியை அழைத்து அவளது இருப்பிடம் எங்குள்ளது? என்று கேட்டதும் “புரூஷியா” என்றாள் சிறுமி. ''புரூஷியா எங்குள்ளது?" "ஜெர்மனியில் உள்ளது”. “ஜெர்மனி எங்குள்ளது?” “ஐரோப்பாவில் உள்ளது”. “ஐரோப்பா எங்கு உள்ளது?” "இந்த உலகத்தில் உள்ளது.” -” “உலகம் எங்குள்ளது?” உடனே அந்தச் சிறுமி சிறிது நேர யோசனைக்குப் பின், “உலகமானது இறைவனின் திருக்கைகளில் உள்ளது” என்றாளாம்.

கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த மனிதரையும் எந்தத் தீச்செயலோ துன்பமோ தீண்டாது. கடவுள் மீது அசையாத நம்பிக்கை கொள்ளும்போது எதையும் சாதிக்க முடியும். எத்துன்பத்தையும் தாண்டித் துணிவோடு செல்ல முடியும். உன் உடலைக் கொன்று ஆன்மாவைக் கொல்ல முடியாதவனுக்காய் அஞ்சாதே என்கிறார் இயேசு.

பழைய ஏற்பாட்டில் தானியேல் நூலில் வரும் நிகழ்ச்சி ஒன்று. அரசன் நெபுகத்துநேசர் செய்து நிறுத்தி வைத்த 60 முழ உயரமும் 6 முழ அகலமும் கொண்ட பொற்சிலையை அனைவரும் பணிந்து தொழ வேண்டும். தாழ வீழ்ந்து பணிந்து தொழ மறுக்கும் எவரும் அந்நேரமே தீச்சூளையில் தூக்கி வீசப்படுவார் என்று முரசறைந்தான். அதைக் கேட்ட மூன்று எபிரேய இளைஞர்கள் அரசன் செய்த பொற்சிலையை வழிபட மறுத்தனர். சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ என்ற அந்த மூன்று பேரும் பதில் மொழியாக “இதைக்குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும் நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும் அரசரே, நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபட மாட்டோம். நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” என்றார்கள். (தானி. 3:17-18). அதைக் கேட்ட அரசன் வெகுண்டெழ வழக்கத்தைவிட 7 மடங்கு மிகுதியாக தீச்சூளையைச் சூடாக்கி மூன்று பேரையும் தூக்கிப் போட்டார்கள். என்ன நடந்தது? அரசனுடைய மிரட்டலுக்குப் பயப்படாமல், கடவுளுக்கு மட்டுமே பயந்து, உண்மைக் கடவுளுக்குச் சாட்சியாக உயிரைக் கொடுக்க முன்வந்த மூன்று பேரையும் காப்பாற்றியது மட்டுமல்ல, "மூன்று பேரைத் தானே கட்டி நெருப்பில் எறிந்தோம் ... நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுவதை நான் காண்கிறேன். அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வமகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" (தானி. 3:24-25) என்று மன்னன் நெபுகத்து நேசரே வியக்கும் அளவுக்குக் கடவுளே அத்துன்பத்தில் அவர்களோடு இருந்தார்.

அனைத்துத் துன்பங்களுக்கிடையிலும் அஞ்சா நெஞ்சராய் "ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்" (எரேமி. 20:11) என்றார் எரேமியா. அச்சம் என்பது நம்பிக்கையின் எதிரி. இறை நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு.

இம்மண்ணில் இறையாட்சி மலர்வது இறைமகன் இயேசுவின் அஞ்சாமையில் இருந்தது. அத்தகைய இயேசுவின் துணிச்சல் நமக்கு உரமூட்ட வேண்டும். எல்லாப் படைப்புக்களிலும் மேலான நம்மைக் கடவுள் காப்பார் என உறுதியூட்டுகிறார். “சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதீர்கள்." (மத். 10:31).

அச்சம் என்பது மடமை. அஞ்சாமை கிறிஸ்தவ உடைமை. கிறிஸ்துவின் அஞ்சாத இரத்தம் அல்லவா கிறிஸ்தவனில் ஓடுகிறது. "கிறிஸ்துவின் அன்பிலிருந்து சாவு எங்களைப் பிரிக்க முடியாது" என்று சான்று சொல்லி எத்தனை கிறிஸ்தவர்கள் சாவை முத்தமிட்டிருக்கிறார்கள்! இதுதான் கிறிஸ்தவத் திருமறையின் நெடிய வரலாறு சொல்லும் செய்தி!

அச்சம் கதவைத் தட்டியது. நம்பிக்கை கதவைத் திறந்தது. அங்கே எவருமே இல்லை!

குருவைப் போல வளர வேண்டும் என்பதே சீடர்களின் இலக்கு. குருதான் சீடர்களின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமையும் அளவுகோல். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் அவர்தம் சீடர்களுக்கும் இயேசுதான் அளவுகோல். இயேசுவைப்போல் அவருடைய சீடர்களும் இயேசுவின் வழித்தடத்தில் இறையாட்சித் துன்பங்களை ஏற்க வேண்டும். எத்தகைய இடற்பாடுகள் வந்தாலும் பின்வாங்காது தங்கள் நம்பிக்கையை அச்சமின்றி அறிவிக்க வேண்டும். இயேசு அறிவித்த செய்தியை மட்டுமல்ல, இயேசுவையே தங்கள் வாழ்விலும் வார்த்தையிலும் சற்றும் சளைக்காது அறிவிப்பதே சீடர்களின் ஆற்றலாக மாறும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கையுடன் பயங்களை எதிர்கொள்ள

"கவிதை பயம் எனக்கு, கவி பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, அழுக்கு பயம், குளிக்க பயம்... எல்லாமே பயமயம்" என்று, தமிழ் திரைப்படம் ஒன்றில், மனநலமருத்துவரிடம் தன் பிரச்சனையைக் கூறுவார், அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களை மட்டுமே சந்திக்கும் மனிதர் அவர். அந்தக் கதை நாயகனை வதைத்த ‘எல்லாமே பயமயம்’ என்ற பிரச்சனை, கடந்த சில மாதங்களாக நம்மையும் சுற்றிவரும் பிரச்சனைதானே? கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியைக் குறித்து நாம் இதுவரை கேட்ட அனைத்தும் நமக்குள் பயத்தை உருவாக்கியுள்ளன. கண்டுபிடிப்புகள் என்ற பெயரில், அரசுகளும், பல்வேறு உலக நிறுவனங்களும், வெளியிட்டு வரும் வெவ்வேறு கருத்துக்கள், நம் நிம்மதியைக் குலைத்துவருகின்றன. கூடுதலாக, நம் சமூக வலைத்தளங்கள் வழியே உலவும் வதந்திகள், நம் பயங்களை வளர்த்துவருகின்றன.

2020ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து, உலக மக்களின் எண்ணங்களை அதிகம் ஆட்கொண்ட ஓர் உணர்வு, பயம். கொரோனா, கோவிட் 19, கொள்ளைநோய் என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்துள்ள நாம், இன்றும், அந்தக் கொடூரத்திலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்துவருகிறோம்.

இத்தருணத்தில், இந்த ஞாயிறு வழிபாட்டில், நமக்கு வழங்கப்பட்டுள்ள இறைவாக்கு, நம் அச்சங்களை நீக்குவதற்குப் பதில், அவற்றை கூட்டுவது போன்று ஒலிக்கிறது. "'சுற்றிலும் ஒரே திகில்' என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்" (எரேமியா 20:10) என்று இறைவாக்கினர் எரேமியா, இன்றைய முதல் வாசகத்தைத் துவக்குகிறார். "உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்" (மத்தேயு 10:26) என்று, இன்றைய நற்செய்தியில், இயேசு, அறிவுரை வழங்குகிறார். திகில், கொலை, அச்சம் என்று கூறும் இந்த வாசங்களைக் கேட்கும்போது, இவையே நம் வாழ்வின் அங்கங்களாகிவிட்டனவோ என்ற கலக்கம் உண்டாகிறது.

கண்ணுக்குத்தெரியாத ஒரு கிருமியால் உருவான கொள்ளைநோய் கொலைகள் போதாதென்று, பலரது கண்ணுக்கு முன், பட்டப்பகலில், நடுத்தெருவில், ஒரு மனிதரின் கழுத்தில் மற்றொரு மனிதர் தன் முழந்தாளைக்கொண்டு அழுத்தி, அவரைக் கொலைசெய்தது, இன்னும் நம் மனத்திரைகளைவிட்டு அகல மறுக்கிறது.

சட்டம், ஒழுங்கு இவற்றின் சார்பாக செயலாற்றவேண்டிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இந்தக் கொலையை, எவ்வித தயக்கமுமின்றி, பலரது கண்முன்னே செய்தது, பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அப்போராட்டங்களில் வன்முறை வெடித்தது. உயிர் பலிகள், சூறையாடுதல், தீவைத்தல் என்ற தீமைகள் தொடர்ந்தன.

ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள் கொலையுண்டதைக் குறித்து, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கொடுமைக்கு எதிராக, வன்முறை வழிகளைப் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், வன்முறை, நம்மை நாமே அழிப்பதற்கு மட்டும் வழிவகுக்கும் என்றும் கூறினார்.

வன்முறைகள் வெடிக்கும்போது, அவற்றை, தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள், அரசுதரப்பிலும், எதிர் தரப்பிலும் உள்ளன. வன்முறையை தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், இந்த கொள்ளைநோய் காலத்திலும், தங்கள் தாக்குதல்களை ஆங்காங்கே மேற்கொண்டனர் என்பதை செய்திகள் கூறுகின்றன.

வன்முறைகளை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் அரசு அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ நேரடியாகத் தாக்குவதற்குப் பதில், அப்பாவிப் பொதுமக்களைத் தாக்குவது, கடந்த 50 ஆண்டுகளாகப் பெருகியுள்ளது. மக்கள் கூடும் கடைவீதிகள், பயணிக்கும் பேருந்துகள், இரயில் பேட்டிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என்று... அனைத்து தலங்களிலும், வெறித்தனமான வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, பல நேரங்களில், வழிபாட்டுத் தலங்களும் இலக்காகியுள்ளன. அவை, கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நிகழ்ந்ததாகவும் ஒரு சில குழுக்கள் அறிக்கை விடுத்துள்ளன. மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழம்போது, நம் உள்ளங்களில், வேதனையான கேள்விகள் எழுகின்றன. சென்ற ஆண்டு, உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில், ஆலயங்களில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள், ஓராண்டு சென்றபின்னரும், கூடுதலான கேள்விகளை எழுப்பி வருகின்றனவே தவிர, விடைகளை வழங்கவில்லை.

மதநம்பிக்கை காரணமாக, நாம் வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, என்ன செய்யவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தருகிறார். நாம் இன்று வாசிக்கும் நற்செய்தி பகுதி, மத்தேயு நற்செய்தி 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் துவக்கத்தில், இயேசு, தன் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத். 10:1-4), அவர்களை, பணியாற்ற அனுப்புகிறார். அவ்வேளையில், இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பணியாற்றச் செல்லும் சீடர்கள், எவ்வகை உலகைச் சந்திக்கவுள்ளனர் என்பதை, இயேசு, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுகின்றார். "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்" (மத். 10:16) என்ற கலப்படமற்ற உண்மையைக் கூறும் இயேசு, தன் சீடர்களைச் சூழும் ஓநாய்களில் சில, அவர்களது சொந்தக் குடும்பத்தினராகவே இருப்பர் (காண்க. மத். 10:21-22) என்றும் எச்சரிக்கிறார். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும், துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத். 10:23) என்பதையும் வெளிப்படையாகக் கூறும் இயேசு, அவற்றைக் கண்டு தன் சீடர்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கிறார். இதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக அமைகின்றன.

திருத்தூதர்களாக இயேசு தேர்ந்தெடுத்தவர்கள் யாரும் வீரப்பரம்பரையில் பிறந்தவர்கள் அல்ல; போர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எனவே, அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பொன், வெள்ளி, செப்புக் காசுகளை எடுத்துச் செல்லவேண்டாம்; மிதியடிகளோ, கைத்தடியோ வேண்டாம் (மத். 10: 9-10) என்பதை, இயேசு, தன் சீடர்களுக்கு முதல் அறிவுரையாக வழங்கியுள்ளார்.

சீடர்கள் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கு எதிராக, இயேசு அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு கேடயம், இறைவன் மீது அவர்கள் கொள்ளவேண்டிய நம்பிக்கை ஒன்றே.

'காசுக்கு இரண்டு' என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், அவர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, தன் சீடர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார் (மத். 10:29). புகழ்மிக்க இச்சொற்கள், தியானம் செய்வதற்கு உகந்த சொற்களாகத் தெரிகின்றன. ஆனால், நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கு இயலாத சவாலாக ஒலிக்கிறது.

நம்ப முடியாததாகத் தோன்றும் இந்தச் சவால், 20 நூற்றாண்டுகளாக, கோடான கோடி உன்னத உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (மத். 10:28) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய சொற்கள், கோடான கோடி கிறிஸ்தவர்களை, மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளது.

2017ம் ஆண்டு, மே 26ம் தேதி, எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தலமான புனித சாமுவேல் மடத்திற்கு திருப்பயணிகள் பேருந்தில் சென்றனர். அவர்களை வழிமறித்து நிறுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு ஒவ்வொருவரிடமும் கூறினர். அவர்கள் மறுக்கவே, அவர்கள் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டுக் கொன்றனர். 28 கிறிஸ்தவர்கள் அன்று கொல்லப்பட்டனர்.

2015ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த 21 இளையோரை, இஸ்லாமிய அரசு எனப்படும் ISIS தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், லிபியா கடற்கரையில், கழுத்தை அறுத்துக் கொன்றனர். அவ்விளையோர் அனைவரும், இயேசுவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்தனர்.

2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறையில், 45 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். 1996ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி, அல்ஜீரியா நாட்டில், சிஸ்டெர்சியன் (அல்லது, 'Trappist') துறவு சபையைச் சேர்ந்த ஏழுபேரை, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மே 31ம் தேதி, அத்துறவிகளின் துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

1945ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, போஸ்னியா-ஹேர்செகொவினா நாட்டின், ஷிரோக்கி ப்ரியேக் (Široki Brijeg) என்ற ஊரில், பிரான்சிஸ்கன் துறவு மடத்தில், கம்யூனிச படையினர் நுழைந்தனர். "கடவுள் இறந்துவிட்டார்..." என்று கத்தியபடி, அவர்கள், அத்துறவிகள் அணிந்திருந்த சிலுவைகளைப் பறித்து, கீழே எறிந்தனர். துறவிகளோ, சிலுவைகளை மீண்டும் எடுத்து, அவற்றை, தங்கள் மார்போடு இறுகப் பற்றிக்கொண்டனர். அந்த 30 துறவிகளும், மடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நாம் இப்போது நினைவுகூர்ந்த இந்த மறைசாட்சிய மரணங்கள் அனைத்தும், 20, மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர் என்பது, வரலாற்று உண்மை. 20ம் நூற்றாண்டில் தங்கள் மத நம்பிக்கைக்காக உயிரிழந்தவர்களில், கிறிஸ்தவர்களே மிக அதிகம் என்ற விவரம், உலகறிந்த செய்தி. இத்தனை நூற்றாண்டுகளாய், வன்முறைகளையும் மரணத்தையும், மன உறுதியுடன் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொண்டு வரும், நம் சகோதரர்கள், மற்றும், சகோதரிகள் காட்டிய துணிவுக்குமுன், தலை வணங்கி, நன்றி கூறுகிறோம்.

இந்தப் படுகொலைகள் அனைத்திலும் ஓர் உண்மை தெளிவாக ஒளிர்கின்றது. அதுதான், இறந்தவர் அனைவரும் காட்டிய உறுதி. தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து எந்த அச்சமும் இன்றி, தங்கள் உயிரைக் கையளித்ததால், தங்கள் ஆன்மாவை அவர்கள் முடிவில்லா வாழ்வில் இணைத்துக்கொண்டனர் என்பதை நாம் நம்புகிறோம்.

இவர்களில் பலரை அருளாளர்களாக, புனிதர்களாக அறிவிக்கும் வழிமுறைகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. துணிவுடன் மரணத்தைச் சந்தித்த இவர்கள், தங்கள் ஆன்மாவை மட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தோரின் ஆன்மாக்களையும் காப்பாற்றியுள்ளனர் என்பதை, பின்வரும் நிகழ்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது.

கடவுள் இறந்துவிட்டார் என்று கத்தியபடியே, ஷிரோக்கி ப்ரியேக் பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் நுழைந்த கம்யூனிசப் படையினரில் ஓருவர், மனம் மாறி, மீண்டும் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். தன் மனமாற்றத்திற்கு, அத்துறவிகளின் உன்னத மரணமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்: "நான் சிறு குழந்தையாக இருந்தபோது, கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை என் அம்மா, என் உள்ளத்தில் ஆழமாகப் பதித்தார். அம்மா சொல்லித்தந்த பாடத்தை அழித்து, ஸ்டாலின், லெனின், டிட்டோ ஆகியத் தலைவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லித்தந்தனர். ஆனால், அன்று, அத்துறவிகள் இறக்கும்போது, அவர்கள் முகங்களில் தெரிந்த அமைதி, அவர்களைக் கொல்லும் எங்களுக்காக அவர்கள் எழுப்பிய செபம், இவற்றைக் கண்டேன். அப்போது, அம்மா எனக்குச் சொல்லித்தந்த உண்மை, மீண்டும் என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது. ஆம். கடவுள் வாழ்கிறார்" என்று அவர் சாட்சியம் கூறியுள்ளார்.

அத்துறவிகளைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான இவர், மீண்டும் கத்தோலிக்க மறையைத் தழுவினார். அவரது மகன் ஓர் அருள்பணியாளராகவும், மகள் ஓர் அருள் சகோதரியாகவும் இன்று பணியாற்றி வருகின்றனர். தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து பயம் ஏதுமின்றி, தங்கள் உயிரைக் கையளித்த பிரான்சிஸ்கன் துறவிகள், தங்கள் ஆன்மாவைப் புனிதமாகக் காத்துக்கொண்டனர். அதுமட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தவர்களில் ஒருவரின் ஆன்மாவையும் அவர்களது மரணம் காப்பாற்றியது.

கிறிஸ்துவின் சாட்சிகளாக இறக்கும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. ஆனால், கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழும் அழைப்பு, நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மில் பலர் வாழும் கிறிஸ்தவ வாழ்வு, 'இறைவன் இறந்துவிட்டார்' என்பதை, சொல்லாமல் சொல்லும் வாழ்வாக மாறி வருகிறது.

உலகத்தோடு சேர்ந்து, கூட்டத்தோடு சேர்ந்து, நம் தனிப்பட்டக் கொள்கைகளை துறந்து வாழ்வதை, இன்று 'பேஷன்' என்று சொல்லிக்கொள்கிறோம். நன்னெறி, நற்செய்தி இவற்றின் விழுமியங்களைப் பின்பற்றினால், 'பழமைவாதி' என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று பயந்து, கூட்டத்தோடு சேர்ந்துவிடுகிறோம். கிறிஸ்துவையும், நற்செய்தி கூறும் விழுமியங்களையும் பின்பற்றவோ, தேவைப்பட்டால், அனைவரும் அறியும்படி உயர்த்திப்பிடிக்கவோ நாம் அழைக்கப்படும்போது, முன்வருகிறோமா, அல்லது, பின்வாங்குகிறோமா என்பதை, இன்று ஆய்வுசெய்து பார்க்கலாம்.

இன்றைய நற்செய்தியின் இறுதியில், இயேசு, இதைப்பற்றிய ஓர் எச்சரிக்கையை இவ்வாறு வழங்கியுள்ளார்:
மத்தேயு 10 32-33
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கும், தேவைப்பட்டால், கிறிஸ்துவின் சாட்சிகளாக, நம் உயிரை வழங்குவதற்கும், இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் துணிவை வழங்குவாராக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அஞ்ச வேண்டாம்; ஆண்டவர் நம்மோடு

அஞ்சாமை வெற்றிக்கு வழிவகுக்கும்

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத் தளபதியாக இருந்தவர் ஜார்ஜ் பட்டன் (George Patton). இவர் நாட்டிற்காகப் பல வெற்றிகளைத் தேடித் தந்தவர்.

ஒரு சமயம் செய்தியாளர் ஒருவர் இவரிடம், “எப்போதாவது உங்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கின்றதா?” என்று கேட்டார். “சில சமயம் எதிரி நாட்டோடு போர்தொடுப்பதற்கு முன்பாகவும், வேறு சமயம் எதிரி நாட்டோடு போரில் ஈடுபட்டிருக்கும்போதும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது; ஆனால், அந்த அச்சம் என்னை வெற்றி கொள்ள விடமாட்டேன்” என்று பொறுமையாக விளக்கமளித்தார் ஜார்ஜ் பட்டன்.

தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது, “எப்போது நம்மை அச்சம் வெற்றிகொள்ள விடுகின்றோமோ, அப்போது நாம் தோற்றுப் போகிறோம். மாறாக, எப்போது நாம் அச்சத்தை வெற்றி கொள்கின்றோமோ, அப்போது நாம் வெற்றி பெற்றவர்களாய் இருப்போம். இதைவிடவும், போரின்போது நான் தனியாய் இல்லை; கடவுள் எப்போதும் என்னோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன். இதனால் எனக்கு எப்போதும் வெற்றியே கிடைத்திருக்கின்றது” என்றார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவ அதிகாரியாக இருந்த ஜார்ஜ் பட்டனின் வார்த்தைகள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகின்றது. அது என்னவெனில், ஆண்டவர் நம்மோடு இருப்பதால் நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பதாகும். பொதுக் காலத்தின் பன்னிரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “அஞ்ச வேண்டாம்; ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்” என்ற சிந்தனையைத் தருகின்றது. ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது அவரின் துணைகொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திப்போம்.

பழி சுமத்தும் உலகம்

கடவுளின் பணியை செய்வது அன்றும் சரி, இன்றும் சரி மிகவும் சவால் நிறைந்த ஒன்று. கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி என்பது போல், கடவுளின் பணியில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்து பிரச்சனை வரும் என்றே தெரியாது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தனக்கு எப்படி ஆபத்துகள் வந்தன, அவை யாரிடமிருந்து வந்தன என்பதைப் பற்றிப் பேசுகின்றார். கடவுள் பணியை மிகுந்த ஆர்வத்துடன் செய்தவர் எரேமியா. அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களாய் அவர்மீது பழி சுமத்தவும், அவரை வீழ்த்தவும் துடிக்கின்றார்கள் அவரது நண்பர்கள். இதைப் பற்றி அவர் கடவுளிடம் முறையிடுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகிறபோது அவர்களுக்கு என்ன மாதிரியான எதிர்ப்புகள், சவால்கள் வரும் என்பதைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்று, தன்னைப் பின்தொடர்ந்தால் துன்பமே இராது என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கவில்லை. மாறாக, அவர் அவர்களிடம், தன்னைப் பின்தொடரும்போது ஆட்சியாளர்கள் அதிகாரிகள் முன்பு இழுத்துச் செல்லப்படலாம்; ஏன், கொலை செய்யப்படலாம் எனத் தெளிவாகச் சொல்கின்றார். இத்தகைய சவால்களெல்லாம் கடவுளுடைய பணியில் ஈடுபடுவோருக்கு இருப்பதால், அவர்கள் இதைக் குறித்த தெளிவுடன் இருக்கவேண்டும்.

ஆண்டவரின் உடனிருப்பது

கடவுள் பணியில் ஈடுபடுவோருக்கு எத்தகைய ஆபத்துகளும் சவால்களும் உள்ளன என்பதைப் பற்றி இன்றைய இறைவார்த்தை எடுத்துக்கூறுகின்ற அதே, கடவுளின் உடனிருப்பது அவர்களோடு இருப்பதை அது எடுத்துரைக்கத் தவறவில்லை.

முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தன் நண்பர்கள் தன்மீது பழி சுமத்துவதையும், தன்னுடைய வீழ்ச்சிக்காகக் காத்திருப்பதையும் வேதனையோடு பதிவு செய்த அதே வேளையில், கடவுள் தன்னுடன் ஒரு வலிமை வாய்ந்த வீரரைப் போன்று இருக்கின்றார் என்பதையும் பதிவு செய்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு, ஒருவர் தன்னைப் பின்தொடரும்போது கொலை செய்யப்படலாம் என்று கூறிய அதே வேளையில், சாதாரண சிட்டுக் குருவிகளைக்கூடத் தரையில் விழவிடாத கடவுள், தன்னைப் பின்தொடர்பவர்களைக் காத்திடுவார். அதனால் கடவுள் ஒருவரைத் தவிர அவர்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுகின்றார்.

கடவுள் பணியில் ஈடுபட்டிருப்போர் தங்களுக்குப் பலவிதமான ஆபத்துகள் வருகின்றனவே என்று அஞ்சலாம். அவர்கள் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை; ஏனெனில் கடவுள் அவர்களோடு இருக்கின்றார் என்பது உண்மையில் நம்பிக்கையளிக்கும் செய்தி. இன்றைய இரண்டாம் வாசகம் இன்னொரு நம்பிக்கைச் செய்தியைத் தருகின்றது. அது என்னவெனில், ஆதாம் என்ற ஒரு மனிதனால் இவ்வுலகில் பாவம் வந்தபோது, கிறிஸ்துவால் கடவுளின் அருள்கொடை மிகுதியாகக் கிடைத்துள்ளது.

இப்படிக் கடவுளின் உடனிருப்பும் அவரது அருள்கொடையும், எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக, அவரது பணியில் ஈடுப்பட்டிருப்போருக்குக் கிடைத்திருக்கின்றது என்றால், அது மிகப்பெரிய செயலன்றோ!

வல்லமையோடு சான்று பகர்வோம்

இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நாம் அவரைக் கடவுளின் ஒரே திருமகன் என ஏற்றுக்கொண்டு, அவரைப் பற்றி மக்கள்முன் சான்று பகரவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.

கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து வந்த தொடக்கக் காலகட்டத்திலும் சரி, இன்றும் சரி கிறிஸ்தவர்கள் எத்தனையோ அடக்கமுறைகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு வருகின்றார்கள். அவற்றுக்கெல்லாம் அஞ்சி, அல்லது உயிரை மட்டும் கொல்பவர்களுக்காக அஞ்சி, அவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் தானும் அவர்களைக் கடவுள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்வது, அவரை ஏற்றுக்கொண்டு, அவரைப் பற்றிச் சான்று பகரவேண்டிய தார்மீகப் பொறுப்பினை நமக்குத் தருகின்றது.

இயேசுவுக்குச் சான்று பகரவேண்டும் என்னும்போது அதனை இரண்டு நிலைகளில் செய்யலாம். ஒன்று வாய்மொழியால் அவருக்குச் சான்று பகர்வது. இதைவிடவும் சிறப்பான ஒன்று இருக்கின்றது. அதுதான் வாழ்வால் அவருக்குச் சான்று பகர்வது. இதைப் பற்றி யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுகின்றபோது, “பிள்ளைகளே! நான் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்” (1 யோவா 3:18) என்பார்.

நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாய் இருந்து, அவரை அன்பு செய்கின்றோம் என்றால், அவரை நமது வாழ்மொழியால் மட்டுமல்ல, வாழ்வாலும் பறைசாற்ற வேண்டும். அது ஒவ்வொருவரின் கடமை.

சிந்தனைக்கு

‘நீங்கள் அறிக்கையிடுவதை உண்மையாகவே நம்புகிறீர்களா? நீங்கள் நம்புவதன்படி வாழ்கிறீர்களா? நீங்கள் வாழ்வதை மற்றவருக்குப் பறைசாற்றுகிறீர்களா?” என்று கேட்பார் திருத்தந்தை புனித ஆறாம் பவுல். நாம் அறிக்கையிடுவதை நம்புவோம். நம்புவதை வாழ்வாக்குவோம். வாழ்வாக்குவதை மற்றவருக்குத் துணிவுடன் பறைசாற்றி, இயேசுவின் உண்மையான சீடர்களாய் விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அறிவித்தல் - அஞ்சாதிருத்தல் - ஆற்றல் பெறுதல்

முதல் வாசகப் பகுதி எரேமியா இறைவாக்கினரின் முறைப்பாடு அல்லது அருள்புலம்பலாக அமைந்துள்ளது. எரேமியா எருசலேமில் இறைவாக்குரைக்கின்றார். பாபிலோனியப் படையெடுப்பால் யூதா நாடும் எருசலேம் நகரமும் அழிந்துபோகும் என அவர் இறைவாக்குரைத்தது கேட்போருக்குத் திகிலாக இருந்தது. அழிவின் செய்தியை அறிவிக்கும் இறைவாக்கினரையும் இறைவாக்கினரின் செய்தியையும் எருசலேம் நகரத்தார் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். மேலும், எரேமியாவை அழிக்க சூழ்ச்சி செய்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் ஆண்டவரின் திருமுன்னிலையில் வருகிற எரேமியா, 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனேன்!' (20:7) என முறையிடுகிறார். தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், தன்னகத்தே கொண்டிருக்கிற செய்தியைத் தன்னால் அடக்கிவைக்க முடியவில்லை என்றும், அச்சம்நிறைந்த நேரத்திலே தான் ஆண்டவரின் உடனிருப்பைக் கண்டுகொள்கிறேன் என்றும் ஆறுதலடைகிறார் எரேமியா.

கடவுளால் ஏற்புடையவராக்கப்படுதல் என்னும் கருத்துரு பற்றி உரோமை நகர மக்களுக்கு எழுதுகிற பவுல், முதல் ஆதாம் மற்றும் இரண்டாம் ஆதாம் (கிறிஸ்து) என்னும் இருவரும் முறையே, 'பாவம்' மற்றும் 'அருள்கொடையை' இவ்வுலகுக்குக் கொண்டு வந்தார்கள் என மொழிகிறார். திருச்சட்டம் முன்வைக்கும் செயல்களைவிட கடவுளின் அருள் மேன்மையானது என்பது பவுலுடைய கருத்து.

திருத்தூதுப்பொழிவு என்னும் பெரும்பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்கள் அடையும் துன்பங்கள் பற்றி முன்னுரைக்கும் இயேசு, துன்பங்கள் திருத்தூதர்களின் அறிவித்தல் பணியை நிறுத்திவிடக் கூடாது என்றும், அஞ்சாமல் தொடர்ந்து அவர்கள் முன்னேற வேண்டும் என்றும், கடவுளிடமிருந்து அவர்கள் ஆற்றல் பெறுவார்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.

இந்நாளின் இறைவார்த்தைப் பகுதிகளை, 'அறிவித்தல்,' 'அஞ்சாதிருத்தல்,' 'ஆற்றல் பெறுதல்' என்னும் சொற்கள் வழியாகப் புரிந்துகொள்வோம்.

(அ) மறைவாகக் கேட்டவற்றை வெளிப்படையாக அறிவித்தல். (ஆ) உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதிருத்தல். (இ) 'ஆண்டவர் வலிமைமிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என ஆற்றல் பெறுதல்.

அ. மறைவாகக் கேட்டவற்றை வெளிப்படையாக அறிவித்தல்

திருத்தூதுப் பணிகளில் முதன்மையான பணி அறிவித்தல். இயேசு தம் பணிவாழ்வின் தொடக்கத்தில், 'விண்ணரசு நெருங்கிவிட்டது. மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்' என அறிவிக்கிறார். விண்ணரசின் மறைபொருளைப் பல்வேறு உவமைகள் வழியாகவும், சொல்லோவியங்கள் வழியாகவும், போதனைகள் வழியாகவும் எடுத்துரைக்கிறார். உவமைகளுக்கான விளக்கங்களை மறைவாகத் தம் சீடர்களுக்கு வழங்கி, போதனையைத் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு இயேசுவிடம் கற்றுக்கொண்ட அனைத்தையும் சீடர்கள் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என இயேசு கட்டளையிடுகிறார். முதல் வாசகத்தில், எரேமியா, தான் மறைவாகக் கேட்ட செய்தியை வெளிப்படையாக எருசலேம் மக்களுக்கு அறிவிக்கிறார். தான் அறிவித்த செய்தியை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தொடர்ந்து அதை அறிவிக்கிறார். ஏனெனில், கடவுளின் செய்தியை, வார்த்தையைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள அவரால் இயலவில்லை. கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குகிற இயேசு, அவரிடம், 'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' (மாற் 5:19) என அனுப்புகிறார்.

இறைவார்த்தையை நாம் வாசிக்கிறோம், கேட்கிறோம். அதை அறிவிக்கிறோமா? அறிவித்தல் என்பதை வாழ்ந்து காட்டுதல் என்றும் புரிந்துகொள்ளலாம். நாம் வாசிக்கிற, கேட்கிற வார்த்தைக்கு ஏற்ற வாழ்க்கை நிலையை நாம் அமைத்துக்கொள்கிறோமா?

ஆ. உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதிருங்கள்

அச்சம் சீடத்துவத்தை நிலைகுலைக்கும் என்பதை அறிந்தவராக இருக்கிறார் இயேசு. தம் சீடர்கள் அச்சம் இல்லாதவர்களாக இருப்பர் என்னும் போலி வாக்குறுதியை அவர் வழங்கவில்லை. மாறாக, சீடர்கள் தம் அச்சங்களை – துன்புறுத்தல்களை, எதிர்ப்புகளை, நிராகரிப்புகளை - எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். 'அஞ்ச வேண்டாம்' என்னும் அறிவுரை இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று முறை உள்ளது (10:26, 28, 31): 'உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்' (10:26, 28), 'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள்' (10:31). கடவுளுக்கு மட்டுமே அஞ்சுவதற்கு மூன்று காரணங்கள் தருகிறார் இயேசு: ஒன்று, அவர் மட்டுமே ஆன்மாவைக் கொல்ல வல்லவர். இரண்டு, கடவுள் நம்மேல் தொடர்ந்த அக்கறை கொண்டவராக – நம் தலைமுடியையும் எண்ணிக்கொண்டிருப்பவராக - இருக்கிறார். குருவிகளை விட மேன்மையானவராக, தம் சாயலில் அவர் நம்மைப் படைத்துள்ளார். மூன்று, கடவுளுக்கு மட்டுமே நம் அர்ப்பணம் இருத்தல் வேண்டும்.

அச்சம் நம் வாழ்வின் மிகப் பெரிய எதிரி. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் இது தடை இடுகிறது. சீடத்துவத்தில் நிலைத்திருக்கும் நம்மை நிலைகுலைய வைக்கிறது அச்சம். ஒரு பக்கம், அச்சம் கலைந்து நாம் வாழ வேண்டும். இன்னொரு பக்கம், கடவுளுக்கு மட்டுமே நாம் அஞ்சி வாழ வேண்டும். அதாவது, நம் அர்ப்பணம் பிளவுபடாததாக இருத்தல் வேண்டும். 2 மக்கபேயர் நூலில் நாம் வாசிக்கும் அன்னையும் ஏழு மகன்களும் கடவுளுக்கு அஞ்சுகிறார்கள். அரசனைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு அறவே இல்லை. இறப்பு ஏற்கவும் துணிகிறார்கள்.

இ. 'ஆண்டவர் வலிமைமிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என ஆற்றல் பெறுதல்

தன்னுடைய நகரினர் தன்னை எதிர்த்தபோது அச்சம் கொண்ட எரேமியா, 'ஆண்டவர் வலிமைமிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என்று ஆற்றல் பெறுகிறார். தன் வலுவின்மையில் இறைவனின் வல்லமையைக் கண்டுகொள்கிறார். இயேசுவின் சமகாலத்தில் சிட்டுக்குருவி விற்கும்போது, காசுக்கு இரண்டு என விற்பர். இப்படி வாங்கப்படும் இரு குருவிகளில் ஒன்றைப் பறக்கவிட்டு அதன் தன்மையைச் சோதிப்பார் வாங்குபவர். அப்படிப் பறக்கவிடப்படுகிற குருவியைப் பற்றியும் அக்கறை காட்டுகிறவர் கடவுள். நம் தலைமுடியையும் எண்ணிக்கொண்டிருப்பவராக – அதாவது, முழுநேரமும் நம்மேல் அக்கறை கொண்டவராக, நம்மீது மாறாத அன்பு கொண்டவராக - இருக்கிறார். 'வலிமைமிகுந்த வீரர்' என்னும் உருவகம் தொடர்ந்து உடன் நிற்கிற பிரசன்னத்தைக் குறிக்கிறது.

அச்சங்களை அகற்றுவதற்கான எளிய வழி ஆண்டவரின் உடனிருப்பை உணர்வதும், அவர்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் ஆகும்.

நிற்க.

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 69), 'கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்' என இறைவேண்டல் செய்கிறார் தாவீது. துணை செய்வதில் ஆண்டவர் மாறாதவர் என்னும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார் அவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் பேரன்பே நமக்குத் தஞ்சம்!

இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் கடவுளின் பேரன்பு அவரை நம்புகிற நமக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பதை உணர்த்துகிறது. கடவுளே நம் தந்தை.அவர் நம்மை அன்பு செய்கிறார். அவர் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை என்பதை இன்றைய மூன்று வாசகங்களுமே நமக்கு எடுத்துரைக்கின்றன.

இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தன்னைச் சுற்றியுள்ள ஆபத்துக்களைக் குறித்து கலங்குகிறார். கடவுளிடம் முறையிடுகிறார். தன் எதிரிகளைப் பழிவாங்குமாறு வேண்டுகிறார். இவையெல்லாம் அவருடைய மனதிலிருந்த பயத்தின் வெளிப்பாடு. கலக்கத்திலும் தயக்கத்திலும் அவர் புலம்பினாலும், இறுதியில் கடவுளின் அன்பில் சரணடைகிறார். அவரைப் போற்றிப் புகழ்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் ஆதாமின் பாவத்தால் நாம் பலர் சாகிறோம். அந்த ஒருமனிதரின் பாவம் நம்மை சூழ்ந்தாலும் கடவுளின் அளவற்ற அருளால் நாம் எல்லாரும் மீட்கப்படும் படி ஒரே ஒரு மனிதன் இயேசு நமக்காக நம் பாவப்பரிகாரமாக மரித்தார் என்று கூறி தந்தையின் அன்புக்கு விளக்கம் சொல்கிறார்.

நற்செய்தியில் இயேசு, சிட்டுக்குருவிகளைப் பராமரிக்கும் கடவுள் மனிதராகிய நம்மை இன்னும் எவ்வளவு மேன்மையாய் பராமரிப்பார் என விளக்குகிறார். இன்னும் அதிகமாக நம் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கையைக் கூட கடவுள் அறிந்துள்ளவர். எனவே நாம் பயப்படத் தேவையில்லை என மிக மிக உறுதியாகச் சொல்கிறார்.

இவ்வாறாக கடவுளின் பேரன்பு எந்த அளவுக்கு நம்மைப் புடைசூழ்ந்து காக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. நாம் செய்ய வேண்டியது என்ன? துன்ப துயர நேரங்களில், கவலைப்பட்டு கலங்குகையில், கடவுளிடம் தஞ்சம் புக வேண்டும். அவருடைய பேரன்பில் நம்பிக்கை வைத்தால் அவர் நிச்சயம் பதில் மொழி தருவார். எனவே உண்மையற்ற உலக மனிதரிடம் தஞ்சம் புகுவதையும், ஆன்மாவைக் கொல்ல இயலாதவர்களைக் கண்டு பயம் கொள்வதையும் தவிர்த்து கடவுளை நோக்கி நம் குரலை எழுப்புவோம்.

இறைவேண்டல்

அன்பே உருவான இறைவா! உமது பேரன்பை எங்கள் வாழ்வில் எந்நாளும் அனுபவித்து எங்கள் ஆன்மாவை காத்துக் கொள்ள அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser