மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலம் ஆறாம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சீராக் ஞானம்15:16-21|1 கொரிந்தியர் 2:6-10|மத்தேயு 5: 17-37

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஓர் அரசன் தன் மூன்று மகன்களையும் அழைத்து நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என்று கேட்டார். 'உங்களை மாணிக்கக் கற்களைப்போல நேசிக்கிறேன்' என்றான் முதல் மகன், இரண்டாவது மகன், 'உங்களைப் பொன்னைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனோ, 'உங்களை உப்பைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனின் பதிலைக் கேட்டவுடன் அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. இதையறிந்த சமையற்காரன் அரசனுக்கு உப்பு போடாமல் சமையல் செய்து வைத்தான். உப்பில்லா உணவைச் சுவைத்த அரசன் கோபத்தோடு சமையற்காரனைக் கூப்பிட்டான். அப்போது மூன்றாம் மகன், அப்பா! உப்பில்லா உணவு சுவையற்றது. நீங்கள் எனக்கு உப்பைப் போன்றவர்கள். என் வாழ்வுக்குச் சுவையூட்டி, வழிகாட்டும் ஒளியாக மேன்மைப்படுத்துகிறீர்கள் என்று சொன்னவுடன் அரசன் உப்பின் தன்மையை உணர்ந்து கொண்டான்.

இன்றைய வார்த்தை வழிபாடு நாம் அனைவரும் பிறருக்குப் பயன் தரக்கூடிய சாரமுள்ள உப்பாக, ஒளி கொடுக்கும் விளக்காக வாழ வலியுறுத்துகிறது. விழிகளுக்கு ஒளியாக, உணவுக்கு உப்பாக, உலகிற்கு நாம் மாற வேண்டும். உண்மையை அறிந்து, தீமைகளைக் களைந்து நன்மைகளில் மிளிர வேண்டும். உப்பு தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும்போதுதான் அதன் பயன் முழு நிறைவடைகிறது. மெழுகுதிரி தன்னையே கரைக்கும்போதுதான் ஒளி தர முடிகிறது. ஒருவரை கிறிஸ்துவின் சீடராக்குவது அவருடைய சாரமுள்ள சான்று வாழ்வுதான். இதனால்தான் இயேசு மனித வாழ்வை உப்புக்கும் ஒளிக்கும் ஒப்பிடுகின்றார். இருளின் நடுவே உன் ஒளி உதிப்பதாக (எசா. 58:10).

உப்புக் கரைந்தால்தான் சுவை. மெழுகு உருகினால்தான் ஒளி. சந்தனம் வெட்டப்பட்டால்தான் மணம். ஆம்! மலராக மணம் வீசவும், சந்தனமாக மணக்கவும், நாம் நம்மையே இழக்காமல் கொடுக்க முடியாது. கொடுக்காமல் மன நிறைவோடு வாழவும் முடியாது. சாரமுள்ள உப்பாக, மற்றவர்களின் வாழ்வுக்கு ஒளியாக மாறும்போதுதான் நாம் மேன்மையடைகிறோம். உப்பானது பாதுகாக்கும் தன்மை கொண்டது. திருடுவதற்கும் கொல்லுவதற்கும், அழிப்பதற்குமின்றி திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டு வந்தேன் (1யோவா 10:10) என்ற இயேசுவின் அமுதமொழி நமக்கும் உரியதாகும்.

உப்பானது மருந்தாகும் தன்மை கொண்டது. நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் அது கலக்கப்படுகிறது. நமது வாழ்வும், சொல்லும், செயலும் மற்றவரைக் குணமாக்க வேண்டும் (1பேதுரு 2:24).

உப்பானது ருசி தரக்கூடியது. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்பது பழமொழி. "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திபா. 34:8) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாம் சுவைமிக்க வாழ்வை வாழ வேண்டும்.

உப்பானது வெள்ளையானது. கருப்பான கடல் நீரானது உப்பாக மாறிய பின் வெண்ணிறமாகிறதுபோல திருமுழுக்கால் நாம் புனிதம் (1பேதுரு 1: 15) பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும். சாரமுள்ள மனித வாழ்வு கிறிஸ்துவைப்போல சுடர்விட்டு எரிய வேண்டும். எசாயாவைப் போல நாம் வழிகாட்டும் ஒளியாக நனவாக்கப் வாழ முன் வருவோம். இறையரசுக் கனவை புறப்படுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின் கட்டளைகள் இனியவை !

ஒருவன் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து. வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு விருப்பமுள்ளவனாய் வாழ்ந்தால், அவன் கடைப்பிடிக்கும் கட்டளைகள் அவனைக் காப்பாற்றும் என இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது.

கடவுளின் ஒவ்வொரு கட்டளையும் அவரது அன்பை மனித குலத்திற்குப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. ஆகவே ஒருவன் கடவுளை அன்பு செய்தால் அவர் தரும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பான். இதனால்தான் இயேசு, நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள் (யோவா 14:15] எனக் கூறியுள்ளார். புதிய ஏற்பாட்டில் இயேசு இறைமக்களுக்கு அளிக்கும்

கட்டளைகளில் சில இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் அருளும் ஏழு கட்டளைகள் :

 1. சினம் கொள்ளக்கூடாது. 2.உன் சகோதரனோடு சமாதானமாக வாழ். 3. பெண்களை இச்சையோடு நோக்காதே. 4. உன் ஐம்புலன்களும் உனக்கு இடறலாயிராதபடி பார்த்துக்கொள். 5. மணமுறிவைத் தேடாதே. 6. ஆணையிடவே வேண்டாம். 7. எப்பொழுதும் உண்மையே பேசு. 

நமது சிந்தனைச் சக்கரத்தை முதல் கட்டளையைச் சுற்றி சற்று ஓடவிடுவோம். சினம் கொள்ளக்கூடாது என்கின்றார் இயேசு. சினம் ஒரு வகையில் கொலையைவிடப் பெரிய பாவம்! கொலை உடலுக்கு ஊறு விளைவிக்கின்றது. ஆனால் ஒருவனின் சினம் உடலைவிட உயர்ந்த ஆன்மாவிற்குத் துயரத்தைக் கொடுக்கக்கூடும். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறளொன்று. தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று கூறியிருப்பதை நாமறிவோம். இதனால்தான் இயேசு, ஒருவன் மற்றவனைப் பார்த்து முட்டாள் என்றோ, மதிகெட்டவனே என்றோ சொல்லுதல் கூடாது என்று கூறுகின்றார்.

சினம் கொள்ளவே கூடாதா? என்ற கேள்வி சிலர் உள்ளத்தில் எழலாம். இந்த கேள்விக்குப் பதிலை, புனித பவுலடிகளார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கொடுக்கின்றார். எபே 4:26 அ-இல் சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்கள் என்று கூறுகின்றார். இந்த அறிவுரை. நம்மைப் பாவத்திற்கு உட்படுத்தாத சினமொன்று இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

சினத்தில் இரண்டு வகைகள் உள்ளன: ஒன்று கட்டுக்கடங்காத சுயநலத்துடன் மற்றவர்களை அடியோடு அழிக்கின்ற கோபம்; மற்றொன்று அடக்கமான, சுயநலமற்ற. மற்றவர்களை உருவாக்குகின்ற கோபம். இரண்டாம் வகை சினத்தைத்தான் இயேசு பரிசேயர்களிடமும் (மாற் 3:5),கோயிலிலும் (யோவா 2:13-17) வெளிப்படுத்தினார். அர்த்தமுள்ள சினத்திற்கு விளக்கம் தரும் கதை ஒன்று உண்டு. ஆடு மாடுகளை மேய்க்கச் சென்ற சிறுவர், சிறுமிகள் சிலர் காட்டில் வாழ்ந்த நாகமொன்றிற்குப் பெருந்தொல்லை கொடுத்தனர். சினம் கொண்ட நாகம் அவர்களில் சிலரைக் கடித்துக் காயப்படுத்தியது. காட்டின் வழியே பயணம செய்த துறவி ஒருவர் அந்தப் பாம்பைப் பார்த்து. இனி யாரையும் கடிக்காதே என்றார். அதற்கு பாம்பு, அவர்களும் எனக்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்கக் கூடாது என்று சொல்லிச் செல்லுங்கள் என்றது. பாம்பு துறவி கேட்டபடி கடிக்கவே மாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்தது. இதையறிந்த சிறுவர்களும், சிறுமிகளும் பாம்பின் சத்தியத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாம்பை அடித்துத் துன்புறுத்தி அதன் மண்டையை உடைத்தார்கள். காயப்பட்ட பாம்பு எலும்பும், தோலுமானது. ஆறு மாதத்திற்குப் பிறகு அதைப் பார்க்கச் சென்ற துறவி அதன் நிலைகண்டு மனம் வருந்தி, உனக்கு ஏன் இந்நிலை? என்றார். அதற்கு அந்தப் பாம்பு நடந்ததைச் சொன்னது. அப்பொழுது துறவி, நீ மற்றவர்களைக் கொத்தக்கூடாது என்றுதான் கூறினேனேயொழிய, சீற வேண்டாம் என்று கூறவில்லையே! என்றார். பின் பாம்பு எப்படி வாழ்ந்திருக்கும் என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம்.

கடின மனம், அநீதி, அக்கிரமம், வஞ்சகம், சூழ்ச்சி இவற்றை மாற்ற சினம் கொள்ளலாம். ஆனால் எது நீதி, எது அநீதி, எது சரி, எது தவறு என்பதை எப்படி அறிவது ? அதற்கு இரண்டாம் வாசகம் பதில் கூறுகின்றது. இறைவனால் அன்பு செய்யப்பட்ட நம் அனைவருக்கும் திருமுழுக்கின் வழியாக கடவுளின் ஞானமாகிய இயேசு அருளப்பட்டிருக்கின்றார். அவரின் அருள் துணையோடு நாம் சரியானவற்றைக் கண்டுணர்ந்து, இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரின் பாதுகாப்பிற்கு உரியவர்களாக வாழ்வோம். மேலும் அறிவோம் :

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் (குறள் : 306).

பொருள்:
கோபம் ஆகிய தீ தன்னைக் கொண்டவரை ஒழிப்பதோடு, அவருக்குத் துன்ப வேளையில் பாதுகாப்பாக உதவும் தோணி போன்ற சுற்றத்தார் அனைவரையும் அழித்து விடும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓர் இந்து ஆசிரமத்தில் பூசை நடந்தபோதெல்லாம் பூசை அறையில் நுழைந்து தொந்தரவு கொடுத்த ஒரு பூனையை பூசை நடக்கும்போது பூசை அறைக்கு எதிரிலிருந்த ஒரு மரத்தில் கட்டவேண்டுமென்று கட்டளையிட்டார் ஆசிரமத்தின் குரு. அந்த குருவும் அந்த பூனையும் இறந்த பின்னும், பூசை நடந்தபோது மற்றொரு பூனை பூசை அறைக்கு எதிரிலிருந்த அதே மரத்தில கட்டப்பட்டது. பூசை நடக்கும்போது பூனையைக் கட்டி வைப்பது ஓர் இன்றியமையாத சடங்காகிவிட்டது.

கிறிஸ்துவின் காலத்தில் பரிசேயர்கள் ஒரு சில சடங்குகளை அவற்றின் பொருள் புரியாமல் இயந்திரமயமாகக் கடைப்பிடித்து வந்தனர். திருச்சட்டங்களைக்கூட அவற்றின் உள் நோக்கம் புரியாமல் குருட்டுத்தனமாகக் கடைப்பிடித்து வந்தனர். அவர்களின் ஒழுக்கம் வெறும் புற ஒழுக்கமாகிவிட்டது; அக ஒழுக்கத்தைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பரிசேயர்களின் இந்தப் போக்கைக் கிறிஸ்து கண்டித்து, தம் சீடர்களிடம் இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: *மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது" (மத் 5:20).

கிறிஸ்தவர்களுடைய ஒழுக்கம் சட்டம் சார்ந்த புற ஒழுக்கமாக மட்டும் அமையாமல், ஆவியாரால் நெறிப்படுத்தப் படும் அகஒழுக்கமாக அமைய வேண்டுமென வலியுறுத்துகிறார் கிறிஸ்து. இன்றைய நற்செய்தி மலைப்பொழிவின் தொடர்ச்சி யாகும். இதில் கிறிஸ்து சட்டங்களை நாம் எவ்வாறு சுடைப்பிடிக்க வேண்டுமென விளக்குகிறார்.

ஒரு நோயை முற்றிலுமாகக் குணமாக்கவேண்டுமெனில், அந்நோயின் தன்மை, அதன் காரணம், அதற்கான மருந்து ஆகியவற்றை அறிந்து, மருந்தை நோயாளிக்குப் பொருந்தும்படி கொடுக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடிவாயப்பச்செயல்" (குறள் 948)

அவ்வாறே. ஒரு பாவச் செயலை அல்லது தீச்செயலை தடுக்க வேண்டுமென்றால், அதன் காரணத்தை அறிந்து அதைக் களைய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் கிறிஸ்து. கொலையைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்குக் காரணமான கோபத்தைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் (மத் 5:21). விபசாரத்தை விலக்க வேண்டுமென்றால், அதற்குக் காரணமான காம இச்சை நிறைந்த பார்வைக்கு வேகத்தடை போட வேண்டும் (மத் 5:27-28), கொலை செய்பவர்கள் மட்டும் கொலைக்காரர்கள் அல்ல. பிறர்மீது கோபம் கொள்பவர்களும் பிறரைப் பகைக்கிறவர்களும் கொலைக்காரர்கள். தம் ஈகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்" (1 யோவா 3:15), சினத்தை நாம் அடக்காவிட்டால், அச்சினமே நம்மைக் கொன்று அடக்கம் செய்துவிடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்" (குறள் 306)

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தனர். இது எப்படி சாத்தியமாகும்? மனைவிக்குக் கோபம் வரும்போது கணவர்மீது கரண்டியைத் தூக்கி எறிவாள். அது கணவர்மீது விழுந்தால் அவள் சிரிப்பாள். அவர்மேல் படாமல் கீழே விழுந்துவிட்டால் கணவர் சிரிப்பார். இது எப்படி இருக்குது? எத்தனையோ திருமணங்கள் தம்பதியரின் கோபத்தால், சகிப்புத்தன்மை சகிப்புத்தன்மை இல்லாததால் மணமுறிவில் முடிவடைகின்றன. கோபப்பட்டாலும் கதிரவன் மறையும்முன் கோபம் மறைந்து விடவேண்டும் (எபே 4:26).

விபசாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது; பெண்களைக் காம இச்சையுடன் நோக்கக்கூடாது. தாவீது மன்னர் உரியாவின் மனைவியுடன் விபசாரம் செய்யக் காரணம், அவள் குளித்துக் கொண்டிருந்தபோது அவளைக் காம இச்சையுடன் நோக்கியதே ஆகும் (2 சாமு 11:2-4). கண்போள போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? அடுத்தவரின் மனைவியை நோக்காமல் இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு; அரண்; ஆன்ற ஒழுக்கம்.

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" (குறள் 14.8)

ஒவ்வொரு நாளும் திருமணமான ஒருவர் பூக்காரியிடம் ஒரு கொத்து மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவார். மனைவியின்மீது கொண்ட அன்பினாலா?' என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறினார்: "இல்லை; பூக்காரிமீது கொண்டுள்ள அன்பினால்," காலப்போக்கில் திருமண அன்பு திசைமாறித் திருட்டுத்தனமான அன்பாகிவிடுகிறது.

மனிதருக்குக் கடவுள் மனச் சுதந்திரம் கொடுத்துள்ளார். அதை அவர்கள் பயன்படுத்தும் விதம் அவர்கள் கையில் உள்ளது என்கிறது இன்றைய முதல் வாசகம். "மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்" (சீஞா 15:17).

"ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர் என்று பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 119:1). திருச்சட்டங் களைக் கிறிஸ்து மலைப் பொழிவில் விளக்கியுள்ளபடி கடைப் பிடித்தால் நாம் பேறுபெற்றவர்கள். சட்டங்களை எழுத்து வடிவில் அல்ல, அவற்றின் உள்ளுயிரில் கடைப்பிடித்தல் வேண்டும். ஏனெனில், திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "எழுதப்பட்ட சட்டத்தால் வினைவது சாவு: தூய ஆவியால் வினைவது வாழ்வு" (2 கொரி 3:6).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பார்வை புதியது

"உங்கள் இதயத்தின் கதவுகளைத் தேடுங்கள். அங்கே இறையாட்சியைக் கண்டுணர்வீர்கள்" "Find the doors of your heart. There you wil discover the kingdom of God" என்று சொன்னவர் அலெக்சாண்ட்ரியோ நகர் புனித கிளமென்ட். இதயத்தின் கதவுகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதன்று. அதற்கான வழியில்தான் செருக்கு, சினம், தீய இச்சை என்று எத்தனை தடைகள்! இதயம் தான் கடவுளைக் காணும் கண். அது எப்போதும் நலமாக இருக்கச் செய்வது நமது கடமை.

2003ஆம் அண்டில் நெல்சன் மண்டேலா பி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் ஒரு கேள்வி: "உங்களைச் சிறையிலிட்ட போது உங்கள் வலுவான கட்சித் தொண்டர்கள் மூலம் சிறைக்கதவுகளையே உடைத்து வெளிவந்திருக்கலாமே! இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டாமே!” அவர் சொன்ன பதில்: "செய்திருக்கலாம். அது பெரிய புரட்சியாகக் கூடத் தோன்றியிருக்கும். ஆனால் அது எங்கள் இலட்சியமான நாட்டு விடுதலைக்குப் புனிதம் சேர்த்திருக்காது. நாட்டுச் சட்டங்களை மீறிப் பெற்ற சுதந்திரத்திற்கு மகத்துவம் இருந்திருக்காது”.

மனிதனுக்கு முகவரி தந்து அவனை அடையாளப்படுத்துவது அவன் கைக்கொள்ளும் நெறிமுறைகளே. இன்றைய மனிதனோ நெறிமுறைகளைத் தன் சுதந்திரச் சிறகை ஒடிக்கும் சுமைக்கற்களாக வெறுக்கிறான். மனம் போன போக்கில் வாழ முற்படுகிறான். திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்த இயேசு, சட்டங்கள் மனிதனை விடுவிக்க வேண்டும். அடிமைப்படுத்தக் கூடாது (மார்க் 2:27,28) என்று எடுத்துரைக்கிறார். தன்னையே அந்தச் சட்டங்களுக்கு உட்படுத்திக் கொண்டு புதுப்பொருள், புதுப் புரிதல் தருகிறார். அதனால் இயேசுவே நமக்கு நெறிமுறை!

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட தங்கள் நாட்டில் நுழைவதற்காக அதாவது புதிய சமுதாயம் படைக்க மோசே சட்டங்களை அறிவுரையாகத் தருகிறார். அவற்றின் நோக்கமே வாழ்வை நெறிப்படுத்துவது, சமூக வாழ்வை ஒழுங்குபடுத்துவது, சமயச் சடங்குகளைப் பொருள் உள்ளதாக்குவது, அரசியலை அறநெறியோடு கொண்டு செல்வது. எனவே புதிய மோசேயாக இயேசு இறையாட்சி சமூகத்தைப் படைக்க சட்டங்களைப் புதிய பார்வையோடு புதியபொருளுணர்ந்து புதிய புரிதலோடு அணுக அழைக்கிறார். அதுதான் திருச்சட்டத்தின் நிறைவு!

பரிசேயர்களின் நெறியைவிட சீடர்களின் நெறி சிறந்திருக்கட்டும் என்று இயேசு சொல்வதன் பொருள் என்ன? பரிசேயர்களுடையது சட்டம் சார்ந்த புற ஒழுக்கம். கிறிஸ்தவர்களுடையது ஆவியார் நெறிப்படுத்தும் அக ஒழுக்கம். இது அன்பு சார்ந்தது. மனித நேயம் சார்ந்தது. பரிசேயர்கள் மோசே தந்த கட்டளைகளை எழுத்துக்கு எழுத்துக் கடைப்பிடித்தால் போதும் என்று செயல்பட்டார்கள். புதிய மோசேயான இயேசுவோ அந்த எழுத்துக்களுக்கிடையே இழையோடும் உணர்வுகளுக்கும் உள்நோக்கத்திற்கும் ஏற்பச் செயலாற்ற அழைக்கிறார்.

பாவம் புண்ணியம் எல்லாம் வெறும் செயல்பாட்டில் அல்ல, ஒருவனுடைய உள்ளத்துச் சிந்தனைகளில் ஊற்றெடுக்கிறது என்பது தான் இயேசு வலியுறுத்துவது. இயேசுவின் அணுகுமுறை திருச்சட்டத்தை அழிப்பதோ மாற்றுவதோ அல்ல (மத். 5:17). அதன் வாழ்வுதரும் வேர்களுக்கு மக்களின் இதயங்களை அழைத்துச் செல்வதேயாகும். இயேசு காட்டும் புதிய பாதையில் புதிதாக நடக்க விரும்பும் சீடர்களின் ஒழுக்கநெறி வழித்தடங்கள் அவர்களுக்கு வெளியே அல்ல அவர்களது இதயத்துக்குள்ளே இருந்து இயக்குவது.

திருச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கே வந்தேன் என்ற இயேசு கொலை செய்வது மட்டுமல்ல பாவம், கொலைக்குக் காரணமான சினம் கொள்வதே பாவம் என்கிறார். சினம் கொள்ளாமல் இருத்தல் என்பது நீதிக்கு அடங்கிப்போதல் அன்று. அநீதியோடும் அக்கிரமத்தோடும் சமரசம் ஆகிவிடுதலும் அன்று. இல்லையென்றால் இயேசுவின் கன்னத்தில் காவலாளி அநியாயமாக அறைந்தபோது "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும்; சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?" (யோ. 18:23) என்று சீறியிருக்கமாட்டார் இயேசு. "சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபேசி. 4:26).

விபச்சாரச் செயல் மட்டுமன்று. விபச்சாரச் செயலுக்கு வேராக இருக்கும் இச்சையோடு நோக்குவதே பாவம் என்கிறார் இயேசு. கற்பைக் காத்துக் கொள்வது என்பது வெறும் கருப்பையைக் காத்துக் கொள்வதா?

ஆற்றில் ஒரு பெண் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவசரமாக அக்கரை போக வேண்டும். அதே வழியில் சென்ற இரு துறவிகளில் ஒருவர் அவளைக் காப்பாற்றித் தோளில் தூக்கி வந்து அக்கரையில் இறக்கிவிட்டுக் கிளம்பினார். கூட வந்த மற்றொரு துறவி மனத்துக்குள் பொருமிக் கொண்டிருந்தார். "நீ ஒரு துறவியா? துறவி பெண்ணைத் தொடலாமா? அதுவும் தோளில் தூக்கலாமா? ..." முனகிக் கொண்டே வந்த துறவியைப் பார்த்து பெண்ணைத் தூக்கி வந்து கரையேற்றிய துறவி சொன்னார்: "அந்தப் பெண்ணை எப்போதோ அந்தக் கரையிலேயே தோளிலிருந்து கீழே இறக்கிவிட்டுவிட்டேன். ஆனால் நீரோ இன்னும் அவளை உம் இதயத்தில் சுமந்து கொண்டு வருகிறீரே..."

பரிசேயர்களின் நெறி சட்டத்துக்கு அப்பால் பார்க்க மறுப்பது. ஆனால் சட்டம் என்றைக்கோ தோல்வி கண்டுவிட்டது. நீதிமன்றங்களில், காவல் நிலையங்களில் இன்று சட்டமா ஆட்சி செய்கிறது? பணம் அல்லவா! ஊழலும் கையூட்டுமல்லவா! இன்று மட்டுமல்ல இயேசுவின் காலத்திலும் வாழ்விலும் தோல்வி கண்டது. நீதியின் காவலன் பிலாத்து சொல்கிறான் "இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று. உடனே யூதர்கள் கத்துகிறார்கள்: “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாக வேண்டும்" (யோ. 19:7) எங்கள் சட்டப்படி என்றால் இவர்களுக்கு ஒரு சட்டம். பிலாத்துக்கு ஒரு சட்டமா? எனவேதான், “பிலாத்து செய்தது சரியோ தவறோ உன்னைவிட என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்” என்கிறார் இயேசு.

அதனால்தான் திருத்தூதர் பவுல் சொல்வார்: "உள்ளத்தின் ஆழத்திலிருநது உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்”. இதுதான் பரிசேயர்களின் நெறியை விடச் சிறந்த கிறிஸ்தவ நெறி.

கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் இறைவனின் சட்டங்களை இதயத்தால் கடைப்பிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக வீட்டுக்கும் நிலத்துக்கும் வரி செலுத்தும் அரசுச் சட்டம். விரும்பினாலும் வரி செலுத்துவது கட்டாயம். தண்டனைக்குப் பயந்து விரும்பாவிட்டாலும் வரி செலுத்தும் ஒருவர் அரசுச் சட்டத்தை நிறைவேற்றி விடுகிறார். ஆனால் ஞாயிறு திருப்பலிக்குப் போக மனமில்லாத ஒருவனை பெற்றோர் வற்புறுத்தி இழுத்து வருகின்றனர். அவன் கோவிலுக்குள் இருந்தாலும் கட்டளையைக் கடைப்பிடிப்பவனல்லன். காரணம்,அவனுடைய இதயம் அதில் இல்லை.

சட்டங்கள், கட்டளைகள் சமுதாயத்திற்கு இன்றியமையாதவை. ஆனால் அவை கடவுளது திருவுளத்தின் வெளிப்பாடாக, அவரது ஞானத்தின் பிரதிபலிப்பாக, அவரது பேரன்பை உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கின்றன என்ற மேலான நோக்கோடு, உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் இறைச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் நம்மை இறையாட்சிக்குரியவர்களாக்கும் சிறந்த நெறியாகச் சித்திரிக்கிறார் இயேசு. உடல் ஊனமுற்றிருந்தாலும் பரவாயில்லை உள்ளம் ஊனமுற்றிருக்கக் கூடாது. அதனால்தான் உடல்உறுப்பை இழந்தாவது உள்ளத் தூய்மையைக் காக்க வேண்டும் என்கிறார் இயேசு.

மனித மனம் பூனைக்கு ஒத்தது. கட்டளைச் சுவரில் மனம் மதில்மேல் அமர்ந்துள்ள நாம் நன்மையாஎ தீமையா வாழ்வின் வளமையா சாவின் சகதியா எந்தப்பக்கம் சாயப் போகிறோம்? (முதல் வாசகம்) “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோமை 14:10). அன்பால் கட்டளைகளை நிறைவுக்குக் கொணர்வோம். உள்ளம் ஒன்றாத போலித்தனத்தைப் புதைப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 6ம் ஞாயிறு

செரோக்கி’ (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித்தந்தார். "நமக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய், மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய், பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே உள்ளன" என்று முதியவர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன், தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா, பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோம் என்பது நாம் எடுக்கும் முடிவு.

நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் தெரிவுகள் செய்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். நமது முடிவுகள், நல்லது, கெட்டது, என்ற இரண்டுக்கும் இடையில் மட்டும் நிகழ்வதில்லை. பல வேளைகளில், நல்லது, அதைவிட நல்லது, அல்லது, சிறந்தது என்ற இரண்டுக்கும் இடையிலும் நாம் தெரிவுகளை மேற்கொள்கிறோம். இன்றைய வழிபாட்டு வாசகங்கள், நாம் மேற்கொள்ளும் தெரிவுகளைப் பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன. இன்றைய முதல் வாசகம் - சீராக்கின் ஞானம் 15:15-20 - கடவுளுடைய கட்டளைகளை கடைபிடிப்பது, அல்லது அவற்றை கடைபிடிக்க மறுப்பது என்ற இரு தெரிவுகளை நம்முன் வைக்கின்றது. நல்லது, கெட்டது என்ற இரு நிலைகளுக்கு இடையில் நாம் மேற்கொள்ளும் தெரிவு இது. கட்டளைகளில் சொல்லியிருப்பனவற்றை சற்றும் மாற்றாமல் பின்பற்றுகிறோமா, அல்லது, கட்டளைகளில் காணப்படும் உள்ளார்ந்த பொருளை உணர்ந்து அவற்றை பின்பற்றுகிறோமா என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் - மத்தேயு 5:17-37 - இயேசு நம்முன் வைக்கிறார். அதாவது, நல்லது, மற்றும் அதைவிட நல்லது என்ற இரு நிலைகளுக்கிடையே நம்மை தெரிவு செய்யச் சொல்லி, முடிவெடுக்கச் சொல்லி இயேசு நமக்கு சவால் விடுக்கிறார்.

தொடர்ந்து, மூன்றாவது வாரமாக, மலைப்பொழிவின் வழியே, இயேசு சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறோம். சென்ற வாரம், இயேசு கூறிய உப்பும், விளக்கும் என்ற இரு உருவகங்களைச் சிந்தித்தோம். இந்த வாரம், நமது சிந்தனைகளை, நீரும், நெருப்பும் என்ற, வேறு இரு உருவகங்களுடன் ஆரம்பிப்போம். சீராக்கின் ஞானம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், இவ்வுருவகங்களை தருவதோடு, எளிய வார்த்தைகளில், அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் அறிமுகப் பகுதி இதோ: நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொருத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி, உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன், வாழ்வும், சாவும், வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (சீராக்கின் ஞானம் 15: 15-17)

நீரா, நெருப்பா... எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா... எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக, எளிதில், பதில் சொல்லிவிடலாம். நெருப்பை எடுப்பதை விட, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவை விரும்புவதை விட, வாழ்வை விரும்புவதே மேல் என்றும், நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில், அறிவு மட்டுமே நம்மை வழிநடத்துகிறதா? இல்லையே! உறவுகள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று, வேறு பல சக்திகளும் நம்மை வழிநடத்துகின்றனவே. இந்த சக்திகளால் வழிநடத்தப்பட்டு, நாம் நெருப்பைத் தேடிச்சென்ற நேரங்களை, நெருப்பை கைநீட்டி எடுத்த நேரங்களை, நினைத்துப் பார்க்கலாம்.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு, பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகினால் ஈர்க்கப்பட்டு, குழந்தை ஒன்று, நெருப்பை நோக்கி, தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம் பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், நெருப்பையொத்த எத்தனை விபரீத ஆசைகள் நம்மை ஈர்த்துள்ளன? எத்தனை முறை, நாம், அந்த ஈர்ப்பினால், நெருப்புடன் விளையாடி, புண்பட்டிருக்கிறோம்? நம் வாழ்வின் எத்தனைப் பகுதிகளை, அந்த நெருப்பு விளையாட்டில், சாம்பலாக்கியிருக்கிறோம்?

இயற்கையில், நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால், அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து, நன்மையோ, தீமையோ விளையலாம். நெருப்பும், நீரும் நமக்கு முன் இருக்கும்போது, கைநீட்டி எடுத்துக்கொள்ள, நீரே நல்லது, நெருப்போடு விளையாடுவது ஆபத்து என்ற எச்சரிக்கையை, அனைவரும் உணர்கிறோம். இருப்பினும், நெருப்போடு விளையாடும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இளமை வேகத்தில் நெருப்புடன் விளையாடத் துடிக்கும் இளையோரை, இவ்வேளையில் நினைத்துப் பார்ப்போம். அவர்கள், தங்கள் விபரீத விளையாட்டுகளை விட்டு விலகி, நல்வழி வந்து சேரவேண்டும் என மன்றாடுவோம்.

சீராக்கின் ஞானம் எழுப்பும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பவேண்டும் என்று, எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து, இயேசுசபை அருள்பணியாளர் Walter Burghardt என்பவர் கூறும் விளக்கம், இந்தக் கேள்வியை, இன்னும் சிறிது ஆழமாய் ஆய்வுசெய்ய அழைக்கின்றது.

சீராக் கூறும் வாழ்வு, மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற, வெறும் உடல் சார்ந்த செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது அல்ல. சீராக்கைப் பொருத்தவரை, இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், அவர் கூறும் சாவு, நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்களால் சாகமுடியும். இறைவாக்கினர்களைப் பொருத்தவரை, இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சுவிடும் நடைப்பிணங்களே. எனவே, இறைவாக்கினர் சீராக், வாழ்வையும், சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார். இதுவே, அருள்பணி Walter Burghardt அவர்கள் தரும் விளக்கம்.

இறைவனின் வழி வாழ்வது என்பதை, இறை சட்டங்களின்படி, அதாவது, மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர், இஸ்ரயேல் மதத்தலைவர்கள். அத்துடன், மோசே தந்த சட்டங்களையும், தங்கள் வசதிக்கேற்ப அவரகள் வளைத்துக்கொள்ள முயன்றனர். எனவே, சுயநலக் கணக்குகளோடு சட்டங்களைப் பின்பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, வெறும் மூச்சுவிடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை, இயேசு, தன் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதும் தெளிவுப்படுத்தினார்.

"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று, இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார், இயேசு. "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று இயேசு, மீண்டும், மீண்டும், கூறிய இந்த வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏதோ ஒரு சிற்றூரிலிருந்து, வந்த ஒரு தச்சனின் மகன், மோசே தந்த சட்டங்களை மாற்ற முயல்கிறாரே என்று, கேள்விகள் எழுந்திருக்கலாம். கோபம் கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம்.

அதனால், இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில், இயேசு, தன் நிலையைத் தெளிவுபடுத்துகிறார். சட்டங்களை அழிக்க தான் வரவில்லை; அவற்றை நிறைவேற்றவே வந்துள்ளேன் என்று கூறுகிறார். சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார். மோசே கூறிய சட்டங்களை, இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார் இயேசு.

இயேசு கொணர்ந்த இந்த மாற்றத்தை, ஓர் எடுத்துக்காட்டின் உதவிகொண்டு, நாம் உணர முயல்வோம். கோவிலில் காணிக்கை செலுத்துவதுபற்றி மோசே தந்த சட்டங்களை, இயேசு எவ்விதம் மாற்றி சிந்தித்துள்ளார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

மோசே தந்த காணிக்கைச்சட்டங்கள், கோவிலுக்குக் கொண்டுவரப்படும் காணிக்கை போருள்களைப் பற்றியே அதிகம் பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவை, எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை, மோசேயின் சட்டங்கள் வலியுறுத்தின. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறமாக நம் கரங்களில் ஏந்திவரும் காணிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். காணிக்கை செலுத்தவந்த நம் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார். நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, போய், முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில், ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் எழுகிறது.. உறவுகள் சரியில்லாமல் போனதற்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? என்ற கேள்வியும் எழுகிறது. "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... சகோதர, சகோதரிகள் நடுவே உருவாகும் மனத்தாங்கலுக்கு நாம் காரணமாக இல்லாமல், அடுத்தவர் காரணமாக இருந்தாலும், அதை உணர்ந்த உடனேயே, நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்லவேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று சொல்கிறார் இயேசு.

சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால், என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் எப்படி இருந்திருக்கும் என்று எளிதில் கற்பனை செய்துகொள்ளலாம். உன் சகோதரர், சகோதரிகள் மீது நீ மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டாம். முதலில் நல்லுறவை உருவாக்க முயற்சி செய். பின்னர், உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கை செலுத்துவதற்கு முன் பிறருடன் நல்லுறவு கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் இந்த ஒரு கூற்றை மட்டும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் விழைந்தால், நமது ஞாயிறுத் திருப்பலியை இப்போதே நிறுத்த வேண்டியிருக்கும். நீங்களும், நானும், ஏதோ ஒரு வகையில் மனத்தாங்கல்களைச் சுமந்து இப்போது வந்திருக்கிறோம். நமது காணிக்கையைச் செலுத்தும் முன், பிறருடன் ஒப்புரவு பெற வேண்டும். சரி, அது இப்போது முடியாத பட்சத்தில், அதற்கடுத்த நிலையையாவது நாம் தேடவேண்டும்... அதாவது, நமது மனத்தாங்கலைத் தீர்க்கும் ஓர் ஆவலை நாம் பெறுவதற்கு, ஒரு நல்லுறவு முயற்சியை நாம் எடுப்பதற்கு, இறைவன் இன்று நமக்கு அருள் தரவேண்டும் என்று செபிப்போம்.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, அடுத்தவர் மீது தொடுக்கப்படும் வழக்குகள், பெண்களை மாண்புடன் நடத்தும் முறை, மணவிலக்கு, பொய்யாணை என்று பல விடயங்களில், மோசே தந்த சட்டங்களைத் தாண்டி, உன்னத வழியைப் பின்பற்றவேண்டும் என்று, இயேசு சவால்களை விடுத்துள்ளார். இன்றைய நற்செய்தி முழுவதும், இயேசு எடுத்துக்காட்டும் பல சட்டங்கள், வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு கூறும் சவால்கள், நமது மனசாட்சியைச் சார்ந்தவை.

தொடர்ந்து மூன்று வாரங்களாய், இயேசு, தன் மலைப்பொழிவின் வழியே, சவால்களை நம்முன் வைத்துள்ளார். இப்படியும் வாழமுடியுமா என்ற பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை எழுப்பும் சவால்கள் இவை. நல்லவற்றை நடைமுறைப்படுத்த நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப் புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிகற்கள். இந்தப் படிகளில் பணிவோடு ஏறிச்சென்று, நம்மையே தகுந்த காணிக்கையாக்கும் பக்குவத்தை இறைவன் நமக்கு வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீங்கள் சிறியவரா? பெரியவரா?

வாசித்து வாழ்வாக்கு:
நீண்ட நாள் காதலர்களான ஜோவுக்கும் இவாஞ்ஜலினுக்குமிடையே திருமணம் நடந்தபோது, ஜோவின் மாமா அவனுக்கு ஒரு பரிசனை வழங்கினார். அதை அவன் மறுநாள் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே ஓர் அருமையான திருவிவிலியம் இருந்தது. உடனே அவன் மாமாவிற்கு, “நீங்கள் பரிசாக வழங்கிய திருவிவிலியம் அருமை” என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துவிட்டு, திருவிவிலியத்தை வீட்டில் இருந்த அலமாரியில் வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
சில நாள்கள் கழித்து ஜோவின் மாமா அவனைத் அலைபேசியில் அழைத்து, “திருவிவிலியம் எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார். ஒருவினாடி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்த அவன், “திருவிவிலியம் அருமையாக இருக்கின்றது என்று அன்றைக்கே சொன்னேனே! மாமா” என்று சொல்லி நிலைமையைச் சமாளித்தான். இது போன்று இரண்டு, மூன்று முறை நடந்தது.

ஒரு கட்டத்தில் அவன் தன் மாமாவின் ‘தொந்தரவு’ தாங்க முடியாமல், ‘திருவிவிலியத்தில் அப்படி என்ன இருக்கின்றது?’ என்று அதைப் புரட்டப் பார்க்கத் தொடங்கினான். அப்போதுதான் அவன் திருவிவிலியத்தின் ஒவ்வொரு புத்தகத்திற்கு முன்னும் நூறு ரூபாய் இருப்பதைக் கண்டு வியந்து போனான். ‘இதற்காகத் தான் திருவிவிலியம் எப்படி இருக்கின்றது என்று மாமா கேட்டுக்கொண்டே இருக்கின்றாரோ?’ என நினைத்துக்கொண்டு அவன், அவரை அலைபேசியில் அழைத்து நடந்ததைச் சொன்னான். அப்போது அவர் அவனிடம், “நீ திருவிவிலியத்தை ஆழமான வாசித்தால், இதைவிடவும் பெரிய செல்வம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வாய்” என்றார்.

ஆம், பலரும் இருந்த நிகழ்வில் வரும் ஜோவைப் போன்று திருவிவிலியத்தை வாசிக்காமல், பொத்தி வைத்திருக்கின்றார்கள். எப்போது அதை அவர்கள் வாசித்து வாழ்வாக்கின்றார்களோ, அப்போது அவர்கள் அதில் மிகப்பெரிய செல்வம் இருப்பதைக் கண்டு கொள்வார்கள். விண்ணரசில் பெரியவர்களாயும் இருப்பார்கள்.

பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் விண்ணரசில் பெரியவர்களாக இருக்க அழைப்புத் தருகின்றது. விண்ணரசில் பெரியவராக இருக்க நாம் என்ன செய்வது என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

நமக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகள்!
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் நமக்கு முன்பாகக் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்றுதான் நமக்குக் குழப்பமாக இருக்கின்றது. ஒன்று மட்டும் உறுதி நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ, அதுவே நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கின்றது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், “மனிதர் முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகின்றார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்” என்கிறது. இவ்வார்த்தைகள் இணைச்சட்ட நூல் 30: 15-20 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை நிறையவே ஒத்திருக்கின்றன. அதே நேரத்தில் இவ்வார்த்தைகள், கடவுள் நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்தாலும், இதைத் தான் செய்யவேண்டும் என்று அவர் நமது சுதந்திரத்தில் தலையிடாமல், நமது விருப்பத்திற்கு விட்டுவிடுகின்றார் என்று செய்தியையும் நமக்கு உரக்கச் சொல்கின்றன.

தம் உருவிலும் சாயலிலும் மனிதர்களைப் படைத்த கடவுள், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்; ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே” (தொநூ 2: 16, 17) என்று சொன்னாரே அன்றி, அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடவில்லை. மனிதர்கள் தங்கள் அழிவினைத் தாங்களே தேடிக்கொண்டார்கள். எனில், நமக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகளிலிருந்து நாம் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அடங்கியிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டும்.

ஆண்டவரின் திருச்சட்டப்படி நட!
நாம் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அமையும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தூய ஆவியார் நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறும்போது, “இதைக் (ஞானத்தை) கடவுள் தூய ஆவியார் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார்” என்கிறார். பவுலின் இவ்வார்த்தைகள், “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோவா 16: 13) என்ற இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

மனிதர்கள் நாம் நமது முதற் பெற்றோரைப் போன்று என்ன முடிவினை எடுக்க வேண்டும் என்று தடுமாறக் கூடியவர்கள். இந்நிலையில் நாம் உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் தூண்டுதலின்படி நடந்தால் (கலா 5:16), நம்மால் கடவுளின் திருவுளத்தின்படி நடந்து, நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும். கடவுளின் திருவுளம் என்ன கேள்விக்கு இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 119 நமக்குப் பதில் தருகின்றது.

திருவிவிலியத்தில் பெரிய அதிகாரம், நூற்று ஐம்பது திருப்பாடல்களில் எவரெஸ்ட் சிகரம் போன்று உயர்ந்து நிற்கும் திருப்பாடல் எனப் பல சிறப்புகளைக் கொண்ட திருப்பாடல் 119, “ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” என்கிறது. நாம் ஆண்டவரின் திருச்சட்டப்படி நடக்க வேண்டும். அதுவே ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது.

இயேசுவே நமக்கு முன்மாதிரி
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒருமுறை பேசும்போது, “இன்றைக்கு மக்கள் போதிப்பவர்களை விடவும் போதனையின்படி வாழ்கின்றவர்களையே பெரிதும் விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார். இது முற்றிலும் உண்மை. இயேசுவின் காலத்திலும் சரி, இன்றும் சரி போதிப்பதற்குப் பலர் இருக்கின்றார்கள். அதன்படி வாழ்வதற்குத்தான் ஆள்கள் குறைவு (மத் 23:3).

நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன் என்று கூறுகின்றார். இயேசுவின்மீது பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வைத்த குற்றச்சாற்று, இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுகின்றார் என்பது. இயேசு யூத இரபிகள் கற்பித்து வந்த மூதாதையர் மரபைத் தான் மீறினாரே அன்றி, திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் மீறவில்லை. அவற்றை அழிக்கவும் இல்லை. மாறாக, அவற்றை நிறைவேற்றினார். மேலும் இயேசு தொடர்ந்து பேசும்போது, இவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிப்பவர் விண்ணரசில் பெரியவர் என்கிறார். இன்றைக்கு ஒருசிலர் போதிப்பது ஒன்றும், வாழ்வது வேறோன்றுமாய் இருப்பார்கள். ஆனால், இயேசு சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19). அதனால் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளின் வார்த்தையின் படி நடந்து, விண்ணரசில் பெரியவர்களை இருப்போம்.

சிந்தனைக்கு:
‘திருவிவிலியத்தில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம். அவரோ வாழ்வளிக்கும் வார்த்தையானவர்’ என்பார் ஆலிஸ்டர் பெக் என்ற அறிஞர். எனவே, நாம் வாழ்வளிக்கும் வார்த்தையைக் கொண்டிருக்கும் திருவிவிலியத்தை வார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக விண்ணரசில் பெரியவர்களாகும் பேற்றினைப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போமா!

மனிதர்களாகிய நாம் புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க அழைக்கப்படுகிறோம். பெரும்பாலும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வெளிப்புறத்தை வைத்து தான் ஒரு நபரையோ இடத்தையோ மதிப்பீடு செய்கிறோம். அது சரியான மதிப்பீடாக இருக்க முடியாது. நம்முடைய உள்ளமும் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்றால் நம்முடைய ஆன்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம் ஆன்மா தூய்மையாக இருக்க நாம் நம்முடைய வாழ்வை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் பொழுது நம் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அதற்கு ஏராளமான ஒழுங்குகள் படிப்பினைகள் கட்டளைகள் சட்டங்கள் போன்றவைகளை கடவுள் நமக்கு கொடையாக கொடுத்துள்ளார்.

இன்றைய வாசகங்களும் கூட நம்முடைய மனித வாழ்வை சிறப்பான விதத்தில் வாழ்ந்திட வழிகாட்டும் விதமாக இருக்கின்றன. மத்தேயு நச்செய்தியாளர் யூத கிறிஸ்தவர்களை தன்னுடைய இலக்கு மக்களாகக் கொண்டு இந்த நற்செய்தியை எழுதியுள்ளார். எனவே புதிய மோசே என்று அழைக்கப்படுகின்ற நம் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவை மிக அருமையாக தன்னுடைய நற்செய்தியில் எழுதியுள்ளார். மத்தேயு நற்செய்தி அதிகாரம் ஐந்து முதல் ஏழு வரை ஏராளமான வாழ்வியல் மதிப்பீடுகளை ஆண்டவர் இயேசு நமக்கு வழங்கியுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்தில் சீராக் நூலின் வழியாக கடவுள் தரும் ஞானத்தை பற்றி அறிய வருகிறோம். பழைய ஏற்பாடுகளில் கடவுளின் ஞானத்தை வெளிப்படுத்தும் சிறந்த நூலாக சீராக்கின் ஞானநூல் இருக்கின்றது. நம்முடைய மனித வாழ்வின் அன்றாட வாழ்க்கை சூழல்களில் ஒழுங்குகளைப் பற்றியும் வாழ்க்கை மரபுகளைப் பற்றியும் நெறிமுறைகளைப் பற்றியும் சீராக் ஞான நூலிலே வாசிக்கிறோம். இந்த நூல் எபிரேய மொழியை மறந்து எகிப்தில் வாழ்ந்த யூதர்களுக்காக எழுதப்பட்டது. யூதர்கள் அனைவரும் கடவுளின் சட்டங்களையும் ஞானத்தையும் முழுமையாகப் பெற்று சிறப்பான வாழ்வை வாழ்ந்திட வழிகாட்டும் விதமாக சீராக்கு ஞான நூல் இருக்கின்றது. நம்முடைய கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வில் இந்த சீராக்கு ஞான நூல் மிகவும் பயனுள்ளதாகவும் ஞானத்தின் கருவூலமாகவும் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் "ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர் ;அனைத்தையும் காண்கிறார்" என்று வாசிக்கிறோம். ஆண்டவரின் ஞானத்தை நாம் பெற நம்முடைய வாழ்வு ஆன்மாவை நோக்கிய தேடலாக இருக்க வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்த கடவுள் நம்முடைய அனைத்து செயல்களையும் அறிந்தவராக இருக்கிறார். பாவம் செய்ய அவர் யாருக்கும் அனுமதி கொடுத்ததும் இல்லை. எனவே ஆன்மாவை அழகு படுத்த நாம் முயற்சி செய்கிற பொழுது, இறைவனின் அருள்துணையை நிறைவாக பெற்று அகத்தூய்மை நிறைந்தவர்களாக வாழ முடியும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நம்மை சிந்திக்க அழைப்பு விடுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை முதிர்ச்சி நிறைந்தவர்களாக வாழ்ந்து இறைவனின் ஞானத்தை பெற்றிட வழிகாட்டுகிறது. தூய ஆவியாரின் வழியாக இறைவனின் ஞானத்தை பெற்று சிறந்த கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது. "தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார் "என்று வாசிக்கிறோம். எனவே நாம் அகத்தூய்மை உள்ளவர்களாக வாழ தூய ஆவியாரின் துணை நமக்கு நிறைவாக தேவைப்படுகிறது. தூய ஆவியாரின் துணை நம்மோடு இருக்கிற பொழுது நாம் முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவர்களாக வாழ்ந்து இறைவனின் ஞானத்தை நிறைவாக பெற முடியும். எனவே தூய ஆவியாரின் துணையோடு இறைவனின் திட்டத்தை நிறைவேற்றி நிறையுள்ள மக்களாக வாழ்ந்திட அருளை வேண்டுவோம். இப்படிப்பட்ட முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவர்களாக வாழத் தான் உறுதிபூசுதல் என்ற அருள் சாதனம் நமக்கு உதவியாக இருக்கின்றது. இந்த அருள்சாதனம் நம்மை அகத்தூய்மையை நோக்கி வழிநடத்துகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் மத்தேயுவின் மலைப்பொழிவின் தொடர்ச்சியான பகுதியாக இருக்கிறது. இயேசு புதிய கட்டளைகளை பல்வேறு கருத்தியல்கள் வழியாக வழங்கியுள்ளார். புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அகத்தூய்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க அழைப்பு கொடுக்கிறார். கொலை சினம், விபச்சாரம் அன்பு, வலக்கண் இடக்கண், விண்ணகம் நரகம், ஆம் இல்லை, நல்லோர் தீயோர் என பட்டியலிட்டு இறைவன் நமக்கு கொடுத்த பகுத்தறிவையும் ஞானத்தையும் பயன்படுத்தி சிறப்பான முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவ வாழ்வை வாழ அழைப்பு விடுத்துள்ளார். ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கினாலே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்துவிட்டான் என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். நம்முடைய உறுப்புகள் ஏதேனும் பாவம் செய்தால் அதை வெட்டி எறிந்து விடுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். இதன் வழியாக ஆண்டவர் இயேசு அகத்தூய்மைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆன்மாவை காத்துக்கொள்ள வழிகாட்டியுள்ளார்.

எனவே தான் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஆண்டு பெரிய வியாழன் அன்று குருக்களை பார்த்து "ஆன்மாக்களை தேடக்கூடிய குருக்களாக வாழ்ந்து ஆன்மாக்களை மீட்டெடுங்கள் " என்று கூறியுள்ளார். ஆன்ம மீட்பிற்கே கத்தோலிக்க திருஅவையில் சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய நன்மையால் தீமையை வெல்வோம். அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக புறத்தை தூய்மைப்படுத்துவோம். அகத்தை அசுத்தப்படுத்தும் புற அலங்காரங்களை முடிந்தவரை குறைக்க முயற்சி செய்வோம். ஆண்டவர் நமக்கு தந்துள்ள கட்டளைகளையும் வாழ்வு தரும் இறை வார்த்தைகளையும் நம்முடைய உள்ளத்தில் தியானித்து வாழ்வாக்கி இறைவனின் இறை ஞானத்தை பெறுவோம். அதன் வழியாக தூய ஆவியாரின் துணையோடு முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சி செய்வோம். அதற்குத் தேவையான அருளைத் தொடர்ந்து நாம் மன்றாடுவோம்.

இறைவேண்டல்
ஞானத்தின் இருப்பிடமே எம் இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் தூய ஆவியாரின் துணையோடு நாங்கள் ஞானத்தோடு வாழ்ந்து முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்திட எங்கள் அகத்தை தூய்மைப்படுத்தும். புனிதத்தின் பாதையில் எங்களை வழிநடத்தியருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser