மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் முதல் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 58:7-10|1கொரிந்தியர் 2:1-5|மத்தேயு 5:13-16

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஓர் அரசன் தன் மூன்று மகன்களையும் அழைத்து நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என்று கேட்டார். 'உங்களை மாணிக்கக் கற்களைப்போல நேசிக்கிறேன்' என்றான் முதல் மகன், இரண்டாவது மகன், 'உங்களைப் பொன்னைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனோ, 'உங்களை உப்பைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனின் பதிலைக் கேட்டவுடன் அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. இதையறிந்த சமையற்காரன் அரசனுக்கு உப்பு போடாமல் சமையல் செய்து வைத்தான். உப்பில்லா உணவைச் சுவைத்த அரசன் கோபத்தோடு சமையற்காரனைக் கூப்பிட்டான். அப்போது மூன்றாம் மகன், அப்பா! உப்பில்லா உணவு சுவையற்றது. நீங்கள் எனக்கு உப்பைப் போன்றவர்கள். என் வாழ்வுக்குச் சுவையூட்டி, வழிகாட்டும் ஒளியாக மேன்மைப்படுத்துகிறீர்கள் என்று சொன்னவுடன் அரசன் உப்பின் தன்மையை உணர்ந்து கொண்டான்.

இன்றைய வார்த்தை வழிபாடு நாம் அனைவரும் பிறருக்குப் பயன் தரக்கூடிய சாரமுள்ள உப்பாக, ஒளி கொடுக்கும் விளக்காக வாழ வலியுறுத்துகிறது. விழிகளுக்கு ஒளியாக, உணவுக்கு உப்பாக, உலகிற்கு நாம் மாற வேண்டும். உண்மையை அறிந்து, தீமைகளைக் களைந்து நன்மைகளில் மிளிர வேண்டும். உப்பு தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும்போதுதான் அதன் பயன் முழு நிறைவடைகிறது. மெழுகுதிரி தன்னையே கரைக்கும்போதுதான் ஒளி தர முடிகிறது. ஒருவரை கிறிஸ்துவின் சீடராக்குவது அவருடைய சாரமுள்ள சான்று வாழ்வுதான். இதனால்தான் இயேசு மனித வாழ்வை உப்புக்கும் ஒளிக்கும் ஒப்பிடுகின்றார். இருளின் நடுவே உன் ஒளி உதிப்பதாக (எசா. 58:10).

உப்புக் கரைந்தால்தான் சுவை. மெழுகு உருகினால்தான் ஒளி. சந்தனம் வெட்டப்பட்டால்தான் மணம். ஆம்! மலராக மணம் வீசவும், சந்தனமாக மணக்கவும், நாம் நம்மையே இழக்காமல் கொடுக்க முடியாது. கொடுக்காமல் மன நிறைவோடு வாழவும் முடியாது. சாரமுள்ள உப்பாக, மற்றவர்களின் வாழ்வுக்கு ஒளியாக மாறும்போதுதான் நாம் மேன்மையடைகிறோம். உப்பானது பாதுகாக்கும் தன்மை கொண்டது. திருடுவதற்கும் கொல்லுவதற்கும், அழிப்பதற்குமின்றி திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டு வந்தேன் (1யோவா 10:10) என்ற இயேசுவின் அமுதமொழி நமக்கும் உரியதாகும்.

உப்பானது மருந்தாகும் தன்மை கொண்டது. நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் அது கலக்கப்படுகிறது. நமது வாழ்வும், சொல்லும், செயலும் மற்றவரைக் குணமாக்க வேண்டும் (1பேதுரு 2:24).

உப்பானது ருசி தரக்கூடியது. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்பது பழமொழி. "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திபா. 34:8) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாம் சுவைமிக்க வாழ்வை வாழ வேண்டும்.

உப்பானது வெள்ளையானது. கருப்பான கடல் நீரானது உப்பாக மாறிய பின் வெண்ணிறமாகிறதுபோல திருமுழுக்கால் நாம் புனிதம் (1பேதுரு 1: 15) பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும்.

சாரமுள்ள மனித வாழ்வு கிறிஸ்துவைப்போல சுடர்விட்டு எரிய வேண்டும். எசாயாவைப் போல நாம் வழிகாட்டும் ஒளியாக வாழ முன் வருவோம். இறையரசுக் கனவை நனவாக்கப் புறப்படுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நான் நலம் பெற என்ன செய்ய வேண்டும் ?

ஒருவனுக்கு இறைவனிடமிருந்து நலம் கிடைக்க, நீதி அவன்முன் நடக்க, ஆண்டவருடைய மகிமை அவனைப் பின்தொடர, அவனுடைய கூக்குரல் இறைவனால் கேட்கப்பட, அவன் இருளின் நடுவே கலங்கரைத் தீபமாய்த் திகழ, அவன் ஏழை எளியவரின் அடிப்படைத் தேவைகளான உணவு. உடை, உறைவிடம், மதிப்பு ஆகிய நான்கினையும் அவர்களுக்களித்து, துன்புறுகின்ற அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இறைவாக்கினர் எசாயா முதல் வாசகத்தில் குறிப்பிடுகின்றார். சுருக்கமாகச் சொன்னால் கொடுப்பவருக்குக் கொடுக்கப்படும் என்கின்றது இன்றைய முதல் வாசகம். கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன.

1. உள்ளதிலிருந்து கொடுத்தல் (லூக் 19:1-10).
2.உள்ளதையெல்லாம் கொடுத்தல் (மாற் 12:41-44).
3.உள்ளதையும் கொடுத்து. உயிரையும் கொடுத்தல் (யோவா 19:28-30).

நாம் நலம்பெற என்ன செய்ய வேண்டும்?

முன்னொரு காலத்தில் ஓர் ஊர்மக்கள், அவ்வூரில் உள்ள மூன்று பணக்காரர்களில் யார் பெரியவன் என்பதை அறிந்துகொள்ள, ஒரே ஆளை மூன்று பணக்காரர்களிடமும் உதவி கேட்க அனுப்பினார்கள். முதல் பணக்காரன் உதவி கேட்டவனைப் பார்த்து : இந்த வீட்டிலிருந்து நீ எதை வேண்டுமானாலும் எடுத்துப்போகலாம் என்றான். இரண்டவாது பணக்காரன் : இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துப்போ என்றான். மூன்றாவது பணக்காரன் : இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துக்கொள். ஆனால் உடனே போய்விடாதே, சற்றுநேரம் பொறுத்திரு என்று சொல்லிவிட்டுத் தனது வேலைக்காரனை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றான்.

காத்திருந்தவன். வேலைக்காரன் மட்டும் திரும்பி வருவதைக் கண்டான். வேலைக்காரன் உதவிகேட்டு வந்தவனைப் பார்த்து. இதோ, இந்தப் பொற்காசுகளையும் என் தலைவன் உன்னிடம் கொடுக்கச் சொன்னார். உனக்காகத் தம்மையே அடிமையாக விற்றுவிட்டார் என்றான். மூன்று பணக்காரர்களில் மூன்றாவது பணக்காரன்தான் பெரியவன், உயர்ந்தவன், உன்னதமானவன், சிறந்தவன் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

தன்னிடம் உள்ளதை தனது சகோதர, சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ளும் எவரையும் இறைவன் உயர்த்தத் தவறுவதில்லை. இரண்டாம் வாசகம் குறிப்பிடுவது போல புனித பவுலடிகளார் சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் விரும்பவில்லை என்கின்றார். சிலுவை வெறுமையின் சின்னம். ஏழ்மையின் சின்னம், அன்பின் சின்னம், கொடுத்தலின் சின்னம். சிலுவையை மட்டுமே விரும்பினேன் என்று கூறுவதின் மூலம், அவரிடமிருந்த அனைத்தையும் அயலாருக்கு அளித்து விட்டதாகப் புனித பவுலடிகளார் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட பவுலடியாருக்கு இறைவன் அளித்த பரிசு என்ன என்பதை நாமறிவோம். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் முதல் இயலில் முதல் இறைவாக்கியத்தில் புனித பவுலடிகளார் தன்னை இயேசுவின் திருத்தூதர் என்று அழைத்துக்கொள்கின்றார். ஆம். இயேசுவால் அழைக்கப்பட்டவர்களுக்கு உரிய திருநாமம் புனித பவுலடியாருக்கும் இறைவனால் அளிக்கப்பட்டது. அது அவர் வாழ்ந்த பற்றற்ற வாழ்வுக்கு இறைவன் அளித்த மாபெரும் பரிசு.

உப்பு உணவிற்குள் கரைந்து, கலந்து, அதற்குச் சுவை ஊட்டுகின்றது; உணவைப் பாதுகாக்கின்றது. எந்த உணவோடு அது உறவாடுகின்றதோ, அந்த உணவிலிருந்து அது எதையும் பெறுவதில்லை! அப்படித்தான் ஒளியும் எதையும் பெறாமல் உலகிற்கு வெளிச்சத்தை அளிக்கின்றது; மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றது. இப்படியே நாமும் வாழவேண்டுமென்பது இயேசுவின் அவா. அவரின் அவாவை நிறைவேற்றி, இறைவனின் நிறையருளைப் பெற்று நலமுடன் வாழ்வோமாக!
மேலும் அறிவோம் :

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் : 212)

பொருள்: ஒருவன் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தும் உதவி பெறத் தகுதியுடைய சான்றோர் வளர்ச்சிக்குத் துணை புரிவதற்காகவே அமையும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு தாத்தா தன் பேரனிடம், "பேராண்டி! என் நாக்குச் செத்துப் போய்விட்டது" என்றதற்கு பேரன் அவரிடம், "செத்துப்போன நாக்கைப் புதைத்தீர்களா? எரித்தீர்களா?" என்று கேட்டான்,

நாக்குச் செத்துப்போய்விட்டது என்றால், நாக்கு சுவை இழந்துவிட்டது என்று பொருள். உணவுக்குச் சுவையூட்டுவது உப்பு. 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. உணவைச் சுவைத்து உண்ணக் கற்றுக்கொண்டுள்ள நாம். வாழ்வைச் சுவைத்து வாழ ஏன் கற்றுக்கொள்ளவில்லை? சுவையற்ற வாழ்வுக்குச் சுவையூட்ட வேண்டியவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்:" நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" (மத் 5:13).

உப்பு தன்னை உணவுப் பொருளுடன் கரைத்துக்கொண்டு, தன்னுருவை இழந்து உணவுக்குச் சுவை கொடுக்கிறது. அவ்வாறே கிறிஸ்தவர்கள் எங்கே. எந்தப் பண்பாட்டில் வாழ்கின்றனரோ அங்கே அந்தப் பண்பாட்டில் தங்களையே கரைத்துக்கொண்டு மக்களுக்கும் பண்பாட்டிற்கும் சுவையூட்ட வேண்டும். உப்பானது பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றது. அவ்வாறே சிற்றின்பம், நுகர்வு கலாச்சாரம், கட்டுப்பாடின்மை ஆகிய தீமைகளால் இவ்வுலகம் கெட்டுப்போகாமல் அதைப் பாதுகாக்க. வேண்டியதும் கிறிஸ்தவர்களுடைய கடமையாகும்.

உப்பு ஞானத்தைக் குறிக்கிறது. ஞானத்தை பசு ஞானம், பதி ஞானம் என்று இரு வகையாகக் பிரிக்கலாம். பசு ஞானம் என்பது. இவ்வுலகைப் பற்றிய அறிவு; பதி ஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு. இன்றைய அதி நவீன உலகில் அறிவு வளர்ந்த அளவுக்கு ஆன்மிகம் வளரவில்லை. பக்தி மார்க்கம் காணாமற் போய்விட்டது; பண மார்க்கம் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்நிலையில் கிறிஸ்துவின் சீடர்கள் உலகிற்கு உண்மை ஞானத்தைக் கொடுக்க வேண்டும். கடவுள் நம் வாழ்வில் கருப்பொருளாக, மையமாக அமைய வேண்டும்; மற்றவை அனைத்தும் இரண்டாம் நிலையில் வைக்கப்பட வேண்டும். இதுவே உண்மையான ஞானம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்; நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே (1 கொரி 2:5), அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்: இவ்வுலகம் மடமை என்று கருதும் சிலுவையில் அறையுண்ட மெசியாவே கடவுளுடைய வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

கடவுள் தமது இரக்கத்தை அனைவர்க்கும் காட்டுகிறார். அவர் தமது கதிரவனை நல்லோர்மேலும் தீயோர்மேலும் உதிக்கச் செய்கிறார். அவ்வாறே தேர்மையுள்ளோர் மேலும் நேர்மை அற்றோர்மேலும் தமது மழையைப் பொழிகிறார் (மத் 5:45). கடவுளைப்போல, நாமும் எவரையும் நமது அன்பு வட்டத்தில் இருந்து ஒதுக்காமல் அனைவரையும், பகைவரையும் அன்புசெய்து. நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டும் பக்குவம் அடையும்போது (மத் 5:43) நாமும் அவரைப்போல் நிறைவுடையோராய் உயர்கிறோம். "சிகரத்தை நோக்கிச் செல்வோமா?"

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகிறார்: "பழிக்கும்பழி வாங்க வேண்டாம்" (லேவி 19:18); நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: "தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். உங்கள் வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத் 5:39).

1981-ஆம் ஆண்டு மே திங்கள் 13-ஆம் நாள் முகமது அலி ஆஃகா என்ற இளைஞர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலைத் துப்பாக்கியால் சுட்டார். இதே ஆண்டு டிசம்பர் திங்கள் திருத்தந்தை தம்மைக் கொல்ல முயற்சி எடுத்த அந்த நபரைச் சிறைச்சாலையில் சந்தித்து தமது மன்னிப்பை அவருக்கு வெளிப்படுத்தி, அதன் மூலம் வானகத் தந்தையின் இரக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கணவர் தம் மனைவியின் காரில் சென்றார். கண் மண் தெரியாமல் அவர் கார் ஓட்டுவதைக் கண்ட அவரது மனைவி அவரிடம், "கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்க" என்று கேட்டார். கணவர் அவரிடம், "இது என் கார்; அதை எப்படியும் ஓட்டுவேன். அதைப்பற்றிக் கேட்க நீயார்?" என்று கேட்டார். வீடு திரும்பியதும் மனைவி தோசை சுட்டு கணவருக்குப் பரிமாறினார். தோசையெல்லாம் கறுப்பாக இருந்தது. கணவர் மனைவியிடம், "என்ன இது! தோசையெலாம் கறுப்பாக இருக்கிறது” என்று கேட்டதற்கு, மனைவி அவரிடம், "தோசை என் தோசை; அதை எப்படியும் சுடுவேன்: அதைப்பற்றிக் கேட்பதற்கு நீயார்?" என்று பதிலடி கொடுத்தார். இவ்வாறு ஒருவர் மற்றவரைப் பழிதீர்த்துக்கொள்ள ஆரம்பித்தால், வீடு வீடாக இருக்காது; அது கடுகாடாகக் காட்சியளிக்கும், புனிதம் என்பது அன்பின் நிறைவு. திருச்சட்டத்தின் நிறைவு என்ன? திருத்தூதர் பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோ 13:10). நமது அன்பு எவரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைக்கும் அன்பாக அமையும்போது, நாம் புனிதராகிறோம். கடவுளுக்கு நிகராகின்றோம்.

பூமியானது தன்னை மண்வெட்டி கொண்டு தோண்டும் விவசாயியைத் தாங்குவதோடு அவருக்கு வேண்டிய உணவையும் விளைவிக்கின்றது. அவ்வாறே தீமை செய்வோரைப் பொறுத்துக்கொள்வதோடு அவருக்கு நன்மை செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தவை” (குறள் 151).

நமது இலக்கு 'சிகரத்தை நோக்கி' என்பதை நினைவில் நிறுத்தி, வானகத் தந்தையைப்போல் இரக்கம் உள்ளவர்களாய்த் திகழ்ந்து, கடவுளைப்போல் நிறைவுள்ளவராய் மாறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அறத்தீபம் ஏந்திப் புறப்படு

பார்வையற்ற ஒருவர் தன் நண்பரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்ப இருந்தார். இரவு நேரம் நெருங்கியதால் அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். ஆனால் அவர் பிடிவாதமாகத் தன் வீடு திரும்ப முனைந்திருந்தார். ஆகவே எரியும் கண்ணாடிக் கூட்டு விளக்கு ஒன்றை அவரிடம் கொடுத்தனர். அதற்கு அவர் “ஒளியும் இருளும் எனக்கு ஒன்றுதான். எனவே விளக்கு வேண்டாம்” என்று சொன்னார். அப்பொழுது அவருடைய நண்பர் “விளக்கைக் கையில் வைத்திருங்கள். உங்களுக்குத் தேவையில்லை என்றாலும் எதிரில் வருகிறவர்களுக்குத் தேவைப்படும்” என்றார். விழி இழந்த அவர் விளக்கை ஏந்திக் கொண்டு வழக்கப்படி நடந்தார். சிறிது தூரம் சென்றபின் எதிரே வந்த ஒருவர் இவர்மேல் மோதி நின்றார். “என்ன, வழிமேல் ஒதுங்கிப் போகக் கூடாதா? என் கையிலிருக்கிற விளக்கு உனக்குத் தெரியவில்லையா?” என்று கோபமாகப் பேச, வழிப்போக்கர் "உன் கையில் உள்ள விளக்கு அணைந்துவிட்டது உனக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டபோதுதான் தன் விளக்கு அணைந்து போன தன்நிலை புரிந்தது.

இருண்ட வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு ஒளியாய்த் திகழவும் சாரமற்ற வாழ்க்கை நடத்துவோருக்கு உப்பாக விளங்கவும் அழைக்கப்படுகிற நாம் பல சமயங்களிலும் சுடர்மங்கிய விளக்காகவும், சுவை குன்றிய உப்பாகவும் இருக்கிறோம் என்பதை உணர்த்துகின்ற சிறு நிகழ்வு அது. கருத்தாழமிக்க செய்தியை வைரமுத்து வழங்குகிறார்:

“எரிகின்ற தீபம் ஒளி தருகின்ற போதும்
தீபத்தின் அடியில் இருள் வட்டம் போடும்
தீபத்திற்கே இரண்டு முகங்கள் என்றால்
மனிதர்க்கு இங்கு எத்தனையோ?"

நீங்கள் உலகின் ஒளி. பூமியின் உப்பு என்று கூறி கிறிஸ்தவனுக்கான பண்பையும், பணியையும் நினைவூட்டுகிறார் இயேசு. இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஒளி விளக்காகச் சுடர்விட ஒவ்வொரு கிறிஸ்தவரையும் அதுபோல் சமூக மாற்றச் சக்தியாகச் செயலாற்ற ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்தையும் அழைக்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்கு இரண்டு சேவைத்தளங்கள்: 1. நேரடி நற்செய்தி அறிவிப்பு: 2. சான்று பகரும் சாட்சிய வாழ்வு. இரண்டாவது வகையான சாட்சிய வாழ்வுக்கு, பிறர் வாழ்வில் நாம் ஒளியாகிட, ஒளியேற்றிட, உப்பாகிட, சுவையூட்டிட அழைக்கிறது இன்றைய வழிபாடு.

பிறர் கேட்கச் சொல்லும் வார்த்தைகள் அல்ல, பிறர் பார்க்க வாழும் வாழ்க்கையே நற்செய்திப் பணி.

ஆல்பெர்ட் சுவைட்சர் ஒரு தலை சிறந்த மதப்போதகர். அவர் ஒரு சமயம் ஓர் ஊரில் மறையுரை ஆற்ற வந்தார். அவர் இரயிலிலிருந்து இறங்கியதும் அவரை மாலையுடன் வரவேற்றனர். அங்கிருந்த அனைவரும் அவரது வருகையால் பெருமைப்படுவதாகக் கூறினர். பேசிக்கொண்டே வந்த ஆல்பெர்ட் சுவைட்சர் தூரத்தில் எதையோ பார்த்தவராய், “இதோ வந்துவிடுகிறேன். மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றார். எல்லோரும் ஆவலுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஒரு கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்து, ஓடிச்சென்று அவற்றைத் தானே சுமந்து வந்து மூதாட்டியை இரயிலேற்றிவிட்டார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், "இப்போதுதான் முதன்முறையாக ஒரு மறையுரை நடந்து போவதைப் பார்க்கிறேன்” என்று சொன்னாராம்.

சாரம் இழந்த உப்பு உப்பல்ல. சான்று பகராத வாழ்வு வாழ்வல்ல. கடவுளை நம்பாதவர்கள் இருக்கக் காரணம் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லாரும் கடவுள் இருப்பது போல வாழ்ந்தால் உலகில் நாத்திகமே இருக்காது. "இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?” (2 கொரி 6:14).

"அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்' (I யோ. 1:7) ஒளியின் பண்புகள் நம்மிடம் உள்ளனவா? ஒளி தூய்மையானது. இருளோடு தொடர்பில்லாதது. ஒளியைக் கண்டதும் இருள் மறைந்து விடும். ஒளியில் அனைத்தும் தெளிவுபடும். போலிகளைத் தோலுரித்துக் காட்டும்.

"கடவுள் ஒளியாக இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை” (1யோ.1:5). "ஆரறிவார் அண்ணல் பெருமையை ... பேர் அறியாப் பெருஞ்சுடர்” என்று வியக்கிறார் திருமூலர். தந்தையான கடவுளின் அருள் ஒளி இறைமகன் இயேசுவில் விளங்கியது. “அவர் ஒருவரே அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்” (1 திமோ. 6:16). “நானே உலகின் ஒளி" (யோ. 8:12) என்று இயேசுவும் அதனை உறுதி செய்கிறார். தூய ஆவி கூடத் தீப்பிழம்பாகத் தானே திருத்தூதர்களின் மேல் இறங்கினார்! மூவொரு கடவுளே ஒளியின் வெளிப்பாடு! அதனால்தான் “ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?" (தி.பா. 21:1) என்று திருப்பாடல் ஆசிரியரின் மனத்தில் இத்துணைத் தெம்பும் துணிவும்!

ஒளியான இயேசுவுக்கு நாம் சாட்சிகள் என்பதை உணர்த்தவே "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது" (மத். 5:14) என்கிறார் இயேசு. கடமையாக அல்ல இயல்பாகத் திருமுழுக்கில் “கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக் கொள்” என்று கூறி எரியும் திரி கொடுக்கப்படுகிறது.

"உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி" ( 1 பேதுரு 2:9).

"ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும், நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது" (எபேசி. 5:8-9).

"இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக!" (உரோமை 13:12-13).

நான் என்ன சூரியனாகச் சுடர் வீசமுடியுமா என்று தயங்காதே. ‘A lantern can do what the sun can never do - shine at night' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. சூரியனால் இரவில் முடியாத ஒன்றைச் சின்னஞ்சிறு அகல் விளக்கு சாத்தியமாக்கும் - இரவில் கூட ஒளிரும்.

வாழ்க்கை என்பது சிறு மெழுகுவர்த்தி அல்ல. எனக்கு அது ஓர் அற்புதத் தீபம். அதைத் தற்சமயம் கையில் பிடித்திருக்கும் நான் வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைப்பதற்குள்ளாக, எவ்வளவு பிரகாசமாக எரியச் செய்ய முடியுமோ, அவ்வளவு பிரகாசமாக எரியச் செய்ய விரும்புகிறேன்.

புறப்படடா கத்தோலிக்கா அறத்தீபம் ஏந்திக் கையில்
புறப்படு நீ எட்டுத்திக்கும் புதுவிளக்கு ஏற்றி வைக்க
அவனியின் உப்பு என்றால் அகத்தினுள் அழியலாமோ?
குவலயத் தீபம் என்றால் குடவிளக்கு ஆகலாமோ?
பவ இருள் வெள்ளமாகிப் பாயுது வேகமாக
தவ நிறை மறைப்புதல்வன் சவம் எனக் கிடக்கலாமோ?

"பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்... அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்போது உன் ஒளி விடியல்போல் எழும்" (எசாயா 58:7-8).

இருளின் நடுவே ஒளியாக வாழ்வோம். இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். மனித மாண்பு விளங்க உழைப்பவர் எல்லோரும் ஒளியே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உப்பாய் ஒளியாய் இருப்பதில் சவால்கள்

சிறுமி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாமல் திருப்பலியில் கலந்துகொண்டார். திருப்பலி நிகழ்ந்த கோவிலில், நல்லாயனான இயேசுவின் அழகிய உருவம், வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி சன்னலில் பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும், திருப்பலி நிகழ்த்திவந்த அருள்பணியாளர் நல்ல உயரம் கொண்டவர் என்பதால், அவர் மறையுரை வழங்கும் இடத்திற்கு வந்ததும், அவருக்குப்பின் இருந்த நல்லாயன் உருவப்படம் சிறுமியின் பார்வைக்கு மறைக்கப்படும். ஒரு வாரம், திருப்பலி நிகழ்த்த வந்தவர் உயரம் குறைவானவராக இருந்தார். அவர், மறையுரை ஆற்ற வந்தபோது, நல்லாயன் உருவம் சிறுமியின் பார்வையிலிருந்து மறைக்கப்படவில்லை. அன்று, திருப்பலி முடிந்தபின் சிறுமி தன் தாயிடம், "அம்மா, ஒவ்வொரு வாரமும் நான் இயேசுவை பார்க்கமுடியாதவாறு மறைத்து நிற்கும் அந்த சாமியார் இந்த வாரம் வரலையா?" என்று கேட்டார்.

இந்த நிகழ்வை நாம் ஓர் உவமையாக எண்ணிப் பார்க்கலாம். நற்செய்தியை போதிப்பவர்கள், தங்கள் உருவத்தால் மட்டுமல்ல, தங்கள் சொல் திறமையாலும், இயேசுவின் உருவத்தை, அவரது நற்செய்தியை மறைக்கும் ஆபத்து உள்ளது என்பதை அந்தச் சிறுமியின் கேள்வி நமக்கு உணர்த்துகிறது.

நற்செய்தியையும், அதன் மையமான இயேசுவையும், அதிலும் குறிப்பாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும் போதிப்பதற்கு சொல்வன்மை தேவையில்லை என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் - 1 கொரிந்தியர் 2:1-5 - புனித பவுல் அடியார் கூறுகிறார். சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. (1 கொரி. 2:1-2)

அறிவார்ந்த விளக்கங்களிலும், வாதத் திறமையிலும் சிறந்த பரிசேயரான பவுல் அடியார், தன் திறமைகளை பயன்படுத்தி நற்செய்தியை பகிர்வதற்குப் பதில், உண்மையான இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மக்களுக்கு எடுத்துரைத்தார். இயேசுவின் சீடராக அவரோடு வாழும் வாய்ப்பு இல்லாதபோதும், பவுல் அடியார், இயேசுவால் ஆட்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து, அவரது எளிமையான, தெளிவான போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அதை மக்களிடம் எடுத்துச் செல்வதில் எளிமையைக் கடைபிடித்தார்.

அதேவண்ணம், இயேசுவின் போதனைகளில் வெளிப்பட்ட எளிமை, ஏனைய சீடர்களின் உள்ளங்களிலும் ஆழமாக இடம்பெற்றன. கதை வடிவில் இயேசு கூறிய உவமைகளும், அவர் பயன்படுத்திய உருவகங்களும் சீடர்களின் நினைவுகளில் ஆழப் பதிந்தன. அந்நினைவுகளிலிருந்து உருவான நான்கு நற்செய்திகள், இவ்வுவமைகளையும், உருவகங்களையும் 20 நூற்றாண்டுகளாக நமக்கு வழங்கிவருகின்றன. இயேசு பயன்படுத்திய பல உருவகங்கள், தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதால், அவற்றின் உதவியுடன் அவர் சொன்ன உண்மைகள், நம் மனங்களில் ஆழமாய், பாடமாய் பதிந்துள்ளன.

உருவகங்களின் உதவியுடன் இயேசு கூறிய உண்மைகளை, புனித மத்தேயு, தனது நற்செய்தியின் 5, 6, மற்றும் 7 ஆகிய மூன்று பிரிவுகளில் தொகுத்து வழங்கியுள்ளார். இப்பகுதியை, நாம், ‘மலைப்பொழிவு’ என்றழைக்கிறோம். மலைப்பொழிவின் அறிமுகப் பகுதியாக விளங்கும் ‘பேறுபெற்றோர்’ கூற்றுகளை சென்ற ஞாயிறு நற்செய்தியாகக் கேட்டோம். இன்றும், இனிவரும் இரு ஞாயிறன்றும், இம்மலைப்பொழிவின் சில பகுதிகளை, நாம் நற்செய்தியாக செவிமடுக்கவிருக்கிறோம். இம்மூன்று வாரங்களைத் தொடர்ந்து நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு, இயேசுவின் மலைப்பொழிவு, ஏற்றதொரு தயாரிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில், - மத்தேயு 5:13-16 - இயேசு, இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) என்ற உருவகங்கள் வழியே, ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை இயேசு நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். உப்பும், விளக்கும் இல்லாத இல்லங்கள் இல்லை. மதம், இனம், ஏழை, செல்வந்தர், என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா இல்லங்களிலும் பயன்படுவது, உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள முயற்சி.

உப்பும், ஒளியும் எவ்விதம் உருவாகின்றன என்பதைச் சிந்திக்கும்போது, அவற்றை, தூய்மைக்கு அடையாளங்களாகப் புரிந்துகொள்ளலாம். இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள இருபெரும் கொடைகளான சூரிய ஒளி, கடல் நீர் இரண்டும் இணைந்து, உப்பு உருவாகிறது. அதேபோல், நாம் ஏற்றிவைக்கும் ஒளி, மெழுகிலிருந்து உருவானாலும், எண்ணெயிலிருந்து உருவானாலும், எரிகின்ற சுடர், எவ்வித வேறுபாடுமின்றி, தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. நாம் ஏற்றிவைக்கும் மெழுகு, கறுப்பானாலும், வெள்ளையானாலும் சரி, நாம் ஊற்றிவைக்கும் எண்ணெய், சுத்தமானதாகவோ, மாசடைந்ததாகவோ இருந்தாலும் சரி, ஏற்றப்பட்ட சுடர், எப்போதும் தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. உப்பும், ஒளியும், தூய்மையின் அடையாளங்கள் என்பதால், இயேசு, இவற்றை, நம்முடன் ஒப்புமைப்படுத்தி, அந்தத் தூய்மை, நம் வாழ்வில் வெளிப்படவேண்டும் என விழைகிறார்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பின் பண்புகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், பின்னணியில் இருந்து செயலாற்றுவது. உப்பு இல்லையேல், உணவுக்குச் சுவையில்லை. ஆனால், உப்பு மட்டுமே உணவாக முடியாது. உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பு, ஓரு குறிப்பட்ட அளவுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ‘உப்பு இல்லாத உணவு குப்பையிலே’ என்பதை அறிவோம். அதேபோல், உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட உணவும், குப்பையிலே. உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு, அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர், மண்ணுலலகிற்கு உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?

அவர்கள், உலகிற்குத் தேவையானவர்கள் என்றாலும், பின்னணியில் இருந்து செயலாற்றுகிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை. உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும், உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. (மத்தேயு 5:13) உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பு, தன் சுவையை இழந்தால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப்பொருட்கள் கலந்தால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, உலகச் சக்திகளால் மாசடைந்தால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு, வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.

மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, நம் மனதில் மற்றுமோர் எண்ணமும் எழுகிறது. உணவுக்கு அவசியமாகத் தேவைப்படும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து, உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில், எத்தனையோ மனிதர்கள், இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். அவர்கள் இல்லையேல், உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், அவர்கள், ஒருபோதும் உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள், மனித சமுதாயத்தால் மிதிக்கப்படுகிறார்கள்.

உலகெங்கும், துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள, பலகோடி மக்களை, இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாமல், ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள், ஒரே ஒரு நாள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை என்னவாகும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக உலக அரங்கில் இந்தியா பறைசாற்றி வந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டிலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி, தங்கள் கரங்களால் கழிவுகளை அகற்றும் மனிதர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். இவர்களில் பலர் இப்பணியில் ஈடுபடும்போது, மூச்சுத்திணறி மரணம் அடைவதையும் பலமுறை நாம் செய்திகளாக வாசிக்கிறோம். 'மனிதரால் மிதிபடும் உப்பாக' விளங்கும் இவர்களுக்காக, இவர்களுடைய பணியில் மாற்றங்கள் உருவாக நாம் இறைவேண்டல் செய்வது அவசியம்.

அதேபோல், உலகெங்கும் உழைக்கும் உழவர்கள், சேற்றில் கைவைக்கவில்லையெனில் நாம் சோற்றில் கைவைக்க முடியாது என்பதை அறிவோம். உழவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்ன என்பதையும் நாம் வேதனையுடன் உணர்கிறோம். மனிதர்களால் அடிக்கடி மறக்கப்படும் உழவர்கள், மனிதர்களை மறந்துவிட்டால், இவ்வுலகம் என்னாகும்? உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடிக்கும் உழவர்கள் போன்ற, பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதையை மக்களும், அரசுகளும் வழங்கவேண்டும் என்று செபிப்போம்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது, இயேசு வழங்கும் அடுத்த உருவகம். ‘ஒளி’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள்’ என்ற சொல், தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, இருளில் ஏற்றப்படும் விளக்கு, தன்னை வெளிச்சமிட்டு காட்டாமல், சுற்றியுள்ளவற்றை வெளிச்சத்திற்கு கொணர்கிறது. மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான், வெளிச்சம் தரமுடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு, சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்கவோ, இழக்கவோ மறுக்கும் விளக்கு, ஒளி தரமுடியாது.

உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே, வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும், நம்மைச் சுற்றியுள்ள இருள் எவ்வளவுதான் கருமையாக இருந்தாலும், அதை நீக்க முன்வரவேண்டும். இருளில் வாழும் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

உலகின் ஒளியாக நாம் எவ்வாறு வாழமுடியும் என்பதை, இறைவன், இன்றைய முதல் வாசகத்தில் - எசாயா 58:7-10 - நமக்கு ஆலோசனைகளாக தருகின்றார். அவர் தரும் ஆலோசனைகளுக்குப் பின்னணியாக, உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அவர், இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். விரைவில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்தில், நோன்பு பற்றிய சிந்தனைகள் நமக்குள் எழும் இத்தருணத்தில், "ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது?" (எசாயா 58:5) என்ற கேள்வியை, இறைவன், நமக்கு முன் வைக்கிறார். இதைத் தொடர்ந்து, உண்மையான நோன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் இறைவன் வரையறுப்பது, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது: எசாயா 58:7

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

இத்தகைய நோன்பு, நம்மை, இவ்வுலகில், ஒளியாக வாழச்செய்யும் என்ற உண்மையை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்: எசாயா 58: 8-10

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்... உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

உப்பாக, ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலேயே தங்கிவிடும் வாழ்வு அல்ல. குப்பியிலோ, கிண்ணத்திலோ வைக்கப்பட்டிருக்கும் உப்பு, அங்கேயே இருக்கும்வரை, பயன்தராது. அது எப்போது, குப்பியிலிருந்து வெளியேறி, உணவுடன் கலக்கிறதோ, அப்போதுதான், உப்பு, தான் உருவானதன் பயனை அடைகிறது. அதேபோல், மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே, "வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.

சுயநல வட்டத்தைவிட்டு வெளியேறினால் மட்டுமே திருஅவை பயன்தர முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகளில் அவ்வப்போது கூறி வருகிறார். கோவில்களில் அடைபட்டு, மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் பாதுகாப்பு உள்ளதென்று உணரும் திருஅவை பயனற்றது என்று, திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார். உணவு தன்னைத் தேடி வரவேண்டும் என்று உப்பு காத்திருந்தால், பயன்தராது என்பதுபோல, மக்கள் தன்னைத் தேடிவரவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், 'சாமியார் பங்களா'க்களில் காத்திருப்பது பயனற்றது என்பதை, திருத்தந்தை, பலமுறை தன் உரைகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உப்புக் குப்பிகளுக்குள் உறங்கி சுகம் காணாமல், மரக்காலுக்குக் கீழ் மறைந்துகொள்ளாமல், உலக மக்கள் வாழ்வில் சுவையும், ஒளியும் சேர்க்க, நாம் உப்பாக, ஒளியாக செயலாற்றும் துணிவை இறைவன் நமக்கு வழங்குவாராக! ஆற்றும் செயல்களில், நம்மையே மையப்படுத்தாமல், பின்னணியில் இருந்து கிறிஸ்துவின் நற்செய்திக்கு சுவையும், ஒளியும் வழங்கும் உப்பாக, ஒளியாக வாழும் வரங்களை இறைவன் நமக்கு தருவாராக! திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும் திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இருளில் ஒளியென மிளிர்வர்!

பசித்தோர்க்கு உதவிடும் மூதாட்டி:

பிழைக்க வந்த இடத்தில், தான் பிழைத்தது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பிழைக்க வைக்கும் மூதாட்டி ஒருவர் இருக்கின்றார். அவர்தான் காந்திமதி என்ற மூதாட்டி.

வெறும் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் காந்திமதி மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரைச் சேர்ந்தவர். இவர் பிழைப்பதற்காகத் தன் குடும்பத்தோடு மதுரையில் உள்ள கீழமாசி வீதிக்கு வந்திருக்கின்றார். அங்கு இவர் தன் நான்கு பிள்ளைகளுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தந்துவிட்டு, மீதமுள்ள நாள்களை என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு, ‘கைவிடப்பட்ட ஏழைகள், அனாதைகள், மாற்றுத் திறனாளிகள், பிச்சைக்காரர்கள் யாவருக்கும் நாம் ஏன் ஒருவேளையாவது உணவிடக் கூடாது?’ என்ற எண்ணம் உதித்தது.

இதைத் தொடர்ந்து இவர் மேலே குறிப்பிடப்பட்ட மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கத் தொடங்கினார். இன்றைக்கு இவரது உதவியால், இவர் வாழும் பகுதியில் எழுபத்துக்கும் மேற்பட்டோர் வயிறார உணவு உண்கின்றார்கள். இவரது இந்த நல்ல மனத்தைப் பார்த்துவிட்டுப் பலரும் தங்களால் முடிந்த அளவு பண உதவியையும், பொருள் உதவியையும் தருகின்றார்கள். தவிர, மக்கள் இவரை ‘அன்ன பூரணி’ என அன்போடு அழைக்கின்றார்கள்.

பிறரின் துன்பத்தைத் தன்னுடைய துன்பத்தைப் போன்று உணர்ந்து, அதைப் போக்க முயல்பவரே மிக உயர்ந்த மனிதர். அந்த அடிப்படையில், மக்கள் உணவின்றி வாடுவதைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவளித்துக்கொண்டிருக்கும் காந்திமதி என்ற ‘அன்னபூரணி’ உண்மையில் மிக உயர்ந்தவர்.

பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்மை இருளில் ஒளியென மிளிர நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி இருளில் ஒளியென மிளிர்வது என்பது குறித்துச் சிந்திப்போம்.

ஏன் மன்றாட்டு கேட்கப்படுவதில்லை?
“கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்பதில்லை!” என்று ஒருசிலர் குறைபட்டுக் கொள்வதுண்டு. எதற்காகக் கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்பதில்லை? என்று அவர்கள் எப்போதாவது ஆற, அமர யோசித்துப் பார்த்தால், யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுகின்ற, “நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில், நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள். சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கின்றீர்கள்” என்பதே பதிலாக வரும்.

இஸ்ரயேல் மக்களில் ஒருசிலர் இப்படித்தான் தங்கள் உடலை ஒறுத்து, கடவுளிடம் மன்றாடியபோதும், அவர் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கவில்லை என்று முறையிட்டார்கள். அப்போது கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, உடலை வருத்தி நோன்பிருப்பது மட்டும் உண்மையான நோன்பு அல்ல, மாறாக, பசித்திருப்போர்க்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாதவரை இல்லத்திற்கு அழைத்து வருவதும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும்தான் உண்மையான் நோன்பு. இம்மாதிரியாய் நோன்பிருக்கும்போது அவர்களின் மன்றாட்டு கேட்கப்படும்; நலமான வாழ்வு துளிர்க்கும்; வாழ்க்கை இருளில் ஒளியென மிளிரும் என்கிறார். இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

சிலுவையைப் பற்றி அறிவி
உண்மையாய் நோன்பிருக்கும்போது மட்டுமே ஒருவரது மன்றாட்டு கேட்கப்படும்; நலமான வாழ்வு துளிர்க்கும்; இருளில் ஒளியென மிளிர முடியும் என்பது இறைவார்த்தை சொல்லும் செய்தி. இந்த உண்மை எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இதனை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். அது ஒவ்வொருவருடைய தலையாய கடமை. ஏனெனில், பவுல் சொல்வது போல, “அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும்” (உரோ 10: 17).

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் இயேசுவைப் பற்றி, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட மெசியாவாம் இயேசுவைப் பற்றி அறிந்து, அறிவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

“மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21: 23) என்பது யூதர்கள் நடுவில் இருந்த நம்பிக்கை. இந்நிலையில் பவுல், “சிலுவை, அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ, அது கடவுளின் வல்லமை” (1 கொரி 1: 18) என்று சொல்லிவிட்டு, “நான் உங்களிடையே இருந்தபோது, மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை” என்கிறார்.

சிலுவையில் அறையப்பட்ட மெசியாவைப் பவுலைப் போன்று அறியவேண்டும், அவரை மற்றவருக்கும் அறிவிக்க வேண்டும். காரணம், அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினர் (லூக் 24: 19), உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் (லூக் 5: 33-35) என்று கற்பித்தவர். அப்படிப்பட்டவரை நாம் ஆழமாக அறிந்து, அவரை அடுத்தவருக்கு அறிவிக்கும்போது, அவர்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்போது அவர்களும் உண்மையாய் நோன்பிருப்பார்கள்.

எழுந்து ஒளிவீசு:
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைத் தான் அறிந்ததையும், அவரை மக்களுக்கு அறிவித்ததையும் பற்றிப் பவுல் குறிப்பிடுவதில் ஒரு முக்கியமான செய்தி அடங்கி இருக்கின்றது. அது என்னவெனில், இயேசு நமக்கு மீட்பளிக்க பாடுகளையும் சிலுவைச் சாவையும் ஏற்றுக்கொண்டார். எனில், இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்வதுபோல், நமது ஒளி மனிதர் முன் ஒளிர்வதற்கு நாம் கிறிஸ்துவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்க காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்தவர் அல்லாதவரிடமிருந்து பலவிதமான துன்பங்கள் நேர்ந்தன. இதனால் ஒருசில கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் மத்தேயு நற்செய்தியாளர், “எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக, விளக்குத் தண்டின்மீதே வைப்பர். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!” என்று எழுதுகின்றார்.

ஒளியைப் போன்று எழுந்து ஒளிவீசுபோது காற்று போன்ற இடர்களும் துன்பங்களும் நமக்கு வரலாம். இத்தகைய வேளைகளில் நமக்காகச் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட, சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்த இயேசுவை நம் கண்முன் கொண்டு (எபி 12:2) எழுந்து ஒளிவீசினால், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக்கேட்டது போன்று நமது மன்றாட்டு கேட்கப்படும்; நமக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். மேலும் பதிலுரைப்பாடலில் பாடக்கேட்டதுபோன்று, நம்மால் இருளில் ஒளியென மிளிர முடியும்.

சிந்தனைக்கு:
‘எதனாலும் உள்ளொளியை அணைக்க முடியாது’ என்பார் மாயா அஞ்சலோ என்ற அறிஞர். நாம் கிறிஸ்துவிடமிருந்து உள்ளொளி பெற்றவர்களாய்க் கடவுளை உண்மையாய் வழிபடுவோம். நமது வழிபாடு பெயரளவுக்கு இல்லாமல், உண்மையாய் இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இதய உருவாக்கம்!

இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்று, கடந்த வார ஞாயிறு வழிபாடு (நற்செய்தி வாசகம்) நமக்கு நினைவூட்டியது. நம்முடைய பிரசன்னம் வெளிப்புறத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து இது நமக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:17-27) இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை சீடரின் உள்ளத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை எடுத்தியம்புகிறது அல்லது இதய உருவாக்கமே சீடத்துவத்தின் நோக்கம் என்று சொல்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 15:15-20) சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகவும். ஞானநூல்களில், ஒன்றாகவும் உள்ளது இந்நூல். ‘ஞானம்’ என்பதை இப்படி வரையறுக்கலாம்: 'நம்முடைய நலத்திற்கும், வளத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஏற்றபடியான தெரிவுகளைச் செய்யும் கலை.' ஒவ்வொரு மனிதரும் தான் விரும்புவதைச் செய்யும் விருப்புரிமை பெற்றிருக்கின்றார் எனவும், நன்மை எது? தீமை எது? என்பதைப் பகுத்தாய்ந்து, தீமையை விலக்கி நன்மையைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு என்றும், தன்னுடைய நடத்தை பற்றிய தெரிவுகளை மேற்கொள்ளும் முழுச் சுதந்திரத்தை அவர் பெற்றிருக்கின்றார் என்றும் ஞானநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், 'ஞானம்’ மற்றும் 'மதிகேடு' என்ற இரு பெரும் பிரிவுகளாக மனித தெரிவுகளைப் பிரித்து, ‘ஞானம்’ நிறைவான மற்றும் ஆசீர்பெற்ற வாழ்வுக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது என்றும், ‘மதிகேடு' இறப்பிற்கு அழைத்துச் செல்கிறது என்றும் கற்பிக்கின்றன. இப்படிப்பட்ட கற்பித்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

இன்றைய வாசகத்தின் பாடச் சூழல் மனிதர்கள் கொண்டிருக்கின்ற விருப்புரிமை என்ற மேலான கொடையைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாசக்த்தின் முதல் பகுதி மனிதர்கள் பெற்றிருக்கின்ற விருப்புரிமையையும் தன்னார்வ மனத்தையும் அடிக்கோடிடுகிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் உண்டு. 'நீர் - நெருப்பு: 'வாழ்வு - சாவு' என்னும் இரண்டு எதிர்துருவங்கள் நம் முன் நிற்க, நான் கையை நீட்டி எனக்கு 'விருப்பமானதை’ நான் தெரிவு செய்ய வேண்டும். வாசகத்தின் இரண்டாம் பகுதி கடவுளுக்கு ஏற்ற வழிகளைத் தெரிவு செய்ய என்னைத் தூண்டுகிறது. இதையே 'ஆண்டவரின் ஞானம் என்கிறார் ஆசிரியர். இது திருச்சட்டங்களில் காணப்படுகிறது. மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த கடவுள் அவர்கள் தீமையில் உழல வேண்டும் என்று கட்டளையிடவோ, பாவம் செய்ய அனுமதி கொடுக்கவோ இல்லை. இந்த உலகின் இயக்கத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் மனித தெரிவுகள் அவர்களுக்கு அதற்கேற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கிறார்.

ஆக, ஆண்டவரின் ஞானத்தைப் பெறுதலும், அந்த ஞானத்தின் பின்புலத்தில் 'நீரை,' 'வாழ்வைத்' தெரிவு செய்தலே இதய உருவாக்கம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1கொரி 2:6-10), கொரிந்து நகரத் திரு அவையில் இருந்த பிரிவுகளையும், வேறுபாடுகளையும். ஏற்றத்தாழ்வுகளையும் களையுமாறும், அவர்களுடைய குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டு பிரிவுகளைக் கடந்து நிற்குமாறும் அறிவுறுத்தும் பவுல், தன் கருத்தை வலியுறுத்த கடவுளின் ஞானம் என்னும் கருதுகோளை முன்னெடுக்கின்றார். யூத ஞான இலக்கியம் சொல்வதுபோல, கடவுளின் ஞானம் எல்லா வகை மனித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது என்றும், அது மறைபொருளாய் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்றுக்கொள்கின்றார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே ஞானம் கடவுளோடு இருந்தது. கடவுள் தாம் விரும்புகிறவருக்கு அந்த ஞானத்தை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் ஞானம் உலகுசார் வாழ்க்கை முறையையும் தாண்டி, எல்லாவற்றின் இறுதியை நோக்கியதாக இருக்கிறது. மேலும், இவ்வகை ஞானம் மனித வாழ்க்கையை மாட்சியை நோக்கி - அதாவது, கடவுளின் வாழ்விலேயே நாம் பங்குபெற - நகர்த்துகிறது.

இப்படிப்பட்ட மேன்மையை அல்லது மாட்சியை நோக்கி நகரும் கொரிந்து நகரத் திரு அவை தனக்குள் பிளவுகளையும், பிரிவினைகளையும் எப்படி வைத்துக்கொள்ள இயலும்? என்று அவர்களைச் சிந்திக்க அழைக்கின்ற பவுல், ஒளிந்திருக்கும் மறையுண்மையான ஞானத்தைக் கண்டடையும் வழியையும் சொல்கின்றார்; ஞானமும், அறிவும் நமக்கு தூய ஆவியாரிடமிருந்து வருகிறது.' தூய ஆவியாரின் செயல்பாட்டின்படி வாழ்பவர் முதிர்ச்சி அடைகிறார். இந்த உலகின் ஞானத்தின்படி வாழ்வோரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார். இவ்வுலக ஞானத்தின்படி வாழ்பவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடிக் கரைந்துவிடும். ஆக, தூய ஆவியாரின் இயக்கத்தின்வழி வாழ்பவர் இறைஞானத்தைப் பெற்றவராக இருப்பார். அவருடைய வாழ்க்கை அவர் அடையப் போகும் மாட்சியை நோக்கியதாக இருக்கும்.

ஆக, கடவுளுடைய ஞானத்தின்படி வாழுமாறு தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மையே கையளிப்பதே இதய உருவாக்கம்.

மலைப்பொழிவின் ஒரு நீண்ட பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் : 5:17-37) வாசிக்கின்றோம். முதலில், இயேசு, 'திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை. மாறாக, நிறைவேற்றவே வந்தேன்' என்பதை வலியுறுத்துகின்றார். ஆக, இயேசுவின் பணி ஏற்கனவே கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடங்கியுள்ள வெளிப்பாட்டின் நீட்சியே தவிர, அதன் அழித்தல் இல்லை என்பதை உறுதி செய்கிறார். இயேசுவின் பணியின் புதுமை என்பது மனித வாழ்வின் வழிகாட்டுதலுக்கான புதிய நெறிமுறைகளை வழங்குவதில் அல்ல; மாறாக, ஏற்கனவே உள்ள வழியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மூன்று கட்டளைகளை எடுத்து, அவற்றின் பின்புலத்தில் சரியான வழி என்ன என்பதை வரையறை செய்கிறார் இயேசு. இந்த மூன்று கட்டளைகளும் மனித வாழ்வின் சவால் நிறைந்த பகுதிகள்: கோபம், பாலுணர்வு மற்றும் தனிநபர் நாணயம்.

'கொலை செய்யாதே!" என்ற கட்டளையோடு தொடங்குகிறார் இயேசு. மனித உயிர்களை அழிக்கும் குழுமங்களைச் சிதைக்கும் முதன்மையான காரணி வன்மம் அல்லது வன்முறை. இது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும், நலனையும் சீர்குலைக்கிறது. வன்முறையின் வேர் கோபம். கோபமின்றி வன்முறையும், கொலையும் நிகழ்வதில்லை. கோபத்தைத் தடுப்பதன் வழியாக, வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடியும். மேலும், சின்னச் சின்ன மனத்தாங்கல்கள். உள்ளக்கீறல்கள் ஆகியவற்றையும் சரி செய்தபின், பலி செலுத்துதலே சால்பு என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு.

இரண்டாவதாக, 'விபசாரம் செய்யாதே!" கட்டுப்படுத்தப்படாத பாலுணர்வு குடும்ப உறவைச் சிதைக்கிறது. பாலுணர்வுப் பிறழ்வின் அடிப்படையான உணர்வு காமம் என்பதை அடையாளம் காட்டுகிறார் இயேசு. 'கண்களைப் பிடுங்குதல் மற்றும் கைகளை வெட்டுதல்' போன்ற உருவகங்கள் வழியாக, காமஉணர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது குடும்ப உறவைப் பிடுங்கி எரிந்தும், வெட்டியும் விடும் என எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு அல்லது மணவிலக்கும் குடும்ப உறவைப் பாதிக்கும் என்பது இயேசுவின் தொடர்பாடமாக இருக்கிறது.

தொடர்ந்து, 'பொய்யாணை இடாதீர்!’ அல்லது 'பொய்ச்சான்று சொல்லாதே!' என்ற கட்டளை பற்றிப் பேசுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் ஆணையிடுதல் என்பது, ஒரு சாதாரண செயலாக, நிகழ்வாக இருந்தது. ஒருவர் தான் சொல்வது உண்மை என்று உறுதி செய்யவும் அல்லது தான் ஒரு செயலைச் செய்வது உறுதி என்று அறிக்கையிடவும், ஆணையிடுவது மரபு. இதில் என்ன பிரச்சனை என்றால், இப்படி ஆணையிடுபவர், தன்னுடைய தனிநபர் நாணயத்தன்மையை மறந்து, தன் நாணயத்தன்மையை உறுதிசெய்ய கடவுளையோ, இன்னொருவரையோ துணைக்கு அழைக்கிறார். மேலும், தன் ஆணையை நிறைவேற்ற முடியாமற்போக, அவர் கடவுளையும், மற்றவரையும் கூட பொய்யராக்கிவிடுகிறார். இதற்கு மாற்றாக ஆணையிடுதலையே தவிர்க்குமாறு அழைக்கிறார் இயேசு. ஒருவரின் தனிநபர் நாணயம்தான் உண்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டுமே தவிர, வெளிப்புறத்திலிருந்து வரும் ஒருவர் அல்ல என்று அறிவுறுத்துகிறார்.

ஆக, இந்த மூன்று கட்டளை நீட்சிகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது அல்லது இவற்றை ஒரே கருத்துருக்குள் அடக்கிவிடலாம். ‘இதய உருவாக்கம்' - கட்டளைகள் செயல் வடிவம் பெறவேண்டுமெனில், இதயம் உருவாக்கம் அவசியம். கோபத்தையும், காமத்தையும் உள்ளத்திலிருந்து அகற்றும்போது, கொலை மற்றும் விபசாரம் என்னும் ஆபத்துகள் மறைந்துவிடும். தனிநபர் நாணயம் என்பதும் இதய உருவாக்கத்தின் ஓர் அங்கமே. இதையே மனப்பாங்கு புதுப்பித்தல் என்கிறோம். மனப்பாங்கு புதுப்பிக்கப்படாமல் வெறும் செயல்களை மட்டும் சரி செய்தல் நீண்ட பலனைத் தராது. ஆனால், ஆண்டவரின் ஞானத்தின் வழிகளுக்கேற்ப உள்ளம் உருவாக்கம் அடைந்தால் கட்டளைகளை நிறைவேற்றுவது எளிதாகும். இயேசு கட்டளைகளை மாற்றவில்லை. ஆனால், இதயம் மற்றும் மனப்பாங்கு புதுப்பித்தல் வழியாக கட்டளைகளை நிறைவேற்ற முடியும் என்று சொல்வதன் வழியாக கடவுளின் கட்டளைகளை புதிய மற்றும் ஆழமான நிலைக்கு எடுத்துச் செல்கிறார் இயேசு.

இவ்வாறாக, கட்டளைகளைக் கடைப்பிடிக்க இதய உருவாக்கம் அவசியம் என்பதை நற்செய்தி வாசகமும், நன்மையைத் தேர்ந்து தெளிதல் இதய உருவாக்கத்தின் முதல் படி என்பதை முதல் வாசகமும், தூய ஆவியாரின் உடனிருப்பு அதன் இரண்டாம் படி என்பதை இரண்டாம் வாசகமும் நமக்குச் சொல்கின்றன.

இன்று நம்முடைய இதயங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்பதுதான் கேள்வி.

இன்று நாம் பல நேரங்களில் மேலோட்டமாகவே வாழ்கின்றோம். நல்லா இருக்கணும், நல்லதே செய்யணும், கோபப்படக் கூடாது, தவறான அல்லது தீய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது, பொய் பேசக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறோம். அதன்படி நடக்கவும் செய்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்வின் பேட்டரி விரைவாக : தீர்ந்துவிடுகிறது. மீண்டும் செய்த தவறுகளையே செய்ய ஆரம்பிக்கின்றோம். விரைவாகத் தீர்ந்துவிடும் பேட்டரிகளை அகற்றிவிட்டு, நீடித்த இறைவனோடு தொடர்பில் இருப்பதுதான் இதயத்தைப் புதுப்பிப்பது அல்லது இதயத்தை உருவாக்குவது. இதயம் உருவாக்கப்பட்டுவிட்டால் நம்முடைய செயல்கள் நற்செயல்களாகத் துலங்க ஆரம்பிக்கும்.

இன்று இதய உருவாக்கம் பெற நாம் சந்திக்கும் சவால்கள் எவை?

1.நம்மையே சூழ்நிலைக் கைதி என உணர்வது
சில நேரங்களில் நான் என்னுடைய வாழ்வு இப்படி இருக்கக் காரணம் என்னுடைய சூழல் அல்லது வளர்ப்பு அல்லது சேர்க்கை என என் பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்கின்றேன். நான் இப்படி இருக்குமாறு கடவுள்மேல் எழுதிவைத்துள்ளார் என்று பழிசுமத்தும் மனநிலையும் சில இருக்கிறது. ஆனால், இன்றைய முதல் வாசகம் தெளிவாகச் சொல்கிறது. நெருப்பையோ அல்லது நீரையோ கைநீட்டித் தேர்ந்துகொள்வது நான்தான். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை. நான் என் வாழ்வின் சூழல் கைதி என்னும் மனநிலை விடுக்க நான் என் வாழ்விற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

2. குறுகிய எண்ணம் கொண்டு வாழ்வது
கொரிந்து நகர திரு அவையினர் கிறிஸ்துவின்மேல் தாங்கள் கொண்ட நம்பிக்கையால் அடைந்த மாட்சியை மறந்துவிட்டு, தங்களுக்கு நற்செய்தி அறிவித்த பவுல். கேப அப்பொல்லோ ஆகியோரின் பெயர்களைக் கொண்டு, சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டு, ஒருவர் மற்றவர்மேல் பகைமை பாராட்டுகின்றனர். குறுகிய எண்ணம் கொண்டவர்கள் வாழ்வின் முழுப்படத்தைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களையும் மிகவும் குறைத்தே மதிப்பிடுவார்கள். ஆக, குறுகிய எண்ணத்திலிருந்து நான் விடுபட்டு, பரந்த உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

3. மேலோட்டமாக வாழ்வது
நான்தான் யாரையும் கொலை செய்வதில்லையே? விபசாரம் செய்வதில்லையே? பொய்யாணை இடுவதில்லையே? என்று நான் மேலோட்டமாகப் பெருமை பாராட்டிக்கொண்டு, என் உள்ளத்தில் பகைமை, எரிச்சல், கோபம், காம உணர்வு, பேராசை, பொய் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு, நடந்தால் நான் மேலோட்டமாக வாழ்கிறேனே அன்றி, ஆழமாக வாழ்வதில்லை. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி போல, வெளியே தெரிகின்ற பகுதியை மட்டும் நன்றாக வாழ்ந்துவிட்டு, உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை பெறுகிறேன். அப்படி இருந்தால் மறைந்திருக்கும் அந்த 95 சதவிகித பாறையின்மேல் மோதுகின்ற வாழ்க்கை என்ற டைட்டானிக் கப்பல் உடைந்து, தரைதட்டிவிடும்.

இறுதியாக,
'என் 'உள்ளத்தில் பகைவர்கள் இல்லையென்றால், வெளியிலிருக்கும் பகைவர்கள் என்னைக் காயப்படுத்த முடியாது!" என் உள்ளத்தின் பகைவர்களை அழிக்கும் ஒவ்வொரு நாளும், என் இதயம் உருவாக்கம் பெறுகிறது. அந்தப் பயணத்தில் நானும் திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!' (காண். திபா 119:5).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பிறர் வாழ்வுக்கு சுவையும் ஒளியும் சேர்க்கத் தயாரா நாம்!

மேற்கூறப்பட்ட இத்தலைப்பை பார்த்த உடனேயே நமக்கெல்லாம் சிந்தையில் உதிப்பதென்ன? "என் வாழ்விலேயே சுவையும் ஒளியும் இல்லாத போது பிறர் வாழ்வுக்கு நான் அவற்றை எப்படித் தரமுடியும் என்பது தானே? " உண்மைதான்.ஆயினும் இன்றைய வாசகங்கள் நம்மை உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்கவே அழைக்கின்றன. இயேசு என்னும் உப்பால் நம் வாழ்வு சுவையூட்டப்பட்டு அதே இயேசு எனும் ஒளியால் நம் வாழ்வும் வெளிச்சமானால் நிச்சயமாக நாமும் உப்பாகவும் ஒளியாகவும் திகழமுடியும்.இதை வேறுவகையில் சொல்ல வேண்டுமென்றால் பிறருக்கு பயனுள்ள வாழ்வை நாம் வாழ வேண்டும்.

உப்பு தன்னையே கரைத்துக் கொள்கிறது. அது தன்னையே கரைத்துக்கொண்டு எவற்றோடு அதைக் கரைக்கிறோமோ அவ்வுணவோடு கலந்து அதற்கு சுவை தருகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அளவில் சிறியதாக பயன்படுத்தப்பட்டாலும் தனக்கான பங்களிப்பை முழுமையாகத் தருகிறது உப்பு.

ஒளி என்பது நாம் இருளில் இல்லை என்ற உணர்வை நமக்குத் தருகிறது. ஒளியை நாம் வெறுமனே பெற முடியாது.அதற்கு விளக்கு அவசியம். அல்லது மெழுகு அவசியம். அந்த மெழுகு கரைய கரையத்தான் ஒளி பெருகும். திரி கருக கருகத் தான் சுடர் எரியும். ஒளிச்சுடர் நமக்கு நற் பார்வையைத் தரும். பயத்தைப் போக்கும்.

இந்த உப்பு மற்றும் ஒளியிலிருந்து நாம் கற்கவேண்டிய முக்கிய பண்பு தன்னலமின்மை அல்லது தன்னையே இழத்தல். இயேசு தன்னையே இழந்ததால்தான் நமக்கெல்லாம் மீட்பு எனும் சுவை கிடைத்தது. தன்னலம் கருதாத அவருடைய செயல்பாடுகளும் வல்லமையும் கடவுளின் அன்பை சுவைக்க நமக்கு உதவியது. அவர் காட்டிய ஒளியில் பாவிகள் நோயுற்றோர் ஒடுக்கப்பட்டோர் போன்ற இருளில் வாழ்ந்தவர்கள் பேரொளியைக் கண்டனர்.

இன்று தன்னலம் கருதாதவர்களாய் நாம் வாழ்கிறோமா?நான், எனது,எனக்கு போன்ற எண்ணத்தை நாம் இழந்து இயேசுவை ஏற்றுக்கொண்டால் நம்மால் நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் பயன்பெறுவர் என்பது திண்ணம். தன்னலம் மறந்து நாம் கொடுக்க வேண்டியவை எவை? முதல் வாசகம் நமக்கு சரியான வழிகளைத் தருகிறது.பசித்தோருக்கு உணவிடுதல், உடையில்லாதோருக்கு உடையளித்தல், தேவையில் இருப்போருக்கு நம்மை மறைத்துக்கொள்ளாதிருத்தல். ஆம் நம்முடைய அன்பான மற்றும் ஆறுதலான மொழிகள், பிறருக்கு நேரம் ஒதுக்குதல், சிறுசிறு உதவிகள் செய்தல் போன்ற காரியங்கள் மூலம் பலருடைய வாழ்வில் நாம் உப்பாகவும் ஒளியாகவும் திகழலாம்.

அத்தோடு புனித பவுலடியாரைப் போல நம் வார்த்தைகளாலும் வாழ்வாலும் சிலுவையில் அறையுண்டு தன்னையே இழந்த கிறிஸ்துவை அறிவிப்பதன் மூலம் பிறர் வாழ்வில் சுவையையும் ஒளியையும் நம்மால் சேர்க்க முடியும். நம் வாழ்வின் உப்பாக ஒளியாக இயேசு மாறட்டும். பிறருக்கு உப்பாகவும் ஒளியாகவும் நாம் மாற முயல்வோம்.

இறைவேண்டல்
வாழ்வின் நாயகனே இறைவா! பிறருக்கு பயனுள்ள வாழ்வை வாழ்ந்து உப்பாக ஒளியாகத் திகழ எமக்கு அருள்புரிவீராக. ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser