மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலம் நான்காம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
செப்பனியா2:3, 3:12-13 | 1கொரிந்தியர் 1:26-31 |மத்தேயு 5:1-12a

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


சந்திரகுப்தர் அரசராக ஆட்சி புரிந்த காலத்தில் சாணக்கியன் அவரது அவையில் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தார். குளிரால் துன்பப்படும் ஏழைகளுக்கு ஆயிரம் போர்வைகள் வாங்கிக் கொடுக்கப் பணித்தார் அரசன். சாணக்கியரோ நாளை ஏழைகளுக்குக் கொடுப்போம் என போர்வைகளை வீட்டில் கொண்டு போய் வைத்தார். அன்று இரவு கொள்ளையர்கள் சாணாக்கியர் வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்தார்கள். புதிய கம்பளி போர்வைகள் அடுக்கி இருப்பதையும், சாணாக்கியர் கிழிந்த பழைய போர்வையைப் போர்த்தி இருப்பதையும் திருடர்கள் கண்டு திடுக்கிட்டார்கள்! புதியப் போர்வைகள் இங்கே அடுக்கி இருக்க, இந்தக் கிழிந்த போர்வையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று அந்தக் கொள்ளைக் கூட்டம் கேட்டபோது, இந்தக் கம்பளிப் போர்வைகளைப் பயன்படுத்த பேறுபெற்றவர்கள் குளிரால் துன்பப்படும் ஏழைகள் மட்டுமே. நான் இதைப் பயன்படுத்தினால் நானும் உங்களைப் போன்ற திருடன்தானே என்றார். சாணாக்கியர் சொன்ன வார்த்தை திருடர்கள் மனதில் முள் குத்தியதுபோல இருந்தது. உடனே அவர்கள் சாணாக்கியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்கள்.

இன்று நம் ஆண்டவர் இயேசு திருவாய் மலர்ந்து மலையில் போதித்தப் போதனையில், எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே. துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர் (மத் 5:3- 4) என வெளிப்படுத்துகிறார். மலைப்பொழிவு நமது அகத்தில் உள்ள மனித மாண்பை, நீதியின்பால் உள்ள வேட்கையைப் படம்பிடித்துக் காட்டும் மனக் கண்ணாடியாகும். இறைவன் பழைய ஏற்பாட்டிலே மோசே மூலம் சீனாய் மலையிலிருந்து இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக் கட்டளைகளைக் கொடுத்ததுபோல (விப. 20:12-17), புதிய ஏற்பாட்டில் மோசேயாகிய இயேசு மலைமீது அமர்ந்து மக்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறார். இயேசு ஏழைகளையும், இரக்கமுடையோரையும், துயருறுகிறவர் களையும், சமாதானம் செய்கிறவர்களையும் பேறுபெற்றவர்கள் என்கிறார். காரணம், இவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தையும், அதிகாரத்தையும், படிப்பையும், பட்டங்களையும்விட இயேசுவின் போதனையைக் கடைபிடிக்கிறார்கள். இயேசுவின் வார்த்தைகளை வசப்படுத்தி, வாழ்வில் நீதியின் அடிப்படையில் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதே சிறந்ததாகும்.

இரக்கப்படுவது மனித இயல்பு. ஆனால் துன்பத்தில் இரக்கப்பட்டு ஒருவருக்கு உதவி செய்தல் தெய்வீக இயல்பு. இந்த மலைப்பொழிவின் வழியாக இயேசு மனித நேயத்தின் தூதுவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்த மலைப் பொழிவுதான் நம் பாரத தந்தை, காந்தி மகானின் உள்ளத்தைக் கவர்ந்தது. தன் வாழ்வில் மேல்வரிச்சட்டமாகப் பின்பற்றி வாழ முயன்றார்.

ஒரு முனிவர் வழக்கமாக அதிகாலையில் ஆற்றில் குளித்துவிட்டு வருவார். அவரைப் பிடிக்காத ஒருவர் அவரைப் பற்றித் தவறாகத் திட்டிக் கொண்டே இருந்தார். கோபப்பட்டு எச்சிலையும் அவர்மீது காரித் துப்பினார். அவர் மீண்டும் போய்க் குளித்துவிட்டு வந்தார். இப்படி 50 தடவை காரித் துப்பினார். அவரும் பொறுமையாகத் திரும்பத் திரும்பக் குளித்துவிட்டு வந்தார். ஆனால் 51-வது தடவை அவர் காரித் துப்பவில்லை. உடனே அந்த முனிவர் அந்தக் கயவனிடம், இப்போது ஏன் என் மீது எச்சில் துப்பவில்லை என்று கேட்டார். அதற்கு அவர், உங்கள் மேல் உள்ள கோபமும், வெறுப்பும் இன்னும் தீரவில்லை. ஆனால் என்னிடம் எச்சில் தீர்ந்துவிட்டது என்றார்.

ஆம்! என் பொருட்டு பிறர் உங்களை வசை கூறித் துன்புறுத்தி, உங்கள் மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றோர். அகமகிழ்ந்து களி கூறுங்கள் (மத்.5:11) என்ற நம் ஆண்டவர் இயேசுவின் அமுத வாக்குக்கு இந்த முனிவர் ஓர் எடுத்துக்காட்டு. நாமும் இந்த மலைப் பொழிவிற்குச் சான்று பகர்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளைக் காணமுடியுமா?

இளைஞன் ஒருவன் துறவி ஒருவரிடம் சென்று : கடவுளை நீங்கள் கண்டதுண்டா? என்றான். துறவியோ, நான் எனக்குள் கடவுளைப் பார்த்திருக்கின்றேன் என்றார். என்னால் பார்க்க முடியவில்லையே! என்றான் இளைஞன்.

அந்த இளைஞனை அந்தத் துறவி குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்றார்.

துறவி இளைஞனிடம், உனக்கு முன்னே என்ன பார்க்கின்றாய்? என்றார். ஒரு சிறு குளம் என்றான் இளைஞன். இந்தக்குளத்துத் தண்ணீருக்குள் உன் முகம் தெரிகின்றதா? என்று பார் என்றார் துறவி. இளைஞன் குளத்திற்குள் அவன் முகத்தைப் பார்த்தான். அதில் அவன் முகம் தெரிந்தது. என் முகம் தெரிகின்றது என்றான்.

துறவியோ அவனிடம், தண்ணீரை உன் கையால் கலக்கு என்றார். தண்ணீர் கலங்கியது! இப்போது உன் முகத்தைத் தண்ணீரில் பார் என்றார். அவன் முகம் தெரியவில்லை.

உன் மனம் கலங்கியிருக்கின்றது ; அதனால்தான் உனக்குள் வாழும் கடவுளை உன்னால் பார்க்க முடியவில்லை என்றார் துறவி!

மனம் என்பது ஒரு காசு - அதற்கு இருபக்கங்கள் உள்ளன : ஒன்று ஆசை ; மற்றொன்று அறிவு. உள்ளம் என்பது உணர்வுகளின் கூட்டு.

நாம் நமக்குள் வாழும் கடவுளை, கடவுளின் ஆவியாரைப் பார்க்க விரும்பினால் நமது ஆசையும், அறிவும், உணர்வுகளின் கூட்டும் தூய்மையாக்கப்பட வேண்டும்.

புனித பவுலடிகளார் உரோ 8:9-11-இல் மூன்று முறை, கடவுளின் ஆவியார் நமக்குள் வாழ்வதாகக் கூறுகின்றார். புனித யோவான் அவரது முதல் திருமுகத்தில் (1 யோவா 3:24) கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியாரால் அறிந்துகொள்கின்றோம் என்கின்றார். இரண்டாவது வாசகம், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றீர்கள் (1 கொரி 1:30அ) என்று கூறுகின்றது.

கடவுளைக் காண ஆசைப்படும் அனைவரும் வஞ்சகம் நிறைந்த (செப் 3:13) வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கக்கூடியவர், நம்மைத் தூயவராக்கக்கூடியவர், நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் மீட்கக்கூடியவர் இயேசு [1 கொரி 1:30) என்று நம்பி, அவருடைய மன்னிப்பைக் கேட்டு, அவர் முன் மண்டியிட்டு, பாவமன்னிப்பிற்காக மன்றாட வேண்டும். திருப்பாடல் 51:1-10 பகுதியை அதன் ஆசிரியரோடு மன்றாடினால், பாடினால் இயேசு நம்மைக் கழுவிப் புனிதமாக்குவாரா? இந்த சந்தேகமே நமது மனத்தில் எழக்கூடாது. காரணம், இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கின்றார் (லூக் 19:10) என்றவர் இயேசு. நோயற்றவர்க்கு அல்ல. நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை (மத் 9:12) என்றவர் இயேசு. நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத் 9:13ஆ) என்றவர் இயேசு. சொன்ன சொல் மாறாதவர் இயேசு.

ஆகவே, ஆழமான நம்பிக்கையோடு நற்கருணையின் உருவிலே எழுந்துவரும் இயேசுவின் பாதத்தில் விழுந்து, நம்மையே நாம் தூய்மைப்படுத்திக்கொண்டு, நமக்குள் இறைவனைக் கண்டு, அவரது அரவணைப்பில் நாளும், பொழுதும் நலமுடன் வாழ்வோம்.
மேலும் அறிவோம் :

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள்:6).

பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்கள் வாயிலாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவன் இறைவன். அத்தூயவனது மெய்யான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவோர் நீடிய புகழுடன் வாழ்வர்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"இந்தியாவில் ஒரே ஒரு கிறிஸ்தவர் மட்டும் இருந்தார். அவரும் திருமுழுக்குப் பெறாதவர்" என்று ஓர் ஆங்கில அறிஞர் கூறியுள்ளார். அந்த ஒரே கிறிஸ்தவர்தான் மகாத்மா காந்தி, அவர் கூறினார்: "இந்துக்களின் புனித புத்தகமாகிய பகவத்கீதையை நான் இழக்க நேரிட்டாலும், கிறிஸ்துவின் மலைப் பொழிவின் ஒரு பிரதி இருந்தால் எனக்குப் போதும்." உண்மையில் காந்தி கிறிஸ்துவின் மலைப் பொழிவின் வழியில் சென்று கத்தியின்றி, இரத்தமின்றிச் சாத்வீக முறையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்தார்.

கிறிஸ்துவினுடைய போதனையின் சுருக்கம் மலைப் பொழிவு என்றால், மலைப் பொழிவின் சுருக்கம் எட்டுப் பேறுகள். அந்த எட்டுப் பேறுகளின் சுருக்கம் முதல் பேறு. "ஏழையரின் உள்ளத்தோர் (எளிய மனத்தோர்) பேறுபெற்றோர்" (மத் 5:3). இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "ஏழை எளியோரை உன் நடுவில் விட்டு வைப்பேன். அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்" (செப் 3:12). இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது 'ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகிறார்; பசித்திருப்போர்க்கு உணவு அளிக்கிறார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்" (திபா 146:7). இன்றைய இரண்டாம் வாசசுத்தில், "உலகம் இகழ்ந்து தள்ளுபவர்களைக் கடவுள் தெரிந்து கொண்டார்" (1 கொரி 1:28) என்கிறார் பவுல். சுருக்கமாக, இன்றைய வார்த்தை வழிபாடு எளியோரையும் ஏழைகளையும் மையப்படுத்துகிறது.

யார் இந்த எளியோர்? யார் இந்த ஏழைகள்? அவர்கள்தாம். "அனாவிம்" என்று அழைக்கப்படும் கடவுளின் ஏழைகள். இவர்களுடைய பண்புகள் நான்கு.

1. இவர்களிடம் செல்வம் இல்லை. அன்றாடங்காச்சிகள். வேலை கிடைத்தால் கூலி; கூலி கிடைத்தால் கஞ்சி; இல்லையென்றால் பட்டினி. இவர்களுக்கு வானமே கூரை, வையகமே படுக்கை.

2. இவர்களிடம் செல்வம் இல்லாததால் இவர்களை எவருமே மதிக்க மாட்டார்கள். "இல்லாளை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்தத் தாயும் வேண்டாள்; செல்லாது அவன் வாய்ச்சொல்" என்ற பாடலுக்கு உரியவர்கள்.

3. செல்வமோ செல்வாக்கோ இல்லாத இவர்கள், செல்வர்களால் ஒடுக்கப்பட்டனர். "ஏழையைக் கண்டால் மோழையும் (கொம்பில்லா விலங்கு) பாயும் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரர்கள்.

4. நசுக்கப்பட்ட நிலையில் கடவுளை நொந்து கொள்ளாமல் கடவுளிடம் தங்கள் நம்பிக்கையை வைத்து அவரிடம் அபயக்குரல் எழுப்பினர், "இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" (திபா 34:6) என்ற திருப்பா இவர்களுடையது.

அனாவிம் மக்கள் எத்தகைய துன்ப வேளையிலும் கடவுளிடம் "என் தாயின் கருப்பையினின்று பிறந்தமேனியாய் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்தமேனியாய் யான் செல்வேன். ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக" (யோபு 1:2) என்று யோபுவைப் போல் அமைந்த உள்ளத்துடன் கூறுவர்.

அசு ஏழ்மை மற்றும் புற ஏழ்மை என்று ஏழ்மை இருவகைப்படும். லூக்கா நற்செய்தி புறஏழ்மையை வலியுறுத்துகிறது, 'ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்" (லூக் 6:20). அத்துடன், "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு" (லூக் 6:24) என்றும் கூறுகிறது. ஏழைகளை உயர்த்திப் பணக்காரர்களைச் சபிக்கின்றார் கிறிஸ்து. ஆனால் மத்தேயு நற்செய்தி அகஏழ்மையை வலியுறுத்துகிறது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்" (மத் 5:3). ஏனெனில் செல்வர்களும் மனத்தளவில் ஏழைகளாக, எளிய மனம் கொண்டவர்களாக வாழ முடியும். என்பதை மத்தேயு வலியுறுத்துகிறார். உண்மையில் புறஏழ்மையும் அக ஏழ்மையும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். புறஏழ்மையின்றி அக ஏழ்மை வருவது கடினம் அகஏழ்மையின்றி புறஏழ்மைக்குப் பொருளில்லை; அது சாபக்கேடு. துறவு, நெஞ்சத்தில் இருத்தல் வேண்டும். நெஞ்சில் துறவு மனநிலை இல்லாது, புறத்தோற்றத்தில் மட்டும் துறவிகளாக நடிப்பவர்கள் வஞ்சகர்கள் என்கிறார் வள்ளுவர்.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் (குறள் 276).

கிறிஸ்துவே தலைசிறந்த அனாவிம், அவர் செல்வத்தராக இருந்தும் நமக்காக ஏழையானார் (2 கொரி 8:9). ஏழ்மையில் பிறந்து. ஏழ்மையில் வாழ்ந்து, ஏழ்மையில் இறந்தார். "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை" (லூக் 9:57) என்று அவரால் உண்மையிலேயே கூறமுடிந்தது.

ஏழைகள் பேறுபெற்றவர்கள், பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கிறிஸ்து கூறும்போது, பணத்தை வழிபடும் இவ்வுலகம் அவரை ஒரு பைத்தியம் என்று கருதும். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் பவுல் கூறுவதுபோல, "கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுவதைத் தேர்ந்துகெண்டார்" (1 கொரி 1:27).. ஏழைகள்தான் கடவுளின் செல்லப் பிள்ளைகள்: இறை ஆட்சியின் அருளடையாளங்கள். அவர்களின் இறையாட்சிப்பண்; "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்" கடவுள் (லூக் 1:50-53) என்பதாகும்.

ஒரு கோழி ஒவ்வொரு காலையிலும் நாட்டுப்பண் பாடும்; ஏனெனில் அது நாட்டுக் கோழியாம்! கோழி பாடுகிறதோ இல்லையோ. அனாவிம் மக்கள் மேற்கூறப்பட்ட மரியாவின் இறையாட்சிப் பாடலை நாள்தோறும் பாடுவர்.

மலைப்பொழிவின் மனநிலையின்றி இவ்வுலகை உருமாற்றம் அடையச் செய்யமுடியாது. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்து ஏழ்மை நிலையைப் பின்பற்றி உலகை உயர்த்துவோமா? அல்லது பண ஆசை வலையில் விழுந்து நமது வாழ்வை நாமே அழித்துக் கொள்ளப்போகிறோமா? நோவாவின் பேழையைக் கட்டி உயிரைக் காத்துக் கொள்வோமா? அல்லது 'டைட்டனிக்' கப்பல் கட்டி, பண ஆசை என்ற பளிப்பாறையில் மோதி உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோமா? சிந்திப்போம், சீர்தூக்குவோம், செயல்படுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விடுதலை பெற்ற பறவையாய்...

வெண்ணிலவில் கால்பதித்த விண்வெளி வீரர் அங்கிருந்து பூமியைப் பார்த்ததும் வியந்து சொன்னார், நிலவைப் பற்றிய பாடல்களையெல்லாம் திருத்தி, இனி பூமியைப் பற்றிப் பாட வேண்டும் என்று.

"நிலாவே நிலாவே ஓடி வா” என்பதை "பூமியே பூமியே ஓடி வா” என்று பாட வேண்டுமாம்.

"அந்த நிலாவைத்தான் என் கைகளில் பிடித்தேன் என் இராசாவுக்காக” என்று பாடியதை முதல்மரியாதைக் கதாநாயகி, “அந்த பூமியைத்தான் என் கைகளில் பிடித்தேன் என் இராசாவுக்காக” என்று மாற்றிப் பாட வேண்டுமாம்.

அவ்வளவு இந்தப் பூமி அழகோ அழகு!

பூமியிலிருந்து பார்த்தால் அந்த நிலா அழகு. நிலாவிலிருந்து பார்த்தால் இந்தப் பூமி அழகு.

ஆனால் பூமியிலிருந்தே பூமி அழகு என்று பார்க்க வைக்கின்றன இறைமகன் இயேசு தந்த எட்டுப்பேறுகள்!

இயேசுவின் பணியும் இலட்சியமும், ஏன், நமது இலக்கும் கூட

- இந்த உலகைச் சீருடையாக்குவதிலும், வாழத் தகுந்த இடமாக மாற்றுவதிலும்தானே இருக்கிறது! இந்தப் பேறுகள் நிகழ் காலத்தோடும் இந்த மண்ணோடும் மக்களோடும் தொடர்புடையவைகள்.

Ideas rule the world என்பார்கள். உலகில் உருவான அத்தனை எழுச்சிமிகு இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் இதயமாக இருந்தது, இருப்பது ஆழ்ந்த சிந்தனைகளும் கருத்துக்களுமே! எடுத்துக்காட்டாக, அந்நிய ஆட்சியினின்று விடுபட அண்ணல் காந்தி காட்டிய அகிம்சை நெறிக்கு அடித்தளமிட்டதே இயேசுவின் மலைப்பொழிவு என்று அவரே கூறுகிறார்.

சீனாய் மலையில் மனித வாழ்வுக்கான நெறிமுறைகளைப் பத்துக் கட்டளைகளாகத் தந்த கடவுள், இந்தப் புனித மலையில் கிறிஸ்தவ வாழ்வுக்கான நெறிமுறைகளை எட்டுப் பேறுகளாகத் தருகிறார்.
மலைப்பொழிவில் காணும் இரண்டு கருத்துக்கள்

1. மகத்தான பாதுகாப்பின்மை:
கிரிக்கெட் விளையாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் மகத்தான நிச்சயமின்மை (glorious uncertainty) என்பது. அதுபோல நற்செய்தி நெறிப்படி வாழும் கிறிஸ்தவ வாழ்வில் ஒரு மகத்தான பாதுகாப்பின்மை (glorious unsecurity) உண்டு. அதுவே இறைவனைத் தேடவும் சார்ந்து வாழவும் தூண்டும். அதனால்தான் ஏழைகளே, துயருறுவோரே ... என்றெல்லாம் இயேசு அழைக்கிறார்.

எனக்கு ஒரு பிரச்சனை என்றால் எங்கே நான் பாதுகாப்புத் தேடுவது? எனக்கு மேல் அலுவலர்களாக இருப்பவரிடமோ, எனக்குக் கீழே பணியாற்றுபவர்களிடமோ அல்ல. அவர்களிடம் அதற்கான தன்னிலை விளக்கத்தைத்தான் தர முடியுமே தவிர அவர்களிடம் பாதுகாப்பு தேட முடியாது. இறைவன் தரும் பாதுகாப்பில் நான் வைக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால் “ஆண்டவரே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்கு உரியதை எனக்கு என வைத்திருப்பவர் அவரே” (தி.பா. 16:5) என்று அமைதி காண்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களுக்கே இறுதிப்புகலிடம் என்கிறது முதல் வாசகம். வலுவற்றது, உலகம் பொருள் படுத்தாதது, தாழ்ந்தது, இகழ்ச்சிக்குரியது என்று உலகம் கருதும் இவர்களே இறைவனின் தேர்வு என்கிறது 2ஆம் வாசகம். நிலக்கரியை நிந்திக்காதீர்கள். வைரமாக மாறுவதே அதுதான்!

ஏழ்மை என்பது பாவம், ஏழைகள் என்பவர்கள் பாவிகள். கடவுளின் சாபத்துக்கும் தண்டனைக்கும் உட்பட்டவர்கள் என்ற பரிசேயரின் சிந்தனைகளைத் தகர்த்து ஏழை எளியோரே நீங்கள்தாம் பேறு பெற்றவர்கள். ஏனெனில் கடவுளால் வழி நடத்தப்படுபவர்கள் நீங்களே என்று கூறுகிறார் இயேசு.

ஏழ்மை என்ற சூழ்நிலை இருப்பதால் அல்ல அவர்கள் பேறு பெற்றவர்கள். மாறாக ஏழ்மை காரணமாக இறைவன் தருகின்ற பிரிக்க முடியாத உறவு இருப்பதால் அவர்கள் பேறு பெற்றவர்கள். "நாங்கள் ஏழைகள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். கடவுளைக் கொண்டிருப்பவர்கள் ஏழைகள் அல்ல” என்கிறார் துறவியான புனித கிளாரா.

2. விடுதலை மகிழ்ச்சி:
எளியவர்கள் என்ற சொல்லில் செல்வமற்றவர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள் அதனால் பிறரால் இகழப்பட்டவர்கள், தாழ்வுற்றவர்கள் கடவுளை மட்டுமே நம்பினவர்கள் என்ற தாழ்நிலை குறிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது என்கிறார் இறைவாக்கினர் செப்போனியா. இப்படிப்பட்டவர்கள் தான் பேறு பெற்றவர்கள் என்கிறார் இயேசு. எதிர்காலத்தில் வரும் மகிழ்ச்சியைப் பற்றி இயேசு குறிப்பிடவில்லை. நிகழ்காலத்தில் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்கு இயேசு அளிக்கும் வாழ்த்துரையே இந்த மலைப்பொழிவு!

பேறு பெற்றவர்கள் என்ற வார்த்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் ஆழ்ந்த மகிழ்ச்சியையே குறிக்கும். அது பசியிலும் கண்ணீரிலும் கூடப் பளிச்சிடும். உண்மையான நிலையான, நிறைவான மகிழ்ச்சிக்கு ஒரு மனிதன் பெறுகின்ற விடுதலையில்தான் இருக்கிறது.

மெத்தை, தலையணை என்று படுத்துப்பழகியவன் அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறான். அவையின்றி அவனுக்கு உறக்கம் வராது. கட்டாந்தரையில் தலைக்குக் கையை வைத்து படுக்கிறானே அவன் விடுதலை பெற்றவன் இல்லையா!

மனிதனுக்கு விடுதலை தர வந்தவர்தானே இயேசு! விடுதலை பெறாத மனிதன் தனது மகிழ்ச்சி, பணத்தால், பதவியால், சொகுசால், செல்வச் செழிபபால், வரும் வளரும் என்று எதிர்பார்க்கிறான். இது அவனது அடிமைத்தனத்தின் விளைவு. கிறிஸ்துவில் விடுதலை பெற்ற மனிதன் இந்த நிபந்தனைகளிலிருந்தெல்லாம் விடுதலை பெறுகிறான்.

இயேசுவின் பார்வையில்...
ஏழையர் – பணத்தால் வரும் கேட்டிலிருந்து விடுதலை பெற்றவர்.
துயருறுவோர் - சொகுசிலிருந்து விடுதலை பெற்றவர்
கனிவுடையோர் - செருக்கிலிருந்து விடுதலை பெற்றவர்
நீதி வேட்கையுடையோர் - அச்ச உணர்விலிருந்து விடுதலை பெற்றவர்
இரக்கமுடையோர் – தன்னலத்திலிருந்து விடுதலை பெற்றவர்
தூய உள்ளத்தோர் - இரட்டை (பிளவுபட்ட) வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்

இப்படியெல்லாம் விடுதலை பெற்ற மனிதனே விடுதலை பெற்ற பறவை போல மகிழ்ச்சி என்னும் வானவீதியில் சிறகடித்துப் பறக்கின்றான். அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து எவனும் பறித்துவிட முடியாது (யோ. 16:22). இதுதான் உலகெலாம் ஒரு வாய்ப்படப் போற்றும் மலைப்பொழிவின் சாரம்!

இதுவரை பறக்காத பறவை - தனக்குச் சிறகுகள் இருப்பதைக் கூட உணராத ஒன்று இருக்கின்றது. தனக்குச் சிறகுகள் இருக்கின்றன. தன்னால் பறக்க முடியும் என்று திடீரென்று அது உணருகின்றது. உணர்ந்ததும் அது எழுந்து பறக்கின்றது. அப்போது அந்தப் பறவைக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி! எளியோருக்கு இயேசு சொன்ன நற்செய்தியை – எட்டுப் பேறுகளைக் கேட்ட மனிதனுக்கும் இப்படிப்பட்ட உணர்ச்சிதான் வருகிறது என்று கூறுகிறார் இரஷ்ய நாட்டு எழுத்தாளர் டால்ஸ்டாய்.

இன்றைய நமது நிலை? நேரு குறிப்பிட்டது போன்று “அணுவைப் பிளக்க அறிந்து கொண்டோம். ஆனால் மலைப்பொழிவை மறந்து போனோம்”.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மண்ணில் உருவாகும் விண்ணகம்

பங்குத்தந்தை ஒருவர் குழந்தைகளுக்கு மறைகல்வி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். "குழந்தைகளே, என்கிட்டே இருக்கிற எல்லாப் பொருட்களையும் வித்து, அந்தப் பணத்தை ஏழைகளுக்கு நான் கொடுத்தா, நான் மோட்சத்துக்கு, விண்ணகத்துக்குப் போகமுடியுமா?" என்று கேட்டார். குழந்தைகள் 'கோரஸ்'ஆக "முடியாது" என்று சொன்னார்கள். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம், குழப்பம்.

"சரி, நம்ம பங்குல இருக்கிற எல்லா நோயாளிகளுக்கும் நான் தினமும் மருந்து, மாத்திரை எல்லாம் குடுத்து கவனிச்சிக்கிட்டா, நான் விண்ணகத்துக்குப் போக முடியுமா?" என்றார். அவர் கேள்வியை முடிப்பதற்குள், "முடியாது" என்று குழந்தைகள் கத்தினர். "எல்லாக் குழந்தைகளுக்கும் நான் தினமும் சாக்லேட், மிட்டாய், பொம்மை எல்லாம் குடுத்தா?" என்று கேட்டார். மீண்டும் குழந்தைகள் "முடியாது" என்றே சொன்னார்கள். பங்குத் தந்தைக்குப் பெரிய அதிர்ச்சி.

"சரி, அப்ப நான் விண்ணகத்துக்குப் போக என்ன செய்யணும்?" என்று அவர்களையேக் கேட்டார். ஒரு சிறுமி எழுந்து நின்று, "நீங்க விண்ணகத்துக்குப் போகணும்னா, முதல்ல சாகணும்" என்று, கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் சொன்னாள்.

பங்குத் தந்தைக்குத் தெரியாத ஒரு மிகச்சாதாரண உண்மையை அந்தக் குழந்தை அன்று அவருக்குச் சொல்லித் தந்தாள். ஆனால், அது முழு உண்மை அல்ல என்பதை நாம் உணர்வதற்கு இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு இன்னும் சில பாடங்களைச் சொல்லித் தருகின்றன. விண்ணகம் என்பது, இறந்தபின் நமக்குக் கிடைக்கும் பரிசு என்று எண்ணுபவர்களுக்கு இக்குழந்தை சொன்னது உண்மையாகப் படலாம். ஆனால், விண்ணகம் என்பது மண்ணகத்திலேயே சாத்தியம் என்பதை இயேசுவும், இன்னும் பல இறைவாக்கினர்களும், புனிதர்களும் சொல்லிச் சென்றுள்ளனர். வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.

இந்த ஞாயிறு முதல், தவக்காலத்தின் துவக்கம் வரை உள்ள நான்கு ஞாயிறு திருப்பலிகளில், இயேசு வழங்கிய மலைப்பொழிவிலிருந்து நற்செய்தி வாசகங்களை கேட்கவிருக்கிறோம். இப்பகுதிகள், தவக்காலத்திற்கு நம்மை தயாரிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி. இன்றைய நற்செய்தியில், மலைப்பொழிவின் அறிமுகப் பகுதியாக இயேசு கூறும் 'பேறுபெற்றோர்' என்ற ஆசியுரைகள், மண்ணகத்தில் விண்ணகத்தை உருவாக்க இயலும் என்ற உண்மையை ஆணித்தரமாகக் கூறுகின்றன. Jacques Pohier என்ற இறையியலாளர் கூறிய ஒரு கூற்று இது: "இயேசு மலைப் பொழிவில் 'பேறுபெற்றோர்' என்று கூறிய கருத்துக்கள், மறு உலக வாழ்வைப்பற்றிய வழிகாட்டிகள் அல்ல; இவ்வுலகில் நாம் வாழக்கூடிய மறு வாழ்வைப்பற்றிய வழிகாட்டிகள்." “Beatitudes are not the map of a life in another world, but the map of another life in this world.”

விண்ணகம் என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால், நாமும் பல தெளிவுகளைப் பெறலாம். சிறுவயதில் விண்ணகம் என்ற சொல்லைக் கேட்டதும், அதை ஓர் இடமாக கற்பனை செய்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், வயதில் வளர, வளர, விண்ணகம் ஓர் இடம் அல்ல, அது ஒரு வாழ்வுநிலை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். விண்ணகம் என்பது, அடிப்படையில், முழுமை அடைவது, நிறைவு பெறுவது என்ற ஆழமான எண்ணங்களை உள்ளடக்கியது. அந்த முழுமையில், நிறைவில் நாம் அதிகம் அனுபவிப்பது ஆனந்தம். ஆனந்தம், மகிழ்ச்சி என்று சொன்னதும், நம் மனதில் பல எண்ணங்கள் ஒரே நேரத்தில் அலைமோதுகின்றன. முதல் எண்ணம்... ஆனந்தம், மகிழ்வு ஆகியவை நம்மைத் தேடி வருமா, அல்லது நாம் அவற்றைத் தேடிப் போகவேண்டுமா என்ற கேள்வி. "மகிழ்வு ஒரு வண்ணத்துப் பூச்சி. அதை நாம் துரத்திச் செல்லும்போது, அது நம்மைவிட்டு விலகிச் செல்கிறது. நாம் அமைதியாக அமர்ந்திருக்கும்போது, அது நம் தோள்மீது வந்து அமரும்" என்று சொன்னவர், Nathaniel Hawthorne என்ற எழுத்தாளர்.

மகிழ்வைத் தேடி அலைவது பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. தன் வாலில்தான் மகிழ்ச்சி உள்ளதென்று தன் வாலையே நாள் முழுவதும் துரத்திப் பிடிக்க சுற்றிச்சுற்றி வந்த குட்டிப்பூனையிடம், "மகிழ்வு என் வாலில் இருக்கிறது என்பதை அறிந்த நானும் உன்னைப்போல சிறு வயதில் என் வாலை துரத்திக்கொண்டே இருந்தேன். ஆனால், என் வாலில்தான் மகிழ்ச்சி இருக்கிறதென்றால், அதை நான் துரத்த வேண்டாம். என் வேலைகளை நான் ஒழுங்காகச் செய்தால், மகிழ்வு எப்போதும் என்னைத் தொடர்ந்து வரும் என்பதை பின்னர் உணர்ந்தேன்" என்று தாய் பூனை சொன்னதாம். இது ஒரு கதை.

தவறான இடங்களில் மகிழ்வைத் தேடுகிறோம் என்பதைக் கூறும் மற்றொரு கதை இதோ. அகன்ற ஒரு சாக்கடைக்கருகே ஒருவர் நடந்து கொண்டிருந்தார். நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு நடந்த அவர் திடீரென நின்றார். அவர் கண்களில் ஒளி. அந்தச் சாக்கடையில் ஏதோ ஒன்று பளீரென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தபோது, அது ஒரு வைரநகை போலத் தெரிந்தது. கரையில் நின்றபடி, கைகளை மட்டும் சாக்கடையில் விட்டு அதை எடுக்க முயன்றார். முடியவில்லை. அடுத்து, சாக்கடையில் இடுப்பளவு ஓடிய அந்த அழுக்கு நீரில் நின்று தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் கரையேறி வந்து பார்த்தபோது, அந்த நகை அதே இடத்தில் பளிச்சிட்டது. அடுத்து, மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அந்தச் சாக்கடையில் முற்றிலும் மூழ்கித் தேடினார். ஊஹும்.. ஒன்றும் பயனில்லை. விரக்தியுடன் அவர் சாக்கடையை விட்டு வெளியேறிய அந்த நேரம், ஒரு முனிவர் அந்தப் பக்கம் வந்தார். "எதைத் தேடுகிறீர்கள்? எதையாவுது தவற விட்டுவிட்டீர்களா?" என்று கேட்டார். நகையைப்பற்றிச் சொன்னால், முனிவர் அதை எடுத்துக்கொள்வாரோ என்று பயந்து, அவர் பேசத் தயங்கினார். அவரது தயக்கத்தைக் கண்ட முனிவர், தான் அவருக்கு உதவி மட்டுமே செய்யப்போவதாக வாக்களித்தார். சாக்கடையில் மூழ்கி எழுந்தவர் முனிவரிடம் சாக்கடைக்குள் தான் கண்ட அந்த நகையைச் சுட்டிக்காட்டினார். அதை எடுக்க தான் எடுத்த முயற்சிகளையும் கூறினார். முனிவர் அவரிடம், "நீங்கள் ஒருவேளை தவறான இடத்தில் அந்த நகையைத் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். வேறு இடத்தில் தேடுங்கள். கீழே மட்டும் பார்க்காதீர்கள். மேலேயும் பாருங்கள்." என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். முனிவர் சொன்னபடி மேலே பார்த்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி. அவர் நின்ற இடத்தில் ஒரு மரம். அம்மரத்தின் கிளையில் அந்த நகை தொங்கிக் கொண்டிருந்தது. அதுவரை அவர் அந்த நகையின் பிம்பத்தை உண்மை நகை என்று எண்ணி சாக்கடைக்குள் தேடிக் கொண்டிருந்தார்.

உண்மையான மகிழ்வு, ஆனந்தம் இவற்றைத் தேடுவதற்குப் பதில், மகிழ்வின் மாய பிம்பங்களை நம்மில் எத்தனை பேர் தேடுகிறோம்? நம்மில் எத்தனை பேர் தவறான இடங்களில் மகிழ்வைத் தேடுகிறோம்? மகிழ்வேன்று நினைத்தவை மறைந்து போகும்போது, நம்மில் எத்தனை பேர் மனமுடைந்து, தவறான முடிவுகளை எடுத்திருக்கிறோம்?

இன்றைய வழிபாட்டு வாசகங்கள் உள்ளத்தின் நிறைவை, வாழ்வின் நிறைவை அடையும் வழிகளைச் சொல்கின்றன. இந்த நிறைவை அடைய, மரணம்வரை, அந்த மரணத்திற்குப்பின் வரும் விண்ணகம்வரை காத்திருக்கத் தேவையில்லை. இந்த மண்ணகத்தை விண்ணகமாக்கும் வழிகள், சக்தி நம்மிடமே உள்ளன என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவாக்குகின்றன.

இந்த ஞாயிறுக்குரிய வாசகங்களை திருப்பலி நேரத்தில் கேட்டு பயனடைவதோடு நின்றுவிடாமல், இல்லத்திற்கு திரும்பியபின், இன்றைய நாளில், ஒரு சில மணித்துளிகளை ஒதுக்கிவைத்து, அமைதியாக, ஒருவித தியானநிலையில் வாசித்துப் பயனடைய உங்களை அழைக்கிறேன்.

இறைவாக்கினர் செப்பனியா 2:3; :12-13
நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்.

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

ஏழை, எளியோர் நாட்டில் இருப்பதால், அங்கு விளையும் நன்மைகளைக் கூறுகிறார் இறைவாக்கினர் செப்பனியா. ஏழை, எளியோர் வாழும் நாட்டில் கொடுமைச் செயல்கள், வஞ்சகப் பேச்சு, அச்சம் எதுவுமிராது. பாகுபாடுகள் ஏதும் இல்லாமல், அனைவரும் பந்தியமர்ந்து உண்டபின் அனைவரும் ஒன்றாய் இளைப்பாறும் ஒரு நாடு அது. அத்தகைய ஒரு நாடு, மண்ணகத்தில் உருவாகக்கூடிய விண்ணகம்தானே!

இன்றைய நற்செய்தியிலும் ஏழை, எளியோர் உயர்த்திப் பேசப்படுகின்றனர். செல்வமும், புகழும் பெற்றிருப்பது இறைவன் வழங்கும் ஆசீர் என்றும், இவற்றை பெற்றிருப்போர் விண்ணகத்தில் நுழைவது உறுதி என்றும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் எண்ணி வந்தனர். அவர்களது எண்ணங்களை தலைக்கீழாக புரட்டிப்போடும் வண்ணம் இயேசு தன் மலைப்பொழிவில், வறியோரை, துயருறுவோரை, சக்தி அற்றோரை, விண்ணகத்திற்கு உரியவர்கள் என்று கூறினார்.

மத்தேயு நற்செய்தி 5: 1-10
இயேசு... திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச்சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

மலைப்பொழிவில் இயேசு பகர்ந்த 'பேறுபெற்றோர்' என்ற இப்பகுதி, பலருடைய உள்ளங்களில் ஆழப்பதிந்து, அவர்களை உன்னத மனிதர்களாக மாற்றியுள்ளது. அவர்களில் ஒருவர் மோகன்தாஸ் காந்தி. இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியால் இவ்வுலகை விண்ணகமாக்க முடியும் என்பதை ஆணித்தரமாக பறைசாற்றிய இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் மகாத்மா காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரையும் அதிகம் கவர்ந்த விவிலியப் பகுதி, மலைப்பொழிவு. அகிம்சை வழியை உலகில் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி, குண்டுக்குப் பலியான நிகழ்வை, நாளை, சனவரி 30ம் தேதி, நாம் நினைவுகூருகிறோம். அடிப்படைவாதி ஒருவனின் குண்டுக்கு, அகிம்சைவாதியான காந்தி பலியான நாளுக்கு முந்தைய நாள் அவர் மனதைக் கவர்ந்த மலைப்பொழிவை கேட்கும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்ததை, அருள்நிறைந்த தருணமாகக் கருதலாம்.

இறுதியாக ஓர் எண்ணம். இவ்வாண்டு, மகாத்மா காந்தி கொலையுண்ட நாளான சனவரி 30ம் தேதியன்று, இந்தியாவில், சிறப்பானதொரு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இராகுல் காந்தியின் தலைமையில், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியா குமரியில் துவங்கிய ‘Bharat Jodo Yatra’ (Unite India March) என்ற ஊர்வலம், நாளை, சனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

மதம், இனம், மொழி, சாதி என்ற பல்வேறு பிளவுகளை இன்னும் ஆழப்படுத்தும் வண்ணம், வெறுப்புணர்வுகளை ஊட்டி வளர்க்கும் இன்றைய அரசின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு ஒரு சவாலாக, 'இந்தியாவை ஒருமைப்படுத்தும் நடைப்பயணம்' என்ற பெயருடன், ‘Bharat Jodo Yatra’ என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியினால், இந்தியாவின் பல பகுதிகளில் உருவாகியுள்ள நம்பிக்கை தரும் அதிர்வலைகள், நம்மையும், குறிப்பாக, நம் இளையோரையும் சென்றடையவேண்டும் என்று மன்றாடுவோம். மதம், இனம், மொழி, சாதி என்ற பிரிவுச் சுவர்களை தகர்த்தெறிந்து இந்தியா ஒருங்கிணைந்தால், அதுவே நாம் உருவாக்கக் கூடிய விண்ணகம் என்பதை உணர்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன், நம் தேசியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இத்தகைய கனவை ஓர் இறைவேண்டலாக வெளிப்படுத்தினார். அவருடைய வேண்டுதல் நம் வேண்டுதலாக மாறட்டும்:

எங்கே மனதில் பயமின்றி தலைதான் உயர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவுச் சுதந்திரத்தால் உண்மைச் சொற்கள் வெளிவருமோ
எங்கே குறுகிய பிளவுகளால் உலகின் உருவம் சிதையாதோ
எங்கே தளராப் பெருமுயற்சி முழுமையை நோக்கிச் செல்கிறதோ
எங்கே பகுத்தறிவு எனும் ஆறு மறைந்து ஒழியும் பழக்கங்களாம்
பாலை மணலில் பாயாது பயனைத் தேடி மீள்கிறதோ
எங்கே விரிந்த சிந்தனையால் இன்சொல் நற்செயல் விளைகிறதோ
நினதருள் அழைத்துச் சென்றிடவே எனதுளம் எங்கே விழைகிறதோ
அந்த சுதந்திர விண்ணகத்தில் எந்தாய் என் நாடு விழித்தெழுக

(தாகூர் கவிதையின் தமிழாக்கம்: ஆனந்தநாதன் சே.ச.)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீங்கள் பேறுபெற்றோர்!

இது விற்பனைக்கல்ல:

சிறுவன் ஒருவன் தன் தந்தையோடு அருஞ்காட்சியத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக் கொண்டு வரும்போது, பழங்காலத்து நாணயம் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

உடனே அவன் அங்கிருந்த பணியாளரிடம், அந்தப் பழங்காலத்து நாணயத்தைக் காட்டி, “இது எனக்கு வேண்டும்? இதன் விலை எவ்வளவு?” என்றான். பணியாளர் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவராய், “உன்னிடத்தில் எவ்வளவு பணம் இருக்கின்றது?” என்றார். “ஐம்பது ரூபாய்” என்று சிறுவன் சொன்னதும், “ஐம்பது ரூபாய்க்கெல்லாம் இதை வாங்க முடியாது. ஏனெனில், இது விலைமதிக்கப்பெறாத பொக்கிஷம். மேலும், இது விற்பனைக்கல்ல. இன்னொரு முக்கியமான செய்தி, நீ இந்த நாட்டுக் குடிமக்களுள் ஒருவராய் இருப்பதால், ஒருவகையில் இது உனக்குச் சொந்தம்” என்றார். இதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அருஞ்காட்சியத்தில் இருந்த அந்தப் பழங்காலத்தை நாணத்தைக் கடவுள் அளிக்கும் பேறுபெற்றவர் என்ற பட்டத்தோடு ஒப்பிடலாம். எப்படிப் பழங்காலத்து நாணயத்தை எவ்வளவு விலைகொடுத்தாலும் வாங்க முடியாதோ, அப்படிப் கடவுள் அளிக்கும் பேறுபெற்றவர் என்ற பட்டத்தினை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. அதுபோல, பேறுபெற்றவர் என்ற பட்டம் பழங்காலத்து நாணயத்தைப் போன்றே விற்பனைக்கல்ல. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருநாட்டின் குடிமகனாகும்போது எப்படிப் பழங்காலத்து நாணயம் ஒருவகையில் ஒருவருக்குச் சொந்தமாகின்றதோ, அப்படி நாம் கடவுளின் மக்களாகும்போது பேறுபெற்றோர் என்ற பட்டம் நமக்குச் சொந்தமாகின்ற்து.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் பேறுபெற்றவர்களாகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

உண்மையான பேறு:

முக நூல், வலையொளி போன்ற சமூக ஊடகங்களில் ‘Paid Promotion’ என்ற வார்த்தை மிகவும் பிரபலம். அடிப்படையில் ஒன்றுமில்லாதை ஊதிப் பெரிதாக்கும் செயல்தான் இது! இன்றைக்கு ஒருசிலர் தங்களிடமிருக்கும் பண பலத்தைக் கொண்டும், அதிகாரத்தைக் கொண்டும் தாங்கள் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் அல்லது பணம் இருந்தால் போதும், அதிகாரம் இருந்தாலும் போதும் அவர் ‘பெரியவர்’ என்றொரு நிலை கட்டமைக்கப்படுகின்றது. உண்மையில் பணமும் அதிகாரமும் ஆள்பலமும் அறிவும் இருந்தால், அவர் பெரியவர் அல்லது பேறுபெற்றவர் ஆகிவிட முடியுமா? என்றால் இல்லை என்கிறது இன்றைய இறைவார்த்தை.

மலைமேல் ஏறி அமர்ந்து, திருவாய் மலருகின்ற இயேசு, ஏழையின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், தன் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் “பேறுபெற்றோர்” என்கிறார். இயேசு சொல்லும் இந்தப் பேறுபெற்றோர் பட்டியலில், பணமும் அதிகாரமும் அறிவும் ஆள்பலமும் கொண்டவருக்கு இடமில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. எனில், இவ்வுலக செல்வமும் அதிகாரமும் அறிவும் ஒன்றுமே இல்லை; அதெல்லாம் உண்மையான பேறு இல்லை. ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, ஏழையரின் உள்ளத்தோராய், கனிவுடையோராராய் வாழ்வதுதான் உண்மையான பேறு என்பதை இயேசு மிக அழகான எடுத்துக்கூறுகின்றார்.

ஆண்டவரைத் தேடுவோருக்குப் புகலிடம்:

இறைவாக்கினர் செப்பனியா கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைவாக்கு உரைத்தவர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால். கி.மு.631 ஆம் ஆண்டு, யோசியா மன்னன் சமயச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குப் பத்து ஆண்டுகளுக்கு இறைவாக்கு உரைத்தவர். இவர், மக்கள் உண்மைக் கடவுளை மறந்து வேற்று தெய்வங்களை வழிபட்டதால், எருசலேமிற்கு வரவிருந்த அழிவினைப் பற்றி இறைவாக்கு உரைத்தாலும், கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தேடிவோருக்கும் அவரது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோருக்கும் கிடைக்கும் ஆசிகளைப் பற்றி இறைவாக்கு உரைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அவர், “ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்! ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்” என்கிறார். செப்பனியா உரைத்த இறைவாக்கு யூதர்களின் வரலாற்றில் நடந்தேறியது. பாபிலோனியர்கள் எருசலேமின்மீது படையெடுத்து வந்தபோது, மற்றவர்களை அவர்கள் நாடு கடத்தியபோது, நாட்டில் இருந்த வறியவர்களும் எளியவர்களும், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்களும் அப்படியே விட்டுவிடப் பட்டார்கள். எனவே, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவதையும், அத்தகையோருக்கு அவர் புகலிடம் தருவார் என்பதையும் நாம் நமது மனத்தில் இருத்த வேண்டும்.

ஆண்டவரைப் பெருமைப்படுத்துவோம்

இவ்வுலக செல்வமும் அதிகாரமும் அறிவும் கடவுள் பார்வையில் ஒன்றுமே இல்லை; கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதுதான் எல்லாம்; அதுவே உண்மையான பேறு என்று நாம் இதுவரையில் சிந்தித்துப் பார்த்தோம். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்திலும் பவுல் இதே கருத்தினை வலியுறுத்திக் கூறிவிட்டு, இறுதியாக ஒரு முக்கியமான கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றார். அதுதான்: “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” என்பதாகும்.

கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார் எனில், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவதற்கு, அல்லது தங்களைப் பற்றிப் பெருமையாக எண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், எல்லாம் கடவுள் கொடுத்தது. எனில், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒருவர், கடவுளைப் பற்றியே பெருமை பாராட்ட வேண்டுமே ஒழிய, தன்னைப் பற்றி அல்ல. பவுல் தன்னுடைய போதனையாலும்; ஏன் தன் வாழ்வாலும் ஆண்டவரைப் பெருமைப்படுத்தினார். இன்னும் எத்தனையோ புனிதர்களும் மறைச்சாட்சிகளும் இறையடியார்களும் தங்கள் போதனையாலும் வாழ்வாலும் ஆண்டவரைப் பற்றியே பெருமை பாராட்டி, அவரைப் பெருமைப்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் பேறுபெற்றவர் ஆனார்கள்.

நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, நமது வாழ்வாலும் வார்த்தையாலும் அவரைப் பெருமைப்படுத்தி, பேறுபெற்றோர் கூட்டத்தில் இடம்பெறுவோம்.

சிந்தனைக்கு:
‘எந்த வழியில் செல்லவேண்டும் என்று வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றீர்களா? அப்படியானால், இயேசுவை உங்கள் முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். ஏனெனில், அவரே வழி” என்பார் அக்குயினோ நகர்ப் புனித தாமஸ். நம் ஆண்டவர் இயேசு தனது மலைப்பொழிவினால் நமக்கு மிகச்சிறந்த வழியை காட்டியிருக்கின்றார். அவ்வழியில் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மகிழ்ச்சியே நற்செய்தியாக

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். 'பேறு பெற்றவர்கள்' என்னும் எட்டு 'பேறு பெற்ற நிலைகளுடன்' தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்று சொற்களில் தரப்பட்டுள்ளது: (அ) இயேசு மலைமேல் ஏறுகின்றார், (ஆ) சீடர்கள் அவரிடம் வருகின்றனர், (ஆ) இயேசு அமர்ந்து கற்பிக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசேயென அறிமுகம் செய்கின்றார். முதல் ஏற்பாட்டு மோசே மலைக்கு ஏறிச் சென்றது போல, இரண்டாம் ஏற்பாட்டு மோசே என்னும் இயேசு மலைக்கு ஏறிச் செல்கின்றார். மலைப்பொழிவு சீடர்களுக்கான போதனையாக உள்ளது. மக்கள் அனைவரும் இயேசுவைச் சுற்றி இருந்தாலும், போதனை என்னவோ இயேசுவின் சீடர்களுக்கானதாக இருக்கிறது. ஆக, மலைப்பொழிவைக் கேட்பவர்கள் சீடத்துவத்துக்கான அழைப்பைப் பெறுகின்றனர். சீடத்துவத்தை ஏற்கும் ஒருவரே மலைப்பொழிவுப் போதனையில் முழுமையாகப் பங்கேற்கவும், அப்போதனையை வாழ்ந்து காட்டவும் முடியும். மூன்றாவது, 'அமர்தல்' என்பது அதிகாரத்தைக் குறிக்கின்றது. தொழுகைக்கூடங்களிலும் பள்ளிகளிலும் போதிக்கின்ற ரபிக்கள், வழக்கமாக அமர்ந்துகொண்டு கற்பிப்பர். அவர்கள் தங்கள் பாடத்தின்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும், மாணவர்கள்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும் இச்செய்கை அடையாளப்படுத்துகிறது.

'பேறுபெற்ற நிலை' என்பதை மகிழ்ச்சியான நிலை, தெரிவு செய்யப்பட்ட நிலை என்றும் புரிந்துகொள்ளலாம். இப்பகுதியில் எட்டு பேறுபெற்ற நிலைகளை இயேசு முன்மொழிகின்றார்.

பண்பு 1: 'ஏழையரின் உள்ளம் கொண்டிருத்தல்'
லூக்கா நற்செய்தியாளர் இவ்வாக்கியத்தைச் சற்றே மாற்றி, 'ஏழையரே நீங்கள் பேறுபெற்றோர்' என்று இயேசு சொல்வதாக எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியில் ஏழ்மை என்பது பொருளாதார வறுமை அல்லது பின்தங்கிய நிலையை அல்ல, மாறாக, ஓர் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையைக் குறிக்கின்றது. 'மற்றவர்களை, குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருக்கின்ற உள்ளம்' ஏழையரின் உள்ளம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய உலகில் சார்புநிலை என்பது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகக் கற்பிக்கப்படுகிறது. சார்புநிலை தவிர்த்துக் கட்டின்மை அல்லது தற்சார்பு நிலை முன்மொழியப்படுகிறது. பெற்றோர்களைச் சார்ந்திராத பிள்ளைகள், பிள்ளைகளைச் சார்ந்திராத பெற்றோர்கள், கணவனைச் சார்ந்திராத மனைவி, மனைவியைச் சார்ந்திராத கணவன், கடவுளைச் சார்ந்திராத நாமென நம் கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகின்றது. ஆனால், நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளோம். நம் வாழ்வுக்காக மற்றவர்களைச் சார்ந்துள்ளோம் என்னும் எண்ணம் நம் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது.

பண்பு 2: 'துயருறுதல்'
துன்பமும் மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது. ஆனால், மகிழ்ச்சியின் பொருள் துன்பத்தில் தெரிகிறது. துன்பம் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. துன்பம் என்பது நோய், முதமை, இறப்பு, இழப்பு ஆகியவற்றால் வரும் துன்பம் மட்டுமல்ல. மாறாக, சின்னச் சின்ன விடயங்களில் நாம் அடையும் துன்பம், நம் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருகின்ற துன்பம், முடிவெடுக்க வேண்டிய துன்பம், முயற்சி எடுக்க வேண்டிய துன்பம் என அனைத்தும் துன்பங்களே. 'நான் காயம் பட்டாலும் சோர்ந்து போகமாட்டேன்' என்னும் மனப்பாங்கே நமக்கு ஆறுதலைத் தருகின்றது.

பண்பு 3: 'கனிவு கொள்தல்'
இயேசு தம்மைப் பற்றிச் சொல்லும்போது, தாம் கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர் என அறிமுகம் செய்கின்றார். என்ன நடந்தாலும் அமைதியாகவும், பொறுமையாகவும், உடைந்து போகாமலும் இருத்தலே கனிவு. கனிவு கொள்கின்ற ஒருவர் நாட்டை உரிமையாக்கிக் கொள்கின்றார். அதாவது, அவரால் எவரையும் எதையும் சம்பாதித்துக்கொள்ள இயலும்.

பண்பு 4: 'நீதி நிலைநாட்டும் வேட்கை கொள்தல்' அநீதியாக நடப்பவர்கள் நடுவில் நீதியை நிலைநாட்டுதல் என்பது மிகப் பெரிய சவால். நாம் செய்கின்ற செயல்களைச் சரியானது, எளிதானது என இரு நிலைகளில் வகைப்படுத்தலாம். சரியானது எல்லாம் எளிமையாக இருப்பதில்லை. எளிமையானவை எல்லாம் சரியாக இருப்பதும் இல்லை. சரியானதை மட்டும் எப்போதும் விருப்பம் கொண்டிருப்பவர் நிறைவுகொள்வர்.

பண்பு 5: 'இரக்கம் கொள்தல்' மற்றவர்கள் என்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறேனோ, அப்படியே நானும் மற்றவர்களை நடத்துவேன். இரக்கம் கொள்தல் என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பது போல. நாம் செய்வது நமக்கே திரும்பக் கிடைக்கும்.

பண்பு 6: 'தூய்மையான உள்ளம்' கடவுள்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும் மிளிர்ந்து நின்றால் நலம். தூய்மை என்பது கடவுளோடு இணைத்துக் கொண்டாடப்படும் மதிப்பீடு. ஏனெனில், முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் தம்மைத் தூயவர் என அழைக்கின்றார். இங்கே தூய்மை என்பது வழிபாடு சார்ந்த தூய்மையைக் குறித்தாலும், தூய்மையான உள்ளம் என்பது தயார்நிலையில் இருக்கும் உள்ளம் என்றும் புரிந்துகொள்ளப்படலாம்.

பண்பு 7: 'அமைதி ஏற்படுத்துதல்' அமைதியை ஏற்படுத்துதல் என்பது நாம் மேற்கொள்ளும் தெரிவு. முணுமுணுப்புகள், சண்டைகள் எழுந்தாலும் இயல்பாக அவற்றை ஏற்றுச் சரிசெய்யும் தாராள உள்ளம் கொள்பவரே அமைதியை ஏற்படுத்த முடியும். அமைதி ஏற்படுத்துபவர் ஒருவர் மற்றவரை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறார்.

பண்பு 8: 'நீதியின் பொருட்டு துன்பம்' 4ஆம் பண்பில் நீதி என்பது விருப்பமாக நின்றது. இங்கே 8ஆம் பண்பில் அது செயலாகக் கனிகின்றது. விருப்பமும் செயலும் இணைந்து செல்ல வேண்டும். பேறுபெற்ற நிலைகளை நிறைவு செய்கின்ற இயேசு, 'மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார். மகிழ்ச்சிக்கான புதிய படிநிலைகளாகப் பேறுபெற்ற நிலைகளை அமைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைமைய வாழ்க்கைக்கு மக்களை அழைக்கின்றார் செப்பனியா. இறைமைய வாழ்வு என்பது இறைவனை முழுமையாகத் தேடுதல் ஆகும். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகர மக்கள் தாங்கள் அழைக்கப்பட்ட நிலையை உணர்ந்தவர்களாக வாழ அழைக்கப்படுகின்றனர்.

இயேசு முன்மொழிகின்ற நற்செய்தி மகிழ்ச்சியின் நற்செய்தியாக இருக்கின்றது.
மகிழ்ச்சிக்கான இப்பண்புகள் நமதானால், நாமும் விண்ணரசின் நற்செய்தியை ஒருவர் மற்றவருக்கு அறிவிக்க இயலும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ தயாரா?

நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக வாழ வேண்டுமெனில் மலைப்பொழிவின் வழியாகஇயேசு நமக்கு விட்டுச் சென்றநல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம். மலைப்பொழிவின் வழியாக புதிய இஸ்ரயேல் மக்களாகிய நம் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட இறையாட்சி மக்களாக வாழ வேண்டும் அறிவுறுத்தும் விதமாக இயேசு பறைசாற்றியுள்ளார்.

ஆங்கில அறிஞர் ஒருவர் "இந்தியாவில் ஒரே ஒரு கிறிஸ்தவர் மட்டும் இருந்தார். அவரும் திருமுழுக்கு பெறாதவர்" என்று மகாத்மா காந்தியை பற்றி புகழ்சாற்றியுள்ளார். "இந்துக்களின் புனித புத்தகமாகிய பகவத் கீதையை நான் இழக்க நேரிட்டாலும், கிறிஸ்துவின் மலைப்பொழிவின் ஒரு பிரதி இருந்தால் எனக்குப் போதும் " என்று சொல்லும் அளவுக்கு மலைப்பொழிவு பகுதியானது மகாத்மா காந்தியின் உள்ளத்தில் இடம் பிடித்தது.

இயேசு மலைப்பொழிவின் வழியாக எட்டு பேறுகளைப் பற்றி கூறியுள்ளார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட இறையாட்சியின் மக்களாக வாழ வேண்டும் என்பதை மலைப்பொழிவின் வழியாக கூறியுள்ளார். அவற்றின் பொருளையும் அவை தருகின்ற அழைப்பையும் சற்று தியானிப்போம்.

ஏழையரின் உள்ளதோர் என்ற வார்த்தையின் பொருள் இறைவன் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய தாழ்மையான சார்பு மனநிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. நமக்கு எவ்வளவு பணம், புகழ், பட்டம், பதவி இருந்தாலும் அனைத்தும் இறைவனுக்கு முன்னால் ஒன்றும் இல்லை; இறைவன் மட்டுமே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவர் என ஆழமாக உணரும் பொழுது நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம். எனவே இறைவனின் அருளின் மீது தாழ்மையான சார்பு மனநிலையை கொண்டிருக்க நாம் முயற்சி செய்வோம்.

துயருறுவோர் பேறுபெற்றோர் என்பதன் பொருள் இந்த சமூக கட்டமைப்பின் வழியாக மக்கள் படும் அடிமை நிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. கடவுள் துன்பப்படுபவர்களின் சார்பாக இருக்கின்றார். நம் வாழ்வில் துன்பம் வரும் பொழுது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை முற்றிலும் நம்ப வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாம் பேறுபெற்றவர்களாக வாழ முடியும்.

கனிவுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது கடவுள் முன் சிறியவர்களாகவும் கனிவு உள்ளவர்களாகவும் வாழ்பவர்களுக்கு இறைவன் நன்மை செய்வார் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஞானிகளுக்கும் வலிமையானவர்களுக்கும் நன்மை கிடைப்பதை விட கடவுள் முன்பாக வாழும் சிறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் கனிவு நிறைந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக ஆண்டவர் இயேசு எடுத்துரைத்துள்ளார்.

நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நீதியின் படி இறைவனின் திட்டத்தை ஏற்று நடப்பதை சுட்டிக் காட்டுகிறது. புனித சூசையப்பர் இறைவனின் திட்டத்தை ஏற்று நடந்தது போல நாமும் நடக்க அழைக்கப்படுகிறோம். இறைவனின் திட்டத்தின்படி வாழும் பொழுது நிச்சயமாக நாம் நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டவர்களாக வாழ முடியும். அதன் வழியாக பேறுபெற்றவர்களாக மாற முடியும்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தாராள மனப்பான்மை, மன்னித்தல், துன்புறுவோருக்கு இரக்கம், குணமளிக்கும் பண்பு போன்ற மதிப்பீடுகளை வாழ்வாக்குவதாகும். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரக்க குணம் உள்ளவர்களாக இருக்கும் பொழுது பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நம்முடைய தார்மீக நேர்மைத்தனத்தை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. கடவுளுக்கு முன்பாக தூய்மையோடும் நேர்மையோடும் கண்ணியத்தோடும் வாழும்பொழுது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். இதைத்தான் திருத்தூதர் பவுல் " உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்" பிலிப்பியர் 4:8 என கூறியுள்ளார். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தூய்மை நிறைந்தவர்களாக வாழ முயற்சி செய்வோம்.

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவுகளின் அமைதியை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கின்றது. எனவே தனிப்பட்ட முறையிலே நம்முடைய உடல் உள்ளம் ஆன்மா ஆழ்மன அமைதியை பெற்றிட நம்மோடும் நல்லுறவோடு இருக்க வேண்டும். நம்மை நாம் மதிக்க வேண்டும். கடவுள் கொடுத்த இந்த உடல் அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நாம் அனைவரும் கடவுளோடு நல்லுறவு கொள்ள முடியும். கடவுளோடு நல்லுறவு கொள்பவர்கள் நிச்சயமாக பிறரோடும் நல்லுறவு கொள்ள முடியும். அப்பொழுது நிச்சயமாக இறைவன் தருகின்ற அமைதியை நாம் பெற்று பேறுபெற்ற மக்களாக நாம் மாற முடியும்.

இறுதியாக நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நாம் நீதியின் பால் வாழக்கூடிய மக்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நீதி நெறியோடு வாழும் பொழுது அதிகமான துன்பங்களையும் சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அவற்றைக் கண்டு கலங்காமல் துணிவோடு நீதியின் பால் செயல்படும் பொழுது பேறுபெற்ற மக்களாக நாம் வாழ முடியும்.

எனவே கடவுளுடைய இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி நாம் வாழ மேற்கூறப்பட்ட எட்டு மலைப்பொழிவின் போதனைகளையும் நாம் வாழ்வாக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் மலைப்பொழிவின் வாழ்வியல் மதிப்பீடுகளை வாழ்வாக்கி இறையாட்சியின் தூதுவர்களாக மாறிடவும் தேவையான அருளை தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser