மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

மூவொரு கடவுள் பெருவிழா - மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தொடக்கநூல் 12:1-4 | திமோத்தேயு 1:8-10 | மத்தேயு 17:1-9

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது எந்த ஒரு பகுத்தறிவுள்ள மனிதரும் மறுக்க முடியாத உண்மை என்பதை நாம் அறிவோம். ஏனெனில் காரியம் என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் ஒன்று இருக்க வேண்டுமே. இந்த மேசை, இந்தக் கோயில் இருக்கிறது என்றால் இதைக் கட்டிய ஒருவர் இருக்க வேண்டுமல்லவா? குழந்தை இருந்தால் அதைப் பெற்றெடுத்த தாய் வேண்டுமே! மரமிருந்தால் அதற்கு விதை வேண்டுமே! இதேபோல்தான் இந்த அகில உலகமே! இந்த மாட்சிமிகு ஒழுங்குபட்ட வானகமும், வையகமும் கடவுள் ஒருவர் உண்டு என்று எடுத்துரைக்கிறது!

ஆனால் கடவுள் தந்தையாக, மகனாக, தூய ஆவியாக இருந்தார் என்பதை பகுத்தறிவின் ஒளியைக் கொண்டு மட்டும் அறிய முடியாது. அதற்கு இறை வெளிப்பாடு (Revelation) தேவை. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்வதென்ன? தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே திருப்பலியைத் தொடங்குகிறோம். ஆலயத்தில் நுழையும்போதும் சிலுவை அடையாளமிட்டு செபிக்கும் போதும் நாம் இந்த மூவொரு தெய்வத்தை அழைக்கிறோம். இந்த மூவொரு தெய்வம் மூன்று ஆட்களாக இருந்தாலும் வேறு வேறு அல்ல. ஒரு கடவுள் என்பது நமது விசுவாசம்.

ஆனால் இந்த மறை பொருளை மனிதராகப் பிறந்த நம் ஆண்டவர் இயேசுதான் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

நான் தந்தையிடமிருந்து வந்தேன். தந்தையிடம் மீண்டும் போகிறேன். துணையாளராகிய தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவேன் (யோவா. 14:16-17) என்று இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

அதே இயேசு தம் சீடர்களை நோக்கி நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் (மத். 28:19) என்று தெளிவுபட கூறி மூவொரு கடவுளின் மறைபொருளை வெளிப்படுத்தியுள்ளார்.

மூவொரு கடவுள் நம்மோடு எத்தகைய தொடர்பு கொண்டுள்ளார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளார் கூறுகிறார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியானவரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக (2 கொரி. 13:13) என்று வாழ்த்துவதில் தந்தையின் அன்பும், மகனின் அருளும், ஆவியானவரின் நட்புறவும் நம்மில் செயலாற்றுவது தெளிவாக்கப்படுகிறது.

தந்தை: பழைய ஏற்பாட்டில் யாவே: “இருக்கின்றவர் நாமே” என்று வெளிப்படுத்திய ஆண்டவர் பேரன்பும், இரக்கமும், பரிவும் கொண்டவர். சினம் கொள்ள  தாமதிப்பவர். நம்பிக்கைக்குரியவர் என்றெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறார். நம்மீது தன் அன்பையே பொழிகின்றார். நம் மீட்புக்காக தம் மகனையே நமக்காகக் கையளித்தார் (யோவா. 3:16). பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன் (எசாயா 49:15) என்று கூறியவரின் அன்பு நம் தேவை அறிந்து நமக்கு உதவி செய்யும் அன்பு.

மகன்: மகனாகப் பிறந்த நம் ஆண்டவர் இயேசு நம்மீது தன் அருளைப் பொழிகின்றார். “உலகம் முடியும் மட்டும் உங்களோடு இருப்பேன்” (மத். 28:20) என்று கூறிய ஆண்டவர் நமது மீட்பராக நமக்காக மன்னிப்பு வேண்டி, பரிந்து பேசுபவராக, தந்தையிடம் நம்மை அழைத்துச் செல்பவராகத் தன் அருளையே நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறார். எப்படி? நீங்கள் வாழ்வு பெறும் பொருட்டு அதுவும் மிகுதியாகப் பெறும் பொருட்டு வந்தேன் (யோவா. 10:10) என்று கூறியவர் ஆண்டவர் இயேசு. தன் வாழ்வையே நமக்காகத் தந்து வாழ்வு தரும் உணவு நானே (யோவா.6:48) என்றும் கூறியுள்ளார்.

தூய ஆவி: தந்தையுடையதும், மகனுடையதுமானவர்தான் தூய ஆவி. இவர் தனித்து செயல்படுபவர் அல்ல. இணைந்து செயல்படுபவர். மகன் இவ்வுலகில் விட்டுச் சென்ற பணியைச் சீடர் தொடர்ந்து செயல்படத் துணையாக நட்புறவாக இருப்பவர்தான் தூய ஆவியானவர். இவர் நம் உள்ளத்தில் குடிபுகுந்து நம்மைப் புனிதப்படுத்தி இறைவனின் தூய ஆலயமாக்கி நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்து கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து இருந்து இயேசுவின் சாட்சிகளாக விளங்கச் செய்கிறார்.

இந்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் செய்வது என்ன? தந்தையின் அன்பைச் சுவைக்கும் நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டாமா?

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி தன் படைப்பு அனைத்தும் வாழ வேண்டும் என்று தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பிய இறைவனின்  பேரன்பைச் சுவைக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுளைப் போல வாழ்வோம்

மூவொரு கடவுளின் திருநாளைத் திருச்சபைத் தாய் இன்று கொண்டாடி மகிழ்கின்றாள். மூன்று எப்பழ ஒன்றாக முழயும் ? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இதோ மூன்று உதாரணங்கள்.

முதல் உதராணம் : ஒரு குடும்பத் தலைவரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்தக் குடும்பத் தலைவர் அவர் பிள்ளைகளுக்குத் தந்த ; அவருடைய அப்பாவிற்கு மகன் ; அவருடைய நண்பர்களுக்கு நண்பர். ஒரே குடும்பத் தலைவர் தந்தை, மகன், நண்பர் என்ற மூன்று உறவு நிலைகளில் வாழ்வதுபோல, ஒரே இறைவன் உலகைப் படைத்த தந்தையாகவும், உலகை மீட்ட மகனாகவும், உலகை வழிநடத்தும் தூய ஆவியாராகவும் வாழ்கின்றார்.

இரண்டாவது உதாரணம் : மரம் ஒன்று! அதற்கு வேர் உண்டு. அது மண்ணுள் புதைந்து கிடப்பதால், மறைந்திருப்பதால் அதை நம்மால், நம் புறக்கண்களால் பார்க்க முழவதில்லை. அந்த மரத்திற்கு வெளியில் தெரியும் அடிப்பாகம் உண்டு; அந்த மரத்திற்குள் உயிர்ச்சத்து உண்டு.

மூவொரு இறைவனைப் புரிந்து கொள்ள வேரை தந்தைக்கும், அடிமரத்தை மகனுக்கும், உயிர்ச்சத்தை தூய ஆவியாருக்கும் ஒப்பிடலாம்.

மூன்றாவது உதாரணம்: விளக்கு ஒன்று! அங்கே எண்ணெயையும், திரியையும், சுவாலையையும் பார்க்கின்றோம். எண்ணெயைத் தந்தைக்கும், திரியை மகனுக்கும், சுவாலையைத் தூய ஆவியாருக்கும் ஒப்பிடலாம்.

மூன்று உதாரணங்களும், ஒப்புமைகளும் ஓரளவு மூவொரு இறைவனின் இயல்பை நாம் அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரையும் ஒன்றாக வாழவைப்பது எது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் பதில் கூறுகின்றது. இறைவன் இரக்கமுள்ளவர், பரிவுள்ளவர், சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர். இப்படிப்பட்ட அற்புதக் குணங்கள் இருக்கும் இடத்தில் எப்பழ பகைமையோ, சண்டை சச்சரவோ, பொறாமையோ, சீற்றமோ, கட்சி மனப்பான்மையோ, பிரிவினையோ, பிளவோ, அழுக்காறோ [கலா 5:20-21) இருக்கமுழியும்?

இன்று நம் நடுவே எத்தனைப் பிரிவினைகள்! ஒன்றாக இருப்பதையெல்லாம் உடைத்தெறியுங்கள் என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது! நான் வாழ வேண்டும்; நான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் எங்கும் புரையோழக் கிடக்கின்றது.

ஒன்றுமட்டும் உண்மை! இப்படிப்பட்ட வாழ்க்கை முறை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வரை, அன்பும், அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு தங்கமாட்டார் ; ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் நம்மோடு தங்காது [2 கொரி 13:11-13].

இன்றைய உலகுக்குத் தேவையான ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை, அமைதியை எந்த மாநாட்டினாலும், உச்சக்கட்டப் பேச்சுவார்த்தையாலும், பத்திரிகையாலும், படத்தாலும், விளம்பரத்தாலும், அறிவுரையாலும், அறவுரையாலும் நாம் முழுவதும் அடையமுழயாது. நாம் விரும்பும் புதிய வானத்தையும், புதிய பூமியையும் நாம் முழுவதும் அடைய சிறந்த வழி நாம் தொழுகின்ற மூவொரு இறைவனைப் போல நாம் வாழ முன்வருவதாகும்.

மேலும் அறிவோம் :

உலகம் தழீஇய(கு) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு ( குறள் : 425).

பொருள்: உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது, இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாததே சிறந்த அறிவாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாழ்நாள் முழுவதும் கடவுளை மறுத்த நாத்திகர் ஒருவர் சாகும் தறுவாயில் இருந்தார். அவருடைய நண்பர்கள் அவரிடம், “கடவுளே! என் ஆன்மாவை மீட்டருளும் ” என்று சொல்லும்படி வற்புறுத்தினார். அவரோ சிரித்துக் கொண்டு, “கடவுளே! நீ இருப்பது உண்மை என்றால், என் ஆன்மாவை, அப்படி ஒன்று எனக்கு இருந்தால், அதை மீட்டருளும்” என்று சொல்லி உயிர்விட்டார்!

பகுத்தறிவுள்ள எவரும் கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும், பகுத்தறிவு என்பது காரணம் - காரியம் அடிப்படையில் செயல்படுகிறது. காரியம் என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும்; விதையின்றி மரம் இல்லை; தாயின்றி சேயில்லை; இதை உலகில் சான்றோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சான்றோர்கள் ஏற்பதை மறுப்பவன் அலகைக்கு, அதாவது, பேய்க்குச் சமமானவன் என்கிறார் வள்ளுவர்.

“உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா லைக்கப் படும்”

திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: “பேய்களுங்கூட கடவுளை நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன” (யாக் 2:19). எனவே கடவுளை நம்ப மறுப்பவர் பேயைவிடக் கேடுகெட்டவர் என்பது தெளிவு. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவு நமக்கு உணர்த்துகிறது. ஆனால் ஒரே கடவுள் தந்தையாகவும் மகனாகவும் ஆவியாராகவும் இருக்கிறார் என்பதை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது. அதற்கு இறைவெளிப்பாடு தேவை. உண்மையில், மூவொரு கடவுள் பற்றிய உண்மையைக் கிறிஸ்துவே நமக்கு வெளிப்படுத்தி யுள்ளார். அவரே தெளிவாகக் கூறினார்: “நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்” (யோவா 16:28). “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோவா 16:13). “எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், துய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19). எனவே ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கிறார் என்பது கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட உண்மை. அது கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக” (2 கொரி 13:18). இதே
வாழ்த்துரையைத்தான் திருப்பலியில் திருச்சபை நமக்கு வழங்குகிறது. இவ்வாழ்த்துரையின்படி தந்தையின் தனிப்பண்பு அன்பு; மகனின் தனிப்பண்பு அருள்; ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு. இப்பண்புகளைப்பற்றிச் சிந்திப்பது நமக்கு நலம் பயக்கும்.

தந்தையின் தனிப்பண்பு அன்பு: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவா 4:16). அவருடைய அன்பு எத்தகையது என்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. “ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர்” (விப 34:6-7). தந்தையாகிய கடவுள் தமது ஒரே மகனையே கையளிக்கும் அளவுக்கு நம்மேல் அன்பு கூர்ந்தார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (யோவா 3:16). தமது சொந்த மகனையே நமக்காகக் கையளித்த தந்ைத மற்ற அனைத்தையும் நமக்குக் கொடுப்பார் என்பது உறுதி என்கிறார் புனித பவுல் (உரோ8:82). துன்ப வேளையில் கடவுளின் அன்பைப் பற்றி ஐயப்பாடு கொள்கிறோம்; கவலைப்பட்டுக் கண்கலங்குகிறோம். அவ்வேளையில் புனித பேதுரு நமக்குத் தரும் அறிவுரை: “உங்கள் கவலைகளை யெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேது 5:7).

மகனின் தனிப் பண்பு அருள்: அருள் என்பது கடவுளின் இலவசக் கொடை; மனித முயற்சி அல்ல. நாம் மீட்படைந்துள்ளது  நமது கிரிகையால் அல்ல, கடவுளின் கிருபையால் என்பது முழுக்க முழுக்க உண்மை. கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தால் நம்மை மீட்டார்; நம்க்கு எதிராக இருந்த பாவக் கடன் பத்திரத்தை அவர் சிலுவையில் அறைந்து அழித்துவிட்டார் (கொலோ 2:14). கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது (1 யோவா 1:7). நாம் மீட்படையத் தேவைப்படுவதெல்லாம் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொள்வதேயாகும். “மன்பதை பாவம் தீர்க்க மரித்தவா போற்றி” என்று கிறிஸ்துவை நன்றியுடன் போற்றுவோம்.

தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தோழமை: சென்ற வாரம் நாம் கேட்டதுபோல, தூய ஆவியார் வழியாகவே கடவுளின் அன்பு நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5); அவர் வழியாகவே நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை அடைந்து, கடவுளை அப்பா தந்தாய் எனக் கூப்பிடுகிறோம் (கலா 4:6); அவர் நமது பெருமூச்சு வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (உரோ 8:26). தூய ஆவியார் காட்டும் நெறியில் நடப்போம் (கலா 5:25). தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றை நமது வாழ்வில் வெளிப்படுத்துவோம் (கலா 5:22).

கடவுள் ஆள்தன்மையில் மூவராக இருந்தாலும் இறைத் - தன்மையில் ஒருவரே. அவர்களிடையே தனித்தன்மையும் உண்டு, ஒற்றுமையும் உண்டு. மூவொரு கடவுள் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல; வாழ்க்கையில், சிறப்பாக, குடும்ப வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மறைபொருள். தந்தை, மகன், தூய ஆவியார் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு கணவன் - மனைவி - குழந்தைகள் உறவில் பிரதிபலிக்கப்பட வேண்டும்.

ஒரு மனைவி தன் கணவரிடம், “இந்த  வீட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும்; இல்லையென்றால் உங்கள் அம்மா இருக்க வேண்டும். இரண்டுபேரும் இந்த வீட்டில் இருக்க முடியாது. உங்கள் முடிவு என்ன?” என்று கேட்டார். அதற்குக் கணவன், “நீயும் வேண்டாம்; என் அம்மாவும் வேண்டாம்; வேலைக்காரி இருந்தால் போதும்” என்றார். குடும்பத்தில் மூவொரு கடவுள் பிரசன்னமாய் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும் மகிமைப் படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

துறவறக் கூட்டு வாழ்விலும் மூவொரு கடவுளின் அன்பு வெளிப்பட வேண்டும். துறவறக் கூட்டு வாழ்வு ஒரு சிறப்புக் குடும்பம். அதில் ஒரு சிலர் அர்ச்சனாவாகவும், நிறைஞ்சனாவாகவும் இருக்கலாம்; ஒரு சிலர் எரிஞ்சனாவாகவும், காஞ்சனாவாகவும் இருக்கலாம். ஒருவர் மற்றவரை அவருடைய நிறைகுறைகளுடன் ஏற்று, “வேற்றுமையிலும் ஒற்றுமை, பன்மையிலும் ஒருமை” என்னும் மூவொரு கடவுளின் இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும்.

இவ்வாறு இல்லறத்திலும் துறவறத்திலும் மூவொரு கடவுளின் அன்பும், அருளும், தோழமையும் நின்று நிலவுவதாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உறவிலே சாயல்

மனிதன் இல்லாமல், மனித சமுதாயத் தொடர்பு இல்லாமல்கடவுளுக்கு ஏது வரலாறு? காலத்தைக் கடந்தவர் கடவுள். கால வரையரைக்கு உட்பட்டது சரித்திரம். காலத்தைக் கடந்தவராகவே கடவுளைக் கருதும் போது கால வரையரைக்கு உட்பட்ட வரலாறு இருக்கமுடியாது.

அப்படிச் சரித்திரமில்லாத கடவுள் எப்படி இருப்பார்? இரு பிற இனத்து மனிதர்கள் கடவுளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனராம். கிறிஸ்தவக் கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று ஒருவர் கேட்டார். “கிறிஸ்தவக் கடவுளைப் பற்றியா கேட்கிறாய்?” பற்றவர் பதில் சொன்னாராம் “பிதா என்று ஒருவர் இருந்தார் - தாத்தாவாக அப்போதே தலைதாடியெல்லாம் நரைத்துப் போய், இந்நேரம் அவர் மண்டையைப் போட்டிருப்பார், சுதன் என்று ஒருவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள. ஆவி என்று ஒருவர் புறாவாகக் காடுமலையெல்லாம் சுற்றிப் பறந்து கொண்டிருந்தார். இந்நோம் அவரைச் சுட்டுப் பிரியாணி ஆக்கி  இருப்பார்கள்

இப்படித்தான் இருந்திருப்பார் கிண்டலுக்கும் கேலிக்கும் உரியவராக!

ஆனால் நாம் வழிபடும் மூவொரு கடவுள் அப்படி நகைப்புக்கு உரியவரல்ல.

தந்தை இவ்வுலகை எவ்வளவு அன்பு செய்தார் என்றால் தன் ஒரே மகனையே மனித இன மீட்புக்காகக் கையளிக்கத் திருவுளம் கொண்டார் (யோ.3:16)

மகன் எப்படியெல்லாம் நம்மை அன்பு செய்தார்? சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். (பிலிப்.2:8)

ஆவியார் இன்றும் ஆற்றலோடு அர்ச்சிக்கும் பணியில் (கவனிக்கவும், வெறும் அற்புதங்கள் புரியும் பணியில் அல்ல) ஈடுபட்டு நம்மில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆம் சமுதாய ஈடுபாடு உடையவராக, புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பிக் காக்கத் துடிப்பவராகவே விவிலியக் கடவுள் வெளிப்படுகிறார்.

பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருநது வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிய, பபிலோனியாவிலிருந்து புனிதநகர் எருசலேம் நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலைப் பயணங்களாகட்டும், புதிய ஏற்பாட்டில் கல்வாரி நோக்கிய இயேசுவின் மீட்புப் பயணமாகட்டும், எல்லாமே வளமான மனித சமுதாய நோக்குடையவை.

புதிய சமூதாயம் - அதுவே இயேசுவின் இலட்சியம்.
புதிய சமுதாயம் - அதற்கே இயேசுவின் அர்ப்பணம்.

நமக்கும் கதியும் இலட்சியமும் கடவுளுக்கு அப்பால் - அது இறையாட்சியே. நம்மை அர்ப்பணிப்பதும் இறைவனுக்கல்ல. இறைவனுக்கு நாம் தேவையுமில்லை. ஆனால் இறைவனின் கனவான இறையாட்சிக்கு நாம் தேவை.

நமது மூவொரு கடவுள் சமுதாய நோக்கு, சமுதாய ஈடுபாடு கொண்டவர் மட்டுமல்ல. தானே ஒரு சமுதாயமாக - ஒரு குடும்பமாக வாழ்பவர்.

“கடவுள் தம் உருவில் (தமது சாயலாக) மானிடரைப் படைத்தார். கடவுளின் உருவிலேயே (தெய்வச் சாயலாகவே) அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் ” (தொ.நூ.1:27) அந்த உரு, அந்தத் தெய்வச் சாயல் எதில் எப்படி வெளிப்படுகிறது? மனித உடலிலா? இருக்க முடியாது. காரணம்? கடவுளுக்கு உடலில்லை. அரூபியான மனித ஆன்மாவிலா? மனித ஆன்மா கடவுளின் சாயல் என்ற சிந்தனை ஒரளவு மரபுச் சிந்தனையாக இருந்தாலும் அவ்வளவு பொருத்தமானமாகத் தோன்றவில்லை. வானதூதர்கள் அரூபிகளே. அதற்காக அவர்கள் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டார்கள் என்ற குறிப்புக்கு இடமில்லை. மனிதன் மட்டுமே கடவுளின் சாயல் - அதுவும் உறவிலே. கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார். மனிதனையும் ஒரு குடும்பமாகத் தன் சாயல் விளங்கப் படைத்தார். குடும்பமாக வாமும் மனிதனே மூவொரு கடவுளுக்கு சாட்சியாக இருக்கிறான்.

“மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று” (தொ.நூ.2:18) என்ற கடவுளின் சிந்தனைக்கே காரணம் அவரது உள்வாழ்க்கைதான். தன் சாயலாகப் படைக்கப்பட்டவன் எப்படித் தனியாக இருக்க முடியும்? திரித்துவம் ஒரு கணிதப் புதிர் அன்று (1+1+1-1?) மாறாக அது உறவின் பிறப்பிடம். உறவுகளின் சங்கமம்.

“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்”. (மத்.28:19) திருமுழுக்கு என்ற அருள்சாதனம் தண்ணீருக்குள் மட்டுமல்ல, தமதிரித்துவத்திற்குள் நம்மை மூழ்கடிக்கிறது. நாம் மூவொரு கடவுளுக்குள்ளும், மூவொரு கடவுள் நமக்குள்ளும் உறைகிறோம். எனவே கிறிஸ்தவ வாழ்வு என்பது மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்பதாகும். மூவொரு கடவுளின் வாழ்வு தந்தை மகன் தூய ஆவியில் விளங்கும் அன்பு உறவாகும். :

கடவுளை ஒரு சக்தியாகவோ வல்லமையாகவோ மட்டும் பார்க்காமல் தந்தை மகன் தூய ஆவி என்ற அன்புறவிலே பங்கு கொள்வதற்கு அழைப்பதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு சாட்சியம் பகர, தந்தையின் அன்பில் ஊன்றி நின்று ஆவியாரின் அருள்பொழிவால் வழிநடத்த இயேசுவே கற்றுக் கொடுத்திருக்கிறார். இவ்விதம் தந்தையோடும் ஆவியோடும் அவர் வாழ்ந்த வாழ்வே இம்மறையுண்மையை விளக்கிக் காட்டுகின்றது. நாமும் இத்தகைய உறவு வாழ்வை வாழ்வதற்கே நமது கிறிஸ்தவ நம்பிக்கை அழைக்கிறது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு இறைவன் பெருவிழா ஞாயிறு

உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்கள், ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக, பெரிதான, பிரமிப்பான, உண்மைகள், நம்மை மகிழ்வில் ஆழ்த்தும்போது, பேச்சிழந்து போவோம். கண்களில் கண்ணீர் பெருகும். அப்படி ஓர் அனுபவத்தை நமக்குத் தருவது, அல்லது, தரவேண்டியது, இன்றைய மூவொரு இறைவன் திருவிழா. ஆனால், கண்களில் நீர் வழிய, கரங்களைக் குவித்து, உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இது அமையாமல், நம் சிந்தனையளவில் நின்றுபோகும் விழாவாக இது அமைந்துவிடுகிறது.

மூவொரு இறைவனை தன் சிந்தனையால் அளக்கமுயன்ற மறைவல்லுனரான புனித அகஸ்டின் அவர்களைப் பற்றிய கதை நம்மில் பலருக்கு நினைவிலிருக்கும். கடற்கரை மணலில் ஒருநாள் நடந்துகொண்டிருந்த புனித அகஸ்டின் அவர்கள், நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக் கொண்டிருந்தார். அக்கடற்கரையில் எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்த ஒரு சிறுவன், புனித அகஸ்டின் அவர்களின் கவனத்தை ஈர்த்தான். அச்சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளியெடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். நான்கு அல்லது ஐந்து முறை சிறுவன் இதுபோல் செய்ததைப் பார்த்த அகஸ்டின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.

அந்தக் குழந்தைத்தனமான பதிலைக் கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகஸ்டின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகஸ்டினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.

ஒரு குழந்தையின் வழியே அதிர்ச்சி மருத்துவம் கொடுத்து, தன்னைப்பற்றிய ஒரு புதுப்பாடத்தை இறைவன் சொல்லித்தந்தார் என்பதை, புனித அகஸ்டின் உணர்ந்தார். "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்" என்று அந்த இறைவனைப்பற்றி, புனித அகஸ்டின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது" என்றார் Evegrius.

அமெரிக்க அரசுத்தலைவராய் இருந்த Franklin D.Roosevelt (FDR) அவர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு கதையும் இங்கு உதவியாக இருக்கும். Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruch அவர்களும், ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு உறங்கச் செல்வதற்கு முன், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்கள் சொன்னதை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவான அந்த இரவு வானில் கண்சிமிட்டிய விண்மீன்களைப் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள் தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது புரிகிறது. வாருங்கள், உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt அவர்கள் உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பழக்கத்தின் வழியாக, தனது உண்மை நிலையை அவரால் உணர முடிந்தது. அந்த மனநிலையோடு அவர் உறங்கச்சென்றது, அவர், தனக்குத் தானே கற்றுத்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற கனவுகளும், அடக்கிவிடும் முயற்சிகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்து உணர்தல் ஆகிய ஆழ்நிலை தியானத் திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும். ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை, வார்த்தைகளால் விளக்க முடியாது.

புனித அகஸ்டின் தன் மனதின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய மூவொரு கடவுள் என்ற உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார். ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் ‘ஏன்’ என்ற கேள்வியை புனித அகஸ்டின் எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் படித்திருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயேச் சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றிய ஒரு சில அழகான உண்மைகளையும், அதன் விளைவாக, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளையும் சொல்லித்தர, நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதை நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசுவின் காலம்வரை, இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூயஆவியார் என்ற, ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர், இயேசு. இயேசு இவ்விதம் அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம், நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன், உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?

உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

, சென்ற ஞாயிறு நாம் கொண்டாடிய ஞானத்தின் ஊற்றான தூய ஆவியார் நமக்கு அருள்தர மன்றாடுவோம். உறவுகளின் ஊற்றாக விளங்கும், மூவொரு இறைவன், தெளிவையும், துணிவையும், தரவேண்டும் என்று இந்த ஞாயிறன்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"மூவொரு இறைவன்: அன்பின் உறவு, வாழ்வின் மாதிரி"

இன்றைய நற்செய்தியில் (யோவான் 3:16-18) கடவுள் உலகை எவ்வளவோ அன்பு செய்தார் என்பதை நாம் காண்கிறோம். மூவொரு கடவுள் என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு "அன்பின் உறவு".

1. அன்பே கடவுள் (God is Love)

"தம் ஒரே மகனை அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."
• விளக்கம்: தந்தை (அன்பு செய்பவர்), மகன் (அன்பைப் பெறுபவர்), தூய ஆவியார் (அவர்களுக்கு இடையேயான அன்பு). இந்த மூன்று ஆட்களும் பிரிக்க முடியாத அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளனர்.
• சிந்தனை: நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்றால், நாமும் அன்பின் உறவில்தான் வாழ வேண்டும்.

2. தண்டிக்க அல்ல, மீட்கவே (Salvation, Not Condemnation)

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, அதன் வழியாக உலகம் மீட்புப் பெறவே கடவுள் தம் மகனை அனுப்பினார்."
• பாடம்: கடவுள் நம்மைத் தண்டிக்கும் நீதிபதி அல்ல, மாறாக நம்மைத் தேடி வரும் தந்தை. நாம் தவறு செய்யும்போது நம்மைத் தூக்கிவிடுபவர்.

3. ஒருமைப்பாடும் வாழ்த்தும் (Unity and Blessing)

இரண்டாம் வாசகத்தில் (2 கொரிந்தியர் 13:11-13) பவுல் அடியார் கூறுவது போல: "ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக."
• பொருள்: நாம் ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் போடும்போதும், இந்த மூவொரு இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

மூவொரு கடவுளின் பெருவிழாவன்று நாம் செய்ய வேண்டியவை:
• சிலுவை அடையாளத்தின் மதிப்பு: நாம் அவசரமாகச் சிலுவை அடையாளம் போடுகிறோம். இனிமேல், "தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே..." என்று சொல்லும்போது மிக மெதுவாக, பக்தியோடு, அந்த மூன்று ஆட்களையும் நினைத்துச் சிலுவை அடையாளம் போடுவோம்.
• குடும்ப ஒற்றுமை: மூவொரு கடவுள் எப்படி ஒருவராக இருக்கிறார்களோ, அதுபோல நம் குடும்பங்களும் பிரிவினையின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த வாரம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அன்பினால் ஒன்றிணைந்து வாழுங்கள்.
• சமூக ஒருமைப்பாடு: உங்கள் பங்கில் அல்லது அன்பியத்தில் உள்ள மற்றவர்களைத் "தன்னைப் போல" நேசிக்கப் பழகுங்கள். மூவொரு இறைவன் காட்டும் "கூட்டுறவு" (Communion) நம்மிடம் இருக்கட்டும்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message) "மூவொரு கடவுள் என்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒரு தத்துவம் அல்ல, அது வாழ்ந்து காட்ட வேண்டிய ஒரு உறவு. நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கும்போது, அங்கே மூவொரு கடவுள் வாழ்கிறார்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு இறைவனின்‌ பெருவிழா

முதல்‌ வாசகப்‌ பின்னணி (வி.ப. 34:4ஆ-6,8-9)

மோசே தன்‌ மாமாவான ஜெத்ரோவின்‌ இல்லத்தில்‌ ஆடு மேய்ப்பவராக இருக்கின்றார்‌, ஒருநாள்‌ கடவுள்‌ எரியும்‌ முட்செடியின்‌ வழியாக அவருக்குக்‌ காட்சியளிக்கின்றார்‌. எகிப்தில்‌ தன்‌ மக்கள்‌ பாரவோனின்‌ அடிமைத்தனத்தில்‌ பல துன்பங்களையும்‌, துயரங்‌ களையும்‌ கண்டு வழ்ந்து கொண்டிருக்கிறார்கள்‌ என்றும்‌ அவர்களை மீட்டுவர மோயிசனை அழைப்பதாகவும்‌ இவருக்கு கடவுள்‌ உணர்த்துகிறார்‌.

இறைவனின்‌ தேர்ந்தெடுப்பிற்கு தான்‌ தகுதியற்றவன்‌ என்பதை வெளிப்படுத்தினாலும்‌ கடவுள்‌ சமூகத்‌ தேவையை அவருக்கு உணர்த்துகிறார்‌. மோயிசன்‌ கடவுளின்‌ முழுப்பெயரை அறிந்து கொள்ள முட்படுகிறார்‌. ஏனெனில்‌ கடவுளின்‌ பெயரால்‌ கூறினால்‌ மக்கள்‌ நம்புவார்கள்‌. கடவுள்‌ அதற்கு “நாமே இருக்கிறவர்‌” எபிரேய மொழியில்‌ “யாவே” என்று பதிலளிக்கிறார்‌. கடவுள்‌ பெயரை அறிந்துகொண்டால்‌ கடவுளைப்‌ பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்‌ என்று மோயிசன்‌ எண்ணினார்‌. ஆனால்‌ வார்த்தை களால்‌ கடவுளை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. படிப்படியாக பல புதுமைகளைச்‌ செய்யும்போது கடவுளின்‌ வல்லமை மோயிசனுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (2கொரி. 13:11-13)

தூய பவுல்‌ இந்தப்‌ பகுதியின்‌ வழியாக கொரிந்து நகர மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறார்‌. அவர்களின்‌ தீய எண்ணங்களையும்‌ தீய செயல்களையும்‌ விட்டுவிட்டு இறைவனுக்கு கந்த ஒரு தூய வாழ்வு வாழவும்‌, இறைவனில்‌ கலந்து மகிழ்ச்சியோடு இருக்கவும்‌ ஒரு சிறு அறிவுரையாக இப்பகுதி அமைகிறது.

தூய பவுல்‌ 3 விதமான நம்பிக்கைகளை மேற்குறிப்பிட்டுக்‌ காட்டுகிறார்‌.

1.மக்கள்‌ அனைவரும்‌ நல்ல வழியில்‌ வாழ்வார்கள்‌ என்ற நம்பிக்கை
2.பவுலின்‌ அறிவுரைகளை மக்கள்‌ ஏற்றுக்‌ கொள்வார்கள்‌ என்ற நம்பிக்கை
3.மக்கள்‌ அனைவரும்‌ கடவுளை அன்பு செய்யும்முன்‌ ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்வார்கள்‌ என்ற நம்பிக்கை

இந்த 3 நம்பிக்கைகளுடன்‌ இறுதி ஆசிர்‌ ஒன்று கூறி பவுல்‌ முடிக்கிறார்‌. பகைவருடன்‌ சிறந்த வழியில்‌ அமைதியை ஏற்படுத்து வது அவர்களுக்காக செபிப்பதுதான்‌ என்ற வழியையும்‌ அவர்‌ உணர்த்துகிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (யோவான்‌ 3:16-18)

விவிலியத்தில்‌ ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதி மிகவும்‌ பிடித்ததாக இருக்கும்‌. ஆனால்‌ இந்தப்‌ பகுதி எல்லோராலும்‌ மிகவும்‌ விரும்பும்‌ ஒன்று!. ஏனெனில்‌ பழைய ஏற்பாட்டில்‌ கடவுள்‌ சினம்‌ கொள்பயவராகவும்‌, நீதியின்‌ கடவுளாகவும்‌, தண்டிக்கும்‌ கடவுளாகவும்‌ சித்தரிக்கப்படுகிறார்‌. ஆனால்‌ புதிய ஏற்பாட்டில்‌ இயேசு அவரை மிகவும்‌ அன்பு செய்பவராகவும்‌, மன்னிக்கும்‌ கடவுளாகவும்‌, அனைவரையும்‌ ஏற்றுக்‌ கொள்ளும்‌ கடவுளாகவும்‌ வெளிப்படுத்துகின்றார்‌.

இயேசு கடவுளின்‌ எண்ணத்தையே மாற்றினார்‌ என்பது ஒருசிலரின்‌ கருத்து. கடவுள்‌ மனிதனை அளவுக்கு அதிகமாக அன்பு செய்ய கடவுள்‌ முயற்சி எடுக்கிறார்‌. கடவுள்‌ அன்பின்‌ ஊற்று, அன்பு நிறைந்தவர்‌. அந்த அன்பை மனிதனிடம்‌ பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார்‌. உலகத்தைக்‌ கடவுள்‌ அன்பு செய்தார்‌. நாட்டை மட்டும்‌ அல்ல நல்ல மக்களை மட்டும்‌ அல்ல, அனைத்து மக்களையும்தான்‌ அன்பு செய்கிறார்‌. இறைவனின்‌ அன்பு இஸ்ராயேல்‌ மக்களுக்கு மட்டுமன்று, உலகத்தார்‌ அனைவருக்கும்‌ உரியது என்பது இறைமகனின்‌ மானிடப்‌ பிறப்பில்‌ தெள்ளத்‌ தெளிவாகிறது.

மறையுரை

தந்தை, மகன்‌, தூய ஆவி - இம்மூவரும்‌ 3 ஆட்கள்‌, ஆனால்‌ ஒரே கடவுள்‌. இது ஒரு புரியாத புதிராகப்‌ பலருக்குத்‌ தோன்றுகிறது. ஆனால்‌ இது ஒரு மறையுண்மை. நமது அறிவால்‌ புரிந்துகொள்ளச்‌ சற்று கடினமாக இருப்பது இந்த மூவொரு கடவுள்‌ மறையுண்மை. நாம்‌ எந்தச்‌ செயலைச்‌ செய்யத்‌ துவங்கும்‌ முன்னதாக அல்லது ஒரு செபத்தை செய்யத்‌ துவங்கும்‌ முன்பாக, 'தந்தை, மகன்‌, தூய்‌ ஆவியின்‌ பெயராலே” என்று சொல்கிறோம்‌. சிலுவை அடையாளம்‌ வரைகின்றபோதெல்லாம்‌ இந்த மறையுண்மை யை நினைவு கூர்கிறோம்‌. இந்த மறையுண்மை புரிந்துகொள்ளச்‌ சற்றுக்‌ கடினமாக இருப்பதால்‌ கடவுள்‌ புரிந்து கொள்ளப்பட முடியாதவர்‌, அறிந்து கொள்ளப்பட முடியாதவர்‌ என்று எண்ணிவிடக்‌ கூடாது.

மாறாக, இதுபோன்ற மறையுண்மைகள்‌ நம்‌ விசுவாச வாழ்விற்கு வளமை சேர்க்கின்றன. இறைவன்‌ முற்றிலும்‌ புரிந்து கொள்ள முடியாதவரல்லர்‌. ஏனெனில்‌ ஆதியிலே உலகினைப்‌ படைத்தபோதும்‌, சரித்திரத்திலே இஸ்ராயேல்‌ மக்களை அடிமைத்‌ தளையிலிருந்து மீட்டபோதும்‌, மேகத்‌ தூணாக இருந்து வழிநடத்திய போதும்‌, தந்தையாகவும்‌, மண்ணுலகில்‌ மனிதனாய்ப்‌ பிறந்து நம்‌ பாவங்களுக்காக சிலுவையில்‌ மரித்தபோது மகனாகவும்‌, உயிர்த்த பின்‌ நம்முள்ளிருந்து ஆற்றுப்படுத்துகின்ற தூய ஆவியானவராகவும்‌ இறைவன்‌ இருக்கின்றார்‌.

திருவிவிலியத்தை புரட்டிப்‌ பார்த்தால்‌ மூவொரு கடவுளின்‌ வெளிப்பாடு நமக்குத்‌ தெள்ளத்‌ தெளிவாகப்‌ புரியும்‌. பழைய ஏற்பாட்டில்‌ தொ.நூ. 1:1-இல்‌ கடவுள்‌ என்ற வார்த்தை கொடுக்கப்‌- பட்டிருக்கிறது. இது எபிரேய மொழியில்‌ “எலோகிம்‌' என்று அழைக்கப்படுகிறது. இந்த எலோகிம்‌ என்ற வார்த்தை பன்மையில்‌ உள்ளது. அதாவது இரண்டிற்கு மேற்பட்ட நபரைக்‌ குறிப்பதாகக்‌ குறிப்பிடப்படுகிறது. இதனால்தான்‌ பிற்பகுதியில்‌ மனிதனைக்‌ கடவுள்‌ படைக்கும்போது நமது சாயலில்‌ படைப்போம்‌ (தொ.நூ. 1:26), நம்மைப்‌ போல (தொ.நூ. 3:22) என்று பன்மையில்‌ குறிப்பிடப்‌ படுகிறது.

புதிய ஏற்பாட்டில்‌ மூவொரு கடவுளைப்பற்றி தெள்ளத்‌ தெளிவான கருத்துகள்‌ வெளிப்படையாக உள்ளன. குறிப்பாக இயேசுவின்‌ திருமுழுக்கின்போது தந்தையின்‌ குரல்‌ “இவரே என்‌ அன்பார்ந்த மகன்‌, இவரில்‌ நான்‌ ஸ்ரிப்படைகிறேன்‌” என்பதிலிருந்தும்‌ புறா வடிவில்‌ ஆவியின்‌ பிரசன்னமும்‌ மனித உருவ யேசுவின்‌ சாயலும்‌ தமத்திருத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. (மத்‌. 3:13). மேலும்‌ ஆண்டவர்‌ யேசுவின்‌ உருமாற்ற நிகழ்விலும்‌ (மாற்‌. 9:2-8) யேசுவின்‌ கடைசிப்‌ பிரியாவிடையிலும்‌ (யோவா. 16:13-25) தமத்‌ திருத்துவம்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம்‌ என்பது ஒரே சக்திதான்‌. ஆனால்‌ அது விளக்கை எரிய வைக்கிறது. மோட்டாரை இயக்குகிறது. வண்டியை ஓட வைக்கிறது. இவ்வாறு சக்தி ஒன்று. இயக்கங்கள்‌ பல. மூன்று ஆட்கள்‌. ஆனால்‌ ஒரே இறைவனாக அன்புறவோடு வாழ்கிறார்‌ என்பது இயேசுவின்‌ வாழ்வில்‌ வெளிப்படுகிறது. பிதா, சுதன்‌, தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களுக்கும்‌ ஆளுந்தன்மை கொடுப்பது அவர்களுக்கு இடையே உள்ள அன்புறவுதான்‌. பகிர்ந்துகொள்ள முடியாத விதத்தில்‌ மூன்று வட்களிடமும்‌ இறையியல்பு செயல்‌ படுகிறது. அன்புறவில்‌ வாழும்‌ இறைவனை அன்பினால்‌ மட்டுமே புரிய முடியும்‌.

இறைமகன்‌ இயேசு தனது வாழ்வில்‌ தன்‌ தந்தையிடமிருந்து வந்ததாகவும்‌, தந்தையிடம்‌ திரும்பிச்‌ செல்வதாகவும்‌, தூய ஆவியை அளிப்பதாகவும்‌ கூறியுள்ளார்‌. “நான்‌ தந்தையிடம்‌ இருந்து வந்தேன்‌. தந்‌்தையிடமே மீண்டும்‌ போகிறேன்‌. துணையாளாரகியத்‌ தூய ஆவியை உங்களுக்கு அனுப்புவேன்‌” (யோவா. 14:16-17). “நீங்கள்‌ சென்று எல்லா இனத்தாரையும்‌ சீடராக்குங்கள்‌. தந்தை, மகன்‌, தூய ஆவியின்‌ பெயரால்‌ திருமுழுக்குக்‌ கொடுங்கள்‌” (மத்‌ 28:19) என்று மூவொரு இறைவனின்‌ மறைபொருளை இயேசுவே வெளிப்‌ படுத்தியுள்ளார்‌.

தந்தைக்கும்‌ தனக்கும்‌ உள்ள நெருங்கிய உறவைக்கூட வெளிப்படுத்தியிருக்கிறார்‌. “தந்தையும்‌ நானும்‌ ஒன்றே, நான்‌ தந்தையுள்‌ இருக்கிறேன்‌, தந்தை என்னுள்‌ இருக்கிறார்‌” (யோவா. . 14:11). “தந்தையை நானறிவேன்‌, தந்தையும்‌ என்னை அறிவார்‌” (லூக்‌. 11:27) என்று தூய ஆவியுடன்‌ உள்ள நட்புறவை, “எனக்குப்‌ பின்‌ துணையாளர்‌ ஒருவரை அனுப்புவேன்‌” (யோவா. 14:16) என்றும்‌ இறைமகன்‌ வெளிப்படுத்தியுள்ளார்‌.

தந்தை, மகன்‌, தூய ஆவி மூவரும்‌ ஒரே அன்பில்‌ இணைந்து ஒன்றித்திருப்பதுபோல, நாம்‌ ஒவ்வொருவரும்‌ உறவில்‌ வாழ, மூவொரு . இறைவன்‌ அழைப்பு விடுக்கிறார்‌. “தந்தையே நீர்‌ என்னுள்ளும்‌ நான்‌ உம்முள்ளும்‌ இருப்பதுபோல அவர்களும்‌ நம்முள்‌ ஒன்றாய்‌ இருக்கும்படி மன்றாடூகிறேன்‌” (யோவா. 17:21).

இதே கருத்தை தூய பவுல்‌ உணர்த்துகிறார்‌ “நாம்‌ ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்தால்‌ ஆண்டவராகிய “ இயேசு கிறிஸ்துவின்‌ அருளும்‌, கடவுளின்‌ அன்பும்‌, தூய ஆவியின்‌ நட்புறவும்‌ நம்‌ அனைவரோடும்‌ என்றும்‌ தங்கும்‌” (2கொரி. 13:13). தூய தாமஸ்‌ அக்குவினாஸ்‌ கடவுளைப்‌ பற்றிய தனது சிந்தனைகளை “Summa Theologiae" என்ற தலைப்பில்‌ மூன்று புத்தகமாக எழுதினார்‌. 2ம்‌ புத்தகத்தை எழுதியவுடன்‌ ஒருநாள்‌ திருப்பலி வைக்கும்போது இறையனுபவத்திற்கு ஆட்பட்டுவிடுகிறார்‌. தனது மூன்றாம்‌ புத்தகத்தை எழுதி முடிக்குமாறு அவருக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால்‌ அவரோ, “என்னை ஆட்கொண்ட அந்த குறுகிய கால இறையனுபவத்தோடு ஓப்பிடும்‌- போது நான்‌ கடவுளைப்‌ பற்றி எழுதியவை அனைத்தும்‌ ஒன்றுமில்லாமைக்கு சமம்‌.” என குறிப்பிடுகின்றார்‌.

கடவுளைப்‌ பற்றி வேண்டாத விவாதம்‌ செய்யாது, செபம்‌, தவம்‌, தியானம்‌, இறைவார்த்தை வழியாக இறைவனால்‌ ஆட்‌- கொள்ளப்படும்போது, இறைவனை முழுமையாக நாம்‌ உரை முடியும்‌. அந்த மூவொரு இறைவனை நாம்‌ வாழ்விலே மையப்படுத்தி, எல்லா செயல்பாட்டிற்கும்‌ துவக்கமும்‌ முடிவுமாக மூவொரு இறைவனைப்‌ போற்ற முடியும்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1 மூவொரு இறைவன்‌ நம்‌ குடும்ப உறவுக்கு மாதிரி.
2 மூவொரு இறைவனை நாம்‌ அவர்கள்‌ பால்‌ கொள்ளும்‌ தனிப்பட்ட உறவால்‌ மட்டுமே புரிந்து கொள்ளபடக்‌ கூடிய ஒன்று.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவாரு கடவுள்‌ பெருவிழா

இன்று மூவொரு இறைவனின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாடுகின்றோம்‌. நமது கிறிஸ்தவ மறையின்‌ ஆணிவேராகவும்‌, அச்சாணியாகவும்‌ விளங்குவது இந்த மறையுண்மை. இதனுடைய விளக்கங்களையும்‌ இதன்‌ வழி நாம்‌ எதை நம்புகிறோம்‌ என்பனவற்றையெல்லாம்‌ நாம்‌ சிறுவர்‌ முதல்‌ தெள்னத்‌ தெளிவாய்‌ அறிந்து வைத்திருப்போம்‌. இங்கு நமது சிந்தனைக்கு இன்றைய இறை வார்த்தையின்‌ அடிப்படையில்‌ சிறப்பாக புதிய ஏற்பாட்டு வாசகங்களின்‌ அடிப்படையில்‌ தூய தமத்திருத்துவத்தின்‌ மூன்று ஆள்களின்‌ பண்பு நலன்களையும்‌, பணிகளையும்‌ பற்றி காண்போம்‌.

தந்தையாம்‌ இறைவன்‌

இன்றைய நற்செய்திப்‌ பகுதியின்‌ மூன்று வசனங்களிலும்‌ தந்தையாம்‌ இறைவன்‌ “கடவுள்‌” என்ற வார்த்தையால்‌ குறிப்பிடப்‌படுகின்றார்‌:
1) உலகின்மீது அன்புகூர்ந்த கடவுள்‌ (வச. 16).
2) தன்‌ மகனை உலகிற்கு அனுப்பிய கடவுள்‌ (வச. 17), மகனை அறிந்த கடவுள்‌ (வச. 16).
3) கடவுளின்‌ ஒரே மகன்‌ இயேசு கிறிஸ்து (வச. 18).

இவை மூன்றின்‌ வழியாகக்‌ கடவுளாம்‌ இறை தந்தையின்‌ பணியும்‌, பண்பு நலனும்‌ தெற்றென விளங்குகிறது. அதாவது கடவுள்‌ இந்த உலகின்மீது அன்பு கொண்டிருக்கிறார்‌; அதைப்‌ பலவிதங்களில்‌ வெளிப்படுத்துகிறார்‌. இந்த உலகை கடவுள்‌ படைத்தது இறையன்பின்‌ வெளிப்பாடு. ஆபிரகாமை அழைத்தது முதல்‌ பழைய ஏற்பாட்டின்‌ நிகழ்வுகள்‌ அனைத்தும்‌ இறையன்பின்‌ வெளிப்பாடு என அடுக்கிக்கொண்டே போகவாம்‌. இந்த வரிசையின்‌ மேலான வெளிப்பாகெள்‌ கடவுள்‌ தம்‌ மகனையே அளித்தது. எனவே, கடவுள்‌ தம்‌ மகனை இந்த உலகிற்கு ஒரு கொடையாகத்‌ தந்தருளினார்‌. டவுன்‌ மகனை அளித்தார்‌ எனும்போது அது ஏதோ ஒரு பொருளை எடுத்து பரிசாகத்‌ தருவது போன்றது அல்ல; மாறாக, இங்கு “அளிக்கும்‌ . அளவுக்கு" எனும்போது, இது சாதாரண அளித்தல்‌ அல்ல; மாறாக, சிறப்பாக இயேசு சிலுவையில்‌ சாகும்‌ அளவுக்குக்‌ கையளித்ததைக்‌ குறிக்கும்‌.

இதைக்‌ கலாத்தியர்‌ இன்னும்‌ தெளிவுபடுத்துறது. “இவரே (இயேசுவே) நம்‌ தந்தையாம்‌ கடவுளின்‌ திருவுளத்திற்கு ஏற்ப தம்மையே ஒப்புவித்தார்‌' (கலா 1:4). ஆக, கடவுள்‌ தம்‌ ஒரே மகனைப்‌ பலியாக அளிக்கும்‌ அளவுக்கு உலகை அன்பு செய்தார்‌. அதனால்தான்‌ பவுலடியார்‌ இரண்டாம்‌ வாசகத்தில்‌ “கடவுளின்‌ அன்பு (2 கொரி 13:13) கொரிந்தியர்களுடன்‌ இருப்பதாக” என வாழ்த்துகிறார்‌.

மகனாகிய இயேசு

நற்செய்தி வாசகத்தின்‌ மூன்று வாசகங்களில்‌ மகன்‌ எனும்‌ சொல்‌ பாயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கெல்லாம்‌ இயேசுவின்‌ பண்பும்‌, பணியும்‌ சட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1) இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோர்‌ நிலைவாழ்வு பெறுவர்‌ (வச. 16).
2) இயேசு வழியாக உலகம்‌ மீட்கப்படுகிறது (வச. 17).
3) இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோர்‌ தண்டனைத்‌ தீர்ப்புக்கு ஆளாவதில்லை (வச. 18).

ஆக, இயேசுவைப்பற்றி இப்பகுதி இரு முக்கிய கருத்துக்‌களை வெளிப்படுத்துகின்றது.

முதலாவதாக, இயேசு தம்‌ உயிரை தந்து உலகை மீட்டார்‌. எனவே, இவர்‌ உலக மீட்பர்‌. இரண்டாவது அவரது மீட்பு செயல்‌ உலகத்தார்மீது ஏற்படுத்துகிற தாக்கம்‌. அதாவது அவர்‌ மீட்பர்‌ என்பதை நம்பி ஏற்றுக்‌ கொள்பவருக்கு நிலை வாழ்வு தருகின்றார்‌. அதனால்‌ அவர்கள்‌ கண்டிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக அவரை நம்பாதோர்‌ ஏற்கெனவே தீர்ப்புப்‌ பெற்றுவிட்டனர்‌ (வச. 18). ஆக, உலகை மீட்டுதும்‌, அதன்‌ வழியாய்‌ உலக மாந்தருக்கு நிலைவாழ்வை வழங்குவதும்‌ தூய தமத்திரித்துவத்தின்‌ இரண்டாம்‌ ஆளின்‌ பணியும்‌, பண்பும்‌ ஆகும்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவுலடியார்‌ இயேசுவின்‌ அருள்‌ கிறிஸ்தவ சமூகத்‌துடன்‌ இருக்க வாழ்த்துகிறார்‌.

தூய ஆவியார்‌

நற்செய்திப்‌ பகுதியில்‌ தரய ஆவியாரைப்‌ பற்றி குறிப்பிடப்பட வில்லையானாலும்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ “தூய அவியாரின்‌ நட்புறவும்‌ உங்கள்‌ அனைவரோடும்‌ இருப்பதாக” (2 கொரி 13:13) எனக்‌ குறிப்பிடுகன்றது. இயேசுவின்‌ விண்ணேற்றத்‌ திற்குப்‌ பிறகு திருத்தூதர்கள்‌ மீது தூய ஆவி பொழியப்பட்ட நாள்‌ முதல்‌ தூய ஆவியார்‌ திருஅவையில்‌ தங்கி அதனுடன்‌ நட்புடன்‌ உறவாடி வரலாற்றின்‌ பல்வேறு காலக்கட்டங்களில்‌ திருஅவை எனும்‌ பாய்மரக்‌ கப்பல்‌ சிதைந்து விடாமல்‌, திசைமாறிப்‌ போய்விடாமல்‌ வழிநடத்தி வந்துள்ளார்‌. இன்றும்‌ வழிநடத்துகன்றார்‌ என்பது நம்‌ நம்பிக்கை. எனவே, தூய ஆவியின்‌ செயல்பாடும்‌, தோழமையும்‌, வழிகாட்தெலும்‌ திருஅவையில்‌ நமது இறை சமூகத்தில்‌, நம்‌ குடும்பங்களில்‌ இன்றும்‌ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

ஆக, மூவொரு இறைவன்‌ எனும்‌ மிக உன்னத மறை யுண்மையை விழாவாக கொண்டாடும்‌ நாம்‌ தந்தையாம்‌ இறைவனின்‌ அன்டையும்‌, இயேசுதம்‌ மீட்பு செயலால்‌ கொணரும்‌ அருனையும்‌, தூய ஆவி வழிநடத்தி அருளும்‌ தோழமையும்‌ பெற்று நல்‌ இறை சமூகமாய்‌ வளர்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுள்‌ முதல்‌ ஆண்டு

முதல் வாசகம் விப 34: 4-6, 8-9

இஸ்ரயேலர்‌ பொற்கன்றுக்குட்டி வழிபாடு நடத்தியது கண்ட மோசே அவர்கள்‌ மீது கோபம்‌ கொண்டு, இறைவனுடைய கட்டளைகள்‌ எழுதப்பட்ட சாட்சியப்‌ பமகை இரண்டையும்‌ உடைத்தெறிந்தார்‌ (விப39). அதன்பின்‌ மறுபடியும்‌ சீனாய்‌ மலையிலேறி, இறைவனிடமிருந்து, வேறு இரண்டு கற்பலகைகளிலே கட்டளைகள்‌ எழுதி, மக்களிடம்‌ கொண்டுவருகிறார்‌ (33- 34). மலையிலே மோசே இறைவன்‌ புகழ்‌ பாடியது இன்றைய வாசகம்‌. மூவொரு கடவுள்‌ விழாவன்று இவ்வாசகம்‌ நம்‌ கண்முன்‌ இக்கடவுளின்‌ அருளிரக்கத்‌ தன்மையை விளக்குகிறது.

ஆண்டவர் அருள் மிக்கவர்.

“அருள்‌ நோக்கு, தயவு, பொறுமை, அளவில்லாத இரக்கம்‌” கொண்டவர்‌ அவர்‌ (34:9. அவருடைய அருளன்பிற்குக்‌ காலமோ, நேரமோ, அளவோ கிடையாது. எனவேதான்‌, “என்மீது அன்புகூர்ந்து என்‌ விதிமுறைகளைக்‌ கடைபிடிப்போருக்கு ஆயிரம்‌ தலைமுறைக்கும்‌ பேரன்பு காட்டுவேன்‌.” (விப 20:6) என்பார்‌. “ ஆண்டவர்‌ சினம்‌ கொள்ளத்‌ தாமதிப்பவர்‌. அருள்‌ இரக்கம்‌ காட்டுவதில்‌ அளவு கடந்தவர்‌. குற்றங்களையும்‌ குறைகளையும்‌ மன்னிப்பவர்‌ ' (எண்‌ 14:18) என்பார்‌ மோசே. இத்தகைய அளவுகடந்த அன்பு கொண்ட கடவுள்‌ தம்மையே “பொறாமை கொண்ட கடவுள்‌” (இச 5:9-10) என்று அழைத்துக்கொள்வதும்‌ இவருடைய அன்பின்‌ ஆழத்தைக்‌ காட்டுகிறது எனலாம்‌. தந்தைக்‌ கடவுளின்‌ அருளன்பே இயேசுவின்‌ சொற்களிலும்‌ செயல்களிலும்‌ தொடர்ந்து வெளிப்படுகிறது. “சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும்‌ என்னிடம்‌ வாருங்கள்‌. உங்களை நான்‌ இளைப்பாற்றுவேன்‌ ” (மத்‌ 11:28-30) என்ற இயேசு, பாவிகள்‌, நோயாளிகள்‌, துயருற்றோர்‌ அனைவருக்கும்‌ விடுதலையும்‌ வாழ்வும்‌ அளித்தது அவர்‌ அருளன்பின்‌ வெளிப்பாடே. தூய ஆவியாரின்‌ பலன்களோ அன்பு மகிழ்ச்சி, அமைதி, பொறுமை முதலியன (கலா.5:22). எனவே அவரிலும்‌ தந்தக்‌ கடவுளின்‌ அருளன்பு வெளிப்படுகிறது. இவ்வாறு மூவொரு கடவுள்‌ என்றாலே அருளன்பு, பரிவிரக்கம்‌ என்பது புலனாகின்றது. அன்புக்‌ கடவுளுக்குப்‌ பதிலன்பு காட்டுவோம்‌. “அன்பு எனும்‌ பிடியுள்‌ அகப்படும்‌ மலையே, அன்பு எனும்‌ குடில்‌ புகும்‌ அரசே, அன்பு எனும்‌ வலைக்குள்‌ படுபரம்பொருளே... அன்பு எனும்‌ அணுவுள்‌ அமைந்த பேரொளியே, அன்புருவாம்‌ இறைவா '” (திருவருட்பா) என்று வேண்டுவோம்‌.

ஆண்டவர்‌ மன்னிப்பளிப்பவர்‌

ஆண்டவரது அன்பின்‌ வெளிப்பாடே அவர்‌ பாவிகளுக்கு அளிக்கும்‌ மன்னிப்பு. நாம்‌ பாவம்‌ செய்து அவரைப்‌ புறக்கணித்தபோதும்‌, அவர்‌ “கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும்‌ வகை கிடைத்த குளிர்‌ தரு. (திருவருட்பா). எனவேதான்‌ "எங்கள்‌ அக்கிரமங்களையும்‌ பாவங்களையும்‌ போக்கிவிடும்‌ ' (3:9) என்று அவரிடம்‌ மோசே மன்றாடுகிறார்‌ (காண்‌ எண்‌:14:18). “இவர்‌ பாவிகளை வரவேற்கிறார்‌; அவர்களோடு உண்கிறார்‌ ' (லூக்‌ 15:2) என்பதே பரிசேயரிடமிருந்து இயேசுவுக்குக்‌ கிடைத்த நற்சான்றிதழ்‌. “உன்‌ பாவங்கள்‌ உனக்கு மன்னிக்கப்பட்டன ' (லூக்‌ 7:48) என்பன இயேசுவின்‌ வாயிலிருந்து அடிக்கடி மலர்ந்த இரக்கச்‌ சொற்கள்‌. தூய ஆவியாரும்‌ பாவ மன்னிப்பும்‌ இணைந்தே அமைவதை திருத்தூதர்பணி அடிக்கடி சுட்டுகிறது (238-39; 5:31-32;10:47-48). இவ்வாறு மூவொரு கடவுள்‌ மன்னிக்கும்‌ கடவுள்‌ என்பது புலப்படுகிறது. படைத்து, மீட்டு, வழிநடத்திவரும்‌ இறைவனிடம்‌ நம்‌ பாவங்களுக்கு, பிறர்‌ பாவங்களுக்கு மன்னிப்புக்‌ கேட்போம்‌.

பொறுமையும்‌ அளவில்லாத இரக்கமும்‌ பொருந்திய கடவுளே.

இரண்டாம் வாசகம் 2கொரி 13:11-13

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இரண்டாம்‌ திருமுகத்தின்‌ இறுதிப்‌ பகுதி இன்றைய வாசகம்‌. மூவொரு கடவுளின்‌ ஆசியை அளித்துத்‌ திருமுகத்தை முடிக்கிறார்‌ பவுலடியார்‌. தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ இவர்களின்‌ கழிவிரக்கம்‌ இப்பகுதியில்‌ சுட்டப்படுகிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்‌ அருள்‌

மன்னிக்கும்‌ கடவுளின்‌ இரக்கத்தை அருள்‌ என்ற சொல்‌ சுட்டும்‌. இயேசு என்ற பெயருக்குப்‌ பொருளே இதுவன்றோ! “அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்‌. அவர்‌ தம்‌ மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்‌ (மத்‌ 1:21). தமது உயிரையே இயேசு பாவிகளுக்காக அளித்தார்‌. “பலருடைய மீட்புக்கு ஈடாகத்‌ தம்‌ உயிரையே அளித்தார்‌ ' (மாற்‌ 10:45). எனவே தான்‌ “இயேசு என்று சொன்னாலே போதும்‌; நம்‌ பாவங்கள்‌ எல்லாமே தீரும்‌ என்று பாடுகிறோம்‌. ஆம்‌, இயேசு மன்னிக்கும்‌ தெய்வம்‌. அவரிடம்‌ சென்று நம்‌ பாவங்களுக்குக்‌ கழுவாய்‌ தேடுவோம்‌. “குன்று அனையக்‌ குற்றம்‌ செயினும்‌ குணம்‌ கொள்ளும்‌ ' இறைவனிடம்‌ செல்வோம்‌ (பொய்கை). “பாவநாசா, உன்‌ பாதமேயல்லால்‌ பற்றுநான்‌ மற்றிலேன்‌ கண்டாய்‌ (திருவா) என்போம்‌. “இருதலைக்‌ கொள்ளியின்‌ உள்ளெறும்‌ பொத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்‌ ' (திருவா) என வேண்டுவோம்‌.

கடவுளின்‌ அன்பு

தந்தைக்‌ கடவுளின்‌ அன்பு படைப்புக்கள்பால்‌ படைத்தோன்‌ கொண்டுள்ள அன்பு. தாம்‌ படைத்த எல்லாமே நன்றாயிருந்தன என்று கண்டு (காண்‌ : தொது) அவைமேல்‌ அவர்‌ கொண்ட அன்பு. அனைத்துப்‌ படைப்புக்களையும்‌ இறைவன்‌ அன்பு செய்கின்றாரெனினும்‌, படைப்பின்‌ சிகரமான நம்மேல்‌ அவர்‌ காட்டும்‌ அன்பு அளவற்றது. “ஆயினும்‌ அவர்களைக்‌ கடவுளாகிய உமக்குச்‌ சற்றே சிறியவர்‌ ஆக்கியுள்ளீர்‌. மாட்சிமையையும்‌ மேன்மையையும்‌ அவர்களுக்கு முடியாகச்‌ சூட்டினீர்‌' (திபா 8:5-6). எனவே, “உலகம்‌ யாவையும்‌ தாம்‌ உளவாக்கலும்‌, நிலைபெறுத்தலும்‌ நீக்கலும்‌ நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்‌ அவர்‌, தலைவர்‌ அன்னவர்க்கே சரண்‌ நாங்களே” (கம்பர்‌) என்று பாடுவோம்‌. “தாய்‌ தன்னை அறியாத கன்று இல்லை; தன்‌ கன்றை யாயும்‌ அறியும்‌ ; உலகின்‌ தாய்‌ ஆகின்‌, ஐய, நீ அறிதி எப்பொருளும்‌” (கம்பர்‌) என்று கூறி, அவரின்‌ தொடர்ந்த உதவியை நாடுவோம்‌. படைத்தவருக்குப்‌ பாதுகாத்துப்‌ பேணி வளர்க்கும்‌ அக்கறை உண்டன்றோ?

தூய ஆவியாரின்‌ நட்புறவு

ஆவி என்ற உடனே நம்‌ மனத்திலே இணைப்பாளர்‌, துணையாளர்‌ (யோவா 14:26), உதவி அளிப்பவர்‌, அன்பில்‌ பிணைப்பவர்‌ ஆகிய கருத்துக்கள்‌ தோன்றுகின்றன. மனித உள்ளங்களிலே கடவுள்பால்‌ அன்பையும்‌ பிறர்பால்‌ பரிவையும்‌ தூண்டியெழுப்புபவர்‌ தூய ஆவியாரே. “ஆவியானவர்‌, (நம்‌ உள்ளங்களில்‌ இருந்துகொண்டு) அப்பா, தந்தாய்‌ எனக்‌ கூப்பிடுகிறார்‌” (கலா.46). “அவர்‌ விளைவிக்கும்‌ பலன்கள்‌ அன்பு, அமைதி, பொறுமை, பரிவு” முதலியன (கலா 5:22). அவ்‌ ஆவியானவரின்‌ வழியாக அன்பிலே நடப்போம்‌ (5:26). அவ்வன்பை அவரிடமே வேண்டிப்‌ பெறுவோம்‌. “மன ஒற்றுமையைக்‌ ! கொண்டிருங்கள்‌; அமைதியுடன்‌ வாழுங்கள்‌; அப்போது அன்பும்‌ அமைதியும்‌ அளிக்கும்‌ கடவுள்‌ உங்களோடு இருப்பார்‌” (2கொரி 13:11) என்ற இன்றைய வாசகம்‌ தந்த, மகன்‌, ஆவியார்‌ அன்பிலே நம்‌ அன்பு உருவாகி, ஒருவர்‌ ஒருவரைத்‌ தழுவ வேண்டும்‌ என்று விரும்புகிறது.

சகோதரரே, மகிழ்ச்சியோடு இருங்கள்‌... ஒன்றுபட்டு வாழுங்கள்‌.

நற்செய்தி யோவான் 3:16-18

“அன்பே கடவுள்‌”' என்பது இறைவனின்‌ இலக்கணம்‌. அவரது அன்பு செயலில்‌ வெளிப்படுகிறது. உலகப்‌ படைப்பிலும்‌ அதன்‌ பராமரிப்பிலும்‌ கடவுளன்பைக்‌ காண்கின்றோம்‌. அதே அன்பு தெய்வத்திருமகனின்‌ மனிதாவதாரத்தில்‌ சிறப்பாகத்‌ தென்படுகிறது. கல்வாரிக்‌ குன்றில்‌ அது உச்சக்‌ கட்டத்தை அடைகின்றது. இறையன்பையும்‌ அதை நிராகரிப்பதன்‌ விளைவையும்‌ இன்றைய நற்செய்தி நவில்கிறது.

உலகின்‌ மேல்‌ அன்பு கூர்ந்தார்‌

“தம்‌ மகன்‌ மீது நம்பிக்கைகொள்ளும்‌ எவரும்‌ அழியாமல்‌, நிலை வாழ்வைப்‌ பெறும்‌ பொருட்டு அந்த மகனையே அளிக்கும்‌ அளவுக்குக்‌ கடவுள்‌ உலகின்‌ மேல்‌ அன்பு கூர்ந்தார்‌” (16). “அன்பே கடவுள்‌. நாம்‌ கடவுளுக்கு அன்பு செய்ததில்‌ அன்று, அவரே நமக்கு அன்பு செய்து, நம்‌ பாவங்களுக்குப்‌ பரிகாரமாகத்‌ தன்‌ மகனையே அனுப்பியதில்தான்‌ அன்பின்‌ தன்மை விளங்குகிறது'” (உரோ 5:8). நமது பாவத்தால்‌ கோபமுற்ற கடவுள்‌, நமது மன்றாட்டிற்கு இரங்கி, கோபம்‌ தணிந்து நம்மை மீட்கத்‌ தன்‌ மகனை அனுப்பினார்‌ என்பது தவறு. நாம்‌ தோன்றுழுன்பே நித்தியத்திற்கும்‌ நம்மை மீட்கத்‌ திட்டமிட்டிருந்தார்‌. இறைவனுடன்‌ முறிந்துபோன நம்‌ உறவைப்‌ புதுப்பிக்க அவரே முன்வந்தார்‌. இறைவனே நம்மீது அன்பு கூர்கிறார்‌ என்றால்‌, நாமும்‌ அவர்மீது அன்பு செலுத்தவேண்டும்‌. ““அன்பிற்கும்‌ உண்டோ அடைக்கும்‌ தாழ்‌ ?” நமது அன்பு அவரது கட்டளைகளைச்‌ செயல்படுத்துவதில்‌ காட்டப்பட வேண்டும்‌. “நீங்கள்‌ என்மீது அன்பு கொண்டிருந்தால்‌ என்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடியுங்கள்‌” என்பது இயேசுவின்‌ வாக்கு (யோவா 14:15).

அன்பு எனும்‌ பிடியுள்‌ அகப்படும்‌ மலையே
அன்பு எனும்‌ குடில்‌ புகு அரசே
அன்பு எனும்‌ வலைக்குள்‌ படுபரம்‌ பொருளே
அன்பு எனும்‌ கரத்து அமர்‌ அமுதே
அன்பு எனும்‌ கடத்துள்‌ அடங்கிடும்‌ கடலே
அன்பு எனும்‌ உயிர்‌ ஒளிர்‌அறிவே
அன்பு எனும்‌ அணுவுள்‌ அமைந்த பேரொளியே
அன்பு உருவாம்‌ (ஆண்டவனை) ! (திருவருட்பா)

மீட்பும் தீர்ப்பும்

“எல்லா மனிதரும்‌ மீட்புப்‌ பெறவும்‌, உண்மையை அறிந்துணரவும்‌ வேண்டுமென அவர்‌ விரும்புகிறார்‌” (1 திமொ 2:4). “உலகிற்குத்‌ தண்டனைத்‌ தீர்ப்பளிக்க அல்ல, தன்‌ மகன்‌ வழியாக அதை மீட்கவே கடவுள்‌ அவரை உலகிற்கு அனுப்பினார்‌” (17). அவரில்‌ விசுவாசம்‌ கொள்பவர்‌ தீர்ப்புக்கு ஆளாவதில்லை என்று கூறும்‌ யோவான்‌ தொடர்ந்து, நம்பிக்கை கொள்ளாதவர்‌ ஏற்கனவே தீர்ப்பு பெற்றுவிட்டார்‌ (18) என்றும்‌ கூறுகிறார்‌. சூரியன்‌ என்றும்‌ பிரகாசித்துக் கொண்டு தான்‌ இருக்கிறது. ஆனால்‌ வீட்டுச்‌ சன்னலை மூடிவிட்டால்‌ அங்கு ஒளி புகாது; இருள்தான்‌ ஆட்சிபுரியும்‌. இயேசு ஒளியாகவே உலகிற்கு வந்தார்‌. அவர்‌ “ஒளிவளர்‌ விளக்கு ; உவப்பிலா ஒன்று; தெளிவளர்‌ பளிங்கின்‌ திரள்‌ மணிக்குன்று, சித்தத்துள்‌ தித்திக்குந்‌ தேன்‌ ” (திருமாளிகைத்‌ தேவர்‌ ). அந்த ஒளியைப்‌ பெற வேண்டுமானால்‌ நமது இதயக்‌ கதவைத்‌ திறந்து வைக்கவேண்டும்‌. ஒளியற்ற இடம்‌ இருள்‌ சூழ்‌ சிறை. இருள்‌ பாவத்தின்‌ சின்னம்‌. எனவேதான்‌ பொல்லாது செய்பவர்‌ எவரும்‌ ஒளியை வெறுக்கிறார்‌ (20).

பாவமற்ற வாழ்வே ஒளி வாழ்வு. ஒளியில்‌ வாழாதவர்‌ ஏற்கனவே தீர்ப்புக்கு உள்ளாகிவிட்டார்‌. தீர்ப்பு என்பது இறுதிக்காலத்‌ தீர்ப்பை மட்டும்‌ குறிப்பதில்லை. யோவானின்‌ கண்ணோட்டத்தில்‌ நிகழ்காலத்திலேயே தீர்ப்பு அளிக்கப்படுகிறது. நம்பிக்கை கொள்ளாதவர்‌ ஏற்கனவே தீர்ப்பை பெற்றுவிட்டார்‌. ஏனெனில்‌ இருளாகிய பாவத்தில்‌ வாழ்பவர்‌ தன்‌ மனத்தையும்‌ இருளாக்கி, தன்‌ கண்ணையும்‌ குருடாக்கி, ஒளிக்கு வர மறுக்கிறார்‌. ஒளியாம்‌ இயேசுவை உதறித்‌ தள்ளிவிடுகிறார்‌. எனவே பாவமாகிய இருளில்‌ வாழ்வோர்‌ தாங்களே தங்களுக்குத்‌ தீர்ப்பு வழங்கிக்‌ கொள்ளுகின்றனர்‌ என்பதை உணர வேண்டும்‌. “நீங்கள்‌ உலகின்‌ ஒளி; உங்கள்‌ ஒளி மனிதர்‌ முன்‌ ஒளிர்வதாக”” (மத்‌ 5:16). ஒளியின்‌ மக்களாய்‌ வாழ்கின்றோமா? இறை ஒளி நம்மில்‌ ஒளிர நாமே தடையாக உள்ளோமா?

ஏன்‌ உலகிற்கு வந்துள்ளது : மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்‌ : ஏனெனில் அவர்கள்‌ செயல்கள்‌ தீயனவாயிருந்தன.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நமது உருவமும் உருவகமும்

நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும், செபத்தை நிறைவு செய்யும்போதும் ‘தந்தை, மகன், தூய ஆவியார்’ என்று சிலுவை அடையாளம் வரைகிறோம். மூவொரு கடவுள் பெயரால் ஆசி வழங்குகிறோம். மூவொரு கடவுள் பற்றிய மறையுண்மையை மூன்று பகுதிகளாகப் புரிந்துகொள்வோம்: (அ) இறையியல் விளக்கம். (ஆ) வாசகங்கள் விளக்கம். (இ) வாழ்வியல் விளக்கம்.

(அ) இறையியல் விளக்கம்

இன்றைய நாள் திருப்பலியில் நாம் வாசிக்கும் தொடக்கவுரை மூவொரு கடவுள் பற்றிய இறையியலை மிக அழகாக எடுத்துரைக்கிறது: ‘வகையில் தனித்தன்மை, இறைஇயல்பில் ஒருமை, மாண்பில் சமத்துவம்.’ தந்தை, மகன், தூய ஆவியார் மூன்று ஆள்களாக ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கிற இறையியல்பு இவர்கள் மூவருக்குள்ளும் ஒருமைப்பாட்டை அல்லது ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. இவர்கள் மூவரும் தங்களில் வேற்றுமை அல்லது பாகுபாடு பார்க்காதவர்களாக இருக்கிறார்கள்.

கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எண்கள் 253-255 என்னும் பகுதி மூவொரு கடவுள் பற்றியதாக இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் மூவொரு கடவுள் பற்றிய புரிதல் எப்படி வந்தது?

கிறிஸ்தவம் தொடக்கத்தில் யூத சமயத்தின் நீட்சியாக இருந்தது. யூத சமயம் ஏகக் கடவுள் நம்பிக்கை கொண்டது (காண். இச 6:4). கடவுள் ஒருவரே என்றாலும் அவருடைய வெளிப்பாடு மூன்று நபர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது: ஆண்டவர் அல்லது யாவே, ஆண்டவரின் தூதர், கடவுளின் ஆவி. மேற்காணும் மூன்று வெளிப்பாடுகளும் கிறிஸ்தவத்துக்கு வரும்போது, ‘தந்தை, மகன், தூய ஆவி’ என்று மாறுகிறார்கள்.

புதிய ஏற்பாட்டில் நாம் காணும் சில பாடங்கள் மூவொரு கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன: ‘தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்’ (மத் 28:19). ‘ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக’ (2 கொரி 13:13). ‘தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது’ (யோவா 1:1).

திருஅவைத் தந்தை தெர்த்தூலியன் முதன்முதலாக (கிபி 200) ‘ட்ரினிடாஸ்’ (இலத்தீன்) என்னும் சொல்லைப் பயன்படுத்தி மூவொரு கடவுள் இறையியலுக்கு வித்திடுகிறார். அவருக்குச் சற்று முன்பாக அந்தியோக்கு நகர் தியோபில் ‘ட்ரியாஸ்’ என்னும் கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

மூவொரு கடவுள் இறையியலை – ‘ஊசிஸ், ஹைபோஸ்டாஸிஸ்’ என்னும் சொற்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாக எழுதியவர் புனித அகுஸ்தினார் . கீழை மரபில் கப்படோஸியத் தந்தையர்கள் மூவொரு கடவுள் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு ‘பெரிகொரேஸிஸ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

‘மனம்’ என்னும் ஒற்றைத் தளத்தில் ‘நினைவு,’ ‘புரிதல்,’ ‘விருப்பம்’ என்னும் மூன்று செயல்பாடுகள் நிகழ்வதுபோல, இறைஇயல்பில் மூன்று நபர்கள் செயல்படுகிறார்கள் என்கிறார் அகுஸ்தினார். மேலும், ‘காதலர், காதலி, காதல்’ என்னும் உருவகத்தைப் பயன்படுத்தியும் மூவொரு கடவுள் மறையுண்மையைப் புரிந்துகொள்ள விரும்புகிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் இறையியலுக்கு எதிராக நிறைய தப்பறைக் கொள்கைகளும் – திரிபுக் கொள்கைகளும் இருக்கின்றன: (1) மோடலிஸம் – கடவுள் ஒருவரே, அவர் மூன்று முகமூடிகள் அணிகிறார். (2) ஆரியுக் கொள்கை – தந்தை நீடித்தவர், மகன் இடையில் வந்தவர், மகன் தந்தைக்குக் கீழே இருக்கிறார். (3) த்ரிதேயிஸம் – மூன்று கடவுளர்கள் – மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவா போல மூன்று பணிகளைச் செய்பவர்கள் – படைப்பவர், காப்பவர், அழிப்பவர். (4) கீழ்ப்படுத்துதல் – மகனும் தூய ஆவியாருக்கும் தந்தைக்குக் கீழே இருக்கிறார்கள். (5) மூன்று பகுதிகள் – ஒரு கேக்கின் மூன்று பகுதிகள் போல, மூன்று பேர் இணைந்ததே மூவொரு கடவுள். (6) தத்து எடுத்தல் – தந்தை ஒருவரே. அவர் இயேசுவைத் தம் மகனாக அவருடைய திருமுழுக்கு நிகழ்வில் தத்து எடுக்கிறார்.

நிசேயா பொதுச்சங்கமும் (கிபி 325), கான்ஸ்தாந்தின் பொதுச்சங்கமும் (கிபி 381) மூவொரு கடவுள் பற்றிய இறையியலை நிர்ணயிக்கின்றன.

கிறிஸ்தவத்திலும் மூவொரு கடவுள் மூன்று நபர்களாகக் கருதப்படுகிறார்கள்: யெகோவா சாட்சிகள் தந்தை கடவுளை மட்டுமே நம்புகிறார்கள். கிறிஸ்துவின் சபையினர் இயேசுவை மட்டுமே நம்புகிறார்கள். பெந்தகோஸ்தே சபையினர் ஆவியாரை மட்டுமே நம்புகிறார்கள்.

(ஆ) வாசகங்கள் விளக்கம்

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் மோசேக்கு மீண்டும் பத்துக் கட்டளைகள் வழங்குகிறார். மோசேக்கு இந்த நிகழ்வு கடவுள் அனுபவமாக இருக்கிறது. ‘இரக்கமும் பேரன்பும் உள்ளவர் ஆண்டவர்’ என்று அறிக்கையிடுகிறார் மோசே. கடவுள் தம் உடன்படிக்கையை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முன்வருகிறார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல், தன் திருமுகத்தை ‘தந்தை-மகன்-தூய ஆவியார்’ என்னும் ஃபார்முலா கொண்டு நிறைவு செய்கிறார். ‘ஆண்டவர்-தந்தை-ஆவியார்’ என்று வரிசையை மாற்றுகிறார்.

நற்செய்தி வாசகத்தில், நிக்கதேமுக்குத் தம்மை வெளிப்படுத்துகிற இயேசு, ‘கடவுள் – மகன் – அன்பு’ என்னும் சொற்களைக் கையாண்டு தாம் கடவுளின் மகன் என்று அறிவிக்கிறார்.

(இ) வாழ்வியல் விளக்கம்

(1) நாம் ஒவ்வொருவருமே மூவொரு கடவுளின் உருவத்தையும் உருவகத்தையும் தாங்கி நிற்கிறோம். ‘உடல், உள்ளம், ஆன்மா’ என்னும் மூன்று விடயங்களால் கட்டப்பட்டவர்கள் நாம். மூன்றையும் இணைப்பது நம்மில் உள்ள மனிதத்தன்மை அல்லது மனித இயல்பு. ஆண்டவராகிய இயேசுவை நம் உடலுக்கு அடையாளப்படுத்தலாம். ஏனெனில், கடவுள் தன்மையில் விளங்கிய அவர் மனித உடல் ஏற்றார். தந்தை நம் உள்ளத்துக்கு உருவகம். ஏனெனில், அனைத்து எண்ணங்களின் பிறப்பிடம் அவரே. அவருடைய திருவுளமும் நம் உள்ளமும் இணைந்தே செல்ல வேண்டும். ஆவியார் நம் உடலின் உயிராக, ஆன்மாவாக இருக்கிறார். படைப்பின் தொடக்கத்தில் நம்மேல் கடவுள் ஊதிய ஆவியும் இதுவே.

உடல்-உள்ளம்-ஆன்மா என்னும் மூன்று விடயங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு இணைந்து செயல்படுகின்றன. எந்தவொரு வேறுபாடும் பாராட்டுவதில்லை.

நம் உடல்-உள்ளம்-ஆன்மா என்னும் மூன்று விடயங்களையும் மூவொரு கடவுள் ஆளுகை செய்வாராக!

(2) இன்றைய உலகம் தன்மையப்போக்கை அதிகம் வலியுறுத்துகிறது. ஆனால், நம் கடவுள் ஒன்றிப்பின் கடவுளாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கடவுள் பற்றிய எண்ணமும் வேகமாக மறைந்துவருகிறது. மறைபொருள் என்னும் பண்பை நாம் ஒருவர் மற்றவரில் கண்டு ஒருவர் மற்றவரோடு ஒன்றிப்புடன் வாழ வேண்டும்.

(3) தந்தையாகிய கடவுளின் இரக்கமும், மகன் இந்த உலகிற்குக் கொண்டு வந்த அன்பும், தூய ஆவியார் குறித்துக் காட்டுகிற தோழமையும் நம் உள்ளத்திலும், இல்லத்திலும், உறவுகளிலும் இருக்கும்போது நாம் மூவொரு கடவுளை இந்த உலகில் பிரதிபலிக்கிறோம்.

மூவொரு கடவுள் நம் உருவமாகவும் உருவகமாகவும் இருக்கிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பில்‌ இணைந்து செயல்பட

ஒரு புரியாத புதிருக்கு இன்று நாம்‌ விழாக்‌ கொண்டாடுகின்றோம்‌. கிறிஸ்தவ நம்பிக்கையின்‌ அடித்தளம்‌, ஆதாரம்‌ நம்‌ கடவுள்‌ மூன்று ஆள்களாயிருந்தாலும்‌ ஒரே கடவுள்‌ என்பதுதான்‌. அப்படிப்‌ பார்த்தால்‌ கிறிஸ்தவத்தின்‌ அடிப்படையே ஒரு புரியாத புதிர்தான்‌. தண்ணீர்‌ - பனிக்கட்டி - நீராவி , இலை - கண்டு - வேர்‌, சூரியன்‌ வெளிச்சம்‌ - வெப்பம்‌ என எத்தனையோ உவமைகளைக்‌ கொண்டு மூவொரு கடவுள்‌ கோட்பாட்டை விளக்கத்‌ திருஅவையின்‌ இறையியல்‌ வல்லுநர்கள்‌ முயன்றிருக்கின்றார்கள்‌ திருஅவையின்‌ ஆகப்பெரும்‌ இறையியல்‌ அறிஞரான அகுஸ்தினாரே, 30 மாதங்கள்‌ யோசித்து 15 நூல்கள்‌ எழுதியும்‌ கடைசியில்‌ “ஏன்‌ அறிவுக்கு அப்பாற்பட்ட விசயம்‌ இது ' என்று விலகி நின்ற கோட்பாடு இது.

விவிலியத்தில்‌ பல இடங்களில்‌ கடவுள்‌ மூன்று ஆள்களாக இருப்பதை நாம்‌ அறிந்து கொள்வதற்கான குறிப்புகள்‌ இருக்கின்றன.
🕇படைப்பின்‌ தொடக்கத்திலேயே கடவுள்‌ “மானிடரை நம்‌ உருவிலும்‌ சாயலிலும்‌ உண்டாக்குவோம்‌” எனப்‌ பன்மையில்தான்‌ பேசினார்‌.
🕇எசாயாவின்‌ அழைப்பில்‌ கூட, “ யாரை நான்‌ அனுப்புவேன்‌ ? நமக்காக யார்‌ போவார்‌ ?” எனப்‌ பன்மையில்தான்‌ பேசியிருக்கிறார்‌.

அதுபோலவே, விவிலியத்தில்‌ கடவுள்‌ மூவொரு கடவுளாகச்‌ செயல்பட்டதையும்‌ நாம்‌ பார்க்கின்றோம்‌.
🕇அன்னை மரியாவின்‌ அழைப்பில்‌, தந்தையாகிய கடவுள்‌ தேர்வு செய்தார்‌,
🕇தூய ஆவியாராகிய கடவுள்‌ நிழலிடுகின்றார்‌, மகனாகிய கடவுள்‌ பிறக்கின்றார்‌.
🕇இயேசுவின்‌ பணிவாழ்வின்‌ தொடக்கத்தில்‌, மகனாகிய கடவுள்‌ திருமுழுக்குப்‌ பெறுகின்றார்‌. தந்தையாகிய கடவுள்‌ “என்‌ அன்பார்ந்த மகன்‌ இவரே என்று பேசுகின்றார்‌. தூய ஆவியாரா கிய கடவுள்‌ புறா வடிவில்‌ இறங்கி வருகின்றார்‌.

இன்னும்‌ ஆழமாகப்‌ பார்த்தால்‌ நாமும்‌ மூவொரு கடவுளின்‌ ஆற்றலோடு செயல்பட வேண்டும்‌ என்ற அழைப்பையும்‌ விவிலியம்‌ தருகின்றது.
🕇இயேசு: தந்தை, மகன்‌, தூய ஆவியாரின்‌ பெயரால்‌ திருமுழுக்குக்‌ கொடுங்கள்‌.
🕇பவுல்‌: தந்தையாகிய கடவுளின்‌ அன்பும்‌, மகனாகிய கடவுளின்‌ அருளும்‌, தூய ஆவியாராகிய கடவுளின்‌ நட்புறவும்‌ உங்களோடு இருப்பதாக.

இவ்வாறு, தமது இயல்பிலும்‌, செயல்பாட்டிலும்‌ மூவொரு கடவுளாக நம்‌ இறைவன்‌ இருக்கின்றார்‌. பேராயர்‌ புல்டன்‌ ஷீன்‌ “நம்‌ கடவுள்‌ மூவொரு கடவுளாக இருப்பதே தாம்‌ அன்பின்‌ கடவுள்‌ என்பதை உணர்த்துவதற்காகத்தான்‌. ஏனென்றால்‌, கடவுளால்‌ ஒருபோதும்‌ அன்பு செய்யாமல்‌ இருக்க முடியாது. கடவுள்‌ ஒருவர்‌ என்றால்‌ இந்த உலகம்‌ உருவாகும்‌ முன்னர்‌, மனிதர்கள்‌ படைக்கப்படுவதற்கு முன்னர்‌ அவர்‌ யாரை அன்பு செய்ய முடியும்‌ ? அதனால்தான்‌ அவர்‌ மூன்று ஆள்களாய்‌ இருக்கின்றார்‌. தந்தை மகனையும்‌, மகன்‌ தந்தையையும்‌ அன்பு செய்கின்றார்கள்‌. அந்த அன்பே ஆவியாரின்‌ வடிவில்‌ வெளிப்படுகின்றது”' என்று சொல்வார்‌.

இந்தக்‌ கடவுளின்‌ அன்பை நாம்‌ உணர்கின்றோமா? இந்தக்‌ கடவுள்‌ நம்மீது வைத்திருக்கின்ற அன்பிற்குப்‌ பதிலன்பு காட்டுகின்றோமா ? ஆண்டவர்மீது நாம்‌ கொண்டிருக்கின்ற அன்பை நம்‌ அயலார்மீது காட்டுகின்றோமா ? என்றெல்லாம்‌ நம்மையே நாம்‌ கேட்டுப்‌ பார்க்க வேண்டும்‌. அப்போதுதான்‌ நாம்‌ கொண்டாடுகின்ற இப்பெருவிழா பொருளுள்ள விழாவா இருக்கும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுள்‌ திருவிழா

சிறிய குளத்தில்‌ கொஞ்சம்‌ நீரில்‌ ஆனந்தமாக நீந்திக்‌ கொண்டிருந்தது மீன்‌. இதைப்பார்த்த ஒரு குரங்கு, மீன்‌ நீரில்‌ விழுந்து தத்தளித்துக்‌ கொண்டிருக்கிறது என நினைத்து, அதற்கு தூக்கிப்‌ போட்டது‌. அது தலைவிதி செத்தவிட்டது. என்‌ தப்பா?” என்றதாம்‌. குரங்கின்‌ புரியாத அன்பு மீனை சாகடித்துவிட்டது. மறையுண்மைகளை நாம்‌ சரியாக புரிந்து கொள்ளாதபோது நமது விசுவாசமும்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக செத்துவிடும்‌.

மனிதனின்‌ பகுத்தறிவு காரணம்‌ - செயல்‌ அடிப்படையில்‌ செயல்படுகிறது. செயல் ஒன்று இருந்தால் அதற்கு ஒன்று இருக்கவேண்டும். விதையின்றி மரமில்லை! தாயின்றி சேயில்லை சான்றோர்கள் அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுகொள்கிறார்கள். உலகம் என்று ஒன்று இருக்கிறதென்றால்‌ அதை உண்டாக்கிய, படைத்த கடவுள்‌ என்று ஒருவர்‌ இருக்கிறார்‌ என்பதுதான்‌ உண்மை.

* தமதிருத்துவம்‌ ஒரு மறையுண்மை:

அறிவியல்‌ உண்மை, மறையுண்மை. அறிவியல்‌ உண்மை என்பது இயற்கையால்‌ உறைந்திருக்கும்‌ உண்மைகளையும்‌ விதிகளையும்‌ மனிதன்‌ தன்‌ முயற்சியால்‌, அறிவால்‌ வெளிக்கொணர்வது. உதாரணமாக புவிஈர்ப்பு விசை. எந்தப்‌ பொருளை நாம்‌ மேலே தூக்கிப்போட்டாலும்‌ அது கண்டிப்பாக கீழே விழுகிறது. புவிஈர்ப்பு விசை உண்டு. இதை மனிதன்‌ தன்‌ அறிவு, ஆராய்ச்சியால்‌ கண்டுபிடித்த உண்மை. உலகில்‌ பல பல அறிவியல்‌ உண்மைகள்‌ உள்ளன. இவைகளை அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முடியும்‌. மறையுண்மை என்பது மறைநூல்கள்‌, சமயநெறிகள்‌ வழியாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டன. இவைகளை நாம்‌ எளிதில்‌ அறிந்து தெரிர்‌ புரிந்துகொள்ள முடியாது. ஆனால்‌ விசுவாசக்‌ கண்களோடு மறையுண்மைகளை நாம்‌ புரிய முயற்சிக்கும்போது நம்‌ வாழ்வு பயணத்திற்கு, வாழ்வின் அர்தத்தைக் கொடுத்து வாழ வைக்கிறது.

* முவொரு கடவுள்:

ஒருவராக இருந்தாலும்‌ தந்தை, மகன்‌, தூயஆவியார்‌ என மூவராயிருக்கிறார்‌ என்பதை தமதிருத்துவம்‌ என்கிறோம்‌. இம்மூவரும்‌ மூன்று கடவுள்கள்‌ அல்ல; மாறாக ஒரே கடவுள்‌ என்கிறோம்‌. “நம்‌ ஆண்டவராகிய கடவுள்‌ ஒருவரே” மத்‌ 12:29. எப்படி ஒரே கடவுள்‌? யாதொரு வேறுபாடுமின்றி மூவருக்கும்‌ ஒரே ஞானம்‌, ஒரே சித்தம்‌, ஒரே வல்லமை, ஒரே கடவுள்‌ தன்மை இருப்பதால்‌ மூவரும்‌ ஒரே கடவுள்‌. யோவா 10:30. அதாவது கடவுள்‌ ஒருவராக இருந்தாலும்‌ அவரது மூன்று ஆட்தன்மைகள்‌ மூலமாக அவரது மூன்று குணங்கள்‌ வெளிப்படுகின்றன . ஒருவர்‌ அமைதியில்‌ உறைபவராக, நமக்கு கலந்து அதை மீட்பவராக, நம்‌ அருகில்‌ இருப்பவராக இருக்கிறார்‌. மூன்றாவது நபர்‌ நம்‌ இதயத்திற்குள்ளும்‌ மனச்சாட்சிக்குள்ளும்‌ தூரத்திலும்‌, நமக்கு அருகிலும்‌, நமக்குள்ளும்‌ நிறைந்து எங்கும்‌ பிரசன்னமாயிருக்கிறார்‌.

தமதிரித்துவம்‌ ஆள்வகையில்‌ தந்தை, மகன்‌, தூயஆவி தனித்தனியாக இருந்தாலும்‌ கடவுள்‌ தன்மையில்‌ மூவரும்‌ ஒன்றாக இருக்கிறார்‌. அவர்கள்‌ மாட்சிமை சரிநிகரானதாகவும்‌, அவர்களது மேன்மை இணைந்து நிலைத்திருக்கக்‌ கூடியதாகவும்‌ இருக்கிறது. எனவே ஆள்வகையில்‌ தனித்தன்மையையும்‌, இறையியல்பின்‌ ஒருமையையும்‌, மகத்துவத்தில்‌ சமத்துவத்தையும்‌ ஏற்றுக்கொண்டு இருந்தவரும்‌, இருக்கிறவரும்‌, வரஇருப்பவருமான தந்தை, மகன்‌, தூயஆவியை ஆராதித்து மகிமைப்படுத்துவோம்‌. திவெ 1:8.

தமத்திருத்துவத்திலே தந்தை கொடுக்கும்‌ கொடை அன்பு. மகன் கொடுக்கும் அருள், தூயஆவி கொடை நட்புறவு. ”நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும்‌, தூயஆவியாரின்‌ நட்புறவும்‌ அனைவரோடும்‌ இருப்பதாக", 2கொரி 13:3 என்பதைத்தான்‌ நாம்‌ ஒவ்வொரு திருப்பலியிலும்‌ மறையுண்மையாக அறிக்கையிட்டு செபிக்கிறோம்‌.

அன்றாட வாழ்வில்‌ ஒரு பெண்‌ தன்‌ கணவனுக்கு மனைவியாகவும்‌, பிள்ளைகளுக்குத்‌ தாயாகவும்‌, பள்ளயிலே ஆசிரியையாகவும் ஒரே கணவனுக்கு காதலையும்‌, பிள்ளைகளுக்கு பாசத்தையும்‌, மாணவ மாணவிகளுக்கு அக்கறை அன்பையும்‌ கொடுத்து ஒரே பெண்‌ மூன்று ஆட்தன்மையில்‌ மூன்று குணங்களை வெளிப்படுத்தி வாழ்கிறார்‌. ஒரே ஆண்‌ மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக, அலுவலக ஊழியர்களுக்கு அதிகாரியாக மூன்று ஆட்தன்மையிலும்‌ மூன்று குணங்களை வெளிப்படுத்துகிறார்‌.

தண்ணீர்‌ மூன்று நிலைகளில்‌ திடமாக - பனிக்கட்டியாக, திரவமாக நீரக, ஆவியாக நீராவியாக காட்சியளிப்பதில்லையா? மின்சாரம்‌ ஒரே ஒடுகிறது; வண்டி ஓடுகிறது. சக்தி ஒன்றுதான்‌. செயல்பாடுகள்‌ பலவிதம்‌. எரியும்‌ ஒரே மெழுகுவர்த்தி மஞ்சள்‌ நிற சுடராக, ஊதாநிற, கருநீலநிற சுடராக வெளிப்படுகிறது.

இப்படியாக தந்தையாக கடவுள்‌ நம்மீது கொண்டுள்ள அன்பை பல கொடைகளை தம்‌ அன்பு மகன்‌ எனும்‌ பெரும்கொடை உட்படவழங்கி வாழ வைக்கிறார்‌. இறைமகன்‌ இயேசு 'அருள்‌' எனும்‌ பெரும்‌ கொடையை மாசுபட்ட‌ மனுக்குலத்தினை மீட்கும் மருந்தாக தம்‌ இரத்தத்தையும்‌ சிந்தி தம்‌ அருளைப்‌ பொழிகிறார்‌. தம்‌ உடலையும்‌ ரத்தத்தையும்‌ அருள்மருந்தாகத்‌ தருகிறார்‌. தூய ஆவியார்‌ நட்புறவு எனும்‌ கொடையைக்‌ கொடுத்து, நமது பிரிவினை சிந்தனை, பிளவு எண்ணங்கள்‌ எல்லாவற்றையும் சுட்டெரித்து‌ நட்புறவுடன் வாழ உதவுகிறார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு