காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு சிறுவனை அழைத்து வந்து தன் சீடனாக்கினார். தனக்குக் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் அவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தார் முனிவர். ஒருநாள் காட்டுப் பகுதியில் கிடைத்த பழத்தின் பாதியைத் தன் சீடனுக்குக் கொடுத்தார். சுவை எப்படியுள்ளது என்றும் கேட்டார். அருமையாக உள்ளது என்றான் சீடன். இன்னும் கொஞ்சம் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டான். இருந்த மீதியை வாயில் சுவைத்த முனிவர் கசப்பால் கீழே துப்பினார். இவ்வளவு கசப்பான பழத்தை உன்னால் எப்படி சாப்பிட முடிந்தது என்று சீடனைப் பார்த்து முனிவர் கேட்டார். அப்போது சீடன், பழம் கசப்புதான். ஆனால் இதற்கு முன்பாக நீங்கள் இனிப்பான பழங்களைத் தந்தீர்கள். எனவே இப்பழத்தைக் கொடுத்த உங்களின் அன்பு பெரியது. இதயம் விசாலமானது என்றான்.
அன்புள்ள தந்தையை நினைத்து, அவரது திட்டத்தை நிறைவேற்ற, இறையாட்சியை மலரச் செய்ய கசப்பான பாடுகளையும், களிப்புடன் ஏற்றுக்கொண்டு நமக்காக எருசலேம் நோக்கிப் பயணமானார் இயேசு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தன்னையே வழங்க முன் வருகிறார்.
ஆம்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் மாநகர வீதிகளில் ஒரு மாபெரும் ஊர்வலம் அரங்கேறியது. இது அரசியல் ஊர்வலம் அல்ல. ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்ட ஊர்வலமும் அல்ல. சாமானிய மக்கள் பயணத்திற்காகப் பயன்படுத்தும் கழுதைக் குட்டியில் அமர்ந்து அமைதியாகச் சென்றார். சமாதானத்தையும், சாந்தத்தையும் குறிக்கும் கழுதையின் மீது வருவது மிகப் பொருத்தமன்றோ! தம்மையே முற்றிலும் வெறுமையாக்கி, மனிதருக்கு ஒப்பாகி, அடிமையின் தன்மை பூண்டு, மக்களோடு கொண்டுள்ள அன்பையும், தோழமையையும் வெளிப்படுத்தும் பவனியாக அமைந்தது இயேசுவின் பவனி. இது பாவத்தை வென்று பாசத்தை உருவாக்கும் ஊர்வலம். இயேசுவின் இலட்சியப் பயணம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே (லூக். 2:49), என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே எனக்கு உணவாக உள்ளது (யோவா. 4:34) என்றார் இயேசு.
இயேசுவின் பவனியில் சோகம் உண்டு, அது சுகமாக மாறும். துன்பம் உண்டு. அது இன்பமாக மாறப் போகிறது. வீழ்ச்சி உண்டு, ஆனால் வீழ்ச்சிக்குப்பின் எழுச்சி காத்திருக்கிறது. பாடுகளுக்குப் பின்னால் புதிய பாதை உண்டு என்பதை இயேசுவின் எருசலேம் பயணம் நம்மைச் சிந்திக்க அழைக்கின்றது. இயேசு, தன் தந்தையின் பலத்தையே ஆதாயமாகக் கொண்டார். பணிவிடை பெறுவதற்கு அல்ல. பணிவிடை புரியவே வந்தேன் என்பதை வெளிப்படுத்துகிறார் இயேசு (மத். 20:28).
இயேசுவின் இலட்சியப் பயணத்தில் அவருக்குக் கொள்கை மாற்றமோ, தடுமாற்றமோ இல்லை. அவர் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் தயாராக இருந்தார்.
நாமும் இயேசுவின் பாதையில் நமது பயணத்தைத் தொடருவோம். ஓசான்னா! என்று மட்டும் வாயாரப் பாடிவிடாது, அவரது இலட்சியக் கனவுகளை, கொள்கைகளை நனவாக்க உறுதி கொண்டு நாமும் அவரோடு இணைந்து பாடுகளின் பாதையில் பயணம் ஆவோம்.
மனம் வருந்துவோம்! மனம் திரும்புவோம்!
தாம் எதிர்கொள்ளப்போகும் பாடுகளைப்பற்றி இயேசுவுக்குத் தெரியும். தெரிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு புகுந்தார். தாவீதின் மகனுக்கு சொன்னா என்று பாடி எருசலேம் நகருக்குள் அழைத்துச் செல்லும் இதே மக்கள் சில தினங்களில் ஒழிக, ஒழிக, இவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சொல்லப்போகின்றார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் பிடிபடப்போவது, அவரை விட்டு சீடர்கள் ஓடிப்போக இருப்பது, அவர் மீது சிலுவை சுமத்தப்படப்போவது, தாம் சிலுவையிலே இறக்கப்போவது எல்லாமே இயேசுவுக்குத் தெரியும்.
துன்பம் என்னும் வாள் அவர் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருப்பதை அவர் அறிந்துமா எருசலேம் நகருக்குள் நுழைந்தார்?
ஆம். அவருக்கு எல்லாம் தெரியும். இதற்குக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு, துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை என்பதே பதிலாகும். இதோ துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை; பாடுகள் இல்லாமல் பாஸ்கா இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட இரண்டு கல்வாரி நிகழ்வுகள்:
இதோ முதல் நிகழ்வு!
ஒரு நாள் மாலை ஒருவரைச் சந்தித்தேன். பச்சைக் குத்துதல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்றேன். ஆம். இதோ நானே பச்சைக் குத்தியிருக்கின்றேன் என்று சொல்லி ஒரு சிலுவையை அவர் வலது கையில் காட்டினார்.
பச்சைக் குத்தும்போது வலிக்குமா? என்று கேட்டேன். நிச்சயமாக வலிக்கும். ஒரு நாள் முழுவதும் வலிக்கும் என்றார். இது அழிந்து போகுமா? என்றேன். அதற்கு பச்சைச் குத்தியவர், உங்கள் சொத்து, சுகம், நகை எல்லாம் அழிந்து போகலாம். ஆனால், இது அழிவே அழியாது என்று சொன்னதாகச் சொன்னார். பச்சைக் குத்தி 5 ஆண்டுகள் ஆகின்றன; அப்படியே இருக்கின்றது; அழியவே இல்லை என்றார்.
பச்சைக் குத்தப்படுவதால் ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள அந்த நண்பர் தயாராக இருந்ததால் அவருக்கு அழியாத சின்னம் ஒன்று கிடைத்தது.
இதோ இரண்டாவது நிகழ்வு! ஒரு மனிதருக்கு அவர் முதுகிலே சிங்கத்தின் உருவத்தைப் பொறித்துக்கொள்ள, பச்சைக் குத்திக்கொள்ள ஆசை. பச்சைக் குத்துபவரிடம் சென்றார். பச்சைக் குத்துபவர் பச்சைக் குத்திக்கொள்ள விரும்பியவரைக் கீழே குனியச் சொல்லி மையைத் தடவி ஊசியால் குத்தினார். சுரீர் என்றது. பச்சைக் குத்திக்கொள்ளச் சென்றவர், இப்போ சிங்கத்தின் எந்தப் பாகத்தை பச்சைக் குத்தப்போகின்றீர்கள்? அப்படின்னாரு ! அதற்குப் பச்சைக் குத்துபவர், சிங்கத்தின் தலையை என்றார். பச்சைக் குத்துபவர் குனிந்திருப்பவர் முதுகிலே சிங்கத்தின் தலையை வரைய ஊசியால் குத்தினாரு! வலி தாங்க முடியல. வந்தவரு, தலை வேண்டாம். சிங்கத்தின் காலை மட்டும் பச்சைக் குத்துன்னாரு. அதற்குப் பச்சைக் குத்துகின்றவர், தலை இல்லாத சிங்கத்தை பச்சைக் குத்த முடியாது. வலியைச் சுமக்க நீங்கத் தயாராக இல்லை! நீங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்கண்ணு சொல்லி அந்த ஆளை வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாரு.
வாழ்க்கையிலே பரிசு பெற விரும்பினால் துன்பப்பட, வலியைத் தாங்கிக்கொள்ள முன்வர வேண்டும்.
இயேசு பட்ட பாடுகள் எதுவும் வீண் போகவில்லை!
இவன் ஒரு பைத்தியக்காரன் என்றார்கள்!
இவன் ஒரு குடிகாரன் என்றார்கள்!
இவன் ஒரு தேசத்துரோகி என்றார்கள்!
இல்லாதது பொல்லாதது எல்லாம் அவர் மீது சுமத்தினார்கள். இயேசு அவரைத் துன்புறுத்தியவர் யாரையும் எதிர்க்கவில்லை (முதல் வாசகம்).
அவர்பட்ட வேதனை வீண் போகவில்லை. உயிர்ப்பு என்னும் மாபெரும் பரிசை விண்ணகத் தந்தை அவருக்குக் கொடுத்தார். விண்ணகத் தந்தை அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலானப் பெயரை அவருக்கு அருளினார் (இரண்டாம் வாசகம்).
குருத்து ஞாயிறாகிய இன்று இயேசு நமக்கு அருளும் அருள்வாக்கு என்ன? எனதருமைச் செல்வங்களே ! என்னைப் போல நீங்களும் அனைத்துச் சூழல்களிலும் நம்பிக்கை என்னும் கடலில் குதிக்கத் தயாராக இருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு முத்து கிடைக்கும். அனைத்துத் துன்பச் சுரங்கங்களுக்குள்ளும் நுழையுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்குத் தங்கம் கிடைக்கும்.
பத்து மாதம் குழந்தையைச் சுமக்கத் தயாராக இல்லாத பெண்ணினால் எப்படி குழந்தைக்குத் தாயாக முடியும்? சுமைக்குப் பின்னால்தான் சுகம் ஒளிந்திருக்கின்றது. துன்பத்திற்குப் பின்னால்தான் இன்பம் ஒளிந்திருக்கின்றது. வேதனைக்குப் பின்னால்தான் சாதனை ஒளிந்திருக்கின்றது.
இதை உணர்ந்து செயல்படுங்கள். அப்போது உங்கள் இல்லமும், உள்ளமும், பணமும், பதவியும், படிப்பும், பட்டமும், பாசமும், அழகும், நீதியும், அமைதியும், மகிழ்ச்சியும் உயிர்பெற்று எழுந்து உங்களுக்கு 30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்கு பலன் தரும்.
மேலும் அறிவோம்:
துன்பம் உறவரினும் செய்க துணி(வு)ஆற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் : 669).
பொருள் : துன்பம் பெரிதாகத் தோன்றும் என்றாலும் இறுதியில் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயலைச் செயல் உறுதி பாட்டுடன் நிறைவேற்ற வேண்டும்.

மதுரையிலிருந்து திருச்சிக்கு வந்த ஒரு பேருந்து துவரங்குறிச்சியில் 10 நிமிடங்கள் நின்றது. பேருந்து ஓட்டுநர். நடத்துனர் மற்றும் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி, காபி, டீ அருந்திவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறினர். பேருந்து ஓட்டுனர் தமது இருக்கையில் அமர்ந்தபோது, 'கியர்' கம்பி பிடுங்கப்பட்டு கீழே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பயணிகளிடம், “கியர் கம்பியைப் பிடுங்கியது யார்?” என்று கேட்டார். அப்போது ஒரு கிராமவாசி, "நான்தான் பிடுங்கினேன். நான் மதுரையிலிருந்தே உங்களைக் கவனித்தேன். நீங்கள் அந்தக் கம்பியைப் பிடுங்க அதை முன்னும் பின்னும் இழுத்தீர்கள். உங்களால் முடியலை. நான் ஒரே பிடுங்கிலே பிடுங்கிவிட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார்.
அந்தக் கிராமவாசிக்குக் 'கியர்' கம்பியின் பயன்பாடு தெரியவில்லை. எனவே அதைப் பிடுங்கி எறிந்தார். அவ்வாறே நாமும் சிலுவையின் பயன்பாட்டை அறியாமல் அதைப் பிடுங்கி எறிய முயலுகிறோம்.
குருத்து ஞாயிறு, “ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், குருத்து ஞாயிறு அன்று கிறிஸ்து எருசலேம் திருநகரில் நுழைந்தது தமது பாடுகளைச் சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து அவற்றை மீட்பின் சக்தியாக மாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்து தமது வாழ்வின் இறுதி இலக்கைத் தெளிவாக அறிந்திருந்தார். எனவேதான், “இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்தார்" (லூக் 9:5) என்று லூக்கா தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில், இறைவாக்கினர் எவரும் எருசலேமுக்கு வெளியே மடிவதில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் (லூக் 13:33).
கிறிஸ்து தமது பாடுகளை நெஞ்சுறுதியுடன் எதிர் கொண்டார். முதல் வாசகத்தில் எசாயா கூறுகிறார்: "அவர் தம்மைத் துன்புறுத்தியவர்களை எதிர்க்கவில்லை. அவர்மேல் காறி உமிழ்ந்தவர்களுக்கு அவர் தம் முகத்தை மறைக்கவில்லை. தமது முகத்தைக் கற்பாறையாக ஆக்கிக் கொண்டார்" (எசா 50:6-7).
நமக்கும் வாழ்வில் இலக்குத் தெளிவு வேண்டும். துன்பங்களைத் தாங்க நெஞ்சுறுதி வேண்டும். துன்பமின்றி இன்பமில்லை. தோல்வியின்றி வெற்றியில்லை; சாவின்றி உயிர்ப்பில்லை; காயமின்றிப் போர்க்கள மில்லை; தீயின்றி வேள்வி இல்லை; அலையின்றிக் கடலில்லை; இரவின்றிப் பகலில்லை.
துன்பத்தைக் கண்டு பயந்து ஓடக் கூடாது. சுவாமி விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது அவரைத் துரத்திய நாயைக் கண்டு பயந்து ஓடினார். அப்போது ஒரு பெரியவர் அவரிடம், “தம்பி! நாயை எதிர்த்து நில்" என்றார். அவ்வாறே அவர் நாயை எதிர்த்தபோது, நாய் பயந்து கொண்டு ஓடிவிட்டது. அன்றிலிருந்து துன்பத்தைக் கண்டு ஓடாமல் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டார். அடுக்கடுக்காக வரும் துன்பத்தைக் கண்டு துவண்டு போகாதவரைக் கண்டு, துன்பமே அவரை விட்டு ஓடிவிடும் என்கிறார் வள்ளுவர்.
“அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கப்படும்" (குறள் 625)
இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கினார்; அடிமையின் வடிவை ஏற்றார்; சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டார்" (பிலி 2:7-8). கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கினார். "நம்மைச் செல்வராக்கும்படி அவர் செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார்" (2 கொரி 8:9).
கிறிஸ்துவைப் பின்பற்றும் நாமும் நம்மையே வெறுமையாக்க வேண்டும். நம்முடைய ஆணவத்தை அழிக்க வேண்டும். ஆணவத்தால் தரைமட்டமாகக் கிட மனிதகுலத்தைக் கிறிஸ்து தமது சிலுவையால் அழித்து அதை உயர்த்தி நிறுத்தினார். கிறிஸ்து நமக்கு வழங்கும் அடிப்படையான போதனை: தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்” (லூக் 18:14) என்பதுதான்.
கிறிஸ்துவை மக்கள் புகழ்ந்தபோது அவர் அவர்களுடைய புகழ்ச்சியால் மதிமயங்கவில்லை. மனிதரை அவர் எளிதில் நம்பவில்லை. ஏனெனில் மனிதரைப் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார் (யோவா 2:24-25). குருத்து ஞாயிறு அன்று 'ஓசான்னா' பாடிய அதே மக்கள் (மத் 21:9), பெரிய வெள்ளி அன்று, "இவன் ஒழிக; அவனைச் சிலுவையில் அறையும்" (லூக் 23:18-21) என்று கூறினர். இயேசுவோ புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சரி சமமாகக் கருதினார்.
நாமும் 'போற்றுவார் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்" என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். “போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை" (2 கொரி 6:8). பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. மனிதருக்கு உகந்தவராக இருக்க முயலுபவர் எவரும் கிறிஸ்துவின் பணியாளராக இருக்க இயலாது (கலா 1:10), கடவுளுடையவும் நமது மனச்சாட்சியினுடையவும் அங்கீகாரம் நமக்குப் போதுமானது.
கிறிஸ்துவின் பாடுகளின்போது அவருடைய சீடர் ஓடி விட்டனர்; தலைமைச் சங்கத்தினரும் மக்களும் அவரைப் புறக்கணித்தனர். ஆளுநர் பிலாத்து கை கழுவிக் கிறிஸ்துவுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டார். இவ்வாறு அவர் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டார். இத்தகைய நிலை தமக்கு வரும் என்பதை முன்னறிவித்த கிறிஸ்து தம் சீடரிடம் கூறினார்: “நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாக இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16:32). பல வேளைகளில் நமது உற்றார் உறவினர், நண்பர்கள் கூட நம்மைக் கைநெகிழ்ந்து நமக்கு எதிராக நிற்கலாம். அவ்வேளைகளில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்குத் துணிவைக் கொடுக்கவேண்டும்.
“அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்" (எசா 43:5), நம் கடவுள் நம்மைக் கைவிடுவதுமில்லை; நம்மை விட்டு விலகுவதுமில்லை. இத்தகைய புனித எண்ணங்களுடன் இப்புனித வாரத்தைப் புனிதமாகக் கடைப்பிடித்துப் புதுவாழ்வு பெறுவோம்.
மனவலியின் சித்திரிப்பு
அரசன் குதிரையின் மேல் வருகிறானா? போரிட வருகிறான் என்று பொருள். கோவேறு கழுதையின் மீது வருகிறானா? சமாதானம் செய்ய வருகிறான் என்பது சரித்திரம்.
இயேசு கழுதையின் மேல் அமர்ந்து பவனியாக வந்து சமாதானத்தின் அரசர் (மத்.21;4-5) என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். அறிக்கையிடுகிறார். (செக்.9:10)
புதிதாக மனந்திரும்பிய கிறிஸ்தவன் அவன். பழைய சமயத்தைச் சார்ந்த நண்பர்கள் பலருண்டு அவனுக்கு. அவர்கள் புதிதாகக் கிறிஸ்தவனாக மாறிய அவனைக் கிண்டலடிக்க நினைத்தார்கள். “நீ புதிதாக ஏற்றுக் கொண்டிருக்கும் கடவுள் எருசலேமுக்குப் பவனி சென்றாரே, எதன் மேல் ஏறிச் சென்றார்?” என்று கேட்டார்கள். தன்னைக் கழுதையாக்குவதற்காகவே அவர்கள் இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். புதுக்கிறிஸ்தவன். எனவே அவன் எதிர்க்கேள்வி கேட்கத் தொடங்கினான். “நீங்கள் புறப்பட்டு வரும்போது குறுக்கே எது வந்தால் கெட்ட சகுணம்?" என்றான். “பூனை, எருமை முதலானவை எதிர் வந்தால்...." என்று பதில் உரைத்தனர். “சரி எது எதிர்ப்பட்டால் நல்ல சகுனம்?” என்று கேட்டதும் “கழுதை வந்தாலோ, கனைத்தாலோ நல்ல சகுணம்?" என்று நண்பர்கள் சொல்ல, “ஆம், உலகிற்கு நல்ல சகுனமாக, சமாதானத்தின் நற்செய்தியாக வந்தவர் இயேசு என்பதை உணர்த்தவே இயேசு கழுதை மீது ஏறிச் சென்றார்” என்று புதிதாக மனந்திரும்பியவன் உரைத்தான். வாயடைத்து நின்றார்கள் வம்பளந்தவர்கள்.
கழுதை மீது அமைதியின் அரசராகச் சென்ற இயேசு சிலுவைச் சாவை ஏற்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். எளிமையின் கோலத்தில் மகிமையோடு மரணத்துக்குள் நுழைகிறார். “இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறி அமர்ந்தார். 'மகனே சீயோன், அஞ்சாதே! இதோ உன் அரசர் வருகிறார். கழுதைக் குட்டியின் மேல் எறி வருகிறார்' என்று மறை நூலில் எழுதியுள்ளதற்கேற்ப (செக்.9:9) அவர் இவ்வாறு செய்தார்” (யோ.12:14-15), விண்ணுலகைத் தன் அரியணையாகவும் மண்ணுலகைத் தன் கால்மனையாகவும் கொண்ட கடவுளின் மகன் (மத்.5:34,35) எளியவராய், அமைதியின் அரசராய் (எசா.9:6) வருகிறார்.
கழுதை அமைதியின் சின்னம். உலகம் அனைத்திற்குரிய அமைதியைக் கொண்டு வருபவர் இயேசு.
யாரும் ஏறாத கழுதைக் குட்டியின் மேல் பவனி. விண்ணரசு தூய்மையானது, உலக மாசுகளால் கறைபடியாதது.
கழுதையை இலவசமாகப் பெறுகின்றார். இறைவன் தரும் மீட்பு மீட்பால் வரும் அமைதி இலவசமானது. இயேசுவின் பெயரைச் சொல்லி வேண்டும்போது நமக்குக் கிடைப்பது.
ஆனால் இயேசு கொண்டு வந்த அமைதியை, மீட்பை, ஒப்புரவை இந்த உலகம் ஏற்குமா? இயேசுவுக்கு எப்போதும் இருந்த மனவலியின் சித்திரிப்பை லூக்.13:34இல் பார்க்கிறோம். “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பிமில்லையே!".
மக்கள் வெள்ளம் வானதிர 'ஓசன்னா என்று முழங்க, மெசியாவை அடையாளப்படுத்தும் “தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக" என வாழ்த்தி வரவேற்க, அதைப் பொறுக்காத பரிசேயர்களைப் பார்த்து “இவர்கள் பேசாதிருந்தால் கற்கள் கத்தும்” என்கிறார் இயேசு. இப்படி ஓர் உற்சாகச் சூழலில் “இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்” (லூக். 19:41), மனத்தை உறுத்தும் சோக வரிகள்!
இயேசு அழுகிறார். மனிதன் எப்போது கண்ணீர் வடிக்கிறான், கலங்கி நிற்கிறான்? வாழ்க்கையில் தோல்வியுறும் போது, நினைத்தது நடக்காத போது, எண்ணியது ஈடேறாத போது, இலட்சியங்கள் நிறைவேறாதபோது... இயேசு அழுகிறார் என்றால் அவர் எண்ணியது நிறைவேறவில்லையா? ஆம் உலகில் எங்கோ ஒரு மனிதன் இயேசு சிந்திய இரத்தத்தால் மீட்பு அடையவில்லை எனில் அந்த ஒரு மனிதனைப் பொருத்தவரை இயேசுவின் இலட்சியம் ஈடேறவில்லை. இயேசுவின் வாழ்க்கையே படுதோல்வி, இயேசுவின் பாடுகள் மரணம் அத்தனையும் வீண். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது” (லூக்.19:42) போற்றிப் புகழப்பட்டவர் போற்றிப் புகழப்பட்ட ஒன்றால் அடைந்த ஏமாற்றம் அது! ஓசன்னா வாழ்த்துக்குப் பின்னே ஒவ்வொருவர் மனத்தையும் ஊடுருவிப் பார்ப்பவர் அவர்.
நாம் அவரை எப்படிப் போற்றிப் புகழுகிறோம், அவருக்காக என்ன செய்கிறோம் என்பதை விட அவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார், நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதன்றோ முக்கியம்!
ஒலிவ மலையிலிருந்து நம்மைப் பார்த்தார். கண்ணீர் வடித்தார். கல்வாரியிலிருந்து பார்த்தபோதோ கண்ணீரை அல்ல, குருதியையே கொட்ட வைத்தோம்.
குருத்தோலைகளைச் சிலுவை வடிவில் செய்து பார்ப்பதில் ஆனந்தமடைகிறோமே, நமது வாழ்வும் சிலுவையாக மாற வேண்டும், மீட்பினைத் தருகின்ற, பிறருக்கு நன்மை செய்கின்ற, அதனால் பிறருக்குத் தன்னையே கையளிக்கின்ற சிலுவையாக மாற வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை?
தூய அகுஸ்தினார் சொல்வது போல “ஒலிவ மரக்கிளைகளை அல்லது மேலுடைகளை விரிப்பதற்குப் பதிலாக இயேசுவுக்கு முன் நம் உள்ளங்களை விரிப்போம்".
குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறு, புனித வாரம் சுற்றி நம் சிந்தனைகள் இன்று வலம் வருகின்றன. குருத்தோலை ஞாயிறு என்றதும், ஒரு வரலாற்றுப் பதிவு என் நினைவுக்கு வருகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920. அவ்வாண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜியார்ஜியா, ஒஹாயோ, இந்தியானா மாநிலங்களில், குருத்தோலை ஞாயிறன்று வீசிய 38 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. குருத்தோலை ஞாயிறு, சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமில் பல விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம். இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, யாருடைய தூண்டுதலுமின்றி, மக்கள், தாங்களாகவே கூடிவந்து அவரை வரவேற்றனர். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் மக்கள் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச் சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!
இரண்டாவது, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை புனிதவாரம் என்றழைக்கிறோம்.
அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே! ஒரு நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள், ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னார். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை, நாம், தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.
கல்வாரி என்றதும், நம் சிந்தனைகளில் செதுக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, இன்று, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப்போட்டுள்ளது; மீட்பைக் கொணர்ந்துள்ளது. புனிதத்திற்குப் புது இலக்கணம் வகுத்துள்ளது.
சிலுவையில் அறையுண்ட இயேசு, ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசி வந்தார், இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் மாநகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.
ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்" என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு 5:7) இளையோர் உள்ளங்களில் உருவாகும் இரக்கம், ஒரு சூறாவளியாய் இவ்வுலகில் நுழைந்து, இங்கு வளர்ந்துள்ள வெறுப்பு மரங்களை வேரோடு சாய்த்து, நட்பு மரங்களை நட்டு வைக்கவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுவோம்.