மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 50:4-7|பிலிப்பியர் 2:6-11|மத்தேயு 26:14-27:66

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


குருத்து ஞாயிறு

ஒரு சோதிடர் ஒருவர் அரசனிடம் வந்தார். பலவாறு சொன்ன சோதிடர் இறுதியாக அரசே! இந்த தேதியில் உங்கள் மனைவி இறந்துவிடுவார்கள் என்று சொன்னார். அதே நாளில் சோதிடர் சொன்னபடி ராணியும் இறந்தாள். மறுநாள் அரசன் சோதிடரை அழைத்து நீ எப்போது இறப்பாய் என்று கேட்டார். அரசே! நீங்கள் சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே நான் இறப்பேன் என்றார். அப்படியென்றால் என்னோடு இரு என்று அரசன் வைத்துக் கொண்டார்.

வாழ்க்கையை முன் கூட்டியே தீர்மானிப்பது நல்லதுதான். இயேசு தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்தவராக இன்று எருசலேம் நகரில் நுழைகின்றார். தான் சிலுவையில் கையளிக்கப்படப் போவது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும் (மத். 26:2). தன்னை 12 சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுக்கப் போவதும் தெரியும் (மத். 26:21), சீடர்கள் சிதறிப் போவார்கள் என்பதும் தெரியும் (மத். 26:33). தான் பாடுகள் படப்போகும் அனைத்தும் அவருக்குத் தெரியும். எல்லாம் தெரிந்துமா அவர் எருசலேம் நுழைந்தார்?

ஆம்! எல்லாம் தெரிந்தும், அறிந்தும், புரிந்தும், உணர்ந்தும் தான். ஏனெனில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது வாழ்க்கையின் குறிக்கோள். இந்தப் பாடுகளின் இறப்பு, உயிர்ப்பு வழியாகத் தனது அன்பு எவ்வளவு பெரிது என்பதை உலக மக்கள் அறிய வேண்டும் என்பது தந்தையின் விருப்பமாகும். பாடுகளை அறிந்த இயேசு மனிதத் தன்மையால் முகம் குப்புற விழுந்து, என் தந்தையே! முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் (மத். 26:39) என்று செபிப்பதாக வாசிக்கிறோம். ஆனால் அச்சம் ஒரு பக்கம் ஆட்கொண்டாலும் தந்தையின் மீது மகன் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாத ஒன்று.

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் எதிரிகள், வீடு ஒன்றை நெருப்பு வைத்தார்கள். வீடு பற்றி எரிந்து வீட்டில் இருந்த 3 பேர் தந்தை, தாய், மகள் மூவரும் வெளியே ஓடிவந்தார்கள். நெருப்போ பரவியது. மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் எழுந்தான். அம்மா! அப்பா! என்னைக் காப்பாற்றுங்கள் என்ற கூக்குரல் ஒலித்தது. அப்போதுதான் பெற்றோருக்கு மகன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. சன்னல் எரிந்து விழக் கண்ட பெற்றோர் மகனே! கீழே குதியும். உன்னை நாங்கள் தாங்கிப் பிடித்துக் கொள்வோம் என்றனர். ஐயோ பயமாக இருக்கிறது. நீங்கள் நிற்பது தெரியவில்லையே என்றான். நாங்கள் இங்கே நிற்கிறோம். குதி குதி என்று சொல்ல சப்தம் கேட்கும் திசையை நோக்கிக் குதித்தான். தகப்பன் தாங்கிக் கொண்டார். இதுதான் மகன் தன் தந்தை மீது கொண்டிருந்த நம்பிக்கை.

இத்தகைய மனநிலைதான் இயேசுவைத் துன்பக் கிணற்றுக்குள் துணிந்து குதிக்க வைத்தது. தன் தந்தை தன்னைக் கைவிட மாட்டார் என்பதே இயேசுவைத் துணிந்து போகச் செய்தது. இன்று பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவை உயிர்த்தெழச் செய்து, அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி விண்ணகத் தையும், மண்ணகத்தையும், கீழுலகத்தையும் அவருக்கு அடிபணிய வைத்தார் (பிலி. 2:11).

சிலுவை வழியாகத்தான் இயேசு இறைமகன் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. யூதர்களுக்கு இடறலாகவும், கிரேக்கர்களுக்கு (புறவினத்தாருக்கு) மடமையாகவும், ஆனால் விசுவாசம் கொண்டவர்களுக்குச் சிலுவையில் இறைமகனாகவும் இருக்கிறார் (1 கொரி. 1:23). தன்னையே அழித்துத் தன் ஆடுகளுக்காக உயிர் கொடுத்தார் இயேசு (யோவா. 10:18).

ஆம். பாடுகள் நம்மில் எழ வேண்டிய பரிதாப உணர்ச்சியல்ல! அதில் நாம் பங்கு பெற அழைக்கப்படுகிறோம். இயேசு ஏந்தும் சிலுவை நமக்கு நம்பிக்கை, நமக்கு மீட்பு, நமக்கு வழி, நமக்கு மகிமை.

மதமும், அரசியலும் மனித வரலாற்றில் கைகோர்த்து கொள்ளும்போது நல்லவையும் நடந்துள்ளன. தீயவையும் நிகழ்ந்துள்ளன. நீதியும் உண்மையும் காக்கப்பட்ட நேரங்கள் உண்டு உண்மையை நீதியை மூடி மறைத்ததும் உண்டு. குருத்தோலை ஏந்தி வெற்றி வீரராகப் பவனியில் அழைத்து வரப்பட்ட இயேசுவுக்கு என்ன நிகழ்ந்தது தெரியுமா? தன்னல குரு கைப்பாஸ் தலைமைச் சங்கத்தைக் கூட்டி இயேசுவைக் குற்றவாளியாக்கப் பொய்ச் சான்று தேடுகிறான். புரட்சியாளர், வரி கொடுக்கத் தடுத்தவர், தன்னை அரசனாக்கிக் கொண்டார் இயேசு என்றெல்லாம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு வித்திட்டான். இன்றும் மதம், சிந்திக்க தெரியாத பாமர மக்களைத் தன் கைவசம் வைத்து நீதிக்கும், உண்மைக்கும் முரணாகச் செல்லத் தூண்டுகிறது. இதனால் இயேசுவின் சீடர்களுக்கு இந்த உலகம் தருவதோ சிலுவை. ஆனால் வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது, உணருவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்மை மற்றவர்க்குப் பிடிக்குமா ?

யார் அழகாக இருக்கின்றார்களோ அவரை எல்லாருக்கும் பிடிக்கும். எது அழகாக இருக்கின்றதோ அது எல்லாருக்கும் பிடிக்கும்.

இந்த உலகத்திலே வாழும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்கு இயேசுவைப் பிடிக்கும். காரணம் அவரிடம் காணப்படும் அழகு.

இயேசு - அவரது உணர்வில் அழகு! இயேசு அவரது எண்ணத்தில் அழகு! இயேசு - அவரது சொல்லில் அழகு! இயேசு - அவரது செயலில் அழகு! எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சுமந்த சுமையில் - சிலுவையில் அழகு! சுமை சுமக்க இயேசு மனமுவந்து முன்வந்த நாள்தான் குருத்து ஞாயிறு.

இயேசுவுக்கு அவரை மக்கள் எப்படி நடத்தப்போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். அவர்மீது பாவத்தைச் சுமத்துவார்கள், பழியைச் சுமத்துவார்கள், கன்னத்தில் அறைந்து. கற்றூணில் கட்டி, அடிமேல் அடி அடித்து, தோள்மீது சிலுவையைச் சுமத்தி, அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். தனக்கு நடக்கப்போவதை அறிந்தே. தெரிந்தே அவர் எருசலேம் நகருக்குள் நுழைந்தார். இயேசு குருத்து ஞாயிறைப் பற்றி முன்பே தனது சீடர்களுக்கு மூன்று முறை அறிவித்திருந்தார். அவரைப்பற்றி இறைவாக்கினர் எழுதி வைத்திருந்த யாவும் நிறைவேறும் (லூக் 18:31) எனச் சொல்லியிருந்தார். எசாயா இறைவாக்கினர் எழுதி வைத்திருந்தது போல (எசா 50 : 4-7) அவர் அடிப்பவர் முன் கிளர்ந்தெழவில்லை ; நிந்தனை செய்தோர் முன்னும், காறி உமிழ்ந்தோர் முன்னும் முகத்தை மறைக்கவில்லை : அத்தனை சுமைகளையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். இதற்குக் காரணம் சுமைக்கும், அழகுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அழகுக்கு அகிலத்தைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு.

		எங்கே சுமை இருக்கின்றதோ அங்கே அழகு இருக்கும். 
		வானம் சந்திரனைச் சுமக்கும் போது அழகு பெறுகின்றது. 
		பூமி மனிதனைச் சுமக்கும் போது அழகு பெறுகின்றது. 
		பூ மணத்தைச் சுமக்கும்போது அழகு பெறுகின்றது. 
		ஆம், சுமைக்கும். அழகுக்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
		

இன்று இயேசு எத்தனையோ பேருக்கு அழகான ஆண்டவராக, நண்பராக, அன்பராகக் காட்சியளிக்கின்றார். இதற்குக் காரணம் உலக மக்களின் நலனுக்காக அவர் சுமந்த சுமைகள்!

அவர் சுமந்த ஒவ்வொரு சுமையும் சிலுவையும் அவரை அழகுக்கு அழகு செய்யும் அற்புதப் பிறவியாக்கியது. ஒரு தாய் அவளது குழந்தையைச் சுமக்கும்போது தாய்மை என்னும் அழகைப் பெறுவது போல, இயேசு நமது பாவங்களைச் சுமந்தபோது உலக மீட்பர் என்னும் அழகைப் பெற்றார்.

அன்று அவர் கண்ணிலே சுமை! அன்று அவர் கருத்திலே சுமை! அன்று அவர் சொல்லிலே சுமை! அன்று அவர் செயலிலே சுமை ! அன்று அவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் சுமை! ஆனால் இன்றோ, அவர் மீது காணப்படும் காயங்கள் கூட அழகாகத் தெரிகின்றன. காரணம் அவர் சுமந்த சுமைகள்.

இன்று இயேசு நமக்குத் தரும் அருள்வாக்கு என்ன?

எனதருமை மகளே. மகனே! அன்று சுமை சுமக்க, சிலுவையைச் சுமக்க நான் பயந்திருந்தால் நான் எருசலேம் நகருக்குள் நுழைந்திருக்க மாட்டேன். அன்று நுழைந்து, சாவு என்னும் மாபெரும் சுமைக்கு (இரண்டாம் வாசகம்) என்னையே நான் கையளித்ததினால்தான் எனக்கு உயிர்ப்பு என்ற அழகும், மீட்பர் என்ற அழகும், ஆண்டவர் என்ற அழகும் கிடைத்தன. நான் அழகாக இருப்பதினால்தான் உலகத்தை என் பக்கம் ஈர்க்க ன்றது. நீயும் சுமை சுமக்க முன் வா! அழகாக மாறு! உன்னை எல்லாரும் விரும்புவார்கள். நீ அன்பு செய்யப்படும்போது ஆனந்தமடைவாய்! என்கின்றார் இயேசு.

நிலம் தன்னை மனிதன் தோண்டும்போது, மரம் வைக்கத் தோண்டுவான், தண்ணீர் எடுக்கத் தோண்டுவான் எனப் பொறுமையாக இருப்பதுபோல, நாம் சிலுவையால், துன்பத்தால், சுமையால் தோண்டப்படும்போது பொறுமையாக வாழ முன்வருவோம் ; அழகான மனிதர்களாவோம்.
மேலும் அறிவோம் :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள் : 151).

பொருள் :
தன்னைத் தோண்டிக் குழிபறிப்போரையும் கூட நிலமகள் சுமந்து நலம் புரிகிறாள். அதுபோன்று தம்மை அவமதித்து இழிவாகப் பேசுவோரையும் பொறுத்துக்கொள்ளுவது தலைசிறந்த பண்பாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு

ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணை முதல் வாரம் சைக்கிளிலும், இரண்டாம் வாரம் பைக்கிலும், மூன்றாம் வாரம் மாருதிக் காரிலும் ஏற்றிக் கொண்டு, கடற்கரைக்குச் சென்று பல்வேறு பரிசுப் பொருள்களை அவளுக்கு அளித்து அன்பு மழையில் நனைய வைத்தான். அவன் ஒரு பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியு அப்பெண் அவனைப் பார்த்து. "நான் உன்னைக் காதலிக்கின்றேன் கண்ணா” என்றாள். அவன் அவளிடம், "நான்" பயன்படுத்திய சைக்கிள், பைக், மாருதிக்கார் அனைத்துமே என்னுடைய நன்பனுடையது" என்றான். உடனே அவள் அவனிடம், "அப்ப, நான் போயிட்டு வர்றேன் அண்ணா" என்று கூறிவிட்டுக் கிளம்பிளாள். காசு இருந்தால் அவன் "கண்ணன்"; காக இல்லை என்றால் அவன் அண்ணன், குளத்திலே தண்ணீர் இருந்தால் அதில் கொக்கும் மீனும் இருக்கும்; தண்ணீர் இல்லை என்றால், அவை வேறொரு குளத்திற்குச் சென்றுவிடும்.

குருத்து ஞாயிறு திருவழிபாடு மக்களின் நிலையற்றத் தன்மையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எந்த மக்கள் குருத்து ஞாயிறு அன்று "ஓசான்னா" பாடிக் கிறிஸ்துவை எருசலேம் திருநகருக்கு அழைத்துச் சென்றார்களோ. அதே மக்கள் கூட்டம் கிறிஸ்து கைது செய்யப்பட்டபோது "அவன் ஒழிக" என்று கூச்சலிட்டது.

கிறிஸ்துவின் பாடுகள் விதியின் விளையாட்டோ தலைமைக் குருக்களின் சதியோ அல்ல; மாறாக அது வகுத்தான் வகுத்த வழி: கடவுளின் திட்டம். அத்திட்டத்தைக் கிறிஸ்து மக்கள் மீட்புக்காக மன உவப்புடன் ஏற்று நிறைவேற்றினார். இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் சொயா துன்புறும் ஊழியனைப் பற்றி எழுதியுள்ள நான்கு கவிதைகளில் ஒன்று துன்புறும் ஊழியனாகிய கிறிஸ்து தமது பாடுகளை நெஞ்சுறுதியுடன் ஏற்கிறார்; தம் முகத்தைக் கற்பாறையாக ஆக்கிக் கொண்டார் (எசா 50:7). இன்றைய பதிலுரைப் பாடல் கிறிஸ்து எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டார் என்பதை எடுத்துரைக்கிறது. "என் இறைவா. என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்" (திபா 22), இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் எனக் கூறுகிறது (பிலி 2:6). இன்றைய நற்செய்தி மத்தேயு எழுதியுள்ளபடி கிறிஸ்துவின் பாடுகளை எடுத்துரைக்கிறது (மத் 26:14-27:16).

கிறிஸ்துவின் பாடுகளைப் பொருத்தமட்டில், அவருடைய உடல் வேதனையைவிட மன வேதனையே அதிகம். பாடுகளின்போது அவர் அனைவராலும் கைவிடப்பட்டார். யூதாசு அவரைக் காட்டிக் கொடுத்தான்; பேதுரு அவரை மறுதலித்தார்; சீடர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தண். தலைமைச் சங்கம் அவருக்கு மரண தண்டனை விதிக்க ஆளுநர் பிலாத்தை வற்புறுத்தியது; மக்கள் கூட்டம் பரபாசை விடுவிக்கக் கோரி கிறிஸ்துவைச் சிலுவையில் அறைய வேண்டுமெனக் கூச்சலிட்டது. ஆளுநர் பிலாத்து தன் கைகளைக் கழுவி நழுவி விட்டான்.

ஒருவருக்குத் துன்பம், கேடுகாலம் வருவதும் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பது தெரியவரும் என்கிறார் வள்ளுவர்.

கேட்டிலும் உண்டு ஓர்உறுதி கிளைஞசை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

கிறிஸ்துவின் பாடுகளின்போது அவரைவிட்டு நீங்காத ஒரே ஒருவர் அவரது வானகத் தந்தை மட்டுமே. இதைக் கிறிஸ்துவே தம் சீடர்களிடம் முன்னறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்து தம் சீடர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப் போவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16:32) என்று கூறினார்.

"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது கூறியது. நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால் கிறிஸ்து சிலுவையில் சொல்லியது திருப்பா 22 முழுவதையும். இத்திருப்பா நம்பிக்கையின் பா; அவநம்பிக்கையின் பாடல் அல்ல: "நீரோ ஆண்டவரே! என்னைவிட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்" (திபா 22:19). எனவே இருள் சூழ்ந்த நிலையிலும் கிறிஸ்து தந்தை யிடம் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை என்பது உறுதி, எத்தகைய துன்பச் சூழ்நிலையிலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். "அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகமாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார். அஞ்சாதே. திகைக்காதே" (இச 31:8). "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்" (உரோ 8:31).

கிறிஸ்து புகழப்பட்ட போதும் இகழப்பட்ட போதும் ஒரே மனநிலையுடன் இருந்தார். மக்கள் அவரைப் போற்றியபோது அவர் புகழில் மயங்கவில்லை; தூற்றப்பட்டபோது அவர் மனமுடைந்து போகவில்லை. கிறிஸ்துவிடம் விளங்கிய மனநிலை பவுலிடம் இருந்தது. "போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழ்வார் புகழலும் இகழ்வார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை" (2 கொரி 6:8). கிறிஸ்துவிடமும் பவுலிடமும் விளங்கின மனநிலையுடன் நாம் வாழ்ந்தால். நாம் உண்மையில் முதிர்ச்சி பெற்ற மனிதர்கள்.

தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "உங்களுக்குப் பிடித்த மொழி ஆங்கில மொழியா அல்லது தமிழ் மொழியா?” என்று கேட்டதற்கு ஒரு மாணவன், 'சார்! எனக்குப் பிடித்த மொழி உங்கள் மகள் தேன் மொழி" என்றான்! நமக்குப் பல மொழிகள் பிடித்திருக்கலாம். ஆனால் கிறிஸ்து வுக்குப் பிடித்த மொழி மௌன மொழி: பிடித்த இராகம் மௌன இராகம். பாடுகளின்போது அவர்மீது அடுக்கடுக்காய்க் குற்றங்களைச் சுமத்தியபோது அவர் மறுத்து ஒரு பதிலும் கூறவில்லை. "இயேசு பேசாதிருந்தார்" (மத் 26:63). அதைக்கண்ட ஆளுநர் பிலாத்து வியப்படைந்தான். புனிதவாரத்தில் நாம் மௌனமாக இருப்போம். மௌனம் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம்.

திருமணமான ஒரு பெண் தன் தோழியிடம், “என் கணவர் மனம் மாறவேண்டுமென்று எனக்குத் தெரிந்த எல்லா விரதங்களையும் கடைப்பிடித்தும் அவர் மனம் மாறவில்லை" என்றார். அதற்குத் தோழி. “ இன்னும் ஒரு விரதம் பாக்கியிருக்கிறது. அதுதான் மெனை விரதம்" என்றார்.

பசியைப் பொறுத்துக்கொண்டு, சாப்பிடாமல் நோன்பு இருப்பவர்களைவிடப் பிறரின் இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்பவர்களே மேலானவர் என்கிறார் வள்ளுவர்.

உண்ணாதுநோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின்பின் (குறள்160)

புனிதவார சிந்தனைக்கு

 	
	கடவுளுக்குப் பிடித்த மொழி மௌனமொழி?
	கடவுளுக்குப் பிடித்த இராகம் மௌன இராகம்! 
	கடவுளுக்குப் பிடித்த விரதம் மௌன விரதம்! 
 
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புகழ்ச்சிப் பவனியா புரட்சிப் பவனியா?

இயேசு ஏன் சோதனைக்கு ஆளானார்? என்ற கேள்வியோடு தவக்காலத்தைத் தொடங்கினோம்.

இயேசு ஏன் துன்பத்துக்கு ஆளானார்? என்ற கேள்வியோடு தவக்காலத்தை நிறைவு செய்கிறோம்.

குருத்து ஞாயிறு இன்று தென்னை மரத்தின் இளம்தளிர்- களைக் கொய்து கரங்களில் ஏந்தி ஆலயம் நோக்கிப் பவனியாகச் செல்கின்றோம். கையில் உள்ள இளந்தளிர் பேசினால் நம்மிடம் என்ன சொல்லும்? "தென்னை மரத்தின் எதிர்காலம் நான். இளம் பருவத்திலேயே உங்கள் மகிழ்ச்சிக்காக என்னைக் கையளித்து விட்டேன். வளர வேண்டிய நான் மரணத்தைத் தழுவி விட்டேன். இயேசுவின் வரவேற்புக்கு நான் பயன்பட்டதற்காகப் பெருமைப் படுகிறேன்”.

இறைவனுக்காக இறையாட்சிக்காக நாம் வாழ வேண்டும் என்று சுட்டிக் காட்டிய மீட்பர் இயேசுவும் இளம்வயதிலேயே தியாகப் பலியானார்.

இறப்புப் பற்றிய பயம் இயல்பானதுதான். ஆனால் இலக்குத் தெளிவும் இலட்சிய வேட்கையும் கொண்டவர்கள் மரணத்தை நினைத்து அஞ்சுவதில்லை. நெருங்கி வரும் சாவை நோக்கி அணிவகுத்து நிற்பார்கள்.

மார்ட்டின் லூத்தர் கிங் அத்தகையவர்களில் ஒருவர். அமெரிக்காவில் கருப்பின மக்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தவர். எவ்வித அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் போராடியவர்.

1968 ஏப்பிரல் 4ஆம் நாள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முந்திய நாள் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் சொன்னார்: "நமக்கு முன்னே கடினமான நாட்களைச் சந்திக்க இருக்கிறோம். அதைப் பற்றிய அலட்டல் எனக்கில்லை. மலை உச்சிக்கு வந்து விட்டேன். எல்லாரையும் போல எனக்கும் நீண்டகாலம் வாழ ஆசை தான். ஆனால் இப்போது அதைப் பற்றிய சிந்தனையே இல்லை. இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே என் ஒரே ஆசை. அவர்தான் என்னை மலை உச்சிக்கு அழைத்து வாக்களிக்கப்பட்ட பூமியைப் பார்க்கச் சொல்கிறார். அந்தப் பூமியில் நுழையும் வாய்ப்பு எனக்கு இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இரவில் உறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் ஒர் இனமாக ஒருநாள் அந்த வாக்களிக்கப்பட்ட பூமிக்குள் நுழைவோம்”.

தன் தலைவன் இயேசுவைப் போல் தனது சாவைக் கண்முன் கண்டார் மார்ட்டின் லூத்தர் கிங். அஞ்சிப் பின்வாங்கவில்லை. தன் இன மக்களின் விடுதலைக்காகத் துணிந்து சாவைச் சந்தித்தார், தழுவினார்.

இன்று திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு. எருசலேம் நோக்கிய இயேசுவின் வெற்றிப் பவனியைக் கொண்டாடுகிறோம். அது சாவதற் கென்றே நடந்த ஊர்வலம். அண்மையில்தான் லாசரை சாவினின்று உயிர்த்தெழச் செய்தார். அதைக் கண்டு பலர் அவர் மீது நம்பிக்கை கொண்டாலும் பரிசேயர்கள் கொலை வெறியோடு அவரது செயல்பாடு களுக்கு முடிவுகட்ட முனைந்தார்கள். “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது’ (யோ.11;50) அதனால் "அவர் திருவிழாவுக்கு வரமாட்டாரோ?” என்று மக்கள் பேசிக் கொண்டனர். ஆனால் இயேசு சாவைக் கண்டு அஞ்சுபவரா? மனிதர் எல்லாரும் வாழ்வதற்கென்றே பிறந்தவர்கள் இயேசுவோ சாவதற்கென்றே பிறந்தவர் அன்றோ! "மானிட மகன்... தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்” (மத்.20:28) என்பதை எண்பிக்கும் நிகழ்வின் தொடக்கம்தான் குருத்து ஞாயிறு.

அன்று நடந்தது மக்களைப் பொருத்தவரை குருத்துப் பவனி, புகழ்ச்சிப் பவனி. ஆனால் இயேசுவைப் பொருத்தவரை அது கொள்கைப் பவனி, புரட்சிப் பவனி. மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவதே அவன் தனக்கென வகுத்துக் கொள்ளும் கொள்கைகளே! அந்த உயர்ந்த குறிக்கோளுக்காக உயிர்மூச்சையும் தியாகம் செய்வதில்தான் வாழ்வு நிறைவு காண்கிறது. அந்த நிறைவைக் கண்டவர் இயேசு.

மக்களின் சிந்தனையும் விருப்பமும் இயேசுவின் நோக்கமும் குறிக்கோளும் முற்றிலும் முரண்பட்டவை. மக்கள் உலக ஆசைகளோடு இயேசுவை அரசனாக்க நினைத்தார்கள். இயேசுவோ இறைவனின் ஆசையை நிலைநிறுத்தத் தன்னையே பலியாக்க நினைத்தார். உள்ளத்தில் முரண்பாடுகளோடு சென்றவர்கள் உண்மை வெட்ட வெளிச்சமாகும்போது இயேசு காட்டிக் கொடுக்கப்படுகிறார். அநீதத் தீர்ப்புக்கு ஆளாகிறார். சிலுவைப் பாடுகளைச் சந்திக்கிறார். கல்வாரி மரணத்தைத் தழுவுகிறார்.

 	எல்லோருக்கும் அரசர் இயேசுவே 	
	இயேசுவுக்கு அரியணையோ சிலுவையே. 	
	இதுவே குருத்தோலை ஞாயிறு சொல்லும் செய்தி. 

நம்மை இயேசு பக்தர்களாக அல்ல, ரசிகர்களாக அல்ல, மாறாகச் சீடர்களாக வாழ அழைக்கிறார். பக்தன் ரசிகனாகத் தொலைவில் நின்று வியப்பவன். சீடனோ தன் தலைவனின் சிந்தைக்குள்ளே புகுந்து வாழ்பவன். பிறருக்காகத் தன்னையே அளித்து, ஏன், தன்னையே அழித்து நமக்கு வாழ்வு தந்த இயேசுவின் உண்மைச் சீடராய் உலகிற்கு அறிவிக்க வேண்டிய பணியும் நமக்குண்டு.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன்உயிரை இழக்கும் எவருமே அதைக் காத்துக் கொள்வார்". (மார்க்.8:34,35)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பீடத்தையும் வீதியையும் இணைக்க...

திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய நாள்களை இன்று நாம் துவக்குகிறோம். குருத்தோலை ஞாயிறு அல்லது, பாடுகளின் ஞாயிறு என்றழைக்கப்படும் இஞ்ஞாயிறைத் தொடர்ந்துவரும் வாரத்தை, புனித வாரம் என்று சிறப்பிக்கிறோம். குருத்தோலை ஞாயிறு, மற்றும், புனிதவாரம் என்ற இரு கருத்துக்களை மையப்படுத்தி இன்றைய சிந்தனைகளை மேற்கொள்வோம்.

முதலில், குருத்தோலை ஞாயிறு..

.

இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று உருவான 38 சூறாவளிகளால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அதே வண்ணம், 1965ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று வீசிய மற்றொரு சூறாவளியைக் குறித்து செய்திகள் வெளியாயின. இந்த சூறாவளியில், 271 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 1500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் பதிவான சக்திவாய்ந்த சூறாவளிகளில் இது நான்காவது இடத்தைப் பெற்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி உருவாகும் மாதங்களில் குருத்தோலை ஞாயிறு இடம்பெறுகிறது.

குருத்தோலை ஞாயிறு - சூறாவளி இவை இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, பல எண்ணங்கள் உருவாகின்றன. முதல் குருத்தோலை ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி அது.

சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்துவிடும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், பலவற்றை, குறிப்பாக, மதத்தின் பெயரால் நிகழ்ந்த பல தவறுகளை தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம்.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத்தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியதுபோல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம், இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மதத்தலைவர்களின் அதிகார மையமாக விளங்கிய எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அவலங்களை சீராக்கினார். எனவே, இந்தக் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

இந்த குருத்தோலை ஞாயிறு நம்மையும் விழித்தெழச்செய்யும் ஓர் அழைப்பாக விளங்கட்டும். நம் வாழ்விலும் இயேசு நுழைந்து, அங்கு மாற்றங்களை - அவை தலைகீழ் மாற்றங்களானாலும் சரி - உருவாக்கவேண்டுமென்று விழைவோம், வேண்டுவோம். அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனிதவாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா முடிய உள்ள இந்த ஏழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரமாகக் கொண்டாட அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் அவரை மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்ட நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை புனிதமான நிகழ்வு என்று சொல்ல இயலுமா? புனிதம் என்ற சொல்லுக்கு, வேறோர் இலக்கணம் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன.

புனிதவாரம் முழுவதும், குறிப்பாக, இவ்வாரத்தின் இறுதி மூன்று நாள்களில், பல திருவழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தாய் திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறார். இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் ஓர் ஆபத்து உள்ளது. அதாவது, இந்த வழிபாட்டு நிகழ்வுகளை, சடங்குகளாக, வரலாற்று நிகழ்வுகளாக காணும் பார்வையாளர்களாக நாம் மாறிவிடும் ஆபத்து உள்ளது. அன்று, இயேசுவின் பாடுகளுக்கு அவரை இட்டுச்சென்றது, அன்றைய சமுதாயத்தில் நிலவிய கொடுமைகள். அதே கொடுமைகள் இன்று நாம் வாழும் சமுதாயத்திலும் தொடர்ந்து நிகழ்கின்றன.

இயேசுவுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு, அவர் மீது பரிதாபம் கொள்வதோடு நமது புனிதவார பங்கேற்பு நின்றுவிட்டால், புனிதவாரம் வெறும் சடங்காக மாறிவிடும். இந்த திருவழிபாட்டு நிகழ்வுகள், இன்றைய சமுதாயக் கொடுமைகள் குறித்து சிந்திக்கவும், அவற்றை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்தவும் நமக்கு உதவினால், நம் புனிதவார முயற்சிகள் பொருளுள்ளவையாக அமையும்.

நமது கோவில்களில் நடைபெறும் திருவழிபாட்டு நிகழ்வுகள், சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நம்மை அழைத்துச் செல்லவேண்டும். அங்கு, இயேசுவின் பாடுகளில் தொடர்ந்து பங்கேற்கும் மக்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும். அவ்வாறு இல்லையெனில், துன்பப்படும் இயேசுவைக் கண்டும் காணாமல் செல்லும் அக்கறையற்ற மனநிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இக்கருத்தை, Geoffrey Studdert Kennedy என்ற ஆங்கிலிக்கன் போதகர் ஓர் அழகிய கவிதையில் கூறியுள்ளார். Kennedy அவர்கள், முதல் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயப் படைவீரர்கள் நடுவே ஆன்மீகப் பணியாற்றியவர்.

Kennedy அவர்கள் எழுதிய ‘Indifference’ - 'அக்கறையற்ற நிலை' என்ற கவிதையின் வரிகள் இதோ:

  • இயேசு, கொல்கொதா வந்தபோது, அவரை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர்.
  • அவரது கரங்களையும், கால்களையும் ஆணிகளால் துளைத்தனர்.
  • தலையில் சூட்டிய முள்முடியால் ஆழமான காயங்களை உருவாக்கினர்.
  • அவை, கொடுமையான நாள்கள், மனித உயிர் மலிவாகிப்போன நாள்கள்.
  • இயேசு, பர்மிங்காம் (இன்றைய நகர்) வந்தபோது, மக்கள் அவரைக் கடந்து சென்றனர்.
  • அவரை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை, அவரை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை.
  • தெருவோரத்தில், குளிரில் இயேசு நடுங்கிக்கொண்டிருந்ததை யாரும் உணரவில்லை.
  • இயேசு அழுகுரலில் கூறினார்: "இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னெவென்று இவர்களுக்குத் தெரியவில்லை".
  • குளிர்காலப் பனி இயேசுவை மூடி, அவரை குளிரில் உறையவைத்தது.
  • கடந்து சென்ற மக்களெல்லாம் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
  • சுவர் ஓரமாக குளிரில் நடுங்கியபடி, 'கல்வாரியைத் தாரும்' என்று இயேசு கதறினார்.

இயேசுவின் பாடுகள் என்ற வரலாற்று நிகழ்வை வழிபாட்டு நிகழ்வாகக் கொண்டாடும் இந்த புனித வாரத்தில், கோவில்களில் நிகழும் வழிபாடுகளில் பொருளுள்ள முறையில் பங்கேற்கவும், அந்த பங்கேற்பின் பயனாக நம் வீதிகளில் நிகழும் கொடுமைகளைக் களையும் தெளிவையும், துணிவையும் பெறவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சாவை ஏற்றுக்கொண்ட இயேசு

நிகழ்வு

2001 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், அமெரிக்காவில் இருந்த இரட்டைக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கானக்கோர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தார். ‘மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின்மீதே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டார்களா?’ என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்கின; தங்களது பாதுகாப்பைக் குறித்து எல்லா நாடுகளும் கேள்வி எழுப்பத் தொடங்கின. இத்தகைய கொடுஞ்செயலுக்கு நடுவில், தனது உயிரைத் துச்சமென நினைத்து 2700 பேர்களுடைய உயிர்களைக் காப்பாற்றி, இறுதியில் தன் உயிரை இழந்த ரிக் ரெஸ்கோர்லா (Rick Rescorla) என்பவரைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.

இந்த ரிக் ரெஸ்கோர்லா இரட்டைக் கோபுரத்தின், தெற்குக் கோபுரத்தின் தலைமைக் காவலராக இருந்தவர். வடக்குக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்ட இவர், தெற்குக் கோபுரத்தில் இருந்தவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்காக அக்கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, அங்கிருந்தவர்களிடம், நேரிடப்போகும் ஆபத்தைச் சொல்லி, அவர்களைக் கீழே இறங்கச் சொன்னார். இவ்வாறு அவர் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலைக் குறித்துச் சொல்லிக்கொண்டு போகும்போது, அந்தக் கோபுரத்தின்மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அவர் இறந்து போனார்.

ஆம், தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து மக்களைக் காப்பாற்ற ரிக் ரெஸ்கோர்லா தன்னையே சாவுக்குக் கையளித்தார். ஆண்டவர் இயேசு நம்மைப் பாவத்திலிருந்து மீட்புப் புதுவாழ்வளிக்க தன்னையே தியாகமாகத் தந்தார். அதைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்ற பாடுகளின் குறித்து ஞாயிறு உணர்த்துகின்றது. இயேசு ஏன் பாடுகள் படவேண்டும், அவருடைய பாடுகளால் நாம் அடையும் பேறுபலன் என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தம்மையே தாழ்த்திக்கொண்ட இயேசு

இவ்வுலகில் எதுவுமே இல்லாதவர்களும், எந்தவோர் அதிகாரத்திலும் இல்லாதவர்களும் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில் எந்தவொரு வியப்புமில்லை; ஆனால் எல்லாம் இருந்தும் ஒருவர் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில்தான் வியப்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு செல்வராயிருந்தவர், அப்படிப்பட்டவர் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). மேலும் அவர் கடவுள் வடிவில் விளங்கினார்; எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார் (மத் 28: 18). அப்படிப்பட்டவர் தம்மையே வெறுமையாக்கி, மனிதருக்குக் ஒப்பாகி, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்.

சிலுவைச்சாவானது நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் தரப்பட்டது. இத்தண்டனையானது முதலில் பாரசீக மன்னன் முதலாம் தாரியுஸ் என்பவனால் கி.மு 519 ஆம் ஆண்டு, பாபிலோனில் தனக்கெதிராகக் கலகம் செய்த மூவாயிரம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கி.மு. 88 ஆண்டு யூதேயாவைச் சாந்த தலைமைக்குருவான அலெக்சாண்டர் ஜன்னேயுஸ் (Alexander Janneaus) என்பவரால் பரிசேயச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எண்ணூறு பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னாளில் உரோமையர்களால் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனையானது, கி.பி நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்த முதலாம் காண்டண்டைன் என்பவரால் நிறுத்தப்பட்டது.

இத்தகைய கொடிய தண்டனையை கடவுள் வடிவில் விளங்கியவரும், எல்லா அதிகாரமும் தன்னகத்தே கொண்டவருமான இயேசு தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுதான் வியக்குரியதாக இருக்கின்றது. இயேசு சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டதன் மூலம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போன்று கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி 5: 8)

கடவுளால் மிகவும் உயர்த்தப்பட்ட இயேசு

சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திகொண்ட இயேசுவை தந்தைக் கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளுகின்றார். அப்படியெனில், நாம் இயேசுவைப் போன்று கீழ்ப்படிதலுடனும் தாழ்ச்சியுடனும் வாழ்கின்றபொழுது கடவுள் நம்மை மிகவும் உயர்த்துவார் என்பது உறுதி.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியரைக் குறித்துப் பேசுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் துன்புறும் ஊழியர் “கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்; ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்” என்கின்றார். ஆண்டவருக்குச் செவிகொடுப்பதாகவும் அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும் துன்புறும் ஊழியர் சொல்கின்ற இந்த வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இஸ்ரயேல் மக்களிடம் கடவுள், “மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி இருந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்” (எசா 1: 19-20) என்பார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு இணங்கவோ, அவருக்குச் செவிசாய்க்கவோ அல்லது அவருக்குக் கீழ்ப்படியோ இல்லை. இவ்வாறு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் வாளுக்கு இரையானார்கள்; ஆனால் துன்புறும் ஊழியனாம் இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால், அவர் கடவுளால் மிகவே உயர்த்தப்பட்டார். ஆகவே, நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவரால் நிச்சயம் உயர்த்தப்படுவோம்.

துணை நிற்கும் இறைவன்

துன்புறும் ஊழியராம் இயேசுவைப் போன்று, கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் நம்மையே கையளிக்கின்றபொழுது இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் சொல்லப்படுவதுபோல் அடிக்கப்படலாம்; காறி உமிழப்படலாம். அவமானப்படுத்தப்படலாம். இன்னும் பல்வேறு துன்பங்களை நாம் அனுபவிக்கலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனந்தளர்ந்து போய்விடாமல் ஆண்டவராகிய கடவுள் நமக்குத் துணையாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழலாம் என்கிறது இன்றைய முதல் வாசகம், இதை, “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்” என்று இன்றைய முதல்வாசகத்தின் இறுதியில் வருகின்ற வார்த்தைகளில் காணலாம். இயேசுகூட இதையேதான், “நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16: 32) என்பார். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் அர்ப்பணித்து வாழ்கின்றபொழுது, சவால்களையும் துன்பங்களையும் வரலாம். அவற்றைக் கண்டு அஞ்சாமல், அவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், அவர் தரும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை:

‘வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்கவேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும்’ என்பார் சி. என். அண்ணாத்துரை. எனவே, இந்த உலகை மீட்க வந்த இயேசு அதற்காகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தம்மையே தந்தது போன்று, நாமும் இந்த உலகை உய்விக்க நம்மையே தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

குருத்தோலையும் சிலுவை மரமும்

புனித வாரத்துக்குள் நுழையும் நாம் இயேசுவுடன் இணைந்து எருசலேமுக்குள் நுழைகிறோம். பவனியின்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதிக்கும், நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்ட இயேசுவின் பாடுகள் வரலாற்றுக்கும் மூன்று முரண்கள் உள்ளன. அல்லது இயேசு மூன்று நிலைகளுக்குக் கடந்து போவதை நாம் காண்கிறோம். இவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

(அ) உடனிருப்பிலிருந்து உதறித் தள்ளுதலுக்கு

மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிற கழுதைக்குட்டி நிகழ்வில், 'ஒரு கழுதையும் அதனோடு ஒரு குட்டியும்' என இரண்டு விலங்குகள் அழைத்துவரப்படுகின்றன. மற்ற நற்செய்தியாளர்கள் கழுதைக்குட்டி மட்டுமே வருவதாகப் பதிவு செய்கிறார்கள். மத்தேயு நற்செய்தியாளர், 'கடவுள் நம்மோடு' என்னும் உடனிருத்தலின் செய்தியைத் தருகிறவர். கழுதையும் அதனோடு ஒரு குட்டியும் என்பதை, இயேசுவின் பாடுகளில் அவரோடு உடனிருந்த தந்தையை நாம் நினைவுகூர்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடவுள் இயேசுவோடும் உடன் நடக்கிறார். இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நுழையும்போது அவருடைய சீடர்களும் மக்களும் உடன் நடக்கிறார்கள். ஆனால், சில நாள்களில் அவர்கள் இயேசுவை உதறித் தள்ளுகிறார்கள்.

(ஆ) புகழ்ச்சியிலிருந்து தீர்ப்பிடுதலுக்கு

ஓர் அரசர் அல்லது பெரியவர் ஊருக்குள் நுழையும்போது அவருக்கு முன்னே துணிகளை விரிப்பதும், அவரை எதிர்கொள்ள கொடிகள் பிடிப்பதும் வழக்கம். இன்றும் சில ஊர்களில் தேர்ப்பவனி செல்லும் இடங்களிலும், நற்கருணைப் பவனியிலும் பவனிக்கு முன்னே துணிகள் விரிக்கப்படுவது வழக்கம். அதாவது, தங்களுடைய மீட்பரும் அரசருமாகிய ஒருவரைத் தாங்கள் கண்டுகொண்டதாக உணர்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். அவரை அரசராகப் புகழ்ந்து பாடியவர்கள் அவருக்குச் சிலுவைத் தீர்ப்பு அளிக்கிறார்கள். 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்னும் சொற்கள் விரைவில் 'இவனைச் சிலுவையில் அறையும்' என மாறுகின்றன.

(இ) மாட்சியிலிருந்து அவமானத்துக்கு

குருத்தோலை, கழுதைமேல் பவனி, வழியில் துணிகள் என மாட்சி பெற்ற இயேசு, அவருடைய சிலுவைப் பயணத்தில் மிகுந்;த அவமானம் அடைகிறார். குருத்தோலையின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை அவருடைய தோளைப் பற்றிக்கொள்கிறது. கழுதைமேல் பவனி வந்தவர் தெருக்களில் இழுத்துச் செல்லப்படுகிறார். பவனியின்போது மற்றவர்கள் தங்கள் மேலாடைகளை விரித்தனர். சிலுவைப் பயணத்தில் இயேசுவின் மேலாடை பறித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்காணும் மூன்று முரண்களை, அல்லது மூன்று நகர்வுகளை இயேசு எப்படி எதிர்கொண்டார்?

  1. இரு நிகழ்வுகளையும் இயேசு அவை இருப்பது போல அப்படியே ஏற்றுக்கொள்கிறார். எந்தவித எதிர்பார்ப்போ, மறுப்போ அவரிடம் இல்லை.
  2. இரு நிகழ்வுகளுமே தம் கட்டுக்குள் இருப்பவை அல்ல எனத் தெரிந்தாலும், தன் கட்டுக்கோப்பை இழக்காதவராக இருக்கிறார் இயேசு.
  3. இவ்விரு பயணங்களையும் தாண்டிய மூன்றாவது பயணம் - இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு - இயேசுவுக்கு எப்போதும் நினைவில் இருந்ததால் இவை இரண்டுமே அவற்றுக்கான பயணங்கள் என எடுத்துக்கொண்டார்.

நம் வாழ்வின் முரண்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser