மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
I. திருத்தூதர் பணிகள் 13:14, 43-52 | II. திருவெளிப்பாடு 7:9, 14-17 | III. யோவான் 10:27-30

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னை நல்ல ஆயனாகவும், மாபெரும் தலைவனாகவும் சுட்டிக் காட்டுகிறார். ஆயன், ஆடு உருவகத்தின் மூலம் தனக்கும் தனது சீடர்களுக்குமிடையே உள்ள ஆழமான உறவை வெளிப் படுத்துகிறார். ஆயன், காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதைக் குறிப்பிட்டு (லூக். 15:1-7). அதே நேரத்தில் நல்ல ஆயன் நானே என்று தன்னையே ஆயனாக இயேசு வெளிப்படுத்துகிறார் (யோவா. 10:11). ஆயன் மந்தையை அறிவான், ஆடுகளும் ஆயனைப் புரிந்துகொள்கிறது. ஆயனின் குரலைக் கேட்டு அவன் பின்னால் செல்கிறது. ஆயனும் அளவில்லாத அன்பு கொண்டு தனது உயிரைக் கொடுக்கவும் தயங்குவதில்லை . இயேசு, இறைவனின் செம்மறியாகவும், நல்ல ஆயனாகவும் இந்த உலகிற்கு வந்தார். செம்மறி போல் நம் மீட்புக்காகத் தம்மையே கையளித்தார்.

விவிலியக் கண்ணோட்டத்தில் அறிதல் என்ற சொல் புத்தியிலிருந்து பிறக்கும் வெறும் அறிவை மட்டும் குறிக்காது. ஒருவர் மற்றவரோடு கொண்டுள்ள ஆள் சார்ந்த உறவின் அனுபவத்தை அதாவது அன்புறவையும், அன்பின் பரிமாற்றத்தையும் குறிக்கிறது. ஆயன் மந்தையின் தலைவன், உரிமையாளன். எனவேதான் மந்தையை நேசிக்கிறான். இது ஆயன் ஆடுகள் மீதுள்ள அன்பையும், உரிமையையும் காட்டுகிறது. இயேசுவை மேய்ப்பனாகவும், ஆடுகளை மக்களாகவும் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறப்புமிக்க உவமைதான். உணவுக்காகவும், தண்ணீருக்காகவும், பாதுகாப்புக்காகவும், ஆடுகள் மேய்ப்பர்களைச் சார்ந்து இருக்கின்றன. எல்லை மீறிச் செல்லும் ஆடுகளை, வழி தவறும் ஆடுகளை குரல் கொடுத்து அழைக்கும்போது அது மீண்டும் மந்தையோடு இணைந்துவிடுகிறது. அவைகள் மீண்டும் மீறிச் செல்வதில்லை . ஆனால், ஆடுகளாகக் கருதப்படும் மனிதர்களைப் பற்றி இன்றைய சூழலில் இவ்வாறு கூறமுடியுமா? இன்றைய முதல் வாசகத்தில் வழி தவறி, வாழ்விழந்து, தடம் புரண்டு, தடுமாறி நின்ற பிறவின் மக்களுக்கு புனித பவுல் ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்றார். அவ்வார்த் தைகளைக் கேட்ட அவர்கள் எங்கள் வாழ்வுக்கு வழியாக, ஒளியாக ஆண்டவரின் வார்த்தைகள் உள்ளன என்று இயேசுவின் மீது நிறைவான விசுவாசம் கொள்கின்றனர். என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு (தி.பா. 23:1). தாங்கள் அறிந்துகொண்ட நல்ல ஆயனாம் கிறிஸ்துவை மற்றவர்களுக்கும், தங்களின் சொல்லாலும், செயலாலும் அறிவித்து அன்பு வாழ்வு வாழ்ந்தனர்.

இன்றைய சூழலில் நாம் குடும்பத்தில் நல்ல தலைவராக, சமுதாயத்தில் நல்ல வழிகாட்டியாக, தடுமாறுகிறவனுக்குப் புதிய பாதையாக, வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாக, இருட்டில் தடுமாறும் மனிதனுக்கு ஒளியாக, ஒட்டுமொத்த மனித வாழ்வில் சாரமுள்ள உப்பாக நம்மை அமைத்துக் கொண்டோமென்றால், நல்லாயனின் பாதையில் தடம் மாறாது பயணம் செய்கிறோம் என்பதே பொருள். எனவே இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து அவரது அழைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். அவரின் வாழ்வையும், வாழ்க்கை முறைகளையும் நமதாக்கிக் கொள்வோம். அவரின் வழிகளை மேற்கொள்ளும்போது தடைகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை, கலங்க வேண்டியதில்லை. காரணம் என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறை.

ஒல்லியான சிறுவன், தன்னைவிட குண்டான , ஒரு சிறுமியைத் தனது முதுகில் சுமந்துகொண்டு சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்த முதியவர் இந்தச் சிறுமி கனமாக இல்லையா? என்றார். அதற்குச் சிறுவன், 'நான் சுமந்து செல்வது ஒரு கால் ஊனமான எனது அன்புத் தங்கையல்லவா என்றான். அவன் தங்கை கனமாக இருந்தாலும் அவள் மீதுள்ள அளவுகடந்த அன்பால், அந்தச் சுமை சுகமாக இருந்தது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின் மீது முழு நம்பிக்கையையும் வைப்போம்

இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு, என் குரலுக்குச் செவிமடுத்தால், நீங்கள் என் ஆடுகள் என்கின்றார். நாம் இயேசுவினுடைய ஆடுகளாக, உண்மைச் சீடர்களாக வாழ விரும்பினால் நாம் அவருடைய குரலுக்கு, என் மீது நம்பிக்கை வையுங்கள் என்ற குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்.

இயேசுவின் அன்புக்கு அடிபணிந்து அவர் மீது நம்பிக்கை வைத்தால் அவர் நமக்கு என்றுமே அழியா வாழ்வைத் தருவார்!

அழியா வாழ்வு - அது எப்படியிருக்கும்? என்பதற்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் அருமையான விளக்கம் ஒன்றைத் தருகின்றார். நிலை வாழ்வு! அங்கே பசி இருக்காது, தாகம் இருக்காது, எவ்வகை வெப்பமும் அங்கேயிருப்பவர்களைத் தாக்காது. தேவ ஆட்டுக்குட்டி அனைவரையும் வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். அனைவரின் கண்ணீர் அனைத்தையும் கடவுள் துடைத்துவிடுவார் (திவெ 7:16-17).

நிலையற்ற வாழ்வின் மீது, மரணத்தின் மீது தனக்கு ஆற்றல் உண்டு என்பதை இயேசு மூன்று பேரை உயிர்த்தெழ வைத்து உலகுக்கு நிரூபித்துக்காட்டினார்.

மூன்று உயிர்ப்புகளும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர் நடுவில் நடந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மத் 9:23-26 : சிறுமி ஒருத்தி இறந்துவிட்டாள்! அந்த வீட்டிற்குள் இயேசு நுழைந்தார். சிறுமி இறக்கவில்லை, உறங்குகின்றாள் என்றார் இயேசு. அதைக்கேட்டு சிரித்தவர் உண்டு ! ஆனால் அங்கேயிருந்த ஐந்து பேருக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் இயேசுவை நம்பினர். அங்கே சிறுமி உயிர்த்தாள். ஆம். நம்பிக்கை இருக்கும் இடத்தில் உயிர்ப்பு இருக்கும், வாழ்வு இருக்கும்.

லூக் 7:11-17: நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் இறந்துவிடுகின்றான். அவனைப் பாடையிலே தூக்கிச் சென்றார்கள். தாயைப் பார்த்து, அழாதீர், என்று சொல்லிவிட்டு, பாடையின் அருகில் சென்று பாடையை இயேசு தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நான்கு பேரும் ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை! அவர்களுக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை! அங்கே புதுமை நடக்கின்றது! இறந்த இளைஞன் எழுந்து பேசினான். எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு நிகழும்.

யோவா 11:1-44 : இயேசுவைச் சுற்றி ஒரே கூட்டம். அந்தக் கூட்டத்திலே இயேசுவை நூற்றுக்கு நூறு நம்பிய பெண்ணொருத்தி இருந்தார். அந்தப் பெண்ணின் பெயர் மார்த்தா. மார்த்தா இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்கின்றார். அவருக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை. அங்கே புதுமை நடக்கின்றது! இலாசர் உயிர்த்தார்! எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு நிகழும்.

இப்படி மூன்று புதுமைகளைச் செய்து, இறுதியாக தானே உயிர்த்தெழுந்து மறுவாழ்வு அளிக்கும் ஆற்றல் தனக்கு உண்டு என்ற உண்மையை இயேசு உலகுக்குப் பிரகடனப்படுத்தினார்.

இயேசுவின் அழகான குரல் இது: உயிர்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25, 26).

நிலைவாழ்வுக்கு நம்மையே நாம் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்வோம் ; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்து அவர் மீது முழு நம்பிக்கை வைப்போம் (முதல் வாசகம்).

மேலும் அறிவோம்: கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் : 9).
பொருள் : இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது. அதுபோன்று எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயன் அற்றவை ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவர் என் ஆயர்.. அது போதும்...

உரோமைப் பேரரசன் வெஸ்பாசியன் பேரவையில் ஒரு சர்ச்சை : 'கடவுளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?" அனைத்தையும் கடவுள் தனது கட்டுக்குள் வைத்திருப்பதால், அவரை எல்லாம் வல்லவர்' என்று அழைக்கலாம் என்றார் ஒருவர். தூய்மையே வடிவானவர் என்பதால் தூயவர்' என்று சொன்னால் என்ன என்றார் இன்னொருவர். இப்படிப் பல யோசனைகளும் மன்னனுக்குத் திருப்தி தரவில்லை. “அன்பின் உறைவிடம் இரக்கத்தின் இருப்பிடம் என்றால் பொருத்தமாக இருக்குமே என்று மூத்த உறுப்பினர் சொன்னதும், “ஏற்ற பெயர் இதுவே" என்றனர் அனைவரும். கடவுள் அன்பின் உறைவிடம் இரக்கத்தின் இருப்பிடம் என்ற உண்மைக்கு இயேசு தந்த விளக்கம், வெளிப்பாடுதான் "நானே நல்லாயன்" என்பது.

இயேசுவின் வாழ்வும் சாவும் அவர் தன் ஆடுகளுக்காக உயிரையும் இழக்கத் துணியும் நல்லாயன் என்பதற்குக் கட்டியம் கூறவில்லையா?

நல்லாயன் மடியில் ஓர் ஆடு. சுற்றிலும் பல ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு படத்தைப் பார்த்ததும், இயேசுவின் மடியில் இருக்கும் ஆடு எவ்வளவு கொடுத்து வைத்தது என்று நினைக்கத் தோன்றுகிறதா? அது சிறந்த ஆடு என்பதால் அன்று, அது நோயுற்றது, பலவீனமானது, துன்புறுவது என்ற காரணத்தால் இயேசு தன் மடியில் தூக்கி வைத்திருக்கிறார். நீ முக்கியமானவன் என்பதால் கடவுள் உன்னை அன்பு செய்வதில்லை. கடவுள் அன்பு செய்வதால் நீ முக்கியமானவன். இப்போது புரிகிறதா நூறு ஆடுகளில் ஒன்று காணாமற் போனால் அதனைக் கண்டு மகிழும் ஆயனின் மனநிலை? (லூக்.15;4-6)

ஒரு பங்கின் ஞாயிறு செய்தி மடலில் ஆன்மீகப் பகுதி ஆசிரியர் மறையுரைக்குத் தலைப்பிட மறந்து விட்டார். நினைவு படுத்தியதும் "ஆண்டவர் என் ஆயன்" என்று தலைப்பிடச் சொன்னார். “அவ்வளவு தானா?'' என்று கேட்க, “அதுபோதும்' என்றிருக்கிறார். மறுநாள் மடலிலோ "ஆண்டவர் என் ஆயன் - அதுபோதும் என்றிருந்ததாம். தற்செயலாக அமைந்த தலைப்பு என்றாலும் “ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை ” (தி.பா.23:1) என்ற திருப்பாடலின் வெளிப்பாடன்றோ!

இயேசு வெறும் ஆயனல்ல, நல்லாயன். இந்த நன்மைத்தனம் வெளிப்படும் மூன்று வடிவங்கள்:

1. அறிந்து அன்பு செய்யும் நெருக்கம் (intimacy)

தானும் தந்தையும் ஒருவர் ஒருவரை அறிந்திருப்பது போல் என்கிறார் இயேசு (யோவான் 10:14). விவிலியத்தில் அறிதல் என்பது உறவு கொள்ளுதல், அன்பு செய்தல், சொந்தமாகுதல் என்றல்லவா பொருள்படும்! ஆயன் கையில் உள்ள ''கோலும் நெடுங்கழியும்" (தி.பா. 23:4) கூட நட்பின் சின்னம்தான்.

2. தன்னையே கையளிக்கும் தியாகம் (Self giving).

"எனது ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்” (யோவான் 10:15) தன்னையே பலியாக்குபவர், தன்னையே நமக்காக உணவாக்குபவர் அன்றோ இயேசு! ''சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது” (தி.பா.34:10)

3. ஒன்றிப்புக்கான அணையாத் தாகம் (desire for unity)

"இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன” (யோவான் 10:16) ஒரே மந்தையும் ஒரே ஆயனும் என்னும் நிலை வேண்டும். இயேசுவையே கூறுபோடுவது போல் எத்தனை பிளவுபட்ட பிரிவினைச் சபைகள்!

நல்லாயனின் முக்கியமான பண்பும் பணியும் வாழ்வு தருவதாகும். நிறைவாழ்வு மட்டுமல்ல நிலைவாழ்வு தருவதாக வாக்களிக்கிறார் இயேசு. "நான் அவற்றிற்கு நிலை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா” (யோவான் 10:28)

''கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது” (1 யோவான் 5:11) "உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசுக் கிறிஸ்துவையும் அறிவதே நிலை வாழ்வு” (யோவான் 17:3)

இந்த அறிந்து கொள்ளுதலில் நான்கு நிலைகள் அல்லது படிகள் உள்ளன.

1. நிலைவாழ்வு பெற முதல் தேவை -

இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை.

2. நிலைவாழ்வு பெற இரண்டாவது தேவை - இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பது, ஏற்பது.

"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன” (யோவான் 6:68). "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்" (தி.பா. 13:46) என்ற திருத்தூதர் பவுலின் கண்டனம் சிந்திக்கத் தகுந்தது.

3. நிலைவாழ்வு பெற மூன்றாவது தேவை - இயேசுவைப் பின்செல்வது.

"நிலைவாழ்வு பெற செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்கு இயேசு சொன்ன பதில்: "நிறைவுள்ளவராக விரும்பினால், நீ போய் உன் உடைமைகளை விற்று ஏழைகளக்குக் கொடும்... பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" (மத். 19:16, 21)

4. நிலைவாழ்வு பெற நான்காவது தேவை - இயேசுவோடு இணைவது.

"எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” (யோவான் 6:54). கடவுள் நல்லாயனாகிப் புறத்தே உள்ள புல்வெளிக்கும் நீர் நிலைக்கும் அழைத்துச் சென்று பசிதாகம் போக்குவது மட்டுமல்ல, தன்னையே உணவாக, பானமாகத் தருகிறார் என்றால் தன்னோடு நம்மை ஐக்கியமாக்கிக் கொள்ள விரும்புகிறார் என்றுதானே பொருள்!

மேற்கூறிய இந்த நான்கு அம்சங்களையும் உள்ளடக்கி இயேசு கூறிய உவமைதான் "நானே நல்லாயன்" என்பது. இந்த நிலைவாழ்வு கிட்டுவது உலக முடிவிலோ, தனிநபர் இறப்பிலோ அல்ல. இப்போதே, இங்கேயே தொடங்குகிறது. திருவெளிப்பாடு 7:9ல் திருத்தூதர் யோவான் கண்ட காட்சியாக உணர்த்தப்படுவது செம்மறியாகிய இயேசுவைச் சுற்றியுள்ள சீடர்கள் அனைவருக்குமே உரியது.

குப்பை மேட்டில் தாய்க் கோழியின் குரலை இனம் பிரித்து நல்லதை உண்டு நஞ்சானதை விலக்கும் குஞ்சுகள் போன்று ஆயன் இறைவனின் குரல் கேட்டு மனிதன் செயல்படத் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இறைவனின் ஏக்கப் பெருமூச்சு இது!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒருவர் ஒரு காரைப் பயங்கர வேகத்தில் ஓட்டினார். காவலர் ஒருவர் அக்காரை நிறுத்தி அவரிடம், "என்ன ஐயா! கார் பந்தயத்திலா ஒட்டுகிறீர்? உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தால் என்ன செய்வீர்?" என்று கேட்டார். அவர், “உடனே மரியாதையாய் கார் ஒட்ட உரிமம் வாங்குவேன்" என்று சொல்ல, காவலர், "உரிமம் இன்றியா இவ்வளவு வேகமாய் கார் ஓட்டுகிறீர்?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார். காரிலிருந்த ஒட்டுனரின் மனைவி, “என் கணவர் குடிபோதையில் ஓட்டுகிறார். அவர் உளறுவதைப் பொருட்படுத்த வேண்டாம்" என்றார். காவலர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். காரிலிருந்த ஓட்டுனரின் அப்பா, "போலீஸ் ஐயா, திருடின காரிலே வெகுதூரம் போக முடியாது என்று நான் அப்பவே சொன்னதை இவன் கேட்கலை" என்றார், காவலர் மயக்கமடைந்தார்!

காரைத் திருடியது, உரிமம் இல்லாதது. குடிபோதையில் கார் ஓட்டியது ஆகிய மூன்று குற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறே இன்று மனிதர்கள் பல்வேறு குற்றங்களை அடுக்கடுக்காகப் புரிகின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், மக்களை வழிநடத்த நல்ல ஆட்சியாளர்கள் இல்லாதது ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை நாம் மறுக்கமுடியாது.

இச்சூழலில் நாம் இன்று "நல்லாயன் ஞாயிற்றுக் கிழமையைக் கொண்டாடுகின்றோம். இன்றைய அருள்வாக்கு வழிபாடு நல்லாயனைப் பற்றிப் பேசுகிறது.

பழைய ஏற்பாட்டில் கடவுளே இஸ்ரயேல் மக்களின் ஆயராகத் திகழ்ந்தார், "அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள். அவர் மேய்க்கும் ஆடுகள்” என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 100:3). இத்திருப்பா, கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ள உறவை ஆயனுக்கும் ஆடுகளுக்கும் இடையே உள்ள உறவுக்கு ஒப்பிடுகிறது.

காலப்போக்கில் கடவுள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த ஏற்படுத்திய ஆயர்கள் (அரசர்கள், நீதிபதிகள்) ஆடுகளை மேய்க்காமல் ஆடுகளைக் கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் கடவுள் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக, "என் இதயத்திற்கேற்ற ஆயர்களை உங்களுக்குக் கொடுப்பேன்" என வாக்களித்தார் (எரே 3:15).

கடவுளால் வாக்களிக்கப்பட்ட நல்ல ஆயர் தாம் இயேசு கிறிஸ்து (யோவா 10:11, 14). அவர் மக்கள்மீது பரிவு கொண்டார், ஏனெனில் அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டனர்(மத் 9:36). அவர் வழிதவறிச் சென்ற ஆடுகளைத் தேடிச் செல்கிறார், (மத் 18:12-14 ): ஆடுகள் ஒவ்வொன்றையும் அறிகிறார்; பெயர் சொல்லி அழைக்கின்றார் (யோவா 13:3). பசும்புல் தரைக்கும் தெளிந்த நீரோடைக்கும் அவற்றை அவர் நடத்திச் செல்கிறார் (திபா 23:2). இறுதியாக. தம் ஆடுகளுக்காகத் தம் இன்னுயிரையே கையளிக்கிறார் (யோவா 10:15).

கிறிஸ்து நமது நல்லாயன்; நாம் அவர் மந்தையின் ஆடுகள் என்பது உண்மையென்றால், நல்ல ஆடுகளின் பண்பு ஆயருடைய குரலுக்குச் செவிமடுப்பதாகும், "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கும்" (யோவா 10:27). நாம் கிறிஸ்துவின் குரலுக்குச் செவிசாய்க்கின்றோமா?

ஒரு தாய்க்கோழி தனது கால்களால் தரையைக் கிளறி விட்டுத் தனது குஞ்சுகளுக்கு இரைகாட்டிக் கொண்டிருந்தது. அக்கோழியிடம் கடவுள், "உனது குஞ்சுகள் எவ்வாறு நல்ல உணவை மட்டும் எடுத்துக் கொண்டு, தீய உணவைத் தள்ளிவிடுகின்றன?" என்று கேட்டார். அதற்குத் தாய்க்கோழி கடவுளிடம், "நல்ல உணவுக்கு ஒருவிதமாகவும், தீய உணவுக்கு ஒருவிதமாகவும் எனது குரலை மாற்றிக் கொடுப்பேன். என் குரலைக் கேட்டு என் குஞ்சுகள் எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்; எந்த உணவைத் தள்ளிவிட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கின்றன" என்றது. அதைக் கேட்டுக் கடவுள் அத்தாய்க்கோழியிடம், "உனது குஞ்சுகளுக்கு இருக்கின்ற அறிவு என் மக்களுக்கு இருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும்” என்றார்.

கடவுள் குரலுக்கு நாம் செவிகொடுத்து நல்லவை நாடி, அல்லவை அகற்ற வேண்டும். கடவுள் பல்வேறு வகையில் முற்காலத்தில் பேசினார். இந்த இறுதிக் காலத்தில் தம் மகன் கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபி 1:1); கிறிஸ்துவுக்குச் செவிசாய்க்கும்படி நமக்குப் பணித்துள்ளார் (மத் 17:5), கிறிஸ்துவோ தமது பிரதிநிதிகளான திரு மேய்ப்பர்களுக்குச் செவிகொடுக்கும்படி பணித்துள் ளார். "உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்" (லூக் 10:16),

ஆனால் இன்று நாம் டி.வி. மாயையில் சிக்கிக் கடவுளுடைய குரலுக்குச் செவி கொடுக்கத் தவறுகிறோம், டி.வி. நமது வீட்டில் இறையாண்மை செலுத்தி நமது விசுவாசத்தைப் பறித்துக் கொண்டு வருகிறது, 'ஆண்டவரே என் ஆயர் என்ற 23வது திருப்பாவை இப்போது பின்வருமாறு மாற்றி எழுத வேண்டியுள்ளது.

"டி.வி. எனது ஆயர்; ஆகவே எனக்கொரு குறையுமிராது. அது என்னைப் பஞ்சு மெத்தையில் படுக்கச் செய்கிறது; விசுவாச வாழ்விலிருந்து விலகச் செய்கிறது; என் ஆன்மாவைக் கொலை செய்கிறது: பாலின்பத்திற்கும் வன்முறைக்கும் அது என்னை அழைத்துச்செல்கிறது: என் மனச்சாட்சியை மழுங்கடிக்கிறது. நான் தனிமையைக் கண்டு பயப்படவே மாட்டேன். ஏனெனில் என் டி.வி. என்னுடன் இருக்கிறது. 'கேபிள்' டி.வி.யும், 'ரிமோட் கண்ட்ரோலும்' எனக்கு ஆறுதல் அளிக்கின்றன. உலக மனப்பான்மையாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் டி.வி, என்னைத் திருநிலைப்படுத்துகிறது. எனது பேராசைப் பொங்கி வழிகிறது. சோம்பலும் அறியாமையும் வாழ்நாள் முழுவதும் என்னைப் பின்தொடரும். நான் நாள்தோறும் டி.வி. யைப் பார்த்த வண்ணம் என் இல்லத்தில் குடியிருப்பேன்”,

இந்நவீன திருப்பாவை படிக்கும்போது நமக்குச் சிரிப்பு வரலாம்: சிரிப்பதற்காக அல்ல, சிந்திப்பதற்காகவே திருப்பா மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்!

இன்றைய ஞாயிறு இறை அழைத்தல் ஞாயிறு. 13ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 3ஆம் இன்னசென்ட் ஒரு பயங்கரக் கனவு கண்டார். அக்கனவில் உரோமை தூய பேதுரு பேராலயம் கீழே சாய்ந்து, விழும் ஆபத்தில் இருந்தது. ஆனால் ஓர் இளைஞர் அப்பேராலயத்தைக் கீழே விழாமல் தமது கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர்தான் புனித பிரான்சிஸ் அசிசியார், "இன்றைய உலகைப் பாதுகாக்கப் புனித அசிசியார் போன்று 10 இளைஞர்கள் தேவை" என்று லெனின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்கள் உலகையும் திருச்சபையையும் பாதுகாக்க வேண்டும். "என்னைப் பின் செல்" என்று கிறிஸ்து அவர்களை அழைக்கின்றார். கிறிஸ்துவின் குரலைக் கேட்டு இளைஞர்கள் தங்களைக் கிறிஸ்துவின் திருப்பணிக்காக முற்றிலுமாக அர்ப்பணிக்க முன்வருவார்களாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பணியாற்றும் நல்லாயன்

மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள் நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டு வந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது." என்று சொன்னார்கள். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார் அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர்.

தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில்... முக்கியமாக, அவர்களின் துன்பங்களில் தன்னையே இணைத்துக் கொள்பவரே உண்மைத் தலைவர். எப்பெழுதும் நல்ல தலைவர்களைத்தான் நாம் தேர்ந்தேடுத்திருக்கிறோமா என்ற கேள்வி மனதில் எழுந்துள்ளது. ஆடுகளை அரவணைத்துக் காக்கும் ஆயனைப் போன்ற உண்மையான தலைவர்களைப் பற்றி சிந்திக்க நமக்குத் தாய் திருச்சபை இன்று ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.

மே 11, இஞ்ஞாயிறு - உயிர்ப்புக்காலத்தின் 4ம் ஞாயிறு. இஞ்ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்றும், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலகநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இதே ஞாயிறு, மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு என்பதால், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. அத்துடன், மே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியாவின் திருநாளையும் நாம் சிறப்பிக்கிறோம். நல்லாயன் ஞாயிறு, அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் என்ற மூன்று கருத்துக்களையும் இணைத்து, இன்றைய ஞாயிறு சிந்தனைகளை மேற்கொள்வோம். அதுமட்டுமல்ல. மே மாதம் 15ம் தேதி அகில உலகெங்கும் குடும்பங்களின் நாள் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தில் நல்ல முறையில் உருவாகும் குழந்தைகள் இறையழைத்தலை ஏற்று, தலைவர்களாக, மக்களை வழிநடத்தும் ஆயர்களாக உருவாக முடியும். இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்க இறைவன் நமக்குத் தந்திருக்கும் இந்த நாளுக்கு முதலில் அவருக்கு நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ள பகுதி யோவான் நற்செய்தியின் 10ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தியின் 9ம் அதிகாரத்தில் பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் எழும் ஒரு காரசாரமான விவாதத்தில் இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர் பரிசேயர்கள். அவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனாகச் சித்தரிக்கிறார். அது மட்டுமல்ல, ஆடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் திருடர், கொள்ளையர், கூலிக்கு மேய்ப்பவர் இவர்களுடன் தன்னை ஒப்புமைப்படுத்தியும் பேசுகிறார் இயேசு. உண்மையான ஆயனின் குணங்களை இயேசு விவரிக்கும் ஒரு சில வரிகளை இப்போது கேட்போம்:

யோவான் 10: 3-4
அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.

நூற்றுக்கணக்காய் ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் பாசமாய் பெயரிட்டு அழைப்பதும், தன்னைப் பின் தொடரும் ஆடுகளுக்கு முன்சென்று வழிகாட்டுவதும் ஆயனின் முக்கிய குணங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் மிக நெருக்கமான, உயர்ந்த அடையாளம் அவரது பெயர்... ஒருவரைப் பெயரிட்டு அழைக்கும்போது உருவாகும் உறவு, பிணைப்பு உணர்ந்துபார்க்க வேண்டிய ஓர் உண்மை. ஒவ்வொருவரையும் பெயரிட்டு அழைப்பதில் கிடைக்கும் உறவும், நிறைவும் எண்ணிக்கையில் கிடைக்காது.

ஆனால், நாம் வாழும் காலத்தில் எண்ணிக்கைக்குத் தரப்பட்டுள்ள மதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நமது வாழ்வைப் பல அடையாள அட்டைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து நமது முக்கியமான அடையாளங்கள் எண்ணிக்கையில் சிக்கிக் கொள்வதை நாம் அனைவரும் உணர்ந்து வருகிறோம். முதல் தர நாடுகள் என்று முன்னேற்றம் கண்டிருக்கும் நாடுகளில் ஒருவரது வாழ்வே அட்டைகளிலும், அவற்றில் உள்ள எண்களிலும் புதைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த அட்டைகள் தொலைந்து விட்டால், அவரது எண்களை அவர் மறந்து விட்டால், ஒருவர் தன் சுய அடையாளத்தையே இழக்கும் ஆபத்து உண்டு. நம் குழந்தைகள், நண்பர்கள் இவர்களது பெயர்கள் மறக்கப்பட்டு அவர்களது தொலைப்பேசியின் எண், அவரது கிரெடிட் கார்ட் எண் என்று எண்களே நமது நினைவையும் மனதையும் நிறைக்கப்போகும் காலம் மிக நெருங்கி வருகிறதோ என்ற பயம் எனக்கு. பெயர் சொல்லி அழைத்து உறவுகளை வளர்க்கும் வழிகளை, ஆழப்படுத்தும் வழிகளை நாம் கண்டு கொள்ள, நல்லாயன் நமக்கு உதவிகள் செய்ய வேண்டும்.

தலைவனைத் தொடரும் தொண்டர்கள் ஆயிரமாய்ப் பெருகினாலும், அவர்களை எண்ணிக்கையாகக் கருதாமல், ஒவ்வொருவரையும் தனி மனிதர்களாய் எண்ணி, அவர்களது பெயர் சொல்லி அழைக்கும் தலைவனே, உண்மைத் தலைவன். நெப்போலியன் தன் வீரர்கள் அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்து, அவர்களைப் பெயர் சொல்லியே அழைத்ததாக வரலாறு சொல்கிறது. இப்படி ஆயிரமாயிரம் பெயர்களை நினைவில் பதிப்பதற்கு அசாத்திய அறிவுத் திறமை இருந்தால் மட்டும் போதாது. தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மதித்து, அவர்கள் மீது ஈடுபாடு கொள்ளும் மனமும் இருந்தால்தான் பெயர்கள் மனதில் பதியும். பெயர் சொல்லி பாசமாய் அழைத்தல், முன்னே சென்று ஆடுகளை வழி நடத்துதல் ஆகிய நற்பண்புகளுடன் ஆயனின் மற்றொரு முக்கியமான குணத்தையும் யோவான் நற்செய்தி 10ம் பிரிவில் இயேசு குறிப்பிடுகிறார். இந்தப் பகுதி நமக்கு இன்றையத் திருப்பலியில் தரப்படவில்லை எனினும், நல்லாயனையும், இறை அழைத்தலையும் சிந்திக்கும்போது, இந்த முக்கியமான குணத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

யோவான் 10: 14-15
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
நல்லாயனின் ஒரு முக்கியமான குணம்... ஆடுகளுக்காகத் தன் உயிரையேத் தருவது. எந்த ஒரு சூழலிலும் தன்னைப் பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப் போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக் குறித்து ஒருவர் கவலை கொள்வதும், தன்னைக் காத்துக் கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும் தன்னைப்பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

நல்லாயன், இறையழைத்தல் என்ற இரு எண்ணங்களையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள ஒரு கதை இது.. வெறும் கதை அல்ல, உண்மைச் சம்பவம். கொரியாவில் நடந்து வந்த போரின் உச்சகட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடி வந்த ஒரு வீரன், தான் இறப்பதற்கு முன், ஒரு குருவைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டான். அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் குருவுக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரன், "நான் ஒரு குரு" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த குருவிடம் எச்சரித்தார். அதற்கு அந்த குரு, "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்." என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார் அந்த குரு. சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில் அவனுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், குருவும் அமைதியாக இறந்தனர்.

மேமாதம் 15ம் தேதி குடும்பங்களின் அனைத்துலக நாள். நமது குடும்பங்கள் இறையழைத்தலை வளர்க்கும் நாற்றங்காலாய், தோட்டமாய், பள்ளிக்கூடமாய் இருக்க இறையருளை வேண்டுவோம். பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்து விட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவைப் போல் இறை அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன் வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாஸ்கா காலம் நான்காவது ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (தி.ப. 13:14, 43-52)

பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா நகரில் நடந்தவற்றைத் தெளிவாக நம் கண் முன் நிறுத்துகின்றது இன்றைய முதல் வாசகம். பவுலும், பர்னபாவும் சிறிதும் தொய்வின்றி இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை முதலில் யூதர்களுக்கும், அவர்கள் ஏற்க மறுத்ததால் பிற இனத்தவர்க்கும் போதித்து வந்தனர். நற்செய்தியைக் கேட்ட மக்கள் இரு பிரிவினர்களாகப் பிரிந்து நின்றனர். நற்செய்தியை வரவேற்று, ஏற்றுக் கொண்டு அதனால் விசுவாசத்திலும், அன்பிலும், மகிழ்ச்சியிலும் நிலைத்து நின்ற மக்கள் கூட்டம் ஒரு புறம். அடுத்தப் பிரிவினர் யூதர்கள். இவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தது மட்டுமின்றி மனம் மாறியப் பிற இனத்துக் கிறிஸ்தவர்களை துன்புறுத்தவும் தொடங்கினர். 13:46-இல் பவுலின் கடுமையான வார்த்தைகளைக் கொண்டே நாம் யூதர்களின் இச்செயல் பர்னபாவின், பவுலின் நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தைக் குறைத்துவிட வில்லை, மாறாகப் புதிய மந்தைகளை நோக்கி அவர்களைப் பயணிக்கத் தூண்டியது. அவர்களின் எண்ணம் போலவே பிற இனத்தார் மிகுந்த ஆர்வத்தோடு நற்செய்தியை ஏற்றுக்கொண்டனர். 13:51- "காலில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு சென்றனர்". இவ்வார்த்- தைகள் இயேசு கிறிஸ்து லூக்கா 10:10-12-இல் கூறியதை நமக்கு நினைவூட்டுகின்றன. அதாவது கிறிஸ்துவின் வார்த்தைகள் அப்படியே ஏற்று கொண்டு அதற்கு விசுவாசத்தோடு பவுலும், பர்னபாவும் உழைத்தனர் என்பதற்கு அவர்களது செயல் சான்றாக அமைகின்றது.

இரண்டாம் வாசகப் பின்னணி (தி.வெ.7:9,14-17)

கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட மக்கள் விசுவாசத்தில் தளர்வுற்றபோது அக்கால நிகழ்வுகளை மிகுதியான அடையாளங்கள் மூலம் கூறியதன் பயனாக அவர்களின் விசுவாசமும், ஆண்டவரின் வருகைக்கான தயாரிப்புகளும் அதிகமாயின. மேலும் இங்கேக் குறிப்பிட்டுள்ள பகுதி எல்லா நாட்டு மக்களினங்களும் ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டு மீட்பு பெறுவர் என்று கூறுகின்றது. இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் உருவங்கள் சற்று வித்தியாசமானதாகவே தோன்றுகின்றன. நல்ல ஆயனாகவே சித்தரிக்கப்பட்டு வந்த இயேசு இங்கே ஆட்டுக் - குட்டியாகவும் மேலும் இந்த ஆட்டுக் குட்டியே மக்களினங்களை மேய்க்கும் என்பதும் புதுமையான உருவம். அதேப் போல் இயேசுவின் உருமாற்றத்தின் போது சீடர்கள் கண்ட காட்சி போன்றது அல்ல (மாற்கு 9:2-8). மாறாக அதையும் தாண்டி விண்ணுலகில் நிகழும் நிகழ்ச்சிகள் இன்னும் அழகாகவும், ஆழ்ந்த ஆன்மீகத்தோடும் காட்சி தந்திருப்பது இந்நூலின் சிறப்பு அம்சமாகும். எரே 1:11,13, ஆமோஸ் 7:8-இல் இறைவாக்கினர்களும் இது போன்ற காட்சிகளைக் கண்டனர் என்று குறிப்பிடுவதன் மூலம் இது மக்களுக்கு புதியதாக இருக்க முடியாது என்கிறார் ஓர் ஆசிரியர்.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 10:27-30)

முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நற்செய்தி வாசகமானது யோவான் எழுதிய நற்செய்தி பத்தாம் அதிகாரத்திலிருந்து 'இயேசு கிறிஸ்து நல்ல ஆயன்' என்னும் பகுதி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமைக்குருக்களும், பரிசேயரும் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் சாதாரண மக்களையும் அவ்வாறு ஏற்கக் கூடாது என்று தடுத்தனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இயேசு கூறிய வார்த்தைகளைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கக் கேட்டோம். மனுகுலத்தை மீட்க மனிதனாகப் பிறந்து எல்லா வகையிலும் துன்புற்று போராடிய இயேசு தனிப்பட்ட மனிதனின் விருப்பம் இல்லாமல் அவனை மீட்பது கிடையாது. எனவேதான் 10:26- இல் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அன்று என்னும் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். யூதத் தலைவர்களின் புறக்கணிப்பே இதற்குக் காரணம். ஆனால் அவர்- களின் சுதந்திரத்தையும் அவர் மதிக்கின்றார். அதனைத் தொடர்ந்து வரக்கூடிய வசனங்களில், 'என் ஆடுகளை எனக்குத் தெரியும்.' அதுமட்டுமல்லாமல் நாம் அவருடையப் பார்வைக்கு விலைமதிக்க முடியாத ஒரு செல்வமாகிவிடுகிறோம். மேலும் நல் ஆயனான கிறிஸ்துவின் மேய்ச்சலுக்கு இணங்கி நாம் நடக்கின்ற போது நாம் தடுமாறவோ, தடம் மாறவோ வாய்ப்பு கிடையாது.

மறையுரை

இன்றைய வாசகங்கள் தேவ அழைத்தலின் நாளாக இந்த ஞாயிறை மாற்றியுள்ளன. இதனால் இறைசமூகத்தின் தலைவர்களும் இறைமக்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதை உணர்த்த மிகவும் அழகாக, ஆழமாக ஒரு ஆயனின் குணநலன்களையும், ஆடுகளின் தன்மையையும் விளக்குகின்றார் நற்செய்தியாளர் யோவான். ஆடுகள் தங்களின் ஆயனை முழுமையாக நம்பியிருக் கின்றன, அவை தன் ஆயனை அறிந்து வைத்திருக்கின்றன. மேலும் ஆயன் அவற்றை முழுமையாக அறிந்து வைத்திருப்பான், இன்னும் குறிப்பாக ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பெயர் சொல்லியும் அழைப்பான் (யோவான் 10:2- 3). அவற்றின் தேவையை உணர்ந்து செயல்படுபவன்தான் உண்மையான ஆயனாக இருக்க முடியும். இவையெல்லாவற்றையும் விட ஒரு குறிப்பிடத்தக்க குணம் என்னவென்றால் ஆடுகள் மந்தை - களாகத்தான் மேயும், தனியாகப் பிரிய நேரிட்டாலும் மந்தையில் வந்து சேரும் வரை ஓய்வதில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இத்தகையப் பண்பு நலன்களைக் கொண்டவர்- களாக வாழத்தான் அழைக்கப்பட்டிருக்கின்றோம். கிறிஸ்துவை அறிந்து அவரிடம் முழுமையாக அர்ப்பணித்து மேலும் ஒருவர் ஒருவரோடு இணைந்து ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து வாழவே அழைக்கப்பட்டிருக்கின்றோம். மேலும் அழைக்கப்பட்ட, அழைப்பை ஏற்றுக்கொண்ட குருக்கள், துறவியருக்காகவும் செபிப்பது நமது கடமையாகும். சென்ற வாரம் இறைவார்த்தை வழிபாட்டில் தூய பேதுருவை எவ்வாறு இயேசு கிறிஸ்து தலைமை ஆயனாக நியமித்தார் என்பதைப் பற்றி தியானித்தோம். மிகுந்த பொறுமையோடு பேதுருவை ஒரு நல்ல தலைவனாக உருவாக்கியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இன்று உங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளையும் "என்னைப் பின்செல்" என்று நம் ஆண்டவர் அழைக்கலாம், இறைபணியின் மேன்மையையும், மகத்துவத்தையும் எடுத்துக்கூறி நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளை இறைபணிக்காகப் பொதுநலன் கருதி அனுப்பி வைக்க வேண்டும். இந்தக் காரணங்களுக்காகவே இன்றைய ஞாயிறு சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகின்றது. இன்றைய வார்த்தை வழிபாடும் நமக்கு இதே கருத்தைதான் உணர்த்துகிறது.

முதல் வாசகத்தில் பவுல் ஓர் சிறந்தத் தலைவனாகச் சித்தரிக்கப்படுகின்றார். இரண்டாம் வாசகம் விண்ணகக் காட்சிகளையும் அதில் கிறிஸ்துவின் மந்தைகள் எப்படி மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றது. மேலும் நற்செய்தி வாசகத்தில் ஒரு நல்ல ஆயனின் பண்பு நலன்களை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. நம் அனைவருக்கும் தலைமை ஆயன் இயேசு கிறிஸ்து மட்டுமே. இருப்பினும் கிறிஸ்துவின் பிரதிநிதிகளான குருக்களுக்- காகச் செபிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நல்ல ஆயன்கள் என்றுமே பணத்திற்கோ, செல்வத்திற்கோ அடிமையாவதில்லை (தி.ப 20:33) மேலும் கடுமையான வார்த்தைகளை 1பேதுரு 5:3- இல் வாசிக்கின்றோம். மேலும் நல்ல ஆயன் மந்தைகளின் தேவையான ஆன்மீகத் தாகத்தைத் தணிப்பவராக இருக்க வேண்டும். பிறரின் ஆன்மீகத் தாகத்தைத் தணிக்க முதலில் ஆயனானவர் இயேசு கிறிஸ்துவோடு செபத்தில் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். இறுதியாகத் தன் மந்தையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட மக்களில் ஒருவரையும் இழந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இதையேதான், "நீர் எனக்கு அளித்த அவர்களை உம் பெயரின் ஆற்றலால் காத்து வந்தேன், நான் பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை" என யோவான் எழுதிய நற்செய்தி 17:12-இல் வாசிக்கின்றோம்.

இத்தகையப் பெரும் பொறுப்பை மேற்கொண்டுள்ள குருக்களுக்காக செபிப்பதை நாம் பாக்கியமாகக் கருத வேண்டும். செபிக்க வேண்டும் என்று சொன்னவுடனே என்னத் தேவைகளுக்காக செபிக்க வேண்டும் என்ற வினாவும் நம்முள் எல்லாம்.

  • யோவான் 17:15-குருக்கள் பாவக் கரையில்லாமல் வாழ நாம் செபிக்க வேண்டும்.
  • யோவான் 17:19-நாளுக்கு நாள் அவர்கள் புனித வாழ்வில் வளரக் கடவுளுக்கும் மனிதருக்கும் உண்மையுள்ளவர்களாய் வாழ செபிப்போம்.
  • யோவான் 17:6-அவர்கள் கிறிஸ்துவுக்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பதை உணர்ந்து வாழச் செபிப்போம்.
  • யோவான் 17:3-மகிழ்ச்சி வாழ்க்கையில் பாதி பலம் என்பார்கள், மனமகிழ்வோடு இருக்கும் குரு, கிறிஸ்துவோடு இருக்கின்றார், கிறிஸ்துவும் அவரில் குடிகொண்டுள்ளார்.

ஏதோ இன்று ஒரு நாள் செபித்துவிட்டு பிறகு அவர்களுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லாதது போல வாழக் கூடாது. மாறாக நம் அன்றாட செபத்தில் அவர்களை ஒப்புக்கொடுத்து வேண்டும்பொழுது அது நமக்கும், திருச்சபைக்கும் பெரிய ஆசீர்வாதமாக அமையும். அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு என்பதை எப்போதும் மனதில் நிறுத்தி இறைபணிக்காக உங்கள் குழந்தைகளைத் தாராளமனதுடன் வழியனுப்புங்கள். மேலும் நம் ஊரில் தேவ அழைத்தல் பெருக வேண்டுமென்றும் செபிப்போம். இறைவன் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • வாழ்வில் ஏதோ ஒரு சூழலில் நாம் தலைமைத்துவத்தை ஏற்கத்தான் வேண்டும், அப்படிப்பட்டத் தருணங்களில் நாம் கிறிஸ்துவின் தலைமைத்துவப் பண்புகளைப் பிரதிபலிக்கின்றோமா?
  • "தேவ அழைத்தல்" என்றால் என்ன!
  • தேவ அழைத்தலுக்காகப் பிள்ளைகளை ஊக்குவிப்பது பெற்றோரின், ஆசிரியர்களின், நல் உள்ளம் கொண்டவர்களின் பொறுப்பு.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாஸ்கா காலம்‌ நான்காம்‌ ஞாயிறு

திப 13:14, 43-52 திவெ 7:9, 14-17 யோவா 10:27-30

பின்னணி

இன்றைய நற்செய்திப்‌ பகுதி யோவான்‌ நற்செய்தியின்‌ 10:22-32 எனும்‌ நீண்டப்பகுதியின்‌ ஒர்‌ அங்கமாகும்‌. இப்பெரும்‌ பகுதியை பின்வருமாறு பிரிக்கலாம்‌.

  • அ. நிகழ்வின்‌ சூழல்‌ வச. 22-23 - கோவில்‌ அர்ப்பண விழாவில்‌ - குளிர்‌ காலத்தில்‌ - சாலமோன்‌ மண்டபத்தில்‌
  • ஆ. இயேசுவின்‌ மெசியாத்‌ தன்மை பற்றிய யூதரின்‌ கேள்வி வச. 24.
  • இ. இயேசு தனது மெசியா நிலையின்‌ அடிப்படை மற்றும்‌ நோக்கம்‌ ஆகியவற்றை விளக்குதல்‌ வச. 25-30.
  • ஈ. தந்தையோடு தாம்‌ ஒன்றித்திருப்பதற்கு இயேசு தந்த ஆதாரங்களும்‌ (வச. 32, 34-35, 37-38), யூதர்களின்‌ எதிர்ப்பும்‌ (வச. 31, 33, 36, 39).
  • உ. இயேசு ஆலயத்திலிருந்து விலகலும்‌, மக்கள்‌ யோவான்‌ இயேசுவைப்‌ பற்றி கூறியதை நினைவு கூர்தலும்‌ வச. 40-42.

எனவே இன்றைய நற்செய்திப்‌ பகுதி மேற்கூறிய பிரிவில்‌ இரண்டாவது பகுதியில்‌ வருகின்றது. இங்கு குறிப்பிடப்படும்‌ எருசேலம்‌ கோவிலின்‌ அர்ப்பண விழா என்பது, நான்காம்‌ அந்தியோகஸ்‌ ஆட்சிக்காலத்தில்‌ கிரேக்க சமயத்தையும்‌ கலாச்சாரத்தையும்‌ யூத மக்கள்‌ மீது திணிக்க எடுத்த முயற்சியை யூதர்கள்‌ மத்ததியாஸ்‌ மற்றும்‌ அவரது மகன்‌ யூதா மத்ததியாஸ்‌ தலைமையில்‌ எதிர்த்து நின்று, எருசலேம்‌ ஆலயத்தைத்‌ தூய்மைப்படுத்தி கி.மு.164 ஆம்‌ ஆண்டு மீண்டும்‌ அர்ப்பணித்ததை நினைவுகூறும்‌ விழாவாகும்‌. இது இறைவன்‌ மக்களிடையே வாழும்‌ ஓர்‌ உன்னதமான உண்மையை விளக்கி, நினைவுகூரும்‌ விழாவாகும்‌. இயேசு இதைத்‌ தன்‌ வாழ்க்கைக்கு பொருத்திக்காட்டி தனக்கும்‌ தந்தைக்கும்‌ உள்ள உறவை விளக்க இந்தச்‌ குழலைப்‌ பயன்படுத்திக்கொள்கிறார்‌. இங்கு முக்கிய விவாதம்‌ இயேசுவின்‌ மெசியாத்‌ தன்மை அல்லது அவரது மெசியா அடையாளத்தைப்‌ பற்றியதாகும்‌. இந்தப்‌ பின்னணியில்‌ இன்றைய நற்செய்தி தரும்‌ செய்தியை அறிந்துகொள்ள முயல்வோம்‌.

1. யூதரின்‌ கேள்வியும்‌ இயேசுவின்‌ பதிலும்‌

யூதர்கள்‌ இயேசுவின்‌ மெசியாத்‌ தன்மையைப்‌ பற்றி கேள்வி எழுப்பினர்‌. அவர்‌ மெசியாவானால்‌ வெளிப்படையாகச்‌ சொல்லச்‌ சொல்கின்றனர்‌ (வச. 24). அதற்கு இயேசு, “நான்‌ உங்களிடம்‌ சொன்னேன்‌; நீங்கள்தான்‌ நம்பவில்லை” (வச. 25) என்றுகூறி தான்‌ ஏற்கெனவே “ஆடுகளுக்கு வாயில்‌ நானே”, “நல்ல ஆயன்‌ நானே” என்பதை விளக்க பயன்படுத்திய உருவகத்தை (காண்‌. யோவா 10:1-18) மீண்டும்‌ பயன்படுத்தி தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குகின்றார்‌. யோவான்‌ 10;1-18-ல்‌ ஆடுகள்‌ ஆயனுக்கு செவிகொடுக்கின்றன என்பதைக்கூறி (காண்‌. வச. 3, 4, 14, 16) அவர்கள்‌ அவரை நம்பாமல்‌ இருப்பதால்‌ “நீங்கள்‌ என்‌ மந்தையைச்‌ சேர்ந்தவர்கள்‌ அல்ல” என்கின்றார்‌ (வச. 26).

2. ஆடுகளின்‌ / மந்தையின்‌ பண்புகளும்‌ பயன்களும்‌ இதைத்‌ தொடர்ந்து இயேசுவின்‌ மந்தையைச்‌ சேர்ந்த ஆடுகளின்‌ பண்புகள்‌ யாவை என்பதையும்‌ அத்தகு பண்புகளால்‌ அவைகளுக்கு விளையும்‌ நற்பயன்களையும்‌ கூறுகின்றார்‌. இவை இயேசுவை நம்பும்‌ நம்பிக்கையாளரின்‌ பண்புகளாக யோவான்‌ நற்செய்தியில்‌ பல இடங்களில்‌ காணப்படுகின்றன. அவற்றை இங்கு பட்டியலிடுவோம்‌.

  • அ. எனது குரலுக்கு செவிசாய்க்கின்றன காண்‌. யோவா 1:41; 38, 29; 4:42 5:24, 28; 6:45; 8:38, 43; 0316).
  • ஆ. என்னைப்‌ பின்‌ தொடர்கின்றன (காண்‌. யோவா 1:37, 44; 8:12; 10:4,5).
  • இ. அவை என்றுமே அழியா (காண்‌. யோவா 3:16; 6:12, 27, 39, 10:10).
  • ஈ. அவற்றிற்கு நிலை. வாழ்வை அளிக்கிறேன்‌ (காண்‌. யோவா 3:15, 14, 36 4:14, 36; 5:24, 39; 6:27, 40, 47, 54, 68).
  • உ. அவற்றை எனது கையிலிருந்து யாரும்‌ பறித்துக்கொள்ள மாட்டார்‌ (வச. 28).

இதைப்‌ பின்வருமாறு விளக்கலாம்‌. ஒரு நம்பிக்கையாளர்‌ இயேசுவோடு இணைந்திருந்து அவரது குரலுக்குச்‌ செவிமடுத்து, அவரைப்‌ பின்பற்றி வாழ்வதால்‌ பெற்றுக்கொள்ளும்‌ வாழ்வானது இறைத்தந்தையின்‌ கொடை. கடவுளைவிட பெரிய ஆற்றல்‌ எதுவு மில்லை. எனவே யாரும்‌ இறைவனின்‌ கொடையைப்‌ பறித்துக்‌. கொள்ளமுடியாது. மேலும்‌ இயேசுவும்‌ தந்தையும்‌ ஒன்றாய்‌ இருக்கின்றனர்‌. இயேசுவை நம்பிப்‌ பின்பற்றுபவரும்‌ இவர்‌களோடு இணைக்கப்பட்டு விடுகின்றார்‌.

இயேசுவின்‌ மந்தையின்‌ ஆடுகளாய்‌ இருப்பது எத்துணை பேறு. அவரின்‌ குரல்கேட்டு அவரைப்‌ பின்செல்லும்‌ ஆடுகளாக இருந்து நிலை வாழ்வைப்‌ பெற்றுகொள்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாஸ்கா காலம் - நான்காம் ஞாயிறு

முதல் வாசகம் : திப 13 : 44-52

பவுலடியாரைப் பிறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கின்றோம். ஏனெனில் அவரது மறைப்பரப்புப் பணியால் அதிகம் பயன்பெற்றவர்கள் பிறவினத்து மக்களே. யூத மக்களிடம் அவர் போதிக்காமல் இருந்ததில்லை. மாறாக, பெரும்பாலும் யூதர்கள் இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் கல்மனம் கொண்டவர்களாக இருந்துவிட்டனர். ஏன், இயேசுவின் மீட்புப் பணியும் இதே சூழ்நிலையில்தான் வளர்ந்தது. அவரது சாதனையையும் போதனையையும் யூத உயர்குடி மக்கள் வெறுத்தனர். பாவிகள், உடல் ஊனமுற்றோர், வரிதண்டுவோர் போன்றவர் அவரை ஏற்றுக்கொண்டனர். கூட்டங்கூட்டமாக அவர் பின்னும் சென்றனர். இவர் குழந்தையாக தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டபோது, சிமியோன் கூறிய வார்த்தைகள் அவரது மீட்புப் பணிக்கும் அவருக்குப் பின்னால் வந்த பவுலடியாரின் மீட்புப் பணிக்கும் மிகப் பொருத்தமானவை. “இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்" (லூக் 2:34) இயேசுவும் பவுலடியாரும் “எதிர்க்கப்படும் அடையாளமாக” இருந்தது போலவே, திருச்சபையும் பல சூழ்நிலைகளில் "எதிர்க்கப்படும் அடையாளமாகவே” விளங்கிவருகிறது.

யூதரின் பொறாமை

இன்றைய முதல் வாசகத்தில் யூதர்களின் நடத்தையைப் பற்றி நாம் வாசிக்கிறோம். பிசிதியா நாட்டு அந்தியோக்கியாவில் இருந்த செபக்கூட்டத்தில் பவுலடியார் இரண்டாம் முறையாக ஓய்வுநாளில் போதிக்கிறார். அவரது வார்த்தையைக் கேட்க நகர் முழுவதுமே கூடியிருந்தது. ஆனால் மக்களின் ஆரவாரமும் பவுலடியாரின் பெருமையும் யூதர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. தாங்கள் வழிபாடு நடத்திய போதும், தாங்கள் போதித்த போதும் வராத கூட்டம் எங்கிருந்தோ வந்த பவுலடியாருக்கு வருகின்றதே என்ற பொறாமை, தங்கள் செல்வாக்கு மாய்ந்துவிடுமோ என்ற ஓர் அச்சம், அனைத்தும் சேர்ந்து பவுலடியார்மீது வெறுப்பாக மாறுகிறது. அதன் விளைவு அவர்கள் பவுலடியாரைத் தூற்றி, அவர் சொன்னதை மறுத்துப் பேசினர் (திப 13:45). யூதர்கள் பவுலடியாரிடம் நடந்துகொண்ட முறையும் அதே யூதர்கள் இதற்கு முன்பு இயேசுவிடம் நடந்துகொண்ட முறையும் ஒன்றுதான். மக்கள் கூட்டம் இயேசுவிடம் கொண்ட அன்புதான் யூதர்களின் பொறாமையை வளர்த்தது (யோவா 12:19).

யூதர்கள் பிரமாணிக்கமின்மை

யூதர்கள் பவுலடியாரின் போதனைக்கும் மீட்புப் பணிக்கும் ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது, பிறவினத்தாருக்குச் சாதகமாக அமைந்தது. யூதர்கள் தங்களையே தகுதியற்றவர்களாக்கிக் கொண்டு விட்டதால் பவுலடியாரின் முழுக் கவனமும் இனி பிறவினத்தார் சார்பாகவே இருக்கும். அவரே வெளிப்படையாகச் சொல்லுகிறார்: “நீங்கள் அதனை உதறித்தள்ளி நிலைவாழ்விற்குத் தகுதி அற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்" (திப 13:46). யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். பல்வேறு வழிகளில் கடவுள் அவர்களைக் கழுகுகளின் இறக்கைகளின் மேல் சுமந்து தனக்கே சொந்தமான ஓர் இனமாக ஏற்றுக்கொண்டார் (விப 19 : 4, இச 32 : 11). கடவுளின் அன்பும் இரக்கமும் முழுமையாகச் செயல் பட்டது. ஆனால் யூதர்கள் பிரமாணிக்கம் தவறியபோது அதே கடவுள்தான் நீதியைக் காட்டுகிறார். வேறு மக்களைத் தேர்ந்து கொள்கிறார்.

நாம் அழைக்கப்பட்ட மக்கள்

புதிய ஏற்பாட்டில் நாம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாம் கிறிஸ்துவின் பெயரில் திருநீராட்டுப் பெற்றவர்கள். அருட்சாதனங்களில் அவரைச் சந்திப்பவர்கள். “நீங்களே தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்; அரச குருக்களின் கூட்டத்தினர்; தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள்..." (1பேதுரு 2:9). இறைவனின் இரக்கத்தால் நாம் இந்த உரிமைகளைப் பெற்றுள்ளோம். ஆனால் உரிமைகள் உள்ள இடத்தில் கடமைகளும் உண்டு. நம் கடமைகளை மறந்து, கிறிஸ்தவ அழைப்பின் பண்புகளை நாம் இழந்துவிட்டால் யூதர்களுக்கு ஏற்பட்ட நிலை நமக்கும் ஏற்படும் என்ற அச்சம் நம்மிடையே இருக்கவேண்டும் (மாற் 6:11).

நிலை வாழ்வுக்குக் குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயினர்.

இரண்டாம் வாசகம் : திவெ 7 : 9, 14-17

யோவான் தான் கண்ட இன்னொரு காட்சியைப் பற்றிய வருணனையே இன்றைய இரண்டாம் வாசகம். வெற்றி பெற்று விண்ணக வாழ்வு அடைந்தோரைப்பற்றியதே இக்காட்சி. அது திரளான மக்கள் கூட்டமாக இருந்தது என்று யோவான் குறிப்பிடுவது, கடவுள் ஆபிரகாமுக்கு வழங்குவதாக வாக்களித்த மாபெரும் சந்ததியை நமக்கு நினைவூட்டு கின்றது (தொநூ 15:5, 32:12).

மீட்படைந்தோரின் கூட்டம்

“எல்லா நாட்டையும், குலத்தையும், இனத்தையும், மொழியையும் சார்ந்தவர்கள் இவர்கள்" (திவெ 5: 9, 11 : 9 13 : 7, 14:6, 17 : 15). யோவான் இவர்களைப் பற்றி அடிக்கடி கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அன்று உரோமையில் வேதகலாபனையில் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆறுதலும், ஊக்கமும் தர ஏற்கெனவே துன்புற்று மீட்படைந்தவர்களைப் பற்றிய செய்தி உதவியாக இருந்தது. மீட்பு அடைந்தோரின் கூட்டம் அகில உலகையும் சார்ந்தது. பிறவினத்து மக்களும் இதில் அடங்கியுள்ளனர் என்ற கருத்தும் இங்கே தரப்படுகிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இஸ்ரயேல் மக்கள் மட்டுமே என்ற நிலை மாறி, அனைத்துலக மக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற நிலை உருவாகின்றது.

வெற்றி பெற்றோரைப் பற்றி மேலும் விளக்கம் தருகிறார் யோவான். "இவர்கள் கொடிய வேதனையினின்று மீண்டவர்கள். தங்கள் தொங்கலாடைகளைக் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டார்கள்” என்று குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்துவின்பால் தாங்கள் கொண்டிருந்த அன்பை முன்னிட்டு, உரோமைக் கிறிஸ்தவர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள். செம்மறியின் இரத்தமே அவர்களுடைய ஆடைகளை வெண்மை ஆக்கியது. அதாவது, அவர்கள் பெற்ற வெற்றிக்குக் காரணம், இரத்தம் சிந்திய இயேசு கிறிஸ்துவைப் போன்று அவருக்காகத் தாங்களும் இரத்தம் சிந்தியதே

வழிபாட்டுக் குழுவினர் இவர்கள்

இயேசுவுக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்து, வெற்றி பெற்ற மீட்படைந்தோரின் புதிய வாழ்வு எத்தகையதாக இருக்கும் என்பதைப் பற்றியும் விளக்குகிறார் யோவான். அவர்கள் இறைவனை இரவும் பகலும் வழிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நீதியோடு வாழ்வது, இறைவனைப் புகழ்வது, போற்றுவது, அவரைப் பற்றிப் பாடுவது - இதுவே நாம் இறைவனுக்குச் செய்யும் சேவை. இதுவே உண்மையான வழிபாடு. மீட்படைந்தோர் ஏற்கெனவே உலகில் நீதியோடு வாழ்ந்தவர்கள். கடவுளுக்குச் சான்றாக வாழ்ந்தவர்கள். இனி விண்ணகத்தில் புகழ்வது மட்டுமே எஞ்சியுள்ளது. அதைத் திறம்படச் செய்கிறார்கள்.

இறையாசி பெற்றவர்கள் இவர்கள்

இனி, விண்ணகத்தில் மீட்படைந்தோருக்காகக் கடவுள் என்ன செய்கிறார்? அவர் அவர்களைத் தம் நிழலில் வாழச் செய்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்நாளில் ஓரிருமுறை இறைவனின் நிழலில் அல்லது நேர் கண்காணிப்பில் வாழும் உணர்வு பெற்றார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட வேளையில் இறைவனின் மாட்சிமை சீனாய் மலையைச் சூழ்ந்துகொள்ள, கூடியிருந்த மக்கள் இறைவனின் நிழலை அனுபவித்தார்கள் (விப 24:16-18). சீனாய் பாலைவனத்தை அவர்கள் கடந்து சென்ற போதும் அதே இறைநிழல் பகலில் மேகமாக வந்து மக்களை வழி நடத்தியது (விப 40 : 34-38). இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் உச்சக்கட்ட இறையனுபவங்கள் இவை. மீட்படைந்து விண்ணகம் சென்றால் இறைநிழல் நம்மை எந்நாளும் சூழ்ந்திருக்கும்.

பசியும், தாகமும் மனித நிலைக்கே உரியவை. வெயிலும் வெப்பமும் வாழ்க்கை நிலைக்கே உரியவை. இயேசு கிறிஸ்துவில் முழுமையான வாழ்வு பெறுகிறவர்கள் இப்படிப்பட்ட நிலைகளைக் கடந்து செல்வார்கள். ஏனெனில் இவ்வுலக வாழ்வு நிலையைக் கடந்து சென்றுவிட்ட இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் புதிய வாழ்வைத் தருகிறார். மனிதக் கண்ணோட்டத்தில் அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. நிறைவாழ்வே இருக்கும்.

இனி அவர்களுக்குப் பசி தாகம் இராது (திவெ 7:16).

நற்செய்தி : யோவா 10 : 27-30

'நல்ல ஆயன்' உவமையின் இறுதிப் பகுதி இன்றைய நற்செய்தி. நல்ல ஆயனாகிய இயேசுவின் குணநலன்கள் இங்கு திரட்டி, ஒன்றுபடுத்தித் தரப்படுகின்றன (2ஆம் ஆண்டு ஞாயிறு விளக்கத்தையும் காண்க).

இயேசு அன்பு செய்யும் ஆயர்

“அறிதல்" (10 : 27, 14-15} என்ற சொல்லுக்கு “அன்பு கூர்தல்” என்பது பொருள். “அன்பே அன்பே என்று அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவு அழியும், அன்பு அன்றி, தீர்த்தம், தியானம், அர்ச்சனைகள்... சாற்றும் பழம் அன்றே” (திருக்களிற்றுப்படியார்) என்பதன் மூலம் அறிவின் கொடுமுடி அன்பு என்பதை அறிகிறோம். இயேசு நம்மை அறிகிறார், அன்பு செய்கிறார் (10:27). அன்பு பதிலன்பை நாடுகிறது. “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, அன்புருகு சிந்தை அடுதிரியா நன்புருகி ஞானச் சுடர் விளக்கு" ஏற்றுவோமா? (பூதத்தாழ்வார்). “அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே... அன்பு எனும் வலைக்குள் படுபரம் பொருளே... அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே... அன்பு எனும் அணுவுள் அமைந்த பேரொளியே” (திருவருட்பா) அன்பெனும் பாடம் எனக்குப் பயிற்றிடு என்று வேண்டுவோம்.

இயேசு முடிவில்லா வாழ்வளிக்கிறார்

“நானே வழியும், உண்மையும், வாழ்வும்”(14: 6) என்பார் இயேசு. அவர் உயிர் மட்டுமன்று, உயிர் அளிப்பவரும்கூட. இன்றிருந்து நாளை மறையும் உயிரன்று, “நிலையான உயிரை” அளிப்பவர் அவர் (10: 28). அவரில் நம்பிக்கை கொள்வோருக்கு, அவரின் மதிப்பீடுகளுக்குப் பணிந்து நடப்போருக்கு, உண்மையான உயிர், அழியாத உயிர் என்றும் வாழும் உயிரை அளிப்பர் அவர் (6: 27, 39 : 40, 47-50, 54-58). நம் போலி வாழ்வை விடுத்து, உண்மை வாழ்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோமா ?

இயேசு கடவுளின் மகன், கடவுள்

நல்ல ஆயன் இயேசு அன்புக் கடவுள், வாழ்வுக் கடவுள், வாழ்வளிக்கும் கடவுள். தந்தையும் அவரும் ஒன்றே (10:30) என்பதை அவர் கொண்டுள்ள இறைக் குணங்களால் காட்டுகிறார். தந்தை அன்பு செய்பவர் (மாற் 10 : 45), இயேசுவும் பாவிகளுக்கு, எழை எளியவருக்கு, நசுக்கப்பட்டோர் ஒடுக்கப்பட்டோருக்கு, நோயாளிகளுக்கு அன்பு காட்டியவர். தந்தை முடிவில்லா வாழ்வு அளிப்பவர் (6 : 32-33, 40, 44). இயேசுவும் என்றென்றும் நிலைத்த வாழ்வை அளிப்பவர். எனவே தான் “நானும் தந்தையும் ஒன்றே' (10 : 30) என்பார். "நானாகவே எதையும் செய்வதில்லை; என் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன்" (8: 28; 9 : 54-55 முதலியன) என்பார். "நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்’ (14: 11) என்பார். தந்தை மகனோடு ஒன்றாயிருப்பது போல நாமும் ஒருவர் ஒருவரோடு, இறைவனோடு ஒன்றாகி வாழ வேண்டும். இதுவே இயேசுவின் செபம். “தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாயிருக்கும்படி மன்றாடுகிறேன்" (17: 21). இச்செபம் நமக்கு ஒரு அழைப்பு மட்டுமன்று, சவாலாயும் அமைய வேண்டும்.

தந்தையும் நானும் ஒன்றே.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு