இயேசு விண்ணகம் சென்ற பின் பேதுரு இத்தாலி நாட்டில் உள்ள உரோமை நகரிலே உயிர்த்த ஆண்டவரைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த நகரில் வேதகலாபனை எழுந்தது. கிறிஸ்தவர்கள் உரோமைப் பேரரசால் கொலை செய்யப்பட்டார்கள். இதைக் கண்டு பேதுரு என்ன செய்திருக்க வேண்டும்? கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி இருந்திருக்க வேண்டும். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் உரோமையை விட்டு ஓடினார். உரோமை நகரின் எல்லையை அடைந்துவிட்டார். அப்போது சற்றும் எதிர்பாராத காட்சி ஒன்றைக் கண்டார். இயேசு தன் சிலுவையைச் சுமந்துகொண்டு உரோமை நகருக்குள் நுழைந்து கொண்டிருந்தார். தப்பித்து ஓடிக் கொண்டிருந்த பேதுரு இயேசுவைப் பார்த்து ஆண்டவரே எங்கே செல்கிறீர் என்று கேட்டார். அதற்கு இயேசு மறுபடியும் சிலுவையில் அறையப்பட நான் உரோம் நகர் செல்கிறேன் என்றார். அப்போது இயேசு சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன. நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உன் முதிர்ந்த வயதில் வேறு ஒருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பமில்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் என்பது நினைவுக்கு வந்தது.
உடனே முழந்தாளிட்டு ஆண்டவரே என்னை மன்னித்து விடும் என்று அழுது உரோமை நகருக்குள் நுழைந்தார். தலைகீழாக அங்கு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இது வரலாறு தரும் உண்மை.
பேதுரு மட்டுமல்ல திருத்தூதர்கள் மட்டுமல்ல, அவர்கள் வழிவந்த எத்தனையோ ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் இயேசுவுக்காக உயிர் துறந்துள்ளார்கள். தந்தை புரோ சுடப்பட்டது. (பக்கம் எண் 124 காண்க.)
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குடும்பத்தின் தந்தை, தாய், மகன், மகள் ஆகிய நான்கு பேரையும் வேளாங்கன்னி ஆலயத்தில் சந்தித்துப் பேசினேன். 2 ஆண்டுகள் கடந்து மறுமுறையும் சந்தித்தேன். ஆனால் மூவர் மட்டுமே வந்திருந்தனர். பையன் இல்லை. எங்கே உங்கள் மகன் என்று கேட்டேன் தாயிடம். மனந்துடித்தாள். 10 ஆண்டுகள் கடந்து மகனை பெற்று ஆரோக்கியராஜ் என்று பெயர் வைத்தோம். ஆனால் இறைவன் அவர் அருகில் மகன் இருக்க வேண்டும் என விரும்பி எடுத்துக் கொண்டார். இன்று என் மகளையும் இந்தத் தாய் அழைத்தால் நான் தடுக்க முடியாது என்று என்னிடம் கூறினார்.
இதுதான் உண்மையான விசுவாசம். இந்த ஆழமான விசுவாசத்திற்கு அற்புதமான புதுமைகளைச் செய்யும் ஆற்றல் உண்டு. 5 அப்பங்களையும் 2 மீன்களையும் 5000 பேர் உண்ட பின் மீதியை 12 கூடைகளில் நிறைத்தனர்.
கல்லறை வெடித்து கலிலேயன் இயேசு உயிர்த்தார். சேறு செந்தாமரையை இழப்பதில்லையா? ஆனால் சேற்றுக்கு மதிப்பு. சிப்பி முத்தை இழப்பதில்லையா? இதனால் சிப்பிக்கு மதிப்பு. மண் மாணிக்கத்தை இழப்பதில்லையா? இதனால் மண்ணுக்கு மதிப்பு. அதேபோலத்தான் கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு எதுவுமே இழப்பு இல்லை.
ஆண்டவர் சொன்னார் கோதுமை மணியானது தரையிலே விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த பலன் தரும் (யோவா. 12:24). ஆம்! மகனே! மகளே! உன் உயிர் இழப்பு உனக்கு இழப்பு அல்ல. ஏனெனில் நான் வெற்றிக் கொடி நாட்டிவிட்டேன். எனக்கு முதலிடம் கொடு. நான் உனக்கு அரசில் முதலிடம் கொடுப்பேன் என்பார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
என்னை அன்பு செய்கின்றாயா?
என்னை அன்பு செய்கின்றாயா? என்று இயேசு புனித பேதுருவைப் பார்த்துக் கேட்டார். அதே கேள்வியை இயேசு இன்று நம்மைப் பார்த்து கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்.
இயேசுவை அன்பு செய்ய விரும்பும் நாம் அனைவரும் முதலில் இயேசு எங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இயேசுவே, அவர் எங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் கற்பித்துள்ளார்.
மத் 25:31-40 : 1. பசியாய் இருப்போர், 2. தாகமாயிருப்போர், 3. அன்னியர், 4. ஆடையற்றோர், 5. நோயுற்றோர், 6. சிறைப்பட்டோர். நாம் இந்த ஆறுபேரையும் அன்பு செய்யும்போதெல்லாம் இயேசுவையே அன்பு செய்கின்றோம். அன்பு என்றால் என்ன? என்பதை விளக்க இதோ நான் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சி ஒன்று. புலி ஒன்று அதன் நான்கு குட்டிகளோடு நடந்து சென்றுகொண்டிருக்கின்றது. கல்லும், முள்ளும் நிறைந்த காட்டுப் பாதை! மூன்று புலிக்குட்டிகள் தாயோடு நடக்கின்றன.
ஒரு புலிக்குட்டியைக் காணோம்! அந்தத் தாய்ப் புலி பதறிப்போய் திரும்பிப் பார்க்கின்றது. சற்று தூரத்தில் நான்காவது புலிக்குட்டி நடக்கமுடியாமல் தடுமாறி, தடுமாறி கீழே விழுகின்றது.
உடனே அந்தத் தாய்ப்புலி நடக்க முடிந்த மற்ற மூன்று புலிக்குட்டிகளையும் விட்டுவிட்டு, நான்காவது புலிக்குட்டியை நோக்கிச் செல்கின்றது. சென்று நடக்க முடியாமல் தள்ளாடும் அந்த நான்காவது புலிக்குட்டியின் கழுத்தை தன்னுடைய வாயால் கவ்வி தூக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றது.
அந்த தாய்ப் புலி கொண்டிருந்த உணர்வு நிலைக்குப் பெயர்தான் அன்பு. தடுமாறும் உள்ளங்களுக்கு தயவு காட்டுவதற்குப் பெயர்தான் அன்பு.
இயேசுவை, நமது அயலாரை அன்பு செய்யவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம். சுயநலம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை.
காகம் ஒன்று. அதற்குச் சரியான பசி. உணவு தேடி அலைகின்றது. அதற்கு ஒரு நத்தை கிடைத்தது. அதை ஒரு மரக்கிளையின் மீது வைத்து அதன் ஓட்டை உடைத்தது; அதற்குள்ளேயிருக்கும் சதையை உற்றுப்பார்த்தது; அந்த நத்தையின் ஓட்டை அதனால் உடைக்க முடியவில்லை.
அந்த மரத்தடியில் ஒரு நரி உட்கார்ந்திருந்தது. அது காகத்தைப் பார்த்து, என்ன செய்தி? எனக் கேட்டது. அதற்குக் காகம், இந்த நத்தையின் ஓட்டை உடைத்து உள்ளேயிருக்கும் சதையை உண்ணப்பார்க்கின்றேன், முடியவில்லை என்றது. அதற்கு நரி, நான் ஒரு வழி சொல்கின்றேன். அதன்படி செய் என்றது. காகம், என்ன? என்றது. கீழே ஒரு கருங்கல் பாறை கிடக்கின்றது; அதன் மீது நத்தையைப் போட்டால் அது உடைந்துவிடும் என்றது.
அப்படியே காகம் செய்தது. கீழே விழுந்த நத்தை பாறையின் மீது பட்டது. ஓடு உடைந்தது. அதற்குள்ளேயிருந்த சதை வெளியே வந்து விழுந்தது. அதை எடுத்து நரி விழுங்கிவிட்டது; காகம் ஏமாந்தது.
இந்தக் கதையில் வருகின்ற நரி கொண்டிருந்த உணர்வு நிலைக்குப் பெயர்தான் சுயநலம்.
அன்பிற்கு எதிரானது சுயநலம். இந்தச் சுயநலம் வரலாற்றிலே பெரிய பெரிய புனிதர்களையெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கின்றது.
உரோ 7:14-25 முடிய உள்ள பகுதி. அங்கே தூய பவுலடிகளார் கதறி அழுகின்றார். நான் என்ன சொல்வேன்? நான் என்ன செய்வேன்? இரங்கத்தக்க மனிதன் நான். எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றேனோ அதை செய்துகொண்டிருக்கின்றேன் என்கின்றார். புனித பவுலடிகளார் எப்படிப்பட்டவர்? அவர் ஒப்பற்ற என் செல்வமே, ஓ எந்தன் இயேசுநாதா! உன்னை நான் அறிந்து உறவாட உள்ளதெல்லாம் இழந்தேன் என்று வாழ்ந்தவர்.
அவரையும் சுயநலம் விட்டுவைக்கவில்லை. கீதாஞ்சலியை எழுதி நோபல் பரிசு பெற்ற, கவிஞர் இரபீந்திரநாத் தாகூர். அவர், இறைவா நீதான் என் உற்ற நண்பன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் சொத்தும் சுகமும் நீதான் என்பதும் எனக்கு நன்றாகப் புரியும். ஆனாலும் நீ என் வீட்டுக்கு வந்தால் என் வீட்டில் கிடக்கும் ஒரு தூசியைக் கூட விட்டுக்கொடுக்கமாட்டேன் என்கின்றார்.
ஆக, எல்லாரையும் சுயநலம் சோதிக்கும். என்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி வாழ்ந்தால் எனக்கென்ன, நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் எழும்.
இயேசுவை நமது அயலாருக்குள் கண்டு அவரை அன்பு செய்வது அவ்வளவு எளிதல்ல.
எளியவர்களில், இல்லாதவர்களில், புறக்கணிக்கப்பட்டவர்களில் இயேசுவைக் காணவிடாது நமது பண ஆசை நம்மைத் தடுத்து விடும்;
நமது பதவி ஆசை நம்மைத் தடுத்து விடும்;
நமது உடல் ஆசை நம்மைத் தடுத்து விடும்;
நமது உயிர் ஆசை நம்மைத் தடுத்து விடும்.
இயேசுவை அன்பு செய்யவிடாமல் யூதாசைத் தடுத்தது பண ஆசை!
இயேசுவை அன்பு செய்யவிடாமல் பிலாத்துவைத் தடுத்தது பதவி ஆசை!
இயேசுவை அன்பு செய்யவிடாமல் ஏரோதைத் தடுத்தது உடல் ஆசை!
இயேசுவை அன்பு செய்யவிடாமல் பேதுருவைத் தடுத்தது உயிர் ஆசை!
இந்த ஆசைகளையெல்லாம் மீறி, நமது ஆண்டவர் இயேசுவை நமது அயலாருக்குள் கண்டு அன்பு செய்வது அவ்வளவு எளிதல்ல.
ஆம். இயேசுவை அன்பு செய்வது அவ்வளவு எளிதல்ல.
என்ன செய்யலாம்?
புனித பவுலடிகளார் உரோ 7:25-இல் இயேசு நம்மை விடுவிப்பார் என்கின்றார்.
இரபீந்திரநாத் தாகூர், ஒரு நிமிடம் உன் அருகில் அமர அருள்வாயோ இறைவா என்கின்றார்.
இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : இறைவா, கல்லான இதயத்தை எடுத்துவிடு; எம்மைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு; எம்மையே நாங்கள் மறக்கவிடு; கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு.
மேலும் அறிவோம் :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8).
பொருள் :
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.
மருமகன் ஒருவர் ஒருநாள் காலையில் தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அன்று மாமியார் உப்புமா கிண்டியிருந்தார்; கொஞ்சம் உப்புமா தான் மீதி இருந்தது. அதை ஒரு தட்டில் போட்டு மருமகனிடம் கொடுத்தார். மருமகன் அதைச் சாப்பிட்டார். அது அவருக்குப் போதவில்லை. மாமியாரைக் கூப்பிட்டு, காலியான தட்டை அவரிடம் காட்டி, "அத்தை! இந்தத் தட்டை எப்போது வாங்கினீர்கள்?" என்று கேட்டார். மாமியார் சமையல் அறையில் காலியாகக் கிடந்த உப்புமா சட்டியைக் கொண்டு வந்து மருமகனிடம் காட்டி, "மாப்பிள்ளை! இந்த உப்புமா சட்டியை வாங்கிய போதுதான் அந்தத் தட்டையும் வாங்கினேன்" என்றார்! சட்டியும் காலி, தட்டும் காலி: உள்ளேயும் ஒன்றுமில்லை, வெளியேயும் ஒன்றுமில்லை.
இத்தகைய ஓர் அனுபவம் இயேசு உயிர்த்தபின் அவருடைய சிடர்களுக்கும் கிடைத்தது. இயேசு உயிர்த்துவிட்டார். ஆனால் அவர் எங்கே போனார் ? தெரியவில்லை. சரி, இனிக் கிறிஸ்துவை நம்பிப் பயனில்லை; மீன்பிடிக்க மறுபடியும் கடலுக்குச் சென்றால், அங்கும் ஒரு மீன் கூட அகப்படவில்லை. கடவுளும் அவர்களைக் கைவிட்டுவிட்டார். கடலும் அவர்களைக் கைவிட்டு விட்டது. “ஏமாற்றமே! உன் பெயர்தான் வாழ்க்கையா?" என்று சீடர்கள் வினா எழுப்பி நொந்து நூலாகி நின்றனர்.
ஏமாற்றத்தின் நடுவில்தான் கடவுள் காட்சி அளிக்கிறார். முதன் முறையாக இயேசு சீடர்களை அழைத்தபோது நிகழ்ந்ததுதான் மறுபடியும் நிகழ்கிறது. இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒரு மீன் கூட அகப்படாமல் ஏமாற்றத்துடன் நின்ற முதல் சீடர்களிடம், படகை ஆழத்திற்குக் கொண்டு போய் வலையை வீசும்படி இயேசு கேட்டார். ஏராளமான மீன்கள் அகப்பட்டன (லூக் 5:4-10). இயேசு உயிர்த்தபின் அதே சூழ்நிலை உருவாகிறது. கிறிஸ்து அவர்களிடம், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் அகப்படும்" என்கிறார் (யோவா 21:6), சீடர்களும் அவ்வாறு செய்கின்றனர். 153 பெரிய மீன்கள் அகப்படுகின்றன.
இரவும் பகலும் ஒன்று சேர்ந்துதான் ஒருநாள் "ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே. இரவென்றால் பகலொன்று வந்திடுமே," பகல் இல்லாத இரவு மட்டும் இல்லை. அவ்வாறே தோல்வி என்ற இரவுக்குப் பின்பு வெற்றி என்ற பகல் உதயமாகும். எனவே, நாம் ஒருபோதும் விரக்தி அடையக்கூடாது. கடவுளே இல்லை என்று தோன்றும் போதுதான் கடவுள் நமக்கு மிகவும் அருகாமையில் உள்ளார். பல்வேறு துன்பங்களைச் சந்தித்த பேதுரு நமக்குக் கூறும் அறிவுரை: "உங்கள் கவலைகளை யெல்லாம் அவரிடம் (கடவுளிடம்) விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேதுரு 5:7)
ஒரு சிறுவனை அவனுடைய அம்மா மண்ணெண்ணையால் குளிப்பாட்டினார். ஏனெனில் அவன் 'துருதுரு' என்று அலைந்தானாம். அவ்வாறே பேதுருவும் 'துருதுரு' என்று இருந்தார். இயேசு சீடர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்தான் முந்திரிக்கொட்டை போல் பதில் சொன்னார். "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய் விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத் 26:33) என்று இயேசு விடமே சவால் விட்டபேதுரு சவால் விட்டபேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார் (மத் 26:69-75).
'துருதுரு' என்றிருந்த பேதுருவைக் கிறிஸ்து மண்ணெண்ணை கொண்டு அல்ல, தமது இரத்தத்தால் கழுவினார். இதைப் பேதுருவே சுட்டிக்காட்டியுள்ளார். நாம் மீட்படைய கிறிஸ்து கொடுத்த விலை பொன்னோ வெள்ளியோ அன்று. மாறாக அவருடைய உயர் மதிப்புள்ள இரத்தமாகும் (1 பேதுரு 1:18).
செம்மறியின் இரத்தத்தால் கழுவப்பட்டுப் புதுப் பிறப்பெடுத்த பேதுரு, தான் இயேசுவை மும்முறை மறுதலித்ததிற்குப் பரிகாரமாக மூன்றுமுறை, "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என்று உமக்குத் தெரியுமே" (யோவா 21:15) என்று பணிவுடன் பதில் அளித்தார்.
இயேசு பேதுருவை முழுமையாக மன்னித்து, முழுமையாக ஏற்றுக் கொண்டு, அவரிடம் திருச்சபையின் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார். கடவுளைப் பொறுத்தமட்டில் அவரது அன்பு மாறாதது. நிலையானது. "கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை" (உரோ 11:39).
திருமண நாள் அன்று பெரும்பாலும் மணமகன் மஞ்சள் கயிறு கொண்டு மணமகள் கழுத்தில் தாலி கட்டுவார். ஒரு சில நாள்கள் கழித்து அதைப் பிரித்துவிட்டு தங்கச் சங்கிலியால் தாலி கட்டுவார். அவ்வாறே மணமகனாம் கிறிஸ்து முதலில் மீன் படகுக் கயிற்றால் பேதுருவுடன் துவக்கிய உறவை. உயிர்த்தபின் சிலுவைச் சங்கிலி கொண்டு உறுதி செய்கிறார். இரண்டாம் முறையாகப் பேதுருவை, "என்னைப் பின் தொடர்" (யோவா 21:19) என்று சொல்லி அழைத்து, சிலுவைச் சாவால் அவர் தம்மை மகிமைப்படுத்துவார் என்று இறைவாக்கு உரைக்கின்றார் (யோவா 21:18-19).
கிறிஸ்துவின் மேல் பேதுரு கொண்டிருந்த முதல் அன்பைவிட அவரது இரண்டாவது அன்பு சக்தி வாய்ந்ததாக உள்ளது. கிறிஸ்து விண்ணகம் சென்றபின் திருத்தூதர்கள் கிறிஸ்துவின் பெயரால் கற்பிக்கக் கூடாது என்று தலைமைக் குரு தடை செய்தபோது, பேதுரு, "மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?" என்று பதில் அளிக்கிறார் (இரண்டாம் வாசகம், திப 5:29).
கிறிஸ்து திருச்சபையின் தலைமைப் பொறுப்பைப் பேதுருவிடம் ஒப்படைத்தார். "என் ஆடுகளை மேய்" (யோவா 21:16), பேதுருவின் வழித்தோன்றல்களான திருத்தந்தையர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளைக் கிறிஸ்துவின் பெயரால் வழிநடத்தி வருகின்றனர். திருத்தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடன் இணைந்து செயல்பட அனைத்துத் தரப்பு விசுவாசிகளும் அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், "எங்கு பேதுரு இருக்கிறாரோ அங்கு கிறிஸ்து இருக்கிறார்" (புனித அகுஸ்தீனார்).
ஒரு காட்டில் ஒருதாய்க் கோழி தனது 10 குஞ்சுகளுடன் இருந்தபோது, திடீரென்று காடு தீப்பிடிக்க, 9 குஞ்சுகள் தாயைவிட்டு ஓடித் தீயில் கருகிச் செத்துவிட்டன. ஆனால் தாயின் இறக்கைக்கடியில் ஒளிந்து கொண்ட ஒரு குஞ்சு மட்டும் பிழைத்துக்கொள்கிறது. இன்று சிலர் திருச்சபைத் தாயை விட்டுவிட்டு வெளியே சென்று அழிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்யாமல் திருச்சபையின் ஐக்கியத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில், பேதுருவின் விசுவாசம் என்னும் கற்பாறையில் திருச்சபை கட்டப்பட்டுள்ளது. பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா (மத் 16:18).
உயிர்த்த இயேசு திபேரியக் கடல் அருகே பொரித்த மீனையும் அப்பத்தையும் வைத்துக் கொண்டு சீடர்களிடம், "உணவருந்த வாருங்கள்" (யோவா 21:12) என்றார். அவர் கொடுத்த உணவு நற்கருணைக்கு அடையாளம். இன்றும் அவர் திருப்பலியில் 'சாப்பிட வாருங்கள்' என்றழைக்கிறார். அவர் தரும் விண்ணக உணவை உண்டு வாழ்வில் வளமடைவோம். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்ட நாம் பேறு பெற்றோர் (திவெ 19:9).
அமலா பங்குத் தந்தையைச் சந்திக்கிறாள். அன்பரசை மணமுடிக்கப் போவதாகச் சொன்ன போது பங்குத்தந்தைக்கு ஒரே வியப்பு.
“ அமலா, நீ பெரும் செல்வந்தரின் மகள். அன்பரசோ அவ்வளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல”.
“எனக்கு அது தெரியும் சாமி",
"அன்பரசு உன்னளவு கற்றவனும் அல்ல''
“அதுவும் எனக்குத் தெரியும்"
"அன்பரசுக்கு நிலையான தொழிலும் இல்லை. வருமானமும் இல்லை”. முடிவாக அமலா சொன்னாள்: “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அவரைப் பற்றி ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நான் சந்தித்த இளைஞர்களில் என்னை மிகவும் அன்பு செய்பவர் அன்பரசு. எனக்காக அவர் எந்த தியாகத்தையும் செய்வார், எந்தத் துன்பத்தையும் ஏற்பார். அதுதானே எனக்கு வேண்டும்”.
அமலாவைப் போல, நம்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு உறுதியானது என்பதை அறியும் போது நமது நம்பிக்கை எவ்வளவு வலுவடைகிறது! அன்பில் வெளிப்படும் நம்பகத் தன்மையின் விளைவு அது.
இன்றைய நற்செய்தி உள்ளத்தைத் தொடும் ஒரு காட்சி. இயேசுவுக்குத் தெரியும் பேதுரு தன்னை நேசிக்கிறார் என்பது. ஆனால் அந்த நேசம் வெளிப்படையான அறிக்கையாக வேண்டும் என்று ஆசிக்கிறார். அன்பின் நம்பகத்தன்மை உறுதிப்படுகிறபோது திருச்சபையை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பைப் பெறுகிறார் பேதுரு அந்தப் பணியைப் பொறுப்புடன் நிறைவுறச் செய்வார் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு உண்டு.
இயேசு - பேதுரு சந்திப்பு, பேதுருவின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் மூன்று:
1. பேதுருவின் மனமாற்றம் உறுதிப்படுகிறது.
நம்பிக்கை தளர்கிறபோது வாழ்க்கை அர்த்தமாற்றுப் போகிறது. இயேசுவின் மீது பேதுரு வைத்திருந்த நம்பிக்கை தளர்ச்சியடைகிறது. தன் பழைய தொழிலான மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பி விடுகிறார் தன் தோழர்களோடு.
உடல், உள்ளம், ஆன்மா - இந்த மூன்றின் கலவை தானே மனிதன்! இவற்றில் எந்த ஒன்று பாதிப்புக்கு ஆளானாலும் முழுமனிதனும் பாதிப்புக்கு உள்ளாகிறான். பயம், பகை, தாழ்வு மனம், குற்றப் பழியுணர்வு, கவலை - இவை மனிதனை இயல்பில் பாதிக்கிறது. நலம் இழக்கச் செய்கிறது. ஆளுமைச் சீர்குலைவுக்குக் காரணமாகிறது.
இயேசுவின் வார்த்தையில் மிகுந்த மீன்பாடு கிடைக்க, இயேசுவைக் கண்டு கொள்கிறார் பேதுரு. இது பேதுருவுக்கு இரண்டாவது அழைப்பு. இயேசு பேதுருவை முதலில் அழைத்தபோதும் மீன்பிடிப்பு என்ற அருங்குறியின் மூலமாகத்தன்னை யார் என்று தெளிவுபடுத்தித்தான் அழைத்தார் (லூக்.5:4-10). இப்போது மீண்டும் அதே பாணியில் இரண்டாவது அழைப்பு. இப்போது நம்பிக்கை வலுப்பெறுகிறது. அதனால் மனமாற்றம் அடைகிறார். புதுவாழ்வு பெறுகிறார். இயேசுவுக்காக உயிர்த்தியாகம் செய்யவும் துணிகிறார்.
2. பேதுருவின் அன்பு உறுதிப்படுகிறது.
கடற்கரை மணலில் பதிந்த காலடிச் சுவடுகளை அலைகள் அழித்துச் சீராக்குவது போல, மும்முறை மறுதலிப்பின் வடுக்களை அன்பு அறிக்கையால் மனத்தினின்று நீக்க வழிவகுக்கிறார் இயேசு. இயேசு விரும்பிக் கேட்கும் பாவப் பரிகாரம் அன்பைத் தவிர வேறொன்றும் இல்லை.
எந்த நிகழ்வால் பேதுருவின் உள்ளம் பாதிக்கப்பட்டதோ, அந்த நிகழ்ச்சியின் சூழலுக்கே அவரை அழைத்துச் செல்ல ஒரு பின்னணியைத் தோற்றுவிக்கிறார். “படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதைக்... கண்டார்கள்” (யோவான் 21:9) *சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்' (யோவான் 18:25) அன்றோ! “அறியேன்" என்று மூன்றுமுறை மறுதலிப்பு. “என்னை அன்பு செய்கிறாயா?" என்று மூன்றுமுறை உறுதிப்பாடு, “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய் விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்” (மத்.26:23) இது பேதுருவின் தம்பட்டம், “நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்து கிறாயா?” (யோவான்.21:15) இது இயேசுவின் கேள்வி. தன் தலைவனை மறுதலித்த மன உளைச்சலில் துடித்துக் கொண்டிருந்த பேதுருவை உயிர்த்த இயேசு படிப்படியாகக் குணப்படுத்துகிறார். பேதுருவின் அன்பு புடமிட்ட பொன்னாகப் புதுப்பிக்கப்படுகிறது.
3. பேதுருவின் பணி (பொறுப்பு) உறுதிப்படுகிறது.
தான் இயேசுவை மறுதலித்த போதிலும், அதை அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை, அவர் கொண்டிருக்கும் அன்பு சிறிதும் குறையவில்லை, அவர் இவருக்கென்று தந்த பொறுப்பில் (“என் ஆடுகளைப் பேணி வளர்”) மாற்றம் இல்லை என்று உணர்ந்து மனவலிமை பெறுகிறார் பேதுரு. அத்தகைய மனவலிமையின் காரணமாகவே “மனிதர்களுக்குக் கீழ்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்” (தி.ப.5:29) என்ற மனஉறுதி பெறுகிறார். “இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்” (தி.ப.5:41) மன மகிழ்ச்சி அடைகிறார். இனி இயேசுவின் பெயரைச் சொல்லாமல் உயிர்ப்புக்குச் சான்று பகராமல் அவரால் இருக்க முடியாது. அவரது மரணமே கடவுளை மகிமைப்- படுத்தும் (யோவான் 21:18, 19)
திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் 1984இல் பாரதம் வந்தபோது சங்கப் பரிவாரங்கள் “அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் கட்டாய மனமாற்றம் செய்ய அவருடைய ஆட்சிப் பொறுப்புத்தான் ஆணையிடுகிறது” என்று கூக்குரல் இட்டன. ஆனால் நம் திருத்தந்தை மிகத்தெளிவாகக் கூறினார்: “கிறிஸ்தவ நற்செய்தி யாளர்கள் யாரையும் எப்பொழுதும் கட்டாயமாக மதமாற்றம் செய்வதில்லை. ஆனால் இயேசுவின் கட்டளைப்படி உலகெங்கும் சென்று அவருடைய போதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. எங்கள் போதனைகளை ஏற்றுக் கொள்வதும் ஏற்க மறுப்பதும் அவரவர்களுடைய விருப்பம். இதில் கட்டாய மனமாற்றம் என்பதற்கு இடமில்லை”.
இதே வார்த்தைகளைத்தான் பேதுருவும் யோவானும் தலைமைச் சங்கத்தின் முன் துணிவோடு எடுத்துக் கூறினார்கள். “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது”.
அறிவிப்பவராகட்டும் கேட்பவராகட்டும்... எல்லாம் மனச்சான்று தொடர்புடையது
விட்டு விலகுவதா? சரணடைவதா?
இளைஞர் ஒருவர் தன் மாத ஊதியத்திலிருந்து ஒரு கணிசமானத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிவைப்பார். மாதத்தின் இறுதி ஞாயிறன்று அருகில் உள்ள சேரியில் வாழும் சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு நாள் முழுவதும் பல சுற்றுலா இடங்களுக்குச் செல்வார். மாலையில் ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று, அச்சிறுவர்கள் விரும்பிய உணவை வாங்கி, அனைவரும் சேர்ந்து உண்பர். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அச்சிறுவர்களில் ஒருவன் இளைஞரை நோக்கி," அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?" என்று கேட்டான்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் நாள் முழுவதும் தங்களை மகிழ்வில் நிறைத்ததைக் கண்ட அந்தச் சிறுவனின் மனதில் எழுந்த அந்தச் சந்தேகம், இயேசுவுடன் மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் மனதிலும் எழுந்தது. ஆனால், அவர்களால் கேட்க முடியவில்லை. "சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்." (யோவான் 21:12) என்று இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு 'நாவலை' வாசிக்கும்போது அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது இறுதி பக்கங்களில், அல்லது, இறுதி மணித்துளிகளில் வரும் 'கிளைமாக்ஸ்' நமது கவனத்தை அதிகம் ஈர்க்கும். நாவல் முழுவதும் நம் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்கு இறுதிப் பகுதியில் பதில்கள் கிடைக்கும். இன்று நமது ஞாயிறு வழிபாட்டில் வாசிக்கும் பகுதி, யோவான் நற்செய்தியில் வரும் உச்சகட்டம் - 'கிளைமாக்ஸ்' - என்று சொல்லலாம். உண்மையிலேயே, இது ஒரு பிற்சேர்க்கை.
சில வேளைகளில் நாம் கடிதங்கள் எழுதும்போது இறுதியில் பி.கு. அதாவது பின்குறிப்பு என்று எழுதி, "ஓ, சொல்ல மறந்துட்டேனே..." என்று ஒரு மகிழ்வான செய்தியைச் சொல்வோமே, அவ்விதம் இந்த இறுதிப் பிரிவை நாம் எண்ணி பார்க்கலாம். இந்தப் பிற்சேர்க்கையை நற்செய்தியாளர் யோவானோ அல்லது அவருடைய சீடர்களில் ஒருவரோ இணைத்துள்ளார் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. ஆய்வுக்கணிப்புக்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், 21ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வு ஆழமான உண்மைகளை உள்ளத்தில் விதைக்கின்றது.
யோவான் தன் நற்செய்தியை, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவாக எழுதாமல், ஓர் இறையியல் பாடமாக அளித்துள்ளார். இயேசுவின் கூற்றுகள், இயேசுவின் செயல்கள் அனைத்தும் யோவான் நற்செய்தியில் பல இறையியல் எண்ணங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு காட்சித் தியானமாக, ஓர் இறையியல் பாடமாக நாம் அணுகுவோம்.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல் என்று யோவான் தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். திதிம் என்ற தோமா என்று ஆசிரியர் குறிப்பிட்டதும், நம்மையும் அறியாமல் நமது நினைவில் சென்ற வாரம் ஞாயிறன்று சொல்லப்பட்ட நிகழ்வு நிழலாடுகிறது. அந்த நிகழ்வின் நாயகன் தோமா - சந்தேகத் தோமா. சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து, குணமாக்கியதை சென்றவாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல் நிகழ்வு இன்று சொல்லப்படுகிறது. இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்றைய நற்செய்தி சொல்கிறது.
கதாப்பாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பின், இன்றைய நற்செய்தி சொல்வது இதுதான்: "அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3)யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, மேல் மாடியில் பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள், தங்கள் பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவர்களது எண்ணங்களுக்கு ஒரு வடிவம் தந்ததுபோல் ஒலித்தது, பேதுருவிடமிருந்து வந்த யோசனை: "நான் மீன் பிடிக்கப் போகிறேன்".
மீன் பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று உறுதி அளித்து இயேசு அழைத்தார். அந்த அழைப்பைச் சரியாகப் புரிந்தும், புரியாமலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு, ஏதோ ஒரு துணிச்சலுடன் இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின் சென்றவர்கள் சீடர்கள். இயேசு அவர்களுடன் இருந்தவரை, மக்களைப் பிடிக்கும் தொழிலை ஓரளவு புரிந்துகொண்டனர். ஆனால், கல்வாரியில் அவர் சிலுவையில் இறந்தபின் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. சீடர்கள் மக்களைப் பிடிப்பதற்குப் பதில், மக்கள் இவர்களைப் பிடித்து உரோமையர்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அந்தச் சீடர்கள் பதுங்கி வாழ்ந்தனர். இயேசுவுடன் வாழ்ந்தபோது எப்போதும் மக்கள் கூட்டம் சூழ எதோ கனவுலகில் வாழ்ந்ததுபோல் இருந்தவர்களுக்கு, கடந்த மூன்று நாட்கள் கசப்பான பாடங்களைச் சொல்லித் தந்தன. எனவே, மக்களைப் பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மீண்டும் பழையபடி மீன்பிடிக்கும் தொழிலுக்கேத் திரும்பலாம் என்று தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்... "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் கிளம்பினர். கடந்த மூன்றாண்டுகள் இயேசுவுடன் அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு இனி திரும்பப் போவதில்லை என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத் தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர். அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்திப்பது ஏமாற்றம். இரவு முழுவதும் முயன்றும், அவர்களுக்கு 'மீன் ஒன்றும் கிடைக்கவில்லை' (21: 3).
மீன்பிடித் தொழிலில் ஒன்றும் கிடைக்காமல் போன பல இரவுகளைச் சந்தித்தவர்கள் இந்தச் சீடர்கள். இருந்தாலும், அன்று திபேரியக் கடலில் இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும், ஒன்றும் கிடைக்காமல் போனது அவர்கள் மனதில் கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நிகழ்வுதானே அவர்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்வு! லூக்கா 5ம் பிரிவில் (5:4-11) சொல்லப்பட்டுள்ள அந்த நிகழ்விலும் அவர்கள் இரவெல்லாம் உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்வில் அடிக்கடிச் சந்தித்துப் பழகிப்போன அந்த ஏமாற்றத்தை அவர்கள் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இயேசு அன்று மாற்றினார். எனவேதான், இந்த இரவிலும் அந்த நாள் நினைவு அவர்களுக்கு மீண்டும் எழுகிறது. இயேசுவின் மரணம் என்ற பெரும் எமாற்றத்திற்குப் பின், தங்கள் பழைய வாழ்வைத் தொடரலாம் என்று எண்ணியவர்களுக்கு, ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஏமாற்றம் மீண்டும் அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு மாற்றமாக அமைந்தது. கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்ததைப்போலவே மீண்டும் ஒருமுறை திபேரியக் கடலில் நிகழ்ந்தது. இரவு முழுவதும் உழைத்துக் காணாத பலனை விடிந்ததும் இயேசுவின் வடிவில் அவர்கள் கண்டனர். 153 பெரிய மீன்கள் பிடிபட்டதாக நற்செய்தியாளர் கூறுகிறார். (யோவான் 21:11)
கெனசரேத்து ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே உருவான உறவில் ஒரு புதிய ஆழம் புலனாகிறது. இவ்விரு நிகழ்வுகளின் இணைப்பு நம் வாழ்விலும் ஒரு சில பாடங்களைச் சொல்லித் தரக் காத்திருக்கிறது.
கெனசரேத்து ஏரியில் கிடைத்த அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5: 8) என்று வேண்டினார். திபேரியக் கடலில் அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு தண்ணீரில் பாய்ந்து செல்கிறார் இயேசுவை நோக்கி.கெனசரேத்து ஏரியில் தான் ஒரு பாவி என்பதை பேதுரு உணர்ந்து சொன்னாரா என்பதில் தெளிவில்லை, ஆனால், இயேசு தன்னை விட்டு விலகவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார்.திபேரியக் கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன் தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுத்த பாவி தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் செல்கிறார்.
நம் வாழ்வைச் சிறிது அலசிப் பார்ப்போம். பிரமிப்பூட்டும் ஓர் அற்புதம் நம்மைச் சூழும்போது, எதிர்பாராத அளவில் ஒரு பேரன்பு அனுபவம் நமக்கு ஏற்படும்போது, ஒன்று, அந்த அன்புக்கு முன் முற்றிலும் சரணடைந்து மகிழ்வோம். அல்லது, அந்த அன்பைக் கண்டு பயந்து, நமக்குள் நாமே ஒளிந்து கொள்வோம். அந்த அன்பு நம்மை விட்டு விலகினால் போதும் என்று எண்ணுவோம். அப்படி நமக்குள் நாமே ஒளியும்போது, கூடவே நம்மைப் பற்றிய தாழ்வான எண்ணங்களும் நம்மை நிரப்பி, சுய பரிதாபத்தில் (self-pity) நம்மை மூழ்கடிக்கும். கெனசரெத்து ஏரியில் பேதுரு பெற்றது இத்தகைய அனுபவம். அங்குதான் இயேசுவின் அன்புப்பாடங்கள் அவருக்கு ஆரம்பமாயின.
இயேசுவுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளில் பேதுரு கற்றுக்கொண்ட ஓர் உயர்ந்த பாடம் இதுதான். எந்த நிலையில் தான் இருந்தாலும், இயேசுவிடம் தனக்குப் புகலிடம், தஞ்சம் உண்டு என்பதே அந்த அழகிய பாடம். இந்த ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொண்டால் நமக்கு மீட்பு உண்டு, வாழ்வு உண்டு. எந்த நிலையில் நாம் இருந்தாலும், இயேசுவை நாம் அணுகிச் செல்லமுடியும். தந்தையாம் இறைவனில் நாம் தஞ்சம் அடையமுடியும்.
திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுரைகளில் அடிக்கடி கூறிவரும் ஒரு கருத்து இதுதான்: "கருணை காட்டுவதில், அன்புடன் அரவணைப்பதில் கடவுள் களைப்படைவதே இல்லை; அவரை அண்டிச்செல்ல நாம்தான் தயங்குகிறோம், களைப்படைகிறோம்".
இரவெல்லாம் உழைத்தும், பயனேதும் காணாமல் களைத்து, சலித்துப்போன சீடர்களுக்கு காலை உணவைத் தயாரித்து, அவர்களை உண்ணும்படி அழைத்த உயிர்த்த இயேசுவின் சலிப்பற்ற கருணையை, அரவணைப்பை இந்த உயிர்ப்புக் காலத்தில் உணர இறைவனை மன்றாடுவோம்.
பாஸ்கா காலம் மூன்றாவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப.5:27-32,40-41)
இயேசு உயிர்த்த பிறகும் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்த திருத்தூதர்களுக்கு இயேசு பலமுறைத் தோன்றி அவர்களைத் தேற்றுகின்றார். எனினும் தூய ஆவியானவர் வந்ததும் அவர்கள் துணிவு பெறுகிறார்கள். இயேசுவை மும்முறை மறுதலித்த பேதுரு இப்போது யாருக்கும் அஞ்சாமல் இயேசுவைப் பற்றி அறிவிக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் குருக்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இரண்டாம் வாசகப் பின்னணி (தி.வெ.5:11-14)
பேரரசரைக் கடவுளாக வணங்கும் மக்களுக்கு, உரோமைப் பேரரசருக்குப் பல மடங்கு மேலானவர் உண்மைக் கடவுள் என்பதைக் காட்ட, அரியனையில் வீற்றிருக்கும் கடவுளை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். கடவுளால் அனுப்பப்பட்ட அவரது மகன் இயேசு கிறிஸ்துவை ஆட்டுக்குட்டியாக இரண்டாவதாக அறிமுகப்படுத்துகிறார். அவர் தன்னையே அர்ப்பணிக்கும் ஆட்டுக்குட்டி மட்டுமல்ல, போராடும் ஆட்டுக்குட்டியென (7 கொம்புகள், 7 கண்கள்) அறிமுகப்படுத்துகிறார். நற்செய்தி வாசகப் பின்னணி (யோவா21:1-19) யோவான் தனது நற்செய்தியில், முன்னதாகவே இரண்டு முறை இயேசு தன் சீடர்களுக்குத் தன்னைக் காண்பித்து பல அற்புதங்களை செய்து விசுவாசத்தில் உறுதிபடுத்தினார். ஆனால் திருத்தூதர்களோ, தங்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று ஒவ்வொரு நாளும் கலங்கிக் கொண்டிருந்தார்கள். இயேசுவின் அறிவுரைக்கேற்ப அவர்கள் கலிலேயாவிற்கு வருகிறார்கள். பெரும்பாலும் பேதுரு குடும்பம் வாழ்ந்த கப்பர்நகும் என்ற இடத்திற்கு வந்திருக்கலாம். அவர்கள் தங்களுக்கென இருந்த ஒரே தொழிலான மீன்பிடித்தலுக்குத் திரும்புகிறார்கள். ஏனெனில் அதுதான் அவர்கள் பிழைப்பிற்கு வழி, அச்சமயத்தில்தான் இயேசு தன் சீடர்களுக்கு மூன்றாம் முறையாகக் காட்சியளிக்கிறார். இந்தக் காட்சியில் இயேசு பேதுருவிடம் "நீ என்னை அன்பு செய்கிறாயா?" என கேட்கிறார்.
மறையுரை
அன்பு சொன்னாலும் புரியாதது, சொல்லாலே சொல்லவும் முடியாதது, இல்லாததும் பொல்லாததும் அல்ல, எல்லோருக்கும் தேவையது. கடவுள் மனிதனை தமது சாயலாகவும், தமது பாவனையாகவும், அன்பினால், அன்பில், அன்பிற்காய்ப் படைத்தார். கடவுளின் அன்பு நிரந்தர நித்தியத்திற்கும் நிலைமாறா அன்பு. ஆனால் மனித அன்பு நிலையற்ற கானல் நீராய் மாறும், மறைந்து போகும். மனித அன்பு மூன்று வகைப்படும்.
1. தன் மீது அன்பு
2. பிறர் மீது அன்பு
3. கடவுள் மீது அன்பு
ஒருவன் தன்னைக் கடவுள் விரும்புவது போல் அன்பு செய்ய முயற்சித்தால், பிறரின் அன்பை உணர்ந்து கொள்வதோடு, பிறரையும் அன்பு செய்ய முடியும். ஒருவன் பிறரை தன்னலம் இன்றி அன்பு செய்தால் கடவுளின் அன்பை புரிந்து கொள்ள முடியும். கடவுளையும் அன்பு செய்ய முடியும். ஒருவன் கடவுளை முழு உள்ளத்தோடு, முழு மனதோடு, ஆற்றலோடு அன்பு செய்தால், தன்னையும் பிறரையும் எளிதாக அன்பு செய்ய முடியும். அன்பில்லா பணி சுவரில்லா சித்திரத்திற்குச் சமம். உயிரில்லா உடலுக்குச் சமம். இயேசு தம் அன்பு சீடர் பேதுருவை மற்ற சீடர்களைவிட அதிகம் அன்பு செய்தார். பேதுருவும் தன்னை முழுமையாக அன்பு செய்கிறாரா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவே மூன்று முறை "நீ என்னை அன்பு செய்கிறாயா?" என்று கேட்கின்றார். இயேசுவுக்காக பொருள் செல்வத்தை இழப்பது இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தூய பேதுருவை உற்றுப் பார்த்து முதல் முறையாக "யோனாவின் மகனான சீமோனே (இவர்களை விட) நீ என்னை அன்பு செய்கிறாயா?" என்று கேட்டார். நற்செய்தியாளர் தனது நற்செய்தி பணி எல்லாவற்றையும் இயேசுவின் அன்பிற்காய், மகிமைக்காய், அன்புடன் பிறர் பணி செய்ய வேண்டும். ஒருமுறை ஒரு செல்வந்தர் அன்னைத் தெரேசா- வைச் சந்திக்க வந்தார். அப்போது அன்னைத் தெரேசாள் தொழுநோயாளர் ஒருவரின் காயங்களை சுத்தம் செய்து மருந்திட்டு கட்டினார். இந்த நல்ல செயலைப் பார்த்தச் செல்வந்தர், அன்னைத் தெரசாவிடம் சொன்னார்: “எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த இழிச்செயலை நான் செய்ய மாட்டேன்” என்று சொல்ல, அன்னைத் தெரசாளும் அவரைப் பார்த்து, "எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை நான் செய்ய மாட்டேன். நான் மகிழ்ச்சி- யோடு செய்வது என் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட அளப்பரியா அன்பினால்" என்று சொன்னார். வந்தவர் மெய்சிலிர்த்து நின்றார். மனமாறிச் சென்றார்.
எதையும் இயேசுவின் அன்பிற்காய் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் இயேசுவின் அன்பை இழக்கக் கூடாது. இதையே தூய பவுல் அடிகளார், "கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள, அவரோடு ஒன்றித்திருக்க, எல்லாவற்றையும் குப்பையென கருது- கிறேன்" (பிலி. 3:8) என்றார். இயேசுவின் அன்பிற்காய் எல்லா- வற்றையும் இழக்க பேதுரு முடிவு செய்ததினால் இயேசுவிடம், "ஆண்டவரே நான் உம்மை அன்பு செய்கிறேன்” என்றார். இயேசுவுக்காக உறவு செல்வங்களை இழப்பது இரண்டாம் முறையும் இயேசு பேதுருவைப் பார்த்து, “யோனா- வின் மகனான சீமோனே நீ என்னை அன்பு செய்கிறாயா?” என்று கேட்டார். நம்மீது கடவுள் கொண்டிருக்கும் நிலைபெயறாத அன்பை நாம் நமது அனுபவத்தில் தாய் தந்தையின் பாசத்தின் அடிப்படையில் தான் உணர்ந்துக் கொள்ள முடியும். ஆனால் கடவுளின் அன்பு, "உன் தாய் வயிற்றில் உருவாக்கும் முன்பே நாம் உம்மை அறிந்தி- ருக்கிறோம்'' (எரே. 1:5). “பெற்றத் தாயுக்கு அன்பு வற்றிப்போகுமோ! பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ? அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்தாலும் நாம் உன்னை மறக்க மாட்டோம்" (எசா. 49:15), தாய் தந்தையின் உறவை விட, உற்றார் உறவினர்களின் உறவைவிட கடவுளோடு கொண்டிருக்கும் உறவே முதன்மையானது முக்கியமானது முடிவு பெறாதது. அமெரிக்காவில் ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பினர். திருமணம் என்ற பாசபந்தத்தில் இணையவும் இசைவு தந்தனர். அந்த பெண்ணிற்கு ஆலயம் செல்வது, திருப்பலி காண்பது மிகவும் விருப்பமான நிகழ்ச்சியாகும். ஆனால் அந்த வாலிபனுக்கோ அதில் விருப்பமில்லை. இருந்தாலும் அவளின் கட்டாயத்திற்காய் ஆலயம் வந்து கொண்டிருப்பான். ஒரு நாள் அவன் அவளைப் பார்த்து, என்னை நீ விரும்பினாய் என்றால் என்னோடு வா. ஆலயம் செல்வது விருப்பம் என்றால் என்னை மறந்துவிடு" என்று கூறி தகராறு செய்துவிட்டு சென்று விட்டான். அடுத்த வாரம் ஞாயிறு திருப்பலிக்குமுன் அவள் அவனைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, "வாருங்கள் ஆலயம் செல்லலாம்" என்று சொல்ல அவன் மீண்டும் அவளைக் கடிந்து பேசினான், அப்பொழுது அவள், “என்னோடு நீங்கள் வானகம் வர தயாராய் இல்லையென்றால் உங்களோடு நான் நரகத்திற்கு வர தயாராய் இல்லை. நாம் நண்பர்களாய் இருப்போம்" என்று கூறி கடவுளின் அன்பிற்காய் காதலின் அன்பை தூக்கி எரிந்தார். இயேசுவுக்காக தன்னையே இழப்பது மூன்றாம் முறையாக இயேசு பேதுருவைப் பார்த்து, "யோனாவின் மகனான சீமோனே நீ என்னை அன்பு செய்கிறாயா?” என்று கேட்டார். இந்த கேள்வி தன்னையே முற்றிலும் இழப்பதைக் குறிக்கின்றது.
உலகம், உடமைகள், உறவுகள், உடல், உயிர் எல்லாம் கடவுள் நமக்குத் தந்தக் கொடைகள். இவைகள் அனைத்தும் அவருடையது. இயேசு மனித உடலில் தோன்றினார், சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குத் தன்னையே வெறுமையாக்கினார் என்று தூய பவுல் கூறும்பொழுது, “இயேசு தன்னையும், தனது உடலையும், உயிரையும், வாழ்வு முழுவதையும் தன் தந்தையின் அன்பிற்காய் இழந்தார்" என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார். இயேசு தன் தந்தையின் அன்பிற்காய் அனைத்தையும் இழந்தார். என்னை அனுப்பினவரின் விருப்பத்தின் படி நடந்து அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு" (யோவான் 4:34). “அம்மா, இதோ உன் மகன். இதோ உன் தாய்” (யோவான் 19:26-27). "தந்தையே உன் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 20:46).
தூய தோமினிக் சாவியோ ஆண்டவர் இயேசுவை முதல் முறையாகப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு நான்கு வாக்குறுதிகளை எடுத்துக்கொண்டார். அதில் ஒன்று, "பாவம் செய்வதைவிட சாவதே மேல்". தூய பவுல், "வாழ்வது நானல்ல, என்னில் இயேசுவே வாழ்கின்றார்" (கலா. 2:20). இயேசுவின் அன்பிற்காய் தூய பேதுரு பொருள் செல்வத்தையும், உறவு செல்வத்தையும், தன் உயிரையும் இழந்தார். இயேசுவைப் பெற்று கொண்டார். நிறை வாழ்வையும் பெற்று கொண்டார்.
அன்று பேதுருவை "நீ என்னை அன்பு செய்கிறாயா?” என்று கேட்ட ஆண்டவர் இயேசு இன்றும் நம்மைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறார். நாம் தூய பேதுருவைப் போல "ஆம்" என்று சொன்னால், இயேசுவின் அன்பிற்காய் பொருள் செல்வத்தையும் உறவுகள் என்ற செல்வத்தையும் நம்மையையும் இழக்கத் தயாராய் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
- ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி நிலை என்பது இறைவனிடம் நம்மையேக் கையளித்து, அவரது விருப்பத்திற்கேற்ப பேதுருவைப் போன்று வாழ்வதாகும்.
- இயேசுவின் சிலுவைச் சாவுக்குப்பின் அவரது கொள்கைகளுக்குச் சாட்சியாக விளங்குவதை விட்டு, தன்னுடையப் பழைய மீன்பிடித் தொழிலுக்கே பேதுரு செல்கின்றார். இது தன்னை மட்டுமே நம்பி, தன்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மனிதன் தடுமாறுவது தவிர்க்க இயலாதது என்பதையே பேதுருவின் வாழ்வு சுட்டிக்காட்டுகிறது. (ஆண்டவரில் நம்பிக்கை வைக்காமல், மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர் எரே. 17:5-6).
- இன்றைய நற்செய்தியானது பேதுருவின் இரண்டாம் அழைப்பு, முதல் அழைப்பு லூக்கா 5:1-11, இரண்டாம் அழைப்பு யோவான் 21:1-19, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமை.
பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு இயேசுவின் உயிர்ப்புப்பற்றி பேசுகின்றார்."இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" (திப 5:32) என்கிறார். அவரின் இந்தச் சாட்சியத்திற்கு அடிப் படையாக உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்கு தோன்றிய நிகழ்வை யோவான் விவரிப்பதை நற்செய்தியாக வாசிக்கின்றோம். இந்த நற்செய்திப் பகுதியை ஆழ்ந்து சிந்தித்து அது தரும் செய்திகளைப் பெற்றுக் கொள்ள முயல்வோம்.
பின்னணியும் அமைப்பும்
இன்றைய நற்செய்தி யோவான் நற்செய்தியின் இறுதி அதிகாரத்திலிருந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தில் உயிர்த்த இயேசுவோடு பேதுருவும் பிற சீடர்களும் மையப் படுத்தப்படுகின்றனர். இதைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
- அ. திபேரியாக் கடல் அருகே இயேசுவின் தோற்றம் - (வச. 1-14) (பெரும் மீன்பிடிப்பு - உணவு அளித்தல்).
- ஆ. இயேசுவும் பேதுருவும் - (வச. 15-19).
- இ. இயேசுவின் அன்புச் சீடரின் முடிவும் சாட்சியமும் (வச. 20-24).
- ஈ. முடிவுரை (வச. 25).
இவற்றுள் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் சற்று ஆழமாக உற்று நோக்குவோம். இன்றைய நற்செய்தியில் தரப்படும் முதல் நிகழ்வை (வச 1-14) மேலும் பின்வருமாறு பிரிக்கலாம்.
- 1. நிகழ்வுக்குப் பின்னணி (வச. 1-3).
- 2. பெரும் மீன்பிடிப்பு (வச.4-8).
- 3. இயேசு தயாரித்தளித்த உணவு (வச. 9-14).
இந்த அதிகாரத்தின் முதல் வசனம் இந்த அதிகாரம் முழுவதும் பேசப்பட இருக்கும் தலைப்பை இயேசுவின் தோற்றம் - சுருக்கமாகக் கூறிவிடுகின்றது. இதன் வழியாக நம்மை ஒரு முக்கியமான நிகழ்வைக் காண தயார் செய்துவிடுகின்றார் ஆசிரியர்.
அ. சீடர்களின் கலக்க நிலை
நிகழ்ச்சி தொடங்கும்போது ஏழு சீடர்கள் குறிப்பிடப்படு கின்றனர். அவர்களுள் முதன்மையான சீமோன் பேதுரு, "நான் மீன்பிடிக்கப் போகிறேன்" (வச 3) என்று கூறுவது இயேசு இறந்த பிறகு சீடர்களுக்கு இருந்த கலக்கமான நிலைமையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதற்கு முந்தைய அதிகாரத்தில் பேதுரு வெறும் கல்லறையையும் துணிகளையும் கண்டாலும், மற்ற சீடரைப் போலப் பேதுருவின் நம்பிக்கைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை (காண். யோவா 20:3-8) எனவே இயேசு உயிர்த்தாரா இல்லையா எனும் குழப்பமான நிலையிலேயே பேதுருவும் மற்ற சீடர்களும் இருந்ததை அந்த அதிகாரத்தில் பல இடங்களில் காண்கின்றோம் (காண். யோவா 20:9, 24-25, 29). எனவே இத்தகைய ஒரு கலக்கமான சூழலில் பேதுரு மீன்பிடிக்கப் போவதாகக் கூறுவதும், மற்ற சீடர்களும் அவரைப் பின்தொடர்வதும் அவர்கள் தங்களின் பழைய, முந்தைய வாழ்க்கைக்குத் திரும்புவதை குறிக்கின்றது. எனவே இதுவரை தாங்கள் நம்பி பின்தொடர்ந்த இயேசு இறந்து விட்டார். இனி அவரை எதிர்பார்த்து பயனில்லை எனும் தீர்மானத்தில் தங்களின் பழையதொழிலைமீண்டும்தொடங்கஎத்தனிக்கிறார்கள். அதிலும் அவர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வெற்றிபெற முடியவில்லை. இரவு முழுவதும் உழைத்தும் 'மீன் ஒன்றும் கிடைக்கவில்லை' (வச 5). இயேசுவை சந்திக்கும் முன் மனித மனமுள்ள கையறு நிலையை முதல் மூன்று வசனங்களும் அருமையாய் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஆ. இயேசு அங்கே 'நின்றார்'
குழப்பத்திலும் சீடர்கள் கலக்கத்திலும், இருந்த நேரத்தில் இயேசு அங்கே கரையில் நின்றுகொண்டிருந்தார். (வச 4), அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். முந்தைய அதிகாரத்தில் மகதலா மரியா இயேசு 'நிற்பதைக்' கண்டும் அவரை அறிந்துகொள்ளாததுபோல (காண். யோவா 20:14) இங்கும் சீடர்கள் இயேசுவை 'அறிந்துகொள்ளவில்லை' (வச. 4). மகதலா மரியாவிடம் தானாக முன்வந்து அவரிடம் பேசித் தன்னை வெளிப்படுத்தியதுபோல (காண். யோவா 20:15) இங்கும் (வச 5) இயேசுவே உரையாடலைத் தொடங்குகின்றார். 'பிள்ளைகளே' என பாசத்தோடு அழைத்து, 'மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?' (வச 5) என அக்கறையோடு வினவுகின்றார்.
இ. அதிகாரத்தோடு நிகழ்த்தப்பட்ட புதுமை
இப்போது இயேசு நிலைமையை தனது கட்டுக்குள், அதிகாரத்திற்குள் கொண்டு வருகின்றார்."படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" (வச 6) என நம்பிக்கையூட்டி ஆணையிடுகின்றார். அவர்களும் கீழ்ப்படிதலுடன் செயல்படு கின்றனர். நற்செய்தியின் பிற இடங்களிலும் இயேசு இயற்கையின் மீது அதிகாரம் கொண்டு புதுமை நிகழ்த்தியதுபோல (காண். யோவா 2:1-11; 6:1-15, 16-21) இங்கும் புதுமைநிகழ்கின்றது. வலையை இழுக்க முடியாததும், பிடிபட்ட பெரிய மீன்களின் எண்ணிக்கையும், இருந்தும் வலை கிழியாததும் புதுமையின் பல பரிமாணங்களாக அமைகின்றன.
ஈ. இரு சீடர்களின் மறுமொழி
காலியான கல்லறைக்கு பேதுருவும், இயேசுவின் அன்புச் சீடரும் ஓடி, கல்லறையையும் துணிகளையும் இருவரும் கண்டா லும் அன்புச் சீடர் நம்பினார். ஆனால் பேதுருவின் நம்பிக்கைப் பற்றிஎதுவும்குறிப்பிடப்படாததுபோலவே(காண். யோவா20:6-8), இங்கும் இயேசுவின் அன்புச் சீடர் அவர் 'ஆண்டவர் தாம்' (வச7) என கண்டுகொண்டு பேதுருவுக்கு அறிவிக்கின்றார். பேதுருவின் உற்சாகமான செயல்பாடுகள் (ஆடையைக் கட்டிக்கொண்டு, கடலில் குதித்து, கரைக்கு சென்று, மீண்டும் படகில் ஏறி வலையை கரைக்கு இழுத்து வந்தது) கூறப்பட்டுள்ளனவேயன்றி இந்நிலை வரை அவரின் நம்பிக்கைப்பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே அன்புகொண்ட சீடருக்கு நம்புவது எளிதாயிருந்தது. மற்றவர்களுக்கு இவை அதியசங்களாகவும், புதுமையாகவுமே பட்டன.
உ.ஆண்டவர் படைத்த உணவு
சீடர்கள்கரையை அடைந்தபோது இயேசு அவர்களுக்காகக் கரியினால் தீ மூட்டி மீன் சுட்டு, அப்பமும் தயார் செய்து உழைத்து, களைத்து, பெரும் மீன்பாட்டுடன் வரும் அவர்களுக்காக காலை உணவு சமைத்துக் காத்திருக்கின்றார். அவர்கள் பிடித்த மீன்கள் சிலவற்றையும் கொண்டுவரச்செய்து, அதையும்தான் தயாரித்திருந் தவையோடு இணைத்துக் கொண்டு, ''உணவருந்த வாருங்கள்" (வச 12) என வாஞ்சையோடு அழைக்கின்றார். அப்பம் பலுகிய போதும், இறுதி இராவுணவின்போதும் (காண். யோவா 6:11; லூக் 22:19-20), இயேசு செய்ததுபோலவே ‘அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார், மீனையும் அவ்வாறே கொடுத்தார்’ (வச 13). இதுவே பிற்காலத்தில் தொடக்க திருஅவையில் ஆண்டவரின் விருந்தை கொண்டாடும் முறையாக மாறியது (காண். 1 கொரி 11:23-26). எனவே பிற்காலத் திருவிருந்து கொண் டாட்டத்தை இது முன் குறிக்கின்றது. எம்மாவு சீடர்கள் இயேசு “அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தபோது” (காண். லூக் 24:30) உயிர்த்த இயேசுவை அடையாளம் கண்டுகொண்டதுபோல (காண். லூக் 24:31), இயேசுவின் அனைத்து நிகழ்வுகளையும் (கரையில் நின்றது, அவர் களின் கையறு நிலையை விசாரித்தது, கட்டளையிட்டது, உணவு சமைத்து பரிமாறியது) கண்டபோது “அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்” (வச 12). இவ்வாறு சீடர்கள் நம்பிக்கைக்குள் கொணரப்பட்டனர்.
ஊ. பேதுருவுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் அழைப்பு
இந்த நிகழ்ச்சியில் இயேசுவோடு முக்கியத்துவம் பெறுபவர் பேதுரு. அவர் பல செயல்பாடுகளை இங்கு செய்வதை நாம் காண்கின்றோம். அவற்றின் பின்னணியில் இயேசு அவரை எப்படி மீண்டும் நம்பிக்கை வாழ்வுக்குள்ளும், அழைத்தலுக்கும் கொணர்கின்றார் என்பதை மட்டும் இவண் காண்போம். பந்தங்களோடு (காண். யோவா 18:3) யூதாசு வந்து இயேசுவைக் காட்டிக்கொடுத்த அந்த இரவில், 'கரியினால் தீ மூட்டி' (காண். யோவா 18:18) குளிர் காய்ந்திருந்தபோது இயேசுவை மூன்று முறை மறுதலித்தார் பேதுரு. அவரை மீண்டும் நம்பிக்கை வாழ்வுக்குள் கொணர இயேசு 'கரியினால் தீ மூட்டி' (வச. 9), மீன் சமைத்து, அப்பமும் தயார் செய்து ‘உணவருந்த அழைத்து' (வச. 12), உணவு படைத்து(வச.13),அவர்கள்உணவருந்தியபின்(வச.15), இயேசுதனது இத்தகைய அன்புக்கு பதிலாக 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகின்றாயா?' (வச.15,16,17) என்று மூன்று முறை கேட்டு, மூன்று முறை அவரின் அன்பை வெளிப்படுத்த வைத்து, மூன்று முறை அவருக்கு தனது மந்தையை கண்காணிக்கும்பொறுப்பை அளிக்கின்றார். இவ்வாறு பேதுரு மூன்றுமுறை இயேசுவை மறுதலித்ததற்கு கழுவாய் தேடப்படுகின்றது; இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த அன்பு உறுதிப்படுத்தப்பட்டது; பேதுருவின் தலைமைத்துவம் நிலை நிறுத்தப்படுகின்றது.
இத்தகைய பேதுருவின் திருத்தூதுத் தலைமையின் கீழ்வாழும் கத்தோலிக்கர் என்பதில் பெருமைகொள்வோம். அவரைப்போல உயிர்த்த ஆண்டவரிடம் நம்பிக்கையினாலும், அன்பினாலும் அண்டி வருவோம்.
முதல் வாசகம் : திப 5 : 27-33
யூத தலைமைச் சங்கம் திருத்தூதர்களுக்கு சில கண்டிப்பான கட்டுப்பாடுகளை வரையறுத்துத் தந்தது. அதில் முதலாவது இயேசுவைப் பற்றிப் போதிக்கக்கூடாது என்பதுதான் (திப 4:5). ஆனால் திருத்தூதர்கள் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்கிற முப்பெரும் நிகழ்ச்சிகளைத் தலைமைச் சங்கத்தினருக்கே பறைசாற்றுகிறார்கள். இதைவிட இன்னும் அதிக அஞ்சா நெஞ்சத்துடன் அவர்கள் இயேசுவைப் பற்றிப் போதித்திருக்க முடியாது. ஆனால் கோழையுள்ளம் கொண்ட சங்கத்தினர் உண்மையை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாது சீற்றம் கொண்டு திருத்தூதர்களை ஒழித்துவிடத் திட்டம் இடுகிறார்கள். உண்மையை ஏற்க முடியாத கோழையாக இருந்ததால்தான் ஏரோது மன்னன் கூட திருமுழுக்கு யோவானைக் கொலை செய்தான் (மாற் 6:14-29). உண்மையை ஏற்காதவர்கள் அனைவரும் கோழைகளே! கிறிஸ்துவே முழு உண்மை என்பதை உணர்ந்து அவர் வாழ்வை நமதாக்குவோம். "தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23).
இயேசு என்றால் மீட்பர்
யூத தலைமைச் சங்கம் இயேசுவின் பெயரைச் சொல்லிப் போதிக்கலாகாது என்ற கட்டளையைப் பிறப்பித்திருந்தது (திப 5:27). இயேசுவின் பெயரை அவர்கள் ஏன் வெறுக்க வேண்டும் ? இயேசு என்றால் மீட்பர். பாவத்தின் தளைகளின்று உலக மக்களை மீட்டவர் இயேசு. குறிப்பாக பாவத்தின் விளைவுகளான பல்வேறு கொடுமைகளினின்று மக்களை மீட்டு அவர்களுக்கு நண்பனாக விளங்கியவர் இயேசு. அவரது பணித் திட்டமே இதுதான் (லூக் 4:18-19). ஆனால் அவரைப்பற்றிய உண்மையை யூதத் தலைவர்கள் ஏற்க மறுத்தார்கள். ஏனெனில், அவர்களது பகட்டு அதிகாரத்தைத் தவிடு பொடியாக்கியவர் இயேசு. ஆகவேதான் அந்த இயேசு என்ற பெயரே அவர்களுக்குக் கசந்தது. அதுமட்டுமல்ல, இயேசு இரத்தம் சிந்தி, சிலுவையில் இறக்கச் செய்தவர்களும் யூதத் தலைவர்கள் தான். இரத்தப் பழிக்குத் தாங்கள் ஆளாகிவிட்டதை அவர்கள் உணர்ந்தார்கள். தங்கள் அதிகார பலத்தால் அந்தக் கறையைப் போக்கிக்கொள்ள விரும்பி, இயேசுவின் பெயரால் இனி யாரும் பேசக்கூடாது என்று அவர்கள் கட்டளையிட்டதில் வியப்பில்லை. இதே யூதத் தலைவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் பிலாத்துவிடம் இயேசுவைச் சிலுவையில் அறையச் சொல்லி, “இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்” என்று கத்தினார்கள் (மத் 27:25).
கிறிஸ்து என்றால் ஆண்டவர் - தலைவர்
இயேசு கிறிஸ்து எந்த அளவிற்குத் தன்னையே தாழ்த்தி, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டாரோ அந்த அளவிற்குத் “கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாகிய கடவுளின் மகிமைக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்” (பிலி 2:6-11). கிறிஸ்துவை முழுமையாக அறிந்து அன்பு செய்தவர் பவுலடியார். ஆகவேதான் தன் மடல்களில் ஏறக்குறைய 600 முறை இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பலவிதங்களில் கையாண்டு இருக்கிறார். “இனி வாழ்பவன் நானல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (கலா 2:20) என்று கூறும் அளவிற்கு பவுலடியார், கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழ்ந்தார். நாம் "கிறிஸ்தவர்” என்பதில் பெருமை கொள்கிறோமா? ஆதித் திருச்சபையில் அடிக்கடி சொல்லப்பட்டு வந்த ஒரு சுலோகம் “இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என்பதுதான். உலக மீட்பிற்காகத் தன்னுயிர் தந்த இயேசு அகில உலகிற்கும் ஆண்டவரானார் என்ற உண்மையைத் தான் இச்சொல் பறைசாற்றுகிறது. இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆண்டு நடத்த வேண்டிய ஆண்டவர். தவறான கொள்கைகளும், மதிப்பீடுகளும் மலிந்துள்ள இன்றைய சமுதாயத்தில் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்று, அவருக்கேற்ப வாழ்வது ஒரு சவால் தான் !
இரண்டாம் வாசகம் : திவெ. 5 : 11 - 14
திருவெளிப்பாடு நூலில் புனித யோவான் விவரிக்கும் காட்சிகளில் ஒன்று இயேசு செம்மறிக் காட்சி. கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றி வெற்றி வாகை சூடியவர், உலகில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வைக்கிறவர் என்று இயேசு செம்மறி பற்றிய கருத்தை இங்கு யோவான் தருகிறார். துன்புறும் கிறிஸ்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் நமக்காகத் துன்புற்று வெற்றிகண்ட இயேசு கிறிஸ்து அனைத்தையும் அறிவார், நீதி வழங்குவார் என்ற மனநிலையை ஏற்படுத்துவதே இக்காட்சியின் நோக்கம்.
மாட்சியிலே செம்மறி
இன்றைய இரண்டாம் வாசகம் செம்மறியின் மாட்சிமைக்குச் செலுத்தப்பட்ட வழிபாடு பற்றிச் சில குறிப்புகளைக் கொண்டுள்ளது. விண்ணில் ஓர் அரியணை. அதில் இயேசு செம்மறி வீற்றிருக்கிறார். அவரைச் சூழ்ந்து மூப்பர்களும் வானதூதர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட கருத்துக்கள் ஏற்கனவே யூத பாரம்பரியங்களில் வழங்கி வந்தவை. விண்ணகத்தைப் பற்றியும், இறைமாட்சிமை பற்றியும் அவர்கள் கொண்ட எழுச்சி மிக்க எண்ணங்களையே மீண்டும் இங்கு யோவான் தருகிறார். இயேசு மண்ணில் வாழ்ந்து மக்களுக்காக மீட்புப் பணி செய்த போது அவர் மனிதரில் ஒருவராக இருந்தார். பசி, பிணி, இயலாமை போன்ற மனிதக் குறைகளையும் அவர் ஏந்தியிருந்தார். ஆனால் அவர் தனது தியாகப் பணியை வெற்றிகரமாக முடித்து, தற்போது விண்ணக மகிமையில் வானோர் புடை சூழ வீற்றிருக்கிறார் என்ற திருப்திகரமான ஒரு நினைவை நம்மில் உருவாக்குகிறார் யோவான். அதோடு, இயேசுவின் மதிப்பீடு களின்படி இவ்வுலகில் வாழும்போது, கட்டாயம் அவற்றின் பயனை அடைவோம் என்ற உறுதியும் நமக்கு அளிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பயனற்ற நடத்தைகள், இன்று நாம் குறிப்பிடும் பாவ அமைப்புகளே. அநீதி, சாதி முறைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இன்று நியாயப்படுத்தப்பட்ட தர்மங்கள்! உண்மையாகவே நாம் இயேசுவின் மதிப்பீடுகளுக்கு அந்நியர்!
இறுதிக் காலம் அண்மையிலே
இயேசுகிறிஸ்து நமக்காக இந்த இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டார் என்ற ஒரு கருத்தையும் திருத்தூதர் பேதுரு நமக்குத் தருகின்றார். யூதப் பாரம்பரியப்படி உலகப் படைப்பிற்கும் உலக முடிவிற்கும் இடையே ஏழு காலங்கள் இருந்தன. மெசியாவின் வருகையே இறுதிக் காலம். எவ்வாறெனில் இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்ததும் இறுதிக் காலம் துவங்கிவிட்டது. நாம் வாழும் யுகம் இந்த இறுதிக்காலமே. ஆகவே நாம் உலக முடிவிற்கு வெகு அண்மையில் இருப்பவர்கள் என்ற கருத்தை புனித பேதுரு சொல்கிறார். இதே கருத்தில்தான் புனித பவுலடியாரும் "சகோதரர்களே, நான் சொல்வது இதுதான். இனியுள்ள காலம் குறுகியது... ஏனெனில் இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது” என்று குறிப்பிட்டார் (1 கொரி 7:29-31). இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காகவும், அவரோடு நாம் வாழப் போகும் முழுமையான வாழ்விற்காகவும் நாம் நம்மையே ஆயத்தப்படுத்திக் கொள்ளத்தான் இந்த அறிவுரைகள். உலக முடிவோ, ஆண்டவரின் இரண்டாம் வருகையோ ஆதிக் கிறிஸ்தவ மக்களுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவர்களிடையே ஆவலோடு எதிர்நோக்கும் ஒரு நம்பிக்கை மனத்தையே உருவாக்கியது. ஏன், அவர்கள் தங்கள் செப வழிபாடுகளில்கூட, “ஆண்டவராகிய இயேசுவே வாரும்" என்று தானே செபித்து முடித்தார்கள்! (திவெ 22:20). கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம் என்ன? நமது நம்பிக்கையின் ஊன்றுகோல் என்ன? நமது துன்பங்களில் நமக்கு ஆதரவுதான் என்ன? இப்படிப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை ஒன்றே ! அது நமக்காக பாடுபட்டு இரத்தத்தைச் சிந்தி, இறந்தோரினின்று மீண்டும் உயிர்த்த இயேசு கிறிஸ்துவே! இந்த மாபெரும் உண்மையைத்தான் ஆதித் திருச்சபை அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவந்தது.
இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழுச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கைகொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார் (1 பேது 1:21)
நற்செய்தி : யோவான் 21:1-19
கலிலேயாக் கடலருகே இயேசு திருத்தூதர்களுக்குக் காட்சியளித்ததும், அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளும் இன்றைய நற்செய்தி வாசகமாய் அமைகின்றன. சீடர்பால் இயேசுவின் பரிவன்பே இவ்வாசகத்தின் கரு.
துயர் துடைத்தல்
இரவு முழுவதும் வலை வீசியும் மீனொன்றும் கிடைக்காத நிலையிலே நிச்சயம் சீடர்களை வருத்தம் மேற்கொண்டிருக்கும். இவர்கள் சாப்பாடு, வாழ்க்கைத் தேவைகள் இவற்றிற்கெல்லாம் வழிவகுப்பது இவர்கள் பிடிக்கும் மீன்தானே? இப்போது இவர்களின் இக்கட்டான நிலையிலே இயேசு தோன்றி, இவர்கள் தேவைக்கு மேலாகவே மீன்கள் கிட்டச் செய்கிறார். “அன்னை எனப் பரிந்து, அப்போதைக்கப்போது அப்பன் எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் ; நின்னை எனக்கு என் என்பேன்? என் உயிர் என்பேனோ ? இன்னல் அறுத்து அருள்கின்ற என்குரு என்பேனோ ?” (திருவருட்பா) என்பது சீடரின் மனநிலையாய் இருந்திருக்குமன்றோ ? அன்றாடம் நம் வாழ்வின் துயர்துடைக்கும் இறைவனை நாமும் ஏத்துகிறோமா ? அவர் வலிந்து அளிக்கும் பெரும் கருணையை அன்றாடம் எண்ணி “அவர் ஆண்டவர் தாம்” (21:1) என்று வாய்விட்டுப் புகழ்கிறோமா?
பணிபுரிதல்
நம் தேவைகளிலே தூர நின்று உதவுபவர் என்பது மட்டுமல்ல, நம்மோடிருந்து நமக்காகச் செயல்புரிபவர் இயேசு. தம் சக்தியால் சீடர்கள் மிகுந்த மீன்களைப் பிடிக்கச் செய்த இயேசு, தாமே அச்சீடர்களுக்காக உணவு தயார் செய்கிறார். கரிநெருப்பு மூட்டி அவர் மீன்களைச் சுட்டுக் கொண்டிருந்தார் என்பதன் மூலம் (21:9) இரவு முழுவதும் பாடுபட்டுப் பசித்திருந்த சீடர்களுக்கு இயேசு பணிபுரிந்தார். அவர்களைப் பந்தி அமரச்செய்து உணவளித்தார் என்பது பெறப்படும். இங்கு இயேசு பணிபுரிதல் ஒருபுறம் இருக்க, அதே வேளையிலே, சீடர் அவரை ஆண்டவர் என்று அறிந்ததும் இச்செயல்வழி பெறப்படும். 80-90 விழுக்காடு ஒருவேளை உணவின்றி வாடும் இந்தியர்களுக்குக் கடவுளின் காட்சி உணவுவழிதான் என்பதை உணர்வோமா? கும்பி நிறைந்தால் கடவுள் வழிபாடும் பொருள்பெறும் என்பதை அறிந்து, பசியால் வாடும் மக்களுக்கு அன்றாடம் சிறிது உணவு தர முயல்வோமா!
உணவு கடவுளின் பராமரிப்பின் வெளிப்பாடு மட்டுமன்று. நாமும் இவ்வுணவுக்காக உழைக்க வேண்டும். எனவேதான், இயேசு “நீங்கள் இப்போது பிடித்த மீன்கள் சில கொண்டு வாருங்கள்" (21: 10) என்பார். “உழைக்க மனமில்லாத எவனும் உண்ணலாகாது” (2தெச 3:10) என்று கூறிய பவுலடியார் “நாங்கள் சோம்பித் திரியவில்லை. யாரிடமும் நாங்கள் இலவசமாக உணவு கொள்ளவில்லை... பாடுபட்டு உழைத்தோம்” (2 தெச 3:7-9) என்று எழுதுவது நம் எல்லோருக்கும் சவாலாயமைய வேண்டும்.
அன்பு தேடல்
நாம் அவரை அன்பு செய்யத் தொடங்காத நிலையிலே, நம்மை முதலில் அன்பு செய்தவர் ஆண்டவர். பேதுருவிடம் கேட்ட கேள்வியை நம்மிடமும் கேட்கிறார் இன்று. “நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" (21:15-17). ஆம் என்போமாயின், அடுத்துவரும் கட்டளை, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்பதாகும். நம்முடைய நிலையிலே, இக்கட்டளை வழி, பிறருக்கு, சிறப்பாக ஏழைகளுக்கு (ஆட்டுக்குட்டிகள்) அன்பு காட்ட, உதவி செய்ய அழைக்கப் படுகிறோம் என்று சொல்வதில் தவறில்லை. அன்பு தேடுகிறோமா? அன்பு செய்வோம்.
இவர்களைவிட நீ மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?
என் சாக்குத் துணியைக் களைகிறார்! திருச்சிராப்பள்ளி மணிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2019-ஆம் ஆண்டு கத்தார் நாட்டிலுள்ள தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர் ஓடி முடித்து விளையாட்டரங்கில் ஓய்ந்து நின்ற நேரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர் ஏறக்குறைய கிழிந்து நைந்துபோன ஷூ ஒன்றை அணிந்திருப்பது பலருடைய கண்களில் பட்டது. தன் பழைய கிழிந்த ஷூதான் தனக்கு லக்கி என்று இந்த இளவல் பெரிய மனத்துடன் பெருமைப்பட்டுக்கொண்டாலும், புதிய காலணிகள் வாங்குவதற்குக் கூட இயலாத இவருடைய பின்புலமும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படவில்லை என்ற விளையாட்டு அரசியலும் இங்கே தெளிவாகிறது. தன் தங்கத்தின் வெற்றிக்குப் பின்னாலும் தன்னுடைய கிழிந்த ஷூவைக் கழற்றத் துணியவில்லை கோமதி.
இவரின் வெற்றிக் களிப்பும், மகிழ்ச்சியும் இவரின் கிழிந்த காலணியைக் கழற்ற முடியவில்லை.
முதன் முதலாக வாங்கி உடைந்த பேனா, நம் லக்கியான சேலை, ஷர்ட், திருமண பட்டுச் சேலை, குருத்துவ அருள்பொழிவு திருவுடை, பழைய டைரி என நிறைய பழையற்றையும், கிழிந்தவற்றையும் நாம் இன்று நம்முடன் வைத்திருந்து பழமை பற்றிப் பெருமை கொள்கிறோம். பழமையான இவற்றை நாம் பாதுகாக்கக் காரணம் இவை நம் இறந்த காலத்தை, நம் வேர்களை நமக்கு நினைபடுத்துகின்றன.
ஆனால், சில நேரங்களில் – இல்லை, பல நேரங்களில் – நாம் தூக்கி எறியப்பட வேண்டிய பழையவற்றை இன்னும் தூக்கிக்கொண்டே திரிகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் நம் பழையவற்றை அகற்றிவிட்டு புதியவற்றை அருள இறைவன் வருகிறார் என்று நமக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றை பதிலுரைப்பாடலோடு (காண். திபா 30) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:
‘புகழ்ப்பா, திருக்கோவில் அர்ப்பணப்பா, தாவீதுக்கு உரியது’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல் மிக அழகான உருவகம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. ‘நீர் என் புலம்பலை களிநடனமாக மாற்றிவிட்டீர். என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்!’ (திபா 30:11). ‘புலம்பல்’ மற்றும் ‘சாக்குத்துணி’, ‘களிநடனம்’ மற்றும் ‘மகிழ்ச்சி’ என்ற ஒரே பொருள் கொண்ட சொற்கள் அடுத்தடுத்துப் பயன்படுத்தப்படுவதால், இங்கே ‘ஒருபோகு நிலை’ அல்லது ‘இணைவுநிலை’ என்னும் இலக்கியக்கூறு காணக்கிடக்கிறது.
தான் அணிந்திருக்கின்ற சாக்குத்துணியை கடவுள் அகற்றுவதாக தாவீது பாடுகிறார். இன்று சாக்கு என்பது ‘ஜனல்’ என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இது ஆடுகளின் மயிரிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த சாக்கு ஒரு விநோதமான பயன்பாட்டுப் பொருள். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, சீனி போன்றவை சேமிக்கப்படுவதும் சாக்கில்தான். அடுப்பறையில், கழிவறைக்கு வெளியில் ஈரம் அகற்றும் கால்மிதியாகப் பயன்படுத்துவதும் சாக்குதான். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில் நிழலுக்கு, கவிழ்த்து வைக்கப்பட்ட பஞ்சாரத்துக் கூடையிலிருக்கும் கோழிக்குஞ்சுகளை பருந்துகளின் பார்வையிலிருந்து காப்பாற்ற கூடையின் மேல், பெரிய பாத்திரத்தை சூடு பொறுத்து இறக்க கைகளில், அப்பாத்திரத்தின் கரி தரையில் படியாமல் இருக்க தரையில், பழைய பாத்திரங்களை மூட்டை கட்டி வண்டியில் ஏற்றி வீடு மாற்ற என்று இதன் பயன்பாடு மிகவே அதிகம். நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தடைசெய்யப்பட்டபின் இப்போது சாக்குப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது நம் ஊரில். விவிலியத்தில் சாக்கு மூன்று பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஒன்று, துக்கம் அல்லது சோகம். தன் மகன் யோசேப்பு கொல்லப்பட்டான் என்று தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் யாக்கோபு சாக்கு உடை அணிந்து துக்கம் கொண்டாடுகிறார் (காண். தொநூ 37:34). தன் இனத்தார் அழிக்கப்படப் போகின்றனர் என்று கேள்விப்பட்ட எஸ்தர் அரசி சாக்கு உடை அணிகின்றார் (காண். எஸ் 4:1-2). தன் மகனின் இறப்பு செய்தி கேட்டவுடன் சாக்கு உடை அணிகின்றார் தாவீது (காண். 2 சாமு 42:25). இரண்டு, மனமாற்றம். ஏறக்குறைய முதல் பொருளை ஒட்டியதுதான். இறைவாக்கினர் யோனாவின் செய்தியைக் கேட்ட நினிவே நகரம் சாக்கு உடை அணிந்துகொள்கிறது (காண். யோனா 3:8, மத் 11:21). மூன்று, சேமிப்பு பை. எகிப்துக்கு உணவு சேகரிக்க வந்த தன் சகோதரர்களின் கோணிப்பையில் தன் வெள்ளித்தட்டை வைத்து தைக்கிறார் யோசேப்பு (காண். தொநூ 42:25).
‘என் சாக்குத் துணியை நீர் களைகிறீர்’ என்று தாவீது பாடும்போது, தன்னுடைய ‘துக்கத்தையும்,’ ‘பாவத்தையும்’ இறைவன் களைவதாக முன்மொழிகின்றார் தாவீது. கடவுள் சாக்குத்துணியை அகற்றினால் மட்டும் போதுமா? நிர்வாணத்தை அவரே மறைக்கின்றார். எப்படி? மகிழ்ச்சியால்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-32,40-41) திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் கைது செய்யப்பட்டு தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தப்படுகின்றனர். தலைமைச் சங்கம்தான் இயேசுவுக்குச் சிலுவைத்தீர்ப்பிடுமாறு பிலாத்துவை வலியுறுத்தியது. தங்களுடைய ஆண்டவரும் போதகருமான இயேசுவைக் கொலைக்கு உட்படுத்திய அதே சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும் நிறுத்தப்படும்போது இயல்பாக அவர்களின் உள்ளத்தில் எழுகின்ற உணர்வு ‘பயம்.’ ‘நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா?’ என்று தலைமைக்குரு கேட்டபோது, ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமில்லையா?’ என்று எதிர்கேள்வி கேட்கின்றனர் திருத்தூதர்கள். இந்தப் பதிலில் இவர்களின் பயமற்ற நிலையையும் அதே வேளையில், ‘நீ ஒரு மனிதன்தான்!’ என்ற தலைமைக் குருவையே எதிர்த்து நிற்கும் இறைவாக்கினர் துணிச்சலையும் பார்க்கின்றோம். இவர்களின் இந்தப் பதிலால் இவர்கள் நையப்புடைக்கப்படுகின்றனர். ஆனாலும் விடுதலை செய்யப்படுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட திருத்தூதர்கள், ‘இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்திலிருந்து வெளியே சென்றனர்’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா.
அரசவையிலிருந்து பொன்னும் பரிசிலும் பெற்று வெளியே வந்தால் ஊரார் வியப்புடன் பார்த்து வாயாரப் புகழ்வர். நெற்றி முகர்வர். நன்றாய் அடிபட்டு, கிழிந்த ஆடை, உடைந்த பற்கள். வழியும் இரத்தம், கலைந்த தலை என்று வெளியே வந்தால் எல்லாரும் ஏளனம் செய்வர். ஒதுங்கிச் செல்வர். ஆனால், திருத்தூதர்கள் அச்சம் அற்றவர்களாக, அவமதிப்பை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பதோடு, இவற்றுக்காக மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
ஆக, ‘அச்சம்’ என்னும் சாக்குத்துணியை திருத்தூதர்களிடமிருந்து அகற்றி ‘மகிழ்ச்சி‘ என்ற ஆடையை கடவுள் இவர்களுக்கு அணிவிக்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திவெ 5:11-14) யோவான் ‘கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைக்’ காட்சியில் காண்கின்றார். ‘பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லாமல், இகழப்பட்டு, மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, அடிப்பதற்காக இழுத்துச்செல்லபட்ட ஆட்டுக்குட்டி போல’ (காண். எசா 52:13-53:12) இருந்த இயேசு, ‘வல்லமை, செல்வம், ஞானம், ஆற்றல், மாண்பு, பெருமை, புகழ்’ என்னும் ஏழு குணங்களைப் பெருகிறார். யூத நம்பிக்கைப்படி கடவுள் கொண்டிருக்கும் அல்லது கடவுளிடம் நிறைவாக இருக்கும் ஏழு குணங்கள் இவை. கடவுளுக்கு உரித்தான ஏழு நிறைகுணங்களும் இப்போது இயேசுவுக்கு வழங்கப்படுகின்றன.
ஆக, ‘அவமானம்‘ என்னும் சாக்குத்துணியை இயேசுவிடமிருந்து அகற்றி, ‘மாட்சி‘ என்ற ஆடையை கடவுள் அவருக்கு அணிவிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 21:1-19) யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த இயேசு கலிலேயாவில் தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை இரண்டு நிலைகளில் பதிவு செய்கிறார் யோவான். முதலில், லூக்கா நற்செய்தில் செய்வதுபோல, தம் சீடர்களோடு இணைந்து உணவு உண்கிறார் இயேசு. இரண்டவதாக, மூன்று முறை தம்மை மறுதலித்த பேதுருவை, ‘என்னை அன்பு செய்கிறாயா?’ என்று மூன்று முறை கேட்டு, தலைமைத்துவத்தால் அவரை அணிசெய்கிறார்.
எருசலேமிலிருந்து கலிலேயா திரும்புகின்ற சீடர்கள் தாங்கள் முதலில் செய்துவந்த மீன்பிடித்தொழில் செய்யப் புறப்படுகின்றனர். இது இவர்களுடைய ஏமாற்றத்தின், விரக்தியின், சோர்வின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அவர்களை அழைத்த நிகழ்வில் போலவே (காண். லூக் 5:1-11) காலியான வலைகள் மற்றும் காலியான வயிறுகளோடு காய்ந்திருக்கின்ற சீடர்களுக்கு மிகுதியான மீன்பாட்டை அருளுகின்றார் இயேசு. அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியதை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக, தாயன்போடு, ‘பிள்ளைகளே’ என் அவர்களை அழைத்து, ‘கரியினால் தீ மூட்டி உணவு தயாரித்து’ அவர்களின் பசியைப் போக்குகின்றார். தொடர்ந்து, சீமோன் பேதுருவோடு தனித்து உரையாடும் இயேசு, ‘நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்பு செய்கிறாயா?’ என்று கேட்டு, ‘என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,’ ‘என் ஆடுகளை மேய்,’ ‘என் ஆடுகளைப் பேணி வளர்’ என்று தலைமைத்துவப் பொறுப்பை அவருக்கு அளிக்கின்றார். மேலும், பேதுருவின் இறுதிக்காலம் எப்படி இருக்கும் என்பதையும் முன்னுரைக்கும் இயேசு, ‘என்னைப் பின்தொடர்!’ என்று தற்கையளிப்பிற்கு அவரை அழைக்கின்றார்.
ஆக, ‘குற்றவுணர்வு‘ என்னும் சாக்குத் துணியை சீடர்களிடமிருந்து அகற்றும் இயேசு, ‘பொறுப்புணர்வு‘ என்ற ஆடையால் அவர்களை அணிசெய்கின்றார்.
இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில், ‘அச்சம்’ என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, ‘மகிழ்ச்சி’ என்னும் ஆடையும், இரண்டாம் வாசகத்தில், ‘அவமானம்’ என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, ‘மாட்சி’ என்னும் ஆடையும், நற்செய்தி வாசகத்தில், ‘குற்றவுணர்வு’ என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, ‘பொறுப்புணர்வு’ என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது.
இன்று நம்மிடம் இருக்கும் ‘அச்சம்,’ ‘அவமானம்,’ மற்றும் ‘குற்றவுணர்வு’ என்ற சாக்குத் துணிகளை அகற்றி, ‘மகிழ்ச்சி,’ ‘மாட்சி,’ ‘பொறுப்புணர்வு’ என்னும் ஆடைகளை நமக்கு அணிவிக்கின்றார் கடவுள்.
எப்படி?
- ‘அச்சம்’ அகற்றி ‘மகிழ்ச்சி’
நம் இருப்பை நாம் மறுக்கும்போது, அல்லது பிறருடைய இருப்பை அதிக மதிப்பிடும்போது நமக்கு அச்சம் வருகிறது. எடுத்துக்காட்டாக, தலைமைக் குருவைப் பார்த்து மறைமுகமாக, ‘நீரும் ஒரு மனிதன்தான். உமக்கு அச்சப்படத் தேவையில்லை’ என்று சொல்கின்றனர் திருத்தூதர்கள். பல நேரங்களில் இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அல்லது இருப்பதை மிகைப்படுத்திப் பார்த்து நாம் அச்சம் கொள்கிறோம். சிறிய தலைவலி வந்தால் புற்றுநோய் வந்துவிட்டதாகவும், சிறிய பிரச்சினையை பெரிய ஆபத்தாகவும் நினைக்கின்றோம். தாங்கள் யார் என்றும், தங்களுடன் கடவுள் இருக்கின்றார் என்றும் அறிந்துகொள்கின்ற சீடர்கள், தலைமைக்குரு யார் என்றும் தெரிந்துகொள்கின்றனர். இவ்வளவு நாளாக, தாங்கள் கொண்டிருந்த மிகைப்படுத்துதலை அகற்றி, ‘நீயும் ஒரு மனிதன்தான். உன்னைவிட கடவுள் இருக்கிறார்’ என்று துணிவு கொள்கின்றார். ஆக, மிகைப்படுத்துதல் மறைந்தாலே அச்சம் மறைந்துவிடும். அரசுத் தேர்வில் தோற்றுவிட்டால் வாழ்விலேயே தோற்றுவிட்டதுபோல நாம் அச்சப்படக் காரணம் நம்முடைய மிகைப்படுத்துதலே. ஆக, மிகைப்படுத்துதல் மறைந்து, மனிதர்களை மனிதர்களாக, தேர்வை தேர்வாக, பிரச்சனையை பிரச்சினையாகப் பார்க்கும்போதும், இவற்றை எல்லாம் விட பெரிய கடவுளை நம் அருகில் வைத்துக்கொள்ளும்போதும் நம் அச்சம் மறைந்து நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது.
- ‘அவமானம்’ அகற்றி ‘மாட்சி’
இன்று நாம் ஒருவரின் பின்புலம், இருப்பு, கையிருப்பு, பையிருப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பார்க்கும்போது, அவரை நாம் நம்மைவிடத் தாழ்வானவர் என எண்ணி, இகழ்ச்சியாகப் பார்ப்பது சில நேரங்களில் நடக்கும். அல்லது இதே காரணங்களுக்காக நாமும் மற்றவர்களால் அவமானத்திற்கு உள்ளாகியிருப்போம். அவமானம் அல்லது வெட்கம் என்பது நம்முடைய ஆளுமையைச் சீர்குலைக்கும் பெரிய காரணி. ‘தனக்குத் தானே பொய்யாய் இருக்கும் ஒருவர் அவமானத்தால் கூனிக்குறுகுவார்’ என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. எடுத்துக்காட்டாக, என் அறையின் இருட்டின் தனிமையில் நான் ஒரு மாதிரியாகவும், வெளியில் வேறு மாதிரியாகவும் இருக்கும்போது, என்னை அறியாமல் என் மனம் வெட்கப்படும். ஏனெனில், என் மனத்திற்கு என் அறையின் இருட்டில் நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியும். நமக்குள்ளே நாம் கொள்ளும் அவமானம் குறைய வேண்டுமெனில் எனக்கு நானே பொய் சொல்வதை நான் குறைக்க வேண்டும். பிறரால் வரும் அவமானம் குறைய வேண்டுமெனில் நான் பொறுமை காக்க வேண்டும். ஆக, பொய்யைக் குறைக்கும்போது, பொறுமையாய் இருக்கும்போது அவமானம் மறைந்து மாட்சி பிறக்கும்.
- ‘குற்றவுணர்வு’ அகற்றி ‘பொறுப்புணர்வு’
நம்மை வெற்றிப்பாதையிலிருந்து பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரிய காரணி குற்றவுணர்வு. நாம் கடந்த காலத்தில் செய்த தவறும், அந்தத் தவறு நம்மில் உருவாக்கிய காயமும் நம்மை முன்நோக்கிச் செல்லவிடாது. ‘ஐயோ! நான் இப்படி,’ ‘நான் இப்படித்தான்,’ ‘என்னால் திருந்த முடியாது,’ ‘என் பழைய சுமை கடினமாக இருக்கிறது’ என்று சோர்வும், விரக்தியும் கொண்டிருந்தால் நம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. முதல் ஏற்பாட்டில் மிக அழகான வாக்கியம் இருக்கிறது: தானும் தன் மனைவியும் தன் நிலமும் கடவுளால் சபிக்கப்பட்டவுடன், ஆதாம் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ எனப் பெயரிடுகின்றான். இதுவரை ‘பெண்’ (காண். தொநூ 2:23) என அறியப்பட்டவள் இப்போது ‘உயிர் வாழ்வோர் அனைவரின் தாயாக’ (காண். தொநூ 3:20) மாறுகிறாள். ‘ஐயோ! பாவம் செய்தாயிற்று! கீழ்ப்படியவில்லை! கடவுளின் கட்டளை மீறிவிட்டேன்!’ என ஆதாமும், ஏவாளும் குற்றவுணர்வுடன் புலம்பிக் கொண்டே இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கின்றனர். நாமும் நம் பழைய பாவக் காயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், கொஞ்சம் நன்றாகச் சிரித்தாலே, அல்லது தங்களுக்கென ஒரு நல்ல பொருளை வாங்கினாலே குற்றவுணர்வு கொள்வர். இதுவும் ஆபத்தானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், நல்ல பொருள்களைப் பயன்படுத்தவும், மதிப்பாக இருக்கவும், மதிப்பானவற்றோடு, மதிப்பானவர்களோடு உறவு கொள்ளவும் குற்றவுணர்வுகொள்தல் கூடாது. மதிப்பான இந்தப் பொருளை வைத்து நான் எப்படி என் மதிப்பைக் கூட்ட முடியும்? என்று நினைக்க வேண்டுமே தவிர, ‘ஐயோ! எனக்கு தகுதியில்லை இதற்கு!’ என்று அழுது புலம்பக்கூடாது. ‘நான் தவறிவிட்டேன். நான் மறுதலித்தேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கிறேன்’ என சரணாகதி ஆகிறார் பேதுரு. ஆக, குற்றவுணர்வு மறையும்போது பொறுப்புணர்வு தானாக வந்துவிடுகிறது.
இறுதியாக,
பழைய சாக்குத் துணிகளை இறைவன் அகற்றி புதிய ஆடைகளை நமக்கு அணிவிக்க அவர் முன்வரும்போது, நாம் கொஞ்சம் எழுந்து நிற்போம். அப்போதுதான், ‘மகிழ்ச்சி என்னும் ஆடை அணிந்து களிநடனம் செய்ய முடியும்’ – இன்றும் என்றும்!