இயேசு உயிர்த்தார். உயிர்த்து தன் சீடர்களுக்குக் காட்சித் தந்தார் என்பதை இன்றைய நற்செய்தி பறைசாற்றுகிறது.
உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன். அவர் இங்கு இல்லை. உயிர்த்துவிட்டார் (லூக் 24:5-6). கழுமரத்தில் அவரை ஏற்றிக் கொன்றுபோட்டார்கள். கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார். அவரோடு உண்டு குடித்த நாங்களே சாட்சிகள் என்றனர் (அப். பணி 10:40-42).
ஆம் இன்றைய வார்த்தை வழிபாடு மூன்று நிலைகளில் நம் வாழ்வை அமைக்க அழைப்பு விடுக்கிறது.
- மன்னிப்பின் மூலம் சமாதானம் : என் தந்தை என்னை அனுப்பியது போல நான் உங்களை அனுப்புகிறேன். நான் கொண்டு வந்த சமாதானத்தை உலகிற்குக் கொடுங்கள் என்கிறார்.
- மன்னிப்பின் மூலம்தான் சமாதானம் உண்டாகும். எனவே ஒப்புரவாகும் திருவருட்சாதனத்தை வழங்கி யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
- நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
புனித தோமையாரின் விசுவாச வாழ்வையும், சிறந்த மனிதத் தன்மையையும் விவிலியத்தில் நாம் காண முடியும்.
நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா. 11:16) என்று இயேசுவோடு இணைகின்ற மனப்பக்குவம்.
தன் தந்தையைப் பற்றி கூறிய இயேசுவிடம், நீ எங்கு செல்கிறீர் என்பதே தெரியாது இருக்க நீர் போகும் வழியை எப்படி அறிவோம் (யோவா. 14:5). இது அவரது திறந்த உள்ளம்.
சீடர்கள் தாம் இயேசுவைக் கண்டோம் என்றபோது நான் அவரது தழும்பைப் பார்த்து, விலாவில் விரலை விட்டால் ஒழிய நான் நம்பமாட்டேன் (யோவா. 20:25) என்றது - இவரது திறந்த மனம்.
ஆண்டவர் இயேசு காட்சி தந்தபோது தன் இதய கண் திறக்கப்பட என் ஆண்டவரே என் தேவனே என்று விசுவாச அறிக்கையிட்டார் (யோவா. 20:28).
இந்த விசுவாசம்தான் பிறரோடு பகிர்ந்துகொள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.
நம் விசுவாசம் நம்மில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்
இன்றைய முதல் வாசகம் இதைத்தான் காட்டுகிறது. ஆதி கிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள். அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள். தங்கள் உடைமைகளை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர்.
பகிர்வதே கிறிஸ்தவ வாழ்வு - இயேசு தன்னையே நமக்குப் பிட்டுக் கொடுத்தார் - பகிர்ந்தளித்தார்.
தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தன்னைப் பகிர்ந்தளித்தார். ஆதலால் வானகத் தந்தை எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அளித்து அவரை உயர்த்தினார் (பிலி. 2:7-9).
இன்றைய திருச்சபை ஒரு சவாலாக அமைய அழைக்கப் படுகிறது. அதிகாரத்தின் நிறுவனமாக அல்ல. மாறாக பகிந்தளிக்கும் திருச்சபையாக இது தன்னையே வெறுமை யாக்குவதின் மூலம் தான்.
- உலகப் பொருட்களைப் பகிர்வது
- திருவருட்சாதனங்களைப் பகிர்ந்தளிப்பது
- அதோடு நாம் பெற்ற விசுவாசத்தைப் போதித்துப் பிறருக்குக் கொடுப்பது.
நம்பிக்கை விடுதலை அளிக்கும்
கபிரியேல் மார்சல் என்னும் பிரான்சு நாட்டு தத்துவ ஞானி, நம்பிக்கை என்றால் என்ன என்பதை விளக்க ஓர் அழகான உவமையை நம் கண்முன் வைக்கின்றார். நாம் நமது நண்பரை இரயிலில் ஏற்றிவிட இரயில் நிலையத்திற்குச் செல்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவர் இரயிலுக்குள் ஏறிய பிறகு கூட அவரோடு பேசிக்கொண்டு நிற்கின்றோம். வண்டி புறப்படுகின்றது. நாம் கையசைக்கின்றோம். மெல்ல, மெல்ல நமக்கும். நமது நண்பருக்குமிடையே உள்ள தூரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒரு கட்டத்திலே நமது நண்பரை நம்மால் பார்க்க முடியவில்லையென்றாலும் நமது மனம் முழுவதும் அவரது பிரசன்னம் நிறைந்திருக்க, அவரோடு நமது மனம் பயணம் செய்கின்றது.
இந்த உவமையிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை உண்டு. நமது மனத்திற்கு நமது உடலைத் தாண்டிச் செல்லும், கடந்து செல்லும், பிரிந்து செல்லும், பறந்து செல்லும் ஆற்றல், வல்லமை, சக்தி உண்டு! இந்த ஆற்றலைப் பயன்படுத்தி நாம் கடவுளுடைய பாதத்தைத் தொடலாம். இப்படிக் கடவுளின் திருவடிகளைத் தொட நாம் மேற்கொள்ளும் திருப்பயணத்திற்குப் பெயர்தான் நம்பிக்கை. கடவுளின் பாதத்தில் நாமிருக்கின்றோம் என்ற எண்ணம், நம்பிக்கை நமது மனத்தில் எழும்போது அங்கே அச்சமிருக்காது, அங்கே அவநம்பிக்கையிருக்காது (நற்செய்தி].மாறாக அங்கே மாறாத மகிழ்ச்சி இருக்கும் (இரண்டாம் வாசகம்).
இன்றையச் சூழலிலே பலருடைய மனங்களில் அச்ச உணர்வுகள்! கடற்கரையிலிருக்கும் காகங்கள் ஊர் பக்கம் பறந்தால்கூட மீண்டும் சுனாமி என்னும் அரக்கன் வந்துவிடுவானோ என்ற பயம். அனைத்தையும் இழந்த எங்கள் வாழ்க்கையில் இனியொரு இனிய உதயம் பிறக்குமா? என்ற சந்தேகம் பலருடைய மனதிலே எழுந்து மறைந்துகொண்டிருக்கின்றது. இப்படி கலங்கி நிற்கும் மக்களுக்கு ஆண்டவர் தரும் ஆறுதல் என்ன?
எனதருமைச் செல்வங்களே! நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை! முதலில் நீங்கள் முதல் கிறிஸ்துவர்களைப் போல் ஒருவரையொருவர் நம்புங்கள். நம்பிக்கை உங்களை ஒரே குடும்பமாக்கும். எங்கே தனிமை இல்லையோ அங்கே அச்சமுமிருக்காது. அவநம்பிக்கையுமிருக்காது.
இரண்டாவதாக எனது சீடர்களைப் போல் என்மீது நம்பிக்கை வையுங்கள். இன்றைய நற்செய்தியிலே என் சீடர் தோமா கூறுவது போல, நான் ஆண்டவர். இந்த உலகத்தை ஆண்டவர். ஆள்பவர், ஆளப் போகின்றவர். நான் கடவுள். நான் எல்லாத் துன்பங்களையும் துயரங்களையும் கடந்து நிற்பவர்.
எனது காலடியில் நீங்கள் இருப்பதாக நினையுங்கள் - நம்புங்கள். உங்கள் நினைவு - உங்கள் நம்பிக்கை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.
மேலும் அறிவோம் :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3).
பொருள்: அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.
ஓர் அப்பா தனது 12 வயது மகனிடம் தன் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு வேப்ப மரத்தில் ஏறி, அதன் ஒரு கிளையில் அமர்ந்து கீழே குதிக்கச் சொன்னார். முதலில் அச்சிறுவன் மறுத்தாலும், அவன் அப்பா அவனைப் பிடித்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்ததால் அச்சிறுவன் குதித்தான். ஆனால் அப்பா அவனைத் தாங்கிப் பிடிக்கவில்லை; சிறுவன் கீழே விழுந்து, கால் பிசகி அழுதான். அவன் அப்பா அவனிடம், “மகனே! உனக்கு நான் ஒரு முக்கியமான பாடம் கற்றக்கொடுக்க விரும்பினேன். அது என்னவென்றல், உலகில் எவனையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே" என்று சொல்லிச் சிரித்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் உலகில் யாரும் எவரையும் முழுமையாக நம்ப முடியவில்லை. நண்பர்கள் தங்களது நண்பர்களை நம்புவதில்லை. ஒருவர் கடவுளை நோக்கி, "கடவுளே, எனது நண்பர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; என் எதிரிகளை நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்று செபித்தார்! இந்நிலையில் கடவுள் நம்பிக்கையும் தேய்ந்த கொண்டு போகிறது. "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக் 18:8) என்று பெரிய கேள்வியைக் கேட்டுள்ளார் கிறிஸ்து.
இன்றைய நற்செய்தியில், அறிவியல் மூளை கொண்ட தோமா, கிறிஸ்துவை கண்ணால் கண்டு அவரைக் கையால் தொட்டுப் பார்த்தால் மட்டுமே அவர் உயிர்த்தார் என்பதை நம்புவதாகச் சொல்லுகிறார். ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டபோது, “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" (யோவா 20:28) என்று நம்பிக்கை அறிகையிடுகின்றார். அவநம்பிக்கையின் அதாலப் பாதாளத்தில் விழுந்த தோமா, நம்பிக்கையின் சிகரத்தைத் தொடுகிறார். தோமாவின் அவநம்பிக்கை நமது நம்பிக்கைக்கு வித்தாக அமைந்துள்ளது. தோமாவின் அவநம்பிக்கையைக் கண்டித்து கிறிஸ்து அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவா 20:29) எனக் கூறினார். நாம் தோமாவைவிடப் பேறுபெற்றவர்கள். ஏனெனில் நாம் கிறிஸ்துவைக் காணாமலேயே அவரை நம்புகிறோம்.
மேலும் தோமாவின் நம்பிக்கை, கிறிஸ்துவின் பாடுகளுக்கும் அவருடைய உயிர்ப்புக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத தொடர்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. உயிர்த்த ஆண்டவர் தம் உடலில் இருந்த பாடுகளின் தழும்பைக் காட்டுகின்றார். வரலாற்று இயேசு வேறு, நம்பிக்கையின் கிறிஸ்து வேறு என்று ஒரு சிலர் கிறிஸ்துவைக் கூறுபோடுகின்றனர். கிறிஸ்து தமது உடலில் இருந்த தழும்புகளைக் காட்டியதன் மூலம் வரலாற்று இயேசுவே நம்பிக்கையின் கிறிஸ்து என்பதை எண்பிக்கிறார்.
நம்பிக்கையின் உச்சக்கட்டம் கடவுளிடம் சரணடைவதாகும். தோமா, “என் ஆண்டவரே! என் கடவுளே!" என்று கூறிக் கிறிஸ்துவிடம் சரணடைந்தார். அவ்வாறு செய்ய நமது நம்பிக்கை நமக்குக் கை கொடுக்கிறதா? நமது நம்பிக்கை உயிரோட்டம் உள்ள நம்பிக்கையா?
ஒருவர் ஒரு மலை உச்சியின் விளிம்பில் நடந்தபோது, கால் இடறிக் கீழே விழுந்தார். நல்ல வேளையாக மலையின் இடையிலிருந்த ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு, “கடவுளே என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார். இறுகப் பற்றிக் கொண்டிருந்த மரக் கிளையிலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் கீழே குதிக்கும்படி கடவுள் அவரைக் கேட்டார். ஆனால் அவர் கிளையைப் பிடித்துக் கொண்டே, “கடவுளே என்னைக் காப்பாற்று " “ என்று கத்தினார். அவரைப் போலவே நாமும் பணம், பதவி, பாலின்பம் போன்ற கினைகளைப் பற்றிக் கொண்டு கடவுள் நம்மைக் காப்பாற்றும்படி கேட்கின்றோம். ஆனால் கடவுள் கூறுவது: " நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" ( மத் 6:24). நம்பிக்கையின் தந்தை எனப்படும் ஆபிரகாம்,"தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்" (எபி 11:8). எனவே அவர் சரியான பாதையில் சென்றார். "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது" (எபி 11:4).
நமது நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும். பொன் எவ்வாறு நெருப்பில் புடமிடப்படுகிறதோ அவ்வாறே நமது நம்பிக்கையும் புடமிடப்பட வேண்டும் என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் கூறுகிறார் தூய பேதுரு. நாம் துன்புறும்போது, “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுகிறவர்கள் பேறு பெற்றோர்" (மத் 5:10) என்ற ஆண்டவரின் அருள்வாக்கை நினைவுகூர வேண்டும். கடவுள் நம்மைக் கண்டிப்பாரா? “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்" (எபி 12:6). எனவே, நாம் துன்புறும்போது அதைக் கடவுளின் சாபமாகக் கருதாமல், கடவுளின் அன்பின் வெளிப்பாடாகக் கருத வேண்டும்.
நம்பிக்கை மட்டும் போதாது; நம்பிக்கை அன்பு மூலம் எண்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ மதத்தின் சுருக்கம், "அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை” (கலா 5:6). தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறையை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது. "நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்" (திப 2:44). அவர்களிடம் நம்பிக்கையும் அன்பும் இணைந்திருந்தது. மன ஒற்றுமையும் பகிர்வும் கோலோச்சியது. திருச்சபையை ஆவியின் இயக்கமாக, அன்பியமாகக் கட்டி எழுப்புவது காலத்தின் கட்டாயமாகும்.
திருமணமான ஒரு பெண்ணிடம், "அன்பு பெயர்ச் சொல்லா? வினைச் சொல்லா? ” என்று கேட்டதற்கு அவர் கூறியது: "என் கணவர் உள்ளூரில் இருக்கும்போது அன்பு வினைச் சொல்; அவர் வெளியூர் போய்விட்டால் அன்பு வெறும் பெயர்ச் சொல்." அன்பு என்ற பெயர்ச் சொல்லை வினைச் சொல்லாக மாற்றுவதே நமது கிறிஸ்தவ அழைத்தலாகும். "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (யோவா 3:18).
ஒரு நோயாளிக்குக் கழுத்தில் கட்டி இருக்கிறது. ஆனால் மருத்துவர் அறுவைச் சிகிச்சையை அவர் வயிற்றில் செய்கிறார். ஏன்? “தன்னை நம்பினவர்களின் கழுத்தில் கத்தி வைக்க மாட்டார்” அந்த மருத்துவர். மனிதர்கள் தங்களை நம்பினவர்களின் கழுத்தில் ஒருவேளை கத்தி வைக்கலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார். கடவுளை முழுமையாக நம்புவோம். நமது நம்பிக்கை வீண் போகாது, “நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (எபி 11:1).
ஐயுறுவது பயனுள்ளது
"உதட்டளவில் மறையுண்மைகளை நம்பிக்கை அறிக்கை செய்வதைவிட, தேவையான அளவு நியாயமான வகையில் ஐயுறுவது பயனுள்ளது”, அறிஞர் டென்னிசனின் இந்தக் கூற்று ஆழமான சிந்தனைக்குரியது. இறை நம்பிக்கையை ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்துவது தவறல்ல.
திருத்தூதர்களிலேயே சற்று வித்தியாசமானவர் தோமா. கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு மாறுபட்ட பரிமாணம்.
சிறுவன் ஒருவன் தன் தந்தையின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உற்சாகமாகச் சொன்னானாம். “அப்பா, அப்பா, நான் உங்க அம்மாவைக் கட்டிக்கப் போறேன்" என்று. சற்று அதிர்ச்சி அடைந்த தந்தை அதட்டினார்: “சீச்சீ, என்ன பேச்சு இது? அதுவும் இந்த வயதில்”. மகன் கேட்டான்: “நீங்க மட்டும் என் அம்மாவைக் கட்டிக்கலாம், நான் உங்க அம்மாவைக் கட்டிக்கக் கூடாதோ!” என்ன பதில் சொல்வது?
நம்பிக்கை தொடர்பாக நாம் எழுப்பும் கேள்வி, இப்படிச் சிறுபிள்ளைத்தனத்தால் அல்ல, விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல, கிண்டல் ஏளனத்துக்காக அல்ல. வலுப்படுத்திக் கொள்வதற்காக நம்பிக்கையை வளப்படுத்திக் கொள்வதற்காக!
துன்பப்படாதவன் வாழவே இல்லை
தோல்வியுறாதவன் முயலவே இல்லை
விம்மியழாதவன் சிரித்ததே இல்லை
சந்தேகப்படாதவன் சிந்தித்ததே இல்லை
தட்டுத்தடங்கல் இல்லாத தார்ச் சாலையில் அலுங்காமல் குலுங்காமல் செல்லும் சொகுசுப் பேருந்து அல்ல நம்பிக்கை வாழ்வு. மாறாக அது காட்டுப் பாதையில் செல்லும் மாட்டுவண்டி. கடல் அலைகளில் தத்தளித்து மிதக்கும் கட்டுமரம்.
"அழியக் கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1பேதுரு 1:7). இறை நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும் என்று தேவையோ நியதியோ இல்லை. இருப்பினும், சோதனையும், துன்பமும் சந்தேகமும் ஊடுருவாத நம்பிக்கை வாழ்வு ஒன்று இல்லை. “என் அன்பார்ந்த மைந்தர் இவரே" (மத்.3:17) என்று இறைத்தந்தையைப் பூரிக்க வைத்த இயேசுவும் “என் இறைவா... ஏன் என்னைக் கைவிட்டீர்? " (மத்.27:46) என்ற கதறும் காலமும் இருந்தது.
'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கைகளை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்" (யோவான். 20:25) என்று கூறிய தோமாவை மட்டமாகக் கருதத் தேவையில்லை. அந்த சந்தேகத்தில் கூட அவருடைய எளிய உள்ளமும், உண்மையை அரியத் துடிக்கும் ஆர்வமும் மிளிரவில்லையா? இங்குகூட தோமா ஐயுற்றது இயேசுவை அல்ல. உயிர்த்த இயேசு பற்றி அவருடைய தோழர்கள் கொடுத்த தகவலைத்தான். அவர் தனது சொந்த அனுபவத்தில் தன் இறை நம்பிக்கையைக் கட்டி எழுப்ப விரும்பினார். அதில் என்ன தவறு? இயேசுவின் மீது தோமாவுக்கு அபார அன்பு இருந்தது. 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்" (யோவான் 11:16) என்று வீரமுழக்கம் செய்தவர்தானே அவர்!
"காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'” என்று இயேசு சொன்னாரே தவிர “காண ஆசைப்படுவது தவறு" என்று கூறவில்லையே! ஏனோதானோவென்று பட்டும்படாமலும் தொட்டும் தொடமலும் வாழும் வாழ்வைவிட, இயேசுவையும் அவருடைய போதனை களையும் சந்தேகித்துக் கேள்விகேட்டு ஆய்ந்தறிந்து பின் அவருக்கு அடி பணிந்து முற்றிலும் சரணடைந்து வாழும் வாழ்வு பன்மடங்கு மேலானது. “நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" (யோவான் 20:28) என்ற தோமாவின் சொற்கள் அதைத்தானே உணர்த்துகின்றன! விசுவாசத்துக்கு விடைதேடுவதோ, விளக்கம் கேட்பதோ அப்படி ஒன்றும் பெரிய தவறல்ல. “நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேதுரு 3:15)
சந்தேகம், சோதனை, துன்பம் இவற்றால் பதம் பார்த்துப் பக்குவம் பெற்ற நம்பிக்கை வாழ்வு கனிகள் நிறைந்தது (தி.ப.2:42-47) தொடக்கக் கால கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கை வாழ்வு அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் தங்கள் முழு வாழ்வையும் மீட்கப்பட்ட வாழ்வாகக் கருதினர். செப வாழ்வு, சமூகப் பொருளாதார வாழ்வு என்றெல்லாம் பிளவுபடுத்திப் பார்த்ததில்லை. அவர்களுடைய கொள்கை களுக்கும் செயல்களுக்கும் இடையே எவ்வித இடைவெளியும் இருந்த தில்லை. அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் இடையே பெரிய மலையோ பள்ளத்தாக்கோ இல்லை.
சுவாமி அ.ம. வரப்பிரசாதம், சே.ச. (ஒரு காலத்தில் தமிழக இயேசு சபை மாநிலத் தலைவராக இருந்தவர்) ஆழமான சிந்தனையாளர். "உள்ளதைச் சொன்னால்” என்ற அருமையான அவரது நூலில் ஒரு கார்ட்டூன். உறுத்தலுக்கும் வருத்தத்துக்குமிடையே நான் மிகவும் இரசித்த கேலிச் சித்திரம்.
அழகான ஒரு மேசை. அதன்மேலே முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி. மேசை முழுவதும் பரப்பிக் கிடந்தன அழகுச் சாதனங்கள். கண்ணாடிக்கு முன்னே எலும்பும் தோலுமாக இருமிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி. அந்த மனிதன் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருக்கிறான்: "எனக்குக் காசநோய் என்கிறார்கள். சாதிவெறி, வரதட்சனை, அநீதின்னு எத்தனையோ வியாதி எனக்கு இருக்காம். நான் பார்க்க அகோரமாயிட்டேனாம். அதனால் இப்ப என்ன கெட்டுப் போச்சு? இதோ அழகுச் சாதனங்கள். இவற்றைக் கொண்டு என்னை அழகுபடுத்திக் கொள்வேன். இவையெல்லாம் இருக்கிற வரை எனக்குக் கவலை இல்லை” நோயாளியின் முதுகில் “இறை நம்பிக்கை” என்று பொறிக்கப்பட்டிருந்தது.
பவுடர் என்ற நவநாள், சென்ட் என்ற பூசை, லோஷன் என்ற திருவிழா, திருப்பயணம் போன்ற வெறும் அழகுச் சாதனங்களைக் கொண்டு, எலும்புருக்கி நோயை - விசுவாச வாழ்வில் காணக்கூடாத அநீதி, வரதட்சனை, சாதி முதலியவற்றைக் குணப்படுத்த முடியாது.
நம்பிக்கையில் தடுமாறலாம். ஆனால் தடம் (பாதை) மாறக்கூடாது.
யூதாஸ் தடுமாறினான். முடிவில் தடம் மாறினான்.
பேதுரு தடுமாறினார். ஆனால் தடம் மாறவில்லை.
சந்தேகப்படுவோரின் காவலரான புனித தோமா
இறை இரக்கத்தின் ஞாயிறு
கடவுள் கருணையே வடிவானவர் என்பதை எல்லா சமயங்களும் சொல்கின்றன. கருணை வடிவான கடவுளைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறது. உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, கடவுள் கருணையின் ஞாயிறு, அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இந்த இறை இரக்கத்தின் ஞாயிறை, வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக, 2000மாம் ஆண்டில் இணைத்தவர், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இறையடி சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின், 2011ம் ஆண்டு, இதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், அருளாளராகவும், மீண்டும், 2015ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார்.
இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல நேரங்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். முக்கியமாக, சந்தேகமும் அச்சமும் நம் வாழ்வைச் சூழ்ந்தாலும், இறை இரக்கத்தை நம்பி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையமுடியும் என்பதை, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், தன் வாழ்வில் உணர்ந்ததால், அவர் இறை இரக்கத்தின் ஞாயிறை உருவாக்கினார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இதற்கு நேர் மாறாக, இறைவனின் இரக்கமோ, கருணையோ தங்களுக்குத் தேவையில்லை, தங்களை மீறிய சக்தி எதுவும் இல்லை, என்ற ஆணவத்துடன் செயலாற்றும் பல உலகத் தலைவர்கள் இன்று பல நாடுகளில் ஆட்சி செலுத்தி வருகின்றனர். கடவுளுக்கு இணையாக, அல்லது, கடவுளுக்கும் மேலாக தங்களையே உயர்த்திக்கொள்ளும் இத்தலைவர்களின் ஆணவம் நிறைந்த மனநிலை, மனித வரலாற்றில் அவ்வப்போது வெளிப்பட்டவண்ணம் உள்ளது.
111 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 14, மற்றும் 15ம் தேதிகளில் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்வு மனிதரின் ஆணவம் நிறைந்த மனநிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இறைவனோ, வேறு எந்த சக்தியோ தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்று ஆரம்பித்த அந்நிகழ்வு, துயரத்தின் ஆழத்தில் புதைந்த வரலாற்று நிகழ்வையும் இன்று நாம் சிந்திக்க வேண்டும். 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் மிதந்து சென்ற இரு மலைகள் மோதிக்கொண்டன. அவற்றில் ஒன்று, பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை உருவாக்கிவந்த பனிப்பாறை. மற்றொன்று, மூன்று ஆண்டுகள் மனிதர்கள் உருவாக்கிய செயற்கையான இரும்பு எஃகு மலை. கடலில் மிதந்து வந்த இந்த இரும்பு மலையின் பெயர் 'டைட்டானிக்'.
1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்தின் Southampton துறைமுகத்தில் இருந்து 'டைட்டானிக்' கிளம்பியபோது, 'கடவுளாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' (“Even God himself couldn't sink this ship.”) என்று இந்தக் கப்பலை இயக்கிய கேப்டன் Edward John Smith சொன்னாராம். இந்தப் பெருமையுடன், இறுமாப்புடன் கிளம்பிய அந்தக் கப்பல் ஜந்தாம் நாள் நள்ளிரவு பனிப்பாறையில் மோதியது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை, இரண்டு மணியளவில், அந்தக் கப்பல் இரண்டாகப் பிளந்து, நடுக்கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் அந்த இருளில், குளிரில், கடலில் உயிர் துறந்தனர்.
உலகிலேயே நகர்ந்து செல்லக்கூடிய மிகப்பெரிய அரண்மனை என்றெல்லாம் பறைசாற்றப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சமாதியாகி, நமக்குத் தேவையான பாடங்களைப் புகட்டி வருகிறது. எதுவும், யாரும், அது கடவுளே ஆனாலும் சரி, எவ்வகையிலும் தங்களைத் தீண்டமுடியாது என்ற இறுமாப்பு ஏற்பட்டால், வாழ்வில் என்ன நிகழக்கூடும் என்பதை, கடந்த 111 ஆண்டுகள் நமக்கு நினைவுறுத்தி வருகிறது, 'டைட்டானிக்' பயணம்.
ஒரு கப்பல் கடலில் சந்திக்கக்கூடிய பல்வேறு ஆபத்துக்களையும் முன்கூட்டியே நினைத்துப்பார்த்து, அந்த ஆபத்துக்களை வெல்லும் வகையில் 'டைட்டானிக்' உருவாக்கப்பட்டது. எவ்வகை ஆபத்து வந்தாலும், இந்தக் கப்பல் நீரில் மூழ்காது என்பது இதை உருவாக்கியவர்களின் கணிப்பு. இந்தக் கணிப்பினால் உருவான இறுமாப்பே இந்தக் கப்பலை மூழ்கடித்தது. கப்பல் மூழ்கியதைவிட, அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இறந்ததுதான், பெரும் அதிர்ச்சியை, ஆத்திரத்தை, கேள்விகளை எழுப்பியது. தஙகளை யாரும், எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புதான் அத்தனை பேரின் உயிரைப் பலி வாங்கியது.
எந்த ஒரு கப்பலும் கடலில் பயணம் மேற்கொள்ளும்போது, ஏதாவது ஆபத்து நேர்ந்தால், கப்பலில் பயணம் செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கத் தேவையான உயிர்காக்கும் படகுகள் கப்பலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இது கடல் பயணங்களின் சட்டம். 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, அது மூழ்கும் வாய்ப்பே இல்லை என்ற ஆணவம் நிறைந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அந்தக் கப்பல் சட்டப்படி எடுத்துச் செல்லவேண்டிய படகுகளில் பாதி எண்ணிக்கையையே சுமந்து சென்றது. கப்பலில் பயணம் செய்தோரின் எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து படகுகளும் இருந்திருந்தால், ஒருவரும் இறந்திருக்கத் தேவையில்லை.
அது மட்டுமல்ல, டைட்டானிக் செல்லும் பாதையில், பனிப்பாறைகளில் மோதும் ஆபத்து இருந்தது என்று மற்ற கப்பல்களில் இருந்து ஏழு முறை எச்சரிக்கைச் செய்திகளும் வந்தன. ஆனால், டைட்டானிக் கப்பலை இயக்கியவர்கள், அந்த எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. கப்பலை உருவாக்கியவர்கள், அதனை இயக்கியவர்கள் எல்லாருக்கும் அந்த கப்பலின் சக்தி மீது அளவுக்கு மீறிய, ஆபத்தான நம்பிக்கை இருந்தது. இதுதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு பாடம்.
வாழ்வில் நம்பிக்கை தேவைதான். சிறப்பாக, பாஸ்கா காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் உண்மை... நம்பிக்கை. நம்பிக்கையற்ற வாழ்வு நடுக்கடலில் தத்தளிக்கும் படகுபோல் இருக்கும்... ஆனால், எதன்மேல் நம்பிக்கை கொள்வது, எவ்வகையான நம்பிக்கை கொள்வது என்பதையும் நாம் தீர ஆராய வேண்டும். நம்பிக்கையை வளர்க்கும் இந்த பாஸ்கா காலத்தில், நம்பிக்கை இழந்து நடுக்கடலில், சந்தேகப்புயலில் தத்தளித்த சீடர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு இன்று நமது நற்செய்தியாகிறது.
சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திதிம் அல்லது தோமையார் என்று அழைக்கப்படும் தோமா சுட்டிக்காட்டப்படுகிறார். உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரிவள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அப்படி சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.
தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துவிடுகிறோம். "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்று கேள்வி கேட்கிறோம். "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் தந்துவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வது எளிது. தோமா மீது கண்டனக் கற்களை எறிவதற்கு முன், நம்மில் யார் இதுவரை சந்தேகப்படாமல் வாழ்ந்திருக்கிறோமோ அவர்கள் அவர் மீது முதல் கல் எறியட்டும். அதுவும் நெருங்கிப் பழகிய பலரை... நம் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை, நம் பிள்ளைகளை, உயிர் நண்பர்களை பல நேரங்களில் சந்தேகப்படும் நாம், தோமா இயேசுவைச் சந்தேகித்ததை எவ்விதம் குறை சொல்ல முடியும்?
கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவைவிட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். மேலும், உயிர்ப்புக்குப் பின் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த நிகழ்ச்சிகளை நான்கு நற்செய்திகளிலும் நாம் கவனமாக வாசித்தால், இயேசுவின் உயிர்ப்பைத் தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் தத்தளித்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
தங்கள் மீன் பிடிக்கும் தொழில், பெற்றோர், குடும்பம், வீடு என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். அந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப்போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு பறிக்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன. தங்களில் ஒருவனே இயேசுவைக் காட்டிக்கொடுத்து, இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது. இயேசு பிடிபட்டார் என்பதை அறிந்ததும் அவர்கள் காணாமல்போனது, ஒருவர் இயேசுவைத் தெரியாது என்று மறுதலித்தது என்ற்... அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.
பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்கமுடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்?
கருணையே வடிவான இயேசு, சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு கூறிய பதில் இதுதான்: “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 21: 27-29) இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28) இயேசுவைக் கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவிலும் அவர் பறைசாற்றினார்.
அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நம் அனைவரின் காவலரான புனித தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.
"சந்தேகத்திலிருந்து சான்று பகிர்தலுக்கு..."
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! உயிர்த்த ஆண்டவரின் அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! பாஸ்கா பெருவிழாவின் எட்டாம் நாளான இன்று, நாம் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'க் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி, மூடிய கதவுகளுக்குப் பின்னால் பயந்து நின்ற சீடர்களுக்கு இயேசு அமைதியை வழங்கியதையும், சந்தேகத்தோடு இருந்த தோமாவிடம் அவர் காட்டிய இரக்கத்தையும் எடுத்துரைக்கிறது.
1. பயத்தை மாற்றும் அமைதி
சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து கதவுகளை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். உயிர்த்த ஆண்டவர் அவர்கள் நடுவில் வந்து நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்றார்.
• பாடம்: நம் வாழ்விலும் கவலைகள், நோய்கள், தோல்விகள் போன்ற 'மூடிய கதவுகளுக்குள்' நாம் பயந்து போயிருக்கலாம். உயிர்த்த ஆண்டவர் நம் இதயக் கதவுகளை உடைக்காமல், உள்ளே வந்து நமக்கு அமைதியைத் தருகிறார். அவர் தரும் அமைதி உலகப் பிரச்சனைகளை நீக்குவது அல்ல, அந்தப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் நம்மால் தைரியமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருவது.
2. தோமாவின் சந்தேகம்: ஒரு விசுவாசத் தேடல்
தோமாவை நாம் எப்போதும் 'சந்தேகத் தோமா' என்றே அழைக்கிறோம். ஆனால், அவர் "இயேசுவின் காயங்களில் விரலைப் பதித்தாலொழிய நம்ப மாட்டேன்" என்று சொன்னது, அவர் ஒரு 'நேரடி அனுபவத்தை' விரும்பினார் என்பதைக் காட்டுகிறது.
• பாடம்: கேள்வி கேட்பது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல. பிறர் சொல்லிக் கேட்ட விசுவாசத்தை விட, இறைவனைத் தாமே நேரில் அனுபவிக்க வேண்டும் என்ற தாகம் தோமாவிடம் இருந்தது. நம்முடைய விசுவாசமும் வெறும் சடங்குகளாக இல்லாமல், உயிர்த்த இறைவனோடு நமக்கு இருக்கும் தனிப்பட்ட உறவாக மாற வேண்டும்.
3. காயங்களைக் காட்டிய கடவுள்
இயேசு தோமாவிடம் கோபப்படவில்லை. மாறாக, அவர் காட்டிய இரக்கம் ஆச்சரியமானது. "உன் விரலை இங்கே நீட்டு... உன் கையை என் விலாவில் வை" என்று தன் காயங்களைக் காட்டினார்.
• பாடம்: காயங்கள் தான் இயேசுவின் அடையாளம். இன்றும் துன்புறும் மக்களிடம், ஏழைகளிடம், நோயாளிகளிடம் இருக்கும் 'காயங்களில்' தான் இயேசு இருக்கிறார். அங்கே தான் நாம் இறைவனைக் காண முடியும். தோமா அந்தக் காயங்களைத் தொட்டவுடன், விவிலியத்தின் மிக உயரிய விசுவாச அறிக்கையைச் சொன்னார்: "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!"
4. காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
"நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்று இயேசு நமக்காகச் சொல்கிறார்.
• நடைமுறைச் சிந்தனை: நாம் இயேசுவை நேரில் பார்க்கவில்லை. ஆனால், இறைவார்த்தை வழியாகவும், நற்கருணை வழியாகவும், நம்மைச் சுற்றியுள்ள நன்மைகள் வழியாகவும் அவரைத் தரிசிக்கிறோம். இந்த விசுவாசமே நம்மைப் பேறுபெற்றவர்களாக மாற்றுகிறது.
பங்கு மக்களுக்கான நடைமுறைச் செயல்பாடுகள் (Practical Points):
1. இறை இரக்கத்தை நாடுவோம்: இன்று இறை இரக்கத்தின் ஞாயிறு. "இயேசுவே, உம்மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்" என்ற செபத்தை அடிக்கடி சொல்வோம். நம் பாவங்களை அறிக்கையிட்டு, இறைவனின் எல்லையற்ற மன்னிப்பைப் பெறுவோம்.
2. அமைதித் தூதர்களாக: இயேசு சீடர்களுக்கு அமைதியைத் தந்து, அவர்களை உலகிற்கு அனுப்பினார். நாமும் நம் குடும்பத்திலும், பங்கிலும் சண்டைகளைத் தவிர்த்து, அமைதியை உருவாக்கும் தூதர்களாக இருப்போம்.
3. இரக்கச் செயல்கள்: இறைவனின் இரக்கத்தைப் பெற்ற நாம், மற்றவர்களிடம் இரக்கத்தைக் காட்டுவோம். இந்த வாரம் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு அல்லது ஏதேனும் ஒரு சிறு உதவியைச் செய்வோம்.
முடிவுரை:
அன்பு மக்களே! முதல் வாசகத்தில் சொல்லப்பட்ட தொடக்க காலக் கிறிஸ்தவர்கள்போல, நாமும் ஒரு மனத்தவராயும் ஒரு உள்ளத்தவராயும் வாழ்வோம். உயிர்த்த ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறார். நம் சந்தேகங்கள் அகலட்டும், பயங்கள் மறையட்டும். "என் ஆண்டவரே, என் கடவுளே" என்று தோமாவோடு இணைந்து நாமும் அவரைப் போற்றுவோம்.
இந்தத் திருப்பலி நம் வாழ்வை உயிர்த்த ஆண்டவரின் ஒளியால் நிரப்பட்டும். ஆமென்.
பாஸ்கா காலம் இரண்டாவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 2:42-47)
தொடக்ககால கிறிஸ்தவர்கள் ஒருமித்த உள்ளத்தோடும், ஒற்றுமை உணர்வோடும், பொருளாதார அளவிலும், சமூக அளவிலும் வேறுபாடு காட்டாமல், நட்புறவு, ஒற்றுமை, அப்பம் பிடுதல், இறை வேண்டல், பகிர்ந்து கொள்தல், போன்ற நற்பண்புகளில் நிலைத் திருந்ததை திருதூதர் பணி புத்தகத்தில் பல இடங்களில் காண் கின்றோம். விசுவசித்தவர் அனைவரும் ஒருமித்து தங்கள் உடைமை கள் அனைத்தும் வேறுபாடு காட்டாமல் பொதுப்பொருளாய் கருதினர். நிலம், பொருட்கள், உடைகளையெல்லாம் விற்று அவரவர் தேவைக் கேற்ப எல்லோரும் பங்கிட்டுக்கொள்வதை இந்த வாசகம் விளக்குகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1பேது. 1:3-9)
திருச்சபையின் தலைவராக விளங்கிய தூய பேதுரு, ஆதித் திருச்சபை மக்களுக்கு இரு மடல்கள் எழுதியுள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட சபைக்கும் எழுதாமல், பொதுவாக அனைத்து சபைக ளுக்கும் எழுதப்பட்ட இம்மடல்களை "பொது மடல்கள்" என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பகுதி ஆதித்திருச்சபையின் திருமுழுக்கு சடங்கின்போது வழங்கப்பட்ட ஓர் அருளுரை என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள். கிறிஸ்துவின் வாழ்வில் பங்கேற்க வைக்கும் திரு முழுக்கு சடங்கின் மகத்துவம், அதனால் ஏற்படும் உரிமைகள், கடமைகள் ஆகியவை பற்றிய சில சிறந்த கருத்துக்களை உள்ள டக்கியிருக்கின்றது. திருமுழுக்கு ஒரு நம்பிக்கை தரும் புதுப்பிறப்பு, இதனால் கிடைக்கும் உரிமைப் பேறு வித்தியாசமானது என்றும் விளக்கம் தந்து இது இயேசுவிடமிருந்து அருளை பெற்றுத் தரும் என்று கூறுகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 20:19-31)
இன்றைய நற்செய்தியில் இரண்டு பகுதிகளைப் பார்க்கிறோம். முதல் பகுதி இயேசு சீடர்களுக்குத் தோன்றி அமைதியை அளித்து, ஆவியைப் பொழிந்து, தூதுரைக்கும் அதிகாரம் அளித்ததைச் சித்தரிக்கின்றது. இரண்டாம் பகுதி: இயேசு தோமாவுக்குத் தோன்றி தம்மில் நம்பிக்கை கொள்ள அழைத்ததை வருணிக்கின்றது. இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது மற்ற நற்செய்திகளில் ஆண்டவரைக் கண்ட சீடர்கள் அச்சம் கொள்ளவில்லை. மாறாக, மகிழ்ச்சியடைகின்றனர். உயிர்த்த ஆண்டவர் அளிக்கும் கொடைகள் 1. அமைதி, 2. தூய ஆவி. உயிர்த்த ஆண்டவர் கொடுத்த கொடைகளில் மேலானது தூய ஆவி ஆவார். ஆவியின் ஆற்றலால் அமைதி பெறவும், மகிழ்ச்சியடையவும் அழைப்பது யோவான் நற்செய்தியில் குறிப்படத்தக்கது.
மறையுரை
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" "அமைதி” இல்லை இந்த உலகில், எங்கும் சப்தம். பிறப்பு முதல் இறப்பு வரை எங்கும் ஒரே இரைச்சல். நவீன உலகில் BSNL, செல்போன், வில்போன் என்று விளம்பரம் செய்து, 'இன்று முதல் இந்தியா அதிகம் பேசும்' என்று அறிக்கை செய்யும் விளம்பரங்கள். புதிய நூற்றாண்டுகளின் அபாயகரமான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது இரண்டு. 1. அணுகுண்டு, 2. மைக்ரோபோன். அந்தக் காலத்தில் குயில் கூவுவதை கேட்டோம். விட்டில் பூச்சிகளின் சப்தம், பறவைகளின் பாடல், எங்குச் சென்றது இதெல்லாம்? வாருங்கள் உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதியை சுவைப்போம்.
நற்செய்தியில் அமைதியை குறிக்கும் 'ஷலோம்' என்ற எபிரேயச் சொல் பல பொருளில் பயன்படுத்தப்பட்டது. சமயச்சார்பற்ற முறையில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இரு மனிதர்களிடையே, இரு குழுவினரிடையே, இரு நாட்டினரிடையே நிலவும் பகைமையை அல்லது போரில்லாத நிலைமையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. பாவத்தினால் இறைவனிடமிருந்து அந்நியனாக்கப்பட்ட மனிதன், மீண்டும் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டதை இச்சொல் உணர்த்தியது. இந்தப் பொருளில்தான் கிறிஸ்துவே "அமைதி அருள்பவர்" (எபே 2:14) என்று அழைத்தனர். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படக்கூடிய அமைதி.
உயிர்த்த ஆண்டவர் 'அமைதி உரித்தாகுக' என்று சொன்னபோது இந்த நான்கு பொருளையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றார்.
இசையாஸ் இறைவாக்கினர் சொன்னார். ஜெஸ்ஸேயின் குலத்திலிருந்து தளிர் ஒன்று கிளம்பும், சாவின் இருள்சூழ் பள்ளதாக்கில் வாழ்ந்தவர்கள் பேரொளியையும் அமைதியையும் காண்பார்கள். இயேசு பிறந்த இரவை "Silent Night" அமைதியின் இரவு என்று பாடுகின்றோம். இயேசு பிறந்தவுடன் இடையர்களுக்கு செய்தியைச் சொல்லச் சென்ற வானதூதர்கள் என்ன பாடினார்கள்? 'விண்ணகத்தில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக. மண்ணகத்தில் நல்மனதோர்க்கு அமைதி உண்டாகுக'. விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை மன்னித்து இயேசு சொன்ன வார்த்தை - இனி பாவம் செய்யாதே, சமாதானமாய் போ. இயேசு தன்னுடைய சீடர்களை இரண்டு இரண்டாக ஊர்களுக்கு அனுப்பியபோது - எந்த வீட்டில் உங்களை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு 'அமைதி உண்டாகுக' என்று முதலில் சொல்லுங்கள். தான் இறந்து உயிர்த்த பின் இன்றைய நற்செய்தியில் தன் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களுக்குச் சொன்ன முதல் வார்த்தை 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக'
நம்முடைய இயேசு, சமாதானத்தின் தூதுவர், அமைதியின் இளவரசர். அமைதியைக் கொணரவே இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர். அவர் அருளும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றதல்ல, நிலையான நிறைவான அமைதி. இயேசுவின் பெயரைச் சொல்லும்போது நாமும் அமைதி அடைகிறோம், தூய ஆவியின் கருவிகளாகிறோம்.
இயேசு தான் விண்ணகம் செல்லுமுன் தன் சீடர்களுக்கு, "அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன்” என்றார். இயேசு தனது பிறப்பு - உயிர்ப்பு இரண்டுக்கும் இடைப்பட்ட பணி வாழ்வில் செய்தது எல்லாம் ‘அமைதியை வழங்குவதற்கே'. அமைதியின் தூதுவராகச் செயல்பட்டார். நோய்களைக் குணமாக்கினார். பேய்களை ஓட்டினார். தொழுநோயாளர்களை சுகப்படுத்தினார். இறந்தோரை உயிர்ப்பித்தார். இவ்வாறு அமைதியை ஏற்படுத்தினார். நமது நடைமுறை வாழ்வில் காண்கின்றபோது அமைதிக்கு எதிராக எவ்வளவோ போர் முழக்கங்கள்! எங்கு நோக்கினும், குண்டு வெடிப்புகள், வன்முறை, உறவு முறியல்கள், உடைந்து, சிதைந்து போன குடும்பங்கள், அன்புக்கும், அமைதிக்கும் பரிதவிக்கும் உள்ளங்கள், 'எங்கே அமைதி? எங்கே அமைதி? என்று அலையும் மனிதர்கள் என்று எவ்வளவோ பார்க்கிறோம், அனுபவிக்கிறோம்.
குடும்பத்தில் சண்டை, பெற்றோர் பிள்ளைகளை புரிந்து கொள்ளாத நிலை, கணவர் மனைவி சந்தேகம், அமைதியற்ற வாழ்வு, நண்பர்கள் உறவினர்களால் நெருக்கடி, ஏமாற்றம், தோய்வு, அமைதியற்ற நிலை. மேற்சொன்ன நிகழ்வுகளில் நாம் நேரிடையாக பங்கு பெறாமல் இருக்கலாம். காரணமாகக் கூட இல்லாமல் இருக்க லாம். ஆனால் மறைமுகமாக நமது எண்ணங்களால், சிந்தனை களால், அடுத்தவரின் மனநிலையை புரிந்து கொண்டு நடக்காமல் இருக்கும்போது, அடுத்தவரை அலட்சியமாக நடத்தும்போது, அமைதியை குலைக்கின்றவர்களில் ஒருவராக நாம் மாறிட வாய்ப்புண்டு. உலகில் அமைதி இல்லை என்று சொல்கிறோம். காரணம், குடும்பங்களில் அமைதி இல்லை. தனிக்குடும்பங்களில் அமைதி இல்லை. அமைதி என்று சொல்கிறபோது வன்முறை போல் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. இன்னும் அதிகமாக இருக்க வேண்டிய குடும்பங்களில் ஒற்றுமை, சகோதர அன்பு, பெற்றோர் பிள்ளை பாசம் இவை அவசியம். எங்கே அன்பு, உண்மை இருகின்ற தோ அங்கே அமைதி இருக்கும்.
நமது பாரதத்தின் முன்னால் முதல் குடிமகன் அப்துல் கலாமை பற்றி நமக்கு நன்கு தெரியும். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளோடு அவர் கொண்டிருக்கும் உறவு எல்லோராலும் பாராட் டப்படுகிறது. ஒருமுறை ஒரு மாணவி அவரைப் பார்த்துக் கேட்டாளாம், மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அவர்களே, தீவிரவாதி என்பவர் யார்? நான் வீட்டிற்கு சென்றால் என் பெற்றோர் சொல்கிறார்கள். தீவிரவாதிகளைப் பற்றிக் கவனமாக இரு. பள்ளிக்கு வந்தாலும் என் ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். தீவிரவாதிகளைப் பொருட்டு மிகவும் கவனமாக இரு.' இந்தக் கேள்வியைக் கேட்டு ஒரு நிமிடம் முன்னால் குடியரசுத் தலைவர் அதிர்ந்து போனார். பின்னர் அவர் சொன்ன பதில் "நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தீவிரவாதி ஒளிந்து கிடக்கிறான்.
நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தூயவன் ஒளிந்து கிடக்கி றான். தீவிரவாதியை முன்னிலைபடுத்துவதும், தூயவனை முன்னிலை படுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கைகளில்தான் இருக்கிறது" என்று சொல்லித் தான் எழுதிய புத்தகத்தை அந்த மாணவிக்கு அளித்தார். தூய பிரான்சிஸ் அசீசியார் செபித்த, "இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்" என்ற செபத்தைதான் டாக்டர். A.P.J. அப்துல் கலாமும் அனுதின செபமாகச் செபித்ததாக கூறுகிறார். தூய அன்னை தெரசா ஜக்கிய நாட்டு சபை (ஐ.நா. சபை) உறுப்பினர்களிடம் உரையாற்றுவதற்கு முன், தூய பிரான்சிஸ் அசீசியாரின் அமைதியின் செபத்தை செபிக்க வைத்துவிட்டுதான் தனது உரையைத் தொடங்கினாராம்.
குடும்பத்தில் அமைதி வேண்டுமா! மனதில் மகிழ்வு வேண்டுமா? சமுதாயத்தில் ஒற்றுமை வேண்டுமா? எல்லாவற்றிற்கும் தீர்வு வேண்டுமா? அமைதியின் அரசராம் இயேசுவை உங்கள் இதயத்தின் அரசராக ஏற்றுக்கொண்டு அமைதிக்காகச் செபியுங்கள். அவர் உங்களுக்கு நிலையான அமைதியைத் தருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலியில் குருவானவர் இயேசு தருகின்ற நிலையான அமைதியை நமக்குப் பெற்றுத் தருகின்றார். எனவே, பொருளுணர்ந்து அமைதியையும், சமாதானத்தையும் அறிக்கையிட்டு வாழ்த்துவோம்.
திருத்தந்தை 23-ஆம் யோவான் "உலகின் அமைதி" என்ற மடலை வெளியிட்டபோது பல நூறு கோடி மக்கள் அன்புடன் வரவேற்றார்கள். சுற்றுமடலில் அவர் குறிப்பிடுவார். "கடவுள் ஏற்படுத்திய நியதியைச் சரியாகக் கடைபிடிக்கும் போதுதான் உண் மையான அமைதி ஏற்படும்”. இதனைத்தான் காலம் சென்ற திருத் தந்தை 2-ஆம் ஜான்பாலும் தனது உலக அமைதி தின உரையிலும் குறிப்பிடுவார்: "அமைதியை ஏற்படுத்த இயலும். அமைதி ஏற்ப டுத்துவதென்பது சிறப்பான பணி. நீதி இல்லாமல் அமைதியில்லை. மன்னிப்பு இல்லாமல் நீதியில்லை".
தூய பிரான்சிஸ் அசீசியார் செபித்தது போல், அன்னை தெரசா செபித்தது போல், "இறைவா என்னை உமது அமைதியின் கருவியாக்கும்" என்று செபிப்போம். உயிர்த்த ஆண்டவர் அருளும் அமைதியின் கருவிகளாவோம். ஏனென்றால் தூய ஆவியின் கனிகளில் 'அமைதியும்' (கலா. 5:22), 'ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வாழ்வும் அமைதியும் உண்டாகும் (உரோ. 8:6). 'உயிர்த்த ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்படுகின்ற கிறிஸ்துவின் சமாதானம் நம் இதயங்களின் ஆட்சிபுரிவதாக (கொலோ. 3:15).
பிற மறையுரைக் கருத்துக்கள்
• உண்மையான அமைதி என்பது உண்மையை உதறி தள்ளு வதோ, நீதியை புறந்தள்ளுவதோ, தீமைகளைக் கண்டும் காணாத வாறு இருப்பதோ அல்ல. மாறாக உண்மையை உலகறியச் செய்வதும், நீதியை நிலை நாட்டுவதும், தீமைகளைச் சுட்டிகாட்டி கண்டிப்பதும் ஆகும்.
• ஒவ்வொரு மனிதனும் எப்போது முழு உள்ளத்தோடு, மனதோடு, இயேசுவைப் போல், "இவர்கள் அறியாமல் செய்தார்கள்" என்று சொல்லி மன்னிக்கிறானோ அப்போதுதான் அவனது உள்ளத்தில் அமைதி வரும். அவன் அமைதியின் தூதனாய் மாறுவான்.
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நாளை 'இறை இரக்கத்தின் ஞாயிறாக' திருஅவை கொண்டாடுகின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறை வனின் இரக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது (1 பேது 1:3). நற்செய்தி, சீடர்களுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு வழங்குவதையும் குறிப்பிடுகின்றது (யோவா 20:23). நாமும் இறை இரக்கத்தை இறைஞ்சுகின்ற வேளையில், இன்றைய நற்செய்தியின் பின்னணியில் சீடர்களும், திருத்தூதரான யோவானும் எப்படி உயிர்ப்பின் நம்பிக்கைக்குள் கொண்டு வரப்படுகின்றனர் எனச் சிந்திப்போம்.
சீடர்களின் உயிர்ப்பின் நம்பிக்கை
இன்றைய நற்செய்தி மகதலா மரியா சீடர்களிடம் சென்று உயிர்த்த இயேசுவைத் தான் கண்டதைப் பற்றி (யோவா 20:18) கூறுவதிலிருந்து தொடர்கிறது. எனவே, இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தி அவர்களுக்குக் கூறப்பட்டாலும் அவர்கள் அச்ச நிலையிலும், நம்பிக்கையற்ற நிலையிலும்தான் உள்ளனர். யூதர் களைப் பற்றிய அச்சம் மகதலா மரியாவுக்கு இருந்ததுபோல (யோவா 20:2), சீடர்களுக்கும் இருந்தது (வச. 19). இத்தகையதொரு சூழலில் இயேசு அவர்கள் நடுவில் வந்து நின்று, அவர்களுக்கு அமைதியின் வாழ்த்தைத் தெரிவிக்கின்றார். இந்த வாழ்த்து "அமைதியை உங்களுக்குவிட்டுச்செல்கிறேன்.என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்” (யோவா 14:27) என்றும், "என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டு விட்டேன்" (யோவா 16:33) என்றும் முன்னுரைத்தவற்றை நிறை வேற்றுவதாக இருக்கிறது. கதவுகள் மூடிவைக்கப்பட்ட நிலையிலும் அவர் அவர்கள் நடுவிலே தோன்றியது அவர் இப்போது இவ்வுலக எல்லைகளையும், தடைகளையும் தாண்ட வல்லவர் என்பதைக் காட்டுகின்றது. அதே நேரத்தில் அவர்கள், சிலுவையில் உயர்த்தப் பட்டு ஈட்டியால் குத்தப்பட்டு, மரித்த அதே இயேசுவைத்தான் (யோவா 19:18,34) காண்கிறார்கள் என்பதை உறுதி செய்ய அவர்தம் கைகளையும், விலாவையும் காட்டுகின்றார். மகதலா மரியா சொன்னதோடுகூட தாங்களே நேராக இயேசுவைக் கண்டதால் அவர்கள் உயிர்ப்பின் நம்பிக்கைக்குள் வருகின்றார்கள். அதை தங்கள் மகிழ்ச்சியின் வழியாக (20:20) வெளிப்படுத்துகின்றனர்.
இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றியதுதான் உயிர்த்து அச்சத்திலும் விட்டேன் என்பதை நிரூபிப்பதற்கும், தான் குழப்பத்திலும் இருந்த சீடர்களுக்கு முன்புதான் வாக்களித்திருந்த அமைதியை அளித்து அவர்களை ஆற்றுப்படுத்தி, மகிழ்ச்சிப் படுத்துவதற்கும் மட்டுமல்ல, அதையும் தாண்டி இயேசுவின் உயிர்ப்பின் வெற்றியால் வரும் பயன்களை, பலன்களை உலகின் கடையெல்லைவரைக்கும் எல்லாக் காலத்திற்கும் அவர்கள் கொண்டு செல்வதற்காகவும்தான். எனவேதான் "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங் களை மன்னியாது இருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா" (வச 22-23) என்று அவர்களை இந்த உயிர்ப்பின் சாட்சிகளாய், நற்செய்தியின் தூதுவர்களாய் தாம் முன்னுரைத்ததுபோல (யோவா 17:18) அனுப்புகின்றார். யோவான் நற்செய்தியின் ஏழாம் அதிகாரத்தில் தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை (யோவா 7:39) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவரது பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக அவர் மாட்சிமை யடைந்துள்ளதால், அவர் அவர்கள்மேல் ஊதி "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” (வச. 22) என்று கூறுகின்றார்.
எனவே, இயேசுவின் சீடர்கள் இயேசு அவர்கள் நடுவே தோன்றியதால் உயிர்ப்பின் நம்பிக்கைக்குள் கொணரப்பட்டது மட்டுமல்லாமல், தூய ஆவியின் துணைகொண்டு அந்த உயிர்ப்பின் சாட்சிகளாய் மக்களின் பாவங்களை மன்னித்து இயேசுவின் உயிர்ப்பின் பலன்களை உலகின் எட்டுத் திக்குகளிலும் எடுத்துச் செல்லும் தூதுவர்களாக அனுப்பப்படுகின்றனர்.
திருத்தூதர் தோமாவின் உயிர்ப்பின் நம்பிக்கை
தோமாவுக்கும் உயிர்த்த இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்ததை விவரிக்கத் தொடங்கும்போது யோவான் நற்செய்தி யாளர் சீடர்களின் இந்த உயிர்ப்பின் அனுபவத்தில் தோமா பங்கு பெறவில்லை என்பதை, "பன்னிருவர் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை (வச. 24) என்பதன் வழியாகக் குறிப்பிடுகின்றார். எனவே, உயிர்ப்பின் நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் இருளிலேயே இருக்கின்றார்(காண்.வச.1).அவரின்உடன்சீடர்கள் தாங்கள் பெற்ற அறிவையும், அனுபவத்தையும் மகதலா மரியா சீடர்களுக்குப் பகிர்ந்து கொண்டதுபோல (வச. 18), அவர்களும் பகிர்ந்துகொள்ள, உயிர்ப்பின் நம்பிக்கைக்குள் அவரைக் கொண்டு வர, முயற்சிகள் எடுக்கிறார்கள் (வச. 25). ஆனால் தோமா இந்த உயிர்ப்பின் நம்பிக்கைக்குள் வரச் சில நிபந்தனைகளை விதிக்கின்றார்: “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” (வச. 25). இதன் மூலம் தோமா இயேசுவின் உயிர்ப்பை மறுதலிக்கவில்லை. மாறாக, இயேசுவின் உயிர்த்த உடலைதான் தொட்டுப் பார்க்க வேண்டும், உணர வேண்டும், அப்போதுதான் அது தனது நம்பிக்கையாக மாறும் என்கிறார். பல நேரங்களில் நமது இறை நம்பிக்கைகளும் இதுபோல் நிபந்தனைகள் போடுகின்றவைகளாகத்தான் இருக் கின்றன. இந்த வரையறைகளை நிறைவேற்றினால்தான், இப்படி யெல்லாம் நிகழ்ந்தால்தான் நம்புவேன் என்று இறைவனை நமது நிபந்தனைக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றோம்.
உயிர்த்த இயேசு அந்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் நிறைவேற்றுகின்றார். எட்டு நாள்களுக்குப் பிறகு இயேசு மீண்டும் தோன்றுகின்றார். சீடர்களுக்குக் கொடுத்த அதே வாழ்த்தையும், அனுபவத்தையும் தருகின்றார். அதையும் தாண்டி தோமாவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு அதை நிறைவேற்ற வும் துணிகின்றார். “இதோ என் கைகள், இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு" (வச. 27) என்று அழைப்பு விடுக்கின்றார்.
"ஐயம் தவிர்த்து நம்பிக்கைக் கொள்" (வச. 27). பழைய மொழி பெயர்ப்பு இதை இன்னும் தெளிவாக “விசுவாசம் அற்றவனா யிராதே. விசுவாசம் கொள்" (வச. 27) என்று கூறுகின்றது. ஆக, இயேசு தோமாவின் நிபந்தனைக்கும், தன்னை வளைத்துக்கொண்டு எப்படியாவது அவரது நம்பிக்கையற்ற நிலையிலிருந்து நம்பிக்கைக் குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தோமா தனது சோதனையை நிகழ்த்தினாரா? தனது நிபந்தனைகள் நிறைவேறி யதைச் சோதித்து அறிந்தாரா? உயிர்த்த இயேசுவின் உடலைத் தொட்டுப் பார்த்தாரா? என்பதற்கெல்லாம் நற்செய்தியில் பதில் இல்லை. மாறாக, நான்காம் நற்செய்தியின் மிக உன்னதமான கிறிஸ்தியல் விசுவாச பிரமாணத்தை (நம்பிக்கை அறிக்கையை) தோமா வெளிப்படுத்துகின்றார். “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” (வச. 28). பழைய மொழிபெயர்ப்பில் இன்னும் உணர்வுபூர்வமாக "என் ஆண்டவரே, என் கடவுளே” என்று சரணாகதி அடைகின்றார்.
நமது உயிர்ப்பின் நம்பிக்கை
இன்றைய நற்செய்தி பகுதி தோமாவின் நம்பிக்கை அறிக்கையோடு நின்றுபோய்விடவில்லை. மாறாக இயேசு ஒரு வசனத்தைச் சொல்லி அதை நிறைவு செய்கின்றார். “நீ என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” (வச. 29). ஆக, இந்த நிகழ்ச்சி இருவேறு தலைமுறையினரை சுட்டிக்காட்டுகின்றது.
முதலாவது, இயேசுவின் வரலாற்றுக் காலத்தில் அவரோடு வாழ்ந்து உயிர்த்த இயேசுவின் காட்சியையும், அனுபவத்தையும் பெற்றதால் பல குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின்மையின் இருளிலிருந்து மகதலா மரியாவைப் போல், சீடர்களைப் போல், திருத்தூதர் தோமாவைப் போல் உயிர்ப்பின் நம்பிக்கைக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். இவர்கள் கண்டதால் நம்பியவர்கள். ஆனால் இயேசுவின் சிந்தனையும், மறைமுகமாக நற்செய்தி யாளரின் சிந்தனையும், இயேசுவின் வரலாற்று காலத்தையும் தாண்டி, இயேசு இவ்வுலகில் வரலாற்றில் உடலோடு இல்லாத காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறது. நற்செய்தியின் கதாபாத்திரங் களான மகதலா மரியா, சீடர்கள், தோமா, பேதுரு ஆகியோர் போல் உயிர்ப்புக்கான ஆதாரங்களான வெறும் கல்லறை, திறந்த கல்லறை, உடலை மூடிய துகில், தலையைச் சுற்றிருந்த துகில், பெரும் மீன்பாடு (யோவா 21) மற்றும் உயிர்த்த இயேசுவின் திருக்காட்சி ஆகியவை வாய்க்கப் பெறாமல் இறைவார்த்தையை யும் (யோவா 20:9, 30-31), திருஅவையின் போதனையையும், திருஅவைத் தலைவர்களின் வழிகாட்டுதலையும் மட்டுமே நம்பி இயேசுவின் உயிர்ப்பையும் அவரைப் பற்றிய மறையுண்மை களையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆண்டவராகவும், கடவுளாக வும்' ஏற்றுக்கொள்ளும் மக்களின் நம்பிக்கையையும் இயேசு நினைவு கூர்ந்து அவர்களை இரண்டாம் வகைக் குழுமமாக, 'காணாமலே நம்புவோராக' வகைப்படுத்துகின்றார். முதல் வகையினரும் நம்பினர், இரண்டாம் வகையினரும் நம்புகின்றனர். இருவரின் நம்பிக்கையிலும் வேறுபாடு இல்லை. ஆனால் இயேசு நம்மைப் பேறுபெற்றவராகக் கூறுகின்றார். இந்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு அவரை இறைவனாகவும், மனிதனாகவும் உயிர்த்த ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் பேறு பெற்றவர்கள்தான். நற்செய்தியாளர் இந்த அதிகாரத்தின் இறுதி வசனத்தில் "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நம்பும் நாம் அவர் பெயரால் வாழ்வு பெறுவோம்" (வச. 31) என்று கூறி முடிக்கின்றார். எனவே, இயேசுவின் உயிர்ப்பிலே நம்பிக்கைக் கொள்வோம். அவர்மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.
பாஸ்கா காலம் - இரண்டாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : திப 2 : 42-47
ஆண்டவர் இயேசு இவ்வுலகில் பாவம் நீங்கி, மக்கள் அனைவரும் முழுமையான வாழ்வு வாழத் தன்னையே கையளித்தார். அவரது, சேவை வாழ்வின் கொடுமுடியே, அவரது மரணம். ஆகவே மரணம் இயேசுவின் வாழ்விற்கு முற்றுப்புள்ளியாக இருக்கவில்லை. மாறாக, இயேசுவைப் பின்பற்றிய சீடர்களின் வாழ்க்கையில் அவரது வாழ்வு மீண்டும் மலர்ந்தது. இயேசுவின் உயிர்ப்புக்கு மாபெரும் சான்றாக விளங்கியது, அவரைப் பின்சொன்றோரின் வாழ்க்கையே.
கிறிஸ்துவை அறிதல்
திருத்தூதர் பணி நூல் கூறும் முதல் கிறிஸ்துவ மக்களுள் சிலர் இயேசுவை நேரில் கண்டு அறிந்திருக்கலாம். ஆனால் பலர் இயேசுவின் நேர் வாரிசுகளான திருத்தூதர்களின் படிப்பினையைக் கேட்டுத்தான் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டனர். ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை, இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர் பெற்றுள்ள அறிவில்தான் ஆழம் பெறும். ஆகவேதான் புனித பவுலடியார் தனக்கு பல்வேறு தகுதிகளும், சிறப்புகளும் இருந்த போதிலும், “என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு அவையெல்லாம் இழப்பு எனக் கருதுகிறேன்” என முழக்கமிட்டார் (பிலிப் 3:8). அன்றைய கிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் படிப்பினையைக் கேட்டு இயேசு கிறிஸ்துவை மேலும் மேலும் அறிந்து கொண்டதால்தான், எத்தகையை துன்பங்கள் வந்தாலும் தங்கள் நம்பிக்கையில் பிரமாணிக்கமாக இருந்தனர். பல்வேறு தீய சக்திகளுக்கு இடையில் வாழும் நமக்குக் கிறிஸ்துவைப் பற்றிய அறிவும், கிறிஸ்து நிலைநாட்டிய மதிப்பீடுகளில் ஒரு பிடிப்பும் மிக மிகத் தேவை.
கிறிஸ்துவை வாழ்தல்
முதல் கிறிஸ்தவ மக்களின் சமயச் சார்பு, குறிப்பாக அவர்கள் நடத்திய ‘அப்பம் பிட்குதல்’ வழிபாட்டை மையமாகக் கொண்டிருந்தது (திப 242, 46; 20:7,11). இன்று நம்மிடையே முக்கியத்துவம் பெற்றுள்ள திருப்பலி வழிபாட்டின் தோற்றமே அப்பம் பிட்குதல் சடங்குதான். இச்சடங்கு ஏன் திருச்சபையில் தொன்றுதொட்டே சிறப்புப் பெற்று வந்துள்ளது?
இயேசு கிறிஸ்து தான் இறப்பதற்கு முந்தின நாள் யூத முறைப்படி பாஸ்கா உணவைத் தனது இறுதி இரா உணவாக உட்கொண்டார். அப்போது அப்பத்தைப் பிட்டு, அது, தான் சிலுவை மரணத்தில் கையளிக்க விருக்கும் தனது உடலைக் குறிப்பதாகவும், திராட்சை இரசத்தை எடுத்து அது தான் சிந்தவிருக்கும் இரத்தத்தைக் குறிப்பதாகவும் கூறினார். இதைத் தன் நினைவாகச் செய்யும்படியும் தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார் (மத்.26:26-29), மாற்கு 14:22-25, லூக்.22:15-20, 1 கொரி 1t23-25). இந்த இறுதி இராவுணவும் இது குறிப்பிட்ட இயேசுவின் மரணமும், இந்த மரணம் உணர்த்திய சேவை வாழ்வுமே ஆதித் திருச்சபையில் அப்பம் பிட்குதல் என்ற வழிபாட்டு சடங்காக உருவெடுத்தது. தங்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தியாக உள்ளம் படைத்த இயேசுவை மக்கள் அப்பம் பிட்குதல் சடங்கில் சந்தித்தனர்.
கிறிஸ்துவை அனுபவித்தல் (பகிர்வு வாழ்வு)
முதல் கிறிஸ்தவ மக்களிடையே சமய சார்பு ஓர் ஒப்பற்ற சமூக உணர்வை ஏற்படுத்தியதை நாம் அறிகிறோம். “நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்பப் பகிர்ந்தளித்தனர்” என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது (திப 244,45). ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம், தேவைக்கேற்பப் பங்கீடு என்ற முறை விளங்கிய சமுதாயம், இதுவே கிறிஸ்தவப் பொதுவுடைமைச் சமுதாயம். கார்ல் மார்க்ஸ் கனவுகண்ட பொதுவுடைமைத் தத்துவத்தை முதல் கிறிஸ்துவ மக்கள் ஏற்கனவே கடைபிடித்து வந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் கிறிஸ்துவ மக்களைப் பொருத்தவரையில், எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்து, ஏழை, எளியவர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோரின் நண்பனாக வாழ்ந்த இயேசுவே அவர்கள் கடைப்பிடித்த பொதுவுடைமைக் கொள்கையின் ஊற்று. அன்றைய கிறிஸ்துவ மக்களின் பகிர்வு வாழ்வு, இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஒரு சவாலாய் அமைகிறது.
நம்பிக்கைகொண்டோர் அனைவரும் ஒருமித்து தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுப் பொருளாய்க் கொள்வர்.
இரண்டாம் வாசகம் 1 பேது 1:3-9
இயேசுவைப் பின்பற்றிய பன்னிரு சீடருள் ஒருவரும், இயேசுவின் திருச்சபைக்குத் தலைவராக ஏற்படுத்தப்பட்டவருமான பேதுரு ஆதித்திருச்சபை மக்களுக்கு இரு மடல்கள் எழுதியுள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட சபைக்கும் எழுதாமல், பொதுவாக அனைத்து சபைகளுக்கும் எழுதப்பட்ட இம்மடல்களை "பொது மடல்கள்” என்று குறிப்பிடுகிறோம். இன்றைய இராண்டாம் வாசமாக அமைந்துள்ள பகுதி ஆதித்திருச்சபையின் திருமுழுக்குச் சடங்கின்போது வழங்கப்பட்ட ஓர் அருளுரை என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள். கிறிஸ்துவின் வாழ்வில் பங்கேற்க வைக்கும் திருமுழுக்குச் சடங்கின் மகத்துவம், அதனால் ஏற்படும் உரிமைகள், கடமைகள் ஆகியவை பற்றிய சில சிறந்த கருத்துக்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
திருமுழுக்கு புதுபிறப்பு
இன்றைய வாசகத்தின் துவக்கத்திலேயே திருமுழுக்கு ஒரு நம்பிக்கை தரும் புதுப்பிறப்பு என்றும், இதனால் கிடைக்கும் உரிமைப் பேறு அழியாதது என்றும், மாசுற முடியாதது என்றும் திட்டவட்டமாக அறைகூவல் விடுகின்றார் பேதுரு. திருமுழுக்கு என்ற இம்மாபெரும் அருட்சாதனம் இப்படிப்பட்ட ஆற்றலை எங்கிருந்து பெற்றது? அதற்கும் விடைதருகிறார் பேதுரு. இயேசு கிறிஸ்து நமக்காக இந்த உலகிற்கு வந்தார். நம் நல்வாழ்விற்காகத் தன்னையே தியாகம் செய்து இறந்தார். ஆனால் இம்பெரும் தியாக வள்ளல் நிரந்தரமாக இறக்க முடியாது. அவர் உயிர்த்து, தொடர்ந்து வாழ்கிறார். இந்த இயேசு கிறிஸ்துவின் தியாக வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, ஆகிய மாபெரும் சக்திகள்தான் திருமுழுக்கின் ஆற்றல். இயேசு கிறிஸ்துவின்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்துத்தான் திருமுழுக்கு நம்முள் செயல்படுகின்றது. இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் பிறக்கின்றோம். புனித பவுலடியார் இதே உண்மையை இன்னும் சிறப்பாகக் கூறுகிறார்.
“கிறிஸ்து இயேசுவின் மீது வைத்த நம்பிக்கையின் வழியாய் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். எவ்வாறெனில், கிறிஸ்துவுக்குள் திருமுழுக்குப் பெற்ற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்” (கலாத் 4:26-27).
புதுவாழ்வுக்கு அழைப்பு
திருமுழுக்கால் இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் புதுப்படைப்பாக மாறும் சடங்கில் ஓர் எச்சரிக்கையும் பேதுரு தருகிறார். அதாவது, கிறிஸ்தவ வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்படும்; இவையனைத்தும் இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஒரு சவாலாக இருக்கும். பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல் நம்பிக்கையும் துன்பங்களால் சோதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த நம்பிக்கை இயேசுகிறிஸ்து மீண்டும் நம்மைச் சந்திக்க வரும் நாளில், நமக்குப் புகழும் மகிமையும், மாண்பும் தருவதாய் விளங்கும் என்று ஓர் ஊக்குதல் செய்தியும் தருகிறார் பேதுரு.
ஆம், இயேசு கிறிஸ்துவின் மதிப்பீடுகளாம் உண்மை, நீதி, நேர்மை, அன்பு, சமத்துவம், பொறுமை ஆகியவற்றை நாம் இச்சமுதாயத்தில் வாழ்ந்து காட்டும்போது எத்தனையோ எதிர்ப்புச் சக்திகள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுள்ள திருமுழுக்கு நமது ஆற்றலை வளர்த்து நாம் தீமையை எதிர்த்துச் செயல்பட வைக்கிறது. ஆகவே இயேசுவின் வாழ்க்கை, அவர் நிலைநாட்டிய மதிப்பீடுகள், அவரில் நாம் அடைந்துள்ள புதுப்ப
ிறப்பு ஆகியவற்றின் மீது நமக்கு ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் தேவை.
இன்றைய வாசகத்தில் 'உரிமைப் பேறு' 'இறுதிக்காலத்தில் வெளிப்படப் போகும் மீட்பு' போன்ற சொற்றொடர்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இயேசுவில் புதுப்பிறப்பு அடைந்தவர்களுக்கு ஓர் உரிமைப்பேறு உண்டு. அதுவே இறுதிக் காலத்தில் மீண்டும் இயேசு கிறிஸ்து நம்மைச் சந்திக்க வரும்போது அவர் தரவிருக்கும் மீட்பு.
இப்பூவுலகில் இயேசுவின் மதிப்பீடுகளைச் செயல்படுத்தி வாழ்ந்து, அந்த இயேசுவோடு நிரந்தரமாக மகிழ்ச்சி வாழ்வை எய்துவதே நமது கிறிஸ்துவக் குறிக்கோள். இந்த இறுதி வெற்றி வாழ்வே, நமக்கு ஊக்கத்தையும் வல்லமையையும் தருகிறது.
அப்போதுதான் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் அந்த நம்பிக்கை உங்களுக்குப் புகழும், மமிமையும். மாண்பும் தருவதாய் விளங்கும்.
நற்செய்தி : யோவா 20:19-31
ஆபிரகாமை நம்பிக்கையின் தந்தை என்று அழைக்கும் நாம், தோமையாரை எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் எடைபோடும் திருத்தூதர் என்று ஏளனம் செய்கிறோம். எனினும் ஆண்டவரின் உயிர்ப்புக்கு இவரது சான்றுதான் வலுவான சான்று ஆகும். ஏனெனில் இவர் ஆண்டவரை நேரில் கண்டதுடன் நில்லாது, அவரது காயங்களைப் பரிசோதித்து, இறந்த இயேசுவே எழுந்து வந்துள்ளார் என்று உறுதியாகக் கூறியவர்.
இயேசுவின் பணி தொடர்கிறது
உயிர்த்த ஆண்டவர் திருத்தூதர்களுக்குக் காட்சி கொடுத்தார். "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று அவர்களை வாழ்த்தினார். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார். அவர்கள்மேல் ஊதி "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார் (22-23). திருத்தூதர்கள் அனுப்பப்பட்டவர்கள். அவர்களை அடித்தளமாக வைத்து அமைக்கப்பட்ட திருச்சபை இயேசுவின் பெயரால் பாவமன்னிப்பு வழங்கி மக்களை இறைவனுடன் ஒப்புரவாக்குகிறது. நற்செய்தியைப் போதிக்கிறது. மக்களின் பிணி போக்கி, பேயின் ஆதிக்கத்தினின்று அவர்களைக் காக்கிறது. இப்பணியில் உதவவே கிறிஸ்து தன் ஆவியை - தூய ஆவியை - அனைவர்க்கும் அளிக்கிறார். ஆதாமில் ஊதி உயிர் அளித்த இறைவன் (தொநூ 2:7), உலர்ந்த எலும்புகளுக்கு உயிர் அளித்துப் புது வாழ்வளித்த இறைவன் (எசேக் 37:9), இன்று தூய ஆவியாரை வழங்கிப் புதுவாழ்வு அளிக்கிறார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் திருமுழுக்கால், உறுதிபூசுதலால் ஆண்டவரின் சீடராக, திருச்சபையின் உறுப்பினராக ஆக்கப்படுகிறார். இன்று இவ்வுலகில் நடமாடாத கிறிஸ்துவின் மலரடிகளாய், தொண்டு புரியும் கரங்களாய், நற்செய்தியுரைக்கும் நாவாய் நாம் விளங்க வேண்டும். திருச்சபை எனது தாய்; அது என் தாய் வீடு; அது எனது கழகம். அதை கட்டிக்காப்பதும், வளர்ப்பதும் என் கடமை என்பதை உணர்கின்றேனா?
ஐயப்பாட்டிற்குப் பின் ஆழ்ந்த நம்பிக்கை
இயேசுவின் இனிய நண்பர் இலாசர் பெத்தானியாவில் இறக்கும் வேளையில் ஆண்டவருக்கு அழைப்பு வந்தது. ஆண்டவர் அங்குச் சென்றால் ஆபத்தென்று திருத்தூதர்கள் அவரைத் தடுத்தனர். தோமையாரோ, “நாமும் அங்குச் செல்வோம்; அவருடன் இறப்போம்" என்றார். அதே தோமையார்தான் "ஆண்டவரின் காயங்களைத் தொட்டறிந்தாலன்றி, அவர் உயிர்த்ததை நம்பமாட்டேன்" என்று அடம்பிடித்தார். ஆண்டவரும் அவரது நிபந்தனையை ஏற்று அவர்முன் தோன்றினார். "ஆண்டவரே, என் தேவனே" என்று அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டு மெய்சிலிர்த்தார் தோமையார்.
''ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை
நாத! நீங்க ஒரு ஞான விளக்கானாயே" (தாயுமானவர்)
“உதட்டளவில் மறையுண்மைகளை நம்பிக்கை அறிக்கை செய்வதைவிட, தேவையான அளவு - நியாயமான வகையில் - ஐயப்படுவது பயனுள்ளது" என்கிறார் டென்னிசன்.
முதலில் ஐயப்பட்டு, அது நீக்கப்பட்டுத் தெளிவடைந்து, உயிர்ப்பின் உண்மையில் உறுதி பெற்ற தோமையார், மறை உண்மைகளின் மகுடமான இந்த நம்பிக்கைச் சத்தியத்தை நமக்குப் போதித்தார். இதற்குச் சான்று கூற தோமை மலையில் தன் குருதியைக் கொட்டினார். "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" (29) என்பதன் வழியாக, அவரைக் காணாது அவருரை கேளாது அவரில் நம்பிக்கை கொள்ளும் அனைவரையும் ஆண்டவர் பாராட்டுகின்றார். “இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவும் இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன” என்கிறார் யோவான் (20:31). உயிர்ப்பு வாழ்வுக்கு உறுதியான சான்றுகளாய் நாம் விளங்க வேண்டும் என்ற பாடத்தையே இந்நிகழ்ச்சி வலியுறுத்துகின்றது
.
என் தந்தை என்னை அனுப்பினது போல் நானும் உங்களை அனுப்புகிறேன்.
விரல் தொடும் நெருக்கம் இன்றைய ஞாயிறு இறைஇரக்கத்தின் ஞாயிறு என்று கொண்டாடப்படுகிறது. பாஸ்கா எண்கிழமை இன்றுடன் நிறைவுபெறுகிறது. உயிர்ப்பு ஞாயிறு தொடங்கி இன்று வரை எட்டு நாள்களும் திருவழிபாட்டில் ஒற்றை நாள் என்று கருதப்படுகிறது.
திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 2000-ஆவது ஆண்டில், அருள்சகோ பவுஸ்தினா கொவால்ஸ்கோ புனிதர் பட்டம் பெறுகிற நிகழ்வில், இந்த நாளை ‘இறைஇரக்கத்தின் ஞாயிறு’ என்று அறிவிக்கிறார். இறைஇரக்க பக்திமுயற்சியில் தனிப்பட்ட அளவிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் திருத்தந்தை. இறை இரக்கத்திற்கான திருவிழா 1930-ஆம் ஆண்டு புனித பவுஸ்தினாவுக்கு நம் ஆண்டவர் இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டது. ஒப்புரவு அருளடையாளம் பெற்று நற்கருணை வாங்குதல் வழியாக இறைவனின் இரக்கத்தைப் பெற நாம் அழைப்பு பெறுகிறோம்.
திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு (2015-2016) கொண்டாட்டத்தில், கடவுளுடைய முகம் இரக்கம் என்று நமக்கு வலியுறுத்தினார்.
கடவுளில் வேரூன்றி மானிடர் நோக்கிப் பயணிக்கும் நம்பிக்கை
இன்றைய முதல் வாசகம் பெந்தகோஸ்தே நிகழ்வைத் தொடர்ந்து எருசலேமில் வாழ்ந்த நம்பிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கிறது. ”திருத்தூதர் போதனை,’ ‘நட்புறவு,’ ‘அப்பம் பிடுதல்,’ ‘இறைவேண்டல் செய்தல்’ என்னும் நான்கு தூண்களில் கட்டப்பட்டிருந்தது தொடக்க கிறிஸ்தவம். பொதுவுடைமை வாழ்வு முறையை அவர்கள் மேற்கொண்டார்கள்: ‘அனைவரும் ஒன்றாய் இருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.’ ‘ஆண்டவர் நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக்கொண்டே இருந்தார்’ – அவர்கள் தங்கள் நம்பிக்கையை வாழ்ந்தார்கள். ஆண்டவர் அவர்கள் வழியாக செயலாற்றினார்.
பாடங்கள்: நம்பிக்கை என்பது வாழ்க்கை முறை – மாற்று வாழ்க்கை முறை! திருஅவை என்பது அமைப்பு அல்ல, மாறாக, ஓர் அனுபவம். வாழ்க்கையால் நற்செய்தி அறிவிப்பு.
பேரன்பும் இரக்கமும்
இன்றைய பதிலுரைப்பாடல் (118) – பாஸ்கா எண்கிழமையில் நாம் தொடர்ந்து பாடிய திருப்பாடல் – ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என்று ஆண்டவரின் பேரன்பைப் போற்றிப் பாடுகிறது. ‘பேரன்பும்’ ‘இரக்கமும்’ இணைந்து செல்கின்றன. ஆண்டவராகிய கடவுளை தன் ஆற்றல், பாடல், மீட்பு என அறிக்கையிடுகிறார் பாடலாசிரியர்.
துன்பத்தில் மனஉறுதி
துன்புறும் தன் குழுமத்துக்கு அறிவுரை பகர்கிற பேதுரு, இந்நாளில் நாம் அடையும் துன்பம் அந்நாளில் நமக்கு மகிழ்ச்சி தரும் என்கிறார். மேலும், ‘பொன் புடமிடப்படுதல்’ என்னும் உருவகத்தைக் கையாண்டு ‘இன்று நாம் ஏற்கும் துன்பங்கள் நாளைய மகிழ்ச்சியாக மாறும்’ என்று எதிர்நோக்கு கொண்டிருக்க அழைக்கிறார்.
இரண்டு நாள்கள் – இரண்டு நிகழ்வுகள்
இன்றைய நற்செய்தி வாசகம் உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்கு தோன்றிய இரண்டு நிகழ்வுகளை – யோவான் நற்செய்தியின்படி – பதிவு செய்கிறது.
முதல் நிகழ்வு வாரத்தின் முதல்நாளில் – ஞாயிற்றுக்கிழமை, இயேசு உயிர்த்த அதே நாளில் – நடக்கிறது. சீடர்கள் பேதுருவும் யோவானும் வெற்றுக்கல்லறையைக் காண்கிறார்கள். பின்னர் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றுகிறார். தொடர்ந்து மாலையில் திருத்தூதர்களைச் சந்திக்கிறார் இயேசு. ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று அமைதியை வழங்குகிறார். அவர்களுடைய பயத்திலிருந்து அவர்களை வெளியேற்றுகிறார். பயமும் குற்ற உணர்வும் கோபமும் கொண்டிருந்த சீடர்கள் மன்னிப்பை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள அதிகாரம் வழங்குகிறார். இயேசுவின் வருகை சீடர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. ‘ஆண்டவரைக் கண்டோம்’ என்று தோமாவுக்கு அவர்கள் அறிவிக்கிறார்கள். தோமா தயக்கம் காட்டுகிறார்.
இரண்டாவது நிகழ்வு – எட்டு நாள்களுக்குப் பின் – அதே இல்லத்தில் நடக்கிறது. சீடர்களின் பயம் நீங்கவில்லை. தோமாவுடன் உரையாடுகிற இயேசு அவரிடம் தம் கைகளையும் விலாவையும் நீட்டுகிறார். உடனடியாக ‘நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!’ என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
தோமாவின் விரல்கள் வழியே நாம் இயேசுவைத் தொடுகிறோம். கடவுளின் உடலுக்குள் நம் கையை விடும் அளவுக்கு நெருக்கம்.
மேலும், தோமா இயேசுவின் உடலுக்குள் கையிடும் நிகழ்வு அவர் உடலைக் கொண்டிருந்தார் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கிறது.
இறுதியில் நற்செய்தி நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை – நம்பவும் வாழ்வு பெறவும் – எடுத்துரைக்கிறார் யோவான்.
இறைஇரக்கத்தின் ஞாயிறு பின்புலத்தில் புரிதல்: மன்னிப்பு – ஒப்புரவு அருளடையாளம் – இன்றைய நாளில் நாம் ஒப்புரவு வழிபாட்டில் பங்கேற்க அழைக்கப்படுகிறோம். கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்கு நெருங்கி நிற்கும் மானுடம். கடிந்துகொள்ளாத கருணை – இயேசு தம் சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை, மாறாக, அவர்கள் இருப்பதுபோல அவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
வாழ்வியல் சவால்கள்
கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்கு நம் விரல்கள் அவரை நெருங்கிச் செல்லுமாறு அனுமதிக்கிறது கடவுளின் இரக்கம். நம் ஒட்டுமொத்த நம்பிக்கைப் பயணத்தை நாம் இப்படியாக எடுத்துக்கொள்ள முடியும். கடவுளின் இதயத்தைத் தொடும் நம் விரல் அவருடைய இரக்கத்தை நமக்கும், நம் வழியாக மற்றவர்களுக்கும் வழங்குகின்றன. ‘இதைச் செய்தால் இது எனக்குக் கிடைக்கும்’ என்ற தன்னலமும், ‘இதைச் செய்தால் இது எனக்குக் கிடைக்க வேண்டும்’ என்ற தன்நீதியும் மேலோங்கி நிற்கும் காலத்தில், நம் அனைவருடைய தேவையும் இரக்கம் என்பதை நாம் உணர்வோம்.
இன்று நம் திருஅவை அமைப்புசார் நிறுவனமாக மாறிவிட்டது. தொடக்க நம்பிக்கையாளர்கள் கொண்டிருந்த குழும அனுபவம் நம்மில் குறைந்துகொண்டே வருகிறது. போதனை என்பது கோட்பாடு எனவும், அப்பம் பிட்குதல் என்பது வெறும் சடங்காகவும், கூடி வருதல் வேற்றுமையை மையப்படுத்தியதாகவும், பணி என்பது அதிகாரம் தேடுவதாகவும் மாறிவிட்டது. தொடக்க கிறிஸ்தவ அனுபவம் நோக்கி நாம் தனிப்பட்ட அளவிலும் குழுமமாகவும் மீண்டும் பயணம் செய்ய வேண்டும்.
பொன் புடமிடப்படுவதுபோல நம் வாழ்க்கை துன்பத்தால் கவலையால் புடமிடப்படுகிறது. நெருப்பின் வெப்பத்தை மட்டும் பார்க்கும் பொன் அதிலிருந்து தப்பி ஓட நினைக்கிறது. ஆனால், பார்வையைச் சற்றே அகலமாக்கி தான் அலங்கரிக்கும் அனைத்து கழுத்துகளையும் விரல்களையும் அது நினைத்தால் துன்பம் ஏற்கிறது. துன்பம் நம் வாழ்வைப் பக்குவப்படுத்துகிறது. தடைகளே நம் வாழ்க்கையின் பாதைகளாக மாறுகின்றன..
இரக்கமும் நம்பிக்கையும் நம் இதயத் துடிப்பாகட்டும்
இன்று இறைஇரக்கத்தின் பெருவிழா. இன்றைய நற்செய்தியில் தன் உயிர்ப்பிற்குப் பிறகு தன் சீடர்களுக்குத் தோன்றும் இயேசு மூன்று பரிசுகளைத் தருவதைப் பார்க்கிறோம்.
1. அமைதி (வா.19): கலகக்காரன், யாரை நமது வழிகாட்டியாக ஏற்று வாழ்ந்தோமோ, அந்தத் தலைவர் கலகக்காரன் என்று படுகொலை செய்யப்பட்டிருக்கிறார், இனி நமது வாழ்வு என்னவாகும், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா, இனி எப்படி இந்தச் சமூகத்தில் வாழப்போகிறோம் என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் சிக்கித் தவித்த சீடர்களுக்கு இயேசு தந்த முதல் பரிசு இது.
2. தூய ஆவியார் (வா.22): >மக்களைக் குழப்புகிறவன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு இயேசு தண்டிக்கப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு மூன்றாண்டுகள் பயணித்திருக்கிறோம். இதுதெரிந்தால் நம்மையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு மூடிய கதவுகளுக்குள் ஒளிந்துகொண்டிருந்தவர்களுக்கு தூய ஆவியும் அவர் அருளும் துணிவும் பரிசாகத் தரப்படுகின்றன.
3. நம்பிக்கை: "மூன்றுநாள்களுக்குப் பின் இயேசு ஒருவேளை உயிர்த்துவிடுவாரோ என்ற எண்ணம் பரிசேயர்களுக்குக்கூட இருந்தது.” ஆனால் அந்த நம்பிக்கை சீடர்களிடம் இல்லை. அவநம்பிக்கையில், விரக்தியில், அச்சத்தில் ஒளிந்திருந்த சீடர்களுக்கு இயேசுதந்த மூன்றாவது பரிசுதான் நம்பிக்கை. இயேசு உயிர்த்துவிட்டார் என்ற நம்பிக்கையைப் பெற்ற சீடர்கள் தங்கள் நம்பிக்கையை மிகத்தெளிவாக தோமாவிடம் அறிக்கையிடுகிறார்கள்: “நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்.” முதலில் நம்ப மறுக்கும் தோமாவுக்கும் எட்டுநாள்கள் கழித்து அதே பரிசை இயேசுலே தருகிறார்: “ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்று. நம்பிக்கைப் பரிசை பெற்றுக்கொண்ட தோமாவும் உடனே தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்: “நீரே என் ஆண்டவர் ! நீரே என் கடவுள்!” (வ.28)
அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. தங்கள் எதிர்காலம்குறித்த கவலையோடு இருந்த சீடர்கள் உயிர்த்த இயேசுவின் இந்தக் காட்சிக்குப் பிறகு, முதலில் நம்புகிறார்கள், இரண்டாவது நம்பியதை அறிக்கையிடுகிறார்கள், மூன்றாவதாகத் தாங்கள் நம்பியதை, நம்பி அறிக்கையிட்டதை வாழ்ந்து காட்டத் தொடங்குகிறார்கள். கோவிலில் அப்பத்தையும், தெருக்களில் இறைவார்த்தையையும், வீடுகளில் அன்பையும் பகிர்ந்துகொண்டு தாங்கள் நம்பியதையெல்லாம் வாழ்ந்து காட்டிய ஒரு முன்மாதிரிச் சமூகமாக இருந்தார்கள் என்பதை வரலாறு வியப்போடு பதிவு செய்கின்றது. ஆம், நம்ப வேண்டும், நம்பியதை அறிக்கையிட வேண்டும், நம்பி அறிக்கையிட்டதை வாழ்ந்து காட்ட வேண்டும்.
நாம் நம்புவதற்கும், நம்பி அறிக்கையிடுவதற்கும், நாம் வாழ்கின்ற வாழ்விற்கும் பாரதூர இடைவெளி இருக்கின்றது. நம்பிக்கை வார்த்தையோடு நின்றுவிடுகிறது. வாழ்வில் கடைபிடிக்கப்படுவதில்லை. நாம் அறிக்கையிடும் அனைத்தும் சொல்லோடு முடிந்துவிட்டன நமது செயல் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கின்றது. மொத்தத்தில் நம்பிக்கை கொண்டோர் என்று அழைக்கப்படுவதற்குரிய அடையாளத்தை இழந்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திரு அவையின் தொடக்ககாலத்தில் ஒருவர் கிறித்தவர் என்பதற்கு அடையாளம் அவரது வாழ்வுதான். இன்று நாம் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் பிறமக்கள் இவர் கிறித்தவர் என்று சொல்லும் அளவிற்கு நமது வாழ்வு இருக்கிறதா என்று சிந்திப்போம்.
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த ஒருவன் கால் தவறி கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டான். கீழே பாதாளம், "கடவுளே! என்னைக் காப்பாற்றும்", எனக் கத்தி வேண்டினான். கடவுள், "உன்னை நான் காப்பாற்றுகிறேன். கையை விட்டுவிட்டு குதி”, என்றார். என்ன கடவுளே, பயங்கர பாதாளம் விழுந்தால் என்ன ஆகும். கையை விட்டுவிட்டு குதிக்க சொல்கிறீரே"-னு புலம்பினான். "என்மீது நம்பிக்கையிருந்தால் கைகளை விட்டுவிட்டு குதி. நான் காப்பாற்றுவேன்”, என்றார் கடவுள். அவன் கைகளை மரக்கிளையிலிருந்து விடாமல், "கடவுளே! என்னைக் காப்பாற்று”, எனக் கத்திக்கொண்டே இருந்தான். கடவுளும் அவனது நம்பிக்கையின்மையால் அவனைக் காப்பாற்றவில்லை.
மனிதன் காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழ்ந்து விடுவதில்லை. நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான். பகல் புலர்ந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரை நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான். பால் கொண்டு வரும் பால்காரர், காய்கறி விற்பவர், வாகனம் ஓட்டுபவர்கள் ஹோட்டல் சமையல்காரர்... இப்படியாக நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் எனக்குத் தீங்கு செய்யவில்லை, நன்மையைத்தான் செய்கிறார்கள் என்று நம்பும்போதுதான் நாம் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்கிறோம். எனவே அன்றாட அமைதியான வாழ்வுக்கு அடிப்படை நம்பிக்கை, நம்பிக்கைதான்.
* தோமா நம்பிக்கை இல்லாதவரா?
இன்றைய நற்செய்தியில் வரும் தோமா நம்பிக்கையில்லாதவரா? "நாமும் போவோம். அவருடன் இறப்போம்", யோவா 11:16 என்று இயேசுவுக்காகத் தன் உயிரை துச்சமெனக் கருதிய தோமா விசுவாசமில்லாதவரா? "ஆண்டவரே! நீர் செல்லுமிடம் எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித் தெரியும்", யோவா 14:5 என இயேசுவின் திட்டத்தைப் புரிந்துகொண்டு அவரைப் பின்பற்றத் துடித்த தோமா நம்பிக்கையில்லாதவரா? இல்லவே இல்லை. மாறாக இறைமகன் இயேசுவைப் பற்றிய மாபெரும் விசுவாச உண்மையை "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்", அறிக்கையிட தகுதியான நபர் தோமாதான் என்பதை யோவான் தனது நற்செய்தியிலே தெளிவுபடுத்துகிறார்.
* கண்டதால் விசுவசித்த தோமா, நம்பிக்கையின் நாயகன்:
அறிவுக்கண் தனக்கு உண்டு என நினைத்த தோமா, இயேசுவைக் கண்ணால் கண்டு, அவரைக் கையால் தொட்டுப் பார்த்தால் மட்டுமே அவர் உயிர்த்தாரென நம்புவதாகச் சொல்கிறார். ஆனால் உயிர்த்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டபோது, "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்", என நம்பிக்கை அறிக்கையிடுகிறார். அவநம்பிக்கையிலே விழுந்து கிடந்த தோமா, நம்பிக்கையின் உச்சியைத் தொடுகிறார்.
இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்த தோமா, உயிர்த்த இயேசுவை நேரில் கண்டபோது, அவரின் நம்பிக்கை உச்சக்கட்டத்தை அடைந்தது. தோமா ஒருவர்தான் இயேசுவைக் 'கடவுள்' என நேரடியாக அழைக்கிறார். தோமா தனது நம்பிக்கையை இழக்கக் காரணம், அவர் மற்ற சீடர்களிடமிருந்து விலகித் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் மீண்டும் மற்ற சீடர்களுடன் இணைந்தபோதுதான், உயிர்த்த இயேசு அவருக்குத் தோன்றினார். இயேசு தோமாவுக்கு தனிப்பட்ட முறையில் தோன்றவில்லை. இயேசுவின் இறப்புக்குப் பிறகு சீடர்கள் பயந்தார்கள்; எங்கே தங்களுக்கும் இயேசுவின் பாடுகள், மரணம் நிலை வந்துவிடுமோ என அஞ்சி, நடுங்கி, ஒளிந்து கொண்டார்கள். இப்படியாகப் பயந்து குழம்பிப் போயிருந்த சீடர்கள், உயிர்த்த இயேசுவைப் பார்த்து மகிழ்ந்தார்கள். இயேசு தமது ஆவியை ஊதியவுடன் தெளிவும், திடமும், நம்பிக்கையும் பெற்று கிறிஸ்துவை அறிவிக்கத் தொடங்கினர்.
தெளிவற்ற, குழப்பமான, பயத்துடன் இருந்த தோமா, உயிர்த்த இயேசுவைக் கண்ட உடன் தெளிவு பெற்றார். உறுதியான நம்பிக்கையை தனதாக்கிக் கொண்டார். தெளிவற்றவர்களுக்கு தெளிவைப்பெற்றுத் தருகிறது தோமாவின் நம்பிக்கை. தோமா நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, அதற்கு இறுதிவரை செயல்வடிவம் கொடுத்தார். அதன் விளைவாகத்தான் தோமா நாடுகளைக் கடந்து, இந்தியாவுக்கு வந்து, நற்செய்தியைப் பரப்பி, பலரை கிறிஸ்துவின் சீடர்களாக்கி, தாம் நம்பிய கிறிஸ்துவுக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்தார். நம் பாரத மண்ணின் பாதுகாவலனார். அப்போஸ்தலர் ஆனார். தோமா இயேசுவை கொள்கையாவில் மட்டும் நம்பி ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக மனத்தளவில் அவரை முழுமையாக நம்பி, ஏற்றுக்கொண்டு, தம்மையே முழுமையாக இயேசுவுக்கு கையளித்து உண்மை சீடராக வாழ்ந்தார்.
* இயேசுவை சந்திக்கும்முன் - ஏசுவை சந்தித்தபின்:
தோமா 'சந்தேகபேர்வழி' என நாம் நினைக்கிறோம். தோமா உயிர்த்த இயேசுவை தம் ஊனக்கண்களால் காண ஆசைப்பட்டதுதான் அவரைச் சந்தேகப்பேர் வழியாக மாற்றியது. ஆனால் இயேசுவைக் கண்டபிறகு உள்ளத்தில் ஆழமாக விசுவசித்தார். இயேசுவை சந்திக்குமுன் சந்தேகபேர் வழியாக இருந்தவர், இயேசுவை சந்தித்தப்பின் விசுவாச சீடராக மாறினார். தோமாவைப் போல இயேசுவை சந்திக்குமுன் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாது சந்தேகப்பட்டவர்கள், இயேசுவை சந்தித்தப்பிறகு புதுப்படைப்பாக, விசுவாசத் தூதுவர்களாக மாறினார்கள்.
*சமாரியப் பெண் இயேசுவை சந்திப்பதற்கு முன் அவரைப் பற்றியும், அவரைச் சந்தித்து பேசிய போதும் கூடச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவருடன் நடந்த நீண்ட உரையாடலில் ஐயா.... இறைவாக்கினர், மெசியா.... எனப் படிப்படியாக இயேசு யாரென முழுமையாக புரிந்துகொண்டு, இறுதியில் "அவரை வந்து பாருங்கள்", "அவர் மெசியாவாக இருப்பாரோ", யோவா 4:29-30 என ஊர்மக்களுக்கு அறிவித்தார்.
* பிறவிக்குருடன் இயேசுவை சந்திக்குமுன் நாசரேத்து ஏசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அவன் பார்வை பெற்ற பிறகு அவரை, "ஆண்டவரே!" என அழைத்தான். நான் பார்வைபெற வேண்டும் என்று நம்பி விசுவசித்தான். பார்வை பெற்றான். உடனே அவன் கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றினான். லூக் 18:35-43.
* பவுல் இயேசுவை சந்திக்குமுன் சவுலாக இருந்து இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டார். உயிர்த்த இயேசுவை சந்தித்தபிறகு, "ஆண்டவரே”, என விசுவாச அறிக்கையிட்டார். "எனது பெயரை எடுத்துச் சொல்ல நான் தேர்ந்துகொண்ட கருவி நீ", திப 9:15 என இயேசு சொன்னபோது நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கி இயேசுவின் சீடரானார்.
* சக்கேயு வரிதண்டுபவர்களுக்குத் தலைவர். செல்வந்தராக இருந்தபோதும், இயேசு அவரை அழைத்து, "இன்று உன் வீட்டில் நான் தங்க வேண்டும்", லூக் 19:5 என்றபோது, இயேசுவை அறிந்துகொண்டு மனமாற்றம் பெற்று பாவபரிகாரத்தின் அடையாளமாகத் தன் சொத்தைப் பகிர்ந்தளிக்க முன்வந்தார். இயேசுவின் சீடரானார்.
இயேசு தோமாவின் அவநம்பிக்கையை நீக்க, அவருக்கு காட்சியளித்தார். தோமாவும் நீரே என் ஆண்டவர், கடவுள், என விசுவாச அறிக்கையிட்டார். நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அவிசுவாசப்பட்டாலும் கூட, கடவுள் நம்மை வெறுக்கமாட்டார். நம் மனதை மாற்றி அவரை நாம் ஏற்றுக்கொள்ள செய்யத் துடிக்கிறார். இது உயிர்த்த இயேசுவின் அருள்வாக்கு. “நம்பிக்கையைத் தொடங்கி வைப்பவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது நமது கண்களைப் பதிய வைத்து, மனம் தளராது எவ்வித இடையூறுகளையும் மேற்கொள்ள வேண்டும்" எபி 12:2-3. நமது நம்பிக்கைதான் உலகை வெல்கிறது. 1யோவா 5:4 நம்பிக்கையைக் கேடயமாகக் கொண்டுதான் நாம் தீயோனை வெல்ல முடியும். எபேசி 6:16.
* நம்பிக்கையும் அன்பும்
கிறிஸ்தவ வாழ்வுக்கு ஆதாரம் அன்புடன் கூடிய நம்பிக்கை; நம்பிக்கையுடன் கூடிய அன்பு. நமது நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும். நீதியின்பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்" மத் 5:10. கடவுள் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைத்தான் கண்டிக்கிறார். எபி 12:6. துன்புறுவது கடவுளின் சாபமல்ல; மாறாக அது கடவுளன்பின் வெளிப்பாடு. நம்பிக்கை அன்பின் மூலம்தான் எண்பிக்கப்படல் வேண்டும். "அன்பின் வழியாக செயலாற்றும் நம்பிக்கை தான் சிறந்தது". அதுதான் கிறிஸ்தவ மதத்தின் சாராம்சம் கலா 5:6. அதனால்தான் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். திப 2:44 அவர்களிடம் அன்பும் நம்பிக்கையும் இணைந்திருந்தது. பகிர்வும் மன ஒற்றுமையும் அதிகமானது.
கடவுள் படைத்த ஒவ்வொரு மனிதரிலும் கடவுள் வாழ்கிறார் என முழுமையாக விசுவசிப்பவர்கள்தான் இறையன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். "என் சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" எனத் தம்மை பிறரில் கண்டு விசுவசிப்பவர்கள்தான் அன்பு செயல்களைச் செய்ய முடியும் என இயேசு சொல்கிறார். அன்பு வாழ்வுக்கு அடிப்படை, ஆதோரம் நம்பிக்கைதான். "நாம் சொல்லிலும், பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" 1அருள் 3:18. அன்புடன் கூடிய நம்பிக்கை வாழ்வுதான் உயிர்ப்புன் வாழ்வு. இயேசுவின் வழி வாழ்வு. அதுதான் நமக்கு நிறைமகிழ்ச்சியும் நிலைவாழ்வும் தரும்.
* ஆவியாரின் வழி வாழ்வு
உயிர்த்த இயேசு சீடர்களின் மீது ஊதி, "தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்ளுங்கள்”, என்றார். உயிர்த்த இயேசுவின் சமாதான கொடைக்கு அடுத்த மாபெரும் கொடை தூய ஆவியார்தான். இந்த ஆவி 'தொடக்கத்திலே நீர்த்திரள்மீது அசைந்தாடிக் கொண்டிருந்தது" தொ.நூ 1:2. இதே ஆவிதான் மண்ணின் முதல் மனிதனுக்கு உருக்கொடுத்து உயிர் கொடுத்தது. "ஆண்டவராகிய கடவுள் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்" தொ.நூ 2:7. உலர்ந்துபோன எலும்புகளுக்கும் உயிர்கொடுத்தது இதே ஆவிதான். "நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகழச்செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்". எசே 37:6.
இயேசுவின் இறப்பிற்குப் பிறகு பயந்து நடுங்கிய சீடர்களுக்கு தெளிந்த பார்வையைக் கொடுத்து இதே ஆவிதான். அதனால்தான் ஆண்டவரின் ஆவியாரைப் பெற்ற சீடர்கள் உயிர்த்த இயேசுவைப் பற்றித் தைரியத்துடன் அறிவித்து, மக்களுக்கு விசுவாசம் ஊட்டி, திருமுழுக்குக் கொடுத்து எல்லாரையும் சீடராக்கினார்கள். சீடர்களின் வாழ்வு ஆவியாரால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்ட வாழ்வாக இருந்தது.
கடவுளின் மக்களாகிய நாம் யார்? "கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்" உரோ 8:14. கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையை நாம் பெற்றுக்கொண்டோம். அதனால்தான் நாம் 'அப்பா, தந்தாய்' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து, தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு சான்று பகர்கின்றனர். நாம் கடவுளிடமிருந்து உரிமைபேறு பெற்றவர்களாக ஆகிறோம்". உரோ 8:15-17.
இந்த தூயஆவியார் தான் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார். நாம் எதற்காக, எப்படி இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே, சொல்வடிவம் பெற முடியாத நமது பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காகப் பரிந்து பேசுகிறார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.
மேலும் கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே, ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். எனவே நமது கிறிஸ்தவ வாழ்வுக்கு உயிர்தரும் உரமாக அமைவது தூய ஆவியே. அவர் வழி நாமும் கடவுளின் பேரானந்தத்தை முழுமையாக அடைவோம். ஏனெனில் "வாழ்வு தருவது தூய ஆவியே". யோவா 6: