மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எண்ணிக்கை 6:22-27| கலாத்தியர் 4:4-7 | லூக்கா 2:16-21

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இன்று இறைவனின் தாயை நினைவுகூர்கின்றோம். தாய் என்ற சொல்லைக் கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது அன்பு!

இதோ ஒரு தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட ஓர் உண்மை நிகழ்ச்சி .

1980 - ஆம் ஆண்டு தென்கொரியாவிலுள்ள சியோல் என்னும் நகரிலே வீரத் தாயொருத்தி! அவள் பெயர் கிம் மிஸ். ஒரு மாடி வீட்டில் 13-வது மாடியில் அவள் குடியிருந்தாள். அவளுக்கு இரண்டு வயது குழந்தை ஒன்று.

ஒருநாள் அந்த வீட்டிலிருந்த காசோலை ஒன்று ஜன்னல் வழியாகக் கீழே விழுந்துவிட்டது. அதன் மதிப்பு ரூ.126. அதைக் கவனித்த கிம் மிஸ், தனது குழந்தையை வீட்டில் விட்டு விட்டுக் கீழே விழுந்த காசோலையை எடுப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

கீழே கிடந்த காசோலையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அங்கே அவள் காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டாள்.

வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எப்படியோ வீட்டைவிட்டு வெளியேறி, மதிலேறியது ! தவறியது. 13- வது மாடியிலிருந்து கீழே விழுந்தது. விழுந்து கொண்டிருந்த குழந்தையைத் தாய் பார்த்தாள்.

அபயக்குரல் எழுப்பி ஆட்களை அழைக்க அங்கே நேரமில்லை ! விழுந்த குழந்தைக்கு முன்னால் நின்று தனது இரண்டு கைகளையும் விரித்தாள். குழந்தை கைகளில் விழுந்தது. குழந்தைக்கு எந்த ஆபத்துமில்லை!

குழந்தை தன் மீது விழுந்தால் தனது நிலை என்னவாகும் என அந்தத் தாய் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை!

அவளுடைய இதயத்திலிருந்ததெல்லாம் அவள் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான்! அவள் அன்பைக் கடவுள் தமது வல்லமையால் ஆசீர்வதித்தார். அவளது கைகள் தெய்வீகச் சக்தியைப் பெற்றன! குழந்தை காப்பாற்றப் பட்டது!

தாய் என்பதற்கு மறுபெயர் அன்பு; தாய் என்பதற்கு மறுபெயர் பரிவு; தாய் என்பதற்கு மறுபெயர் பாசம்; தாய் என்பதற்கு மறுபெயர் நேசம்; தாய் என்பதற்கு மறுபெயர் கருணை .

ஒரு மனிதன் வாழ்க்கையில் தேடி அலைவதெல்லாம் அன்பே! அந்த அன்பை அர்த்தமுள்ள முறையில் மனித குலத்திற்குத் தருபவள் தாய்! இதனால் தான் இயேசு தனது தாயையே நமக்குத் தாயாகக் கொடுக்க கல்வாரியில் முன் வந்தார்!

நமது உலகத் தாய்களுக்கு உள்ள அத்தனை நல்ல பண்புகளும் நமது தேவதாய்க்கு உண்டு. மேலும் மற்ற தாய்களிடம் நின்று நிலவும் பண்பைவிட மேலான பண்பு ஒன்று மரியிடம் உண்டு! அதுதான் அவளிடம் நின்று நிலவும் வல்லமை!

உலகப் பெண்களில் கடவுளுக்குத் தாயாகும் பெருமை மரியாவுக்கு மட்டுமே கிடைத்தது.

கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குத் தெளிவாக்குகின்றன. அனைவருக்கும் ஆசி வழங்குபவர் கடவுள்; கருணை பொழிபவர் கடவுள் ; அமைதி தருபவர் கடவுள் (முதல் வாசகம்) நம்மை எல்லாத் துன்பங்களில் இருந்தும் மீட்கும் கடவுள் ; நம்மீது ஒளியைப் பொழியும் கடவுள் ; பிள்ளைகளாக்கும் உரிமையை அளிக்கும் கடவுள் (இரண்டாம் வாசகம்) மீட்பர் என்ற பெயர் கொண்ட கடவுள் (நற்செய்தி) - இவை யாவும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. கடவுளிடம், இறைமகன் இயேசுவிடம், மரியா கேட்டால், அவர் ஒருபோதும் அவள் கேட்பதை மறுக்கப் போவதில்லை (யோவா. 2:1-11). ஆகவே ஒரு வகையில் மரியாவால் ஆகாதது ஒன்றுமில்லை !

இதை நினைத்து இன்று நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். நமது விண்ணகத் தாயிடம் அன்பும் உண்டு, வல்லமையும் உண்டு. இதை மனதில் கொண்டு நமக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கன்னித்தாய் வழியாக இறைவனிடம் வேண்டிப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மரியா இறைவனின் அன்னை

கடவுள் தேடிய பெண் : மரியா துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.

ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.

துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.

ஆம். கடவுளோடு பேசுகின்றேன், கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.

அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.

துறவி, சரி என்றார்.

மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள், அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன். இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.

இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.

தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள, மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்) கிடைத்தார். அவர்தான் மரியா! மேலும் அறிவோம்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் :
தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மரியன்னை இறைவனின் தாய்

புத்தாண்டின் முதல் நாள் உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அமைதி எங்கே இருக்கிறது என்பதை ஓர் ஓவியர் பின்வருமாறு படம் வரைந்து காட்டிப் பரிசு பெற்றார். மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடு; அமாவாசை இருட்டு; கோடை இடி; கண்ணைப் பறிக்கும் மின்னல்; சிங்கம், சிறுத்தைப்புலி மற்றும் கொடிய விலங்குகளின் சீற்றம்; பேய் மழை. இப்பயங்கரமான காட்டில் ஒரு பெரிய மரம்: அம்மரத்தின் நடுவில் ஒரு பொந்து: அப்பொந்தில் ஒரு தாய்ப்பறவை; அதன் இறக்கைக்கு அடியில் ஒரு சேய்ப்பறவை பயமின்றி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொந்துக்குக் கீழ் : “இங்கேதான் அமைதி தவழ்கின்றது" என்று ஓவியர் எழுதியுள்ளார்.

காரிருள் சூழ்ந்த பயங்கரமான காட்டில் ஒரு சேய்ப்பறவை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம்: அது தன் தாயின் இறக்கைக்கு அடியில் உள்ளது. அச்சமும் திகிலும் நிறைந்த நம் வாழ்வில் நாம் அமைதியுடன் வாழவேண்டுமென்றால், நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு, அவரது அன்பான அரவணைப்பில் இருப்பதை உணர வேண்டும். திருப்பா 91 கூறுவதை இப்புத்தாண்டின் தாரக மந்திரமாகக் கொள்வோம்: “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர் - தீங்கு உமக்கு நேரிடாது. வாதைஉம் கூடாரத்தை நெருங்காது" (திபா 91:1, 10).

புத்தாண்டாகிய இன்று குழந்தை இயேசு பிறந்த எட்டாம் நாள், இன்று குழந்தை இயேசுவுக்கு அதன் பெற்றோர்கள் விருத்தசேதனம் செய்து, இயேசு என்ற பெயரைச் சூட்டியதாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். அக்குழந்தை இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் கூறுவது: "நான்தான்: அஞ்சாதீர்கள்" (யோவா 6:20). இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, அழுகையோ சிரிப்போ, உடல் நலமோ நோயோ - எத்தகைய சூழலிலும் குவலயம் போற்றும் குழந்தை இயேசு நம்முடன் இருந்து, நம்மை வழிநடத்திக் காத்து வருகிறார்.

இன்று திருச்சபை, "மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மரியா மீட்பரின் தாய் மட்டுமல்ல, நம்முடைய தாயும்கூட, எனவே, இறைவனின் தாயும் நமது தாயுமான மரியன்னையின் பாத கமலத்தில் இப்புத்தாண்டை வைப்போம். அந்த அன்பு அன்னை நம்மை கரம்பிடித்து, கவலைகளைப் போக்கி, கண்ணீரைத் துடைத்து, நம்மைக் கரைசேர்ப்பார் என்பது உறுதி.

மரியாவின் படத்திற்கு முன் ஒருவர் மண்டியிட்டு, “அம்மா! உம்மை எனக்குத் தாயாகக் காட்டமாட்டாயா?" என்று கேட்க, மரியா அவரிடம், "மகனே! உன்னை எனக்குப் பிள்ளையாக காட்டமாட்டயா?" என்று கேட்டார். மரியா என்றும் நமக்குத் தாயாக இருக்கிறார். ஆனால் நாம் என்றும் அவருடைய பிள்ளைகளாக இருக்கின்றோமா? என்பதுதான் பிரச்சினை!

| மரியன்னையின் பிள்ளைகளாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? "என் ஆண்டவரின் தாய்" (லூக் 1:42) என்று மரியாவை அழைத்த எலிசபெத் அவரிடம், "ஆண்டவர் உமக்குச் சென்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45) என்று கூறினார், மரியா பேறு பெற்றவர்; ஏனெனில் அவர் கடவுளின் வார்த்தையை நம்பினார். "கன்னி நம்பினார்; நம்பி கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார்" (புனித அகுஸ்தின்).

எனவே, மரியாவின் உண்மையான பிள்ளைகளாக நாம் நடக்க வேண்டுமென்றால், நாமும் அவரைப்போல் கடவுளை முற்றிலும் நம்பி, கடவுளிடம் சரண் அடைய வேண்டும். மரியா கடவுளை நம்பியதால் கடவுள் அவருக்குத் துன்பம் வராமல் பாதுகாக்கவில்லை . மரியாவைக் கடவுள் சென்மப்பாவம் தீண்டாமல் பாதுகாத்தார்; ஆனால் துன்பம் தீண்டாமல் பாதுகாக்கவில்லை. கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது மரியா சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25). அப்போது சிமியோன் கூறிய இறைவாக்கு, "உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக் 2:35) நிறைவேறியது. ஆனால் மரியா சிலுவை அடியில் விசுவாசத்தால் நிமிர்ந்து நின்றார். இத்தகைய வீரத் தாயின் புதல்வர்களாகிய நாம் துன்பத்தைக் கண்டு துவண்டு போகலாமா ?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாம் அடிமைகள் அல்ல; பிள்ளைகள்" (கலா 4:7). அதே திருத்தூதர் கூறுகிறார்: “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், அப்பா, தந்தையே என அழைக்கிறோம்" (உரோ 8:15), எனவே, நாம் கோழைகள் அல்ல; கடவுளின் பிள்ளைகள் அவ்விதமே அச்சமின்றி வாழ்வோம்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவருடைய வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவான் பேருவகையால் துள்ளினார் (லூக் 1:44). மரியா நமது மகிழ்ச்சியின் காரணம், மரியாவைப் பின்பற்றி நாமும் இப்புத்தாண்டில் பிறரை மகிழ்விப்பதில் கருத்தாய் இருப்போம். பிறரை நமது சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதபடி கவனமாய் இருப்போம். அகம் மலர்ந்து தருமம் செய்வதைவிட, முகம் மலர்ந்து இனிய சொல் கூறுவது சிறந்தது.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (குறள் 92)

இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக! அவரின் உடனிருப்பு என்றும் உங்களை வழிநடத்தவதாக! உலகம் தரமுடியாத அமைதியால் கிறிஸ்து உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் நிரப்புவாராக! வாழ்க புனித மரியே! விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளுகின்ற அரசரை ஈன்றவரே வாழ்க!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வேண்டும் மூன்றுவித நம்பிக்கைகள்

இயேசு ஒருநாள் பேதுருவோடு பூமிக்கு வந்து உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பினார். இருவரும் புறப்பட்டனர். இறைமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆசை.

போகிற வழியில் எதிரே ஒரு குதிரைவண்டி மணலில் சிக்கிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டியை அப்படியே விட்டுவிட்டுப் பாதையோரத்தில் வண்டிக்காரன் முழந்தாளிட்டுச் செபித்துக் கொண்டிருந்தான்: “இறைவா, என் வண்டியை ஓடவிடு. நீ நினைத்தால் இந்த அற்புதத்தைச் செய்யலாம். உன்னால் முடியாதது உண்டா என்ன?" உருக்கமான அவன் செபத்தைக் கேட்டதுமே செப வேளையில் தூங்கியே பழக்கப்பட்ட பேதுருகூடச் சிலிர்த்துப் போனார். இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே, அவனுடைய செபம் உம் மனத்தைத் தொட வில்லையா? உதவி செய்யும்" என்று கெஞ்சினார். இயேசுவோ பேதுருவை முறைத்து அமைதியாக இரு' என்ற சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

சிறிது தொலைவு சென்றதும் இன்னொரு குதிரை வண்டி தலைகீழாக உருண்டு கிடந்ததைக் கண்டனர். வண்டிக்காரனோ சொல்லக்கூடாத பொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக் கொண்டும் தெய்வ நிந்தனை செய்து கொண்டும் விழுந்து கிடந்த வண்டியை நிமிர்த்தப் பாடுபட்டுக் கொண்டிருந்தான். வேர்த்து விறுவிறுக்க அவன் உழைக்கும் உழைப்பெல்லாம் பயனற்றுப் போகிறதே என்று பேதுரு பரிதாபப்பட்டு “ஆண்டவரே, இவன் இப்படிப் பாடுபடுகிறானே, பயனளியும்" என்று மன்றாடினார். இரவு முழுவதும் உழைத்தும் எதுவும் கிடைக்காத நிலையில் விடியல் வேளையில் கரைமேல் நின்று கொண்டே வலைகிழிய மின்படச் செய்தவர் அல்லவா இயேசு என்ற நினைவு பேதுருவுக்கு வந்தது. “பேதுரு, பேசாமல் இருக்க மாட்டே” என்று இயேசு கடிந்ததும் வாயடங்கி நின்றார் பேதுரு.

கொஞ்சத்தூரம் போனதும் இன்னொரு குதிரை வண்டி சேற்றில் மாட்டிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டிக்காரனோ கடவுள் உதவி செய்வார் என்ற உறுதிப்பாட்டோடு 'இயேசுவே' என்று இறைவன் நாமத்தைத் துதித்துக் கொண்டு நுகத்தடியைப் பிடித்து அசைத்து இழுக்க முயன்று கொண்டிருந்தான். அதைக்கண்ட பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கும் துணிவில்லை. முந்தைய அனுபவங்களின் காரணமாக பேசவே பயந்தார். ஆனால் இயேசுவோ பேதுருவைப் பார்த்து “நீ அந்தச் சக்கரத்தைப் பிடி, நான் இந்தச் சக்கரத்தைப் பிடித்துக் கொள்கிறேன், இரண்டு பேரும் அவனோடு சேர்ந்து தள்ளுவோம்" என்றார். வண்டி நகர்ந்தது.

பேதுருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று நிகழ்ச்சிகளிலும் இயேசு நடந்து கொண்ட முறை புதிராக இருந்தது. வியப்பாகவும் இருந்தது. விளக்கம் கேட்க விரும்பினார். தயங்கினார். அவரது கலக்கத்தைப் பார்த்த இயேசு விளக்கத் தொடங்கினார்.

"முயற்சி எதுவுமின்றி முதல் வண்டிக்காரன் செபித்துக் கொண்டிருந்தான். திண்ணையில் இருந்து கொண்டே தெய்வத்தை நினைப்பவனுக்கு நான் எப்போதும் படியளக்க விரும்புவதில்லை. இரண்டாவது வண்டிக்காரனோ தெய்வ சிந்தனை இன்றியே உழைத்ததனால் அவன் உழைப்பு வெறுமையைக் கண்டது. அவனன்றி அணுவை அசைக்க முயன்றவன் அவன். ஆனால் மூன்றாவது மனிதனோ தன்னம்பிக்கையோடும், தெய்வ நம்பிக்கையோடும் செயல்பட்டவன். தெய்வ நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் எவன் உழைக்கிறானோ அவனுக்கு வலிய தேடிச் சென்று உதவக் காத்திருக்கிறேன்”

கடவுளால் மட்டுமே முடியும் என்பது போல செபித்திடு மனிதனால் மட்டுமே முடியும் என்பது போல உழைத்திடு

வெற்றி உனதே! அத்துடன் நல்லது நடக்கும் என்ற பொது நம்பிக்கையை வளர்த்துக் கொள். இறைவா, நீயும் நானும் இணைந்து கையாள முடியாத எதுவும் எனக்கு இந்த ஆண்டில் நடக்கப் போவதில்லை என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இரும்!

ஆக, வாழ்க்கைக்கு வேண்டும் மூன்று நம்பிக்கைகள்:
தெய்வ நம்பிக்கை: கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற உணர்வு - மத்.19:26.
தன்னம்பிக்கை : எனக்கு உறுதியூட்டும் இறைவனருளால் என்னால் சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்ற உறுதி - பிலி.4:13.
பொது நம்பிக்கை : என்ன ஆனாலும் நல்லது நடக்கும் என்ற எண்ணம் -1 தெச.5:18

நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும். நம்பிக்கை என்பதே மனிதனுக்கு உயிரூட்டும் உயிர்ச்சத்து.

“ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர் (எரேமி.29:11).

புத்தாண்டில் மூன்று விதமான இறையாசீர் நம்மோடு இருக்க வேண்டுமென்று எண்ணிக்கை நூலாசிரியர் வாழ்த்துகிறார் (எண்.6:2426):
1. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!
3. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! இன்பமாயிருக்கப் போதுமான இனிமைகளும் உறுதியாயிருக்கப் போதுமான முயற்சிகளும் இதயத்துடன் இருக்கப் போதுமான துக்கங்களும் துள்ளிப்பாடப் போதுமான தன்னம்பிக்கையும் ஆண்டவனை நேசிக்கவும் அயலானை நேசிக்கவும் போதுமான இறையருளும் புத்தாண்டு அருளட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்னைக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துமடல்

முப்பெரும்விழா என்பது இந்தியாவில், சிறப்பாக, தமிழகத்தில் அடிக்கடி கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. மூன்று காரணங்கள் இருந்தால் போதும்... முப்பெரும் விழாதான். அப்படி காரணங்கள் இல்லாவிடினும் ஏதாவதொரு காரணத்தைக் கண்டுபிடித்து, முப்பெரும் விழா எடுக்கிறோம். சனவரி முதல்நாள் நான்கு முக்கிய காரணங்கள் விழா கொண்டாட நம்மை அழைக்கின்றன. எனவே, இந்த நாளை நாம் நாற்பெரும்விழா என்று கூறலாம்.

கிரகோரியன் நாள்காட்டியின் படி, புதியதோர் ஆண்டின் முதல்நாள் இன்று. உலகின் பல நாடுகளில், பல கலாச்சாரங்களில் 2024ம் ஆண்டு இன்று துவங்குகிறது. ஒரு கொண்டாட்டம் என்ற முறையில் டிசம்பர் 31 இரவு ஆரம்பித்த கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை. ஜப்பானில் ஆரம்பித்த இந்தக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு மணி நேரமாக ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் தொடர்கிறது. நாற்பெரும் விழாவின் முதல் காரணம் இது.

இயேசு என்ற குழந்தை பிறந்தபின் வரும் எட்டாம் நாள் இன்று. குழந்தை இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்து, இயேசு என்ற பெயர் தரப்பட்ட நாள். (லூக்கா 2: 21) பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கிய கொண்டாட்டம் தானே.

உலக அமைதிக்காக செபிக்கும்படி ஒதுக்கப்பட்டுள்ள நாள் சனவரி முதல்நாள். உலக அமைதி என்பது ஒரு கனவு தான் என்றாலும், அந்தக் கனவையும் நாம் கொண்டாட வேண்டாமா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, திருச்சபை இன்று ஒரு மாபெரும் விழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'மரியா, இறைவனின் தாய்' என்பதே அம்மாபெரும் விழா.

இந்த நான்கு காரணங்கள் இன்றி, உலகின் ஒரு சில நாடுகள் இன்று விடுதலை நாளைக் கொண்டாடுகின்றன. (உ.ம். - Haiti, Sudan, Brunei). Cubaவில் புரட்சியின் வெற்றி நாள் இது. Tanzaniaவில் மரம் நடும் நாள் இது. ஆர அமர சிந்தித்தால், இந்நாளைக் கொண்டாட இன்னும் பல காரணங்களை நம்மால் கண்டு பிடிக்க முடியும். உலக அளவில், நாடுகள் அளவில் காரணங்கள் இருப்பதுபோல், சொந்த வாழ்விலும் இந்நாளைக் கொண்டாட எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

காரணம் எதுவும் இல்லையெனினும் கொண்டாட முடியுமா? முடியும். முயல வேண்டும். கொண்டாடுதல் என்பது வெளிப்படையாகத் தோரணங்கள் கட்டி, மேளதாளங்கள் முழங்கி கொண்டாடப்பட வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு நாளும் நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு புதிய பரிசு என்பதை உணர்ந்து நமக்குள் நாமே சிறு சிறு கொண்டாட்டங்களை மேற்கொள்வது நம் வாழ்வைக் கூடுதல் அழகாக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, சீனப் புத்தாண்டு என்று ஒவ்வொரு கலாச்சாரமும் நமக்குப் புதிய ஆண்டுகளைச் சுட்டிக் காட்டும் வரை காத்திருக்காமல், நாமே ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக, புதிய ஆண்டாக, புதிய ஆரம்பமாகக் கொண்டாட முயற்சிகள் எடுப்பது நமக்கு நல்லது.

நான் முதலில் குறிப்பிட்ட நாற்பெரும் விழாவில் கூறப்பட்டுள்ள நான்கு காரணங்களையும் குறித்து பல்வேறு சிந்தனைகளை மேற்கொள்ளலாம். இன்று நம் சிந்தனைக்கு மரியா இறைவனின் தாய் என்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம். கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தில் நமக்கு நெருங்கியவர்கள், நம்மில் நல்ல தாக்கங்களை உருவாக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்புகிறோம். வாழ்த்து மடல்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள் என்று நமது வாழ்த்துக்களைப் பரிமாற எத்தனையோ வழிகளையும் பயன்படுத்துகிறோம். மரியாவுக்கு வாழ்த்து மடல் அனுப்ப நமது திருப்பலி பொருத்தமான ஒரு நேரம். அவருக்கு ஒரு மடல் எழுதி நம் எண்ணங்களை, வாழ்த்துக்களைச் சொல்ல முயல்வோம்:

எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியன்னையே, நாங்கள் துவக்கியிருக்கும் 2025ம் ஆண்டில் நீர் எம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று இறைவனின் தாயான உமக்கு நாங்கள் விழா எடுக்கிறோம். ஆனால், இறைவனின் தாயானதை உம்மால் கொண்டாட முடிந்ததா என்பது பெரும் கேள்வியே, இல்லையா?

நீர் அன்று வாழ்ந்த போது உமது நாடு உரோமைய ஆதிக்கத்தில் துன்புற்றது. இன்றும் நீர் வாழ்ந்த அப்பகுதியில் எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. போர்சூழ்ந்த பூமியில் வாழ்வது யாருக்குமே எளிதல்ல. அதிலும் முக்கியமாக உம்மைப் போன்ற இளம்பெண்களின் நிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை இன்னும் இந்த உலகம் பல கொடூரங்களின் வழியாக எங்களுக்கு நினைவு படுத்திய வண்ணம் உள்ளது.

நீர் இறைவனின் தாயானதற்காய் நன்றி கூறி, பெருமைபட்டு கற்களால் எழுப்பிய கோவில்களில் பீடமேற்றி உம்மை நாங்கள் இன்று வணங்குகிறோம். நீர் வாழ்ந்த காலத்தில், திருமணம் ஆகாமல் இறைவனின் தாயானதற்காய் உமக்குக் கற்களால் சமாதி எழுப்பியிருப்பார்கள் என்பதையும் உணர்கிறோம். கண்ணால் காண முடியாத இறைவனை உள்ளத்தால் கண்டு, அவரை மட்டுமே நம்பி, அவருக்கு நீர் உம் உடலைக் கோவில் ஆக்கியதால், நாங்கள் இன்று உம் பெயரால் கோவில் கட்டுகிறோம்.

கருவில் கடவுளைச் சுமந்தது முதல், கல்வாரியில் அவரைச் சிலுவைப் பலியாய் தந்தது வரை உமது மகனால் நீர் அடைந்தது பெரும்பாலும் வேதனைகளே அன்றி நிம்மதி அல்ல. வாழ்ந்த நாட்கள் பலவும் வசைகளையும், வலிகளையும் மட்டும் அனுபவித்த உமக்கு, கடந்த இருபது நூற்றாண்டுகளாய் கிடைத்துள்ள வாழ்த்துக்கள் வானுயர உம்மை உயர்த்தியுள்ளன.

கடந்த இருபது நூற்றாண்டுகள் உலகில் பிறந்த, இனியும் பிறக்கப் போகும் ஒவ்வொரு மனித உயிரும் உம்மை ஏதோ ஒரு வகையில் சந்தித்துள்ளனர், இனியும் சந்திப்பார்கள் என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லலாம். அத்தனை புகழ் பெற்றவர் நீர். உலகில் வரலாறு படைத்துள்ள பல கோடி பெண்கள் மத்தியில் நீர் உண்மையில் பேறு பெற்றவர்.

"கறைபட்ட எமது குலத்தின் தனிப்பெரும் பெருமை நீர்" என்று ஆங்கிலக் கவிஞர் William Wordsworth உம்மைப்பற்றிச் சொன்னது உமது புகழ் கடலில் ஒரு துளியே. உமது புகழ் கடலில் நாங்களும் மூழ்கி மகிழ்கிறோம், பெருமைப் படுகிறோம்.
வாழ்க மரியே! வாழ்க எம் அன்னையே!
இப்படிக்கு,
உமது குழந்தைகளாய் பிறக்க கொடுத்து வைத்தவர்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய மரியாள்‌ இறைவனின்‌ தாய்‌ புத்தாண்டுப்‌ பிறப்பு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எண்‌. 6:22-27)

“இஸ்ராயேல்‌ மக்கள்‌ இறைவனால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்‌. இறைவன்‌ அவர்களோடு சீனாய்‌ மலையின்‌ மீது ஓர்‌ உடன்படிக்கையைச்‌ செய்து கொண்டார்‌. தேர்ந்தெடுக்கப்பட்டத்‌ தம்‌ மக்களை எல்லா நிலைகளிலும்‌ வழி நடத்த ஆரோனின்‌ குலத்திலிருந்து குருக்கள்‌ நியமிக்கப்ட்டனர்‌. இக்குருக்கள்‌ கடவுளுக்கு உகந்தப்‌ பலி ஒப்புக்‌ கொடுப்பதிலும்‌, மக்களுக்கு ஆசிர்‌ வழங்குவதிலும்‌ தங்களையே ஈடுபடுத்திக்‌ கொண்டனர்‌. அதிலும்‌ குறிப்பாகக்‌ குருக்கள்‌ இஸ்ரேயல்‌ மக்களை எவ்வாறு, என்ன சொல்லி வாழ்த்த வேண்டும்‌ என்பதைத்‌ தெளிவாகப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறது இன்றைய முதல்‌ வாசகம்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ இறைவனின்‌ பெயரை உச்சரிப்பதையே மிகுந்த ஆசிர்வாதமாகக்‌ கருதி வந்தனர்‌. ஆகவே தான்‌ குருக்கள்‌ மக்களை "இறைவனின்‌ பெயரால்‌ வாழ்த்தினர்‌. சற்று ஆழமாகத்‌ தியானிக்கின்ற பொழுது மக்கள்‌ துன்பத்தினாலும்‌, கவலைகளினாலும்‌ சோர்ந்து, அனைத்தையும்‌ முழுமையாக இழந்திட்டத்‌ தருணங்களில்தான்‌. 'இந்தக்‌ குருக்களின்‌ ஆசீமொழிகள்‌ புது தெம்பையும்‌, புது இரத்தத்தையும்‌, புது சக்தியையும்‌ அளித்து மக்களை முன்னோக்கி பயணிக்க அழைப்பு விடுக்கின்றன.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (கலா. 4:4-7)

இறைமகன்‌ இயேசுவின்‌ வாழ்வையும்‌, அவரின்‌ போதனைகளையும்‌, மிகுந்த அற்றலோடும்‌, ஆர்வத்தோடும்‌ போதித்த புனித பவலுக்குச்‌ சங்கடங்களும்‌ சவால்களும்‌ அவரை சந்தித்துவிட்டுதான்‌ சென்றன. இருப்பினும்‌ கலாத்திய மக்களின்‌ ஈடுபாடும்‌, ஆர்வமும்‌ அவருக்கு உற்சாகத்தைக்‌ கொணர்ந்தன. இருப்பினும்‌ அவர்களுள்‌ சிலர்‌ சபையில்‌ புகுந்து பவுல்‌ எடுத்துரைத்தப்‌ போதனைக்கு எதிராக பேசினர்‌. அவர்கள்‌ திருச்சட்டத்தினால்‌ மட்டுமே மீட்பு பெற முடியும்‌ என்று வாதித்து 'பிற இனத்துக்‌ கிறிஸ்தவர்கள்‌ மோயிசன்‌ சட்டப்படி விருத்தசேதனம்‌ போன்றவற்றைக்‌ கடைபிடிக்க வேண்டும்‌ என்று வழியறுத்தினர்.

அதற்குப்‌ பவுல்‌ பதிலடியாக, ஒருவன்‌ சட்டங்களைக்‌ கடைபிடிப்பதன்‌ மூலம்‌ அன்று மாறாக இயேசு கிறிஸ்துவில்‌ மீதுள்ள கைவாசத்தினால்‌ தாள்‌ மீட்பு பெறுவான்‌ என்று தழுத்தமாகக்‌ 'கலாத்திய மக்களுக்குத்‌ தமது மடலின்மூலம்‌ தெளிவுப்படுத்துகிறார்.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 2:16-21)

மனிதனாகப்‌ பிறந்த இறைவன்‌ வானதூதர்‌ வழியாகச்‌ சாதாரண இடையர்களுக்குத்‌ தன்‌ பிறப்பை வெளிப்படத்தினார். இடையர்களும்‌ வானதூதர்‌ அறிவித்த மெசியாவைச்‌ சந்தித்து, மகிழ்ச்சியோடு கடவுளைப்‌ புகழ்ந்து கொண்டு திரும்புவதை இன்றைய நற்செய்தி விவரிக்கின்றது. இங்குச்‌ சாதாரண இடையாகள்‌ இயேசு மெசியா என்று பறைசாற்றும்‌ தூதுவர்களாக மாறுகின்றனர்‌. மனிதனாக உருவெடுத்த இறைமகன்‌ இயேசு யூதச்‌ சட்டத்திற்கு உப்படகின்றார் இஸ்ரேயல்‌ மக்கள்‌ தலைமுறைத்‌ 'தலைமுறையாயச்‌ சில சட்டங்களையும்‌, சம்பரதாயங்களையும்‌ கடைபிடித்து வந்தனர்‌. அதாவது தங்களுக்குப்‌ பிறக்கும்‌ ஆண்‌ பிள்ளைகளுக்கெல்லாம்‌. பிறந்த எட்டாம்‌ நாளிலேயே விருத்தசேதனம்‌ செய்து வந்தனர்‌. இதை உடன்படிக்கையின்‌ அடையாளமாகவும்‌ கருதினர்‌. இதன்படி சூசையும்‌, மரியாளும்‌ தங்கள்‌ குழந்தைக்கு 'இயேசு' எனறு பெயரிடவதன்‌ மூலம்‌ யூதச்‌ சட்டத்தை நிறைவேற்றுகின்றனர்‌. இயேசு என்றால்‌ 'மீட்பர்!, மெசியா! என்பது பொருள்‌... “அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர் ஏனெனில்‌ அவர்‌ தம்‌ மக்களை அவர்களுலையப்‌ பாவங்களிலிருந்து மீட்பர்‌" என மரியாளுக்கு அறிவிக்கப்பட்டது (மத்தேயு (1:21).

மறையுரை

மரியாள்‌ இறைவளின்‌ தாய்.

மரியாள்‌ இறைவனால்‌. தேர்ந்தெடுக்கப்பட்டதின்‌ மூலம்‌ இறைதிட்டத்தை நிறைவேற்றுவதிலே கண்ணும்‌. கருத்துமாகத்‌ திகழ்ந்தார்‌. இதன்‌ தடிப்படையிலே தான்‌ தன்‌ மகன்‌ இயேசுவைச்‌ சிறந்த முறையில் வளர்க்க முடிந்தது. அவர்‌ உள்ளத்‌ தாயாகவும்‌, ஆரம்பப்‌ பள்ளிக்‌ கூடமாகவும்‌, குருவாகவும்‌ இருந்து ஞானத்தில்‌ வளர்த்தார்‌. “குழந்தை வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால்‌ நிறைத்துக்‌ கடவுளுக்கு உகந்ததாய்‌ இருந்தது” (லூக்கா 2:40) மறறும்‌ பன்னிரென்டு வயதிலே ஆலயத்தில்‌ அமர்ந்து ஞானிபோல பேசினார்‌. என்றும்‌, அதைக்கேட்ட அனைவரும்‌ அவரின்‌ புரிந்து கொள்ளும்‌ திறமையையும்‌ அவர்‌ அளித்தப்‌ பதில்களையும்‌ கண்டு மலைத்துப்‌ போயினர்‌ (லூக்கா 2:47) என்றும்‌ வாசிக்கின்றோம்‌. ஆகத்‌ தாய்‌ மரியா தன்‌ மகன்‌ இயேசுவை எல்லா நிலைகளிலும்‌ சிறத்தவராக வளர்த்திருக்கிறார்‌ என்பது விவிலியம்‌ றம்‌ ஆணித்தரமான கூற்று.

மேலும்‌ தியாகத்திலே பல வகையுண்டு. அன்னை மரியாவின்‌ தியாகம்‌ வியக்கத்தக்கது. ஒருவரிடம்‌ பெற்று மற்றவர்களுக்குக்‌ கொடுப்பது, தனனிடம்‌ உள்ளவற்றிலிருந்து தியாகம்‌ செய்வது, தன்னிடம்‌ உள்ள எல்லாவற்றையும்‌ தியாகம்‌ செய்வது, மேலும்‌ தன்னையே முழுமையாகத்‌ தியாகம்‌ செய்வது. எனத்‌ தியாகம்‌ பல வகைப்படும்‌. இறைவனின்‌ மீட்பு திட்டத்திலே தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தவர்‌ தாய்‌ மரியா. எனவே தான்‌ அவளை நாம்‌ இணை மீட்பர்‌ என்றும்‌ அழைக்கின்றோம்‌.

அன்னை மரியாவை இயேசுவின்‌ தாய் என்று அழைய்பதில்‌ எவ்வித முரண்பாடுமில்லை. மாறாக இறைவனின்‌ தாய்‌ என்று அழைப்பதை ஆரம்பக் காலத்தில்‌ மக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளத்த‌ யங்கினர். இதே சமயம்‌ மரியாவின்‌ மீதுக்‌ கொண்டப்‌ பக்தியும்‌ அதிகரித்தும்‌ கொண்டேயிருந்தது.

இதன்‌ விளைவாக 431இல்‌ கூடிய எபேசு திருச்சங்கம்‌ அன்னை மரியாளை இறைவனின்‌ தாய்‌ என்று அழைப்பது சரியே என்று கூறி உறுதி செய்தது. அதனைத்‌ தொடர்ந்து. 534 திருத்தத்தை இரண்டாம்‌ யோவான்‌ அவர்கள்‌ கான்ஸ்டான்டிநோபுல்‌ திருபேரவைக்கு எழுதியத்‌ திருமடலில்‌ இதைப்‌ பிரகடனப்பத்தினார். அதனைத்‌ தொடர்ந்து மரியன்னையின்‌ பக்தி முயற்சிகள்‌ அதிகமாக மக்களிடையே வரவேற்பைப்‌ பெற்றதனால்‌, திருச்சபை சட்ட நூல்‌ வல்லுனர்கள்‌ ஜந்தாம்‌ நூற்றாண்டுக்குப்‌ பிறகு அன்னை மரியாவின்‌ பெயரை உச்சரிக்காமல் திருப்பலி நிறைவேற்றுவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்‌. இரண்டாம்‌ வத்திக்கான்‌ சங்கத்தின்‌ மூன்றாம்‌ அமர்வின்‌ போது திருத்தந்தை ஆறாம்‌ சின்னப்பர்‌ “மரியா திருச்சபையின்‌ தாய்" என்று பகிரங்கமாக அறிவித்தார். இதன்‌ பிறகு மரியாவின்‌ மீது கொண்ட பக்தி இன்னும்‌ அதிகரித்தது. ஆழமானது. ஆக அன்னை மரியா இறைவனின்‌ தாம்‌, திருந்நபையின் தாய் என்பது உண்மையானால் திருச்சபையின்‌ அங்கத்தினர்களான நாம்‌ ஒவ்வொருவரும்‌ இரண்டு வகையிலே மரியாவுடன்‌ இணைக்கப்பட்டிருக்கின்றோம்‌. முதலாவதாக நாம்‌ அனைவரும்‌ இயேசுவின்‌‌ வழியாக இணைக்கப்பட்டிருக்கின்றோம்‌. திருச்சபை "அதாவது நாம்‌ அனைவரும்‌ கிறிஸ்துவின்‌ உடல்‌, ஒவ்வொருவரும்‌ தனித்தனி உறுப்புகள்‌ (1கொரி 12:7), ஆகு மரியாள்‌ கிறிஸ்துவின்‌ தாயாக இருப்பதால்‌, அவருடைய உறுப்புகளாகிய நமக்கும்‌ தாயாக இருக்கின்றார்‌. இரண்டாவதாக, இயேசு தாமே தம்‌ அன்னையை நம்‌ அனைவருக்கும்‌ தாயாகக்‌ காணிக்கையாக்கினார் (யோவான் 19:26-27)

இதோ நம்மைச்‌ சுற்றியிருக்கின்ற மக்கள்‌ எல்லோரும்‌ மிகவும்‌ உற்சாகத்தோடும்‌, ஆரவாரத்தோடும்‌ புத்தாண்டை வெகு விமரிசையாகக்‌ கொண்டாடுகிற இத்தருணத்தில்‌ புத்தாண்டை 'இவ்வாலயத்தில்‌ இறைபிரசன்னத்தோடு ஆரம்பிக்க வேண்டும்‌ மென்று சொல்லி இவ்வாலயத்தில்‌ கூடியிருக்கும்‌ நம்‌ அனைவருக்கும்‌ இத்திருநாள்‌ நமக்கு உணர்த்தும்‌ உண்மை: ஆண்டு முழுவதும்‌ நாம்‌ அனைவரும்‌ அன்னையின்‌ அரவணைப்பில்‌ வாழுவோம்‌ என்பது தான்‌, அன்னை மரியா எவ்வாறு தனது கீழப்படிதலினால்‌ "இறைத்‌ திட்டத்திற்கு இறுதிவரை நிலைத்து நின்று இறைவனின்‌ தாயாகவும்‌ மறறும்‌ திருச்சபையின்‌ தாயாகவும்‌ திகழ்ந்தாரோ அதுபோல்‌ நாமும்‌ இறைத்திட்டததிற்குக்‌ கீழ்ப்படிந்து தாய்மைப்‌ பண்புகளை வெளிப்படுத்துவதன்‌ மூலம்‌ இறை பிரசன்னத்தை உலகிற்கு வழங்கிட முடியும்‌.

இன்றைய நற்செய்தியில்‌ கண்ட இடையர்கள்‌ தாங்கள்‌ இயேசுவைப்‌ பற்றிக்‌ கேட்டவை, கண்டவை, அனைத்தையும்‌ குறித்துக்‌ கடவுளை போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பி சென்றது போல்‌ நாமும்‌ கூட நமது தாய்‌ மரியாள்‌ வழியாகப் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்‌. இப்புத்தாண்டிலே உலக மக்கள்‌ அனைவரும்‌ இறைவார்த்தையைத்‌ தியானித்து அன்புடனும்‌, அமைதியுடனும்‌, ஒற்றுமையுடனும்‌ ஒரே இறைகுலமாகச்‌ சோந்து இறைவனின்‌ திருவுளத்தை அறிந்து அதை நிறைவேற்ற தேவையான வரங்களுக்காக இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌. அன்னை மரியா, நம்‌ அனைவரின்‌ தாய்‌, நமக்குத்‌ துணை செய்வாராக.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌:
நம்‌ அன்னையர்களை நாம்‌ எவ்வாறு ஒவ்வொரு நாளும்‌ நன்றியுடன்‌ நினைக்கிறோம்‌?
இறை திட்டத்திற்கு நம்மையே நாம்‌ தினமும்‌ முழுமையாக அர்ப்பணிக்கின்றோமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவனின்‌ அன்னையாகிய தூய கன்னி மரியா

ஓர்‌ ஆண்டு கடந்து, புதிய ஆண்டு ஒன்றில்‌ அடி யெடுத்து வைத்துள்ளோம்‌. இந்நேரம்‌ நமது உள்ளத்தில்‌ பல வகையான உணர்வுகள்‌ பொங்கிப்‌ பெருகுகின்றன கடந்த ஆண்டில்‌ இறைவன்‌ தந்த பாதுகாப்பு, வளர்ச்சி, முன்னேற்றம்‌, நாம்‌ சாதித்தவை, அடைந்த வெற்றிகள்‌ ஆகியவற்றிற்கு இறைவனுக்கு நன்றிப்‌ பெருக்கு ஒருபுரம்‌. கடந்த ஆண்டை இன்னும்‌ சரியான முறையில்‌ பயன்படுத்தியிருக்கலாமே, வாய்ப்புகளை நழுவவிட்டு விட்டோமே எனும்‌ கழிவிரக்கம்‌ மறுபுரம்‌. புலர்ந்திருக்கும்‌ புத்‌ தாண்டு எப்படி இருக்குமோ எனும்‌ பயம்‌, எதிர்பார்ப்பு, எதிர்நோக்கு இன்னொருபுரம்‌. இத்தகைய உணர்வுக்‌ கலவையாக நாம்‌ இருக்கும்‌ நேரத்தில்‌ தாய்த்‌ திருஅவை நமக்கு மிக அவசிய மான ஒரு நற்செய்தியை, நம்பிக்கைச்‌ செய்தியை இன்றைய முதல்‌ வாசகத்தின்‌ வழி தருகின்றது. அதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க முயல்வோம்‌.

1. குருத்துவ ஆட்சி

பழைய ஏற்பாட்டுக்‌ குருவின்‌ பல்வேறு பணிகளுள்‌ மக்களுக்கு ஆசி வழங்க வேண்டியது முக்கியப்‌ பணி என இணைச்சட்டம்‌ இயம்புகின்றது. “தனக்கு ஊழியம்‌ செய்யவும்‌, ஆண்டவர்‌ பெயரால்‌ ஆசி வழங்கவும்‌, உன்‌ கடவுளாகிய ஆண்டவர்‌ தேர்ந்து கொண்ட லேவியின்‌ புதல்வர்களாகிய குருக்கள்‌ முன்வர வேண்டும்‌” (இச. 21:5). இந்த ஆசியை அவர்கள்‌ இறைவன்‌ பெயரால்‌, இறைவனின்‌ இடத்தில்‌ இருந்து அளிக்க வேண்டியவர்கள்‌ (வச.239) எனவே குருக்கள்‌ அளிக்கும்‌ ஆசி கூறும்‌ வார்த்தைகள்‌ இறைவனே அளிக்கும்‌ ஆசிபோன்றது, பேசும்‌ வார்த்தை போன்றது. மேலும்‌ குருக்கள்‌ இறைவனின்‌ பதில்‌ ஆள்‌, இறைவனிடம்‌ மக்களுக்காகப்‌ பரிந்து பேச வேண்டியது அவர்களின்‌ கடமைகளுள் இன்றியமையாதது என்பது பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு நம்பிக்கை.

2. ஆசியுரை

இறைவன்‌ குருக்கள்‌ எந்த வார்த்தைகளைச்‌ சொல்லி மக்களை வாழ்த்த வேண்டும்‌ எனும்‌ வாய்ப்பாட்டையும்‌ இறை வனே வழங்குகின்றார்‌. அவை வச. 24-25ல்‌ காணப்படுகின்றன. இவற்றின்‌ ஒரு சில பண்பு நலன்‌களை இவண்‌ பட்டியலிடலாம்‌.

அ. தனி நபருக்கான ஆசி

இங்கு ஆசியானது “உனக்கு” “உன்மேல்‌” “உன்‌ பக்கம்‌” என, தனி நபர்கள்‌ மீது, தனித்தனியாக வழங்கப்படுகின்றது. எனவே இறையாசி என்பது, குடும்பவாத, பொத்தாம்‌ பொதுவாக வழங்கப்படுவது அல்ல, தனி நபர்களுக்குத்‌ தனித்துவமாக வழங்கப்படுகின்றது.

ஆ. இறைவன் வழங்கும் ஆசி

இந்த ஆசியுரையின்‌ வாய்ப்பாட்டைச்‌ சொல்வது மனித குருவாக இருந்தாலும்‌, இதைச்‌ செய்கிறவர்‌, செயல்படுத்துகின்றவர்‌ இறைவன்‌. எனவே மூன்று முறை இறைவன்‌ பெயர்‌ உச்சரிக்கப்‌ படுகின்றது. “ஆண்டவர்‌ உனக்கு ஆசி வழங்கி.”, “ஆண்டவர்‌ தம்‌ திருமுகத்தை உன்மேல்‌ ஒளிரச்‌ செய்து...”, “அண்டவர்‌ தம்‌ திருமுகத்தை உன்‌ பக்கம்‌ திருப்பி...” (வச. 24-26).

இ. இறைத்திருமுகம்‌

இறை ஆசியை விளக்குவதற்கு “இறைத்‌ திருமுகம்‌” எனும்‌ சொற்றொடர்கள்‌ பயன்படுத்தப்படுகின்றன. இதை இருவேறு உருவகங்களுடன்‌ ஒப்பிடலாம்‌. ஒன்று, பூமியின்மீது கதிரவனின்‌ ஒளி ஒளிரச்‌ செய்யப்படும்போது பூமியின்‌ உயிர்கள்‌ வாழ்வும்‌, புத்துயிரும்‌ பெற்றுக்‌ கொள்கின்றன. இரண்டு, குழந்தை, தாயின்‌ அல்லது பெற்றோரின்‌ முகத்தைக்‌ காணும்போது மகிழ்வு கொள்கின்றது. பாதுகாப்பை உணர்கின்றது. அத்தகைய உணர்வும்‌ இறை ஆசிரைப்‌ பெற்றுக்‌ கொள்கின்றது, பாதுகாப்பை உணர்கின்றது. அத்தகைய உணர்வும்‌ இறை ஆசீரைப்‌ பெற்றுக்‌ கொள்ளவும்‌ மக்கள்‌ உணர்வர்‌.

ஈ. ஆசி, அருள்‌, அமைதி

இறையாசியின்‌ உள்ளடக்கம்‌, உள்ளீடு ஆசி, அருள்‌, அமைதி ஆகியவையாகும்‌. இதில்‌ முதலாவதானது பாதுகாப்பைப்‌ பற்றிப்‌ பேசுகின்றது. அதாவது தனது வல்லமையால்‌ இறைவன்‌ தன்‌ மக்களை எல்லாத்‌ தீமையிலிருந்தும்‌ காக்க வல்லவர்‌. எனவே இறையாசி பெற்ற மக்கள்‌ பாதுகாப்பை உணர்வர்‌, பாதுகாப்பாய்‌ வாழ்வர்‌. இரண்டாவது இங்கு அருள்‌ என்று குறிப்பிடப்படுவது, இறைவன்‌ இரக்கம்‌ கொண்டு மக்களை மன்னிப்பதால்‌ கிடைக்கும்‌ அருளைக்‌ குறிக்கும்‌. எனவே இது பாவ மன்னிப்பை உள்ளடக்கிய ஒன்று. இதனால்‌ ஆசி பெறுபவர்‌ பாவம்‌ நீக்கப்பட்டு, தூய்மையடைவதும்‌ கருத்தில்‌ கொள்ளப்பட வேண்டும்‌. இறுதியாக, இறைவன்‌ வழங்கும்‌ ஆசியில்‌ “அமைதியும்‌” அடங்கியுள்ளது. யூத பாரம்பரியத்தில்‌ “ஷலோம்‌” என்பது மிகவும்‌ பரந்துபட்ட ஒரு கருத்தாக்கம்‌, இது உடல்‌ நலம்‌, உள நலம்‌, பொருளாதாரம்‌, சமூக உயர்நிலை என பலவற்றை உள்ளடக்கியது. எனவே ஒருவரை இறைவன்‌ ஆசிர்வதித்து, அமைதி அருள்கிறார்‌ என்றால்‌, அவர்‌ நிம்மதியாக, நிறைவாக வாழ்வதற்குத்‌ தமிழில்‌ கூறப்படுவதுபோல, “வாழ்வாங்கு வாழ்வதற்கு” தேவையான அனைத்தையும்‌ இறைவன்‌ வழங்குகிறார்‌ என பொருள்‌ கொள்ள வேண்டும்‌.

எனவே இப்புத்தாண்டில்‌ இறைவன்‌ தரும்‌ ஆசி பாது காப்பையும்‌, பாவ மன்னிப்பால்‌ வரும்‌ அருளையும்‌, எல்லா நலன்களும்‌ பெற்றதால்‌ வரும்‌ உண்மையான அமைதியையும்‌ உங்கள்‌ ஓவ்வொருவருக்கும்‌, உங்கள்‌ குடும்பங்களுக்கும்‌ வழங்குவதாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவனின்‌ அன்னை புனித மரியா

முதல் வாசகம் எண் 6:22-27

இஸ்ரயேல்‌ மக்களுக்கு இறைவன்‌ அளித்த ஆசீர்‌, புத்தாண்டு துவக்கத்தில்‌ இங்வாசகத்தின்‌ மூலம்‌ நம்‌ எல்லோருக்கும்‌ அளிக்கப்படுகிறது. ஆண்டவரின்‌ பெயரைக்‌ கூவி அழைத்தோமாயின்‌ நமக்கும்‌ அவரது ஆசீர்‌ (6 : 24), இரக்கம்‌ (6 : 25), சமாதானம்‌ (6 : 26) கிட்டும்‌.

இயேசுவின்‌ பெயர்‌ வாழ்வு தரும்‌ பெயர்‌

பெயர்‌, ஒருவருடைய ஆளுமையைக்‌ குறிக்கும்‌. பெயர்‌ மாற்றம்‌ அல்லது புதுப்பெயர்‌ புது அழைப்பை, புதுப்பணரியைச்‌ சுட்டும்‌. ஆபிராம்‌ ஆபிரகாம்‌ ஆகி “அநேக மக்களுக்குத்‌ தந்தையாகிறார்‌'' (தொநூ 17:5); யாக்கோபு இஸ்ரயேல்‌ ஆகி “மனிதர்களை மேற்கொள்பவராகிறார்‌'” (தொநூ 32 : 28). சவுல்‌ பவுல்‌ ஆகி நற்செய்தியின்‌ போதகராகிறார்‌ (திப 13 : 9). கடவுள்‌ “ஆண்டவர்‌ (yahweh‌?) ஆகி இஸ்ரயேலருக்கு விடுதலைஅளிக்கிறார்‌ (விப3:14-15). ஆண்டவர்‌, இயேசுவாகப்‌ பிறந்து, (“yah-ho-shua”‌) “மக்களை அவர்கள்‌ பாவங்களிலிருந்து மீட்பவர்‌ ஆகிறார்‌” (மத்‌ 1:21). இயேசு என்னும்‌ புதுப்‌ பெயர்‌ நமக்கு வாழ்வளிக்கும்‌ பெயர்‌ (திப 4 :12, 1 யோவா 2 : 12; மாற்‌ 16 : 17-18). இப்புத்தாண்டிலே அப்புதுப்‌ பெயரைக்‌ கூவியழைப்போம்‌. பாவம்‌ ஒழிய, புது வாழ்வு மலர இப்பெயர்‌ நமக்குப்‌ பலமும்‌ சக்தியும்‌ தரும்‌. “இயேசு” என்று சொன்னாலே போதும்‌; நம்‌. பாவங்கள்‌ எல்லாமே தீரும்‌.

நமக்கு ஆசி வழங்கும்‌ பெயர்

புத்தாண்டிலே ஆண்டவரின்‌ ஆசீர்‌ நமக்குத்‌ தேவை. அவரது ஆசீர்‌ ஒன்றே நம்மை அனைத்துத்‌ தீமைகளிலிருந்தும்‌ பாதுகாக்கும்‌ சக்தி கொண்டது. “உமது பெயரால்‌ அவர்களைக்‌ காத்தருளும்‌. நான்‌ அவர்களோடு இருந்தபோது அவர்களை உமது பெயரால்‌ காத்துவந்தேன்‌” (யோவா 17 : 11-12) என்று இயேசு கூறுவது நமக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்‌. ஆண்டவரின்‌ ஆசீரும்‌ அவரது பாதுகாப்பும்‌ நமக்கு என்றும்‌ இருக்கிறது. “ஆண்டவர்‌ நீ போகும்‌ போதும்‌ காப்பார்‌; வரும்போதும்‌ காப்பார்‌; இப்போதும்‌ எப்போதும்‌ உன்னைக்‌ காப்பார்‌. (திபா 121: 8).

கனிவு காட்டும்‌ பெயர்‌

புத்தாண்டிலே ஆண்டவரின்‌ இரக்கம்‌ நம்மோடு தொடர்ந்து இருக்க வேண்டும்‌. “ஆண்டவரே, உமது முகத்தைத்‌ திருப்பும்‌; ஆண்டவரே, உம்‌ முகத்தின்‌ ஒளி எம்மீது வீசச்‌ செய்யும்‌” (திபா 4 : 6), எங்களைத்‌ தயவுடன்‌ கண்ணோக்கியருளும்‌ என்று வேண்டுவோம்‌. கனிந்த உம்‌ திருமுகத்தை எனக்குக்‌ காட்டியருளும்‌; உம்‌ அருளன்பைக்‌ காட்டி என்னை ஈடேற்றும்‌ (திபா 31:16) என்று இறைஞ்சுவோம்‌.

புத்தாண்டிலே ஆண்டவரின்‌ சமாதானம்‌ நமக்குக்‌ கிட்டவேண்டும்‌. அவர்‌ ஒருவரே உண்மைச்‌ சமாதானத்தை நமக்கு அருள முடியும்‌. பிறப்பிலே அவர்‌ சமாதானம்‌ கொண்டு வந்தார்‌. “உலகிலே அவர்‌ தயவு பெற்றவருக்கு அமைதி ஆகுக” (லூக்‌ 2 : 14); இறப்பிலே அவர்‌ சமாதானம்‌ அளித்தார்‌. “சமாதானத்தை உங்களுக்கு விட்டுச்‌ செல்கிறேன்‌. என்‌ சமாதானத்‌ தையே உங்களுக்கு அளிக்கிறேன்‌” (யோவா 14 : 27). உயிர்த்த பின்னும்‌ அவர்‌ சமாதானத்தை விட்டுச்‌ சென்றார்‌. “உங்களுக்கு சமாதானம்‌" (யோவா 20: 20-21). எனவே புத்தாண்டிலே குடும்பத்திலும்‌, உலகிலும்‌ சமாதானம்‌ 'நிலவ வேண்டுவோம்‌. “உன்‌ மதில்களுக்குள்‌ அமைதி இருப்பதாக; உன்‌ மாளிகைகள்‌ பாதுகாப்புடன்‌ விளங்குவனவாக. அமைதி உன்னகத்து விளங்குவதாக” (திபா 122 : 7-8) என்று இறைவன்‌ நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஆண்டவர்‌ உனக்‌கு ஆசீர்‌ அளித்துக்‌ காப்பாற்‌றுவாராக.

இரண்டாம் வாசகம் கலா :44-7

ஆண்டின்‌ முதல்‌ நாள்‌. நம்‌ எல்லோருக்கும்‌ மகிழ்ச்சியும்‌ நம்பிக்கையும்‌ ஊட்டும்‌ நாள்‌. மரிய கடவுளின்‌ தாயானதினாலே நம்முடைய தாயாகவும்‌ மாறுகிறார்‌. இன்று அவருடைய தாய்மையின்‌ திருநாள்‌; நம்‌ அனைவரின்‌ -மகப்பேற்றின்‌ திருநாள்‌. எனவே மகிழ்ச்சிமிக்க நன்றிப்‌ பாடலோடு புத்தாண்டில்‌ கால்வைப்போம்‌.

கிறிஸ்து பெண்ண்டமிருந்து பிறந்தார்‌ (4 : 5)

பெண்‌ வழியாக எவ்வாறு மனித குலத்துக்கு அழிவு வந்ததோ (தொநூ 3 : 1) அதே போன்று, பெண்‌ வழியாகவே மனித குலத்திற்கு மீட்பும்‌ கிடைத்தது. “அவர்‌ ஒரு மகனைப்‌ பெற்றெடுப்பார்‌. அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்‌. ஏனெனில்‌ இவர்‌ தம்‌ மக்களை அவர்களுடைய பாவங்களில்‌ இருந்து மீட்பார்‌" (மத்‌ 1 : 24, லூக்‌ 1: 31-33). மரியாவின்‌ வழி பெண்மையை மதிக்கக்‌ கற்றுக்கொள்ள வேண்டும்‌. பெண்மை தாய்மையோடு தொடர்புடையது. பெண்மையை வெறும்‌ போகப்‌ பொருளாகக்‌ கருதுவது மிருகத்தனமானது. இன்று, ஆண்டின்‌ முதல்‌ நாளில்‌, மரியாவின்‌ தாய்மையை வணங்கும்‌ நாளில்‌ “நமது தாய்மார்களுக்காக, நமது சகோதரிகளுக்காக, இளம்‌ பெண்கள்‌ மற்றும்‌ விதவைகளுக்காக இறை அன்னையிடம்‌ வேண்டுவோம்‌. பெண்‌ குலத்தின்‌ பெருமையாகிய மரியா பெண்ணினம்பால்‌ நமது மதிப்பையும்‌ மரியாதையையும்‌ வளரச்‌ செய்வாராக!

எந்த ஒரு சமுதாயம்‌ பெண்ணினத்தை மதிக்கக்‌ கற்றுக்கொள்கிறதோ, “ஆண்‌ என்றும்‌ பெண்‌ என்றும்‌ வேற்றுமை இல்லை” (கலா 3 : 29) என உணர்ந்து, பெண்ணுக்கு வாழ்வும்‌ வழியும்‌ காட்ட முன்‌ வருகிறதோ அதுதான்‌ பண்பாடுள்ள சமுதாயம்‌ என்பதை உணர்ந்து நடப்போம்‌. மரியாவை வாழ்த்துவோம்‌: அவள்வழி பெண்குலத்திற்குப்‌ பெருமை தருவோம்‌.

பெண்டிரும்‌ தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும்‌. மரியா ஒரு பெண்‌. பு.ஏ.-இல்‌ நம்‌ ஆண்டவர்‌ அருகில்‌ இருந்தோரில்‌ பலர்‌ பெண்கள்‌. எனவே துணிவுடன்‌ முன்வந்து, திருச்சபைக்கும்‌ உலகுக்கும்‌ பணி செய்தல்‌ பெண்களின்‌ கடன்‌. பெண்டிர்‌ முன்வருவார்களா? திருச்சபை பெண்களுக்குத்‌ தன்‌ பணித்‌ தளத்தில்‌ முக்கியத்துவம்‌ தருமா?

நாம்‌ அனைவரும்‌ இறைமக்கள்‌ (4 : 6)

இறைவன்‌ நமது தந்தை. நாம்‌ இறைவனின்‌ பிள்ளைகள்‌ என்பது ஏதோ ஒரு கட்டுக்கதையன்று; வெறும்‌ நம்பிக்கையன்று. முழுக்க முழுக்க உண்மை இது. ஏனெனில்‌ நம்மை இறைவனின்‌ “பிள்ளைகளாக்கும்‌ தேவ ஆவியை” (உரோ 8 ; 15) இறைவன்‌ நமக்கு அளித்துள்ளார்‌. இத்தேவ ஆவியாரின்‌ உதவியாலே தான்‌, “அப்பா, தந்தாய்‌” என நாம்‌ இறைவனை அழைக்க முடிகிறது (உரோ 8:15; கலா 4:5), “இத்தேவ ஆவியாரே நாம்‌ கடவுளின்‌ பிள்ளைகளெனச்‌ சான்று பகர்கிறார்‌'' (உரோ 8 : 16). என்னே நாம்‌ பெற்ற பேறு!

பாவத்திற்கும்‌ சாவுக்கும்‌ சட்டத்துக்கும்‌ அடிமைகளாய்‌ இருந்த நாம்‌ இறைவனின்‌ உரிமை மக்களாக மாறுகிறோம்‌. “கிறிஸ்துவோடு கடவுளின்‌ செல்வம்‌ அனைத்திற்கும்‌ உரிமையாளர்களாக” (உரோ 8. 77) மாறுகிறோம்‌. கிறிஸ்துவோடு உடன்பிறவாத சகோதரர்களாகிறோம்‌. இவ்வளவு உயர்ந்த ஒரு நிலையை இறைவனே நமக்களித்துள்ளார்‌ (கலா 4:7). எங்கே உரிமைகள்‌ உண்டோ, அங்கே கடமைகளும்‌ உண்டு. இறைவனின்‌ மக்களுக்குரிய _ கடமைகளில்‌ கண்ணும்‌ கருத்துமாயிருக்கிறோமா? இறைவனின்‌ கட்டளைகள்‌, சிறப்பாக அவரது அன்புக்‌ கட்டளை நமது வாழ்வின்‌ அடிப்படையாக அமைந்திருக்கிறதா? ஆண்டின் முதல்‌ நாள்‌ இன்று. நமது மகப்பேற்றுக்கும்‌ அதைச்சார்ந்த உரிமைகளுக்கும்‌ நன்றி செலுத்தும்போது இறைமக்களுக்கேற்ற புனித வாழ்வை வாழ்வதற்கு அன்னை மரியாவிடமும்‌, அவர்‌ மகன்‌ நம்‌ சகோதரர்‌ இயேசுவிடமும்‌ வேண்டுவோம்‌.

நற்செய்தி : லூக்கா‌ 2: 16-21

ஆண்டின்‌ தொடக்கத்தில்‌ கன்னி மரியா கடவுளின்‌ தாயான விழாவைக்‌ கொண்டாடுகிறோம்‌. கபிரியேல்‌ தூதனின்‌ மங்களச்‌ செய்தி முதல்‌ (லூக்‌ 1: 26), மனுமகனின்‌ மாணம்வரை, இயேசுவும்‌ மரியாவும்‌ ஒன்றாகவே நற்செய்தியில்‌ இடம்‌ பெறுகின்றனர்‌. வீட்டிற்குள்‌ போய்‌ பிள்ளையை அதன்‌ தாய்‌ மரியாவுடன்‌ கண்டு தெண்டனிட்டு வணங்கினர்‌ (மத்‌ 2: 11). ஆண்டவரின்‌ தூதர்‌ யோசேபுக்குக்‌ கனவில்‌ தோன்றி எழுந்து பிள்ளையையும்‌ தாயையும்‌ கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம்‌ என்றார்‌ (மத்‌ 2:11-14). இடையர்சென்று மரியாவையும்‌ குழந்தையையும்‌ கண்டனர்‌ (2:16). மரியாவின்றி மைந்தன்‌ இயேசு இல்லை. மரியா வழியே இயேசுவிடம்‌ செல்கிறோம்‌. எனவே நம்‌ ஒவ்வொருவர்‌ வாழ்விலும்‌, திருச்சபையின்‌ வாழ்விலும்‌ மரியா சிறப்பிடம்‌ பெறுகின்றார்‌. குழந்தை இயேசுவைப்‌ பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்ட அன்னை நம்மையும்‌ தம்‌ குழந்தைகளாகப்‌ பாவித்துப்‌ பாதுகாக்க வேண்டும்‌ என்பதால்தான்‌ ஆண்டின்‌ தொடக்கத்‌திலேயே மரியாவை நினைவு கூர்கின்றோம்‌.

மரியா கடவுளின்‌ தாய்

கபிரியேல்‌ தூதர்‌ கன்னி மரியாவை நோக்கி “மரியே அஞ்சாதீர்‌. கடவுளின்‌ “இருளை அடைந்துள்ளீர்‌. இதோ உமது வயிற்றில்‌ கருத்தரித்து ஒரு "மகனைப்‌ பெறுவீர்‌. அவருக்கு இயேசு என்னும்‌ பெயரிடுவீர்‌” (லூக்‌ 1: 31) என்று கூற, இதோ, ஆண்டவரின்‌ அடிமை; உமது வார்த்தையின்படியே ஆகட்டும்‌ என்றார்‌ (1: 38). அதே வேளையில்‌ உருவிலானைக்‌ கருவிலே தாங்கி கன்னித்‌ தாயானார்‌. கடவுளையே தாங்கிய கற்புக்கரசி தன்‌ வீடு தேடி வந்ததைக்‌ கண்ட எலிசபெத்தம்மாள்‌ “என்‌ ஆண்டவரின்‌ தாய்‌ என்னிடம்‌ வர நான்‌ யார்‌?” என்று வியப்படைந்தார்‌.

இயேசு தெய்வத்‌ திருமகன்‌ என்றால்‌, அவரைப்‌ பெற்றவரை தேவதாய்‌ என்றழைப்பதில்‌ என்ன தயக்கம்‌? எனினும்‌ ஒருசிலர்‌ கன்னி மரியாவைக்‌ கடவுளின்‌ தாயென அழைக்கலாகாது என்றனர்‌. இறை இயேசுவில்‌ உள்ள மனித ஆளுக்குத்‌ தான்‌ அவர்‌ தாயே தவிர, தெய்வ ஆளுக்கு அன்று என்று தெய்வத்‌ திருமகனைக்‌ கூறு போட்டனர்‌. இவ்வேளையில்‌ தான்‌ எபேசு நகரில்‌ 4-ம்‌ நூற்றாண்டில்‌ கூடிய திருச்சங்கம்‌ கன்னி மரியா கடவுளின்‌ தாய்‌ என்ற உண்மையை வேதசத்தியமாக வரையறை செய்தது. அன்று முதல்‌ இன்று வரை "எல்லாத்‌ தலைமுறைகளும்‌ அவளைப்‌ பேறு பெற்றவர்‌ எனப்‌ போற்றுகின்றன.

மரியா என்னுடைய தாய்‌

கடவுளின்‌ தாயாக சம்மதித்தபொழுதே அவர்‌ நமக்கும்‌ தாயாகிவிட்டார்‌. ஏனெனில்‌ மக்களை மீட்டு அருள்‌ வாழ்வு வழங்கும்‌ அற்புதக்‌ கனியைத்‌ தந்த கற்பகத்தரு மரியா; இயேசுவாகிய திராட்சைக்‌ கொடி பயிரான நிலம்‌ அவர்‌. வாழ்வு அளிப்பவர்‌ தாய்‌; அருள்‌ வாழ்வு அவள்‌ வழியாகவே நமக்கு வருகிறது. எனவே அவர்‌ நமது தாய்‌. இந்த உறவு கல்வாரியில்‌ 'இரத்தத்தால்‌ முத்திரையிடப்படுகிறது. “இவரே உன்‌ தாய்‌” என்று கூறப்பட்ட சொற்கள்‌ யோவானுக்கு மட்டுமல்ல; நமக்கும்‌ பொருந்தும்‌. எனவே. “கடவுளின்‌ தாய்‌, என்‌ தாய்‌!” என்று புனித தனிஸ்லாசுடன்‌ நாம்‌ பெருமையுடனும்‌, உரிமையுடனும்‌ கூற முடியும்‌. அன்னையின்‌ அடிச்சுவட்டில்‌ 'நடக்கிறேனா? அவரிடம்‌ என்னை முழுதும்‌ அர்ப்பணிக்கின்றேனா?

இயேசு எனது மீட்பர்‌

யூத முறைப்படி பாலன்‌ பிறந்த எட்டாம்‌ நாள்‌ பெயர்‌ சூட்டுவிழா நடந்தது. இயேசு என்று பெயரிட்டனர்‌. “கடவுள்‌ மீட்பர்‌” என்பது அதன்‌ பொருள்‌ வல்லமையுள்ள பெயர்‌; மண்ணும்‌ விண்ணும்‌ மண்டியிடும்‌ இப்பெயருக்கு! “நசரேத்து இயேசு கிறிஸ்துவின்‌ பெயரால்‌ எழுந்து நடந்திடும்‌” (திப3:6). “ஏனெனில்‌, நாம்‌ மீட்படைவதற்கு அவர்‌ பெயரைத்‌ தவிர இவ்வுலகில்‌ மனிதருக்கு வேறு பெயர்‌ அருளப்படவில்லை” (திப 4 : 12). “நீங்கள்‌ தந்தையிடம்‌ எதைக்‌ கேட்டாலும்‌ அதை என்‌ பெயரால்‌ உங்களுக்குத்‌ -: தருவார்‌” (யோவா 16 : 23). ஆதலால்தான்‌ கடவுள்‌ அவரை எல்லாருக்கும்‌ மேலாய்‌ உயர்த்தி, எப்பெயருக்கும்‌ மேலான பெயரை அவருக்கு அருளினார்‌. ஆகவே இயேசுவின்‌ பெயருக்கு விண்ணவர்‌ மண்ணவர்‌ கீழுலகோர்‌ அனைவரும்‌ மண்டியிடுவர்‌ (பிலிப்‌ 2: 9). வல்லமையுள்ள இப்பெயரை வாயுள்ள வரை சொல்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு