மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21|பிலிப்பியர் 3:8-14|யோவான் 8:1-11

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசு சொல்லி முடிந்தவுடன் வானத்தில் இருந்து ஒரு கல் விழுந்தது என்று வேடிக்கையாகச் சொல்வது உண்டு. ஏனெனில் கடவுள் ஒருவர்தான் நல்லவர், பரிசுத்தர். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு கடவுள் ஒருவர்தான் தகுதியானவர் என்ற செய்தி இன்றைய நற்செய்தியிலே வழங்கப்படுகிறது.

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இயேசுவின் முன்பாக விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கூனிக் குறுகிப் போய் நிற்கும் காட்சி. தங்களை நீதிமான்களாக நல்லவர்களாகக் கருதிக் கொண்ட பரிசேயர் மறைநூல் அறிஞர் மறுபுறம் நிற்கின்றனர். நடுவே இயேசு தரையில் ஏதோ எழுதுவது போன்ற காட்சியில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சியை இன்று நடப்பது போல கண்முன் கொண்டு வாருங்கள்.

பெண்ணின் விபச்சாரம் என்ற பாவமானது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்களோ யாருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளங்களை ஆய்ந்தறிகின்ற கடவுளின் மகனாம் இயேசுவுக்கு இந்தப் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் நன்றாகத் தெரியும். உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னதின் மூலம் சங்கப் பரிவாரங்களாகிய பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை விட பெரிய பாவிகள் என்பதை இயேசு தெளிவாகக் காட்டுகிறார்.

பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் யாவை?

முதல் குற்றம், பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்தது. ஊதாரி மைந்தன் உவமையில் வரும் மூத்த மகன் (லூக். 15:25), ஆலயத்தில் செபித்த பரிசேயர் (லூக். 18:9-14) இவர்களைப்போல, பிறரது குறைகளையும், குற்றங்களையும் மட்டுமே பேசித் தங்களை நல்லவர்களாக நீதிமான்களாகக் காட்ட முனைந்தனர்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவியின் காது வர வர மந்தமாகிக் கொண்டு வருவது போல் தோன்றியது. ஒரு தடவை தன் மனைவி சமைத்துக் கொண்டிருந்தபோது அவளுக்குத் தெரியாத வகையில் பின்புறமாக 10 அடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று மெதுவாகக் கேட்டான். பதில் இல்லை. 5 அடி தூரத்தில் நின்று கேட்டான். பதில் இல்லை . இறுதியாக ஒரடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டான். அதற்கு மனைவி, நீங்கள் ஏற்கனவே இரு முறை கேட்ட கேள்விக்குச் சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன் - நன்றாகவே கேட்கிறது என்றாள். பார்த்தீர்களா? காது மந்தம் மனைவிக்கு அல்ல. கணவனுக்குத்தான். இந்தக் கணவனைப் போலத்தான் இந்தப் பரிசேயக் கூட்டம். இன்றைய உலகில் உள்ள பரிசேயர் கூட்டமும் பிறரின் குறைகளை மிகைப்படுத்திப் பேசித் தங்கள் குற்றங்களை மறைப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பிறர் பெயர் கெட்டாலும் பரவாயில்லை தாங்கள் நல்லவர்கள் என்று பிறர் நினைக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

இரண்டாவதாக பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் திட்டமிட்டு சூழ்ச்சி செய்து பிறரைக் கெடுக்க, அழிக்க நினைப்பவர்கள். பரிசேயர் விபச்சாரப் பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தது பாவத்தின் மீது இருந்த வெறுப்பின் காரணமாகவோ, சட்டத்தின் மீது இருந்த பிடிப்பின் காரணமாகவோ அல்ல. இயேசுவிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கப் பரிசேயர் வகுத்த சூழ்ச்சி அது. மோசே சட்டப்படி வேசித்தனம் செய்தவர் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும். ஆனால் யூதர்களோ உரோமையருக்கு அடிமையாக இருந்ததால், உரோமையரின் சட்டம் இதை அனுமதிக்கவில்லை. இத்தகைய மரணத் தண்டனையை உரோமைச் சட்டம் தடை செய்து இருந்தது. எனவே யூதச் சட்டத்தை ஆதரித்தார் என்றால் உரோமைக்கு எதிரியாக்கிவிடலாம். யூதச் சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லையென்றால் யூதச் சட்டத்தை எதிர்ப்பவர் என்று இயேசுவைச் சிக்க வைக்க நினைத்த கூட்டம்தான் இந்தப் பரிசேயர் கூட்டம்.

அண்மையில் நமது பாரத நாட்டிலே அரியானா மாநிலத்திலே செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, புனிதப் பசுவைப் பங்கப்படுத்தினார்கள் என்று கூறி மதவெறியர்கள் ஐந்து தலித் சகோதரர்களைக் கொலை செய்தார்களே, இதுதான் திட்டமிட்டு அடிக்கத் துடிக்கும் பரிசேயத்தனம்.

மூன்றாவதாக சட்டத்தைக் கையிலே எடுத்துக்கொண்டு பரிசேயர்கள் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்கவும், குற்றம் கண்டு பிடிக்கவும் பயன் படுத்தினார்கள். ஓய்வுச் சட்டங்கள், தூய்மை முறைச் சட்டங்கள், ஒழுக்க நெறிச் சட்டங்கள் முதலியவற்றால் மக்களின் வாழ்வில் சுமையை ஏற்றினார்களேயொழிய அவர்களின் வாழ்வுக்கு வளமை கொண்டு வரவில்லை. எனவேதான் இயேசு சொன்னார்: சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள் (மத். 23:4) என்று. இதுதான் நம் நாட்டில் நடக்கும் தடாச் சட்டம், பொடாச் சட்டம், எஸ்மா சட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம். இப்படிச் சட்டங்களை இயற்றி எளியவரை ஒடுக்கி, பதவிக்காரர், பணம் படைத்தோர், அரசியல்வாதிகள் இன்று சட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

1) ஆனால் இயேசு இத்தகைய அநியாயச் சட்டங்களைத் தூக்கி எறிந்தவர்.

2) இயேசு பரிசேயர்களின் பாவங்களை நன்றாக அறிந்து தெரிந்து இருந்தாலும் அவர் தீர்ப்பிடவில்லை. விபச்சாரப் பெண்ணை மன்னித்ததுபோல் மன்னிக்கத் தயாராக இருந்தார். உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என்று இயேசு குறிப்பிட்டதோ தாங்கள் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களை ஏற்று மனம் திரும்பி வர வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பரிசேயர்களோ அதைச் செய்யவில்லை. அடடா! இதுவரை மற்றவர்ளைத்தான் பாவி என்று பார்த்தோம். அந்தப் பட்டியலில் நம்மையும் அல்லவா சேர்த்துவிட்டார் என்று சொல்லி கையில் இருந்த கல்லைக் கீழே போட்டார்களே தவிர மனம் மாறி இயேசுவிடம் வராது ஓடிவிட்டார்கள்.

கூனிக் குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து, நிபந்தனையற்ற இரக்கத்தோடும் அன்போடும் சொல்கிறார் இயேசு: உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன. நான் உன்னைத் தீர்ப்பிடவில்லை, சமாதானமாகப் போ. இனி பாவம் செய்யாதே என்றார் (யோவா. 8:11).
இன்று இயேசு உன்னைப் பார்த்துச் சொல்கிறார்.
1) உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?
2) பாவம் இல்லாதவர் பிறர் மீது முதல் கல்லை எறியட்டும்.
3) இயேசு மனமாற்றத்திற்கு அழைக்கிறார். பாவிப் பெண் பெற்ற மன்னிப்பைப் பெற நீ தயாராக இருக்கிறாயா? ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறு. இயேசுவை மன்னிக்கும் தேவனாகக் காண்பாய்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசு நமது பாவங்களை மன்னித்துவிடுவார்

நமது ஆண்டவராம் இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கின்றார். ஆனால் எந்தப் பாவியையும் அவர் வெறுப்பதில்லை.
அந்தப் பெற்றோருக்கு அவன் ஒரே மகன், அவன் ஒரே பிள்ளை . ஒரே மகன் என்பதால் அவனை கண்ணே மணியே என்று நாளும் போற்றி வளர்த்தார்கள். அவன் வளர்பிறை போல் வளர்ந்தான். வளர்ந்தவன் அவனது பெற்றோர் சம்பாதித்த செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்தினான்.

தவறான நண்பர்கள் சேர்ந்தார்கள். தவறான பழக்கவழக்கங்கள் அவனை ஒட்டிக்கொண்டன. கண் போன போக்கிலே அவன் மனம் போனது ; மனம் போன போக்கிலே அவன் கால் போனது.

பெற்றோர் இப்படித்தான் வாழவேண்டும் என்றார்கள். ஆனால் கல்மனம் படைத்த மகனுக்கு அவர்கள் கூறியது பிடிக்கவில்லை . சிற்பிகளான அவனது பெற்றோரை விட்டு அவன் ஒரு நாள் ஓடிப்போனான். ஓடிப்போகும் போது வீட்டில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான்.

அவன் வீட்டைவிட்டுச் சென்ற நாளிலிருந்து அவனுடைய பெற்றோர் சரியாக உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. என்றாவது ஒரு நாள் மகன் திரும்பி வருவான் என்று கண்விழித்துக் காத்திருந்தார்கள். அவன் திரும்பி வரவேயில்லை.

ஒரு நாள் தகப்பன் தன் வயதான மனைவியை விட்டுவிட்டு ஒரு வயதான குதிரை மீது ஏறி மகனைத் தேடிச்சென்றார். ஓடிப்போன மகன் தீய வழியில் பணத்தை, சொத்தை செலவழித்துவிட்டு தனிமரமாக நின்றான். அவனை விட்டு அவன் நண்பர்கள் ஓடிவிட்டனர்.

அதன்பிறகு அவன் தீய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவைப்பட்டதால் திருட்டுத் தொழிலில் இறங்கினான்; பெரும் வழிப்பறித் திருடனானான்.

தந்தை மகனைத் தேடுவதை நிறுத்தவில்லை. 10 ஆண்டுகள் தொடர்ந்து தேடினார். அன்று பெரிய காட்டின் வழியாகப் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை.

நடுக்காடு! இரவு நேரம் எங்கிருந்தோ குரலொலி ஒன்று கேட்டது. டேய், உன் பயணத்தை நிறுத்து. அந்த தகப்பன் நின்றார். ஒரு முரட்டுத் திருடன் ஓடி வந்தான். அந்தத் திருடன் அந்த தகப்பனைப் பிடித்து, உன்னிடமிருக்கும் பணத்தை எடு என்றான். அந்த தகப்பனோ, என்னிடம் ஏது பணம்? நான் ஓர் ஏழை. சாப்பிடாமல் என் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றேன் என்றார். அந்தத் திருடனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பணம் இல்லாத நீ பிணமாவதுதான் நல்லது என்று சொல்லிவிட்டு அந்தத் தகப்பனை வெட்டுவதற்கு அரிவாளை எடுத்து, தனது இடது கையை ஓங்கினான். அப்போது அந்தத் தகப்பனுக்கு ஒரு சந்தேகம்! என்ன சந்தேகம்? காணாமல் போன அவருடைய மகன் இடது கை பழக்கமுடையவன். ஆகவே அந்தத் திருடனைப் பார்த்து, தகப்பன், சற்றுப் பொறு , என் தலையை வெட்டுவதற்கு முன் நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விழைகின்றேன் என்றார். அதற்கு அந்தத் திருடன், என்ன சொல்ல விரும்புகின்றாய்? சீக்கிரம் சொல் என்றான். தகப்பன், நீ யார்? என்றார். அதற்கு அந்தத் திருடன், நான் யாராக இருந்தால் என்ன? முதலில் நீ யார்? என்று சொல் என்றான். அந்தத் தகப்பனோ, நான் காணாமல் போன மகனைத் தேடி அலையும் தகப்பன் என்றார். உடனே திருடன் அவன் முன்னே நிற்பது யார் என்பதை அறிந்து கொண்டான். தகப்பனின் காலில் விழுந்து, அப்பா நீங்கள் தேடும் அந்த மகன் நான் தான். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? என்னைத்தான் நீங்கள் தேடிவந்திருக்கிறீர்கள் என்றான்.

பிரிந்தவர் கூடினர்! தந்தையும் மகனும் வீட்டிற்கு வந்தனர்!

இந்தக் கதையில் வந்த தகப்பனைப் போன்றவர்தான் நம் ஆண்டவராம் இயேசு.

பாவம் என்பதற்கு திருட்டு என்ற பொருளும் உண்டு.

இயேசு ஒரு திருடரைத் தேடி எரிகோ நகருக்குச் சென்றார். இன்னொரு திருடனைத் தேடி கல்வாரி மலைக்குச் சென்றார்.

முதல் திருடரை இயேசு ஒரு மரத்தின் மீது சந்தித்தார். லூக் 19:1-10 முடிய உள்ள பகுதி : சக்கேயு என்னும் குள்ள மனிதர் ஒருவர் எரிகோ என்னும் நகரிலே வாழ்ந்து வந்தார். அவர் குள்ளனாகவும் பாவியாகவும் இருந்ததால் ஒரு மரத்தின் மீது அமர்ந்து இயேசுவைப் பார்க்க நினைத்தார். தன்னைப் பார்க்க நினைத்தவரைப் பார்த்தார் இயேசு. அந்த மரத்திலிருந்த சக்கேயு அருகில் நின்று, இழந்து போனதை தேடி மீட்கவே நான் வந்தேன் என்று சொல்லி, அவரை மரத்தை விட்டு கீழே இறங்கச் சொன்னார். உன் பாவத்தை உடனே கைவிடு என்றார்.

அழகான பாவ அறிக்கையில் சக்கேயு சொன்னது என்ன? ஆண்டவரே என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன் ; நான் யார் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்றார். சக்கேயு ஒரு பாவி; அவரை இயேசு மன்னிக்கின்றார்.

கல்வாரியிலே ஒரு திருடன். லூக் 23:38-43 முடிய உள்ள பகுதி. இரண்டு திருடர்களில் ஒருவன், நாம் துன்பப்படுவது முறையே என்று சொல்லிவிட்டு மனம் மாறி இயேசுவைப் பார்த்து, என்னை ஏற்றுக்கொள்ளும் என்றான். உடனே இயேசு அவன் பாவத்தை மன்னித்தார்.

இன்றைய நற்செய்தியிலே யோவா 8:1-8 - இல் ஒரு பாவியின் மனம் இயேசுவைத் தேடுகின்றது. அவர் ஒரு திருடி. தன் அழகை வைத்து எத்தனையோ பேரின் தூய மனத்தைத் திருடியவர்! ஆனால் இயேசு அவரை மன்னித்துவிடுகின்றார்.

இந்த உலகத்திலே சிலர் தங்களுடைய பாவங்களை மறைத்து மற்றவர்களுடைய குற்றங்களைக் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் பதவியை, பட்டத்தை, பணத்தை, பரிசை பிறரிடமிருந்து கவர்ந்துகொள்கின்றார்கள்.

சிலர் நல்ல பெயரைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
 சிலர் நீதியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் நேர்மையைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் மகிழ்ச்சியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சில சின்னப் பிள்ளைகள் முறுக்கைத் திருடி இருப்பார்கள்; கெட்டி உருண்டையைத் திருடி இருப்பார்கள் ; பென்சிலைத் திருடி இருப்பார்கள் ; பேனாவைத் திருடி இருப்பார்கள்.

ஓர் அப்பாகிட்ட வாத்தியார், உங்கள் பையன் தினமும் பென்சிலைத் திருடிகிட்டு வீட்டுக்கு வர்றான் அப்படின்னாரு. அதற்கு அந்த அப்பா, மகனைப் பார்த்து, நான் தினமும் ஆபீஸ்ஸிலிருந்து பேனாவைத் திருடிக்கிட்டு வர்றேனே! அது பத்தாதா? என்றார். நாம் எல்லாருமே பாவிகள்தான்.

நற்கருணை உருவிலே நம்மைத் தேடிவரும் இயேசுவின் பாதத்திலே விழுந்து, சுவாமி நான் பாவி என்போம்.

முதல் வாசகம் கூறுவது போல நடந்ததை மறந்துவிட்டு, இரண்டாம் வாசகம் கூறுவது போல கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி வாழ்வில் தொடர்ந்து முன்னேறுவோம். இயேசு அப்போது நமது பாவங்களையெல்லாம் மன்னித்து தமது பிள்ளைகளாக நம்மை ஏற்றுக்கொள்வார்.

மேலும் அறிவோம் :

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை ; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு (குறள் : 290).

பொருள்: களவு செய்வோர்க்கு உயிரோடு வாழும் நிலையும் விரைவில் தவறிப்போகும்! கள்வை உள்ளத்தாலும் நினைத்துப் பாராதவர்க்குத் தேவருலகு ஆகிய வானகம் தவறாது கிடைக்கும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை . ஆசிரியர் அவன் ஏன் ஒழுங்காகப் படிப்பதில்லை ? என்று கேட்டதற்கு அவன், "சார்! என் அப்பாவும் அம்மாவும் இரவும் பகலும் சண்டை போடுகின்றனர். எனவே, என்னால் படிக்க முடியலை" என்றான், "யாருடா உன் அப்பா?" என்று ஆசிரியர் கேட்டதற்கு அவன், "அதைப் பற்றித் தான் சார் ஒவ்வொருநாளும் சண்டை நடக்கிறது” என்றான்.

சில தம்பதியருடைய தவறா னே நடத்தையால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது. எனவே தான் விபசாரத்தைத் தடை செய்துள்ளார் கடவுள்,
"விபசாரம் செய்யாதே" {இச 5:18) என்றும், "பிறர் மனைவியைக் காமுறாதே" (இச 5:21) என்றும் கடவுள் கட்டளை கொடுத்தார். ஒருவர் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் விபசாரம் செய்யக்கூடாது. (ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தில் ஏற்கெனவே பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று" (மத் 5:27) என்று கிறிஸ்து தமது மலைப்பொழிவில் கூறியுள்ளார்.

பிறருடைய மனைவியை விரும்பி நோக்காதிருப்பதுவே ஓர் ஆணுக்கு ஆண்மை (வலிமை), அறம் மற்றும் நிறை ஒழுக்கமும் ஆகும் (குறள் 148). ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் இல்லற நெறி, ஒருத்தனின் உள்ளத்தில் ஒருத்தி மட்டும் இருக்க வேண்டும். அதை விடுத்து, "நினைவெல்லாம் நித்யா, மனமெல்லாம் மல்லிகா, உடலெல்லாம் உஷா. ஆயுளெல்லம் ஆஷா, பகலெல்லாம் பாமா, இரவெல்லாம் இரம்யா " என்று ஆறுபே கரை வைத்திருக்கக்கூடாது. அவ்வாறே ஒரு பெண்ணின் உள்ளத்திலும் ஓர் ஆண் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "கண்ணகி மதுரையை தீயினால் சுட்டு எரித்தாள். இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்றார். மாணவர்கள், "சார்! கண்ணகி காலத்தில் தீயணைக்கும் படை இல்லை என்பது தெரிகிறது " என்றார்கள்! கணவனையே கண்கண்ட தெய்வமாகத் தொழும் பெண். "மழை பெய்யட்டும்" என்றால் மழை பெய்யும் (குறள் 55), கற்பு நெறி பெண்ணுக்கு அணிகலனும் அரணுமாகும்.

ஆனால், இன்றைய நற்செய்தியில் ஒரு பெண் வருகிறார். அவர் விபசார குற்றத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவர். மோசேயின் சட்டப்படி. விபசாரக் குற்றத்தில் ஈடுபட்ட ஆண்-பெண் ஆகிய இருவருமே கொலை செய்யப்பட வேண்டும் (லேவி 20:10). பரிசேயரும் மறைநூல் அறிஞரும் விபசாரம் செய்த ஆணை விட்டுவிட்டு, பெண்ணை மட்டும் இயேசுவிடம் கொண்டுவந்து அவரின் தீர்ப்பை எதிர்பார்த்து கையில் கற்களுடன் காத்திருக்கின்றனர். இயேசுவோ மோசேயின் சட்டம் சரியில்லை என்றோ அல்லது அப்பெண் விபசாரம் செய்யவில்லை என்றோ கூறவில்லை, மாறாக, மக்கள் கூட்டத்திடம், "உங்களுள் பாவம் இல்லாதவர் இப்பெணமேல் கல் எறியட்டும்” என்கிறார். எல்லாரும், பெரியவர் முதலாக சிறியவர் ஈறாக, கற்களைக் கீழே போட்டுவிட்டு தலையைக் கீழே போட்டுக்கொண்டு வீடு திரும்புகின்றனர். அத்தனை பேரும், தங்கள் கண்ணிலிருந்த மரக்கட்டயைப் பார்க்காமல், அப்பெண்ணின் கண்ணிலிருந்த துரும்பை எடுக்க முற்பட்ட வெளிவேடக்காரர்கள் (மத் 7:3). தமக்கு முன்பாகக் கூனிக்குறுகி நின்ற அப்பெண்ணைப் பார்த்து கிறிஸ்து. "இனி பாவம் செய்யாதீர்” (யோவா 8:10) என்கிறார். யூதர்கள் அப்பெண்ணுக்கு விதிக்கத் துடித்த மரண தண்டனையை, இயேசு ஆயுள் தண்டனையாக மாற்றி எழுதுகிறார்.

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஓர் அறிஞர் அதற்கான காரணத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார், "மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு சில பக்கங்கள் கிழித்து எறியப்படுகின்றன. அப்பக்கங்களைத் திருத்திப் புதிய பதிப்பை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்படுகிறது.” ஆழமான அழகான சிந்தனை முத்து!

பாவிகளின் அழிவை அல்ல, அவர்கள் மனம்மாறி வாழ்வதையே கடவுள் விரும்புகிறார் (எசே 18:23). "தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் வருந்தி ஆகணும்; தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்" (திரைப்படப் பாடல்).

ஒருமுறை நாம் திருந்திய பின், மறுபடியும் நமது பழைய பாவ வாழ்வை நினைக்கக்கூடாது. கடவுள் நமது பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிந்துவிட்டார். கடவுள் நம் பாவங்களை கணிப்பொறியில் ஏற்றுபவர் அல்லர். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுவதென்ன? "முன்பு நடந்தவற்றை மாறந்துவிடுங்கள்; முற்கால முயற்சி பற்றிச் சிந்திக்காதீர்கள். இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்" (எசா 43:18-19). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார், "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்" (பிலி 3:13-14).

ஒரு புண் ஆறிவிட்டது: அதன் மேல் புறத்தோல் காய்ந்துவிட்டது. ஆனால் மறுமடியும் அப்புண்ணைக் கீறிவிட்டுக் காயத்தைப் புதுப்பிப்பது முட்டாள் தனமாகும். நமது பழைய பாவங்களை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்தி நம்மிடம் குற்றப்பழி உணர்வை என்றும் பசுமையாக வைத்திருக்கும்படி அலகை முயற்சி எடுக்கிறது. அலகையின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளின் மக்கள்மீது குற்றம் சுமத்துகிறது (திவெ 12:10). கிறிஸ்துவின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (எபி 7:25). நமது பாவக் கடன் பத்திரத்தைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார் (கொலோ 2:14),

"நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்" (1 யோவா 3:20). எனவே, பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-33).
தவக்காலத்தின் இறுதிக் கட்டத்திலுள்ள நமக்குக் கிறிஸ்து கூறுவது: "உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன; இனி பாவம் செய்யாதீர்கள்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின் நிமிர்ந்த பார்வை

“அக்கினிப் பிரவேசம்” - இது ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை.
கல்லூரியில் படிக்கும் இளம்பெண் பேருந்துக்காகக் காத்து நிற்கிறாள். இருட்டிவிட்டது. இடியுடன் கூடிய மழைவேறு. ஒரு வழியாக பேருந்து வருகிறது; ஆனால் நிற்காமல் போய் விடுகிறது! தனியே தவிக்கிறாள்.
படகுக்கார் ஒன்று வந்து உரசுவதுபோல் பக்கத்தில் நிற்கிறது. ஓட்டி வந்த இளைஞன் கதவைத் திறந்து விடுகிறான். செய்வது இன்னதென்று அறியாமலேயே காருக்குள் நுழைகிறாள். ஒரு பங்களா முன் கார் நிற்கும்போதுதான் ஒருவாறு அவளுக்குப் புரிகிறது - புலியின் பிடியில் புள்ளி மானாகிவிட்ட அவளது கற்பு சூறையாடப்படுகிறது.
அழுகையோடும் இனமறியா மனஉளைச்சலோடும் நடந்தவை யெல்லாம் ஒன்றுவிடாமல் தன் தாயிடம் ஒப்பிக்கிறாள். அதிர்ச்சிதான்! ஆனால் யார் குற்றவாளி? நடந்தவையெல்லாம் கெட்ட கனவாக மறக்கச் சொல்லி வெந்நீரால் மக்களைக் குளிப்பாட்டுகிறாள். ''நீ சுத்தமாயிட்டே... உன் மனத்தை எவனும் கொடுக்கவில்லையே! உடல் தானே கெட்டது. கழுவி விட்டேன்” என்று தாய் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள்.
இதுதான் அக்கினிப் பிரவேசம்!

கற்பு என்பது மனத்தளவில் தான். "ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று” (மத். 5:28). மிக முக்கியம் மனநிலை.
விபச்சாரச் செயலுக்குப் பொறுப்பேற்கும் பல புறசக்திகள்வறுமை, அறியாமை, வன்முறை, பாலியல் ஆகியவை. ஆனால் விபச்சார எண்ணத்துக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும். மனத்தில் எதை அசைபோடுகிறோமோ, அதுவே நம்மையும் அறியாமல் வெளிப்படுகிறது. நம் மனம் அசைபோடும் அழுக்குகளை வைத்தே நாம் பிறரையும் எடை போடுகிறோம். பாலியல் தொடர்பாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவல் கிடைத்த மாதிரி.
தவறு செய்வதற்குச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு தவறியவனைத் தண்டிப்பதற்குத் தயாராகும் சமூகம், சட்டத்திற்குள் தன்னை - தனது பொறுப்பற்ற தன்மையை மறைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது.
உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு (யோ. 3:17). நம் கவனத்தை ஈர்ப்பது இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை என்பது மட்டுமல்ல. தீர்ப்பிட வந்தவர் எவரையும் தீர்ப்பிடவில்லை என்பதுதான். ''உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும். தீர்ப்பிட வேண்டும் என்று வந்தவர்களுக்குத் தீர்ப்பிட வாய்ப்பளிக்கிறார். ஆனால் தீர்ப்பிடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களை உணர வைத்ததுதான் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதம்.
நாம் அனைவரும் பாவிகள். (1 யோ. 18). ''என் இதயத்தைத் தூய தாக்கிவிட்டேன். நான் பாவம் நீக்கப் பெற்றுத் தூய்மையாய் இருப்பவன் என்று யாரால் சொல்லக் கூடும்?" நீதிமொழிகள் 20:9 விடும் சவால் இது!
"நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்?" என்று ஆசிரியர் கேட்க ஒரு மாணவன் சொன்னானாம்: 'வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து". அறிவார்ந்த பதில்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.
தன்னிலை உணர்ந்தவர்களாய் நாமும் ''கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்" (பிலி 3:13-14)
"நானும் தீர்ப்பிடேன் - இனிப் பாவம் செய்யாதே". எவ்வளவு பொருத்தமான பதில்! இது அவளுக்குப் பாவம் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அன்று, மறுவாழ்வு தந்த மாமருந்து!
பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.
நேற்றையப் பொழுதை இறை இரக்கத்துக்கு விட்டுவிடு
இன்றையப் பொழுதை இறையன்பில் செலவிடு
நாளையப் பொழுதை இறை நம்பிக்கையில் விடியவிடு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இரக்கப்படவேண்டிய ஒன்றும், இரக்கமும்

தவக்காலத்தின் சிகரத்தை நெருங்கிவந்துள்ளோம். அடுத்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அதைத் தொடர்வது, புனித வாரம். அதற்கு அடுத்த ஞாயிறு, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இந்தச் சிகர நிகழ்வுகளுக்கு ஓர் அழகிய அறிமுகமாக, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.

சென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடினோம். உண்மையான மகிழ்வு, மன்னிப்பிலும், ஏற்றுக்கொள்வதிலும் அடங்கியுள்ளது என்பதைக் கூற, 'காணாமல் போன மகன்' உவமை நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டது. திரும்பி வந்த மகனை, எந்தக் கேள்வியுமின்றி, நிபந்தனையுமின்றி, தடையுமின்றி ஏற்று, அரவணைத்தத் தந்தையை, இயேசு, அவ்வுவமையில் அறிமுகம் செய்துவைத்தார்.

தான் சித்திரித்த அந்தத் தந்தையிடம் விளங்கிய அன்பை, இயேசு, தன் வாழ்வில் வெளிப்படுத்திய ஓர் அற்புத நிகழ்வை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் (யோவான் 8:1-11). தீர்ப்பு வழங்குவதற்காக தன்னிடம் இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தீர்ப்புக்குப் பதில், மன்னிப்பு வழங்கி அனுப்பிவைத்த இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். இந்நிகழ்வை, ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களை, குறிப்பாக, உறவுகள் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். ஏன்? இயேசுவை எப்படியும் மடக்கி, அடக்கிவிடலாம் என்ற கற்பனையில், அவர்கள், இயேசுவுக்கு விடுத்த சவால்கள் அனைத்தும், அவரிடமிருந்து அற்புதமான சொற்களையும், செயல்களையும் வெளிக் கொணர்ந்தன.

சென்ற ஞாயிறு நாம் சிந்தித்த காணாமற்போன மகன் உவமை, இப்படிப்பட்ட ஒரு சவாலுக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட உவமை. “பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” (லூக்கா 15:2) என்று முணுமுணுத்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் பதில்சொல்ல, காணமற்போன ஆடு, காணமற்போன காசு, காணமற்போன மகன் என்ற அழகான மூன்று உவமைகளை இயேசு கூறினார்.

இந்த ஞாயிறு கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தியிலும், இயேசுவுக்குச் சவால்விடும் வண்ணம், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் செயல்பட்டனர். இம்முறை, இயேசு எதையும் போதிக்காமல், தன் செயல் வடிவில், ஓர் அற்புதமான பாடத்தைச் சொல்லித்தந்தார், அவர்களுக்கும், நமக்கும்.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் நம் அன்றாட வாழ்வு எவ்விதம் ஆரம்பமாகவேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறது. நம்மில் பலர், பொழுது விடிந்ததும், கோவிலுக்குப் போவது, யோகாசனம் செய்வது, உடற்பயிற்சிக்காக நடப்பது, ஒரு கப் காப்பியை வைத்துக்கொண்டு செய்தித்தாளைப் படிப்பது என, அமைதியான செயல்களிலேயே காலைப்பொழுதைச் செலவழிப்போம். அவ்வேளையில், நிம்மதியைக் குலைக்கும், எரிச்சலூட்டும் செயல்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை.

இந்நிகழ்வில், அமைதியாக தன் நாளை இயேசு துவக்குவதையும், அந்த அமைதியைக் குலைக்க மதத் தலைவர்கள் திரண்டு வருவதையும் நற்செய்தியாளர் யோவான் சித்திரித்துள்ளார். "இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்." (யோவான் 8:1-2) இரவெல்லாம் ஒலிவ மலையில் கழித்த இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார். அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது, அந்த கும்பல். பொழுது விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.

உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இழுத்து வந்தனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.

மற்றொரு மனிதரை, சுயநலனுக்காகப் பயன்படுத்துவதைவிட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும்... பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும், குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும், அதன் விளைவாக, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதும், அண்மைக் காலங்களில், பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

பொருட்களையும், இயற்கையையும் பயன்படுத்துவதிலேயே இவ்வளவு கவனம் தேவை என்று சொல்லும்போது, மனிதர்களைப் பயன்படுத்துவதில் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது?... ‘மனிதரைப் பயன்படுத்துதல்’ என்ற சொற்றொடரே, தவறான கருத்து. மனிதர்களோடு பழகுவது, வாழ்வது என்பன, சரியான சொற்கள். ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில், பொருட்களும், மிருகங்களும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். செல்லப் மிருகங்களுடன் எவ்வாறு வாழ்வது என்பதைச் சொல்லித்தரும் பாடங்களும், பயிற்சிகளும் மலிந்துவிட்டன. இவ்வளவு ‘முன்னேறி’யுள்ள நாம், மற்ற மனிதர்களை, பொருட்களைவிட, மிருகங்களைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இந்தப்பாவம் அன்று இயேசுவுக்கு முன் அரங்கேறியது.

விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு, இது ஒரு வாய்ப்பு. மற்றபடி, அந்த பெண்ணோ, சட்டங்களோ அவர்களுக்கு முக்கியமில்லை.

நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே?" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவார்கள்.

இயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக, பரிசேயர்கள், கல்லால் எறியவேண்டும் என்ற சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (லேவியர் 20:10) அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்களோ அவரை விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.” (யோவான் 8: 7)

ஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக, பெண்களை, போகப்பொருளாக, அடிமைகளாக, பகடைக் காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.” இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போகவேண்டியதாயிற்று.

இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்னும் பின்னும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசு அங்கு என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சிலர் கொடுக்கும் விளக்கம் இது. அந்தப் பெண்ணை நோக்கி கல்லெறிய நினைத்த ஒவ்வொருவரின் பாவங்களையும் அவர் மண்ணில் எழுதினார் என்பது அந்த விளக்கம். இந்த விளக்கமே தேவையில்லை. இயேசுவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், அந்த பரிசேயர்கள். எனவே அவரது நேர்மையான, தீர்மானமான அந்தக் கூற்றுக்குப் பதில்சொல்ல அவர்களால் இயலவில்லை. அந்த இடத்தைவிட்டு தப்பித்துக் கொள்கின்றனர்.

இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். (யோவான் 8:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தக் காட்சியைப்பற்றி கூறும் புனித அகுஸ்தீன், "இறுதியில் அங்கு இரண்டு மட்டுமே இருந்தன. இரக்கப்படவேண்டிய ஒன்றும், இரக்கமும்" என்று கூறியுள்ளார். புனித அகுஸ்தீன் பயன்படுத்திய "Misericordia et misera" என்ற இவ்விரு சொற்களையும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது மடலின் தலைப்பாக வழங்கியுள்ளார்.

இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில், "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" (யோவான் 8:10) என்று இயேசு கேட்கிறார். இச்சொற்களில், கனிவும், மரியாதையும் வெளிப்படுகின்றன.

அப்பெண்ணை இயேசுவிடம் கொணர்ந்த மதத் தலைவர்கள், 'இப்பெண், அவள், இவள்...' என்று மரியாதைக் குறைவான மொழியைப் பயன்படுத்தினர். ஆனால், இயேசு இறுதியாக, அப்பெண்ணிடம் பேசும்போது, "அம்மா" என்று அவரை அழைக்கிறார். இயேசு பயன்படுத்திய "அம்மா" என்ற இச்சொல், நமக்கு கானா திருமண விருந்தை நினைவுக்குக் கொணர்கிறது. அங்கும், திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதென அன்னை மரியா கூறியதும், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என்று இயேசு கேட்டபோது, அவர் பயன்படுத்திய 'அம்மா' என்ற சொல், தாய் என்ற உறவைக் குறிப்படும் சொல் அல்ல, அது, பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் ஒரு சொல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.

பொதுவாக, ஒருவர் மற்றொருவருக்கு மன்னிப்பு வழங்கும் வேளையில், மன்னிப்பளிப்பவர் உயர்ந்த நிலையிலும், மன்னிப்பு பெறுபவர், தாழ்வான நிலையிலும் இருப்பதைப்போல் உணர வாய்ப்புண்டு. ஒரு சிலர் மன்னிப்பு வழங்கும்போது, தங்களை அரியணையில் அமர்த்திக்கொண்டு, மன்னிப்பு பெறுபவரை கால்மணை போல நடத்துவதும், அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பு தான் போடும் பிச்சை என்று உணரவைப்பதும், நாம் அவ்வப்போது காணும் காட்சிகள்.

நாம் இன்று தியானிக்கும் இந்நிகழ்வில், இயேசு அப்பெண்ணை 'அம்மா' என்றழைத்தபோது, அச்சொல்லில் கனிவு மட்டும் வெளிப்படவில்லை, அதைவிடக் கூடுதலாக, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அப்பெண்ணை மீண்டும் ஒரு பெண்மணியாக உயர்த்தி, அவர், அக்கோவிலிலிருந்து தலை நிமிர்ந்து வெளியேச் செல்லுமாறு இயேசு உதவி செய்தார்.

சென்ற வாரம் நாம் சிந்தித்த 'காணாமல்போன மகன்' உவமையில், தந்தையின் இல்லத்தில் ஒரு பணியாளனாக இருந்தால் போதும் என்ற தாழ்வான மனநிலையில் திரும்பி வந்த மகனுக்கு, 'முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி...' (லூக்கா 15:22) என்று மரியாதைகள் பல வழங்கப்பட்டன. மகனுக்கு உரிய மதிப்பு வழங்கிய அந்தத் தந்தையைப் பற்றி பெருமையுடன் பேசிய இயேசு, இன்று, அந்த தந்தையாக தானே மாறி, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அனைத்தையும் மீண்டும் தந்தார்.

இரக்கத்தின் இலக்கணத்தை வரையறுக்கும் இந்நிகழ்வு, திருஅவையின் ஆரம்ப காலத்தில், பல சங்கடங்களை விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இப்பகுதி, யோவான் நற்செய்தியிலிருந்து, சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருஅவையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சங்கடம் தான் என்ன?

'விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட' (யோவான் 8:4) ஒரு பெண்ணை, இயேசு மன்னித்து அனுப்பும் இந்நிகழ்வு, மக்களை, பாவம் செய்வதற்கு அனுமதி வழங்கும் ஒரு கதையாக மாறிவிடும் என்ற அச்சமே, இப்பகுதியை நற்செய்தியிலிருந்து அகற்றிவிடத் தூண்டியது என்று விவிலிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இயேசு வழங்கிய இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்ற அச்சம் தோன்றலாம்.

இது தேவையற்ற, காரணமற்ற அச்சம். கடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத்தானே இயேசு உலகிற்கு வந்தார். அதைச் சொல்லத்தானே காணமற்போன மகன் உவமையைச் சொன்னார். அதே நிபந்தனையற்ற அன்புக்கு, இந்த மன்னிப்பின் வழியே, செயல் வடிவம் கொடுத்தார் இயேசு. நீதியை விட, இரக்கத்தை விரும்பும் கடவுளைத்தான் விவிலியம், அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.

குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்நேரமும், எந்நிலையிலும், அன்பு ஒன்றையே வாரி, வாரி, வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது, பெரிய சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வதுதான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.

திரும்பி வந்த அந்த காணாமல் போன மகனை நினைத்துப் பாருங்கள். அவனுக்குக் கிடைத்த அந்த வரவேற்பிற்குப் பின், தன்னை வாரி அணைத்து, விருந்து கொடுத்து ஏற்றுக் கொண்ட அந்த தந்தையின் மனதை இனி அந்த மகனால் துன்பப்படுத்த முடியுமா? முடியும். ஆனால், மாட்டான். அன்பைச் சுவைத்தவன், இனி அந்த அன்புக்கு பதிலாக, நல்வழி செல்வதையே தினமும் நினைத்திருப்பான்.

இயேசுவும் அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியபோது, "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்லியிருக்கவில்லை என்றாலும், இப்படி ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அப்பெண், முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நிபந்தனையேதுமின்றி நம்மீது அன்பு கொண்டுள்ள கடவுளோடு வாழும் துணிவைப் பெற, தவக்காலத்தின் சிகர நிகழ்வுகள் நமக்கு உதவி செய்யட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எசாயா 43:16-21)

ஏசாயா இறைவாக்கினர் தம் எழுச்சியூட்டும் சொற்களாலும், செயல்களாலும், யூத மக்களின் தவறுகளை எடுத்துச் சொல்லி நேர்மையோடும், நீதியோடும் வாழ அழைப்பு விடுத்தார். ஆணால் அதற்கு இசைவு தராமல் மக்கள் தான்தோன்றியாக வாழ்ந்தார்கள். அதன் விளைவு பாபிலோனில் அடிமைபட்டு அந்நிய நாட்டில் நம்பிக்கையற்று வாழ்ந்து வந்தனர். இந்த வேளையில்தான் இறைவாக்கினர் எசாயா கடவுள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை எவ்வாறு பாரவோன் பிடியிலிருந்து மீட்டு சகல வசதிகளையும் செய்து மீட்பை அளித்தாரோ, அதே போல் உங்களையும் சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கையை இழந்து அடிமைத்தனத்தில் அல்லல்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு இறைவாக்கினார் இரண்டாம் எசாயா ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது இந்த வாசகம்.

இரண்டாம் வாசகப் பின்னணி (பிலி 3:8-14)

புனித சின்னப்பர் பிலிப்பியர்களின் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும், கிறிஸ்துவில் உறுதியானவர்களாக மாற்ற வேண்டும் என்றும் தன்னுடையக் கடவுள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையெனக் கருதுங்கள். அவர் நம்மையெல்லாம் நீதிமான்களாக மாற்றுவார் என்கிறார். மேலும் அவர்களின் விசுவாசம் குறைவாக இருப்பதைச் சரிசெய்வதும் அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 8:1-11)

இயேசு மோயிசன் கட்டளையைக் கடைப்பிடிப்பவரா என்று கண்டறியவும், மேலும், அவரை எப்படியாவது சூழ்ச்சி செய்து பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசுலிடம் கொண்டு வருகின்றனர். இயேசு அப்பெண்ணிற்கு மனமாற்றத்தை ஏற்படுத்தவும். தன்னுடைய மன்னிப்பை வழங்கவும், பரிசேயர்களைப் பார்த்து "உங்களில் பாவம் இல்லாதோர் முதல் கல்லை எரியட்டும்' என்று கூறுகிறார். இங்கு இயேசு, தான் பாவிகளைத் தண்டிப்பதற்காக அல்ல மாறாக மன்னித்து ஏற்று கொள்வதற்காகத்தான் வந்தேன் என்று உணரச் செய்கின்றார்.

மறையுரை

மனம் அலைபாய்கின்றதால் மனமாற்றம் அவசியமாகிறது.
நிலவல்ல நாங்கள் - தேய்ந்து போக
நீரல்ல நாங்கள் - தாகம் தீர்க்க
காற்றல்ல நாங்கள் - தெருவில் வீச
மலரல்ல நாங்கள் - உதிர்ந்து போக
திருந்தினோம்...மாறாக, மனிதர்கள் தவறினோம்... திரும்பி வந்துள்ளோம்...

பாவிகளை நண்பர்களாக்குவது பாமரன் இயேசுவின் பண்பு நலன்களில் முதன்மையானதாகும்! யூதச் சட்டத்தின் படி விபச்சாரத்தில் பிடிபட்ட எந்த ஒரு பெண்ணும் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும். இதை நன்கு அறிந்திருந்தப் பரிசேயர்களும், சதுசேயர்களும், இயேசுவிடம் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இழுத்து வந்து நிறுத்தி, அவரிடம் இதற்கு என்ன சொல்கின்றீர் என்று வினவுகிறார்கள்.

இயேசு பாவிக்குத் தரும் தீர்ப்பு மன்னிப்பா! அல்லது மரண தண்டனையா! என்று அறிய ஆவல் கொண்டனர். மன்னிப்பு என்றால் யூத சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகின்றார் என்று பொருள்படும். மரண தண்டனை என்றால் அவர் மனிதர்களை வெறும் பெயரளவில்தான் அன்பு செய்கிறார் என்று பொருள்படும். இங்கு இயேசு அவர்களுக்கு உணர்த்த விரும்புவது, மனம் வருந்துகிறவர்- களுக்கு மன்னிப்பு கட்டாயம் உண்டு. ஏனெனில் மன்னிப்பும், மன- மாற்றமும் இறைவனைச் சார்ந்தன, மன்னிக்க வேண்டிய மனநிலையும், மனமாற்றத்திற்க்கான சூழ்நிலை மட்டும் மனிதனைச் சார்ந்தது.

இயேசுவின் முன்பாக விபசாரத்தில் பிடிபட்டதால் கூனிகுறுகிப் போய் நிற்கும் பெண் தன் உணர்ச்சி குமுறல்களைத் தன் குற்ற உணர்வோடு கலக்காமால் தன்னை முழுமையாக இயேசுவிடம் ஒப்புகொடுக்க முன்வருகிறாள். இயேசு, 'உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்று சொன்னபோது, பரிசேயர்களால் எதுவும் செய்ய இயலவில்லை, ஏனென்றால் இயேசு மறைமுகமாகப் பரிசேயர்களும் பாவிகள்தான் என்று சுட்டிக்காட்டி அவர்களையும் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். பிறருடையப் பாவநிலையை வெளிப்படுத்தி தன் பாவநிலையை மறைக்கும் குணமானது விபச்சாரத்தை விடப் பெரிய பாவம் என்று இயேசு கட்டிகாட்டுகின்றார். பிறரது குற்றங்களையும், குறைகளையும் மட்டுமே பேசி தங்களை நல்லவர்களாகக் காட்ட முனைவது ஒரு பெரிய பாவச் செயலாகும்.

"என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன், நான் பாவம் நீங்க பெற்று தூய்மையாயிருப்பேன் என்று யாரால் சொல்லக்கூடும்?" என்கிறது நீதிமொழி (20:9). இதயப் பூர்வமான மனமாற்றம் பெற்று இயேசுவை நோக்கி ஓடிவரும் ஒவ்வொரு உள்ளமும் கடவுளின் மன்னிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்களாக மாறுகின்றனர். திருப்பாடல் 25:7-இல் "என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும், நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்" என்று கூறி நம் இதயத்தை இறைவன் பக்கம் திருப்பும் பொழுது நம் பாவ வாழ்வு முடிவுக்கு வரும்.

நம் ஆண்டவராகியக் கடவுள் ஒவ்வொரு கணமும் நம் பாவ வாழ்வை உற்று நோக்கி நம் மனமாற்றத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றார் . ஏரேமியா இறைவாக்கினர், "யாவே கடவுள் எப்படி எருசலேமிற்காகக் காத்திருக்கின்றார்" என்று கூறுகிறார். "உன் அருவருக்கத் தக்கச் செயல்களாகிய விபச்சாரங்களையும், காம கனைப்புகளையும், பரந்த வெளியில் குன்றுகளின் மேல் நீ செய்தக் கீழ்த்தரமான வேசிதனத்தையும் நான் கண்டேன், ஐயகோ! எருசலேமே நீ தூய்மை பெறுவது எந்நாளோ!" (ஏரே 13:27). ஆண்டவராகியக் கடவுள் தான் தேர்ந்தெடுத்த மக்களினத்தின் மனமாற்றத்திற்காக ஒவ்வொரு கணமும் அழைப்பு விடுகின்றார். "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டாம். மாறாக இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்" (யோவே. 2:13).

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் உரோமை மக்களுக்கு மீட்படையும் வழியைக் காட்டுகின்றார், கிறிஸ்துவைப் பற்றிய அறிவே ஒப்பற்றச் செல்வம், அச்செல்வத்தை அடைவதற்காக நான் எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகின்றேன் என்கின்றார். நிரந்தரமில்லா இன்பத்தைத் தருகின்ற இந்தப் பாவ வாழ்வைக் குப்பையாகக் கருதி தூக்கி எறியுங்கள். "பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது. ஏனெனில் நீங்கள் இப்பொழுது சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர், மாறாக அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்" என்று கூறி நம் மனதினைத் தெளிவு படுத்துகின்றார், தூய பவுல் (உரோ. 6:14).

இன்றைய முதல் வாசகக கருத்து நற்செய்தியின் கருத்திற்கு ஆணிவேராக அமைகிறது. கடவுள் கூறுகின்றார், "என் பார்வையில் நீர் விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன், நான் உன்மேல் அன்பு கூறுகின்றேன்". கடவுளுக்காக நாம் மனம்மாறி உறுதியாயி ருந்தால். கடவுள் நமக்காக எல்லாவற்றையும் செய்து தருவார் என்று எசாயா இறைவாக்கினர் மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கின்றார். முன்பு நடந்தவற்றையெல்லாம் மறந்து விடுங்கள். இதோ புதிய செயல் ஒன்றைச் செய்கின்றேன் என்று கூறி, நம் உள்ளத்திற்கும், உறவிற்கும் நம்பிக்கையையும், உறுதியையும் தருகின்றார். நம் வாழ்வினை சற்று சிந்தித்து பார்ப்போம்! எது பாவம்? எது தவறு? ஏன் மன்னிப்பு? என்று சொல்லிக்கொண்டே நாம் இருக்கின்ற நிலையை விட்டு இறங்கி வரப் பல நேரங்களில் நம் மனம் இடம் தருவதில்லை!

இன்றைய மனித இனம் எல்லாவற்றிலுமே ஒரு முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். 2பேதுரு 2:14-இல் நாம் வாசிப்பது போல் பல நேரங்களில் நம்முடைய வாழ்வு அமைகின்றது. "இவர்களது கண்கள் கற்பு நெறியிழந்த பெண்களையே நாடுகின்றன. பாவத்தை விட்டு ஒய்வதேயில்லை". இவர்கள் அனைவரும் மனமாற்றத்தின் அவசியத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

நம் குடும்பங்கள் எல்லாம் கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொண்ட குடும்பங்களாக மாற வேண்டும். நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்களாக மாற வேண்டும். கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி மனம் மாற வேண்டும். பாவம், கடலைப் போல் மனம் அலைபாயும்பொழுது, மனம் மாற்றம் என்னும் துடுப்பு அவசியமாகிறது! இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் இறைவனின் ஆசிருக்காக இப்பலியில் மன்றாடுவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  1. பாவியான பெண் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து இருந்ததால்தான் பரிசேயர்கள் சென்றபிறகும் இயேசுவின் மன்னிப்பிற்காகக் காத்திருந்தாள்.
  2. தீர்ப்பிடாதீர்கள், ஏனென்றால் நாம் தீர்ப்புகுள்ளாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
  3. இனி பாவம் செய்யாதே -புதிய வாழ்வு உதயமாகிறது.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்‌ காலம்‌ ஐந்தாம்‌ ஞாயிறு

அமைப்பு முறை

இன்றைய மூன்று வாசகங்களும்‌ கடந்ததைப்‌ பற்றி அதிகம்‌ எண்ணி கலங்கிக்‌ கொண்டிருக்காமல்‌ புதிய வாழ்வை தொடங்கி எதிர்காலத்தை நோக்கி நடைபோட அழைக்கின்றன. இறைவாக்கினர்‌ எசாயா மூலம்‌, “முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்‌; முற்கால நிகழ்ச்சி பற்றிச்‌ சிந்திக்காதிருங்கள்‌” (எசா 4378) என்கிறார்‌. புனித பவுலடியார்‌, “கடந்ததை மறந்துவிட்டு மூன்னிருப்பதைக்‌ கண்முன்கொண்டு பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித்‌ தொடர்ந்து ஓடுகிறேன்‌” (பிலி 374) என்கிறார்‌. நமதாண்டவர்‌ “நீ போகலாம்‌ இனிப்‌ பாவம்‌ செய்யாதீர்‌” (யோவா 841) என்று கூறி பாவியான பெண்ணுக்குப்‌ புதுவாழ்வின்‌ தம்பிக்கையை தொடங்கி வைக்கின்றார்‌.

இன்றைய நற்செய்தியின்‌ அழமான சில பரிமாணங்களை இவண்‌ காண்போம்‌. அதற்கு முன்‌ இன்றைய நற்செய்திப்‌ பகுதியை நான்கு உள்பிரிவுகளாகப்‌ பிரித்து அவற்றின்‌ ஊடே இன்றைய நற்செய்தியைப்‌ புரிந்துகொள்ள முயல்வோம்‌. எனவே இப்பகுதியைப்‌ பின்வருமாறு பிரிக்கலாம்‌.

அ. பின்னணி (வச. 1-2).
ஆ. மறைநூல்‌ அறிஞர்‌ மற்றும்‌ பரிசேயருடன்‌ இயேசு (வச 3-6அ).
இ. இயேசுவும்‌ மறைநூல்‌ அறிஞர்‌ மற்றும்‌ பரிசேயரும்‌ (வச. 6ஆ-9).
ஈ. இயேசுவும்‌ அப்பெண்ணும்‌ (வச. 10-11).

அ, பின்னணி (வச 1-2)

இன்றைய நற்செய்தியின்‌ முதல்‌ இரண்டு வசனங்கள்‌ நடக்க இருக்கின்ற நிகழ்வின்‌ பின்னணியை எடுத்தியம்புகின்றன. அதன்படி முந்தைய இரவு ஓஷிவ மலைக்குச்‌ சென்ற இயேசு காலையில்‌ ஆலயத்திற்கு வருகின்றார்‌. எனவே இந்த நிகழ்வு ஆலயம்‌ எனும்‌ பொதுவிடத்தில்‌ நிகழ்கின்றது. மக்கள்‌ கூட்டம்‌ மிகுந்து இருக்கின்றது. அவர்களுக்கு இயேசு போதித்துக்‌ கொண்டிருக்கின்றார்‌. எனவே இது ஒரு பொது வெளியில்‌ நடந்த ஒன்றாகக்‌ கருதப்பட. வேண்டும்‌.

ஆ. மறைநூல்‌ அறிஞர்‌ மற்றும்‌ பரிசயருடன்‌ இயேசு (வச. 23-6அ)

இந்தப்‌ பொது வெளிக்குத்‌ தனிவெளியில்‌ நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும்‌ என்று மறைநூல்‌ அறிஞரும்‌ பரிசேயரும்‌ ஒரு பெண்ணைக்‌ கொண்டு வருகின்றனர்‌. விபசாரத்தில்‌ கையும்‌ மெய்யுமாக பிடித்ததாகக்‌ கூறி, மோசேயின்‌ சட்டம்‌ என்ன கூறுகின்றது எண்பதையும்‌ நினைவுபடுத்தி, “நீர்‌ என்ன சொல்கிறீர்‌?” (வச. 5) என இயேசுவைக்‌ கேட்கின்றனர்‌. அவர்களின்‌ உண்மையான தோக்கம்‌ மோசேயின்‌ சட்டம்‌ காப்பாற்றப்படவேண்டும்‌ என்பதோ, அப்பெண்‌ மனம்மாறி நல்வாழ்வுவாழவேண்டும்‌ என்பதோ அல்லது அவளால்‌ துரோகம்‌ செய்யப்பட்ட கணவனைப்‌ பற்றியதோ அல்ல. மாறாக இயேசுவின்‌ மீது குற்றம்‌ சுமத்துவதுதான்‌ (வச. 6அ) என நற்செய்தியாளர்‌ தெளிவுபடுத்தி விடுகின்றார்‌. இப்போது இயேசுவை மோசேயின்‌ சட்டத்தை கடைபிடிப்பாரா? மாட்டாரா? அல்லது இப்‌ பெண்ணுக்கு இரக்கம்‌ காட்டுவாரா? மாட்டாரா? எனும்‌ சிக்கலுக்குள்‌ கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்‌. இப்போது இயேசு தீர்ப்பு சொல்லியாக வேண்டும்‌. செயல்பாட்டாக வேண்டும்‌. இது பொது வெளியில்‌ திகழ்கின்றது, மக்கள்‌ பார்த்துக்‌ கொண்டி. ருக்கின்றனர்‌. இயேசு சொல்லும்‌ தீர்ப்பில்‌ மோசேயின்‌ சட்டம்‌, அவர்களின்‌ சூழ்ச்சியில்‌ சிக்க வைக்கப்பட்ட ஒரு அபலைப்பெண்‌ ஆகிய இரண்டில்‌ ஒன்று காப்பாற்றப்படும்‌ அல்லது இரண்டும்‌ காப்பாற்றப்பட வேண்டும்‌. இத்தகு சூழலில்‌ இயேசு என்ன செய்யப்‌ போகின்றார்‌? எப்படி எதிர்வினை ஆற்றப்‌ போகின்றார்‌?

இ. இயேசுவும்‌ மறைநூல்‌ அறிஞர்‌ மற்றும்‌ பரிசேயரும்‌ (வச 6ஆ-9)

இயேசுவின்‌ எதிர்வினை கொஞ்சம்‌ விந்தையாயிருக்கின்றது. “இயேசு குனிந்து விரலால்‌ தரையில்‌ எழுதிக்‌ கொண்டிருந்தார்‌” (வச. 6). அவர்‌ என்ன எழுதினார்‌ என்று கண்டுபிடிப்பது கடினம்‌. குறைந்தது அவர்‌ ஏன்‌ அவ்வாறு செய்தார்‌ என ஆராயும்போது, அவர்‌ இதில்‌ கவனம்‌ செலுத்த விரும்பவில்லை, அவரது கண்டு கொள்ளாமையையோ அல்லது இவ்வாறு பொது வெளியில்‌ ஒரு பெண்ணை நிறுத்தி அவளது அறநெறியை (தனிவெளியை) விவாதிக்க விரும்பாததையோ இயேசுவின்‌ இச்செயல்‌ குறிப்ப தாகக்‌ கொள்ளலாம்‌.

ஆனால்‌ அவர்கள்‌ இச்சிக்கலை அவ்வளவு எளிதில்‌ விடுவதா யில்லை (வச. 7அ). எனவே இயேசு தனது கண்டுகொள்ளாத்‌ தன்மையிலிருந்து எழுந்துநின்று அவர்களை எதிர்கொள்கின்றார்‌. “நீர்‌ என்ன சொல்கிறீர்‌?” என கேட்டவர்களிடம்‌ (வச. 5), “உங்களுள்‌ பாவம்‌ இல்லாதவர்‌ முதவில்‌ இப்பெண்‌ மேல்‌ கல்‌ எறியட்டும்‌” என்று சிக்கலை அவர்களின்‌ பக்கமே திருப்பி விடுகின்றார்‌. அப்பெண்ணின்‌ தனி வெளியைப்‌ பொது வெளிக்குக்‌ கொணர்ந்தவர்களின்‌ தனி வெளியை நோக்கித்‌ திரும்பிப்‌ பார்க்க அழைக்கின்றார்‌. இங்கு விவாதிக்கப்படும்‌ சிக்கலின்‌ அடிப்படையில்‌ இயேசு “பாவம்‌” என்று குறிப்பிடுவதை (வச. 7) மோகப்பாவம்‌ என்றும்‌ விளக்கலாம்‌.

தனக்குச்சவால்விட்டவர்களுக்கு ஒருசவாலைமுன்வைத்து விட்டு இயேசு “மீண்டும்‌ குனிந்து தரையில்‌ எழுதுகின்றார்‌”. (வச 8), இம்முறை இதை இயேசு அவர்களுக்கு ஆன்ம சோதனை செய்வதற்கு நேரம்‌ கொடுக்கின்றார்‌ அல்லது அவர்‌ களின்‌ குற்ற உணர்வுள்ள கண்களை இயேசு உற்றுநோக்க விரும்பவில்லை என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌ எது எப்படி. இருப்பினும்‌ இப்போது குற்றம்‌ சுமத்தியவர்கள்‌ குற்றவாளியாகிப்‌ போனார்கள்‌.எனவேஅப்பெண்ணின்‌ மீதுகல்‌எறியஅவர்களுக்கு அறநெறி அடிப்படை இல்லாமல்‌ போயிற்று. எனவே ஒருவர்பின்‌ ஒருவராக அவர்கள்‌ அங்கிருந்து போய்விட்டனர்‌. இறுதியில்‌ “இயேசு மட்டுமே அங்கு இருந்தார்‌. அப்பெண்ணும்‌ அங்கேயே நின்று கொண்டிருந்தார்‌” (வச 9). புனித அகுஸ்தினார்‌ இந்த நிலையை “இறுதியில்‌ இருவர்‌ மட்டுமே எஞ்சியிருந்தனர்‌ இரங்கத்தக்க அப்பெண்ணும்‌ இரக்கத்தின்‌ உருவான இயேசுவும்‌” (இலத்தினில் "Misericordia et misera")

ஈ. இயேசுவும்‌ அப்பெண்ணும்‌ (வச. 10-11)

இதுவரை தண்டனைக்குரிய பாவியாக மட்டுமே பார்க்கப்‌ பட்டு குற்றம்‌ சுமத்தப்பட்ட அப்பெண்ணிடம்‌ முதல்‌ முறையாக ஒருவர்‌ பேசுகின்றார்‌ என்றால்‌ அது இயேசுதான்‌. அப்பெண்ணை இயேசு தண்டிக்கப்படவேண்டிய பொருளாக அல்லாமல்‌ ஓர்‌ ஆளாக பார்த்து அவரிடம்‌ பேசுகின்றார்‌. அவருடன்‌ உறவை ஏற்படுத்திக்‌ கொள்கின்றார்‌. அவரும்‌ அவரை *அய்யா' என்று அழைத்து இயேசுவின்‌ செயல்பாட்டை அங்கீகரிக்கின்றார்‌. இவ்வாறு புனிதர்‌ இயேசுவுக்கும்‌ பாவிப்‌ பெண்ணுக்கும்‌ ஓர்‌ உறவு ஏற்படுகின்றது. இந்த இறை-மனித சந்திப்பிற்குப்‌ பிறகு அப்பெண்ணின்‌ வாழ்வு முன்பு போல இருக்காது, இருக்க முடியாது. எனவே “நானும்‌ தீர்ப்பு அளிக்கவில்லை. நீர்‌ போகலாம்‌. இனிப்‌ பாவம்‌ செய்யாதீர்‌” (வச 11) என்று கூறி அப்பெண்ணை அனுப்பி விடுகின்றார்‌.

முடிவாக

பரிசேயரும்‌ மறைநூல்‌ அறிஞரும்‌ அப்பெண்ணை உயிருடன்‌ வாழக்கூட அனுமதிக்கத்‌ தயாராயில்லாத நிலையில்‌ இயேசுவின்‌ குறுக்கீடு அல்லது இயேசுவோடு அப்பெண்‌ கொண்ட முதல்‌, ஒரே சந்திப்பு அவளுக்கு உயிர்‌ வாழும்‌ நிலையை (உயிர்ப்பிச்சை) வாங்கித்‌ தந்ததோடல்லாமல்‌, அவர்‌ மீண்டும்‌ அருள்‌ உயிர்‌ பெற்றுப்‌, புதுவாழ்வு வாழும்‌ நிலையையும்‌ தந்தது. இதுதான்‌ இறையிரக்கம்‌. இயேசுவே இவ்விரக்கத்தின்‌ திருமுகம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஐந்தாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : எசா 43: 16-21

எசாயா அதி 40-45 ஆண்டவர் இஸ்ரயேலருக்குக் கூறிய ஆறுதல் மொழிகள் என்னும் தலைப்பில் அடங்கும். இதிலே இன்றைய வாசகம் பாபிலோனியத் தளைக்குப்பின் இறைவன் இஸ்ரயேலருக்கு அளிக்க விருக்கும் புதிய விடுதலைப் பயணம் பற்றிக் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பிலே நாம் அனைவரும் இப்புதிய பயணத்திலே பங்கு பெறுகிறோம்.

பழைய விடுதலைப் பயணம்

இஸ்ரயேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்ட இறைவன், எகிப்தியரையும் அவர்கள் படைகளையும் நாணற் கடலிலே அமிழ்த்தி மூழ்கடிக்கிறார் (விப 14 :21 - 30; 15: 1-19; எசா 43: 16 - 17). ஆட்சியாளர்களுக்குத் தோல்வியும் அடிமைகளுக்கு வெற்றியும் அளிக்கிறார் ஆண்டவர். தம் "வலுத்த கையாலும் ஒங்கிய புயத்தாலும்'' (இச 5:15; 7:19) தம் மக்களைப் பாதுகாக்கிறார். இதெல்லாம் என்றோ எங்கோ நடந்த நிகழ்ச்சியன்று. இன்று, இங்கு நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை வைக்கும்போதெல்லாம் அவர் நமக்கும் வெற்றி பெற்றுத் தருகிறார். துன்ப துயரங்களில் அமிழ்ந்து தவிக்கும் போது, பாவச் சுமையால் தத்தளித்துத் தளரும்போது ஆண்டவரின் "வலுத்த, ஓங்கிய புயமும்" நம்மோடிருந்து நமக்கு வாழ்வளிக்கின்றன என்பதை உணர்வோமா? "என்னை அப்பா, அஞ்சல் என்பவரின்றி நின்றெய்த்தலைந்தேன், மின்னையொப்பாய் விட்டிடுதி கண்டாய்" (திருவா. நீத்.விண்).

புதிய விடுதலைப் பயணம்

புதிய விடுதலைப் பயணம் இரு கண்ணோட்டத்திலே காணப்படுகிறது. "இதோ, நாம் புதியன செய்கிறோம்"(31 : 19) என்னும் ஆண்டவர், மக்களின் இவ்வுலக வாழ்வை வளப்படுத்துகிறார். அதே வேளையில் அவர்கள் ஆன்மீக வாழ்வையும் புனிதப்படுத்துகிறார். "பாழ்வெளியில் நீர் சுரக்கச் செய்வோம்" (43: 19), "வறண்ட பூமியை நீரோடைகளாக ஆக்குவோம்" (41:18 ; 35:8) என்னும் ஆண்டவர், "எனக்கென்று நான் 2. "இவர்கள் என்னைப் புகழ்கிறார்கள்" (43 : 21); "திருப்பாதையொன்று அவர்களுக்கு அமைக்கிறோம். மீட்படைந்தவர்கள் அவ்வழியாய் நடப்பர்" (35 : 8-9) என்று கூறுவதிலிருந்து ஆண்டவர் அளிக்கும் புதிய விடுதலை மக்களுடைய இவ்வுலக வாழ்வையும் மறுவுலக வாழ்வையும் தழுவியது என்பது புலனாகிறது. அதே வேளையில் இப்புதிய விடுதலைப் பயணத்தில் நமது பங்கும் மிக முக்கியமானது என்பதை, "எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்” (43:21; 1 பேது 2:9-10) என்ற சொற்கள் விளக்குகின்றன.

"இறைவனுடைய மகிமையைப் பரப்புவது" என்பது இறைவனுடைய சாயலாகிய மனிதனின் முன்னேற்றத்திற்காக உழைப்பதில் அடங்கியுள்ளது. எனவே மக்களிடையே அநீதி அகலப் பாடுபடுபவது; பஞ்சம், பசி, பிணி அகற்றி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம் என்ற நிலையை உண்டாக்க ஒத்துழைப்பது; உயர்வு, தாழ்வு, மேல்,கீழ், உடையவன், இல்லாதவன், கருப்பு, வெள்ளை என்பன போன்ற வேறுபாடுகள் சமுதாயத்திலிருந்து அகல உதவுவது; இலஞ்சம், வ்ரதட்சணை, பெண்ணடிமை, கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் இவையன்னவற்றை வேரோடு அறுத்தெரிய உழைப்பது இவையெல்லாம் புதிய விடுதலைப் பயணத்தில் இறைவனோடு சேர்ந்து நாமும் செய்ய வேண்டிய கடமைகள் என்பதை உணர வேண்டும். "உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சம் உருகுதம்மா " என்று கூறினால் மட்டும் போதாது. அக்கண்ணீரைத் துடைத்து "அவர்கள் அழுகைக்குப் பதில் மகிழ்ச்சியின் தைலத்தை" (எசா 61 : 3) அவர்களுக்கு அளித்திட முன் வரவேண்டும். மேலும், இவ்விடுதலைப் பயணம் வெறும் இவ்வுலக வாழ்வைச் சார்ந்தது மட்டுமன்று; மறுவுலக வாழ்வுக்கும் வழி வகுக்க வேண்டும் என்பதை உணர்ந்து பாவிகள் நல்வழி திரும்பி, நல்ல கிறிஸ்துவ வாழ்வு நடத்திட உதவி செய்வதும் நமது கடன் என்பதை மறக்காதிருப்போமாக.

இதோ, நாம் புதியன செய்கிறோம்.

இரண்டாம் வாசகம் : பிலி 3:8-14

கிறிஸ்துவே எல்லாம்; கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கத் தயார் என்கிறார் பவுலடியார். கிறிஸ்துவை அறிதலும் நம்பிக்கையோடு கிறிஸ்துவ வாழ்வை வாழ்வதுமே அவருடைய வாழ்வின் இலட்சியமாக அமைகிறது. அவையே நமது வாழ்வின் குறிக்கோளாயிருக்க வேண்டுமென்பதே இன்றைய வாசகக் கருத்தாகும்.

கிறிஸ்துவை அறிதல்

அறிதல் என்பது காரண காரியங்களைக் கண்டு, புத்தியால் அல்லது மூளையால் புரிந்துகொள்ளும் மெய்யியல் அறிவைக் குறிக்காது. இது வெறும் புத்தக அறிவே. மாறாக, இங்கு கிறிஸ்துவை அறிதல் என்பதற்குப் பொருள் "கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்தெழுதலின் வல்லமையையும் அறியவும், அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்"(3 : 10) என்பதாகும். அதாவது, நமது நடத்தையை செயல் முறைகளை மாற்றக்கூடிய உணர்ச்சிபூர்வமான அறிவு, பட்டறிவு. "கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (கலா 2:20) என்று கூறக்கூடும் வகையில் நம் வாழ்வை மாற்றியமைக்கும் அன்பு. உலக நாட்டங்கள்,உலகப் பொருள்கள், தான் என்ற செருக்கு, மண், பெண், பொன் இவற்றிற்கு அடிமைப்படாத அன்பு. "வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன் மண்ணும் விண்ணும், வேண்டேன் பிறப்பு இறப்பு" (திருவா. உயிருண்ணிருப்பத்து) என்று வாழக்கூடிய அன்பு (காண் :3:8-9).

கிறிஸ்துவை அறியும் அன்பானது சில ஆட்களையோ பொருள்களையோ சூழல்களையோ ஒதுக்கிவிடுவதனால் மட்டும் பெறக் கூடியதன்று. மாறாக, கிறிஸ்து விரும்பி ஏற்ற துன்ப துயரங்கள், பாடுகளிலே பங்கு பெறுதலிலும் அடங்கும் (3:10). "பல துன்பங்களின் வழியாகவே நாம் இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” (திப. 14: 22) என்பதை உணர்ந்து, தாமே வரும் துன்பங்களை ஏற்பதோடு நாமாகவே, துன்பங்களை எதிர்நோக்கி, வரவேற்கவும் தயாராயிருக்க வேண்டும். கிறிஸ்துவின் வழி சிலுவை வழி கிறிஸ்தவனின் வழியும் சிலுவையிலின்றி அமையாது.

நம்பிக்கை வாழ்வு

"நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி" (எபி 11: 1) நம்பிக்கையெனப்படும். இயேசு சாவின்மேல் வெற்றி கொண்டு விட்டார். அவரிலே நம்பிக்கை வைக்கும் நம் அனைவருக்குமே அவரது வெற்றி முதற்கனியாகும். "கிறிஸ்து முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்" (I கொரி 15:20-23). தலைக்கு (கிறிஸ்து) மகிமையென்றால் உடலுக்கும் (கிறிஸ்தவர்} அதில் பங்குண்டு. எனவே, முடிவை நாம் பெற்றுவிட்டோம்; முடிவு நம் கையிலே இருக்கிறது (3 : 12 -13) என்ற ஆழ்ந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். இந்த நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து ஓட வேண்டும் (3:12). வெற்றி வாகை முடிவிலே இருக்கிறது; அவ்வெற்றி வாகை நமக்கே உரியது என்ற முறையிலே, வைத்த கண் வாங்காது ஓடுவோம் (1கொரி 9:24-26); அழிந்துவிடும் வெற்றிக்காகத் தம்மையே, தம் தேவைகளையே அடக்கி ஒடுக்கி, பந்தயத்தில் பங்குபெறுவோர் முன், அழியா வெற்றிக்காக ஒரு சிறிது முயற்சியும் செய்யாது நம் வாழ்வைக் கழித்தோமாயின், அது எத்தகைய மூடத்தனம் ஆகும்? இலக்கை நோக்கி ஓடுவோம்; பரிசை மனக்கண்முன் வைத்து ஓடுவோம் (3:14). "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?" என்ற மளவுறுதியோடு ஓடுவோம். நமது வலுவின்மையால் நாம் தளர்ந்து விடக்கூடாது. "என் அருள் உனக்குப் போதும்; உன் வலுவின்மையில்தான் என் வல்லமை நிறைவாய் வெளிப்படும் ''(II கொரி 2:9-10) என்கிறார் ஆண்டவர். “வலிமையற்ற தோளினாய் போ போ போ; மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ; ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா; உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா' - பாரதி

நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டுமென்பதே.

நற்செய்தி : யோவா 8:1-11

இயேசுவின் செல்வாக்கு ஓங்குவதை உணர்ந்த பரிசேயரும் யூத குருக்களும், செசாருக்கு வரி கொடுப்பது முறையா? (மாற் 12:14) கணவன் தன் மனைவியை விலக்குவது சரியா? என்ற சிக்கலான (மாற் 10 : 2) கேள்விகளைக் கேட்டு அவரை மடக்க முயன்றனர். இங்கும் அவர் மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டுபிடிக்கும்படி அவரைச் சோதிக்க இப்படிக் கேட்டனர் (6). இயேசு என்றும் பாவிகள் பக்கமே என்பதை அவர் பதில் காட்டுகிறது.

பெருங்குற்றம்

விபச்சாரத்தில் ஈடுபட்டோர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் (லேவி 20: 10; இச 22: 13 - 14). விபச்சாரத்தை ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். "ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று" (மத் 5 : 27 - 28). பாவத்தில் பிடிபட்ட பெண்ணுக்குத் தீர்ப்பு வேண்டுகின்றனர். அவள் கொல்லப்பட வேண்டும் என்றால் "பாவிகளின் நண்பர்" என்ற அவரது பெயருக்குப் பாதிப்பு ஏற்படும்; அவளை விட்டுவிடத் தீர்ப்பிட்டால் மோசேயின் சட்டத்தை மீறிய குற்றம். "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.... முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரள் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய் கண் தெரியும்" (மத் 7:2-4) என்பது இயேசுவின் போதனை. இஸ்ரயேல் இனம் தம் கடவுளை மறந்து வேற்றுக் கடவுளை வழிபட்டபோது அது விபச்சாரம் செய்ததாகச் சாடுகிறார் இறைவன். இத்தகைய யூத சமுதாயத் தலைவர்கள், விபச்சாரக் குற்றத்திற்காக அவளைக் கல்லால் எறியத் துடிக்கின்றனர். இவர்களைப் பார்த்து "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் அவள் மேல் கல் எறியட்டும்'' என்கிறார் இயேசு (8). நாம் அனைவரும் பாவிகள், நம்மிடம் பாவமில்லை என்போமாகில் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளுகிறோம் (1யோவா 1:8) என்பது யோவானின் போதனை. நாம் பிறர்மீது குற்றம் காணுமுன் நம்மையே சோதித்தறிய வேண்டும். இத்தவக்காலத்தில் எந்தக் குற்றத்தை நான் நீக்கத் திட்டமிட்டுள்ளேன்?

இரக்கத்தின் ஊற்று

முடிந்த அளவு நோயைக் குணமாக்குவதும், முடியாதபொழுது நோயின் தாக்குதலைக் குறைக்கப் பாடுபடுவதும், எல்லா வேளையிலும் நோயாளிக்கு ஆறுதல் கூறுவதுமே மருத்துவரின் கடமையாகும். பாவத்தில் பிடிபட்டு பலர் அறிய, அவமானமடைந்து நின்றாள் இப்பாவி. புனிதமான தீர்த்தத்தின் முன் சாக்கடை சற்று நிற்கிறது; கருணைக் கடல் முன் களங்கமுற்ற பெண் நிற்கின்றாள்.

ஆற்றில் விழுந்து அழுவோரைக் கைதூக்கி அவர் துயரம்
மாற்றி விடாரை அடாமல் (தண்டிக்காமல்) விடுவை கொல்? மாயவினைச்
சேற்றில் விழுந்து திகைப்பேனை நீ கண்டு தேற்றிக் கரை
ஏற்றிவிடாமல் இருப்பது அழகல்ல, என் ஐயனே!
-வேதநாயகர்

எழுதிக்கொண்டிருந்த இறைமகன் ஏறிட்டுப் பார்த்தார். "அம்மா, அவர்கள் எங்கே? நீ குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? என்று கேட்டார், "இல்லை ஐயா" என்றார். இயேசு அவரிடம் ''நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்" என்றார். இழந்து போனதை மீட்க வந்த மனுமகன் (லூக் 19:10) தீர்ப்பளிக்க அன்று, மீட்பளிக்கவே அனுப்பப்பட்ட இயேசு (யோவா 3:17) "நானும் தீர்ப்பிடேன் " என்பது எவ்வளவு பொருத்தம். இது அவளுக்குப் பாவம் செய்வதற்கு அனுமதிச் சீட்டன்று. அவளுக்கு மறு வாழ்வு அளிக்கிறார். இம் மகத்தான மன்னிப்பால் அவள் மனம் திரும்பிவிட்டாள்; திருந்தி விட்டாள். "மனிதனால் தீர்ப்பிடப்படுவதைவிட இறைவனால் தீர்ப்பிடப்படுவதையே விரும்புகிறேன்" என்றார் ஒருவர். இறைவனது தீர்ப்பு நியாயமானது; மனித பலவீனத்தை அறிந்தவர் அளிக்கும் தீர்ப்பு. என் பகைவர் என்மேல் பாய்ந்து என் குற்றப் பட்டியலைப் படித்து என்னைக் கல்லால் எறிய அனுமதி வேண்டும் பொழுது, உங்களில் பாவம் இல்லாதவன் கல் எறியட்டும் என்று கூறி என்னைக் காத்த கருணை மூர்த்தி எம் இயேசு. அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? பாவத்தைத் தவிர்த்து வாழ்வதே என் நன்றிக் கடன்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு