தவக்காலம் என்றவுடன் ஏதோ, கவலையோடும், வருத்தத்தோடும் காட்சிக் கொடுப்பது என்பதல்ல. மாறாக இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். இது நல்ல காலம். இக்காலம் நாம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துச் சிந்தித்து, புதியதொரு பாதையில் அடியெடுக்க செயலாக்கும் காலம். இதுவே ஒப்புரவின் காலம். பாவத்தால் பிளவுபட்ட உறவைச் சரிபார்த்து, நம்மோடும், உலகோடும், பிறரோடும், வாழ்வோடும், இறைவனோடும் ஒப்புரவாகும் காலம். மகிழ்ச்சி என்பது மனதில் உள்ளது. உலகப் பொருட்களில் அல்ல. எனவே நம் வாழ்வை நாம் கட்டுப்படுத்தி, உலக மாயையின் தூண்டுதலுக்கு இல்லை என்று பதில் சொல்லும் காலம். அப்படிச் சொல்வதால் சக்தியும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நம்மில் உண்டாகும். சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை வேண்டாம் எனச் சொல்லக் கற்றுக்கொள்கிறார். கொழுப்புச் சத்துள்ளவர் இறைச்சியை, முட்டைகளைத் தள்ளி வைக்கக் கற்றுக் கொள்கிறார். புற்றுநோய் உள்ளவர் குடிக்க, புகைக்க மறுக்கிறார். ஏன்! வாழ வேண்டும் என்பதற்காக. அதேபோலத்தான், மகிழ்ச்சியோடு, அமைதியோடு வாழ வேண்டிய மனிதர் பாவத்திற்கு முடியாது, இல்லை என்று சொல்ல, முடிவெடுக்க வேண்டிய காலம் இது. கடவுளின் குரலுக்குச் செவிமடுக்கும் காலம்.
'பெண்ணின் விடுதலை' என்ற தலைப்பில் ஒரு திருவழிபாடு நடத்த அந்தப் பங்குப் பேரவை முடிவெடுத்தது. இதற்காகப் பல நாட்கள் தயாரித்து, அர்த்தமுள்ள முறையில் கொண்டாடப் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. எழுந்தேற்றம் முடிந்தபின் பெண்கள் விடுதலை இயக்கத்தின் தலைவி பீடத்தின் முன் வந்து கூண்டில் இருந்து எடுத்து வந்த மாடப்புறாவைப் பறக்க விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே பல மாதங்களுக்கு முன்பாக குஞ்சாகக் கிடைத்த ஒரு புறாவைக் கொண்டு வந்து கூட்டில் வைத்து வளர்த்து வந்தார்கள். வழிபாடு நடத்தும் நேரம் வந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்கள் விடுதலை என்ற சித்தரிப்பில் அமைந்தன. அதேபோல் தலைவி வந்து கூட்டில் வளர்த்த புறாவைக் கொண்டு வந்து பீடத்திற்கு முன்பாக எடுத்துத் தூக்கிப் பிடித்துப் பறக்க விட்டார்கள். புறா பறப்பதற்குப் பதிலாகக் கீழே தரையில் விழுந்தது. மறுபடியும் எடுத்துப் பறக்க விட்டார்கள். மறுமுறையும் கீழே போய் உட்கார்ந்தது. உடனே தோட்டக்காரன் தூக்கிச் சென்று கூட்டில் அடைத்தான்.
திருப்பலி முடிந்த உடன், தலைவி கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்கள். நாமும் இந்தப் பறவைப் போல் இந்த உலகில் வாழ்கிறோம். பறக்க சந்தர்ப்பம் கொடுத்தாலும், பறக்க முடியவில்லை. கூட்டையே தேடியது. நாமும் சுதந்திரமாக வாழ மறுத்து நம் பாவக் கூட்டுக்குள்ளே வாழ்வதிலே திருப்திக் காண்கின்றோம். தான் ஆகாயத்தில் பறக்க உண்டாக்கப்பட்டதை புறா உணராதது போல் நாமும் பெரிய காரியத்திற்கு உண்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து நிற்கிறோம்.
இந்தத் தவக்காலம் நாம் விழித்தெழும் காலம்.
இன்றைய முதல் வாசகத்திலே வாசிக்கப்பட்டதுபோல், ஆதிப் பெற்றோரின் அடிமைத் தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவ நிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் முதல் ஆதாமால் பாவம் உலகில் நுழைந்து, இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில், அவரது வெற்றியால், வாழ்வு பிறந்தது என்றும் அந்த இயேசு எவ்வாறு சாத்தானின் சோதனையை வென்றார் என்பதையும் இன்றைய மூன்றாம் வாசகம் கோடிட்டுக் காட்டுகிறது. இறுதியாக இயேசுவே வென்றார். இன்று நம் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் சோதனைகள். விசுவாசத்தை இழக்கும் சோதனையோ, அல்லது கடவுள் என்னை நேசிக்கவில்லை மறந்துவிட்டார் என்பதோ அல்ல.
மாறாக சரிக்கட்டுகின்ற வாழ்வுக்கும் (Compromise), சுயதிருப்தி அடையும் நிலைக்கும் (Self-complacency) நாம் தள்ளப்படுகிறோம். இதுவே இன்றைய கிறிஸ்தவச் சமூகங்களில் சாத்தான் சோதிக்கும் சோதனைகள். நாம் செய்யும் காரியங்கள் கடவுள் காரியங்கள் எனச் சரிக்கட்டுவது. அவரைவிட, இவளைவிட நான் பரவாயில்லை என்று சுயதிருப்தி அடைவதுதான் நம் மத்தியில் இருக்கும் கொடிய சோதனை நோய்கள்.
மனிதரால் முடியாதது கடவுளால் கூடும் (லூக். 18:27).
கடவுளால் எல்லாம் கூடும் (லூக். 1:37).
நாம் செய்ய வேண்டியது என்ன?
தவக்காலம் சுய திருப்தி கொள்ளுதலில் இருந்து விடுதலைப் பெறக் கூடிய காலம். கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டிய காலம். நான் கடவுளோடு இரண்டறக் கலக்க செய்ய வேண்டியது என்ன என்று கேட்கும் காலம்.
சாத்தான் நம்மை ஏன் சோதிக்கின்றான்?
அன்புமிக்க சகோதர சகோதரிகளே. அன்று இயேசுவைச் சோதித்த அதே சாத்தான், பிசாசு இன்றும் நம்மைச் சோதிக்கின்றான். சோதனை என்பது ஒருவரைத் தவறு செய்யத் தூண்டுவதாகும். பேய்க்கும் நமக்கும் என்ன தகராறு? பேயை நாம் பார்த்தது கூட கிடையாது. அப்படியிருக்கும்போது அவன் ஏன் நம்மைச் சோதிக்கின்றான்? நம்மைப் பாவத்தில் வீழ்த்திடப்பார்க்கின்றான்?
பேய், சாத்தான், பிசாசு நம்மை ஏன் சோதிக்கின்றான்? என்பதற்குக் காரணம் இருக்கின்றது. விவிலியத்தின் கடைசி நூல் திருவெளிப்பாடு. அங்கே இயல் 12:7-10 முடிய உள்ள இறைவாக்கியங்களில் நாம் படிப்பது என்ன? விண்ணகத்திலே, மோட்சத்திலே பெரும்போர் மூண்டது. சம்மனசு ஒன்று அரக்கப் பாம்பாக மாறி ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு மற்ற சம்மனசுக்களோடு போர் தொடுத்தது. நான்தான் கடவுள் என்றது. அதனை எதிர்த்தவர் மிக்கேல் சம்மனசு! மிக்கேல் என்பதற்கு கடவுளுக்கு இணையானவர் யார்? என்பது பொருள்.
நடந்த போரிலே அரக்கப்பாம்போடு சேர்ந்து போர்புரிந்த தீய சம்மனசுக்கள் தோற்றுப்போயின! அவை மோட்சத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டன! அப்படித் தள்ளப்பட்ட சம்மனசுக்களின் பெயர்தான் சாத்தான்கள்!
நரகத்துக்குள் தள்ளப்பட்ட அன்று அந்தப் பேய்கள் ஒரு முடிவு எடுத்தன! நமக்குக் கிடைக்காத இந்த மோட்சம் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது. இதனால்தான் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நம்மை மோட்சத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க இன்னும் சாத்தான்கள் நம்மைச் சோதிக்கின்றன; தவறு செய்ய நம்மைத் தூண்டுகின்றன!
சாத்தான் ஒரு பச்சோந்தி! நமக்கு எது பிடிக்குமோ அதைப் பயன்படுத்தி சாத்தான் நம்மைச் சோதிப்பான்! நமக்கு மண் பிடித்தால் அவன் மண்ணாக மாறுவான்! நமக்குப் பெண் பிடித்தால் அவன் பெண்ணாக மாறுவான்! நமக்குப் பொன் பிடித்தால் அவன் பொன்னாக மாறுவான்! இதோ விவிலியத்திலிருந்து மூன்று உதாரணங்கள்.
1 அர 21:1-29 முடிய உள்ள பகுதி! இயேசுவின் காலத்திலே இஸ்ரயேல் நாடு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடக்கே கலிலேயா, தெற்கே யூதேயா, இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி சமாரியா. சமாரியாவை ஆகாபு என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய அரண்மனைக்குப் பக்கத்தில் நாபோத்து என்னும் ஏழை வாழ்ந்து வந்தான். அவனிடம் ஒரு சிறிய திராட்சைத் தோட்டம் இருந்தது.
அந்தத் தோட்டத்தை ஆகாபு எடுத்துக்கொள்ள விரும்பினான். நாபோத்திடம் அரசன் அந்த நிலத்தை விலைக்குக் கொடு. உனக்கு நான் மாற்று நிலம் தருகின்றேன் என்றான். ஆனால் நாபோத்து, அது என் மூதாதையரின் நிலம்; கொடுக்க மாட்டேன் என்றான். அதனால் அரசன் உண்ணவும் இல்லை உறங்கவும் இல்லை. ஆகாபுவின் மனைவி ஊர்ப்பெரியவர்கள் வழியாக நாபோத்து மீது குற்றம் சுமத்தி அவனை ஊருக்கு வெளியே கொன்றுபோட்டாள். அரசன் அந்த ஏழையின் நிலத்தை எடுத்துக்கொண்டான். இதைப்பார்த்த கடவுள் எலியா என்னும் இறைவாக்கினர் வழியாக, சோதனைக்கு உட்பட்டு ஓர் ஏழை நிலத்தை எடுத்துக்கொண்ட நீ சாகவே சாவாய். நாபோத்து எந்த இடத்தில் இறந்தானோ அதே இடத்தில் நீயும் சாவாய். உன் இரத்தத்தை நாய்கள் நக்கும் என்று அரசனிடம் கூறினார்.
பயந்துபோன ஆகாபு அரசன் கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டான். அப்போது கடவுள், நீ செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டதால் உன்னை மன்னித்து விடுகின்றேன். ஆனால் உன் மகனைத் தண்டிப்பேன் என்றார். அந்த அரசனின் மகன் தண்டிக்கப்பட்டான்.
பெற்றோர்கள் செய்கின்ற பாவம் பிள்ளைகளின் மீது விடியும். பெரியோர்கள் செய்கின்ற பாவம் சிறு பிள்ளைகளைப் பாதிக்கும்.
பெண்ணாசை உள்ளவர்களைச் சோதிக்க சாத்தான் பெண்ணுருவத்தில் தோன்றுவான்.
2 சாமு 11, 12: இங்கே நாம் தாவீது மன்னன் பாவத்திலே விழுவதைப் பார்க்கின்றோம்.
தாவீது மன்னனிடம் எல்லா நல்ல குணங்களும் இருந்தன. ஆனால் ஒரே ஒரு தீய குணம் இருந்தது. அதுதான் பெண்ணாசை.
ஒருநாள் அவனுடைய அரண்மனையின் மாடியிலே நின்று கொண்டிருந்தான். அவன் நின்ற இடம் உயரமானது. அங்கிருந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருத்தியை அவன் பார்த்தபோது அவனுடைய மனம் பாதாளம் வரை தாழ்ந்தது. உரியா என்ற போர் வீரனுக்குச் சொந்தமான மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்டு உரியாவைப் போர் முனையில் வைத்துக் கொன்றான்.
அவன் செய்தது கடவுளுக்குப் பிடிக்கவில்லை. நாத்தான் என்னும் இறைவாக்கினர் வழியாக அவன் எச்சரிக்கப்பட்டபோது, தாவீது தன் பாவங்களுக்காக அமுதான். கடவுள். நீ அழுவதால் உன்னை மன்னித்து விடுகின்றேன் என்றார். ஆனால் உரியாவின் மனைவி பத்சேபாவுக்கு பிறந்த குழந்தை இறந்தது. ஆம். பெரியவர்கள் செய்கின்ற பாவம் குழந்தைகளைப் பாதிக்கும்.
திப 5:1-10: அனனியா சப்பிரா என்ற கணவன் மனைவி திருத்தூதர்கள் சொன்னபடி நடக்காமல் நிலத்தை விற்று எல்லாப் பணத்தையும் திருத்தூதர்களிடம் கொடுக்காமல் பாதியை வைத்துக்கொண்டு மீதியைத் திருத்தூதர்கள் பாதத்திலே வைத்தார்கள். சாத்தானின் சோதனைக்கு இடம் கொடுத்து பொய் சொன்னார்கள். இருவருமே திருத்தூதர்களின் பாதங்களிலே விழுந்து இறந்தார்கள்.
நமக்கு எது பிடிக்குமோ அதுவாக பேய் தோன்றும். இயேசு கூறுவதைப் போல மின்னலைப் போல கூட பிசாசு பிரகாசமாய்த் தோன்றும். நமக்கு கல்கண்டு பிடிக்கும் என்றால் அது கல்கண்டாகத் தோன்றும். நமக்குக் கருவாடு பிடிக்கும் என்றால் அது கருவாடாகத் தோன்றும்.
ஒருவருக்கு சாராயம் பிடிக்கும் என்றால் அது சாராயமாகத் தோன்றும். ஒருவருக்கு சண்டை சச்சரவு பிடிக்கும் என்றால் அது சண்டை சச்சரவாகத் தோன்றும். சிலருக்குப் பணம் பிடிக்கும் என்றால் அது பணமாகத் தோன்றும். சிலருக்குப் பதவி பிடிக்கும் என்றால் அது பதவியாகத் தோன்றும்.
நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. நாம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் பலமுறை யோசிக்க வேண்டும். இது எனக்குத் தேவைதானா? என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று இதுவே நம் ஒவ்வொருவரின் மன்றாட்டாக இருக்கட்டும்: இறைவா, எது சரி? எது தவறு? எது பாவம்? எது புண்ணியம்? எது எனக்குத் தேவை? எது எனக்குத் தேவையில்லை? என்று நான் சிந்தித்துச் செயல்பட எனக்குப் போதிய ஞானத்தை, அறிவை தூய ஆவியாரின் வழியாக என் மீது பொழிந்தருளும். மேலும் அறிவோம் :
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் (குறள் : 484).
பொருள் :
தகுந்த காலத்தையும் உரிய இடத்தையும் நன்றாக ஆராய்ந்து தெளிந்து செயலாற்றுவோர்க்கு, இவ்வுலகம் முழுமையும் எளிதாகக் கைகூடும்!
வரலாற்றில் முதல் ஆணுக்குத் துணையாகக் கடவுள் கொடுத்த முதல் பெண் அலகையால் வஞ்சிக்கப்பட்டுத் தன் கணவரையும் வஞ்சித்து விட்டாள் என்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. முதல் ஆணும் முதல் பெண்ணும் கடவுளுடைய சாயலாகப் படைக்கப் பட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கடவுளைவிட அலகையை நம்பி, அவருடைய கட்டளையை மீறிக் கடவுளுடன் அவர்களுக்கு இருந்த உறவைத் துண்டித்துக் கொண்டனர். துண்டிக்கப்பட்ட இந்த உறவை, இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து. மீண்டும் புதுப்பித்தார். இந்த இரண்டு ஆதாம்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டை இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் விளக்குகின்றார். "ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்" (உரோ 5:19).
ஆதாம் அலகையால் சோதிக்கப்பட்டார். அலகை அவரை வென்றது. கிறிஸ்துவும் அலகையால் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் அல்கையை வென்று நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டனர். கிறிஸ்துவும் பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டார். இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்ப மறுத்து, சிலைவழிபாட்டில் ஈடுபட்டனர். ஆனால் கிறிஸ்து அலகையை விரட்டி கடவுளின் இறையாண்மையை நிலைநாட்டினார்.
அலகை தனது யுத்தியை மாற்றிக் கொள்வதில்லை. அலகை கிறிஸ்துவை மூன்று விதங்களில் சோதித்ததுபோல நம்மையும் மூன்று விதங்களில் சோதிக்கிறது. இவ்வுலகில் நமக்கு வரும் சோதனைகள் மூன்று என்று பட்டியலிடுகிறார் யோவான். அவை முறையே, உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை. செல்வச் செருக்கு ( 1 யோ 2:16). அலகை, இயேசுவிடம் கற்களை அப்பங்களாக மாற்றித் தனது உடல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளத் தூண்டியது. ஆனால் கிறிஸ்துவோ, "ஒருவர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையாலும் உயிர்வாழ்கின்றார்" என்று கூறி அலகையைத் தோற்கடித்தார். பல்வேறு இச்சைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. அவைகளுக்கு நாம் பலிகிடாக்களாய் ஆகிவிடுகிறோம். ஐம்புலன்களின் இச்சைகளுக்கு அடிமைகளாகி அவதிப்படுகின்றோம்.
"இனிப்பு சாப்பிடக்கூடாது" என்று சர்க்கரை நோயானியிடம் மருத்துவர் கூறினார். அதற்கு நோயாளி, "டாக்டர்! இனிப்பு சாப்பிடக்கூடாது என்று புத்தி சொல்லுகிறது. ஆனால் நாக்கு கேட்க மறுக்கிறதே" என்றார். அறிவு காட்டும் பாதையில் செல்லாமல் ஆசை காட்டும் பாதையில் சென்று அமைதியை இழக்கின்றோம். தனக்கு ஆபத்து வரும்போது ஆமை ஐம்புலன்களையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. அவ்வாறே ஐம்புலன்களை அடக்குபவர்கள் இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தமாய் இருப்பர்.
ஒருமையுள் ஆமையோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து(குறள் 126)
அலகை கிறிஸ்துவைக் கோபுர உச்சியிலிருந்து குதித்து தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளத் தூண்டியது. ஆனால் கிறிஸ்துவோ, "கடவுளைச் சோதிக்கக்கூடாது" என்று கூறி அலகை விரித்த வலையில் விழ மறுத்தார்.
இன்றைய விளம்பர உலகத்தில் ஆடம்பர வாழ்க்கை நம்மை ஆட்டிப்படைக்கிறது; கவர்ச்சியான வாழ்வு வாழ நம்மை ஊடகங்கள் அழைக்கின்றன. ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த, கவர்ச்சியான புடவையைக் கட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்த மற்ற பெண்கள் அவரிடம், "சூப்பர் புடவை; உங்கள் வீட்டுக்காரருக்குத் தெரியாமல் இதை எடுத்தீர்களா?” என்று கேட்டனர். அப்பெண், "இல்லை, கடைக்காரருக்குத் தெரியாமல் எடுத்து வந்தேன்" என்றார். காசு இல்லையென்றாலும், கடன்வாங்கியோ, திருடியோ, இலஞ்சம் வாங்கியோ ஆடம்பா வாழ்வு வாழ்வது தேவையா?
இறுதியாக, அலகை கிறிஸ்துவிடம் பொருளாசையைக் காட்டித் தன்னை வழிபட அழைத்தது. ஆனால் கிறிஸ்துவோ, "கடவுளைத் தவிர வேறு எவரையும் வழிபடலாகாது" - எனக் கூறி அலகையை அப்பால் விரட்டிவிடுகிறார். ஒவ்வொரு பாவமும் கடவுளின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளாத ஒருவகையான சிலைவழிபாடு பொருள் ஆசை நவீன சிலைவழிபாடாகும்.
கடவுளை மறுத்த ஒரு நாத்திகரிடம், "கடவுள் உங்கள் நாக்கில் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு அவர், "தாக்கை வெட்டி எறிந்து விடுவேன்” என்றார். "கடவுள் உங்கள் பணப்பெட்டியில் இருந்தால் என்ன செய்வீர்கள்" என்று அவரிடம் மீண்டும் கேட்டதற்கு அவர், “பணப்பெட்டியைப் பத்திரமாகப் பாதுகாப்பேன்" என்றார், கடவுளை மறுப்பவர்கள் காசைக் கடவுளாக வழிபடுகின்றனர். இந்நிலையில் பவுல் விடுக்கும் எச்சரிக்கை, "பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர், அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்" (1 திமொ 6:10).
கிறிஸ்துவின் மூன்று சோதனைகளும் அவரைக் கடவுளிடமிருந்து பிரிக்க அலகை பயன்படுத்திய ஆயுதங்கள்; அவருடைய கடவுள் நம்பிக்கையைச் சோதிக்சு அலகை வைத்த அமிலப்பரிசோதனை. அப்பரிசோதனையில் கிறிஸ்து சொக்கத் தங்கமாக வெளிவந்தார், இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் மும்மூர்த்திகள் பணம், பாலின்பம், அதிகாரம். இவைதான் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன. நாம் யாரைத் தெரிவு செய்கின்றோம்? கடவுளையா? அல்லது பணத்தையா? விளம்பரத்தையா? அல்லது எளிமையையா? கிறிஸ்து 40 நாள்கள் தவமிருந்து, நோன்பிருந்து அலகையை விரட்டினார். இறைவேண்டலாலும் நோன்பினாலும் மட்டுமே அலகையை ஓட்ட முடியும் என்று கிறிஸ்து கூறியுள்ளார் (மத் 17:21). நாமும் இத்தவக்காலத்தில் நோன்பு இருப்போம்; அலகையின்மேல் வெற்றி கொள்வோம். தவத்தின் வலிமையால் எமனையும் வெல்ல முடியும் என்கிறார் வள்ளுவர்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு(குறள் 269).
இந்தச் சோதனை எதற்கு?
“பட்டணத்தில் ஒரு பாலைவனம்" (Desert in the city) என்ற ஆங்கில நூலில் இப்படி ஒரு வாக்கியம் : Desert is not merely absence of man but presence of God. பாலைவனம் மனிதன் நடமாட முடியாத இடம் மட்டுமல்ல. கடவுள் சஞ்சரிக்கும் இடமாக உள்ளது. அதனால்தான் ஆன்மீக வாழ்வின் ஓர் அம்சமாகப் பாலைவன அனுபவம் (Desert Experience) என்று குறிப்பிடுகிறார்கள்.
பாலைவனம் வறட்சியின் அடையாளம். ஆனால் அத்தகைய வறட்சியில் கடவுள் செயல்படுகிறார். வறட்சியில்தானே வளம் தேவை என்ற எண்ணம் வரும்! அதுபோலக் கைவிடப்பட்ட நிலையில்தானே கடவுள் தேவை என்ற உணர்வு வரும்!
"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்!" (மத்.27:46) என்ற கூக்குரலில் விரக்தியையும் வெறுப்பையும் அல்ல, அன்பையும் நம்பிக்கையையும் உணரலாம். உரிமையோடு சொல்லும் அந்தக் கூற்று அற்புதமான செபமாகும்.
பாலைவனச் சோதனைகளில் இயேசு தனது தந்தையின் திட்டத்தை, தனக்கென வகுத்திருந்த இலட்சியத்தை, தனது மீட்புப் பயணத்துக்கான வழிநடத்துதலைப் பற்றிய தெளிவு பெறவில்லையா!
சோதனைகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டவனுக்கு வாழ்க்கை சுவர்க்கமன்றோ! சோதனைகளே வராமல் எந்த மனிதனும் புனிதனானதில்லை. போராட்டத்துக்கு உட்படாமல் எந்த மனிதனும் வீரனானதில்லை. அதனால் தான் சோதனைகளே வரவிடவேண்டாம் என்றல்ல, சோதனைகளில் விழவிட வேண்டாம் என்று செபிக்கச் சொன்னார். செபித்துச் செயல்பட வழிகாட்டினார் இயேசு.
"இயேசு (அலகையினால் சோதிக்கப்படுவதற்காக) பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்". (மத்.4:1, மார்க் 1:12, லூக்.4:1)
தூய ஆவியே அழைத்துச் செல்கிறார் என்றால் சோதனைகளை “பாவத்துக்கு உட்படுத்தும் சூழ்நிலைகள், மனப்போராட்டங்கள்" என்ற கண்ணோட்டத்திலா பார்ப்பது - எகிப்தில் போத்தி பாரின் மனைவியால் தகாத உறவுக்கு அழைக்கப்பட்ட (தொ.நூ.39:7-12) பழைய ஏற்பாட்டு யோசேப்பு போல்? “தகுதியைச் சோதிக்கும் சூழ்நிலைகள், அகப் போராட்டங்கள்” என்ற கணிப்பில் நமது வளர்ச்சிக்கான வாய்ப்பாக, இறைவன்தாமே தரும் அழைப்பாகக் கொள்ள வேண்டாமா -ஆபிரகாமைப் போல், யோபுவைப் போல்!
கடவுள் என்றும் மனிதனை பாவச் சோதனைக்கு உட்படுத்துவதில்லை. அது அலகையின் வேலை. ஆனால் விசுவாசச் சோதனைக்கு உட்படுத்துவார். பாவத்துக்கு உள்ளாக்கும் சோதனை யாகட்டும் அல்லது நம்பிக்கையை ஆழப்படுத்தும் சோதனையாகட்டும் வீறுகொண்டு சந்தித்து வெற்றி காணும் மனிதனைக் கடவுள் எப்படி யெல்லாம் உயர்த்துகிறார்! இரட்டிப்பு ஆசீரால் நிரப்புகிறார்!
ஒரு மனிதனின் பலத்தை எடை போட வேண்டுமா? அவனது சாதனையைப் பார்க்காதே. அவன் சோதனைகளை எப்படிச் சமாளித்தான் என்று பார்.
தங்கம் புடமிடப்படும் போது அதன் தரம் தெரிகிறது.
சந்தனம் அரைக்கப்படும் போது அதன் மணம் தெரிகிறது மனிதன் சோதிக்கப்படும் போது அவன் புனிதம் தெரிகிறது இந்தத் தவக்காலம் நம் துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் அர்த்தம் அளிக்கட்டும்
.
சோதனை கடவுளிடமிருந்து அன்று, அலகையிடமிருந்தே வருகிறது. “சோதனை வரும்போது, இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை” (யாக்.1:13). அலகை ஏன் மனிதனைச் சோதிக்கிறது? மனிதன் அலகைக்கு என்ன தீங்கு செய்தான்?
அலகையைத் தண்டித்தவர் கடவுள். அதற்காகக் கடவுளைப் பழிவாங்க முடியாத அலகை கடவுளின் சாயலைச் சோதித்துப் பழிதீர்த்துக் கொள்கிறது - இயலாமையுடைய அடம்பிடித்த குழந்தை தன் விருப்பப்படி செயல்படாத தந்தையை உதைப்பதாக நினைத்துத் தரையை உதைப்பது போல் - வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் வேண்டாதவரைக் கொடும் பாவியாக்கித் தெருவிலே இழுத்துத் தீயிட்டு ஆர்ப்பரித்துத் திருப்தி அடைவது போல்.
எனவே எவ்வளவுக்கு அதிகமாக மனிதனில் இறைச்சாயல் ஒளிர்கிறதோ, எவ்வளவுக்கு அதிகமாக மனிதன் அருள் வாழ்வில் இறைவனைப் பிரதிபலிக்கிறானோ, அவ்வளவுக்கு அதிகமாய் வெறி கொண்ட அலகை மனிதனைச் சோதனைக்கு உள்ளாக்குகிறது. இப்பொழுது தெரிகிறதா பொதுவாக நல்லவர்கள் ஏன் அதிகத் நுன்பத்துக்கும் சோதனைக்கும் ஆளாகுகிறார்கள் என்பதற்கான விடை?
மனித வாழ்வு ஓடும் ஆற்றில் நீந்தும் மீனைப் போன்றது. உயிரோடு இருக்கும் மீன் நீர் செல்லும் திசைக்கு எதிரேதான் நீந்திச் செல்லும். இறந்த மீனோ நீர் செல்லும் திசையிலே அடித்துச் செல்லப்படும்! உயிரோட்டமிக்க நமது கிறிஸ்தவ வாழ்வு சோதனையை எதிர்த்து நிற்கும். போராட்டம், சோதனையால் அடித்துச் செல்லப்படும் போது நாம் ஆன்ம உயிர் இழந்தவர்களாகிறோம்.
"சோதனையை மனஉறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்'' (யாக்.1:12).இறையாற்றல் துணைகொண்டு இறைவார்த்தை ஒளியில் மனிதன் பேயோடு போராடி வெற்றி கொண்டால் முடிவில் வானதூதர் தாமே வந்து தனக்குப் பணிவிடை செய்வதைக் (மத்.4:11) கண்டு மகிழ்வான் மனிதன்!
சோதனைகள் வாழ்க்கை நாடகத்தின் ஒத்திகைகள். ஒத்திகை இல்லாமல் அரங்கேற்றம் இல்லை.
தேர்வு இல்லாமல் தேர்ச்சி ஏது?
பாலைவனப் பள்ளியில் பாடம் பயில...
பல்வேறு பிரச்சனைகளால் மனம் தளர்ந்துபோயிருந்த ஓர் இல்லத்தலைவி, பங்குத்தந்தையைச் சந்திக்கச் சென்றார். "சாமி, எல்லாத்தையும் விட்டுட்டு, எங்கேயாவது, கண்காணாத இடத்துக்கு போயிடணும் போல இருக்கு" என்று அவர் ஆரம்பித்தார். வீட்டு வேலை, அலுவலக வேலை, பங்குக்கோவில் வேலை என்று அனைத்தையும் விட்டுவிட நினைத்தார் அவர். பல்வேறு ஆலோசனைகளுக்குப்பின், இறுதியாக, "எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்குப் பதில், ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம் (strike) செய்யுங்கள்" என்று, பங்குத்தந்தை சொன்னது, இல்லத்தலைவிக்கு சரியென்று பட்டது.
வீட்டுக்குச் சென்றவர், தனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு, படுத்துக்கொண்டார். அலுவலகத்திலிருந்தும் விடுமுறை எடுத்துக்கொண்டார். அவரது நிலையைக் கண்ட கணவனும், பிள்ளைகளும், அவர் மீது தனி கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வீட்டு வேலைகளை, அனைவரும், பகிர்ந்து செய்தனர். இரண்டு நாட்கள் சென்றன. படுத்திருந்த வீட்டுத்தலைவிக்கு, 'போர்' அடித்தது. தொலைக்காட்சியில் மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்த்து, அலுத்துப் போனது. உதவி செய்வதாக எண்ணி, கணவனும், பிள்ளைகளும் வேலைகள் செய்துவிட்டுச் சென்றபின், சமையலறையைப் பார்த்த வீட்டுத்தலைவி, பயந்துபோனார். அவர்கள் செய்த வேலைகளை மீண்டும் சரிசெய்ய, இன்னும் பல நாட்கள் ஆகுமே என்று பயந்தார்.
ஒரு வார வேலை நிறுத்தம் என்ற தீர்மானத்தில் இருந்தவர், இரண்டே நாட்களில், மீண்டும், தன் பணிகளை ஆரம்பித்தார். மூன்றாம் நாள், அவரைக் காண பங்குத்தந்தை சென்றபோது, அவர் வீட்டு வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த பங்குத்தந்தையிடம், "சாமி, எந்த ஒரு சோதனையும் வரும்போது அழகாகத்தான் இருக்கு. சோதனைக்கு இடம் கொடுத்த பிறகுதான், அதனுடைய உண்மை உருவம் தெரியுது" என்று, தான் பெற்ற ஞானோதயத்தை, வீட்டுத்தலைவி பகிர்ந்துகொண்டார்.
எந்த ஒரு சோதனைக்கும், முகம் அழகாக இருக்கும், முதுகு, அழுக்காக, அருவருப்பாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். சோதனைகளைப் பற்றி நாம் இன்னும் கூடுதலாக தெளிவுபெற, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.
ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறு, நமக்கு வழங்கப்படும் மையக்கருத்து, 'சோதனை'. சோதனை பற்றி மறையுரையில் என்ன சொல்லலாம் என்று மற்றொரு அருள்பணியாளரிடம் நான் கேட்டபோது, அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற திரைப்படப் பாடலை, பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக அமைந்துள்ள இப்பாடலில், சோதனைகளை அனுப்புவது கடவுள் என்ற கருத்து மறைந்துள்ளது.
சோதனைகள் கடவுளிடமிருந்து வருவதாக, நம்மில் பலர் எண்ணுகிறோம்; பேசுகிறோம். பிரச்சனைகள் நம்மைச் சூழும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று, கடவுளிடம் முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம் புலம்புகிறோம்.
சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தி பதில் தருகின்றது. "இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்" (மத். 4:1) என்ற அறிமுக வரிகளை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் மனதில் எழுகின்றன. சோதனைகளைத் தருவது, அலகை. அச்சோதனைகளைச் சந்திப்பதற்கு, நம்மை அழைத்துச் செல்வது, தூய ஆவியார். சோதனைகளைச் சந்திக்க, கடவுள் நம்மை 'இழுத்துச் செல்வதில்லை', 'அழைத்துச் செல்கிறார்' என்பது, நாம் கவனிக்க வேண்டிய கருத்து.
இத்தகைய அழைப்பை, இறைவன், நம் முதல் பெற்றோருக்கும் தந்தார். கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும் (தொ.நூ. 2:9) கொண்ட ஒரு தோட்டத்தை, ஏதேனில் உருவாக்கிய இறைவன், 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது' (தொ.நூ. 3:3) என்று, முதல் பெற்றோரிடம் கட்டளையிட்டார். இதை நாம் வாசிக்கும்போது, மனதில், ஒரு நெருடல் எழுகிறது.
ஒரு மரத்தை உருவாக்கி, பின்னர், அதைத் தொடக்கூடாது என்று சொல்வதற்குப் பதில், அந்த மரத்தை அவர் படைக்காமலேயே இருந்திருக்கலாமே! அதேபோல், பாம்பை, சூழ்ச்சிமிக்கதாய் படைக்காமல் இருந்திருக்கலாமே! தான் படைத்த பெண்ணை, பாம்புடன் பேசவிடாமல் தடுத்திருக்கலாமே!
கடவுள் இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே, என்ற பாணியில், அவ்வப்போது சிந்திக்கும் நாம், சோதனைகள், பிரச்சனைகள் என்று எதுவுமே இல்லாத ஓர் உலகை இறைவன் படைத்திருக்கலாமே! தீமை என்றால் என்னவென்றே அறியாதவண்ணம் மனிதர்களை உருவாக்கியிருக்கலாமே! என்று, கடவுளுக்கு, அடுக்கடுக்காய் ஆலோசனைகள் தர, முன்வருகிறோம்.
பிரச்சனைகள் ஏதுமற்ற உலகில், தீமையே அறியாத, குறைகளே இல்லாத, படைப்பாக நாம் இருந்திருந்தால், இயந்திரகதியில் இயங்கும் 'ரோபோக்களை'ப்போல் (Robot) உலகில் உலவி வந்திருப்போம். நன்மையையும், தீமையையும், நம் முன் வைத்து, அவற்றில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சக்தியையும், இறைவன் நமக்கு வழங்குகிறார். இதுதான் அவர் தரும் அழைப்பு.
சோதனை என்பது, ஆறறிவுள்ள மனிதர் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு, இறைமகன் இயேசு உட்பட, யாரும் விதிவிலக்கு அல்ல. தன் பணி வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனை, தனியே சந்திக்கச் சென்றிருந்த இயேசுவை, அலகையும் சந்தித்தது. அலகை, இயேசுவுக்கு தந்த சோதனைகளும், அவற்றை, இயேசு சந்தித்த விதமும், நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.
சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்வைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த நாடகங்களில் காட்டப்படும் சோதனைக் காட்சிகளில், சாத்தான், கருப்பு உடை உடுத்தி, முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகளோடும், நீண்ட இரு பற்களோடும் பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது, அதை விரட்டியடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்கவிருக்கும் சாத்தான்களும், அவை கொண்டுவரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், கவர்ந்திழுக்கின்றன என்பதுதானே நம் அனுபவம். அலகை தரும் சோதனைகள், அவ்வளவு அழகானவை! இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளையும் மேலோட்டமாகப் பார்த்தால், அவற்றை ‘நல்ல’ சோதனைகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று, தவறான செயல்களைச் செய்யச்சொல்லி, அலகை, இயேசுவைத் தூண்டவில்லை.
நாற்பதுநாள் கடுந்தவத்தை முடித்த இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம், கல்லை, அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி, அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துவிடத் துடிக்கும்போது, குறுக்கு வழிகளைத் தேடும் சோதனைகள் அதிகமாகின்றன.
நாம் இன்றைய உலகில் சந்திக்கும் பெரும் சோதனை, பார்க்கும் அனைத்தையும், பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் சோதனை. தேவைக்கும் அதிகமாக பல்வேறு பசிகளைத் தூண்டும் 'நுகர்வுக் கலாச்சாரம்', காணும் அனைத்தையும், நுகர்வது மட்டும் போதாதென்று, விழுங்கவும் சொல்லித்தருகிறது. இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து நம்மை மீட்கும் ஒரே வழி, இறைவார்த்தையை நம்பி வாழ்வது! சுயநலப் பசியைவிட, இன்னும் உன்னதமான உண்மைகள், உணர்வுகள், இவ்வுலகில் உள்ளன என்ற பாடத்தை, முதல் சோதனையை, தான் எதிர்கொண்ட முறை வழியே, நமக்குச் சொல்லித்தருகிறார் இயேசு.
இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகை வெல்வதற்கு, எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை, அலகை, இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் ஆலயத்தின் மேலிருந்து இயேசு குதித்தால், உடனே வானம் திறந்து, வானதூதர்கள், ஆயிரக்கணக்கில் இறங்கி வந்து, இயேசுவின் பாதம், தரையைத் தொடாமல், அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரும் காட்சிக்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும், இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள் - மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் - கடினமான பணி, இறுதி 3 நாட்கள் - கடும் வேதனை, இறுதி 3 மணி நேரம் - சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. மூன்று நிமிடங்கள் போதும். எருசலேம் ஆலய சாகசம் ஒன்று போதும்... உலகம், இயேசுவின் காலடியில் கிடக்கும்! சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான வெற்றி.
இவ்விரு சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே கவர்ச்சியாக அமைந்தது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்"; "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்" என்று, சாத்தான் சவால் விடுகின்றது.
"நீர் இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதன் வழியாக, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என்று, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன், புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள, புதுமை செய்யவேண்டும். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் வகுத்ததுபோல், நாமும் அவ்வப்போது இறைவனுக்கு இலக்கணம் வகுத்துள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். கடவுள் அந்த மரத்தை படைக்காமலேயே இருந்திருக்கலாம் என்றும், பாம்பை, சூழ்ச்சிமிக்கதாய் படைக்காமல் இருந்திருக்கலாம் என்றும், நாம் கடவுளுக்குத் தரும் ஆலோசனைகள், இறைவனுக்கு நாம் வகுக்கும் இலக்கணம்!
கல்லை அப்பமாக்கி, பசியைத் தீர்த்துக்கொள்ள தன் சக்தியைப் பயன்படுத்த மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்யவா? பிறர் தேவைகளை நிறைவு செய்யவா? சிந்திக்கலாம்; இயேசுவிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
மூன்றாவது சோதனையில், உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை, தன் வசமாக்க, மனுவுருவெடுத்த இயேசு, இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அவ்விதம், இயேசு, உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் சாத்தானோடு சமரசம் செய்யவேண்டும்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார்; சாத்தானை விரட்டியடித்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23: 46 ) என்று இறைவனிடம் சரணடைந்தார்; உலகை, தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை, இவற்றிற்கு முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று, தீமைகளைச் சகித்துக்கொள்வதும், தீமைகள் நடக்கும்போது கண்களை மூடிக்கொள்வதும், இவ்விதம் நடப்பது, ஊரோடு ஒத்து வாழ்வதற்காக என்று சமாதானம் சொல்லிக்கொள்வதும், நாம் வாழ்வில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே, நம் வாழ்க்கையாக மாறிவிட்டதா என்று சிந்திப்பது நல்லது.
கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுயநலப்பசியைத் தீர்த்துக்கொள்ள சுருக்கு வழிகளைத் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீய சக்திகளோடு சமரசம் செய்தல் என்று, நம்மை கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, தவக்காலம், நல்லதொரு நேரம். இயேசுவிடம் பாடங்கள் பயில, பாலைவனப் பள்ளிக்குச் செல்வோம்!
கீழ்ப்படிவோம்; கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்!
முதலில் கீழ்ப்படி; அப்புறம் போகலாம்
“பண்ணை நிலத்தைப் பார்த்துக்கொள்” என்று தன் தந்தையால் அனுப்பப்பட்ட இளைஞன் ஒருவன், வேறு வழியில்லாமல் அங்கே சென்றான். அங்கு அவன் யாருக்கும் தெரியாமல், மறைவான ஓர் இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவனுடைய தந்தை அங்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பித் தவித்த அவன் நிலைமையைச் சமாளிப்பதற்காக, “அப்பா! பக்கத்து ஊரில் சர்க்கஸ் போட்டிருக்கின்றார்களாம்! இன்று இரவு நாம் இருவரும் அங்கே போய் வரலாமா?” என்றான். இதற்கு அவனுடைய தந்தை, “சர்க்கஸ் போவதெல்லாம் இருக்கட்டும். முதலில் சிகரெட் பிடிப்பதை நிறுத்து. அதன்பிறகு சர்க்கஸ் போகலாம்” என்றார்.
மிகப்பெரிய மறைப்போதகரான சார்லஸ் ஸ்பெர்ஜன் (Charles Spurgeon) என்பவரின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு கீழ்ப்படிந்து நடந்து நடப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. சார்லஸ் ஸ்பெர்ஜியன் தன் தந்தைக்குக் கீழ்ப்படியாதால், அவரால் சர்க்கஸ் பார்க்கப் போக முடியவில்லை. நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்தால், அவருக்கு ஏற்புடையவர் ஆகமுடியாது; அவரிடமிருந்து ஆசிகளையும் பெற முடியாது. தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்குக் கீழ்ப்படிபவர்களாலேயே அவருக்கு ஏற்புடையவர் ஆக முடியும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படிக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது குறித்துச் சிந்திப்போம்.
கீழ்ப்படியாமையால் வந்த சாவு
ஆஸ்கர் வைல்ட் (Oscar Wilde) என்ற அறிஞர், “அடிப்படையில் மனிதன் யாருக்கும் கீழ்ப்படியாதவன்” என்று குறிப்பிடுவார். இதை எண்பிக்கும் வகையில் இன்றைய வாசகத்தில் ஆதாமும் ஏவாளும் நடந்துகொள்கின்றார்கள்.
மனிதனைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்த கடவுள், அவனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் உண்ணலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” (தொநூ 2: 16, 17) என்கிறார். ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது (திபா 19: 7). அதனால் மனிதன் கடவுளின் ஒழுங்குமுறைப் படி, நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து உண்ணாமல் இருந்திருக்கலாம். அவனோ, பொய்யனாகிய சாத்தானின் வார்த்தைகளை நம்பி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்கின்றான்.
மனிதன் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்ததால் ஆன்மிக இறப்பு (எபே 2:11) உடல் இறப்பு, நெருப்பு ஏரியில் எறியப்படுதல் என்ற இரண்டாம் இறப்பு ஆகிய மூன்றுவிதமான இறப்புக்கு ஆளாகின்றான். முதல் இறப்பு எனப்படும் ஆன்மிக இறப்பு அவனைக் கடவுளை விட்டு வெகு தொலைவில் கொண்டு சென்றது. இரண்டாவது இறப்பு எனப்படும் உடல் இறப்பு அழியாமைக்கென்று படைக்கப்பட்ட மனிதனை (சாஞா 2:23) அழிவுக்குரியதாக்கியது. மூன்றாவது இறப்பு அவனை நெருப்பு ஏரிக்குள் விழ வைத்து, என்றென்றும் துன்பப்பட வைத்தது. இவையெல்லாம் மனிதன், நம்பிக்கைக்குரியவரான ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், பொய்யனும், சூழ்ச்சி மிக்கவனுமாகிய சாத்தானின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலேயே ஏற்பட்டது.
கீழ்ப்படிதலால் வந்த வாழ்வு
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் எல்லாரும் பாவிகளாகி, சாவுக்கு உள்ளான போதும், கடவுள் மனிதர்களை அப்படியே புறந்தள்ளிவிடவில்லை. மாறாக, அவர்களை மீட்கத் தம் ஒரே மகனை அனுப்பத் திருவுளமானார். அவர் இறைமகனாக இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (எபி 5:8).
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு சாத்தானால் சோதிக்கப்படுவதைப் பற்றிக் கூறுகின்றது. இதில் அவர் சாத்தானுக்குக் கீழ்ப்படியாமல், ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை பற்றி வாசிக்கின்றோம். ஏறக்குறைய முதல் பெற்றோருக்கு வந்த சோதனையைப் போன்றுதான் இயேசுவுக்குச் சோதனை வந்தது. நாற்பது நாள்கள் இரவும் நோன்பிருந்த இயேசு, சாத்தான் சொன்னது போன்று கற்களை அப்பமாக்கி உண்டிருக்கலாம். ஆனால், அவர் தந்தை தனக்குக் கொடுத்த திட்டத்தின்படி பாடுகளின் வழியாகத்தான் இவ்வுலகிற்கு மீட்பு வழங்க விரும்பினாரே ஒழிய, சாத்தானின் வார்த்தையைக் கேட்டு, குறுக்கு வழியில் இவ்வுலகிற்கு மீட்பு வழங்க முன்வர வில்லை.
முதல் பெற்றோர், விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டால், கடவுளைப் போன்று நன்மை தீமையை அறியலாம் என்று சாத்தனுக்குக் கீழ்ப்படிந்து மரத்தின் கனியை உண்டனர். இயேசுவோ சாத்தானை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினால், உலக அரசுகள் கிடைக்கும் என்ற போதும், அதற்குக் கீழ்ப்படியாமல், அல்லது குறுக்கு வழியில் உலக அரசுகளை அடையாமல், தந்தைக் கீழ்ப்படிந்து அவற்றை அடைகின்றார் (பிலி 2: 10). இவ்வாறு அவர் இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் நாம் வாசிப்பது போல், முதல் பெற்றோர் தங்கள் கீழ்ப்படியாமையால் தண்டனைத் தீர்ப்பை வருவித்துக் கொண்டபோது, இயேசு கிறிஸ்து தன்னுடைய கீழ்ப்படிதலால் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், பலரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகக் காரணமானார்.
தூயதோர் உள்ளத்தைக் கேட்போம்
கடவுள் நமக்கு தம் ஒரே மகன் வழியாக வாழ்வளித்திருக்கும்போது, புனித பவுல் சொல்வது போன்று, நாம் மேலுலகு சார்ந்தவற்றையே நாட வேண்டும் (கொலோ 3:1). ஆனால், நமக்குள் இருக்கும் தீவினை நம்மைப் பாவம் செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51 இல் அதன் ஆசிரியர் தாவீது பாடுவதுபோல், “தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்” என்று நாம் கடவுளிடம் கேட்க வேண்டும்.
இஸ்ரயேலின் மன்னராக இருந்த தாவீது, ஆண்டவருக்கு ஏற்புடையவற்றைச் செய்து, அவரது நெஞ்சத்திற்கு உகந்தவராய் இருந்தார். எப்போது அவர் உரியாவின் மனைவியோடு பாவம் செய்கின்றாரோ, அப்போதே அவர் ஆண்டவரை விட்டு விலகிப் போகிறார். தாவீது செய்த இப்பாவத்தை இறைவாக்கினர் நாத்தான் மூலம் ஆண்டவர் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, தாவீது தன் பாவத்தை உணர்ந்து மனம் வருந்தி அழுகின்றார். அப்போது பாடப்பட்ட திருப்பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51. இதில் தாவீது பாடியபோல, நாம் ஆண்டவரிடம் தூயதோர் உள்ளத்தைத் தருமாறு கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும்.
சிந்தனைக்கு:
‘அன்பு ஆணிவேர். கீழ்ப்படிதல் அதன் கனி” என்பார் மேத்யூ ஹென்றி என்ற எழுத்தாளர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டிருக்கின்றோம் என்பதை அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலம் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
கட்டின்மை போற்றுதல்
நல்வாழ்வு தரும் கட்டின்மை நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின் முதல் ஞாயிறு.
இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உருவான வரலாற்றின் பதிவே இப்பக்கங்கள். இரண்டு கதையாடல்கள் வழியாக மனித வாழ்வின் தொடக்கத்தை விளக்குகிறது விவிலியம். இவ்விரண்டு கதையாடல்களையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்துப் பார்க்கும்போது மனிதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவுநிலை என்ன? அவர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறிய முடியும்.
முதல் வாசகத்தின் முதல் பகுதி படைப்பின் இரண்டாம் கதையாடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் படைப்புச் செயலின் முதற்கனியாக முதல் மக்களை முன்வைக்கிறது இது. மனிதர்கள் கடவுளின் மூச்சையே தங்களுக்குள் கொண்டிருக்கின்றனர். இதுவே மனிதர்கள் கடவுள்மேல் கொண்டிருக்கும் சார்புநிலையின் அடையாளம். கடவுளின் மூச்சை இழப்பது என்பது ஒருவரை இறக்கச் செய்யும். இச்சார்புநிலையின் மற்றொரு பக்கம் கடவுள் அவர்களுக்கு இட்ட நிபந்தனை அல்லது விதிமுறை. கடவுள் படைப்பில் சில வரையறைகளை நிர்ணயித்து, மனிதர்களின் நலனை முன்னிட்டும், ஒட்டுமொத்தப் படைப்பின் ஒழுங்கிற்காகவும் சிலவற்றைத் தடைசெய்கின்றார். நன்மை-தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று முதல்மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார் கடவுள். ஏனெனில், இத்தகைய அறிவை மனிதர்களால் கையாள முடியாது. மேலும், இது அவர்களை அழிப்பதோடு, கடவுளின் படைப்பில் தொய்வையும் ஏற்படுத்திவிடும்.
ஆனால், முதல் மனிதர்கள் கடவுளின் கட்டளையை மீறுகின்றனர். அவர்கள் கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை மறந்துவிட்டனர். கடவுள் கனியை விலக்கிவைத்ததை உரிமை மீறலாகப் பார்த்தனர். தாங்கள் உண்ணுமாறு கடவுள் கொடுத்த அனைத்து மரங்களையும் அவற்றின் கனிகளையும் மறந்துவிட்ட இவர்கள் விலக்கப்பட்ட கனியை நாட ஆரம்பிக்கின்றனர். தாங்கள் ஏற்கனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்பதை மறந்து, பாம்பின் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர். அவர்கள் தங்கள் கைகளை நீட்டி உண்ட அக்கனியால் முதலில் அவர்களின் கண்கள் திறக்கப்பட தாங்கள் ஆடையின்றி - நிர்வாணமாக - இருப்பதை உணர்கின்றனர். அவர்களின் ஆடையற்ற நிலை அவர்களுடைய வலுவின்மையையும், நொறுங்குநிலையையும் அடையாளப்படுத்துகிறது. அன்றிலிருந்து அதுவே அவர்களின் வாழ்க்கை அனுபவமாகவும் மாறிவிடுகிறது. விலக்கப்பட்ட கனியை உண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
ஆக, அவர்களின் கீழ்ப்படியாமை அவர்களை இந்நிலைக்கு ஆளாக்குகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-19), ஆதாம்-இயேசு, பாவம்-விடுதலை, குற்றம்-அருள்கொடை என்னும் முரண்களைப் பட்டியலிடுகின்ற பவுல், ஆதாமின் கீழ்ப்படியாமை பாவத்தைக் கொணர்ந்தது என்றும், இயேசுவின் கீழ்ப்படிதல் கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர் ஆக்கியதும் என்றும் நிறைவு செய்கின்றார்.
ஆக, கீழ்ப்படியாமையால் பிறழ்வுபட்ட உறவுநிலைகள் இயேசுவின் கீழ்ப்படிதலால் சரிசெய்யப்படுகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 4:1-11) இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வை நமக்குக் காட்டுகிறது. திருமுழுக்கு பெற்றவுடன் இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்காக பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். திருமுழுக்கின்போது அவர் 'அன்பார்ந்த மகன்' என்று அழைக்கப்பட்டார். பாலைவனத்தில் சோதிக்கிறவன் மூன்றுமுறை சோதித்தபோது நம்பிக்கைக்கும் பிரமாணிக்கத்திற்கும் உரியவராக இருந்து மகன் என்ற நிலையைக் காத்துக்கொள்கின்றார். இயேசுவின் பாலைநில அனுபவம் 40 நாள்கள் நீடிக்கின்றன.
நாற்பது என்ற எண் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த பயணத்தைக் குறிக்கிறது. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள் மூன்று சோதனைகளுக்கு உள்ளாகின்றனர்: (அ) உணவு வேண்டி அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தது (காண். விப 16) இயேசுவின் முதல் சோதனையில் எதிரொலிக்கிறது. (ஆ) கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்று அவர்கள் கேட்ட கேள்வி (காண். விப 17) இரண்டாம் சோதனையில் தெரிகிறது. (இ) பொன்னாலான கன்றுக்குட்டியை அவர்கள் வணங்கியது (காண். விப 32) மூன்றாம் சோதனையில் எதிரொலிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களை எகிப்தில் கண்டாலும் அவரை நம்பவில்லை. ஆனால், இயேசுவோ இறுதிவரை நம்பிக்கைக்குரியவராகவும், கீழ்ப்படிபவராகவும் விளங்கினார்.
இயேசு யார் என்பதைத் தன் குழுமத்தாருக்கு அறிமுகம் செய்ய விழைகின்ற நற்செய்தியாளர்கள், 'இயேசு அலகையையும் அதன் சோதனைகளையும் வென்றவர்' என்று சோதனைகள் நிகழ்வு வழியாக அறிமுகம் செய்கின்றனர். சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் இஸ்ரயேலோடு இணைக்கிறது (காண். 'நாற்பது நாள்கள், மன்னா, அப்பம்,' விப 16:15, 'ஆண்டவரை சோதித்தல்,' விப 17:1-7, 'சிலைவழிபாடு,' விப 32). இது இறைவனின் ஆட்சிக்கும், அலகையின் ஆட்சிக்கும் உள்ள முரண்பாட்டை விளக்குகிறது. சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் ஏற்பாட்டு இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றன. இயேசு சோதனைகளை வெல்லும் நிகழ்வு பிற்காலச் சீடர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.
அ. கற்களை மாற்று!
சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்' என்றான். அவர் மறுமொழியாக, ''மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'' (காண். இச 8:3) என மறைநூலில் எழுதியுள்ளதே என்றார். (காண். மத் 4:3-4) லூக்கா நற்செய்தியாளர், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என்று மட்டும் பதிவிடுகின்றார். (காண். லூக் 4:4)
நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருக்கின்றார் இயேசு. நோன்பு என்பது பசியை விரும்பி ஏற்கும் நிலை. உணவு மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும்.
நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மிகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மிகம்சார் பாலை.
உடல்சார் பாலை என்னும் பசியை பாலைநிலத்தில் எதிர்கொள்கின்றார் இயேசு. 'கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்னும் அலகையின் சொற்கள் மூன்று நிலைகளில் இயேசுவுக்கு ஈர்ப்பாக இருந்திருக்கும்: ஒன்று, அவர் பசியாக இருக்கிறார். இரண்டு, வல்ல செயல் செய்யும் ஆற்றலைச் சோதிப்பதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்தியிருக்கலாம். மூன்று, மெசியா என்பவர் மாற்றத்தைக் கொணர்பவர். இருப்பதை இல்லாமலும், இல்லாததை இருக்கவும், ஒன்றை மற்றொன்றாகவும் செய்கின்றவர்.
உறுதியற்ற ஒன்றை உறுதியாக்கிக்கொள்ளத் தூண்டுகிறது அலகை. பாலைவனத்தில் உள்ள கற்கள் எல்லாம் அப்பமாக மாறிவிட்டால், பசியைப் பற்றிய கவலையே தேவையிருக்காது. எங்கு திரும்பினாலும் அப்பமாக இருக்கும். விரும்பும் வரை உண்ணலாம். ஆனால், பசி தீர்ந்தவுடன் எஞ்சிய அப்பங்களால் பயன் ஒன்றுமில்லை. பசியில்லாத நபருக்கு ருசியான உணவும் சுமையே. மனிதர்களின் தேடல் என்பது வெறும் உணவுதான் என்றும், அந்த உணவுக்கான தேடலில் மனிதர்களை அமிழ்த்தி விட்டால் அவர்கள் வேறெதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் என்பதும் அலகையின் எண்ணமாக இருந்தது. ஆனால், மனிதர்களின் தேவை வெறும் உடல் சார்ந்தது அல்ல, மாறாக, ஆன்மிகம் சார்ந்தது என்றும், அவர்கள் வெறும் சதை அல்ல, மாறாக, ஆவிக்குரிய ஆன்மாவைக் கொண்டிருப்பவர்கள் என்றும் அலகைக்கு நினைவூட்டுகிறார் இயேசு.
மேலும், கற்களை அப்பமாக மாற்றுதல் என்பது தேவையானதை விடுத்து, தேவையற்றதன்மேல் கவனத்தைத் திருப்பும் சோதனையாகும். ஒருவேளை இயேசு கற்களை அப்பமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தால், 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' (காண். மாற் 1:15) என்று அறிவித்திருக்க இயலாது. பார்க்கின்ற அனைத்துக் கற்களையும் அப்பமாக்கும் பணியே அவருடைய முதன்மையான பணியாக இருந்திருக்கும்.
கற்கள் கற்களாகவும், அப்பம் அப்பமாகவும் இருக்கட்டுமே என்பது இயேசுவின் பதில்மொழியாக இருக்கிறது.
ஆ. கடவுளைச் சோதி!
பின்னர் அலகை இயேசுவை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது (காண். திபா 91:12) என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், ' 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார். (மத் 4:5-6)
மத்தேயு நற்செய்தியாளர், 'இரண்டாவது' என முன்மொழியும் சோதனையை, லூக்கா நற்செய்தியாளர், 'மூன்றாவது' என எழுதுகின்றார். 'கோவில்' என்பது மத்தேயு நற்செய்தியில் 17 முறை வருகின்றது. 'கோவிலின் உயர்ந்த பகுதி' என்பதை 'கோபுரம்' அல்லது 'இறக்கை வடிவிலான நீட்சி அமைப்பு' அல்லது 'சிறிய கைப்பிடிச் சுவர்' என்று புரிந்துகொள்ளலாம். 'மெசியா வெளிப்படுத்தப்படும் நாளில் அவர் திருக்கோவிலின் கூரைமேல் நிற்பார்' என்பது ரபிக்களின் போதனையாக இருந்தது (காண். பெசிக்தா ரப்பாதி, 62இ-ஈ). எருசலேம் ஆலயத்தின் திருத்தூயகத்திற்கு மேல் உள்ள பகுதி, அல்லது ஆலயத்தின் முன்முகப்புக் கூரை, அல்லது கெதரோன் பள்ளத்தாக்கைப் பார்த்தவாறு அமைந்துள்ள வெளிப்புறச் சுவரின் கோபுரம் எனப் பலர் இந்த இடத்தை அடையாளம் காண்கின்றனர்.
மாயவித்தை செய்து மக்களின் கவனத்தை ஈர்க்குமாறும், வல்ல செயல்கள் வழியாக கடவுளைச் சோதிக்குமாறும் தூண்டுகிறது அலகை. 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 4:16) என்னும் மோசேயின் வார்த்தைகளைச் சொல்லி, அலகையின் சோதனையை விலக்குகிறார் இயேசு.
முதல் ஏற்பாட்டில் பாலைவனத்தில் இரபதிம் பகுதியில் பாளையம் இறங்கிய போது மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. மக்கள் மோசேயிடம் வாதாடி, 'குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்!' என்று கேட்கின்றனர். ஆண்டவரின் அறிவுறுத்தலின்படி மோசே பாறையைக் கோலால் அடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படுகின்றது. ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்று இஸ்ரயேல் மக்கள் சோதித்துப் பார்க்கின்றனர் (காண். விப 17:1-7).
ஆனால், இறைமகன் இயேசு அப்படிச் சோதித்துப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில், இயேசுவின் திருமுழுக்கின்போது, தூய ஆவி புறாவைப் போல அவர்மேல் இறங்கி வர, 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று தந்தையின் குரல் ஒலித்தது (காண். மாற் 1:10-11). தான் இறைமகன் என்பதும், இறைத்தந்தை என்றும் தன்னோடு உடனிருக்கிறார் என்பதும் இந்த நிகழ்வு வழியாக இயேசு பெற்ற அடித்தள அனுபவமாக இருந்ததால் அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தவில்லை.
இ. காலில் விழு!
மறுபடியும் அலகை இயேசுவை மிக உயர்ந்த மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், 'நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்றது. அப்போது இயேசு அதனைப் பார்த்து, 'அகன்று போ, சாத்தானே. 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது (காண். இச 6:13) என்றார். (மத் 4:8-10)
'நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது' (மத் 6:24) என்னும் வாக்கியத்தின் விளக்கவுரையாகக் கூட இந்தச் சோதனையை எடுத்துக்கொள்ளலாம்.
'நெடுஞ்சாண்கிடையாக விழுதல்' என்பது கடவுளுக்கு மட்டுமே உரித்தான ஒரு வழிபாட்டு முறை. இருந்தாலும், அரசர்கள் முன்னும் அதிகாரம் பெற்றவர்கள் முன்னும் நெடுஞ்சாண்கிடையாக விழும் வழக்கம் விவிலியக் காலத்தில் இருந்தது. இந்தச் செய்கையின் வழியாக ஒருவர் தனக்கு முன்னால் இருப்பவரைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கின்றார். தனது விருப்புரிமை, தன்னுரிமை, விடுதலை போன்றவற்றை அவருக்கு விற்றுவிடுகின்றார்.
இயேசு தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட மறுத்ததோடு, கடவுள் ஒருவரே வணங்குதலுக்கும் பணி செய்தலுக்கும் உரியவர் என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார்.
இவ்வாறாக, 'கற்களை மாற்று!,' 'கடவுளைச் சோதி!,' 'காலில் விழு!' என்னும் மூன்று பாலைவனச் சோதனைகளையும் வெற்றி கொள்கின்றார் இயேசு. தவக்காலத்தின் முதல் ஞாயிறு கீழ்ப்படிதல் என்ற மதிப்பீட்டைக் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. முதல் மக்கள் கடவுளை நம்ப மறுத்தனர். ஆகையால் கீழ்ப்படிய மறுத்தனர். அதற்கு மாற்றாக இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். நம்பிக்கையின்மை-நம்பிக்கை, கீழ்ப்படியாமை-கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கான போராட்டம் எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கையாளர்கள் தாங்கள் இப்படி அலைக்கழிக்கப்படும்போதெல்லாம் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை நினைவில்கொள்ள வேண்டும்: 'கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்' (திபா 51:10).
இயேசு இறுதிவரை தன் கட்டின்மையை – சுதந்திரத்தை – விட்டுவிடவில்லை. நம் முதற்பெற்றோர் பாம்பின் சோதனையில் விழுந்தபோது தங்கள் கட்டின்மையை இழக்கின்றனர். கட்டின்மையை என்றும் விரும்புவதும், அதைப் பற்றிக்கொள்வதும் நலம்.
பாவச் சோதனைகளை வெல்ல வேண்டுமா?
தவக்காலத்தின் முதல் ஞாயிறு இன்று. இந்த மனமாற்றத்தின் காலத்தில் சோதனைகளில் விழாது நம்மைக் காக்க வேண்டும் என்ற அறைகூவலை திருஅவை நமக்கு இன்றைய வாசகங்கள் மூலம் விடுக்கின்றது.
இன்றைய வாசகங்களில் இரு மனிதர்களை நாம் ஒப்பிட்டு சிந்திக்க இருக்கிறோம். முதலாவது ஆதாம். ஆதாம் கடவுளால் படைக்கப்பட்டவர் என்பதை விட கடவுளால் மிகவும் அன்பு செய்யப்பட்டவர் என்றே சொல்ல வேண்டும். இந்த பூமியின் படைப்புக்கள் அனைத்தையும் ஆண்டு அனுபவிக்க அவனுக்கு அதிகாரம் அளித்தார் கடவுள். எல்லா அதிகாரத்தைக் கொடுத்தாலும் ஒருசிறு தடை. ஒரு பழத்தை உண்ணக்கூடாது என்பது. அந்த சிறு தடையை மனித மீட்புக்கே பெரிய தடையாக மாற்றினான் அலகை.
மனித மனம் தன்னைச் சுற்றி எத்தனையோ நிறைவானவை நல்லவை இருந்தாலும் அதையும் தாண்டி தன்னிடமிருந்து மறைக்கப்பட்டவற்றை தடை செய்யபட்டவற்றை தேடிச் செல்வதுதானே வழக்கம். உதாரணமாக புயல் எச்சரிக்கை. கடலுக்கு செல்லாதீர்கள் என்று எச்சரிக்கப்பட்ட போதும் அதை மீறிச் சென்று கடலில் இறங்கி உயிரை இழந்த நிகழ்வுகள் பலவற்றை நாம் கேட்டதுண்டு அல்லவா. அதே போலத் தான் அலகையின் மாய வலையில் சிக்கி ஆதாம் கடவுள் தந்த எச்சரிக்கையை மீறியதால் மீட்பை இழந்தான். கடவுள் தன் வார்த்தையை அவன் கேட்காததால் அல்லவா இந்நிலை.
இரண்டாவதாக நம் ஆண்டவர் இயேசு. தன் பணிவாழ்வைத் தொடங்கும் முன் இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்தார். நோன்பிருந்த சமயத்தில் அவர் முழு மனிதனாய் இருந்தார். இவ்வாய்ப்பை பயன்படுத்திய அலகை அவரை மும்முறை சோதித்தான். அவருடைய தேவைகளைச் சுட்டிக்காட்டி, அவருடைய கடவுளியல்பை நினைவூட்டி அவரைச் சோதித்தான். ஆனால் இயேசுவோ சோதனையில் விழவில்லை. ஏன்? அவர் இறைவார்த்தையை சிக்கென பிடித்துக்கொண்டார்.
அன்புக்குரியவர்களே நம்மைத் தேடி வரும் சோதனைகளெல்லாம் மிக கண்களுக்கு அழகாகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தோன்றும். அதன் விளைவுகளோ நம் நிறை மகிழ்வை நிம்மதியை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிடும் என்பதே உண்மை. இச்சோதனைகளை ஆதிப்பெற்றோர் போல மேலோட்டமாக புரிந்து கொண்டு அதில் விழுந்தால் அருளை நாம் இழந்துவிடுவோம். இயேசுவைப் போல ஆழமாகப் புரிந்துகொண்டு நம்மைக் காத்துக்கொண்டால் மீட்பு உறுதி. இச்சோதனைகளில் விழாது நம்மை காத்துக்கொள்ள இறைநம்பிக்கையும் இறைவார்த்தையின் மீது நமக்குள்ள பற்றும் பெரிதும் துணையாய் இருக்கின்றன.
சோதனைகளிலிருந்து விடுதலை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் மனநிலையை கொண்டிருக்க வேண்டும். இயேசு இறை மகனாக இருந்த போதிலும் தந்தையாம் கடவுளுக்கு கீழ்படிபவர் உள்ளவராக இருந்தார். சோதனையை வென்றிட கடவுளுக்கு நாம் கீழ்படிய வேண்டும். தன்னை சோதித்து அலகையை இறைமகன் இயேசு இறை வார்த்தையின் வழியாக பதிலடி கொடுத்தார். நம்முடைய வாழ்வை இறைவார்த்தையில் வேரூன்றிய வாழ்வாக அமைக்கின்ற பொழுது சோதனைகளை வெல்ல முடியும். இயேசு பாவம் தவிர நம்மைப் போல மனிதராக வாழ்ந்து தூய வாழ்வுக்கு சான்று பகந்தார். அதுபோல நாமும் பாவத்தை தூண்டக்கூடிய சூழலை விட்டு விட்டு தூய்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் சூழலில் பயணிக்கும் பொழுது நாம் சோதனைகளை வெல்ல முடியும். இயேசு இறைமகனாக இருந்த போதிலும் இறை வேண்டுதலிலும் நோன்பிலும் வேரூன்றி இருந்தார். நம்முடைய வாழ்க்கையிலும் இறைவேண்டலில் நிலைத்திருந்து உண்ணா நோன்பில் திளைத்திருக்கும் பொழுது சோதனைகளை வெல்ல முடியும். நம்முடைய பயணத்தை ஆன்மாவை இலக்காக கொண்டு பயணிக்க முயற்சி செய்யும் பொழுது சோதனைகளை வெல்ல முடியும். எனவே உடல் உள்ள ஆன்மா சார்ந்த சோதனைகளை வெல்ல நாம் இறைவனின் திராட்சைச் செடியில் கொடிகளாக இணைவோம். அப்பொழுது நிச்சயமாக நாம் கடவுளுக்கு உகந்த கிறிஸ்தவர்களாகவும் மனிதர்களாகவும் வாழ முடியும். நிறைவானது வரும் பொழுது குறைவானது தானாக போய்விடும். எனவே கடவுளுக்கு உகந்த நிறைவான செயல்பாடுகளில் இணைந்து சோதனை என்ற குறைகளை கலைந்திட தேவையான அருளை வேண்டுவோம். சோதனைகளை வென்றிட இறைவனின் கரத்தையும் அன்னை மரியாவின் கரத்தையும் பற்றி பிடித்து புனிதர்களின் தோழமையோடு பயணமாவோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்சோதனைகளை வெல்ல வரம் தரும் இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எங்களுடைய ஆன்மாவை நோக்கிய ஆன்மீக பயணத்தில் வருகின்ற சோதனைகளைத் தகர்த்தெறிய தேவையான அருளை தாரும். தூய ஆவியாரின் கொடைகளையும் கனிகளை நிறைவாக பொழிந்து சோதனைகளை வென்று சிறந்த கிறிஸ்தவராக வாழ்ந்திட உம் திருமகன் இயேசு வழியாக எங்கள் வழிநடத்தும். ஆமென்.
